மலர் சபா

 

புகார்க் காண்டம் – 07. கானல் வரி

 
திணைநிலை வரி
புணர்ச்சி நீட, இடந்தலைப்பாட்டில் புணர்தலுறுவான் ஆற்றாமையால் கூறுதல்

 
(17)

 
கடலில் புகுந்து உயிர்களைக் கொன்று வாழ்பவர்
உன் மூத்தோராகிய தமையன்மார்;
நீயோ கண்வழியே உடலினுள் புகுந்து
என் உயிரதனைக் கொன்று வாழ்கின்றாயே!
கச்சையினுள் இருந்தும்
விம்முகின்ற உன் மார்புகள்
மிகவும் சுமையானவை;
அதனால் வருந்தித் தளர்ந்து
ஒடிந்திடவும் கூடும் நின் இடை;
உன் இடைதனை நீ இழந்திடாதே.

 
(18)

 
வளைந்த கண்கள் கொண்ட வலையால்
உயிர்களைப் பிடித்துக் கொல்பவன் நின் தந்தை;
நீயோ உன் நெடுங்கண் வலையால்
என் உயிர்தனைக் கொல்கிறாயே!
முத்துவடம் தாங்கிநிற்கும்
நின் மார்புகளின் சுமையால்
மழைமேகத்தின் மின்னல் போல்
அசைந்து தளர்கின்றது நின் இடை;
அதை நீ இழந்திடாதே!

 
(19)

 
ஓடுகின்ற படகினைக் கொண்டு
கடல்வாழ் உயிர்களைக் கொன்று வாழ்வர்
நின் தமையன்மார்;
நீயோ உன் வளைந்த புருவம்கொண்டு
எனைக் கொன்று நிற்கிறாயே!
உன் பெருமையையும் நீ அறியாய்;
உன்னால் பிறர்படும் துன்பத்தையும் நீ அறியாய்;
உன் மார்புகளின் பாரம் சுமந்து
தளர்கிறதே நின் இடை;
அதை நீ இழந்திடாதே!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.