வார ராசி பலன்: பிப். (2013) 11 – 17 வரை:
காயத்ரி பாலசுப்பிரமணியன்
மேஷம் : வியாபாரிகள் கொடுக்கல், வாங்கல், காசோலை வழங்குதல், ஆகியவற்றில் முறையாக செயல்பட்டு உங்கள் கௌரவம் நிலைக்குமாறு செய்து கொள்ளுங்கள். இந்த வாரம் மாணவர்கள் செய்ய மறந்த வேலைகளுக்காக அபராதம் கட்ட நேரிடலாம். எனவே விழிப்புடன் இருப்பது நல்லது. பெண்கள் அற்ப காரணங்களுக்காக, பிறரிடம் சண்டை, வாக்கு வாதத்தில் இறங்க வேண்டாம். சாமர்த்தியமாக இருந்தால் கலைஞர்கள் வருவதை சிக்கெனப் பிடித்துக் கொண்டு, வரவை அதிகரித்துக் கொள்ளலாம். பணியில் இருக்கும் பெண்கள் தக்க சமயத்தில், உங்களின் சிரமங்களை, எடுத்துச் சொல்லி, தீர்வுகளை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
ரிஷபம் : உயர் அதிகாரிகளின் சினத்திற்கு ஆளாகாதவாறு பணிகளை உடனுக்குடன் முடித்து விடுங்கள். வியாபாரிகள் தோள் கொடுத்து பாடுபடும் பணியாளர்களின் தேவைகளை உடனுக்குடன் கவனிப்பது அவசியம். பெண்கள் தினசரி வேலைகளைத் தள்ளிப் போடாமல் செயல்பட்டால், பிள்ளைகளுடன் செலவிட நேரம் ஒதுக்கலாம். பொது வாழ்வில் உள்ளவர்கள் பொது நிகழ்ச்சி மற்றும் விழாக்களில் சர்ச்சைக்குரிய கருத்து பரிமாற்றங்களில் இருந்து ஒதுங்கி இருங்கள். மன நிம்மதி பறி போகாமல் இருக்கும். மாணவர்கள் , பேச்சைக் குறைத்து, தன்னுடைய செயலில் தீவிரம் காட்டி வந்தால், கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
மிதுனம் : மாணவர்கள் கவனம் மற்றும் கருத்துச் சிதறலின்றி பணிகளை மேற்கொள்ளுங்கள். அதிக மதிப்பெண்களை பெற்று மகிழலாம். இந்த வாரம் கலைஞர்கள் அநாவசிய செலவுகளுக்காக கடன்படும் நிலை வராதவாறு, விழிப்புடனிருப்பது அவசியம். பெண்கள் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கை கைக்கொண்டால், விரும்பிய வாழ்க்கை உங்கள் வசமாகும். தங்கள் திறமை மேல் நம்பிக்கை வைத்து செயலாற்றும், சுயதொழில் புரிபவர்களுக்கு புதிய வாய்ப்பும், புகழும் தேடி வரும். உங்கள் தொழிலுக்கு முன்னுரிமை தந்தாலும், குடும்பத்தை கவனிப்பதில் குறை ஏற்படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள். குடும்ப வாழ்க்கை அமைதியாகத் திகழும்.
கடகம் : பெண்கள் உங்களால் நிறைவேற்றக்கூடிய காரியங்களுக்கு மட்டும் வாக்குறுதி கொடுப்பது நல்லது. கைவினை கலைஞர்கள் சிரமங்களுக்கு நடுவே தங்கள் நற்பெயரைக் காப்பாற்றிக் கொள்வார்கள். பொது வாழ்வில் உள்ளவர்கள் சில எதிர்ப்புகளையும், எதிரிகளையும் சமாளிக்க பக்குவமாக நடந்து கொள்ளுதல் அவசியம். மாணவர்கள், நல்ல இதயங்களை புண்படுத்தாமல் இதமாக நடப்பது நன்மையைத் தரும். இந்த வாரம் வியாபாரிகள் கணக்கு வழக்குகளை அலசிப் பார்த்து நிறை குறைகளை உணர்ந்து செயலாற்றினால், அதிக லாபம் பெறலாம். கலைஞர்கள் பத்திரங்களில் பேரில் கடன் வாங்குவதை தள்ளிப் போடுவது நல்லது.
சிம்மம் : வியாபாரத்தில் கடுமையான போட்டி இருந்தாலும், புத்திசாலித்தனமாக செயல்படும் வியாபாரிகளுக்கு வெற்றி உறுதி. வயதானவர்கள் உடல்நலக்குறைவிற்கு, சொந்த வைத்தியம் மேற்கொள்ளாமல், தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்தல்,நல்லது. மாணவர்கள் அதிக நேரம் கண் விழித்து பணிகளை முடிக்க வேண்டியிருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள் விளைவுகளை யோசித்தபின் கடினமான செயலில் இறங்குவது அவசியம். பெண்கள் சுய பச்சாதாபத்திற்கு இடமளிக்காதீர்கள். உங்கள் திறமைகள் உங்களை வழி நடத்தும்.பணியில் இருப்பவர்கள் குறுக்கு வழிகளைக் கையாளாமலிருந்தால், உங்கள் கௌரவம் பாதிப்படையாமல் இருக்கும்.
கன்னி : பணியிடத்தில், கருத்து வேறுபாடும், தேவையற்ற மோதல்களும் தோன்றும் வாய்ப்பிருப்பதால், இயன்றவரை அமைதியாய் இருந்தால், அல்லல்கள் அருகே வராது. பெண்கள் வேலையாட்களை நம்பாமல், அத்தியாவசியமான வேலைகளை நீங்களே செய்து விடுவது நல்லது. வியாபாரிகள் முதலீடுகளில் அகலக் கால் வைப்பதைத் தவிர்த்து விடுவதோடு புதிய பணியாளர்களை அமர்த்துவதில் விழிப்புடன் இருப்பது அவசியம். மாணவர்கள் ஆசிரியர்களின் வழிகாட்டுதல் படி நடந்தால், யாவும் சிறப்பாக நடக்கும். இந்த வாரம் கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்களை பெறவும், அதனைத் தக்கவைத்துக் கொள்ளவும், தீவிரமாக உழைப்பார்கள்.
துலாம் : கூட்டுத் தொழிலில் உள்ளவர்கள் பங்குதாரர்கள் தரும் நல்ல ஆலோசனைகளை ஏற்றுக் கொண்டால், நஷ்டங்களைக் குறைத்துக் கொள்ளலாம். சுயதொழில் புரிபவர்கள் புதிய முயற்சிகளில் தைரியத்தோடு துணிந்து நின்றால், பாதி வெற்றி கிடைத்துவிடும். மீதி வெற்றியை உங்கள் உழைப்பு நல்கும். கலைஞர்களுக்கு செலவுகள் சிலசமயம் கை மீறி செல்லும் வாய்ப்பிருப்பதால், எதிலும் கவனமாக இருப்பது அவசியம். இந்த வாரம் பொது வாழ்வில் இருப்பவர்களுக்கு, உதவி செய்தவர்களே சில சமயம் உபத்திரவங்களைத் தருவார்கள். மாணவர்கள் ரசாயனம் தொடர்பான செய்முறைகளில், எச்சரிக்கையாய் இருந்தால், சிறு காயங்களைத் தவிர்க்க முடியும்.
விருச்சிகம் : தலைசுற்றல், மயக்கம் ஆகியவை வாராதவாறு முதியவர்கள் உணவில் கட் டுப் படாய் இருப்பது நல்லது. உங்களுக்கு கிடைக்க வேண்டிய நல்லதை சிலர் தடுக்க முயல்வார்கள். எனவே மாணவர்கள் கண்ணும் கருத்துமாக செயல்பட வேண்டும். வியாபாரிகள் பணம் சம்பந்தமான விஷயங்களை உங்களின் நேரடிப் பார்வையில் வைத்துக் கொள்ளுங்கள்.பல தொல்லைகளைக் கட்டுக்குள் வைக்கலாம். இந்த வாரம் நண்பர்கள் வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நம்பிக்கையின் அடிப்படையில் தான் நல்ல உறவு மலரும் என்பதைப் புரிந்து கொள்ளும் பெண்கள் ஈடுபடும் காரியங்களுக்கு உறவுகளும் துணையாய் நிற்கும்.
தனுசு : பெண்கள் செலவுக் கடிவாளத்தை சற்று இறுக்கினால், பணமுடை ஏற்படாது. வியாபாரிகள் சரக்கு போக்குவரத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்தால், வீண் விரையத்தைத் தவிர்க்கலாம். புதிய இடங்களில் மாணவர்கள் காட்டும் சொல்சிக்கனம் பிரச்சனைகளை பெரிதாகாமல் தடுக்கும்.சுயதொழில் புரிபவர்கள் சுணக்கமின்றி, தீவிர முயற்சி செய்தால், நல்ல முன்னேற்றம் காணலாம். கலைஞர்கள் எல்லாம் தெரியும் என்கிற மனப்பான்மை உங்களின் முன்னேற்றத்திற்குத் தடையாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இந்த வாரம் பணியில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் கூடுவதால் மன அழுத்தமும் சற்றே அதிகமாகும்.
மகரம் : கலைஞர்கள் ஒப்பனைப் பொருட்களின் மூலம் ஒவ்வாமை ஏற்படாதவாறு, தரமான பொருட்களை பயன்படுத்துதல் நல்லது. பெண்கள் அக்கம்பக்கத்தாருக்கு ஆலோசனை வழங்குமுன், ஒரு முறைக்கு இரு முறை யோசிப்பது அவசியம். ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளாவர்கள் முறையான சிகிச்சையோடு எளிய பயிற்சிகளையும் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல ஆரோக்கியம் பெறலாம். மாணவர்கள் நண்பர்களிடம் குதர்க்கமான பேச்சைத் தவிர்த்தால், மனக் கசப்பும், நட்பில் விரிசலும் ஏற்படாது.மனக் குழப்பம் உங்களின் திறமையை பாதிக்காதவாறு திடமாகச் செயல்படுங்கள். பல வெற்றிகளைப் பெறலாம்.
கும்பம் : இந்த வாரம் நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு நல்ல பலனிருக்கும். பெற்றோர்கள் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக் கொண்டால், அவர்களின் ஆரோக்கியம் பற்றிய கவலைப்பட வேண்டாம். புத்தி வேண்டாத விஷயங்களில் ஈடு படுவதைத் தடுக்க, மாணவர்கள் தியானம் மூச்சுப் பயிற்சி ஆகிவற்றில் ஈடுபாடு காட்டுவது அவசியம். கலைஞர்கள் போட்டிகளில் ஜெயிக்கும் வாய்ப்பு பல கிட்டும். பெண்கள் உறவினரிடம் சண்டை சச்சரவின்றி பழகி வந்தால், இல்லத்தில் அமைதி நிலவும். வேலை செய்யும் இடங்களில் எரிச்சலூட்டும் சம்பவங்கள் நடக்கலாம். எனவே வேலையில் மட்டும் உங்கள் கவனத்தை செலுத்தி வாருங்கள்.
மீனம் : சரளமான பணவரவு பெண்கள் மனத்தில் மகிழ்ச்சியையும், உதட்டில் புன்னகையையும் பூக்கச் செய்யும். பிறர் உங்களை தூண்டிவிட்டாலும், நேர்மையான வழியிலேயே செல்லும் வியாபாரிகளுக்கு நற்பெயர் என்றும் நிலைத்திருக்கும். முதியவர்கள் ஆரோக்கிய நலிவுக்குரிய மருந்துகளை முறையாக உட்கொண்டால், மருத்துவச் செலவுகளை கட்டுக்குள் வைத்து விடலாம். மாணவர்கள் வாகனம் ஓட்டுகையில், உரிய விதிகளை கடைப்பிடிப்பது அவசியம். இந்த வாரம் கலைஞர்களுக்கு வாகனங்கள் திடீர் செலவு வைக்கும். மனை வாங்குகையில் நம்பிக்கையான நபர்களை அணுகுங்கள். நல்ல தேர்வாக அமையும்.