Category: பரிமேலழகர் உரைத் திறன்

  • பரிமேலழகர் உரைத்திறன் – 10

    பரிமேலழகர் உரைத்திறன் – 10

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள்
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘சொல்’ வரவும் பொருள் நிறைவும்

    முன்னுரை

    ‘நல்வரவு’ என்பது சடங்குகளிலும் விழாக்களிலும் பெருவழக்கு. ‘சொல்வரவு’ உரையாசிரியர்களுக்கு உரியது. சொல்வரவு என்றால் என்ன? நூலாசிரியரின் உள்ளக் கருத்தினை முற்றுணர்ந்து உரையெழுதுங்கால் அக்கருத்தினை முழுமையாக வெளிப்படுத்தும் சொற்கள் அல்லது சீர்கள் அப்பாட்டில் காண இயலாதபோது உரையாசிரியர் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட சொற்களை வருவித்துக் கொள்வதற்கே சொல்வரவு என்று பெயர்.   சொல்லை வரவு வைப்பது. சொல்வரவாகும். செல்வமாகிய பொருளை வரவு வைப்பது உலகியல்பு. ஆனால் பாட்டில் இல்லாத சொற்களைப் பெய்து பாட்டுக்கான முழுப்பொருளையும் வரவு வைப்பது உரையாசிரியர் சிந்தனைத் திறனாகக் கொள்ளப்படும். திருக்குறளின் குறுகிய வெண்பா யாப்பு என்னும் வடிவத்தைப் பரிமேலழகர் எப்போதும் நினைவிற்கொண்டே உரையெழுதுகிறார். அதனால்தான் ஆழமான பொருள் அடங்கிய யாப்புக்குள் அமைகிறபோது ‘உய்த்துணர்தல்’ என்பது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிடுகிறது. உய்த்துணர்வும்  உரை சிறப்பும் நேர்விகிதத்தில் அமைவதே சிறப்பு.

    ‘சொல்வரவு’ ஓர் விளக்கம்

    கட்டுரையின் தோரண வாயிலாகச் சொல்வரவு என்பதைப் புரிந்து கொள்வது அதன் உள்ளடக்கத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள ஏதுவாகலாம்.

    “சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும்
    ஏமப்புணையைச் சுடும்” (306)

    என்னும் குறட்பாவில் “சினமென்னும் நெருப்பு தனக்கு இடமானவரையே யன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புணையைச் சுடும்’ என்று உரையெழுதினார் பரிமேலழகர். ‘இனத்தை ஏமப்புணையாக’ உருவகம் செய்த திருவள்ளுவர் அப்புணையால் கடக்கும் பிறவியைக் கடலாக உருவகம் செய்யவில்லை என்பதைப் பரிமேலழகர் அறிந்து கொள்கிறார். கொண்டு,

    “இன மென்னும் ஏமப்புணை என்னும் ஏகதேச உருவகத்தால் பிறவிக்கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற என வருவித்து உரைக்க”

    என்று புணைக்கேற்ற எதிர்நிலை உருவகத்தைத் தம் சிந்தனையாற்றலால் சில சொற்களை வருவித்து உரையெழுதுவதன் மூலம் கண்டறிந்து கூறுவதைக் காணலாம். மேற்கண்ட சில சொற்களை வருவித்து உரைக்காமல் குறட்பாவின் ஏழு சீர்களுக்கு மட்டும் உரைசொன்னால் ‘இனமென்னும் ஏமப்புணை’ என்னும் உருவகம் விளக்கம் பெறாத நிலையில் வெகுளாமையினால் வரும் நன்மையும் வெகுளியினால் வரும் இழப்பும் முற்றும் புலப்படாது.

    புகழ்வதற்கும் தகுதி வேண்டும்!

    இன்றைய நடப்பியல் உலகில் சில பொருத்தமற்ற செயல்பாடுகளை அனைவரும் காண முடியும். குறிப்பாக அரசியற்களத்தில் இது அதிகம். ஒரு நிகழ்வு. தகுதி வாய்ந்த ஒருவரைத் தகுதியே இல்லாதவர் பாராட்டுவது. அதுபோலவே பெருந்தகுதி வாய்ந்த ஒருவரைத் தகுதியே இல்லாதவர் விமர்சிப்பது. ‘உரிமை’ என்ற பெயரால் நடக்கும் இந்தக் கூத்து பெரும்பாலும் கண்டுகொள்ளப்படுவதில்லை. ஆனால் அச்சான்றோர்கள் உயிரோடிருக்கும் நிலையில் அவ்விரண்டனையும் ஒன்றாகவே பாவித்துப் புன்னகையோடு அமைதியடைவர். இந்தப் பின்புலத்தை நன்கு உள்வாங்கிக் கொண்டால்தான் பின்வரும் குறட்பாவிற்குப் பரிமேலழகர் எழுதிய உரை நுட்பம் புரியக்கூடும்.

    “ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன் மகனைச்
    சான்றோன் எனக் கேட்ட தாய்” (69)

    என்ற குறட்பாவிற்குத் (தான் தாயான அத்தருணத்தில்)

    “தான் பெற்ற பொழுதை மகிழ்ச்சியினும் மிக மகிழும்; தன் மகனைக் கல்வி கேள்விகளால் நிறைந்தானென்று (அறிவுடையோர்) சொல்லக் கேட்ட தாய்”

    என்று உரையெழுதிய பரிமேலழகர் குறட்பாவில் இல்லாத ஒரு எழுவாயைப் பற்றிச் சிந்திக்கிறார். ‘தன் மகன் சான்றேன்’ எனக் கேட்ட தாயைக் காட்டிய வள்ளுவர், ‘சான்றோன் எனப் புகழ்ந்தவரைச்’ சுட்டவில்லை. ‘பாம்பறியும் பாம்பின் கால்’ என்பதும் ‘கற்றாரைக் கற்றாரே காமுறுவர்’ என்பதும் வழக்கு. இவற்றை முற்றும் அறிந்த பரிமேலழகர், ‘தந்தை அவையத்து முந்தியிருப்பச் செய்த மகனை அறிவுடையார் சான்றோன் எனப் புகழக்கேட்டால்தான் தாய் மகிழ்வாள்’ என்று சிந்தித்து உரையெழுதினார். ஆனால் ‘அறிவுடையார்’ என்னும் சொல் குறட்பாவில் இல்லை. பரிமேலழகர் அதனை வருவித்து எழுதி அதற்கான காரணத்தையும் பதிவு செய்கிறார்.

    “அறிவுடையார் என்பது வருவிக்கப்பட்டது சான்றோன் என்றற்கு உரியவர் அவராகலின்”

    பரிமேலழகர் இதனை வருவித்து உரைக்காவிட்டால் புகழுதற்குரியார் யார் என்பது புலப்படாததோடு, தகுதியுள்ள ஒருவனைத் தகுதியற்றவர்களும் புகழும் நிலை வரலாம் என்னும் பிறழ உணரும் நிலை வந்துவிடும். திருவள்ளுவரின் கருத்து அதுவல்லவாதலின் ‘புகழ்வதற்கும் தகுதி வேண்டும்’ என்னும் நுட்பத்தை உணர்ந்துரைக்கிறார் பரிமேலழகர்!.

    எதுவரை இருக்கும் ‘இசை’?

    உலக வழக்கில் ஒரு தொடரைப் பலரும் செவிமடுத்திருக்கலாம். ‘அவர் மறைந்தாலும் அவர் புகழ் இருக்கும்’ சரி!. எதுவரை இருக்கும்? அவர்தான் மறைந்துவிட்டாரே? அவரை யார் புகழ்வர்? அவரைத் தவிர மற்றவர்கள் அவரைப் புகழ்ந்து கொண்டிருப்பார்கள். அது எதுவரை நீளும்? இந்த உலகத்தின் இறுதி மனிதன் இருக்கிறவரை நீளும். அப்படியானால் புகழ் என்பது இந்த உலகம் உள்ளவரை அழியாது நிற்கும். இதுபற்றிய திருக்குறள் ஒன்று இப்படி அமைந்திருக்கிறது.

    “ஒறுத்தார்க்கு ஒரு நாளை இன்பம் பொறுத்தார்க்குப்
    பொன்றும் துணையும் புகழ்” (156)

    “தமக்குத் தீங்கு செய்தாரை ஒறுத்தார்க்கு உண்டாவது அவ்வொருநாளைய இன்பமே. அதனைப் பொறுத்தார்க்கு உலகம் அழியுமளவும் புகழ் உண்டாம்“ என்று உரையெழுதுகிறார் பரிமேலழகர். புகழுக்குரிய காரணங்கள் ‘கல்வி, ஆண்மை’ (231) எனப் பல. அக்காரணங்களைச் செய்கிறவன் மறைகிறான். அவன் தேடிய புகழ் இறவாமல் நிற்கிறது. ‘இறவாது நிற்கும் கீர்த்தி’ (புகழ் அதிகார முன்னுரை)  ‘செய்தவர் இறந்து போக தான் இறவாது நிற்கும்’ (238) என்றெல்லாம் பரிமேலழகர் சொற்பொருள் விரிப்பார். அது இவ்வுலகம் உள்ளளவும் அழியாது நிற்கும். உலகம் அழிகிறபோது புகழும் அழியும். ‘பொன்றுந் துணையும் புகழ்’ என்றாரேயன்றி ‘எது பொன்றும்? என்பதற்கான எழுவாய் பாட்டில் இல்லை. வாழையடி வாழையாகத் தோன்றும் உலகத்துச் சான்றோர் புகழைச் செய்வதனைத் தொடர்ந்து புகழ்ந்து கொண்டேயிருப்பர். இத்தகைய பொருள் விரிப்பதற்கு ஏதுவான ‘உலகம்’ என்னும் சொல் குறட்பாவில் இல்லையென்பதை உணர்ந்து கொண்ட பரிமேலழகர்,

    “ஆதாரம் ஆகிய உலகம் பொன்ற புகழும் பொன்றுமாகலின் ஏற்புடைய உலகு என்னும் சொல் வருவித்து உரைக்கப்பட்டது”

    என்று விளக்கவுரை எழுதுகிறார். புகழ் அழியாது நிற்பது. புகழைச் செய்தவர் மறைந்தாலும் அவரைப் புகழ்வார் தோன்றிக் கொண்டே இருப்பர். இச்சான்றோர்களையே ‘உலகம்’ என்னும் சொல் சுட்டும். உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே என்பது சேந்தன் திவாகரம். சான்றோர்களைக் குறிக்கும் இச்சொல் இத்திருக்குறளில் இல்லையாதலின் அதனை வருவித்து உரைக்கிறார் பரிமேலழகர். இவ்வாறு ‘உலகம்’ என்னும் இச்சொல்லை வருவித்து உரைக்காவிட்டால் ‘எது பொன்றும் அளவும்?’ என்னும் வினாவுக்கு விடையின்றிக் குறட்பா ‘குன்றக்கூறல்’ என்னும் குறைபடுதற்கு வாய்ப்பு உண்டு. ஒரே ஒரு சொல்லை வருவித்து உரைத்ததன் மூலம் “பிறருடைய தீமையைப் பொறுத்துக் கொண்டவர்கள் உலகம் உள்ளவரை (அதாவது உலகம் அழியும் வரை) புகழப்படுவார்கள் என்னும் முழுமையான குறட்பாவின் கருத்து புலப்படுகிறது!.

    சொன்னால்தான் சிக்கல்

    சொல்லுக்கு இரண்டு பண்புகள் இன்றியமையாதன. ஒன்று அது சொல்வானுக்கும் கேட்பானுக்கும் நன்மை தர வேண்டும். இரண்டு பண்போடு கூடிய சொற்களாக அமைதல் வேண்டும். இவ்விரண்டு தன்மைகளும் இல்லாத சொற்களைப் பல்லார் நிறைந்த அவைக்கண் பேசுவது அவர்மாட்டு நீதியோடு படாததாய்ச் சொல்பவனை நற்குணங்களின் நீக்கும். இந்தக் கருத்தமைந்த திருக்குறள் பொறையுடைமை அதிகாரத்தின் நான்காவது குறட்பாவாக அமைந்திருக்கிறது.

    “நயன் சாரா நன்மையின் நீக்கும் பயன்சாரா
    பண்பிற் சொல் பல்லாரகத்து” (194)

    “பயனோடு படாத பண்பில் சொற்களை ஒருவன் பலரிடைச் சொல்லுமாயின் அவை அவர்மாட்டு நீதியோடு படாவாய், அவனை நற்குணங்களின் நீக்கும் எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “பண்பு – இனிமையும் மெய்ம்மையும் முதலாய சொற்குணங்கள். சொல்லுமாயின் என்பதும் அவர் மாட்டு என்பதும் எச்சமாக வருவிக்கப்படடன”

    என்று விளக்கமளிக்கிறார். இந்த விளக்கத்தில் குறட்பாவில் இல்லாத ‘சொல்லுமாயின்’, ‘அவர்மாட்டு’ என்னும் இரண்டு சொற்களை வருவித்துக் கொண்டு உரையெழுதுவதாகக் கூறுகிறார். சொல்லப்படும்போதுதான் சொற்களுக்கான விளைவுகள் உண்டு. மனத்துக்குள்ளேயே இருந்தால் அது சொல் அல்ல. பின் விளைவும் கிடையாது. அதிகாரமும் பயனில  சொல்லாமையேயன்றிப் ‘பயனில எண்ணாமை’ என்பதன்று. பாட்டில் இனிமையும் பயனும் இல்லாத சொற்களை ஒருவன் சொன்னால்தான் அந்த அவையினின்றும் நீக்கப்படுவான். அமைதியாக இருந்துவிடின் நீக்கப்படுவதற்கு வாய்ப்பில்லை. பாட்டில் ‘சொல்லுமாயின்’ என்பதற்கான குறிப்பு இல்லை. குறிப்பு இல்லாதபோது பாட்டின் கருத்து தெளிவாகாது. எனவே பரிமேலழகர் ‘இனிமையும் பயனுமற்ற சொற்களைச் சொல்லுமாயின்’ என உரைகண்டு ‘சொல்லுமாயின்’ என்னும் சொல்லை வருவித்துக் கொண்டதாக எழுதுகிறார். இனி அவனை யார் நீக்குவது என்பதற்கும் குறட்பாவில் பொருத்தமான சொல்லாட்சி இல்லை. ‘பல்லார் அகத்து’ என்னும் தொடர்கொண்டு ‘அவர்மாட்டு அச்சொற்கள் நீதியோடு படாவாய்’ என எழுதுகிறார். எனவே ‘அவர்மாட்டு’ என்னும் சொல்லை வருவித்துக் கொள்வதாகக் கூறி உரைநிறைவு காண்கிறார். இவ்வாறு இவ்விரண்டு சொற்களையும் வருவித்து உரை கண்டிருக்காவிட்டால் என்ன நேர்ந்துவிடும் எனச் சிலர் நினைக்கக்கூடும். பயனும் இனிமையும் அற்ற சொற்களை நினைத்தாலும் கேடுவருமா என்னும் ஐயத்தைக் குறட்பா களைந்திருக்க முடியாது. ‘பயன்சாராப் பண்பில் சொல் பல்லாரகத்து நயன் நீக்கும்’ என்றுதான் இருக்கிறதே தவிர, ‘பல்லாரகத்துச் சொன்னால்தான் நீக்கும்’ என்பதாகவோ யார் அவனை நீக்குவார்கள் என்பதற்கான விடையோ குறட்பாவில் இல்லை. இவ்விரு ஐயங்களையும் களையுமாறு பரிமேலழகர் உரை அமைந்திருப்பதைக் காணலாம்.

    மேகம் மழையாகலாம்! மழை மேகமாகாது!

    இயற்கையை மனிதன் பயன்படுத்திக் கொள்ளலாம். முன்னெச்சரிக்கை நடவடிக்கையினால் அதன் கோரத்தாண்டவத்தைக் கட்டுப்படுத்திக் கொள்ளலாம்.  ஆனால் அதனை மறுதலிக்கவோ மாற்றவோ எதிர்த்து நிற்கவோ இயலாது. காரணம் அது இயற்கை. இறைவனின் மறுவடிவம். இதனை முற்றும் உணர்ந்தவர் திருவள்ளுவர். மழையின் சிறப்பை முற்றச் சொல்லும் ‘வான்சிறப்பு’ என்னும் அதிகாரத்தில் விடுபட்ட கருத்தொன்றினை நினைவோடு ஒப்புரவறிதல் என்னும் அதிகாரத்தில் உவம அளவையால் பதிவு செய்து நிறைவு செய்கிறார். ஒப்புரவை யாரும் செய்யலாம். ஆனால் மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளுக்கு எதிர்வினை ஆற்ற இயலாது. இந்தக் கருத்தினைச் சொல்லவரும் திருவள்ளுவர் அவருக்கு மேகத்தை உவமமாகக் கொள்கிறார்.

    “கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு
    என்னாற்றும் கொல்லோ உலகு?” (211)

    என்னும் குறட்பாவிற்குத்,

    “தமக்கு நீர் உதவுகின்ற மேகங்களினிடத்து உயிர்கள் என்ன கைம்மாறு செய்யா நின்றன? அம்மேகங்கள் போல்வார் செய்யும் ஒப்புரவுகளும் கைம்மாறு நோக்குவன அல்ல”.

    எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர்,

    “என் ஆற்றும்? என்ற வினா யாதும் ஆற்றா என்பது தோன்ற நிற்றலின் அது வருவித்து உரைக்கப்படும்”

    என்று விளக்கவுரை தருகிறார். இந்த விளக்கவுரையில் ‘யாதும் ஆற்றா’ என்னும் குறட்பாவில் இல்லாததொரு சொல்லை வருவித்துப் பயன்படுத்துகிறார். அதற்கான காரணத்தையும் அவரே பதிவு செய்கிறார். ‘உன்னால் முடியுமோ எனின் முடியாது’ என்பது போல ‘என் ஆற்றும்?’ என்ற வினா ஆற்றாது என்பது தோன்ற நிற்கிறதாம். அதனாலேயே ‘யாதும் ஆற்றா’ என்பதை வருவித்து உரைத்ததாகக் கூறுகிறார்.

    • யாதும் ஆற்றா என்னும் இரண்டு சொற்களை வருவித்து உரைத்திருக்காவிட்டால் ஏதேனும் ஆற்றக் கூடுமோ? என்னும் ஐயம் களையும் ஆறில்லையாம் என்க.

    இந்த உவமத்தில் சிறப்பு என்னவென்றால் மேகம் மழையாகுமேயன்றி அம்மழை மேகமாகாது. மேகத்தையொப்பார் செய்யும் ஒப்புரவு அத்தகையது. அதாவது திரும்பச் செய்ய இயலாது என்பதாம். குறட்பாவின் நுட்பம் என்னவெனின் மழையான மேகம் கலைந்துவிடுமாம்!. பரிமேலழகர் உரை நுட்பம் என்னவெனின் மாரிக்கு மழையென்னும் பொருளிருக்க ‘மேகம்’ என்று பொருள் உரைத்ததுதான்!

    உளர் சிலராகிய காரணம்

    இவ்வுலகில் செல்வர் சிலராகவும் வறியவர் பலராகவும் இருப்பதற்கு ஒவ்வொரு துறை சார்ந்தவரும் ஒவ்வொரு கருத்தினைச் சொல்வர். அது இயற்கையே. அறம் உரைக்க வந்த திருவள்ளுவர் இதற்கு அறவழிக் காரணம் காண்கிறார். இல்லாதவர் பலராக இருப்பதற்கு நோலாதவர் அதாவது தவம் செய்யாதவர் பலராக இருப்பதுதான் காரணம். இருப்பவர் சிலராக இருப்பதற்குக் காரணம் நோற்பார் அதாவது தவம் செய்பவர் சிலராக இருப்பதுதான் காரணம் எனத் தெளிவாக்குகிறார். இந்தக் கருத்திலும் காரண, காரிய விளக்கத்திலும் நாம் செல்லவில்லை. இந்தக் கருத்தினைத் திருவள்ளுவர் பதிவு செய்திருக்கிற முறை கற்பாருக்கு எளிதாக இருக்கிறது எனக் கருதுமாறு இல்லை. பாடல் எப்படியிருக்கிறது?

    “இலர் பலராகிய காரணம் நோற்பார்
    சிலர் பலர் நோலா தவர்” (270)

    ‘இலர் பலராகிய காரணம் நோற்பார் சிலர்’ என்று இருக்கிறது!. எவ்வளவு பெரிய முரண்? நோலாதவர் பலராக இருப்பதால்தான் இலர் பலராகின்றனர். ஆனால் திருவள்ளுவர் யாப்புக்கட்டமைப்பைக் கருதிக் குறுகத் தறித்த காரணத்தால் நோற்பார் சிலர் என்பதற்கான காரியத்தைச் சொல்லாமல் விடுகிறார் என்பதை உய்த்துணரலாம். ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர்’ என்பது போன்ற உடன்பாட்டைப் பலவிடங்களில் முன்னெடுத்த திருவள்ளுவர் இங்கே இல்லாதவராகிய எதிர்மறையை முன்னெடுக்கிறார். எடுத்தவர் அதனை இன்னும் குழப்பமாக ‘நோற்பார் சிலர்’ என்று காரணத்தைக் கூறுகிறார். இந்தத் தொடர் எப்படி இருந்திருக்க வேண்டும்? இலர் பலராகிய காரணம் நோலாதவர் பலர் என்றல்லவா இருந்திருக்க வேண்டும்? அப்படியில்லையே? எனவே  உரையாசிரியர் பரிமேலழகர் தனது கடமையை உணர்ந்து ‘நோற்பார் சிலர்’ என்னும் காரணத்திற்கான காரியத்தை வருவித்து உரைக்கிறார், எப்படி? இப்படி!

    “நோற்பார் சிலர் எனக் காரணம் கூறினமையின் காரியம் வருவித்து உரைக்கப்பட்டது”

    இலர் பலராகிய காரணம் – உலகத்துச் செல்வர்கள் சிலராக நல்கூர்வார் பலராதற்குக் காரணம் யாது எனின் நோற்பார் சிலர் நோலாதவர் பலர் – தவம் செய்வார் சிலராக அது செய்யார் பலராதல்.

    • இலர் பலராகிய காரணம் என்றே பாட்டில் அமைந்திருக்க, பரிமேலழகர் உளர் சிலராகிய காரணத்தையும் குறட்பாவிலிருந்து எடுத்து மொழிகிறார்.
    • நோற்பார் சிலர் என்னும் காரணத்திற்கான காரியத்தைக் கண்டறிந்து உளர் சிலர் என்பதையும் எடுத்து மொழிகிறார்.

    இவ்வாறு ‘நோற்பார் சிலர்’ என்பதற்கான காரியத்தைக் கண்டறிந்து அதனை வருவித்துக் கூறியிருக்காவிட்டால் ‘நோற்பார் சிலராக இருப்பதனால் இலர் பலரானார்’ என்னும் பொருள் மயக்கம் நிலவும். மேலும் நோற்பார் சிலர் என்பதற்கான காரியம் இறுதிவரைக் கண்டறிய இயலாமற் போயிருக்கும்.

    இளமையில் துறப்பதே இன்பம்

    அறத்துப்பால் துறவறவியலில் அமைந்திருக்கிற அதிகாரங்களில் துறவு என்பதும் ஒன்று. அதனுள் இரண்டாவது பாடலாக அமைந்திருப்பது,

    “வேண்டின் உண்டாகத் துறக்க துறந்தபின்
    ஈண்டு இயற்பால பல” (342)

    என்னும் குறட்பாவாகும். இக்குறட்பாவுிற்குத்,

    • துறந்தபின் – எல்லாப் பொருள்களையும் துறந்தால்
    • ஈண்டு இயற்பால – ஒருவர்க்கு இம்மைக்கண்ணே உளவாம் முறைமையையுடைய இன்பங்கள் பல
    • வேண்டின் – அவ்வின்பங்களை வேண்டின்
    • உண்டாகத் துறக்க – அவற்றைக் காலம் பெறத் துறக்க

    எனப் பொழிப்புரை எழுதுகிறார். ‘துறக்க’ என முதலில் ஏவிய திருவள்ளுவர் அவ்வாறு (துறந்தால்) ‘அதன் பயனாக இம்மையில் கிட்டுகின்ற இன்பங்கள் பல’ எனத் தொடர்ந்துரைக்க, பரிமேலழகர் இன்பங்களை முதலில் காட்டி அவ்வின்பங்கள் வேண்டுமானால் நீ துறக்க என மாற்றி உரையெழுதுகிறார்.  அவ்வாறு எழுதியவர்,

    “இன்பங்கள் என்பதும் காலம் என்பதும் வருவிக்கப்பட்டன”

    என்றும் எழுதுகிறார்.

    • பாட்டில் வேண்டின் என்றிருக்கிறதேயன்றி “எவை வேண்டின்?” என்னும் செயப்படுபொருள் இல்லை.
    • அதுபோலவே பாட்டில் துறக்க என்றிருக்கிறதேயன்றி எப்போது என்னும் பொழுது இல்லை.

    பரிமேலழகர் வருவித்தவையும் அவற்றிற்கான காரணங்களும்

    மேற்கண்ட குறட்பாவின் விளக்கவுரையில் இன்பங்கள் என்பதையும் காலம் என்பதையும் பரிமேலழகர் வருவித்து உரைத்தமைக்குச் சில காரணங்கள் உண்டு. துறவு பொதுவாயினும் இளமையில் துறத்தலே சிறப்பு. ஏனெனில் அவ்வாறு இளமையிலேயே துறந்துவிடின் துறக்கப்பட்ட நாளிலிருந்து பெறக்கூடிய இன்பங்களின் கால அளவு கூடும். இதனை அந்தக் குறட்பாவின் விளக்கவுரையில்,

    “மனமொழி மெய்கள் அலையாது நிற்றலானும், அவை நன்னெறிக்கண் சேறலானும் வருவன”

    என்று எழுதிக்காட்டுகிறார். எனவே துறவு பொதுவாயினும் இளமையில் துறத்தல் பற்றிய சிந்தனையும் அதன் பயன்களையும் பரிமேலழகர் தெள்ளிதின் உணர்ந்தவர்.

    • “நரைவரும் என்றெண்ணி நல்லறிவாளர் குழவியிடத்தே துறந்தார்” (நாலடியார்1.)
    • “மற்று, ‘அறிவாம் நல்வினை’ ‘யாம் இளையம்” நாலடியர்9)

    என்றெல்லாம் விரவி நிற்கும் சிந்தனைகளை நன்கு உள்வாங்கிய காரணத்தால் ‘உண்டாகத் துறக்க’ என்பதற்குக் ‘காலத்தால் துறக்க’ என்னும் சிறப்புரை கண்டார் பரிமேலழகர். ஒன்றினைத் துறக்க வேண்டின் அதற்கு மாற்றாக மற்றொன்றினைக் காட்ட வேண்டுமாதலின் ‘வேண்டின்’ என்பதற்கான செயப்படுபொருளாகிய ‘இன்பங்கள்’ என்பதை வருவித்து உரைக்கிறார். இவ்வாறு வருவித்து உரைக்காவிடின் எவை வேண்டின் என்னும் தெளிவும் எப்போது துறப்பது என்னும் காலமும் புலப்படாதாம்!.

    நிறைவுரை

    எழு சீர்களுக்குள் எல்லாவற்றையும் சொல்ல வேண்டிய கடப்பாடு திருவள்ளுவருக்கு இருந்திருக்கிறது என்பதை நன்கு உணர்ந்தவர் பரிமேலழகர். எழுவாய் இல்லாமல் குறள் அமைகிறது. செயப்படுபொருள் இல்லாமல் அமைகிறது. உவம விளக்கம் இருந்து பொருள் விளக்கம் குன்றி அமைகிறது.  பொருள் விளக்கம் இருந்து உவமம் தனித்து நிற்கிறது. உவமமும் பொருளும் தனித்தனியே நிற்கின்றன. காரணம் இருக்க காரியம் புலப்படுவதில்லை. காரியம் தெளிவாகக் காரணம் அறியுமாறு இல்லை. இவ்வாறு திருவள்ளுவரின் உள்ளத்தின் முழுப்பரப்பையும் சொற்களால் காட்ட இயலாதபோது அதனைத் தம் நுண்மாண் நுழைபுலத்தால் கண்டறிந்து ஆங்காங்கே சில சொற்களை  வருவித்து உரைகாண்பதன் வழித் தமது உரைப்பணியை நிறைபணியாகச் செய்து முடித்திருக்கிறார் பரிமேலழகர் என்பதே மேற்கண்ட சில சான்றுகளின் வழிப் பெறப்படும் அவருடைய உரைத்திறனாகும்.

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத்திறன் – 9

    பரிமேலழகர் உரைத்திறன் – 9

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
    விளார் புறவழிச்சாலை,
    தஞ்சை மாவட்டம் – 613006.
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    அலங்காரத்திற்காக அல்ல அடைச்சொற்கள்!

    முன்னுரை

    ஒவ்வொரு குறட்பாவையும் எழுத்து, அசை, சீர், அடி என ஆழ்ந்து நோக்கி உரையெழுதுவது பரிமேலழகருக்கு இயல்பு. குறட்பாவின் கிடக்கை நிலைக்கேற்ப ஆற்றொழுக்காக நிரல்பட உரைகாண்பது அவர்க்கு இயல்பன்று. குறட்பாவை முற்றாக நோக்கி, முன்பின்னாக உள்ள அதிகாரக் கருத்துக்களைக் கருத்திற்கொண்டு, மனத்துட் பதிவு செய்திருக்கும் நூற்கருத்துக்கள் முழுவதையும் ஒவ்வொரு முறையும் மனக்கண் முன் கொண்டுவந்து நிறுத்தி உரையெழுதுவதே அவர் கையாண்ட உரைநெறி. தனக்குத்தானே முரண்படும் ஓரிடம் கூட அவர் உரையில் இல்லாமல் போனதற்குக் காரணம் இதுதான். அந்த வகையில் உவமத்திற்கு வந்த அடைச்சொற்களைப் பொருளுக்கும் பொருளுக்கு வந்த அடைச்சொற்களை உவமத்திற்கும் பொருத்திக்காட்டும் வியத்தகு ஆற்றலை வெளிப்படுத்தும் திருக்குறள் ஒன்று இக்கட்டுரையில் திறனறியும் குறட்பாவாக இடம்பெறுகிறது. குறட்பாவின் கருத்து முழுமையாகப் புரிந்து கொள்ளப்படல் வேண்டும் என்னும் பரிமேலழகரின் பேரார்வமே இவ்வாறு பொருத்தி உரைகாண்பதற்கான அடிப்படைக் காரணமாகும்.

    முற்றும் நோக்கல் என்றால் என்ன?

    ‘உற்று நோக்கல்’ தெரியும் ‘முற்று நோக்கல்’ தெரியுமா? உற்று நோக்கினாலே அது முற்று நோக்கலில் முடியும்.  சான்றாகப்,

    “பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
    இறைவனடி சேரா தார்” (10)

    என்பது கடவுள் வாழ்த்தாகிய தலையதிகாரத்தின் இறுதிக் குறட்பா. இந்தக் குறட்பாவை மேம்போக்காக நோக்கி உரைகண்டால் ‘இறைவன் திருவடியைச் சேராதவர் பிறவியாகிய பெருங்கடலைக் கடக்க மாட்டார்’ என்று மட்டுமே புரிந்து கொள்ள முடியும். அது பாட்டின் மையக்கருத்தாக இருக்கலாம்., அப்பாட்டின் முழுமையான கருத்தாகக் கொள்ள முடியாது. காரணம் என்ன? மையக்கருத்து முழமையான கருத்தாகாதா? ஆகாது! எப்படி? பாட்டில் ‘பிறவிப் பெருங்கடல் நீந்துவர்’ என்று செயப்படுபொருளும் வினைமுற்றும் இருக்கின்றனவே தவிர, ‘யார்?’ என்னும் எழுவாய் இருக்கிறதா? இல்லையே!. அடுத்த நிலையில் ‘இறைவனடி சேராதார் நீந்தார்’ என்று எழுவாயும் வினைமுற்றும் இருக்கின்றனவே தவிர எதனை நீந்தார் என்னும் செயப்படுபொருள் இருக்கிறதா? இல்லையே! எனவே எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகிய மூன்றும் இருந்து பொருளுணர்த்த வேண்டிய நிலையில் உள்ள இரண்டு தொடர்களுமே குறட்பாவின் கட்டமைப்பில் குறையுடையனவே!. ‘குறள் வெண்பா’ என்னும் குறுகிய யாப்பே இதற்குக் காரணம். செறிவை முன்னிறுத்திச் செய்யுள் செய்கிறபோது இது தவிர்க்க இயலாதது. உண்மையில் இது ஓர் உத்தியெனினும் அதனைக் கண்டறிந்து எல்லாருக்கும் புரியும் வகையில் வெளிக்கொணர வேண்டியது உரையாசிரியர் கடமை. அந்தக் கடமையைப் பரிமேலழகர் மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

    ‘இறைவன் அடி என்னும் புணையைச் சேர்ந்தார் பிறவியாகிய பெரிய கடலை நீந்துவர்; அதனைச் சேராதார் நீந்தமாட்டாராய் அதனுள் அழுந்துவர்’

    என்னும் இப்பாட்டிற்கான பொழிப்பில் பரிமேலழகர் உரையின் உச்சம் தொடுவதைக் காணலாம். குறட்கருக்கத்தை விட இவரின் உரைச்சுருக்கம் நுட்பமானது. ஆனால் குறளில் பெறமுடியாத விளக்கத்தையும் தெளிவையும் இவர் உரையில் காண முடிகிறது. குறட்பாவையும் அதன் பொருளையும் நன்கு உள்வாங்கிக் கொண்டு எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் ஆகியனவற்றை நிரல்படப் பெய்து தெளிவான முழுமையான உரையை எழுதிக்காட்டுவதைக் காணலாம். மேலும் புணையை ‘அதனை’ என்றும் பிறவிப்பெருங்கடலை ‘அதனுள்’ என்றும் சுட்டால் உணர்த்துவார். ‘நீந்தார்’ என்னும் எதிர்மறைக்கு  ‘அழுந்துவர்’ என்னும் மற்றொரு உடன்பாட்டை எதிர்மறையாக்குவார். இந்தக் குறட்பாவும் உரைவிளக்கமும் இங்கே சுட்டப்பட்டதற்குத் திருக்குறள் தொடரமைப்பையும் உவம மற்றும் பொருள் அடைகளையும் நன்கு நோக்கி உரையெழுதும் அவருடைய உரைத்திறனைப் புரிந்து கொள்ளுதல் வேண்டும் என்பதற்கேயாம்.

    திறனறியும் குறட்பாவும் பொழிப்புரையும்

    திருக்குறளில் பன்னிரண்டாவதாக அமைந்துள்ள ‘நடுவுநிலைமை’ என்னும் அதிகாரத்துள் எட்டாவது குறட்பாவாக இடம்பெற்றிருப்பது,

    “சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்துஒருபால்
    கோடாமை சான்றோர்க்கு அணி” (118)

    என்னும் குறட்பாவாகும். இதற்குச்,

    1. சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் – முன்னே தான் சமனாக நின்று பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும் துலாம்போல
    1. அமைந்து ஒருபால் கோடாமை சான்றோர்க்கு அணி – இலக்கணங்களான் அமைந்து ஒரு பக்கத்துக் கோடாமை சான்றோர்க்கு அழகு ஆம்.

    அதிகாரக் கருத்துப் பகுப்பு

    பொழிப்புரையின் நுட்பம் காண்பதற்கு முன்பாக இவ்வதிகாரத்தின் பொருட் பாகுபாடுகளை அறிந்து கொள்வது இந்தக் குறட்பாவின் முழுமையான கருத்தினைப் பரிமேலழகர் கண்டறிந்த நெறி புலப்பட உதவக் கூடும்.  திருக்குறள் அதிகாரக் கருத்துக்களைப் பாகுபடுத்துவது பற்றிப் பல கட்டுரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி ‘நடுவுநிலைமை’ என்னும் இவ்வதிகாரப் பொருண்மை பின்வருமாறு பரிமேலழகரால் வகுத்துக் கொள்ளப்படுகிறது. அதாவது ‘நடுவுநிலைமை’ என்னும் அதிகாரத்தில் நடுவுநிலைமை என்னும் பண்பைத் திருவள்ளுவர் பொதுவாக ஆராயவில்லை என்பதாம்.

    1. நடுநிலைமையது சிறப்பு (1)
    2. நடுவுநிலைமையான் வந்த செல்வம் நன்மை பயத்தல் (2)
    3. ஏனைச் செல்வம் தீமை பயத்தல் (3)
    4. தக்கார் தகவிலர் அறியும் ஆறு (4)
    5. கேடும் பெருக்கமும் கோடுதலான் வாரா (5)
    6. கோடுதல் கேட்டிற்கு ஏதுவாம் (6)
    7. கோடாதவன் வாழ்வு கேடன்று (7)
    8. அவையத்தார்க்கு வேண்டிய நடுவுநிலைமை (8-9)
    9. வணிகத்தார்க்கு வேண்டிய நடுவுநிலைமை (10)

    இப்பகுப்பாய்வில் இறுதியில் உள்ள அவையத்தார்க்கும் வணிகர்க்குமான நடுவுநிலைமைப் பண்பினைப் பரிமேலழகர் தொகுத்துக் கூறுகிறார். கட்டுரையாளர் பொருள் தெளிவு கருதி வகுத்துரைக்கிறார்.

    பொழிப்புரை நுட்பம்

    • ‘சமன்செய்து’ என்றே குறளிருக்க, தன் கண் வைக்கப்படும் பாரத்தைத் தான் அளக்குமுன் தன்னைச் சரிசெய்து கொள்ள வேண்டும்’ என்னும் நுட்பத்தை உணர்ந்த பரிமேலழகர் ‘முன்னே’ என்னும் சொல்லை வருவித்துக் கொள்கிறார். கொண்டு ‘முன்னே ‘தான் சமனாக நின்று’ என உரையெழுதுகிறார்.
    • தன்னைச் சரிசெய்து கொண்ட பின்பே தன் பணியைச் செம்மையாகச் செய்ய முடியும் என்பதைப் ‘பின் தன்கண் வைத்த பாரத்தை வரையறுக்கும்’ என எழுதுகிறார்.
    • ‘சீர்தூக்கும்’ என்பதற்கு ‘வரையறுக்கும்’ என உரை காண்பதை நோக்க வேண்டும். ‘சீர்’ என்பதற்குச் ‘சிறப்பு’ என்பதுதான் பொருள். ‘சீர் கொண்ட’ என்பது தமிழ்விடுதூது. சீரிடம், சீருடைச் ‘செல்வர்’, சீர்மை என்பன திருக்குறள் கண்ட சீர்கள். ‘சீர் அபிராமி’ என்பது பட்டர் வாக்கு ‘சீர் கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும்’ என்பது வள்ளலார் வாக்கு. ‘சீரார் பெருந்துறை’ என்பது திருவாசகம். ‘சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர் காள்’ என்பது திருப்பாவை.
    • ‘சமனாக அமைந்து’ என்னும் உவம அடைக்கேற்ப அமைந்து என்பதற்கு ‘இலக்கணங்களால் அமைந்து’ என்னும் பொளுளடையை வருவித்துக் கொள்கிறார்.

    விளக்கவுரை

    “உவமையடையாகிய சமன்செய்தலும் சீர்தூக்கலும் பொருட்கண்ணும்,  பொருளடையாகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி, சான்றோர் சீர் தூக்கலாவது தொடை விடைகளால் உள்ளவற்றை ஊழான் உள்ளவாறு உணர்தலாகவும் ஒருபால் கோடாமையாவது  அவ்வுள்ளவாற்றை மறையாது பகை, நொதுமல், நட்பு என்னும் மூன்று திறத்தார்க்கும் ஒப்பக் கூறுதலாகவும் உரைக்க. இலக்கணங்களான் அமைதல் இருவழியும் ஏற்பன கொள்க” என்று விளக்கவுரையில் பரிமேலழகர் பொருளுக்கே முதன்மை தந்திருப்பதைக் காணலாம்.

    விளக்கவுரை நுட்பம்

    • ‘துலாக்கோல்’ உவமம். ‘சான்றோர்’ பொருள். முன்னது பாரத்தை வரையறுக்கிறது. பின்னவர் எத்திறத்தும் நடுவுநிலைமை மாறாமல் செயல்படுபவர் எனினும் குறட்பாவில் உவமத்திற்குச் சொல்லப்பட்ட சமன் செய்து சீரதூக்கல் இரண்டு அடைகளையும் பொருளுக்கு ஆக்கவில்லை. பொருளுக்குரைத்த அமைதலையும் ஒருபால் கோடாமையையும் உவமத்திற்கு ஆக்கவில்லை. இதனைப் பரிமேலழகர் நோக்கி உரையெழுதுகிறார்.
    • சமன் செய்து, அமைந்து, ஒருபால் கோடாது சீர் தூக்கல் என்பது உவமத்திற்கும் பொருந்தும் பொருளுக்கும் பொருந்தும். அதாவது உவமமாகிய துலாக்கோலிற்கும் பொருளாகிய சான்றோருக்கும் இந்த நான்கு பண்புகளும் இருக்க வேண்டும் என்று பரிமேலழகர் கருதுகிறார். கருதி, “உவமையடை ஆகிய சமன்செய்தலும் சீரதூக்கலும் பொருட்கண்ணும் பொருளடையாகிய அமைதலும் ஒருபால் கோடாமையும் உவமைக்கண்ணும் கூட்டி” உரையெழுதுகிறார்.
    • இந்த நான்கு பண்புகளையும் உவமத்திற்கு ஒருமுறையும் பொருளுக்கு ஒரு முறையுமாக அடையாக்குவது குறுகிய யாப்பிலக்கணத்தில் கூடாமையை அவர் புரிந்து கொள்கிறார். கொண்டு புறக்கட்டுமானத்தின் போக்கறிந்து அகக்கட்டுமானத்தின் நுண்ணியம் காண்கிறார்.
    • பொருளுக்கான அடையை உவமத்திற்கு ஆக்கியுரைத்த பரிமேலழகர் (அதிகாரப் பொருள் நுட்பம் கருதி) உவம அடையைப் பொருளுக்குப் பொருத்திய பாங்கு பற்றி மட்டுமே உரையெழுதுகிறார். அதாவது துலாக்கோல் பாரத்தை அளக்கும் பண்பு பற்றிப் பரிமேலழகர் விரித்துரைக்காது சான்றோர் நடுவுநிலைமை தவறாது செயல்படுவதையே விரித்துரைப்பதைக் காணமுடிகிறது. உவம விளக்கத்தைக் கைவிட்டுப் பொருள் விளக்கத்தை மட்டும் பரிமேலழகர் தந்திருப்பதற்கு என்ன காரணம்? இவ்வதிகாரத்தின் இறுதிப்பாட்டில் இந்த உவம ஆற்றலைத் திருவள்ளுவர் வெளிப்படுத்துவதைப் பரிமேலழகர் அறிந்து கொள்கிறார். துலாக்கோலின் பணி அளவில் மாறுபடாமை என்பதைப் பிறவும் தமபோல் செயின் என்னும் தொடர் குறிப்பதையும், அத்தொடருக்குக் “கொள்வது மிகையும் கொடுப்பது குறையும் ஆகாமல் ஒப்ப நாடிச் செய்தல் என்னும் (பட்டினப்பாலை) பரிமேலழகர் தரும் விளக்கத்தையும் அறிந்து கொண்டால் திறனறியும் குறட்பாவில் உவம விளக்கம் விடுபட்டதற்கான காரணத்தை அறியலாம்.
    • நடுவுநிலைமை என்பது மனம், மொழி, செயல் என்னும் மூன்றனுக்கும் உரியதாதலின் செயலாகிய வணிகத்தைப் பிரித்தோதி, 118, 119 ஆகிய குறட்பாக்களில் சான்றோர் திறம் கூறப்படுவதைப் பரிமேலழகரே தெளிவுபடுத்திக் காட்டுகிறார். இதனை அதிகாரக் கருத்துப் பகுப்பில் மூன்று பாடல்களையும் ஒருங்கிணைத்தாலும் முன்னைய இரண்டும் அவையத்தாரை நோக்கின, ஏனையது வணிகரை நோக்கியது’ என்னும் அவருரையால் அறிய இயலும்.
    • இந்த அதிகாரத்தின் இறுதிப்பகுதி வணிகர்களை நோக்கியது என்பது ‘வாணிகம் செய்வார்க்கு’ என்னும் குறட்பா தொடராலும் பரிமேலழகர் எழுதிக்காட்டும் உரையாலும் புலப்படும். ஆனால் திறனறியும் குறட்பாவில் ‘வணிகர்க்கு அணி’ என்னாது ‘சான்றோர்க்கு அணி’ என்பது குறித்திருப்பது காண்க. சங்கப் புலவர்களைச் ‘சங்கச் சான்றோர்’ என்பது போன்றது இது. ‘சான்றோர்’ என்னும் இச்சொல் பயன்பாடுதான் பரிமேலழகரின் சிந்தனையைத் தூண்டி இறுதிக்கும் முன்னதாக உள்ள இரண்டு பாடல்களையும் (118,119) ‘அவையத்து நோக்கிச் சொல்லப்பட்டன’ என்னும் உரையெழுத காரணமாய் அமைந்தன எனலாம்.

    இன்னாத கனிகளும் இனிய காய்களும்

    திறனறியும் குறட்பாவில் உவம அடைகளையும் பொருளடைகளையும் இருவழியும் புணர்த்தி, உரையெழுதிய பரிமேலழகர் இது போன்ற நெறியை வாய்ப்புக் கிடைக்கிறபொழுதெல்லாம் பின்பற்றியிருக்கிறார் என்பதற்குச் சான்றுகள் பல உள. இனிய சொற்கள் இருக்க, இன்னாத சொற்களைப் பேசுவது  கனியிருக்குங்கால் காயை உண்ணுவதுபோல என்னும் கருத்துப்பட திருக்குறள் ஒன்றிருக்கிறது.

    “இனிய உளவாக இன்னாத கூறல்
    கனியிருப்பக் காய்கவர்ந் தற்று” 100

    இந்தப் பாட்டைக் கிடக்கைநிலையில் பொருள் கண்டால் மேலே கண்டவாறுதான் அமையும். அமையவே எல்லாக் கனிகளும் இனிமை தருமா? எல்லாக் காய்களும் கேடு தருமா? என்னும் வினா எழும். பரிமேலழகர் உரையெழுதுங்கால் பின்பற்றிய நெறிகளில் அது குறள் வெண்பா என்னும் குறுகிய யாப்பில் எழுதப்பட்டது என்பதை நினைவிற்கொள்வது இன்றியமையாத ஒன்று. வேறு வகையாகச் சொன்னால் குறுகத் தறித்த குறள் என்பதை மறந்து அவர் உரை அமைவதில்லை. குறுகத் தறித்தவைகளை விரிவாக வெளிக்கொணர்ந்ததில் அவருடைய உரைக்குப் பெரும்பங்குண்டு. அந்த வகையில்  இந்தப் பாடடு ‘இனிய உளவாக இன்னாத கூறல் இனிய கனியிருப்ப இன்னாத காய்கவர்ந்தற்று’ என இருத்தல் வேண்டும். யாப்புநிலை கருதியே ஆசிரியர் சுருங்க உரைத்தார் எனக் கருதிப் பின்வருமாறு உரையெழுதுகிறார்.

    “பொருளை விசேடித்து நின்ற பண்புகள் உவமைக் கண்ணும் சென்றன.  இனிய கனிகள் என்றது ஔவை உண்ட நெல்லிக்கனிபோல் அமிழ்தானவற்றை. இன்னாத காய்கள் என்பது காஞ்சிரங்காய் போல  நஞ்சாவனவற்றை. கடுஞ்சொல் சொல்லுதல் முடிவில் தனக்கே இன்னாது என்பதாம்”

    பொருளின்கண் சென்ற அடைகளைப் பரிமேலழகர் இவ்வாறு உவமத்திற்குப் புணர்க்காமல் உரையெழுதியிருந்தால் “கனிகள் எல்லாம் இனிமை தரும், காயெல்லாம் கேடு தரும்” என்னும் கருத்துப் பிழையோடு, ‘இனிய கனிகளே நன்மை தரும் இன்னாத காய்களே கேடுதரும்’ என்னும் திருவள்ளுவரின் கருத்து விளக்கமும் புலப்படாமல் போயிருக்கக்கூடும்.

    வில் வணக்கமும் சொல் வணக்கமும்

    உவமத்தை முன்மொழிந்து உவமேயத்தைப் பின்மொழிவதும் உவமேயத்தை முன்மொழிந்து உவமத்தைப் பின்மொழிவதுமாகிய இருநெறிகளைத் திருக்குறளில் காணமுடியும். ‘கூடா நட்பு’ என்னும்  அதிகாரத்தில்,

    “சொல்வணக்கம் ஒன்னார்கண் கொள்ளற்க! வில்வணக்கம்
    தீங்கு குறித்தமை யான்” (827)

    என்னும் குறட்பா பின்னதற்குச் சான்றாகிறது. (“என்பிலதனை வெயில்போலக் காயுமே” (77) என்பது முன்னதற்குச் சான்றாகிறது. மேற்கண்ட குறட்பாவில் வணங்கியது சொல்லன்றிச் சொல்பவன் அல்லன். வணங்கியது வில்லன்றி வில்லியல்லன். அவ்விரு வணக்கமும் செய்வார்தம் உள்ளக் குறிப்போடு  பொருந்தியதே தவிர சொல்லின் செயலோ வில்லின் செயலோ அன்று அவ்விருவணக்கமும் போலியானது. கொடுமை நிறைந்தது. வெளியில் புலப்படாதது. வில்லினது வணக்கம் ஏற்றவர்க்குத் தீமை செய்தலைக் குறித்தமையால் பகைவர் மாட்டுப் பிறக்கும் சொல்லினது வணக்கத்தையும் தமக்கு நன்மை செய்தலைக் குறித்தது என்று கருதற்க என்று அறிவுறுத்துகிறார் திருவள்ளுவர் வில்லையேந்தியவனின் தீங்கு குறித்த எண்ணத்தை அவனாலாகிய  வில்வணக்கத்தின் மேலேற்றி ‘வில்வணக்கம் தீங்கு குறித்தமையான்” என்று கூறியதனால் அதற்கு ஏற்ப ஒன்னார் சொல்வணக்கம் தீங்கு குறித்ததை அவர்களாலாகிய சொல்வணக்கத்தின் மேலேற்றி (இங்கு சொல் தீங்கு செய்யாது., சொல்லைப் பணிவாகச் சொல்லும் பகைவனே தீங்கு செய்வான்) ‘ஒன்னார்கண் சொல்வணக்கம் கொள்ளற்க!’ என்று மறுத்துக் கூறுகிறார். இந்த விளக்கத்தையெல்லாம்,

    “வில்வணக்கம் வேறாயினும் வணங்குதல் ஒப்புமை பற்றி அதன் குறிப்பை ஏதுவாக்கியும் கூறினார் வில்லியது குறிப்பு அவனினாய  வில்வணக்கத்தின் மேல் நிற்றலான் ஒன்னாரது குறிப்பும் அவரினால் ஆய சொல்வணக்கத்தின் மேலதாயிற்று”.

    ‘வில்வணக்கம் தீங்கு குறித்தது’ என்பது தெளிவு. இது உவமம். ‘சொல்வணக்கம் தீங்கு குறித்ததா?’ என்பதை விளக்குதற்கே இந்த உவமத்தைத் திருவள்ளுவர் பயன்படுத்துகிறார். இரு வணக்கங்களின் நோக்கமும் வேறாயினும் ‘வணங்குதல்’ ஒப்புமை பற்றி உவமித்தார் என நுண்ணியம் காண்கிறார் பரிமேலழகர். வணங்குவதனாலேயே அதன் நோக்கம் தூய்மையானது எனக் கருதற்க என்பதாம்!

    இதுகாறும் தரவுகளின் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட ஆய்வில் உவமம், உவமேயம் சார்ந்த குறட்பாக்களில் பரிமலழகரின் உரைகாணும் திறன் புலப்பட்டிருக்கக்கூடும். பொருளுக்கும் உவமத்திற்குமான அடைகளை உற்றுநோக்கி அவற்றின் அடிப்படையில் நூலாசிரியர் சொல்லவரும் கருத்தினை நன்கு உள்வாங்கி அதற்கேற்ப உவம அடைகளையும் பொருளடைகளையும் கையாளும் வியத்தகு திறன் அவர் உரையில் ‘தொட்ட இடமெல்லாம் கண்ணில் தட்டுப்படுவதைக்’ காணலாம்.

    நிறைவுரை

    திறனறியும் குறட்பாவில் “அமைந்து, ஒருபால் கோடாமை’ என்னும் பொருளுக்கான (சான்றோர்க்கான) அடைமொழிகளை உவமமாகிய துலாக்கோலுக்கும் ஆக்கினாலும் பாடல் சான்றோரின் நடுவுநிலைமையாகிய பண்பு பற்றியதென்பதை உணர்ந்து “அமைந்து சமன் செய்து சீர்தூக்கி ஒரு பால் கோடாமை’ என அவர்தம் உயர்பண்பை விளக்கிக் காட்டிய நுண்ணியமே இப்பாட்டில் பரிமேலழகரின் உரைத்திறனாகும். நூலாசிரியரால் புணர்க்கப்படும் அடைச்சொற்கள் பொருளுக்காயினும் உவமத்திற்காயினும் அவை வெற்று அலங்காரத்திற்காகவோ சீர் நிரப்புதற்காகவோ அல்ல என்பதே பரிமேலழகர் உரையால் புலப்படும் உண்மையாகும்.

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 8

    பரிமேலழகர் உரைத் திறன் – 8

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    “மோப்பக்  குழையும்  அனிச்சமும்  நோக்கக் குழையும்  விருந்தும்”

    முன்னுரை

    திருக்குறளில் ‘ஒன்று மற்றொன்றை விடச் சிறந்தது, ஒன்று மற்றொன்றைவிடத் தாழ்ந்தது’ என்பன போன்ற பதிவுகள் வரும். ஆனால் அவை எப்படிச் சிறந்தது? எப்படித் தாழ்ந்தது? என்பதற்கான காரணத்தைத் திருவள்ளுவர் கூறமாட்டார். அவற்றிற்கான காரணங்களைக் கண்டறிவது கற்பார் கடன். அல்லது உரையாசிரியர் பணி. இது ஓர் உரை நெறி. இந்நெறியில் பரிமேலழகர்  உரை தனித்தன்மை பெற்றது. “பெண்ணின் பெருந்தக்க யாவுள?” என்னும் திருவள்ளுவரின் வினாவிற்கு விடையிறுத்த பரிமேலழகர், “கற்புடையாள்போல் அறம் முதலிய மூன்றற்கும் ஏதுவாவன பிற இன்மையின் யாவுள?” (54) என்றார் என எழுதுவதையும், “செல்லா இடத்து சினம் பயப்பது இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே! ஏனையது இம்மைக்கண் பழியும் மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீய பிற இல்லை என்றார்” (3020) என எழுதுவதும் காண்க. இந்த வகையில் எதிர்பாராச் சூழலில் இல்லத்திற்கு வரும் விருந்தின் இயல்பு  அனிச்சப்பூவினும் மென்மையானது என்பதற்கான காரணத்தைக் கண்டறிந்து கூறும் பரிமேலழகரின் உரைத்திறன் இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது.

    திறனறியப்படும் குறளும் உரையும்

    திருக்குறள் அறத்துப்பாலில் ஒன்பதாவது அதிகாரத்தின் பத்தாவது இறுதிப் பாடலாக அமைந்தது,

    “மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
    நோக்கக் குழையும் விருந்து” (90)

    என்னும் குறட்பாவாகும். இதற்கு,

    • அனிச்சம் மோப்பக் குழையும் — அனிச்சப்பூ மோந்துழியன்றிக் குழையாது
    • விருந்து முகந்திரிந்து நோக்கக் குழையும் – விருந்தினர் முகம் வேறுபட்டு நோக்கக் குழைவர் எனப் பரிமேலழகர் பொழிப்புரை எழுதியிருக்கிறார்.

    பொழிப்புரையின் நுட்பம் காண்பதற்கு முன்பாக இவ்வதிகாரத்தின் பொருட் பாகுபாடுகளை அறிந்து கொள்வது இந்தக் குறட்பாவின் மையக்கருத்தினைப் பரிமேலழகர் கண்டறிந்த நெறி புலப்பட உதவக் கூடும்.

    அதிகாரக் கருத்துப் பகுப்பு

    ஒவ்வொரு அதிகாரத்து உட்பொருளையும் பாகுபடுத்திக் கொள்ள பரிமேலழகர் பெரிதும் முயன்றிருக்கிறார். இந்தப் பகுப்புத்தான் திருக்குறளுக்கான புத்துரைகள் அனைத்தையும் தவிடுபொடியாக்குகின்ற உரைத்தளவாடங்கள் ஆகும். பரிமேலழகர் வகுத்துக் காட்டும் பகுப்புமுறையைப் புறந்தள்ளித் திருக்குறளுக்கு உரைசொல்லப் புகுந்தால் ஒவ்வொரு அதிகாரத்திலும் அதிகாரத் தலைப்புக்குப் பொருத்தமில்லாத குறட்பாக்கள் இருப்பதைக் காட்டிவிட இயலும். ‘கடவுள் வாழ்த்து’ என்ற அதிகாரத் தலைப்பிற்கும் “இறைவனடி சேராதார் பிறவிக்கடலை நீந்தார்” என்பதற்கும் என்ன தொடர்பு? ‘ஒழுக்கமுடைமை’ என்ற அதிகாரத் தலைப்பிற்கும் “மறப்பினும் ஓத்துக் கொளலாகும், பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும் என்பதற்கும்” என்ன தொடர்பு?” என்று ஆயிரம் வினாக்களைத் தொடுத்துவிட முடியும். “ஒரு தலைப்பின் கீழ் அதுபற்றிய பன்முகப் பரிமாணங்களைத் திருவள்ளுவர் ஆராய்ந்திருக்கிறார்” என்பதுதான் பரிமேலழகரின் உரைப்பணியின் தொடக்க நிலையாகும்.

    1. விருந்தோம்பலின் சிறப்பு (1-2)
    2. விருந்தோம்புவார் இம்மைக்கண் எய்தும் பயன் (3-5)
    3. விருந்தோம்புவார் மறுமைக்கண் எய்தும் பயன் (6)
    4. இருமைப் பயனுக்கான காரணம் (7)
    5. விருந்தோம்பாவழிப் படும் குற்றம் (8-9)
    6. விருந்தோம்புவார்க்கு வேண்டிய இன்முகம் (10)

    எனப் பகுத்துக் காட்டி, விருந்தோம்பலின் பன்முகப் பரிமாணத்தை எடுத்து விளக்கியதால்தான், ‘இத்தகைய சிறப்புக்கள் உடைய விருந்தினை ஓம்புவார்க்கு இருக்க வேண்டிய எளிய ஆனால் தலையாய இயல்பு இன்முகமே’ என்பதை அவரால் இறுதிக் குறட்பாவிற்கான விளக்கமாக்க முடிந்தது.

    பொழிப்புரை நுட்பம்

    • ‘அனிச்சம் குழையும்’ என உடன்பாட்டில் குறளிருக்க ‘மோந்துழியன்றிக் குழையாது’ என எதிர்மறை வாய்பாட்டில் உரை காண்கிறார். அதிகாரம் விருந்தோம்பல். விருந்தினர் மனம் குழைவதே பரிமேலழகரின் கருத்தில் நின்றதாதலின் உடன்பாட்டு உவமத்தை எதிர்மறை வாய்பாட்டிலும் பொருளை உடன்பாட்டிலும் வெளிப்படுத்துகிறார். ‘(காண்டல் தொடுதல் அன்றி,) மோந்தால்தான் அனிச்சம் குழையும்., திரிபு நோக்கினாலேயே விருந்து குழையும்’ என்பது கருத்து.
    • ‘திரிதல்’ என்பது இலக்கணத்துள் மூவகை விகாரங்களுள் ஒன்று. இயல்புதான் திரியும். விருந்தோம்புதற்குரியார், விருந்து வருவது கண்டு மகிழ்வதற்கு மாறாக தமது இசைவின்மையை (விருப்பமின்மையை), முகத்தால் மாறுபட நோக்கின், வந்தவர் மனம் குழைந்துவிடுமாம். நுட்பம் என்னவென்றால் இயல்பாக இருப்பதைச் செயற்கையாக மாற்றிக்கொள்வதைக் ‘கண்டுழி’ “முகம் வேறுபட்டு நோக்குதல்” என்னும் சொல்லாட்சிகளால் பரிமேலழகர் உணரவைப்பதுதான்.

    விளக்கவுரை

    ‘அனிச்சம்’ ஆகுபெயர். சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்சொல்லும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள், முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின், தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம். இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் எனப்து கூறப்பட்டது.

    விளக்கவுரையில் கண்ட உரை நுட்பம்

    • திருக்குறளில் ‘அனிச்சம்’, ‘குவளை’ ஆகிய இரண்டு பூக்கள், முறையே மென்மைக்கும் கண்ணுக்கும் ஒப்புமையாகக் கூறப்பட்டுள்ளன. ‘வாழி அனிச்சமே’ (1111) (மென்மையால்), ‘அனிச்சப்பூ’ கால்களையாள்’ (1115) (மென்மை கருதாது) ‘அனிச்சமும்’ (1120) (மென்மைக்காக எடுக்கப்பட்ட) என்னும் இடங்களிலெல்லாம் ‘அனிச்சம்’ என்னும் சொல் தலைமகன் தலைமகள் நலத்தைப் புகழ்வது ஆதலின் பூவை நேரடியாகக் குறித்தது. இக்குறட்பா ஆசிரியர் கூற்றாக அமைந்ததாதலின் ‘அனிச்சம்’ என்னும் மரத்தின் பெயர் மலருக்கு ஆகுபெயர் ஆயிற்று. அதாவது தலைவன் மரத்தைப் பற்றிப் பேசாது மலரைப் பற்றித்தான் பேசுவான் என்பது குறிப்பு. பாட்டில் ‘குழையும்’ என்ற வினையால் ‘அனிச்சம்’ ஆகுபெயராயிற்று, குழைவது மரத்திற்கின்மையின். தலைமகன் கூற்றில் அனிச்சம் ஆகுபெயராகாததற்கு அவன் கருத்தில் அனிச்சப் பூ மட்டுமே நின்றதனான் என்க.
    • மேம்போக்காக இந்தப் பாடலைக் கண்ணுறுவார் இதனை எடுத்துக்காட்டுவமமாகவே கொள்ளக் கூடும். மோந்தால் அனிச்சம் குழையும் (மாறுபட்ட) நோக்கினால் விருந்து குழையும்’ என்னும் பாட்டின் கிடக்கை நிலையும் அவ்வாறு கொள்ளுமாறு அமைந்திருப்பதும் உண்மை. ஆனால் பரிமேலழகரின் சிந்தனையாற்றலால் பாட்டில் வெளிப்படும் நுண்ணியம் இறுதியில் விளக்கப்படும்.
    • மென்மைக்கு எடுத்துக்காட்டு அனிச்சப்பூ. ‘பூ’ என்னும் சொல்லுக்கே ‘மென்மை’ என்பது பொருள். ‘பூந்தென்றல்’, ‘பூங்கோதை’, ‘பூங்கதவு’ என்பன காண்க. அனிச்சம் பூக்களில் மென்மையானது. அதனினும் விருந்தினர்கள் மென்மையானவர்கள் என்றுதான் வள்ளுவர் சொல்ல வருகிறார் என்பது பரிமேலழகர் அனுமானம். பாட்டில் அதற்கான காரணம் வெளிப்பட இல்லை. அக்காரணத்தை ‘மோப்ப’, ‘நோக்க’ என்னும் இரு சொற்களைக் கொண்டு கண்டறிய முற்படுகிறார். முற்பட்டு ‘மோத்தல்’ என்பது ‘காண்டல், தொடுதல், மோத்தல் என்னும் நிரலில் மூன்றாவதாகவும் ‘நோக்குதல்’ என்பது அவற்றின் தொடக்க வினையாகவும் அமைந்திருப்பதை அறிகிறார். கண்ணால் காணுகிறபொழுது அனிச்சம் வாடாது. விரல்களினால் தீண்டுகிறபோதும் வாடாது. மூக்கினால் மோந்தால்தான் அது வாடும். தொலைவில் வரும் விருந்தினர்களைக் காண்பது ஒரு வினை. அவர்களை இன்சொல்லால் வரவேற்பது அடுத்த வினை. அவர்களை அறுசுவை உண்டியளித்து ஓம்புதல் அவற்றின் தொடர்வினை. ஓம்புபவர் தொலைவில் வரும் விருந்தினர்களைத் தம் பார்வையால் மாறுபட்டு நோக்கினாலேயே மனம் வாடுவர். எனவே மூன்றாம் நிலையில் வாடும் அனிச்சப் பூவினும் முதல் நிலையிலேயே வாடிவிடும் விருந்தினர் மென்மையானவர் என்னும் உண்மையைப் பதிவு செய்கிறார் பரிமேலழகர். இதனைச் “சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும், அதுபற்றி நண்ணியவழி இன்முகமும், அதுபற்றி உடன்பட்டவழி நன்றாற்றலும் என விருந்தோம்புவார்க்கு இன்றியமையாத மூன்றனுள் முதலாய இன்முகம் இல்வழிச் சேய்மைக்கண்ணே வாடி நீங்குதலின் தீண்டியவழி அல்லது வாடாத அனிச்சப் பூவினும் விருந்தினர் மெல்லியர் என்பதாம்” என்னும் பகுதி உணர்த்துவது காண்க.
    • அதிகார உள்ளடக்கக் கருத்துப் பகுப்பில் பெரிதும் நம்பிக்கை கொண்ட பரிமேலழகர் விருந்தோம்புவார்க்கு முதற்கண் வேண்டுவது இன்முகம் என்பதை வலியுறுத்தவே இக்குறள் இறுதியாக வைக்கப்பட்டுள்ளது எனக் கருதுகிறார். கருதி, “இதனான் விருந்தோம்புவார்க்கு முதற்கண் இன்முகம் வேண்டும் என்பது கூறப்பட்டது” எனக் குறட்பாவின் மையக்கருத்தினைப் புலப்படுத்துகிறார்.

    விருந்து பற்றிய விளக்கம்

    இல்லறத்தான் ஓம்புகின்ற அறங்களுள் விருந்து சிறந்தது. ‘விருந்து’ என்னும் சொல் விருந்தினரைக் குறித்தாலும் இவ்வறம் பற்றிய அனைத்துச் சிந்தனைகளும் ஓம்புவாரையே களமாகக் கொண்டுள்ளன என்பதைக் கருத்திற் கொள்ளல் வேண்டும். அதாவது விருந்தோம்பலில் ஓம்புகிறவனே தலைமகன், அறம் செய்வானும் அதற்கான அனைத்துப் பயன்களையும் அனுபவிப்பவன் அவனேயாதலின். தேனும் மீனும் கொடுத்து ஓம்பிய குகனைப் (தெய்வத்தை ஓம்பிய அடியவன்) பற்றியே இராமாயணம் பேசுகிறது. குசேலனை ஓம்பிய கண்ணனைப் (மானுட நண்பனை ஓம்பிய இறைவன்) பற்றியே குசேலோபாக்கியானம் பேசுகிறது. சிவனடியாரை மழையிரவில் ஓம்பிய இளையான்குடி மாறனாரையே (சிவனை ஓம்பிய சிவனடியார்) பெரியபுராணம் பேசுகிறது. விருந்தோம்பலில் ஓம்புகிறவன் (அறம்) செய்பவனாகவும் விருந்து செயப்படுபொருளாகவும் அமைந்துவிடுவதே இதற்குக் காரணம்.  விருந்தோம்பலாகிய அறத்தில் பயன் செய்பவனுக்கே என்பது குறிப்பு. ஓம்புகிறவன் உயர்ந்தவன் என்பது தத்துவம். இந்தப் பின்புலத்தில் பரிமேலழகர் உரையருமையை நோக்கினால் அதன் நுட்பம் புரியக்கூடும்.

    பரிமேலழகரின் உரையருமை

    • ‘விருந்தோம்பல்’ என்னும் பொருண்மை திருக்குறளின் ஒன்பதாவது அதிகாரத்தில் ஆராயப்படினும் ஐந்தாவது அதிகாரத்தின் 43 ஆவது குறட்பாவிலிருந்தே இது பற்றிய சிந்தனையைப் பரிமேலழகர் தொடங்கிவிடுகிறார். இதனை “இருவகை விருந்தினரையும் புறந்தருதல். தென்புலத்தார் முதலிய ஐம்புலத்துள் முன்னைய இரண்டும் (தென்புலத்தார், தெய்வம்) கட்புலனாகாதன நினைந்து செய்வன ஆகலானும், பின்னைய இரண்டும் (ஒக்கல், தான்) பிறர்க்கு ஈதல் அன்மையானும் இடைநின்ற விருந்தோம்பல் சிறப்புடைத்தாய் இல்லறங்களுக்கு முதலாயிற்று.” என்னும் அதிகாரப் பொருண்மை விளக்கத்தினால் உணர முடியும்.
    • ‘அறிந்து வருவது’, ‘அறியாது வருவது’ என்னும் இருவகையில் எவ்வகையாயினும் எதிர்பாராமல் வருவதே ‘விருந்து’ எனப்படும். ‘விருந்தே புதுமை’ என்பதற்கு அதுதான் பொருள்! அவ்வெதிர்பாராச் சூழலில் வருகின்ற விருந்தினை ஓம்புங்கால் இன்முகமே தலையாயது என்பதனையே திறனறியும் குறட்பாவின் (90) மையக்கருத்தாகப் பரிமேலழகர் கொள்கிறார். விருந்தோம்புவார்க்குரிய முகமலர்ச்சியே இவ்வதிகாரத்தில் கண்ட அனைத்துப் பயன்களையும் தரும் என்பது குறிப்பு. மேற்கண்ட விளக்கங்களையெல்லாம் உள்ளடக்கி “விருந்து என்பது புதுமை. அஃது ஈண்டு ஆகுபெயராய்ப் புதியவராய் வந்தார்மேல் நின்றது.  அவர் இரு வகையர். பண்டு அறிவுண்மையின் ‘குறித்து’ வந்தாரும் அஃது இன்மையின் ‘குறியாது’ வந்தாரும் என.” என்னும் விளக்கத்தாலும் இவ்வைந்து அறங்களுள் விருந்தோம்பலையே இல்லறத்தின் தலையாய அறமாக விதந்தோதிய திருவள்ளுவரின் உள்ளக்கிடக்கை அறிந்த நுட்பத்தானும் உணர்க.

    ஒரே அலைவரிசையில் “திருவள்ளுவர் – பரிமேலழகர் — பாவேந்தர் “

    குறிப்பிட்ட குறட்பாவிற்குரிய பரிமேலழகர் உரைத்திறனை மட்டும் எதிர்பார்க்கின்ற சிலர் இந்தப் பகுதியில் இவ்வளவு விளக்கமும் எடுத்துக்காட்டுக்களும் சான்றுகளும் தேவையா என எண்ணக் கூடும். பழந்தமிழ்  உரையாசிரியப் பெருமக்களின் ஒரு பொருள் பற்றிய சிந்தனை, பல தளங்களிலும் வேர்கொண்டிருந்தது என்பது ஓர் இன்றியமையாக் குறிப்பு. ‘விருந்தோம்பல்’ என்பது தமிழர்களின் தலைசான்ற பண்பாட்டுக் குறிப்பு. உலக நீதி உரைக்க வந்த திருவள்ளுவரே “இன்மையுள் இன்மை விருந்தொரால்” (153) என்றும், “உடைமையுள் இன்மை விருந்தோம்பா மடமை” (89) என்றும் இருவகை வாய்பாட்டில் நுட்பமாக இத்தமிழ்ப் பண்பாட்டை ஆராய்ந்திருக்கிறார்.

    கணவனைப் பிரிந்துறைந்த நாளில் தான் இழந்த அறங்ளை நிரல்படுத்திய கண்ணகி விருந்தோம்ப இயலாமையைச் சுட்டி வருந்துவதை இளங்கோடிவகள்  “தொல்லோர் சிறப்பின் விருந்து எதிர்கோடல் இழந்த என்னை” (சிலம்பு. கொலைக்களக்காதை – 73) என்னும் வரிகளில் கண்ணகி வாய்மொழியாகவே பதிவு செய்திருக்கிறார் என்பதும் அசோகவனத்தில் தனிமைச் சிறையில் வாடிய சீதை வனத்தில் இராமனின் நிலையெண்ணி வருந்தியபோது, ‘விருந்து கண்டபோது என்னுறுமோ என விம்மும்” (கம்ப…சுந்தரகாண்டம் – 5083) எனக் கம்பர் பதிவு செய்திருப்பதும் பலராலும் அறியப்பட்டவையே.

    விருந்தோம்பலாகிய மரபுவழிப் பண்பாட்டைத் திருவள்ளுவர் வழி நின்று விளக்கியவர் பரிமேலழகர் என்பது மேற்சொன்ன விளக்கங்களால் புலப்படக் கூடும். திருவள்ளுவரையும் பரிமேலழகரையும் முற்றும் உள்வாங்கிய பாவேந்தர் தமக்கே உரிய தமிழ்ப் பண்பாட்டு உணர்ச்சியுடன் எழுதிய ‘குடும்பவிளக்கு’ என்னும் அரிய காப்பியத்தில் ‘விருந்தோம்பல்’ என்பதை இரண்டாவது பகுதியாக  வைத்திருக்கிறார். அது மட்டுமன்று. குடும்பத்தலைவியாகிய தங்கம் விருந்து வரக் கண்டபோது அடைந்த மகிழ்ச்சியைச்,

    “சுடுவெயிலில் காயவைத்த சோளம் துழவி
    உடல் நிமிர்ந்தாள்., கண்கள் உவந்தாள். —  நடைவீட்டைத்
    தாண்டி வரும்விருந்தைத் தான்கண்டாள்! கையேந்திப்
    பூண்ட மகிழ்வாள் புகழேந்தி – வேண்டி
    வருக!  அம் மாவருக! ஐயா வருக!
    வருக! பாப்பா தம்பி என்று – பெருகன்பால்
    பொன்துலங்கு மேனி புதுமெருகு கொள்ள, முகம்
    அன்றலர்ந்த செந்தாமரையாக – நன்றே
    வரவேற்றாள்” (பாரதிதாசன் குடும்பவிளக்கு “விருந்தோம்பல்”)

    என வெளிப்படுத்துவதில் பரிமேலழகருக்கு உரையெழுதுகிறார். மாவரசர், மலர்க்குழலி, நாவரசு நகைமுத்தும் வந்திருக்கிறார்கள் எனக் கேட்டவுடன் மகிழ்ந்த தங்கத்தின் மாமன், மாமி மகிழ்ந்து மருமகள் தங்கத்திடம் விருந்தோம்பலின் சிறப்பைக் கூறுவதில் திருவள்ளுவர், பரிமேலழகர் வார்த்தெடுத்த தமிழ் மரபுப் பாவேந்தரிடம் குடிகொண்ட பாங்கினை வெளிப்படுத்துவதாக உள்ளது.

    “வீட்டுக்கு வந்த விருந்தோம்பு! நாட்டிலுறு
    நற்றமிழர் சேர்த்த புகழ் ஞாலத்தில் என்னவெனில்
    ‘உற்ற விருந்தை உயிரென்று — பெற்றுவத்தல்’
    மோந்தால் குழையும் அனிச்சம்பூ முகமாற்றம்
    வாய்ந்தால் குழையும் வருவிருந்தென்று – ஆய்ந்த திரு
    வள்ளுவனார் சொன்னார்! அதனைநீ எப்போதும்
    உள்ளத்து வைப்பாய்! ஒரு போதும் – தள்ளாதே!
    ஆண்டு பல முயன்றே ஆக்குவை ஊண் எனினும்
    ஈண்டு விருந்தினர்க்கும் இட்டுவத்தல் வேண்டுமன்றோ?
    வந்தாரின் ‘தேவை, வழக்கம்’ இவையறிய
    நந்தா விளக்குன்றன் நல்லறிவே! செந்திருவே!
    இட்டுப்பார்! உண்டவர்கள் இன்புற்றிருக்கையிலே
    தொட்டுப்பார் உன் நெஞ்சைத் தோன்றுமின்பம்!
    கரும்பென்பார் பெண்ணைக் கவிஞரெலாம் வந்த
    விருந்தோம்பும் மேன்மையினால் அன்றோ?”

    (பாரதிதாசன் குடும்பவிளக்கு “விருந்தோம்பல்”)

    தமிழிலக்கியத்தில் விருந்தோம்பல் என்னும் தலைப்பில் சிந்தித்து எழுதப்படும் படைப்பு எதுவாக இருந்தாலும் அது பாவேந்தர் சித்திரித்துக் காட்டிய குடும்ப விளக்குக்குப் பிறகுதான் என்பதை இந்தப் பகுதி காட்டும். வள்ளுவரை மனக்கோயிலில் வைத்துக் கொண்டாடும் பாவேந்தர் பரிமேலழகரின் உரைநயத்தையும் ஆழத்தையும் உள்வாங்கியே இந்தப் பகுதியை எழுதியிருக்கிறார் என்பதைக் கற்பார் உணரக்கூடும். “தொல்லோர் சிறப்பின்’ என்ற தொடருக்கு “நற்றமிழர் ஞாலத்தில் சேர்த்த புகழ்” என்று கவிதையில் உரையெழுதுகிறார் பாவேந்தர். விருந்து கண்டவுடன் தங்கத்தின் மேனி பூரித்தது என்பதைப் “பொன்துலங்கு மேனி புதுமெருகு கொள்ள, முகம் அன்றலர்நத செந்தாமரையாக” என்று வண்ணனை செய்கிறார். உரைத்திறன் அறியும் இந்தக் குறட்பாவை  முற்றாக எடுத்தாள்கிறார்.  எல்லாவற்றையும் விட திருக்குறளில் சொல்லாத ஆனால் பரிமேலழகர் சொன்ன (சேய்மைக்கண் கண்டுழி இன்முகமும் என்னும் முதல் நிலை தவிர்த்து) நண்ணியபழி இன்சொல்லும், உடன்பட்டவழி நன்றாற்றலும் என்ற விருந்தோம்புவார்க்கு இன்றியமையாதனவாகிய மற்ற இரண்டு கடமைகளையும் இல்லறக் காட்சிகளாகவே சித்திரித்துக் காட்டியுள்ளார். இதனால் பரிமேலழகர் உரை பாவேந்தரை எப்படிப் பாதித்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம். திருவள்ளுவர் இல்லறத்தின் தலையறமாக விருந்தோம்பலை விதந்தோத, அதற்குப் பரிமேலழகர் ஆழ்ந்த உரையெழுதினார். குறளையும் பரிமேலழகர் உரையையும் செரித்துக் கொண்ட மரபுவழிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அதனைக் குடும்ப விளக்கில் எல்லாருக்குமாகச் சித்திரித்துக் காட்டினார். “வாழையடி வாழையென வந்ததிருக் கூட்ட மரபு” என்றால் இப்படித்தான் இருக்கும்!

    நிறைவுரை

    பொருட்பகுப்பில் தெளிவு கொண்ட பரிமேலழகர் விருந்தினர்க்கு உவமமாக்கிய அனிச்சத்தின் திறமறிகிறார். அறிந்து ‘அனிச்சத்தை விருந்துக்கு ஒப்பாக்கவில்லை’ என்னும் உண்மை உணர்கிறார். உணர்ந்து ‘ஒப்பு நிலை மாற்றி உறழ்வு நிலையில்’ உரை காண்கிறார். கண்டு ‘அனிச்சமும் விருந்தினரும் ஒப்பு’ என்னும் கருத்தியலைப் பின்னுக்குத் தள்ளுகிறார். தள்ளி, மூன்றாம் நிலையில் வாடுகின்ற அனிச்சத்தினும் முதல் நிலையிலேயே வாடிவிடும் விருந்தினரின் மென்மையின் உயர்ச்சியை வேறுபடுத்தி விளக்குகிறார். இந்த விளக்கத்தால் பெரும்பாலோர்க்கு எடுத்துக்காட்டுவமமாகத் தோன்றும் இந்தப் பா வேற்றுமையணியாக தனது உண்மை உருவத்தைக் காட்டி நிற்கிறது. இதுவே இக்குறட்பாவில் பரிமேலழகர் உரைத்திறனாகும்.

    (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 7

    பரிமேலழகர் உரைத் திறன் – 7

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    பலரும் பரவிய பத்தினி ‘ஆற்றல்’!

    முன்னுரை

    திருக்குறளில் பெரும் விவாதத்திற்கும் கருத்து மாறுபாடுகளுக்கும் ஆளான குறட்பாக்களில் ஒன்று இந்தக் கிழமை ‘பரிமேலழகர் உரைத்திறன்’ என்ற தலைப்பில் ஆராயப்பட உள்ளது. இக்கட்டுரையினால் அக்குறட்பாவின் எளிய பொருளை எல்லாரும் புரிந்து கொண்டு சிக்கலுக்கு முடிவு வந்துவிடும் என்னும் நம்பிக்கையெல்லாம் கட்டுரையாளருக்கு அறவே கிடையாது. ‘தூங்குபவனை  எழுப்பலாம். தூங்குவதுபோல நடிப்பவனை எழுப்ப இயலாது’ என்னும் உண்மை இலக்கிய விவாதங்களுக்கும் பொருந்தும். திருக்குறள் அதிகாரம் ‘ஒரு பொருளே நுதலியது’ என்ற கருத்தியல் நிலையும், திருக்குறளைத் தனித்தனி அலகாகக் கொண்டு உரை செய்யலாம் என்னும் தாராளமய ‘உரைநெறியும்’ நிலவும் வரையிலும் இத்தகைய உரைக்குழப்பங்களையும் குளறுபடிகளையும் நீக்கவே முடியாது. திருக்குறளைத் தெளிவாகப் புரிந்து கொள்ளவும் முடியாது. புத்துரை காண்பார்தம் அவசரத்தையும் துடிப்பையும் யாரும் தடுக்கவும் இயலாது.

    திறனறியும் குறட்பாவும் உரையும்

    ‘வாழ்க்கைத் துணைநலம்’ என்னும் அதிகாரத்தில் ஐந்தாவதாக அமைந்திருப்பது

    “தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
    பெய்யெனப் பெய்யும் மழை” (55)

    என்னும் குறட்பாவாகும். இதற்குத்,

    • தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள் — பிற தெய்வம் தொழாது தன் தெய்வமாகிய கொழுநனைத் தொழாநின்று துயில் எழுவாள்
    • பெய்யெனப் பெய்யும் மழை — ‘பெய்’ என்று சொல்ல மழை பெய்யும்

     என்று பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் விளக்கவுரையையும் தந்திருக்கிறார்.

    பொழிப்புரை நுட்பம்

    • ‘தெய்வம்’ என வாளா திருக்குறளில் இருக்கப், பரிமேலழகர் ‘பிற தெய்வம்’ என உரை காண்கிறார். இதனால் கணவன் உள்ளிட்ட தெய்வங்களுள் பிறதெய்வத்தினும் கணவனையே தெய்வமாகக் கருதும் மனைவியின் மனநிலையைப் பெற வைக்கிறார். அதாவது மற்ற தெய்வங்கள் எல்லாருக்கும் பொது. ‘கணவனோ தனக்கு மட்டுமே தெய்வம்’ என்பது பெறலாயிற்று. இந்த நுட்பத்தைத் ‘தன் தெய்வம்’ என்னும் தொடரால் அவர் குறிப்பது காண்க.
    • ‘பெய்யெனப் பெய்யும் மழை’ என்பதற்குப் ‘பெய்’ என்று சொன்னால் மழை பெய்யும்.’ என மிக எளிமையாக உலகியல் நோக்கி உரை காண்கிறார்.

    விளக்கவுரை

    “தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது துயில் எழும் காலத்தாகலின் தொழுது எழுவாள்” என்றார். ‘தொழா நின்று’ என்பது தொழுது எனத் திரிந்து நின்றது. தெய்வம் தான் ஏவல் செய்யும் என்பதாம். இதனால் கற்புடையாளது ஆற்றல் கூறப்பட்டது”.

    விளக்கவுரையில் கண்ட உரையருமை 

    • இறைவழிபாடு என்பது மனந் தெளிந்தார்க்கே உரியதாம். திருக்குறள் கடவுள் வாழ்த்தில் ‘மனநிலை – மெய்ந்நிலை’ ஆகிய இருவகை வழிபாட்டில் ‘மாணடி சேர்தல்’ என்பதனான் மனவழிபாட்டையும் ‘எண்குணத்தான் தாளை வணங்காத் தலை’ என்பதனான் மெய்வழிபாட்டையும் திருவள்ளுவர் குறித்திருப்பதைக் காணலாம். இந்தக் குறட்பாவில் இல்லத்தரசி தன் கணவனையே வழிபடுதற்குரிய தெய்வம் என்னும் தெளிவு பெற்றவள் என்பதனைத் ‘தெய்வம் தொழுதற்கு மனம் தெளிவது’ என்னும் பரிமேலழகர் குறிப்பால் உணர்க.
    • தொழுதல் மனத்தது வினை. எழுதல் மெய்யினது வினை. எழுதல் என்னும் வினையால் துயில் நீங்கும் காலம் பெறப்பட்டது. இறை வழிபாட்டிற்கு ஏற்றதும் உரியதும் வைகறைப் பொழுதே என்பது தமிழ்ப்பண்பாடு. ‘திருப்பள்ளியெழுச்சி’, ‘திருவெம்பாவை’, ‘திருப்பாவை’ என்பவைகளும் வைகறையில் பாடப்படும் இலக்கியங்கள் என்பது அறிக.
    • இனித் ‘தொழுதெழுவாள்’ என்பதற்கு மனத்தால் தொழுதுகொண்டே துயில் நீங்குவாள் என்றே பரிமேலழகர் உரை கொள்ள, பிற உரையாசிரியர்கள் தொழுதெழுவாள் என்பதனை முன்பின்னாக மாற்றி ‘எழுந்துத் தொழுவாள்’ என உரை காண்கின்றனர். ‘சிரித்து வந்தான்’, ‘ஓடி வந்தான்’ என்பன போலத் ‘தொழுது எழுவது’ என்பது ஆகாது என்பது அவர் கருத்து.
    • ‘தொழாஅநின்று எழுவாள் என்னும் நிகழ்கால வினையெச்சம் தொழுது எழுவாள் என இறந்தகால வினையெச்சமாகத் திரிந்து நின்றது என்பதைத் ‘’தொழா நின்று’ என்பது ‘தொழுது’ எனத் திரிந்து நின்றது என்னும் தொடரால் குறிக்கின்றார். இதனால் ‘தொழுது முடித்த பின் எழுவாள்’ என்றில்லாமல் ‘தொழுதுகொண்டே எழுவாள்’ என்பது பெறப்படும்.
    • ஐம்பெரும்பூதங்களில் ஒன்றாகிய மழையைப் ‘பெய்யென’ ஏவல் கொள்ளும் பேராற்றல் உடையவள் என்பதனால் தெய்வத்தையும் ஏவல் கொள்ளும் ஆற்றல் உடையவள் என்பார், ‘தெய்வந்தான் ஏவல் செய்யும்’ என்பதாம் என நுண்பொருள் காண்கிறார். என்ன நுண்பொருள்? இவள் ஆணைக்காகத் தெய்வம் காத்திருக்குமாம்!
    • இந்தக் குறட்பாவின் ஒருவரிக் கருத்தாக (இதன் விரிவு பின்வரும் பத்தியில் காணலாம்) ‘இதனான் கற்புடையாளது ஆற்றல் கூறப்பட்டது’ என எழுதிக் காட்டுகிறார். அதாவது இந்தப் பாட்டுக் கற்பின் சிறப்பையோ, கற்புடையாளது சிறப்பையோ கூறவில்லை. கற்புடையாளது ஆற்றலைக் கூறுகிறது எனத் தெளிவுபடுத்துகிறார். இதனால் ஒரு பண்பின் சிறப்பு வேறு, அப்பண்பை உடையார் சிறப்பு அதனினும் வேறு, அப்புண்புடையாரின் ஆற்றல் அவற்றினும் வேறு என்பது தெளிவாகும்.

    அதிகாரப் பொருண்மை பகுப்பு

    திருக்குறள் அவ்வதிகாரக் கருத்துக்கள் அதிகாரத் தலைப்பினை விளக்குவதாக மட்டுமே அமைந்துள்ளன என்பதில் பரிமேலழகருக்கு உடன்பாடில்லை. பிறருக்கும் பரிமேலழகருக்கும் உள்ள அடிப்படை வேறுபாடே அதுதான். அவர் தலைப்பின் பல பரிமாணங்களையும் திருக்குறள் ஆராய்வதாகக் கருதுகிறார். அதாவது கடவுள் வாழ்த்து என்னும் தலைப்பை மட்டுமே கருத்திற் கொண்டால் ‘கடவுளை வாழ்த்துவது’ மட்டுமே பொருளாகிவிடும். ஆனால் அந்த அதிகாரத்தில், கடவுளை வாழ்த்துவது மட்டும் பொருளாக அமைந்திருக்கவில்லை. இத்தொடரின் முந்தைய கட்டுரைகள் பலவற்றிலும் இக்கருத்து தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது. .’வாழ்க்கைத் துணை நலம்’ என்பதற்கு அவ்வில்வாழ்க்கைக்குத் துணையாகிய இல்லாளது நன்மை. வாழ்க்கைக்குத்தான் அவள் துணையே தவிர கணவனுக்கு அல்ல. இருந்திருந்தால் ‘கணவன் துணை நலம்’ என எழுதியிருப்பார். இந்த நுண்ணியம் பிறிதொரு கட்டுரையில் விளக்கப்படும்.

    வாழ்க்கைத் துணைநலம் அதிகாரப் பொருண்மை பகுப்பு

    வாழ்க்கைத் துணைநலம் (6) என்னும் அதிகாரப் பொருண்மையைப் பின்வருமாறு பரிமேலழகர் பகுத்துக் கொள்கிறார். பத்துப் பாடல்களும் ஒன்பது வகையான கருத்துக்களைச் சொல்வதற்காகத் திருவள்ளுவர் எழுதியிருக்கிறார் எனக் கருதுகிறார்.

    1. இரண்டு நன்மையும் சிறந்தன (நற்குண நற்செய்கைகள் வருவாய்க்குத் தக்க வாழ்க்கை என்னும் இரண்டு) (1)
    2. இல்வாழ்க்கைக்கு வேண்டுவது இல்லாளது மாட்சியே, பிற அல்ல (2-3)
    3. கற்பு நலத்தது சிறப்பு (4)
    4. கற்புடையாளது ஆற்றல் (5)
    5. கற்புடையாளது சிறப்பு (6)
    6. தற்காத்தற் சிறப்பு (7)
    7. புத்தேளிரால் பேணப்படுவாள் (8)
    8. தகைசான்ற சொற்காவா வழிப் படும் குற்றம் (9)
    9. வாழ்க்கைத் துணைக்கு ஆவதோர் அணிகலன் (10)

    இதுபோல அதிகாரப் பொருண்மை பகுப்பு எல்லா அதிகாரங்களிலும் செய்திருந்தாலும் அறன் வலியுறுத்தல் (4), மெய்யுணர்தல் (36), அவா அறுத்தல் (37), கயமை (108) ஆகியன உட்பட ஐந்து அதிகாரங்களில் மட்டுமே ‘பத்துக்கு ஒன்பது’ எனப் பகுத்துக் கொள்வதைக் காணமுடிகிறது. வான்சிறப்பு (2) என்னும் அதிகாரத்தை மட்டும் ‘உலகம் நடத்தற்கு ஏது’ என்பதாக ஏழுகுறட்பாக்களையும் (1-7) ‘அறம் பொருள் இன்பம் நடத்துவதற்கு ஏது’ என்பதாக மூன்று குறட்பாக்களையும் (8-10) பகுத்துக் குறைவான பகுப்புக்கு உரிய அதிகாரமாகக் காட்சிப்படுத்துகிறார். இந்த அடிப்படையில் ‘தெய்வந்தொழாஅள்’ எனத் தொடங்கும் இக்குறட்பா ‘கற்புடையாளது ஆற்றல் கூறியது’ எனத் தெளிவுபடுத்திக் காட்டுகிறார். இந்தப் பாட்டில் வேறு எதனையும் எதிர்பார்க்கக்கூடாது. அவற்றுக்கான களம் இப்பா அன்று. பரிமேலழகரின் இந்த உரை புலனெறி வழக்கம் மற்றும் உலகியல் ஆகிய இரண்டும் சார்ந்து எழுதப்பட்டது என்பது இனி விளக்கப்படும்.

    புலனெறி வழக்கத்தில் கற்பின் பேராற்றல்

    உலகியலைச் சாராத புலனெறிவழக்கு நிலைக்காது. அது வெற்றுப் புனைவாகவே முடியும். அதனால்தான் சான்றோர்கள் இலக்கியப் புனைவினை “உள்ளோன் தலைவனாக இல்லது புணர்த்தலும், உள்ளோன் தலைவனாக உள்ளது புணர்த்தலும், இல்லோன் தலைவனாக உள்ளது புணர்த்தலும்,  இல்லோன் தலைவனாக இல்லது புணர்த்தலும்’ எனப் பகுத்துக் கொண்டார்கள். உலகியல் என்பது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. போலிப்பகுத்தறிவுக்கு அங்கு இடமில்லை. அந்த நம்பிக்கை தொடர்ச்சியாகப் பலிக்க வேண்டும் என்னும் தேவையும் இல்லை. நம்பிக்கை மக்கள் சமுதாயத்து உரிமை. மூடநம்பிக்கையையும் மரபு சார்ந்த பழக்கவழக்கங்களையும் ஒன்றாகக் கருதிக் குழப்பிக் கொள்ளுதல் நெறியன்று.

    “என்தோழி அருமழை தரல்வேண்டின் தருகிற்கும் பெருமையளே!” (குறிஞ்சிக் கலி)

    “வள்ளி கீழ்விழா., வரைமிசைத் தேன் தொடா., கொல்லை குரல் வாங்கி ஈனா., – மலை வாழ்நர் அல்ல புரிந்தொழுகலான்” (குறிஞ்சிக்கலி 3)

    “கொண்டான் குறிப்பறிவாள் பெண்டாட்டி கொண்டன
    செய்வகை செய்வான் தவசி, கொடிது ஒரீஇ
    நல்லவை செய்வான் அரசன் இவர்மூவர்
    பெய்யெனப் பெய்யும் மழை” (திரிகடுகம் 96)

    “நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும்
    பெய்யும் மழை’ (மூதுரை) என்பது ஔவையின் நம்பிக்கை.

    “வேதம் ஓதிய வேதியர்க்கோர் மழை
    நீதி மன்னர் நெறியினுக்கோர் மழை
    மாதர் கற்புடைய மங்கையர்க்கோர் மழை
    மாதம் மூன்று மழையெனப் பெய்யுமே!”

    என்னும் விவேக சிந்தாமணி மக்கள் சமுதாயத்தின் நம்பிக்கையைப் படம்பிடித்துக் காட்டியிருக்கிறது.

    • ‘தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி’ என்பது ஆண்டாள் வாக்கு.
    • பாரதி ஒருபடி மேலே போய் ‘மூவருக்கு மூன்று மழை’ என்பதை மாற்றி,

     “முன்னாளில் ஐயரெல்லாம் வேதம்— ஓத
    மூன்று மழை பெய்யுமடா மாதம்
    இந்நாளிலே பொய்மைப் பார்ப்பார்—இவர்
    ஏது செய்தும் காசு பெறப் பார்ப்பார்” (பாரதி  மறவன் பாட்டு)

    வேதம் ஓதிய அந்தணர்களுக்காகவே மழை என்கிறார். இது அவரது நம்பிக்கை. இவைகளெல்லாம் மூட நம்பிக்கைகள் அன்று. என்ன பாவம் செய்தாலும் இறைவன் மன்னிப்பார் என்பதுதான் மூடநம்பிக்கை. ‘பரிகாரத்திற்காகவே பாவம்’ என்பதுதான் மூடநம்பிக்கை. இவைபோக புலவர்களும் கவிஞர்களும் இயலாததையெல்லாம் இயலும் என்பதாக உலகியல் நோக்கிப் பாடியிருப்பதையும் காணமுடியும்.

    • ஒரு நாட்டில் பத்தினிப் பெண்டிர் வாழ்வார்களேயானால் அந்நாட்டில் “வானம் பொய்யாது, வளம் பிழைப்பு அறியாது, நீணில வேந்தர் கொற்றம் சிதையாது” (சிலப். 2475-77) என்னும் கருத்தியல் கவுந்தியடிகள் காலத்துக்கும் முற்பட்ட சமுதாய நிலைப்பாடு.
    • “ஆடகப் பூம்பாவை அவள்போல்வார் நீடிய மட்டார் குழலார் பிறந்த பதிபிறந்தேன்” என்பதற்காகப் பெருமைப்பட்டுப் “பட்டாங்கு யானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டேன் அரசொடு ஒழிப்பேன்” (சிலப். 3160- 62) என்று வஞ்சினம் கூறிய கண்ணகிக்குத் தகுதியாக இருந்தது அவள் பத்தினி என்பதுதான்.
    • “மாபத்தினி நின்னை” (சிலப். 3174) என அங்கியங்கடவுள் கண்ணகியை வழிபட்டதற்கும், “யார் பிழைப்பா ஈங்கு?” (சிலப். 3176) எனக் கண்ணகியின் ஏவல் கேட்டதற்கும் அவள் மாபெரும் பத்தினி என்பதுதான் காரணம்.
    • ‘எல்லை நீத்த உலகங்கள் யாவும் என் சொல்லினால் சுடுவேன்’ (கம்ப. 5362) என்னும் சீதையின் மன உறுதி அவளுடைய கற்பொழுக்கத்தின் மேல் வைத்த நம்பிக்கையைக் காட்டுகிறது
    • “காற்றிலேறி அவ்விண்ணையும் சாடுவோம் காதல் பெண்களின் கடைக்கண் பார்வையிலே” (பெண்மை) என்று பாரதி சொல்வது கடைக்கண் பார்வை தரும் ஆற்றலால் அல்லவா?
    • “கார்த்தடங்கண்ணி எந்தேவி அவள் கண்ணிலும் காண்டிவ வில்லினும் ஆணை” (பாஞ்சாலி சபதம்) என அர்ச்சுணன் செய்யும் சபதத்தைக் காண்பார்க்கு என்ன தோன்றும்? காண்டிவத்தின் மீது ஆணை என்பது சரி! பாஞ்சாலியின் கடைக்கண்ணை மையமாக்கி வஞ்சினம் கூறுவது எப்படிக் கொள்வது?
    • “கண்ணின் கடைப்பார்வை காதலியர் காட்டிவிட்டால்

    மண்ணில் குமரர்க்கு மாமலையும் ஓர் கடுகாம்!”

    (சஞ்சீவி பர்வதத்தின் சாரல்) பாரதியின் நண்பர் பாரதிதாசன் தன் குருவை அப்படியே பின்பற்றுகிறார்.

    நிறைவுரை

    திருக்குறளில் “ஒவ்வொரு அதிகாரமும் பல பொருண்மைகளை ஆராய்வதாக அமைக்கப்பட்டுள்ளது” என்னும் செந்நெறி கண்டவர் பரிமேலழகர். அந்நுண்ணியத்தால் “தெய்வம் தான் ஏவல் செய்யும் என்பதாம்., இதனால் கற்புடையாளது ஆற்றல் கூறப்பட்டது” என இரண்டு தொடர்களில் ‘இதுவே இப்பாட்டுக்கான மையக்கருத்து’ என உலகியல் நோக்கி உரைகண்டதே பரிமேலழகரின் உரைத்திறனாகும்.

     (தொடரும்…)

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 6

    பரிமேலழகர் உரைத் திறன் – 6

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    இடைச்சொல் ‘உரைச்சொல்’ ஆன கதை!

    முன்னுரை

    ‘அதிகாரத்திற்குப் பத்துப் பாடல்கள்’ என வரையறுத்துக் கொண்டதால் ‘கூறியது கூறலும் குன்றக் கூறலும்’ திருக்குறளில் அமைந்திருப்பதாகக் கூறுவாரும் உளர். ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்’ (314) எனக் கூறிய பிறகும் ‘இன்னாச் செய்தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு?’ (987) எனக் கூறுவானேன்? என்பாரும், ‘இரவு’ கூறிய வள்ளுவர் ‘இரவச்சம்’ கூறுவானேன்? என்பாரும் திருக்குறளில் தமது ‘தோய்ந்த புலமையை’ வெளிப்படுத்துவர். அன்னாருடைய கருத்துக்கள் பற்றிய ஆய்வு ஒரு பக்கம் இருப்பினும் திருக்குறள் அதிகாரங்களில் ஒரு கருத்து மட்டுமே சொல்லப்பட்டுள்ளது என்பது உண்மைக்கு மாறானது என்பதை மட்டும் குறிக்க வேண்டியுள்ளது. திருக்குறள் ஒரு நீதி இலக்கியம் என்பதால் ஒரு  பொருண்மை பற்றிய பல்வகைச் சிந்தனைகளையும் பாகுபடுத்திக் கூறுவதே அதிகாரக் கருத்துக்களின் சாரம். சான்றாகக் ‘கடவுள் வாழ்த்து’ எனப் பொதுவாக அமைந்திருக்க வேண்டிய அதிகாரக் கருத்துக்களை, முதற்கடவுளது உண்மை (1) அறிவிற்குப் பயன் (2) இறைவனை நினைத்தல், வாழ்த்தல், நெறிநிற்றல், பயன்பெறுதல் (3-6) அவை செய்யாவழிப்படும் குற்றம் (7-9) அடி நினைப்பார்க்குப் பிறவி அறுதல் மாறி நினைப்பார்க்கு அறாது நிற்றல் (10) என ஐந்து வகையாகப் பகுத்துரைப்பதைப் பரிமேலழகர் உரையால் அறியலாம். இத்தகைய பாகுபாடு அறத்துப்பால், பொருட்பால் ஆகிய பகுதிகளில் எல்லா அதிகாரங்களிலும் அமைந்துள்ளன. காமத்துப்பால் அகப்பொருள் மாந்தர்களின் கூற்றுப்பகுதியாதலின் அப்பொருள் துறைகளுக்கேற்ப அமைந்த பாகுபாடுகளை அங்கே காணலாம். இந்தப் பின்புலத்தில் சினத்தின் பின்விளைவு பற்றிய மூன்று குறட்பாக்களில் ஒரு குறட்பாவில் காணப்படும் பரிமேலழகரின் உரைத்திறன் இக்கட்டுரையில் ஆராயப்படுகிறது.

    திறனறியும் குறட்பாவும் உரையும்

    துறவறவியலில் ‘வெகுளாமை’ என்னும் அதிகாரத்தில் ஆறாவது குறட்பாவாக அமைந்திருப்பது,

    “சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
    ஏமப் புணையைச் சுடும்” (306)

    என்னும் குறட்பா. இக்குறட்பாவிற்குச்,

    ‘சினம்’ என்னும் சேர்ந்தாரைக் கொல்லி – சினம் என்னும் நெருப்பு இனம் என்னும் ஏமப்புணையைச் சுடும் – தனக்கு இடமானவரையே அன்றித் அவர்க்கு இனமாகிய ஏமப்புணையையும் சுடும்.

    எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் விளக்கவுரையையும் தந்திருக்கிறார். பொழிப்புரையின் நுட்பம் காண்பதற்கு முன்பாக இவ்வதிகாரத்தின் பொருட்பாகுபாடுகளை நோக்குவது கட்டுரைப் பொருள் எளிதில் புரிவதற்கு ஏதுவாகும். திருக்குறளைத் தனித்தனி அலகாகக் கொண்டு உரைசொல்வார் பலர்.  அது பிழையாகாதெனினும் கருத்து முழுமைபெறாது என்பதோடு அக்கருத்தினை முற்றுப் பெற வைக்கும் ஏனைய குறட்பாக்கள் பின்னுக்குத் தள்ளப்படும்.

    கருத்துப் பகுப்பு

    திருக்குறள் அதிகாரக் கருத்துக்களைப் பாகுபடுத்துவது பற்றி முன்னுரையிலேயே குறிப்பிடப்பட்டது. அதன்படி ‘வெகுளாமை’ என்னும் இவ்வதிகாரப் பொருண்மை பின்வருமாறு பரிமேலழகரால் வகுத்துக் கொள்ளப்படுகிறது. அதாவது வெகுளாமை என்னும் அதிகாரத்தில் வெகுளாமையைத் திருவள்ளுவர் பொதுவாக ஆராயவில்லை என்பதாம்.

    1. வெகுளாமைக்கான இடம் (1)
    2. வெகுளியது தீங்கு (2-4)
    3. வெகுண்டார்க்கு வரும் தீங்கு (5-7)
    4. வெகுளாமையது நன்மை (8)
    5. வெகுளாதார்க்கு வரும் நன்மை (9)
    6. வெகுண்டார்க்கும் வெகுளாதார்க்கும் நேரும் விளைவு (10)

       இப்பகுப்புக்களில் வெகுளி பற்றிய பல பரிமாணங்களைத் திருக்குறள் சிந்தித்திருக்கிறது என்பதையும் அது ‘வெகுளி’ என்ற ஓர் எதிர்மறைப் பண்பை மட்டும் சிந்திக்கவில்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம். இந்தப் பொருண்மை பற்றிய இத்தகைய பகுப்புக்கள் வராதபோதுதான் திருவள்ளுவர் இன்னொரு அதிகாரத்தில் இது பற்றிய சிந்தனையை நீட்டித்துக் கொள்கிறார். சான்றாக ‘அறிவு’ என்னும் உயர்நிலையை ஒருவன் அடையவேண்டுமானால்  கல்வியின் சிறப்பு, கல்லாமையின் குற்றம், கேள்வி என்னும் முப்பரிமாணங்ளையும் அவர் ஆராய்ந்து அதன் தொடர்ச்சியாகவே ‘அறிவுடைமை’ என்பது பற்றி எழுதுகிறார். உழைத்துச் சேர்ப்பதுதானே உடைமை? இந்தப் பகுப்பில் மூன்றாவதாக உள்ள ‘வெகுண்டார்க்கு வரும் தீங்கு’ என்னும் ஒரு பொருள் பற்றி மூன்று பாடல்கள் கூறுவதாகப் பரிமேலழகர் கூறுகிறார்.

    • தன்னையே கொல்லும் (305)
    • இனம் என்னும் ஏமப்புணையைச் சுடும் (306)
    • நிலத்தறைந்தான் கைபிழையாது அற்று (307)

    பொழிப்புரை நுட்பம்

    • சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி என்னுந் தொடரை ‘சினம் என்னும் நெருப்பு’ எனச் சுருக்கிக் கொள்கிறார்.
    • ‘இனம் என்னும் ஏமப்புணையைச் சுடும்’ என்றே குறட்பாவில் இருக்க, ‘தனக்கு இடமானவரையே (கொல்லும்) அன்றி’ என சினத்தின் முதற் செயல்பாட்டை நினைவு கூர்கிறார். அதாவது ‘இனத்தைச் சுடுவதற்கு முன்னால் தன்னைச் சுடும்’ என்பதைச் சுட்டுகிறார். இக்கருத்தினை இதற்கு முந்தைய குறட்பாவிலுள்ள ‘தன்னையே கொல்லும் சினம்’ (305) என்னும் தொடரிலிருந்து தழுவிக் கொள்கிறார்.

    பரிமேலழகர் கண்ட விளக்கவுரை

    ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்பது ஏதுப்பெயர். தான் சேர்ந்த இடத்தைக் கொல்லும் தொழிலது என்றவாறு. ‘சேர்ந்தாரை’ உயர்திணைப் பன்மைமேல் வைத்து ஏனை நான்கு பாலும் தம் கருத்தோடு கூடிய பொருளாற்றலால் கொண்டார். ஈண்டு உருவகம் செய்கின்றது துறந்தார் சினத்தையே ஆகலின்.  ‘சினமென்னும் நெருப்பு’ என்ற ‘விதப்பு, ‘உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே; இந்நெருப்புச் சேராத இடத்தையும் சுடும்’ என்னும் வேற்றுமை தோன்ற நின்றது. ஈண்டு ‘இனம்’ என்றது முற்றத் துறந்து தவஞானங்களால் பெரியராய்க் கேட்டார்க்கு உறுதி பயக்கும் மொழிகளை இனியவாகச் சொல்லுவாரை. உருவகம் நோக்கிச் சுடும் என்னும் தொழில் கொடுத்தாராயினும் ‘அகற்றும்’ என்பது பொருளாகக் கொள்க. ஏமப்புணை – ஏமத்தை உபதேசிக்கும் புணை. ‘இனம் என்னும் ஏமப்புணை’ என்ற ஏகதேச உருவகத்தால், ‘பிறவிக் கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற’ என வருவித்து உரைக்க. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. தன்னையும் வீழ்த்து எடுப்பாரையும் அகற்றும் என்பதாம்.

    விளக்கவுரையில் கண்ட உரை நுட்பம்

    • ‘நெருப்பு’ என்னும் ஒரு சொல் இருக்க மற்றவரைக் கொல்லுதற்கு அது காரணமாக இருப்பதால் ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என இரு சொல்லால் உருவகப்படுத்தினாராம். ‘சேர்ந்தாரைக் கொல்லி’ என்பது ஏதுப்பெயர் என்கிறார் பரிமேலழகர்.
    • ‘சேர்ந்தார்’ என்பது உயர்திணைப் பன்மை. எனின் சேர்ந்தாரைத்தான் கொல்லுமா? சேர்ந்தவன், சேர்ந்தவள், சேர்ந்தது, சேர்ந்தவை முதலியவற்றைக் கொல்லாதா? என்னும் ஐயத்தினைக் களைகிறார். ஈண்டு சினம் என்பது இல்லறத்தானுக்கு வருகிற சினமன்று ‘கணமேயும் காத்தற்கு அரிய’ துறந்தார்க்குக் கூடாத சினம். ஐம்பால் பகுப்பில் சிறந்தது உயர்திணைப் பலர்பால். அப்பாலில் வைத்துச் சொல்லியதால் ஏனைய பால்களும் அடங்கும் என்பது அவர் கருத்து. அதனைச் ‘சேர்ந்தாரை’ உயர்திணைப் பன்மைமேல் வைத்து ஏனை நான்கு பாலும் தம் கருத்தோடு கூடிய பொருளாற்றலால் கொண்டார். ஈண்டு உருவகம் செய்கின்றது துறந்தார் சினத்தையே ஆகலின்’ என எழுதுகிறார்.
    • ‘சினம் சுடும் என்றாலேயே ‘சுடும்’ என்னும் வினையால் ‘சினம் என்பது நெருப்பு’ என்பது பெறப்படும். குறட்பாவில் பயின்றுள்ள ‘சினமென்னும் நெருப்பு சுடும்’ என்னுந் தொடரில் ‘நெருப்பு’ என்பது விதப்பு (தேவையற்ற சொல் பயன்பாடு) சான்றோர் கூறிய விதப்புக்கும் ஒரு காரணம் இருக்க வேண்டும் எனக் கருதிய பரிமேலழகர், ‘சினமென்னும் நெருப்பு’ என்ற விதப்பு, ‘உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே இந்நெருப்புச் சேராத இடத்தையும் சுடும்’ என்னும் வேற்றுமை தோன்ற  நின்றது என எழுதுகிறார். முனிவர் சினத்தின் எதிர்மறை விளைவின் முழுப்பரிமாணத்தையும் குறிக்கிறதாம். தீயவை தீயினும் அஞ்சப்படும் என்பதற்குப் “பிறிதொரு காலத்தும், பிறிதொரு தேயத்தும் பிறிதோர் உடம்பினும் சென்று சுடுதல் தீக்கு இன்மையின் தீயினும் அஞ்சப்படும் என்றார் (202) என்னும் பரிமேலழகரின் உரை ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கதாம்.
    • திருவள்ளுவர் நட்பு பற்றி ஆழமாகச் சிந்தித்தவர். பல அதிகாரங்களில் அதுபற்றி ஆராய்ந்திருக்கிறார். இங்கே முனிவர் குழாஅத்தைப் பற்றி ஆராய்ந்து பதிவிடுகிறார். முனிவருடைய இனம் எத்தகையதாக இருக்க வேண்டும்? அதாவது இந்தச் சினத்தால் எத்தகைய பெருமையுடையாரை இழக்க நேரிடும்? என்பதை நுட்பமாகப் பதிவு செய்கிறார்.
    1. முற்றத் துறந்தவர்
    2. தவஞானங்களால் பெரியார் ஆனவர்
    3. கேட்டார்க்கு மட்டும் நெறிகாட்டுபவர்
    4. உறுதிபயக்கும் சொற்களைச் சொல்பவர்
    5. அவற்றையும் இனிமையாகச் சொல்பவர்

    இத்தகைய பண்புகளின் தொகுப்பான இனத்தைப் பாழ்படுத்திவிடும் ஆற்றல் சினத்திற்கு உண்டாம். இதனை “ஈண்டு ‘இனம்’ என்றது முற்றத் துறந்து தவஞானங்களால் பெரியராய்க் கேட்டார்க்கு உறுதி பயக்கும் மொழிகளை இனியவாகச் சொல்லுவாரை”  என்று எழுதுவதால் அறியலாம்.

    • ‘சினம் இனத்தைச் சுடும்’ என்றால் நெருப்புத்தானே சுடும். சினம் என்னும் பண்பு எப்படிச் சுடும்? என்னும் ஐயத்தை அவராகவே எழுப்பிக்கொண்டு சினத்தை நெருப்பென உருவகம் செய்ததால் சுடும் என்று சொன்னார். இவருடைய சினம் மேற்சொன்ன பண்பாளர்களை இவரிடமிருந்து அகற்றிவிடும். ஆதலின் சுடும் என்பதற்கு ‘அகற்றும்’ எனப் பொருள் கொள்க’ என்கிறார். “இதனை உருவகம் நோக்கிச் சுடும் என்னும் தொழில் கொடுத்தாராயினும் ‘அகற்றும்” என்பது பொருளாகக் கொள்க” என எழுதுகிறார்.
    • ‘ஏமப்புணை’ என்பதற்கு ‘ஏமமாகிய புணை’ என்னாது ‘ஏமத்தை உபதேசிக்கும் புணை’ என உரையெழுதுகிறார். ‘ஏமம்’ என்றால் பாதுகாப்பு. உயிர்ப் பாதுகாப்புக்கான உபதேசங்களைக் கூறும் இனமாம். உயிர் பாதுகாப்பு என்றால் வீடு பேறு. இனம் பாதுகாப்பாகாது. இனம் காட்டும் நன்னெறியே பாதுகாப்பு .. எனவேதான் ‘ஏமத்தை உபதேசிக்கும் இனம்’ என்று எழுதுகிறார்.
    • இனி இனம் என்னும் ஏமப்புணை என்பது எவ்வாறு ஏகதேசம் ஆகும்? ஏகம் என்றால் ஒன்று. தேசம் என்றால் பகுதி. சினத்தால் இழக்கக்கூடிய இனத்தைப் புணை என்றால் எதனைக் கடப்பதற்குரிய புணை? என்னும் வினா எழும். அதனைக் குறட்பா நேரிடையாகவோ மறைமுகமாகவோ கூறவில்லை. பரிமேலழகர் அறிந்து கூறுகிறார். ஞானத்தைப் புகட்டும் இனத்தைப் புணையாக உருவகம் செய்தவர், பிறவியைக் கடலாகவும் வீடுபேற்றைக் கரையாகவும் உருவகப்படுத்தவில்லை. எனவே ஏமப்புணை என்பது ஏகதேச உருவகம். இது முற்றுருவகமாக இருந்திருந்தால், “சினம் என்னும் நெருப்பு, பிறவிக்கடலை நீந்தி வீடுபேறாகிய கரையினை அடைவதற்கேற்ற ஞானத்தை உபதேசிக்கும் இனமாகிய புணையை அகற்றும்” என அமைந்திருக்கும். இதனை ‘இனம்’ என்னும் ஏமப்புணை என்னும் ஏகதேச உருவகத்தால் பிறவிக் கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற என வருவித்து உரைக்க’ என்ற விளக்கத்தில் காணலாம்.
    • ‘எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. எனக் குறட்பாவில் இல்லாத உம்மையைக் கண்டறிகிறார். இந்த உம்மைதான் பாட்டின் ஒரு வினையை இருவினையாக்குதற்கு உதவுகிறது. பாட்டு ‘சினம் இனத்தைச் சுடும்’ என்ற ஒரு வினையையே சுட்டுகிறது. பரிமேலழகரோ ‘இனத்தையே சுடும்’ என்றால் ‘கொண்டவனைச் சுடாதா?’ என்னும் வினாவை எழுப்பிக் கொள்கிறார். கொண்டு இருவரையும் சுடும் என்பதுதானே பொருள்? எனக் கருதுகிறார். கருதிப் பின்னது முன்னதைத் தழுவிக் குறட்பா அமைந்திருந்தால் ‘புணையைச் சுடும்’ என்று அமையாது ‘புணையையும் சுடும்’ என்றல்லவா அமைந்திருக்க வேண்டும்? ‘உம்’ என்ன ஆனது? எனச் சிந்திக்கிறார். சிந்தித்து, ‘உம்’ என்னும் எச்சம் தொகுதல் என்னும் விகாரத்தால் மறைந்து நிற்கிறது என்பார், ‘எச்சவும்மை விகாரத்தால் தொக்கது’ என எழுதுகிறார்.

    நிறைவுரை

    ‘சினம் இனத்தைச் சுடும்’ என்னும் ஒருவரி கருத்தினை, ‘உம்’ என்னும் குறட்பாவில் இல்லாத இடைச்சொல்லாகிய எச்சத்தை வருவித்துச் “சினம் தன்னையும் கொல்லும், தன்னைச் சேர்ந்தாரையும் கொல்லும், வீடுபேற்றுக்குரிய ஞானநெறியைக் காட்டும் இனைத்தையும் விலக்கிவிடும்” என்னும் கருத்துக்களையெல்லாம் பெற வைத்ததே இக்குறட்பாவில் பரிமேலழகரின் உரைத்திறனாகும்.

    (தொடரும்)

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 5

    பரிமேலழகர் உரைத் திறன் – 5

    புலவர் முனைவர் கோ.சுந்தராம்பாள் 
    உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    விளார் புறவழிச்சாலை, 
    தஞ்சை மாவட்டம் – 613006. 
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    எல்லாம் இருந்தும் என்ன பயன்?

    முன்னுரை

    திருக்குறள் இரண்டடிக் குறட்பாவாகத் தோன்றுவதால் அதன் பொருளைப் பலரும் எளிமையாகப் புரிந்து கொள்ளலாம் எனக் கருதுவது இயல்பே. உண்மையில் ‘குறுகத் தரித்தது’ என்பதை உணர்வார் சிலரே. அவ்வாறு நோக்கியுணர்ந்து உரைகண்டவர்களில் பரிமேலழகர் தலையானவர். ஒரு சீருக்கும் மற்றொரு சீருக்கும் ஓரடிக்கும் மற்றொரு அடிக்கும் நிலவும் அல்லது நிலவ வேண்டிய யாப்பு, தொடைவிகற்பம், பொருண்மை, பொருத்தம் ஆகியவை செம்மையாக இருக்கிறதா என்பதைப் பொறுமையுடனும் ஆழ்ந்த புலமை மற்றும் சிந்தனையுடன் அணுகுவது அவர்க்கு இயல்பு. அவ்வாறு, எல்லார் பார்வைக்கும் ஒரே மாதிரியாகத் தோன்றிப் பரிமேலழகருக்கு மட்டும் மாறுபட்டுத் தோன்றி உரைகாணப்பட்ட குறட்பா ஒன்றினைக் காணலாம்.

    திறனறியும் குறட்பாவும் உரையும்

    ‘அன்புடைமை’ என்னும் அதிகாரத்தில் ஒன்பதாவது குறளாக அமைந்திருப்பது,

     “புறத்துறுப்பெல்லாம் எவன் செய்யும் யாக்கை
    அகத்துறுப்பு அன்பில வர்க்கு” (79)

    என்னும் குறட்பா. இதற்கு,

    • யாக்கை அகத்து – யாக்கை அகத்தின்கண் (நின்று)
    • உறுப்பு – (இல்லறத்திற்கு உறுப்பாகிய)
    • அன்பு – அன்பு
    • இலவர்க்கு – உடையரல்லாதவர்க்கு
    • புறத்து உறுப்பு எல்லாம் – ஏனைப் புறத்தின் கண் நின்று உறுப்பாவன எல்லாம்
    • எவன் செய்யும் – (அவ்வறம் செய்தற்கண்) என்ன உதவியைச் செய்யும்?

    எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் விளக்கவுரையையும் தந்திருக்கிறார்.

    பொழிப்புரை நுட்பம்

    • குறட்பாவில் ‘உறுப்பு’ என வாளா கூறியிருக்க, பரிமேலழகர் ‘இல்லறத்திற்கு உறுப்பு’ என உரை காண்கிறார். அதிகாரம் அன்புடைமையெனினும், இயல் இல்லறவியல் என்பதனை நோக்கி. இல்லறம் அன்பின்றிக் கடைபோகாது ஆதலின் ‘இல்லறத்தின் உறுப்பு’ என நுண்ணியம் காண்கிறார்.
    • ‘அன்பு இலவர்க்கு’ எனக் குறட்பாவில் இருக்க, ‘அன்பு உடையரல்லாதார்க்கு’ என உரை காண்கிறார். அன்பாகிய பண்பினை ‘உடைமை’ என உருவகம் செய்யும் திருவள்ளுவர் கருத்திற்கு (அன்புடைமை) இயைய அன்பினை ஓர் உடைமையாகக் கொள்கிறார்.
    • ‘அகத்துறுப்பு’ ‘புறத்துறுப்பு’ என நிற்க பரிமேலழகர் ‘நின்று’ என்னும் சொல்லை இருவழியும் வருவித்து உரை காண்கிறார்.

    பரிமேலழகர் கண்ட விளக்கவுரை

    “புறத்துறுப்பாவன – இடமும் பொருளும் ஏவல் செய்வாரும் முதலாயின. துணையோடு கூடாதவழி அவற்றாற் பயனின்மையின் ‘எவன் செய்யும்’ என்றார். உறுப்புப் போறலின் உறுப்பு எனப்பட்டன. “யாக்கையில் கண் முதலிய உறுப்புக்கள் எல்லாம் என்ன பயனைச் செய்யும்? மனத்தின் கண் உறுப்பாகிய அன்பு இலாதார்க்கு என்று உரைப்பாரும் உளர்., அதற்கு இல்லறத்தோடு யாதும் இயைபில்லாமை அறிக”

    விளக்கவுரையில் கண்ட உரையருமை

    • இல்லறத்தான் அறம் செய்வதற்கான கருவிகள் இடம், பொருள், ஏவல் என்னும் மூன்றுமாம். இந்தக் கருவிகள் ‘அன்பு’ என்னும் மூலக்கருவியாகிய இல்லறத் துணையின்றிச் செயல்படாது. செயல்படினும் பயனில்லையாம். இதனைத் ‘துணையோடு கூடாத வழி அவற்றாற் பயனில்லை என்னும் தொடரால் குறிக்கின்றார்.
    • அன்பு அகத்துறுப்பாதலின் இவை புறத்துறுப்பாயின.
    • ‘‘எல்லாம்’ (என்னும் பன்மையால்) அவை மூன்றாக இருப்பினும் அன்பில்லாதவழிப் பயனில்லை என்பார் ‘எவன் செய்யும்’ என்று எழுதுகிறார்.
    • முதலோடு இணையாதவழிச் சினை வினை சிறக்காது. அன்பென்னும் முதலுக்கு இடம், பொருள், ஏவல் என்பன உறுப்புப்போலச் செயல்படுவதால் ‘உறுப்பு’ என்றாராம் திருவள்ளுவர்.
    • பிறரெல்லாம் புறத்துறுப்பு என்பதற்குக் கண் முதலிய உறுப்புக்கள் எனப் பொருள் கண்டதனை ஏற்றுக்கொள்ளாத பரிமேலழகர் மனத்தின் கண் உறுப்பாகிய அன்பு இல்லாதார்க்கு ‘யாக்கையில் கண் முதலிய உறுப்புக்களெல்லாம் என்ன பயனைச் செய்யும்? என உரைப்பாரும் உளர்” என எழுதி “அதற்கு (அவ்வுரைக்கு) இல்லறத்தோடு யாதும் இயைபில்லாமை அறிக’ எனக் குறிப்பாகச் சுட்டி மறுக்கிறார். அகத்துறுப்பு அன்பு என்பதில் மாறுபாடு காணாத பரிமேலழகர் புறத்துறுப்பு எவை என்பதில் மாறுபடுகிறார்.

    பரிமேலழகரும் இயைபும்

    ஆசிரியர் பரிமேலழகர் ‘நோக்கு’ என்னும் திறனாய்வுக் கொள்கையை அடிப்படையாக வைத்தே உரைகாண்கிறார். ‘இயைபு’ என்றால் பொருத்தம். குறட்பாவில் பயின்று வந்துள்ள அசை முதலாக அனைத்துறுப்புக்களின் பொருத்தத்தை ஆராய்கிறார். ஒருமை பன்மை மயக்கத்தை ஆராய்கிறார். உவமப் பொருத்தத்தை ஆராய்கிறார். செய்வினை, செயப்பாட்டு வினை பற்றி ஆராய்கிறார். தன்வினை, பிறவினைகளைப் பற்றி ஆராய்கிறார். இத்தகைய பல நுண்ணியங்களை அவரது உரையில் காணலாம். உரை சொல்வார் பாட்டின் இயைபறிந்து சொல்ல வேண்டும் என்பது அவர் உரைக்கொள்கை. அத்தகைய  கொள்கையைப் பின்பற்றும் அவர், அதனைப் பின்பற்றாது எழுதப்படட உரைகளைப் பல இடங்களில் மறுத்துரைக்கின்றார். குறட்பாவில் எப்படியெல்லாம் அவர் இயைபு காண்கிறார் என்பதைச் சில எடுத்துக்காட்டுக்களால் அறியலாம்.

    • ‘கேட்டார்ப் பிணிக்கும் தகையவாய்’ (643) என்னும் குறட்பாவில், ‘சொல் தகை அவாய்’ எனப் பிரித்து ‘சொல்லானது சில குணங்களை அவாவி’ எனப் பரிமேலழகர் உரையெழுதுகிறார். எழுதிச், சொல் அவாவும் அதாவது சொல்லுக்கு இருக்க வேண்டிய உயர்பண்புகளைப் பட்டியலிடுகிறார். பிறரெல்லாம் ‘கேட்டாரைப் பிணிப்பதாகிய தகையவாய்’ எனப் பன்மையாக்கி உரை கூறினர். பரிமேலழகர் அப்படி ‘தகையவாய்’ எனப் பன்மையாகக் கொண்டால் ‘அப்பன்மை ‘மொழிவது’ என்னும் ஒருமையோடு இயையவில்லை’ என இயைபின்மை காட்டுகிறார்.
    • ‘எற்று? என்று இரங்குவ செய்யற்க’ (655) என்னும் குறட்பாவிற்குப் ‘பின்னால் நினைந்து வருந்தும் செயல்களைச் செய்யாதொழிக, மயங்கிச் செய்தால், அங்ஙனம் நினைந்து வருந்தற்க’ என்று பரிமேலழகர் உரைகண்டார். பிறரெல்லாம் ‘நினைந்து வருந்தும் செயல்களைச் செய்யாதொழிக மயங்கிச் செய்தால் தொடர்ந்து செய்யாது ஒழிக’ என உரை கண்டார். பரிமேலழகர், தவறுகளைச் செய்து விட்டு வருந்துவதுதான் இயல்பாதலால் அத்தவறுகளைத் தொடர்ந்து செய்யாதிருப்பது முந்தைய கருத்தோடு இயையவில்லை என்பார் ‘பின் தொடர்தற்குச் செய்வானாயின் அவைபோல்வனவும் செய்யாமை நன்று” எனப் பிறரெல்லாம் இயைபற உரைத்தார்’ என இயைபின்மை சுட்டுவார்.
    • “ஊறொரால் உற்றபின் ஒல்காமை’’ (662) என்னும் தொடருக்குப் பழுதுபடும் வினைகளைச் செய்யாமையும் தெய்வத்தான் பழுதுபட்டவழி அதற்குத் தளராமையும் ஆகிய இரண்டும்’ எனப் பரிமேலழகர் உரைகண்டார். பிறரெல்லாம், ‘ஊறொரார் எனப் பாடம் ஓதி உரைகண்டார். ‘ஊறொரால்’ என்பதும் ‘ஒல்காமை’ என்பதும் இணைந்து இரண்டு என்னும் செவ்வெண்ணோடு பொருந்தியது. ‘ஊறொரார்’ என்னும் உயர்திணைப் பன்மை என்றால் பின்வரும் சொல் ஒல்கார் என்றிருந்தால் சரி. அது ‘ஒல்காமை’ என இருப்பதால் அதனோடும் பொருந்தாது. மேலும் செவ்வெண்ணும் பொருந்தாது. “இதனை ஊறொரார் எனப் பாடம் ஓதுவாரும் உளர். “அஃது ஒல்காமை என்னும் எண்ணோடும் இரண்டு என்னும் தொகையோடும் இயையாமை அவர் அறிந்திலர்” என இயைபின்மை காட்டுவார்.
    • “அங்கணத்துள் உக்க அமிழ்து” (720) எனத் தொடங்கும் குறட்பாவில் அல்லினத்தார் முன் எதனையும் சொல்லற்க, அவ்வாறு சொல்லப்படும் சொல் தூய்மையற்ற முற்றத்தின்கண் உக்க அமிழ்து’ என உரையெழுதினார். பிறரெல்லாம் எதனையும் சொல்லற்க அது தூயதல்லாத முற்றத்தின்கண் அமிழ்தினைக் கொட்டியதுபோல’ என்று உரையெழுதினார். ‘உக்கப்பட்ட அமிழ்து’ என்பது பொருளுவமை. ‘அமிழ்து உக்கினாற் போல என்றால் அது வினையுவமை. ‘பிறரெல்லாம் ‘கொளல்’ என்பதைத் தொழிற்பெயராக்கி உரைத்தார். அவர் அத்தொழில் அமிழ்து என்னும் பொருளுவமையோடு இணையாமை நோக்கிற்றிலர்” என இயைபின்மை சுட்டுவார்.
    • “துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்” (926) என்னும் குறட்பாவிற்கு உறங்கினார் செத்தாரின் வேற்றுமை இல்லாதது போலக், கள்ளுண்பார் நஞ்சுண்பாரினும் வேறல்லர் என்று உரை காண்கிறார். பிறரெல்லாம் நிரல்நிறையாக்கிப் பொருள் உரைப்பர். “அதிகாரப் பொருள் பின்னதாயிருக்க, யாதும் இயைபில்லாத நஞ்சுண்பார்க்கு உவமை புணர்த்து ஈண்டுக் கூறல் பயனின்றாகலானும் சொற்கிடக்கை நிரல்நிறைக்கு ஏலாமையானும் அஃது உரையன்மை அறிக” என்று அணியின் இயைபின்மை சுட்டுவார்.

    இவ்வாறு குறட்பாவின் எல்லாவகையான இடுக்குகளிலும் நுட்பமாகப் பொருத்தப்பாட்டைக் காணும் இயல்பு ஏனைய உரையாசிரியர்களின் உரைகளில் காணப்படுவதாகத் தெரியவில்லை. இந்த நுண்ணோக்குத்தான் அவருரையின் தனிச்சிறப்பாகவும் கொள்ளப்படுகிறது.

    பரிமேலழகரின் உரையருமை

    • ‘அறம் அன்பில்லாத உயிர்களைக் காயும்’ என்றும், ‘அன்பில்லாத உயிர் தளிர்க்காது’ என்றும் ‘அன்பில்லாதார்க்கு உடம்பு எலும்பினைத் தோலால் போர்த்தது போலாம்’ என்றும் முன்பின்னாக அன்பின் பேராற்றலையும் தேவையையும் கூறிய திருவள்ளுவர் நிறைவு செய்தற்பொருட்டு அன்பில்லாத நிலையில் புறத்துறுப்பால் பயனில்லை என்பதையும் வலியுறுத்துகிறார். எனவேதான் அன்புடைமை என்னும் அதிகாரத்துள் 77, 78, 79, 80 ஆகிய நான்கு குறட்பாக்களையும் ஓரலகாகக் கொண்டு ‘இவை நான்கு பாட்டானும் அன்பில் இல்வழிப் படும் குற்றம்” கூறப்பட்டது’ எனப் பரிமேலழகர் உரையெழுதுகிறார்.
    • உடம்புக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., வாய்க்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., கண்ணுக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., மூக்குக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., செவிக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லை., இவ்வாறு ஐம்புலன்களுக்கும் இல்லறத்திற்கும் தொடர்பில்லாதபோது அவற்றைப் புறத்துறுப்புக்கள் எனக் கொள்வது பொருந்தாது என அவ்வுரையின் இயைபின்மை கூறி, இல்லறத்தில் இடம், பொருள், ஏவல் என்னும் புறத்துறுப்புக்கள் துணைக்கருவிகளாயினும் உயிர்த்துடிப்பாகிய அன்போடு இணைந்து செயல்பட்டாலே இல்லறப் பயனாகிய அறம் நிறைவுறும் என்பது அவர் கருத்து.

    நிறைவுரை

    கற்பனைக் களஞ்சியம் சிவப்பிரகாசருக்குப் பரிமேலழகர் காலத்தால் முந்தியவராயினும் பிந்தியவராயினும் இந்தக் குறட்பாவுக்குப் பரிமேலழகர் எழுதிய கருத்தினை அப்படியே உட்கொண்டு,

    “இல்லானுக்கு அன்பு இடம் பொருள் ஏவல் மற்று
    எல்லாம் இருந்தும் அவற்கு என் செய்யும்? – நல்லாய்!
    மொழியிலார்க்கு ஏது முதுநூல்? தெரியும்
    விழியிலார்க்கு ஏது விளக்கு?”  (நன்னெறி15)

    என்னும் வெண்பாவில் ‘நூலுக்கு மொழியும் ஒளிக்கு விழியும் போல’ இல்லறத்தானுக்கு அன்பு என உவம அளவையால் விளக்கிக் காட்டியிருக்கும் சதுரப்பாடு நோக்கத்தக்கது. “கொடுக்கணுங்கற மனசு வேணுமில்ல” என்ற வழக்கில் புறத்துறுப்புக்களின் அமைவிடம் நோக்குக. புறத்துறுப்புக்கள் என்பன ‘மெய், வாய், கண், மூக்கு, செவி என்பதாகக் கொள்ளாமல் “இடம், பொருள், ஏவல் என்பனவே என அவர் எழுதிய நுட்பமே இக்குறட்பாவின் உரையருமையாகும். இவ்வாறு படைப்பின் நுட்பம் காண்பதன் மூலம் படைப்பாளனின் உள்ளம் காண முயல்வது பரிமேலழகருக்கு இயல்பு என்பதை இதனால் அறியலாம்.

    (தொடரும்)

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 4

    பரிமேலழகர் உரைத் திறன் – 4

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    ‘அழுக்காறு’ – பாவமா? பாவியா?

    முன்னுரை

    சமய அடிப்படையில் உரைகாண்பது, மெய்யியல் அடிப்படையில் உரையெழுதுவது, அரசியல் கொள்கைகளுக்கு இயைய உரை காண்பது, இலக்கண அடிப்படையில் உரை காண்பது, காரண காரிய அடிப்படையில் உரை காண்பது, சொற் பயன்பாட்டுக்கான (பதப்பிரயோகத்திற்கான) காரணம் கண்டறிந்து உரையெழுதுவது, அதிகாரத் தலைப்பு, இயல், பால் இவற்றின் பிரிவினைக்கேற்ப உரைகாண்பது எனப் பரிமேலழகர் உரையறி திறன் பலவாம். எல்லா நெறிகளிலும் செந்நெறி சென்று குறள் நெறி காண முயலும் கொள்கையுடையார் அவர்.  ‘நோக்கு’ என்னும் பழந்தமிழ் திறனாய்வு நெறியைப் பயன்படுத்தி அவர் எழுதிய உரையே திருக்குறள் உரையாகும். குறட்பாவை ஓரலகாகக் கொண்டால், அதனுள் அடங்கிய, அடிகள், சீர்கள், அசைகள் எனத் தனித்தனியாக நோக்கியுணர்ந்த பிறகே அவர் உரையெழுதுகிறார். ஓர் உருவகப் பொருத்தத்திற்கு அவர் கூறும் விளக்கம் இக்கட்டுரையில் சுருக்கமாக ஆராயப்படுகிறது.

    திறனறியும் குறட்பாவும் உரையும்

    ‘அழுக்காறாமை’ என்னும் அதிகாரத்தில் எட்டாவது குறளாக அமைந்திருப்பது,

    “அழுக்காறு என ஒரு பாவி திருச்செற்றுத்
    தீயுழி உய்த்து விடும்” (168)

    இந்தக் குறட்பாவிற்கு,

    • “அழுக்காறு என ஒரு பாவி” ‘அழுக்காறு’ எனச் சொல்லப்பட்ட ஒப்பில்லாத பாவி
    • “திருச்செற்றுத், தீயுழி உய்த்துவிடும்” தன்னை உடையானை இம்மைக்கண் செல்வத்தைக் கெடுத்து மறுமைக்கண் நரகத்தில் செலுத்திவிடும்.

     எனப் பொழிப்புரை எழுதிய பரிமேலழகர் விளக்கவுரையையும் தந்திருக்கிறார்.

    பொழிப்புரை நுட்பம்

    • ‘ஒரு’ என்பதற்கு உலகவழக்கினையொட்டி ஓர் எண்ணாகக் கொள்ளாது ‘ஒப்பில்லாத’ என உரை காண்கிறார்.
    • ‘திரு’ என்பது செல்வத்தைக் குறிப்பதால் அது ‘இம்மைப் பயன்’ எனவும் ‘தீயுழி’ என்பது நரகத்திற்கோர் பெயராதலின் ‘மறுமை’ எனவும் கண்டறிகிறார்.
    • ‘யாரை அழிக்கும்?’ என்பதற்கான செயப்படுபொருள் குறட்பாவில் இல்லாததால் ‘தன்னை உடையானை’ என வருவித்துக் கொள்கிறார்.

     பரிமேலழகர் கண்ட விளக்கவுரை

    “பண்புக்குப் பண்பி இல்லையேனும் தன்னை ஆக்கினானை (அழுக்காறு என்னும் பண்பை உடையவனை) இருமையும் கெடுத்தற் கொடுமை பற்றி (பண்பாகிய) அழுக்காற்றைப் (பண்பியாகிய) பாவி என்றார்.” கொடியானைப் பாவி என்னும் வழக்குண்மையின்.”

    விளக்கவுரையில் கண்ட உரையருமை

    • ‘யாரை அழிக்கும்?’ என்பதற்கான செயப்படுபொருள் குறட்பாவில் இல்லாததால் ‘தன்னைஉடையானை’ என வருவித்துக் கொள்கிறார். கொண்டு ‘உடையானை’ என்னும் பொழிப்புரையை விளக்கவுரையில் ‘தன்னை ஆக்கினானை’ என மாற்றிக் கொள்கிறார். அதாவது ‘அழுக்காறு’ என்னும் பண்பைத் தானே உருவாக்கி அதனை உடைமையாகக் கொண்டானாம்.
    • ‘அழுக்காறு’ என்னும் சொல்லுக்குப் பரிமேலழகர் ‘பிறர் ஆக்கம் பொறாமை’ (35) என்று பொருள் வரையறை செய்கிறார். ‘பிறர் ஆக்கம் கண்டவழி மகிழ்ச்சியடைய வேண்டிய ஒருவன் பொறாமைப் படுகிறான்’ என்றால் அந்தப் பண்பு அவனால் உருவாக்கிக் கொள்ளப்பட்டது என்பது பெறப்படும்
    • படவே அழுக்காறு என்பது செம்பில் களிம்பு போலல்லாது மனிதன் தானே தேடிக்கொண்ட பண்பு என்பதை அறிய முடியும். அறியவே அவன் தேடிய செல்வம் அவனைக் காக்க வேண்டியதிருக்க, அவன் அழிவுக்குக் காரணமாகிறது என்பது நுண்ணியம்.
    • பண்பைப் பண்பியாகத் திருவள்ளுவர் உருவகித்ததற்கான காரணத்தைத் தனக்கே உரிய புலமையாற்றலால் விளக்கிக் காட்டுகிறார்.
    • எதிர்மறைப் பண்புகள் காரணமாகக் கொடுஞ்செயலைச் செய்தாரைப் ‘பாவி’ என அழைப்பது உலக வழக்கு. அவ்வழக்கின் அடிப்படையிலேயே திருவள்ளுவர் அழுக்காறுடையானைப் பாவி என்றாராம். அதாவது அழுக்காற்றை உடையவனைத் தீயவன், கேடன், கயவன் என்றெல்லாம் அழைக்காது அவனைப் ‘பாவி’ என ஏன் அழைத்தார் என்பதற்கான காரணத்தை வள்ளுவர் உலக வழக்கினால் அறிந்தார் என்பதாம்.

     பரிமேலழகர் கண்ட உரையருமை

    ஓர் உருவகத்தின் காரணத்தை ஆராய்ந்து எழுதியிருக்கும் அழகருடைய உரை மாண்பு இப்படி அமைகிறது. ‘அன்பு’ என்பது பண்பு. அதற்குச் செயல் கிடையாது. அதாவது அன்பு தானாக செயல்படாது. அந்தப் பண்பைத் தனக்கு இயல்பாகக் கொண்டவன்தான் அதன் பெருமையைத் தன் செயல் வழி உணர்த்த முடியும். சான்றாக ‘இரக்கம்’ என்ற உயரிய பண்பு வள்ளற்பெருமான் வழியாகச் செயல்பட்டுப் பெருமையுற்றது. ‘நன்மை’ செயல்படாது. நல்லவன்தான் செயல்படுவான். ‘தீமை செயல்படாது’ தீயவன்தான் செயல்படுவான். எனவே பண்புக்குப் பண்பி இல்லை. ‘அழுக்காறு உடையான்கண்ணேயே’ (135) ஆக்கம் சேராதேயன்றி அழுக்காற்றிடம் சேராது என வள்ளுவர் கூறவில்லை என்பதையும் நோக்குதல் வேண்டும்.

    ஆனால் திருவள்ளுவர் ‘பண்பு செயல்படும்’ என்று கூறுகிறார். அதாவது பண்பே பண்பியாகச் செயல்படும் என்று கூறுகிறார். பண்பு தானாகச் செயல்படுமா? இதுதான் வினா? ‘படாது’ என்பது உண்மை. சில நேர்வுகளில் பண்பு பண்பியாகச் செயல்படும் என்பது திருவள்ளுவர் கருத்து. இந்தக் கருத்தினைத் திருவள்ளுவர் முன்னெடுக்கிறபோது அதற்கான விளக்கத்தை அவர் கூறினாரிலர்.

    ‘பண்பி இதனைச் செய்வான்’ எனக் கூறாது ‘பண்பே இதனைச் செய்யும் (விடும்) எனக் கூறியமைகிறார் திருவள்ளுவர். இப்போது உரையாசிரியருக்குப் பொறுப்பு கூடுதலாகிறது. நூலாசிரியரின் சொற் பயன்பாட்டுக்கு விளக்கம் சொல்ல வேண்டியதுதான் உரையாசிரியர் பணியே தவிர நூலாசிரியர் பதிவில் குறைகாண்பது நெறியாகாது. ‘அழுக்காறு’ என்பது ஒரு பண்பு. அது பண்பி அல்ல. பாவம் என்பது பண்பு. ‘பாவி’ என்பவன் பண்பி. பாவத்தைச் செய்பவன்தான் பாவி. ஆனால் திருவள்ளுவர் அழுக்காற்றையே ஒரு பாவி என்கிறார். இலக்கணப்படி இது உருவகம். ஆனால் பொருளுணர் நெறிப்படி இது சரியன்று. ஆனால் கூறுகிறவர் தெய்வப்புலவர். ஒரு நுட்பமின்றி இவ்வாறு கூறியிருக்கமாட்டார். அந்த நுட்பம் என்ன? பண்புக்குப் பண்பி இல்லை என்பது உண்மைதான். ஆனால் திருவள்ளுவர் மானுடத்தின் எதிர்மறைப் பண்புகளில் பொறாமையை அதாவது பிறர் ஆக்கம் கண்டவழி வயிற்றெரிச்சல் படுகின்ற அந்த அழுக்காற்றைச் சாதாரண எதிர்மறைப் பண்புகளில் ஒன்றாகக் கொள்ளவில்லை. அதனைத் தனியாகப் பிரித்து அதன் கொடுமையைச் சுட்டுகிறார். மற்ற எதிர்மறைப் பண்புகள் பிறருக்கு எதிராகவே செயல்படும்.  ஆனால் அழுக்காறாகிய இப்பண்பு கொண்டவனுக்கே எதிரியாகும். மற்ற பண்புகள் செயல்பட ‘பண்பி’ தேவை. இதனைச் செயல்படுத்த தனியாக ஒரு ஆள் தேவையில்லை. அந்தப் பண்பே அந்த அழிவுச் செயலை மேற்கொள்ளும். யார்மீது? எவன் பொறாமை கொண்டானோ அவன்மீதே அது தன் தாக்குதலைத் தொடுக்கும்.  கம்பியில்லாமலேயே பாய்கின்ற மின்சாரம் அழுக்காறு!

    ‘ஒரு’ என்ற சொல்லுக்கு ஒப்பற்ற என அழகர் உரையெழுதினார், ‘ஏனைய பாவங்களின் செயல்படு எல்லை இம்மை மட்டுமே. அழுக்காறு மறுமையையும் அழிக்கும் பேராற்றல் உடையது என்னும் அதன் ஒப்பின்மையாகிய வலிமை நோக்கி. திருவள்ளுவர் பண்பியில்லாத பண்பைப் பண்பியாக்கினார். அதாவது பாவத்தைப் பாவியாக்கினார். அழகர் அதற்கான காரணத்தைக் கண்டறிந்து எழுதினார்.

    திருவள்ளுவர் காட்டிய உடைமைகளும் அல்லாதனவும்

    மானுடம் சிறக்க மாந்தர்களுக்கு இருக்க வேண்டிய பண்புகளைத் திருவள்ளுவர் ‘உடைமை’ என்னும் சொல்லால் நேர்முகமாகச் சுட்டுவார். ‘அன்புடைமை’, ‘அடக்கமுடைமை’ முதலிய பத்து உடைமைகளை அவர் கூறுவார். இருக்கக் கூடாத, அல்நெறி செல்லக் காரணமாகும் இயல்புகளை எதிர்மறையில் சுட்டுவது அவர்தம் வெளிப்பாட்டு நெறி, ‘பயனில சொல்லாமை’, ‘பிறனில் விழையாமை’, ‘புறங்கூறாமை’ முதலியன இவ்வாறு அமைந்தவை.

    பண்புகள் இடம் மாறினால்

    எதிர்மறைப் பண்பாகிய அழுக்காற்றினை உடைமையாக்கி, இருக்க வேண்டிய உடன்பாட்டுப் பண்பாகிய ஒழுக்கத்தை எதிர்மறையாக்கியும் வள்ளுவர் சிந்தித்திருக்கிறார். அதாவது ஒருவனுக்கு இருக்க வேண்டிய பண்பு இல்லாமல் போனால் என்ன ஆகும்? என்று சிந்தித்த வள்ளுவர், ‘இருக்கக் கூடாத பண்பு உடைமையானால் என்ன ஆகும்? என இருவகையாகவும் சிந்தித்திருக்கிறார் என்பதாம்.

    “அழுக்காறு உடையான்கண் ஆக்கம் போன்று இல்லை
    ஒழுக்க மிலான்கண் உயர்வு’ (135)

    உடன்பாட்டுப் பண்புகளை வள்ளுவர் உடைமைகளாகச் சொல்லுவார் என்பது மேலே குறிக்கப்பட்டது. ஆனால் இந்தக் குறட்பாவில் ‘அழுக்காறுடையான்’ என எதிர்மறைப் பண்பு உடைமையாகக் குறிக்கப்பட்டது. மேலும் உடைமையாக இருக்க வேண்டிய ஒழுக்கம் ‘ஒழுக்கமிலான்’ என எதிர்மறையால் குறிக்கப்பட்டது காண்க. அதனால் இருவழியும் ஒருவனுக்குக் கேடு என்பதை மிக நுட்பமாக வள்ளுவர் குறித்திருக்கிறார். இவற்றையெல்லாம் உள்வாங்கியே பரிமேலழகர் உரை அமைந்திருக்கிறது என்பதை உணரலாம்.

    பரிமேலழகரின் நினைவாற்றல்

    ‘பண்பு’ ஒரு செயலூக்கி என்பதைப் ‘பாவி’ என்னும் சொல்லால் குறித்த வள்ளுவத்தைத் தம் உரையாற்றலால் உணர வைத்த பரிமேலழகர் இதனையொத்த இன்னொரு சொல்லுக்கும் இவ்வாறே உரையெழுதுகிறார். “இன்மை என ஒரு பாவி’ (1042) என்பதற்கு மேல் ‘அழுக்காறென ஒரு பாவி’ (168) என்புழி உரைத்தாங்கு உரைக்க” என்று நினைவூட்டுகிறார். இந்த இரண்டு பாடல்களுக்கும் இடையே தொள்ளாயிரம் பாடல்களுக்கு மேல் இருக்கின்றன என்பதையும் அக்காலக் கல்விமுறை, சுவடிவழிக்கல்வியே என்பதையும் உட்கொண்டால் பரிமேலேழகர் உட்பட உரையாசிரியர்கள் அனைவர்தம் நினைவாற்றலையும் அறிந்து கொள்ள முடியும்.

    நிறைவுரை

    பண்பிதான் செயல்படும் என்பது உண்மையேயாயினும் சில நேர்வுகளில் பண்பே பண்பியாகச் செயல்படும். அது நேர்முகமானால் நன்மை. எதிர்முகமானால் பேரழிவு. ‘அழுக்காறு’ என்னும் பண்பைப் பண்பியாகத்   திருவள்ளுவர் உருவகம் செய்தது ஏன் என்பதற்குப் பரிமேலழகர் கண்ட உரைநுட்பம் இதுதான். பரிமேலழகர் உரையால் பண்புக்கும் செயலாற்றல் உண்டு என்று அறிந்து கொண்ட நாம் எண்ணங்களைத் தூய்மையாக வைத்துக் கொள்வதுதான் வள்ளுவரால் அடைய வேண்டிய பயன். ‘மனம்போல் வாழ்வு என்பதும் ‘உன் மனசார சொல்லு’ என்பனவும் அவை! எண்ணங்கள் செயலுக்கு மூலம் மட்டுமன்று. பல நேர்வுகளில் அவையே செயலூக்கியுமாகும்.!

    (தொடரும்)

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 3

    பரிமேலழகர் உரைத் திறன் – 3

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    உலகின் காரணம் கடவுளா? கடவுளின் காரியம் உலகமா?

    முன்னுரை

    ‘பார்வை’, ‘நோக்கு’ இவற்றிடையே வேறுபாடு உண்டு. ‘பார்வை’ என்பதைத் திருவள்ளுவர் ‘ஏதிலார் போலப் பொதுநோக்கு’ என்று விளக்கிக் காட்டுவார். கண்ணின் வினையாக மட்டும் நிகழும்போது அது பார்வை. மனமும் அறிவும் இணைந்து கண்வழிச் செயல்படுவது நோக்கு. இதனையும் திருவள்ளுவர் ‘குறிக்கொண்டு நோக்குதல்’ என்னும் தொடரால் குறிப்பர். பரிமேலழகர் அத்தனைக் குறட்பாக்களையும் படித்து அல்லது பார்த்து உரையெழுதாமல் ‘நோக்கியே’ உரையெழுதியிருக்கிறார். இதனை நூலின் முதற் குறட்பா உரையிலேயே அறிய முடியும். “திருவள்ளுவர் என்ன கருதி இப்படி எழுதியிருக்கிறார்?” என்னும் பெருங்கவலை கொண்டவர் பரிமேலழகர். அப்படி அவர் கவலைப்பட்டு உரையெழுதிய குறட்பாக்களில் ஒன்றின் உரையருமையை இம்மூன்றாவது கட்டுரையில் காணலாம்.

    திறனானறியும் குறட்பாவும் உரையும்

    திருக்குறளின் முதற்பால் அறத்துப்பால். அதன் முதற்பகுதி பாயிரம். நான்கு அதிகாரங்களைக் கொண்ட இந்தப் பாயிரத்தின் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து. கடவுள் வாழ்த்தின் முதற் குறள்,

    “அகர முதல் எழுத்தெல்லாம் ஆதி
    பகவன் முதற்றே உலகு”

    என்பதாகும். இதற்குப் பரிமேலழகர்,

    • “எழுத்தெல்லாம் அகரம் முதல” — எழுத்துக்கள் எல்லாம் அகரமாகிய முதலை உடையன
    • “உலகு ஆதி பகவன் முதற்று” — உலகம் ஆதி பகவனாகிய முதலை உடைத்து

    எனப் பொழிப்புரை எழுதியிருக்கிறார். குறட்பாவின் கிடக்கை நிலை மாறாது  உரைநடைப் பாங்கிற்காகச் சொற்களை மட்டும் முன்பின்னாக மாற்றிப்  பொழிப்புரை கண்டிருக்கிறார். இந்தப் பொழிப்புரைக்கான விளக்கவுரை பின்னாலே இப்படி அமைந்திருக்கிறது.

    பரிமேலழகர் கண்ட விளக்கவுரை

    “இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை. அகரத்திற்குத் தலைமை விகாரத்தானேயன்றி நாதமாத்திரையாகிய இயல்பால் பிறத்தலானும் ஆதிபகவற்குத் தலைமை, செயற்கை உணர்வானன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க. தமிழ் எழுத்திற்கேயன்றி வடமொழி எழுத்திற்கும் முதலாதல் நோக்கி ‘எல்லாம்’ என்றார். ‘ஆதிபகவன்’ என்னும் இருபெயரொட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு. ‘உலகு’ என்பது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது. காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் உலகின்மேல் வைத்துக் கூறினார். கூறினாரேனும் உலகிற்கு முதல்வன் ஆதிபகன் என்பது கருத்தாகக் கொள்க! ஏகாரம் தேற்றத்தின் கண் வந்தது. இப்பாட்டால் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது.

    விளக்கவுரையில் காணப்படும் உரையருமை

    இனிப் பரிமேலழகர் எழுதியிருக்கும் விளக்கவுரையை ஒவ்வொரு தொடரையும் சிந்தனைக்குட்படுத்தினால் அவ்வுரை எழுதுவதற்கு அவர் எவ்வளவு காலம் தம் சிந்தனையைச் செலவழித்திருப்பார் என்பதைப் புரிந்து கொள்ளலாம். தொடராய்வு தொடர்கிறது.

    1. “இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டு உவமை” என்று எழுதுகிறார். உவமத்தையும் பொருளையும் தனித்தனிச் சுட்டி இரண்டையும் இணைக்கின்ற உவமச்சொல் இல்லாத நிலைக்கு. ‘எடுத்துக்காட்டுவமை’ என்பது அனைவருக்கும் தெரிந்த இலக்கண உண்மையே!. ஆனால் இந்த எடுத்துக்காட்டுக்கான காரணங்களைப் பரிமேலழகர் ஆராய்கிறார்.  அகரத்தை ஏன் உவமமாக்க வேண்டும்? அகரத்திற்கு ஏன் தலைமைப் பதவி? அகரம் எப்படித் தலைமையாகும்? எழுத்துக்களுக்குத் தலையெழுத்தாய் இருப்பதால் அகரம் உவமமாயிற்று. எப்படித் தலைமையெழுத்தாய் இருக்கிறது? எல்லா எழுத்தொலிகளுக்குள்ளும் ஊடுருவி நிற்பதால் அது தலைமையாயிற்று. இந்த நுட்பங்களையெல்லாம் ‘இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை’ என்னும் ஒரே தொடரால் குறிக்கிறார் பரிமேலழகர்.
    2. அந்தத் தலைமைப் பண்பை விளக்குகிறார். எழுத்துக்களுக்கு அகரமாகிய ஒலி தலைமை தாங்குகிறது. உலகத்திற்கு ஆதியாகிய பகவன் தலைமை தாங்குகிறார் என்பதாம். பொழிப்பில் ‘முதல்’ என்று எழுதி விளக்கத்தில் ‘தலைமை’ என்று தாம் எழுதிய விளக்கத்திற்கான காரணத்தை அவரே பதிவு செய்கிறார்.
    3. “அகரத்திற்குத் தலைமை விகாரத்தானேயன்றி நாதமாத்திரையாகிய இயல்பால் பிறத்தலானும்” என அகரத்தின் தலைமைக்கான காரணத்தைத் தொடர்ந்து விளக்குகிறார். திருவள்ளுவர் கூறும் ‘அகரத் தலைமை’ வரிவடிவத்தை நோக்கியதன்று. ஒலி வடிவத்தை நோக்கியது. ஒலியை ‘நாதம்’ என்பது மரபு. ‘அ’ என்னும் வரிவடிவம் முதல் எழுத்தாக எழுதப்படுவதால் அதனைத் தலையெழுத்தாக எண்ணிவிடக் கூடாதல்லவா? அதனாலேதான் அகரம் என்பது ஒலியைக் (நாதமாத்திரை) குறித்தது என்று எழுதுகிறார்.
    4. “ஆதிபகவற்குத் தலைமை செயற்கை உணர்வான் அன்றி இயற்கை உணர்வான் முற்றும் உணர்தலானும் கொள்க” என்று எழுதுகிறார். உவமத்தின் சிறப்பினை விளக்கிய பரிமேலழகர் பொருளின் தலைமைச் சிறப்பையும் அதற்கான காரணத்தையும் இந்தத் தொடரில் விளக்குகிறார். வரிவடிவம் செயற்கை. நாத வடிவம் இயற்கை. அகரத்திற்குத் தலைமை நாதவடிவினால் எல்லா எழுத்துக்கள் உள்ளும் கலந்து நிற்பது. இறைவன் உலக உயிர்களை அறிவது செயற்கை உணர்வால் அன்று. இயற்கை உணர்வால் முற்றும் அறிகின்ற பேராற்றல் உடையவன். ‘காத்தும் படைத்தும் கரந்தும்’ என்பர் அடியார். தனித்தும் கலந்து நிற்பது இறையியல்பு. ‘ஏகன் அநேகன்’ என்பது திருவாசகம்.
    5. ‘ஆதிபகவன் என்னும் இருபெயரோட்டுப் பண்புத்தொகை வடநூல் முடிபு” என்று எழுதுகிறார். ஆதிபகவன் என்பது தமிழாயின் ஒற்று மிகுந்திருக்க வேண்டும். மிகாமையின் அது வடமொழியாயிற்று எனத் தம் இலக்கணப் புலமையைக் காட்டுகிறார். ஆதிபகவன் ஒரு சொல் என்பது கருத்து.
    6. “தமிழ் எழுத்திற்கேயன்றி வடமொழி எழுத்திற்கும் முதலாதல் நோக்கி எல்லாம் என்றார்” என்று தமது கூரிய நோக்கினைப் புலப்படுத்துகிறார். எழுத்து அகர முதல என்றாலே போதும். “எழுத்தெல்லாம் அகர முதல” எனச் சொல்வானேன்? என்னும் வினாவை எழுப்பிக்கொண்டு அவர் காலத்தில் தமிழோடு ஒருங்குவைத்து எண்ணப்பட்ட வடமொழியையும் உட்கொண்டு எழுதுகிறார். இங்கே ஒரு கருத்து சிந்தித்தற்குரியது. வாயைத் திறந்தாலே வரும் ஒலி அகரமேயாதலின் உலகின் எல்லா மொழிக்கும் அவ்வொலி தலைமையொலி என்பது உணரப்படவேண்டும். இன்றைக்குப் பரிமேலழகர் உரையெழுதியிருந்தால் அகரவொலியை உலகின் அனைத்து மொழிக்கும் தலைமையொலி என்றுதான் எழுதியிருப்பார். (இது கடடுரையாளர் அனுமானம்.)
    7. ‘உலகு’ என்றது ஈண்டு உயிர்கள் மேல் நின்றது” என எழுதுகிறார்.  தமிழில் ‘உலகு’ என்னும் சொல் ஆகுபெயராகாது. உலகு என்பது பலபொருள் ஒருசொல். ‘உலகு சிரித்தது’ என்னும்போது அது மக்களைக் குறிக்கும். ‘உலகு செழித்தது’ என்கிறபோது அது மண்ணைக் குறிக்கும். இந்த விளக்கத்தைக் “காலம் உலகம்” என்னும் தொல்காப்பியச் சொல்லதிகார நூற்பா ஆராய்கிறது. பரிமேலழகர் எந்த இடத்திலும் உலகு என்பதை ஆகுபெயராக்கி உரையெழுதினார் இலர். ‘புல்லாகிப் பூடாகி’ எனவரும் அனைத்துயிர்களுக்கும் இறைவன் முதலானவன் என்பது கருத்து.
    8. ‘ஏகாரம் தேற்றத்தின் கண் வந்தது என்று எழுதுகிறார்.
    9. “இப்பாட்டால் முதற்கடவுளது உண்மை கூறப்பட்டது”. என எழுதுகிறார். முதற்கடவுள் என்பதனால் இரண்டாவது, மூன்றாவது கடவுள் இருப்பதாகப் பொருளில்லை. சொரூபம், அருவம், அருவுருவம், உருவம் என இறையுணர்நிலை நான்கு என்பது ஆன்றோர் கருத்து. ‘சொரூபம்’ என்பது அறிவுக்கும் நினைவுக்கும் உணர்வுக்கும் எட்டாத நிலை. ‘உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்’ என்பது பெரியபுராணம். அந்த நிலைக்கு இறைவனின் தலைநிலை அல்லது முதல் நிலை என்பது பெயர். அந்த நிலையை அறிவதற்குப் படிநிலைகள் பல உள. சொரூப நிலையில் உள்ள கடவுளையே முதற்கடவுள் என்று பரிமேலழகர் கூறுகிறார். விரிக்கின் பெருகும்.

    பரிமேலழகர் உரை அருமை

    இந்தக் குறட்பாவின் கிடக்கைநிலை உரை மேலே சொல்லப்பட்டது.  “எழுத்துக்கள் அகரத்தை முதலாக உடையன. இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது” என்பதே அந்நிலையில் பெறப்படும் பொருள். மேலெழுந்தவாரியாக நோக்கினால் ‘இவ்வுலகம் இறைவனை முதலாக உடையது’ என்னுந் தொடர் சரியாக அமைந்திருப்பதுபோல் தோன்றும். தோன்றினால் என்ன ஆகும்? உலகம் முதலில் தோன்றியதாகவும் அவ்வாறு முன்னர்த் தோன்றிய உலகத்திற்கு இறைவன் முதலாக இருக்கிறான் என்பதுபோல் ஆகும்? அப்படி ஆனால் என்ன தவறு? உலகம் முன்னதாகவும் இறைவன் பின்னதாகவும் ஆக்கப்படுவான்! இறைவன்தான் உலக உயிர்களைப் படைத்தவனேயன்றி உலக உயிர்கள் இறைவனைப் படைக்கவில்லை. இந்தக் கருத்து கிடக்கைநிலைப் பொருளில் கிட்டாது. கிட்டாதாயின் என்ன செய்ய வேண்டும்? “இறைவனைக் காண முடியாது. ஆனால் அவன் படைத்த உலகத்தைக் காணலாம். எனவே கண்ணால் காணக் கூடிய உலகத்தைக் காட்டி “இதோ உலகம்! இந்த உலகம் உண்மையானால் இதனைப் படைத்தவன் ஒருவன் இருக்க வேண்டும் அல்லவா? ஆமாம்! அவன்தான் இறைவன். எனவே உலகத்துக்கு முதன்மை இறைவன் எனத் திருவள்ளுவர் கூறியிருந்தாலும் இறைவனால் படைக்கப்பட்டதுதான் உலகம்! எனவே இறைவன் ஒருவன் உண்டு என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்”. இந்த விளக்கங்களையெல்லாம் பரிமேலழகர் இப்படி எழுதுகிறார்.

    “காணப்பட்ட உலகத்தால் காணப்படாத கடவுட்கு உண்மை கூற வேண்டுதலின் உலகின்மேல் வைத்துக் (திருவள்ளுவர்) கூறினார். கூறினாரேனும் உலகிற்கு முதல்வன் ஆதிபகவன் என்பது கருத்தாகக் கொள்க”

    உலகத்தை முன்னிறுத்தி இறைவனுடைய இருப்பினைத் திருவள்ளுவர் குறள் உணர்த்தியது. பரிமேலழகரோ அதனை மாற்றி இறைவனை முன்னிறுத்தி அவனால் படைக்கப்பட்டதுதான் இவ்வுலகம்! எனவே இறைவனது உண்மையை உணர்க என்று விளக்கிக் காட்டுகிறார். காட்டவே அகரம் எழுத்துக்களுக்குத் தலைமை. ஆண்டவன் உலகத்திற்குத் தலைமை என்னும் நிரல் பொருள் புலப்படுவது காண்க.

    பரிமேலழகரைத் தொடர்ந்த நச்சினார்க்கினியர்

    இலக்கிய உரையாசிரியர்களில் பரிமேலழகருக்கு இணையாகவும் எண்ணிக்கையில் பெருமளவு இலக்கியங்களுக்கு உரையெழுதியவராகவும் கருதப்படுகிறவர் நச்சினார்க்கினியர். இலக்கிய இலக்கணங்களுக்கு உரையெழுதி உரைமுடி கண்டவர். அவர்,

    • ‘எழுத்தெனப்படுப’ எனத் தொடங்கும் தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவின் விளக்கவுரையில் “அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்குமேனும் ஈண்டுத் தமிழெழுத்தே கூறுகின்றார் என்பது உணர்த்தற்கு ‘னகர இறுவாய்’ என்றார் என எழுதுகிறார். “அகரம் முதலாதல் ஆரியத்திற்கும் ஒக்கும்” என்னுந் தொடர் பரிமேலழகரின் “தமிழ் எழுத்திற்கேயன்றி வடமொழி எழுத்திற்கும் முதலாதல் நோக்கி” என்னும் உரைத்தொடரை அப்படியே உள்வாங்கி யமைந்திருப்பது காண்க.
    • “மெய்யின் இயக்கம் அகரமொடு சிவணும்” என்னும் தொல்காப்பிய நூற்பா உரையில் அவருடைய விளக்கவுரை இப்படி அமைந்திருக்கிறது. “இறைவன் இயங்கு திணைக்கண்ணும் நிலைத்திணைக்கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடிந்தாற்போல அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாய் நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது. ‘அகர முதல’ என்னும் குறளான் அகரமாகிய முதலையுடைய எழுத்துக்கள் எல்லாம் அதுபோல இறைவனாகிய முதலை உடையது உலகம் என வள்ளுவனார் உவமை கூறியவாற்றானும் கண்ணன் எழுத்துக்களில் அகரமாகின்றேன் யானே எனக் கூறியவாற்றானும் பிற நூல்களானும் உணர்க”

    என்று எழுதிக்காட்டும் நச்சினார்க்கினியர் “இறைவனாகிய முதலை உடையது உலகம்” என்னும் தொடரில் திருக்குறளின் கிடக்கைநிலை உரையைக் கருத்திற் கொள்ளாது பரிமேலழகர் உரைவிளக்கத்தைப் போற்றிக் கொள்கிறார். இதனால் பழந்தமிழ் உரையாசிரியர்கள் ஒருவரையொருவர் மதித்துப் போற்றி வந்த புலமை மாண்பு வெளிப்படுவதைக் காணலாம்.

    நிறைவுரை

    ‘உலகம் இருப்பதால் இறைவன்’ என்னும் அனுமானத்தால் ஏற்படும் மயக்கத்தைத் தம் புலமையால் மாற்றி ‘உலகத்திற்கு முதல்வன் இறைவன்’ என்னும் உண்மையைக் கண்டறிந்து கூறியதே இந்தக் குறட்பாவில் அழகரின் உரையருமை எனலாம்.

    (தொடரும்)

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 2

    பரிமேலழகர் உரைத் திறன் – 2

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    புழுவைத் தேடுவதா வெயிலின் வேலை?  

    முன்னுரை

    உரைகாண்பதில் இரண்டு வகை உண்டு. செய்யுளில் உள்ள சொற்களுக்கு மட்டும் உரைசொல்லி முடிப்பது. சொன்னவனின் உள்ளத்தை அவன் சொற்களாலேயே அறிய முயல்வது. பரிமேலழகர் திருவள்ளுவரின் உள்ளம் அறிய முயன்றவர். திருக்குறள் முழுமையும் கற்றுணர ஒரு பிறவி போதாது என்பர் சான்றோர். அதற்கான பரிமேலழகர் உரையும் அத்தகையதே. திருக்குறள் காலங்கடந்து நிலைபெற்றிருப்பதற்கு என்ன காரணமோ அதே காரணந்தான் பரிமேலழகர் உரை நிலைபெற்றிருப்பதற்கும். திருவள்ளுவர் வாழ்வியலுக்கு நூலெழுதியவர் என்றால் அந்த நூல் நிலைபெற தம் ஆழமான அகன்ற புலமையால் ‘உரைமாளிகை’ அமைத்துத் தந்தவர் பரிமேலழகர் எனலாம். அன்னாருடைய ஆழமான புலமை வெளிப்படும் பல இடங்களில் ஓரிடத்தை இவ்விரண்டாவது கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.

    திறனறியப்படும் குறளும் உரையும்

    திருக்குறளில் எட்டாவது அதிகாரமாகிய அன்புடைமை என்னும் அதிகாரத்தின் ஏழாவது குறட்பாவாக இருப்பது இது.

    “என்பிலதனை வெயில் போலக் காயுமே
    அன்பி லதனை அறம்”  77

    சொல்லுக்குச் சொல் பொருள் கூறி விளக்குவது சொற்பொருள் விளக்கம். வடமொழியில் பதசாரம் என்பர். பதம் என்றால் சொல். சாரம் என்றால் பொருள். பேச்சில் சாரமில்லையே என்பது உலக வழக்கு. “சாரமற்ற வார்த்தை நாம் சரிதை சொல்லுகின்றோம்” என்பார் பாரதியார். பரிமேலழகர் பதசாரம் சொல்லுவதை ஓர் உரைநெறியாகப் பின்பற்றவில்லை. கருத்திற்கு இசைய பொருளமைதியை முன்னர்க் கூறிப் பின் அதற்கான விளக்கத்தை விளக்கவுரையில் கூறுவார். இந்த விளக்கம் எதிர்வரும் கட்டுரைகளுக்கும் பொருந்தும். இவ்வாறு கூறுவதற்குப் பொழிப்பு அல்லது பொழிப்புரை என்று பெயர்.

    • என்பு இலதனை வெயில் போலக் காயுமே –- என்பு இல்லாத உடம்பை வெயில் காய்ந்தாற்போலக் காயும்
    • அன்பிலதனை அறம் — அன்பில்லாத உயிரை அறக்கடவுள்

    இது மேற்கண்ட பாடலுக்குப் பரிமேலழகர் தந்திருக்கும் பொழிப்புரை.

    உரைநடைப் பாங்கில் (PROSE ORDER) பரிமேலழகர் பொழிப்புரை

    மேற்கண்ட பொழிப்புரையை எல்லார்க்கும் புரிதல் வேண்டி எழுவாய், பயனிலை, செயப்படுபொருள் என்னுமாறு உரைநடையில் இப்படி அமைக்கலாம்.

     வெயில் என்பு இல்லாத உடம்பை காய்ந்தாற்போல
    அறக்கடவுள் அன்பில்லாத உயிரைக் காயும்

    குறட்பாவில் சொல்லப்படாது பொழிப்புரையில் காணப்படும் சொற்கள் மூன்று. ‘என்பிலது’ எனக் குறட்பாவில் இருக்க, பொழிப்பில் ‘உடம்பு’ என இருக்கிறது. ‘அன்பிலது’ எனக் குறட்பாவில் இருக்க, ‘உயிரை’ என இருக்கிறது. ‘அறம்’ என இருக்க, ‘அறக்கடவுள்’ என இருக்கிறது. பின்னால் அவர் எழுதப்போகும் விளக்கவுரை பொழிப்புரையிலிருந்தே தொடங்கிவிடுவதைக் காணமுடிகிறது.

    விளக்கவுரை

    பரிமேலழகர் தரும் இத்தகைய விளக்கங்கள் குறிப்பிட்ட குறட்பாவிற்கு அவரே எழுதிய பொழிப்புரைகளுக்கானவை. அதனால்தான் அவருடைய விளக்கவுரை பொழிப்புரையிலேயே தொடங்கிவிடுகிறது எனக் குறிக்கப்பட்டது.

    “என்பிலது’ என்றதனான் ‘உடம்பு’ என்பதூஉம், ‘அன்பிலது’ என்றதனான் உயிர் என்பதூஉம் பெற்றாம், வெறுப்பின்றி எங்கும் ஒரு தன்மைத்து ஆகிய வெயிலின் முன் என்பில்லது தன் இயல்பால் சென்று கெடுமாறு போல, அத்தன்மைத்து ஆகிய அறத்தின் முன் அன்பில்லது தன் இயல்பால் கெடும் என்பதாம். அதனைக் ‘காயும்’ என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார். அவற்றிற்கும் அவ்வியல்பு உண்மையின். இவ்வாறு “அல்லவை செய்தாற்கு அறம் கூற்றம்” (நான்மணிக்கடிகை 83)  எனப் பிறரும் கூறினார்.

    மேற்கண்ட பகுதி மேற்காணும் குறட்பாவிற்குப் பரிமேலழகர் எழுதிய பொழிப்புக்கு அவரே தந்திருக்கும் விளக்கவுரை.

    பரிமேலழகர் உரையாழம்

    • குறட்பாவில் ‘என்பிலது’ என்றே இருக்க பரிமேலழகர் ‘உடம்பு’ என உரை கண்டதற்கான காரணத்தைச் சொல்கிறார். எலும்பு உடலுக்குள்ளேதான் இருக்கும். தனியாக எலும்பு செயல்படாது. இருக்கவும் இயலாது. எனவே ‘எலும்பு இல்லாதது’ என்பதனான் உடம்பு என்பதாக உணர்ந்து எழுதுகிறார்.  ‘என்பு தோல் போர்த்த உடம்பு’ எனப் பின்னும் கூறுவார் வள்ளுவர்.
    • அதுபோலவே ‘அன்பிலது’ என்றே இருக்க பரிமேலழகர் ‘உயிர்’ என உரைகண்டதற்கான காரணத்தைச் சொல்கிறார். உயிருக்குத்தான் அன்பு. உடம்பு அன்பு காட்டாது. அன்பு உயிர்ப்பண்பு. எனவே உயிரது பண்பாகிய அன்பில்லாதது எனத் திருக்குறள் குறிப்பதால் வள்ளுவர் குறிக்க எண்ணியது ‘உயிர்’ என்பதாக உணர்ந்து எழுதுகிறார்.
    • எலும்பு உடம்போடு தொடர்புடையது. அன்பு உயிரோடு தொடர்புடையது. ஒருத்தி திலகம் இல்லாமல் வந்தாள் என்றால் ‘நெற்றியில்’ என்பது பெறப்படும் அல்லவா? ஒருவன் ‘செருப்பில்லாமல் வந்தான்’ என்றால் காலில் என்பது பெறப்படுமல்லவா?. அவைபோல!
    • இந்தப் பாட்டில் அமைந்துள்ள ‘வெயில் என்பிலதனைக் காயும்’ என்னும் தொடரில் ‘வெயில்’ எழுவாயாகவும் ‘என்பிலது’ செயப்படுபொருளாகவும் ‘காயும்’ என்பது வினைமுற்றாகவும் அமைகிறது. அப்படி அமைந்தால் என்ன பொருளாகும் என்றால் எலும்பில்லாத ‘உடம்பு இருக்கும் இடம் தேடிச் சென்று வெயில் அதனைக் காயும்’ என்பது போல என்றாகிவிடும். வெயில் தானாக நடந்து சென்று எலும்பில்லாத உடம்பினைத் (புழுவை) தேடுமா? வெயில் இருக்கும் இடம் தேடித்தான் புழுவந்து மடியும். அதுவும் தேடாது. சாவதற்கு அதற்கு விருப்பமா என்ன? தானாக வந்து வீழ்ந்து மடியும்.
    • அதுபோலவே அன்பில்லாத உயிர்களை அறக்கடவுள் தேடிச் சென்று அழிக்காது. அன்பில்லாத உயிர்கள் அறவலைப்பட்டு அழியும்.
    • இவ்வாறு இவர் உரைகாண்பதற்கான காரணத்தை மிகத் துல்லியமாகப் பதிவுசெய்திருப்பதைக் காணலாம். வெயிலுக்கும் அறத்திற்குமான பொதுப்பண்பைச் சுட்டுகிறார். அது என்ன பொதுப்பண்பு? “வெறுப்பின்றி எங்கும் ஒரு தன்மைத்து ஆகிய வெயில்” என உவமத்தின் பண்பை விளக்கியவர் ‘அத்தன்மைத்தாய’ என்னும் சுட்டினால் அறத்தினை விளக்குவதைக் காணலாம். எனவே வெயிலோ அறமோ தானாகச் சென்று எதனையும் யாரையும் அழிக்காது. அவையிருக்கும் இடம் நாடிவந்து பிற அழியும். காரணம் அவ்வாறு வந்து வீழ்வது அவற்றுக்கு இயல்பு. அவை வீழ்வதற்குக் காரணம் வெப்பமும் அறக்கடவுளும். வெப்பத்திற்கு இரண்டு இயல்புகள். ஒன்று வெளிச்சம்! இரண்டு வெப்பம்!. வெப்பம் இல்லாத வெளிச்சம் உலகில் கிடையாது. வெளிச்சத்தை நாடி வரும் எலும்பில்லாத புழு வெப்பம் தாங்காது மடியும் என்பது கருத்து. (இக்கட்டுரையில் ‘என்பிலது’ என்பதற்குப் ‘புழு’ என உரைகண்டவர் கட்டுரையாளர் ‘என்பில்லாதது’ அதுவேயாதலின்)
    • வெப்பமும் அறமும் செயல்படவில்லை என்றால் எலும்பு இல்லாத உடம்பு மடிவதற்கும் அன்பில்லாத உயிர்கள் மடிவதற்கும் அவற்றை எப்படிக் காரணமாக்க முடியும் என்றால் பின்னிரண்டும் மடிவதாகிய உண்மையைக் கொண்டு அறியலாம். அவை மடிவதற்கு இவை காரணம். அதனால்தான் அதனைக் “காயும் என வெயில் அறங்களின் மேல் ஏற்றினார் என்று எழுதுகிறார்.
    • அறமாகிய பண்பினைக் ‘அறக்கடவுள்’ என்று எழுதுகிறார். அவ்வாறு தான் எழுதியமைக்குச் சான்று காட்டுகிறார். அறமாகிய பண்பைக் கூற்றுவனாக உருவகம் செய்வது இலக்கிய மரபு என்பதற்காகக்,

    “கல்லா ஒருவற்குத் தம்வாயில் சொல் கூற்றம்!
    மெல்லிலை வாழைக்குத்தான் ஈன்ற காய் கூற்றம்
    அல்லவை செய்தார்க்கு அறம் கூற்றம், கூற்றமே
    இல்லிருந்து தீதொழுகு வாள்”

    என்னும் நாண்மணிக்கடிகைப் பாடலை எடுத்துக்காட்டித் தம் உரைக்கு வலு சேர்க்கிறார் பரிமேலழகர்.

    பரிமேலழகரின் உரை அருமை

    ‘வலை வீசி மீன் பிடித்தல்’ என்பது ஒன்று. ‘விரித்த வலையில் மீன்கள் வந்து விழுவது’ என்பது மற்றொன்று. இது உலகியல். முன்னது சென்று பிடித்தல். பின்னது வந்து விழுதல். குறட்பா வெயில் அறத்தைக் காய்வதாகவும் அறக்கடவுள் உயிரைக் காய்வதாகவும் சொல்கிறது. இது சென்றுபிடிப்பதைப் போல் உள்ளது. பரிமேலழகர் தம் நுண்ணியத்தால் (இயல்பல்லாத) அதனை மாற்றுகிறார். வெயிலும் அறமும் விருப்பு வெறுப்பு அறியாதது. ஒரே தன்மையாய் இயங்கும். அவற்றின் அந்த நடுநிலை வலைப்பரப்பில் என்பிலதும் அன்பிலதும் வந்து வீழ்ந்து மடிவதுதான் உண்மை. இந்த உண்மையைக் கண்டறிந்து கூறியவர் பரிமேலழகர்.

    சரி. வெயிலிருக்கும் இடந்தேடி வந்து வீழ்வது என்பிலதாகிய அஃறிணைக்கு வேண்டுமானால் சரியாயிருக்கலாம். மனிதனாகிய உயர்திணைக்குப் பொருந்துமா? பொருந்தும். எப்படி? தன் மனைவி கண்ணகியோடு உயிர்பிழைக்கச் சென்ற கோவலன் எந்தத் தவறும் செய்யாமல் மதுரையில் கொலை செய்யப்படுகிறான். சிலப்பதிகாரக் காப்பியத்தில் பரவலாக வலியுறுத்தப்படுகிற ஊழ் அல்லது விதியை இளங்கோவடிகள் இங்கேயும் காட்டுகிறார். ஆனால் எப்படிக் காட்டுகிறார் தெரியுமா? விதி புகாரில் பிறந்த கோவலனுக்கு மதுரையில் வலைவிரித்துக் காத்திருந்ததாம்! இவன் சென்று அதில் மாட்டிக் கொண்டானாம்! அடிகள் எழுதுகிறார்.

    “தீவினை முதிர் வலைச் சென்று பட்டிருந்த
    கோவலன் தன்னைக் குறுகினன்” (2705 -2706)

    இந்தச் ‘சென்றுபடுதலைத்தான்’ திருவள்ளுவர் என்பிலதனுக்கும் அன்பிலதனுக்கும் வினையாக்கி அந்த வினையை வெயில் மேல் ஏற்றிக் கூறுகிறார்.

    நிறைவுரை

    திருவள்ளுவர் உவமத்திலும் பொருளிலும் வெயிலின் வினை, அறக்கடவுள் வினை எனக் கூறியவற்றைப் பரிமேலழகர் ஒட்டுமொத்தமாக ‘விதியின் வினை’ என மாற்றிக் காட்டுகிறார். இதுவே இந்தப் பாட்டுக்கான அவருடைய உரையில் காணப்படும் நுண்ணியமாகும்.

    (தொடரும்)

    Share
  • பரிமேலழகர் உரைத் திறன் – 1

    பரிமேலழகர் உரைத் திறன் – 1

    புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள் 
    உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை 
    பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி, 
    தஞ்சை மாவட்டம் – 613006.                
    மின்னஞ்சல் முகவரி –  egowrisss@gmail.com

    விலங்குகளும் வித்தகரும் ஒன்றா?

    முன்னுரை

    காலத்தால் முற்பட்டிருப்பது எப்படி பெருமையோ அப்படியே காலத்தால் பிற்பட்டிருப்பதுமாகும். தடந்தெரியாத் தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர் தடங்காட்டினார் என்றால் பின்னாலே வந்த நச்சினார்க்கினியர் அத்தடத்தைச் செப்பனிடும் வாய்ப்பினைப் பெற்றார். பெறவே அப்படிச் செப்பனிடுவதற்குரிய பன்னூல் அறிவு பெறும் வாய்ப்பும் அவருக்குக் கிட்டியது. அதனால் தொல்காப்பியம், பத்துப்பாட்டு முதலிய நூல்கள்மேல் கூடுதல் ஒளி பாய்ந்தது. திருக்குறள் உரையாசிரியர்கள் பதின்மரில் இறுதியானவர் பரிமேலழகர். அதனால் தன்னுடைய முன்னோடிகள் எழுதிய ஒன்பது உரைகளையும் நோக்கியறியும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அவருக்குக் கிட்டிய அந்த வாய்ப்பு ஏனையோருக்குக் கிட்டவில்லை. அது இயற்கை நியதி. கிட்டிய அந்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றைக்கும் நிமிர்ந்து நிற்கும் குன்றா(க) உரையெழுதினார் பரிமேலழகர். அன்னாருடைய உரையருமையைத் துளித் துளியாகப் பதிவிடுவது நலம் பயக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் இந்தத் தொடர் வடிவமைக்கப்படுகிறது.

    விளக்கத்திற்குரிய குறட்பாவும் அதிகாரப் பொருண்மையும்

    திருவள்ளுவர் மெய்யுணர்தலை அறத்துப்பால் துறவறவியலிலும் அறிவுடைமையைப் பொருட்பால் அரசியலிலும் வைத்த காரணம் பற்றிய ஆய்வு பின்னாளில் தொடரும். ‘கல்லாமை’ என்னும் அதிகாரத்தில் இறுதிக் குறட்பாவாக அமைந்த,

    “விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
    கற்றாரோடு ஏனை யவர்” 1

    என்னும் குறட்பாவின் உரை அருமையே இக்கட்டுரையில் விளக்கப்படுகிறது. பரிமேலழகரின் குறளுரையருமையைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் அதிகாரம் ‘கல்லாமை’ என்னும் பெயர் தாங்கியது என்பதை நோக்க வேண்டும். ‘கல்லாமை’ என்பது ‘கற்றலைச் செய்யாமை’ என்னும் தொழிலைக் குறித்தது. ஆனால் அவ்வதிகாரத்தில் அமைந்துள்ள பத்துக் குறட்பாக்களும் கல்லாமையாகிய தொழிலைப் பற்றிப் பேசாது கல்லாமையினால் வரும் இழிவை, அதாவது கல்வியில்லாதவன் சமுதாயத்தில் படும் மானக்கேடுகளையும் துன்பங்களையும் குறிப்பனவாகவே அமைந்துள்ளன. சுருங்கச் சொன்னால் அதிகாரத் தலைப்பு தொழிலைக் குறிப்பதாக அமைய அதிகாரப் பொருண்மையோ அதனால்வரும் இழிவுகளைத் தொகுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. அதாவது கல்லாமை கற்றலைச் செய்யாமையான் வரும் இழிவு என ஆகுபெயராய் நின்றது. குறட்பாக்களை முற்றோதிய பரிமேலழகர் இந்த நுட்பத்தைப் புரிந்து கொண்டு,

    “அஃதாவது (கல்லாமை) கற்றலைச் செய்யாமை என்றது, அதனின் ஆய இழிபினை” 2

    என்று சொல் விளக்கம் தருகிறார். அதிகாரத்தின் சொற்பொருள் விளக்கத்திலேயே பரிமேலழகரின் ‘உரைத்தாண்டவம்’ தொடங்கிவிடுவதைக் காணலாம்.

    பரிமேலழகரின் உரை விளக்கம்

    இந்தக் குறட்பாவைப் பரிமேலழகர் வழக்கம் போல் சீர்பிரித்து உரை கூறியிருக்கிறார். “விலங்கொடு மக்கள் அனையர்” என்னும் தொடருக்கு “விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையவர்” (அத்துணை தீமையுடையவர்) “இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்” என்னும் தொடருக்கு விளங்கிய நூலைக்கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்”3 என்னுமாறு அவருடைய சீர் பிரிப்பும் பொழிப்புரையும் அமைந்திருக்கிறது. பரிமேலழகர் தம் உரைப்பகுதியில் யாண்டும் பதவுரை கூறும் வழக்கமிலர் என்பது ஈண்டுக் குறிக்கத்தக்கது.

    கட்டுரையாளர் விளக்கம்

    மேற்கண்ட பத்தியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உரைப்பகுதியில் அடைப்புக்கள் கொடுக்கப்பட்டிருப்பது பரிமேலழகர் தாம் கொண்ட கருத்திற்கேற்ப வருவித்துக் கொண்ட தொடர். இதற்கான தொடர் குறட்பாவில் இல்லை. பாட்டில் உவமங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான கருத்தியலைத்தான் பரிமேலழகர் இப்படிப் பதிவிட்டிருக்கிறார்.

    குறட்பாவின் அமைப்புச் சிக்கல்

    குறட்பாவில் விலங்கொடு மக்களை ஒப்பிட்டிருக்கும் முதற்பகுதிக்கு இணையாகக் ‘கற்றாரோடு ஏனையவர்’ என்னும் மறுபகுதி தரப்பட்டுள்ளது. குறட்பாவில் உள்ள இவ்வண்ணமே நிரல்படுத்தினால் ‘விலங்கொடு’ என்பதற்கு ‘கற்றாரோடு’ என்பதும் ‘மக்கள்’ என்பதற்கு ‘ஏனையவர்’ (கல்லாதவர்) என்பதும் பொருத்தமாக்க வேண்டியதிருக்கும். அப்படி அமைத்தால் பாட்டின் பொருள் இப்படி அமைந்துவிடும்.

    “விலங்கொடு மக்கள் இணையாவார். (அதுபோலக்) கற்றவர் கல்லாதவரோடு இணையாவார்” என்று அமைந்து ‘கற்றவர் விலங்குகள்’ என்றும் ‘கல்லாதவர் மக்கள்’ என்றும் பொருள்படும்”

    இப்படி அமைந்தால் அதிகாரப் பொருண்மையாகிய கல்லாமையது இழிவு சுட்டாததோடு முரண்பட்ட பொருளையும் தந்துவிடும் என்பதை அறியலாம்.

    நிரல் நிறை – பொருள்கோளா? செய்யுளணியா?

    நிரல்நிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என்னும் நான்குவகைப் பொருள்கோளை மட்டும் தொல்காப்பியம்,

    “அவற்றுள் நிரல்நிறை தானே
    வினையினும் பெயரினும் நினையத்தோன்றி
    சொல்வேறு நிலைஇப் பொருள் வேறு நிலையல்” 4

    என்னும் நூற்பாவில் ஆராய்ந்திருக்கிறது. செய்யுள் தொடர்பான இந்த ஆராய்ச்சி சொல்லதிகார எச்சவியலில் நிகழ்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இனி, இதற்கு அடுத்த நிலையில் ஆற்றுநீர், மொழிமாற்று, நிரல்நிறை, விற்பூட்டு, தாப்பிசை, அளைமறிபாப்பு, கொண்டு கூட்டு, அடிமறி மாற்று எனப் பொருள்கோளை எட்டாக ஆராய்ந்திருக்கும் நன்னூலார் ‘நிரல்’ என்பதைப்,

    “பெயரும் வினையுமாம் சொல்லையும் பொருளையும்
    வேறு நிரல்நிறீஇ முறையினும் எதிரினும்
    நேரும் பொருள்கோள் நிரனிறை நெறியே” 5

    என்னும் நூற்பாவில் ஆராய்ந்திருக்கிறது. இந்த நூற்பாவில் தான் ‘எதிர்நிரல் நிறை’ என்னும் தொடர் பயின்று வந்துள்ளது. இந்த எதிர்நிரல் நிறையணியை (கட்டுரைப் பொருள் விளக்கத்திற்கு மட்டுமாதலின் நேர்நிரல்நிறை விளக்கம் கட்டுரையாளரால் தவிர்க்கப்படுகிறது) விளக்க வந்த சங்கர நமசிவாயர்,

    “ஆடவர்கள் எவ்வாறு அகன்றொழிவார்? வெஃகாவும்
    பாடகமும் ஊரகமும்  பஞ்சரமா – நீடியமால்
    நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ
    மன்றுஆர் மதிற்கச்சி மாண்பு? 6

    என்னும் வெண்பாவை எடுத்துக் காட்டியிருக்கிறார். இந்த வெண்பாவில் வெஃகா, பாடகம், ஊரகம் என்னும் மூன்று பெயர்களும் நின்றான் இருந்தான் கிடந்தான் என முறைமாறி நிற்க, இவற்றை பெயர்ப்பயனிலைகளும் வினைப் பயனிலைகளுமாய் நின்ற எதிர் நிரல் நிறை என எழுதுகிறார். 7 வெஃகாவில் கிடந்தான், பாடகத்தில் இருந்தான், ஊரகத்தில் நின்றான் என்னும் பொருத்தத்தை இதே வெண்பாவை எடுத்துக்காட்டி உரையெழுதும் தண்டியலங்கார உரையாசிரியர் சுப்ரமணிய தேசிகர் ‘நிரலே நிறுத்தி மாற்றிப் பொருள் கொள்வது’ என எழுதியமைகிறார். தண்டியலங்காரத்தில் ‘எதிர் நிரல்நிறை’ அல்லது ‘மயக்க நிரல்நிறை’ என்னும் சொல்லாட்சிகள் பயிலப்பட்டிருப்பதாக அறியக் கூடவில்லை. இன்றியமையாக் கருத்து என்னவெனின் நன்னூலில் பொருள்கோள். தண்டியலங்காரத்தில் பொருளணி.

    யாப்பருங்கலக் காரிகை நூலாசிரியர், ‘பொருள்கோள்’ என ஒருசொல் உரைத்து ஒழிய, உரையாசிரியர் குணசாகரரோ “நிரல்நிறை மொழி மாற்றம், சுண்ணமொழி மாற்றம், அடிமொழி மாற்றம், பூட்டுவிற் பொருள்கோள், புனல்யாற்றுப் பொருள்கோள், அளைமறி பாப்புப் பொருள்கோள், தாப்பிசைப் பொருள்கோள், கொண்டு கூட்டுப் பொருள்கோள் என எட்டு வகையாக ஆராயப்படும் என உரையெழுதி,

    “நிரனிறை இரண்டு வகைப்படும் பெயர் நிரல் நிறை, வினை நிரல்நிறையும் என” 8

    அதன் வகைகளைப் பதிவு செய்திருக்கிறார். காரிகையாசிரியர் தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்களைப்போல இதுபற்றி ஏதும் கூறவில்லை. நிரல்நிறை அணிகளுக்கு எடுத்துக்காட்டுக்களைக் காட்டும் குணசாகரர்,

    “இனி முறை நிரல் நிறை, எதிர் நிரல் நிறை, மயக்க நிரல்நிறை, மிகையெண் நிரல்நிறை, குறையெண் நிரல் நிறை என்று கொள்வாரும் உளர்” 9

    என்றும் கூறுகிறார். இங்கே இவர் காட்டிய இத்தனை நிரல் நிறைகளுக்கும் பொதுவாக இரண்டு பாடல்களை மட்டும் காட்டியதோடு பொருள்கோளைப் பற்றிய குணசாகர் தனது விளக்கத்தை முடித்துக் கொள்கிறார்.

    அணியிலக்கணம் ஆராயும் வடமொழிச் சார்பு நூலான தண்டியலங்காரத்தில் நிரல்நிறை என்பது செய்யுளுக்கான பொருளணியாகவே கொள்ளப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது.

    “நிரல்நிறுத்து இயற்றுதல் நிரல் நிறை யணியே” 10

    என்னும் அணியிலக்கண நூற்பாவிற்கு உரையெழுதிய தேசிகர்,

    “சொல்லையும் பொருளையும் நேரே நிறுத்தி நேரே பொருள் கொள்வது நிரல் நிறையணி என்னும் அலங்காரமாம். நிரல் நிறுத்துதல் என்னாது ‘இயற்றுதல்’ என்றமையின் மொழிமாற்றிப் பொருள் கொள்வதூஉம் கொள்க” 11

    என்று நூற்பாவிற்கு உரையெழுதி அவ்விரண்டற்கும் பின்வரும் நேரிசை வெண்பாக்களை எடுத்துக் காட்டியிருக்கிறார்.

    “காரிகை மென்மொழியால் நோக்கால் கதிர்முலையால் வார்புருவத்தால் இடையால் வாய்த்தளிரால் – நேர் தொலைந்த
    கொல்லி வடிநெடுவேல் கோங்கரும்பு விற்கரும்பு
    வல்லி கவிர்மென் மலர்” 12

    என்னும் வெண்பாவில் மென்மொழி, நோக்கு, கதிர்முலை, புருவம், இடை, வாய் எனப் பொருட்களை முன்னர் நிறுத்தி, அவற்றுக்கு நிரலாகக் கொல்லிப்பண், நெடுவேல், கோங்கரும்பு, கரும்புவில், கொடி, மலர் என உவமங்களைப் பின்னர் நிறுத்தி, நேர் நிரல் நிறை என விளக்கம் தருகிறார்.13 அதாவது பொருளின் நிரலுக்கு ஏற்ப (வரிசைக்கு ஏற்ப) உவமங்களின் நிரலும் அமைவதால் இது நேர் நிரல் நிறை அணி என்று பெயராம். இனி,

    “ஆடவர்கள் எவ்வாறு அகன்றொழிவார்? வெஃகாவும்
    பாடகமும் ஊரகமும்  பஞ்சரமா – நீடியமால்
    நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ
    மன்றுஆர் மதிற்கச்சி மாண்பு?”14

    என்னும் (சங்கர நமசிவாயர் காட்டிய அதே) வெண்பாவில் வெஃகா, பாடகம், ஊரகம் என்னும் காஞ்சித் திருப்பதிகளில் வீற்றிருக்கும் பெருமாளின்  கோலங்கள் நின்றான், இருந்தான், கிடந்தான் எனக் கூறப்பட்டுள்ளன. இது முந்தைய திருப்பதிகளில் எழுந்தருளியிருக்கும் கோலங்களுக்கு முரணானது. இவை வெஃகாவில் கிடந்தான், பாடகத்தில் இருந்தான், ஊரகத்தில் நின்றான் என இருந்திருக்க வேண்டும். இவ்வாறு சொற்களை மாற்றி நிரலாக வைத்துப் பொருள் காண்பதற்கு ‘மொழிமாற்றிப் பொருள் கொள்வது’ என உரையாசிரியர் தேசிகர் எழுதுகிறார்.

    தண்டியலங்கார உரை மயக்கம்

    தண்டியலங்காரம் அணியிலக்கணம் கூறும் நூல் என்பது தெரியும். தலைப்பிலும் பொழிப்புரையிலும் அணி, அலங்காரம் என்னும் சொற்கள் பயின்று வந்துள்ளன. சொற்களை மாற்றி உரைகாண்கையில், ‘மொழிமாற்றிப்பொருள் கொள்வதூஉம் கொள்க’ 15 என்னும் குறிப்போடு அமைந்துவிடுகிறதேயன்றி அதற்கொரு அணிப்பெயர் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இதனால் தண்டியலங்காரத்தைப் பொருத்தவரையில் ‘நிரல்நிறை’ என்பது ஓர் அணிவகை எனவும் அது நிரலாகவும் மாறுபட்டும் அமையும் என்பதுமாகிய இரண்டு கருத்துக்கள் பெறப்படுகின்றன. மயக்க நிரல்நிறை அணி பற்றிய அல்லது பொருள்கோள் பற்றிய எந்தக் கருத்தினையும் தண்டியலங்காரத்தினின்றும் பெற இயலவில்லை.

    நிரல்நிறை அணி பற்றிய சில வரையறைகள்

    தொல்காப்பியம், நன்னூல், காரிகை, தண்டியலங்காரம் ஆகிய நூல்களிலிருந்து கிட்டிய மேற்கண்ட தரவுகளால் பொருள்கோள் அல்லது அணி பற்றிய பின்வரும் கருத்துக்கள் வரையறுக்கப்படுகின்றன.

    • தொல்காப்பியம் நான்குவகைப் பொருள்கோளை மட்டும் ஆராய்கிறது. அணியிலக்கண ஆராய்ச்சி அங்கே இல்லை.
    • நன்னூல் ஒன்பது வகையாகப் பொருள்கோளை ஆராய்ந்திருக்கிறது.
    • காரிகையாசிரியர் ‘பொருள்கோள்’ என ஒரு சொல்லை மட்டும் குறித்து அணி பற்றி ஏதும் கூறாத நிலையில் உரையாசிரியர் குணசாகரர் ‘பொருள்கோள்’ என்பதற்கான விளக்கத்தை எட்டு வகையில் ஆராய்ந்திருக்கிறார்.
    • தண்டியலங்காரத்தில் பொருள்கோளைப் பற்றி ஏதுமில்லை. உரையாசிரியர் நிரல் நிறையணியை இரண்டாகப் பகுத்தாராய்ந்திருப்பதோடு அது நிறைவடைகிறது.
    • மயக்க நிரல்நிறை என்பது பற்றிய குறிப்போ விளக்கமோ மேற்கண்ட எந்த நூல்களிலும் எந்தப் பகுதியிலும் ஆராயப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.

    இவற்றிலிருந்து ‘நிரல் நிறை’ என்பது பெரும்பாலும் பொருள்கோள்களில் ஒன்று என்பதும் அதனை அணியாகவும் அணியிலக்கணமுடையார் வரித்துக் கொள்கிறார்கள் என்பதும் மயக்க நிரல்நிறை பற்றிய எந்தக் குறிப்பையோ விளக்கத்தையோ இந்த நூல்களில் இருந்து பெறவியலவில்லை என்பதும் பெறப்படுகின்றன.

    நிரல் நிறை அணி – திருவள்ளுவரும் அழகரும்

    பழந்தமிழ் இலக்கணம் வல்லார்க்கு அணியிலக்கணம் உடன்பாடன்று என்பதும் தொல்காப்பியம் அணியிலக்கணம் பற்றி ஏதும் கூறவில்லை என்பதும் உவமத்தையும் அது பொருட்பகுதியாகவே கருதியிருக்கிறது என்பதும் உரையாசிரியர்களில் சேனாவரையரே அவ்விலக்கணச் சுவையுடையார் என்பதும்  ஆய்வறிஞர்களால் கண்டு வெளிப்படுத்தப்பட்ட ஆய்வு முடிவுகளாகும்.  திருக்குறளுக்கும் இக்கொள்கை பொருந்தும். அணியிலக்கணப் பயன்பாடு பல்கிப் பெருகிய பிற்காலத்தைச் சார்ந்த உரையாசிரியர்கள் பழந்தமிழ் நூல்களை அணியழகோடு நோக்கி உரையெழுதுவதை ஓர் உரைநெறியாகக் கொண்டதன் காரணமாகப் பரிமேலழகரின் உரைகளில் அணியிலக்கணக் குறிப்புக்கள் விரவியுள்ளன. அந்த வகையில்,

    “அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
    பண்பும் பயனும் அது” 16

    என்னும் குறட்பாவிற்கு,

    “ஒருவன் இல்வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்துண்டல் ஆகிய அறத்தினையும்  உடைத்தாயின் அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும்…….நிரல் நிறை. இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகாவழி இல்லறம் கடைபோகாமையின் அன்புடைமை பண்பாயிற்று. அறனுடைமை பயனாயிற்று.” 17

    என விளக்கம் தருகிறார். இந்த விளக்கத்தில் அன்பும் அறனுமாகிய பண்புகள் எதனுடைய உடைமையெனின் அது இல்லறத்தின் உடைமை என்பது பரிமேலழகரின் நுண்ணியம். இதனை ‘இல்லறம் கடைபோகாமையின்’ என்னும் சொல்லால் குறித்தமை நோக்குக. இந்த விளக்கத்தில் பரிமேலழகர் ‘நிரல் நிறை’ எனக் குறிப்பதோடு அமைந்துவிடுகிறாரேயன்றி ‘அணி’ என்னும் சொல்லைத் தவிர்த்துவிடுகிறார். இந்த நெறி பல குறட்பாக்களின் இவர் உரைகளில் பரவலாகக் காணப்படுகின்ற ஒன்றாகும். “இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை” 18 “இனமென்னும் ஏமப்புணை’ என்ற ஏகதேச உருவகத்தால்” 19 என்பன காண்க. இதனால் அவர் ‘அணி’ என்னும் சொல் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்துவிடுகிறார் என்பது பொருளன்று. வேறு சில இடங்களில் முழுமையாக ‘அலங்காரம்’20 என்றே கூறுவதையும் காண முடிகிறது.

    பரிமேலழகர் காட்டும் மயக்க நிரல்நிறை

    ‘குறட்பாவின் அமைப்புச் சிக்கல்’ என இக்கட்டுரையில்  தொடக்கப்பகுதியில் முன்னெடுத்த கருத்துக்களின் மேல் கற்பார் கவனம் ஈர்க்கப்படுகிறது.

    “விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
    கற்றாரோடு ஏனை யவர்” 21

    என்பது குறட்பா. இந்தக் குறட்பா,

    “விலங்கொடு மக்கள் அனையர்
    கல்லாதவரோடு கற்றவர்”

    என்னுமாறு அமைந்திருந்தால் சிக்கல் எழுந்திருக்காது. முதலடியின் பொருண்மைக்கும் அடுத்த அடியின் பொருண்மைக்கும் முரண் நிலவுவதும் முன்பே சுட்டப்பட்டது.

    “விலங்கொடு மக்கள் அனையர்” என்னும் தொடருக்கு “விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையவர்”  (அத்துணை தீமையுடையவர்) “இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்” என்னும் தொடருக்கு விளங்கிய நூலைக்கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்”

    என்னுமாறு அவருடைய சீர் பிரிப்பும் பொழிப்புரையும் அமைந்திருக்கிறது. இந்தப் பொழிப்புரையில்தான் அவர் ‘மயக்க நிரல்நிறை’ என்பது பற்றிச் சிந்தித்திருக்கிறார். முறையாக நின்றால் நிரல். முறைமாறி நின்றால் மயக்க நிரல். பாட்டின் அமைப்பு எங்கே மயக்கம் நிலவுகிறது? கருத்தில்! அது பற்றி இரண்டாது பத்தியில் ஆராயப்பட்டுள்ளது. எனவே அந்த மயக்கத்தை ஒரு புதிய கோணத்தில் கண்டு நீக்குகிறார் பரிமேலழகர். எது அந்தப் புதிய கோணம் என்றால், “தீயதை நோக்க நல்லதன் நன்மை எவ்வளவு உயர்ந்ததோ நல்லதை நோக்கத் தீயதன் தீமை அத்தனை தாழ்ந்தது! இந்த உயர்வும் தாழ்வும் ‘அத்தனை’ என்னும் அளவு சார்ந்தது. இப்போது பரிமேலழகர் உரையை நோக்கினால் ‘மயக்கநிரல்நிறை’ என்பதை எவ்வளவு நுட்பமாக விளக்கியிருக்கிறார் என்பது புரியக் கூடும்.

    “விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையவர்”  (அத்துணை தீமையுடையவர்) “இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்”22

    எனவே மயக்கம் பொருள்களின் ஒப்பீட்டில் இல்லை. நன்மை, தீமை என்னும் அளவில் இருக்கிறது. முதல் ஒப்பீடு நன்மை. பின்னதில் அந்த ஒப்பீட்டு அளவு தீமை. இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால்,

    “விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு நல்லவர்களோ அவ்வளவு நல்லவர்கள் படித்தவர்களை நோக்கப் படிக்காதவர்கள்! என்னும் கருத்தியலை (குறள் நிரலில் இப்படித்தான் ஐயம் எழும்) பரிமேலழகர் மடைமாற்றம் செய்கிறார் “இல்லை இல்லை! அவ்வளவு நல்லவர்கள் இல்லை அவ்வளவு தீயவர்கள்! என்று. இப்போது புரிகிறதா?

    எனவே மயக்க நிரல் நிறை என்றால் பொருள் மயக்கத்திற்குக் காரணமான நிரல்நிறை எனக் கருத முடியும்.

    நுண்ணியத்தின் மறுவடிவம் பரிமேலழகர்

    இந்தக் குறட்பாவிற்குத் தாம் எழுதிய பொழிப்புரைக்குச் சிறப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். நிதானம், பொறுப்பு, கூரிய நோக்கு, இலக்கண இலக்கியப் புலமை அத்தனையும் அந்த விளக்கத்தில் பொதிந்திருப்பதைக் காணலாம். அவர் விளக்கவுரை இப்படி அமைந்திருக்கிறது.

    “இலங்கு நூல் சாதிப்பெயர். விளங்குதல் – மேம்படுதல். விலங்கின் மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார் கண்ணே யாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினர் அல்லர் என்பதாம். மயக்க நிரல் நிரை. இதனால் அவர் மக்கட் பிறப்பால் பயன் எய்தாமை கூறப்பட்டது” 23

    விளக்கவுரையில் ஒளிந்திருக்கும் பரிமேலழகரின் உரையாளுமை

    • குறட்பாவில் ‘மக்கள்’ என்பது பன்மையாக, ‘விலங்கு’ என்னும் ஒருமைப் பயன்பாடு ஏலாதாதலின் அதற்கேற்ப ‘விலங்கு’ என்பதைச் சாதியொருமை என்கிறார். ‘விலங்குகளோடு மக்கள்’ என இருக்க வேண்டுமாம்.
    • ‘கற்றார்’ என்பது பன்மையாயிருக்க ‘நூல்’ என்னும் ஒருமைப் பயன்பாடு ஏலாதாதலின் அதற்கேற்ப ‘நூல்’ என்பதைச் சாதியொருமை என்கிறார். ‘நூற்களைக் கற்றார்’ என இருக்க வேண்டுமாம்.
    • மக்களாகிய பிறப்பே அதற்குரிய சிறப்பாகிவிடாது. மக்களாகிய சுட்டு நிகழ்வதற்குரிய காரணத்தைக் கொண்டால் மட்டுமே அவர் மக்கள் எனக் கருதப்படுவர். “மக்களாகிய சுட்டு யாதன் கண் நிகழும் அது மக்கட்சுட்டு” 24 எனச் சேனாவரையர் எழுதும் உரைப் பகுதியைக் கவனத்திற் கொண்டால் ‘மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார் கண்ணேயாதலின்” என்னும் பரிமேலழகர் உரையின் சிறப்பு அறியலாம்.
    • கற்றல் நிகழ்ந்தாலேயொழிய மானுடத்தால் பயனில்லை என்பார் (கற்றலின் பேரெல்லை பிற உயிர்களின் மேல் அன்பாதலின்) “இதனால் அவர் மக்கட் பிறப்பால் பயன் எய்தாமை கூறப்பட்டது” என்றார்.
    • நூல்களுக்கு இருக்க வேண்டிய அழகுகள் பத்து. அவை “சுருங்கச் சொல்லல் விளங்கவைத்தல்” 25 என்னும் தொடக்கத்தன. அத்தகைய அழகுடைய நூற்களையே பயில வேண்டும் என்பார் ‘விளங்குதல்’ என்னும் சொல்லுக்கு மேம்படுதல் என உரைகாண்கிறார். ‘இலங்குநூல்’ என்பதற்கு ‘விளங்கிய நூல்’ எனச் சொற்பொருள் (பதசாரம்) எழுதி ‘விளங்குதல்’ என்பதற்கு ‘மேம்படுதல்’ என உரைகாணும் நுண்ணியம் காண்க. மேம்பாடு நூலுக்கென்று உணர்க.

    நிறைவுரை

    ஏற்ற தரவுகளைக் கொண்டு இதுகாறும் செய்யப்பட்ட ஆய்விலிருந்து ‘நிரல்நிறை’ பற்றிய இலக்கணம் ஒரு தெளிவற்ற நிலையிலேயே இருந்து வருகிறது என்பதும் அது பெரும்பாலும் பொருள்கோள் வகையில் ஒன்றாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது என்பதும் அப்பொருள்கோளும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு ஆசிரியன்மார்களால் ஒவ்வொரு வகையான எண்ணிக்கையில் ஆராயப்பட்டு வந்துள்ளது என்பதும் நிரல் நிறை என்பது பெயர் நிரல்நிறை, வினை நிரல்நிறை என்னும் இரண்டான பகுப்பிற்கும் ‘நேர்நிரல்நிறை, எதிர் நிரல்நிறை’ என்னும் வரையறைக்கும் ஆளாகியிருக்கிறது என்பதும் மயக்க நிரல்நிறை பற்றிய எந்தக் குறிப்பும் எந்த இலக்கண நூலிலும் தெளிவாக இல்லாத சூழலில் அது பற்றிய நுண்ணிய சிந்தனை பரிமேலழகருக்கு அமைந்திருந்தது என்பதும் அந்த நுண்ணியத்தாலேயே ஆய்வுக்குரிய ‘விலங்கொடு மக்கள் அனையர்’ என்னும் குறட்பாவின் பொருள் துலக்கம் பெறுகிறது என்பதும்” ஓரளவு புலனாகலாம். பரிமேலழகர் உரையை மறுக்கின்ற வல்லாளர் பலர் உளர். ஆய்வுக்குரிய இந்தக் குறட்பாவின் நுண்ணியத்தை உணர்வார் பரிமேலழகரின் உரைப்பேராற்றலை உணரலாம்.

    (தொடரும்)

    சான்றெண் விளக்கம்

    1. திருவள்ளுவர்                           திருக்குறள்                                                      கு.எண். 410
    2. பரிமேலழகர்                            மேலது உரை
    3. மேலது
    4. தொல்காப்பியர்                     தொல்காப்பியம் எச்சவியல்            நூ.எண். 887
    5. பவணந்தியார்                         நன்னூல்                                                               நூ.எண். 414
    6. சங்கர நமசிவாயர்               மேலது உரை
    7. மேலது
    8. குணசாகரர்                                 யாப்பருங்கலக்காரிகை உரை      கா.எண். 58
    9. மேலது
    10. தண்டி                                                 தண்டியலங்காரம்                                       நூ.எண். 67
    11. சுப்பிரமணிய தேசிகர்      மேலது உரை
    12. மேலது
    13. மேலது
    14. மேலது
    15. மேலது
    16. திருவள்ளுவர்                                திருக்குறள்                                                             கு.எண். 45
    17. பரிமேலழகர்                                 மேலது உரை
    18. மேலது                                                                                                                                                கு.எண். 1
    19. மேலது                                                                                                                                                கு.எண். 306
    20. மேலது                                                                                                                                                கு.எண். 475
    21. திருவள்ளுவர்                               திருக்குறள்                                                                கு.எண். 410
    22. பரிமேலழகர்                                 மேலது உரை
    23. மேலது
    24. சேனாவரையர்                           தொல்.சொல். உரை                                          நூ.எண். 1
    25. பவணந்தியார்                             நன்னூல்                                                                        நூ.எண். 13

    துணைநூற் பட்டியல்

    1. அமிதசாகரர் யாப்பருங்கலக்காரிகை
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ
    சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940

    2. குணசாகரர் (உ.ஆ.) யாப்பருங்கலக்காரிகை
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940

    3. சுப்பிரமணிய தேசிகர் தண்டியலங்காரம் உரை
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1963

    4. தண்டி தண்டியலங்காரம்
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1963

    5. திருவள்ளுவர் திருக்குறள் – பரிமேலழகர் உரை
    வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன்
    உமா பதிப்பகம், சென்னை – 600 001
    முதற்பதிப்பு – 2009

    6. தொல்காப்பியர் தொல்காப்பியம்
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940

    7. பரிமேலழகர் (உ.ஆ.) திருக்குறள் உரை
    திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
    சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940

    8. பவணந்தியார் நன்னூல்
    உலகத் தமிழாராயச்சி நிறுவனம்
    தரமணி, சென்னை
    முதற்பதிப்பு – 1999

    Share