தேவன் ஒரு சகாப்தம்

திவாகர்

தேவன் எனும் மகாதேவன் எனும் அரிய பெரிய எழுத்தாளரைப் பற்றி நம் காலத்துப் பெரியவர்கள் அனைவருமே நன்றாகவே அறிந்திருந்தாலும், இந்தக் கால இளைஞர்களுக்கும் வருங்காலத்துக்கும் நம்மால் இயன்ற அளவு அவர் பெருமை சொல்லலாமே என்றுதான் இக்கட்டுரைத் தொடரைத் தொடங்க முன்வந்துள்ளேன்.

இந்த வருடம் தேவனின் நூற்றாண்டு வருடம்.. ஆம்.. சென்ற 1913 ஆம் ஆண்டில் செப்டம்பர் மாதம் 8ஆந்தேதிதான் தமிழுலகத்தின் இந்தச செல்லக் குழந்தை திருவிடைமருதூரில் அவதரித்தது. தான் பிறந்த இந்தத் திருவிடைமருதூரை முடிந்த போதெல்லாம் தம் கதைகளில் கொண்டுவந்து விடுவார். பிறந்த ஊரின் மீது அத்தனை பற்று வைத்திருக்கும் தேவனைப் பற்றி எழுதும்போது தேவன் படைப்புகளைக் கொண்டுதான் இக்கட்டுரை அமைய வேண்டுமென்பது என் விருப்பமாதலால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை, அவர் குடும்பம் போன்றவைகளைப் பற்றியோ, அவர் எப்படியெல்லாம் வாழ்ந்தார் என்பதைப் பற்றியோ இங்கு எழுதப்போவதில்லை என்பதை முன்னமேயே சொல்லி விடுகிறேன்.

தேவனைப் பற்றி எழுத எனக்குக் காரணம் இருக்கிறது. நான் பிறந்தவுடன் அவர் மறைந்தார் என்ற ஒரு காரணத்தை நகைச்சுவைக்காகச் சொன்னாலும், என் எழுத்துக்கு ஆத்திச்சூடி அவர் படைப்புகளிடமிருந்துதான் பெற்றேன் என்பதை மட்டும் மிகப் பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன். ஒரு கதை எப்படி எழுதப்படவேண்டுமென்பதோடு வாசகன் பார்வையில் அது எப்படிப் படவேண்டுமென்பதிலும் தேவன் மிகக் கவனமாகக் கையாண்டிருக்கிறார். 1930 களின் ஆரம்பத்திலிருந்து 1957 வரை (ஏறத்தாழ இருபத்தைந்து வருடங்கள்) எழுதிக்கொண்டே இருந்த அந்த கை அவ்வப்போது ஏற்பட்டுக் கொண்டிருக்கும் அந்த இடைக்கால மாற்றங்களையும் தனக்குத் தோதாக எடுத்துக் கொண்ட விதமும், அவைகளை தம் எழுத்தில் பிரதிபலித்த விதமும் மிகவும் பாராட்டத் தக்கது என்றே சொல்லவேண்டும். இந்த காலகட்டத்தின் ஆரம்பத்தில்தான் இந்திய சுதந்திரப் போராட்டம் மிகத் தீவிரப்பட்டது. இந்த காலகட்டத்தின் மத்தியில்தான் உலகத்தின் மிகக் கொடிய அழிவுக்குக் காரணமான மோசமான உலகப்போர் நிகழ்த்தப்பட்டது. இந்த காலகட்டத்தில்தான் இந்தியா சுதந்திரமும் அடைந்து தன் மக்களின் பிரதிநிதிகளினால் தன் சுய ஆட்சியையும் ஆளப்பெறத் தொடங்கியதும்கூட.. இந்த காலகட்டத்தில்தான் அரசியலில் அவ்வளவாக மாசு படியாத சூழ்நிலை இருந்தாலும் சமூகம் மிகவும் மாசுபடிந்து முன்னேறமுடியாத நிலையில் அல்லலுற்று ஏழ்மை நிலையில் நோய்கள் மலிந்து கிடந்து, தேசத்தின் நாலா பகுதிகளும் ஒரு சோம்பலுற்ற நிலையில்தான் இருந்தது என்பதையும் மறக்கக் கூடாதுதான். பாரத மொழிகள் கூட முன்னேறமுடியாத, செழுமை அடைய முடியாத நிலையில் இருந்த காலகட்டம்கூட இதுதான். அதுவும் நம் மனதுக்கினிய தேனினும் இனிய தமிழ் மொழியைக் கட்டிக்காத்து வளர்த்து வந்தவர்கள் ஆதீனங்களைச் சேர்ந்த மடாதிபதிகளும், நன்னெஞ்சம் கொண்ட ஒரு சில செல்வந்தர்களே என்பதும் நாம் மறக்கக் கூடாது. தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதைய்யரும், மகாகவி பாரதியும் வீறு கொண்டு எழுந்து தமிழால் நாம் பெருமை பெறுகிறோம் என்று பல்வேறு காரணங்களை எடுத்துச் சொன்னதால் ஏனைய மொழிகளை விட தமிழ் இந்த அகண்ட பாரத தேசத்திலே பெருமையோடு இருந்தது என்று வேண்டுமானால் ஓரளவு சொல்லிக் கொள்ளலாம். அவ்வளவுதான்.. ஏனெனில் படித்த பெருமக்களிடையே ஆங்கில மோகம் தலைவிரித்தாடிய காலம். ஆங்கில எழுத்துக்கள், ஆங்கில நாவல்கள், ஆங்கிலக் கவிதைகள், ஆங்கில நாடகங்கள் (ஷேக்ஸ்பியரின் நாடகங்களை அறிந்தவன் மட்டுமே அதிபுத்திசாலி) ஆங்கிலத் திரைப்படங்கள் எல்லாமே தமிழோடும் மற்ற மொழிகளோடும்  ஒப்பு நோக்குகையில் தரத்தில் எங்கோ உச்சாணிக்கொம்பில் இருந்ததாகப் பட்டதால் படித்தவர்கள், படிக்கவிரும்பும் மாணவர்கள் எல்லோருமே தமிழுக்கு முக்கியத்துவம் தரவில்லை என்பதையும் நாம் ஒப்பு நோக்கவேண்டும். தமிழுக்கு என்றல்ல எந்த மொழியின் நிலையும் அப்படித்தான் இருந்தது.

சரி, இந்த சரித்திரம் இப்போது எதற்கு எனக் கேட்டால், தேவன் கதைகளையும் கட்டுரைகளையும் வரிசைக் கிரமமாகப் படித்துக் கொண்டே வந்தால் இத்தனை சரித்திரங்களையும் ஆங்காங்கே நமக்கு அவரின் படைப்புகள் மூலம் விளக்கி வந்திருப்பதைக் காணலாம். ஆரம்பகால படைப்புகளில் அரசியல் நிகழ்வுகள் அதிகம் கலந்திருந்தாலும் போகப் போக சமூக நல்லமைப்பிலே நாட்டம் கொண்டு அந்த சமூகத்துக்குத் தம் எழுத்துகள் மூலம் நல்லவை செய்யவேண்டுமென்கிற தூய எண்ணத்தை அவரது தொடர்கதைகளாகட்டும், கட்டுரைகளாகட்டும் தெள்ளிய குளத்து நீரில் தெரியும் தரைமண் போல தெள்ளத் தெளிவாகத் தெரிவிக்கும். இப்படி நிகழ்கால சரித்திர நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கதை மூலமாகவோ கட்டுரை மூலமாகவோ எப்படியாவது பாங்காக நுழைத்துத் தெரிவிப்பது என்பது தேவனுக்கு கை வந்த கலை. ஆங்கில மோகத்தால் ஆங்கிலப் புத்தகங்கள் புதினங்கள் என்று பேசிக்கொண்டிருந்தவர்களை, படித்துக் கொண்டிருந்தவர்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தமிழின் பக்கம் தள்ளிக்கொண்டு வந்த பெருமை தேவனுக்கும் தேவனின் எழுத்துக்கும் நிச்சயமாக உண்டு.

தேவன் ஆனந்த விகடனுக்கு உதவி ஆசிரியராக வந்து சேர்ந்தது கல்கியால்தான் என்றாலும் ‘மாஸ்டர் ராஜாமணி’ தான் கல்கிக்கு தேவனை அறிமுகப்படுத்திய ’உயர்ந்த’ மனிதன். இந்த மாஸ்டர் ராஜாமணி சின்னப் பையன், வால் பையன், தேவனின் கட்டுரையின் ஒரு பாத்திரம்.. ஆனால் இந்த வால் பையனின் லூட்டியும், திறமையும்தான் கல்கியைக் கட்டிப் போட்டதோடு மட்டுமல்லாமல், அப்போது ஒரு நாள் எதேச்சையாகவும் சாதாரணமாகவும் ஆனந்தவிகடன் அலுவலகத்தில் ‘இந்த கல்கி என்பவர் எப்படி இருப்பாரோ என்று (வேவு) பார்க்க வந்த தேவனை இசகு பிசகாக ஒரு கேள்வி கேட்க வைத்தது.. ’அது சரி, இந்தக் கட்டுரையை நீதான் எழுதினாயோ’ என கல்கி கேட்க இவருக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வர, கல்கி தனக்கே உரிய பாணியில் சமாதானப்படுத்தி தேவனை விகடனிலேயே உதவி ஆசிரியராக நியமிக்க, அந்த 1930 ஆம் வருடங்கள் ஆனந்த விகடனுக்கே வசந்த காலமாகவும் பொற்காலமாகவும் ஆரம்பித்தன என்றே சொல்லலாம். கல்கியின் உயர்ந்த குணங்களில் ஒன்று எங்கே நல்லது தெரிந்தாலும் மனமாறப் பாராட்டுவதும், தன் சக எழுத்தாளர்களையும் கை தூக்கி விடுவதும். அந்த உயர்ந்த குணம் கொண்ட கல்கியின் வலது கரமாகவே ஆகிப்போனவர்தான் தேவன் (கல்கி ஆனந்தவிகடனில் இருக்கும் வரை).

தொ.மு.பாஸ்கரத் தொண்டைமான் ஒரு கட்டுரையில் தேவன் உதவி ஆசிரியராய்ச் சேர்ந்த வரலாற்றை இப்படி விவரிக்கிறார்.

“ அவர் முதல் முதல் எழுதிய மாஸ்டர் ராஜாமணியை, ஆம், அந்தக் குஞ்சுப் பயல் ராஜாமணியை அழைத்துக் கொண்டு, தான் வேலை பார்க்கும் துரைமகனிடம் சென்ற அவனது மாமா, அங்கு அந்த ராஜாமணி குறும்பாகப் பேசிய மழலை மொழிகளை எல்லாம், தமிழே அறியாத துரையிடம் மொழி பெயர்க்கும் விதத்தைப் படித்துப் படித்து இருபத்தைந்து வருஷங்களுக்கு முன், நான் சிரித்ததை எல்லாம், சொன்னபோது அவர் சொன்னார். “ஆம், அந்த மாஸ்டர் ராஜாமணி தான், சார், எனக்கு ஆனந்த விகடனில் வேலை தேடிக் கொடுத்தான். அவன் தான் என்னை ஆசிரியர் ‘கல்கி’யிடமும் திரு வாசனிடமும் அறிமுகம் செய்து வைத்தான்” என்றார். மேலும் சொன்னார். “அந்தக் கட்டுரையைப் படித்த ‘கல்கி’க்கு ஒரு சந்தேகம். அது என் சொந்தச் சரக்குத் தானா என்று. ஆதலால் அதைத் தொடர்ந்து ஒரு கட்டுரையை, அங்கே அவர் பக்கத்தில் கிடந்த மேஜை அருகிலேயே உட்கார்ந்து அப்பொழுதே எழுதும்படிச் சொன்னார். எழுதிக் கொடுத்தேன். அதன் பிறகே என்னை ஒரு உதவி ஆசிரியனாக அமர்த்தினார் “ என்றார். (நன்றி: திரு பசுபதி – தேவன் நினைவுகள்-2 (http://s-pasupathy.blogspot.ca/2010/08/2_30.html)

சரி, நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன், தேவனின் வாழ்க்கை வரலாற்றுக்கு நான் போகப்போவதில்லை.. ஆனாலும் இதோ நம் தேவன் ஆனந்த விகடனில் எழுத்துப் பணியைத் தொடங்க ஆரம்பித்தாயிற்று. ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்கிற இராமபிரானைப் போல அந்த ஒரே ஆனந்தவிகடனில் தான் சாகும் வரை இருந்து கொண்டு அவர் படைத்த படைப்புகளின் மூலமே அவரைப் பார்க்க ஆரம்பிக்கலாமா?

(தொடர்வோம்)

பதிவாசிரியரைப் பற்றி

8 thoughts on “தேவன் ஒரு சகாப்தம்

 1.  இதோ நம் தேவன் ஆனந்த விகடனில் எழுத்துப் பணியைத் தொடங்க ஆரம்பித்தாயிற்று. ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்கிற இராமபிரானைப் போல அந்த ஒரே ஆனந்தவிகடனில் தான் சாகும் வரை இருந்து கொண்டு அவர் படைத்த படைப்புகளின் மூலமே அவரைப் பார்க்க ஆரம்பிக்கலாமா?//

  ஆஹா! ஆரம்பமே அருமையா இருக்கு. (சுவாரஸ்யமான )சூப்பர் பதிவு தொடருங்கள் மிக ஆவலுடன்…

 2. மிக அருமையான  துவக்கம் திரு திவாகர்,

  மகத்தான   உங்களின் படைப்புகள்  நோக்கி ஆவலுடன் காத்திருக்கிரோம்.

 3. அன்பின் திவாகர்,
  அருமையான தொடர். உமக்கு கிடைக்காத இரண்டு வாய்ப்பு எனக்குக் கிடைத்தன. 

  ஒகடி: தேவன் எழுதியதை சுடச்சுட படிக்கக்கிடைத்த வாய்ப்பு. ஆனந்த விகடன் வந்தவுடன் வீட்டில் கலாட்டாவே நடக்கும், தேவன் படைப்பைப் படிக்க.

  இரண்டு: உமக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை. நான் தான் ராஜாமணி, என் அப்பா கூப்பிட்ட வகையில். இது நடந்தது எப்படி தேவனின் மூக்கில் மணந்தது எப்படி என்று நான் அறியேன். ‘காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சு’ என்றதின் படி, என் அப்பா என்னை அவருடைய வெள்ளைக்கார துரையிடம் அழைத்துச் சென்றாராம். நான் துரையிடம் கேட்ட கேள்வியை அவரிடம் மொழி பெயர்ப்பதற்க்குள் அப்பாவுக்கு வியர்த்து விட்டதாம். நான் கேட்ட கேள்வி, ” தொரை! உன் காதிலே ஏன் இத்தனை மயிர்?”
  அன்புடன்,
  இன்னம்பூரான்
  08 02 2013

 4. அருமையான துவக்கம், ஐயா. 
  தேவன் அவர்களின் படைப்புலகை உங்கள் எழுத்தின் மீதேறி உலா வர மிகுந்த ஆவலாக உள்ளேன்.
  மிக்க நன்றி! 

 5. ஆஹா, ஆரம்பியுங்கள், ஆரம்பியுங்கள். இப்போக் கூடக் கொஞ்ச நாட்களாக தேவனின் கதைகளைத் தான் (லக்ஷத்துப் பத்தாவது முறை) படித்துக் கொண்டு இருக்கிறேன். சி.ஐ.டி.சந்துருவை.  அப்புறமாவும் ஒரு உலா வரணும், ஸ்ரீமான் சுதர்சனம், ஜஸ்டிஸ் ஜகந்நாதன், கல்யாணி, ஜானகி, கோமதியின் காதலன், மிஸ்டர் வேதாந்தம் என்று ஒரு பெரிய லிஸ்டே இருக்கு.

 6. தேவனைப் பற்றி அறிய எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. தொடரட்டும் திவாகர், வாழ்த்துக்கள்.

 7. திரு. தேவன் அவர்களைப் பற்றி அதிகம் அறிந்ததில்லை. உங்கள் தொடர் மூலம் அறிய ஆவலாய் உள்ளேன்.

  -மேகலா

Leave a Reply

Your email address will not be published.