சோழர்களின் ஆட்சியில் பிராமணர்களின் குற்றங்கள் மற்றும் தண்டனைகள்
டாக்டர்.எஸ். சாந்தினிபீ ஒரு அறிமுகம்
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் மற்றும் வரலாற்றுத் துறையில் முனைவர் பட்டம் பெற்ற திருமதி. எஸ்.சாந்தினிபீ, தமிழகத்தைச் சேர்ந்தவர். 2000 ஆம் ஆண்டு முதல் உ.பி.யிலுள்ள அலிகர் முஸ்லீம் பல்கலைக்கழகத்தின் உயர் ஆராய்ச்சி வரலாற்று துறையில் உதவி பேராசிரியராகப் பணியாற்றுகிறார். 1984-ல் வன்னியர் வரலாற்றை தினமலரில் தொடராக எழுதி தமிழ் வாசகர்களுக்கு அறிமுகமான இவர் வட இந்தியாவில் பணியாற்றும் தமிழ் பத்திரிகையாளர் ஆர்.ஷபி முன்னா என்பவரின் மனைவி.
கடந்த 15 ஆண்டுகளாக சோழர் காலம் பற்றிய ஆய்வைத் தொடர்ந்து வரும் இவரது கட்டுரைகள் தேசிய மற்றும் பன்னாட்டு ஆய்வேடுகளில் வெளியாகி உள்ளன. இவரது பேட்டி மற்றும் கட்டுரைகள் ஜுனியர் விகடன், அவள் விகடன், குமுதம், தினமணி, புதிய பார்வை, Indian Express, News today, Rising sun உட்பட பல தமிழ் மற்றும் ஆங்கில பத்திரிகைகளில் வெளியாகி உள்ளன.
எட்டு வருடங்களுக்கு முன் இவர் எழுதிய பாண்டிச்சேரியின் தொல்லியல் வரலாறு குறித்த ஆங்கில நூலும், தமிழில் எழுதிய அலிகர் முஸ்லீம் பல்கலைகழகத்தின் நிறுவனர் சர் சையது அகமதுகான் வாழ்க்கை வரலாறும் மிக பிரபலமானவை. தென்னிந்திய வரலாற்றைப் புறக்கணிக்கும் வட இந்திய வரலாற்றாளர்களுக்கிடையே தமிழகத்திற்கு ஆதரவாகக் குரல் கொடுத்துவரும் திருமதி. சாந்தினிபீயின் பல கட்டுரைகளில் ஒன்றுதான் இது.
ஆங்கில மூலம் – முனைவர் சாந்தினி பீ
தமிழாக்கம் – பவள சங்கரி
சோழர் காலத்தில்தான் மனுவின் ஆதிக்கம் தமிழகத்தில் ஆணித்தரமாக வேரூன்றி வளர்ந்தது எனும் எண்ணம் பரவலாக பேசப்பட்டு வருகிறது.மனுவும் நீதியும் தமிழக மக்களால் பிரித்துப் பார்க்க இயலவில்லை.சோழர் ஆட்சியில் தமிழ்நாட்டில், மனு ஸ்மிரிதியின் பங்கை சோதிக்கக்கூடிய நேர்மையான முயற்சிதான் இது.
ஒரு குறிப்பிட்ட சாதியின் அடிப்படையில் இக்கட்டுரை அமைந்திருப்பது ஏன் என்ற ஆச்சரியம் ஒருவருக்கு எழலாம். சகிப்புத்தன்மையும், பொறுமையும் இல்லாததோர் நிலை வளர்ந்து வரும் இந்நாட்களில், இத்தலைப்பு மற்றும் ஆய்விற்கான நோக்கம் குறித்த சிறிய விளக்கம் தேவைப்படுகிறது. குறிப்பாக அந்த சட்டப் புத்தகம், சட்டத்திற்கு சாதிப்பற்றை ஊட்டுவதால் தற்போதைய ஆய்வும் அதையே பின்பற்றுகிறது
இந்த ஆய்வறிக்கையில், சோழர் காலத்தில் பிராமணர்களால் இழைக்கப்பட்ட பல்வேறு குற்றங்களை, அக்காலத்திய கல்வெட்டு ஆதாரங்கள் மூலம் கண்டறிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வாளர், வகை குற்றத்திற்கு,ஒரு கல்வெட்டை ஆதாரமாக எடுத்துக் கொண்டுள்ளார். அதே சமயம், அனைத்து கல்வெட்டுகளும் பயன்படுத்தப்பட்டு எதுவும் விடுபட்டுப் போகவில்லை என்பதையும் உறுதியாகக் கூற முடியாது என்பதும் ஒப்புக்கொள்ளப்பட வேண்டியுள்ளது.
குற்றங்கள் அனைத்தும், ஆலயங்கள் சம்பந்தப்பட்டவை, மற்றவை என இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதலில் ஆலயங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் விளக்கப்படும்.
1. முதலாம் ராஜராஜனின் ( கி.பி. 985 – 1014 ) அரசாங்க அதிகாரி, பிரபலமான மதுராந்தகன் க ந்த ராதித்தன், திருவல்லத்தின் (வட ஆற்காடு) ஆலயமான பில்வநாதேஷ்வராரை தரிசிக்க சென்றிருக்கிறான். அந்தக் கோவிலின் விளக்குகள் மங்கிப்போய், பிரகாசமாக எரியாததால் கோவிலின் சொத்து மற்றும் நன்கொடைகள் பற்றிய விவரங்களைக் கேட்டான். அது இரவு நேரமாக இருப்பினும், சம்பந்தப்பட்ட நபர்கள் அனைவரும் அழைக்கப்பட்டு, அவருடைய கண்டுபிடிப்பில் ஆலயத்தின் மேலாளர்களான சிவபிராமணர்கள் அந்தக் கோவில் சொத்தை அபகரித்துக் கொண்டதை கண்டுபிடித்தார். அந்தப் பூசாரிகள் அதற்கு ஈடாக 74 களஞ்சு பொன்னை ஆலய கருவூலத்திற்கு வழங்க வேண்டும் என்று தண்டனை அளிக்கப் பட்டது .
2. திருப்பனந்தாளில் உள்ள ஓர் குறிப்பிட்ட கோவிலில், கி.பி. 1070, 1078 மற்றும் 1091க்கு இடைப்பட்ட இருபத்தியொரு ஆண்டுகளில் மூன்று முறை கணக்குகள் கண்காணிக்கப்பட்டன. முதல் சோதனை ராஜராஜ மூவேந்த வேளார் (கி.பி.1070) என்ற அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இரண்டாவதாக சேனாபதி பல்லவராஜா (கி.பி.1078) என்ற அதிகாரி விசாரணையை மேற்கொண்டார். மூன்றாவது அதிகாரியாக சேனாபதி நந்தியராஜா (கி.பி.1091) என்பவர் கணக்குகளைச் சோதித்தார்.
இந்த மூன்று காலங்களிலும் கோவில் பூசாரிகள் கோவில் சொத்துகளை அபகரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. முதல் இரண்டு நிகழ்வுகளில் என்ன நடந்திருக்கும் என்பதை அனுமானிக்க முடியாவிட்டாலும், அந்த மூன்றாவது நிகழ்வில் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும், அந்தக் கல்வெட்டுகள் அது பற்றி சொல்லாதலால் அதன் தன்மை அறியப்படவில்லை. ஆனால், தவறிழைத்து தண்டனை பெற்ற பூசாரிகள் அரசரிடம் மன்னிப்பு கோரி விண்ணப்பித்திருந்தார்கள்.
ஆனால் அரசர் அவர்களின் வேண்டுதலை மறுத்து, தண்டனையும் வழங்கினார். அரசரின் ஆணைப்படி, சூறையாடப்பட்ட சொத்தின் மதிப்புத் தொகையான 540 காசுகள் குற்றவாளிகளிடமிருந்து மீட்கப்பட்டது. இப்படித்தான் முதலாம் குலோத்துங்க அரசனின் ஆணை இருந்தது. இந்த அரசாணைக்குப் பிறகும் குற்றமிழைத்த பூசாரிகளில் ஒருவரான, பட்டன் குமாரசாமி என்பவர், ஆலயத்தின் மகேசுவரரிடம், கடவுளுக்கு பூசிக்கும் உரிமையை விற்று தனக்கான தண்டனை தொகையை வசூலிக்கும்படி கேட்டுக்கொண்டான். அதுவும் தவணை முறை மீட்பாக, மாதத்தில் நான்கரை நாட்கள் மட்டும் வேலை செய்யும் உரிமையை விற்குமாறு வேண்டினார். மகேசுவரர்கள் அரசு ஆணைகளில் தலையிட்டு மாற்றங்கள் செய்யக்கூடுமா? அரசு ஆணையில் தலையிட்டு மாற்றங்கள் ஏற்படுத்துவது இயலாத காரியம் என்பது எவராலும் உணர முடியும். சில உயரதிகாரிகளின் மூலமாக குறிப்பிட்ட பூசாரிகளின் இந்த வேண்டுதல்களை மகேசுவரர்கள் முன்னெடுத்துச் சென்றிருக்கக்கூடும்; இத்தகைய செயல் நன்கொடைகளின் புதிய மற்றும் விரிவாக்கங்களில் பொதுவாக காணக்கூடியதே. தண்டனைப் பணம் எவ்வகையிலேனும் மீட்கப்பட்டது என்பதுதான் இக்கல்வெட்டின் செய்தி.
3. ஸ்ரீரங்கத்திலுள்ள பிரபலமான வைஷ்ணவக் கோவிலின் கல்வெட்டு, ஒரு அரசு அதிகாரியான, ராஜேந்திர சோழ மூவேந்த வேளார், சம்பந்தப்பட்ட அபராத நிலுவைத் தொகையான 940 காசுகள், ஸ்ரீ கிருஷ்ண ஆழ்வான் பண்டாரம் என்பவருக்கு ஏதோ காரணத்திற்காக தண்டனையாக கோவில் கருவூலத்திற்குக் கட்டுவதற்கான விசாரணைக்காக அனுப்பப்பட்டதாகச் சொல்கிறது.
இந்தப் பிரச்சனை எவ்வாறு கையாளப்பட்டது என்பதை நம்மால் அறிய முடியாவிட்டாலும், முழுமையற்ற மற்றும் பழுதடைந்த கல்வெட்டுக்களில் உள்ள ஆச்சரியமான செய்தி, தொகையைச் செலுத்த வேண்டிய ஒரு குறிப்பிட்ட நபர் ஏற்கனவே ஒரு முறை சிறைத்தண்டனை பெற்றதுதான். இந்த கல்வெட்டும் முதலாம் குலோத்துங்கனின் காலத்தைச் சார்ந்தது. அதனால் சோழ அரசர்கள் பிராமணர்கள் குற்றமிழைத்தபோது சிறைப்படுத்தத் தயங்கவில்லை என்பது தெளிவாகிறது.
4. கி.பி. 1152இல் இரண்டாம் ராஜராஜா ஆட்சியின்போது ஒரு ஆலயத்தின் சிவபிராமணர்கள் தெயவத்திற்கு ஆபரணம் செய்யும் பொருட்டு கோவில் கருவூலத்தில் பாதுகாக்கப்பட்ட தங்கத்தின் ஒரு பகுதியை களவாடிவிட்டனர். அதற்கு தண்டனையாக அவர்கள் ஆலயத் திருப்பணி செய்யும் உரிமையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டு அது மற்றவர்களுக்கு விற்கப்பட்டுள்ளது. இப்படியாக வாழ்வாதாரமாக இருந்த சக்தி வாய்ந்த மற்றும் கௌரவமான தொழிலை அவர்கள் இழக்க வேண்டிவந்தது. இவ்வாறு முடிவெடுக்கப்பட்டு அந்த தண்டனைத் தொகையான 180 காசுகள் கோவிலுக்கு வழங்கப்பட்டது. இந்த தண்டனையையும் கடந்து, அவர்களும் மற்றும் அவர்தம் சந்ததியினரும் இந்த குறிப்பிட்ட ஆலயத்திற்குள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டதோடு விக்ரம சோழவர்முடையார் மற்றும் குலோத்துங்க சோழேசுவரமுடையார் என்ற தெய்வங்கள் இருந்த சன்னதிகளுக்கும் செல்ல தடை விதித்தனர். குற்றம் செய்தவர்கள் மட்டுமல்லாமல், அவர்கள் குடும்பத்தாரும் மற்றும் வருங்காலச் சந்ததியினரும்கூட அவர்களுடைய குற்றம் காரணமாக தங்கள் சொந்த மண்ணில் தங்கள் முன்னோர்களின் ஆன்மீகச் சேவைகளை தொடர்வதற்குத் தடை செய்யும் அளவிற்கு அந்தத் தண்டனை அதீதமாக இருந்ததை எளிதாக உணர முடிகிறது.
5. கி.பி. 1213ல் மூன்றாம் குலோத்துங்கனின் காலத்திலான மற்றொரு சம்பவம்; திருக்கழுக்குன்றத்தில் உள்ள கோவிலின், மடைவிளாகத்தில் நமிநந்தி அடிகள் என்பவருக்குச் சொந்தமான ஒரு வீடு அவருடைய மகனின் தவறுக்காக பறிமுதல் செய்து, விற்பனை செய்யப்பட்டுள்ளது. அந்த நமிநந்தியின் மகன் திருக்கழுக்குன்றம் உடையார் ஆலயத்தின் ஒரு தெய்வ சிற்பத்தின் முன் நெற்றியில் உள்ள தங்கத் தகட்டை திருடிவிட்டான். அரசாணையின்படி அந்தக் குற்றவாளி மட்டும் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டபொழுது ஏனைய குடும்ப உறுப்பினர்கள் அதே கிராமத்தில் வசிக்க அனுமதிக்கப்பட்டனர்.
கோவில் சம்பந்தப்பட்டவைகள் மட்டுமல்லாது ஏனைய குற்றங்களிலும் பிராமணர்கள் சம்பந்தப்பட்டிருப்பது குறித்ததே நமது இரண்டாவது அலசல்
கி.பி. 988இல் முதலாம் ராஜராஜனின் ஆட்சிக் காலத்தின் இரண்டாம் ஆண்டில், உடையர்குடியிலிருந்து ஒரு கல்வெட்டு, சோமன்…., ரவிதாசன் என்கிற பஞ்சவன் பிரமாதிராஜன், பரமேசுவரன் என்கிற இருமுடிச் சோழ பிரேமாதிராஜன் ஆகியோர்கள் முதலாம் ராஜராஜனின் மூத்த சகோதரர் ஆதித்ய கரிகாலனைக் கொலை செய்த குற்றத்தை விளம்புகிறது. அதன்படி ராஜராஜன் இந்தக் குற்றவாளிகளின் சொத்துகளை பறிமுதல் செய்ய ஆணையிட்டிருந்தான். அரசனின் அந்த ஆணையின்படி குற்றத்தில் சம்பந்தப்பட்ட அந்த நபர்களின் சொத்தைத் தவிர அவருடைய சகோதரர்களின் மகன்களோ, அவர்களின் மனைவியரோ, அவர்களின் தந்தையின் மூத்த சகோதரன் மற்றும் அவருடைய குழந்தைகள் , அவர்களுடைய தாய்வழி சகோதரர்களின் மாமன்மார்களின் மாமனார், அவர்களுடைய சகோதரிகளை மணந்தவர்கள் மற்றும் அவர்களின் மருமகன்கள் போன்ற எல்லோருடையதும் பறிமுதல் செய்யப்படவேண்டும். இந்த ஆணையை நிறைவேற்றும் வகையில் மலையமுரன் என்கிற ரவிதாச கிரமபட்டன், அவருடைய மகன் மற்றும் அவருடைய தாய் பெரியநங்கைச்சானி ஆகியோர் இந்த பிரேமதேயம் வீரநாராயண சதுர்வேதி மங்களம் கிராமத்தில் வைத்திருந்த சில வீடுகளையும் மற்றும் வீட்டு மனைகளையும் அந்த கிராமச்சபை மூலம் பறிமுதல் செய்தனர். இப்பொழுது இந்த சொத்துக்களெல்லாம் அரையன் பரதன் என்கிற வியலகஜமல்லா பல்லவராயன் என்பவரால் வாங்கப்பட்டு அதே கிராமத்தின் அனந்தேசுவர சுவாமி கோவிலுக்காக விடப்பட்டது. இந்த நன்கொடை மூலம் ஐந்து சிவயோகிகள் உட்பட 16 பிராமணர்கள் தினந்தோறும் உணவு அளிக்கப் பெற்றார்கள். அந்த மண்டபத்திற்கும், தண்ணீர் பந்தலுக்கும் தண்ணீர் பட்டுவாடா செய்த அந்த 16 பிராமணர்களில் ஒருவருக்கும் தினமும் ஒரு அளவு நெல்லும் மற்றும் வருடத்திற்கு ஒரு காசும் வழங்கப்பட வேண்டும். (அந்த தண்ணீர் பந்தல் அந்த நன்கொடையாளரால் உருவாக்கப்பட்டதாகத் தெரிகிறது)
மிகப் பெரிய இராஜ துரோகமான பட்டத்து இளவரசனைக் கொல்வது போன்றவற்றிற்கு, அந்தக் குற்றவாளிகள் மற்றும் மற்ற அனைத்து உறவினர்களின் மொத்த அசையாச் சொத்துகளையும் பறிமுதல் செய்யும் வகையில் தண்டிக்கப்பட்டார்கள்.
காமக்கன்னி சோமாசி என்ற பிராமணர் ஒரு பெரிய இராஜ துரோகக் குற்றத்திற்காக நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைக்கப்பட்டார். இந்த வழக்கில் அவருடைய நிலங்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டாலும், அவைகளனைத்தும் மற்றொருவரால் வாங்கப்பட்டு நன்கொடையாக வழங்கப்பட்டது. இந்த சம்பவம் நடந்தது முதலாம் ராஜாதிராஜன் ஆட்சிக் காலமான கி.பி. 1024இல்.
சில குற்றங்களுக்காக அபராதம் பெற்ற பலர் துணிச்சலாக தப்பித்துக் கொண்டிருந்ததாகத் தெரிகிறது. அதனால் முதலாம் குலோத்துங்கன் (கி.பி. 1070 – 1120) இது போன்ற குற்றவாளிகளின் சொத்துகள் எந்த விலைக்கேனும் விற்று அந்தப் பணத்திற்கு இரசீது பெற்றுக்கொண்டு கச்சிப்பேடில் (இன்றைய காஞ்சீபுரம்) உள்ள கருவூலத்தில் வரவு வைக்க வேண்டும். அதன்படி, திருநாராயணச் சேரியில் இருந்த சில பிராமணர்கள், கிட்டக்கில் என்ற உத்திரமேரூரின் ஒரு குக்கிராமத்தில் வசித்த அவனிப் பட்டன் தன்னுடைய தான நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு, அந்த நிலம் அரசாணைப்படி மகாசாஸ்தா (ஜைன) கோவிலுக்கு விற்கப்பட்டது. ஒரு பிராமணர் (அவருடைய அரைகுறை பெயர் பரதய்யன் திரு ) சில பதிவிடப்படாத குற்றத்திற்காக சிறைத்தண்டனையும், அபராதமும் பெற்றிருக்கிறார்.
இங்கு, “ஒரு சிறந்த அரசன்,கொலைக்குற்றத்தைச் (பெரிய குற்றம்) செய்த குற்றவாளியின் சொத்தை தனக்காக எடுத்துக் கொள்ளக் கூடாது. அதுபோன்ற அபராதத்தை வருண பகவானுக்கு அர்ப்பணிக்கும் விதமாக நீரில் எரிந்து விடுவானாக அல்லது பண்டிதரான ஒரு சிறந்த பிராமணனுக்கு அளிக்க வேண்டியது” என்ற மனுவின் சொற்களை கவனம் கொள்ளும் போது சாலப்பொருத்தமாகிறது.
“பேராசையால் கடவுளின் சொத்தையோ அல்லது பிராமணனின் சொத்தையோ கைப்பற்றும் அந்த பாவப்பட்ட மனிதன் மறு உலகில் இராஜாளியின் எச்சத்தை உண்பான்”
பிராமணர்களுக்கு மரண தண்டனைக்குப் பதிலாக தலைக் குடுமி வைக்க விதிக்கப்பட்டது, ஆனால் வேற்று சாதி ஆண்கள் மரண தண்டனை அனுபவிக்க வேண்டும். ஒரு பிராமணன் எத்துனை குற்றமிழைத்தாலும் அந்த அரசன் அவனை ஒருக்காலும் கொல்லாமல் விட்டு அவனுடைய சொத்து மற்றும் உடலும் பாதிக்கப்படாது அவனை நாடு மட்டுமே கடத்தலாம் என்பதே பிராமணர்களுக்கு மனு அளித்த தண்டனை.
எனவே சோழ ஆட்சியாளர்கள் மனு ஸ்மிரிதியின் சட்டப் புத்தகத்தின் விதிகளை முழுமையாகப் பின்பற்றவில்லை என்பது தெளிவாகிறது. உண்மையில் சோழர் ஆட்சியில் பிராமணச் சமூகம் மனு நிர்ணயித்த முழு சலுகைகளையும் பெற முடியவில்லை. அவர்கள் சமுதாயத்தின் மிக உயர்ந்த நிலையில் வைக்கப்பட்டிருந்தாலும், அவர்களைத் தண்டிக்கும் முன்பு அரசர்கள் இரண்டாம் முறை யோசிக்கவில்லை என்றே தெரிகிறது. அவர்களும் மற்ற சாதாரண மனிதர்களைப் போன்றே தங்கள் குற்றங்களுக்கு ஏற்றவாரு தண்டிக்கப்பட்டார்கள். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தை, பறிமுதல், பொது ஏலம், புனிதத் தொழில் உரிமை நீக்கம், தொழில்முறை உரிமைகள் விற்பனை மற்றும் நில ஒதுக்கீடு போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் ஈடு செய்யப்பட்டது. இதைத் தவிர, குற்றவாளிகளை ஒதுக்கிவைத்தல், சில நேரங்களில் எதிர்கால சந்ததியினர் உள்பட குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தண்டிக்கப்பட்டனர். குற்றவாளிகளை குறிப்பிட்ட ஆலயம் மற்றும் சில நேரங்களில் குறிப்பிட்ட பகுதியில் உள்ள அனைத்து ஆலயங்களிலிருந்தும் விலக்கி வைப்பதும் நடைமுறையில் இருந்தது. அந்த பிராமணர்கள் சிறைத்தண்டனையும் பெற்றதை கல்வெட்டு ஆய்வுகளிலிருந்து அறிய முடிகிறது. கடவுட் பணிகளில் சம்பந்தப்பட்டிருந்த இந்த குறிப்பிட்ட சமூகத்தினர் கடவுள் பயமற்றவர்களாக இருந்திருப்பதும் அனுமானிக்க முடிகிறது. எல்லோருக்கும் கடவுள், மதம் பூசை நல்லவை கெட்டவை குற்றம் தண்டனை பரிகாரம் என பலவற்றையும் போதித்த இவர்கள் தங்களின் போதனைகளை தானே நம்பவில்லை . உபதேசம் ஊருக்கு மட்டும் தான் .
சோழ நிர்வாகத்தின் பல துறைகளிலும் இத்தகைய ஆராய்ச்சியை மேற்கொண்டால் தமிழகத்தில் மனுவின் ஆதிக்கத்திற்கு சோழர்கள் ஆட்சி எந்த அளவிற்கு காரணம் என்பதை ஆதாரப்பூர்வமாக அறிய முடியும்
[ பிப்ரவரி 15, 16, 17 , (2013) ஆகிய தேதிகளில் திருவனந்தபுரத்தில் நடந்த தென் இந்திய வரலாற்று சபையின் 33 வது ஆண்டு கூட்டத்தில் சமர்ப்பித்த ஆய்வறிக்கை]
மனு நீதி :
பிராமணருக்கான குறைந்த பட்ச தண்டனை அளவு
பிறரைக் காட்டிலும் 64 மடங்கு அதிகம் இருக்க வேண்டும்;
அதிக அளவு தண்டனை பிறருக்கு அளிப்பதைக் காட்டிலும்
128 மடங்கு வரை அதிகம் இருக்கலாம்.
[மநு 8.337-338]
சோழர் காலத்தில் இம்முறை பின்பற்றப்பட்டதா ?
தேவ்
சிவில் மற்றும் கிரிமினல் குற்றங்கள் என இருவகைகளுக்கும் ஒரே போன்று சொத்துக்களை மட்டுமே பறிமுதல் செய்வது அல்லது நாடு கடத்துவது என தீர்ப்பளிக்கப்பட்டதில் இருந்து மனு நீதியின் மீது கொண்டிருந்த மதிப்பு குறைவதைத் தவிர்க்க இயலவில்லை.
இழந்த உயிருக்கு நியாயம் இழைப்பதில் பாகுபாடு, மரணதண்டனை அளிப்பதில் பாரபட்சம்…. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கருதப் படவில்லை என்பது இக்கட்டுரையின் வாயிலாகத் தெள்ளத் தெளிவாகிறது. அன்றே சட்டம் ஒரு இருட்டறைதான் போலும்.
…… தேமொழி
மனு நீதி வேறு. மனு என்று மற்ற மனிதர்கள் செறுகியது வேறு. முன்பு ஒரு முறை வல்லமையில் இது பற்றிய பேச்சு எழுந்தபோது அந்த கட்டுரையாளர் வேறு யாரோ எழுதியதை தான் வழி மொழிந்ததாகச் சொன்னார்.
திரு தேவ் [மநு 8.337-338] ஐ ஆதாரமாக சுட்டியுள்ளார். அதர்கு பதிலை எதிர்பார்க்கிறேன்.
கட்டுரையின் தேடல் மனு சொல்லியது சரியா தவறா என்பது அல்ல மனுவின் நீதி சோழர் காலத்தில் பின்பற்றப்பட்டதா இல்லையா என்பதே மனுவின் கூற்றை சோழ மன்னர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை மாறாக தங்களின் நீதியின் படியே நடந்துக்கொண்டார்கள். மண்ணின் சட்டங்களையே சோழர்கள் பெரிதும் மதித்தனர்.எனவே நீதித்துறை பொறுத்த மட்டிலும் தமிழகத்தில் மனு காலூன்ற சோழ மன்னர்கள் காரணமல்ல
என்பது தான் என் ஆய்வின் கண்டுபிடிப்பு. மற்ற துறைகள் நிலையை ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்
சரி… கல்வெட்டில் கண்ட காட்சியை கட்டுரையாக்கி இருப்பதாக கூறி இருக்கிறீர்கள்.
மனிதன் என்கிற ரீதியில் லோக ஆசா பாஷங்களில் சிக்கி அதனால் தவறு செய்து அரசநாளோ, ஆண்டவனாளோ தண்டனை பெற்று திருந்திய, அவதியுற்ற அழிந்த மனிதர்களின் வரலாற்றை, வரலாறு அல்ல, கல்வட்டு அல்ல அதற்கு முந்திய புராண இதிகாசங்களும் கூறு கின்றன. இதிலே பிராமணர்களும் விதி விலக்கல்ல.
அப்படி தவறுக்கு உள்ளானவர்கள் பிராமண குடும்பத்தில் பிறந்த மனிதர்களாகவும் இருந்து இருக்கிறார்கள் (ராவனணனும் பிராமணனே என்கிறதை வால்மீகியும் குறிப்பிடுகிறார்).
அப்படி பார்க்கையில் ராஜ குடும்பத்தில் பிறந்த எத்தனை ராஜாக்கள் நீதி வழுவாது இருந்தார்கள் என்றும் கேட்கலாம். அப்படியே ஒவ்வொரு குலத்தையும் பேசிக் கொண்டு போவோமானால்….
ஒரு குலத்தில் பிறந்தவனின் தனிப்பட்ட தவறான செயல்பாடு அது அந்த குலத்தின் குற்றம் என்று கூற முடியாது. அப்படி கூறி இருப்பதாகவே கட்டுரை முடிவில் உணர்கிறேன்.
தண்டிக்கப்பட்டவர்கள் பிறப்பால் பிராமணர்களாக இருந்தாலும் தவறு செய்யும் போதே அந்த குல மக்களின் லட்சணமாக (இலக்கணமாக) வரையறுக்கப் பட்ட ஒரு ஒழுங்கில் இருந்து தடம் புரண்டபோதே அவர்கள் பிராமணர்கள் அல்ல என்ற மற்ற விதிக்கும் தானாகவே ஆட்படுகிறார்கள். எந்த குலமானாலும் அவன் அக்குடியில் பிறந்ததனால் அப்படி ஆகி விடுவதில்லை. அவனுக்கு லட்சணமாக சொன்ன வாழ்வியல் நடை முறைகளை பின் பற்றி வாழ்வதால் தான் அவன் அந்த குலத்தை சார்ந்த சிறந்த மனிதனாகப் பார்க்கப் படுகிறான் / பார்க்கவும் பட்டும் இருக்கிறான். இன்றைய நவீன விஞ்ஞான உலகில் ஒருவன் வகிக்கும் பதவியை இதற்கு ஒப்பிடலாம்.
தாங்கள் கூறுவது போல் கல்வெட்டு ஆராய்ச்சியே கட்டுரையின் நோக்கம் என்றாலும்!!!..
அப்படி இருக்க
“கடவுட் பணிகளில் சம்பந்தப்பட்டிருந்த இந்த குறிப்பிட்ட சமூகத்தினர் கடவுள் பயமற்றவர்களாக இருந்திருப்பதும் அனுமானிக்க முடிகிறது. எல்லோருக்கும் கடவுள், மதம் பூசை நல்லவை கெட்டவை குற்றம் தண்டனை பரிகாரம் என பலவற்றையும் போதித்த இவர்கள் தங்களின் போதனைகளை தானே நம்பவில்லை . உபதேசம் ஊருக்கு மட்டும் தான் .”
இப்படி ஒரு இறுதி வாசகம் ஒரு குறிப்பிட்ட இனத்தின் மீது வீசப் படும் சகதியாகவே நான் உணர்கிறேன். இந்த குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் பிறந்த சிலர் என்று கூறி இருக்க வேண்டுமே தவிர ஒட்டு மொத்தமாக இப்படி இழிவான ஒரு வாசகத்தை கடைசியில் நிறுத்தியது. இன துவேசமாக கொள்ள நேரிடுகிறது.
உபதேசம் ஊருக்கு மாத்திரமா? ஆதி சங்கரரையும், ராமானுஜரையும் துறவிகளாகக் கொண்டாலும்…. சோழர்கள் காலத்தே வாழ்ந்த நாயன்மார்களும் இதில் அடக்கமா? சகோதரி!
கல்வெட்டுக்கள் சொல்லும் செய்திகளைக் கொண்டு பிராமண சமூகம் அன்று ஆலயங்களில் கையாடல், திருட்டு போன்றவற்றில் ஈடுபட்ட செய்திகளையும், அதற்காக அவர்கள் சோழ மன்னர்களால் தண்டிக்கப்பட்டதையும் குறிப்பிட்டு அந்த தண்டனைகள் கடுமையானவைகள் அல்ல என்பது போலவும் கூறப்பட்டிருக்கிறது. இதில் மனுநீதியையும் கொண்டு வந்து இணைத்தது ஏன் என்று தெரியவில்லை. சோழ மன்னர்கள் மனுநீதிப்படி ஆட்சி புரிந்தார்கள் என்பதை நிறுவ வேண்டுமானால், பிராமணர்களுக்கு ஏனைய பிரிவினருக்குத் தரப்படும் தண்டனையைக் காட்டிலும் அதிக அளவில் தந்திருக்க வேண்டும். மற்றொரு செய்தியை நாம் கவனிக்க வேண்டும். இன்றைய கால கட்டத்தில் ஜாதிப் பிரிவினை என்பதும், பிராமண எதிர்ப்பு என்பது கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் தமிழகத்தில் வேரோடிவிட்ட நிலையில் இன்றைய கண் கொண்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலையை, அன்றைய ஜாதிப் பிரிவுகளை, அதில் குறிப்பிட்ட ஜாதியார் செய்த குற்றங்களைக் காட்டி விவாதிக்க முடியாது. ராஜராஜனின் அண்ணன் ஆதித்த கரிகாலனை கொலை செய்த பாண்டிய நாட்டு பிராமணர்கள், அவர்களுடைய மன்னன் மீது வைத்திருந்த பற்றின் காரணமாக பாண்டியன் தலையைக் கொய்த சோழ இளவரசனை பழிவாங்கினார்கள் என்பது காட்டுமன்னார்குடி கல்வெட்டு கூறுகிறது. அது தேசபக்தியின் விளைவாக செய்த குற்றம். அப்படிச் செய்தவர்கள், சொந்தக்காரர்கள் அனைவரின் சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டு ஒரு டிரஸ்ட் உருவாக்கி வைத்திருந்தார்கள். சில கிராமங்களுக்கு நீர்நிலைகள், பொதுக் காரியங்கள் செய்ய நிலம் தேவைப்பட்ட போது இந்த டிரஸ்டிலிருந்து நிலம் கொடுத்ததற்கான கல்வெட்டுச் செய்திகளும் இருப்பதாக குடவாயில் பாலசுப்பிரமணியம் எழுதியிருக்கிறார். ஆக இதுபோன்ற செய்திகளில், ஒரு ஜாதியினரைக் குறிப்பிடும் செய்தி இன்றைய காலகட்டத்தை மனதில் கொண்டு செய்யப்படும் செயல். அந்த நாளில் மற்ற ஜாதியினர் செய்த குற்றங்கள் பற்றியும் அதற்காக அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனைகள் பற்றியும் இந்தப் பேராசிரியர் விரிவாக எழுதுவதுதான் நேர்மையான செயலாக இருக்கும்.
நான் காவல்துறையில் பணியாற்றிக் கொண்டிருந்த போது ஒரு போலீஸ் அதிகாரியிடம் சிறைக் கைதிகளில் பிராமணர்கள் எத்தனை சதவீதம் இருப்பார்கள் என்று கேட்டேன். முதிர்ந்த அனுபவமுள்ள் அவர் சொன்னார், சுமார் ஒன்று அல்லது இரண்டு சதவீதம் இருந்தால் அதிகம் என்றார். அதிலும் அந்த சதவீதத்தினரும் 420 ஐ.பி.சி.யின் கீழ் குற்றம் புரிந்தவர்களாக இருப்பர், அதாவது கையாடல், ஏமாற்று போன்ற குற்றங்கள். கையாடல் என்பது காலம் காலமாக இருந்து வரும் குற்றங்கள். ஆர்.எம்.வீரப்பன் அமைச்சராக இருந்த காலத்தில் கிராம அதிகாரிகளாக கணக்குப்பிள்ளை, பட்டாமணியம் போன்ற பதவிகள் பரம்பரை பதவியாக இருந்ததை நீக்கிவிட்டு நேரடியாக வெளியிலிருந்து கிராம அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.. சம்பளம் ரூ.7க்கும் குறைவாக இருந்த காலத்தில் எத்தனை பேர் லஞ்சம் வாங்கி கைதானார்கள். இன்று நேரடியாக கிராம அதிகாரிகளாக நியமிக்கப்படுவோரில் எத்தனை பேர் இதுவரை லஞ்சம் வாங்கி கைதானார்கள் என்ற கணக்கையும் எடுத்துப் பார்க்கலாமே!