தேவன் நூறு (தேவன் ஒரு சகாப்தம்) – (2)

2

.
திவாகர்

தேவன் ஒரு சகாப்தம் – பகுதி 1

சென்னை மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபம் அருகில் உள்ள முருகன் லெண்டிங் லைப்ரரியை எத்தனை பேருக்குத் தெரியும் என்பது தெரியாது. ஆனால் எனக்கு ஆதியில் மிகச் சிறந்த தோழர்களை (புத்தகங்களைத்தான் சொல்கிறேன்)  அறிமுகப்படுத்திய இடம் அதுதான். இர்விங் வாலஸ் இலிருந்து இதிகாசப் புத்தகங்கள் வரை வெறியாகப் படித்த நாட்கள் அவை. பள்ளி நாட்களிலிருந்து கிடைத்த அந்தக் கடைக்காரரின் நெருங்கிய சிநேகம் கைகொடுத்தது. அங்கேதான் நான் தேவன் கதைகள் மீது காதல் கொண்டேன். என் காதலுக்கு உரம் போட்டு வளர்ப்பது போல் தேவனின் பரம ரசிகரான அந்தக் கடைக்கார நண்பரும் அதிக நேரம் என்னோடு அவர் புதினங்கள் பற்றியும் கட்டுரைகள் பற்றியும் பேசுவதிலேயே செலவிடுவார். இதனால் மேலும் இரண்டு சௌகரியங்கள் எனக்கு ஏற்பட்டன. அப்போதெல்லாம் ‘பைண்ட்’ செய்யப்பட்ட ஒரிஜினல் தேவன் தொடர்கதைப் புத்தகங்கள் எல்லாமே என் பார்வையில் தினம் பட்டுக்கொண்டே இருக்கும். வீட்டுக்கும் ‘இலவசமாகவே’ எத்தனை நாளைக்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்ல அனுமதியும் உண்டு. (மற்றவர்களுக்கு எக்ஸ்ட்ரா லெண்டிங் ஸ்ட்ரிக்ட் ’நோ’ அத்துடன் ஃபைன் வேறு கட்டவேண்டும், அத்தோடு டி.வி.க்கள் இல்லாத காலம் என்பதையும் புத்தகங்கள் அதிகம் படிக்கமுடிந்த காலம் என்பதையும் கணக்கில் கொள்க)).

தேவன் கதைகளில் மிகப் பெரிய விசேஷம் என்பதே எந்த விஷயத்தையும் மிக எளிதாக விளங்கும்படியாகவும் நகைச்சுவையாகவும் வாசகர் முன் எடுத்து வைப்பதுதான். எளிய நகைச்சுவை என்பது அவர் எழுத்தின் மூலாதாரமோ என்று வியக்க வைக்கும். அட்டகாசமாக ஆஹா ஓஹோ என்று சிரித்து விட்டு அடுத்தகணமே மறக்கடிக்கவைக்கும் நகைச்சுவைகள் அவர் எழுத்தில் கிடையாது. அன்றாட வாழ்க்கையில் ஏற்படும் சாதாரண விஷயங்களே நகைச்சுவையாக எடுத்தாளப்படும்போது அதன் முக்கியத்துவம் தெரியும் வகையில் எழுதுவார். எதையும், எவரையும் ஆழ்ந்து நோக்கும் பார்வை அவருடையதாக இருந்திருக்கவேண்டும் என்றுதான் நினைக்கிறேன். அந்தப் பார்வையில் பட்டவை எல்லாம் சர்வ சாதாரணமாக எழுத்தில் பிரதிபலிக்கும். சாதாரண மனிதர்கள் பார்வையில்தான் சாதாரண மனிதர்களின் கவனம்தான் அவருக்கு முக்கியம். அதிலும் அந்தக் காலத்து மத்தியதரவர்க்கத்தாரின் நாடியைப் பிடித்துப் பார்த்து எழுதும் கலையைக் கற்றவர்.  அவர் எழுதும் தமிழ் சாதாரணமாக பேசும் தமிழ் போல இருந்தாலும் நல்ல தமிழைத்தான் பயன்படுத்துவார். பின்னாட்களில் அளவுக்கு அதிகமாக தமிழ்ச் சொற்களில் ஆங்கில எழுத்துகளைக் கலந்து கொடுத்தவர் சுஜாதா அவர்கள் என்ற பெயர் உண்டு என்றாலும் அதன் மூலகர்த்தா தேவன் அவர்கள்தான். ஆங்கிலம் மட்டுமல்ல வடமொழியும் சர்வ சாதாரணமாக எழுத்தில் காணப்படும். ஆனாலும் யாருக்குமே, ஏன், ஒரு தனித்தமிழ் ஆர்வலருக்குமே கூட இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு வராத அளவில் அந்தக் கலவை இருக்கும். அதே போல கம்பன் கவிதைகளில் உவமைகள் ஏராளமாக இருக்கும். தேவன் எழுத்துக்களில் கூட உவமைகள் ஏராளமாக உண்டு. இவர் போல கதை கட்டுரைகளில் உவமைகள் இப்படி அள்ளித்தெளித்தவர் யாரேனும் உண்டா என்று தேட வேண்டும் கூட.

உவமைகள் எதற்காக எழுதப்படுகின்றது என்றால் சொல்லப்படும் கருத்தின் வீரியத்தை மிக அதிக அளவில் வலுப்படுத்தும் என்பதற்காகவே உவமைகள் உருவாயின. பெண்ணின் முகத்தை பூரண நிலவொளிக்கு உவமையாக்குகிறோம். அவள் கண்களை ஒளிரும் நட்சத்திரங்களுக்கு ஒப்பு நோக்கிப் பேசுகிறோம். அவள் நாசியை கூர்மையான வெள்ளைப்பறவைக்கு ஈடு காட்டுகிறோம். பட்டு’ போன்ற கன்னங்கள் எனும் போதே அதன் மென்மையைக் காட்டி விடுகிறோம். அவள் சிரிக்கும்போது தெரியும் பற்களைக் கூட விடுவதில்லை. முத்து வரிசை, முல்லைச் சரங்கள், வெள்ளி மணி என்கிறோம். இப்படி உவமைகள் சொல்லப்படும்போதெல்லாம் இந்தக் கருத்துகள் பலம் பெறுகின்றன. பலம் பெறும்போது எளிதில் வாசகர்கள் மூளையில் போய் தங்கிவிடுகின்றது. ஆனால் பொருத்தமான உவமைகள் தேட எல்லா எழுத்தாளர்களுமே கஷ்டப்படுவர். தேவன் அப்படிக் கஷ்டப்பட்டதாகத் தெரியவில்லை. சர்வ சாதாரணமாக அவர் எழுத்தில் ஒவ்வொரு முறையும் வந்து விழும் உவமைகளை மட்டும் எழுதத் தொடங்கினால் ஒரு பெரிய ‘பைண்ட்’ புத்தகமே கூட போட்டுவிடலாம்.

இப்படி உவமைகள் நிறைந்த கதை என்று சொல்லத் தொடங்கினால் தேவனின் ‘மிஸ் ஜானகி’ ஒன்றே போதும். எத்தனை எத்தனை உவமைகள் என்ற சான்றுக்குப் போகுமுன், மிஸ் ஜானகி கதையைப் பற்றிய ஒரு சுருக்கம் ஒன்றினைத் தெரிவித்து விடுகிறேன்.. ஏனெனில் இந்த உவமைகள் பற்றி எழுதும்போது அதன் சுவை கூடுமல்லவா.

மதுரை வக்கீல் பட்டாபி ராமய்யரின் இரண்டாவது மகளான மிஸ் ஜானகி சென்னையில் கல்லூரி ஒன்றில் படிக்கும்போது தன்னுடைய மூத்த மாணவனான கதாநாயகன் நடராஜனின் சிநேகிதம் கல்லூரியின் நூலகத்தில் அகஸ்மாத்தாகக் கிடைக்க அது காதலாக மலர்கிறது. காதலென்றால் அதுவும் அந்தக் காலக் காதல் எல்லாம் திரை மறைவில்தான், யாருமறியாமல்தான் நடக்கமுடியும். இப்படி இருக்கையில் ஆண்டுமுடிவில் வரும் விடுமுறையில் திருச்செந்தூர் சுவாமி தரிசனத்துக்குச் செல்ல வேண்டுமென, மதுரையிலிருந்து இதற்காக இவள் அக்கா சென்னைக்கு வந்து மெனக்கெட்டு அழைத்துப்போக, சென்னையிலிருந்து ஜானகி ரயிலில் தன் அக்கையோடு பயணமாக, நம் கதாநாயகனும் தன் காதலியின் கண்பார்வையில் இருக்கவேண்டுமென விரும்பி அவளைத் தொடர்கிறான். அக்கையும் தங்கையும் மதுரை இறங்கி இல்லம் சென்ற பிறகு அடுத்த நாள் வண்டியில் திருச்செந்தூர் செல்வதாக ஏற்பாடு.

இந்தக் கதையில் வில்லங்கம் செய்பவர்கள் உண்டு. செய்பவர்கள் மூவர். ஒருவர் ஜானகியின் சொந்த அக்கா மங்களம், இன்னொருவர் திருச்செந்தூரின் ரிடையர்டு தாசிலதாரும் திமிராகப் பேசிப் பழகும் நாகநாதைய்யர். மூன்றாவது நடராஜனின் கல்லூரியில் படிக்கும் சக மாணவனாகக் குப்பை கொட்டும் ’அல்ட்டல்’ சந்துரு. இவன் நாகநாதைய்யரின் உறவு என்பதோடு வக்கிரபுத்தி படைத்தவன் கூட. இவனுக்கு ஜானகியை எப்படியும் ’செட்டில்’ செய்து விட வேண்டும் என்ற முனைப்போடுதான் நாகநாதய்யரே ஜானகி குடும்பத்தாரை, அவர்கள் தெரிந்தவர்கள் என்ற முறையில், வற்புறுத்தி திருச்செந்தூர் அழைத்து வருகிறார். இந்த மங்களமோ ஊர் உலகத்தை அடக்குவதோடு, கணவனையும் அடக்கி தன் முந்தானை முடிச்சில் வைத்திருப்பவள்தான் என்றாலும் நாகநாதய்யர் எப்படியோ மங்களத்தைப் புரிந்து கொண்டு அவளைத் தன் வழியில் வரவழைக்கவும் முயற்சி செய்கிறார். வில்லங்கம் என வரும்போது நல்லவைகள் செய்பவரும் வேண்டுமே.. அப்படிப்பட்ட நல்லவர்களில் முதன்மையாக திருச்செந்தூர் கடற்கரையில் தன் காகிதங்களைக் காற்றில் பறக்கவிட்டு மண்ணில் பரபரவென தேடும் ‘தலைதடவி’ சுந்தரமும் (பாவம் சுற்றியுள்ள மனிதர்கள் எல்லாம் வேடிக்கை பார்க்க, அந்த வேடிக்கையை முடிவுக்குக் கொண்டு வருவதைப் போல நம் கதாநாயகன் மட்டுமே உதவி புரிகிறான்), கல்லூரி அறை நண்பன் குடுமி மணியும் விசேஷமாக உண்டு. கூடவே சிறு சிறு உதவிகள் ஜானகியின் பயந்த சுபாவ அத்திம்பேர் ஜகதீசன் மூலமும், திருச்செந்தூர் அண்டை வீட்டுக் காரர்களாகக் குடியேறும் முன்னாள் நடிகை ஜகமும், நாட்டியமணி பங்காருவும் செய்து கொடுத்தாலும் இவர்களால் கிடைத்த உதவிகளை விட உபத்திரவமே நடராஜனுக்கு மிஞ்சுகிறது. கூடவே உபத்திரவமும் உதவியும் கொடுக்க திடீரென அவனைத் தேடி வந்த நடராஜனின் தந்தை டெல்லி ஹரனும் அதே போல கதாநாயகி ஜானகியின் தாய் தந்தையரும் அங்கு பின்னர் (திருச்செந்தூரில்) சேர்ந்து கொள்கிறார்கள  ஜானகியின் அப்பா தினம் வாயால் ஆயிரம் முறை அஸ்வமேதம் செய்துவிடுவதாக பேசுவாரென்றால், அவள் அம்மாவோ தினத்துக்கு ஒரு வியாதியைச் சொல்லிக்கொண்டு, அந்த வியாதியின் பெயரால் அன்றைக்கு என்ன கிழமை என பிறர் கண்டுகொள்ளும் அளவுக்குப் பழகும் பெண்மணி. (இதே போல ஒரு பாத்திரத்தைப் பின்னாளில் ‘அனபே வா’ எனும் படத்தில் சரோஜாதேவியின் அம்மாவாக வரும் நடிகைக்குக் கொடுத்துக் காப்பியடித்தார்கள் என்பது வேறு விஷயம்)

இப்படிப்பட்ட சமயத்தில்தான் நடராஜன் தன் காதலி ஜானகியுடனும், இன்னமும் காதல் விஷயம் தெரியாத அவள் அக்கா மங்களத்துடனும் எதேச்சையாக சேர்ந்து கொண்ட முன்னாள் நடிகை ஜகத்துடனும், சென்னையிலிருந்து இவர்களோடு புகைவண்டியில் பயணம் செய்யும்போது, அடுத்த நாள் காலை வேளையில் திண்டுக்கல் ஸ்டேஷனில் கிடைக்கும் சுவையான சூடான இரண்டு இட்லிக்காக கூட்டத்தில் தள்ளுமுள்ளுகளுடன் போராடி வெற்றிகரமாக தனக்கொரு பொட்டலமும், ஜானகிக்கொரு பொட்டலமும் வாங்கி வெளியே வருவதற்குள் வண்டி இந்த அப்பாவிக் காதலனுக்குக் காத்திராமல் கிளம்பி விட, நடராஜனோ வண்டியைப் பறிகொடுத்ததோடு மட்டுமல்லாமல் வண்டியில் செல்லும் தன் அழகான காதலியையும் அவள் பார்வையில் பட வைத்திருக்கும் தன் பெட்டியையும் பறிகொடுக்கவேண்டிய சூழ்நிலைக்கு ஆளாகிறான்.

அந்தப் பெட்டியில் சில விசேஷங்கள் உண்டு. ஜானகி தன் கைப்பட எழுதிய காதல் கடிதங்களைப் பத்திரமாக (காதலன் என்பான் அவ்வப்போது அதைப் படிக்கவேண்டும் அல்லவா) வைத்துள்ளான். (அந்தக் கால கட்டத்தில் காதல் கடிதம் எழுதுவது எல்லாம் மிகப் பெரிய கிரிமினல் குற்றமாக்கும் என்பதையும் நினைவில் கொள்க) இருந்தாலும் ஜானகியின் பார்வையில்தான் அந்தப்பெட்டி இருக்கிறது என்ற ஆறுதலும் என்னதான் மதுரையில் ஜானகி இறங்கினாலும் அடுத்த நாள் திருச்செந்தூரில் பார்த்து ரகசியமாக பெட்டியை வாங்கிவிடலாம் என்றும் தன்னை சமாதானம் செய்து கொண்ட நடராஜன் அடுத்த ரயிலுக்காகக் காத்திருக்கிறான். ஜானகி சென்ற ரயில் மதுரையை அடைந்ததும், எப்படி இந்தப் பெட்டியை தன் பெட்டிகளுடன் சேர்ப்பது என்று கவலைப்பட்ட ஜானகிக்கு, அதே வண்டியில் திருச்செந்தூர் பயணப்பட மதுரையில் ஏற வந்த நாகநாதய்யர் வந்ததால் அவளுக்கு மிகப் பெரிய நிம்மதியைத் தந்தது. ‘மாமா.. இந்தப் பெட்டி என் சிநேகிதியின் பெட்டி, ஜாக்கிரதையாக எடுத்துச் செல்லுங்கள், நாளை திருச்செந்தூரில் வாங்கிக் கொள்கிறேன்” என ஒப்படைத்துவிட்டு ஒரு நல்ல காரியத்தைத் திருப்திகரமாக முடித்தோம் என்ற சந்தோஷத்துடன் அந்த நிம்மதி முகத்தில் தெரிய தன் இல்லத்துக்குச் செல்கிறாள்.

பாவம் அவள். ’கண்ணிய நடத்தையுடன் நாகநாதய்யர் எடுத்துச் செல்வார்.. அந்தப் பெட்டி அடுத்த நாள் வந்து சேரும், நடராஜனை எப்படியாவது பார்த்துத் திருப்பி  விடலாம்’ என்று நம்பிய ஜானகிக்கு இந்த நாகநாதய்யர் ரயிலில் பொழுதைக் கழிக்க வசதியாக இவளின் காதல் கடிதங்கள்தான் கிடைத்தன என்பதையும் அதைப் படித்துவிட்டு அந்த மாமா வயற்றெரிச்சலுடன் வாயும் எரிய அனைவரையும் திட்டிக் கொண்டே பயணம் செய்கிறார் என்கிற அரிய விஷயத்தை நிச்சயம் அறிந்திருக்க மாட்டாள் இல்லையா? அதிலும் தனக்கு எப்படியாவது அந்த பாழாய்ப்போன ராஸ்கல் சந்துருவை மணமுடிக்க ஆவலாய் இருக்கும் ஒருவர் கையில் இந்தக் கடிதங்கள் கிடைத்து பின்னாட்களில் என்னென்ன தொந்தரவுகள் வருமோ என்றெல்லாம் அவள் அந்தச் சமயத்தில் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.

இனி திருச்செந்தூரில் பிரத்யட்ச தரிசனம் கொடுத்துக் கொண்டிருக்கும் முருகப்பெருமானின் பெருமைகளை அவ்வப்போது சொல்லிக்கொண்டே நம் கதையும் விறு விறுப்பாக நகர்ந்து கொண்டே இருக்கிறது.

கதை நகரட்டும்.. இனி ஓரளவுக்கு இந்தக் கதையின் தளமும், நடையும் புரிந்திருக்கும் என நினைக்கிறேன். இனி தேவன் இந்தக் கதையில் புகுத்திய இந்த உவமைப் பொருத்தங்களைப் பார்க்கலாம்.

(தொடர்ந்து வரும்)

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “தேவன் நூறு (தேவன் ஒரு சகாப்தம்) – (2)

  1. தேவன் புத்தகங்களை மூலமாகக் கொண்டு எவராவது ஆராய்ச்சி செய்திருக்கிறார்களா?  இல்லையென்றால், நீங்கள் இதை இலக்கிய ஆராய்ச்சியாகச் செய்து, டாக்டர் பட்டத்திற்கு தயாராகலாம்!

    உமா

  2. மிகவும் விறுவிறுப்பாக இருக்கின்றது தொடர். படிக்க மிக்க ஆவலாய் உள்ளது.

    –மேகலா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.