திவாகர்

கடலைப் பற்றிப் பேசும்போது, கப்பல், வாணிகம் என்பதுதான் மிகுதியாக நினைவுக்கு வந்தாலும் அந்தக் கடலை நம்பி வாழ்பவர்களில் பெரும்பான்மை சமூகம் மீனவர்கள்தான். ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரை இந்தியாவின் ஏற்றுமதியில் முன்னணி வரிசையில் மீன் ஏற்றுமதியும் (அல்லது கடல் வாழ் பிராணிகள் என்று கொள்வோமாக) இருந்து வந்தது. இந்த கடல்வாழ் பிராணிகள் ஏற்றுமதியில் மிகுதியாக ஈடுபடுபவர்கள் தமிழர்கள் அதுவும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தோர்தான் அதிகம். ஏற்றுமதிகள் அதிகம் செல்வது ஜப்பான், கொரியா மற்றும் ஐரோப்ப நாடுகள் என்பதினால் குளிர்சாதன வசதிகள் கொண்ட கண்டெய்னர்களில் சென்னை, விசாகப்பட்டினம், தூத்துக்குடி, கொச்சி துறைமுகங்கள் மூலமாக கப்பல்கள் எடுத்துச் செல்கின்றன.

ஆனால் இந்த கடல்வாழ் பிராணிகளின் ஏற்றுமதியில் ஒரு முக்கியமான விவரத்தை கடல் வாழ் பிராணிகள் பற்றி ஆய்வு செய்து வரும் நண்பர் கலிங்கா பாலு இந்த வாரம் தன் கட்டுரையில் எழுதியுள்ளார். அதாவது   கடலில் மீன் பிடித்து வாழும் மீனவர்கள் தாங்கள் பிடித்து வந்த மீன்களை கேரளாவில் விற்பதைப் பற்றி குறிப்புத் தெரிவித்திருக்கிறார்.  கொச்சியில்தான் இந்திய அரசாங்கம் கடல்வாழ் பிராணிகளின் ஏற்றுமதி உதவி மையத்தை தலைமையகமாக அமைத்திருக்கிறது. ஏறத்தாழ பத்தாயிரம் கோடிக்கு மேல் இந்திய அரசாங்கத்துக்கு இந்த ஏற்றுமதி மூலம் ஆண்டுதோறும் வருமானம் வருகிறது என்ற உபரித் தகவலுடன் பாலு என்ன சொல்லியிருக்கிறார் என்பதையும் படியுங்கள்.

”இந்தியாவின் இரண்டாவது நீளமான கடற்கரையை ( 1076 கி.மீ. )கொண்ட தமிழகம் , பாக் வளைகுடாவில் நமக்கு ஏற்படும் சிக்கல்கள் இலங்கையால், ஆறுகளை மணல் எடுத்து குப்பைகள் போட்டு மிகவும் அருமையான் கடலை மாநகரக் கழிவுகள அணு உலை கழிவுகள், தொற்சாலைகள் கழிவுகள் என்று குப்பை தொட்டி போல் வைத்து இருந்தாலும் மற்றும் பல் வேறு சிக்கல்கள் இருந்தாலும் எல்லா வளமும் நிறைந்த தமிழக கடலில் ,கடற்கரையில் வாழும் மீனவர்களின் நிலைமை அவர்கள் கொண்டு வரும் மீன்கள் வெளிநாட்டு ஏற்றுமதிக்காக கேரளா கொண்டு செல்லப்பட்டு 590 கி.மீ. நீளமே கொண்ட கேரளா இன்று இந்தியாவின் மிக முக்கியமான மீன் வளத் துறையாக விளங்குகிறது காரணம் கடற்கரை காயல்கள் ,ஆறுகள் கடலை ஒட்டி உள்ள ஏரிகள் போன்றவற்றிக்கு அவர்கள கொடுக்கும் முன் உரிமையும் தமிழகத்தின் கடற்கரைகளில் வரும் மீன்களை கேரளா மீன் ஏற்றுமதியாளர்கள் வாங்கித் தந்து மதிப்பை கூட்டுவதும் கேரளா மக்களின் வணிக மேலாண்மையைக் காட்டுகிறது
 
கடலியல் தொன்மை மேலாண்மை தொடர்பாக தேடலில் இருக்கும் எனக்கு நமது கடலில் பிடிக்கும் மீன்களை நாமே வெளிநாட்டிற்கு மதிப்பு கூட்டி விற்க வேண்டும் ,கடல் சூழலியலுக்கு எந்த பாதிப்பும் கொடுக்காமல் அதன் மதிப்பை நம் மாநிலத்திற்கு கொண்டு வந்து நம் மீனவர்களின் வாழ்வியலை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் பல நாட்களாக உண்டு அதற்காக சில முயற்சிகள் எடுத்து வருகிறேன் கடலியல் உயிரினங்களை உலக வணிகத்திற்காக கொல்லக் கூடாது என்பது என் தனிப்பட்ட கருத்து , அந்த அந்த கடற்கரை மக்களின் உணவுத் தேவைக்காக மீன்கள் கொல்லபட்டால் கடற்கரை வளம் வற்றாது உலகமயமாக்கலின் கொடுமை புவியில் மனிதனுக்கு இருக்கக் கூடிய அத்தனை உரிமைகளைக் கொண்ட மீன்களும் மனிதனின் தேவைக்குத் தந்து உயிர்களை இழக்கின்றது”

பாலுவின் கருத்துகள் உயர்ந்த கருத்துகள். உலகமயமாக்கலின் கொடுமை எல்லாத் துறைகளிலும் ஊடுருவி நிற்பது அவர் கவலைகளை அதிகமாக்கி இருக்கிறது தெரிகிறது. கடல் சூழ் உலகம் இது. கடலிலிருந்துதான் உலகம் வந்தது. உலகத்தில் உள்ள அனைத்தும் கடலுக்குத்தான் சொந்தம். பஞ்ச பூதங்களும் கடலுக்குத்தான் சொந்தம். அப்படிப்பட்ட கடல் வளங்களைக் காக்க வேண்டாமா என்று கேட்கும் நண்பர் திரு கலிங்கா பாலுவை இந்த வாரத்து வல்லமையாளராக வல்லமைக்குழுவினர் தேர்ந்தெடுக்கின்றனர். பாலுவின் பணிகள் வாழ்க என்று வாழ்த்துகிறேன்.

கடைசி பாராவில் இடம் பெறுவது லாஸ் ஏஞ்செல்ஸ் ஸ்வாமிநாதன் அவர்களின் மூக்குப் பொடி ஸ்லோகம்தான்.
( ”மூக்குப்பொடிக்கும்  ஸ்லோகம் இருக்கு, தெரியுமா?)

” பஸ்ம ரூபிணி பரிமள கந்தினி  மனோரஞ்சினி  ஜலதோஷ நாசினி
  நித்ய சுககாரிணி நமஸ்தே நமஸ்தே நாசிகாசூரணி “

பதிவாசிரியரைப் பற்றி

3 thoughts on “இந்த வார வல்லமையாளர்

 1. இந்தவார வல்லமையாளர் பெருமதிப்பிற்குரிய திருவாளர் பாலு அவர்களைப் பாராட்டுவதில் நானும் பங்கு கொள்கிறேன்.
  அவர் தனது வெற்றி இலக்கை அடையும் நாட்கள் வெகு தூரத்தில் இல்லை என்பதை அவரது கட்டுரைகள் காண்பிக்கின்றன.
  கருத்துக்களை நகைச்சுவையாகச் சொல்வதில் தனக்கொரு பாணியை உருவாக்கியிருக்கும் திரு.நாராயண் சாமிநாதன் அவர்களும் பாராட்டப் பட்டதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

  ….. தேமொழி

 2. நண்பர் கலிங்கா பாலு, தன்னூக்கத்தோடும் தன்னம்பிக்கையோடும் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். அவர் வல்லமையாளர் விருது பெறுவதில் மகிழ்ச்சி. வாழ்த்துகள்.

  எளிதாக நகைச்சுவையை வெளிப்படுத்தும் லாஸ் ஏஞ்செல்ஸ் ஸ்வாமிநாதன் அவர்களுக்கும் வாழ்த்துகள்.

 3. இந்த வார வல்லமையாளர் திரு. கலிங்கா பாலு அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!!! 

  மூக்குப்பொடி ஸ்லோகத்தோடு ஹாஸ்ய கதை படைத்த திரு.நாராயண் ஸ்வாமிநாதன் அவர்களுக்கும் என் வாழ்த்துகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.