-மேகலா இராமமூர்த்தி

இங்கிலாந்தின் இணையற்ற சிந்தனையாளர் – பெர்ட்ரண்ட் ரசல் (Bertrand Russell)

Bertrand_Russellபுகழ்பெற்ற தத்துவவாதி, ஏரணவியலர்(தருக்கவாதி), கணிதவியலாளர், சமூகச் சீர்திருத்தவாதி எனப் பன்முகங்கள் கொண்டவர் இங்கிலாந்தைச் சேர்ந்த பெர்ட்ரண்ட் ஆர்தர் வில்லியம் ரஸல் ஆவார். அவருடைய பகுப்பாய்வுத் தத்துவவியல் (analytical philosophy) 20-ஆம் நூற்றாண்டில் சமூகத்தில் மிகப்பெரும் மாற்றத்தையும் புரட்சியையும் தோற்றுவித்தது எனில் மிகையில்லை.

பிரிட்டனிலுள்ள மேட்டுக்குடியினரிடம் பெரும் செல்வாக்குக் கொண்ட வளமான குடும்பமொன்றில் மே 18, 1872-இல் பிறந்தார் பெர்ட்ரண்ட் ரஸல். அவருடைய தாய் தந்தையர் இருவருமே முற்போக்குச் சிந்தனைகள் உடையோர். வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தபோதிலும், அருமை அன்னையின் அன்பைத் தொடர்ந்து பெறமுடியாத வகையில் ரஸலின் வாழ்வில் விதி குறுக்கிட்டது. ஆம்! தன்னுடைய இரண்டாவது வயதிலேயே டிப்தீரியா நோய்க்குத் தாயைப் பலிகொடுத்த ரஸல், தன் இளமைப் பருவத்தைப் பாட்டி வீட்டில் கழித்தார். அதனால்தானோ என்னவோ, அவர் பாட்டிக்குப் பிடித்த விவிலிய வாசகமான “கும்பலைப் பின்பற்றிப் பிறருக்குத் தீங்கு செய்யாதே!” என்பதே பின்னாளில் அவருடைய தாரக மந்திரமாயிற்று!

தன் இளமைப்பருவத்தைப் பெரும்பாலும் தனிமையிலேயே கழிக்கவேண்டிய அவலநிலை ரஸலுக்கு நீடித்ததால், தற்கொலை எண்ணங்கள் அடிக்கடி அவருக்குத் தலையெடுத்திருக்கின்றன. அத்தருணங்களிலெல்லாம் தன்னை உயிர்ப்புடன் வைத்திருந்தவை ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியின் படைப்புக்களே என்று தன் சுயசரிதையில் ரஸல் குறிப்பிடுவது, ஷெல்லியின் ஆளுமையை நமக்கு நன்கு உணர்த்துகின்றது.

பள்ளிக்கல்விக்குப்பின், கேம்பிரிட்ஜில் உள்ள டிரினிட்டி கல்லூரியில் கணிதம், தத்துவம் ஆகியவற்றை விருப்பப் பாடங்களாகப் படித்து இளங்கலைப்பட்டம் பெற்றார் ரஸல்.

தன் வாழ்நாள் முழுவதுமே அரசியல் மற்றும் சமுதாயச் சிந்தனைகளில் ஈடுபாடு கொண்டிருந்த பெர்ட்ரண்ட் ரஸல், போருக்கு எதிரான புரட்சியாளராகவும் (anti-warist), முதலாளித்துவத்தை முற்றும் எதிர்ப்பவராகவும் (anti-imperialist) திகழ்ந்தார். அவருடைய எண்ணங்களும் எழுத்துக்களும் இடதுசாரிச் சிந்தனையாளராக அவரை அடையாளப்படுத்தினாலும், தன்னை முழுமையான பொதுவுடைமைவாதி என்று கூறுவதற்கில்லை என்று அவரே குறிப்பிட்டிருப்பது இங்கே எண்ணத்தக்கது.

1896-ஆம் ஆண்டு தன்னுடைய அரசியல் ஆய்வு நூலான ‘ஜெர்மானிய சமுதாய மக்களாட்சி’யைப் பதிப்பித்து வெளியிட்டார். 1905-ஆம் ஆண்டு ’மைண்ட்’ எனும் தத்துவ இதழில் இவருடைய ‘ஆன் டினோட்டிங் (On denoting) எனும் புகழ்பெற்ற கட்டுரை வெளியானது. 1903-இல் கணிதக் கோட்பாடுகள் (principles of mathematica) என்ற நூலையும், 1910-இல் ’கணித அணுகுமுறை’ என்ற மற்றொரு நூலையும் வெளியிட்டார்.

1914—ஆம் ஆண்டு தொடங்கிய முதல் உலகப்போரை (World War I) எதிர்த்ததால் அவர் சிறைசெல்ல நேரிட்டது. அதற்காக அவர் மனந்தளரவில்லை. போருக்கு எதிரான அவருடைய சிந்தனைகளிலும் மாற்றமில்லை. 1939-இல் மீண்டும் தொடங்கிய இரண்டாம் உலகப்போரையும் (World War II) அவர் கடுமையாக எதிர்த்து அதற்குக் காரணமாயிருந்த ஜெர்மனியின் சர்வாதிகாரி அடால்ஃப் ஹிட்லருக்கு எதிராகப் பிரசாரங்கள் செய்தார்.

தன்னுடைய சொந்த வாழ்வில் பல்வேறு சிக்கல்கள், தொடர் மணமுறிவுகள் என்று தோல்விகள் ஒருபக்கம் இருந்தாலும் அதன்காரணமாய் அவருடைய எழுத்துப்பணிகள் முடங்கிப்போகவில்லை. தொடர்ந்து பல்வேறு நூல்களை எழுதிக் குவித்தார். அவருடைய மேனாட்டுத் தத்துவத்தின் வரலாறு (History of Western Philosophy) பரபரப்பாக விற்பனையாகிப் பணமழையைக் கொட்டச் செய்தது. இலக்கியத்திற்கான நோபல் பரிசு 1950-ஆம் ஆண்டு அவருக்கு வழங்கப்பட்டது.

தருக்கவியல், அறிவியல், மொழியியல், கணிதம் எனப் பல்துறைகளில் தொடராய்வுகள் செய்து நூல்கள் எழுதி வெளியிட்ட ரஸல், இறையியல் குறித்தும் தன் கருத்துக்களை எவ்வித ஒளிவுமறைவுமின்றித் துணிச்சலாக வெளிப்படுத்தியிருக்கின்றார். இறைநம்பிக்கையைப் பொறுத்தவரைத் தான் நாத்திகனும் அல்லன்; ஆத்திகனும் அல்லன்; கடவுளைப்பற்றியே கவலைப்படாதவன் (Agnostic) என்று கூறியிருக்கிறார் அவர்.

 இன்றளவும் பிரபலமாகத் திகழ்ந்துவரும் அவருடைய கிறித்துவ இறையியல் மறுப்பு நூலான ‘நான் ஏன் ஒரு கிறித்துவன் இல்லை? (Why I am not a Christian?) எனும் நூலில் அவர் முன்வைக்கும் கருத்துக்களாவன:

”மதம், முக்கியமாக அச்சத்தின் மேல் உண்டாக்கப்பட்டதுதான் என எண்ணுகிறேன். அதன் ஒரு பகுதி, நமக்கு தெரியாதவற்றைப் பற்றிய நம் அச்சம்; மற்றொரு பகுதி, நம் பக்கத்திலேயே ஓர் சகோதரன் இருந்து நம் துக்கங்களிலும், துயரங்களிலும் ஆதரவு கொடுப்பதுபோன்ற ஓர் உணர்வு! ஒரு நல்ல உலகமானது அறிவு, கருணை, திடமனம் இவற்றை வேண்டுகிறது. அது கடந்த காலத்தின் மேல் பச்சாதாபமுள்ள புலம்பல்களையும், நெடுங்காலத்திற்குமுன் அறிவற்றவர்கள் சொன்ன வார்த்தைகளால் சிறைப்படுவதையும் விரும்பவில்லை”

அணுஆயுதத் தடையில் தொடர்ந்து ஆர்வம் காட்டினார் ரஸல். 1955-ஆம் ஆண்டு அணுகுண்டுப் பயன்பாட்டைக் கைவிடுவதற்கான ரஸல்-ஐன்ஸ்டைன் பிரகடனம் பதினொரு அணுஇயற்பியலாளர்களின் உடன்பாட்டுடன் கையெழுத்தானது.

தன் வாழ்நாளின் கடைசிவரைத் தன் கொள்கைகளில் சமரசம் செய்துகொள்ளாத மனவுறுதியுடன் வாழ்ந்த பேரறிஞர் ரஸல், பிப்ரவரி 2, 1970-இல் மறைந்தார். அவருடைய விருப்பப்படியே அவர் உடல் எவ்வித மதச் சடங்குகளுக்கும் உட்படுத்தப்படாது எரிக்கப்பட்டது.

இங்கிலாந்தின் இணையற்ற சிந்தனையாளரான ரஸல், “எல்லாவிதமான மூடப்பழக்கங்களுக்கும், கொடுமைகளுக்கும் பிறப்பிடமாயிருப்பது அச்சமே; அத்தகைய அச்சத்தை வெல்வதே அறிவின் தொடக்கமாகும்” என்று கூறியிருப்பது நாம் எண்ணிப்பார்க்க ஏற்றது. எனவே அச்சத்தை விடுத்து அறிவைத் துணைகொள்வோம்!

***

கட்டுரைக்கு உதவிய தளங்கள்:
http://en.wikipedia.org/wiki/Bertrand_Russell

http://www.brainyquote.com/quotes/authors/b/bertrand_russell.html
http://www.britannica.com/EBchecked/topic/513124/Bertrand-Russell

 

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “அறிந்துகொள்வோம்!

  1. ///தன் இளமைப்பருவத்தைப் பெரும்பாலும் தனிமையிலேயே கழிக்கவேண்டிய அவலநிலை ரஸலுக்கு நீடித்ததால், தற்கொலை எண்ணங்கள் அடிக்கடி அவருக்குத் தலையெடுத்திருக்கின்றன. அத்தருணங்களிலெல்லாம் தன்னை உயிர்ப்புடன் வைத்திருந்தவை ஆங்கிலக் கவிஞன் ஷெல்லியின் படைப்புக்களே என்று தன் சுயசரிதையில் ரஸல் குறிப்பிடுவது, ஷெல்லியின் ஆளுமையை நமக்கு நன்கு உணர்த்துகின்றது.////

    சித்தாந்த மேதைக்கு ஆன்மீகச் சிந்தனை இல்லாமல் போனதுதான் தற்கொலை எண்ணத்துக்குக் காரணம் என்பது என் கருத்து.

    சி. ஜெயபாரதன்

  2. கட்டுரையைப் படித்துக் கருத்துரை வழங்கியதற்கு மிக்க நன்றி ஜெயபாரதன் ஐயா.

    ரஸலின் தற்கொலைக்குக் காரணம் அவருடைய ஆன்மிகச் சிந்தனையற்ற மனநிலையே எனும் தங்கள் கருத்தும் சிந்திக்கத்தக்கதே. எப்படியாயினும், ஷெல்லியின் கவிதைகள் அவருடைய எதிர்மறை எண்ணங்களைப் போக்கிப் புதுமனிதனாய் அவரை மாற்றிவிட்டிருக்கின்றன. அவ்வகையில் ஷெல்லிக்கு இவ்வுலகம் நன்றிக்கடன்பட்டிருக்கின்றது. 🙂

    ஐயா! ரஸலின், ’What I have lived for?’ நூலைத் தாங்கள் தமிழாக்கம் செய்திருப்பதையும், அதனை நதியலை ஆசிரியர் பாராட்டி எழுதியிருப்பதையும் படித்துப் பெரிதும் மகிழ்ந்தேன்.

    தங்கள் பன்முகத் திறமைகள் நாங்கள் அறியாதவை அல்லவே! தொடர்ந்து எழுதுங்கள்! இளைய தலைமுறையினருக்கு நல்லதோர் வழிகாட்டி நீங்கள்!

    அன்புடன்,
    மேகலா

  3. பாராட்டுக்கு மிக்க நன்றி மேகலா.

    தற்கொலை முயற்சியில் இறங்கிய ரஸ்ஸல் போல் இலக்கிய நோபெல் பரிசு பெற்ற ஏர்னெஸ்ட் ஹெமிங்வேயும் தற்கொலை செய்து கொண்டார்.

    On 8 July 1822, less than a month before his 30th birthday, Shelley drowned in a sudden storm on the Gulf of Spezia while returning from Leghorn (Livorno) to Lerici in his sailing boat, the Don Juan. He was returning from having set up The Liberal with the newly arrived Leigh Hunt. Some believed his death was not accidental, that Shelley was DEPRESSED and wanted to die; others suggest he simply did not know how to navigate.

    எனது 35 வருடக் கனடா அனுபவம்.  இந்த உலோகாயுத மேலை நாடுகளில் தனிமையில் வெந்து மனவாட்டம் [Depression], மன நோயுற்றவர் மிகுதி. 

    சி. ஜெயபாரதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *