வே.ம.அருச்சுணன் – மலேசியா

இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள். நமது இளைய தலைமுறையினரான ஆண்,பெண் இருபாலரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு உடனடித் தீர்வு காண்பது அரசாங்கத்தின் கடமை என்றாலும், இந்திய இளைஞர்கள் மிகவும் ஆபத்தான நடவடிக்கைகளில் இறங்கியதன் பயனாய் அவப்பெயரைத் தாங்கியிருக்கும் இவ்வேளையில் அவர்களைக் காப்பதும்,அவர்களுக்கு நல்வழி காட்டுவதும் அவசியம் என்பதால் ஒட்டுமொத்த இந்திய சமூகம் உடனடித் தீர்வுகளில் இன்றே இறங்குவது நலம் பயக்கும் நடவடிக்கையாகும்.

நாட்டின் பதின்மூன்றாவது,தேர்தல் ஒருவழியாக நடந்து முடிந்திருக்கும் இவ்வேளையில் இந்திய சமூகம் எதிர்பார்த்தது போல் நடை பெறாமல் போன வருத்தம் இருந்தாலும், இனி யார் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்தாலும் இந்திய சமூகத்துக்குப் பட்டை நாமம் என்பது மட்டுமே உறுதியாகிவிட்டது.

மேலும் அண்மைய காலமாக சிறிய சமூகமாக இந்திய சமூகம் பெயர் குறிக்கப்பட்டு, அதனை மேலும் ஒரம்கட்டும் நடவடிக்கைகள் இன்றோ நேற்றோ எதிர்பாராமல் நடந்த ஒன்றல்ல. மாறாக நெடுங்காலமாக எல்லாம் திட்டமிட்டே நடைபெற்று வந்த இந்த உண்மையை இனியாகிலும் நாம் ஏற்கத்தான் வேண்டும். இன்றைய அவல நிலைக்கு சமூகமும் பொறுப்பேற்க வேண்டும்.

இனி, நம் கையைக்கொண்டுதான் கரணம் எனும் நிலையில் நாம் அனைவரும் ஒற்றுமையாகச் செயலாற்றி சமூகத்தின் அடுத்த வெற்றிக்கோட்டைத் தொடவிருக்கும் இந்திய இளைஞர்களுக்கு வழிகாட்ட நமது புதிய யுத்திகளைச் சொல்லித்தருவோம்.

தேர்தலுக்குப்பிறகு,அமைக்கப்பட்ட அமைச்சரவை இந்திய சமூகத்துக்கு குறிப்பாக இந்திய இளைஞர்களுக்குச் சாதகமாக அமைந்தது. இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சாகும். இதன் அமைச்சர் கைரி ஜமாலுதின். அம்னோ இளைஞரணித் தலைவரான இவர் முதல் முறையாக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். துணையமைச்சர் டத்தோ மு.சரவணன் முதன் முறையாக ஒரு தமிழருக்கு துணையமைச்சர் பதவிவழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன் சில ஆண்டுகள் முன்னாள் ம.இ.கா.இளைஞரணித் தலைவர் எஸ். விக்னேஸ்வரன் இந்த அமைச்சுக்கு நாடாளுமன்ற செயலாளராகப் பொறுப்பு வகித்துள்ளார்.

இன்றைய பிரதமர் நஜீப், இளைஞர்,விளையாட்டுத்துறை அமைச்சராக 1986 ஆம் ஆண்டும், தொடர்ந்து 1987 ஆம் ஆண்டு முதல் அம்னோ இளைஞரணித் தலைவராகவும் பொறுப்பு வகித்தவர் என்பது கவனிக்கத்தக்கதாகும். நஜீப் அவர் காலத்தில் இந்தியர்களுக்குச் செய்யத் தவறியதை, தற்போது பதவி ஏற்றுள்ள அமைச்சர் கைரி ஜமாலுதின் தவறாமல் செய்வார் என்று நம்புகிறோம். சத்து மலேசியா கொள்கைப்படி பாகுபாடின்றி இந்திய இளைஞர்களுக்கு உதவ வேண்டும். இதில் துணையமைச்சர் டத்தோ மு.சரவணன் கூடுதல் கவனம் செலுத்திக் கிடைத்த வாய்ப்பைக் கோட்டைவிடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

1960 ஆம் ஆண்டுகளில் நமது இந்திய இளைஞர்கள் விளையாட்டுத்துறையில் கொடிகட்டிப் பறந்த ஒரு காலம் இருந்தது மிக உண்மை. நமது இந்திய விளையாட்டாளர்கள் மட்டுமின்றி 1950 ஆம் ஆண்டுகளில் சீனர்கள் பூப்பந்துவிளையாட்டை தங்களின் முழுக்கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டதுடன் தாமஸ் கிண்ணத்தைப் பல ஆண்டுகள் வெற்றி கொண்டு நாட்டுக்குப் பெருமை சேர்த்தவர்கள்.

1969 மே இனக்கலவரத்துக்குப் பின் அரசாங்கம் தன் மூப்பாக எடுத்த பல முடிவுகளால் தமிழர்களும்,சீனர்களும் பல துறைகளில் ஓரம் கட்டப்பட்டது போல், விளையாட்டுத் துறையிலும் இரு இனங்களையும் முற்றாக ஓரங்கட்டியது. பூப்பந்து, நீச்சல், பௌலிங், குவாஷ், கூடைப்பந்து, மேசைப்பந்து, ஜூடோ, போன்ற விளையாட்டுகள் இன்றும் சீனர்களின் கட்டுப்பாட்டுக்களில் இருந்து வருகின்றன. சீனர்களின் பொருளாதார பலம் அவர்களை இத்துறையில் காலூன்றச் செய்துள்ளது.

இந்தியர்கள் பெருமளவில் ஆர்வமுடன் பங்கு பெற்ற காற்பந்து, ஓட்டப்பந்தயம், ஹாக்கி, பெருநடைப்போட்டி, டெனிஸ் ஆகிய போட்டிகளில் இந்தியர்கள் இன்று காணாமல் போய்விட்டார்கள். பொருளாதாரப் பிரச்சனையினால் இவர்கள் இத்துறையில் நிலைக்க முடியாமல் போனது ஒரு புறமிருக்க, அரசாங்கம் திட்டமிட்டே இவர்களை ஒதுக்கியதுதான் உண்மை.

விளையாட்டு வீரர்களை அடையாளம் கண்டு முறையானப் பயிற்சிகள் மூலம் உருவாக்க வேண்டிய இடம், ஆரம்பப்பள்ளிகளும், இடைநிலைப் பள்ளிகளும்தான். ஆனால், இனப்பாகுபாட்டை காட்டக் கூடாத பள்ளித் தலைமையாசிரியர்களும்,பள்ளி முதல்வர்களும் மலாய்க்காரர்களாக இருந்ததால், சீன, இந்திய மாணவர்களை முளையிலேயே கிள்ளி எறிகிறார்கள்.

மலேசிய விளையாட்டு மன்றம் நடத்தும் போட்டிகளில் மலாய் மாணவர்களே அதிகமாகப் பங்கு பெறுவதைக் கண்கூடாகக் காணலாம்.இதன் தாக்கம் தேசிய நிலையிலும் பிரதிபலிக்கின்றன. தேசிய காற்பந்து போட்டிகளில் ஒருகாலத்தில் அதிகமான இந்திய விளையாட்டாளர்கள் விளையாடிய இடத்தில் ஒருவருக்கு மட்டும் வாய்ப்புக் கொடுப்பது எந்தவிதத்தில் ஞாயம்? சீனர்களை அடியோடு இந்த விளையாட்டில் இல்லாமல் செய்துவிட்டு தேசிய ஒற்றுமை பற்றிப் பேசுவது அர்த்தமற்றது.

தேசிய விளையாட்டு வாரியத்திற்கு இந்திய இயக்குநர் ஒருவரை நியமனம் செய்யவிருக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார் டத்தோ மு.சரவணன். பல மலாய்க்கார அதிகாரிகள் மத்தியில் தமிழர் ஒருவரை மட்டுமே நியமிப்பது நல்ல பலனைத் தராது என்பது தெளிவு. அங்கேயும் கோட்டா முறையில் மலாய்க்காரர்கள் பேசுவார்கள், முடிவு செய்வார்கள். நமக்காகப் போராடும் நபர்களை மட்டுமே நியமியுங்கள். தலையாட்டிப் பொம்மைகளும் ஜால்ராக்களும் இனி நமக்கு வேண்டாம்.

அமைச்சரவையில் ஓர் அமைச்சர் மட்டுமே இருந்த வேளையில் இந்தியச்முதாயம் இழந்தது அதிகம். அந்த கண்ணாமூச்சு வேலைகள் எல்லாம் இனியும் வேண்டாம். நமது இந்திய இளைஞர்கள் விளையாட்டுத் துறையில் மீண்டும் சிறந்து விளங்க உதவுங்கள். நமது இளைஞர்களின் மீது படிந்துள்ள கறைகளைப் போக்குங்கள்.

இளைஞர்களாக இருக்கும் அமைச்சரும், துணையமைச்சரும் சாதனைப்படைக்க வேண்டும். இந்திய இளைஞர்கள் உலகளவில் சாதனைப் படைக்க உதவுங்கள்!

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.