Category: பத்திகள்

பத்தி

  • வெற்றிக் கனியை எட்டிப்பறிப்போமா! (3)

    பவள சங்கரி

    நிலையான குறிக்கோளும், தெளிவான சிந்தையும்!

    நாம் எல்லோருமே வாழ்க்கையில் வெற்றியாளர்களாக இருப்பதையே பெரிதும் விரும்புகிறோம். எங்கு வெற்றி, எதில் வெற்றி என்று நிலையான ஒரு குறிக்கோள் இருந்தால்தானே அந்த வெற்றிப் பாதையை நெருங்க முடியும். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை என்பது இலக்கு இல்லாத ஓர் பயணம் போன்றது. மேலோட்டமாக, பொத்தாம் பொதுவாக ஒரு குறிக்கோள் என்பதைவிட உறுதியான மற்றும் நிலையானதொரு குறிக்கோளைக் கொண்டிருத்தல் வேண்டும். அதற்குத் தெளிவான சிந்தனை வேண்டும். நாம் சாதிக்க நினைக்கும் விசயங்களை முதலில் பட்டியலிட வேண்டும்.

    உதாரணமாக நம் இலட்சியம் குடியிருப்பதற்கு ஒரு அழகான வீடு கட்ட வேண்டும் என்றால், அந்த வீடு எந்த அளவில், எந்த இடத்தில், அதாவது நகரத்தின் மையப் பகுதியிலா அல்லது  நகர எல்லையை விட்டு அமைதியான ஒரு பகுதியிலா என்பது போன்றதோடு அதற்கான செலவு எவ்வளவு ஆகும் போன்ற அனைத்தையும் தெளிவாகப் பட்டியலிட வேண்டும். இதில் மிக முக்கியமானது நம் சக்திக்கு உட்பட்ட இலட்சியமாக இருக்க வேண்டியது. நம் தகுதிக்குத் தகுந்த குறிக்கோளை நிர்ணயிக்க வேண்டியது அவசியம். ஒரு சிறிய வாடகை வீட்டில் குடியிருக்கும் ஒரு அரசாங்கப் பணியில் இருப்பவரின் ஆசை அதைவிட சற்றே பெரிதான, கொஞ்சம் அதிகமான வசதிகளுடன் கூடியதான் ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற தெளிவான குறிக்கோள் உடையவராக இருந்தால் அது சாத்தியமாவதில் பெரிய பிரச்சனை இருக்காது. தாம் செய்யும் வேலையை நல்ல விதமாகச் செய்வதோடு, கூடுதலான நேரப் பணியையும் (overtime) ஏற்றுக் கொள்ளலாம். எந்த வங்கியில் குறைந்த வட்டியில் கடன் கொடுக்கிறார்கள், அதைத் திருப்பிச் செலுத்தும் வழி எந்த அளவு சாத்தியம் போன்ற அனைத்தையும் தெளிவாகத் திட்டமிடல் அவசியம். இப்படி திட்டமிட்ட விசயங்களைத் தெளிவாக ஒரு குறிப்பேட்டில் பதிவிட வேண்டியதோடு அதனைத் தாமும், தம் குடும்பத்தாரும் அன்றாடம் அதிகமாகப் புழங்கும் இடத்தில் கண்ணில் படும்படியாக வைக்க வேண்டியது அவசியம். இது கேட்பதற்கு நகைச்சுவையாக இருப்பது போல இருக்கலாம். ஆனால் பல வெற்றியாளர்கள் இது போன்ற வழிமுறைகளை பின்பற்றியிருக்கிறார்கள் என்பது விசாரித்துப் பார்த்தால் அறியலாம். ஒரு வீடு கட்டுவது என்பது அந்த குடும்பத் தலைவன் மற்றும் சம்பாதிக்கும் மனைவி ஆகிய இருவரின் கையில் இருந்தாலும், ஓய்வு பெற்ற பெற்றோர் மற்றும் சிறிய குழந்தைகள் ஆகியோருக்கும் இந்த இலட்சியம் அறிந்திருந்தால் குடும்பத்திலோ அல்லதுதனிப்பட்ட முறையிலோ தேவையற்ற அதிகப்படியான செலவினங்களைக் குறைத்தும், அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தும் அந்த இலட்சியத்தை அடைவதற்கு பெரிதும் துணையாக இருப்பார்கள். அந்த இலட்சியத்தை முழுமையாகவும், சிறப்பாகவும் அடைவது எப்படி?

    கற்பனைக் குதிரையைத் தட்டிவிடுங்கள்!

    ஆம், மனோத்தத்துவ நிபுணர்களும் சொல்லக்கூடிய எளிய வழிகள் இவைதான். அதாவது நம்முடைய இலட்சியத்தின்மீது ஆழ்ந்த பக்தி கொண்டிருத்தல் அவசியம். இதனை தியானம் என்றும் கொள்ள்லாம். அன்றாடம் விடியலிலோ அல்லது நமக்குக் கிடைக்கும் எந்த ஒரு அமைதியான, தொந்திரவு இல்லாத சூழலிலோ தனிமையில் அமர்ந்து நம் இலட்சியம் குறித்த ஆழ்ந்த கற்பனையை வளர்க்கலாம். வீடு கட்ட வேண்டிய இடத்தை திட்டமிட்டு வைத்திருப்போமே அங்கிருந்து ஆரம்பிக்க்லாம் நம் கற்பனையை. அடுத்து அந்த வீட்டின் அடித்தளத்திலிருந்து ஆரம்பித்து நாம் விரும்பும் வகையில் கொஞ்சம், கொஞ்சமாக அந்தக் கட்டிடத்தை மேலெழும்பச் செய்யலாம். இறுதியில் என்ன விதமான மர வேலைப்பாடுகள் மற்றும் அழகுபடுத்துதல், வண்னம் பூசுதல் வரை அனைத்தையும் கற்பனையில் முழுமையாக, அழகாக செய்து முடிக்கலாம். வெளிப்படையாகச் சொல்லும்போது மலைப்பாக இருக்கும் இந்த விசயம், நம் ஆழ்மனதில் அமைதியாக அசை போடும்போது மிக எளிதாகத் தெரியும். காரணம் நம் ஆழ்மனதின் சக்தி மிகவும் அதிகம் என்கிறார்கள் மனோத்தத்துவ வல்லுநர்கள். ஆம், கற்பனைக் குதிரையின் வேகம் மிகவும் அதிகமாம். அதாவது நிழற்படங்களாகப் பதிவு செய்வதை நம் ஆழ்மனம் எளிதாக பதிவேற்றிக் கொள்கிறது என்கிறார்கள். வெற்று நினைவுகளை ஆழ்மனதில் பதிவேற்ற முடியாது. அதேசமயம் மனப்படங்களாக அதைச் செலுத்தும்போது  நம் ஆழ்மனம் அதைச் சரியாக உள்வாங்கிக் கொள்கிறது.  ஆக நாம் செலுத்துகிற மனப்படங்கள் தெளிவானதாக இருக்கும் வகையில் அதற்கான செயல்வடிவம் பெற ஆரம்பித்துவிடுகிறது அது. நம்மை சுறுசுறுப்புடன் அதற்கான பணியில் முழுமையாக ஈடுபடச் செய்கிறது.

    விளையாட்டோ, கல்வியோ, தொழிலோ சுற்றுலாவோ இப்படி எந்தத் துறையாக இருந்தாலும், இந்தக் கற்பனைக் குதிரையைத் தட்டிவிடும் திட்டம் வெற்றி காண்கிறது என்பது பல வெற்றியாளர்களின் கருத்தாகவே உள்ளது. அன்றாடம் நாம் செயல்படுத்தக்கூடிய எந்தவொரு சிறிய விசயமாக இருந்தாலும், இயன்றவரை இந்த முறையில் ஆழ்மனத்தில் படமாக செலுத்திப் பிறகு செயல் வடிவம் கொடுக்கும்போது அச்செயல் மிகச் சிறந்த முறையில் நடைபெறுவதை நம் அனுபவத்தில் உணர முடியும்.

    வெற்றியின் இரகசியத்தை உணர்ந்து கொண்ட நாம் இன்றிலிருந்தே அதற்கான முயற்சியை தொடங்குவோமே. முழுமையான குறிக்கோளை நிர்ணயம் செய்து, அதனைத் தெளிவான திட்டமாகத் தீட்டிக்கொண்டு, நம் கண்ணில் படும்படியாக வைத்துக் கொண்டு, அன்றாடம் அதனை ஆழ்மனத்தில் படமாக செலுத்திக் கொண்டு, நாளுக்கு நாள் அதனை புதுப்பித்துக் கொண்டே வாருங்கள். அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபடுங்கள். அதனை நிறைவேற்றும் சக்தி தானாகக் கிட்டும் என்பதில் ஐயமில்லை. உங்கள் இலட்சியத்தை எளிதாக எட்டிவிடுவீர்கள்!

    மேலும் தொடருவோம்

    படங்களுக்கு நன்றி:

    http://inspiring-pictures.com/

    Share
  • தேவன் நூறு (தேவன் ஒரு சகாப்தம்) (3)

    திவாகர்

    தேவன் ஒரு சகாப்தம் (1)

    தேவன் ஒரு சகாப்தம் (2)

    கதாநாயகன் முதன்முதலில் நூலகத்தில் கதாநாயகியைப் பார்க்கிறான் என்று சொன்னேன் இல்லையா.. இந்த லைப்ரேரியன் (நூலகர் என்றெல்லாம் தேவன் எழுதமாட்டார்) பற்றி முதல் பக்கத்திலேயே விமர்சிப்பார் பாருங்களேன்.. இவரைப் போல நிறைய ஆசாமிகளை நாம் வாழ்க்கையில் சந்தித்து வருகிறோம் என்றே நமக்குத் தோன்றும்.

    “கலாசாலை லைப்ரரியின் ஜன்னலைத் திறந்த லைப்ரேரியன் கோவிந்தராவின் பசிக்களை மிகுந்த முகத்தில் அனல்காற்று வீசியது. அதன் சிடுசிடுப்பு இன்னும் சற்று முதிர்ந்தது. எதிரே மலைப்பாம்பு போல் வளைந்து கிடந்த ரஸ்தாவில், ஜலம் அசைவது போன்ற பொய்த்தோற்றந்தான் தென்பட்டது.” ஒன்றரை மணிமுதல் இரண்டேகால் மணிவரை லைப்ரேரியன் சிற்றுண்டி வேளை.”

    மேலும் அவரைப் பற்றி நமக்கு சுவை கூடச் சொல்கிறார். இந்தப் பசிவேளையில் லைப்ரரியில்

    ”எதைக் கேட்டாலும் இல்லைதான் அப்போது, யார் கேட்டாலும் கிடையாதுதான்.. பீரங்கி வாயிலே வெளிப்படும் குண்டின் உத்வேகம் இங்கே வெட்கிப் போகும்”

    இப்படித்தான் கதையை ஆரம்பிக்கிறார் தேவன். இப்போதே இந்த லைப்ரேரியன் பற்றி சற்று தெரிந்திருக்கும்.. இப்படிப்பட்ட மகோன்னத வேளையில் நம் கதாநாயகி வரவு அங்கே நிகழ்கிறது.

    ”ஸார் ப்ளீஸ்! “ என்றது இனிமை ததும்பிய குரல். அவள்தான் பேசினாள்.

    இருண்ட வானத்தில் பளிச்சிட்ட கொடி மின்னல் போல ஒரு புன்சிரிப்பை வருவித்துக் கொண்டு “என்ன?” என்றார் ராவ்ஜி. இந்த மகதாச்சரியத்தைக் காணும் பதம் பெற்ற ஆத்மா வேறொன்றும் இருந்தது.”

    அந்த மாபெரும் ஆச்சரியத்தைக் கண்டவன் நம் கதாநாயகனே.. அதே போல நடராஜன் மணியை தேவன் வர்ணிக்கும்போது

    குரங்கு பேன் பார்த்தாலும் பார்க்கும்,காதை அறுத்தாலும் அறுக்கும்’ என்கிறபடி மணி உதவி செய்கிறேன் என்றால் தாஸானுதாஸனாக இருப்பான். ஆளைக் கவிழ்ப்பதென்று சங்கல்பம் செய்துகொண்டால் மண்ணைப் போட்டு மூடிவிட்டுத்தான் உட்காருவான்.

    அதே போல நடராஜன் ஜானகியோடு ரயில் பிரயாணம் செய்யும்போதும் தேவன் நமக்கு எப்படித் தெரிவிக்கிறார் பாருங்கள்.

    (ரயில் பெட்டியில் நடராஜன்) ”உள்ளே நுழைந்ததும் ஆண் சிங்கம் பிடரியைச் சிலிர்த்துத் தலையைத் தூக்கிப் பார்ப்பது போல இருபக்கமும் பார்த்தான். பிறகு ஜானகி இருக்கும் திக்கை நோக்கி நடந்தான். ‘திக்திக்’ என்று அடித்துக் கொண்டது ஜானகியின் நெஞ்சம். மங்களம் அவனை வேல் விழிகள் கொண்டு கண்ணகி தேவியானவள் பாண்டியனை விழித்தது போல குரோதமாகப் பார்த்தாள்.”

    இப்படி உவமையாகச் சொல்லிக் கொண்டு வருவதில் ஒரு சௌகரியம் வாசகர்களுக்குக் கிட்டி விடுகிறது. இந்தப் பாத்திரம் இப்படிப்பட்டது என்பதையும் வாசகர் மனம் உடனடியாக ஏற்றுக்கொண்டு விடுகிறது. வாசகர்களும் எங்கெல்லாம் அந்தப் பாத்திரம் வருகிறதோ அதற்கேற்றாற்போல தங்கள் மனநிலையை வைத்துக் கொண்டு படிக்கிற சௌகரியமும் ஏற்படுகிறது.

    இன்னும் சில ‘தேவ’ உவமைகளை மட்டும் தருகிறேன்.

    *****

    கஷ்டப்படும் ஆத்மா கஷ்டப்பட்டே தீரவேண்டும் என்ற நியதியின்படி மங்களம் இல்லாதபோதும் கூட விச்ராந்தியாயிருக்க முடியாமல் இவர் பிடியில் திணறினான். (ஜகதீசன்)

    ******

    வந்து சேர்ந்த நடராஜனுடைய ஆனந்தமும் திருப்தியும் முன்பு ராஜசூய யாகத்தை முடித்த யுதிர்ஷ்ட்ரனுக்கும் அச்வமேத யாதத்தை நடத்திய ராகவனுக்கும் ஏற்பட்டிருக்குமா என்பது சந்தேகமே

    ******

    பொட்டை வெளியில் எரிக்கும் வெய்யிலில் நான்கு சொட்டு மழைத்துளிகள் போல் வந்த அந்த வார்த்தைகளை ஏற்றுக்கொண்டு வெளியே வந்தான் (நடராஜன்).

    ******

    துஷ்டனைக் கண்டால் தூர விலகுகிறதும், அது பயப்படுகிறது என்று துஷ்டன் எண்ணிக்கொண்டு கொக்கரிக்கிறதும் வழக்கமாக நடப்பதுதானே காலேஜில் நடராஜன் ஒரு காலத்திலும் சந்துருவை நெருங்கினவன் இல்லை.

    ******

    பல்வரிசை காட்டிக் கைகொட்டி ஆர்ப்பரிப்பது போல சமுத்திர அலைகள் ஓயாது எழும்புவதும் குனிவதுமாக இருந்தன (திருச்செந்தூர்).

    ******

    பகலிலேயே இருள் கவிந்திருக்கும் சுப்புரத்தினத்தின் கிருஹம்

    இரவில் துஷ்ட மிருகத்தின் குகை போல காணப்பட்டது.(சந்துருவின் வீடு)

    ******

    சூரியன் மாயவரம் வள்ளலார் கோயில் வீதியில் தினம் தினம் உதயமாகும்போது முதல்முதலாகப் பட்டுபுடவையை மடிசார் வைத்துக் கட்டிக்கொண்டு முன் வாசலில் அழகாக மாக்கோலம் போடும் ஒரு பெண்மணியைத்தான் பார்ப்பது வழக்கம். பார்த்தவுடன் உள்ளம் பூரித்துத் தன் கதிர்களைத் தெருவெல்லாம் வாரி இறைப்பான். அந்தப் பெண்ணும் அவனைப் பார்த்துப் பல்வரிசையைக் காட்டிவிட்டு, தன் வேலையில் முனைவாள் (இது மணியின் மனைவியைப் பற்றி உவமையோடு ஒரு அறிமுகம்)

    *********

    பெரிய சோம்பேறி; நாட்டுப்புறத்துப் பெருச்சாளி’ என்கிற நினைப்புடன் ஹரன் அவரைப் பார்த்தார். அவர் ஹரனை, ‘ஒன்றுக்கும் உதவாத உதியமரம், டெல்லியில் வளர்ந்ததனால் விறைக்கிறது’ என்ற பாவத்தில் பார்த்தார். (மணியின் தந்தை வீட்டில் நடராஜனின் தந்தை)

    *******

    தன் தலைக்கு மேல் முழங்கும் பேரிடிகளைப் பற்றிக் கலங்கியவாறு வரும்போது இடிகளுக்கிடையே தோன்றிய பாதை மீது ஒளி வீசி வழி காட்டும் மின்வெட்டுகளைப் போன்றதொரு சந்தர்ப்பமும் அவனுக்கு ஏற்பட்டது.

    *******

    சிவாக்ஞையின் பேரிலே ஆவிர்ப்பவித்த அக்கினி வீரபத்திரமூர்த்தியும், துஷ்டநிக்கிரகத்துக்காகத் தூணைப் பிளந்துகொண்டு வெளிப்பட்ட நரஸிம்ம ஸ்வாமியும் அப்போது அவருக்கு நிகராக முடியாது (ஹரனின் கோபம் பற்றி நடராஜன் நினைப்பது).

    *******

    சுக்குக் கஷாயத்தில் விடப்பட்ட விளக்கெண்ணையை விடியற்கால வேளையில் சிறுவர்கள் நோக்கும் அருவருப்புடன் ஜகம் கிழவரைப் பார்த்தாள்.

    இந்த சுக்குக் கஷாய அனுபவம் சிறிய வயதில் எனக்கும் கூட ஏற்பட்டது உண்டு. ஊரிலே தாத்தாவின் இந்த சுகாதார ஏற்பாடு இப்போது நினைத்தாலும் ‘வயிற்றைக் கலக்கும்”.

    ’மிஸ் ஜானகியின்’ கதை எல்லோருக்கும் பிடிக்கும் கதை. மிகப் பெரிய திருப்பங்களோ, சோகமயமோ, அந்தக் கால படங்களில் வருவது போல வண்டி வண்டியாக வசனங்களோ இல்லாத கதை. இத்தனைக்கும் இது  எட்டு/பத்து நாட்களில் நடக்கும் நிகழ்ச்சிகளை வைத்து விவரிக்கப் பட்டிருக்கும் கதைதான் என்பதால்  விறுவிறுப்பாக போய்க்கொண்டே இருக்கும். ஆனால் இந்த எட்டு நாட்கள் கதையிலும் ஒரு சில பாத்திரங்களுக்கு ஆயுள் பூராவுமாக நடக்கிற சங்கதிகளை மிகச் சுருக்கமாகச் சொல்லி விடுவது என்பது தேவனுக்கு கை வந்த கலை. அதுவும் திருச்செந்தூரிலேயே கதை முக்கால்வாசி நடப்பதால், அங்கே அருளாட்சி புரியும் எந்தை முருகனைப் பற்றிய வர்ணனைகளை சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் அள்ளி வழங்குவதில் தேவனுக்கு இணை தேவனேதான்.

    தேவன் இந்த ‘ஃப்ளாஷ்பேக்’ என்று சொல்லப்படும் உத்திகளை மிக நயமாக இந்தக் கதையில் கையாண்டுள்ளார். சினிமாவில் இப்படி காண்பிப்பது மிகச் சுலபம். எழுத்தில் எப்படி காண்பிப்பது. தேவனின் கதைகளைப் படித்தால் அதன் லாவகம் தெரிந்து விடும்.

    இந்த மிஸ் ஜானகியில் ஒரு நாயும் வரும். டைகர் என்ற பெயருடன் திருச்செந்தூர் கீழப்புதுத்தெருவில் ‘அநியாயமாக’  யாரையும் நுழையவிடாமல் அழிச்சாட்டியம் பண்ணும். நாயை மிக விசேஷமாக வர்ணனை செய்வார் தேவன். நாட்டிய மணி தெலுங்கு பங்காருவின் வீட்டில் பாதுகாப்புக்காக அவர் தந்தையால் வளர்க்கப்படும் டைகரின் பாவனைகளுக்கும் அதன் ‘உர்..உர்.. பாஷைகளுக்கு தேவன் விளக்கம் சொல்லும் அழகே அழகே.. (டைகர் என்ற பெயரை வைத்துக்கொண்டு பூனை போல இருக்கும் சுபாவம் அதனுடையதல்ல, கூடவே அன்று சிறிது விச்ராந்தியாக அவிழ்த்துவிடப்பட்டிருந்ததால் கீழப்புதுத்தெருவின் ஒரு கோடிமுதல் மற்றொரு கோடி வரை வாக்கிங் செய்துவிட்டு ஒரு முனையில் நின்று இந்த உலகத்தில் நாய் இனத்துக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதிகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தது)

    இப்படிப்பட்ட டைகரின் ஒரு ருசிகரமான விளையாட்டை மட்டும் தேவன் எழுத்துக்களால் படித்து விட்டு நாம் மிஸ் ஜானகியை விட்டு விலகி கல்யாணியை சந்திப்போமாக.

    Share
  • பாரதியின் வேத முகம் – 1

     

    -சு. கோதண்டராமன்-

    பாரதி ஒரு பன்முகக் கவிஞர். நாட்டுப் பற்று, மொழி்ப் பற்று, சமயப் பற்று இவற்றிற்கு விரோதமி்ல்லாத வகையில் அனைத்து உலக மக்களையும் அனைத்து மொழிகளையும், அனைத்துச் சமயங்களையும் நேசிக்கும் பண்பு, சொல் புதிது பொருள் புதிதாய் கவிதை இசைத்த புலமை, பெண் விடுதலை, சமூக நீதிக்குப் போராட்டம் இப்படிப் பல முகங்கள் உண்டு அவருக்கு.

          நாடகத்தில் ராவணனாகவோ முருகனாகவோ வேடம் போடுபவர் பல அட்டைத் தலைகளைத் தாங்கி வருவதைப் பார்க்கிறோம். எல்லா முகங்களும் ஒன்று போல இருந்தாலும் உண்மை முகம் ஒன்று தான், அதன் வடிவத்தை ஒட்டியே மற்ற முகங்கள் அமைக்கப் பட்டுள்ளன, அந்தத் தலை தான் மற்ற தலைகளையும் தாங்குகிறது என்பதையும் நாம் அறிவோம்.

          பல முகம் கொண்ட பாரதியின் உண்மை முகம் எது? எந்த முகத்தின் அடிப்படையில் மற்ற முகங்கள் அமைந்துள்ளன?

          வேதங்களின் மீது அவர் கொண்டிருந்த மரியாதை தான் அவரது உண்மை முகமாகத் தோன்றுகிறது. தான் பிறந்த குலத்துக்கு உரிய ஆசாரங்களைக் கைவிட்டதோடு அல்லாமல், தன் சாதியினரையும் எள்ளி நகையாடியவர் பாரதி. அப்படிப்பட்ட புரட்சிக்காரர், பழைமையான தனது குல வித்தையாகிய வேதத்தினிடம் மிகுந்த மரியாதை வைத்திருந்தார் என்பது வியப்புக்குரிய உண்மை.

          தனது பாடல்களிலும், கட்டுரைகளிலும், கதைகளிலும் இருநூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அவர் வேதத்தைப் புகழ்ந்து பேசியுள்ளார். அவரது இந்த வேதப் பற்று தெய்வ பக்திப் பாடல்களில் மட்டுமல்லாது சமூக விடுதலைப் பாடல்களிலும், தேச பக்திப் பாடல்களிலும் கூட வெளிப்படுவதைக் காணலாம்.

          வேதம் பாரத நாட்டின் கலாசாரத்தின் ஆணி வேராக இருந்து வந்துள்ளது. ஆனால் இடைக்காலத்தில் சில தவறான கருத்துகளும் தவறான விளக்கங்களும் வேத இலக்கியத்தில் புகுந்துவிட்டன. இவற்றையும் அக்கால வேதியர்கள் வேதம் என்ற பெயரிட்டே அழைத்தனர். இந்தப் போலி வேதங்களை நீக்கி விட்டு வேதத்தை அதன் தொன்மையான தூய நிலையில் கொண்டு வைக்க வேண்டும் என்பது அவரது பேரவா. இந்தக் கருத்து அவரது ஒவ்வொரு பாடலின், கதையின், கட்டுரையின் அடிநாதமாக ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. அவற்றில் சிலவற்றை அடுத்து வரும் வாரங்களில் காண்போம்.

    ஒன்று: பரம் பொருள்

                    பாரதி இந்து மதத்தின் மீதும் வேதங்களிடத்தும் பெரு மதிப்புக் கொண்டிருந்த போதிலும் பிற மதங்களைச் சமமாகவே போற்றினார். அவரது இந்தச் சமயப் பொதுமைக்கு அடிப்படை ரிக் வேதமும் பகவத்கீதையும் தாம். ரிக் வேதத்தில் வரும் ஒரு புகழ் பெற்ற வசனம், “ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி” என்பது. “ஒன்றே மெய்ப் பொருள், அதனை ரிஷிகள் பலவிதமாய்ச் சொல்லினர்,” என்று பாரதி அதை மொழி பெயர்க்கிறார். கீதையில் கண்ணன் கூறுகிறான், “யார் யார் என்னை எந்தெந்த வடிவில் வழிபடுகிறார்களோ அவரவரை அந்தந்த நம்பிக்கையில் நான் நிலைக்கச் செய்கிறேன்.” இவற்றை நன்கு உள்வாங்கிக் கொண்ட பாரதி தன் எழுத்துகளில் வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் இக் கருத்தை வலியுறுத்தத் தவறவில்லை.

                எல்லாச் சமயங்களும் கடவுள் ஒன்றே என்று தான் கூறுகின்றன. ஆயினும் ஏன் தகராறு? தன் சமயத்தையே நன்கு அறியாத அரை குறை மனிதர்கள், “நான் வணங்குவது மட்டுமே கடவுள், மற்ற சமயத்தவர் வணங்குவது பேய்களை, பேய் வழிபாடு செய்வோரைத் திருத்துவது அல்லது அழிப்பது என் கடவுளுக்கு உகப்பானது,” என்ற வகையில் பேசுகிறார்கள். அத்தகையோருக்குப் பாரதி அறிவுறுத்துகிறார் –

    வேடம்பல் கோடியோ ருண்மைக்குள வென்று

                வேதம் புகன்றிடுமே– ஆங்கோர்

                வேடத்தை நீருண்மையென்று கொள்வீரென்றவ்

                வேதமறியாதே

                நாமம் பல்கோடி ஓர் உண்மைக்கு உள என்று

                நான்மறை கூறிடுமே– ஆங்கோர்

                நாமத்தை நீருண்மை என்று கொள்வீரென்று அந்

                நான்மறை கண்டிலதே.

    வெவ்வேறு பெயர்களில் வழிபடப்படுபவை வெவ்வேறு தெய்வங்கள் அல்ல. அவை அனைத்தும் ஒரு தெய்வத்தின் வெவ்வேறு வேடங்களே. இந்த வேடங்களைத் தெய்வத்தின் மீது மனிதர் தாம் சுமத்துகின்றனர். அதன் உண்மையான சொரூபம் சுத்த அறிவு ஆகும். வள்ளுவர் இறைவனை வாலறிவன் என்று போற்றுகிறார். இறைவன் எல்லாம் அறிந்தவன் என்று தான் எல்லாச் சமயங்களும் கூறுகின்றன. இதை உணர்த்தும் வேத வசனம், “ப்ரக்ஞானம் ப்ரம்ம” (அறிவே கடவுள்) என்பதைப் பாரதி மிக எளிமையாக வெளிப்படுத்துகிறார்.

    “ஆயிரம் தெய்வங்கள் உண்டென்று தேடி

                அலையும் அறிவிலிகாள் –பல்

                லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்

          டாமெனல் கேளீரோ” என்று பாரதி கேட்கிறார்.

                நாம் என்ன செய்கிறோம்? “மெள்ளப் பல தெய்வம் கூட்டி வளர்த்து வெறுங் கதைகள் சேர்த்துப் பல கள்ள மதங்கள் பரப்பிக் கொண்டிருக்கிறோம்.” இது முறையா? அச்சமும் அறியாமையுமே வன்முறையின் அடிப்படை. எனது சமயம் அழிந்து விடுமோ என்ற அச்சமும், எல்லா மதங்களுக்கும் உட்புகுந்த கருத்து ஒன்றே என்பதை அறியாமையுமே மாற்றுச் சமயத்தாரை அழித்தால் நம் சமயம் வாழும் என்ற மூட நம்பிக்கையைத் தோற்றுவிக்கிறது. வீரமில்லாமல் இந்த அச்சங்களுக்கு இடமளிப்பவர் எந்தச் சமயத்தவரானாலும் இறைவனை அடைய முடியாது என்கிறார் பாரதி.

    வீரமிலா நெஞ்சுடையார் சிவனைக் காணார்

                எப்போதும் வீரமிக்க வினைகள் செய்வாய்

                பேருயர்ந்த ஏஹோவா அல்லா நாமம்

                பேணுமவர் பதமலரும் பூணல் வேண்டும்

      “ஒவ்வொரு மனிதனும் தனித் தனி இயல்பினன். அவனவன் மதம் அவனது தனித் தன்மையைப் பொறுத்தது. எனவே இன்னும் இரண்டு கோடி மதங்கள் பெருகட்டும். எத்தனை பேர் எத்தனை விதமாக வழிபட்டாலும் உண்மை ஒன்றே” என்கிறார் விவேகானந்தர். பாரதி அதனை வழிமொழிகிறார்-

    பூமியிலே கண்டமைந்து மதங்கள் கோடி

                புத்தமதம் சமணமதம் பார்ஸி மார்க்கம்

                சாமிஎன ஏசுபதம் போற்றும் மார்க்கம்

                ஸநாதனமாம் இந்துமதம் இஸ்லாம் யூதம்

                நாமமுயர் சீனத்துத் தாவு மார்க்கம்

                நல்ல கண்பூசி மத முதலாப் பார்மேல்

                யாமறிந்த மதங்கள்பல உளவாமன்றே

                யாவினுக்கும் உட்புகுந்த கருத்திங்கொன்றே      

     

                தெய்வம் பல பல சொல்லிப் பகைத்

                தீயை வளர்ப்பவர் மூடர்

                உய்வதனைத்திலும் ஒன்றாய் எங்கும்

                ஓர் பொருளானது தெய்வம்

    என்கிறார் பாரதி. அல்லாவைப் போற்றி அவர் பாடுவதைக் கேட்போம்-

    பல்லாயிரம் பல்லாயிரம் கோடி கோடி அண்டங்கள்

                எல்லாத் திசையிலுமோர் எல்லையில்லா வெளிவானில்

                நில்லாது சுழன்றோட நியமம் செய்தருள் நாயகன்

                சொல்லாலும் மனத்தாலும் தொடரொணாத பெருஞ்சோதி

                அல்லா அல்லா அல்லா

    இதே கருத்தைக் காளி மீது ஏற்றிப் பாடுகிறார்.

    விண்டுரைக்க அறிய அரியதாய்

                விரிந்த வான வெளியென நின்றனை

                அண்டம் கோடி வானில் அமைத்தனை

                அவற்றில் எண்ணற்ற வேகம் சமைத்தனை

      பாரதி விநாயகருக்குச் செய்யும் அர்ச்சனையைக் கவனியுங்கள். தொல் பழம் தெய்வங்கள் உள்பட, வெவ்வேறு பெயர்களில் வணங்கப்படும் இந்துக் கடவுள்கள் மட்டுமல்லாது இஸ்லாமிய கிருத்துவப் பெயர்களும் ஒரே பரம்பொருளைக் குறிப்பதை விளக்குகிறது அது.

    விநாயக தேவனாய் வேலுடைக் குமரனாய்

    பிறநாட்டிருப்போர் பெயர்பலகூறி

    அல்லா யெஹோவா எனத் தொழுது இன்புறும்

    தேவரும் தானாய் திருமகள் பாரதி

    உமை எனும் தேவியர் உகந்த வான்பொருளாய்

    உலகெலாம் காக்கும் ஒருவனைப் போற்றுதல்

     

          இறைவி இறைவன் இரண்டும் ஒன்றாகித்

          தாயாய்த் தந்தையாய்ச் சக்தியும் சிவனுமாய்

          உள்ளொளியாகி உலகெலாம் திகழும்

          பரம்பொருளேயோ, பரம்பொருளேயோ

          ஆதிமூலமே அனைத்தையும் காக்கும்

          தேவதேவா சிவனே கண்ணா

          வேலா சாத்தா விநாயகா மாடா

          இருளா சூரியா இந்துவே சக்தியே

          வாணீ காளீ மாமகளேயோ

          ஆணாய்ப் பெண்ணாய் அலியாய் உள்ள

          யாதுமாய் விளங்கும் இயற்கைத் தெய்வமே

          வேதச்சுடரே மெய்யாங் கடவுளே

        சமயங்கள், சாத்திரங்கள், சடங்குகள் எல்லாம் உண்மையை அடைவதற்கான படிகளே அன்றி அவையே இறுதி நிலை அல்ல. மனதைச் செம்மைப்படுத்திப் பரம்பொருளை உள்ளத்தால் தொட முடிந்தால் இவை தேவையற்றதாகி விடும்.

    காவித் துணி வேண்டா கற்றைச் சடை வேண்டா

                பாவித்தல் போதும் பரமநிலை எய்துதற்கே

                சாத்திரங்கள் வேண்டா சதுர்மறைகள் ஏதுமில்லை

                தோத்திரங்கள் இல்லை உளம் தொட்டு நின்றால் போதுமடா

                தவமொன்றும் இல்லை ஒரு சாதனையுமில்லையடா

                சிவமொன்றே உள்ளதெனச் சிந்தை செய்தாற் போதுமடா

     

                அறிவு விளக்கம் பெறாத குழந்தை நிலையில் உள்ளோர் தாம் விரும்பிய வெவ்வேறு வடிவங்களில் பரம்பொருளை வழிபடட்டும். ஆனால் அதே நிலையில் நின்று விடாமல் படிப்படியாக மேலே உயர்ந்து வடிவங்கள், வழிபாட்டு முறைகள்,  வேதங்கள், தவங்கள் இவற்றைக் கடந்து பரம்பொருளை உள்ளத்தால் உணரும் நிலைக்கு வரட்டும். இவை எல்லாமே உண்மை தான். இதை உலகுக்கு உணர்த்தவல்ல ஒரே நாடு நமது நாடு தான் என்பதில் பெருமை கொள்கிறார் பாரதி.

    ஒன்று பரம்பொருள் நாமதன் மக்கள்

                உலகின்பக் கேணிஎன்றே

                நன்று பல்வேதம் வரைந்தகை பாரத

                நாயகிதன் திருக்கை

    Share
  • ​வால்ட் விட்மன் வசன கவிதை -11

    என்னைப் பற்றிய பாடல் – 4

    (Song of Myself)

    (1819-1892)

    (
    புல்லின் இலைகள் -1)

    மூலம் : வால்ட் விட்மன்

    தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

    +++++++++++++++++++++++++++++

    வலிமை படைத்த இசை அறிவுடன்

    உலவி வருகிறேன் நான்

    எனது மேள தாள மோடு

    இன்னிசைக் கருவிக ளோடு.

    வெற்றி வீரருக்கு மட்டும் அல்ல,

    நான் வாசிப்பது,

    தோற்றோ ருக்கும், மாண்டோ ருக்கும்

    வாசிப்பது நான் !

    தெரியுமா அது அன்றைய தினத்தின்

    ஆதாயம் என்று !

    தோற்பது கேவல மில்லை !

    போர்களில் தோற்பதும், வெல்வதும்

    ஒரே ஆன்மக் கிளிர்ச்சி யில்தான் !

    இறந்தோர்க்குப் பரிந்து

    முரசடிக்கிறேன், மனம் துடிக்கிறேன் !

    ஊது குழலில் நளினமாய்

    ஓங்கிய குரலில் பாடுகிறேன்

    தோற்றோரும் நீடு வாழட்டும் !

    கடலில் மூழ்கிப் போன

    படகுப் போர் வீர்ர்கள் நீடு வாழ்க !

    கடலில் தனியாய் மூழ்கிப் போன

    காளையர் நீடு வாழ்க !

    வேலை இழந்த போர்த் தளபதியும்

    இழப்பை மீறி முற்படும்

    வலிய வீரரும் வாழ்க !

    பேரளவில் தெரியாமல் போன

    வீர்ர்களும் நீடு வாழ்க

    பேரளவில் அறிந்தவரைப் போல் !

    எதிர்ப்பேன் எனது பன்முகப்பாடு மீறி

    மதிப்பெய்தி உள்ளன வற்றை !

    சுவாசிப்பேன் காற்றை,

    மிகுதிப் பங்கைப் பிறர்க்கு விட்டு வைத்து,

    முடங்கிக் கிடப்பதில்லை நான்

    ஏற்றவோர்

    இடத்தில் இருக்கிறேன்.

    பூச்சியும், மீன் முட்டைகளும்

    ஏற்ற இடத்தில் உள்ளன.

    ஒளிமிக்கப் பரிதிகளும், தெரியாத

    ஒளியற்ற பரிதிகளும்

    தமக்குரிய இடத்தில் தான் உள்ளன.

    உணர்வுள்ள வையும், இல்லாத வையும்

    உள்ளன தம்மிடத்தில் !

    +++++++++++++

    தகவல்:

    1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

    2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]

    3. Britannica Concise Encyclopedia [2003]

    4. Encyclopedia Britannica [1978]

    5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

    6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

    ********************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan] (February 12, 2013)

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • தேவன் நூறு (தேவன் ஒரு சகாப்தம்) – (2)

    .
    திவாகர்

    தேவன் ஒரு சகாப்தம் – பகுதி 1

    சென்னை மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் அருகில் உள்ள முருகன் லெண்டிங் லைப்ரரியை எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியாது. ஆனால் எனக்கு ஆதியில் மிகச் சிறந்த தோழர்களை (புத்தகங்களைத்தான் சொல்கிறேன்)  அறிமுகப்படுத்திய இடம் அதுதான். இர்விங் வாலஸ் இலிருந்து இதிகாசப் புத்தகங்கள் வரை வெறியாகப் படித்த நாட்கள் அவை. பள்ளி நாட்களிலிருந்து கிடைத்த அந்தக் கடைக்காரரின் நெருங்கிய சிநேகம் கைகொடுத்தது. அங்கேதான் நான் தேவன் கதைகள் மீது காதல் கொண்டேன். என் காதலுக்கு உரம் போட்டு வளர்ப்பது போல் தேவனின் பரம ரசிகரான அந்தக் கடைக்கார நண்பரும் அதிக நேரம் என்னோடு அவர் புதினங்கள் பற்றியும் கட்டுரைகள் பற்றியும் பேசுவதிலேயே செலவிடுவார். இதனால் மேலும் இரண்டு சௌகரியங்கள் எனக்கு ஏற்பட்டன. அப்போதெல்லாம் ‘பைண்ட்’ செய்யப்பட்ட ஒரிஜினல் தேவன் தொடர்கதைப் புத்தகங்கள் எல்லாமே என் பார்வையில் தினம் பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டுக்கும் ‘இலவசமாகவே’ எத்தனை நாளைக்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல அனுமதியும் உண்டு. (மற்றவர்களுக்கு எக்ஸ்ட்ரா லெண்டிங் ஸ்ட்ரிக்ட் ’நோ’ அத்துடன் ஃபைன் வேறு கட்டவேண்டும், அத்தோடு டி.வி.க்கள் இல்லாத காலம் என்பதையும் புத்தகங்கள் அதிகம் படிக்கமுடிந்த காலம் என்பதையும் கணக்கில் கொள்க)).

    தேவன் கதைகளில் மிகப் பெரிய விசேஷம் என்பதே எந்த விஷயத்தையும் மிக எளிதாக விளங்கும்படியாகவும் நகைச்சுவையாகவும் வாசகர் முன் எடுத்து வைப்பதுதான். எளிய நகைச்சுவை என்பது அவர் எழுத்தின் மூலாதாரமோ என்று வியக்க வைக்கும். அட்டகாசமாக ஆஹா ஓஹோ என்று சிரித்து விட்டு அடுத்தகணமே மறக்கடிக்கவைக்கும் நகைச்சுவைகள் அவர் எழுத்தில் கிடையாது. அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சாதாரண விஷயங்களே நகைச்சுவையாக எடுத்தாளப்படும்போது அதன் முக்கியத்துவம் தெரியும் வகையில் எழுதுவார். எதையும், எவரையும் ஆழ்ந்து நோக்கும் பார்வை அவருடையதாக இருந்திருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறேன். அந்தப் பார்வையில் பட்டவை எல்லாம் சர்வ சாதாரணமாக எழுத்தில் பிரதிபலிக்கும். சாதாரண மனிதர்கள் பார்வையில்தான் சாதாரண மனிதர்களின் கவனம்தான் அவருக்கு முக்கியம். அதிலும் அந்தக் காலத்து மத்தியதரவர்க்கத்தாரின் நாடியைப் பிடித்துப் பார்த்து எழுதும் கலையைக் கற்றவர்.  அவர் எழுதும் தமிழ் சாதாரணமாக பேசும் தமிழ் போல இருந்தாலும் நல்ல தமிழைத்தான் பயன்படுத்துவார். பின்னாட்களில் அளவுக்கு அதிகமாக தமிழ்ச் சொற்களில் ஆங்கில எழுத்துகளைக் கலந்து கொடுத்தவர் சுஜாதா அவர்கள் என்ற பெயர் உண்டு என்றாலும் அதன் மூலகர்த்தா தேவன் அவர்கள்தான். ஆங்கிலம் மட்டுமல்ல வடமொழியும் சர்வ சாதாரணமாக எழுத்தில் காணப்படும். ஆனாலும் யாருக்குமே, ஏன், ஒரு தனித்தமிழ் ஆர்வலருக்குமே கூட இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு வராத அளவில் அந்தக் கலவை இருக்கும். அதே போல கம்பன் கவிதைகளில் உவமைகள் ஏராளமாக இருக்கும். தேவன் எழுத்துக்களில் கூட உவமைகள் ஏராளமாக உண்டு. இவர் போல கதை கட்டுரைகளில் உவமைகள் இப்படி அள்ளித்தெளித்தவர் யாரேனும் உண்டா என்று தேட வேண்டும் கூட.

    உவமைகள் எதற்காக எழுதப்படுகின்றது என்றால் சொல்லப்படும் கருத்தின் வீரியத்தை மிக அதிக அளவில் வலுப்படுத்தும் என்பதற்காகவே உவமைகள் உருவாயின. பெண்ணின் முகத்தை பூரண நிலவொளிக்கு உவமையாக்குகிறோம். அவள் கண்களை ஒளிரும் நட்சத்திரங்களுக்கு ஒப்பு நோக்கிப் பேசுகிறோம். அவள் நாசியை கூர்மையான வெள்ளைப்பறவைக்கு ஈடு காட்டுகிறோம். பட்டு’ போன்ற கன்னங்கள் எனும் போதே அதன் மென்மையைக் காட்டி விடுகிறோம். அவள் சிரிக்கும்போது தெரியும் பற்களைக் கூட விடுவதில்லை. முத்து வரிசை, முல்லைச் சரங்கள், வெள்ளி மணி என்கிறோம். இப்படி உவமைகள் சொல்லப்படும்போதெல்லாம் இந்தக் கருத்துகள் பலம் பெறுகின்றன. பலம் பெறும்போது எளிதில் வாசகர்கள் மூளையில் போய் தங்கிவிடுகின்றது. ஆனால் பொருத்தமான உவமைகள் தேட எல்லா எழுத்தாளர்களுமே கஷ்டப்படுவர். தேவன் அப்படிக் கஷ்டப்பட்டதாகத் தெரியவில்லை. சர்வ சாதாரணமாக அவர் எழுத்தில் ஒவ்வொரு முறையும் வந்து விழும் உவமைகளை மட்டும் எழுதத் தொடங்கினால் ஒரு பெரிய ‘பைண்ட்’ புத்தகமே கூட போட்டுவிடலாம்.

    இப்படி உவமைகள் நிறைந்த கதை என்று சொல்லத் தொடங்கினால் தேவனின் ‘மிஸ் ஜானகி’ ஒன்றே போதும். எத்தனை எத்தனை உவமைகள் என்ற சான்றுக்குப் போகுமுன், மிஸ் ஜானகி கதையைப் பற்றிய ஒரு சுருக்கம் ஒன்றினைத் தெரிவித்து விடுகிறேன்.. ஏனெனில் இந்த உவமைகள் பற்றி எழுதும்போது அதன் சுவை கூடுமல்லவா.

    மதுரை வக்கீல் பட்டாபி ராமய்யரின் இரண்டாவது மகளான மிஸ் ஜானகி சென்னையில் கல்லூரி ஒன்றில் படிக்கும்போது தன்னுடைய மூத்த மாணவனான கதாநாயகன் நடராஜனின் சிநேகிதம் கல்லூரியின் நூலகத்தில் அகஸ்மாத்தாகக் கிடைக்க அது காதலாக மலர்கிறது. காதலென்றால் அதுவும் அந்தக் காலக் காதல் எல்லாம் திரை மறைவில்தான், யாருமறியாமல்தான் நடக்கமுடியும். இப்படி இருக்கையில் ஆண்டுமுடிவில் வரும் விடுமுறையில் திருச்செந்தூர் சுவாமி தரிசனத்துக்குச் செல்ல வேண்டுமென, மதுரையிலிருந்து இதற்காக இவள் அக்கா சென்னைக்கு வந்து மெனக்கெட்டு அழைத்துப்போக, சென்னையிலிருந்து ஜானகி ரயிலில் தன் அக்கையோடு பயணமாக, நம் கதாநாயகனும் தன் காதலியின் கண்பார்வையில் இருக்கவேண்டுமென விரும்பி அவளைத் தொடர்கிறான். அக்கையும் தங்கையும் மதுரை இறங்கி இல்லம் சென்ற பிறகு அடுத்த நாள் வண்டியில் திருச்செந்தூர் செல்வதாக ஏற்பாடு.

    இந்தக் கதையில் வில்லங்கம் செய்பவர்கள் உண்டு. செய்பவர்கள் மூவர். ஒருவர் ஜானகியின் சொந்த அக்கா மங்களம், இன்னொருவர் திருச்செந்தூரின் ரிடையர்டு தாசிலதாரும் திமிராகப் பேசிப் பழகும் நாகநாதைய்யர். மூன்றாவது நடராஜனின் கல்லூரியில் படிக்கும் சக மாணவனாகக் குப்பை கொட்டும் ’அல்ட்டல்’ சந்துரு. இவன் நாகநாதைய்யரின் உறவு என்பதோடு வக்கிரபுத்தி படைத்தவன் கூட. இவனுக்கு ஜானகியை எப்படியும் ’செட்டில்’ செய்து விட வேண்டும் என்ற முனைப்போடுதான் நாகநாதய்யரே ஜானகி குடும்பத்தாரை, அவர்கள் தெரிந்தவர்கள் என்ற முறையில், வற்புறுத்தி திருச்செந்தூர் அழைத்து வருகிறார். இந்த மங்களமோ ஊர் உலகத்தை அடக்குவதோடு, கணவனையும் அடக்கி தன் முந்தானை முடிச்சில் வைத்திருப்பவள்தான் என்றாலும் நாகநாதய்யர் எப்படியோ மங்களத்தைப் புரிந்து கொண்டு அவளைத் தன் வழியில் வரவழைக்கவும் முயற்சி செய்கிறார். வில்லங்கம் என வரும்போது நல்லவைகள் செய்பவரும் வேண்டுமே.. அப்படிப்பட்ட நல்லவர்களில் முதன்மையாக திருச்செந்தூர் கடற்கரையில் தன் காகிதங்களைக் காற்றில் பறக்கவிட்டு மண்ணில் பரபரவென தேடும் ‘தலைதடவி’ சுந்தரமும் (பாவம் சுற்றியுள்ள மனிதர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க, அந்த வேடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருவதைப் போல நம் கதாநாயகன் மட்டுமே உதவி புரிகிறான்), கல்லூரி அறை நண்பன் குடுமி மணியும் விசேஷமாக உண்டு. கூடவே சிறு சிறு உதவிகள் ஜானகியின் பயந்த சுபாவ அத்திம்பேர் ஜகதீசன் மூலமும், திருச்செந்தூர் அண்டை வீட்டுக் காரர்களாகக் குடியேறும் முன்னாள் நடிகை ஜகமும், நாட்டியமணி பங்காருவும் செய்து கொடுத்தாலும் இவர்களால் கிடைத்த உதவிகளை விட உபத்திரவமே நடராஜனுக்கு மிஞ்சுகிறது. கூடவே உபத்திரவமும் உதவியும் கொடுக்க திடீரென அவனைத் தேடி வந்த நடராஜனின் தந்தை டெல்லி ஹரனும் அதே போல கதாநாயகி ஜானகியின் தாய் தந்தையரும் அங்கு பின்னர் (திருச்செந்தூரில்) சேர்ந்து கொள்கிறார்கள  ஜானகியின் அப்பா தினம் வாயால் ஆயிரம் முறை அஸ்வமேதம் செய்துவிடுவதாக பேசுவாரென்றால், அவள் அம்மாவோ தினத்துக்கு ஒரு வியாதியைச் சொல்லிக்கொண்டு, அந்த வியாதியின் பெயரால் அன்றைக்கு என்ன கிழமை என பிறர் கண்டுகொள்ளும் அளவுக்குப் பழகும் பெண்மணி. (இதே போல ஒரு பாத்திரத்தைப் பின்னாளில் ‘அனபே வா’ எனும் படத்தில் சரோஜாதேவியின் அம்மாவாக வரும் நடிகைக்குக் கொடுத்துக் காப்பியடித்தார்கள் என்பது வேறு விஷயம்)

    இப்படிப்பட்ட சமயத்தில்தான் நடராஜன் தன் காதலி ஜானகியுடனும், இன்னமும் காதல் விஷயம் தெரியாத அவள் அக்கா மங்களத்துடனும் எதேச்சையாக சேர்ந்து கொண்ட முன்னாள் நடிகை ஜகத்துடனும், சென்னையிலிருந்து இவர்களோடு புகைவண்டியில் பயணம் செய்யும்போது, அடுத்த நாள் காலை வேளையில் திண்டுக்கல் ஸ்டேஷனில் கிடைக்கும் சுவையான சூடான இரண்டு இட்லிக்காக கூட்டத்தில் தள்ளுமுள்ளுகளுடன் போராடி வெற்றிகரமாக தனக்கொரு பொட்டலமும், ஜானகிக்கொரு பொட்டலமும் வாங்கி வெளியே வருவதற்குள் வண்டி இந்த அப்பாவிக் காதலனுக்குக் காத்திராமல் கிளம்பி விட, நடராஜனோ வண்டியைப் பறிகொடுத்ததோடு மட்டுமல்லாமல் வண்டியில் செல்லும் தன் அழகான காதலியையும் அவள் பார்வையில் பட வைத்திருக்கும் தன் பெட்டியையும் பறிகொடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறான்.

    அந்தப் பெட்டியில் சில விசேஷங்கள் உண்டு. ஜானகி தன் கைப்பட எழுதிய காதல் கடிதங்களைப் பத்திரமாக (காதலன் என்பான் அவ்வப்போது அதைப் படிக்கவேண்டும் அல்லவா) வைத்துள்ளான். (அந்தக் கால கட்டத்தில் காதல் கடிதம் எழுதுவது எல்லாம் மிகப் பெரிய கிரிமினல் குற்றமாக்கும் என்பதையும் நினைவில் கொள்க) இருந்தாலும் ஜானகியின் பார்வையில்தான் அந்தப்பெட்டி இருக்கிறது என்ற ஆறுதலும் என்னதான் மதுரையில் ஜானகி இறங்கினாலும் அடுத்த நாள் திருச்செந்தூரில் பார்த்து ரகசியமாக பெட்டியை வாங்கிவிடலாம் என்றும் தன்னை சமாதானம் செய்து கொண்ட நடராஜன் அடுத்த ரயிலுக்காகக் காத்திருக்கிறான். ஜானகி சென்ற ரயில் மதுரையை அடைந்ததும், எப்படி இந்தப் பெட்டியை தன் பெட்டிகளுடன் சேர்ப்பது என்று கவலைப்பட்ட ஜானகிக்கு, அதே வண்டியில் திருச்செந்தூர் பயணப்பட மதுரையில் ஏற வந்த நாகநாதய்யர் வந்ததால் அவளுக்கு மிகப் பெரிய நிம்மதியைத் தந்தது. ‘மாமா.. இந்தப் பெட்டி என் சிநேகிதியின் பெட்டி, ஜாக்கிரதையாக எடுத்துச் செல்லுங்கள், நாளை திருச்செந்தூரில் வாங்கிக் கொள்கிறேன்” என ஒப்படைத்துவிட்டு ஒரு நல்ல காரியத்தைத் திருப்திகரமாக முடித்தோம் என்ற சந்தோஷத்துடன் அந்த நிம்மதி முகத்தில் தெரிய தன் இல்லத்துக்குச் செல்கிறாள்.

    பாவம் அவள். ’கண்ணிய நடத்தையுடன் நாகநாதய்யர் எடுத்துச் செல்வார்.. அந்தப் பெட்டி அடுத்த நாள் வந்து சேரும், நடராஜனை எப்படியாவது பார்த்துத் திருப்பி  விடலாம்’ என்று நம்பிய ஜானகிக்கு இந்த நாகநாதய்யர் ரயிலில் பொழுதைக் கழிக்க வசதியாக இவளின் காதல் கடிதங்கள்தான் கிடைத்தன என்பதையும் அதைப் படித்துவிட்டு அந்த மாமா வயற்றெரிச்சலுடன் வாயும் எரிய அனைவரையும் திட்டிக் கொண்டே பயணம் செய்கிறார் என்கிற அரிய விஷயத்தை நிச்சயம் அறிந்திருக்க மாட்டாள் இல்லையா? அதிலும் தனக்கு எப்படியாவது அந்த பாழாய்ப்போன ராஸ்கல் சந்துருவை மணமுடிக்க ஆவலாய் இருக்கும் ஒருவர் கையில் இந்தக் கடிதங்கள் கிடைத்து பின்னாட்களில் என்னென்ன தொந்தரவுகள் வருமோ என்றெல்லாம் அவள் அந்தச் சமயத்தில் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

    இனி திருச்செந்தூரில் பிரத்யட்ச தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்கும் முருகப்பெருமானின் பெருமைகளை அவ்வப்போது சொல்லிக்கொண்டே நம் கதையும் விறு விறுப்பாக நகர்ந்து கொண்டே இருக்கிறது.

    கதை நகரட்டும்.. இனி ஓரளவுக்கு இந்தக் கதையின் தளமும், நடையும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இனி தேவன் இந்தக் கதையில் புகுத்திய இந்த உவமைப் பொருத்தங்களைப் பார்க்கலாம்.

    (தொடர்ந்து வரும்)

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 58

     

    மலர் சபா

     

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

     
    திணைநிலை வரி
    புணர்ச்சி நீட, இடந்தலைப்பாட்டில் புணர்தலுறுவான் ஆற்றாமையால் கூறுதல்

     
    (17)

     
    கடலில் புகுந்து உயிர்களைக் கொன்று வாழ்பவர்
    உன் மூத்தோராகிய தமையன்மார்;
    நீயோ கண்வழியே உடலினுள் புகுந்து
    என் உயிரதனைக் கொன்று வாழ்கின்றாயே!
    கச்சையினுள் இருந்தும்
    விம்முகின்ற உன் மார்புகள்
    மிகவும் சுமையானவை;
    அதனால் வருந்தித் தளர்ந்து
    ஒடிந்திடவும் கூடும் நின் இடை;
    உன் இடைதனை நீ இழந்திடாதே.

     
    (18)

     
    வளைந்த கண்கள் கொண்ட வலையால்
    உயிர்களைப் பிடித்துக் கொல்பவன் நின் தந்தை;
    நீயோ உன் நெடுங்கண் வலையால்
    என் உயிர்தனைக் கொல்கிறாயே!
    முத்துவடம் தாங்கிநிற்கும்
    நின் மார்புகளின் சுமையால்
    மழைமேகத்தின் மின்னல் போல்
    அசைந்து தளர்கின்றது நின் இடை;
    அதை நீ இழந்திடாதே!

     
    (19)

     
    ஓடுகின்ற படகினைக் கொண்டு
    கடல்வாழ் உயிர்களைக் கொன்று வாழ்வர்
    நின் தமையன்மார்;
    நீயோ உன் வளைந்த புருவம்கொண்டு
    எனைக் கொன்று நிற்கிறாயே!
    உன் பெருமையையும் நீ அறியாய்;
    உன்னால் பிறர்படும் துன்பத்தையும் நீ அறியாய்;
    உன் மார்புகளின் பாரம் சுமந்து
    தளர்கிறதே நின் இடை;
    அதை நீ இழந்திடாதே!

     

    Share
  • இந்த வார வல்லமையாளர்

    திவாகர்

    கடலைப் பற்றிப் பேசும்போது, கப்பல், வாணிகம் என்பதுதான் மிகுதியாக நினைவுக்கு வந்தாலும் அந்தக் கடலை நம்பி வாழ்பவர்களில் பெரும்பான்மை சமூகம் மீனவர்கள்தான். ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரை இந்தியாவின் ஏற்றுமதியில் முன்னணி வரிசையில் மீன் ஏற்றுமதியும் (அல்லது கடல் வாழ் பிராணிகள் என்று கொள்வோமாக) இருந்து வந்தது. இந்த கடல்வாழ் பிராணிகள் ஏற்றுமதியில் மிகுதியாக ஈடுபடுபவர்கள் தமிழர்கள் அதுவும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தோர்தான் அதிகம். ஏற்றுமதிகள் அதிகம் செல்வது ஜப்பான், கொரியா மற்றும் ஐரோப்ப நாடுகள் என்பதினால் குளிர்சாதன வசதிகள் கொண்ட கண்டெய்னர்களில் சென்னை, விசாகப்பட்டினம், தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்கள் மூலமாக கப்பல்கள் எடுத்துச் செல்கின்றன.

    ஆனால் இந்த கடல்வாழ் பிராணிகளின் ஏற்றுமதியில் ஒரு முக்கியமான விவரத்தை கடல் வாழ் பிராணிகள் பற்றி ஆய்வு செய்து வரும் நண்பர் கலிங்கா பாலு இந்த வாரம் தன் கட்டுரையில் எழுதியுள்ளார். அதாவது   கடலில் மீன் பிடித்து வாழும் மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களை கேரளாவில் விற்பதைப் பற்றி குறிப்புத் தெரிவித்திருக்கிறார்.  கொச்சியில்தான் இந்திய அரசாங்கம் கடல்வாழ் பிராணிகளின் ஏற்றுமதி உதவி மையத்தை தலைமையகமாக அமைத்திருக்கிறது. ஏறத்தாழ பத்தாயிரம் கோடிக்கு மேல் இந்திய அரசாங்கத்துக்கு இந்த ஏற்றுமதி மூலம் ஆண்டுதோறும் வருமானம் வருகிறது என்ற உபரித் தகவலுடன் பாலு என்ன சொல்லியிருக்கிறார் என்பதையும் படியுங்கள்.

    ”இந்தியாவின் இரண்டாவது நீளமான கடற்கரையை ( 1076 கி.மீ. )கொண்ட தமிழகம் , பாக் வளைகுடாவில் நமக்கு ஏற்படும் சிக்கல்கள் இலங்கையால், ஆறுகளை மணல் எடுத்து குப்பைகள் போட்டு மிகவும் அருமையான் கடலை மாநகரக் கழிவுகள அணு உலை கழிவுகள், தொற்சாலைகள் கழிவுகள் என்று குப்பை தொட்டி போல் வைத்து இருந்தாலும் மற்றும் பல் வேறு சிக்கல்கள் இருந்தாலும் எல்லா வளமும் நிறைந்த தமிழக கடலில் ,கடற்கரையில் வாழும் மீனவர்களின் நிலைமை அவர்கள் கொண்டு வரும் மீன்கள் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக கேரளா கொண்டு செல்லப்பட்டு 590 கி.மீ. நீளமே கொண்ட கேரளா இன்று இந்தியாவின் மிக முக்கியமான மீன் வளத் துறையாக விளங்குகிறது காரணம் கடற்கரை காயல்கள் ,ஆறுகள் கடலை ஒட்டி உள்ள ஏரிகள் போன்றவற்றிக்கு அவர்கள கொடுக்கும் முன் உரிமையும் தமிழகத்தின் கடற்கரைகளில் வரும் மீன்களை கேரளா மீன் ஏற்றுமதியாளர்கள் வாங்கித் தந்து மதிப்பை கூட்டுவதும் கேரளா மக்களின் வணிக மேலாண்மையைக் காட்டுகிறது
     
    கடலியல் தொன்மை மேலாண்மை தொடர்பாக தேடலில் இருக்கும் எனக்கு நமது கடலில் பிடிக்கும் மீன்களை நாமே வெளிநாட்டிற்கு மதிப்பு கூட்டி விற்க வேண்டும் ,கடல் சூழலியலுக்கு எந்த பாதிப்பும் கொடுக்காமல் அதன் மதிப்பை நம் மாநிலத்திற்கு கொண்டு வந்து நம் மீனவர்களின் வாழ்வியலை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் பல நாட்களாக உண்டு அதற்காக சில முயற்சிகள் எடுத்து வருகிறேன் கடலியல் உயிரினங்களை உலக வணிகத்திற்காக கொல்லக் கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து , அந்த அந்த கடற்கரை மக்களின் உணவுத் தேவைக்காக மீன்கள் கொல்லபட்டால் கடற்கரை வளம் வற்றாது உலகமயமாக்கலின் கொடுமை புவியில் மனிதனுக்கு இருக்கக் கூடிய அத்தனை உரிமைகளைக் கொண்ட மீன்களும் மனிதனின் தேவைக்குத் தந்து உயிர்களை இழக்கின்றது”

    பாலுவின் கருத்துகள் உயர்ந்த கருத்துகள். உலகமயமாக்கலின் கொடுமை எல்லாத் துறைகளிலும் ஊடுருவி நிற்பது அவர் கவலைகளை அதிகமாக்கி இருக்கிறது தெரிகிறது. கடல் சூழ் உலகம் இது. கடலிலிருந்துதான் உலகம் வந்தது. உலகத்தில் உள்ள அனைத்தும் கடலுக்குத்தான் சொந்தம். பஞ்ச பூதங்களும் கடலுக்குத்தான் சொந்தம். அப்படிப்பட்ட கடல் வளங்களைக் காக்க வேண்டாமா என்று கேட்கும் நண்பர் திரு கலிங்கா பாலுவை இந்த வாரத்து வல்லமையாளராக வல்லமைக்குழுவினர் தேர்ந்தெடுக்கின்றனர். பாலுவின் பணிகள் வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

    கடைசி பாராவில் இடம் பெறுவது லாஸ் ஏஞ்செல்ஸ் ஸ்வாமிநாதன் அவர்களின் மூக்குப் பொடி ஸ்லோகம்தான்.
    ( ”மூக்குப்பொடிக்கும்  ஸ்லோகம் இருக்கு, தெரியுமா?)

    ” பஸ்ம ரூபிணி பரிமள கந்தினி  மனோரஞ்சினி  ஜலதோஷ நாசினி
      நித்ய சுககாரிணி நமஸ்தே நமஸ்தே நாசிகாசூரணி “

    Share
  • தொல்லை காட்சி – குஷ்பூ – ஜோடி பொருத்தம் – டாடி ஒரு சந்தேகம்

    மோகன் குமார்

    டாடி ஒரு சந்தேகம்அ

    ஆதித்யாவில் வரும் புதிய நிகழ்ச்சி ” டாடி ஒரு சந்தேகம்” ; ஒரு அப்பா – மகன் இருவரும் பேசிக் கொள்வதாக சில டயலாக் வரும். அப்புறம் காமெடி சீன் போடுவாங்க.

    மகனாக – சற்று வளர்ந்த ஒரு மனிதரே தான் வருகிறார். பேச்சு வாக்கில் ” டாடி ஒரு சந்தேகம்” என எடக்கு மடக்காய்    எதோ ஒரு கேள்வி கேட்கிறார்

    உதாரணத்துக்கு  ஒன்று

    ” டாடி  சண்டே சினிமா போகலாம் டாடி “

    ” வேணாம்பா தியேட்டர் ஹவுஸ் புல் ஆயிருக்கும் “

    ” டாடி ஒரு சந்தேகம் .. தியேட்டர்-  புல் ஆனா, தியேட்டர்  புல் – னு தானே சொல்லணும்? ஏன் ஹவுஸ் புல்னு சொல்றாங்க?”

    இப்படி மொக்கை போட்டாலும் கூட சின்னப் பசங்களுக்கு இந்த ஜோக்குகள் பிடிக்கிறது ! அடிக்கடி பார்க்கிறார்கள் !

    பிளாஷ் பேக் – ஜோடிப் பொருத்தம்

    சன் டிவி துவங்கிய காலத்தில் வந்தது ” ஜோடிப் பொருத்தம்”. ரெகோ  என்கிற பெயர் கொண்ட நபர் வெய்யில் காலத்திலும் கோட், டை எல்லாம் கட்டிக் கொண்டு கணவன் – மனைவியை கேள்வி கேட்பார். வந்த புதிதில் மிக நன்கு வரவேற்பு பெற்ற நிகழ்ச்சி இது. ஒரு நேரத்தில்,  வெளியூர்களில் மேடையில் வைத்து இந்த நிகழ்ச்சி நடத்துவார்கள். திருச்சியில் அப்படி நடந்த போது (அப்போது எனக்கு கல்யாணம் ஆகலை) அந்தப் பக்கம் சென்றபோது கூட்டம் நிரம்பி  வழிந்தது.

    ரெகோ  கேள்விகள் கேட்பதும் சரி குழப்பி விடுவதும் சரி புத்திசாலித்தனமாக இருக்கும். அவர் இந்த நிகழ்ச்சி தவிர அநேகமாய் வேறு நிகழ்ச்சி செய்த மாதிரி நினைவில்லை. அதன் பின் ரெகோ  என்ன ஆனார் என்றும் தெரிய வில்லை

    இது மாதிரி நிகழ்ச்சிகள்  இப்போது எதோ ஒரு சின்ன டிவியில் வருகிறது ஆனால் அந்த அளவு பாப்புலர் ஆகலை. சன் டிவி மீண்டும் இந்த கான்சப்ட் கையில் எடுக்கலாம் !

    சூப்பர் சிங்கர் -4

    மீண்டும் துவங்கியுள்ளது இன்னொரு சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி. வெவ்வேறு ஊர்களில் நடக்கும் முதல் கட்ட தேர்வுகளை இப்போது காட்டி வருகிறார்கள். ஒரு பக்கம் ஸ்ரீ லேகா & தேவன் நீதிபதிகளாக இருக்க, இன்னொரு பக்கம் ஷைலஜா & புஷ்பவனம் குப்புசாமி இருந்தனர். ஸ்ரீ லேகா டீம் செம ஸ்ட்ரிக்ட் ஆக இருந்து பலரையும் நிராகரித்து தள்ளினர். ஷைலஜா & புஷ்பவனம் ஓரளவு லீனியன்ட் ஆக இருந்தனர். ஆக பாட வருபவர்கள் யாரிடம் போய் பாடுகிறார்களோ அதைப் பொறுத்தே அடுத்த லெவல் செல்வது முடிவாகிறது ! ஹும் 🙁

    மற்றபடி துவக்கம் எப்பவும் ஸ்லோ தான்.

    டிவி செய்திகளில் குஷ்பூ பிரச்சனை

    குஷ்பூ மீது திருச்சியில் செருப்பு எறிந்ததும், சென்னையில் அவர் வீடு தாக்கப்பட்டதும் இணையத்தில் மட்டுமல்ல, டிவி செய்திகளிலும் 2 நாள் பெரிதாய் ஓடியது. அம்மணி பேட்டி படித்தால், சம்பந்தப்பட்டவர்களுக்கு  சற்று   கோபம் வரும்படி தான் இருந்தது. (விகடனில்  பேட்டி எடுத்தவர் கைவண்ணம் எந்த அளவோ தெரியவில்லை )

    முன்பு கோவில் கட்டிய திருச்சியிலேயே, இன்று  செருப்பும் எறிந்தனர் என முகநூலில் குறிப்பிட்டார் வீடு சுரேஷ் குமார் ! வாழ்க்கை ஒரு வட்டம் என்பது நிரூபமணமாகிறது பாருங்கள் !

    நிலம் வாங்கலியோ நிலம்

    சனிக்கிழமை காலை டிவி பொட்டியை போட்டால் போதும் ஜெயா டிவி, விஜய் டிவி, ஜீ டிவி என எல்லா சானலிலும் நிலம் வாங்கலியோ நிலம் என சின்னத் திரை நடிகர்கள் வந்து கெஞ்சிக் கெஞ்சி கேட்கிறாங்க. ஒவ்வொன்னும் அரை மணி நேர விளம்பரதாரர் நிகழ்ச்சி. 5 நிமிஷம் பாத்தா  போதும், போனை எடுத்து மத்த விபரங்களைக் கேட்க வச்சிடுவாங்க. அவ்ளோ தூரம் பில்ட் அப் செய்றாங்க

    போனை எடுத்து அந்த நம்பருக்கு முயற்சித்தால் கிடைப்பதே இல்லை. டிவியில் அவர்கள் விளம்பரம் வரும் அந்த அரை மணி தான் அவர்கள் கஸ்டமர் பிடிக்கிற நேரமே போலிருக்கு. நம்ம நம்பரைப் பார்த்து விட்டு பின் அவர்களே போன் செய்தனர் நான் கேட்ட கேள்விகள் ரொம்ப சிம்பிள் ” அப்ரூவ்டு நிலமா? ” ” ஆமா சார் பஞ்சாயத்து அப்ரூவ்டு ” – இது ஏமாத்து வேலை என தெரியும் – எனவே ” பேங்க் லோன் கிடைக்குமா ? ” என அடுத்து கேட்க ” கிடைக்காது சார்” என வழிக்கு வந்தார்கள். வெறும் நிலத்துக்கும் கூட வங்கிகள் லோன் தரும்; ஆனால் அது அப்ரூவ்டு என்றால் மட்டுமே கிடைக்கும்

    இவர்கள் தரும் விளம்பரத்தை நம்பி இடம் வாங்குவோர்  என்றோ ஒரு நாள் அவர்கள் விற்கப் போகும் போது இது அப்ரூவ்டு இடம் அல்ல என உணர்வார்கள். பாவம் !

    Share
  • தேவன் ஒரு சகாப்தம்

    திவாகர்

    தேவன் எனும் மகாதேவன் எனும் அரிய பெரிய எழுத்தாளரைப் பற்றி நம் காலத்துப் பெரியவர்கள் அனைவருமே நன்றாகவே அறிந்திருந்தாலும், இந்தக் கால இளைஞர்களுக்கும் வருங்காலத்துக்கும் நம்மால் இயன்ற அளவு அவர் பெருமை சொல்லலாமே என்றுதான் இக்கட்டுரைத் தொடரைத் தொடங்க முன்வந்துள்ளேன்.

    இந்த வருடம் தேவனின் நூற்றாண்டு வருடம்.. ஆம்.. சென்ற 1913 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 8ஆந்தேதிதான் தமிழுலகத்தின் இந்தச செல்லக் குழந்தை திருவிடைமருதூரில் அவதரித்தது. தான் பிறந்த இந்தத் திருவிடைமருதூரை முடிந்த போதெல்லாம் தம் கதைகளில் கொண்டுவந்து விடுவார். பிறந்த ஊரின் மீது அத்தனை பற்று வைத்திருக்கும் தேவனைப் பற்றி எழுதும்போது தேவன் படைப்புகளைக் கொண்டுதான் இக்கட்டுரை அமைய வேண்டுமென்பது என் விருப்பமாதலால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை, அவர் குடும்பம் போன்றவைகளைப் பற்றியோ, அவர் எப்படியெல்லாம் வாழ்ந்தார் என்பதைப் பற்றியோ இங்கு எழுதப்போவதில்லை என்பதை முன்னமேயே சொல்லி விடுகிறேன்.

    தேவனைப் பற்றி எழுத எனக்குக் காரணம் இருக்கிறது. நான் பிறந்தவுடன் அவர் மறைந்தார் என்ற ஒரு காரணத்தை நகைச்சுவைக்காகச் சொன்னாலும், என் எழுத்துக்கு ஆத்திச்சூடி அவர் படைப்புகளிடமிருந்துதான் பெற்றேன் என்பதை மட்டும் மிகப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். ஒரு கதை எப்படி எழுதப்படவேண்டுமென்பதோடு வாசகன் பார்வையில் அது எப்படிப் படவேண்டுமென்பதிலும் தேவன் மிகக் கவனமாகக் கையாண்டிருக்கிறார். 1930 களின் ஆரம்பத்திலிருந்து 1957 வரை (ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்கள்) எழுதிக்கொண்டே இருந்த அந்த கை அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அந்த இடைக்கால மாற்றங்களையும் தனக்குத் தோதாக எடுத்துக் கொண்ட விதமும், அவைகளை தம் எழுத்தில் பிரதிபலித்த விதமும் மிகவும் பாராட்டத் தக்கது என்றே சொல்லவேண்டும். இந்த காலகட்டத்தின் ஆரம்பத்தில்தான் இந்திய சுதந்திரப் போராட்டம் மிகத் தீவிரப்பட்டது. இந்த காலகட்டத்தின் மத்தியில்தான் உலகத்தின் மிகக் கொடிய அழிவுக்குக் காரணமான மோசமான உலகப்போர் நிகழ்த்தப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் இந்தியா சுதந்திரமும் அடைந்து தன் மக்களின் பிரதிநிதிகளினால் தன் சுய ஆட்சியையும் ஆளப்பெறத் தொடங்கியதும்கூட.. இந்த காலகட்டத்தில்தான் அரசியலில் அவ்வளவாக மாசு படியாத சூழ்நிலை இருந்தாலும் சமூகம் மிகவும் மாசுபடிந்து முன்னேறமுடியாத நிலையில் அல்லலுற்று ஏழ்மை நிலையில் நோய்கள் மலிந்து கிடந்து, தேசத்தின் நாலா பகுதிகளும் ஒரு சோம்பலுற்ற நிலையில்தான் இருந்தது என்பதையும் மறக்கக் கூடாதுதான். பாரத மொழிகள் கூட முன்னேறமுடியாத, செழுமை அடைய முடியாத நிலையில் இருந்த காலகட்டம்கூட இதுதான். அதுவும் நம் மனதுக்கினிய தேனினும் இனிய தமிழ் மொழியைக் கட்டிக்காத்து வளர்த்து வந்தவர்கள் ஆதீனங்களைச் சேர்ந்த மடாதிபதிகளும், நன்னெஞ்சம் கொண்ட ஒரு சில செல்வந்தர்களே என்பதும் நாம் மறக்கக் கூடாது. தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதைய்யரும், மகாகவி பாரதியும் வீறு கொண்டு எழுந்து தமிழால் நாம் பெருமை பெறுகிறோம் என்று பல்வேறு காரணங்களை எடுத்துச் சொன்னதால் ஏனைய மொழிகளை விட தமிழ் இந்த அகண்ட பாரத தேசத்திலே பெருமையோடு இருந்தது என்று வேண்டுமானால் ஓரளவு சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவுதான்.. ஏனெனில் படித்த பெருமக்களிடையே ஆங்கில மோகம் தலைவிரித்தாடிய காலம். ஆங்கில எழுத்துக்கள், ஆங்கில நாவல்கள், ஆங்கிலக் கவிதைகள், ஆங்கில நாடகங்கள் (ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அறிந்தவன் மட்டுமே அதிபுத்திசாலி) ஆங்கிலத் திரைப்படங்கள் எல்லாமே தமிழோடும் மற்ற மொழிகளோடும்  ஒப்பு நோக்குகையில் தரத்தில் எங்கோ உச்சாணிக்கொம்பில் இருந்ததாகப் பட்டதால் படித்தவர்கள், படிக்கவிரும்பும் மாணவர்கள் எல்லோருமே தமிழுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்பதையும் நாம் ஒப்பு நோக்கவேண்டும். தமிழுக்கு என்றல்ல எந்த மொழியின் நிலையும் அப்படித்தான் இருந்தது.

    சரி, இந்த சரித்திரம் இப்போது எதற்கு எனக் கேட்டால், தேவன் கதைகளையும் கட்டுரைகளையும் வரிசைக் கிரமமாகப் படித்துக் கொண்டே வந்தால் இத்தனை சரித்திரங்களையும் ஆங்காங்கே நமக்கு அவரின் படைப்புகள் மூலம் விளக்கி வந்திருப்பதைக் காணலாம். ஆரம்பகால படைப்புகளில் அரசியல் நிகழ்வுகள் அதிகம் கலந்திருந்தாலும் போகப் போக சமூக நல்லமைப்பிலே நாட்டம் கொண்டு அந்த சமூகத்துக்குத் தம் எழுத்துகள் மூலம் நல்லவை செய்யவேண்டுமென்கிற தூய எண்ணத்தை அவரது தொடர்கதைகளாகட்டும், கட்டுரைகளாகட்டும் தெள்ளிய குளத்து நீரில் தெரியும் தரைமண் போல தெள்ளத் தெளிவாகத் தெரிவிக்கும். இப்படி நிகழ்கால சரித்திர நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கதை மூலமாகவோ கட்டுரை மூலமாகவோ எப்படியாவது பாங்காக நுழைத்துத் தெரிவிப்பது என்பது தேவனுக்கு கை வந்த கலை. ஆங்கில மோகத்தால் ஆங்கிலப் புத்தகங்கள் புதினங்கள் என்று பேசிக்கொண்டிருந்தவர்களை, படித்துக் கொண்டிருந்தவர்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழின் பக்கம் தள்ளிக்கொண்டு வந்த பெருமை தேவனுக்கும் தேவனின் எழுத்துக்கும் நிச்சயமாக உண்டு.

    தேவன் ஆனந்த விகடனுக்கு உதவி ஆசிரியராக வந்து சேர்ந்தது கல்கியால்தான் என்றாலும் ‘மாஸ்டர் ராஜாமணி’ தான் கல்கிக்கு தேவனை அறிமுகப்படுத்திய ’உயர்ந்த’ மனிதன். இந்த மாஸ்டர் ராஜாமணி சின்னப் பையன், வால் பையன், தேவனின் கட்டுரையின் ஒரு பாத்திரம்.. ஆனால் இந்த வால் பையனின் லூட்டியும், திறமையும்தான் கல்கியைக் கட்டிப் போட்டதோடு மட்டுமல்லாமல், அப்போது ஒரு நாள் எதேச்சையாகவும் சாதாரணமாகவும் ஆனந்தவிகடன் அலுவலகத்தில் ‘இந்த கல்கி என்பவர் எப்படி இருப்பாரோ என்று (வேவு) பார்க்க வந்த தேவனை இசகு பிசகாக ஒரு கேள்வி கேட்க வைத்தது.. ’அது சரி, இந்தக் கட்டுரையை நீதான் எழுதினாயோ’ என கல்கி கேட்க இவருக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வர, கல்கி தனக்கே உரிய பாணியில் சமாதானப்படுத்தி தேவனை விகடனிலேயே உதவி ஆசிரியராக நியமிக்க, அந்த 1930 ஆம் வருடங்கள் ஆனந்த விகடனுக்கே வசந்த காலமாகவும் பொற்காலமாகவும் ஆரம்பித்தன என்றே சொல்லலாம். கல்கியின் உயர்ந்த குணங்களில் ஒன்று எங்கே நல்லது தெரிந்தாலும் மனமாறப் பாராட்டுவதும், தன் சக எழுத்தாளர்களையும் கை தூக்கி விடுவதும். அந்த உயர்ந்த குணம் கொண்ட கல்கியின் வலது கரமாகவே ஆகிப்போனவர்தான் தேவன் (கல்கி ஆனந்தவிகடனில் இருக்கும் வரை).

    தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் ஒரு கட்டுரையில் தேவன் உதவி ஆசிரியராய்ச் சேர்ந்த வரலாற்றை இப்படி விவரிக்கிறார்.

    “ அவர் முதல் முதல் எழுதிய மாஸ்டர் ராஜாமணியை, ஆம், அந்தக் குஞ்சுப் பயல் ராஜாமணியை அழைத்துக் கொண்டு, தான் வேலை பார்க்கும் துரைமகனிடம் சென்ற அவனது மாமா, அங்கு அந்த ராஜாமணி குறும்பாகப் பேசிய மழலை மொழிகளை எல்லாம், தமிழே அறியாத துரையிடம் மொழி பெயர்க்கும் விதத்தைப் படித்துப் படித்து இருபத்தைந்து வருஷங்களுக்கு முன், நான் சிரித்ததை எல்லாம், சொன்னபோது அவர் சொன்னார். “ஆம், அந்த மாஸ்டர் ராஜாமணி தான், சார், எனக்கு ஆனந்த விகடனில் வேலை தேடிக் கொடுத்தான். அவன் தான் என்னை ஆசிரியர் ‘கல்கி’யிடமும் திரு வாசனிடமும் அறிமுகம் செய்து வைத்தான்” என்றார். மேலும் சொன்னார். “அந்தக் கட்டுரையைப் படித்த ‘கல்கி’க்கு ஒரு சந்தேகம். அது என் சொந்தச் சரக்குத் தானா என்று. ஆதலால் அதைத் தொடர்ந்து ஒரு கட்டுரையை, அங்கே அவர் பக்கத்தில் கிடந்த மேஜை அருகிலேயே உட்கார்ந்து அப்பொழுதே எழுதும்படிச் சொன்னார். எழுதிக் கொடுத்தேன். அதன் பிறகே என்னை ஒரு உதவி ஆசிரியனாக அமர்த்தினார் “ என்றார். (நன்றி: திரு பசுபதி – தேவன் நினைவுகள்-2 (http://s-pasupathy.blogspot.ca/2010/08/2_30.html)

    சரி, நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன், தேவனின் வாழ்க்கை வரலாற்றுக்கு நான் போகப்போவதில்லை.. ஆனாலும் இதோ நம் தேவன் ஆனந்த விகடனில் எழுத்துப் பணியைத் தொடங்க ஆரம்பித்தாயிற்று. ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்கிற இராமபிரானைப் போல அந்த ஒரே ஆனந்தவிகடனில் தான் சாகும் வரை இருந்து கொண்டு அவர் படைத்த படைப்புகளின் மூலமே அவரைப் பார்க்க ஆரம்பிக்கலாமா?

    (தொடர்வோம்)

    Share
  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் – (44)

    சக்தி சக்திதாசன்

    அன்பினியவர்களே !

    நாம் வாழ்வில் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிரோம், பேசுகிறோம், பழகுகிறோம் ஆனால் அவர்களில் அனைவருமே எமது மனங்களில் நிரந்தரமாகத் தங்குவார்கள் என்பது நிச்சயமல்ல.

    அதேசமயம் சிலபேரைச் சந்திப்பதில்லை தோலைபேசியில் பேசியோ அன்றிக் கடித, மின்னஞ்சல் தொடர்பு மூலமாகவோ அறிந்து கொள்கிறோம் ஆனால் அவர்கள் எமது மனங்களில் ஒரு நிரந்தரமான இடத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள்.

    மற்றும் சிலரைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்களாக அந்நிகழ்ச்சியின் நடத்துனர்களாகக் காண்கிறோம்.

    அவர்களில் சிலரும் எமது மன‌ங்களிலே தமக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார்கள்.

    எனது பணியின் நிமித்தம்  ஜந்து வாரங்களுக்கு ஒருமுறை வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிறு தினங்களில் நான் பணிமனைக்குச் செல்ல வேண்டிவரும்/. அந்த ஞாயிறுகளைத் தவிர்ந்த மற்றைய ஞாயிறுகளில் வீட்டில் இருக்கும் தினங்கள் அனைத்திலும் நானும் என் மனைவியும் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சிகளில் ஒன்றுதான் “ The Andrew Marr Show ” அன்ட்ரூ மார் ஷோ , இது ஞாயிறு காலை 9 மணிக்கு நடைபெறும்.

    இந்நிகழ்ச்சியின் விஷேசமாக பத்திரிகைத் தலைப்புகளைப் பற்றியும், முக்கிய செய்திகளைப் பற்றியும் விவரமாக அலசுவதற்காக வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்குச் சார்பான பத்திரிக்கைத் துறையினருடன் நிகழ்ச்சித் தொகுப்பாளர் “அன்ட்ரூ மார் (Andrew Marr)”  அவர்கள் கலந்துரையாடலை மிகவும் சுவாரஸ்யமாக நடத்துவார்.

    அது தவிர அந்நிகழ்ச்சியில் ஒவ்வொருவாரமும்  அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என பல்வேறு வித்தியாசமானவர்களுடனான நேர்காணல்கள் இடம்பெறும்.

    இந்த நேர்காணலை மிகவும் காரசாரமாக நடத்துவதில் அன்ட்ரூ மார் அவர்கள் அற்புத ஆற்றல் மிகுந்தவர். மக்களின் மனங்களிலே நீந்தும் முக்கிய்மான கேள்விகளை இவ்வரசியல்வாதிகளை நோக்கி வீசி அவர்களைத் திக்குமுக்காட வைத்து விடுவார்.

    இவரின் மற்றுமோர் தனிப்பட்ட திறமை, கேட்கப்படும் கேள்விகளைத் தமக்கேயுரிய சமயோசித புத்தியினால் தமக்கேற்றவாறு திசைதிருப்பி விட முனையும் அரசியல்வாதிகளை திரும்பத் திரும்ப அக்கேள்விக்கே அழைத்து வந்து அவர்களின் திசைமாற்றும் போக்கை பார்வையாளர்களுக்கு புரியவைத்து விடும் தன்மையாகும்.

    இத்தகைய அற்புத ஆற்றல் மிக்க ஒரு ஊடகவியலாளரான அன்ட்ரூ மார் அவர்களின் வயது வெறும் 53 தான். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் “ஸ்ட்ரோக் (Stroke)”  எனப்படும் ஒருவகை இருதய நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

    தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளர்களைப் பார்க்கிறோம் ரசிக்கிறோம், வானொலியில் எத்தனையோ அறிவிப்பாளர்களைக் கேட்டு ரசிக்கிறோம், பத்திரிக்கைகளில், புத்தகங்களில் அருமையான எழுத்தாளர்களின் பல ஆக்கங்களைப் படித்து மகிழ்கின்றோம். ஆனால் ஏனோ தெரியவில்லை அன்ட்ரூ மார் அவர்களின் இச்சுகயீனச் செய்தி எம் மனதில் ஒருவகை சோகத்துடனான தாக்கத்தை ஏற்படுத்தியது.

    1959ம் ஆண்டு ஸ்கொட்லாந்து நகரில் பிறந்த இவர் தனது ஆங்கில மொழி பட்டப்படிப்பினை உலகப் பிரசித்தி பெற்ற “கேம்பிரிட்ஜ் (Cambridge)” பல்கலைக்கழத்தினில் பயின்று பட்டம் பெற்றார்.

    இவர் அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் போது தீவிர இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.

    இவரது பத்திரிக்கைத் துறையிலான ஊடகப்பிரவேசம் 1981ம் ஆண்டு ஸ்கொட்லாந்து பத்திரிக்கையான ” ஸ்கொட்ஸ் மான்(Scots Man)” எனும் பத்திரிக்கை வாயிலாக நிகழ்ந்தது. இப்பத்திரிக்கையின் வியாபார சம்பந்தமான செய்திகள் பிரிவில் ஒரு பயிற்சிபெறும் நிருபராகத்தான் இவரது ஊடகத்துறை பிரவேசம் ஆரம்பித்தது.

    “த இன்டிபென்டன்ட் (The Independant) ” பத்திரிகையினூடாக அரசியல் நிருபராக வளர்ச்சியடைந்த இவரின் ஊடகத்துறையின் மகுடமாக பி.பி.ஸி தொலைக்காட்சிச் சேவையின் செய்திப்பிரிவின் ஆசிரியராக கடமையாற்றியதே.

    தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவதற்காக இப்பதவியினின்றும் விலகினார்.

    அதைத் தொடர்ந்து பி.பி.ஸி தொலைக்காட்சிக்காக பல தொடர்களைத் தாயரித்து தொகுத்து வழங்கியுள்ளார் அவற்றிலே குறிப்பிடப்படக்கூடியவை ,

    ” நவீன இங்கிலாந்தின் சரித்திரம் ( History of the modern Briton)”  , ” அன்ட்ரூ மாரின் உலகச் சரித்திரம் (Andrew Marrs History of the world”  என்பன ஆகும்.

    இவரின் நேர்காணல்களில் பெயர் பெற்றதாக 2004ம் ஆண்டு அப்போதைய பிரதம மந்திரி டோனி பிளேயர் அவர்களுடனான நேர்காணலில் நான்காவது முறை பிரதமராகத் தான் வரமாட்டேன் எனும் டோனி பிளேயரின் பிரசித்தி பெற்ற வாக்கினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

    மற்றும் இவருடைய அரசியல் நிகழ்வுகளின் பாதிப்பாக அப்போதைய லேபர் அரசாங்கத்தின் வியாபார அமைச்சராக இருந்த பீட்டர் மண்டல்சன் பற்றிய விபரங்களை வெளியிட்டமை அவர் தனது பதவியிலிருந்து ராஜினாமாச் செய்வதற்கு வழி வகுத்தது.

    இத்தகைய ஒரு இளைய பிரசித்தி பெற்ற ஊடகவியலாளர் குணமடைந்து மீண்டும் ஊடகத்துறைக்கு பல உன்னதமான ஆக்கங்களை அளிக்க வேண்டுமென எண்ணுவோம்.

    மீண்டும் அடுத்த மடலில்
    அன்புடன்
    சக்தி சக்திதாசன்

    http://www.thamilpoonga.com
    http://www.facebook.com/sakthi.sakthithasan

    Share
  • வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (2)

    பவள சங்கரி

    நம் சூழ்நிலைக்கு ஏற்ப வாழ்க்கையை  அமைத்துக் கொள்வது மட்டுமே வெற்றிகரமான வாழ்க்கையின் பூரண இரகசியம். இந்த உண்மையை உணர்ந்தவர்கள் வாழ்வில் மலர்ச்சி நிச்சயம். – சுவாமி விவேகானந்தர்

    வெற்றிப் பாதையில் பயணிக்க விரும்புபவர் க்டைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஒரு அம்சம், மனதில் சலனமில்லாத மகிழ்ச்சி. ஆம், தெளிந்த நீரோடை  போல மனது தெளிவாக இருக்க வேண்டுமானால் சில அடிப்படைக் கொள்கைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது. இதில் மிக முக்கியமானதொன்று, இருப்பதை எண்ணி மகிழ்வுறாமல், இல்லாததை எண்ணி ஏக்கம் கொள்வது. ஆம், வாழ்க்கையில் அனைத்தும் எனக்குக் குறைவில்லாமல் கிடைத்தால்தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று எண்ணினால் இந்தப் பிறவியில் அது சாத்தியமில்லை. காரணம் குறையில்லாத மனித வாழ்க்கை என்பது இதுவரை இல்லை என்பதுதான் சத்தியம். நம்முடைய மகிழ்வான பொழுதுகளை முழுவதுமாக தின்னக்கூடிய வல்லமை பெற்றது, நம்மிடம் இல்லாத ஒன்றை எண்ணி ஏக்கம் கொண்டு நிம்மதியைத் தொலைப்பதுதான். மகிழ்ச்சி என்பது என்றுமே இன்னொருவரால் வரக்கூடியது அன்று. நமக்காக நாமே உருவாக்கிக்கொள்வதே நிலையான மகிழ்ச்சி. மகிழ்ச்சியோ, துக்கமோ இதில் எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறோம்  என்பது நம்மிடமே உள்ளது.

    நண்பர் ஒருவர் பல நாட்களாக கொள்முதல் செய்து வைத்திருந்த  சரக்கிற்கு பெருத்த  லாபம் கிடைக்கப்போவதாக கற்பனை செய்துகொண்டு மகிழ்ச்சிக் கடலில் ஆழ்ந்திருந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக சந்தையின் நிலவரம் தலைகீழாக மாறிவிட, அவர் எதிர்பார்த்த இலாபம் பாதியாகக் குறைந்துவிட்டதேயொழிய நட்டம் ஏற்படவில்லை. ஆனாலும் அவர் தாம் எதிர்பார்த்த இலாபம் கிடைக்காமல் போனதற்கு உள்ளம் நொந்து, தான் ஒரு அதிர்ஷ்டக்கட்டை, எப்போதுமே தான் நினைப்பது எதுவுமே நடப்பதில்லை என்று வேதனையில் ஆழ்ந்தால் அது யாருடைய தவறு? கிடைத்த இலாபத்திற்கான மகிழ்ச்சியைக் கொண்டாடாமல், கிடைக்காமல் போனதற்காக மகிழ்ச்சியைத் தொலைத்தால் அதற்கு அவரேதானே பொறுப்பாக முடியும். ஆக மகிழ்ச்சி என்பது நம் கையில்தானே இருக்கிறது.

    மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டுங்கள்!

    மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டும் வழி மிகவும் எளிமையானது. அதற்கு முதல் படியாக நம்முடைய தேவைகளைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டியது அவசியம். ஆம் அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் இடமளிக்கட்டும் உங்கள் ஆசைகள். இந்த எண்ணத்தில் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். வழி மாறிய படகில் சிக்கிய ஒருவர் தனித்தீவிலிருந்து  ஒரு மாதத்திற்குப் பிறகு மீண்டு வந்தால் எப்படியிருக்கும் அவருடைய மனநிலை. அவருடைய தேவைகள் என்னவாக இருக்கும். அவர் இழந்த, உயிர் வாழ அத்தியாவசியத் தேவையான அந்த சுத்தமான குடிநீரும் மற்றும் நல்ல உணவும்தானே? இதற்கான அர்த்தம் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு இது இரண்டும் மட்டும் போதும் என்பதில்லை. உயிர்வாழத் தேவையான அடிப்படை வசதி கிடைத்துவிட்டால் மேற்கொண்டு நாம் பெறும் ஒவ்வொன்றும் நம் மகிழ்ச்சிக் கணக்கில் சேர்ந்துகொண்டே போக வேண்டியதுதான் இல்லையா? அப்படி உணர்ந்து நம் உள்ள வங்கியில் மகிழ்ச்சிக் கணக்கைக் கூட்டிக்கொண்டே போனால் வெற்றிக்கான பாதை நம்முன் பரந்து விரியும்.

    அடுத்து நாம் செய்யும் ஒவ்வொரு நல்ல காரியங்களையும், அது எத்துனை சிறிதாயினும் சரி, அதனையும் நம் மகிழ்ச்சிக் கணக்கில் கூட்டிக் கொள்ளலாம். நல்ல வாழ்த்துக்களைப் பெற்றுத்தரும் நல்ல எண்ணங்களுடான சேவைகள் ஒரு மிகப்பெரும் வரப்பிரசாதம். அதை அனுபவிக்கப் பழகிவிட்டால் மகிழ்ச்சிக் கணக்கின் எண்ணிக்கை வெகு விரைவில் கூடிவிடும்.

    வாழ்க்கையைத் தள்ளி நின்று இரசிக்கப் பழகுவதுதான் வேதனையை ஒதுக்கி, மகிழ்ச்சியை அணைப்பதற்கான எளிய வழி. நம் பிரச்சனைகளைத் தள்ளி நின்று பார்க்கும்போது அது மிகச் சாதாரணமானதாகத் தெரிவதோடு, அதற்கான தீர்வு காண்பதும் எளிதாகிவிடும். குழந்தையின் மழலை, மலர்களின் மணமும், அழகும், இயற்கையின் இனிமை, பறவைகளின் கானம் இப்படி இரசித்து மகிழ எத்தனையோ இருக்கிறதே.

    நம்முடைய மகிழ்ச்சிக் கணக்கு கூடிக்கொண்டே வரும்போது மனதில் தோன்றும் நிம்மதி நம்மை சரியான பாதையில் வழிநடத்தி எளிதாக வெற்றி கொள்ளச் செய்யும் என்பதில் ஐயமேது?

    பெற்ற சிறிய வெற்றியையும் மனம்கிழ்ந்து கொண்டாடப் பழகினாலே உற்சாகம் கொப்பளிக்காதா..  அடுத்த வெற்றிக்கும் அதுவே அச்சாரம் போடுமே. ஒவ்வொரு சிறிய வெற்றியும் நமக்கான ஆசிர்வாதம். அந்த ஆசிர்வாதத்தை மனதார ஏற்று நன்றி சொல்லும் போதும் உள்ளம் உவகை கொள்ளுமே. இப்படி மகிழ்ச்சியைக் கூட்டிக் கொண்டே போனால் வெற்றியின் ஒவ்வொரு படியையும் கடந்து கொண்டேயிருப்பதாகத்தானே அர்த்தமாகிறது.

    தொடரும்

    படத்திற்கு நன்றி :

    http://rishikajain.com/2012/02/01/happiness-will-never-come-to-those-who/

    Share
  • வால்ட் விட்மன் வசன கவிதை -10 என்னைப் பற்றிய பாடல் -3

    (Song of Myself)

    (1819-1892)

    (
    புல்லின் இலைகள் -1)

    மூலம் : வால்ட் விட்மன்

    தமிழாக்கம் : சி, ஜெயபாரதன், கனடா

    +++++++++++++++++++++++++++++

    உடல் உறுப்பு ஆக்கிய கவிஞன் நான்

    ஓர் ஆத்மீகக் கவிஞன் நான்

    சொர்க்கபுரி இன்பங்கள் பெற்றவன் நான்

    நரகத்தின் துயர்கள் உற்றவன் நான்

    முன்னதை என்னுள் புகுத்தி நான்

    உன்னத மாக்கிக் கொண்டது;

    பின்னதைப் புது மொழியாக நான்

    மொழி பெயர்த்தியது.

    மாதரின் கவிஞன் நான், அதுபோல்

    ஆடவருக்கும் கவிஞன்.

    மாதராய்ப் பிறந்தது மகத்துவம் என்பேன்

    ஆடவர் போல.

    மானிடத் தாயை விட

    பேறு பெற்றவர் வேறில்லை என்று

    கூறுவேன் !

    பரிவுடன் மலரும் இரவிலே நான்

    திரியும் ஒரு மனிதன்;

    கடலும், புவியும் தேவை எனக்கு;

    இரண்டிலும் பாதி நேர ஆட்சி

    இரவு புரியும் !

    மார்பில்லாச் சூனிய இரவைக்

    இறுகத் தழுவிக் கொள் !

    காந்தக் கவர்ச்சி ஊட்டும் இரவைக்

    கட்டித் தழுவிக் கொள் !

    தென்திசைக் காற்றுகள் வீசும் இரவு

    பெருவடிவ விண்மீன்கள்

    சிலவற்றைப்

    பெற்றுள்ளது இரவு !

    நடுங்கும் இரவு மேலும் !

    பித்துப் பிடித்துள்ளது !

    உடுப்பில்லா அமணத்தில் இரவு !

    சிரிப்பாய் புவியே ! காமக் களிப்பொடு

    குளிர் மூச்சை உள்வாங்கி !

    நீர் மய மரங்கள் தூங்கிடும்

    பூமியே !

    அத்தமன மாகிப் பிரிந்த பரிதியின்

    அண்டப் புவியே !

    பனி மூட்டம் உச்சியில் மூடிய

    மலைகளின் பூமியே !

    பூரண நிலவு நீல வானில்

    பொங்கிடும் பளிங்குப் பூமியே !

    ஒளிப்புள்ளி, கரும்புள்ளி பற்பல மின்னி

    ஓடும் நதியின் புவியே !

    தூயப் பழுப்பு முகில் பளிச்செனத்

    தோரணமாய்த் தெரிகிறது

    என் பொருட்டு !

    நீள்கரம் திடீரென நீட்டும் பூமியே !

    ஆப்பிள் செழித்துக் கொத்தாய்ப்

    பூத்துக் குலுங்கும் பூமியே!

    நீ சிரிப்பாய்

    நின் காதலன் வருகிறான் !

    ஊதாரிப் பையன் எனக்குக்

    காதல் அளித்துள்ளாய் நீ !

    ஆதலால் அளிப்பேன் நானுனக்கும்

    காதல் ! அந்தோ

    தாகமான மௌனக் காதல் !

    +++++++++++++

    தகவல்:

    1. The Complete Poems of Walt Whitman , Notes By : Stephen Matterson [2006]

    2. Penguin Classics : Walt Whitman Leaves of Grass Edited By : Malcolm Cowley [First 1855 Edition] [ 1986]

    3. Britannica Concise Encyclopedia [2003]

    4. Encyclopedia Britannica [1978]

    5. http://en.wikipedia.org/wiki/Walt_Whitman [November 19, 2012]

    6. http://jayabarathan.wordpress.com/abraham-lincoln/

    [ஆப்ரஹாம் லிங்கன் நாடகம்]

    ********************

    jayabarat@tnt21.com [S. Jayabarathan] (February 6, 2013)

    http://jayabarathan.wordpress.com/

    Share
  • இஸ்ரேல் பயணம் 8

    நாகேஸ்வரி அண்ணாமலை

    புராதன ஜெருசலேம் நகரம் ஒரு மலையின் மேல் அமைக்கப்பட்டிருப்பதால், அதற்குள் உள்ள சாலைகள், கடைகள், கட்டடங்கள் பல மட்டங்களில் இருக்கின்றன.  சாலைகளின் நடுவில் படிகள் இருக்கின்றன.  அவற்றின் இரு பக்கமும் சரிவுப் பாதைகள் இருக்கின்றன.  அவற்றில்தான் கடைகளுக்குச் சரக்குக் கொண்டு செல்பவர்கள் நம் கைவண்டி போன்ற வண்டிகளில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு அப்படியே சருக்கிக்கொண்டு போகிறார்கள்.  ஆங்காங்கே மார்க்கெட்டுகள் இருக்கின்றன.  காய்கறிகள், பழங்கள் விற்கும் கடைகளும் ஆரஞ்சுப் பழத்திலிருந்து சாற்றைப் பிழிந்து கொடுக்கும் கடைகளும் நினைவுப் பொருள்கள் விற்கும் கடைகளும் சிற்றுண்டி விற்கும் கடைகளும் இங்கு இருக்கின்றன.  இந்த நகரத்திற்குள் புதிதாக வருபவர்கள் எளிதாகத் தொலைந்துவிடலாம்.  ஏனெனில் அத்தனை சிறிய தெருக்கள், சந்துகள் இருக்கின்றன.  பட்டை, பெருஞ்சீரகம் உள்ளிட்ட, உணவுக்குச் சுவை கூட்டும் பல பொருள்கள் (spices) விற்கும் கடைகளும் இந்த மார்க்கெட்டிற்குள் இருக்கின்றன.  புராதன நகரத்திற்குள் எந்தக் கடையிலும் அரிசியைப் பார்த்ததாக ஞாபகம் இல்லை.  ஆனால் டமாஸ்கஸ் வாயிலுக்கு (Damascus Gate-ஏழு வாயில்களில் இதுவும் ஒன்று) வெளியே நம் நாட்டில் இருப்பது போன்ற சிறிய பலசரக்குக் கடைகள் நிறைய இருக்கின்றன.  அங்கு மிக உயர்ந்த தரமுடைய நம் நாட்டு பஸ்மதி அரிசி கிடைத்தது.  அமெரிக்காவிலும் பல வகையான பஸ்மதி அரிசிகள் கிடைக்கின்றன.  இது அப்போதுதான் இந்தியாவிலிருந்து வந்திருக்கும் போலும்.  புதுக்கருக்கு மாறாமல் இருந்தது.  அமெரிக்காவிலிருந்து ஒரு மாதம் இஸ்ரேலில் தங்கியிருக்க வந்திருந்த யூத நண்பருக்கு என் சமையல் என்றால் பிடிக்கும்.  அவருக்குச் சமைப்பதற்காக அரிசியைத் தேடிக்கொண்டிருந்த போது இது கிடைத்தது.

    புராதன நகருக்குள் தனியாகச் சென்றால் எல்லா  இடங்களையும் அவற்றின் தொன்மையையும் சிறப்புக்களையும் நம்மால்  புரிந்துகொள்ள முடியாது என்பதால் ஒரு பயண வழிகாட்டியை (guide) ஏற்பாடு செய்துகொண்டோம்.  அவர் ஒரு அரேபிய முஸ்லீம்.  முந்திய தினமே தொலைபேசியில் அவரிடம் தொடர்பு கொண்டு மறு நாளைக்கு எங்கு, எத்தனை மணிக்குச் சந்திப்பது என்று முடிவுசெய்துகொண்டோம்.  காலை ஒன்பது மணியிலிருந்து மாலை ஐந்து மணி வரை அவர் எங்களைப் புராதன நகருக்கும் அதற்கு வெளியேயுள்ள ஜெருசலேமின் மற்ற இடங்களுக்கும் கூட்டிப் போவதாக ஏற்பாடு.  அரேபியர்கள் முதலில் இருந்த இடங்களைச் சுற்றி இஸ்ரேல் அரசு ஏற்படுத்தியிருக்கும் புதிய குடியிருப்புகளும் இதில் சேர்த்தி.

    நாங்கள் தங்கியிருந்த அப்பார்ட்மெண்ட் புராதன நகருக்கு மிகவும் அருகில்  இருந்தது.  மொத்த தூரம்  அரை மைல்தான் என்றாலும், ஏற்ற இறக்கங்களையுடைய அந்தத் தெருக்களைக் கடப்பதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.  சில சமயங்களில் அப்பார்ட்மெண்ட் சொந்தக்காரர் யோசியின் (Yosi) உதவி கிடைத்தால் டாக்ஸி கிடைத்துவிடும்.  பக்கத்து இடங்களுக்குச் செல்ல ஜெருசலேமிலும் டாக்ஸிக்காரகள் வர விரும்புவதில்லை.  அந்த மாதிரி நேரங்களில் நடந்துதான் சென்றோம்.  இந்த நடையோடு புராதன நகருக்குள் எல்லா இடங்களுக்கும் நடந்துதான் செல்லவேண்டும்.  மதிய உணவைப் பயண வழிகாட்டியே எங்களுக்கு, அவருக்குத் தெரிந்தவர் கடையில் வாங்கிக் கொடுத்தார்.  நம் நாட்டு இட்லி, தோசை போன்றது ஃபலாஃபல் (Falafel) என்னும் பலகாரம்.  இது எல்லாத் தெருக் கடைகளிலும் கிடைக்கும்.  இது காபூல் சன்னா என்று அழைக்கப்படும் பெரிய வெள்ளைக் கொண்டைக்கடலையை நனையவைத்து, வெங்காயம், வெள்ளப்பூடு, சீரகம், கொத்தமல்லித்தழை, பார்ஸ்லி கீரை (Parsley) ஆகிய சாமான்களைச் சேர்த்து ஒரு விதப் பக்குவத்தில் அரைத்து எண்ணெயில் பொரித்து எடுக்கப்படுவது. இன்னொரு பலகாரம் நம் சப்பாத்தி போன்றது. அது பீட்டா ரொட்டிக்குள் தக்காளி, வெங்காயம், லெட்டஸ் என்னும் கீரை, மற்றும் ஃபலாஃபல் ஆகியவற்றை உள்ளே வைத்துத் தயாரிப்பது.  சில இடங்களில் பயண வழிகாட்டிகள் இதையும் மதிய உணவாகக் கொடுத்தார்கள். ஃபலாஃபல்லோடு ஆரஞ்சுப் பழச்சாறும் எல்லா இடங்களிலும் உணவோடு பரிமாறப்படுகிறது.  ஜெருசலேமை ஒட்டியுள்ள இடங்களில் நிறைய ஆரஞ்சு விளைகிறது.  பயண வழிகாட்டி புராதன நகரில் ஒரு கடையில் ஆரஞ்சுப் பழச்சாறு வாங்கிக் கொடுத்தார்.  ஒரு பெரிய தம்ளர் சாற்றின் விலை பத்து ஷெக்கல் (shekel).  ஷெக்கல் இஸ்ரேலின் நாணய முறை.  நான்கு ஷெக்கல் ஒரு அமெரிக்க டாலருக்குச் சமம். அதாவது ஒரு ஷெக்கல் 13 ரூபாய்க்குச் சமம்.

    மதியம் ஒரு மணிக்கு புராதன நகரப் பயணத்தை முடித்துக்கொண்டு (புராதன நகரைப் பார்ப்பதற்கு அரை நாள் போதாது.  மறுபடி நாங்களாக ஒரு முழு நாள் முழுவதும் அதற்குள் சுற்றினோம்.  ஆனால் அங்கு நடப்பதற்கு நிறையத் தெம்பு வேண்டும்.)  பயண வழிகாட்டி வாங்கிக் கொடுத்த உணவை உண்டுவிட்டு, சிறிது இளைப்பாறிவிட்டு மறுபடி புராதன நகருக்கு வெளியேயுள்ள இடங்களைப் பார்க்கச் சென்றோம்.

    ஜெருசலேம் நகரம் இப்போது  மிகவும் விரிந்திருக்கிறது.  1948-இல் ஐ.நா. செய்த பிரிவினையின் போது ஜெருசலேமை இஸ்ரேலுக்கும் கொடுக்கவில்லை; பாலஸ்தீனத்திற்கும் கொடுக்கவில்லை.  அது ஐ.நா.வின் கீழ் இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.  ஆனால் 1967 சண்டையில் இஸ்ரேல் ஜெருசலேமைப் பிடித்துக்கொண்டதால், அதைத் தன் தலைநகரம் என்று கூறிக்கொண்டு அங்குதான் தன்னுடைய நெஸ்ஸெட் (Knesset) என்று அழைக்கப்படும் பார்லிமெண்டைக் கட்டியிருக்கிறது.  ஜனாதிபதி, பிரதம மந்திரி ஆகியோரின் அதிகாரபூர்வ இருப்பிடங்கள் அங்குதான் இருக்கின்றன.  இஸ்ரேலின் பழைய, பெயர்பெற்ற ஹீப்ரு பல்கலைக்கழகமும் இஸ்ரேலில்தான் இருக்கிறது. ஆயினும், தென் அமெரிக்காவில் இருக்கும் கௌதமாலா, எல் சல்வடார் என்ற இரண்டு நாடுகளைத் தவிர மற்ற எல்லா நாடுகளும் – அமெரிக்கா உட்பட – டெல்விவ்தான் இஸ்ரேலின் தலைநகரம் என்பது போல் அங்கு தங்கள் தூதரகங்களை அமைத்துக்கொண்டிருக்கின்றன.

    1948-இல் பாலஸ்தீனத்தில் ஐ.நா. தனக்குப் பிரித்துக் கொடுத்த இடங்கள் இஸ்ரேல் எதிர்பார்த்ததற்கு மேலேயே இருந்ததால் பிரிட்டன் பாலஸ்தீனத்தை விட்டு வெளியேறுவதற்கு முந்தைய நாளே – 1948 மே மாதம் பதினாலாம் தேதியே – வேக வேகமாக பென் குரியன் போன்ற, இஸ்ரேலை உருவாக்கியே தீருவது என்பதில் தீவிரமாக இருந்த யூதத் தலைவர்கள் இஸ்ரேல் நாடு உருவாகிவிட்டது என்று பிரகடனப்படுத்திவிட்டனர்.  ஐ.நா.வின் இந்தப் பிரிவினையை ஒத்துக்கொள்ளாத பாலஸ்தீன அரேபியர்கள் சிரியாவில் கூட்டம் போட்டு ஐ.நா.வின் இந்தத் தீர்மானத்தைக் கண்டித்தனர்.  பாலஸ்தீனம் தங்களுக்கு மட்டுமே என்று நினைத்திருந்தவர்களுக்கு அதை இரண்டாகப் பிரித்து யூதர்களுக்கு அதில் ஒரு பகுதியைக் கொடுத்து யூத நாடு உருவாக ஆதாரமாக இருந்த ஐ.நா.வின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

    இஸ்ரேல் உருவான மறு நாளே எகிப்து, ஜோர்டான், சிரியா, லெபனான், ஈராக் ஆகிய அரபு நாடுகள் இஸ்ரேலின் மீது படையெடுத்தன. முதலில் அரபு நாடுகள் யுத்தத்தில் ஜெயிப்பது போல் தோன்றினாலும் இஸ்ரேல் சண்டையில் வெற்றிபெற்றதோடு 1949 ஜனவரி ஏழாம் தேதி சண்டையின் முடிவில் ஏற்பட்ட தற்காலிக யுத்த நிறுத்தத்திற்குப் (cease fire) பிறகு இஸ்ரேல், ஐ.நா.வால் தனக்குக் கொடுக்கப்பட்ட பகுதியில் பாதியளவு இன்னும் சில இடங்களைப் புதிதாகப் பிடித்துக்கொண்டது.  இப்படிப் பிடித்துக்கொண்ட இடங்களில் ஜெருசலேமின் ஒரு பகுதியும் அடங்கும்.  1956-இல் நடந்த சண்டையில் ஐ.நா.வும் அமெரிக்காவும் வற்புறுத்தியதால் இஸ்ரேல் யுத்தத்தில் பின்வாங்கியது.  1967-இல் மீண்டும் அரபு நாடுகளோடு நடந்த ஆறு நாள் யுத்தத்தில் சிரியா, ஜோர்டன், எகிப்து ஆகிய நாடுகளைத் தோற்கடித்து, ஐ.நா.வால் தனக்குக் கொடுக்கப்பட்ட இடங்களைப் போல் இரண்டு மடங்கு இடங்களைப் பிடித்துக்கொண்டது.  சிரியாவின் கோலன் ஹைட்ஸ் (Golan Heights), எகிப்தின் சினாய் தீபகற்பம் (Sinai Peninsula), ஜோர்டானின் வெஸ்ட் பேங்க் (West Bank), ஜெருசலேமின் புராதன நகரம் என்று பல இடங்களைப் பிடித்துக்கொண்டது.  1977-இல் எகிப்தில் அன்வர் சதாத் ஜனாதிபதியாக இருந்தபோது இஸ்ரேலுடன் சமாதான ஒப்பந்தம் போடத் தயாராக இருப்பதாக அவர் கூறியதால், அமெரிக்காவின் உதவியோடு இஸ்ரேலும் எகிப்தும் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டன.  ஆனால் அதுவும் நிலைக்கவில்லை.  பாலஸ்தீன விடுதலை இயக்கம் (Palestinian Liberation Organization) உருவாக்கப்பட்டு அதன் தலைமையகம் லெபனானில் செயல்பட்டு வந்தபோது இஸ்ரேல் லெபனானைத் தாக்கியது. அமெரிக்கா தலையிட்டு இஸ்ரேலுக்கும் லெபனானுக்கும் சமாதான ஒப்பந்தம் செய்தும் இஸ்ரேல் அங்கு பிடித்த எல்லா இடங்களையும் விட்டு வரவில்லை.  சிரியாவின் நிர்ப்பந்தத்தின் பேரில் அந்த ஒப்பந்தத்தை லெபனானும் ரத்துசெய்தது.

    இஸ்ரேல் உருவானதும் அங்கிருந்த பல பாலஸ்தீனிய அரேபியர்கள் பக்கத்து அரபு நாடுகளுக்கு அகதிகளாகச் சென்றுவிட்டிருந்தனர்.  மிஞ்சியவர்கள் இப்போதைய இஸ்ரேலின் ஜனத்தொகையில் இருபது சதவிகிதம்.  இப்படி இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்குரிய இடங்களைப் பிடித்துக்கொண்டே போனதால், இஸ்ரேலிலும் இஸ்ரேல் பிடித்துக்கொண்ட இடங்களிலும் வாழ்ந்த அரேபியர்களுக்கும் இஸ்ரேலிய யூதர்களுக்கும் இடையே அடிக்கடி பூசல்கள் ஏற்பட்டன.  இஸ்ரேல் தான் பிடித்துக்கொண்ட இடங்களில் யூதக்குடியிருப்புகளை அமைத்துக்கொண்டே போனது.  இதுவும் அரேபியர்களின் கோபத்தைக் அதிகப்படுத்தியது.

    இது வரை இஸ்ரேல்  என்ற நாடு இருப்பதையே பாலஸ்தீனத் தலைவர்கள் ஒப்புக்கொள்ள மறுத்தனர்.  ஆனால் பாலஸ்தீன விடுதலை இயக்கத்தின் தலைவரான யாசர் அராபத் (Yasser Arafat) இந்த நிலையை மாற்றி முதல் முதலாக இஸ்ரேலுக்குத் தனி நாடாக இயங்கும் உரிமை இருக்கிறது என்றும் பாலஸ்தீனமும் இஸ்ரேலும் பக்கத்து பக்கத்து நாடுகளாக இருக்கலாம் என்றும் கூறினார்.  இதற்கிடையில் 1992-இல் இஸ்ரேலின் பிரதம மந்திரியான யிட்சக் ராபின் (Yitzhak Rabin) இஸ்ரேல் பிடித்துக்கொண்ட பகுதிகளில் குடியிருப்புகள் கட்டுவதை நிறுத்தினார்.

    இதையடுத்து 1993-இல் இஸ்ரேலுக்கும் பாலஸ்தீன விடுதலை இயக்கத்திற்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது.  இதற்கு ஆஸ்லோ ஒப்பந்தம் (Oslo Accord) என்றுபெயர்.  இதன்படி வெஸ்ட் பேங்கும் காஸாவும் (Gaza) (காஸா எகிப்து-இஸ்ரேல் எல்லையில் இருக்கிறது.) சுயாட்சி அமைத்துக்கொள்வதென்றும் ஐந்து வருஷங்களில் பாலஸ்தீன நாடு உருவாகும் என்றும் ஒப்புக்கொள்ளப்பட்டது.  (இந்த ஒப்பந்தத்தினால் அராபத்துக்கும் ராபினுக்கும் நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட்டது.)  1994-இல் யாசர் அராபத் Palestine Authority-யின் தலைவரனார்.

    1995-இல் ராபின் ஒரு யூத தீவிரவாதியால் கொலைசெய்யப்பட்டார்.  1996-இல் பிரதமர் பதவிக்கு வந்த பெஞ்சமின் நேத்தன்யாஹு (Benjamin Netanyahu) என்பவர் ஒரு வலதுசாரி.  (இவருடைய லிக்விட் (Likud party) கட்சிதான் 2013 ஜனவரியில் இஸ்ரேலில் நடந்த பொதுத் தேர்தலில் பார்லிமெண்ட்டின் 120 இடங்களில் 31-ஐப் பிடித்திருக்கிறது.  இன்னும் இரண்டு கட்சிகளோடு சேர்ந்து இவர் அரசு அமைப்பார்.  மூன்றாவது முறையாகப் பிரதம மந்திரி பதவியை வகிப்பார்.)  ஆஸ்லோ ஒப்பந்தம் பாலஸ்தீனர்களுக்கு அதிகச் சலுகை கொடுத்துவிட்டதாகவும் அதைப் பின்பற்றினால் இஸ்ரேலியர்களின் பாதுகாப்பிற்கு பங்கம் விளையலாம் என்றும் கூறி ஆஸ்லோ ஒப்பந்தத்தைச் சரியாகப் பின்பற்றவில்லை.  காஸாவில் ஹமாஸ் (Hamas) என்னும் தீவிரவாத பாலஸ்தீனியக் கட்சி தேர்தலில் அதிகாரத்தைக் கைப்பற்றியது.

    1997-இல் ஹமாஸ் கட்சியைச் சேர்ந்த தீவிரவாத தற்கொலைப் படையினர் இஸ்ரேலுக்குள் புகுந்து இருபது இஸ்ரேலியர்கள் உயிர் இழக்கக் காரணமாயினர்.  இதைத் தொடர்ந்து நேத்தன்யாஹு ஆஸ்லோ ஒப்பந்தத்திற்கு மாறாகப் பல காரியங்கள் செய்தார்.  இஸ்ரேலில் வேலைபார்க்கும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராகப் பல நிபந்தனைகள் கொண்டுவந்தார்.  பாலஸ்தீனிய அத்தாரிட்டிக்குச் சேர வேண்டிய வரிப் பணத்தை அதற்குக் கொடுக்காமல் நிறுத்தி வைத்தார்.  இஸ்ரேல் பிடித்துக்கொண்ட பாலஸ்தீனர்களுக்குரிய இடங்களில் குடியிருப்புகளை அரசு தொடர்ந்து கட்டியதோடு பல வலதுசாரி இஸ்ரேலியர்கள் அமைத்துக்கொள்ள ஆதரவு கொடுத்தார்.  இப்படியாக இஸ்ரேலியர்களுக்கும் பாலஸ்தீனர்களுக்கும் இடையே சண்டை வலுத்துக்கொண்டே போனது.

    யூதர்கள் வெளியிலிருந்து பாலஸ்தீனத்திற்குள் குடியேறிக்கொண்டே போனபோது ஜெருசலேமிலும்  பலர் குடியேறினர்.  ஜெருசலேமைச்  சுற்றிலும் நிறைய யூதக் குடியிருப்புகள் இருக்கின்றன.  1967 சண்டைக்குப் பிறகு  இஸ்ரேல் அரசு நிறையக் குடியிருப்புகளைக் கட்டியது.  இவற்றில் சில அமெரிக்காவில் வாழும் பணம் படைத்த யூதர்கள் அரேபியர்களுக்குச் சொந்தமான இடங்களை / வீடுகளை அவர்களிடமிருந்து நிறையப் பணம் கொடுத்தோ அல்லது கட்டாயப்படுத்தியோ வாங்கிக் கட்டப்பட்டவை.  1967-இல் நடந்த சண்டைக்குப் பிறகு இஸ்ரேல் பாலஸ்தீனர்களுக்குக் கொடுக்கப்பட்ட இடங்களில் பலவற்றைப் பிடித்துக்கொண்டது.  இஸ்ரேலைத் தாக்க பாலஸ்தீன இளைஞர்கள் தற்கொலைப் படையினராக இஸ்ரேல் பகுதிக்குள் வந்தபோது 2001-இல் பிரதம மந்திரியாக இருந்த ஏரியல் ஷேரன் (Ariel Sharon) பாலஸ்தீன இளைஞர்களை வரவிடாமல் தடுக்க உயர்ந்த மதில்களை அரேபியர்கள் வசிக்கும் பகுதிக்கும் யூதர்கள் வசிக்கும் பகுதிக்கும் இடையே கட்டத் தொடங்கினார்.  2002-ஆம் ஆண்டில் ஆரம்பித்த சுவர் கட்டும் வேலை இன்னும் நடக்கிறது.

    ஷேரனால் ஆரம்பிக்கப்பட்ட  இந்தச் சுவர் இஸ்ரேலின் பாதுகாப்பிற்காகக் கட்டப்படுவதாக இஸ்ரேல் கூறினாலும் இதனுடைய உள்நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக பாலஸ்தீனியர்களை வெஸ்ட்பேங்கிலிருந்து வெளியேற்றி அந்த இடங்களையும் இஸ்ரேலுடன் இணைத்து பாலஸ்தீனத்தில் யூதர்கள் மட்டுமே வாழும் நாடாக இஸ்ரேலை உருவாக்க வேண்டும் என்பதுதான் என்று ஐ.நா.வைச் சேர்ந்த மனித உரிமைக் கழகத்தின் அதிகாரி ஒருவர் 2003-லேயே கூறியிருக்கிறார்.

    ஜெருசலேமின் பல இடங்களில்  இந்தச் சுவரைக் காண முடிந்தது.  இந்தச் சுவர் வெஸ்ட் பேங்கில் பாலஸ்தீனியர்கள் வாழும் இடங்களுக்கு இடையே ஓடுகிறது.  பாலஸ்தீனியர்கள் வாழும் வீடுகள் சுவருக்கு ஒரு புறமும் அவர்களுடைய ஆலிவ் மரங்கள் அடங்கிய தோப்புகள், விவசாயப் பண்ணைகள் மறுபுறமும் இருக்கின்றன.  இந்தச் சுவர்களைத் தாண்டிப் போவதற்கு சுவரில் ஆங்காங்கே வாயில்களும் சோதனைச் சாவடிகளும் இருக்கின்றன.  இவற்றைத் தாண்டுவதற்கு இஸ்ரேல் அரசிடம் அனுமதி அட்டை பெற வேண்டும்.  அவற்றை இஸ்ரேல் அரசு எளிதாகக் கொடுப்பதில்லையாம்.  மேலும் அவை குறிப்பிட்ட காலத்திற்குத்தான் செல்லுபடியாகுமாம்.  சுவரின் இஸ்ரேல் பகுதியில் வாழும் பாலஸ்தீனியர்கள் தங்கள் வீடுகளில் வசிப்பதற்கே அரசிடம் அனுமதி பெற வேண்டுமாம்.

    இந்தச் சுவர் நகர்ப் புறப் பகுதிகளில் கான்கிரீட்டால் கட்டப்பட்டிருக்கிறது.  சில இடங்களில் 26 அடி உயரம் கொண்டதாக இருக்கிறது.  கட்டி முடிக்கப்பட்டதும் 440 மைல் நீளம் கொண்டதாக இருக்குமாம்.  பெர்லின் சுவரை விட இரண்டு மடங்கு உயரமாம்.  கிராமப் புறப் பகுதிகளில் மின்சாரம் பாயும் இரும்புக் கம்பிகளால் ஆன வேலி காணப்படுகிறது.  வேலிக்கு இரு புறமும் ஆழமான அகழிகள் இருக்கின்றன.  சண்டையில் பிடித்துக்கொண்ட இடங்களில் ஏற்படுத்திய குடியிருப்புகளையும் இன்னும் எதிர்காலத்தில் அமைக்கக் கூடிய குடியிருப்புகளுக்கான இடங்களையும் உள்ளடக்கி இந்தச் சுவர் கட்டப்பட்டிருப்பதால் பாலஸ்தீனர்கள் வாழும் பகுதி தொடர்ச்சி இல்லாமல் இருக்கிறது.  சுயேச்சையான பாலஸ்தீன நாடு உருவானாலும் அது பல துண்டுகளாகப் பிரிக்கப்பட்ட நாடாக இருப்பதற்குரிய அபாயம் இருக்கிறது.  வெஸ்ட் பேங்கின் செழுமை வாய்ந்த பகுதியின் பெரும் பகுதி இந்தச் சுவரின் இஸ்ரேல் பகுதியில் இருக்கிறது.  இஸ்ரேலில் வேலை பார்க்கும், சுவரின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் வேலைக்கு வருவதற்கு இந்தச் சுவரின் சோதனைச் சாவடிகள் மூலமாகத்தான் வர வேண்டும்.  நாங்கள் வெஸ்ட் பேங்கில் இருக்கும் பெத்லஹேம், ராமல்லா ஆகிய நகரங்களுக்குச் சென்றபோது இந்தச் சுவரின் வழியாக அதிலுள்ள சோதனைச்சாவடி மூலமாகத்தான் சென்றோம்.

    பயண வழிகாட்டி எங்களை யூதக்குடியிருப்புகளுக்கு நடுவே வசிக்கும் பாலஸ்தீனர்களின்  வீடுகளுக்குக் கூட்டிச் சென்றார்.  அவர்கள் தங்கள் சோகக் கதைகளை எங்களிடம்  கூறினர்.  பாலஸ்தீனர்களுக்குரிய வீடுகளை ஏதாவது ஒரு சாக்குச் சொல்லி இஸ்ரேலிய அரசு எடுத்துக்கொள்வதால் சிலர் தங்கள் வீடுகளை விட்டுப் போகவே பயப்படுகிறார்களாம்.  அப்படிப் போகும் பட்சத்தில் அரசு அவற்றை கையகப்படுத்திக்கொள்ளும் அபாயம் இருக்கிறதாம்.  நான் ஒரு எழுத்தாளர் என்றதும் ‘எங்களைப் பற்றி ஒரு முறையல்ல, பல முறை எழுதுங்கள்.  நிறைய எழுதுங்கள்’ என்றார்கள்.

    சுவர் பற்றிய படங்களை  இந்த ஆல்பத்தில் பார்க்கலாம்.

    https://picasaweb.google.com/108173580006522327175/TheWall?authkey=Gv1sRgCL_Pu8mm_obUPg

    Share
  • நான் அறிந்த சிலம்பு – 57 (04.02.13)

    மலர் சபா

    புகார்க் காண்டம் – 07. கானல் வரி

    முரி வரி
    பாங்கன் கேட்பத் தலைமகன் உற்றது உரைத்தல்
                            
                        (14)
    என் தோழனே!
    பூம்பொழில் தருகின்ற நறுமண மலர்
    அம்மலர்களின் புதுமணம் பரந்து விரியும் மணல்
    அங்கே நின்றிருந்த தலைவியின்
    குற்றமற்ற இனியமொழி
    பருத்த இளமையான அழகிய மார்புகள்
    முழுமையான மதிபோன்ற முகம்
    வளைந்து நின்ற புருவமாம் இருவில்
    அழகை எழுதுவதற்கரிய மின்னல் இடை
    இவை யாவும் என்னைத் துன்புறச் செய்தன.
                         (15)
    என் தோழனே!
    அலைகள் பரந்த நீர்த்துறை
    அழகிய மணற்பரப்பு
    மணம் அவிழ்க்கும் நறுமண மலர்
    மலர்கள் நெருங்கிய சோலை
    அங்கே நின்றிருந்த தலைவியின்
    மணம் விரவிய சுருள் கூந்தல்
    மதி போலும் அழகிய முகம்
    இரண்டு கயல்கள் போன்ற இருவிழிகள்
    இவை யாவும் எனைத் துன்புறச் செய்தன.
                          (16)
    என் தோழனே!
    சங்குகள் வளரும் துறை
    மணம் பரந்து விரிகின்ற சோலை
    கட்டவிழ்ந்த மண மலர்கள்
    ஆங்கு அவள் தனித்து உலாவுகின்ற இடம்
    முளை போல வளரும் பல்வரிசை
    நிறைமதி போன்ற முகம்
    இளமைப் பருவத்தினளது
    இணைந்த மார்புகள்
    இவை யாவும் எனைத் துன்புறச் செய்தன.
    அடிப்படையான சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே:
    படத்துக்கு நன்றி:
    Share
  • மொபைல் டாக் ஷோ – 4

    திவாகர்

    புடவை

    ஹெல்லோ.. இங்கே என் பக்கத்துலே யார் இருக்கான்னு சொல்லு..

    ”யாரு…”

    சும்மா கொஞ்சம் யூகிச்சுதான் பாரேன்.. சரியா சொல்லிட்டியானா நீயே பேசலாம்.. நான் வேணுமின்னா ஒரு ஆப்ஷன் தரேன்.. இவங்க பேரோட முதல் எழுத்து ‘எஸ்’ ல ஆரம்பிக்கும்.. கண்டுபிடி பார்ப்போம்.. .

    “ஜோக்கா?.

    “சேச்சே.. ரொம்ப ஈஸியான பேரு.. இன்னோரு க்ளூ கொடுத்தேன்னா சட்’னு சொல்லிடுவே.. ஹி.. ஹி.. ஹே..

    ”ஏன் இப்படி வழியறீங்க.. நீங்க கல்யாணத்துக்குப் போனீங்களா இல்ல க்விஸ் போட்டி ஏதாவது நடத்தப் போனீங்களா.. உங்க மொபைலை சுத்தி ஒரே சப்தமா கேக்குது.. உங்க போன்’ல உங்க பேச்சே சரியா கேக்க மாட்டேங்குது.. முதல்லே மண்டபத்தை விட்டு கொஞ்சம் சத்தமில்லாத இடமா போய் நின்னுண்டு அங்கேயிருந்து கூப்பிடுங்க..”

    ஹல்லோ.. சரி.. சரி.. அப்படியே.. ஹி..ஹி.. இட்’ஸ் ஓகே.. ஷ்யூர்.. ஷ்யூர்.. ஹி..ஹி.. ஐ வில்..!

    —————————————-

    ஹல்லோ.. இப்போ நல்லா கேக்குதா..

    ஐய்யோ.. ஏன் இப்படி கத்தறீங்க.. மெதுவாப் பேசுங்க.. நல்லாவே  கேக்குது..

    ஒருவேளை கேக்கலையோ’ன்னு கொஞ்சம் சத்தமா பேசிட்டேன்.. இந்த இடத்துல அவ்வளோ யாரும் கிடையாது..

    சரி, சரி,, யாருகிட்டே நான் பேசணுன்னீங்களோ, அவங்ககிட்ட லைனைக் கொடுங்க..

    அது வந்து அங்கேயே யாரோ பார்த்துக் கூப்பிட்டாங்களா.. அங்க போயிட்டா..

    போயிட்டாளா.. யார் அது..

    அதுதான் உன் சினேகிதி சுமா.. அவதான்.. அவளும் இந்த கல்யாண மாப்பிள்ளையும் ஆபீஸ் கொல்லீக்ஸ்.. படு ஸ்டைலா எங்கிட்டே வந்து ஹெல்லோ சொல்லிட்டு ’உன்கிட்டே பேசி ரொம்ப நாளாச்சு’ ன்னு சிரிச்சாளா.. அதுதான் உனக்கு போன் போட்டேன்..

    சுமாவா, இதுக்குதான் இவ்வளவு  ஆர்ப்பாட்டம் பண்றீங்களா.. அவ கிடக்க்கிறா.. வேணுமின்னா அவளே பேசுவா.. அது சரி, கல்யாணத்துக்கு உங்க தங்கை வந்தாளா..

    ஓ.. வந்தாளே.. புருஷனோட வந்திருக்கா..

    “என்ன கலர்..’

    என்ன நீ.. அவ கலர் உனக்குத் தெரியாத மாதிரி கேக்கறே.. என்னை விட…”

    “ஐய்யோ அழகே.. ஏன் குறுக்கே கெக்கேபிக்கேன்னு பேசறீங்க.. என்ன கலர் புடவையைக் கட்டிண்டு  வந்தா’ன்னு கேக்க வந்தேன்..

    “அடடே.. நான் சரியா கவனிக்கவே இல்லே..’

    “ஓ.. இந்த சுமா வந்தாளே.. அவ..”

    “அதுவா.. ஒருமாதிரி வயலெட் கலர்’ல சின்னச் சின்ன பூ டிசைன் போட்டது.. கொஞ்சம் க்ராஸா இருந்தாலும்..”

    ”அதுதான்.. எதை கவனிக்கணுமோ அதை கவனிக்காதீங்க.. போன மாசம் அங்கே இருக்கறச்சே நான் ஒரு அரக்கு கலர்’ல பார்டர் வச்ச பட்டுப்புடவை வாங்கி உங்க தங்கைக்குக் கொடுத்தேன்.. ஞாபகம் இருக்கா.. மெடீரியல் டிஸைன்’லாம் தனியாப் போட்டுக்கொடுத்த புடவை..”

    ”தெரியுமே.. அவ கூட ரொம்ப நல்லாயிருக்குன்னு சொல்லிட்டு, ’யாரு எடுத்தது.. அண்ணா செலக்‌ஷனா’ன்னு கேட்டா.. நீ மூஞ்சியைத் தூக்கிட்டு நீயே செலக்ட் பண்ணின விஷயத்தைச் சொன்னியே..”

    ”சரி சரி.. உங்களுக்கு வர வர தேவையில்லாத விஷயம் எல்லாம் நல்லா நினைவுல இருக்கு.. அந்தப் புடவையை அவ கட்டியிருக்காளா’ன்னுதான் கேட்டேன்..”

    “ஏன் அப்படி கேக்கறே..”

    “இல்லே.. பெரிசா ஆஹா ஓஹோ’ன்னு அந்தப் புடவையைப் பிடிச்சுப் போய் இனிமே எந்தக் கல்யாணமானாலும் இந்தப் புடவைதான் கட்டிக்கப்போறேன்’னு குதிச்சாளே.. அதுக்காகத்தான் கேட்டேன்.. சும்மா வேஷம் போட்டாளோ’ன்னு”

    ”ச்சே.. பாவம்.. அவ  குழந்தை.. ரொம்பப் பிடிச்சுப் போயி அப்படி குதிச்சிருப்பா.. அவளுக்கு ஒண்ணு பிடிச்சுப் போச்சுன்னா அப்படித்தான் சின்னக் குழந்தையிலேர்ந்து குதிச்சுண்டிருப்பா..”

    ”குதிக்கட்டும் குதிக்கட்டும்.. கீழே விழாம குதிச்சா சரி..”

    “இப்ப என்னாச்சுன்னு இந்த நக்கல் பண்றே?”

    ”ஆஹா.. உங்க தங்கையை இப்ப ஏதாவது குத்தம் சொல்லிட்டேனா.. ஒரேயடியா பரிஞ்சுண்டு வரவேணாமே. புடவை வாங்கிக் கொடுத்தது நானு.. அதான் கேட்டேன்..”

    ”அவ நிச்சயம் நீ வாங்கிக் கொடுத்த புடவையைத்தான் கட்டிண்டு வந்துருப்பா.. நான் அவ புருஷன்கிட்டே ஏதோ பேசிண்டே இருந்தேன்னா.. நான் இந்த விவகாரத்தை மறந்துட்டேன்..”

    ”அதுசரி, கல்யாணத்துல எல்லார்கிட்டேயும் நான் ஏன் வரலே கேட்டாங்களா..”

    ”ஓ.. எல்லாரும் கேட்டாங்களே.. உன்னால் வரமுடியலே’ன்னு சொன்னவுடனே கல்யாணப்பொண்ணு ரொம்ப வருத்தப்பட்டா.. அவ கண்ல தண்ணியே வந்திருச்சு தெரியுமா..”

    அப்படியா?

    யெஸ்.. நிஜமா.. மனசு எனக்கு உருகிப்போச்சுன்னு  வெச்சுக்கோயேன்..

    “ஆஹா.. ஹோமப்புகைப் பக்கத்துல  ரொம்ப நேரம் இருந்தா  எல்லாருக்குமே அவங்க கண்ணுங்க அழறா மாதிரிதான் இருக்கும்.. சரி வுடுங்க..

    “அப்படிங்கறே.. இருக்கலாம்.. மாப்பிள்ளை கூட கண்ணைக்  கசக்கிகிட்டேதான் இருந்தான்.. ஒருவேளை அவனுக்கும் கூட  வருத்தமோ’ன்னு நினைச்சுட்டேன்..ஹி.. ஹி..”

    “ஐய்யோ சமத்தே.. சரி சரி.. உங்க தங்கை அந்தப் பக்கம் இருக்காளா;ன்னு ஒரு நோட்டம் விடுங்களேன்..

    “அட நான் கிட்டதட்ட வெளில  இங்கே வாசல்ல இருக்கேன்.. எப்படிப் பாக்கறது.. உள்ளே  மறுபடியும் போய் பார்த்துட்டு வேணா போன் பண்ணட்டுமா..”

    “இதுக்குன்னு நீங்க ஒண்ணும் மறுபடியும் போகவேணாம்.. எப்படியும் வெளியே வந்துட்டீங்க இல்லே.. வீட்டுக்கு வந்துடுங்க”

    “ஏன் ரொம்ப கோபமாப்  பேசறே.. அட.. நாம பேசிக்கிட்டே இருக்கோமா.. அதோ, தங்கையே  இங்க வந்துண்டுருக்கா பாரு.. அவகிட்டேயே பேசறியா..”

    “ஒண்ணும் வேணாம்.. புடவை விஷயம் மட்டும் சீக்கிரம் சொல்லிட்டு போனை வையுங்க..”

    நீ எப்பவுமே தப்பாதான்  கணக்குப் பண்ணுவே.. என் தங்கைக்கு  நீன்னா உசுரு தெரியுமா… கல்யாணத்துக்கு புடவைன்னு  கட்டினா நீ வாங்கித்தந்த புடவைதான் அவ நிச்சயம் கட்டுவா. ஆனா பாரு..

    ”என்ன ஆனா.. ஊவன்னா.. அந்தப் புடவைதானா அதுன்னு அவ கிட்டக்க வரதுக்குள்ளே நல்லாப் பார்த்து சீக்கிரம் சொல்லுங்களேன்..”

    ”அது.. அது.. வந்து.. என்னவோ தெரியலே.. இன்னிக்குன்னு பார்த்து சல்வார்’ல வந்துருக்கா.. இங்கேயிருந்து ஆபீஸ் போறாளோ என்னவோ.. என்னன்னு விசாரிக்கிறேன்.. இல்லே நீயே பேசறியா..

    ஒண்ணும் வேணாம்.. போனை வையுங்க…

    ஹெல்லோ.. ஹெல்லோ.. ஹெல்லோ..

    படத்திற்கு நன்றி:

    http://us2guntur.com/html/sarees.html

    Share