குருவி கத்துகிறதா…சிக்கட்டி பாடுகிறதா
எஸ்.வி.வேணுகோபாலன்
பேரன்பின் அ முத்துலிங்கம் அவர்களுக்கு
தீராநதி மே இதழை நேற்று தான் வாங்கினேன்…(அது நேற்றுதான் வந்திருக்கும் என்று கருதுகிறேன்…வியாழன் அன்று எங்களது பள்ளிக்கூட நிகழ்வு ஒன்றுக்காக பட்டுக்கோட்டை சென்றிருந்தேன்)…
இது தான் நாள் என்ற தலைப்பில் உங்களது கதை காத்திருந்தது, 18ம் பக்கத்தில்…
புலம் பெயர் வாழ்க்கையின் நிச்சயமற்ற தருணங்கள், எல்லை கடத்தலின் எல்லையற்ற அபாயங்கள், உயிரைக் கையில் பிடித்தபடி அலைவுறும் நேரங்கள்….இவற்றின் மற்றுமொரு அழுத்தமிக்க பதிவாக இந்தக் கதை…
இந்த உலகு யாருக்காக இயங்குகிறது…யாருக்கானது என்ற கேள்விகள் எனக்குள் அடிக்கடி நிகழும்…. எஜமானர்கள், அடியாட்கள், அரசுகள், அதிகாரிகள், விதிமுறைகள், தண்டனைகள்…என்று பொருத்துக அட்டவணையில் இடம்பெற வேண்டிய ஜோடி ஜோடியான வன்முறை சொற்கள் எவ்விதம் மனித வாழ்விற்குள் நுழைந்தது….
தூக்கு மேடை குறிப்புகள் (ஜூலியஸ் பூசிக்) என்ற மகத்தான உண்மைக் கதையில், நாசிச சித்திரவதைக்கு உள்ளாகும் போது அவர் தமக்குத் தாமே சொல்லிக் கொள்ளும் இடம் ஒன்று வரும்: என்னை என் இத்தனை வலுவுள்ளவனாகப் பெற்றீர்….? மானசீகமாகத் தனது பெற்றோரிடம் முன் வைக்கப்படும் இந்தக் கேள்வி, முடிவற்ற துயரத் தாக்குதலை எதிர்கொள்ளும் அரசியல் உரம் பெற்ற கம்யூனிஸ்ட் ஒருவரது உளத் திண்மையை சோதிக்கும் உச்சகட்ட தாக்குதலின் போது அவரது வெளிப்பாட்டு மொழியாக வெளிவரும்…
சம காலத்தில், இலங்கைத் தமிழர் சொந்த மண்ணிலும், வெளி தேசங்களிலும் படும் இன்னல், இழிவு, அன்றாடம் செத்துச் செத்துப் பிழைக்கும் வாழ்க்கை விவரிப்புக்கு அப்பாற்பட்டது…
இது தான் நான் கதை, இந்த வேதனையின் பாடுகளை, இத்தனை இடர்மிகுந்த சூழலிலும் பரஸ்பரம் துளிர்க்கும் கரிசனத்தை, அடுத்தவர்க்காக உதிர்க்கப்படும் கண்ணீர்த் துளிகளை, அடிப்படை மனித நேயத்தை எந்த மிகையுமற்ற குரலில் பேசுகிறது…வெடி மருந்துகளின் வேதியல் நெடிக்கிடையே நம்பிக்கையை மூச்சுத் திணராது பொத்திக் காப்பது இத்தகைய உணர்வுகளன்றி வேறென்ன…
கதையில் வரும் சந்திரா மாமி ஓர் இயற்கை கொண்டாடி…பறவைகளின் பெயர்கள் மட்டுமல்ல,, அவற்றின் சஞ்சாரம், வாசஸ்தலம், பறத்தலின் திசையை வைத்து நீர்ப்பரப்பு அறிதல் இன்னோரன்ன விஷயங்களில் கொண்டிருக்கும் தேர்ச்சி அருமையான அம்சம்….
கதையை நீங்கள் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்ற இலக்கணத்தில் கொண்டு வர தேர்வு செய்யும் வடிவம் எப்போதுமே சிறப்பானது…இந்தக் கதை அதில் இன்னோர் புதிய உயரத்தைத் தொடுகிறது….
குருவி கத்துகிறது என்று சொல்வதே, சந்திரா மாமியை கோபப்படுத்துகிறது…சிக்கட்டி பாடுகிறது என்று சொல்லவேண்டும் என்று கற்பிக்கிறார்…இயற்கையோடு ஒத்திசைவாக வாழப் பழகும் மனிதர்களால் இயற்கையோடு சென்று மீண்டும் கலக்கும் தருணத்தையும் அறிந்திருக்க முடிவது உங்களது அற்புதக் கதை சொல்லும் நேர்த்தி. இலக்கியமயமாகும் வாழ்வியல் தரிசனம்…
முன் பின் பார்த்திராத மனிதர்களுக்காக வாசக உள்ளங்களை அலைமோத வைக்கிறீர்கள்….
குலுங்கி அழ வைக்கிறீர்கள்….ஏக்கப் பெருமூச்சோடு இறுக்கமாக விழி மூடி சிந்திக்கத் தூண்டுகிறீர்கள்….
வணக்கங்கள் அ மு…
எஸ் வி வேணுகோபாலன்
இந்த இலக்கிய மதிப்பீடு பளு மிகுந்த படைப்பு. அ.மு.அவர்களின் அலைவரிசையில். இத்தகைய இலக்கிய பதிவுகளை கண்டு பலகாலம் ஆயின.
வாழ்த்துக்கள், திரு வேணுகோபால்.