எழுத்தாளர் மலர் மன்னன் இறைவனடி சேர்ந்தார்

5

அண்ணாகண்ணன்

எழுத்தாளரும் மூத்த பத்திரிகையாளருமான மலர் மன்னன் அவர்கள், பிப்ரவரி 9 அன்று அதிகாலை 5 மணி அளவில் இறைவனடி சேர்ந்தார். இறுதிக் காலத்தில் அவருடன் இருந்து கவனித்து வந்த, எழுத்தாளர் தி.ஜ.ர. அவர்களின் பெயர்த்தி சத்தியபாமா, இதனைத் தொலைபேசியில் தெரிவித்தார். தன் மறைவுச் செய்தியை இறுதியாகச் சிலருக்குத் தெரிவிக்க வேண்டும் என அவர் குறித்து வைத்திருந்த தொலைபேசி எண்களில் என் எண்ணும் இருந்தது.

2003 முதலாக, அவர் தாடி வைப்பதற்கும் முன்பாகவே மலர் மன்னனுடன் எனக்கு நட்பு உண்டு. நான் அமுதசுரபி பொறுப்பாசிரியராக இருந்தபோது, அந்த இதழின் பதிப்பாளர் ஏ.வி.எஸ். ராஜா, மலர் மன்னனை எனக்கு அறிமுகம் செய்து வைத்தார். அதன் பிறகு மலர் மன்னன், நான் தயாரித்த பதிப்பகச் சிறப்பிதழில் உ.வே.சா. தொடர்பாக ஒரு கட்டுரை எழுதினார். அவரின் ‘மலர்மன்னன் கதைகள்‘ என்ற சிறுகதைத் தொகுப்பினை அமுதசுரபி வெளியிட, அதற்கு நான் பதிப்பாசிரியராகப் பணிபுரிந்தேன். அது, அவரின் முதல் சிறுகதைத் தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. (அவருக்கு முன்னதாகவே அவரின் சகோதரர் சாம்ராட் என்ற பெயரில் எழுதும் அசோகனை நான் அறிவேன். என் வேண்டுகோளுக்கு இணங்க, அவர் அநேக முறைகள், அமுதசுரபிக்காக எழுதியிருக்கிறார். மலர்மன்னனின் சகோதரி விஜயா சங்கரநாராயணனையும் நான் நன்கு அறிவேன். அரவிந்த அன்னை பற்றி அமுதசுரபியில் தொடர்ந்து எழுதி வந்தார்.)

மலர் மன்னன், 26.5.2006 அன்று நட்பு நிமித்தம் என்னை டைடல் பூங்காவில் சந்தித்தார். பல தலைப்புகளில் சுவையான செய்திகளைப் பகிர்ந்துகொண்ட மலர் மன்னனைத் தமிழ் சிஃபியில் தொடர்ந்து எழுத அழைத்தேன். பல்வேறு சமூகப் பணிகளிலும் ஈடுபட்டுள்ள மலர் மன்னனை அவரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுமாறும் கேட்டுக்கொண்டேன். இசைந்தார். அதன் பிறகு அவர், பா.ஜ.க. தேசிய துணைத் தலைவர் இல.கணேசன் அவர்களை அறிமுகப்படுத்தியதோடு, அவரை அரட்டை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக டைடல் பூங்காவிற்கும் அழைத்து வந்தார். தமிழ் சிஃபியில் தமது பத்தியைத் தொடங்கினார். ஏராளமான கட்டுரைகள் மூலமாக, தமிழ் வாசகர்களுக்குப் புதிய வெளிச்சம் பாய்ச்சினார். வரலாறு, சம கால அரசியல், பண்பாட்டுத் தாக்கங்கள், உலக நிகழ்வுகள்… என ஒவ்வொரு கட்டுரையிலும் அழுத்தமான முத்திரை பதித்தார்.

மலர் மன்னனின் இயற்பெயர், சிவராம கிருஷ்ண அரவிந்தன். இவர், 1/4 (கால்) என்ற காலாண்டிதழை நடத்தியவர். ‘மலையிலிருந்து வந்தவன்‘ என்ற நாவல் மூலம் பலரின் கவனத்தையும் ஈர்த்தவர். இது, கி.பி.1800இன் இறுதிக் கட்டத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகத் தன் மக்களைத் திரட்டிப் போராட்டம் நடத்திச் சிறையிலேயே உயிர் துறந்த டார்ஸா முண்டா என்ற வனவாசியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது; நா.பார்த்தசாரதியின் தீபம் இதழில் தொடராக வெளிவந்தது; ‘கண் விழித்த கானகம்‘ என்ற தலைப்பில் அவரது சொந்தப் பதிப்பகத்தின் வாயிலாக மறுபதிப்பானது.

‘சிந்தனையாளர் நியெட்ஸே‘ என்ற நூலைப் பிரேமா பிரசுரம் வெளியிட்டுள்ளது. ‘தி.மு.க. உருவானது ஏன்?’, ‘ஆரிய சமாஜம்’, ‘திராவிட இயக்கம் புனைவும் உண்மையும்’ ஆகிய வரலாற்று நூல்களைக் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. ‘வந்தே மாதரம் – எதிர்ப்பில் வளர்ந்த எழுச்சி கீதம்’ என்ற நூலைத் திரிசக்தி பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அடுத்து, கிலாபத் இயக்கம் தொடர்பான நூலை எழுதி வருவதாக மின்னஞ்சல் அனுப்பியிருந்தார்.

மலர் மன்னன், அறிஞர் அண்ணாவுடன் நெருங்கிப் பழகியவர். திராவிட அரசியலின் நேரடி சாட்சிகளுள் ஒருவர். அதே நேரம், இந்துத்துவ நிலைப்பாடு கொண்டவர். திண்ணை உள்பட பல தளங்களிலும் மலர் மன்னன் எழுதிய கட்டுரைகள், பெரும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் தோற்றுவித்துள்ளன. மின்னிதழ்கள் மட்டுமின்றி, அச்சிதழ்கள் பலவற்றிலும் தொடர்ந்து பங்களித்து வந்தார்.

மலர் மன்னனின் மறைவு, தமிழ் இலக்கியத்திற்கும் சமூகத்திற்கும் பேரிழப்பு. அவரது மறைவுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்கள், அவரது ஆன்மா சாந்தியடைய, எங்கள் பிரார்த்தனைகள்.

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “எழுத்தாளர் மலர் மன்னன் இறைவனடி சேர்ந்தார்

  1. அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனிடம் வேண்டுகிறேன். மனோகரன்

  2. மலர்மன்னன் திண்ணை வலையிதழ் மூலம் எனக்குச் சில ஆண்டுகள் பழக்கமானவர். என்னுடைய விஞ்ஞானக் கட்டுரைகளுக்கு வரவேற்பும் பெரிது ஊக்கமும் அளித்தவர். அவை நூல் வடிவில் வெளிவர வேண்டும் என்று பதிவு செய்ய எனக்கு முன்னுதவ வந்தவர். அவர் திண்ணையில் பிப்ரவரி 4 ஆம் தேதி எழுதிய இறுதிப் பின்னோட்டம் எனது சமீபத்திய கட்டுரை “மகாத்மா காந்தியின் மரணம்” பற்றியது. [http://puthu.thinnai.com/?p=18201#comment-13424]. மலர்மன்னன் தமிழர் இருபதாம் நூற்றாண்டு வரலாற்றை வலை /நூல் இதழ்களில் ஓரளவு எழுதியவர். திண்ணை, தமிழ் ஹிந்து வலைகளில் நாங்கள் இருவரும் அரசியல்/கடவுள் பற்றித் தர்க்கம் பல செய்துள்ளோம். அவரது அகால மரணம் தமிழ் இலக்கிய உலகுக்கு ஈடு செய்ய முடியா பெரிய இழப்பு. சி. ஜெயபாரதன்.

  3. அமாவசை அன்று மறைந்தது நிலவு மட்டுமல்ல.

  4. அவரின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்திப்போம்.

  5. அற்றைத் திங்கள் அன்றைய திண்ணையில் இறுதி

    அஞ்சலி செய்தார் நமது விடுதலைப் பிதாவுக்கு ! இற்றைத் திங்கள் இவ்வாரத் திண்ணையில் மன்னர்க்கு இரங்கல் பாக்கள் ! அந்த மலரும் இல்லையே !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.