Category: பொது

  • இங்கிலாந்திலிருந்து ஒரு மடல் . . . . . ( 230 )

    அன்பினியவர்களே!

    அன்பான வணக்கங்கள். இதோ அடுத்தொரு வராம், அடுத்தொரு மடல். ஒரு மாதகாலம் இங்கிலாந்திலிருந்து வெளியே இருந்து விட்டுத் திரும்பி வந்ததும் முதல் காதில் விழும் சொல் “ப்ரெக்ஸிட்” என்பதுவே! கடந்த வருடம் ஜூன் மாதம் 23ஆம் திகதி நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பில் இங்கிலாந்து மக்களின் பெரும்பான்மை வாக்களிப்பின் பிரகாரம் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது என்பது முடிவாகியது அனைவரும் அறிந்ததே!

    அவ்வெளியேற்றத்தைச் சுற்றிய சர்ச்சைகள் நாளுக்குநாள் வித்தியாசமான வடிவங்கள் எடுத்து வருகிறது என்பது உண்மையே!

    அனைத்துக் கட்சிகளும் ஒரு விடயத்தை ஏற்றுக்கொள்கின்றன. அதாவது கொள்கையளவில் இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவது தவிர்க்கப்பட முடியாதது என்பதுவே அது! ஆனால் அவ்வெளியேற்றத்தின் வடிவம் எதுவாக இருக்க வேண்டும் என்பதில் தான் கட்சிகளுக்கிடையிலும், மக்களுக்கிடையிலும் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. இங்கிலாந்து ஜரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதனால் எவ்வகையான பிரதிகூலங்கள் ஏற்பட்டாலும் பரவாயில்லை வெளியேற வேண்டும் என்று தீவிரமான கருத்துடையவர்கள் நிர்ப்பந்திக்கின்றார்கள். வெளியேறத்தான் வேண்டும் ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்துடனான இங்கிலாந்தின் பொருளாதார நடைமுறைகளைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையிலான வியாபார ஒப்பந்தங்களை ஏற்படுத்திக் கொள்வது முக்கியம் என்று மிதவாதிகள் விவாதிக்கிறார்கள்.

    பிரித்தானிய அரசாங்கம் ஐரோப்பிய ஒன்றியத்துடனான பேச்சுவார்த்தைகளின் பின் எடுக்கும் முடிவுகள் பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்களின் அங்கீகாரத்தைப் பெறவேண்டும் என்று எதிர்க்கட்சிகளும், சில அரசாங்கப் பாராளுமன்ற உறுப்பினர்களும் வலியுறுத்தினர். அது தவிர இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறப் போகிறோம் என்று உத்தியோகபூர்வமாக அறிவித்தலைப் பாராளுமன்ற அங்கீகாரத்தின் மூலம் சட்டமாக்க வேண்டும் என்று கோரினார்கள். அரசு இதற்கு சம்மதிக்கவில்லை. ஜீனா மில்லர் எனும் வழக்கறிஞராகிய பெண்மணி ஒருவர் அரசுக்கு எதிராகத் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் அரசுக்கு எதிரான தீர்ப்பை வழங்கியது. அதைத்தொடர்ந்து அது சட்டமூலமாக்கப்படும் பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. ஆனால் அதில் சில திருத்தங்கள் அதாவது தற்போது இங்கிலாந்தில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் பிரஜைகள் இங்கிலாந்தில் தொடர்ந்து இருக்கலாம் எனும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும் என்று பிரபுக்கள் சபை அதை நிராகரித்தது.இங்கிலாந்தில் வாழும் ஜரோப்பிய ஒன்றிய பிரஜைகள் இங்கு வாழலாம் ஆனால் அதற்கான உத்தரவாதத்தை மற்றைய ஜரோப்பிய நாடுகளில் வாழும் பிரித்தானியப் பிரஜைகளுக்கு அவர்கள் அளிக்கும் போதே நாமும் அளிப்போம் என்றார் பிரதமர். பிரபுக்கள் சபை கொடுத்த திருத்தங்களை நாடாளுமன்றம் நிராகரித்ததினால் அது கடந்து திங்கட்கிழமை சட்டமூலமாகியது. இந்தச் சட்டத்தின் மூலம் பிரதம மந்திரி எப்போதும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறப் போகிறோம் எனும் அறிவித்தலை கொடுக்கும் அங்கீகாரத்தைப் பெறுகிறார். இந்த உத்தியோகபூர்வ அறிவித்தல் இம்மாத இறுதியில் ஐரோப்பிய யூனியனுக்கு கொடுக்கப்ப்படும் என்பதுவே அரசியல் அவதானிகளின் கணிப்பாகும்.

    இது இவ்வாறிருக்க, இந்தப் பிரச்சனைக்குள் இன்னொரு பிரச்சனையை நுழைத்திருக்கிறார் ஸ்கொட்லாந்து முதலமைச்சர். கடந்த யூன் மாதம் நடந்த சர்வஜன வாக்கெடுப்பில் ஸ்கொட்லாந்து மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்றே பெரும்பான்மையாக வாக்களித்திருந்தார்கள். தனது நாட்டு மக்களின் விருப்பத்திற்கு எதிராக எப்படி எம்மை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக்கலாம்? இது ஜனநாயகத்திற்குப் புறம்பான செயலென்றும் இத்தகைய சூழலில் ஸ்கொட்லாந்து தொடர்ந்தும் ஐக்கிய இராச்சியத்தின் அங்கத்தினராக இருக்க முடியாது என்றும், ஸ்கொட்லாந்து தனியாகப் பிரிந்து போவதற்கான இரண்டாவது சர்வஜன வாக்கெடுப்பை ஒரு வருடத்தில் நடத்த வேண்டும் என்றும் ஸ்கொட்லாந்து பாராளுமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளார்.

    ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகிய பின்னரே அத்தகைய வாக்கெடுப்பு நடத்தப்படும் சாத்தியக்கூறு உள்ளதாகப் பிரதமர் கூறியுள்ளார். இப்போது இப்பிரச்சனை பலவிதமான கோணத்தில் விரிந்துள்ளது. இதன் முடிவுகள் இங்கிலாந்தைப் பொறுத்தவரை எத்தகைய முடிவுகளை நல்கப் போகிறது என்பது பலரது மனதிலும் ஒரு பெரிய பரபரப்பான வினாவாகவே இருக்கின்றது.

    மீண்டும் அடுத்த மடலில்…

    அன்புடன்,
    சக்தி சக்திதாசன்

    Share
  • ஆழ்மனம்!

    பவள சங்கரி

    17155515_1569882419708333_2781455138669949434_n

    ஒளிமிகு ஆழ்மனப்பேரலைகளின் திவலைகள்
    அமிழ்தென்றெழ சாலத்தருமம் பெறும்!

    Share
  • நெகிழிச் சாலைகள்!

    பவள சங்கரி

    அண்ணா பல்கலைக்கழக மாணவர்களின் தனிப்பட்ட முயற்சியினால் நெகிழி (பிளாஸ்டிக்) கழிவுப் பொருட்கள் மூலம் சாலை போடும் நவீன தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்து அதன் பயன்படுத்தி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்திலேயே அதைப் பயன்படுத்தி மெய்ப்பித்துக் காட்டியிருந்தும் இன்னும் அந்த முறை ஏன் இன்னும் பயன்பாட்டிற்கு வரவேயில்லை? இதையெல்லாம் யாரிடம் சென்று கேட்பது. தார் சாலைகள் மழைக்காலங்களில் குண்டும் குழியுமாக மாறிவிடும். ஆனால் இந்த நெகிழிச் சாலைகள் அதுபோன்று ஆவதில்லை என்கிறார்கள். அதைவிட முக்கியமாக நெகிழிக் கழிவுகளை அழிப்பதற்கு படும் சிரமங்களும் குறைவதோடு பாதுகக்கப்பட்ட சாலைகளும் கிடைக்குமே.. இதில் என்ன பிரச்சனை? பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னரே மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்கள் இந்த முறையில் சாலை போட்டு நிரூபித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது!

    Share
  • மீனவர்களின் வாழ்வில் ஒரு விடிவெள்ளி!

    பவள சங்கரி

    மீனவர்களின் வாழ்வில் ஒரு விடிவெள்ளி!நமது இஸ்ரோவின் புதிய கண்டுபிடிப்பு! இந்தியா சார்பாக விண்வெளிக்கு அனுப்பப்பட்ட 4 செயற்கைக்கோள்கள் மூலமாக  இந்தியாவிற்கான ஜி.பி.எஸ் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வழிசெலுத்தல் முறை மூலமாக கடலில் மீன் பிடிக்கும் நமது மீனவர்கள் சர்வதேச எல்லையை எளிதாகக் கண்டுணரும் வகையில் புதிய செயலியை உருவாக்கியுள்ளனர். இதைத் தங்கள் கைபேசியில் பதிவேற்றிக்கொண்டால் மீனவர்கள் அந்நிய எல்லைக்குள் சென்று ஆபத்தில் சிக்கி உயிரிழப்பதைத் தவிர்க்கலாம். இந்த சாட்டிலைட் மூலமாக எந்தெந்தப் பகுதிகளில் மீன்கள் அதிகமாக உள்ளன என்பதையும் கண்டறியலாம். தங்கச்சி மடம் மீனவ இளைஞரின் ஆன்மா சாந்தியடையும் வகையில் இந்த செயலியை பிரபலமாக்க வேண்டியது இஸ்ரோ மற்றும் அரசின் கடமை.

    Share
  • கையூட்டு!

    பவள சங்கரி

    ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் உள்ள 16 நாடுகளில் கையூட்டு கொடுத்து காரியம் சாதிப்பதில் இந்தியாவிற்குத்தான் முதல் இடமாம்! 10/7 பேர் இலஞ்சம் கொடுத்துதான் காரியம் முடிப்பதாகக் கூறுகிறார்கள். மிகக்குறைவாக இலஞ்சம் கொடுப்பவர்கள் (0.2%) ஜப்பானியர்கள். என்ன கொடுமைடா சாமி இது? இதில் கொஞ்சம் ஆறுதல் என்னவென்றால் இந்திய அரசாங்கம் இலஞ்சத்திற்கு எதிர்ப்பாக எடுத்த நடவடிக்கைகளைப் பாராட்டியுள்ளதுதான். 40% சற்று அதிகமான மக்கள் இந்த 12 மாதங்களில் ஊழல் மிகவும் அதிகரித்துள்ளதாகக் கூறுகிறார்கள். 63% மக்கள் தனி மனிதப் போராட்டம் கூட நல்ல பலன் அளிக்கும் என்கிறார்கள்.

    Share
  • மலர்ந்த மனிதம்!

    பவள சங்கரி

    மனிதம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஈரோட்டில் ஒரு நகராட்சிப் பள்ளியில் மாணவர்களை நன்கு படிக்கவும், 100 % வெற்றி பெறவும் மனிதாபிமானமிக்க, ஆக்கப்பூர்வமான முறையில் செயல்படுகிறார்கள் அப்பள்ளி ஆசிரியர்கள். ஆம், கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து மாலை நேர தனி வகுப்பு இலவசமாக எடுப்பதோடு, அந்த மாணவர்கள் சோர்வில்லாமல், உற்சாகமாக படிக்கவேண்டும் என்பதற்காக, அந்த ஆசிரியர்கள் தங்கள் சொந்தச் செலவில், அந்த குறிப்பிட்ட தேர்வுக் காலங்களில், ஒரு நாளைக்கு ஒரு ஆசிரியர் என்று மாணவர்களுக்கு சிற்றுண்டி (4 இட்லி/சட்னி/சாம்பார்) வாங்கிக்கொடுக்கிறார்கள். இன்னொரு மனிதாபிமான விசயம், அப்பள்ளியின் முன்னாள் மாணவர், இன்று ஒரு சிறிய உணவு விடுதியின் உரிமையாளர், ரூ 10 இட்லியை 5 உரூபாய்க்கு கொடுக்கிறார்! இதல்லவோ மனிதம்!

    Share
  • மூளை!

    பவள சங்கரி

    brain

    நம்முடைய மூளையில் 10% மட்டுமே நாம் பயன்படுத்துகிறோம். மீதி 90% வீணாக இருக்கிறதாம். மாபெரும் அறிவுஜீவிகளுக்கும் இது பொருந்தும். தூக்கத்திலும் விழித்து செயல்படும் உறுப்பு மூளை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். சூழ்நிலைக்கேற்ப மூளை சுறுசுறுப்படைந்து செயல்பட ஆரம்பிக்கிறதாம். சூழ்நிலையை உணர்ந்து நம் மூளையை பயன்படுத்தி பிரச்சனைகளைப் புரிந்துகொண்டு முடிவெடுத்து செயல்பட வேண்டியது அவரவர் வசம் தான் உள்ளது என்பதுதான் செய்தி.. கூடுதலாக இன்னுமொரு  5% மட்டுமாவது பயன்படுத்திப் பார்க்கலாமே..

    Share
  • இந்தியாவின் மொழிகள் நிலை

    பவள சங்கரி 

    1961ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி இந்தியாவில் புழக்கத்தில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை 1,652 என்று கண்டறியப்பட்டுள்ளன.

    1971ஆம் ஆண்டின் கணக்கெடுப்பில், 10,000 மக்களுக்கும் குறைவாகப் பேசப்படும் மொழிகளைத் தவிர்த்து 108 மொழிகளை மட்டும் பட்டியலிட்டிருக்கிறார்கள். மற்ற மொழிகள் “மற்றவைகள்” என்று பட்டியலிடப்பட்டுள்ளன.

    1991ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, தனிப்பட்ட இலக்கண அமைப்புகளுடன் கூடிய மொழிகளாக 1,576 மொழிகளைக் கண்டறிந்து வெளியிட்டுள்ளது.

    2001ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள மொழிகளின் எண்ணிக்கை 1,721. அதில் 122 முக்கியமான மொழிகள் மட்டுமே பெரும்பாலான மக்கள் பயன்படுத்துகிறார்கள். மற்ற 1,599 மொழிகள் சிறுபான்மை சமூகத்தினர், உள்ளூர் குழுக்கள், பழங்குடிகள் போன்றவர்கள் பயன்படுத்தக்கூடியவைகள்.

    முக்கியமான 122 மொழிகள் 10,000 ற்கும் அதிகமான பயனாளிகள் உள்ளனர். இதில் 29 மொழிகள் மட்டுமே 1 மில்லியன் மக்களின் புழக்கத்தில் உள்ளன.

    2011 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 122 மொழிகள் மட்டுமே 10,000 ற்கும் அதிகமான மக்கள் பயன்படுத்துவதாக உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

    கடந்த 50 ஆண்டுகளில் இந்தியா 250 மொழிகளை இழந்துள்ளது.  இன்று 880 மொழிகள் வழக்கில் உள்ளன. 29 மொழிகள் 1 மில்லியன் மக்களுக்கும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். அருணாசலப் பிரதேசத்தில் மட்டும் அதிகபட்சமாக 90 மொழிகள் வழக்கில் உள்ளன!

    Share
  • அப்பாவி பொதுசனத்தின் புலம்பல்!

    பவள சங்கரி

    பிரகாசம் ரெட்டி, குமாரசாமி ராஜா, காமராசர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். போன்றோர் ஆட்சி செய்த தமிழ்நாட்டில் பினாமி ஆட்சி தேவையா? எந்தக் கொள்கையின் அடிப்படையில் இந்த ஆட்சி? திராவிடர் நல்வாழ்விற்காக ஏற்படுத்தப்பட்ட ஆட்சியின் நிலை என்ன? காமராசர் ஆறாம் வகுப்பு படித்தவர்தான். கல்விக் கண்ணை திறந்துவைத்தார். ஆனால் பதினோறாம் வகுப்பு படித்துள்ள நமது கல்வியமைச்சர் நீட் தேர்வுகளிலும், தொழில்நுட்பத் துறை, சி.பிஎஸ்,சி யிலும் என்ன கொள்கை முடிவு எடுத்து செயல்படப் போகிறார்? கர்நாடகாவில் காவேரியின் குறுக்கே மேகதூதில் இரண்டு அணைகள் கட்டுவதற்காக 5000 கோடி பணம் ஒதுக்கி பணியைத் துவங்கிவிட்டனர். ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆரம்பித்துவிட்டனர். கொங்கு பிரதேசத்தின் முதுகெலும்பான பவானியில் கேரள அரசு அணை கட்டுகிறது. பொதுப்பணித் துறையையும் கவனித்துக்கொண்டிருக்கும் முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார். தங்கள் பதவியைக் காக்கும் போராட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டு இருக்கப்போகிறார்களா? தமிழகத்தின் நலனில் சிறுதுளியேனும் அக்கறை கொள்வார்களா?

    Share
  • 10.01 மில்லியன் குழந்தைகள் சாவு!

    பவள சங்கரி

    இந்தியாவில் மட்டும் ஆண்டிற்கு 10.01 மில்லியன் குழந்தைகள் சுற்றுச்சூழல் (AIR POLLUTION) பாதிப்பினால், காற்று மாசுபாட்டின் காரணமாக உயிர் துறக்கிறார்கள். இது சீனாவைவிட அதிகம். தில்லியில் இதுபோல் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு உச்சநீதி மன்ற உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுத்ததுபோல இந்தியா முழுவதும் உடனடியாக போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.

    Share
  • அ.இ.அ.தி.மு.க. தொழில்நுட்பப் பிரிவினரின் அபாரப் பணி!

    பவள சங்கரி

    தமிழக முதல்வர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாக, ‘மிஸ்ட் கால்’ திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதாவது 9289222028 என்ற கைபேசி எண்ணிற்கு மிஸ்ட் கால் கொடுத்து விருப்பப்பட்ட பொது மக்கள் தங்கள் ஆதரவைத் தெரிவிக்கலாம் என்று அறிவித்திருந்தார்கள். இதன் தொடர்ச்சியாக கடந்த 2 நாட்களில் 35 இலட்சம் மக்கள் மிஸ்ட் கால் அதாவது தவறவிட்ட அழைப்புகள் மூலமாக தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர். இதில் 3 இலட்சம் அழைப்புகள் வெளி மாநிலங்கள் மற்றும் 2 இலட்சம் அழைப்புகள் வெளி நாடுகளிலிருந்தும் வந்துள்ளதாம். இதுமட்டுமன்றி நேரில் வந்து தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ள பொது மக்களின் சுய விவரங்களும் கணினியில் பதிவு செய்யப்பட்டு அவைகளும் இதுவரையில் 3 இலட்சங்களைத் தாண்டியுள்ளதாம். தவறவிட்ட அழைப்புகள் மூலம் தமக்கு ஆதரவு தெரிவித்த பொது மக்கள் ஒவ்வொருவருக்கும் தமது குரல் பதிவு மூலம் நன்றியும் தெரிவித்துள்ளார் திரு ஓ.பன்னீர் செல்வம் அவர்கள். மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்களும் தேர்தல் காலங்களில் தமக்கு ஆதரவு தெரிவித்த மக்களுக்கு தமது குரல் பதிவின் மூலம் நன்றி தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Share
  • படக்கவிதைப் போட்டி 97-இன் முடிவுகள்

    -மேகலா இராமமூர்த்தி

    திரு. விஷ்ணுராம் எடுத்திருக்கும் இந்த வித்தியாசமான புகைப்படத்தை இவ்வாரப் படக்கவிதைப்போட்டிக்குத் தேர்ந்தெடுத்துத் தந்துள்ளார் வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்தின் பொறுப்பாசிரியர் திருமதி. சாந்தி மாரியப்பன். இவ்விருவருக்கும் நம் நன்றி உரித்தாகுக.

    mirage

    கானல்நீர் போன்ற வாழ்க்கையில் காணும் யாவுமே கனவாய், கதையாய் மாறிப்போகின்றன காலவோட்டத்தில்!

    நில்லாதவற்றை நிலையின என்றுணரும் புல்லறிவாண்மையை விட்டொழித்தால்தான் வாழ்வின் மெய்ப்பொருள் விளங்கும்.

    பல்வேறு சிந்தனைகளுக்குக் களமமைக்கும் இப்படத்திற்கு நம் கவிஞர்கள் தம் பாக்களில் என்ன விளக்கம் தந்திருக்கிறார்கள் என்று அறிந்துவர ஆவல்!

    ***

    புகைப்படமெடுத்த நண்பரைப் பாராட்டும் கவிஞர் திரு. இப்னு ஹம்துன், ”தலைகீழான இப்படமே என் நேர்ப்படம் என்று நவின்றுவிடாதே!” என்று அவரைப் பகடிசெய்யவும் தவறவில்லை.

    அதில் நாங்கள் தெளிவாக இல்லை
    மேலும்
    முழுவதும் தலைகீழாயிருக்கிறது.
    படம் பிடிக்கும் உன் திறமையைப்
    பெரிதும் விதந்தோதுபவனே நான்
    இன்னும் பல கலைப்படங்கள்
    உன்பெயர் சொல்ல வாழ்த்துவேன்
    என்றாலும் என் நண்ப
    தலைகீழான
    இப்படமே
    என் நேர்ப்படம் என்று
    சொல்லிவிடாதே யாரிடமும்.

    ***

    இயற்கையின் ஊழித் தாண்டவத்தால் பாழான ஊர்கண்டு மக்கள் சிந்திய கண்ணீரே சந்துகளில் வெள்ளமெனத் தேங்கியிருக்கிறது என்று தன் கவிதையில் அவலச்சுவையைப் பொதிந்து தந்திருக்கின்றார் திரு. பழ. செல்வமாணிக்கம்.

    ஊழித் தாண்டவம்!

    ஆழிப்பேரலை அழித்தது ஓராண்டு !
    வெள்ளம் வந்து அழித்தது ஓராண்டு!
    புயல் வந்து அழித்தது ஓராண்டு!
    உயிர்த்தெழுந்து வந்தோம் ஒன்றினைந்து!
    வந்தாரை வாழ வைப்பது தமிழர் பண்பாடு!
    இயற்கை தந்த இன்னலைக் கூட
    தாங்கிக் கொண்டோம் !
    பொறுமையோடு!
    இடரில் தெரிந்தது எங்களின்
    ஒருமைப்பாடு!
    ஒற்றுமை உணர்வு கலந்தது
    எங்கள் மூச்சோடு !
    இருந்தாலும் தாங்க இயலவில்லை
    இயற்கை படுத்தும் பாடு!
    பட்ட காலிலே படும் என்பது
    போகட்டும் நேற்றோடு !
    ஊழித் தாண்டவம் ஆடிய புயலே !
    உன் செயலின் விளைவைப் பார்!
    நாங்கள் அழுத கண்ணீர்
    தேங்கிக் கிடக்கும் சாலையைப் பார்!
    பூமித் தாயின் வெடித்துச்சிதறிய வேதனை பார்!
    வண்ணக் கனவோடு வாழ்ந்த
    வாழ்க்கை , இன்று கறுமையாய்
    போன துயரைப் பார்!

    ***

    தலைகீழ்ப் பாடங்கள் வாழ்க்கைக்கு உதவாது. தன்னைத் திருத்த முயலாத மனிதன் பிறரைத் திருத்துவதென்பதும் இயலாது என்கிறார் திரு. செண்பக ஜெகதீசன்.

    அசலா…

    நிழல்
    நிஜமாவதில்லை என்றும்..

    தலைகீழ் பாடங்கள்
    தருவதில்லை கல்வித் தரத்தை..

    கானல்நீரைக்
    கண்ட கண்களால்
    கொஞ்சமும் தீராது தாகம்..

    தண்ணிபோட்டுவிட்டு
    தலைகீழாய் நிற்பவனுக்குத்
    தெரியாது உலகம் நேராய்..

    இப்படித்தான்
    இப்போது மனிதன்-
    தன்னிடம் குறையுடன்
    திருத்தப்போகிறானாம் உலகை,
    திருந்துவானா…!

    ***

    இது ஆழிப்பேரலையின் கோரதாண்டவமோ? அல்லது…வாகனங்கள் கக்கிய கரும்புகைப் படலமோ? அல்லது…வயல்வெளிகள் வறண்ட சாலையான மாயமோ? அல்லது கொழுத்த உடலிளைக்க இருவர் மேற்கொள்ளும் நடைப்பயிற்சியோ? என்று வெவ்வேறு கோணங்களில் இந்தப் புகைப்படத்தை மாற்றியோசித்துக் கவி புனைந்திருக்கிறார் பெருவை திரு. பார்த்தசாரதி.

    அலைதானென நினைத்தேன்.. ஐயோகொடூரமாகக் தாக்கவந்த..
    ஆழிப்பேரலை மீண்டும்வந்து நம்நெஞ்சையாட்டி வைக்குமே?..

    ஆழியுன் பேரலையால் நீஇட்ட பேரிடரால்..
    பாவியென் நினைவுக்கு புதைந்து மண்ணாகிவிட்ட
    பிணங்களல்லவா ஞாபகம்வருகிறது!..

    மனித வாழ்வு முடியும்வரை இனிமுற்றிலுமாகயுனை
    மறக்க முயற்சி செய்வோம்..நிச்சயமாக நீயில்லையென.

    மாற்றியோசிப்போம்…

    மனமூன்றிப் படத்தைப் பலமுறை பார்க்கும்போது
    மனத்தினுள் ஒளிந்திருக்கும் மாயம்விலக வழியுண்டு!

    உற்றுப்பார்த்தால் சாலைமுழுதும் கரும்புகைபோலவும் தெரிகிறதே!..
    ஊர்ந்து செல்லும் வேகவாகனங்களின் வயிற்றெரிச்சல் புகையாக வெளியேறியதா?..

    இல்லை! இல்லை! அதுவுமில்லை..

    தயிர்போல் நிலத்தை யுழுதுபயிர்செய்த இடம்தானின்று..
    தார்ச்சாலையானதோ!, மழை பொய்த்தவாய்ப்பால்?

    வறண்ட சாலையிலோடும் வற்றியநீரை
    வருத்தமுடன் பார்ப்பதுயார் கார்மேகம்தானே!

    இல்லை! இல்லை!

    இன்னுமொருமுறை மாற்றியோசி..

    நீலத்தண்ணீருக்குள் முகமுற்றுப் பார்க்கையில்..
    நிஜபிம்பம் நிழலாய்த் தெரியுது!

    தலைவணங்கித் தரைவழியே பார்த்தால்தான்…
    தலையிரண்டு கொழுத்தகாலுடன் நடப்பது தெரியும்…

    அதிகஎடை ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல…
    அனுதினமும் மருத்துவர் சொல்லும் அறிவுரையேற்று..

    பெருத்த உடல்மெலிதாக இளைப்பதற்கு..உடல்..
    பெருத்த இருநபர் இறுமாப்பாய் நடப்பதுபோலும் தெரிகிறது!

    ஊளைச்சதையொழிய ஒருமணிநேரம்..தொடர்ந்த
    காலை(ளை)நடை சிறந்ததென உரைக்கிறார்போலும்.

    பலநாள் நடைபயிலுதல் யுடல்நலத்துக் குகந்ததெனத்தெரிந்தும்.
    ஒருநாள் நடைபயின்ற தைமறுநாள் மறக்கும் நபராகயிருக்கலாமோ?..

    கூட்டத்தைக் கண்டால் ஓட்டமெடுக்கும் எண்ணத்தில்..
    கூட்டுப்பயிற்சியில் இருவருக்கும் நம்பிக்கையில்லையோ?.இது

    நடைப்பயிற்சியா? அல்லது பேச்சுப்பயிற்சியா?..விடைகாணஅந்த
    நண்பர்களோடு நடந்தால் தானுண்மை தெரியும்?

    நடைபயில உகந்தநேரம் பசுமையான காலைதானென..
    நயமாகப் பலர் சொல்லிக் கேட்டிருக்கோம்!

    காலையெழும் பொழுதின்முன்னே துயிலெழுந்துநாம்..
    காலாற நடந்தாலே நோயின்றி வாழலாம் வாழ்நாளெலாம்!

    குருதியில் தீயகொழுப்பு திட்டமாகக் கரைய..
    உறுதியுடன் நடக்கவேண்டுமொரு மணிநேரமாவது!

    கால்கை விரித்து வேகமாக நடந்தால்நம்
    இதயமும் விசாலமாக வியங்கும்!

    நலமுடன்வாழ அன்றாடம் நடைபயிலவேணும்!
    உயர்வுடன்வாழ உற்றாரை மதித்து நடத்தல்வேணும்!

    பூங்காவில் நடப்பதிலேயொரு மனமகிழ்ச்சி!
    புல்வெளியில் நடப்பதிலேயொரு சுகம்!

    கால்கொதிக்க கடும்வெயிலில் நடப்பதைவிட..
    உள்ளங்கால் குளிரஈரஇதமான நடையில் தானதிகயின்பம்.

    ***

    சிந்தனைகளைச் சிறகடித்துப் பறக்கவிட்டிருக்கும் கவி வலவர்களுக்கு என் பாராட்டுக்கள்!

    இவ்வாரத்தின் சிறந்த கவிதையென நான் தேர்ந்தெடுத்திருப்பது அடுத்து வருகிறது!

    நேரே நிமிர்த்திப் பார்!

    நிழற் படத்தில் தெரிவது
    நெஞ்சை அறுப்பது!
    இருட்டடித்த பாலைவனம்!
    நீரோட்டம் போல்
    கானல் நீர்!
    ஏமாற்றும் தரை வெளிச்சம்!
    தூரத்துக் கரும்புகை
    காளான் முகில்,
    அணுவெடிப்புச் சோதனை
    புரியும்
    அரங்கேற்றம்! அனைத்தும்
    மாயத் தோற்றம்!
    நிழற்படத்தை நேராக்கிப் பார்!
    நிழல் நிஜமாகிறது!
    தெருவில் இருநபர் நடக்கிறார்!
    பெருமழை பெய்து
    நிழல் தெரிகிறது!
    இதுதான் மெய்யான
    நடப்பு.
    தலை கீழாய்ப் பார்த்தால்
    உலகக் கேடுகள்
    கலக்கிடும் உன் நெஞ்சை!
    நிழலாகும்
    நிஜம்!

    நிழலின் மாயத்தோற்றம் நிஜத்தையே பொய்யாக்கிக் காட்டவல்லது. அதனை அப்படியே நம்பாமலிருப்பதே நல்லது. ’கண்ணால் காண்பதும் பொய்’ என்பது ஆன்றோரின் அனுபவ மொழியன்றோ?

    ”நெஞ்சைப் பதைக்கவைக்கும் நிழலுருவை நம்பாதே! அஞ்சச் செய்யும் அது! நிழற்படத்தை நேராக்கு; புத்தியைக் கூராக்கு! உண்மை ஒளி(ர்)விடும்!” என்று நன்மொழி நவின்றிருக்கும் திரு. சி. ஜெயபாரதனை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென அறிவித்துப் பாராட்டுகின்றேன்.

    தொடர்ந்து ஆர்வமுடன் படக்கவிதைப் போட்டியில் பங்கேற்றுவரும் கவிஞர்களுக்கும் என் பாராட்டு உரியது!

     

     

    Share
  • ஆணேறு தழுவும் வீரனின் நடுகல்!

    பவள சங்கரி

    IMG_20170204_152451391

    சேலம் அரசு அருங்காட்சியகத்தில் கிடைத்த பண்டைய தமிழர் வீர விளையாட்டிற்கான மற்றுமொரு ஆதாரம் – ஆணேறு தழுவும் சிற்பம்.  தமி வீரன் ஒருவன் காளையின் இரு கொம்புகளையும் பிடித்து அடக்குவது போன்று அமைந்த அற்புதமான சிற்ப வேலைபாடுகள் கொண்ட நடுகல் இது! 14 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த நடுகல் என்பதும் குறிப்பிடத்தக்கது.

    Share
  • விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு மற்றுமொரு தடைக்கல்?

    பவள சங்கரி

    சென்ற ஆண்டு 28 சணல் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 48 ஆலைகள் மூடப்பட்டுள்ளன. விவசாயப் பொருட்களிலிருந்து உற்பத்திப்பொருள் தயாரிப்புகளை நிறுத்தினால் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்படும். மக்கிப்போகும் சணல் உற்பத்தியை நிறுத்திவிட்டு பெட்ரோலியப் பொருட்களான நெமிலிப் (பாலிதின் பைகள்) பைகளுக்கு அரசு ஆதரவு தெரிவித்து நீர் பிடிப்பு ஆதாரங்களில் பாதிப்பு உண்டாக்கிவிடுமோ என்று சமூக ஆர்வலர்களின் கவலைக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்? விவசாய வேலை வாய்ப்புகளிலும் பாதிப்பு ஏற்படும் என்பதும் மறுக்கவியலாது. வங்க முதல்வர் சகோதரி மம்தா பானர்ஜி அவர்கள் இதில் தலையிட்டு தக்க நடவடிக்கைகள் எடுப்பார் என்று நம்புவோமாக!

    Share
  • நிதிநிலை அறிக்கை

    பவள சங்கரி

    சென்ற ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவித்த திட்டத் தொகைகள் எத்தனை சதவிகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளன, மீதமுள்ள தொகைகள் இந்த ஆண்டுத் திட்டங்களோடு இணைக்கப்படுமா. மாதாந்திர வாரியாக இந்தத் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த அறிக்கைகள் அரசு பெறுகிறதா? பல திட்டங்கள் (நிர்பயா திட்டம் போன்று) தொகை அறிவிக்கப்பட்டும் செயல்படுத்தப்படாமலே பல ஆண்டுகளாக தொடர்கிறது. இதற்கு ஏதாவது நடவடிக்கை அரசு எடுக்குமா. இதைப்பற்றி எந்தத் தகவலும் இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வெளியிடவில்லை என்பது வருத்தத்திற்குரியது.

    Share