-ரா.பார்த்தசாரதி

வானுர்தி மேலேறி  அயல்நாட்டு வாசம்
புதிய தேசம் புதிய மனிதர்களின் நேசம்
மொழி, குணம் உணர்ந்து செயல்பட வேண்டுமே
உறுதிகொண்டு கண்விழித்து உழைக்க வேண்டுமே !

அங்கே அன்னையின்  அரவணைப்பு இல்லை
ஆசை மனைவியின் இன்முகம் காண்பதில்லை
பெற்ற மகன் மகளின் ஸ்பரிசம் இல்லை
அன்புடன் உறவாடும் நண்பனும் இல்லை !

அன்னமில்லை நேரத்திற்கு நமக்கு ஆகாரமில்லை
பண்டிகை இல்லை அன்புகாட்ட  யாருமில்லை
உணர்வுகள் வெறுமையுடன்  மாறிவரும் நிலை
வேதனையையும் துன்பத்தையும் வெளிக்காட்டாத நிலை !

பணமிருக்கும் நாட்டில் நல்ல மனதிற்கு இடமில்லை
குணமிருக்கும் நாட்டில் பணத்திற்கு வழிஇல்லை
வாழ்க்கை எனும் ஓடத்தில் வந்து சேரும் தடைகள்
வந்தனவற்றை ஏற்றுக்கொள்ளும் இக்கால மனிதர்கள் !

கல்வி, கலைகள் எல்லாம் நன்கு கற்றோம்
வேலை கிடைத்து  வெளிநாட்டில் நன்கு உழைக்கின்றோம்
காரணம், இவை எல்லாம் பெற்றோரின்  ஆசையே
கலைமகளை ஒதுக்கிக் காசினைப் பூஜிக்கின்றாயே !

பணத்திற்காக  வெளிநாடு  விரைந்து  சென்றாய்
பெற்றோர்களை நினைந்து நிம்மதி இழக்கின்றாய்
நம் நாட்டு  உணவின் சுவையை  மறந்தாய்
மேல்நாட்டு உணவிற்கு மயங்கி அடிமைப்பட்டாய் !

வெளிநாட்டில் இருக்கும்போது நம் நாட்டின் அருமை தெரியும்
பண்பு கலாசாரம் இவற்றின் மதிப்பு தெரியும்
பணத்திற்காகப் பிள்ளைகளை அனுப்புகிறோம் என அறிவோம்
அறிவாளிகள் வெளியேற்றம் என்பதை நாமே நடத்துகின்றோம் !

பிள்ளைகளைப் பணத்திற்காகப் புதைகுழியில் தள்ளுகின்றோம்
பாசத்தையும் அன்பையும் தள்ளிவைத்துத் துயரப்படுகின்றோம்
பிள்ளைகளின் அறிவை அடமானம் வைக்கின்றோம்
தாய்நாட்டின்  வளர்ச்சியைத் தடை செய்கின்றோம் !

பணம் எட்டிப் பார்க்கும் பாசம் பக்கத்தில் இருக்காதே
பணத்திற்காக ஆசைப்பட்டு உறவுகள் துரத்தப்படுகிறதே
தவறினை உணர்கின்ற நேரத்தில் காலங்கள் கழிக்கப்படுகிறதே
எண்ணியே வாழ்க்கை  இருதலைக் கொள்ளியாய் இருக்கிறதே!

என்றும் காலங்கள் மாறித்  தன்னிறைவு  பெற்றாலும்
பணம் இருந்தாலும் வசதிகள்  இருந்தாலும்
மனம் பாசத்திற்காக  ஏங்கும்  காலமாய் இருந்தாலும்
என்று மாறுமோ  இந்த அயல் நாட்டு  மோகம்?!

 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க