-கனவு திறவோன்

என் நேரத்தைக் கேட்கிறாயே
என்ன செய்வேன்?
கவிதையைக் கேட்டிருந்தால்
தந்திருப்பேன்!

நீ வாழும் என் சரிதம்
அது மட்டும்தான் என்பதால்
ஊருக்கே காட்டுகிறேன்
உனக்குத் தர மாட்டேனா?

என் மன வானத்தைக் கேட்டிருந்தால்
தந்திருப்பேன்
கற்பனையில் வாழ்ந்து களைத்துப்
போயிருக்கிறேன்!

உடல் உந்தி வாழுதல்
உவப்பில்லை
சிறகாய் இணைந்திட வா
சேர்ந்தே பறப்போமே!

சுவாசத்தைக் கேட்டிருந்தால்
தந்திருப்பேன்
நீ இருக்கிறாய் என்பதின்
சாட்சியமே அதுதான்!

நற்சாட்சிகள் இருந்து என்ன பயன்?
கணக்குப் பிழைகள் தானே
வழக்கை முடிக்கின்றன!

என் நேரத்தைக் கேட்டால்
எப்படித் தருவேன்?
அஃது எனதல்ல…

நீயே என் நேரத்தை
நிர்ணயிக்கிறாய்
சில நாட்களை
நிமிடங்களில் முடிக்கிறேன்
சில நாட்களை
மாமாங்கமாய்க் கடக்கிறேன்
நீட்டிப்பதும் சுருக்குவதும்
உன் செயல் தான்!
உனக்கான என் நேரத்தை
கேட்பது மரபோ?

என் நேரத்தைச் சபிப்பதும்
ஆசிர்வதிப்பதும்
நீ தான்!
வரம் தந்தவளே
கரம் ஏந்தலாமா?

என் நேரத்தைக் கேட்கிறாயே
என்ன செய்வேன்?

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க