இலக்கியம்கவிதைகள்

அறுமுகநூறு (17)

 

சச்சிதானந்தம்

 

அறுமுகன் என்னும் ஆழ்ந்த பொருளை,

அழகுற அகிலம் சூழ்ந்த பொருளை,

அகமுக மிரண்டும் காணும் பொருளை,

அடிபணிந் துணர்ந்து அன்பை உணர்வோம்!                                                                   81

 

சிக்கலில் வேலுற்றுச் செந்தூரில் வீறுற்றுச்

சூரனைக் கூறிட்ட பின்னாலும் அருளுற்றுச்,

செங்கொண்டைச் சேவலாய்ப் பூங்கொண்டைப் பீலியாய்ச்

செய்தவனைக் காத்திட்ட சிங்கார வேலனே!                                                                   82

 

குடிக்கும் தண்ணீரைக் குடித்திட முடியாமல்,

துதிக்கை துண்டாகித் துடிக்கும் யானையாய்,

துதிக்கும் உன்னைநான் துதித்திட முடியாமல்,

தடுக்கும் நெஞ்சத்தின் மயக்கம் நீக்கிடுவேலா!                                                               83

 

அகவும் மயிலது அரவம் தாக்கும்,

அறுமுகன் அருளது அகந்தை நீக்கும்,

அலறும் ஆந்தை இரவில் தாக்கும்,

அலையும் மனத்தைக் கரவேல் காக்கும்!                                                                        84

 

ஒளியில் நிறைந்த இறைவனின் அழகைக்,

கண்டவர் மனதின் களங்கம் நீங்கும்,

விழியில் நிறைந்த அவனது எழிலால்,

மனதில் நிறையும் அமைதியின் தோற்றம்!                                                                    85

Print Friendly, PDF & Email
Download PDF
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க