இங்கிலாந்திலிருந்து ஒரு மடல்!……(60)

0

சக்தி சக்திதாசன்

 

 

 

 

 

 

அன்பினியவர்களே !

இனிய வணக்கங்களுடன் இவ்வார மடலை வரைகிறேன்.

இலக்கியம் என்பது மனைத வாழ்க்கையுடன் இன்றியமையாத வகையில் இணைக்கப்படிருக்கிறது. எமது வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும், ஒவ்வொரு கணத்தினையும் இலக்கிய உணர்வோடு பார்க்கும் போது அப்பாஅர்வை எம் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் சோகத்திலும் சுகமான, இதமான எண்ணங்களை தவழ விடுகிறது.

இதனால் தான் கவிஞர்கள் சோகத்திலும் அழகிய கவிதைகளை ஆழமான உணர்வுகளோடு வரைஒயும் வல்லமை பெற்றவர்களாகிறார்கள்.

இலக்கியம் எனும் சொல்லைக் கேட்டவுடனே அதனை ஏதோ அர்த்தம் புரியா கனமான விடயம் எனும் வகையில் பார்க்கும் பலரைக் காணக்கூடியதாக இருக்கிறது.

ஒவ்வொரு மொழியின் பெருமையும் அதனுடைய இலக்கியத்திலேதான் வெளிப்படுகிறது.

இலக்கியத்தை ரசிப்பவர் மொழியின் மீது வெறி கொள்வதற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை எனலாம்.

ஒவ்வொரு மனதின் சிந்தனையின் வெளிப்பாடு அதனுடைய உணர்வுகளின் அதீதம் இலக்கியத்தின் பால் திரும்புமானால் எவர் மனதிலும் தீவிரவாதம் தலைதூக்கும் வாய்ப்புகள் அருகிறது,

இன்றைய நவீன உலகினிலே காணப்படும் வெறித்தனமான போராட்டங்கள் பலவும் மதத்தையோ அன்றி மொழியையோ சார்ந்ததாக இருப்பதன் காரணம் இலக்கிய உணர்வுகள் பெரும்பான்மையோரின் மனங்களில் குன்றிப்போயிருக்கும் காரணத்தினாலேயே என்று சொன்னால் அது மிகையாகாது.

எதற்காக இந்த ஆழமான முன்னுரை என்று கேட்கிறீர்களா ? இதோ வருகிறேன் விடயத்திற்கு.

இங்கிலாந்து அரசாங்கத்தினால் “Poet Laureate” அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இலக்கியவாதி எனும் வகையிலான ஒரு கெளரவப் பட்டம் , பெயர் பெற்ற இலக்கியவாதி ஒருவருக்கு வழங்கப்படுகிறது. இக்கெளரவப் பட்டம் மூன்று வருட காலத்திற்கு ஒவ்வொருவருக்கும் வழங்கப் படுகிறது.

இவர்கள் நாட்டின் பல இலக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்வதன் மூலம் அந்நிகழ்வுகளைப் பெருமைப்படுத்துவதோடு நாட்டின் இலக்கிய வலர்ச்சியைப் பற்றிய கருத்துக்களை முன்னிலைப் படுத்தும் வகையில் முதன்மையானவர்களாகத் திகழ்கிறார்கள்.

இவர்களின் பங்களிப்புகளும் இப்படியான ஒரு கெளரவப் பட்டத்தை அரசாங்கமே முன்னிலைப் படுத்தி வழங்குவதும் மக்களின் மனதில் இலக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தும் என்பதே இதன் ஆதரவாளர்களினது வாதமாகும்.

இதே போல ஒரு கெளரவப் பட்டத்தை ” Children’s Laureate “ அதாவது குழந்தைகளுக்கான இலக்கிவாதி எனும் வகையில் இளையோர் இலக்கியத்தை முதன்மைப் படுத்தும் எழுத்தாளர்களுக்கும் வழங்கி கெளரவிக்கப்படுகிறது.

இம்முறை இக்குழந்தைகளுக்கான இலக்கியவாதி எனும் கெளரவப் பட்டம் முதன்முறையாக ஒரு கறுப்பு இனத்தவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. அத்துடன் இப்பட்டம் ஒரு பெண்மணிக்கு வழங்கப்பட்டிருப்பது மேலும் ஒரு சிறப்பாகக் கணிக்கப்படுகிறது.

இப்பட்டத்துக்குரிய பெண்மணி 51 வயதே நிரம்பிய ” மலோரி பிளாக்மன் (Malorie Blackman) “ எனும் ஒரு முன்னனி எழுத்தாளராவார்.

1962ம் ஆண்டு பிறந்த இவர் “நீல் பிளாக்மன்(Neil Blackman)” எனும் ஸ்கொட்லாந்து நாட்டுக்காரரைக் கணவனாகவும் எலிஸபெத் எனும் 17 வயதுப் பெண்ணின் தாயருமாவார்.

“ Noughts and Crosses “ எனும் பதின்ம வயது இளையோருக்கான ஒரு தொடர் நாவல்களி எழுதி மிகவும் பிரபலமடைந்தார்.

இவருடைய நாவல்களின் சாரம் இங்கிலாந்தில் இலைமறைகாய் போல இருந்து வரும் இனவேற்றுமை, நிறவெறி என்பனவற்றைத் துல்லியமாக எடுத்துக்காட்டும் வகையில் அமைந்திருப்பது இவரது தனித்தன்மையாகும்.

இலக்கிய உணர்வு சிறுவர்களின் உள்ளத்தில் சிறு பராயத்திலிருந்தே வளர்க்கப்படுவது அவசியம் எனும் இவர் இத்தன்மையை வளர்த்தெடுப்பதற்கு பெற்றோரும், ஆசிரியரும் குழந்தைப்பருவத்திலிருந்தே ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 நிமிடங்களாவது குழந்தைகளுக்கு கதைப்புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்கிறார்.

இன்றைய கணணி உலகத்தில் இலக்கியமும் விஞ்ஞானமயப்படுத்தப் பட வேண்டியது அவசியம் என்று கூறும் இதனாலேயே இளையோரை இலக்கியத்தில் ஈடுபடச் செய்யலாம் என்று அறிவுறுத்துகிறார்.

புத்தகங்கள் படிக்கும் வழக்கம் ஒன்றே தன் வாழ்க்கையில் தனக்கு பல சந்தர்ப்பங்களுக்கான கதவுகளைத் திறக்கக் காரணமாயிருந்தது என்பதே இவரது கருத்தாகிறது.

ஒவ்வொரு சிறுவர்கள் கைகளிலும் சிறுவர்களுக்கான வாசிகசாலை அங்கத்தவர் அட்டை இருப்பது அவசியம் என்கிறார். இதைப் பெற்றோர் செய்யத்தவறினால் அதற்கான பொறுப்பைப் பாடசாலைகள் ஏற்றுக்கொள்ல வேண்டும் என்பது இவரது வாதமாக இருக்கிறது.

நாவல்கள் எழுதியது மட்டுமல்லாமல் லண்டன் தொலைக்காட்சியில் இளையோருக்கான ஒரு முன்னனித் தொடரான “பைக்கர் க்றோவ்(Byker Grove)” எனும் தொடருக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார்.

ஒரு நாட்டின் மொழியின் தொன்மை அந்நாட்டின் இலக்கியச் செழுமையிலேயே தங்கியுள்ளது. இவ்விலக்கியம் செழுமையடைய வேண்டுமானால் அச்சமூகத்தின் இளைய தலைமுறை இலக்கியத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்து கொள்ள வேண்டும்.

இளையோர்கள் உலகம் இன்று கணனி எனும் மையத்தினுள் சிக்கிக் கிடக்கிறது. இலக்கியம் தன்னை இக்கணனி வலைக்குள் பிணைத்துக் கொண்டால்தான் இளையோர்கள் இலக்கியத்தின் முக்கியத்தினை உள்வாங்கிக் கொள்வார்கள்.

இளையோர்களுக்கான நாவல்கள் மூலம் புகழ் பெற்ற இத்தகைய முன்னனி எழுத்தாளர்களை முன்னிலைப் படுத்துவதன் மூலம் அவர்கள் இச்செயல்களின் தாக்கத்திற்கு செயல் வடிவம் கொடுக்கிறார்கள்.

இதை ஆதரித்துச் செயல்படுத்தும் இங்கிலாந்து அரசாங்கத்தை பாராட்டாமல் இருக்க முடியாது

மீண்டும் அடுத்த மடலில்

அன்புடன்

சக்தி சக்திதாசன்

 http://www.thamilpoonga.com

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *