அப்பாவி பொதுசனத்தின் புலம்பல்!
பவள சங்கரி
பிரகாசம் ரெட்டி, குமாரசாமி ராஜா, காமராசர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர். போன்றோர் ஆட்சி செய்த தமிழ்நாட்டில் பினாமி ஆட்சி தேவையா? எந்தக் கொள்கையின் அடிப்படையில் இந்த ஆட்சி? திராவிடர் நல்வாழ்விற்காக ஏற்படுத்தப்பட்ட ஆட்சியின் நிலை என்ன? காமராசர் ஆறாம் வகுப்பு படித்தவர்தான். கல்விக் கண்ணை திறந்துவைத்தார். ஆனால் பதினோறாம் வகுப்பு படித்துள்ள நமது கல்வியமைச்சர் நீட் தேர்வுகளிலும், தொழில்நுட்பத் துறை, சி.பிஎஸ்,சி யிலும் என்ன கொள்கை முடிவு எடுத்து செயல்படப் போகிறார்? கர்நாடகாவில் காவேரியின் குறுக்கே மேகதூதில் இரண்டு அணைகள் கட்டுவதற்காக 5000 கோடி பணம் ஒதுக்கி பணியைத் துவங்கிவிட்டனர். ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே அணை கட்ட ஆரம்பித்துவிட்டனர். கொங்கு பிரதேசத்தின் முதுகெலும்பான பவானியில் கேரள அரசு அணை கட்டுகிறது. பொதுப்பணித் துறையையும் கவனித்துக்கொண்டிருக்கும் முதலமைச்சர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார். தங்கள் பதவியைக் காக்கும் போராட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டு இருக்கப்போகிறார்களா? தமிழகத்தின் நலனில் சிறுதுளியேனும் அக்கறை கொள்வார்களா?