Category: பொது

  • ரமலான் வருக! வருகவே!!

    -கவிஞர் காவிரிமைந்தன்

    உலகமெலாம் செழிக்கவேண்டி
    உள்ளமெலாம் ஒளியையேந்தி     ramalaa
    வான்பிறையின் வழித்தடத்தில்
    வயிற்றுப்பசி தான் உணர்ந்து
    மாதம் ஒரு முப்பது நாள்
    மாண்புடனே நோன்பிருந்து
    தன்னுயிர்போல் மண்ணுயிர்களெனும்
    தத்துவத்தைத் தான் அறிந்து
    இறையருளின் கருணையினால்
    ஈகைக்குணம் நிறையக்கண்டு
    ஒருமித்தக் கருத்தாலே
    ஒன்றிவாழும் அனைவருக்கும்
    உள்ளம்நிறை வாழ்த்துக்களை
    உரித்தாக்கும் திருநாள் ரமலான் வருக! வருகவே!!

     

    Share
  • அறிந்துகொள்வோம்!

    -மேகலா இராமமூர்த்தி

    தேனின் மகத்துவம்!

    honey’சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!’ என்றார்கள் முருக பக்தர்கள். ’முருகன்’ என்ற சொல் போலவே ‘தேன்’ என்ற சொல்லைச் சொல்லும்போதும் நம் நாவும் மனமும் இனிக்கவே செய்கின்றது. அதனால்தான், மணிவாசக அடிகளும் தம் திருவாசகத்தில் ’தேனாய் இன்னமுதமுமாய்த் தித்திக்கும் சிவபெருமான்’ என்று சிவனைத் தித்திக்கும் தேனுக்கு ஒப்புமை காட்டுகின்றார் போலும். இனிமைக்கு மட்டுந்தான் தேன் உரியதா? இல்லை…அதையும் தாண்டிய அபூர்வ மருத்துவ குணங்களும் நிறைந்த அருமருந்து தேன்!

    தேனுக்கு நீண்ட மருத்துவ வரலாறு இருக்கின்றது. என்ன நம்ப முடியவில்லையா? ஆனால் அதுதான் உண்மை. தேனின் மருத்துவ மகிமையை வெகு காலத்திற்கு முன்பே மாந்தகுலம் உணர்ந்துகொண்டுவிட்டது.

    பண்டைய எகிப்தில் கடவுளருக்குத் தேனைப் படையல் செய்ததோடு அல்லாமல், உடலில் ஏற்படும் காயங்களுக்கும் மேல்பூச்சு மருந்தாக (topical medicine) அதனைப் பயன்படுத்தி வந்துள்ளனர். தேனை உண்டால் நீண்டநாள் உயிர்வாழலாம் எனும் நம்பிக்கையை அன்றைய கிரேக்க மக்கள் கொண்டிருந்தனர். தேனின் பெருமையை இஸ்லாமிய மறைநூலான குரானும், கிறித்தவர்களின் மறைநூலான விவிலியமும்கூடப் பேசுகின்றன.

    இன்றைய நவீன அறிவியல் தேனின் நற்குணங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து கண்டு, பண்டைய மக்களின் நம்பிக்கைகளை உறுதி செய்துள்ளது.

    நுண்ணுயிரிகளை, குறிப்பாக நாமுண்ணும் உணவிலிருந்து தோன்றும் e-coli, Salmonella போன்ற நுண்ணுயிரிகளை அழிப்பதில் தேனின் பங்கு குறிப்பிடத்தக்கது. அதுபோல் உடலில் ஏற்படும் அழற்சிகளுக்கு எதிராகவும் (anti-inflammatory) தேன் வலிமையோடு செயல்படுகின்றது.  

    சளித் தொல்லை, இருமல் போன்றவற்றை நீக்குவதில் தேன் மிகுந்த ஆற்றல் வாய்ந்தது என்கிறார் அமெரிக்காவிலுள்ள மேரிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் (family physician) அரியேன் கொமோட்டா (Ariane Cometa).

    இருமலால் அவதியுற்ற குழந்தைகளை இரு பிரிவாகப் பிரித்து, ஒரு பிரிவினருக்கு மருந்துக்கடைகளில் கிடைக்கும் டெக்ஸ்ட்ரோமெதார்ஃபன் (Dextromethorphan) எனும் இருமல் தடுப்பானையும் (cough suppressant) மற்றொரு பிரிவினருக்கு பக்வீட் (buckwheat) எனும் (புல்வகையைச் சேர்ந்த) ஒரு செடியின் பூக்களிலிருந்து எடுக்கப்பட்ட தேனையும் கொடுத்து ஆய்வு செய்ததில், அதிசயிக்கத்தக்க வகையில் தேனுண்ட குழந்தைகள் இருமல் மருந்து உட்கொண்ட குழந்தைகளைக் காட்டிலும் விரைவில் நிவாரணம் பெற்றது கண்டறியப்பட்டிருக்கின்றது. இஃது இருமலைப் போக்குவதில் தேனின் அளப்பரிய ஆற்றலை உறுதிப்படுத்தியுள்ளது எனலாம்.

    தேனைத் தொடர்ந்து உண்டுவந்தால் கண்பார்வைக் கோளாறுகள் நீங்கும். எளிதில் நோய்த்தொற்று ஏற்படாவண்ணம் நம் உடலின் நோய் எதிர்ப்பாற்றல் மிகும். தேனுடன் எலுமிச்சம் சாற்றைக் கலந்து பருகிவர வாந்தி, தலைவலி போன்றவை குணமாகும்.

    வெந்நீரில் ஒரு தேக்கரண்டி தேனைக் கலந்து (வெறும் வயிற்றில்) பருகிவரப் பருத்த உடல் மெலியும். மெலிந்த உடலை பருக்கச் செய்வதற்கும் தேனே உதவுகின்றது. ஆம்! காய்ச்சிய பாலில் சிறிதளவு தேன் கலந்து தொடர்ந்து பருகிவர உடல் பூசினாற்போல் மாறும். இவையெல்லாம் மக்கள் அனுபவத்தில் கண்ட உண்மைகள்.

    எவ்வளவு நாள் ஆனாலும் கெடாத தன்மை கொண்டது தேன். அதனால்தான் சித்த மருந்துகள் பலவற்றிற்கும் தேனே ஆதாரப் பொருளாய்த் திகழ்கின்றது. சூரணங்கள் பெரும்பாலும் தேனில் குழைத்துச் சாப்பிடும் வகையிலேயே சித்த மருத்துவர்களால் தயாரிக்கப்படுவதை நாம் அறிவோம்.

    மருந்துப் பொருளாய் மட்டுமின்றி அழகுசாதனப் பொருளாகவும் தேன் பயன்படுகின்றது. பாலும் தெளிதேனும் இறைவனுக்குப் படைப்பதற்கு மட்டுமல்லாமல் நம் முகத்துக்கும் ஏற்றவையே. பாலோடு தேனைக் கலந்து பூசுவதால் முகம் மிருதுத்தன்மை பெறும். தேனோடு சிறிது கடலைமாவு கலந்து முகத்துக்கு பேஸ்பேக் (face pack) போட்டுவிட்டு, பதினைந்து நிமிடங்கள் கழித்து மிதமான சுடுநீரில் கழுவினால் முகம் கண்ணாடிபோல் பளபளக்கும். வெயிலினால் கருத்த சருமத்தை மாற்றச் சிறிது ஆலிவ் எண்ணெயுடன் தேன் கலந்து தடவி இளஞ்சூடான நீரில் கழுவி வர நல்ல பலன் தெரியும்.

    இவ்வாறு, சர்வரோக நிவாரணியாக, சிறந்த அழகு சாதனப் பொருளாகத் திகழ்ந்துவரும் தேனை அன்றாடம் பயன்படுத்துவோம். நோய்களை வென்று நல்வாழ்வு பெறுவோம்!

    Share
  • எனக்கான நேரமில்லை!

    -கனவு திறவோன்

    என் நேரத்தைக் கேட்கிறாயே
    என்ன செய்வேன்?
    கவிதையைக் கேட்டிருந்தால்
    தந்திருப்பேன்!

    நீ வாழும் என் சரிதம்
    அது மட்டும்தான் என்பதால்
    ஊருக்கே காட்டுகிறேன்
    உனக்குத் தர மாட்டேனா?

    என் மன வானத்தைக் கேட்டிருந்தால்
    தந்திருப்பேன்
    கற்பனையில் வாழ்ந்து களைத்துப்
    போயிருக்கிறேன்!

    உடல் உந்தி வாழுதல்
    உவப்பில்லை
    சிறகாய் இணைந்திட வா
    சேர்ந்தே பறப்போமே!

    சுவாசத்தைக் கேட்டிருந்தால்
    தந்திருப்பேன்
    நீ இருக்கிறாய் என்பதின்
    சாட்சியமே அதுதான்!

    நற்சாட்சிகள் இருந்து என்ன பயன்?
    கணக்குப் பிழைகள் தானே
    வழக்கை முடிக்கின்றன!

    என் நேரத்தைக் கேட்டால்
    எப்படித் தருவேன்?
    அஃது எனதல்ல…

    நீயே என் நேரத்தை
    நிர்ணயிக்கிறாய்
    சில நாட்களை
    நிமிடங்களில் முடிக்கிறேன்
    சில நாட்களை
    மாமாங்கமாய்க் கடக்கிறேன்
    நீட்டிப்பதும் சுருக்குவதும்
    உன் செயல் தான்!
    உனக்கான என் நேரத்தை
    கேட்பது மரபோ?

    என் நேரத்தைச் சபிப்பதும்
    ஆசிர்வதிப்பதும்
    நீ தான்!
    வரம் தந்தவளே
    கரம் ஏந்தலாமா?

    என் நேரத்தைக் கேட்கிறாயே
    என்ன செய்வேன்?

     

    Share
  • சம்பளத்தின் மரணம்

    -கவிஜி

    பித்த நிலைக்குள்
    போகும் உன்னதத் தருணம்
    மொத்தக்
    கொடியில் ஒத்த ஆடை…

    தாவரங்கள் துருவங்கள்
    இலைமறையாய்
    உள்ளங்கை
    மறைக்கும் உயிரோசைக்குள்
    காடு கொண்ட ஒற்றையடி…

    மதி கொண்ட நிறத்தின்
    மௌன மொழி மண்டிய
    பயத்தில் முயங்கித்
    திரிவது பூனை
    மறந்த மதில்…

    சொல்லுதல் செய்தல்
    இடைவெளி இல்லாத
    நூலகத்தில் பாசி படர்ந்து
    தூசுகளூடே சிறு கீற்று
    வெளிச்சம்…

    தத்தம் கண்களின் கவிதை
    கொன்று குவிக்கும்
    குருட்டுச் சிந்தனைக்குள்
    மயிரடர்ந்த
    மயக்கத் தாழ்…

    இரு கைகள் ஆணி
    இறங்க
    இன்னும் இரு கைகள்
    நீட்டியவனே
    சம்பளம்…

     

    Share
  • ஞானம் தேடுகிறேன்

    -கனவு திறவோன்

    புத்தருக்கு ஞானம் தந்த
    போதி மரம்
    எனக்கு
    ஜன்னல் தந்தது
    கதவு தந்தது
    கட்டில் தந்தது
    கோவில் கூரை தந்தது
    புத்தரின் சிலையும் தந்தது
    எல்லாவற்றையும்
    வைத்துக் கொண்டு
    ஞானம் தேடுகிறேன்.

    Share
  • அயல்நாட்டு மோகம்!

    -ரா.பார்த்தசாரதி

    வானுர்தி மேலேறி  அயல்நாட்டு வாசம்
    புதிய தேசம் புதிய மனிதர்களின் நேசம்
    மொழி, குணம் உணர்ந்து செயல்பட வேண்டுமே
    உறுதிகொண்டு கண்விழித்து உழைக்க வேண்டுமே !

    அங்கே அன்னையின்  அரவணைப்பு இல்லை
    ஆசை மனைவியின் இன்முகம் காண்பதில்லை
    பெற்ற மகன் மகளின் ஸ்பரிசம் இல்லை
    அன்புடன் உறவாடும் நண்பனும் இல்லை !

    அன்னமில்லை நேரத்திற்கு நமக்கு ஆகாரமில்லை
    பண்டிகை இல்லை அன்புகாட்ட  யாருமில்லை
    உணர்வுகள் வெறுமையுடன்  மாறிவரும் நிலை
    வேதனையையும் துன்பத்தையும் வெளிக்காட்டாத நிலை !

    பணமிருக்கும் நாட்டில் நல்ல மனதிற்கு இடமில்லை
    குணமிருக்கும் நாட்டில் பணத்திற்கு வழிஇல்லை
    வாழ்க்கை எனும் ஓடத்தில் வந்து சேரும் தடைகள்
    வந்தனவற்றை ஏற்றுக்கொள்ளும் இக்கால மனிதர்கள் !

    கல்வி, கலைகள் எல்லாம் நன்கு கற்றோம்
    வேலை கிடைத்து  வெளிநாட்டில் நன்கு உழைக்கின்றோம்
    காரணம், இவை எல்லாம் பெற்றோரின்  ஆசையே
    கலைமகளை ஒதுக்கிக் காசினைப் பூஜிக்கின்றாயே !

    பணத்திற்காக  வெளிநாடு  விரைந்து  சென்றாய்
    பெற்றோர்களை நினைந்து நிம்மதி இழக்கின்றாய்
    நம் நாட்டு  உணவின் சுவையை  மறந்தாய்
    மேல்நாட்டு உணவிற்கு மயங்கி அடிமைப்பட்டாய் !

    வெளிநாட்டில் இருக்கும்போது நம் நாட்டின் அருமை தெரியும்
    பண்பு கலாசாரம் இவற்றின் மதிப்பு தெரியும்
    பணத்திற்காகப் பிள்ளைகளை அனுப்புகிறோம் என அறிவோம்
    அறிவாளிகள் வெளியேற்றம் என்பதை நாமே நடத்துகின்றோம் !

    பிள்ளைகளைப் பணத்திற்காகப் புதைகுழியில் தள்ளுகின்றோம்
    பாசத்தையும் அன்பையும் தள்ளிவைத்துத் துயரப்படுகின்றோம்
    பிள்ளைகளின் அறிவை அடமானம் வைக்கின்றோம்
    தாய்நாட்டின்  வளர்ச்சியைத் தடை செய்கின்றோம் !

    பணம் எட்டிப் பார்க்கும் பாசம் பக்கத்தில் இருக்காதே
    பணத்திற்காக ஆசைப்பட்டு உறவுகள் துரத்தப்படுகிறதே
    தவறினை உணர்கின்ற நேரத்தில் காலங்கள் கழிக்கப்படுகிறதே
    எண்ணியே வாழ்க்கை  இருதலைக் கொள்ளியாய் இருக்கிறதே!

    என்றும் காலங்கள் மாறித்  தன்னிறைவு  பெற்றாலும்
    பணம் இருந்தாலும் வசதிகள்  இருந்தாலும்
    மனம் பாசத்திற்காக  ஏங்கும்  காலமாய் இருந்தாலும்
    என்று மாறுமோ  இந்த அயல் நாட்டு  மோகம்?!

     

    Share
  • அறிந்துகொள்வோம்!

    -மேகலா இராமமூர்த்தி

    ரஷிய இலக்கிய மேதை – லியோ டால்ஸ்டாய் (Leo Tolstoy)

     

    Tolstoyஉலகின் மிகச்சிறந்த புதின எழுத்தாளர்களில் ஒருவராக இன்றளவும் கருதப்படுபவர், லியோ டால்ஸ்டாய் என்றழைக்கப்பட்ட லெவ் நிக்கலாயெவிச் டால்ஸ்டாய் (Lev Nikolayevich Tolstoy). இவர் ரஷ்யாவிலுள்ள யாஸ்னயா போல்யானா (Yasnaya Polyana) எனும் ஊரில் செப்டம்பர் 9, 1828-இல் மிகவும் புகழ்வாய்ந்த பிரபுத்துவப் பின்னணியைக் கொண்ட குடும்பத்தில் பிறந்தார். சிறு வயதிலேயே தாய் தந்தை இருவரையும் இழந்த டால்ஸ்டாய் உறவினர்களின் அரவணைப்பில் வளர்ந்தார்.

    1848-ஆம் ஆண்டு ரஷியாவின் பழமை வாய்ந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றான கசான் பல்கலைக்கழகத்தில் (Kazan University) அடியெடுத்துவைத்த டால்ஸ்டாய், கிழக்கத்திய மொழிகளையும் (Oriental Languages) பின்பு சட்டத்தையும் தன் விருப்பப் பாடங்களாகப் பயிலத் தொடங்கினார். கல்வியில் பின் தங்கியவராகவே அவரைக் கருதிய அவருடைய பேராசிரியர்கள், ’படிப்பதில் விருப்பமில்லாதவர், அதற்கான தகுதியும் இல்லாதவர்’ என்றெல்லாம் அவர்மீது முத்திரை குத்தவே, மனவருத்தமுற்றுக் கல்வியைப் பாதியிலேயே கைவிட்டுத் தன் சொந்த ஊருக்குத் திரும்பினார். பின்பு இராணுவத்தில் வேலை செய்துகொண்டிருந்த தன் மூத்தசகோதரர் நிக்கொலேவைப்போல (Nikolay) தானும் இராணுவத்தில் சேர்ந்தார். அப்போதுதான் அவருடைய எழுத்துப்பயணம் ஆரம்பித்தது எனலாம். இராவணுப்பணியிலிருந்து விலகிய பின்னும் தன் எழுத்துப்பணியிலிருந்து அவர் விலகவில்லை.

    டால்ஸ்டாயின் மிகச்சிறந்த இலக்கியப் படைப்புக்களாக இன்றளவும் பேசப்படுவவை ’போரும் அமைதியும்’, ’அன்னா கரீனினா’ ஆகிய இரு நாவல்கள். சாகாவரம் பெற்ற இவ்விரு நாவல்களும் உலகின் தலைசிறந்த நாவல்களின் வரிசையில் இன்றளவும் தொடர்ந்து இடம்பிடித்து வருபவை.

    ’போரும் அமைதியும்’ எனும் நாவல், ரஷ்யாவில் நிகழ்ந்த நெப்போலியன் போனபார்ட் (Nepoleon Bonaparte) தலைமையிலான பிரெஞ்சு ஊடுருவலை, ஐந்து (ரஷிய) பிரபுக் குடும்பங்களின் பார்வையில் பேசுகின்றது. ஆனால் இந்நாவலின் இறுதி அத்தியாயங்கள் முந்தைய கதைப்போக்கிலிருந்து பெரிதும் விலகி, தத்துவங்களை உரையாடல் நடையில் பேசுவதாய் அமைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    ஒரு நாவலுக்குரிய இலக்கணங்களிலிருந்து மாறியிருப்பதாலோ என்னவோ, ’”போரும் அமைதியும் எனும் இந்நாவலை, ஒரு நாவல் என்று என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை; வேண்டுமானால் அதனை வரலாற்று நிகழ்வுகளின் தொகுப்பாய்க் கொள்ளலாம்” என்று டால்ஸ்டாயே கூறியிருக்கின்றார். தன்னுடைய அடுத்த நாவலான ”அன்னா கரீனினாவே (Anna Karinina) தனது உண்மையான முதல் நாவல்” என்பது அவருடைய கருத்தாகும்.

    அக்கூற்றை மெய்ப்பிக்கும் வகையில், அன்னா கரீனீனா மிக நேர்த்தியான வடிவம் கொண்ட ஒரு நாவல் என்பது பெரும்பான்மையான உலக எழுத்தாளர்கள், விமரிசகர்கள் மற்றும் வாசகர்களின் எண்ணமாய்ப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றது. டால்ஸ்டாயினால் புனையப்பட்ட மாபெரும் உணர்ச்சிக் காவியம் அன்னா கரீனினா; அஃதோர் உயிருள்ள கலைப்படைப்பு எனில் மிகையில்லை.

    காதலுக்காகக் குடும்ப வாழ்க்கையைத் துறப்பதா? அல்லது குடும்ப வாழ்க்கையைத் துறப்பதால் ஏற்படும் களங்கத்திற்கும் ஒழுக்கக்கேட்டிற்கும் பயந்து காதலில்லாத திருமண வாழ்வையே தொடர்வதா? எனும் மிகச் சிக்கலான கேள்வியும் அதற்கான பதிலுமே இந்நாவலின் பயணமாய் நீண்டிருக்கின்றது.

    ”‘மகிழ்ச்சியான குடும்பங்களெல்லாம் ஒரே மாதிரியாகத்தான் இருக்கின்றன; துயரமான குடும்பங்கள்தான் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் துயரப்படுகின்றன” (Happy families are all alike; every unhappy family is unhappy in its own way). எனும் அன்னா கரீனினாவின் தொடக்க வரிகள் மிகவும் புகழ்வாய்ந்தவை.

    ரஷியாவின் மேட்டுக்குடியைச் சேர்ந்த பெண்ணான ’அன்னா’வே இந்நாவலின் நாயகி. அவளுடைய மகிழ்ச்சியில்லா மண வாழ்க்கை, பின்பு மற்றொரு ஆடவனோடு (Vronsky) அவளுக்கு ஏற்படும் காதல், அதனால், கணவனையும் மகனையும் பிரிந்துசெல்லும் அன்னாவுக்குச் சிலகாலத்திற்குள்ளாகவே தன் காதலன் மீது ஏற்படும் அவநம்பிக்கை, ஐயம், தன் முந்தைய மண வாழ்க்கையை விட்டுவந்தது பற்றிய குற்ற உணர்வு இப்படிப் பல்வேறு நிலைகளில் அன்னாவின் மனஉணர்வுகளை மிக நுண்மையாகச் சித்தரித்திருக்கிறார் டால்ஸ்டாய். உலக இலக்கியத்தில் உளவியல் ரீதியாக அதிநுண்ணிய ஆய்வுகள் செய்யப்பட்ட வெகு சில நாவல்களில் அன்னா கரீனினாவும் ஒன்று என்பது ஆய்வாளர்கள் கருத்து.

    உலக நாடுகளிலுள்ள பல்வேறு மதங்கள் பற்றியெல்லாம் ஆர்வத்தோடு அறிந்துவைத்திருந்த டால்ஸ்டாய், இந்தியாவின் வீரத்துறவி விவேகானந்தர் மீது பெருமதிப்பு கொண்டிருந்தார். “தன்னலமற்ற ஆன்மிக வழியில் சென்றவர்களில் இவரையும் விட அதிகமான உயர்ந்த நிலையை அடைந்தவர் எவரேனும் இருக்கிறாரா என்பது சந்தேகமே” என்பது விவேகானந்தரைப் பற்றிய ரஷிய இலக்கிய மேதையின் மதிப்பீடு.

    அகிம்சையில் அசைக்கமுடியாத நம்பிக்கை கொண்டிருந்த  டால்ஸ்டாய், அதை வலியுறுத்தி எழுதிய ’பரலோக இராச்சியம் உன்னுள் இருக்கிறது’ (The kingdom of God is within you) எனும் நூலே, டால்ஸ்டாயைத் தன் குருவாகக் கொண்டிருந்த மகாத்மா காந்திக்கு அறவழியில் போராட மிகப்பெரும் உந்துசக்தியாக இருந்திருக்கின்றது என அறிகின்றோம்.

    இராமசேஷன் என்ற இந்தியப் பத்திரிகையாளர் ஒருவர், ’ஆங்கிலேயரின் கொடுமைகள் தாங்க முடியவில்லை. அதிலிருந்து தப்பிக்க ஏதாவது வழி சொல்லுங்கள் என்று குறிப்பிட்டு டால்ஸ்டாய்க்கு ஒரு கடிதம் எழுதினாராம். அதற்குப் பதில் எழுதிய டால்ஸ்டாய், ‘ஹிண்டு குரலில்’ (திருக்குறளைத்தான் அவர் அப்படிக் கூறியுள்ளார்) உள்ள ’இன்னா செய்யாமை’ அதிகாரத்தின் ஆறு குறட்பாக்களைக் குறிப்பிட்டு, (அதன்படி) அறவழியில் போராடுங்கள்; அதுவே உங்கள் மண்ணுக்கு ஏற்றது என்று தன் பதிலில் தெரிவித்திருந்தாராம். (ரஷிய மேதையைக் கவர்ந்தவர் ஐயன் வள்ளுவர் என எண்ணும்போது நம் நெஞ்சு விம்மிதம் கொள்ளுகிறது!)

    மிகவும் வசதியான குடும்பத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் எளிமையை விரும்புபவராகவும், அறவழியில் போராடுவதில் நம்பிக்கை கொண்டவராகவுமே டால்ஸ்டாய் வாழ்ந்தார். அமர இலக்கியங்கள் பல படைத்து, இன்றும் உலக மக்கள் பலரும் போற்றும் ஓர் இலக்கியவாதியாக, தத்துவஞானியாக, ஆன்மிகப் போராளியாக அவர் திகழ்ந்து வருகின்றார்.

    அம்மேதையின் நூல்களைக் கற்போம்! அவர் வாழ்ந்துகாட்டிய எளிய வாழ்க்கையை நாமும் பின்பற்றுவோம்!

     

    Share
  • அறிந்துகொள்வோம்!

    -மேகலா இராமமூர்த்தி

    இங்கிலாந்தின் இணையற்ற சிந்தனையாளர் – பெர்ட்ரண்ட் ரசல் (Bertrand Russell)

    Bertrand_Russellபுகழ்பெற்ற தத்துவவாதி, ஏரணவியலர்(தருக்கவாதி), கணிதவியலாளர், சமூகச் சீர்திருத்தவாதி எனப் பன்முகங்கள் கொண்டவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பெர்ட்ரண்ட் ஆர்தர் வில்லியம் ரஸல் ஆவார். அவருடைய பகுப்பாய்வுத் தத்துவவியல் (analytical philosophy) 20-ஆம் நூற்றாண்டில் சமூகத்தில் மிகப்பெரும் மாற்றத்தையும் புரட்சியையும் தோற்றுவித்தது எனில் மிகையில்லை.

    பிரிட்டனிலுள்ள மேட்டுக்குடியினரிடம் பெரும் செல்வாக்குக் கொண்ட வளமான குடும்பமொன்றில் மே 18, 1872-இல் பிறந்தார் பெர்ட்ரண்ட் ரஸல். அவருடைய தாய் தந்தையர் இருவருமே முற்போக்குச் சிந்தனைகள் உடையோர். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தபோதிலும், அருமை அன்னையின் அன்பைத் தொடர்ந்து பெறமுடியாத வகையில் ரஸலின் வாழ்வில் விதி குறுக்கிட்டது. ஆம்! தன்னுடைய இரண்டாவது வயதிலேயே டிப்தீரியா நோய்க்குத் தாயைப் பலிகொடுத்த ரஸல், தன் இளமைப் பருவத்தைப் பாட்டி வீட்டில் கழித்தார். அதனால்தானோ என்னவோ, அவர் பாட்டிக்குப் பிடித்த விவிலிய வாசகமான “கும்பலைப் பின்பற்றிப் பிறருக்குத் தீங்கு செய்யாதே!” என்பதே பின்னாளில் அவருடைய தாரக மந்திரமாயிற்று!

    தன் இளமைப்பருவத்தைப் பெரும்பாலும் தனிமையிலேயே கழிக்கவேண்டிய அவலநிலை ரஸலுக்கு நீடித்ததால், தற்கொலை எண்ணங்கள் அடிக்கடி அவருக்குத் தலையெடுத்திருக்கின்றன. அத்தருணங்களிலெல்லாம் தன்னை உயிர்ப்புடன் வைத்திருந்தவை ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியின் படைப்புக்களே என்று தன் சுயசரிதையில் ரஸல் குறிப்பிடுவது, ஷெல்லியின் ஆளுமையை நமக்கு நன்கு உணர்த்துகின்றது.

    பள்ளிக்கல்விக்குப்பின், கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் கணிதம், தத்துவம் ஆகியவற்றை விருப்பப் பாடங்களாகப் படித்து இளங்கலைப்பட்டம் பெற்றார் ரஸல்.

    தன் வாழ்நாள் முழுவதுமே அரசியல் மற்றும் சமுதாயச் சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டிருந்த பெர்ட்ரண்ட் ரஸல், போருக்கு எதிரான புரட்சியாளராகவும் (anti-warist), முதலாளித்துவத்தை முற்றும் எதிர்ப்பவராகவும் (anti-imperialist) திகழ்ந்தார். அவருடைய எண்ணங்களும் எழுத்துக்களும் இடதுசாரிச் சிந்தனையாளராக அவரை அடையாளப்படுத்தினாலும், தன்னை முழுமையான பொதுவுடைமைவாதி என்று கூறுவதற்கில்லை என்று அவரே குறிப்பிட்டிருப்பது இங்கே எண்ணத்தக்கது.

    1896-ஆம் ஆண்டு தன்னுடைய அரசியல் ஆய்வு நூலான ‘ஜெர்மானிய சமுதாய மக்களாட்சி’யைப் பதிப்பித்து வெளியிட்டார். 1905-ஆம் ஆண்டு ’மைண்ட்’ எனும் தத்துவ இதழில் இவருடைய ‘ஆன் டினோட்டிங் (On denoting) எனும் புகழ்பெற்ற கட்டுரை வெளியானது. 1903-இல் கணிதக் கோட்பாடுகள் (principles of mathematica) என்ற நூலையும், 1910-இல் ’கணித அணுகுமுறை’ என்ற மற்றொரு நூலையும் வெளியிட்டார்.

    1914—ஆம் ஆண்டு தொடங்கிய முதல் உலகப்போரை (World War I) எதிர்த்ததால் அவர் சிறைசெல்ல நேரிட்டது. அதற்காக அவர் மனந்தளரவில்லை. போருக்கு எதிரான அவருடைய சிந்தனைகளிலும் மாற்றமில்லை. 1939-இல் மீண்டும் தொடங்கிய இரண்டாம் உலகப்போரையும் (World War II) அவர் கடுமையாக எதிர்த்து அதற்குக் காரணமாயிருந்த ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லருக்கு எதிராகப் பிரசாரங்கள் செய்தார்.

    தன்னுடைய சொந்த வாழ்வில் பல்வேறு சிக்கல்கள், தொடர் மணமுறிவுகள் என்று தோல்விகள் ஒருபக்கம் இருந்தாலும் அதன்காரணமாய் அவருடைய எழுத்துப்பணிகள் முடங்கிப்போகவில்லை. தொடர்ந்து பல்வேறு நூல்களை எழுதிக் குவித்தார். அவருடைய மேனாட்டுத் தத்துவத்தின் வரலாறு (History of Western Philosophy) பரபரப்பாக விற்பனையாகிப் பணமழையைக் கொட்டச் செய்தது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1950-ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது.

    தருக்கவியல், அறிவியல், மொழியியல், கணிதம் எனப் பல்துறைகளில் தொடராய்வுகள் செய்து நூல்கள் எழுதி வெளியிட்ட ரஸல், இறையியல் குறித்தும் தன் கருத்துக்களை எவ்வித ஒளிவுமறைவுமின்றித் துணிச்சலாக வெளிப்படுத்தியிருக்கின்றார். இறைநம்பிக்கையைப் பொறுத்தவரைத் தான் நாத்திகனும் அல்லன்; ஆத்திகனும் அல்லன்; கடவுளைப்பற்றியே கவலைப்படாதவன் (Agnostic) என்று கூறியிருக்கிறார் அவர்.

     இன்றளவும் பிரபலமாகத் திகழ்ந்துவரும் அவருடைய கிறித்துவ இறையியல் மறுப்பு நூலான ‘நான் ஏன் ஒரு கிறித்துவன் இல்லை? (Why I am not a Christian?) எனும் நூலில் அவர் முன்வைக்கும் கருத்துக்களாவன:

    ”மதம், முக்கியமாக அச்சத்தின் மேல் உண்டாக்கப்பட்டதுதான் என எண்ணுகிறேன். அதன் ஒரு பகுதி, நமக்கு தெரியாதவற்றைப் பற்றிய நம் அச்சம்; மற்றொரு பகுதி, நம் பக்கத்திலேயே ஓர் சகோதரன் இருந்து நம் துக்கங்களிலும், துயரங்களிலும் ஆதரவு கொடுப்பதுபோன்ற ஓர் உணர்வு! ஒரு நல்ல உலகமானது அறிவு, கருணை, திடமனம் இவற்றை வேண்டுகிறது. அது கடந்த காலத்தின் மேல் பச்சாதாபமுள்ள புலம்பல்களையும், நெடுங்காலத்திற்குமுன் அறிவற்றவர்கள் சொன்ன வார்த்தைகளால் சிறைப்படுவதையும் விரும்பவில்லை”

    அணுஆயுதத் தடையில் தொடர்ந்து ஆர்வம் காட்டினார் ரஸல். 1955-ஆம் ஆண்டு அணுகுண்டுப் பயன்பாட்டைக் கைவிடுவதற்கான ரஸல்-ஐன்ஸ்டைன் பிரகடனம் பதினொரு அணுஇயற்பியலாளர்களின் உடன்பாட்டுடன் கையெழுத்தானது.

    தன் வாழ்நாளின் கடைசிவரைத் தன் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ளாத மனவுறுதியுடன் வாழ்ந்த பேரறிஞர் ரஸல், பிப்ரவரி 2, 1970-இல் மறைந்தார். அவருடைய விருப்பப்படியே அவர் உடல் எவ்வித மதச் சடங்குகளுக்கும் உட்படுத்தப்படாது எரிக்கப்பட்டது.

    இங்கிலாந்தின் இணையற்ற சிந்தனையாளரான ரஸல், “எல்லாவிதமான மூடப்பழக்கங்களுக்கும், கொடுமைகளுக்கும் பிறப்பிடமாயிருப்பது அச்சமே; அத்தகைய அச்சத்தை வெல்வதே அறிவின் தொடக்கமாகும்” என்று கூறியிருப்பது நாம் எண்ணிப்பார்க்க ஏற்றது. எனவே அச்சத்தை விடுத்து அறிவைத் துணைகொள்வோம்!

    ***

    கட்டுரைக்கு உதவிய தளங்கள்:
    http://en.wikipedia.org/wiki/Bertrand_Russell

    http://www.brainyquote.com/quotes/authors/b/bertrand_russell.html
    http://www.britannica.com/EBchecked/topic/513124/Bertrand-Russell

     

    Share
  • மாண்டூக்ய உபநிஷத்து – எளிய விளக்கம் – 1

    ஒரு அரிசோனன்

     எனது சில சொற்கள்:  வல்லமையில் வெளியான “கம்பனும், வால்மீகியும்” ஒப்பீட்டுக் கட்டுரைகள் இன்னும் சில கதைகளுடன் புத்தகமாக வெளியானவுடன், பல தடவைகள் ஜெயபாரதன் உள்பட எனது நண்பர்கள்  தமிழில் கீதை, மற்றும் உபநிஷத்துகளைப் பற்றி  புதியபார்வையில் என்னை எழுதச் சொல்லிவருகிறார்கள்.

    ஆதி சங்கரர் விரிவுரை எழுதிய உபநிஷத்துகளுக்கு எந்தவொரு விளக்கம் நான் எழுதப்புகுந்தாலும் அது அளவுகடந்த, வடிகட்டிய முட்டாள்தனமேயன்றி வேறொன்றுமில்லை.  எனவே நான் அவர்களின் அன்புக்கட்டளையைத் தட்டிகழித்துக்கொண்டே வந்தேன்.

    பிறகு என் மனதும் அதையே சொல்லத் துவங்கியபோது ஒரு நப்பாசை எனக்குள்ளேயே தலைதூக்கியது.

    உடனே, “அட முட்டாளே!  என்ன செயல் செய்யத் துணிகிறாய்?  உனக்கு என்ன அறிவு இருக்கிறது என்று, ஆழம் தெரியாமல் காலைவிடப்பார்க்கிறாய்!” என்று என் உள்ளறிவு என்னை எச்சரித்தது.

    “நீ எதையும் எழுத ஆரம்பித்தால், உன்னைவிட அறிவுமிக்கவர்கள், உன்னுடைய அறிவின்மையைச் சுட்டிக்காட்டி, உன்னை நார்நாராகக் கிழித்துத் துவைத்துத் தொங்கவிட்டுவிடுவார்கள்!’  என்றும் பயமுறுத்தியது.

    இருப்பினும், எனது உள்ளறிவின் எச்சரிக்கையையும், அச்சுறுத்தலையும்மீறி, எழுதத்துணிந்தேன்.  அதற்க்குக் காரணம்…

    உபநிஷத்துகளுக்கு இதுவரை நான் பார்த்த விளக்கங்கள் எல்லாம் பெரும்பாலும் ஆங்கிலத்தில்தான் இருக்கின்றன.  தமிழில் ஒரு சிலவே இருக்கின்றன.  எனவே, ஆதி சங்கரரின் விளக்கவுரை, சுவாமி கம்பீரானந்தா, சுவாமி நிகிலானந்தா, சுவாமி சின்மயானந்தா, சுவாமி கிருஷ்ணானந்தா இவர்களின் விளக்கத்தையும் துணைக்கு வைத்துக்கொண்டு எனக்குத் தெரிந்ததை எழுதப்போகிறேன்.

    தமிழில் உபநிஷத்துகளைப் பற்றி எழுதவேண்டும் என்ற ஆவலே என்னைத்தூண்டுகிறது.

    வடமொழியில் எழுதிய செய்யுள்களுக்கு எனது சிற்றறிவைக்கொண்டு தமிழில் மொழிபெயர்ப்பு, பதவுரை எழுதி, ஆச்சரியாரிகளின் விளக்கவுரைகளின் கலவையைக் கலந்து எனது சக்திக்கு இயன்றவரை எளிதாக இயம்பியிருக்கிறேன்.

    சில சொற்கள் என்பது பல சொற்களாகப் பல்கிப் பெருகிவிட்டன.  இத்துடன் அதை நிறுத்திக்கொண்டு, உபநிஷத்துக்கு வருகிறேன்.

    படிக்கும் முறை:  தமிழில் வடமொழி ஒலிப்புகள் இல்லை என்பதால் 2,3,4 என்ற எண்களை மேற்குறியாகக் கொடுத்திருக்கிறேன்.  தேவநாகரி தெரியாதவர்களும் ஒலிப்பைச் சரியாகப் புரிந்துகொள்ள இது உதவும் என்றே நம்புகிறேன்.

     உபநிஷத்தைப்பற்றி:  எல்லா உபநிஷத்துகளிலும் மிகவும் சிறியதான இந்த உபநிஷத்து அதர்வ வேதத்தில் உள்ளது.  மாண்டூகர் என்ற முனிவரால் கேட்கப்பட்டு எழுதப்பட்ட இதில் மொத்தம் பன்னிரண்டு சொற்றொடர்களே உள்ளன.  இது ஓம் என்ற பிரணவ மந்திரம், பிரம்மம் [பரம்பொருள்], ஆத்மா, ஆத்மாவின் [மனிதனின்] நான்கு நிலைகள்[உள்ளுணர்வுகள்], இவற்றைப்பற்றி ஒரு சூத்திரமாக [formula] ஒரு சொல்லைக்கூட வீணாக்காமல் சொல்கிறது.  இந்த உபநிஷத்தே அத்துவைத தத்துவத்தின் அடிப்படையாக அமைகிறது.  பிரம்மமும் [பரம்பொருளும்] ஆத்மாவும் ஒன்றே என்று நிறுவுகிறது.

    ஆகையால், ஆதிசங்கரரின் பரமகுருவான கௌடபாதர் இதற்கு விளக்கவுரை [காரிகை] எழுதியிருக்கிறார். இந்துசமயத்தின் ஒரு பெரும்பிரிவான அத்துவைத தத்துவத்தை நிலைநிறுத்த ஆதிசங்கரரின் மனத்தில் கருவாகப் பரிணமித்தது இந்த உபநிஷத்தும், கௌடபாதரின் காரிகையும்தான்.

    மேலே தொடர்வோமா…

    MU1

     ஒமித்யேதத3க்ஷரமித3ஹும் ஸர்வம் தஸ்யோபவ்யாக்2யானம்

    பூ4தம் ப4வத்3ப4விஷ்யதி3தி ஸர்வமோங்கார ஏவ

    யச்சான்யது த்ரகாலாதீதம் தத3ப்யோங்கார ஏவ                                                     — 1

     

    ஒமெனுமிந்த அழியாததே இவை எல்லாம்.  அதன் விளக்கமாவதிது.

    ஆனது, ஆகியிருப்பது, ஆகப்போவதென்ற எல்லாமே ஓங்காரம்தான்.

    இவையன்றி முக்காலங்களைக் கடந்தததுவும் ஓங்காரமே.                                       — 1

     பதவுரை:  ஒமிதி – ஓம் என்ற; ஏத3து – இந்தஒரு; அக்ஷரம் – அழிவற்ற ஒன்று [சொல்]; இத3ம் ஸர்வம் – இது எல்லாம்.

    தஸ்ய – அதன்; உபவ்யாக்2யானம் – விளக்கமாவது;  பூ4தம் – ஆனது;  ப4வது3 – ஆகிவருவது; ப4விஷ்யது3 – ஆகப்போவது;  இதி ஸர்வம் – இது எல்லாம்; ஓங்கார ஏவ – ஓங்காரம்தான்.

    த்ரிகாலாதீதம் – [இறந்த, நிகழ், எதிர்] மூன்று காலங்களைக் கடந்த [அப்பாற்பட்ட];   யச்சான்யது – மற்ற எதுவாகிலும்;  தது3 அபி ஓங்கார ஏவ – அதுவும் ஓங்காரம்தான்.

     விளக்கம்:  இந்த முதல் சொற்றொடரில் ஓம் என்னும் பிரணவ மந்திரம் விளக்கப்படுகிறது. எழுத்தையும், சொல்லையும், பேச்சையும் வடமொழியில் அக்ஷரம் என்று சொல்கிறார்கள்.  ஷரம் என்றால் அழிவது என்று பொருள்.  எனவே, அக்ஷரம் என்றால் அழியாதது என்றே பொருள்கொள்ளவேண்டும். ஏன்?  மனிதன் அழியலாம், ஆனால் அவனது சொல் அழிவதில்லை;  பெரியோர் சொல்லிவைத்த சொற்கள் இன்றும் அழியாமல் நம் நினைவில் நிற்கின்றன.  ஒரு மொழி அழிந்தாலும் ஒவ்வொரு மொழியிலும் உள்ள சொற்கள் அழிவதில்லை.  ஆகையால் சொல் என்பது அக்ஷரம், அதாவது அழிவற்றது என்று ஆகிறது.

    எனவே ஓம் எனும் அழிவற்ற இது என்று மாண்டூக்ய உபநிஷத்து துவங்குகிறது.

    இது எல்லாமே என்றால், நம்மால் அறிய முடியும், முடியாத எல்லாமே என்று விளக்கமாகிறது.  இது எல்லாமே ஓம் தான் என்று சொன்னபிறகு அதன் பொருளை விவரிக்கிறது.

    ஆனது, ஆகிக்கொண்டிருப்பது, ஆகப்போவது எல்லாமே ஓங்காரம்தான் என்று அழுத்திச் சொல்கிறது.  பெரும் வெடிப்பு [Big Bang} நிகழ்ந்தபின் இந்த அண்டம் தோன்றியது என்கிறார்கள் அறிவாளிகள்.  அப்படித் தோன்றிய அண்டம், பெரும் மாறுதலை அடந்த்துகொண்டிருக்கும் அண்டம், இனி மாறப்போகும் அண்டம் எல்லாமே ஓங்காரம்தான் என்கிறது.  மேலும் விளக்க, நம்மால் காண முடிவது மட்டும் அல்ல, காண இயலாத, உணர இயலாத மூன்று காலத்திலும் நிகழ்ந்த, நிகழும், நிகழப்போகும் மற்றவை எல்லாமே ஓங்காரம்தான் என்னும்போது…

    ஒரு சொல்லானது எல்லாமாக எப்படி இருக்க இயலும் என்ற எண்ணம் எழத்தான் செய்யும்.  அப்படியானால், அந்தச் சொல்லான ஓம் என்ன என்று அறிய ஆவல் கூடுமல்லவா?  அதற்கு விளக்கம் அடுத்த சொற்றொடரில் பிறக்கிறது.

    அதற்குமுன் முக்காலத்திற்கும் அப்பாற்பட்ட, கடந்த என்ற குறிப்பீட்டைப் பார்ப்போம்.

    நமக்கு மிகவும் அருகில் உள்ள நட்சத்திரம் [விண்மீன்] பிராக்சிமா சென்டாரி [Proxima Centauri]  நமது பூமியிலிருந்து நாலேகால் ஒளிஆண்டு தூரத்தில் இருக்கிறது.  அதை நாம் பார்க்கும் பொது, நாலேகால் ஆண்டுகளுக்குமுன் அது இருப்பதைத்தான் இன்று நாம் காண்கிறோம்.

    எனவே நாம் காண்பது இறந்தகாலத்தைத்தான்.

    அதைப்போல மிகவும் தள்ளி இருக்கும் மற்ற விண்வெளி மண்டலங்கள் இன்னும் பல நூறு/ஆயிரம் ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளன.  எனவே அவற்றை நமது தொலைநோக்கிகள் [telescopes] காணும்போது.  அவ்வளவு பழைய காலத்தில் இருக்கும் ஒன்றையே நாம் காண்கிறோம்.  மேலும் கருந்துளைகளில் [black-holes] காலமே வளைக்கப்பட்டுவிடுகிறது என்றும் விண்வெளி வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

    இந்தக் கூற்று, முக்காலத்திற்கும் அப்பாற்பட்ட, கடந்த ஒன்று நிகழக்கூடும், நிகழுகிறது என்பதுதானே!

    இதை நமது முனிவர்கள் கேட்டுணர்ந்து இருப்பதை வானியல் உறுதிசெய்கிறது.

    ஓம் என்ற அழிவற்ற ஒன்றின் விளக்கம் தொடர்கிறது.

    mu 2

    ஸர்வஹும் ஹ்யேதது3 ப்ரஹ்மாயமாத்மா ப்ரஹ்மா

    ஸோஅயமாத்மா சதுஷ்யாது                                                                           — 2

     எல்லாமே அந்தப் பரம்பொருள்தான். இந்த ஆத்மாவும் பரம்பொருள்தான்.

    இந்த ஆத்மன்[மா] நான்காக பகுதிகளாக இருக்கிறான்.                                            — 2

     பதவுரை:   ஏதது ஸர்வம் – இம்மாதிரியான எல்லாம்;   ப்ரஹ்ம ஹி – பிரம்மம்[பரம்பொருள்]தான்;  அயம் ஆத்மா ப்ரஹ்ம – இந்த ஆத்மாவும் பரம்பொருள்தான்;   ஸ அயம் ஆத்மா – இந்த ஆத்மா என்பவனும்;  சதுஷ்யாது –  நான்கு [கால்] பகுதிகளாக இருக்கிறான்.

    விளக்கம்:  இங்கு ஆத்மாவுக்கும் பரம்பொருளுக்கும் உள்ள தொடர்பும் அத்துடன் ஒங்காரத்திற்கும் உள்ள தொடர்பும் கொண்டுவரப்படுகிறது.

    முதல் செய்யுளில் ஓங்காரம்தான் இங்கு இருப்பது, இருந்தது, இருக்கப்போவது எல்லாம் என்றும், ஓங்காரம் முக்காலத்திற்கும் அப்பாற்பட்டது என்றும் கூறப்பட்டது.  இப்பொழுது இதெல்லாம், அதாவது ஓம் குறிக்கும் எல்லாமே பரம்பொருள், பிரம்மமே என்றுரைக்கப்பட்டது.

    இந்த ஒரு சொற்றோடரைக் கவனிப்போம். ஓம் என்பது காலவட்டத்திற்குள் உட்பட்டது, அதற்கு அப்பாற்பட்டதும் என்று சொல்லிவிட்டு, அவை எல்லாம் பரம்பொருளே [பிரம்மமே] என்றால், இங்கு நாம் காணும், கண்ட, காணப்போகும், மற்றும் காலச்சக்கரத்திற்கு அப்பாற்பட்ட — அதாவது நமது அறிவுக்கு, புலனுக்குக் கட்டுப்படாத, கண்டறிய இயலாத எல்லாமே பரம்பொருள் என்று உறுதி செய்யப்படுகிறது.

    அடுத்தபடியாக, பரம்பொருளே ஆத்மா என்று இணைப்பு கொடுக்கப்படுகிறது.

    இப்படிச் சொன்னவுடன் நம் மனதில் எழும் கேள்வி என்னவாக இருக்கும்?

    ஓம்தான் எல்லாம் என்றும் சொல்லி, அதுவே பரம்பொருள் என்றும் சொல்லி, அதுதான் ஆத்மா என்றால், அந்த ஆத்மா என்பது என்ன என்பதாகத்தானே இருக்கும்?

    இந்த ஆத்மா என்ற ஒன்று நம் உடலுக்குள் இருக்கிறது, அதுதான் நாம் என்று உணருகிறோம்.  இந்த ஆத்மாவைப் பற்றி பலவிதமான விளக்கங்களும், பலராலும் சொல்லப்பட்டுக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

    இருந்தும் ஆத்மா என்றால் என்ன என்பது ஒரு குழப்பமாகவே இருந்து வருகிறது.

    இந்த ஆத்மா நமது உடலுக்குள் இருக்கிறது என்றால் அது என்ன செய்கிறது, அதன் இயல்புகள் என்ன என்று அறியும் ஆவல் பிறக்கிறது.

    இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வதுபோல, ஆத்மா நான்கு பகுதிகளாக இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

    நான்கு பகுதிகள் என்றால் நான்கு கால் பகுதிகள் என்றுதானே பொருள்?

    இந்த ஆத்மா என்று சுட்டப்படுகிறதே, அப்படியென்றால் இது, இந்த ஆத்மா நான்கு கால்கள் உள்ள ஒரு மிருகத்தைப்போன்றதா —  அல்லாது போனால், இரண்டுகால்களும் இரண்டு கைகளும் உள்ள மனிதனைப் போன்றதா — அல்லது ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளதுபோல நான்கு பக்கங்கள் உள்ள கனசதுரமா என்றும் குழப்பம் ஏற்படுகிறது.

    “இந்த நான்கு பகுதிகளை எப்படி அறிந்துகொள்வது?” என்று மேலும் குழம்புகிறோம்.

    அந்தக் குழப்பத்தை நீக்குவதுபோல ஆத்மாவின் நான்கு பகுதிகளுக்கும் விளக்கம் கொடுக்கப்படுகிறது.

    ***

     MU 3

    ஜாக்ரிதஸ்தா2னோ ப3ஹிஷ்பிரக்ஞ: ஸப்தாங்க ஏகோனநவிம்சதிமுக2: ஸ்தூ2லபு4க்3வைஸ்வாநர: ப்ரத2ம: பாத3:                                                                                            — 3

     விழித்திருக்கும் நிலையில் வெளியறிவானவன், ஏழுறுப்புகளும் பத்தொன்பது வாய்களுமுள்ளவன்,  தெளிவாகப் புரிவதைச் சுகிக்கும் வைஸ்வாநரன்முதல் பகுதியாவான்.                           — 2

     பதவுரை:  வைஸ்வாநர: வைஸ்வாநரன்;  ஜாக்3ரிதஸ்தா2னோ – விழித்திருக்கும் நிலையில்; ப3ஹிஷ்பிரக்ஞ: –  வெளி[யில் நடக்கும் விஷயங்களை]அறிவுடைய; சப்தாங்க: – ஏழு உறுப்புகள் உள்ளவன்; ஏகோனவிம்ஸதிமுக2: – பத்தொன்பது வாய்கள் உள்ளவன், ஸ்தூ2லபு4க்3 – திடப்பொருள்களை அனுபவிப்பவன்; ப்ரத2ம: பாத3: – முதல் பகுதியாகிறான்.

     விளக்கம்:  இச்சொற்றொடர் ஆத்மனின் முதல் பகுதியைக் குறிப்பிடுகிறது.  எல்லாச் சமயங்களிலும் நம் உடலுக்குள் இருந்துகொண்டு நம்மை இயக்குவது ஆத்மா [self, soul] என்று உலகச் சமயங்கள் கூறுகின்றன.  நாம் விழித்திருக்கும் நிலை நம்மை இயக்கம் அந்த ஆத்மாவின் முதல் நிலை என்று பகரப்படுகிறது.

    அந்த முதல்நிலைக்கு வைஸ்வாநரன் என்ற பெயர் கொடுக்கப்பட்டுள்ளது. விஸ்வ – இவ்வண்டமான – நரன் – மனிதன். அதாவது விஸ்வ+நரன் தெய்வீக சக்தி உள்ள மனிதன் [human].  இப்பெயர் தனி மனிதனுக்குக் கொடுக்கப்படவில்லை. இவ்வண்டத்தில் உள்ள அனைத்து ஜீவராசிகளின் மொத்த அறிவையும் ஒரு மனிதனிடம் கொடுத்திருப்பதாக உருவகப்படுத்தப் படுகிறது.  [The Supreme Spirit or Intellect when located in a supposed collective aggregate of gross bodies]

    பரம்பொருளே ஆத்மன் என்று சொல்லிவிட்டு, அந்த ஆத்மனுக்கு நான்கு பகுதிகள் என்று சொல்லி, அந்த ஆத்மன் விழித்திருக்கும் நிலையில் வெளிஅறிவுடன் இயங்குகிறான் என்றால் – அவனுடைய புரிதல் வெளியுலகத்தில் இருக்கிறது என்று பொருள்.  அதுதான் அவனுடைய இயக்க நிலை என்றால் — அது நம் அனைவருக்கும் பொருந்துகிறது.  நமக்கு மட்டுமல்ல, நமக்குத் தெரிந்த அனைத்து உயிரினங்களுக்கும்

    நாம் வெளியுலகில் நடப்பதை வைத்துக்கொண்டுதான், நமக்கு வெளியில் நடப்பதின் மூலம்தான் நமது அறிவைப் பெறுகிறோம்.  அதை எப்படிப் பெறுகிறோம்?  அந்த விஸ்வாநரன் எப்படிப் பெறுகிறான்?

    அவனுக்கு ஏழு உறுப்புகளும், பத்தொன்பது வாய்களும் உள்ளன என்று கொடுக்கப்பட்டிருப்பதால் அவை என்னவாக இருக்க முடியும், அவை எப்படி வெளி அறிவைப் பெற உதவி செய்கின்றன என்பதை நோக்குவோம்.

    முதலில் ஏழு உறுப்புகள் எதுவாக இருக்கும் என்பதை எண்ணிப்பார்ப்போம்.

    விண்ணே அவனது தலை, சூரியன் கண், காற்றே உயிர்மூச்சு, வெற்றிடமே நடுப்பகுதி, தண்ணீரே அவனது சிறுநீரகம், நிலமே அவனது கால்கள், வேள்விக்கான நெருப்பே [அஹவனிய அக்னி –  கிருஷ்ண யஜுர்வேதம்] அவனது வாய் என்று சொல்லப்படுகிறது.

    இப்பொழுது 19 வாய்கள் எவை என்று நோக்கினால் அவை, நமது ஐம்புலன்கள் [கண், காது, மூக்கு, நாக்கு, தொடுஉணர்ச்சி உறுப்புகள்] — ஐந்து உணர்வுகள் [பார்வை, கேட்டல், நுகர்தல், சுவை, தொடுதல் ஆகியவை] — ஐந்து உயிர் காற்றுகள் [பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன்;  இந்து ஐந்து வகைக் காற்றுகளும் நம் உடலில் சக்தியை நிலை நிறுத்துகின்றன.] – மனம், அறிவு, ஆணவம், உணர்ச்சிகள் ஆகியவை.

    இவற்றை ஏன் வாய் என்று சொல்கிறார்கள்?

    இவைதான் உயிரினங்களின் அனுபவங்களின் –  பட்டறிவின் நுழைவாயில்கள்.  இவைகளின் மூலம்தான் உயிரினங்கள் தங்களது வெளி அனுபவத்தைப் பெறுகின்றன.

    மேலே சொல்லப்பட்ட உறுப்புகளும், வாய்களும் வெளி உலகத்தையே பார்ப்பதால், அவற்றையே அனுபவிப்பதால், ஆதமனின் அப்பகுதி வைஸ்வாநரன் என்று அழிக்கப்படுகிறது.

    நம்மை எடுத்துக்கொண்டாலே, நாம் உள்ளாக எதையும் உணர்வதில்லை.  நமக்குத் தெரியும், நாம் பகுத்தறியும் எதுவும் நமக்கு வெளியிலிருந்து வருவதே.  நமது ஐம்புலங்களாலும், ஐந்து உணர்வுகளாலுமே கிடைக்கின்றன. நமக்குத் தெளிவாகப் புரிவதை மட்டுமே நம்மால் அனுபவிக்க முடிகிறது.

    உடனே, நமது அறிவு ஒரு கேள்வியை எழுப்புகிறது:

    “ஆத்மன்தான் பிரம்மம் என்றால், அவன்தான் ஓங்காரம் என்றால், விண் [சுவர்க்கம்], சூரியன், பூமி, தண்ணீர், இன்னும் மற்றவை எல்லாம் தலை, உள்ளுறுப்புகள் என்று ஏன் சொல்லப்படுகின்றன?”

    விடையை அடுத்த பதிவில் காண்போம்…

    இப்படி விளக்குவது பொருத்தமற்ற ஒன்று என்று எண்ணவேண்டியதில்லை.  புலன்களால் உணர்ந்து அறிந்துகொள்ளக்கூடிய அண்டத்தையும், கடவுளர்களின் இருப்பிடத்தையும் ஆத்மனை தெய்வீகமாக உருவகப்படுத்தும் ஒரு பகுதியாக [விராட்] என்று குறிப்பிடுவது இருமை என்ற நிலையை நீக்கி எல்லாம் ஒன்றே என்று பின்னால் நிறுவுவதற்கு அடிகோலுகிறது.

    இப்படி உரைப்பது —  ஆத்மன் எல்லாவற்றிலும் நிறைந்திருக்கிறான், எல்லாமே ஆத்மா ஆத்மன்தான் என்பது —  வேதங்களில் குறிப்படப்படும் “அஹம் ஏவ ப்ரஹ்மன் [நானே பரம்பொருள்]” என்பதை அடிப்படையாகக் கொள்கிறது.

    அனைத்தையும் தன்னிலிருந்து நீக்கிப் பார்க்கும் உணர்வு விழித்திருக்கும் நிலைக்கே உரித்தானது என்று நிறுவுகிறது.

    இனி அது எவ்வாறு கூறப்படுகிறது என்பதைக்கண்ணுறுவோம்.

    ***

    Share
  • அறிந்துகொள்வோம்!

    -மேகலா இராமமூர்த்தி

    ’காலை எழுந்தவுடன் படிப்பு’ என்றார் பாரதியார். ஆனால் நம்மில் பலருக்குக் ’காலை எழுந்தவுடன் காபி’ என்பதுதான் தாரக மந்திரம். படுக்கையைவிட்டு எழுந்தவுடன் காபி குடிப்பதற்குப் பதிலாகச் சிறிது எலுமிச்சை சாற்றைப் பருகினால் மிகநல்ல பலன்களைப் பெறலாம் என்று நம் காதோரம் கிசுகிசுக்கின்றது மருத்துவ அறிவியல்.

    அதைப் பற்றித்தான் கொஞ்சம் அறிந்துகொள்வோமே!

    lemon-juiceகாலைவேளையில் முதல்வேலையாக ஒரு கோப்பை வெந்நீரில் சிறிதளவு எலுமிச்சைச் சாற்றைக் கலந்து குடித்துவிட்டுப் பிற வேலைகளைக் கவனிப்பது நல்லது. மற்ற சத்துபானங்களைவிட இது சிறந்ததாகும். எலுமிச்சையின் புளிப்புச் சுவையை எண்ணி நாம் முகச்சுளிப்பு கொள்ளாது அதனைப் பருகினால் விளையும் நன்மைகளைப் பட்டியலிடுகிறேன் பாருங்கள்!

    எலுமிச்சையில் அமிலத்தன்மை மிகுதியாக உள்ளதால் (it contains citric acid) அது உடலினுள் சென்று வேதிவினை புரிந்து இரத்தத்தில் கலக்கும்போது உடலின் கார, அமில விகிதத்தைச் சமப்படுத்துகின்றது. வெறும் வயிற்றில் எலுமிச்சைச் சாற்றைப் பருகினால், அது நம் கல்லீரலை (விறுவிறுப்பாய்) விழித்தெழச் செய்து, தேவையற்ற நச்சுப் பொருள்களை உடனடியாய் வெளியேற்றுகின்றது என்கிறார் அமெரிக்காவைச் சார்ந்த, நோய்த்தடுப்பு மற்றும் சிகிச்சைத்துறை நிபுணராகவும், மேற்கத்திய, கிழத்திய மருத்துவங்களை இணைத்துத் தீர்வுகாண்பதில் பயிற்சி பெற்றவருமான மருத்துவர் ஃப்ராங்க் லிப்மேன் (Dr. Frank Lipman).

    கல்லீரல் மட்டுமல்லாது இரைப்பை, சிறுகுடல், பெருங்குடல் உள்ளிட்ட சீரணப் பாதைகளையும் (digestive tract) இச்சாறு சுத்தீகரித்து, நாமுண்ணும் உணவுகளை இப்பாதையில் சிக்கலின்றிப் பயணிக்க வைக்கின்றது.

    உடம்பில் எக்கச்சக்கமாக எடைகூடி, அதனைக் குறைக்க வழிதெரியாது திணறும் ’கனவான்’களுக்கு எலுமிச்சை கைகண்ட மருந்தாகும். எலுமிச்சைச் சாற்றில் நிறைந்திருக்கும் ’பெக்டின்’ (pectin) எனும் (நீரில் கரையும்) மாவுச்சத்து (complex carbohydrate) உடல் எடையை வெகுவிரைவாய்க் குறைக்கும் மாய வித்தைக்காரனாய்ச் செயல்படுகின்றது.

    இரவில் அதிகமாய் உணவு உண்போர் சிலருக்குக் காலையில் எழும்போது நெஞ்செரிச்சல், வயிற்று உப்புசம் முதலிய தொந்தரவுகள் இருக்கும். அவற்றை நீக்குதற்குச் சுடுநீர் கலந்த எலுமிச்சைச் சாறு அருந்துணையாகும். எலுமிச்சையிலுள்ள ஃப்ளாவனாய்டு எனும் கூட்டு வேதிப்பொருள் (Flavonoids), வயிற்றின் அமிலத்தன்மையை மட்டுப்படுத்த, சுடுநீரானது சீரணப்பாதையினைச் சீராக்க, வயிற்றுப் பிரச்சனைகளும் நெஞ்செரிச்சலும் சொல்லாமல் கொள்ளாமல் உடலைவிட்டு ஓட்டம்பிடிக்கும்; சுறுசுறுப்பு அங்கே இடம்பிடிக்கும்.

    இவையேயன்றி சீறுநீரகக் கற்களைக் கரைப்பது, மலச்சிக்கலைத் தீர்ப்பது, சளி உள்ளிட்ட தொற்றுநோய்களை நீக்குவது போன்ற எண்ணற்ற மருத்துவப் பயன்களை அள்ளிவழங்கும் மாமருந்து எலுமிச்சை.

    பொதுவாக நாம் எலுமிச்சையை ஊறுகாய் போடுவதற்கும், (எலுமிச்சை) சாதம் தயாரிப்பதற்குமே அதிகமாய்ப் பயன்படுத்துகின்றோம். இப்படிக் சுவையான வகையில் அதனை உண்பதில் தவறில்லை! ஆனால் இவ்வகைத் தயாரிப்புகளில் எண்ணெய், காரம், உப்பு போன்றவையும் கூடுதலாகச் சேர்ந்துவிடுவதால் எலுமிச்சையின் முழுப்பலனும்  நமக்குக் கிடைப்பதில்லை. எனவே அதன் முழுப்பலனும் கிடைக்கச் சாறாய் அருந்துவதே சாலச் சிறந்தது!

    மருத்துவப் பயன்களேயன்றி சிறந்த அழகுசாதனப் பொருளாகவும் பயன்பட்டுவருகின்றது எலுமிச்சை. எலுமிச்சைச் சாற்றுடன் சிறிதளவு தேனோ அல்லது கடலை மாவோ கலந்து முகத்தில் பூசிச் சிறிதுநேரம் கழித்து மிதமான சுடுநீரில் கழுவிவந்தால் முகப்பொலிவு கூடி, முகத்தில் முகம் பார்க்கலாம்!

    சூரிய ஒளியால் தோலில் ஏற்படும் நிறமாற்றத்தைத் தடுக்கவும் (Suntan) எலுமிச்சைச் சாற்றை உபயோகிக்கலாம். தலையில் எலுமிச்சைச் சாற்றைத் தேய்த்துக் குளித்துவரப் பொடுகு பறந்தோடும்.

    கறைகளைப் போக்கும் வெளுப்பானாக (bleaching agent) எலுமிச்சை விளங்குவதால் துணி துவைக்கும் சோப்புகள் தொடங்கிப் பாத்திரம் துலக்கும் சோப்புகள், நீர்மங்கள், குளியல் சோப்புகள் என அனைத்திலும் இது முக்கிய மூலப்பொருளாய்த் திகழ்கின்றது.

    ”உங்க பேஸ்ட்டுல எலுமிச்சையும் உப்புமிருக்கா?” என்று வீட்டுக்கே வந்து கேட்டுவிட்டுச் செல்லும் தொலைக்காட்சி பற்பசை விளம்பரங்களைத் தினமும் நாம் பார்க்கிறோம்! இப்பற்பசைகளை வாங்கி நம் காசைக் கரியாக்குவதைவிட, நம் வீட்டிலேயே இருக்கும் எலுமிச்சையில் சிறிதளவு சாறெடுத்து அத்துடன் ஒரு சிட்டிகை பொடிஉப்பைச் சேர்த்துப் பல்துலக்கினால் போதும்! ’ஜொலிக்குதே பற்கள் ஜொலிக்குதே’ என்று பாடத் தொடங்கிவிடுவோம்!

    இப்படி எலுமிச்சையின் மகத்துவத்தை முடிவில்லாமல் சொல்லிக்கொண்டே போகலாம்; ஆம்! எலுமிச்சை அளவில் சிறிதாயினும் ஆற்றலில் பெரிது!

    உடல்நலத்தைச் சிறப்பாய்ப் பேண எலுமிச்சை மீது இச்சை கொள்ளுவோம்! நோய்களைத் துச்சமெனத் தள்ளுவோம்!

     

    Share
  • மகன் தினம்!

    -கனவு திறவோன்

    அடிக்கடி வருகிறார்கள்
    டாக்டரும்
    வக்கீலும்
    மத்தியஸ்தரும்
    அக்காக் குருவியும்
    மழையும்
    வெயிலும்
    காற்றும்
    காப்பகத்தில் இருக்கும்
    அம்மாவைப் பார்க்க!

    மாதத்திற்கு ஒருமுறை
    மணியார்டர் தரும்
    தபால்காரரும்
    வருகிறார்
    கடைசி வரை
    மகன் மட்டும் வரவில்லை!

    *******

    அம்மா உயிரோடு இருக்கும் போது
    ஆதரவற்றோர் விடுதியிலும்
    செத்தபிறகு
    கங்கைக் கரையிலும்
    அன்னையர் தினம்
    அனுசரிக்கும் மகன்!

    **************

    ஆ சிரமத்தில்
    இருந்த தாயைப்
    பார்க்கத் தனயன் வந்தான்
    கைகளைப் பிடித்துக் கன்னத்தில் ஒற்றியவள்
    கண்களிலிருந்து வழிந்த நீர்
    ப்ரைலி மொழியில் எழுதியது…
    ‘மகன் தினம்’ என்று ஒன்றிருந்தால்
    அன்றாவது ஒரு நாள்
    உன்னைப் பார்க்க
    உன் வீட்டிற்கு வரலாமே?!

     

    Share
  • வள்ளுவ மாலை

    – சுரேஜமீ

    குறளென்ப சான்றோரே நீதிவழி நிற்றற்கு
    வேறொத்த நூலில்லை வாழ்வின் வகையறிய
    தேடிப்படி ஏட்டினிலே பேர்சொல்ல – ஊர்சொல்ல  valluvar
    வேண்டுமெனில் ஓதுகுறள் நன்று!

    நன்றுணர் ஏகும்செயல் யாவும் துணைநிற்க
    நானிலம் கண்டதோர் நூலாம் – திருக்குறள்
    நாடிடத் தீதறுகுணம் பெற்றுக் கலைமகள்
    நாளும் இருப்பாள் நின்று!

    யுகம்பல காணும் மொழிதாங்கி வந்ததோர்
    மூலிகையாம் வாழும்கலை சொல்லும் – திருக்குறள்
    சாதிக்கும் வாழ்க்கைக்குப் போதித்து வாய்ப்பளிக்கும்
    சோதித்துப் பார்க்கத் தெளிந்து!

    நில்லாத நீரோடைத் தாண்டும் தடைபோலச்
    சொல்லாடும் வேதம் திருக்குறளே மாந்தர்க்கு
    வேண்டுவர் வென்றிட உலகத்தில் யாவையும்
    தோண்டிட ஊறும் அறிவு!

    இச்சையால் பெற்றிடும் இன்பம் சிலநாளே
    பிச்சையோ வாழ்வில் கொடிது – செவ்வனே
    ஊனைத் திருத்தி உள்ளம் வழியேகத்
    தூணாம் திருக்குறள் கேள்!

     

    Share
  • அலை

    -கவிஞர் ருத்ரா

    அலையா? கடலா?
    எது நீ சொல்?
    முட்டாளே!
    ஒன்று தானே இன்னொன்று!
    ஒன்றில்லாமல் இன்னொன்றில்லை           rudra
    ஹா!ஹா!ஹா!
    யாரை ஏமாற்றுகிறாய்?

    நீ
    காதலா? பெண்ணா? சொல்!
    இரண்டும்தான்
    அடிப்பாவி!
    என்ன ஏமாற்று வேலை?
    பெண்களையெல்லாம் தேடினேன்…பார்த்தேன்
    அங்கே காதல் இல்லை!

    காதலையெல்லாம் தேடினேன்…தேடினேன்
    அங்கே ஒரு மூளிவானம் தான் தெரிந்தது
    அடி முட்டாளே!
    எங்காவது ஒரு இதயம் துடிக்க‌க்
    கேட்டிருக்கிறாயா?
    அந்த இதயமாய் நீ ஆகியிருக்கிறாயா?
    அந்த இதயத்துக்குள்ளும்..இதயத்துக்குள்ளும்
    ஆயிரம் ஆயிரம்
    ரோஜா இதழ் அடுக்குகளாய்
    உணர்ந்து களித்து இலேசாய் ஆகியிருக்கிறாயா?
    அது வரை
    நீ கல்தான்!
    அதுவும் கல்லறையை மூடிக்கிடக்கும்
    கல்தான்!

    உன் அருகே
    ஒரு பச்சைப்புல்
    உன்னைப்பார்த்துக் கேலியாய்ச்
    சிரிப்பதைப் புரிந்துகொள்ளும்
    ஒரு மெல்லிய மின்னல்
    என்று உன்னைத்தாக்குகிறதோ
    அன்று
    நீயே…காதலின்
    கடல்!
    நீயே..காதலின்
    அலை!

     

    Share
  • முயலாமை!

    —சுரேஜமீ.

    NSK and TAM

    அம்மா மதுரம் அவர்கள் திருவரங்கத்தைச்(Srirangam) சேர்ந்தவர்கள் என்பது தாங்கள் அறிந்ததே! கவிஞர் வாலி அவர்களும் அதே ஊரைச் சார்ந்தவர்தான்! வாலியின் இளமைக் காலங்களில், அய்யா என்.எஸ்.கே வைச் சந்திக்க விரும்பியிருக்கிறார். அப்போது, மதுரம் அம்மாவின் தம்பி மணி அவர்களும், வாலி அவர்களும் நண்பர்கள் என்பதால், அவர்கள் மூலம், உங்கள் அத்தான் (என்.எஸ்.கே) வரும்போது, சந்திக்க ஏற்பாடு செய் எனக் கேட்க, அந்த சந்திப்பும் நடந்தேறி இருக்கிறது.

    என்.எஸ்.கேயிடம் தன்னை ஒரு தமிழ் ஆர்வலர் என்றும், பாட்டில் நாட்டம் உண்டு எனவும் அறிமுகம் செய்து கொண்டுள்ளார் வாலி. எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட என்.எஸ்.கே அவர்கள்,

    தம்பி நீ சொல்றதெல்லாம் சரி. நான் உன்னை ஒரு கேள்வி கேக்குறேன். அதுக்கு சரியான பதிலை சொல்லு அப்படின்னு சொல்லி,

    ‘முயலும் ஆமையும் கதை கேட்டிருக்கேளே …அது சொல்ற நீதி என்னனு சொல்லு! என்று கூறியிருக்கிறார்!

    ஏதேதோ சொல்லியும், கடைசி வரை கலைவாணர் எதிர்பார்த்த ஒற்றை வரி நீதி சொல்ல இயலவில்லை வாலி அவர்களால்!

    தலையைச் சொறிந்து கொண்டே….அண்ணே நீங்களே சொல்லுங்களேன்! அப்படின்னு வாலி கேட்க,

    கலைவாணார் சொன்ன பதில் என்ன தெரியுமா?

    ‘முயலாமை’!

    இதுதான் கலைவாணாரின் சிறப்பு!

    (நன்றி: அருமைச் சகோதரர் NSK நல்லதம்பி)

    Share
  • கஞ்சாவும் கல்லூரி வாசலும்!

    -துஷ்யந்தி, இலங்கை

    தீயென்று தெரிந்தும்
    தொட்டுப் பார்க்கும் வயது
    கல்லூரி வாழ்வில்
    எல்லோர்க்குமான துடிப்பு!

    வீணான எண்ணங்களை                          kanja
    வாசல் வரை வந்து
    தேனாகக் காட்டுவதில்
    தீயோர்க்கு இன்பம்!

    சரியென்றும் பிழையென்றும்
    தேடிப் பார்க்காது
    பிழைகளில் நுழைவது
    பலரது பழக்கம்!

    நோயாகப் போதையை
    நுழைவித்து வாசலில்
    நோக்கத்தை ஈடேற்றும்
    சதிகாரர் எண்ணம்!

    சிலந்தி வலையிலே
    மாட்டிக்கொண்ட வண்டாய்
    வெளிவர வழியில்லா
    மாணவர் எத்தனை?

    விழிப்பொன்றை ஏற்படுத்தி
    விளக்கத்தைச் சொன்னால்
    கல்லூரி வாசலும்
    பூங்காவனமாய் மாறிடுமே!

    பெற்றோரின் பொறுப்பும்
    ஆசிரியரின் போதனையும்
    மாணவப்பூக்களை வழிதவற
    நிச்சயம் விடுவதில்லை!

    அறிவைத் தேடும்
    சிறியோர் மனதில்
    அபாயத்தை விதைக்கத்
    தடையென்று மொழிவோம்!

    சட்டங்கள் இயற்றுவோம்
    சதிகாரரை வெல்லுவோம்
    சமுதாயச் சீர்கேடுகளை
    வளர விடாது தடுப்போம்!!

     

    Share