சக்தி சக்திதாசன்

அன்பினியவர்களே !

நாம் வாழ்வில் எத்தனையோ மனிதர்களைச் சந்திக்கிரோம், பேசுகிறோம், பழகுகிறோம் ஆனால் அவர்களில் அனைவருமே எமது மனங்களில் நிரந்தரமாகத் தங்குவார்கள் என்பது நிச்சயமல்ல.

அதேசமயம் சிலபேரைச் சந்திப்பதில்லை தோலைபேசியில் பேசியோ அன்றிக் கடித, மின்னஞ்சல் தொடர்பு மூலமாகவோ அறிந்து கொள்கிறோம் ஆனால் அவர்கள் எமது மனங்களில் ஒரு நிரந்தரமான இடத்தைப் பிடித்துக் கொள்கிறார்கள்.

மற்றும் சிலரைத் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் அந்நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குபவர்களாக அந்நிகழ்ச்சியின் நடத்துனர்களாகக் காண்கிறோம்.

அவர்களில் சிலரும் எமது மன‌ங்களிலே தமக்கென ஒரு இடத்தைத் தக்க வைத்துக் கொள்வார்கள்.

எனது பணியின் நிமித்தம்  ஜந்து வாரங்களுக்கு ஒருமுறை வாரவிடுமுறை நாட்களான சனி, ஞாயிறு தினங்களில் நான் பணிமனைக்குச் செல்ல வேண்டிவரும்/. அந்த ஞாயிறுகளைத் தவிர்ந்த மற்றைய ஞாயிறுகளில் வீட்டில் இருக்கும் தினங்கள் அனைத்திலும் நானும் என் மனைவியும் விரும்பிப் பார்க்கும் தொலைக்காட்சிகளில் ஒன்றுதான் “ The Andrew Marr Show ” அன்ட்ரூ மார் ஷோ , இது ஞாயிறு காலை 9 மணிக்கு நடைபெறும்.

இந்நிகழ்ச்சியின் விஷேசமாக பத்திரிகைத் தலைப்புகளைப் பற்றியும், முக்கிய செய்திகளைப் பற்றியும் விவரமாக அலசுவதற்காக வெவ்வேறு அரசியல் கட்சிகளுக்குச் சார்பான பத்திரிக்கைத் துறையினருடன் நிகழ்ச்சித் தொகுப்பாளர் “அன்ட்ரூ மார் (Andrew Marr)”  அவர்கள் கலந்துரையாடலை மிகவும் சுவாரஸ்யமாக நடத்துவார்.

அது தவிர அந்நிகழ்ச்சியில் ஒவ்வொருவாரமும்  அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர் என பல்வேறு வித்தியாசமானவர்களுடனான நேர்காணல்கள் இடம்பெறும்.

இந்த நேர்காணலை மிகவும் காரசாரமாக நடத்துவதில் அன்ட்ரூ மார் அவர்கள் அற்புத ஆற்றல் மிகுந்தவர். மக்களின் மனங்களிலே நீந்தும் முக்கிய்மான கேள்விகளை இவ்வரசியல்வாதிகளை நோக்கி வீசி அவர்களைத் திக்குமுக்காட வைத்து விடுவார்.

இவரின் மற்றுமோர் தனிப்பட்ட திறமை, கேட்கப்படும் கேள்விகளைத் தமக்கேயுரிய சமயோசித புத்தியினால் தமக்கேற்றவாறு திசைதிருப்பி விட முனையும் அரசியல்வாதிகளை திரும்பத் திரும்ப அக்கேள்விக்கே அழைத்து வந்து அவர்களின் திசைமாற்றும் போக்கை பார்வையாளர்களுக்கு புரியவைத்து விடும் தன்மையாகும்.

இத்தகைய அற்புத ஆற்றல் மிக்க ஒரு ஊடகவியலாளரான அன்ட்ரூ மார் அவர்களின் வயது வெறும் 53 தான். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர் “ஸ்ட்ரோக் (Stroke)”  எனப்படும் ஒருவகை இருதய நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்குட்படுத்தப்பட்டு வருகிறார்.

தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளர்களைப் பார்க்கிறோம் ரசிக்கிறோம், வானொலியில் எத்தனையோ அறிவிப்பாளர்களைக் கேட்டு ரசிக்கிறோம், பத்திரிக்கைகளில், புத்தகங்களில் அருமையான எழுத்தாளர்களின் பல ஆக்கங்களைப் படித்து மகிழ்கின்றோம். ஆனால் ஏனோ தெரியவில்லை அன்ட்ரூ மார் அவர்களின் இச்சுகயீனச் செய்தி எம் மனதில் ஒருவகை சோகத்துடனான தாக்கத்தை ஏற்படுத்தியது.

1959ம் ஆண்டு ஸ்கொட்லாந்து நகரில் பிறந்த இவர் தனது ஆங்கில மொழி பட்டப்படிப்பினை உலகப் பிரசித்தி பெற்ற “கேம்பிரிட்ஜ் (Cambridge)” பல்கலைக்கழத்தினில் பயின்று பட்டம் பெற்றார்.

இவர் அப்பல்கலைக்கழகத்தில் பயிலும் போது தீவிர இடதுசாரிக் கொள்கைகளைக் கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.

இவரது பத்திரிக்கைத் துறையிலான ஊடகப்பிரவேசம் 1981ம் ஆண்டு ஸ்கொட்லாந்து பத்திரிக்கையான ” ஸ்கொட்ஸ் மான்(Scots Man)” எனும் பத்திரிக்கை வாயிலாக நிகழ்ந்தது. இப்பத்திரிக்கையின் வியாபார சம்பந்தமான செய்திகள் பிரிவில் ஒரு பயிற்சிபெறும் நிருபராகத்தான் இவரது ஊடகத்துறை பிரவேசம் ஆரம்பித்தது.

“த இன்டிபென்டன்ட் (The Independant) ” பத்திரிகையினூடாக அரசியல் நிருபராக வளர்ச்சியடைந்த இவரின் ஊடகத்துறையின் மகுடமாக பி.பி.ஸி தொலைக்காட்சிச் சேவையின் செய்திப்பிரிவின் ஆசிரியராக கடமையாற்றியதே.

தனது குடும்பத்தினருடன் அதிக நேரம் செலவிடுவதற்காக இப்பதவியினின்றும் விலகினார்.

அதைத் தொடர்ந்து பி.பி.ஸி தொலைக்காட்சிக்காக பல தொடர்களைத் தாயரித்து தொகுத்து வழங்கியுள்ளார் அவற்றிலே குறிப்பிடப்படக்கூடியவை ,

” நவீன இங்கிலாந்தின் சரித்திரம் ( History of the modern Briton)”  , ” அன்ட்ரூ மாரின் உலகச் சரித்திரம் (Andrew Marrs History of the world”  என்பன ஆகும்.

இவரின் நேர்காணல்களில் பெயர் பெற்றதாக 2004ம் ஆண்டு அப்போதைய பிரதம மந்திரி டோனி பிளேயர் அவர்களுடனான நேர்காணலில் நான்காவது முறை பிரதமராகத் தான் வரமாட்டேன் எனும் டோனி பிளேயரின் பிரசித்தி பெற்ற வாக்கினைப் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மற்றும் இவருடைய அரசியல் நிகழ்வுகளின் பாதிப்பாக அப்போதைய லேபர் அரசாங்கத்தின் வியாபார அமைச்சராக இருந்த பீட்டர் மண்டல்சன் பற்றிய விபரங்களை வெளியிட்டமை அவர் தனது பதவியிலிருந்து ராஜினாமாச் செய்வதற்கு வழி வகுத்தது.

இத்தகைய ஒரு இளைய பிரசித்தி பெற்ற ஊடகவியலாளர் குணமடைந்து மீண்டும் ஊடகத்துறைக்கு பல உன்னதமான ஆக்கங்களை அளிக்க வேண்டுமென எண்ணுவோம்.

மீண்டும் அடுத்த மடலில்
அன்புடன்
சக்தி சக்திதாசன்

http://www.thamilpoonga.com
http://www.facebook.com/sakthi.sakthithasan

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *