பரிமேலழகர் உரைத் திறன் – 1
புலவர் முனைவர் கோ. சுந்தராம்பாள்
உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி,
தஞ்சை மாவட்டம் – 613006.
மின்னஞ்சல் முகவரி – egowrisss@gmail.com
விலங்குகளும் வித்தகரும் ஒன்றா?
முன்னுரை
காலத்தால் முற்பட்டிருப்பது எப்படி பெருமையோ அப்படியே காலத்தால் பிற்பட்டிருப்பதுமாகும். தடந்தெரியாத் தொல்காப்பியத்திற்கு இளம்பூரணர் தடங்காட்டினார் என்றால் பின்னாலே வந்த நச்சினார்க்கினியர் அத்தடத்தைச் செப்பனிடும் வாய்ப்பினைப் பெற்றார். பெறவே அப்படிச் செப்பனிடுவதற்குரிய பன்னூல் அறிவு பெறும் வாய்ப்பும் அவருக்குக் கிட்டியது. அதனால் தொல்காப்பியம், பத்துப்பாட்டு முதலிய நூல்கள்மேல் கூடுதல் ஒளி பாய்ந்தது. திருக்குறள் உரையாசிரியர்கள் பதின்மரில் இறுதியானவர் பரிமேலழகர். அதனால் தன்னுடைய முன்னோடிகள் எழுதிய ஒன்பது உரைகளையும் நோக்கியறியும் அரிய வாய்ப்பு அவருக்குக் கிட்டியது. அவருக்குக் கிட்டிய அந்த வாய்ப்பு ஏனையோருக்குக் கிட்டவில்லை. அது இயற்கை நியதி. கிட்டிய அந்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்தி ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இன்றைக்கும் நிமிர்ந்து நிற்கும் குன்றா(க) உரையெழுதினார் பரிமேலழகர். அன்னாருடைய உரையருமையைத் துளித் துளியாகப் பதிவிடுவது நலம் பயக்கக்கூடும் என்ற நம்பிக்கையில் இந்தத் தொடர் வடிவமைக்கப்படுகிறது.
விளக்கத்திற்குரிய குறட்பாவும் அதிகாரப் பொருண்மையும்
திருவள்ளுவர் மெய்யுணர்தலை அறத்துப்பால் துறவறவியலிலும் அறிவுடைமையைப் பொருட்பால் அரசியலிலும் வைத்த காரணம் பற்றிய ஆய்வு பின்னாளில் தொடரும். ‘கல்லாமை’ என்னும் அதிகாரத்தில் இறுதிக் குறட்பாவாக அமைந்த,
“விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
கற்றாரோடு ஏனை யவர்” 1
என்னும் குறட்பாவின் உரை அருமையே இக்கட்டுரையில் விளக்கப்படுகிறது. பரிமேலழகரின் குறளுரையருமையைப் புரிந்து கொள்வதற்கு முன்னால் அதிகாரம் ‘கல்லாமை’ என்னும் பெயர் தாங்கியது என்பதை நோக்க வேண்டும். ‘கல்லாமை’ என்பது ‘கற்றலைச் செய்யாமை’ என்னும் தொழிலைக் குறித்தது. ஆனால் அவ்வதிகாரத்தில் அமைந்துள்ள பத்துக் குறட்பாக்களும் கல்லாமையாகிய தொழிலைப் பற்றிப் பேசாது கல்லாமையினால் வரும் இழிவை, அதாவது கல்வியில்லாதவன் சமுதாயத்தில் படும் மானக்கேடுகளையும் துன்பங்களையும் குறிப்பனவாகவே அமைந்துள்ளன. சுருங்கச் சொன்னால் அதிகாரத் தலைப்பு தொழிலைக் குறிப்பதாக அமைய அதிகாரப் பொருண்மையோ அதனால்வரும் இழிவுகளைத் தொகுத்துரைப்பதாக அமைந்திருக்கிறது. அதாவது கல்லாமை கற்றலைச் செய்யாமையான் வரும் இழிவு என ஆகுபெயராய் நின்றது. குறட்பாக்களை முற்றோதிய பரிமேலழகர் இந்த நுட்பத்தைப் புரிந்து கொண்டு,
“அஃதாவது (கல்லாமை) கற்றலைச் செய்யாமை என்றது, அதனின் ஆய இழிபினை” 2
என்று சொல் விளக்கம் தருகிறார். அதிகாரத்தின் சொற்பொருள் விளக்கத்திலேயே பரிமேலழகரின் ‘உரைத்தாண்டவம்’ தொடங்கிவிடுவதைக் காணலாம்.
பரிமேலழகரின் உரை விளக்கம்
இந்தக் குறட்பாவைப் பரிமேலழகர் வழக்கம் போல் சீர்பிரித்து உரை கூறியிருக்கிறார். “விலங்கொடு மக்கள் அனையர்” என்னும் தொடருக்கு “விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையவர்” (அத்துணை தீமையுடையவர்) “இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்” என்னும் தொடருக்கு விளங்கிய நூலைக்கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்”3 என்னுமாறு அவருடைய சீர் பிரிப்பும் பொழிப்புரையும் அமைந்திருக்கிறது. பரிமேலழகர் தம் உரைப்பகுதியில் யாண்டும் பதவுரை கூறும் வழக்கமிலர் என்பது ஈண்டுக் குறிக்கத்தக்கது.
கட்டுரையாளர் விளக்கம்
மேற்கண்ட பத்தியில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உரைப்பகுதியில் அடைப்புக்கள் கொடுக்கப்பட்டிருப்பது பரிமேலழகர் தாம் கொண்ட கருத்திற்கேற்ப வருவித்துக் கொண்ட தொடர். இதற்கான தொடர் குறட்பாவில் இல்லை. பாட்டில் உவமங்கள் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளன. அதற்கான கருத்தியலைத்தான் பரிமேலழகர் இப்படிப் பதிவிட்டிருக்கிறார்.
குறட்பாவின் அமைப்புச் சிக்கல்
குறட்பாவில் விலங்கொடு மக்களை ஒப்பிட்டிருக்கும் முதற்பகுதிக்கு இணையாகக் ‘கற்றாரோடு ஏனையவர்’ என்னும் மறுபகுதி தரப்பட்டுள்ளது. குறட்பாவில் உள்ள இவ்வண்ணமே நிரல்படுத்தினால் ‘விலங்கொடு’ என்பதற்கு ‘கற்றாரோடு’ என்பதும் ‘மக்கள்’ என்பதற்கு ‘ஏனையவர்’ (கல்லாதவர்) என்பதும் பொருத்தமாக்க வேண்டியதிருக்கும். அப்படி அமைத்தால் பாட்டின் பொருள் இப்படி அமைந்துவிடும்.
“விலங்கொடு மக்கள் இணையாவார். (அதுபோலக்) கற்றவர் கல்லாதவரோடு இணையாவார்” என்று அமைந்து ‘கற்றவர் விலங்குகள்’ என்றும் ‘கல்லாதவர் மக்கள்’ என்றும் பொருள்படும்”
இப்படி அமைந்தால் அதிகாரப் பொருண்மையாகிய கல்லாமையது இழிவு சுட்டாததோடு முரண்பட்ட பொருளையும் தந்துவிடும் என்பதை அறியலாம்.
நிரல் நிறை – பொருள்கோளா? செய்யுளணியா?
நிரல்நிறை, சுண்ணம், அடிமறி, மொழிமாற்று என்னும் நான்குவகைப் பொருள்கோளை மட்டும் தொல்காப்பியம்,
“அவற்றுள் நிரல்நிறை தானே
வினையினும் பெயரினும் நினையத்தோன்றி
சொல்வேறு நிலைஇப் பொருள் வேறு நிலையல்” 4
என்னும் நூற்பாவில் ஆராய்ந்திருக்கிறது. செய்யுள் தொடர்பான இந்த ஆராய்ச்சி சொல்லதிகார எச்சவியலில் நிகழ்ந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இனி, இதற்கு அடுத்த நிலையில் ஆற்றுநீர், மொழிமாற்று, நிரல்நிறை, விற்பூட்டு, தாப்பிசை, அளைமறிபாப்பு, கொண்டு கூட்டு, அடிமறி மாற்று எனப் பொருள்கோளை எட்டாக ஆராய்ந்திருக்கும் நன்னூலார் ‘நிரல்’ என்பதைப்,
“பெயரும் வினையுமாம் சொல்லையும் பொருளையும்
வேறு நிரல்நிறீஇ முறையினும் எதிரினும்
நேரும் பொருள்கோள் நிரனிறை நெறியே” 5
என்னும் நூற்பாவில் ஆராய்ந்திருக்கிறது. இந்த நூற்பாவில் தான் ‘எதிர்நிரல் நிறை’ என்னும் தொடர் பயின்று வந்துள்ளது. இந்த எதிர்நிரல் நிறையணியை (கட்டுரைப் பொருள் விளக்கத்திற்கு மட்டுமாதலின் நேர்நிரல்நிறை விளக்கம் கட்டுரையாளரால் தவிர்க்கப்படுகிறது) விளக்க வந்த சங்கர நமசிவாயர்,
“ஆடவர்கள் எவ்வாறு அகன்றொழிவார்? வெஃகாவும்
பாடகமும் ஊரகமும் பஞ்சரமா – நீடியமால்
நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ
மன்றுஆர் மதிற்கச்சி மாண்பு? 6
என்னும் வெண்பாவை எடுத்துக் காட்டியிருக்கிறார். இந்த வெண்பாவில் வெஃகா, பாடகம், ஊரகம் என்னும் மூன்று பெயர்களும் நின்றான் இருந்தான் கிடந்தான் என முறைமாறி நிற்க, இவற்றை பெயர்ப்பயனிலைகளும் வினைப் பயனிலைகளுமாய் நின்ற எதிர் நிரல் நிறை என எழுதுகிறார். 7 வெஃகாவில் கிடந்தான், பாடகத்தில் இருந்தான், ஊரகத்தில் நின்றான் என்னும் பொருத்தத்தை இதே வெண்பாவை எடுத்துக்காட்டி உரையெழுதும் தண்டியலங்கார உரையாசிரியர் சுப்ரமணிய தேசிகர் ‘நிரலே நிறுத்தி மாற்றிப் பொருள் கொள்வது’ என எழுதியமைகிறார். தண்டியலங்காரத்தில் ‘எதிர் நிரல்நிறை’ அல்லது ‘மயக்க நிரல்நிறை’ என்னும் சொல்லாட்சிகள் பயிலப்பட்டிருப்பதாக அறியக் கூடவில்லை. இன்றியமையாக் கருத்து என்னவெனின் நன்னூலில் பொருள்கோள். தண்டியலங்காரத்தில் பொருளணி.
யாப்பருங்கலக் காரிகை நூலாசிரியர், ‘பொருள்கோள்’ என ஒருசொல் உரைத்து ஒழிய, உரையாசிரியர் குணசாகரரோ “நிரல்நிறை மொழி மாற்றம், சுண்ணமொழி மாற்றம், அடிமொழி மாற்றம், பூட்டுவிற் பொருள்கோள், புனல்யாற்றுப் பொருள்கோள், அளைமறி பாப்புப் பொருள்கோள், தாப்பிசைப் பொருள்கோள், கொண்டு கூட்டுப் பொருள்கோள் என எட்டு வகையாக ஆராயப்படும் என உரையெழுதி,
“நிரனிறை இரண்டு வகைப்படும் பெயர் நிரல் நிறை, வினை நிரல்நிறையும் என” 8
அதன் வகைகளைப் பதிவு செய்திருக்கிறார். காரிகையாசிரியர் தொல்காப்பியம், நன்னூல் ஆகிய நூல்களைப்போல இதுபற்றி ஏதும் கூறவில்லை. நிரல்நிறை அணிகளுக்கு எடுத்துக்காட்டுக்களைக் காட்டும் குணசாகரர்,
“இனி முறை நிரல் நிறை, எதிர் நிரல் நிறை, மயக்க நிரல்நிறை, மிகையெண் நிரல்நிறை, குறையெண் நிரல் நிறை என்று கொள்வாரும் உளர்” 9
என்றும் கூறுகிறார். இங்கே இவர் காட்டிய இத்தனை நிரல் நிறைகளுக்கும் பொதுவாக இரண்டு பாடல்களை மட்டும் காட்டியதோடு பொருள்கோளைப் பற்றிய குணசாகர் தனது விளக்கத்தை முடித்துக் கொள்கிறார்.
அணியிலக்கணம் ஆராயும் வடமொழிச் சார்பு நூலான தண்டியலங்காரத்தில் நிரல்நிறை என்பது செய்யுளுக்கான பொருளணியாகவே கொள்ளப்பட்டுள்ளது என்பது தெரியவருகிறது.
“நிரல்நிறுத்து இயற்றுதல் நிரல் நிறை யணியே” 10
என்னும் அணியிலக்கண நூற்பாவிற்கு உரையெழுதிய தேசிகர்,
“சொல்லையும் பொருளையும் நேரே நிறுத்தி நேரே பொருள் கொள்வது நிரல் நிறையணி என்னும் அலங்காரமாம். நிரல் நிறுத்துதல் என்னாது ‘இயற்றுதல்’ என்றமையின் மொழிமாற்றிப் பொருள் கொள்வதூஉம் கொள்க” 11
என்று நூற்பாவிற்கு உரையெழுதி அவ்விரண்டற்கும் பின்வரும் நேரிசை வெண்பாக்களை எடுத்துக் காட்டியிருக்கிறார்.
“காரிகை மென்மொழியால் நோக்கால் கதிர்முலையால் வார்புருவத்தால் இடையால் வாய்த்தளிரால் – நேர் தொலைந்த
கொல்லி வடிநெடுவேல் கோங்கரும்பு விற்கரும்பு
வல்லி கவிர்மென் மலர்” 12
என்னும் வெண்பாவில் மென்மொழி, நோக்கு, கதிர்முலை, புருவம், இடை, வாய் எனப் பொருட்களை முன்னர் நிறுத்தி, அவற்றுக்கு நிரலாகக் கொல்லிப்பண், நெடுவேல், கோங்கரும்பு, கரும்புவில், கொடி, மலர் என உவமங்களைப் பின்னர் நிறுத்தி, நேர் நிரல் நிறை என விளக்கம் தருகிறார்.13 அதாவது பொருளின் நிரலுக்கு ஏற்ப (வரிசைக்கு ஏற்ப) உவமங்களின் நிரலும் அமைவதால் இது நேர் நிரல் நிறை அணி என்று பெயராம். இனி,
“ஆடவர்கள் எவ்வாறு அகன்றொழிவார்? வெஃகாவும்
பாடகமும் ஊரகமும் பஞ்சரமா – நீடியமால்
நின்றான் இருந்தான் கிடந்தான் இதுவன்றோ
மன்றுஆர் மதிற்கச்சி மாண்பு?”14
என்னும் (சங்கர நமசிவாயர் காட்டிய அதே) வெண்பாவில் வெஃகா, பாடகம், ஊரகம் என்னும் காஞ்சித் திருப்பதிகளில் வீற்றிருக்கும் பெருமாளின் கோலங்கள் நின்றான், இருந்தான், கிடந்தான் எனக் கூறப்பட்டுள்ளன. இது முந்தைய திருப்பதிகளில் எழுந்தருளியிருக்கும் கோலங்களுக்கு முரணானது. இவை வெஃகாவில் கிடந்தான், பாடகத்தில் இருந்தான், ஊரகத்தில் நின்றான் என இருந்திருக்க வேண்டும். இவ்வாறு சொற்களை மாற்றி நிரலாக வைத்துப் பொருள் காண்பதற்கு ‘மொழிமாற்றிப் பொருள் கொள்வது’ என உரையாசிரியர் தேசிகர் எழுதுகிறார்.
தண்டியலங்கார உரை மயக்கம்
தண்டியலங்காரம் அணியிலக்கணம் கூறும் நூல் என்பது தெரியும். தலைப்பிலும் பொழிப்புரையிலும் அணி, அலங்காரம் என்னும் சொற்கள் பயின்று வந்துள்ளன. சொற்களை மாற்றி உரைகாண்கையில், ‘மொழிமாற்றிப்பொருள் கொள்வதூஉம் கொள்க’ 15 என்னும் குறிப்போடு அமைந்துவிடுகிறதேயன்றி அதற்கொரு அணிப்பெயர் வழங்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. இதனால் தண்டியலங்காரத்தைப் பொருத்தவரையில் ‘நிரல்நிறை’ என்பது ஓர் அணிவகை எனவும் அது நிரலாகவும் மாறுபட்டும் அமையும் என்பதுமாகிய இரண்டு கருத்துக்கள் பெறப்படுகின்றன. மயக்க நிரல்நிறை அணி பற்றிய அல்லது பொருள்கோள் பற்றிய எந்தக் கருத்தினையும் தண்டியலங்காரத்தினின்றும் பெற இயலவில்லை.
நிரல்நிறை அணி பற்றிய சில வரையறைகள்
தொல்காப்பியம், நன்னூல், காரிகை, தண்டியலங்காரம் ஆகிய நூல்களிலிருந்து கிட்டிய மேற்கண்ட தரவுகளால் பொருள்கோள் அல்லது அணி பற்றிய பின்வரும் கருத்துக்கள் வரையறுக்கப்படுகின்றன.
- தொல்காப்பியம் நான்குவகைப் பொருள்கோளை மட்டும் ஆராய்கிறது. அணியிலக்கண ஆராய்ச்சி அங்கே இல்லை.
- நன்னூல் ஒன்பது வகையாகப் பொருள்கோளை ஆராய்ந்திருக்கிறது.
- காரிகையாசிரியர் ‘பொருள்கோள்’ என ஒரு சொல்லை மட்டும் குறித்து அணி பற்றி ஏதும் கூறாத நிலையில் உரையாசிரியர் குணசாகரர் ‘பொருள்கோள்’ என்பதற்கான விளக்கத்தை எட்டு வகையில் ஆராய்ந்திருக்கிறார்.
- தண்டியலங்காரத்தில் பொருள்கோளைப் பற்றி ஏதுமில்லை. உரையாசிரியர் நிரல் நிறையணியை இரண்டாகப் பகுத்தாராய்ந்திருப்பதோடு அது நிறைவடைகிறது.
- மயக்க நிரல்நிறை என்பது பற்றிய குறிப்போ விளக்கமோ மேற்கண்ட எந்த நூல்களிலும் எந்தப் பகுதியிலும் ஆராயப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை.
இவற்றிலிருந்து ‘நிரல் நிறை’ என்பது பெரும்பாலும் பொருள்கோள்களில் ஒன்று என்பதும் அதனை அணியாகவும் அணியிலக்கணமுடையார் வரித்துக் கொள்கிறார்கள் என்பதும் மயக்க நிரல்நிறை பற்றிய எந்தக் குறிப்பையோ விளக்கத்தையோ இந்த நூல்களில் இருந்து பெறவியலவில்லை என்பதும் பெறப்படுகின்றன.
நிரல் நிறை அணி – திருவள்ளுவரும் அழகரும்
பழந்தமிழ் இலக்கணம் வல்லார்க்கு அணியிலக்கணம் உடன்பாடன்று என்பதும் தொல்காப்பியம் அணியிலக்கணம் பற்றி ஏதும் கூறவில்லை என்பதும் உவமத்தையும் அது பொருட்பகுதியாகவே கருதியிருக்கிறது என்பதும் உரையாசிரியர்களில் சேனாவரையரே அவ்விலக்கணச் சுவையுடையார் என்பதும் ஆய்வறிஞர்களால் கண்டு வெளிப்படுத்தப்பட்ட ஆய்வு முடிவுகளாகும். திருக்குறளுக்கும் இக்கொள்கை பொருந்தும். அணியிலக்கணப் பயன்பாடு பல்கிப் பெருகிய பிற்காலத்தைச் சார்ந்த உரையாசிரியர்கள் பழந்தமிழ் நூல்களை அணியழகோடு நோக்கி உரையெழுதுவதை ஓர் உரைநெறியாகக் கொண்டதன் காரணமாகப் பரிமேலழகரின் உரைகளில் அணியிலக்கணக் குறிப்புக்கள் விரவியுள்ளன. அந்த வகையில்,
“அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது” 16
என்னும் குறட்பாவிற்கு,
“ஒருவன் இல்வாழ்க்கை தன் துணைவிமேல் செய்யத்தகும் அன்பினையும், பிறர்க்குப் பகுத்துண்டல் ஆகிய அறத்தினையும் உடைத்தாயின் அவ்வுடைமை அதற்குப் பண்பும் பயனும் ஆகும்…….நிரல் நிறை. இல்லாட்கும் கணவற்கும் நெஞ்சு ஒன்றாகாவழி இல்லறம் கடைபோகாமையின் அன்புடைமை பண்பாயிற்று. அறனுடைமை பயனாயிற்று.” 17
என விளக்கம் தருகிறார். இந்த விளக்கத்தில் அன்பும் அறனுமாகிய பண்புகள் எதனுடைய உடைமையெனின் அது இல்லறத்தின் உடைமை என்பது பரிமேலழகரின் நுண்ணியம். இதனை ‘இல்லறம் கடைபோகாமையின்’ என்னும் சொல்லால் குறித்தமை நோக்குக. இந்த விளக்கத்தில் பரிமேலழகர் ‘நிரல் நிறை’ எனக் குறிப்பதோடு அமைந்துவிடுகிறாரேயன்றி ‘அணி’ என்னும் சொல்லைத் தவிர்த்துவிடுகிறார். இந்த நெறி பல குறட்பாக்களின் இவர் உரைகளில் பரவலாகக் காணப்படுகின்ற ஒன்றாகும். “இது தலைமை பற்றி வந்த எடுத்துக்காட்டுவமை” 18 “இனமென்னும் ஏமப்புணை’ என்ற ஏகதேச உருவகத்தால்” 19 என்பன காண்க. இதனால் அவர் ‘அணி’ என்னும் சொல் பயன்பாட்டை முற்றிலும் தவிர்த்துவிடுகிறார் என்பது பொருளன்று. வேறு சில இடங்களில் முழுமையாக ‘அலங்காரம்’20 என்றே கூறுவதையும் காண முடிகிறது.
பரிமேலழகர் காட்டும் மயக்க நிரல்நிறை
‘குறட்பாவின் அமைப்புச் சிக்கல்’ என இக்கட்டுரையில் தொடக்கப்பகுதியில் முன்னெடுத்த கருத்துக்களின் மேல் கற்பார் கவனம் ஈர்க்கப்படுகிறது.
“விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
கற்றாரோடு ஏனை யவர்” 21
என்பது குறட்பா. இந்தக் குறட்பா,
“விலங்கொடு மக்கள் அனையர்
கல்லாதவரோடு கற்றவர்”
என்னுமாறு அமைந்திருந்தால் சிக்கல் எழுந்திருக்காது. முதலடியின் பொருண்மைக்கும் அடுத்த அடியின் பொருண்மைக்கும் முரண் நிலவுவதும் முன்பே சுட்டப்பட்டது.
“விலங்கொடு மக்கள் அனையர்” என்னும் தொடருக்கு “விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையவர்” (அத்துணை தீமையுடையவர்) “இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்” என்னும் தொடருக்கு விளங்கிய நூலைக்கற்றாரோடு நோக்கக் கல்லாதவர்”
என்னுமாறு அவருடைய சீர் பிரிப்பும் பொழிப்புரையும் அமைந்திருக்கிறது. இந்தப் பொழிப்புரையில்தான் அவர் ‘மயக்க நிரல்நிறை’ என்பது பற்றிச் சிந்தித்திருக்கிறார். முறையாக நின்றால் நிரல். முறைமாறி நின்றால் மயக்க நிரல். பாட்டின் அமைப்பு எங்கே மயக்கம் நிலவுகிறது? கருத்தில்! அது பற்றி இரண்டாது பத்தியில் ஆராயப்பட்டுள்ளது. எனவே அந்த மயக்கத்தை ஒரு புதிய கோணத்தில் கண்டு நீக்குகிறார் பரிமேலழகர். எது அந்தப் புதிய கோணம் என்றால், “தீயதை நோக்க நல்லதன் நன்மை எவ்வளவு உயர்ந்ததோ நல்லதை நோக்கத் தீயதன் தீமை அத்தனை தாழ்ந்தது! இந்த உயர்வும் தாழ்வும் ‘அத்தனை’ என்னும் அளவு சார்ந்தது. இப்போது பரிமேலழகர் உரையை நோக்கினால் ‘மயக்கநிரல்நிறை’ என்பதை எவ்வளவு நுட்பமாக விளக்கியிருக்கிறார் என்பது புரியக் கூடும்.
“விலங்கொடு நோக்க மக்கள் எத்துணை நன்மையுடையவர்” (அத்துணை தீமையுடையவர்) “இலங்கு நூல் கற்றாரோடு ஏனையவர்”22
எனவே மயக்கம் பொருள்களின் ஒப்பீட்டில் இல்லை. நன்மை, தீமை என்னும் அளவில் இருக்கிறது. முதல் ஒப்பீடு நன்மை. பின்னதில் அந்த ஒப்பீட்டு அளவு தீமை. இன்னும் விளக்கமாகச் சொல்ல வேண்டுமானால்,
“விலங்கை நோக்க மக்கள் எவ்வளவு நல்லவர்களோ அவ்வளவு நல்லவர்கள் படித்தவர்களை நோக்கப் படிக்காதவர்கள்! என்னும் கருத்தியலை (குறள் நிரலில் இப்படித்தான் ஐயம் எழும்) பரிமேலழகர் மடைமாற்றம் செய்கிறார் “இல்லை இல்லை! அவ்வளவு நல்லவர்கள் இல்லை அவ்வளவு தீயவர்கள்! என்று. இப்போது புரிகிறதா?
எனவே மயக்க நிரல் நிறை என்றால் பொருள் மயக்கத்திற்குக் காரணமான நிரல்நிறை எனக் கருத முடியும்.
நுண்ணியத்தின் மறுவடிவம் பரிமேலழகர்
இந்தக் குறட்பாவிற்குத் தாம் எழுதிய பொழிப்புரைக்குச் சிறப்புரை எழுதுகிறார் பரிமேலழகர். நிதானம், பொறுப்பு, கூரிய நோக்கு, இலக்கண இலக்கியப் புலமை அத்தனையும் அந்த விளக்கத்தில் பொதிந்திருப்பதைக் காணலாம். அவர் விளக்கவுரை இப்படி அமைந்திருக்கிறது.
“இலங்கு நூல் சாதிப்பெயர். விளங்குதல் – மேம்படுதல். விலங்கின் மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார் கண்ணே யாகலின், கல்லாதாரும் அவரும் ஒத்த பிறப்பினர் அல்லர் என்பதாம். மயக்க நிரல் நிரை. இதனால் அவர் மக்கட் பிறப்பால் பயன் எய்தாமை கூறப்பட்டது” 23
விளக்கவுரையில் ஒளிந்திருக்கும் பரிமேலழகரின் உரையாளுமை
- குறட்பாவில் ‘மக்கள்’ என்பது பன்மையாக, ‘விலங்கு’ என்னும் ஒருமைப் பயன்பாடு ஏலாதாதலின் அதற்கேற்ப ‘விலங்கு’ என்பதைச் சாதியொருமை என்கிறார். ‘விலங்குகளோடு மக்கள்’ என இருக்க வேண்டுமாம்.
- ‘கற்றார்’ என்பது பன்மையாயிருக்க ‘நூல்’ என்னும் ஒருமைப் பயன்பாடு ஏலாதாதலின் அதற்கேற்ப ‘நூல்’ என்பதைச் சாதியொருமை என்கிறார். ‘நூற்களைக் கற்றார்’ என இருக்க வேண்டுமாம்.
- மக்களாகிய பிறப்பே அதற்குரிய சிறப்பாகிவிடாது. மக்களாகிய சுட்டு நிகழ்வதற்குரிய காரணத்தைக் கொண்டால் மட்டுமே அவர் மக்கள் எனக் கருதப்படுவர். “மக்களாகிய சுட்டு யாதன் கண் நிகழும் அது மக்கட்சுட்டு” 24 எனச் சேனாவரையர் எழுதும் உரைப் பகுதியைக் கவனத்திற் கொண்டால் ‘மக்கட்கு ஏற்றமாய உணர்வு மிகுதி காணப்படுவது கற்றார் கண்ணேயாதலின்” என்னும் பரிமேலழகர் உரையின் சிறப்பு அறியலாம்.
- கற்றல் நிகழ்ந்தாலேயொழிய மானுடத்தால் பயனில்லை என்பார் (கற்றலின் பேரெல்லை பிற உயிர்களின் மேல் அன்பாதலின்) “இதனால் அவர் மக்கட் பிறப்பால் பயன் எய்தாமை கூறப்பட்டது” என்றார்.
- நூல்களுக்கு இருக்க வேண்டிய அழகுகள் பத்து. அவை “சுருங்கச் சொல்லல் விளங்கவைத்தல்” 25 என்னும் தொடக்கத்தன. அத்தகைய அழகுடைய நூற்களையே பயில வேண்டும் என்பார் ‘விளங்குதல்’ என்னும் சொல்லுக்கு மேம்படுதல் என உரைகாண்கிறார். ‘இலங்குநூல்’ என்பதற்கு ‘விளங்கிய நூல்’ எனச் சொற்பொருள் (பதசாரம்) எழுதி ‘விளங்குதல்’ என்பதற்கு ‘மேம்படுதல்’ என உரைகாணும் நுண்ணியம் காண்க. மேம்பாடு நூலுக்கென்று உணர்க.
நிறைவுரை
ஏற்ற தரவுகளைக் கொண்டு இதுகாறும் செய்யப்பட்ட ஆய்விலிருந்து ‘நிரல்நிறை’ பற்றிய இலக்கணம் ஒரு தெளிவற்ற நிலையிலேயே இருந்து வருகிறது என்பதும் அது பெரும்பாலும் பொருள்கோள் வகையில் ஒன்றாகவே கருதப்பட்டு வந்திருக்கிறது என்பதும் அப்பொருள்கோளும் ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு ஆசிரியன்மார்களால் ஒவ்வொரு வகையான எண்ணிக்கையில் ஆராயப்பட்டு வந்துள்ளது என்பதும் நிரல் நிறை என்பது பெயர் நிரல்நிறை, வினை நிரல்நிறை என்னும் இரண்டான பகுப்பிற்கும் ‘நேர்நிரல்நிறை, எதிர் நிரல்நிறை’ என்னும் வரையறைக்கும் ஆளாகியிருக்கிறது என்பதும் மயக்க நிரல்நிறை பற்றிய எந்தக் குறிப்பும் எந்த இலக்கண நூலிலும் தெளிவாக இல்லாத சூழலில் அது பற்றிய நுண்ணிய சிந்தனை பரிமேலழகருக்கு அமைந்திருந்தது என்பதும் அந்த நுண்ணியத்தாலேயே ஆய்வுக்குரிய ‘விலங்கொடு மக்கள் அனையர்’ என்னும் குறட்பாவின் பொருள் துலக்கம் பெறுகிறது என்பதும்” ஓரளவு புலனாகலாம். பரிமேலழகர் உரையை மறுக்கின்ற வல்லாளர் பலர் உளர். ஆய்வுக்குரிய இந்தக் குறட்பாவின் நுண்ணியத்தை உணர்வார் பரிமேலழகரின் உரைப்பேராற்றலை உணரலாம்.
(தொடரும்)
சான்றெண் விளக்கம்
- திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 410
- பரிமேலழகர் மேலது உரை
- மேலது
- தொல்காப்பியர் தொல்காப்பியம் எச்சவியல் நூ.எண். 887
- பவணந்தியார் நன்னூல் நூ.எண். 414
- சங்கர நமசிவாயர் மேலது உரை
- மேலது
- குணசாகரர் யாப்பருங்கலக்காரிகை உரை கா.எண். 58
- மேலது
- தண்டி தண்டியலங்காரம் நூ.எண். 67
- சுப்பிரமணிய தேசிகர் மேலது உரை
- மேலது
- மேலது
- மேலது
- மேலது
- திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 45
- பரிமேலழகர் மேலது உரை
- மேலது கு.எண். 1
- மேலது கு.எண். 306
- மேலது கு.எண். 475
- திருவள்ளுவர் திருக்குறள் கு.எண். 410
- பரிமேலழகர் மேலது உரை
- மேலது
- சேனாவரையர் தொல்.சொல். உரை நூ.எண். 1
- பவணந்தியார் நன்னூல் நூ.எண். 13
துணைநூற் பட்டியல்
1. அமிதசாகரர் யாப்பருங்கலக்காரிகை
திருநெல்வேலி தென்னிந்திய சைவ
சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940
2. குணசாகரர் (உ.ஆ.) யாப்பருங்கலக்காரிகை
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940
3. சுப்பிரமணிய தேசிகர் தண்டியலங்காரம் உரை
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
சென்னை – 600001. முதற்பதிப்பு – 1963
4. தண்டி தண்டியலங்காரம்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
சென்னை – 600001. முதற்பதிப்பு – 1963
5. திருவள்ளுவர் திருக்குறள் – பரிமேலழகர் உரை
வை.மு.கோபால கிருஷ்ணமாச்சாரியார் அவர்கள் எழுதிய குறிப்புரையுடன்
உமா பதிப்பகம், சென்னை – 600 001
முதற்பதிப்பு – 2009
6. தொல்காப்பியர் தொல்காப்பியம்
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940
7. பரிமேலழகர் (உ.ஆ.) திருக்குறள் உரை
திருநெல்வேலி தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்
சென்னை – 600001. முதற்பதிப்பு – 1940
8. பவணந்தியார் நன்னூல்
உலகத் தமிழாராயச்சி நிறுவனம்
தரமணி, சென்னை
முதற்பதிப்பு – 1999
சிறப்பு.
(கல்லாமை எப்படி தொழிலாகும்? அது ஒரு நிலைப்பாடுதான்.)
இலங்கு நூல் கற்றார் ரோடு ஒரு பகுதி மக்கள் வகைப்படுத்தப் படுகிறார்கள்.
இந்த மக்களையன்றி மீதமுள்ளவர் விலங்கொடு வகைப் படுத்தப் படுகிறார்கள்.
விலங்கொடு ஒப்பிடப்பட்டவரை முதலில் சொன்னாலும், அந்த குழுவின் அடையாளம் அடுத்துக் கூறப்படும் குழுவை ஒட்டியே விளங்கப் படுகிறது.