Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • சேக்கிழார் பா நயம் – 45

    சேக்கிழார் பா நயம் – 45

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி
    —————————————————

    முன்பொரு காலத்தில் கைலாய மலையில் கமலினி, அனிந்திதை ஆகிய இருவரும் பார்வதியன்னை பூசைக்கு மலர் கொய்து தொடுத்தளிக்கும் பணி புரிந்தனர். அவர்களைக் கண்டு தன்னிலை மறந்த சுந்தரரை இறைவன் ‘’மாதர் மேல் மனம் வைத்தனை, ஆதலால் தென்திசையில் பிறந்து, அம்மங்கையருடன் வாழ்ந்து, பின்னர் சிவலோகம் அடைவாய்’’ என்று அனுப்பினார். அவ்வகையில் அப்பெண்களும் தென்னாட்டில் அவதரித்தனர். அவர்களுள் கமலினி என்ற மங்கை, திருவாரூரில் தோன்றிய சிறப்பை இப்பாடல் கூறுகிறது!

    கமலினியார் திருக்கயிலாய மலையில் இறைவிக்கே அணுக்கத் தொண்டு புரியும் பெருமை பெற்றவர். அவர் இம்மாநிலத்தில் பிறந்த நிகழ்ச்சியை அவதரித்ததாகக் கூறும் சிறப்பை உற்று நோக்க வேண்டும். இறைவனைத் தவிர வேறெவரையும் தமக்குப் பதியாகக் கருதாத உயர்குலமாகிய ”பதியிலார் ‘’ குலத்தில் அவர் தோன்றினார்!

    அப்பதியிலார்குலம் என்பது சிவனடியார்களின் வேண்டுகோளால் , பெருந்தவத்தால் கிட்டுவதாகும். இதனை

    “உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
    உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
    அன்னவரே யெம் கணவ ராவார் அவர் உகந்து
    சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்“
    …………………………………………………………………………….
    “எம் கொங்கை நின்அன்பர் அல்லார்தோள் சேரற்க
    எம்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க“

    என வரும் திருவெம்பாவைத் திருவாசகங்களிற் காண்க.
    அவர்கள் குலத்தை உருத்திர கணிகையர் குலம் என்பர்.அக்குலத்தவர் அரன் சார்பும், அடியார் சார்பும் உடையவர்கள் ஆதலால் அவர்கள் உயர்ந்த மணிகளுக்கு இணையானவர்! அக்குலத்தார் செய்த நீண்ட தவத்தால் கமலினியார் பிறந்தார். அவருக்கு சாதகர்மம் நாமகரணம் என்ற சாதகம், பெயர் ஆகியன சூட்டும் சடங்குகளை முறையாகச் செய்தார்கள். ஆதலால் கமலினியாருக்குப் பரவையார் என்ற திருப்பெயரைச் சூட்டினர். ‘’முருக வாங்கி கடைய முன் நிற்கும் ‘’ என்ற திருமுறை வாசகத்தின்படி, அவர் பிறந்த நிகழ்வை,

    ‘’கதிர்மணி பிறந்ததென்ன உருத்திர கணிகை மாராம்
    பதியிலார் குலத்தில் தோன்றி ‘’

    என்று சேக்கிழார் பாடுகிறார். உருத்திர கணிகையர் மரபு வேறு, சேரிப்பரத்தையர் மரபு வேறு! இவர்கள் செய்த திருக்கோயிற் பணிகளைப் பின்னாளில் பரத்தையர் கைக்கொண்டனர் என்பது வரலாறு. இதன் விரிவை , காமிகாகமம், ஆசாரிய லட்சணப்படலத்தின் சுலோகங்களில் காணலாம்.

    இச்சை ஞானம் கிரியை என்ற சிவசத்திகள் மூவரின் நூபுரச் சத்தத்திலிருந்து முறையே உருத்திரகணிகை, உருத்திரகன்னிகை, உருத்திரதாசி என்ற மூவகையார் உண்டானார்கள் என்று காமிகாகமம் பேசும். இவர்களது இலக்கணங்களையும் ஒழுக்கங்களையும், இவர்கள் ஆலயங்களில் முறையே செய்யவேண்டிய திருப்பணிகளையும், ஆங்கு விரிவாய்க் காணலாம். உருத்திரகணிகை, மகாமண்டபம் முதல் கருப்பாவரணப்பிராகாரம் வரை திருவலகு திருமெழுக்கு இட்டுப் பஞ்சசூர்ணங்களினால் அலங்கரித்துச், சுத்தமாயிருந்து, பூசை நேரங்களில் தீபங்களை ஏந்தியும், கானம் செய்தும், நிர்த்தனம் செய்தும், உபசரிக்கத்தக்கவள். சுத்தம், மிசிரம், கேவலம் என்ற மூவகை நிர்த்தனங்களிலே சுத்தநிர்த்தனமே உருத்திரகணிகைக்கு விதிக்கப்பெற்றது. ஆசாரியனால் பொட்டு அணியப் பெற்று அவனை நாயகனாகக்கொள்வதும் இவளுக்கு உரியதாம். இன்னும் இவ்வாறே தூர்க்கை இலக்குமி சரச்சுவதி என்ற இவர்களுடைய பாதச் சிலம்பொலியினின்றும் முறையே இராசகணிகை, கிராமகன்னிகை, தாசி என்பவர்கள் உண்டானார்கள் எனவும் இவர்கள் இலக்கணம், கடமை, வாழ்க்கைத் திறம், மரபுவளர்ச்சி முதலியவை இன்ன எனவும் ஆங்கே விரிவாய்க் கூறப்பெற்றுள்ளன.

    இவைபற்றிப் பற்பலவாறு ஆராய்ச்சிகள் எழுந்து பெருமயக்கிற் கிடந்தந்தன. இவ்விருசாராரையு மின்றிப் பெண்கள் தம்மை இறைவன் பணிக்கே ஒப்புவித்துத்துறவுபூண்டுஒழுகியவர்களுமுண்டு. அன்னார் எக்குலத்தாராயினும் ஆகலாம். அவர் மேற்கூறிய இருமரபினருடன் மயங்கியறிதற்பாலரல்லர். முதலிற் பெண்டிர் துறவிகளாயிருந்து, பின்னர் மரபு வளர்ச்சிக்குரிய உருத்திரகணிகையராகி ,அதன்பின் அவர்களே நாளடைவில் பரத்தையர் குலத்தவராயினர் என்று கூறுவாருமுண்டு. இவையெல்லாம் ஒரு கருத்தை வைத்துக் கொண்டு அதற்கேற்பச் செய்திகளைப் பொருத்தி முடிபு செய்யும் தவறான ஆராய்ச்சிமுறையாம். பரத்தையர் சேரியும், பரத்தையிற் பிரிவும் தொல்காப்பியம் முதலிய மிக்க பழந்தமிழ் நூல்களிற் பல்லாயிர ஆண்டுகளின் முன்னரே பேசப்பெற்றன.

    “ஏமப்பேரூர்ச் சேரியுஞ் சுரத்துந்,
    தாமேசெல்லுந் தாயரு முளரே“,
    “பரத்தையி னகற்சியிற் பரிந்தோட் குறுகி,
    யிரத்தலுந் தெளித்தலு மெனவிரு வகையோ,
    டுரைத்திற நாட்டங் கிழவோன் மேன“

    என்பன முதலிய தொல்காப்பிய அகத்திணையியற் சூத்திரங்களையும், அவற்றின்கீழ் ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரையையுங் காண்க. இவற்றிற் கிலக்கியங்களாகிய திருச்சிற்றம்பலக் கோவையார் முதலியவற்றிற் காணும் பரத்தையிற்பிரிவு முதலிய துறைகளையுங் காண்க.

    ‘உண்மை இவ்வாறாகவும், பண்டைநாளில் இவர்களுக்கு மரபு வளர்ச்சி கிடையாது என்றும், உலக வாழ்விற்குத் தகுதியற்ற பெண்கள் இறைவனையே பதியாகக் கொண்டொழுகினர் என்றும், பின் மற்றும் சிலர் அவர்களோடு கலத்தலாகி உலக இன்பம் துய்த்துக்கொண்டு இறைபணி செய்ய எண்ணினர் என்றும், பின்னாளிற் கோயிற்றலைவர்களின் அடக்குமுறையால் கொடுமைக்கு ஆளாகி நாளடைவில் வேசையராயினர் என்றும் இவ்வாறு எழுந்த ஆராய்ச்சிகள் உண்மை நிலைக்கு மாறானவை என்று காணலாம்.
    இப்பெருமை மிக்க குலத்தில் தோன்றிய பரவையார் உருத்திர கணிகையர் ஆதலால், உருத்திரனுக்கு உரிய திருவாதிரை நன்னாளில் ,சாதம் எழுதுதல், திருப்பெயர் சூட்டுதல் ஆகியவற்றை மேன்மை மிக்க சான்றோர் இயற்றினர். இதனைச் சேக்கிழார்

    ‘’விதியுளி விளக்கத்தாலே மேதகு சான்றோர் ஆன்ற
    மதியணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி.
    ,
    என்று பாடியுள்ளார். இனி முழுப்பாடலையும் பயில்வோம் .

    கதிர்மணி பிறந்த தென்ன உருத்திர கணிகை மாராம்
    பதியிலார் குலத்துள் தோன்றி, பரவையார் என்னும் நாமம்
    விதியுளி விளக்கத் தாலே மேதகு சான்றோர் ஆன்ற
    மதியணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி ‘

    இப்பாட்டில் மதியணி புனிதன் நன்னாள் என்று சிவபெருமானுக்கு உரிய நன்னாளாகிய திருவாதிரை நாளைக் குறித்துள்ளார்.

    “மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை
    முன்னம் படைத்த முதல்வனைப்-பின்னரும்
    ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால்
    ஊர்திரைநீர் வேலி உலகு !’’

    என்று இதனை முத்தொள்ளாயிரப் பாடல் கூறுகிறது. சிவபெருமானுக்குத் தோற்றமும் மறைவும் இல்லை. அவரே நாளையும், நட்சத்திரத்தையும் நிலவையும் கதிரவனையும் படைத்தவர்! ஆதலால் சிவபெருமானைத் திருவாதிரை நாளில் தோன்றியவர் என்று ஏதோ ஒருகாரணம் கருதி உலகியல் வழக்கில் உரைப்பர். சிவபிரான் நிலவைச் சடையில் சூடிக்கொண்ட நாள் திருவாதிரை நாளாகஇருக்கலாம்! இதனையே பரவை நாச்சியார் தோன்றிய நாளாகக் கருதியது அவர்தம் காலத்தை வென்ற சிறப்பைக் குறிக்கிறது!!

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.2

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.2

    -மீனாட்சி பாலகணேஷ்

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.2
    (ஊசற்பருவம்) 

        

    ‘ஊசல்’ என்பது தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றான ஒரு சிற்றிலக்கியமாக விளங்குவது. எடுத்துக்காட்டுகளாக, பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் பாடிவைத்துள்ள சீரங்க நாயகர் ஊசலையும், அன்னாரின் பெயரரான கோனேரியப்பன் ஐயங்கார் பாடியுள்ள சீரங்க நாயகியார் ஊசலையும் காணலாம். பாடல்கள் ஆசிரிய விருத்தம் அல்லது கலித்தாழிசையால் அமைந்து ‘ஆடிரூசல்’, ‘ஆடாமோ ஊசல்’, ‘ஆடுக ஊசல்’ என ஒன்றால் முடிவுறும்.

    இறைவனை அல்லது இறைவியை அலங்கரித்த ஊசலில் அமர்த்தி, ஆட்டி, பாடித் துதிப்பது நமது ஊசலாடும் உலக வாழ்க்கையிலிருந்து விடுபடவே எனும் கருத்திலமைந்த அழகான பாடல்களை இவ்விலக்கியங்களில் காணலாம்.

    ‘உலகமெனும் பந்தலில் பாசம் என்பதே விட்டத்தைத் தாங்கும் நான்கு கால்களாகவும், அறிவே ஊசற் சங்கிலியை மாட்டுவதற்கான உத்தரமாகவும், இந்திரியங்களே சங்கிலிகளாகவும், எடுத்தபிறவி ஊசற்பலகை ஆகவும், இருவினைகளே ஊசலை ஆட்டுபவராகவும், நரகம், சுவர்க்கம், பூமி ஆகிய இடங்களில் இறங்கி, ஏறி, நிலைபெறுதல் எனச்செய்து தடுமாறி அலைந்து துன்பம் அனுபவிக்கும் இவ்வாழ்வெனும் ஊசலாட்டம் நீங்கும்படி தொண்டர்களுக்கு, அவர்கள் உய்யுமாறு அழகிய மணவாளதாசரும் அவர் பெயரரான கோனேரியப்பன் ஐயங்காரும் சேர்ந்து இந்த திருவரங்கத்து ஊசல் எனும் பிரபந்தத்தினைத் தொகுத்திட்டார்கள்,’ என ஒரு தனியன் உரைக்கின்றது.

    அண்டப் பந்தரில் பற்றுக் கால்களாக
    அறிவு விட்டம் கரணம் சங்கிலிகளாகக்
    கொண்ட பிறப்பே பலகை வினையசைப்போர்
    ……………………………………..
    தொண்டர்க்கா மணவாளர் பேரர்கூடித்
    தொகுத்திட்டார் திருவரங்கத்து ஊசலானே 1.

    திருவரங்கத்து நாயகியார் ஊசலில் இருந்து ஒரு இனிய பாடல், தாயாரின் திருக்கோலம் கண்ட திருவரங்க மணவாளரின் நிலைமையை உரைக்கின்றது.

    ‘கருமுகில் வண்ணனான திருவரங்க மணவாளனுக்கு, கண்கள் களிக்குமாறும், அறிவு சோர்ந்து போகவும், புன்னகை விரியவும், புயங்கள் பூரிக்கவும், முகம் மலர்ந்து காதலினால் உடல் குழைந்து மோகம் மிகவும், சீரங்க நாயகியே, நீ ஊசலாடுக!’ எனப்பாடல் அமைந்துள்ளது நயக்கத்தக்கதாம்.

    காரனைய திருவரங்க மணவாளர்க்குக்
    கண்களிப்ப மனமுருக அறிவுசோர
    மூரலெழப்புள கமுறப்புயம் பூரிப்ப
    முகமலர மெய்குழைய மோகமேற
    ……………………………………………..…
    சீரங்கநாயகி யாராடி ரூசல் 2.

    மேலும் ஊசலாடும்போது என்னவெல்லாம் அணிகள் அசைந்தாடினவென்றும், குடக்கூத்தாடி, கோளராவின் படத்தின்மீதாடி விளையாடும் அப்பரமனைப் பற்றியும், அவனாட்டத்தைப் பற்றியும் அழகுறச் சித்தரிக்கும் பாடல்களும் இதன்கண் உள.

    இத்தகைய சுவையும் இனிமையும் இணைந்தவொரு சிற்றிலக்கியம் பிள்ளைத்தமிழ் எனும் சிற்றிலக்கியத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது அருமையானவொரு செய்தியாகும். தாலாட்டு, அம்மானை ஆகிய பிரபந்த வகைகளும் பிள்ளைத்தமிழின் ஒரு பருவமாக அமைந்துள்ளமை பற்றி அவ்வப் பிள்ளைப்பருவம் பற்றிய செய்திகளில் கண்டோம்.

    ஆக, ஊசலாடுவதென்பது, மகளிரின் பொழுதுபோக்காகவும், வளரும் பெண்மக்களின் விளையாட்டாகவும், இறைவன் இறைவியரைப் போற்றுமொரு வழிபாட்டுக் கூறாகவும் அமைந்து தமிழ்மக்களின் வாழ்வில் இன்றியமையாததொரு இடத்தினைப் பெற்றுள்ளதனை இதன்மூலம் அறியலாம். 

    பிள்ளைத்தமிழ் பாடல்கள் தெரிவிக்கும் செய்திகளைக் காண்போம்.

    ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்று உலகதிலுள்ள பலவிதமான மக்களும் வாழுமாறு வடிவம்மையைப் பொன்னூசலாட வேண்டுவது மிகுந்த பொருட்சுவையுடனும் உட்பொதிந்த கருத்துக்களுடனும் விளங்குகின்றது. 

    ‘சொற்களால் கூறப்படும் அறநெறிகள் நிலைத்து வாழவும், அந்தணர்கள் தமது ஆறு தொழில்களை (ஓதல், ஓடுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகியன) வழுவாமல் செய்யுமாறும், தோல்வியடையாத தொண்டர்களும் வணிகர்களும் வாழுமாறும், உழவர்கள் தமது தொழிலை நன்குசெய்து வாழவும், 

    ‘ஏனைய பற்பல குலத்தோரும் வாழ, அறுசமயங்கள் செழித்தோங்க,  மற்ற சமயத்தோர்களும் பக்தி மார்க்கத்தே பதிந்து இனிது வாழவும், 

    ‘உன்னைப்பற்றிய உயர்ந்த எண்ணங்களில் நில்லாது மாறுபடும் அறிவிலிகள் கூட்டமும், கணங்களும் பகைமையும் பொறாமையும் நீங்கி ஒருவரோடொருவர் அன்புகொண்டு வாழவும் (பல மாறுபட்ட மதக்கருத்துக்களை உடைய மக்கள், தமக்குள் சச்சரவின்றி வாழ அன்னையை வேண்டுகிறார் புலவனார்), உனது திருவிழா நாட்களில் பணிவிடைகள் பொலிவாக என்றும் (வாழ) நடக்குமாறும், 

    ‘வடிவுடையம்மையே, பூலோக கயிலாயநாதரான சிவபெருமானுடன் ஒன்றாகக் கலந்த பெண்மணியே, பொன்னூசலாடியருளுக!’

    சொற்பயிலு மறநெறிகள் வாழவந் தணராறு
    தொழிலினொடு வாழவெற்றித்
    தோலாத வரையர்வணி கர்கள்வாழ வுழவுமிகு
    சூத்திரர்கள் வாழவேனை
    ………………………………………….
    காதலொடு வாழநின் றிருவிழாப் பணிவிடை
    கவின்கொண்டு நாளும் வாழ..
    ………………………பூலோக கயிலாயர் பாலேக
    மானபெண் பொன்னூச லாடியருளே3.

    அம்மையின் ஊசலாடலில் அனைத்துலகின் வாழ்வும் இனிதாக அசைந்தாடுகின்றது எனும் அரிய கற்பனை இது!

    அளகாபுரி உமையாம்பிகை பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்று, இன்னொருவிதமான கற்பனையை விரிக்கின்றது. பிறப்பு, இறப்பு எனும் ஊசலில் ஆடியாடி அலைவுற்று, நடுக்கமுற்றுத் தவிக்கும் மானிடர் அந்த நடுக்கம் தவிர்த்து களித்து ஆடித்திளைக்கும்படி உனது கடைக்கணில் பிறக்கும் அருள்வெள்ளப்பெருக்கெனும் அலைகளில் உணவு வகைகளைக் குறையாது அளிக்கும் உமையாம்பிகையே, அரமாதர் வரிசையாக நின்று கரங்களில் வளையொலிக்கக் கவரிவீசவும், தேன்கொண்ட மலர்களால் நாத்தழும்பேற நின்று வாழ்த்தவும், நீ பொன்னூசலாடியருளுக,’ என வேண்டிடும் பாடல்.

    …………….செந்நாத்தழும்ப வாழ்த்திச்
    சிந்திக்கு மன்பர்கள் பிறப்பிறப்பெனு மூசல்
    சேர்ந்தாடி யலைவுற்றதா
    லானகம்பந் தவிர்ந்த் தாடித் திளைக்க….
    ……………………………..
    போனகங்குறையா தளிக்குமளகைச் செல்வி
    பொன்னூசலாடி யருளே 4.

    அளகை என்பது அளகாபுரி ஆகிய தஞ்சாவூர் ஆகும். தஞ்சை நெல்வளம் கொழிக்கும் பூமியாதலின் ‘போனகம் குறையாது அளிக்கும் அளகைச்செல்வி’ என அன்னை போற்றப்படுகிறாள்.

    திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்ப் பாடலில் வேறொரு நயமான கருத்தினைக் காணலாம். அம்மையப்பனின் மாதொருகூறாய வடிவினைப் போற்றுகிறார் புலவர். ஊசலில் ஆடுகின்ற அன்னையின் தோற்றம், குளிர்ந்த இளம்பிறையினைச் சூடி, மும்மலத்தை அழிக்கும் சூலத்தைக் கையிலேந்தி, படங்கொண்ட நச்சரவம் பூண்டு, செல்வங்களனைத்தையும் தரும் திருநீறு அணிந்து, பண்களால் இசைக்கப்பெறும் பழம்பாடல்கள் எனப்படும் வேதங்கள் புகழ்கின்ற கழலணிந்த திருவடிகள், சிவந்த பவளமேனி,  ஆகியவற்றை ஒருபுறம் கொண்டு சிவபெருமானுடைய வடிவிலும், மலர்களணிந்த நறுங்குழல், உற்பலம் எனப்படும் நீலோற்பலமலரை ஏந்திய கை, செம்பொன்னாலான அணிகலன்கள், மணங்கமழும் சாந்து, இனிய ஒலியெழுப்பும் காற்சிலம்பு, பச்சைவண்ணத் திருமேனி ஆகியவை மற்றொருபுறம் என (அம்மையை அர்த்தநாரீசுவர வடிவாகக் கண்டு) அடியார்கள் தொழுதிடும்வண்ணம் அரன் எனப்படும் சிவபிரானிடத்தே தெய்வத்தன்மை வாய்ந்து மலர்ந்து கொடிபோன்று விளங்கும் அன்னையே! உனது இத்தகைய வடிவம் எத்துணை அருமையான காட்சி தாயே!  நீ பொன்னூசலாடுக!’ என வேண்டுகிறார்.

    ‘தண்ணிய விளம்பிறை யணிந்தசடை யொருபுறந்
    தகுமலர்க் குழலொருபுறஞ்
    சாற்றறிய மும்மலந் தெறுசூல மொருபுறஞ்
    சந்தவுற் பலமொருபுறம்
    ……………………………………………………..
    பவளமொருபுறம் பச்சைநிற மொருபுறம்
    பார்த்தன்பர் தொழ5……..,’ என்பன பாடல் வரிகள். 

    அம்மையையும் அத்தனையும் ஒன்றாகக் கண்டு புலவர்கள் மகிழ்ந்தனரெனில், சிவபிரானை மட்டும் வழுத்திப் பிள்ளைத்தமிழ் பாடவியலாத குறையை (பிறப்பிலிப் பெருமானான சிவபிரான்மீது பிள்ளைத்தமிழ் பாடப்படாதென்பது இலக்கண மரபு) அவனுடைய பல செயல்களையும் அன்னைமீதேற்றிக் கூறியோ, அல்லது அவனுடைய நடனத்தை விவரித்து அதற்கொப்பக் குழந்தையான அம்மையோ முருகனோ சப்பாணி கொட்டுவதனையும் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் சித்தரிக்கின்றன.

    கடையம் கலியாணியம்மை பிள்ளைத்தமிழில் இத்தகையதொரு நயத்தைக் காணலாம். 

    கரிய மிடற்றில் ஆலகால விடம் துளும்புமாறும், திரிசூலமும் கபாலமும் கரத்தில் அசையவும், கழுத்தில் கிடக்கும் பாம்பானது ஆட்டத்தின் வேகத்தில் நெட்டுயிர்க்குமாறும், சடையில் தங்கியுள்ள கங்கைநதியானது பொங்கிவழிந்திடவும், காலில் சிறிய கிண்கிணிக் கல் எனக்கிடக்கும் அருமறை வேதங்கள் ஒலியெழுப்பவும், பிரபஞ்சத்துள்ள அத்துணை கடவுளர்களும் முடிவுற்றாலும் தான் மட்டும் ஒரு முடிவே இல்லாது ஆனந்த நடமிடுபவன் சிவபிரான். அவனுடைய சிலம்பணிந்த  தாமரைத் திருவடிகளில் அடியார்கள் பணிந்துதொழ, அவர்களுக்கருளும் அச்சிவபிரான் மணமாலை சூட்டும் கற்பகமே! பூங்காமவல்லியே! கல்யாணசுந்தரவல்லியே! பொன்னூசலாடியருளுக!’ எனும் பாடல் சிவபிரானின் நடனத் தோற்றத்தை நயம்பட எடுத்துரைக்கின்றதனைக் காணலாம்.

    ‘கருமிடற்று ஆலந் துளும்பதிரி சூலம்
    கபாலம் கரத்தில் அசைய
    காகோதரபட்ட நெட்டுயிர்ப்பச் சடைக்
    கங்கைநதி பொங்கிவழிய
    ………………………………………………
    அளவற்ற கடவுளர் தம்முடிவினும் ஓர்முடிவின்றி
    ஆனந்த நடம் இயற்றும்6..’ என்பன பாடல் வரிகள்.

    குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்ப்பாடலொன்று உமையன்னையை மக்களின் இருவினைகளைக் களைந்து இன்பமளிப்பவளாக விளக்குகிறது:

    ‘சுத்தம் அசுத்தம் எனப்படும் இரு கொடிய மாயைகளைத் தூண்களாகக்கொண்டு, இருள்போன்ற ஆணவ அகந்தையை விட்டமென அமைத்திட்டு, நாம் செய்த கருமங்களே ஊசற்பலகையைத் தாங்கும் வடங்களாகவும், மாயையே அப்பலகையாகவும், வான்வெளியே ஊசலாடும் இடமாகவும் கொண்டு ஆருயிர்களை பிறப்பு, இறப்பு, நோய் என்னும் மணிகள் இழைத்த அவ்வூசலில் வைத்தாட்டி, தலைவாயிலில் முடங்கிக் கிடக்காது எடுத்து, அணைத்து, பேரறிவினை அளித்து, பின் பரமுத்தியளித்து, ஆனந்தமெனும் அமிழ்தத்தினை அருந்துவித்து உண்மையான தாய்போன்று வளர்க்கும் அன்னைநீ பொன்னூசலாடுக!’ என வேண்டுவதாக அமைந்த பாடலிதுவே.

    சுத்தமு மசுத்தமு மெனப்படுங் கொடுமாயை
    தூணாக விருளாணவந்
    தொடுத்தநெடு விட்டமாக் கருமப் பெரும்பகுதி
    தூக்கிய வடங்களாக
    ………………………………………….
    …………………….பரமுத்தி வீடுய்த்து
    மூவாத வானந்தமாம்
    புத்தமிழ் தருத்திமெய்த் தாயாய் வளர்ப்பவள்
    பொன்னூச லாடியருளே 7…..

    சைவசமயக் கருத்துக்கள், தத்துவ, வேதாந்த விளக்கங்கள் அனைத்தும் இப்பாடல்களில் இழைந்தோடுவதனைக் காண்கிறோம். 

    பிள்ளைத்தமிழ் நூல்கள் விவரிக்கும் பருவங்கள் பத்துப்பத்துப் பாடல்களாக அமைக்கப்படுகின்றன. இவை ஒரு அருமையான இலக்கிய அமைப்பின் பாற்பட்டவையாகும். எடுத்துக்காட்டாக ஊசற்பருவத்தினையே எடுத்துக் கொண்டால், இரண்டு அல்லது மூன்று பாடல்கள் ஊசலின் அமைப்பு, அழகு பற்றியும், அதிலமர்ந்து ஆடும் அன்னையின் சிறப்பு, வடிவு பற்றியும் இருக்கும். அடுத்த சில பாடல்கள் அம்மையின் செயல்கள் பற்றிய தொன்மங்களைக் கூறி மகிழும். பின்வரும் மூன்று முதல் நான்கு பாடல்கள் சந்தநயம் பொருந்தி இருக்கும்; அல்லது குழந்தையாக உருவகிக்கப்படும் அன்னையின் தெய்வத்தன்மையை, அவளுடைய காக்கும் திறத்தை, அருளும் தகைமையை அழகுற விவரிக்கும். அவளைப் போற்றி மகிழும்.

    இவை பேரழகு வாய்ந்து கருத்தைக் கவரும் இலக்கியச்சித்திரம் என ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்! இதுபோன்ற பாடல்களை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் பரவலாகக் கண்டு இரசிக்கலாம். குமரகுருபரரின் கவிதைப் புலமையைக் கண்டு மகிழலாம்.

    பல பிள்ளைத்தமிழ் நூல்கள்; பல அழகிய பாடல்கள்; பல நயங்கள்; இன்னும் ஒன்றினைக் கண்டுபின் இக்கட்டுரையை நிறைவு செய்யலாம்.

    சீர்காழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழின் ஊசற்பருவத்து ஈற்றயல் பாடலில் புலவர் அன்னையின் அனைத்து அடியார்களையும் போற்றி அமைத்துள்ள பாடல் மிகுந்த நயமும் சுவையும் வாய்ந்ததாகும்.

    ‘கரிய இருள் படர்ந்தது எம் பிறவி; அது பிறவிக் கடலைக் கடந்து கரையேற யான் இறுகப் பிடித்த புணை உன் திருவடிகள்; இனிய ஒலியெழுப்பும் கிண்கிணி, சிலம்பு ஆகியவற்றை அணிந்துள்ள அத்திருவடிகளைப் போற்றி, சம்பந்த மாமுனிவன், நீர் நிறைந்த  அலைகடலில் கல்லையே தோணியாகக் கொண்ட நாவுக்கரசர், திருநாவலூரன் ஆகிய சுந்தரர், ஐயன்மீது கொண்ட அன்பினால் இன்பம் எய்திய மாணிக்கவாசகர் முதலாக அருள்மொழி கூறிய பல அறிஞர்கள் ஆகியோர் உரைத்த செம்மைவாய்ந்த தமிழ் மறைகள், ராகமிட்டுப் பாடப்படும் சிவபத்தர்களின் இசை, தெய்வமறை எனப்படும் லலிதா ஆயிரநாமம், அரியாகிய சிம்மத்தின்மீது ஏறிப் பகைவர்களை அழித்த தேவியின் வரலாறான தேவி மாகாத்மியம் முதலானவையும், ‘பொம்பொம்’ என முழங்கும் மங்கலச் சங்கின் ஒலி எங்கும் முழங்கிடவும் நீ பொன்னூசல் ஆடுக!’ என அன்னையை வேண்டுவதாக அமைந்து அன்னையின் அடியார்களைப் போற்றிம்வண்ணம் அமைந்துள்ளது.

    எம்பம் பிருட்பிறவி யலையாழி யேறயான்
    இறுகப் பிடித்த புணையாம்
    இன்குரற் கிண்கிணி சிலம்பலம் பும்பதத்
    திணையில் சம்பந்த முனிவன்
    …………………………………………………
    செம்பம்பு தென்றமிழ்த் திருமுறைகள் பண்ணோடு
    சிவபத்த ரோது மிசையும்
    தெய்வமறை லலிதையா ய்ரநாமம் அரியேறு
    தேவிமான் மியமுதலவும்
    ………………………………………………….
    பூம்புகலி யோம்பிவளர் திருநிலைச்செல்வியே
    பொன்னூச லாடியருளே 9!

    இது போன்ற இன்னும் பல நயமான பாடல்களைப் பல பிள்ளைத்தமிழ் நூல்களில் காணலாம். படித்தும் மகிழலாம்.

    ******************

    பார்வை நூல்கள்:

    1. திருவரங்கத்து ஊசல்- அழகிய மணவாளதாசர். 
    2. திருவரங்கத்து நாயகியார் ஊசல்- கோனேரியப்பன் ஐயங்கார்.
    3. ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்- வித்துவான் கனகசபைத் தம்பிரான்.
    4. அளகாபுரி உமையாம்பிகை பிள்ளைத்தமிழ்- சி. தியாகராச செட்டியார்
    5. உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- சோணாசல பாரதியார்.
    6. கடையம் கலியாணியம்மை பிள்ளைத்தமிழ்- அழகிய திருச்சிற்றம்பல தேசிகர்.
    7. குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்- சிவஞான சுவாமிகள்
    8. சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்- கு. நடேச கவுண்டர்.

    _

    Share
  • பகை முறித்து அமைதி உடன்படிக்கை

    பகை முறித்து அமைதி உடன்படிக்கை

    -சேஷாத்ரி ஶ்ரீதரன்

    பண்டை நாளில் வழங்கிய முடியாட்சி என்பது ஒரு அப்பட்டமான குடும்ப ஆட்சி என்பதைத் தான் கல்வெட்டுகள் விளம்புகின்றன. இதனால் தமது குடும்ப ஆட்சியை தக்கவைக்க எல்லா வகையான வழிகளையும் அரசகுடும்பத்தார் கைக்கொண்டனர். தம்பி, பிள்ளை, பேரன், மருமகன், மைத்துனன் என பலரும் இதற்காகத் தம் இன்னுயிரை ஈந்துள்ளனர்.  இதைத் தான் வேந்தன், மன்னன், அரையன், கிழான் உள்ளிட்ட நான்கு அடுக்கு அதிகாரப் பிரிவு குடும்பத்தாரும் செய்தனர்.

    ஆனால் தமிழகத்தில் மட்டும் தான் இந்த வரலாற்று உண்மை மறைக்கப்பட்டு தனிமனிதனான ஒரு அரசகுரு திரைக்குப் பின்னால் இருந்து ஆட்சி செய்துவிட்டான் என்று சொல்லி பகுத்தறிவின் பெயரால் தமிழ் மக்களின்அறிவு மழுங்கடிக்கப்பட்டுள்ளது. இந்த உண்மையை நீங்களே இதில் உள்ள விளக்கப் பகுதியை படித்து தெளியலாம்.

    தமது ஆட்சி அதிகாரத்தை நிலைபெறச் செய்ய மக்கள் விரும்பாத போரை மக்களை மீது திணித்து மக்களை வருத்தி வெற்றி கண்டவர்கள் தமது இயலாமையின் போது போர் ஒழித்து அமைதி உடன்படிக்கை கண்டும் ஆட்சி அதிகாரத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளனர். மக்களுக்காக அல்ல அரசகுடும்பம் அழிவில் இருந்து தப்பவே இந்த அமைதி உடன்படிக்கை என்பது உங்களுக்கு புரிந்துவிடும்.  புதுக்கோட்டை மாவட்டத்தில் சில கோவில்களில் இவ்வகை அமைதி உடன்பாட்டு கல்வெட்டுகள் காணப்படுகின்றன. அவற்றை இனி படித்து அறிந்துகொள்வோம்.

    புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், குன்னாண்டார்கோயில் பர்வதகிரீசுவரர் கோவிலின் கிழக்கு திருச்சுற்றில் குறுக்கு சுவரில் உள்ள 9 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வாஸ்திஸ்ரீ  கோச்சடை பன்ம திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ சுந்தர பாண்டிய தே
    2. வற்க்கு யாண்டு 12 காத்திகை மாதம் ஜெயசிங்க குலகால வளநாட்டு  வடபன
    3. ங்காட்டு நாட்டு உடையார் திருக்குன்றாக்குடி உடைய நாயனார் கோஇல் தானத்து முத
    4. லிகளுக்கு இன்னாட்டு இரண்டு மலை நாட்டு அரையகளோம் எங்களில் இசைந்து
    5. பிடிபாடு பண்ணிக் குடுத்த பரிசாவது நாங்கள் பகை கொண்டு எய்யுமிடத்து எங்கள் காவல்
    6. ஆன ஊர்கள் வழிநடைக் குடிமக்கள், இடை குடிமக்கள் இவர்களை அழுவு செய்
    7. யக்கடவோ மல்லவாகவும். ஒருவன் அழிவு செய்யில் நூறுபணம் தெண்டம்
    8. வைக்கவும். ஒரு ஊராக அழிவுசெய்யில் அஞ்நூறு பணம் வைக்கவும் கடவதாகவும்
    9. இப்படி செய்யும் இடத்து வெட்டியும் குத்தியும் செத்து நோக்க கடவர்களாகவும்.

    தானத்து முதலி- கோவில் பொறுப்பாண்மைத் தலைவர்; பிடிபாடு – வழிகாட்டுநெறி, guidelines; எய்யுமிடத்து – அம்பு எய்தி போர் நிகழ்த்து; பரிசாவது – முறை, விதம், வகைமை யாதெனில்; அழிவுசெய்யில் – அழித்தால்; தண்டம் – குற்றத் தொகை.

    விளக்கம்: 13-14 –ம் நூற்றாண்டில் ஜடவர்ம சுந்தரபாண்டியனின் 12-ம் ஆட்சிஆண்டில் கார்த்திகை மாதம் செயசிங்க குலகால வளநாட்டு வடபனங்காட்டு நாட்டு திருக்குன்றாக்குடி இறைவர் கோவிலில் அதன் பொறுப்பாண்மைத் தலைவருக்கு வடபனங்காட்டு இரண்டு மலைநாட்டு அரையர்களும் இசைந்து இனி நடந்து கொள்வதற்கான வழிகாட்டுநெறி என்று தாம் நடந்துகொள்ளப்போகும் முறையை பற்றி சொல்கிறார்கள். பகையால் அம்பு எய்யும் போது எங்கள் காவலுக்கு உட்பட்ட ஊர்களில் வழிநடையில் வாழும் மக்கள், ஊர் இடையே வாழும் மக்கள் ஆகியோருக்கு இனி எந்த அழிவையும் செய்ய மாட்டோம் என்று உறுதி மேற்கொள்கின்றனர். அவ்வாறு எவரையாவது ஒருவரை கொன்று விட்டால் 100 பணத்தை தண்டத் தொகையாக கட்டுவோம். அதே நேரம் ஊரையே அழித்தால் 500 பணத்தை தண்டத் தொகையாகக் கட்டுவோம். இப்படி ஆவதற்கு காரணமானவரை வெட்டியும் குத்தியும் செத்துப் போகச்செய்வோம் என்று உறுதி கூறுகின்றனர்.

    இக் கல்வெட்டு பொதுவாகப் போரின் போது வழிநடையில் வாழ்வோர், ஊர்நடுவே வாழ்வோர் போர்செய்யும் படைகளால் வெறித்தனமாகத் தாக்கப்பட்டு கொல்லப்படுவதை மறைமுகமாகச் சுட்டுகின்றது. இந்த உடன்படிக்கையில் அத்தகு தாக்குதலை இனி தவிர்ப்பதாக இருதரப்பு அரையர்களும் ஒப்புக் கொள்கின்றனர். நாம் பொதுவாக இந்நாள் போரில் தான் போரின் போது நாடே போரில் ஈடுபடுவதாகவும் அதனால் நாட்டின் எப்பகுதியும் தாக்கப்படும் என்று எண்ணுகின்றோம். ஆனால் பண்டைய போர் முறையில் எங்கேனும் ஆறு, ஏரிக் கரை ஒரங்களில் தான் போர் நடக்கும் என்று தவறாகப் புரிந்து கொண்டுள்ளோம். இக்கல்வெட்டு இக்கருத்தை உடைத்து பொய் என்றாக்கிவிட்டது. போர் இரு தரப்பாரிடையே மூண்டால் பொது மக்களும் தாக்கப்பட்டு அவரும் அவர் உடைமையும் அழிவிற்கு ஆளாவதை தெளிவாக விளக்குகின்றது.  அப்படி என்றால் போரில் நாடே பங்கு பெற்றதாகத் தானே பொருள். கோவிலை ஆட்சியாளர் தம் கட்டுக்குள் வைத்திருந்தனர் என்பதால் தான் மலைநாட்டு அரையர்கள் இருவரும் கோவில் பொறுப்பு தலைவர் முன்னிலையில் போர்நெறி உடன்படிக்கையில் ஈடுபடுகின்றனர். இப்படி கோவில் பொறுப்பாளர் முன்னிலை நேர்ந்த உடன்படிக்கை என்பதால் இந்த வரலாற்று நிகழ்வு கோவிலில் ஒரு கல்வெட்டாக இடம்பெற்றது. இல்லாவிட்டால் இது நம் அறிவிற்கு எட்டி இருக்காது.

    முன்னம் போர்க் காலத்தில் ஒன்றும் அறியா அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதற்கு தமது முன்னோர்களே காரணம் என்று இந்நாளிலே தம்மை ஆண்ட பரம்பரையர், ஆளப் பிறந்தவர், அடக்கி ஆண்டவர், மண்ணாண்டவர், பாரண்டவர் என்று மார்தட்டுவோர் பொறுப்பேற்பார்களா? ஏன் பொறுப்பு ஏற்க கூடாது என்பதே கேள்வி?

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 330.

    புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், நாங்குபட்டி எனும் மடத்துக்கோவில் அம்பாள் சன்னதி மேற்கு அடித்தளத்தில் வெட்டிய 8 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்தி ஸ்ரீமந் மகாமண்டலீசுரன் எம்மண்டலமும் கொண்டருளிய ஸ்ரீ வீர இராயண்ண உடையார் திருஇராச்சியம் பண்ணி அருளாநின்ற விகாரி வருஷம் ஆனி மாதம் 25 நாள். பேராம்பூர் [வரந்]தரு [தேவ]ன் அழகியார் ஆன நரசிஞ்க தேவர் உள்ளிட்டாரோம்
    2. கீழைக்குறிச்சி ஊரவற்குப் பகை ஒருக்கம் தீந்து கல்வெட்டிக் குடுத்தபடி முன்பே எங்கள் பேர[னார்] சேமநரசிஞ்கத் தேவர் நாள் முதல் அடைக்கலங்காத்தார் நரசிஞ்கதேவர் நாள்அளவாக உற்று நிலை அற்ற வினோதப் பகையாய் அங்கும் இஞ்கும் நால்பது நூறு
    3. மனிதரும் பட்டு சிறைமாடும் பிடித்து ஆறாப் பகையாக கிடக்கையில் அடைக்கலங்காத்தார் நரசிஞ்கத்தேவர் நாளிலே இவரும் மேற்படி சேமரும் மேற்படி குமு[த]ய நாயநாரும் நாங்களும் எங்களில் பொருந்தி கீழைக்குறிச்சி
    4. ஊரவரை அழைத்து விட்டு உங்களுக்கும் எங்களுக்கும் ஒரு உற்று நிலை அற்ற பகைக்கு விபரீதமாய் இருக்க வேண்டுவதில்லை என்றும் அங்குப்பட்டது அறுதியாக மேல்பட்டு பேராம்பூர் கீழைக்குறிச்சியும் கீழைக்குறிச்சி பேராம்பூருமாக ஒன்றுபட
    5. நடத்திப் போதக்கடவோம் என்று நாங்கள் அரன்குளவர் சன்னதியிலே அறுதி பண்ணிக்குடுத்து அந்த அறுதிபடியிலே இற்றை வரையும் நடத்தி போதுகையில் இற்றை நாள் தென்மலை நாட்டாரும் _ _ _ னூர் புதுவயல் ஊரவரும் முதுசொற்குடி நாட்டாரும்
    6. முன்பாக கல்வெட்டிக் குடுக்கையில் இன்னாள் முதல் சந்திரஆதித்தவரையும் பேராம்பூர் அரசு வெறுத்த இடம் கீழைகுறிச்சி வெறுத்தும் கீழைகுறிச்சி வெறித்த இடம் பேராம்பூர் அரசு வெறுத்தும் இரண்டு நினையாமல் நடத்தப் போதக் கடவோமாகவும்
    7. இரண்டு நினைத்தோமாகில் எங்கள் வழிபடு தெய்வமான நாயனார் திருப்பெருமானாண்டார் சீபாதம் தப்பினோம் ஆவதாகவும். இப்படிக்கு நரசிஞ்க தேவர் எழுத்து. இப்படி அறிவோம் தென் மலைநாட்டவரோம். இப்படி அறிவோம் கீரனூர் புதுவயல் ஊரவரோம்
    8. இம்மரியாதி ஒழுந்து கீழைகுறிச்சி ஊரவர் இரண்டு நினைத்தோம் ஆகில் நாயனார் உடைய நாயனார் சீபாதம் தப்பினோம் ஆவதாகவும். இப்படிக்கு ஊற்கு சமைந்து இவ்வூர் கணக்கு உடையான் ஒடுவாய் நாட்டு வேளான் எழுத்து.

    தீந்து – முடித்து வைத்து; உற்றுநிலை – உண்மைக் காரணம்; அங்குபட்டது –அவ்வாறு தோன்றிய எண்ணம்; அறுதி – வரையறை, முடிவு; ஒன்றுபட – ஒற்றுமையாக; இரண்டு நினையாமல் – மாற்று கருத்து கருதாமல், second thought; சிறீபாதம் தப்பினோம் – திருப்பாதம் விலகினோம்; வெறுத்த – விரும்பாத; மரியாதி – ஏற்று, மதித்து நடக்கும் வழக்கம்

    விளக்கம்: 1419 பொ. ஊ. விகாரி ஆண்டு ஆனி 25-ம் நாள் (சூன் 21) விசயநகர வேந்தர் இராயண்ண உடையார் ஆட்சிக் காலம். பேராம்பூர் வரந்தரு தேவன், அழகியார் ஆன நரசிங்க தேவர் உள்ளிட்டார் கீழைக்குறிச்சி ஊராரோடு பகை உணர்வை முடித்து வைத்த வகைமை யாதெனில் முன்பே இவர்களது பேரன் சேமநரசிங்கத் தேவர் தொடங்கி அடைக்கலங்காத்த நரசிங்கதேவர் வரை உண்மைக் காரணம் இல்லாத பகையாக அங்கும் இங்கும் 40 பேர் 100 பேர் இறந்தும் மாடுகளை சிறைபிடித்தும் நீங்காத பகை ஏற்பட்டு இருந்தது. அடைக்கலங்காத்தார் நரசிங்க தேவர் காலத்தில் அவரும் மேலே குறிப்பிட்ட சேமரும் மேற்படி குமுதய நாயநாரும் பேராம்பூராரும் நரசிங்க தேவருடன் கூடி  கீழைக்குறிச்சி ஊராரை அழைத்து வந்து உங்களுக்கும் எங்களுக்கும் உண்மையான பகைக்கு காரணம் இல்லாத போது நமக்குள் இனி பகை வேண்டாம் என்றும் முடிவாகி அதன்மேற்பட்டு பேராம்பூர்  கீழைக்குறிச்சியாகவும் அவ்வண்ணமே கீழைக்குறிச்சி பேராம்பூராகவும்  ஆகி ஒற்றுமையாய் நடந்துகொள்வோமாக இறைவன் அரனகுளவர் திருமுன்பாக முடிவு செய்து அந்த முடிவுப்படியே இன்றுவரை நடந்துவருகின்றனர். இப்போது தென்மலை நாட்டார், புதுவயல் ஊரார், முதுசொற்குடி நாட்டார் முன்பாகவும் அந்த முடிவைக் கல்வெட்டிக் கொடுக்கும் இந்நேரத்தில் இன்று முதல் ஞாயிறும் நிலவும் உள்ள நாள் வரையில் பேராம்பூர் அரசு கீழைக்குறிச்சியை விரும்பாமல் பகை கொண்டது என்றும் அதே போல் கீழைக்குறிச்சி விரும்பாமல் பகை கொண்ட இடம் பேராம்பூர் அரசு என்ற இரண்டாம் கருத்து, மாற்று கருத்து கருதாமல் நடந்து கொள்வோம். அவ்வாறு மாற்று கருத்து கருதினால் நாங்கள் வழிபடும் தெய்வமான திருப்பெருமானாண்டார் திருப்பாதத்தை விலகினோம் என்றாவதாகும் என்று தென்மலைநாடு, புதுவயல் ஆகிய ஊரார் முன்னிலையிலும் நரசிங்க தேவர் மீண்டும் உறுதி ஏற்கின்றார்.  இந்த உறுதியை ஏற்று, மதித்து நடக்கும் வழக்கத்தை விட்டு கீழைகுறிச்சி ஊரார் மாற்று கருத்து கொண்டால்  அவரது இறைவனான உடைய நாயனாரின் திருப்பாதத்தை விட்டு விலகியவர் என்று ஆகிவிடுவார் என்று ஊரின் விருப்பிற்கு இசைந்து கீழைக்குறிச்சி கணக்கு உடையவனான ஒடுவாய்நாட்டு வேளான் எழுதி கையொப்பமிட்டான்.   

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 318-319.

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், திருவரங்குளம் ஹரதீர்தீசுவரர் கோவில்  முதல் திருச்சுற்றில் உள்ள பழைய மடைபள்ளியின் மேற்கு சுவரில் வெட்டிய 20 வரிக் கல்வெட்டு

    1. ஸ்வஸ்தி ஸ்ரீ கோமாறு பன்மரான திருபுவனச் சக்கரவத்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவர்
    2. க்கு யாண்டு 29 வது காத்திகை 29 ள் இராசராச வளநாட்டு வல்ல நாட்டு உடையா
    3. ர் திருவரகுளமுடைய நாயநார் திருக்கொயில் தானத்தார்க்கும் ஊரார்க்கு
    4. ம் பூவரசகுழி அரைய மக்களில் சூரியன் தொண்டைமானு மக்கள் மருமக்களும் சோழி
    5. யன் உலக மாணிக்கப் பரையனும் மக்களும் பாணித் தேவரான ஈழத்தரை
    6. யர் மகன் வீரமூவன் விசையர் தேவனும் வீரமூவன் ஈழத்தரையுனும் தம்பி[யெ]
    7. க்கனும் கல்வெட்டி குடுத்த பரிசாவது அடியார்க்கு நல்லான் துண்டராயரை சு[ந்]
    8. தன் நாரசிங்க தேவந் குத்துகையில் இந்த பகையை நோக்கி இன்பன் உலக மா
    9. ணிக்கப் பரையனும் பாணித்தேவரான ஈழத்தரையரும் வாழ்வனாந
    10. ஈழத்தரையனும் சுந்தந் நாரசிங்க தேவரையும் சோழன் உலக மா
    11. ணிக்கப் பரையனையும் குத்துகையில் இந்தப் பகையென்று சொ
    12. ல்லக் கடவதல்ல என்று சந்திராயித்தவரைக்கு சூரியன் தொண்
    13. டைமாநாரும் இவர் மக்களும் தொண்டைமாநாரும் மருமக்களான சேர
    14. சோழ கோனும் அரங்குத்தானும் புத்தனும் சோழன் அரங்குளவ நாட்டாரை
    15. யனும் உடப்பாண்டானும் உள்ளிட்டாரும் ஆக இவ்வநைவரும் இந்தப
    16. கை என்று சொல்லக் கடவோமல்ல என்று பகை ஒருங்க திரு
    17. மலையில் கல்வெட்டிக் குடுத்தோம். இந்த இரண்டு வகையில்
    18. மனித்தரும் இந்தப் பகையை நோக்கி வரும் நலந்[தீ]ங்கு
    19. ஒருத்தர்க்கு வந்தது அனைவர்க்கும் என்று அனுபவி
    20. க்க கடவோமாகவு _ _ _ _

    விளக்கம்: 1325 பொ.ஊ. வீரபாண்டியனின் 29 ஆம் ஆட்சி ஆண்டு கார்த்திகைத் திங்கள் 29-ம் நாள் இராசராச வளநாட்டு வல்ல நாட்டின் திருவரங்குளமுடைய இறைவர் கோயில் பொறுப்பாளருக்கும் ஊராருக்கும் பூவரசகுழியைச் சேர்ந்த அரையர்கள் சூரிய தொண்டைமான் பிள்ளைகளும் மருமக்களும் சோழன் உலக மாணிக்கப் பரையனும் அவன் பிள்ளைகளும் ஈழத்தரையன் வீரமூவ விசைய தேவன் அவன் தம்பி இயக்கன் ஆகியோர் சேர்ந்து கல்வெட்டைவெட்டிக் கொடுத்த விதமாவது அடியார்க்கு நல்லான் துண்டராயனை சுந்தன் நாரசிங்க தேவன் குத்தியதால் ஏற்பட்ட பகையை வைத்து இன்பன் உலகமாணிக்கப் பரையனும் பாணித்தேவரான ஈழத்தரையனும் வாழ்வனான ஈழத்தரையனும் சுந்தன் நரசிங்க தேவனையும் சோழன் உலகமாணிக்கப் பரையனையும் குத்தினர். இது பகை என்று சொல்லக் கடவதல்ல என்று ஞாயிறும்நிலவும் நீடிக்கும் காலம் வரை சூரியன் தொண்டமானும் இவனுடைய பிள்ளைகளும் மருமக்களான சேரசோழ கோனும் அரங்குத்தானும் புத்தனும் சோழன் அரங்குளவ நாட்டரையனும் உடப்பாண்டானும் ஆகிய இவ்வனைவரும் இந்த பகையை பகை என்று கருதாமல் பகை ஒடுங்க திருமலையில் கல்வெட்டுவித்தோம். இந்த இரண்டு பிரிவு மனிதரும் இந்த பகையால் வரும் நல்லது தீது எது வந்தாலும் ஒருவருக்கு வரும் துன்பம் மற்றவருக்கும் எல்லாருக்கும் ஏற்பட்டதாக அனுபவிப்போம் ஆக.

     இக்கல்வெட்டு அரையர் குடும்பத்தார் எல்லோரையும் இந்த உடன்படிக்கைக்கு இணங்க வைத்ததை பார்க்கும் போது ஒவ்வொரு அரையர் குடும்பமும் அதன் தலைமை அரையனை கம்பளிப் பூச்சி போல சூழ்ந்திருந்தனர் என்பதை உணர்த்துகின்றன. அப்படியானால் அந்த குடும்பமே ஆட்சி செய்ததாக ஆன்றோ பொருள். பின் எப்படி இவர்களை எல்லாம் மீறி ஒரு அரசகுருவால் ஆட்சி செலுத்த முடியும்?

     பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 288-289.

    புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், திருவரங்குளம் ஹரதீர்தீசுவரர் கோவில்  முதல் திருச்சுற்றில் உள்ள பைரவ மண்டபசுவரில் வெட்டிய 18 வரிக் கல்வெட்டு.

    1. கா[ல]யுத்த வருஷம் புரட்டாதி மாதம் 18 நாள் இராசராச வளநாட்டு வல்ல நாட்டு பூ[வரச]குழி அரை _ _ _ ல் கெ_ _ _ நாரசிங்க தேவனை
    2. _ _ _ ண்டராயரும் தம்பிமாரும் மக்கள் மருமக்களும் கு[த்து]கையில் இந்தப் பகையிலே [நா]டு இரண்டு வரிசையும் பட்டும் கெட்டும்
    3. _ _ கையில் தெற்காட்டூர் வாணாதராயர் வ[கை] [யறு]த்தபடி கொ[ப்ப]ணன் நாரசிங்க தேவன் பழிக்கு இன்பன்
    4. _ _ ட்டது பழி ஆகக்கடவதாகவும் வாழவன் துண்டராயற்கும் தம்பிமாற்கும் மருமக்களுக்கும் [மச்சினனாற்கும்]
    5. _ _ வதரையன் படுகையில். இவன் பட்டதும்_ _  _ _ வன் துண்டராயன் தம்பித் தமையன்மாரிலும் மக்கள் மருமக்களிலும்
    6. பெண்டாட்டி இன்பர் பட்டதும் மிகுதிக்க _ _ _ பலநாளும் ப(ல்)ல நாட்டிலும் _ _  வகையிலுமிலட்டூர்
    7. _ _ _ _ _ ளும் பகுதிக்காறர் சொம்மாய் அழிந்த முதல்களும் வாழவன் துண்டராயரும் தம்பிமாரும் மருமக்களும் பொரு
    8. _ _ _ _ வாகவும் வாழவன் துண்டராயர் மகன் இராகுத்தனும் எழு_ _ம் புதனுக்[கு]த் தானும்_ _ _ 
    9. _ _ _ வாழவன் துண்டராயரும் தம்பிமாரும் மக்களும் மருமக்களும் உடன் இந்தப்பகைக்கு _ _ _ _சேர_ _லக்கடலுக்கு _ _
    10. _ _ _ _ _ கொப்பணன் நாரசிங்கதேவன் மகன் [அடி]யாற்கு நல்லானுக்கும் மருமக்களுக்கும் _ _ _ இன்னும் [வாழ]வன்தானுக்கும்_ _ _ _ _ _
    11. _ _ _ _ _ _ _ சொம்மாய_ _ மாகவும் அடியாற்கு நல்லானும் கொப்பணன் [மருமக்களும்] _ _ _ ல்லக் கடவ_ _ _ _
    12. _ _ இப்படி பகைத்து _ _ _ _ _ இடுகையில் இம்மரியாதி நிற்கு செய்வர்களாகவும் இம்ம[ரியாதி]ல்லாமல் இருக்கிற_ _  _
    13. _ _ _ உடையார் திருவரன்குளமுடைய நாயனார் திருக்கோயில் தான[த்தாரும்] _ _ _ [ண்டாரும்]_ _ _
    14. _ _ க் கடவர்களாகவும் கேட்கு _ _ ன்பது_ _க் கொண்டா_ _ _ பத்து பணமும்_ _ _
    15. _ _  இருபது பணமும் உதிரத்த _ _ தால_ _[செய்]த பாண்டியற்கு [ஈ]ழத்தரை_ _ __
    16. _ _ லத்தால் திருமேனியும் சமைத்துத் திரண _ _ _ _  _ _ _    ___
    17. _ _ _ வாகவும் இப்படிக்கு இரண்டும்_ _ _ நிலைகா_ _ காட்டுராயர் _ _ _ _
    18. _ _ _ நாட்டுக்கு ஆவுடைநாடன் எழுத்து.

    இரண்டுவரிசை –இரண்டு பிரிவு, இரண்டு அணி; கெட்டும் – அழிந்தும்; 

    விளக்கம்: 1318 பொ.ஊ ஆகுமோ? என்று தொல்லியலாளர் குறித்துள்ளனர். இதில் உள்ள மாந்தரின் பெயர் பிற கல்வெட்டுகளில் இடம் பெறுவதை வைத்து ஒரு ஒப்பீட்டில் இந்த ஆண்டை சுட்டினர் போலும். கல்வெட்டில் வேந்தர் பெயர் இல்லை. காலயுத்த ஆண்டு புரட்டாசி மாதம் 18 ஆம் நாள் இந்த அமைதி உடன்படிக்கை ஏற்பட்டு இக்கல்வெட்டு பொறிக்கப்பட்டது. இராசராச வளநாட்டு வல்லநாட்டு பூவரசகுழி அரைசரில்  கோப்பண்ண  நரசிங்க தேவனை துண்டராயனும் அவன் தம்பிமார், பிள்ளைகள், மருமக்கள் ஆகியோர் குத்தி ஏற்பட்ட பகையில் நாடு இரண்டு பிரிவாகி அழிந்தது போகையில் தெற்காட்டூர் வாணாதராயர் வகையறுத்தபடி கோப்பண்ண நாரசிங்க தேவன் கொலைகப் பழிக்கு இன்பன் இறந்தது பழிக்கு ஈடு ஆக்கப்பட்டுவிட்டதாகவும்; அப்படியே வாழவன் துண்டராயற்கும் தம்பி தமையன்மார் பிள்ளைகளும் மருமகன்களும் மைத்துனர்களுக்கும் துண்டராயர் இறந்ததையும் துண்ட ராயன் அவன் தம்பி தமையன் மருமக்களிலும் பெண்டாட்டி இன்பர் இறந்ததும் பலநாள்களாக  பல நாட்டிலும் பேசப்பட்டது. இதனால் கோப்பண்ணன் நரசிங்கதேவன் மகன் அடியார்க்கு  நல்லானுக்கும் துண்டராயன் மகன் இராகுத்தனுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு அதை மதித்து நடக்க வேண்டும் என்றும் திருவரன்குள கோவில் பொறுப்பாளர்களும் இதை கவனித்து வருவராக என்றும் கூறப்பட்டுள்ளது. பத்து பணம், இருபது பணம் என்பதுதண்டத் தொகையா?

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 34, பக். 282.

    Share
  • பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

    பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

    முனைவர்  க. மங்கையர்க்கரசி
    உதவிப் பேராசிரியர்
    A M ஜெயின் கல்லூரி
    மீனம்பாக்கம்
    சென்னை – 600 114

    முன்னுரை

    நமது நாட்டில் பேச்சு வழக்கில் பல்வேறு பழமொழிகள் இடம்பெற்று வருகின்றன. சில பழமொழிகளை நேரம், இடம், சூழ்நிலை ஆகியவற்றிற்கேற்ப நாம் பேசி வருகின்றோம். சில பழமொழிகளுக்குரிய சரியான விளக்கங்களையே நாம் பேசுகின்றோமா எனில் இல்லை என்றே கூறலாம். சில பழமொழிகளின் உண்மையான விளக்கங்களை நாம் தெரிந்து பயன்படுத்துவோம்.

    1. சிவ பூஜையில் கரடி

    வீட்டிற்குள் தேவையற்ற நேரத்தில் ஒரு நபர் வந்து விட்டால் அவர்களை குறிக்கவே இந்தப் பழமொழி என்பது பொருள் அல்ல.

    “சிவபூஜையில் கரடிகை” என்பதே சரியானதாகும்.

    சிவபூஜையின் போது முக்கியமாக பயன்படுத்தப்பட்ட ஓர் இசைக் கருவிதான் கரடிகை. பழங்காலத்தில் தெய்வவழிபாட்டின் போது, பல்வேறு இசைக் கருவிகள் இசைக்கப்பட்டன. அவற்றில் கரடிகை ஒன்று. கரடி கத்துவது போல ஓசை எழுப்பக்கூடிய கருவி என்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. மிருதங்கத்தைப் போல மரம், தோலால் செய்யப்பட்ட கருவி இது. தாள இசைக் கருவியாகப் பயன்பட்டது. கம்பராமாயணத்தில் (8445) என்ற பாடலிலும் அருணகிரிநாதர் பிள்ளைத்தமிழிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

    சிவபூஜையில் கரடிகை என்பதே சரியான பொருளாகும்.

    1. விதையொன்று இட்டால் சுரையொன்றா முளைக்கும்

    ஒரு பயிரினுடைய விதையைப் போட்டால் வேறொரு பயிர் முளைக்காது. அதே பயிர்தான் முளைக்கும் என்பது ஏதோ ஒரு செடி வளர்க்கும் முறை பற்றியது என்பது பொருள் அல்ல.

    இது மனிதனின் விந்தணுக்களில் உள்ள கூறுபாடுகளைக் குறிக்கும். ஒருவன் உடலில் உள்ள ஜீன்களின் எண்ணிக்கை, குணாதிசயங்கள் ஏழு மூதாதையர்களின் அந்தந்தக் கூறுபாடுகளின் எண்ணிக்கைபடி அமைந்திருக்கும் என்பதே சரியான பொருளாகும்.

    1. குமரியை வெல்ல குமரியை உண்க

    ஒரு குமரியை வெல்ல வேண்டுமானாலும் அந்தக் குமரியை உண்ண வேண்டும் என்பது பொருள் அல்ல.

    இதில் இரண்டாவது வரும் குமரி என்பது சோற்றுக்கற்றாழை. உடலுக்கு இளமையும், வனப்பும், நிம்மதியான தூக்கத்தையும் கொடுக்க வல்லது ஆகும். இதைத் தினமும் உட்கொண்டால் குமரிப்பெண்களை வெல்லும் ஆற்றல் கிடைக்குமாம் என்பதே சரியான பொருளாகும்.

    1. யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.

    யானை உடல் வலிமை மிக்கது. அதற்கு ஒரு காலம் வந்தால், உடல் வலிமை குறைந்த பூனைக்கும் ஒரு காலம் வரும் என்பது பொருள் அல்ல.

    “ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும்”

    ‘ஆ’ நெய் என்பது பசுவின் (ஆ – பசு) நெய், அதை இளமைக் காலங்களில் உண்டு வர உடலுக்கு நன்மை தரும். உடனடியாக உடலுக்கு அழகும், ஆரோக்கியமும் கிடைக்கும். ‘பூ’ நெய் என்றால் தேன் (பூவிலிருந்து கிடைப்பதால், அதை முதுமைக் காலங்களில் உட்கொண்டால் உடலுக்கு எந்தவிதத் தீங்குகளும் ஏற்படாமல் பாதுகாக்கும் என்பதே சரியான பொருளாகும்.

    1. பொன்னுக்கு வெள்ளி கால் மாத்து

    தங்கத்தின் மதிப்பிற்கு ஈடாக, இணையாக, வெள்ளியை அளிக்க வேண்டும் என்பது பொருள் அல்ல.

    தில்லை சிதம்பரத்திற்கு ‘பொன்னம்பலம்’ என்று பெயர். மதுரைக்கு ‘வெள்ளியம்பலம்’ என்று பெயர். பொன்னம்பலத்தில் தனது இடக்காலைத் தூக்கி ஆடுகின்ற சிவபெருமான், வெள்ளியம்பலத்தில் வலக்காலைத் தூக்கி ஆனந்த நடனம் ( காலைமாற்றி) ஆடுகின்றார் என்ற கருத்தைத் தெரிவிக்க எழுந்ததே என்பதே சரியான பொருளாகும்.

    1. பத்துக்கு மேல் பத்தினி இல்லை

    இரவு பத்து மணிக்கு மேல் யாரும் பத்தினி இல்லை என்பது பொருள் அல்ல. நமது புராணத்தில் சொல்லப்படுகின்ற அருந்ததி, அநசூயை, அகலிகை, சீதை, சாவித்திரி, சந்திரமதி, தமயந்தி, நளாயினி, கண்ணகி, மண்டோதரி போன்ற பத்துப் பேரைத் தவிரப் பத்தினித் தெய்வங்கள் வேறு இல்லை என்பதே பத்துக்கு மேல் பத்தினி இல்லை என்பதாகும். இதுவே சரியான பொருளாகும்.

    1. நொறுங்கல் தின்றால் நூறு வயசு

    நொறுங்கல் என்பது ஸ்நேக்ஸ் என்றோ, கண்டதை எல்லாம் தின்றால் நூறு வயது வரை வாழலாம் என்பதோ பொருள் அல்ல.

    நாம் சாப்பிடும் உணவை வாயில் போட்டவுடன் விழுங்கி விடாமல், நிதானமாகப் பற்களுக்கு இடையில் நன்குமென்று, அரைத்துக் கூழாக்கி மென்று தின்றால், நூறு வயது வரை நோயின்றி வாழலாம் என்பதே சரியான பொருளாகும்.

    1. சேலை கட்டிய மாதரை நம்பாதே

    சேலை கட்டிய பெண்ணை நம்பாதே; அப்படியானால் சுடிதார் மாட்டிய மாதரை நம்பு என்பது பொருள் அல்ல.

    ‘சேல்’ என்றால் ‘கண்’ தன் கணவனுடன் இருக்கும் போது, கண்களை அகட்டி, வேறு ஓர் ஆடவனைப் பார்க்கும் பெண்களை நம்பாதே, கண்களின் நோக்கம் (பார்வையில் தவறான எண்ணத்தில் ஆடவனை பார்க்கும் தவறான பெண்களை (விலைமாதரை) நம்பாதே. அவர்கள் பின்சென்றால் சொல்ல முடியாத துன்பமும், துயரமும், நோயும் வரும் என்பதே சரியான பொருளாகும்.

    1. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே

    மண்ணால் செய்யப்பட்ட குதிரை தண்ணீரில் கரைந்துவிடும். அதை நம்பிக் கரையைக் கடக்க இயலாது என்பது பொருள் அல்ல. ஏமாற்றம் அடையாதே என்பது அல்ல. நம்பக்கூடாததை நம்பி, நம்ப முடியாததை நம்பாதே என்பது பொருள் அல்ல.

    ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால் உள்ளே பதியும், நாம் கீழே விழுந்து விடவோ, உள்ளேயே புகுந்துவிடவோ ஏதுவாகும். எனவே இந்த மண் (குதிர் ஐ) குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பதே சரியான பொருளாகும்.

    1. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

    நல்லது எதுவும் நடந்தாலும் அது பெண்ணால் தான் வரும் என்றும், அழிவு வந்தாலும் அது பெண்ணால் தான் வரும் என்பது பொருள் அல்ல.

    நல்லவை ஆவதும் பெண்ணாலே, தீயவை அனைத்தும் அழிவதும் பெண்ணாலே என்று பொருள்

    அரக்கர்கள் பெரும்பாலும் இறைவனை வேண்டி தவமிருந்து வரம் பல பெற்றபோது, தமக்கு இறப்பே வரக்கூடாது என்றும் இப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்றும் வேண்டுவர். உதாரணமாகக் காஞ்சிபுர காமாட்சி அவதாரம்.

    1. ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்

    ஆடி மாதம் காற்று பலமாக வீசும். கடினமான பொருளான அம்மியும் பறந்து விடும் என்பது பொருள் அல்ல.

    சித்திரை மாதம், வைகாசி மாதம் வெயில் காலம். அக்னி நட்சத்திரம். வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அதனால் பலருக்கும் அம்மை நோய் ஏற்படும். அது ஒரு நோய்த்தொற்று. எனவே வீட்டில் ஒருவருக்கு வந்தால் கூட, பலருக்கும் வரும் அபாயம் உண்டு. ஆனி, ஆடி மாதத்தில் தட்பவெப்பநிலை மாறிவிடும். அம்மை நோயும் ஏற்படாது. தொற்றும் இருக்காது என்பதால் ஆடிக் காற்றில் அம்மையும் பறந்து போய்விடும். நோயின் தன்மையும் குறைந்து, இல்லாமல் போய்விடும் என்பதே சரியான பொருளாகும்.

    1. பந்திக்கு முந்து படைக்குப் பிந்து

    திருமணம் முதலிய சுபநிகழ்ச்சிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே முதல் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டால், அனைத்து உணவு வகைகளும் கிடைக்கும். தாமதமாகச் சென்றால், சில உணவு வகைகள் காலியாகிவிடும், எனவே பந்திக்கு முதலில் செல். படை, போர் என்று வந்தால் தாமதமாகச் செல் முதலில் போர் செய்து பலர் இறந்துவிடுவர். போரும் முடிவுக்கு வந்துவிடும். இறுதியில் சென்றால் உயிர்க்குப் பிரச்சனை ஏற்படாது என்பது பொருள் அல்ல.

    பந்திக்கு முந்து என்றால் நாம் சாப்பிடப்போகும் போது வலக்கை முன்னோக்கிச் செல்கிறது. முற்காலத்தில் போர் என்றால் வில்லே முதன்மையான போர்க்கருவியாகும். எவ்வளவு தூரம் வலக்கை வில்லின் நாணைப் பிடித்து பின்னால் இழுக்கிறதோ,அந்த அளவுக்கு அம்பு வேகமாகப் பாய்ந்து இலக்கைத் தீர்க்கும் என்பதே சரியான பொருளாகும்.

    1. ஆத்தில் போட்டாலும் அளந்து தான் போடணும்

    எந்தப் பொருளை ஆற்றில் கொண்டு போய் போட்டாலும் அளந்து பின்பே போடணும் என்பது பொருள் அல்ல.

    அகத்தில் அதாவது வயிற்றில் சாப்பிடும் சாப்பாட்டை நேரம், காலம், அளவு என்று அறிந்து தான் போட வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

    ஏதாவது ஒரு பிரச்சனைக் குறித்து மனத்தில் (அகத்தில் போட்டாலும், தேவையான சிந்தனையை மட்டுமே போட வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியம் பெறும் என்பதே சரியான பொருளாகும்.

    1. விருந்தும் மருந்தும் மூணு நாள்

    விருந்துக்கென ஒரு வீட்டிற்குச் சென்றாலும் 3 நாள் மட்டுமே. மருந்து சாப்பிட்டாலும் 3 நாள் மட்டுமே என்பது பொருள் அல்ல.

    ஒரு வாரத்தில் ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய குளிர் நாட்களில் நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும். செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உணவைக் குறைவாய் உட்கொண்டு மருந்துபோல் உண்ண வேண்டும் என்பதே சரியான பொருளாகும்.

    1. அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்டது போல

    நாடாளும் அரசனை நம்பி, தாலி கட்டிய புருசனைக் கைவிட்டது போல என்பது பொருள் அல்ல.

    அரசனை என்பது அரச மரத்தைக் குறிக்கும். திருமணமான பெண்கள் பிள்ளைப்பேறு பெற அரச மரத்தைச் சுற்றுவார்கள். கட்டிய கணவனைக் கவனிக்காமல், வெறும் அரச மரத்தைச் சுற்றுவது பயன் தராது என்பது சரியான பொருளாகும்.

    1. கண்டதைக் கற்றால் பண்டிதன் ஆகலாம்

    ஒருவன் கண்டதை எல்லாம் படித்தால், பண்டிதன் ஆகலாம் என்பது பொருள் அல்ல.

    எதை கற்க வேண்டும் என்று கண்டு, அதைக் தெளிவாகக் கற்றால் பண்டிதன் ஆகலாம் என்பதே சரியான பொருளாகும்.

    1. பெண் புத்தி பின் புத்தி

    பெண்ணின் புத்தி எதையும் யோசிக்காமல் செய்துவிட்டு, பின் அதைப் பற்றி யோசிக்கும் என்பது பொருள் அல்ல.

    பெண்ணின் புத்திசாலித்தனம், பின்னால் வருவனவற்றை முன் கூட்டியே அறிந்து, அதைச் சரிசெய்துவிடும் அளவிற்கு கூர்மையானது  (பின் – pin) போன்றது என்பது சரியான பொருளாகும்.

    1. ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி

    ஒருவன் ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றால், அரசன் போல் வசதி வாய்ப்புகள் இருந்தாலும், ஆண்டியாகி வறுமைநிலையை அடைவான் என்பது பொருள் அல்ல.

    ஆடம்பரமாய் வாழும் தாய், பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன், ஒழுக்கம் தவறும் மனைவி, துரோகம் செய்யும் உடன்பிறப்பு, பிடிவாதம் பிடிக்கும் பிள்ளைகள் இந்த ஐந்தும் கொண்ட எந்தக்குடும்பமும் முன்னேறாது என்பது சரியான பொருளாகும்.

    1. பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க

    பதினாறு குழந்தைகளைப் பெற்று பெரிய குடும்பமாக வாழ்க, என்பது பொருள் அல்ல.

    அபிராமிபட்டர், அபிராமி அந்தாதியில், ஒரு மனிதன் வாழ்வில் நிம்மதியாக, மகிழ்ச்சியுடன் வாழத் தேவையானது என்று, பதினாறு கிடைத்தற்கரிய பேறுகளைக் குறிப்பிட்டு இறைவனிடம் தர வேண்டும் என்று மன்றாடி வேண்டுவார். அவர் வேண்டிய பதினாறு வகையான பேறுகளாக உடலில் நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம், ஒப்பற்ற அழகு, அழியாப்புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட வாழ்நாள், எடுத்த காரியத்தில் வெற்றி, நல்ல ஊழ் (விதி) மற்றும் இன்ப நுகர்ச்சி பெற்று வாழ்வதே வாழ்வு என்கிறார். இதுவே சரியான பொருளாகும்.

    1. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

    சட்டியில் சாப்பாடு இருந்தால், அகப்பையில் வரும். என்பது பொருள் அல்ல.

    குழந்தை இல்லாத பெண்கள், கந்தசஷ்டி விழா ஆறு நாட்களும் விரதம் இருந்து, முருகனை வழிபட்டால், அவர்களுடைய அகப்பையாகிய கருப்பப்பையில் குழந்தைப்பேறு கிடைக்கும். என்பதே சரியான பொருளாகும்.

    1. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

    ஒரு மருத்துவர் தன்னுடைய தொழிலில் ஆயிரம் பேரைக்கொன்றால் தான்/ அவர் அரை வைத்தியன் (பாதி) என்பது பொருள் அல்ல.

    நமது நாட்டில் சித்த வைத்தியமே ஒரு காலத்தில் சிறப்பாக இருந்து வந்துள்ளது. மருத்துவர்கள் பல்வேறு மூலிகைகளை, அதன் வேர்களைக் கொன்று, அதாவது அரைத்து அவற்றின் பயன்களை நன்கு தெரிந்து, மக்களின் நோய்களைக் குணப்படுத்தி வந்தனர். அப்படிக் குறைந்தது ஆயிரம் மூலிகைகளின் வேர்களை, அவற்றின் பயன்களைத் தெரிந்து, வைத்தியம் செய்பவரையே அரை வைத்தியர் என்று நம் முன்னோர் கூறினர் என்பதே சரியான பொருளாகும்.

    1. போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை – வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை

    வேலையே கிடைக்காதவனுக்கு போலீஸ் வேலை, வக்கற்றவன் வறுமை நிலையில் உள்ளவனுக்கு வாத்தியார் வேலை என்பது பொருள் அல்ல.

    போக்குக் கற்றவனுக்குப் போலீஸ் வேலை, வாக்குக் கற்றவனுக்கு வாத்தியார் வேலை. போலீஸ் வேலையில் சேர்பவனுக்கு வலுவான உடலமைப்பு, மிடுக்கான நடை, அதாவது லெப்ட், ரைட் என்று காலைத் தூக்கி வைத்து, போவதும் வருவதும் ஆகிய நடைப்போக்கினைக் கற்றவன். திருடனை அவனுடைய போக்கிலேயே விட்டு, பின் தொடர்ந்து சென்று, மொத்தக் கூட்டத்தையே பிடிப்பது. ஆசிரியராக இருப்போர் தாம் கற்றுத் தேர்ந்து பேசுகின்ற வாக்குச் சாமர்த்தியத்தில், மாணவர்களை ஈர்க்கும் திறம் உடையவராய் இருத்தல் வேண்டும். இவைகளை உணர்ந்தே போக்கு கற்றவனுக்குப் போலீஸ் வேலை, வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை என்பதே சரியான பொருளாகும்.

    1. களவும் கற்று மற

    திருட்டுத்தொழிலையும் கற்று மறந்து விடு என்பது பொருள் அல்ல.

    திருவள்ளுவர் தம் குறளில் இன்பத்துப்பாலை களவியல், கற்பியல் என்று இரண்டாகக் கூறி கற்பியல் மட்டுமே தெரிந்து வாழ்க்கை நடத்தினால் போதாது, களவியலையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்த வந்ததே இப்பழமொழி. இதுவே சரியான பொருளாகும்.

    1. கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்

    நாயைக் கண்டால் கல்லைக் காணோம். தெருவில் கல் கிடக்கிறது. அதை எடுத்து நாயை அடிக்கலாம் என்று பார்த்தால், நாயைக் காணவில்லை. நாயைப் பார்க்கும் போது, அதை அடிக்க வேண்டும் என்று எண்ணினால் கல்லைக் காணவில்லை என்பது பொருள் அல்ல.

    கல்லில் செய்த ஒரு நாயின் உருவம் சிற்பக்கலை, கட்டடக்கலை நிபுணர்கள் காணும்போது /அந்த நாய் கருங்கல்லில் ஆனதா, பளிங்குக்கல்லா, சலவைக்கல்லா என்று அந்த எண்ணத்தில் காண்பர். அவர்கள் கண்களில் அந்த நாய் உருவம் தோன்றுவதில்லை. கல் சிற்பமாகவே தோன்றுகிறது. கல் என்று காணும் போது நாய் என்பது புலப்படவில்லை. அது சாதாரணக் கண்களால் பார்க்கும்போது நாய் என்று புலப்படுகிறது. (நாயின் வாலை நிமிர்த்தி நிற்கும் அதன் எடுப்பானத் தோற்றம்)

        கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்
    நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்

    ஒரு கல்லில் (சிற்பத்தில் அழகிய, எடுப்பான கம்பீரமான நாயகனைக் காணும் போது, அது எவ்வகையானக் கல் என்று தோன்றாது எவ்வகை கல் என்று காணும் போது, நாயகன் நம் கண்களுக்குப் புலப்படாது. இதுவே சரியான பொருளாகும்.

    1. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு

    இவ்வுலகில் பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீர வேண்டும். ஆறு வயதானால் என்ன, நூறு வயதானால் என்ன என்பது பொருள் அல்ல.

    மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி, பாண்டவர்களுடன் கர்ணனைச் சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்த்து ஆறாவதாக வந்தாலும், கௌரவர்களுடன்  சேர்த்து நூறாவதாக வந்தாலும், (துரியோதனனுக்கு உடன் பிறந்தோர்கள் 99 ஆண், 1 பெண் ) தனக்குச் சாவுதான் என்பதே சரியான பொருளாகும்.

    1. உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு

    குறைவாகச் சாப்பிட்டு, உடலை அழகாக, ஆரோக்கியமாக வைத்திருத்தல் பெண்டிற்கு அழகு என்பது பொருள் அல்ல.

    உண்டி என்பது சாப்பாடு. அதைச் செய்வதற்கான நேரம் அதிகமாகும் போது, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்ற விசயங்களில், பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலைக் குறுகிய நேரத்திற்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு என்பதே சரியான பொருளாகும்.

    1. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்

    அடுத்த வீட்டுக்குழந்தையை ஊட்டி வளர்த்தால் தன்னுடைய பிள்ளை தானே வளரும் என்பது பொருள் அல்ல.

    ஒருவனுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும்போது (என்ன தான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னோருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாகக் கவனித்துக் கொண்டால், அவளுடைய வயிற்றில் வளரும் தன் பிள்ளை தானாகவே வளரும், என்பதே சரியான பொருளாகும்.

    1. ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம்

    ஒரு திருமணம் நடக்க வேண்டுமென்றால், ஆயிரம் பொய்கூடச் சொல்லலாம் என்பது பொருள் அல்ல.

    ஆயிரம் பேருக்குப் போய்ச் சொல்லி (அழைப்பிதழ்) தந்து திருமணத்தை நடத்தலாம். மாப்பிள்ளை பெண் எப்படி என்ற விபரமும் தெரியவரும். ஆயிரம் பேரின் ஆசிர்வாதமும் கிடைக்கும்.

    ஆயிரம் தடவை போய் சொல்லி (அந்த காலத்தில் தொலைத்தொடர்பு, வாகனங்கள் ஏதும் இல்லாத நிலையில்) ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் உரிய நேரம் எது, என்பதை ஒவ்வொன்றாகப் போய்ச்சொல்லியே திருமணத்தை நடத்தலாம் என்பதே சரியான பொருளாகும்.

    1. சோழியன் குடுமி சும்மா ஆடுமா

    சோழியன் குடுமி சும்மா ஆடாது, காசு கொடுத்தால் தான் ஆடும் என்பது பொருள் அல்ல.

    தலையில் ஒரு பொருளை வைத்துத் தூக்கிச் செல்ல, துணியை வட்டமாகச் சுற்றி சும்மாடு செய்வர். அதன்மேல் பொருளை வைத்து, தலைச் சுமையாகச் சுமந்து செல்வர். ’சோழியன் தலையில் உள்ள வட்டமான குடுமி சும்மாடு ஆகுமா?’ ஆகாது என்பதே சரியான பொருளாகும்.

    1. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

    கழுதைக்கு முன்னால் கற்பூரத்தைக் காட்டினாலும் அதனுடைய நல்ல வாசனை கழுதைக்குத் தெரியாது என்பது பொருள் அல்ல.

    கழு என்பது ஒரு வகை புல், அதைப்பயன்படுத்தி, படுக்கும் பாய் செய்வர். அதிலிருந்து கற்பூர வாசனை தெரியும். ‘கழு’ என்ற புல்லைப் பறித்த போதும், பாயாகச் செய்து தைத்தபோதும், படுக்கும்போதும் அவர்களுக்கே தெரியுமாம். கற்பூர வாசனை என்பதே சரியான பொருளாகும்.

    1. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

    விவசாயம் செய்பவர்கள் அறுவடை முடிந்தபின் நல்ல நெல்லுடன் சாவி நெல்லும் கலந்திருக்கும். நல்ல நெல்லைப் பிரித்தெடுக்க, நெல்லை முறத்தில் இட்டு, காற்று அடிக்கும் திசையின் எதிர்த்திசையில் நின்று தூற்றுவர். அப்போது, நல்ல நெல் கீழே விழும்; சாவி நெல் காற்றில் பறந்து போகும். அப்படிச் செய்ய காற்று தேவைப்படும். எனவே காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது பொருள் அல்ல.

    நாம் உயிருடன் இருக்கும் (காற்றுடன்) இருக்கும் போதே நல்ல விசயங்களைச் செய்துகொள்ள வேண்டும். இனி ஒரு பிறவி வராத அளவுக்கு நல்லதையே செய்ய வேண்டும் என்பதே இதன் சரியான பொருளாகும்.

    1. ஐயம் இட்டார் கெட்டார்

    ஐயம் என்றால் பிச்சை. ஔவையாரும் ‘ஐயம் இட்டு உண்’ என்கிறார். தர்மம் செய்தால் கெட்டுப்போவான் என்பது பொருள் அல்ல.

    தர்மம் செய்தால் யாரும் கெட்டுவிடமாட்டார்கள். மாறாக புகழோடு நன்றாக வாழ்வார்கள் என்று வலியுறுத்தும் வகையில் ஐயம் இட்டு யார் கெட்டார்; கெடமாட்டார்கள் என்பதே சரியான பொருளாகும்.

    1. காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் காக்கா பிடி

    நாம் விரும்பிய காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் காக்கா பிடி என்பது பொருள் அல்ல.

    நாம் விரும்பிய காரியத்தைச் சாதிக்க வேண்டுமெனில் கால், கையைப் பிடித்தாவது கெஞ்சி வேண்டியபடி நடந்து கொள்ள வேண்டும் என்பதே சரியான பொருளாகும்.

    1. தண்ணியைச் சாப்பிடு, சாப்பாட்டைக் குடி

    தண்ணீர் குடிப்பதைக் கூட சாப்பாட்டு அளவுக்கு சாப்பிடு, சாப்பாட்டை கூழ் பதத்தில் குடி என்பது பொருள் அல்ல.

    தண்ணீரைக் கடகடவென வேகமாகக் குடிக்காமல் (வேகமாகக் குடித்தால் சில நேரங்களில் புரை ஏறிவிடும்) திடப்பொருளைப் போல் மெதுவாக, மென்று விழுங்க வேண்டும் என்றும், திட உணவைப் பற்களிலேயே நன்றாக அரைத்துக் கூழாக்கிக் குடிக்க வேண்டும் என்பதே சரியான பொருளாகும்.

    ஏனென்றால் உமிழ்நீரில் தான் உணவைச் சீரணமாக்கும் தன்மை உள்ளது. பாதி வேலை பற்களில் முடிந்து விடுவதால் இரைப்பைக்கு, குறைவான வேலையே கொடுக்கப்படுகிறது. இது நீடித்த உடல் இயக்கத்திற்கும், நீண்டநாள் வாழ்விற்கும் வழிசெய்கிறது.

    முடிவுரை

    பழமொழிகளின் சரியான விளக்கங்களைத் தெரிந்து, பொருத்தமான பழமொழிகளைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தி வாழ்வில் மேன்மை அடைவோம்.

    *****

    துணைநூற் பட்டியல்

    1. சிவபாரதி, ஆன்றோர்கள் கண்ட அறிவியல், ப்ரீமியர் பதிப்பகம்
      தஞ்சாவூர்.
    2. மெய்யப்பன், தமிழ்ப் பழமொழிகளில் அறிவியல், வானதி         பதிப்பகம், சென்னை.

     

     

     

     

     

     

     

     

    Share
  • குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.1

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.1

    -மீனாட்சி பாலகணேஷ்

    குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.1

      (ஊசற்பருவம்) 

    பெண்பால் பிள்ளைத்தமிழில் அடுத்த பருவமாக நாம் காண்பது ஊசல் பருவம். வேகமும் விறுவிறுப்பும் நிறைந்த விளையாட்டுகள், ஓடியாடும் சிறுவர் சிறுமியர்களுக்கு மிகவும் விருப்பமானவை. ஊசலில் உட்கார்ந்து கொண்டு, தோழியர் உந்தி விட, காலால் தரையை எம்பி உதைத்து , உயரே உயரே எழுந்து வீசியாடுவது ஊசற் பருவம். இப்பருவம் ஐந்தாண்டிலிருந்து ஒன்பது ஆண்டுகள் வரை நிகழ்வதாகக் கூறப்படும். ஊசலாடி மகிழ்வது பெண்பிள்ளைகளுக்கே உரித்தான ஒரு விளையாட்டு அனுபவம். வளரும் பெண்மக்களுக்கு இது ஆரோக்கியமான உடற்பயிற்சியுமாகும்.

    மயில்கள் தோகைவிரித்து நடனமாடும், குயில்கள் கீதமிசைக்கும் அழகானதொரு மலர்ச்சோலையில் மயில்போன்ற பெண்கள் சிலரும் தமது குயில் குரலில் பாடியவாறு ஊஞ்சல்கட்டி இன்பமாக ஆடுகின்றார்கள். புங்கமரம் ஒன்றின் தாழ்வான கிளையில் வலுவான கொடிகளைக் கொண்டு கட்டிய அழகான ஊ(ஞ்)சல். அதில் அன்றலர்ந்த தாமரை போல அமர்ந்து கால்களால் உதைத்து எழும்பி வீசியாடுகிறாள் ஒரு சிறுபெண். கொடி போன்ற உடலும், நீண்ட கூந்தலும் ஆடைகளும் அணிகலன்களும் உடன்வீசி இயைந்து ஆடுகின்றன. 

    இந்த  இளம்பெண்கள் தமது அரசனைப்பற்றி பெருமையாகப் பாடுகிறார்கள். இவர்கள் பாடுவது ஊசல்வரி; இது சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் தீட்டும் காட்சி: 

    ஐந்துபேர் பஞ்ச பாண்டவர்கள்; நூற்றுவரான கௌரவர்கள்; இவர்கள் தமக்குள் பகைகொண்டு பெரும்போர்செய்தபோது, அந்தப்போரில் இருவருடைய படைகளுக்கும் அள்ள அள்ளக்குறையாது உண்பதற்குச் சோற்றினைக் கொடுத்தவன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் எனும் சேரமன்னனாவான். அவனுக்கு ‘பொறையன்’, ‘மலையன்’ எனும் பெயர்களும் உண்டு. “அவனுடைய பெயர்களைக் கூறி, அவன் புகழினைப்பாடி நாம் ஊசலாடலாமா?” என்று ஒருத்தி தோழிகளைக் கேட்கிறாள். “நமது கருமுகில் போன்ற குழல் காற்றில் அலைந்தாட, அந்தக் கடம்ப நாட்டினை வெற்றிகொண்ட அவனுடைய புகழைப்பாடி ஊசல் ஆடலாமே,” என அடுத்தவள் மறுமொழி கூறுகிறாள். 

    ஓரைவ ரீரைம் பதின்மர் உடன்றெழுந்த

    போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த

    சேரன் பொறையன் மலையன் றிறம்பாடிக்

    கார்செய் குழலாட ஆடாமோ வூசல்

    கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ வூசல்1

    இவ்வாறு தங்கள் அரசனான சேரனையும் அவன் பரம்பரையையும் போற்றிப்பாடி மகிழ்ச்சியாகப் பெண்கள் ஊசலாடுகின்றனர். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவிலெடுத்த திருவிழாவில் இவர்கள் இவ்வாறு பாடி ஆடுகிறார்கள்! 

    மனம்மகிழ்ந்து உவகை ஊற்றெடுக்கும்போது, எண்ணங்கள் சிறகடித்து வானில் பறக்கும்போது, ஊசலில் அமர்ந்தாடினால் அது உயரே ஆகாயத்தின் அருகே கொண்டுபோவது போல ஒரு ஆனந்தமான அனுபவம் உண்டாகும். விண்ணை எட்டிவிட்டது போன்றதொரு மயக்கத் தோற்றம்.

    ஊசலைப்போலாடும் தொட்டிலிலோ தூளியிலோ உறங்கவைத்தால் குழந்தை ஆனந்தமாக, அமைதியாக உறங்குகிறது. சிறார்களுக்கு ஊசலாடி விளையாடுவது இன்பகரமான ஒரு அனுபவம். இளம்பெண்களுக்கும் ஊசலாடும்போழ்தில் தங்கள் கனவுகளும், காதல், மணவாழ்வு பற்றிய இனிமையான எண்ணங்களும் உருப்பெற்று, வலுப்பெற்று, நனவாகும் 

    சங்ககால மகளிர் ஆலமரம், வேங்கைமரம், புங்கமரக்கிளைகளில் ஊசல்கட்டி ஆடினார்கள். தினைப்புனம் காக்கும் பெண்கள் தாம் இருக்கும் பரண்மீதே ஊசல்கட்டி விளையாடினார்கள். அவர்கள் காதலர்களும் ஊசலை ஆட்டிவிடுவதற்கென அருகில்வந்து நின்றார்கள். 

    பெண்கள் மரங்கள் இல்லாதபோது இரு வேல்களை நாட்டி, அவற்றிடையே ஒரு கயிற்றைக்கட்டியும் ஊசலாடினார்கள்!

    இவ்வாறு காதல் விளையாட்டுகளிலும், மற்ற திருவிழாக் கொண்டாட்டங்களிலும் பெரும்பங்கு வகித்த ஊஞ்சல் விளையாட்டுகளில் பெண்கள் இறைவன் புகழைப் பாடி மகிழவும் வகைசெய்தவர் மாணிக்கவாசகர். 

    “நாராயணனும் கண்டறியாத இறைவனின் திருப்பாதங்களை எமக்கு அந்த ஈசன் மிக எளிதாகக் காட்டியருளினான். வேல்போன்ற கண்களையுடைய பெண்களே! அந்த உத்தரகோசமங்கை இறைவனின் புகழைப்பாடி பொன்னூசலில் அமர்ந்தாடுவீர்களாக,” என அன்போடும் ஆவலோடும் வேண்டுகிறார். 

    அவருடைய விருப்பப்படியே அவர்களும், “தோழிகளே! ஈசனின் புகழினைப் பாடுகிறோமல்லவா? அப்போது நாம் ஆடும் ஊசலும் அழகு மிகுந்ததாகவும், சிறப்புடையதாகவும் இருக்க வேண்டும். ஆகவே, பவளத்தூண்களைக் கால்களாக நடுவோம்; பருத்த முத்துக்களை இணைத்துக் கோர்த்துக் கயிறாக்கிப் பயன்படுத்துவோம்,” எனத் தோழிகளிடம் கூறுகிறார்கள். ஒருபெண் பொற்பலகை ஒன்றினை அதில் இணைக்க, ஒவ்வொருவராக அதில் ஏறியமர்ந்து பலவிதமாக ஈசன் புகழைப்பாடியாடி மெய்சிலிர்க்கிறார்கள். 

    இந்தத் தத்துவம் மிக எளிதாகப் புரிவது. கோவிலில் தெய்வத்தை வணங்கச் செல்லும்போதும், அரசனைக் காணச்செல்லும்போதும் நல்ல அணிமணிகள், பட்டாடைகளை அணிந்துகொண்டு செல்வதுண்டல்லவா? அதேபோல, இறைவன் பெருமைகளைப் பாடுவோரும் அழகாக உடையணிந்து, அழகான ஊசலில் அமர்ந்து அவனைப் பாடவேண்டும் எனும் ஆவல் இதிலும் விளங்குகிறது. பாடகர்கள் கச்சேரிகளில் அழகாக அலங்கரிக்கப்பட்ட மேடைகளில் கண்கவரும் ஆடைகள் அணிந்து அமர்ந்து பாடுகிறார்களல்லவா? அலங்கரிக்கப்பட்ட திருப்பொன்னூசலில் அமர்ந்து இறைவன் புகழைப் பாடுவதும் அப்படிப்பட்டதே!

    சீரார் பவளக்கால் முத்தம் கயிறாக

    ஏராரும் பொன்பலகை ஏறி இனிதமர்ந்து

    நாராயணன் அறியா நாள்மலர்த்தாள் நாய் அடியேற்கு

    ஊராகத் தந்தருளும் உத்தரகோச மங்கை

    ஆராவமுதின் அருள்தாள் இணைபாடி 

    போரார்வேல் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ2.

    திருப்பேரூரில் எழுந்தருளியுள்ள பட்டீசுவரப் பெருமானைக் கண்டு போற்றித் துதித்துவிட்டு வரும் பெண்கள் வழியிலுள்ள ஒரு மலர்ச்சோலையில் விளையாட நுழைகின்றார்கள். வழக்கமாக அவர்கள் ஆடும் ஊசல்கள் அங்கே மரக்கிளைகளிலிருந்து தொங்குகின்றன. சிலர் அவற்றிலேறி வீசியாட முற்படுகிறார்கள். ஆடும் வேகத்தில் அள்ளிமுடித்த நறுங்குழல் அவிழ்ந்து அலைந்தாடுகின்றது; கழுத்திலணிந்த முத்துமாலைகளும் பொன்னணிகளும் ஆடுகின்றன; மலர்ச்சோலையல்லவா? இவர்கள் ஊசலாடும் வேகத்தில் மலர்களில் தேனுண்ணும் வண்டுகளும் எழுந்தும் தாழ்ந்தும் ஆடுவனபோல் காட்சியளிக்கின்றன! விசையாக ஆடுவதால், பிறைபோன்ற நெற்றியில் வியர்வை அரும்பிப் படர்கிறது; தொங்கும் துளைச்செவியானதும் ஆடுகின்றது (அக்காலத்து மகளிர் காதில் பாம்படம் போன்ற பெரிய  அணிகளை அணிவதற்காக, காதுத்துளைகளை நீளமாகத் தக்கை முதலியனவற்றால் வளர்த்துக்கொண்டு அழகு செய்துகொள்வார்கள்; இதனை ‘வடிகாது’ என்பார்கள்). அக்காதிலணிந்த குழைகளும் கூடவே ஆடுகின்றன. கொடியிடையும், கைவளைகளும் ஆடிட, கோலமயில் போலும் பெண்களே நீங்கள் ஊசலாடுவீர்களாக! முத்தைப்பழிக்கும் புன்னகை கொண்டவர்களே! பால்போலும் இனிய சொல் பேசுபவர்களே! பட்டீசர் புகழைப் பாடி ஆடுவீராக!” எனப்பாடிய வண்ணம் ஒருவரை ஒருவர் ஊசலில் ஊக்கியபடி இவர்கள் ஊசலாடும் அழகு நமது கண்முன் காட்சியாகத்தோன்றி மகிழ்விக்கிறது. இறைவனின் அல்லது அரசனின் புகழைப்பாடும் ஒருவகைச் சிற்றிலக்கியம், பலவிதமான பாடல்வகைகளைக்கொண்டு, கலம்பகம் எனப்பெயர் பெற்றது. நடேசகவுண்டர் இயற்றியுள்ள திருப்பேரூர்க் கலம்பகத்தில் உள்ளதுதான் இந்த அழகான ஊசற்பாடல்:

    ஏலநறுங் குழலாட மாலை யாட

    இமிர்ந்தினவண் டாடமதி நுதல்வே ராடச்

    சாலவடி காதாடக் குழைக ளாடத்

    தளர்ந்துகொடி யிடையாட வளைக ளாடக்

    கோலமட மயிலனையீ ராடீ ரூசல்

    குளிர்முத்த மணிநகையீ ராடீ ரூசல்

    பாலனைய மொழிமடவீ ராடீ ரூசல்

    பட்டீசர் பேர்பாடி யாடீ ரூசல்3.

    இதில் ஊசலாடும்போது உண்டாகும் இன்பமும்,  இன்னும் என்னவெல்லாம் பெண்களுடன் ஊசலாடும், எனவும் அழகுற விளக்கப்பட்டுள்ளன.  அழகான இளம்பெண்கள் ஊசலில் ஆடுவதைக் கண்ட கவிஞர்கள் அன்னை தெய்வத்தின் மீதான பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் ஊசல்பருவத்தை இணைத்துப்பாடி மகிழ்ந்தனர். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலிருந்து இலக்கியச்சுவையும், பக்திரசமும் ததும்ப, அன்னை ஊசலில் ஆடுவதனாலேயே உலகங்கள் இயங்குகின்றன எனும் பிரபஞ்ச இயக்கத் தத்துவத்தினைக் குமரகுருபரனார் ஊஞ்சல் விளையாட்டுடன் இணைத்துக்கூறும் நயம் மிக அருமையானது:

    ‘மீனாட்சியாகிய இளமங்கை சுவைமிகுந்த பாடல்களை அமுதம் ஒழுகப் பாடியபடி பொன்னூசலில் ஆடுகின்றாள். அதனைக் கேட்ட சிவபிரான் மகிழ்ந்து தனது திருமுடியை அசைக்கின்றார்; அவருடைய முடிமீது பாம்புகளுக்கெல்லாம் அரசனான ஆதிசேடன் உள்ளான்; உலகங்களையெல்லாம் தாங்கும் அவனுடைய தலையும்  இதனால் அசைகின்றது. தலையசைந்தால் தலைமீதுள்ள உலகங்களும் அசைய வேண்டியதுதானே! அகில சராசரங்களும் அசைந்தாடுகின்றன; சொக்கநாதரின் திருவழகிற்கு இணையான கொடிபோன்ற இவள் ஊசலில் அசைந்தாடுவதனால் அண்டமும் அண்டபகிரண்டமும் ஆடுவதைப் போலத் தோன்றுகிறது,’ எனும் பாடல் நம்மை நெகிழ வைக்கிறது. 

    ‘சேர்க்குஞ் சுவைப்பாடல் அமுதொழுக ஒழுகுபொன் 

                திருவூசல் பாடியாடச் 

    சிவபிரான் திருமுடிஅசைப்ப 

          ……………………. தம்மனையசைந் 

     தாடலால் அண்டமும் அகண்டபகி ரண்டமும் 

      அசைந்தாடு கின்றதேய்ப்ப4 ‘

    தாம் எப்போதும் அகக் கண்ணில் கண்டு மகிழும் அன்னை மீனாட்சியின் திருவூசல் காட்சியில்  குமரகுருபரருக்கு இந்த அண்ட சராசரமே அசைந்து ஆடுவது போலத் தோன்றுகிறது; அருள் பெற்ற தமது தெய்வவாக்கினால் இதனை அழகுற விவரிக்கின்றார்: 

    அரசியின் ஊஞ்சலல்லவா? அதன் கால்கள் சிறந்த ஒளியுடைய பவளத்தால் செய்தவையாம்; பொங்கிப் பெருகி ஒழுகும் ஒளியையுடைய வைரங்களால் விட்டம் அமைந்துள்ளதாம்;  குளிர்ச்சி பொருந்திய செழித்த நிலவொளி பெருகி விழுந்தது போன்ற ஒளி பொருந்திய முத்து வடங்களைக் கட்டியுள்ளனர். ‘தண்’ணென்ற பௌர்ணமி இரவில் சந்திரனின் கிரணங்கள் ஊடுருவி அழகு செய்வது போல அவை தோன்றுகின்றன. மாணிக்கப் பலகையால் செய்த இருக்கையும் ஒளி வீசுகின்றது; எத்தனை அள்ளினாலும் திரும்பவும் பெருகி  நிறைந்து வழிந்து ஒளி பொங்குகின்ற அருண ரத்தினப் பலகையாம் அது!

    ‘ஒள்ளொளிய பவளக் கொழுங்கால் மிசைப்பொங்கும்

    ஒழுகொளிய வயிர விட்டத்து

    ஊற்றும் செழுந்தண் நிலாக்கால் விழுந்தனைய

    ஒண்தரள வடம் வீக்கியே5…‘ என்கிறார்.

    ‘இத்தகைய அற்புதமான ஊஞ்சலில் அமர்ந்து ஆடுகின்ற உன் தோற்றம் தாயே, அந்தச் சூரிய மண்டலத்தில் வளர்கின்ற அரிய பெரிய சுடர் ஆகிய ஒளியை ஒத்திருக்கிறதே!’ என நெகிழ வைக்கிறார் புலவர்.

    ‘தன்’னை வென்று பரம்பொருளில் ஆழ்ந்து விட்ட பெரியோருக்கு அனைத்தும் இறை மயமாகத்தான் தெரியும்! ஆதி சங்கரரும் ‘உத்யத்பானு ஸஹஸ்ரகோடி ஸத்ருசாம்6,’ என்று மீனாட்சியின் ஒளிமயமான தோற்றத்தைப் போற்றியுள்ளார். உதிக்கின்ற ஆயிரம் கோடி சூரியர்களின் காந்தி பொருந்தியவளாம் அண்ட சராசரங்களுக்கும் முதல்வியான நம் அம்மை! இவள் குடியிருக்குமிடம் எதுவென்று தாம் உணர்ந்ததை எளியவர்களாகிய நமக்கும் விளக்குகிறார் குமர குருபரர். 

    உள்ளத்தில் திருவருள் நிரம்பியதால் அடியார்கள் ஆனந்தச் செருக்கு நிறைந்து விளங்குகின்றனராம்! தெய்வப் பேரருளை உணர்ந்தமையால், அதனால் விளைந்த பரமானந்த அலைகள் பொங்கும் கடலில் அவர்கள் மூழ்கித் திளைக்கின்றனர். ‘தெள்ளு சுவையமுதம் கனிந்த ஆனந்தத் திரைக்கடல் மடுத்து உழக்கும் செல்வச் செருக்கர்கள்7,’ என இத்தகைய அடியார்களைப் பெருமைப் படுத்துகின்றார். திருவருள் செல்வத்தினால் மெய்யடியார்களுக்கும் செருக்குண்டாகுமாம்! 

    ‘இறுமாந்திருப்பன் கொலோ, ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச் 

    சிறு மான் ஏந்தி (சிவபிரான்) தன் சேவடிக் கீழ்ச் சென்று அங்கு 

    இறுமாந்திருப்பன் கொலோ8,’ என திருநாவுக்கரசரும் இறைவனடியில் பணிந்து பெற்ற பேரருள் செல்வத்தால் தாம் இறுமாப்பு அடைந்ததைப் பாடியுள்ளார்.

    இத்தகைய அடியார்களின் மனத்தாமரையில் நெகிழ்ந்த  பூம்பஞ்சணையில் குடியிருக்கிறாள் மீனாட்சியன்னை. இங்ஙனம் இவள் இங்கு குடியிருப்பதனை உலகத்தினருக்கு அறிவிப்பது போல, அவர்கள் ஓதுகின்ற வேதம் எனப்படும் பறவைகள் ஒலியெழுப்புகின்றன. அன்னையும் அத்தனும் வேதத்தின் உட்பொருள்; ஆகவே, ஆகமப் பொருளாகி நிற்பவள் இவள் என்கிறார் குமரகுருபர அடிகளார்.

    இதனை முற்றுணர்ந்தவர்களாக, ‘பழ வேதமாய் அதன் முன்னுள்ள நாதமாய் விளங்குமிந்த வீரசக்தி வெள்ளம்9,’ என்று மகாகவி பாரதியார் கூறுகிறார்.

    ‘நானாயோகி முனீந்த்ர ஹ்ருந்நிவஸதீம்10 (யோகிகளும் முனிவர்களும் ஆகியோரின் நெஞ்சத் தாமரையில் உறைபவள்)’ என ஆதி சங்கரரும் கூறியுள்ளார்.

    ‘இவ்வாறு அடியார்களின் மனமாகிய தாமரையில் உறைபவளே, சுந்தரவல்லியே, பொன்னூசலில் ஆடியருளுக! 

    ‘…………………….பழையபாடல்

    புள்ளொலியெழக் குடிபுகுந்த சுந்தரவல்லி

    பொன்னூசல் ஆடியருளே

    புழுகுநெய்ச் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்தகொடி

    பொன்னூசல் ஆடியருளே11.!’ என்பது பாடல்.

    பொன்னூஞ்சலில் அமர்ந்துள்ள தடாதகையின் திருக்கோலத்தை மனக்கண்ணில் கண்டு மேலும் பாடுகிறார் புலவர்: “தேரிலேறிய போர்க் கோலத்தில் உன்னைக் கண்ட சிவபிரானின் உள்ளத்தில் முதலில் சினம் பொங்கியெழுந்தது! ஆனால் உனது அழகுத் திருக்கோலத்தைக் கண்டு சினத்தீ தணிந்து உள்ளத்தில் பற்றி எரியும் காமக்கனல் வளர்ந்து எழுந்தது! அந்தத் தீயின் கொழுந்து போன்றது அவரது சிவந்த சடை. உன்மேல் கொண்ட காதலால் அவர் உள்ளம் உருகியது போலவே, அவர் கையிலிருந்த வில்லான பொன்மேருவும் உருகியோடியது! (வில் அவர் கையை விட்டு நீங்கியது). அவர் முடியிலிருக்கும் சந்திரனும், அவர் ஏறும் காளைவாகனத்தின் மணி ஓசையும் அவர் கொண்ட காதல் நோயால் அவருக்கு மிகுந்த துன்பத்தைத் தந்தன!” என்கிறார்.

    இன்னும் கூறுகிறார்: “அழகான மேகத்தின் நீலமும் கருநிறமும் பொருந்திய கழுத்தை உடைய அப்பெருமான், உன்னைப்  போரில் எதிர்த்து வருந்தினார் அம்மையே! நீ அவர் மேல் கண்களாகிய அம்புகளைக் கரிய புருவங்களாகிய வில்லிலிருந்து செலுத்தினாய்; ஒரு கையில் போருக்கு வில்லையும் வளைத்து ஏந்தி நின்ற உந்தன் அழகுக் கோலத்தில் ஐயன் மயங்கினார்; அந்தப் போர்க்கோலமே உனக்கு திருமணக் கோலமான பெண்ணே, பொன்னூசலாடியருளுக,” என்கிறார்.

    ‘கண்கணை துரக்கும் கரும்புருவ வில்லொடொரு

    கைவில் குனித்து நின்ற

    போர்க்கோலமே திருமணக் கோலமான பெண் 

    பொன்னூசல் ஆடியருளே,’ என்பன பாடல் வரிகளாகும்.

    அன்னை ஊசலாடும்போது சுற்றும் புடை சூழ நிற்கும் இனிய தோழியரில் சிலர் பாடல்களை இசைக்கின்றனர்; இன்னும் சிலர் பரிகாசச் சொற்களைப் பேசி கேலி செய்கின்றனர். உயிர்த் தோழியான திருமகள், தரையைக் காலால் உந்தி உயர்ந்தெழும் ஊஞ்சலில் அமர்ந்துள்ள மீனாட்சியின் தாமரைத் திருவடிகளைப் பார்க்கிறாள்; வளைந்த பிறைத் தழும்பு அதில் தெரிகிறது. “வாணி, இதைப் பாரடி! என்ன இது இவள் மலரடியில், வலம்புரிச் சங்க ரேகையோ?” என்று கூவிப் பரிகசித்து முத்துப்பல் தோன்றச் சிரிக்கின்றாள்; ஊடல் காலத்தில் சிவபெருமானின் திருமுடியிலுள்ள பிறைநிலா அழுந்தியதால் வந்த தழும்பல்லவா அது? தோழியர் முகங்களில் குறும்புப் புன்னகை விகசிக்கின்றது! மீனாட்சிக்கு நாணம் மிகுகிறது. வணங்காத அவள் முடிக்கு அப்போது அந்த நாணம் ஒரு வணக்கத்தை வழங்குகின்றதாம்.

     ‘……………………மலர்மகள் அம்மை 

    உள்ளடிக் கூன்பிறை தழீஇ 

    மல்கும் சுவட்டினை வலம்புரிக் கீற்றிது கொல் 

    வாணி என்று அசதியாடி 

    மணிமுறுவல் கோட்ட12‘ என்பன பாடல் வரிகள். அசதியாடல் என்றால் பரிகசித்தல் எனப் பொருள். 

    குமரகுருபர அடிகளாரின் கவிநயமும் பொருள் நயமும் மிகுந்த பாடல், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற செந்தமிழ்ச் சொல்லோவியத்தின் நிறைவுப் பாடலாக அமைந்துள்ள பாடல், ஊசற் பருவத்தின் பத்தாவது பாடல், அன்னையின் பாதாதி கேச வர்ணனைப் பாடலாக அமைந்துள்ளது. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற தெய்வச் சிற்றிலக்கியத்திற்குத் திலகம் போன்று இப்பாடல் திகழ்கிறது.

    இரு திருவடிகளிலும் அணிந்துள்ள மென்மையான ஒலி எழுப்புகின்ற கிண்கிணியான சதங்கையும், முறையீடு செய்வது போன்று ஒலிக்கின்ற பரல்களையுடைய சிலம்புகளும் அணிந்த அம்மையின் மென்மையான மலர் போலும் திருவடிகளில் தேவரும் மூவரும் பணிந்து கிடக்கின்றனர். இவர்களுடைய முடிகளிலுள்ள கிரீடங்கள் அவர்கள் பணியும் போது அன்னையின் மெல்லிய திருவடிகளை அழுத்தி வருத்துகின்றன. இதனால் தான் திருவடிகளின் சார்பாகச் சிலம்புகள் வருத்தத்தை வெளியிட்டு முறையீடு செய்கின்றனவோ?

    ‘இருபதமும் மென்குரல் கிண்கிணியும் முறையிட்டு

    இரைத்திடும் சுரிச்சிலம்பும்13′

    காப்பிட்டு, செங்கீரையாடி, தாலாட்டி, சப்பாணி கொட்டி, முத்தம் தந்து, குறுநடை நடந்து, அம்புலியோடு ஆடி, அம்மானை விளையாடி, வைகை நீரிலாடி மகிழ்ந்து, அழகு பொங்க வளர்ந்து இன்று பொன்னூஞ்சலில் ஆடி நிற்கும் அன்னையின் திருவழகைக்கண்டு உள்ளம் பூரிக்கின்றது.

    ‘தடாதகையின் மென்மையான கொடி போன்ற இடையானது இற்றுப் போகுமே என்று அவ்விடையில் அணியப்பட்டுள்ள மேகலை இரங்கிப் புலம்புகின்றது. பொற்சரிகையால் சித்தரிக்கப்பட்ட பட்டாடை இவளுடைய சிறந்த மெல்லிடையை அலங்கரிக்கின்றது. மேலாடையும் ஒட்டியாணமும் அணிந்து சிவந்த கையில் பசுங்கிளியை ஏந்தி இருக்கிறாள்! இவளது அழகிய மார்பகங்களை முத்தாலாகிய மேலாடை அலங்கரிக்கின்றது. ஈசன் அணிவித்த மங்கலத் திருநாண் அதன் மீது திகழ்கின்றது. அழகு பொங்க நின்று அருளைப் பொழியும் நிலவு போன்ற திருமுகம்; முகமாகிய மதியினின்று  நிலவின் நீண்ட கிரணங்கள் போல அரும்பி வரும் புன்சிரிப்பும் கொண்டவள் இப்பெண்மணி,’ எனப் படிக்கும்பொழுதில் நமது கண்களில் ஆனந்த வெள்ளம் பெருகுகின்றது.

    இன்னும் மேலே போய் ‘சொல்லும் பொருளும் என நடமாடும் இறைவருடன் புல்லும் பூங்கொடி’யான அம்மை மீனாட்சியை வர்ணிக்கிறார் குமரகுருபர அடிகளார். ‘ஞானமாகிய ஆனந்தம் என்னும் கடலில் மூழ்கியவள் இவள்,’ என்கிறார் . அதாவது ஞானமே வடிவாகிய சிவபிரானுடன் இரண்டறக் கலந்தவள் என்பது பொருள். காளிதாசர் ‘ரகுவம்ச’த்தில், ‘வாகர்த்தா இவ சம்ப்ரக்தௌ14‘ எனச் சொல்லையும் பொருளையும் போலப் பார்வதியும் பரமேஸ்வரனும் இணைபிரியாதவர்கள் என்பார்.

      ‘இத்தகைய பெருமை பொருந்திய தாயே! காதிலணிந்துள்ள மகரக் குழைகளுடன் கயல்மீன்களாகிய கண்கள் போர்செய்கின்ற ஒப்பற்ற அழகு பூத்த சுந்தரவல்லியே! பொன்னூசல் ஆடியருளுக; புனுகு எனப்படும் நறுமண நெய் பூசியிருக்கும் சொக்கநாதரின் திருவடிவிற்குப் பொருத்தமான கொடி போன்ற பெண்ணே! பொன்னூசல் ஆடியருளுகவே,’ எனப் பாடி வாழ்த்தி நூலை நிறைவு செய்கின்றார்.

    ‘……………………ஞான

    ஆனந்த மாக்கடல் குடைந்துகுழை மகரத்தொடு

    அமராடும் ஓடரிக்கண்

    பொருகயலும் வடிவழகு பூத்தசுந் தரவல்லி

    பொன்னூசல் ஆடியருளே

    புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக் கொத்தகொடி

    பொன்னூசல் ஆடியருளே16.‘

    அடுத்த பகுதியில் மற்ற பிள்ளைத்தமிழ் நூல்கள் காட்டும் நயங்களைக் கண்டு மகிழலாம்.

    ***************

    பார்வை நூல்கள்

    1. சிலப்பதிகாரம்- ஊசல்வரி- இளங்கோவடிகள்
    2. திருவாசகம்- திருப்பொன்னூசல்- மாணிக்கவாசகர்
    3. திருப்பேரூர்க் கலம்பகம்- கு. நடேச கவுண்டர்
    4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    5. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    6. மீனாட்சி பஞ்சரத்தினம்- ஆதிசங்கரர்
    7. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    8. தேவாரம்- திருநாவுக்கரசர்.
    9. பாரதியார் பாடல்கள்- சுப்ரமணிய பாரதியார்
    10. மீனாட்சி பஞ்சரத்தினம்- ஆதிசங்கரர்
    11. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    12. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    13. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
    14. ரகுவம்சம்- காளிதாசன்
    15. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்

     

     

     

    _

     

    Share
  • சேக்கிழார்   பா நயம் – 44

    சேக்கிழார்   பா நயம் – 44

    -திருச்சி  புலவர் இராமமூர்த்தி 

    ——————————————-

    திருவாரூரில்  இறைவனின் திருமுன் அட்டாங்க பஞ்சாங்கமாக  வணங்கியபின், சுந்தரர் இறைவனைப் போற்றி  ஒரு பதிகம் பாடினார். அப்பொழுதே  அவர் கேட்க, திருவாரூர்ப் புற்றிடங்கொண்ட  பெருமான் வாக்காக ஒரு வானொலி எழுந்தது! அவ்வொலி,  ‘’சுந்தரனே! யாம் நம்மை உனக்கு நெருக்கமான தோழனாகத்  தந்தோம்.‘’ என்ற நற்செய்தியைக் கூறியது! அத்துடன் ‘’முன்பு திருவெண்ணெய்  நல்லூரில் திருமணத்தில் உன்னைத் தடுத்து ஆட்கொண்டோம்! , அப்போது நீ கொண்ட  திருமணக் கோலத்துடன் இனி எப்போதும் விளங்குக! இந்தக் கோலத்துடன் உன் விருப்பங்களை  அடைந்து விளையாடுக! ‘’ என்று இறைவன் கூறினார்!    

    இப்பாடல்  ‘வாழிய’ என்றசொல்லால் தொடங்குகிறது!  இதற்கு உயிர்கள் வாழும் பொருட்டு என்று பொருள் கொள்ள வேண்டும்! ‘’மாமறைப் புற்று இடம் கொள்’’ என்ற தொடர்  ‘’பெருமை மிக்க வேதமாகிய புற்றினைத் தம் உறைவிடமாகக் கொண்ட‘’ என்று  பொருள்படும். இங்கே மறைப்புற்று என்பது, ‘இறைவன் திருமேனியை மறைத்து எழுந்த  புற்று’ என்றும் பொருள் கொண்டு புற்றிடங் கொண்டார் என்ற பொருளில் விளங்கும் வன்மீக நாதர் என்ற  திருப் பெயரை விளக்குகின்றது. அவர் வேதத்துள் மறைந்துள்ளவர் என்றும், புற்றில் மறைந்துள்ளவர் என்றும்  இதற்கு இருவகைப் பொருள் கூறலாம்! ‘’வாழிய மாமறை’’ என்ற தொடரில் உலகம் உய்தி பெரும்பொருட்டு , வேதத்துள் மறைந்து தோன்றுபவர்  என்றும் பொருள் கொள்ளலாம்! 

    இறைவனின் சிறப்பினை உணர்த்தும் அளவைகளாகிய பிரமாணங்கள் ஆட்சி,  ஆவணம், காட்சி ஆகியவை என்பர். ‘’இந்தப் பிரமாணங்களின் தேவையின்றி தாமே பிரமாணமாக உள்ளார்‘’   என்பதைக்காட்டும் .தமக்குமேற் பிரமாணமில்லாமல் 

    தமக்குத்தாமே பிரமாணமாயுள்ளது. வேதங்களாகிய புற்று. என்பர் பெரியோர்!  உள்ளிருக்கும் பொருளை மறைத்துப் பொதிந்து மேல் மூடியிருப்பது புற்றினது இயல்பு. அவற்றை இறைவனது இருப்பிடமாக உணராதார்க்கு அவை உண்மைப்பொருளை உணர்த்தாமையின் மறைப்புற்று என்றார். 

    “வேதம் ஓதிலென்? சாத்திரங் கேட்கில்என்?
    நீதி நூல்பல நித்தல் பயிற்றில் என்?
    ஓதி அங்கம்ஓர் ஆறும் உணர்த்தின்என்?
    ஈசனை  யுள்கு   வார்க்கன்றி  இல்லையே!’’

    என்ற  அப்பர் தேவாரம்  இங்கே சிந்திக்கத் தக்கது. இறைவனாகிய மன்னவனார் இதனை அருளினார்!  சுந்தரர் தமக்கு இறைவனின் தோழமையைப் பெற்றதை அவர்தம் தேவாரங்களில் பல இடங்களில் கூறுகிறார்! அவர்,

    ‘’ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய்’’  என்றும், ‘’என்றனையாள் தோழனை’’ என்றும், ‘’தோழமை அருளித் தொண்டனேன்   செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை’’ என்றும் சுந்தரர் பாடியுள்ளார்! இக்காரணத்தாலேயே சுந்தரர்   ’’தம்பிரான் தோழர்’’ என்று போற்றப் பெற்றார். சைவ நெறிகளாகிய அடிமைநெறி, மகன்மைநெறி, தோழமைநெறி, ஞானநெறி ஆகியவற்றுள் சுந்தரரைத் தோழமை நெறியை விளக்க வந்தவர் என்பர்! 

    இங்கே ‘’நம்மைத் தந்தனம்!’’என்ற  தொடருக்கு  ‘அவனருளாலே அவன்றாள் வணங்கி’ என்றும், ‘தந்ததுன் றன்னை’ என்றும் அருளியபடி அவரே தாராவிடில் உயிர்கள் பெறுமாறில்லை; ஆதலின் நம்மைத் தந்தனம் என்றார்.’’ என்றுவிளக்கம்கூறுவர்!  

    எவ்வுயிர்க்கும் ஈசன் தோழனாய் உடனிருப்பார்; ஆயினும், “தாவியவனுடனிருந்தும் காணாத தற்பரன்“ என்றபடி உயிர்கள் அவனை அறிவதில்லை. அவ்வாறன்றி இவர் அறியும்படி தந்தது இவர் பெருமையை உலகறிந்து உய்வதற்கு என்க. இறைவன் தம்மையே ஆரூரருக்குத் தோழமையாகத் தந்துவிட்டாராதலின் பின்னர்ப் பரவையார் திருமணம், சங்கிலியார் திருமணம், பரவையார் ஊடல் தீர்த்தல் முதலியவற்றில் பாங்கற் கூட்டம் முதலிய அகப்பொருட்டுறைகளிலே சரித நிகழ்ச்சிகளின் அமைவு காணப்பெறும். பின்னும் இதனாலே நம்பிகள் செயல் தோழர் செயலேயாதலுமாம். இனி,  இப்பாடலை  முழுமையாகப்  படித்துப் பயில்வோம்! 

    ‘’வாழிய  மாமறைப் புற்றிடங்கொள்
    மன்னவனார்  அருளால் ஓர் வாக்கு
    ‘’தோழமையாக   உனக்கு நம்மைத்
       தந்தனம் .  நாம்முன்பு தொண்டுகொண்ட
    வேள்வியில்  அன்றுநீ கொண்ட கோலம் 

    என்றும் புனைந்துநின்  வேட்கைதீர
    வாழிமண்  மேல்விளை யாடுவாய்’’என்று
       ஆரூரர் கேட்க எழுந்த தன்றே ‘’

    என்ற  இப்பாடலில், முன்பு சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட திருமண வேள்வியில், அக்காலத்தில் அவ்வூரில் ‘’மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க“க் கொண்ட திருமணக் கோலம். என்பதை  ‘’அன்றுநீ கொண்டகோலம்’’ என்றார்.

    அதனை இனி  வருங்காலத்தில்‘’என்றும் புனைந்து நின் வேட்கை தீர  வாழி ‘’ என்று இறைவன் அருளினார் ! அதனால் பிற்காலத்தில் என்றும் சுந்தரர் திருக்கோலம், ‘மணமகன் திருக்கோலம்’ பெற்றே விளங்குகிறது!    பின்னர் இறைவன் ‘’என்மேல் கொண்ட பக்தியாகிய ‘’வேட்கை தீர, மண்மேல் விளையாடுவாய்’’ என்றார். இதனால் கைலையில் கொண்ட வேட்கைதீர, சுந்தரர் பரவையார், சங்கிலியாரை மணந்து  கொண்டு இறைவனுடன் தோழமை விளையாடல் புரிந்ததையும் குறிப்பிட்டார்! ‘’விளையாடு ‘’ என்ற சொல், பயனைக் கருதாத பக்தியைக் குறித்து சேக்கிழாரின் பாடல் நயத்தை விளக்குகின்றது!   

    Share
  • அத்தி வரதரைத் தரிசிக்க, இன்னும் மூன்று யோசனைகள்

    அண்ணாகண்ணன்

    அத்தி வரதரைத் தரிசிக்க, இன்னும் மூன்று யோசனைகள். இவற்றை 2059இலாவது நிறைவேற்றப் பரிசீலிக்கலாம்.

    யோசனை 1: அத்தி வரதர் நடுவில் வீற்றிருக்க, அவரைச் சுற்றி, 3 ரெயில் தடங்கள் அமைக்க வேண்டும். ஒவ்வொரு ரெயிலும் அத்தி வரதரை ஒரு சுற்றிவிட்டு, திரும்பி வரும். பக்தர்கள் அதில் இருந்தபடியே தரிசிக்கலாம். இதற்கு ஏற்ப, ரெயிலின் உள்ளே, எல்லாம் ஜன்னலோரம் இருப்பது போல் இருக்கைகளை வடிவமைக்க வேண்டும். மூன்று ரெயில்கள் ஓடும்போது, அடுத்த மூன்று ரெயில்களில் பக்தர்களை ஏற்றலாம். இந்த ரெயில் ஓட்டுபவர்களைச் சுழற்சி முறையில் மாற்றலாம். ரெயில்களை நள்ளிரவில் சரிபார்க்கலாம். இதே ரெயில்களை மாடி ரெயில்களாக அமைத்தால், ஒரே நேரத்தில் இரு மடங்கினர் தரிசிக்கலாம். இதற்கு மேல் ரோப்கார் அமைத்தால், அதில் ஓர் அணியினர் சென்று வரலாம்.

    யோசனை 2: நடுவில் அத்தி வரதர் வீற்றிருக்க, எட்டுப் பாதைகள் அமைத்து, ஹைப்பர்லூப் குழாயில் காந்தக் கூடுகளில் பக்தர்களை ஏற்றி, ஒரு கிலோ மீட்டரை அரை நிமிடத்தில் கடந்து, அத்தி வரதரை வலம் வந்து திரும்பலாம். ஒரே நேரத்தில் 4 கூடுகள் வலம் வருமாறு செய்யலாம். இது, ஓட்டுநர் இல்லாமல், தன்னியக்கமாகச் செயல்படுமாறும் செய்யலாம். இதன் மூலம் ஒரே நாளில் இருபது இலட்சம் பேரையும் தரிசிக்கச் செய்யலாம். இதை உலகளாவிய திருவிழாவாக மாற்றி, அயல் நாடுகளிலிருந்தும் பக்தர்களை ஈர்க்கலாம்.

    யோசனை 3: அத்தி வரதரை ஒரே இடத்தில் வைக்காமல், திருத்தேரில் ஏற்றி, தமிழகத்தின் அத்தனை மாவட்டங்களிலும் பவனி வரச் செய்யலாம். இதன் மூலம், பக்தர்கள் ஒரு நகரத்தில் குவிவதைத் தவிர்க்கலாம்.

    Share
  • அத்தி வரதரை எளிதில் தரிசிக்க…!

    (அண்ணாகண்ணன் யோசனைகள் 34)

    காஞ்சி அத்தி வரதரைத் தரிசிக்க நாள்தோறும் இலட்சத்திற்கும் மேற்பட்டோர் சென்று, பல மணி நேரங்கள் வரிசையில் நின்று, வழிபடுகின்றனர். அண்மையில் பக்தர்கள் நால்வர் இறந்தனர் என்ற செய்தி, பெரிதும் வருத்தியது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் வெளியே வருவதால், எப்படியாவது அவரைச் சந்தித்துவிட வேண்டும் எனப் பலரும் விரும்புவது இயல்பே. ஆனால், இப்போது உள்ள ஏற்பாட்டில் இது மேலும் மேலும் சிக்கலாகி வருகிறது. இதற்கு எனக்குத் தோன்றும் ஒரு தீர்வை இங்கே முன்வைக்கிறேன்.

    அத்தி வரதரைத் திருக்குளத்திலிருந்து எழுந்தருளச் செய்து, ஏன் வரதராஜப் பெருமாள் கோவிலுக்குள் உள்ள மண்டபத்தில் வீற்றிருக்கச் செய்ய வேண்டும்? முந்தைய காலங்களில் இவ்வாறு வைத்ததால், இதுவே மரபு எனக் கருதலாம். ஆனால், இன்றைய மக்கள் தொகை, வரக்கூடிய பக்தகோடிகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வரதரை விசாலமான இடத்தில் நிலைகொள்ள வைப்பதே இதற்குத் தக்க தீர்வு.

    அத்தி வரதரைப் பெரிய மைதானம் அல்லது திறந்த வெளியின் மையத்தில் வைத்து, சிறிய கோவில் போன்ற அமைப்பைத் தற்காலிகமாக உருவாக்கலாம். அவரைச் சென்றடைய ஒரு வழி என வைக்காது, சுற்றிலும் 8 வழிகளை உருவாக்க வேண்டும். இவற்றுள் 4 வழிகளின் வழியாகப் பக்தர்கள் உள்வருமாறும் எஞ்சிய 4 வழிகளின் வாயிலாக அவர்கள் வெளியேறவும் பாதை அமைக்கலாம். இதைச் செய்தாலே ஒரே நேரத்தில் இப்போது உள்ளது போல், 4 மடங்கு அதிகமான பக்தர்கள் வரதரைத் தரிசிக்கலாம்.

    இதையே முன்னதாகத் திட்டமிட்டு, இரண்டு அடுக்குகளில் செய்திருந்தால், வரதரை நோக்கி மொத்தம் 16 பாதைகள் அமைந்திருக்கும். கீழே நான்கு வரிசை, மேலே நான்கு வரிசை என எட்டு வரிசைகளில் மக்கள் உள்வந்து தரிசிக்கலாம். எஞ்சிய எட்டு வழிகளின் ஊடே அவர்கள் வெளியேறலாம்.

    இப்போதும் தாமதம் ஆகிவிடவில்லை. தரைவழியே மட்டும் இந்த ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகம் செய்தால், 4 + 4 என 8 வழிகளைக் கொண்டே கூட்டத்தைச் சிறப்பாக நிர்வகிக்கலாம். இவற்றில் பெண்களுக்கு ஒரு வழியையும் முதியோர் மற்றும் குழந்தைகளுக்காக ஒரு வழியையும் ஒதுக்கினால், சிக்கல்கள் பலவற்றைத் தீர்த்துவிடலாம்.

    ஒரு வரிசையில் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் நிற்பதாகக் கொண்டால், ஒவ்வோர் ஆயிரம் பேருக்கும் நடுவில் குடிநீர், மோர், இயற்கை அழைப்புகளுக்காக ஓர் ஏற்பாட்டைச் செய்யலாம். இது, பக்தர்களின் சிரமத்தைத் தணிக்கும். இன்னும் ஒரு படி மேலே சென்று, முழுக்க நாற்காலிகளை அமைத்து, அந்த நாற்காலிகளையும் கன்வேயர் பெல்டில் இணைத்துவிடலாம். இப்போது பக்தர்கள் உட்கார்ந்தபடியே வந்து, பெருமாளைச் சேவித்து, மீண்டும் உட்கார்ந்தபடியே திரும்பச் சென்றுவிடலாம். 40 நாள்கள் முடிந்த பிறகு, அத்தி வரதரை வழக்கம்போல், குளத்திற்கே கொண்டு செல்லலாம்.

    கட்சி மாநாடுகளுக்காக ஊரையே வளைத்து, ஏக்கர் கணக்கில் பந்தல் அமைக்க முடிகிறபோது, அத்தி வரதருக்காக இவ்வாறு செய்வது இயலாத காரியம் இல்லை. வரதரை வைக்கும் இடத்திற்கு அத்தி வரதர் பீடம் என்றே பெயர் வைத்து, எப்போதும் பாதுகாத்து வைத்தால், எதிர்காலத்திலும் இந்த இடத்தைப் பயன்படுத்தலாம். சிக்கல்கள் இல்லாமல் பக்தர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கலாம்.

    Share
  • சேக்கிழார் பா நயம் – 44

    -திருச்சி புலவர் இராமமூர்த்தி
    ——————————————-

    திருவாரூரில் இறைவனின் திருமுன் அட்டாங்க பஞ்சாங்கமாக வணங்கியபின், சுந்தரர் இறைவனைப் போற்றி ஒரு பதிகம் பாடினார். அப்பொழுதே அவர் கேட்க, திருவாரூர்ப் புற்றிடங்கொண்ட பெருமான் வாக்காக ஒரு வானொலி எழுந்தது! அவ்வொலி, ‘’சுந்தரனே! யாம் நம்மை உனக்கு நெருக்கமான தோழனாகத் தந்தோம்.‘’ என்ற நற்செய்தியைக் கூறியது! அத்துடன் ‘’முன்பு திருவெண்ணெய் நல்லூரில் திருமணத்தில் உன்னைத் தடுத்து ஆட்கொண்டோம்! , அப்போது நீ கொண்ட திருமணக் கோலத்துடன் இனி எப்போதும் விளங்குக! இந்தக் கோலத்துடன் உன் விருப்பங்களை அடைந்து விளையாடுக! ‘’ என்று இறைவன் கூறினார்!

    இப்பாடல் ‘ வாழிய’ என்றசொல்லால் தொடங்குகிறது! இதற்கு உயிர்கள் வாழும் பொருட்டு என்று பொருள்கொள்ளவேண்டும்! ‘’மாமறைப் புற்று இடம் கொள் ’’ என்ற தொடர் ‘’பெருமை மிக்க வேதமாகிய புற்றினைத் தம் உறைவிடமாகக் கொண்ட ‘’ என்று பொருள்படும். இங்கே மறைப்புற்று என்பது , ‘இறைவன் திருமேனியை மறைத்து எழுந்த புற்று’ என்றும் பொருள் கொண்டு புற்றிடங்கொண்டார் என்ற பொருளில் விளங்கும் வன்மீக நாதர் என்ற திருப் பெயரை விளக்குகின்றது. அவர் வேதத்துள் மறைந்துள்ளவர் என்றும், புற்றில் மறைந்துள்ளவர் என்றும் இதற்கு இருவகைப் பொருள் கூறலாம்! ‘’வாழிய மாமறை’’ என்ற தொடரில் உலகம் உய்தி பெரும்பொருட்டு , வேதத்துள் மறைந்து தோன்றுபவர் என்றும்பொருள்கொள்ளலாம்!

    இறைவனின் சிறப்பினைஉணர்த்தும் அளவைகளாகிய பிரமாணங்கள் ஆட்சி, ஆவணம், காட்சி ஆகியவை என்பர். ‘’இந்தப் பிரமாணங்களின் தேவையின்றித் தாமே பிரமாணமாக உள்ளார் ‘’ என்பதைக்காட்டும் .தமக்குமேற் பிரமாணமில்லாமல்
    தமக்குத்தாமே பிரமாணமாயுள்ளது. வேதங்களாகிய புற்று. என்பர்பெரியோர்! உள்ளிருக்கும் பொருளை மறைத்துப் பொதிந்து மேல் மூடியிருப்பது புற்றினது இயல்பு. அவற்றை இறைவனது இருப்பிடமாக உணராதார்க்கு அவை உண்மைப்பொருளை உணர்த்தாமையின் மறைப்புற்று என்றார்.

    “ வேதம் ஓதிலென்? சாத்திரங் கேட்கில்என் ?
    நீதி நூல்பல நித்தல் பயிற்றில் என்?
    ஓதி அங்கம் ஓர் ஆறும் உணர்த்தின்என்?
    ஈசனை யுள்கு வார்க்கன்றி இல்லையே!’’

    என்ற அப்பர் தேவாரம் இங்கே சிந்திக்கத் தக்கது. இறைவனாகிய மன்னவனார் இதனை அருளினார்! சுந்தரர் தமக்கு இறைவனின் தோழமையைப் பெற்றதை அவர்தம் தேவாரங்களில் பல இடங்களில் கூறுகிறார்! அவர்,

    ‘’ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய்’’ என்றும், ‘’என்றனையாள் தோழனை’’ என்றும், ‘’தோழமை அருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை’’ என்றும் சுந்தரர் பாடியுள்ளார்! இக்காரணத்தாலேயே சுந்தரர் ’’தம்பிரான் தோழர்’’ என்று போற்றப் பெற்றார். சைவ நெறிகளாகிய அடிமைநெறி, மகன்மைநெறி, தோழமைநெறி, ஞானநெறி ஆகியவற்றுள் சுந்தரரைத் தோழமை நெறியை விளக்கவந்தவர்என்பர் !

    இங்கே ‘’நம்மைத் தந்தனம்!’’என்ற தொடருக்கு ‘அவனருளாலே அவன்றாள் வணங்கி’ என்றும், ‘தந்ததுன் றன்னை’ என்றும் அருளியபடி அவரே தாராவிடில் உயிர்கள் பெறுமாறில்லை; ஆதலின் நம்மைத் தந்தனம் என்றார்.’’ என்றுவிளக்கம்கூறுவர்!

    எவ்வுயிர்க்கும் ஈசன் தோழனாய் உடனிருப்பார்; ஆயினும், “தாவியவனுடனிருந்தும் காணாத தற்பரன்“ என்றபடி உயிர்கள் அவனை அறிவதில்லை. அவ்வாறன்றி இவர் அறியும்படி தந்தது இவர் பெருமையை உலகறிந்து உய்வதற்கு என்க. இறைவன் தம்மையே ஆரூரருக்குத் தோழமையாகத் தந்துவிட்டாராதலின் பின்னர்ப் பரவையார் திருமணம், சங்கிலியார் திருமணம், பரவையார் ஊடல் தீர்த்தல் முதலியவற்றில் பாங்கற் கூட்டம் முதலிய அகப்பொருட்டுறைகளிலே சரித நிகழ்ச்சிகளின் அமைவு காணப்பெறும். பின்னும் இதனாலே நம்பிகள் செயல் தோழர் செயலேயாதலுமாம். இனி, இப்பாடலை முழுமையாகப் படித்துப் பயில்வோம்!

    ‘’வாழிய மாமறைப் புற்றிடங்கொள்
    மன்னவனார் அருளால் ஓர் வாக்கு
    ‘’தோழமையாக உனக்கு நம்மைத்
    தந்தனம் . நாம்முன்பு தொண்டுகொண்ட
    வேள்வியில் அன்றுநீ கொண்ட கோலம்
    என்றும் புனைந்துநின் வேட்கைதீர
    வாழிமண் மேல்விளை யாடுவாய்’’என்று
    ஆரூரர் கேட்க எழுந்த தன்றே ‘’

    என்ற இப்பாடலில், முன்பு சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட திருமண வேள்வியில், அக்காலத்தில் அவ்வூரில் ‘’மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க“க் கொண்ட திருமணக் கோலம். என்பதை ‘’அன்றுநீ கொண்டகோலம்’’ என்றார்.

    அதனை இனி வருங்காலத்தில் ‘’என்றும் புனைந்து நின் வேட்கை தீர வாழி ‘’ என்று இறைவன் அருளினார் ! அதனால் பிற்காலத்தில் என்றும் சுந்தரர் திருக்கோலம், ‘மணமகன் திருக்கோலம்’ பெற்றே விளங்குகிறது! பின்னர் இறைவன் ‘’என்மேல் கொண்ட பக்தியாகிய ‘’வேட்கை தீர, மண்மேல் விளையாடுவாய்’’ என்றார். இதனால் கைலையில் கொண்ட வேட்கைதீர, சுந்தரர் பரவையார், சங்கிலியாரை மணந்து கொண்டு இறைவனுடன் தோழமை விளையாடல் புரிந்ததையும் குறிப்பிட்டார்! ‘’விளையாடு ‘’ என்ற சொல், பயனைக் கருதாத பக்தியைக் குறித்து சேக்கிழாரின் பாடல் நயத்தை விளக்குகின்றது!

    Share
  • தமிழரும் வாணிகமும்

    -மேகலா இராமமூர்த்தி

    ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாய்த் திகழ்பவை உழவு, கைவினைத் தொழில்கள் மற்றும் வாணிகம் முதலியவை. பண்டைத் தமிழர், உழவுத் தொழிலிலும், கைவினைத் தொழிலிலும் சிறந்து விளங்கியது போலவே வாணிகத்திலும் சிறந்திருந்தனர். திணைநிலங்களில் வாழ்ந்த மக்கள் தாம்கொணர்ந்த பொருளுக்கு மாற்றாக வேறொரு பொருளைப் பெற்றுக்கொண்டதைச் சங்கஇலக்கிய நூல்கள் நமக்கு அறியத்தருகின்றன. இதனைப் பண்டமாற்று வாணிகம் எனலாம்.

    முல்லை நிலத்தைச் சேர்ந்த இடையன், பாலைக் கொடுத்து அதற்கு ஈடாகத் தானியத்தை மாற்றிக் கொண்டதை உறையூர் முதுகொற்றன் என்ற புலவரின் குறுந்தொகைப் பாடல் தெரிவிக்கின்றது.

    ‘பாலோடு வந்து கூழொடு பெயரும்
    யாடுடை யிடைமகன்’
    (குறு. 221.3-4). கூழ் என்பது அரிசி, கேழ்வரகு, வரகு, தினை முதலிய தானியங்களாகும்.

    குறிஞ்சிநில வேட்டுவனொருவன் தான் வேட்டையாடிக் கொண்டுவந்த மான் இறைச்சியை மருதநில உழவனிடத்தில் கொடுத்து, அதற்கு ஈடாக நெல்லைக் கொண்டதையும், ஈதொப்ப, இடைச்சியரும் உழவனுக்குத் தயிரைக் கொடுத்து நெல்லை மாற்றாகப் பெற்றுக்கொண்டதையும் கோவூர்கிழார் எனும் சங்கப்புலவர் புறநானூற்றில் பதிவுசெய்திருக்கக் காண்கின்றோம்.

    ‘கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
    மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
    தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
    ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
    குளக்கீழ் விளைந்த களக்கோள் வெண்ணெல்
    முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்
    தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்’
      (புறம் 33:1-8 – கோவூர்கிழார்)

    நகரங்களில் வாழ்ந்த மக்கள் தம் வாணிகத்தை நிலத்தின் வழியாகவும் நீரின் வழியாகவும் நடாத்தியிருக்கின்றனர். சோழர்களின் புகழ்பெற்ற துறைமுக நகராகியக் காவிரிப்பூம்பட்டினத்திற்குப் பல்வேறு நாடுகளிலிருந்து நீரின் வழியாகவும் நிலத்தின் வழியாகவும் வந்திறங்கிய பொருள்களின் பட்டியல் இது:

    ”நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
    காலின் வந்த கருங்கறி மூடையும்
    வடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
    குடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
    தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
    கங்கை வாரியும் காவிரிப் பயனும்
    ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
    அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
    வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்
    ” (பட்டினப்பாலை: 185 – 193)

    சிலப்பதிகாரத் தலைவனான கோவலனுடைய தந்தை நில வாணிகத்தில் சிறந்திருந்தமையால் ’மாசாத்துவன்’ என்றழைக்கப்பட்டான். நிலவாணிகம் செய்த வணிகக் குழுக்களைச் ’சாத்துகள்’ என்றழைத்தனர் நம் முன்னோர். எனவே ’மாசாத்துவன்’ என்ற பெயர் ’பெரும் நிலவாணிகன்’ என்றபொருள் தருகின்றது. அதுபோன்றே கண்ணகியின் தந்தை, கடல் வாணிகத்தில் சிறந்திருந்ததன் அடிப்படையிலேயே ’மாநாய்கன்’ என்று பெயர்பெற்றான். (நாவாய் வாணிகனுக்கு நாவிகன் என்று பெயர்; அது திரிந்து நாய்கன் ஆயிற்று.)

    நில வாணிகர்கள் தம் வணிகப் பொருள்களைக் குதிரைகளிலும், கழுதைகளிலும், மாட்டுவண்டிகளிலும் ஏற்றிக்கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வாணிகம் செய்ததோடல்லாமல், தமிழகத்தைக் கடந்து வடபுலத்துக்கும் சென்று வாணிகம் செய்திருக்கின்றனர்.

    முசிறி என்னும் சேரநாட்டுத் துறைமுகப் பட்டினத்தில், யவனர்களின் மரக்கலங்கள் பொன்னைக் கொண்டுவந்து கொட்டிவிட்டு, அதற்கு ஈடாக மிளகு மூட்டைகளை ஏற்றிச்சென்றதாக எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூறு அறிவிக்கின்றது.

    ”யவனர் தந்த வினைமாண் நன்கலம் 
    பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
    ” (அகம். 149: 9 – 10)

    ”உலகமே கிளர்ந்து எழுந்தாற்போன்ற அச்சந் தரக்கூடிய பெரிய நாவாயானது (மரக்கலம்), புலால் நாறும் அலைகளையுடைய பெரிய கடலின் நீர்ப்பரப்பைக் கிழித்துக் கொண்டு சென்றது” என்ற அகநானூற்றின் அடிகள் முற்காலத்திலேயே மிகப்பெரிய மரக்கலங்களை உருவாக்கிக் கடல் வாணிகம் செய்வதில் தமிழர்கள் சிறந்திருந்தனர் என்பதை விளக்கி நிற்கின்றது.

    “உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம் 
     புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ” (அகம். 255:1-2)

    அம்மட்டோ? கடலில் இயங்கும் காற்றைக் கலஞ்செலுத்துதற்குப் பணிகொள்ளும் விரகினை முதன்முதலிற் கண்டவர் பண்டைத் தமிழரே; யவனரல்லர் என்பதை வெண்ணிக்குயத்தியார் எனும் புலவர்பெருமாட்டியின் புறப்பாட்டு நமக்குப் புலப்படுத்துகின்றது.

    ”நளியிரு முந்நீர் நாவா யோட்டி
    வளிதொழி லாண்ட வுரவோன் மருக
    களியியல் யானைக் கரிகால் வளவ…”
    (புறம் – 66: வெண்ணிக்குயத்தியார்)

    பண்டைத் தமிழர் மேற்கே கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து வரையில் திரைகடலோடியிருக்கின்றனர். இவையல்லாது பாலத்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா போன்ற நாடுகளுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்திருக்கின்றனர். தமிழகத்துப் பண்டங்களான ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு ஆகியவை இந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன.

    பழைய எத்தியோப்பிய நாடான ஷீபாவின் (Sheba) அரசி மகீடா (Makeda), இஸ்ரேல் நாட்டின் மன்னன் சாலமனை (Solomon) காணச்சென்றபோது, அவனுக்குப் பரிசுப்பொருள்களாக ஏலம், இலவங்கம் போன்றவற்றைக் கொண்டுபோனதாகப் பழைய ஏற்பாட்டில் (Old Testament) ஒரு குறிப்புக் காணப்படுகின்றது. சாலமன் ஆண்ட காலம் கி.மு.1000 என்பர். சேரநாட்டுத் துறைமுகத்திலிருந்து மயில்தோகை, அகில், யானைத்தந்தம், குரங்குகள், வெள்ளி போன்ற பொருள்களும் சாலமனுக்குக் கப்பல்மூலம் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. ஹீப்ரு மொழியிலுள்ள பைபிளில் வழங்கப்படும் ’துகி’ என்ற சொல்லானது தமிழ்ச்சொல்லான ’தோகை’ என்பதன் திரிபே என்கிறார் மொழியியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்.

    புதுச்சேரிக்கு அருகிலுள்ள அரிக்கமேடு என்னும் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் உரோமாபுரி நாணயங்கள் கிடைக்கப்பெற்றன. இதன்மூலம் பண்டைத் தமிழருக்கும் உரோமாபுரிக்கும் கடல்வாணிகத் தொடர்பிருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

    தமிழகம், மேலைநாடுகளுடன் மட்டுமின்றிக் கீழைத்தேயங்களான சீனம், மலேசியா, ஜாவா முதலியவற்றுடனும் பன்னெடுங்காலமாகவே கடல்வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது. தமிழகத்துப் பண்டங்கள் கி.மு.7ஆம் நூற்றாண்டிலேயே சீனத்தில் இறக்குமதியாயின என்று அந்நாட்டு வரலாறுகள் தெரிவிக்கின்றன. சீனத்துப் பட்டாடைகளையும், சருக்கரையையும் தமிழகம் விரும்பி ஏற்றுக்கொண்டது. அதனால்தான் இன்றளவும் பட்டுக்குச் ’சீனம்’ என்றும், சருக்கரைக்குச் ’சீனி’ என்றும் தமிழில் பெயர் வழங்கி வருகின்றது.

    தமிழகத்தின் மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்கள் வாணிகத்தில் பெருஞ்செல்வத்தை ஈட்டிய மாசாத்துவர்களுக்கும், மாநாய்கர்களுக்கும் எட்டிப்பட்டமும் எட்டிப்பூவும் அளித்துச் சிறப்புச் செய்தார்கள். (எட்டிப்பூ என்பது பொன்னால் செய்யப்பட்ட தங்கப்பதக்கம் போன்ற அணியாகும் என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்.)

    இவ்வாறு பண்டைக் காலந்தொட்டே நிலவாணிகம், கடல்வாணிகம் என இருதிறத்து வாணிகங்களிலும் தமிழர்கள் சிறப்புற்று விளங்கித் தமிழகத்தின் பெருமையினை இந்தியாவில் மட்டுமன்றி அயல்நாடுகளிலும் நிலைநாட்டி இருக்கின்றனர் என்பதை அறியும்போது வியப்பும் விம்மிதமும் ஏற்படுகின்றது.

    *****

    கட்டுரைக்குத் துணைசெய்தவை: 

    1. பண்டைத் தமிழக வணிகம் – நகரங்கள் மற்றும் பண்பாடு – மயிலை சீனி. வேங்கடசாமி.
    2. பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் – மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்.

     

     

    Share
  • திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோவில் – சிவத்துரோகம்

    துரோகம் என்றால் இரண்டகம், நம்பிக்கை குலைத்தல், நன்மதிப்பை பாழடித்தல் என்று கொள்ளலாம். இதில் ஒருவரை ஒருவர் மோசம் செய்வது என்றில்லாமல் இராசதுரோகம், ஊர்த்துரோகம், இனத்துரோகம், சிவத்துரோகம் என்பனவும் உண்டு. சிவத்துரோகம் என்பதற்கு சிவநெறிக்கு புறம்பாக நடத்தல் இதாவது, சிவன் கோவில் சொத்துகளை மோசடி செய்தல், களவாடுதல் ஆகியன அடங்கும். இதற்கு அக்காலத்தே கடும்தண்டனை இருந்தது. சிவத்துரோகத்தை புரிந்தவர் பெரும்பாலும் சிவன் கோவில் ஊழியத்தில் தம்மை ஈடுபடுத்திக் கொண்ட பிராமணர், வெள்ளாளர்  ஆகியோரே ஆவர். இந்த குற்றத்தை கண்டுபிடித்தவரும் பிராமணர் வெள்ளாளரே ஆவர். கஜினி முகம்மது, மாலிகாபூர் போன்றோர்  பல கோவில்களை இடித்துபோட்டு பொன்னும் பொருளுமாய் கொள்ளையிட்டுச் சென்றனர். அதற்கு காரணம் அவர்களிடத்தில் உருவ வழிபாட்டு நம்பிக்கை இல்லை என்பதும், பிறமத அவமதிப்பு ஆகியனவே காரணம். ஆனால் சிவன் கோவிலில் ஊழியம் செய்து கொண்டு மோசடியிலும் களவிலும் ஈடுபடும் செயலும் இத்தகையதன்றோ என எண்ணத் தோன்றுகிறது, இதாவது சிவன்பால் நம்பிக்கை இன்மை என்பதே.  இது குறித்த சில கல்வெட்டுகள் அக்காலத்தே இருந்த சட்ட முறைமைகளை எடுத்துக் காட்டுகின்றன.

    இராமநாதபுரம் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், திருப்பத்தூர் திருத்தளீசுவரர் கோவில் முதல் சுற்றில் உள்ள தென் சுவரில் பொறிக்கப்பட்ட  15 வரிக் கல்வெட்டு. இடத்தேவைக்காக சாய்வுக் கோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

    ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீ ஸகாப்தம்  1309 ன் மேல் செல்லாநின்ற ப்ரபவ வருஷத்து மேஷநாயற்று இரண்டாந்தியதியும் பூர்வ்வபக்ஷத்து நவமியும் ப்ரஹஸ்பதிவாரமும் பெ / ற்ற பூசத்து நாள் கேரளசிங்க வளநாட்டு ப்ரஹ்மதேய ந்திருப்பத்தூர் உடையார் திருத்தளியாண்ட நாயினார் கோயிலில் ஸ்ரீ ருத்ர ஸ்ரீ மாஹேஸ்வர ஸ்ரீகாரியஞ் / செய்வார்களும் மாடாபத்தியஞ் செய்வானும் முப்பது வட்டத்து ஸிவப்ராஹ்மணரும் தானத்துக் கமைந்த தானத்தாரும் ஆக இவ்வனைவோமும் இக்கோயிற் /  கணக்கு ப்ரஹ்மப்ரியனுக்கும் இன்னாட்டு மட்டியூரான ந்ருபசேகரச் சதுர்வ்வேதி மங்கலத்து சொக்க நாராயணன் கரியமாணிக்காழ்வானுக்கும் அதளையூர் / நாட்டு தேனாற்றுப்போக்கு சிறுவயலுடையான் வேண்டவளந்தான் ஆயப்பிள்ளைக்கும் ஆக இம்மூவற்கும் கணக்கெழுத்துக் காணியாட்சி விலைப்ரமாணம் பண்ணி / க்குடுத்த பரிசாவது கணக்கன் குலாலன் அம்பலத்தாடுவானான ஆயிரத்தெழுநூற்று மூவேந்தர் வேளான் தனக்கு க்ராமத்தில் மனையும் முதலெழுத்தும் முதல் வ / ழக்கமும் இல்லையாயிருக் கச்சிதே தானறிந்ததாக ஸிவத்ரோகமாக காணாமல் களவிலே ஆயிரத்தெழுநூற்றுத் தட்டானை ஆட்பிடித்து கற்தச்சன் அலைவாயுகந் / தானைக் கொண்டு தன்னுதென்று கல்வெட்டுவிக்கையில், இப்படி செய்த இந்த வெளிப்பட்டு ஸிவத்ரோகம் வெளிப்பட்டு அம்பலத்தாடுவோன் ஓடிப்போகையில் தட்டானை / யுங் கற்தச்சனையுங் கைக்கொண்டு கண்மாளர் கைய்யிலே காட்டிக்குடுத்து கண்மாளரும் இவர்களை அழியச் செய்து தானத்துக்கு பொருந்த ப்ராய / ச்சித்தம் பண்ணிவிடுகையாலும் இந்த ஸிவத்ரோகியான அம்பலத்தாடுவான் முன்னில்லாமல் ஓடிப்போகையாலும் கோயிற் கணக்கெழுத்துக் காணியாட்சியில் ப்ரஹ்மப்ரியன் காணியாட்சி ஒன்று பாதி நீக்கி இவனோ பாதி ஒன்று பாதிக்கும் விலை நிச்சயித்த ஆடூர் பணம் 300. இதில் தேவர் விசையாலய தேவற்கு கற் / பூர முதலாக குடுத்த ஆடூர் பணம் 200 ஸ்ரீ பண்டாரத்துக்கு முதலாக பற்றின ஆடூர் பணம் 100 ஆக ஆடூர் பணம் 300. இப்பணம் முன்னூற்றுக்கும் கணகெழுதுத்துக் காணி / யாட்சியும் ஸுதந்த்யங்கள்  எப்பேற்பட்டனவும் சந்த்ராதித்யவல் செல்லவிற்று விலை ப்ரமாணம் பண்ணிக்குடுத்தோம் உடையார் திருத்தளியாண்ட நாயினார் / கோயிலில் ஸ்ரீ ருத்ர ஸ்ரீ மாஹேஸ்வர ஸ்ரீ காரியஞ் செய்வார்களும் மாடாபத்தியஞ் செய்வானும் முப்பது வட்டத்து ஸிவப்ராஹ்மணரும் தாநத்துக் கமைந்த / தாநத்தாரும் ஆக இவ்வோமும் ப்ரஹ்மப்ரியருக்கும் கரியமாணிக்காழ்வாநுக்கும் ஆயப்பிள்ளைக்கும் ஆக இம்மூவற்கும்.

    பூர்வபக்ஷம் – வளர்பிறை; ஸ்ரீ காரியம் – திருப்பணி; மாடாபத்தியம் – மடைபள்ளி நிர்வாகம்; தானத்துக் கமைந்த தானத்தார் – அந்தந்த பொறுப்பிற்கு அமைந்த பொறுப்பாளர்; பரிசாவது – விதம், எப்படி எனில்; முதலெழுத்தும் முதல் வழக்கமும் – தந்தை முகவரியும் முதல் மதிப்பும்; காணாமல் – கண்டுபிடிக்கமுடியாதவாறு; களவிலே – திருட்டுத்தனமாக; கைக்கொண்டு – பிடித்துவைத்து; காட்டிக் கொடுத்து – பிடித்துக் கொடுத்து.

    விளக்கம்: சக ஊழி 1309 பிரபவ ஆண்டு மேழஞாயிறு 2-ம் நாள் வியாழக்கிழமை பூச நட்சத்திரம் நிகழும் போது (1387, மார்ச்சு 28) வெட்டப்பட்ட கல்வெட்டு. இது விசயநகர ஆட்சிக்காலம்.

    கேரளசிங்க வளநாட்டில் பிரமதேயமான திருப்பத்தூர் திருத்தளியில் அமைந்த இறைவர் கோவிலில் ஸ்ரீ ருத்ர ஸ்ரீ மாஹேஸ்வர திருப்பணி செய்பவர்களும் மடைபள்ளி நிர்வாகம் செய்பவனும், முப்பது வட்டத்து சிவபிராமணரும், அந்தந்த பொறுப்பிற்கு அமைந்த பொறுப்பாளர் ஆக எல்லோரும் கூடி இக்கோயிற்  கணக்கு பொறுப்பில் உள்ள பிரம்மபிரியனுக்கும், சொக்க நாராயணன் கரியமாணிக்காழ்வானுக்கும், வேண்டவளந்தான் ஆயப்பிள்ளைக்கும் ஆக இம்மூவற்கும் கணக்கெழுத்திற்கான காணியாட்சியை விலைப்பிரமாணம் செய்துகொடுத்தது எப்படி எனில் பிரம்மபிரியன் தனக்கு உதவியாக கணக்கு பணிக்கு அமர்த்திய கணக்கன் குலாலன் அம்பலத்தாடுவானான ஆயிரத்தெழுநூற்று மூவேந்தர் வேளான் தனக்கு இக்கிராமத்தில் வீடும், இன்னார் மகன் என்ற முகவரியும், முதல் மதிப்பும் இல்லாத போதிலும் இவ்வாறு இருப்பதாக காட்டி வீடும், பிற சலுகைகளும் தனக்கு வர வேண்டி எவரும் கண்டு பிடிக்காதபடி திருட்டுத்தனமாக ஆயிரத்தெழுநூற்று தட்டானை கண்டு அவன் மூலம் கல்தச்சன் அலைவாயுகந்தானை ஏற்பாடு செய்து கொண்டு இந்த கிராமத்து வீடு தனதென்று கல்வெட்டிக் கொண்டான். இது ஒரு சிவத்துரோகம் ஆகும் என்கின்றது கல்வெட்டு. இப்படி மோசடி செய்த சிவத்துரோகச் செயல் வெளிப்பட்டு அம்பலத்தாடுவான் ஊரைவிட்டு எங்கோ ஓடிப்போய்விட  கோவிலார் தட்டானையும் கல்தச்சனையும் பிடித்து வைத்து கம்மாளரிடம் விசாரிப்பதற்கு ஒப்படைத்து விடுகின்றனர். கம்மாளர் இந்த இருவரையும் தக்கபடி அடித்து உதைத்து கோவிலுக்கு பொருத்தமான வகையில் கழுவாய் செய்ய வைத்து விடுகின்றனர். சிவத்துரோகி அம்பலத்தாடுவன் கண்ணில்படாவாறு எங்கோ ஓடிப்போனமையால் பிரம்மபிரியன் கோயில் கணக்கெழுதும் காணியாட்சியில் ஒருகாணியைப் இரு பாதியாகப் பிரித்து ஒரு பாதியை தான்  வைத்துக்கொண்டு அதற்கு விலை கொடுத்துவடுகின்றான் மற்றொரு பாதியை அம்பலத்தாடுவான் பங்காக கோயிலாரிடம்  ஒப்படைக்கின்றான்.அதை கோவில் நிர்வாகத்தார் ஊராருக்கு விற்றுவிடுகின்றனர். இப்படியாக 300 ஆடுர் பணம் விற்ற காசாக சேர்கின்றது. அதில் 200 ஆடூர் பணம் விசையாலைய தேவருக்கு கற்பூர முதலாக கொடுக்கப்பட்டது. எஞ்சிய100 ஆடூர் பணம் கோவில் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது. பிரம்மபிரியனுக்கு நிலமும் அதன் உரிமைகள் அனைத்தும் விற்கப்பட்டு கோவிலாரால் விற்றுஆவணம் செய்து தரப்பட்டது. திருத்தளி இறைவர் கோயில் ஸ்ரீ ருத்ர ஸ்ரீ மாஹேஸ்வர திருப்பணி செய்பவர்கள், மடநிர்வாகம் செய்பவனும், முப்பது வட்டத்து சிவப்பிராமணரும், அந்தந்த பொறுப்பிற்கு அமைந்த பொறுப்பாளர் ஆக இவரனைவரும் பிரம்மபிரியன், கரியமாணிக்காழ்வான்,  ஆயப்பிள்ளை ஆகிய இம்மூன்று கணக்கருக்கும் விலைப் பிரமாணம் செய்து கொடுக்கின்றனர் .

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 25, பக். 158-161, (A.R.No 126  of 1908)

    இராமநாதபுரம் மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், திருப்பத்தூர் திருத்தளீசுவரர் கோவில் முதல் சுற்றில் உள்ள தென் சுவரில் பொறிக்கப்பட்ட  19 வரிக் கல்வெட்டு. இடத்தேவைக்காக சாய்வுக் கோடுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

    ஸ்வஸ்திஸ்ரீ ஸ்ரீ ஸகாப்தம்  1309 ன் மேல் செல்லாநின்ற ப்ரபவ வருஷத்து மேஷநாயற்று இரண்டாந்தியதியும் பூர்வ்வபக்ஷத்து நவமியும் ப்ரஹஸ்பதி / வாரமும் பெ ற்ற பூசத்து நாள் கேரளசிங்க வளநாட்டு ப்ரஹ்மதேய ந்திருப்பத்தூர் மூலவ[ரு]ஷ மஹாஸபையோம் நம்[மூர்]க்கணக்கு  மத்யஸ்தன் ப்ரஹ்மப்ரியனுக்கும் / இன்னாட்டு ப்ரஹ்மதேயம் மட்டியூரான நிர்ப்பசேகரச் சதுர்வ்வேதி மங்கலத்து மத்யஸ்தன் சொக்க நாராயணன் கரியமாணிக்காழ்வானான மஹாஜன ப்ரியனுக்கும் அதளையூர் / நாட்டு தேனாற்றுப்போக்கு சிறுவயலுடையான் வேண்டவளந்தான் ஆயப்பிள்ளைக்கும் [ஆக] இவ்வனைவற்கும்  கணக்கெழுத்துக் காணியாட்சி விலைப்ரமாணம் பண்ணி / க்குடுத்த பரிசாவது நம்மூர்க்கண் கணக்கன் குலாலன் அம்பலத்தாடுவானான ஆயிரத்தெழுநூற்று மூவேந்தர் வேளான் தனக்கு க்ராமத்தில் மனையும் முதலெழுத்தும் முதல் / வழக்கமும் இல்லையாயிருக் கச்சிதே ஸபை தனக்குக் கல்வெட்டிக்குடுத்ததாக அம்பலத்திலே ஸபையை /  அரியாமல் க்ராமத்ரோகமாகக் காணாமல் களவிலே நம்மூர் ஆயிரத்தெழுநூற்றுத் தட்டானை ஆட்பிடித்து இவனைக் கொண்டு திருக்கோட்டியூர் கல்தச்சன் / அலைவாயுகந்  தானை  அழைப்பித்து நங் க்ராமத்தில் மனையும் முதலெழுத்தும் முதல்  வழக்கமும் தன்னுதென்று களவிலே கல்வெட்டுவிக்கை / யில், இப்படி செய்த  க்ராமத்ரோகம் வெளிப்பட்டு இ[வ்வம்]பலத்தாடுவான் ஓடிப்போகையில் தட்டானைய்யும் [க]த்தச்சனையுங் கைக்கொண் /  டு கண்மாளர் கைய்யிலே காட்டிக்குடுத்து இவர்க[ளை] _ _ _ _  றைக்கு கண்மாளர் அழியச் செய்து ஸபைக்குப் பொருந்த ப்ரா ச்சித்தம் பண் / ணிவிடுகையில் இந்த க்ராமத்ரோகம் செய்த அம்ப[லத்தா]டுவானான ஆயிரத்தெழுநூற்று மூவேந்தர் வேளான்  முன்னில்லாமல் ஓடிப் / போகையில் நம்மூற்கணக்கெழுத்துக் காணியாட்சியில் ப்ரஹ்மப்ரியன் காணியாட்சி ஒன்று பாதி நீக்கி இவனோ பாதி ஒன்று பாதிக் / கும் இவன் ஒற்றி விலை கொண்ட நிலக்காணியாட்சிக்கும் விலை நிச்சயித்த ஆடூர் பணம் 300. இதில் இவன் ஒற்றி விலை கொண்ட காணியா / யாட்சியாய் பலற்கும் ஸபா விநியோகமாக விற்ற நிலத்துக்கு ஆடூர் பணம் 100 நீக்கி தேவர் விசையாலய தேவற்கு கற்பூர முதலாக குடுத்த ஆடூர் பணம் 200. / இப் பணம் இருநூற்றுக்கும் கணக்கெழுத்து காணியாட்சியும் ஸு[த]ந்த்யங்கள்  எப்பேர்பட்டனவும் சந்த்ராதித்யவல் செல்லக் கல்வெட்டிக் குடுத்தோம் / மூலபருஷ மஹாஸபையோம் இந்தக் கொள்கின்ற மு[றைக்]கும் நங்க்ராமத்தில்  ப்ரமப்ரியன் மனையை அடுத்த ஒருமனை சேர்ம்மா / னமாக அனுபவிப்பார்களாகவும் இப்படி சம்மதித் கணக்கெழுத்துக் காணியாட்சி விலை ப்ரமாணம் பண்ணிக்குடுத்தோம் மூலபருஷ மஹா / ஸபையோம் ப்ரஹ்ம்ப்ரியனுக்கும் கரியமாணிக்காழ்வானுக்கும் ஆயப்பிள்ளைக்கும் அருளால் ஸபைக் கணக்கு மத்யஸ்தன் பெருமாண்டான் /  மயிலேறுவானான ப்ரஹ்மப்ரியன் எழுத்து.

    காணியாட்சி – நில உரிமை, மூலபருஷ மகாசபை – கோவில் நிர்வாக சபை,

    விளக்கம்: சக ஊழி 1309 பிரபவ ஆண்டு மேழஞாயிறு 2-ம் நாள் வியாழக்கிழமை பூச நட்சத்திரம் நிகழும் போது (1387 ல்) வெட்டப்பட்ட கல்வெட்டு.  மேற்கண்ட கல்வெட்டின் அதே செய்தியை கொண்டுள்ளது. ஆனால் இதில் சிவத்துரோகம் என்ற முறையில் அணுகாமல் கிராமத்துரோகம்ர ஊர்த்துரோகம் என்ற முறையில் அணுகி உள்ளனர். இக்கோயிற்  கணக்கு பொறுப்பில் உள்ள பிரம்மபிரியன், சொக்க நாராயணன் கரியமாணிக்காழ்வான், வேண்டவளந்தான் ஆயப்பிள்ளை ஆக இம்மூவரும் இக்கல்வெட்டில் ஊர் மத்தியஸதராக அறியப்படுகின்றனர். அம்பலத்தாடுவான் தனக்கு ஊர்ச்சபை வீடு கொடுத்ததாக கல்வெட்டிக் கொள்கிறான். இந்த மோசடி அறியப்பட்டதும் அம்பலத்தாடுவான் ஊரைவிட்டு ஓடிப்போகின்றன். பிரம்மபிரியன் ஒரு காணி நிலத்தை பாதியாக பிரித்து தான் ஒரு பாதியை வைத்துக் கொண்டு எஞ்சிய பாதியை அம்பலத்தாடுவான் பங்காக அறிவிக்கிறான்.  அம்பலத்தாடுவானுடைய பறிமுதல் செய்த நிலத்தில் பாதியை வைத்துக் கொண்டு அதை பிரம்மபியனே விலைக்கு வாங்கிவிடுவதால் அதற்கு விற்று ஆவணமும் அடுத்த பாதி நிலத்தை பலருக்கும் விற்று அவற்றுக்கும் விற்று ஆவணம் கொடுத்தனர் கோவில் நிர்வாக சபையார். இக்கிராமத்து நிலத்தை வேறு எவரும் வெளியில் இருந்து வந்து வாங்கி பயிர் செய்யப்போவதில்லை. எனவே  உள்ளூரான் பிரம்மபிரியன் வாங்கியதில் தவறு ஏதும் இல்லை. அதே வேளையில் பிரம்மபிரியன் வீட்டிற்கு அடுத்துள்ள வீட்டை கணக்கர் மூவரும் சேர்ந்தே அனுபவிப்பதற்கான உரிமை ஆவணத்தையும் கோவில் நிர்வாக சபையார் கொடுக்கின்றனர். இந்த வீட்டையும் விலைக்குத் தானே விற்றிருக்க வேண்டும். ஏன் இந்த மூன்று கணக்கரும் காசில்லாமல் வீட்டை அனுபவிக்க கோவில் நிர்வாக சபையார் ஒப்புக் கொண்டனர் என்று புரியவில்லை.  இதைத் தான் தன்னதென்று அம்பலத்தாடுவான் கல்வெட்டிக் கொண்டானா? தெரியவில்லை.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 25, பக். 162-163.

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்பெரும்பூதூர் வட்டம், குமட்டூர், 10 வரிக் கல்வெட்டு

    ஸ்வஸ்த்திசிரி திரிபுவனச் சக்கரவத்திகள் மதுரைகொண்ட பாண்டியன் முடிதலையுங் கொண்டருளிய சிரிகுலோத்துங்க சோழதேவருக்கு யாண்டு பதினாறாவது விக்கிரமசோழ வளநாட்டு இன்னம்பர்நாட்டு உடையார் சிரிவி_ _ _ _ கோயிலில் கும்பிட்டு இருக்கும் ஆண்டார்கள் பெரியதேவர் இராசாதிராச தேவர்க்கு யாண்டு ஏழாவது நாளிலே பழையனூருடையார் / பல்லவராயருக்கு உடையார் தேவதானமான கமுகுதிருநந்தவன மாத்தலாறு நூற்றுநால்பது கமுகாக்கி கல்வெட்டவேமும் விண்ணப்பஞ்செய்து பிரசாதம் செய்தருளிச் செய்யும்படி பெறவேணுமென்று அவரும் விண்ணப்பஞ் செய்தும் _ _ _ _  இருந்து வருகையாலும் திருக்கொடிக்கமுகும் தெண்டும் திறப்பிலே கைவிலைக் கொண்டு வெட்டிவந்து இப்படியாய் வருகிற / கமுகை இக்கோயில் மாடாபத்தியம் பழுவூர் ஆண்டான் பதிநாலாவதும் பதினைஞ்சாவதும் கமுகு தன்னகத்துக்கு வெட்டியும் காசுக்கு வெட்டி விற்றும் தன் சம்மந்திக்கு வெட்டிக்குடுத்தும் இப்படியாக அழித்து கமுகு மூவாயிரத்தி இருநூற்றுக்கும் பாக்கு முப்பத்திரண்டு நூறாயிரமும் பதினைந்தாவது _ _ _ _  நாற்பத்திராயிரத்தறநூற்று சின்னமும் மின்னிலே மேனோக்கிப் பாழாய்த் தேவர்கடமை இழந்து வருகையாலு மித்தேவருக்கு தானத்தாரும் / கும்பிட்டிருக்கும் ஆண்டார்களும் இருந்து முதலாய் சீபண்டாரத்து ஒடுக்கினகாசு முதலிடாதேயிவன் தான் கையுற்றக் காசு முப்பத்தினாயிரத்தி நானூறு மிவன் பேரவரியோலை ஏற்றத்தாலுமிவன் கல்லிமுக்கி வாங்கிய காசிலுமிவன் சிவநாமத்து வரிசைக்கு முதநிலத்தாலும் கமுகு கடைமையாலும் _ _ _ _  அஞ்சாவது ஆனிமாதத்தே திருக்காப்புக்கொண்டு கிடந்தவாறே ஆண்டார்கள் பழுவூருடையானை யழைத்து முறையாட்டம் கேட்க புக இவன் / புழக்கடையே விழுந்து ஓடிப்போனவாறே யிவனகத்தை சோதிச்ச இடத்து நாற்பதில் கல  நெல்லும் கோயிற்குறியான திருப்பரிகலமும் கண்டு எடுக்கையாய் மற்றும் பல  சிவதுரோகம் முன்னாளிவன்  செய்கையாலும் இவன் வீட்டை இடித்து குலோத்துங்க சோழ வினாயகப்பிள்ளையாரை எழுந்தருளிவித்து இவனகத்தே கண்டு எடுக்காயாயிவனும் சிவதுரோகம் செய்கையாலும் சிரீபண்டாரத்து தன்கையுற்ற காசாலுமிப்பல / படியால் முதலாந காசிலி காசுக்கு திறப்பில் சிரீபராந்தக சதுர்வேதி மங்கலத்திலத்து இவன் தனக்கு கொண்ட காணியாக்கக் கொண்ட கமுகும் விளைநிலமும் திருநாமத்து சிரீபண்டாரத்து கொண்டகாசுக்கு சிரீவீரநாராயணர்க்கு விண்ணப்ப _ _ _ _ பிடாரி வாய்க்காலுக்கு வடக்கு _ _ _ _ கிழக்கடைய நிலம் ஒருமாவரைக்காணி நீக்கி தெற்கடையதிலம் ஒருமாவரைக்காணியில் தெற்கடைய நிலம்முக்காணியில் / கிழக்கடைய ஒரு பூ நிலம் காணி அரைக்காணியும் எட்டாங்கண்ணாற்று நாலஞ்சதிர நிலம் இரண்டுமாமுக்காணியும் கோதண்டராம வாய்க்காலில் _ _ _ _வடக்கடைய நிலம் நான்மாவரையில் கிழக்கடைய நிலம் ஒருமாவரையின் உத்தேசம் நீக்கி இதன்மேற்கு நிலம் முக்காணியில் / இதன் கிழக்கடைய நிலம் அரைக்காணி முந்திரிகை நீக்கி இதன்மேற்கு கமுகு நிலம் காணிமுந்திரிகையும் இதன் தெற்கடைய  நிலம் நான்குமாவரையில் கிழக்கடைய நிலம் இரண்டுமாக்காணியில் தெற்கடைய நிலம் ஒரு மாவரைவரை_ _ _ _  நிலம் அரையான்த தேசம் நீக்கி / இதன் தெற்கடைய நிலம் அரைக்காணி முந்திரிகையில் முந்திரிகை கீழ்கால் நோக்கி மேற்கடைய நிலம் முந்திரிகை கீழ் முக்காலும் இதன் மேற்கடைய நிலம் அரைக்காணி முந்திரிகையில் தெற்கடைய நிலம் அரைக்காணி நீக்கி வடக்கு_ _ _ _ வதிக்கு மேற்கு வானவன்மாதேவி வாய்க்காலுக்கு வடக்கு நாலாங்கண்ணாற்று இரண்டாஞ்சதிரத்து தெற்கடை ய நிலம் நான்மாவரையில் / மேற்கடைய நிலம் முக்காணியில் வடமேற்கடைய நிலம் மாகாணி யிப்படியாக காசுக்குடலாக திருநாமத்துகாணியாக கூட்டினோம். இது பன்மாஹேஷ்வர ரக்ஷை.

    ஆண்டார்கள் – அடியார்கள்; கமுகு திருநந்தவனம் –பாக்குதோப்பு; முறையாட்டம்- கணக்கு.

    விளக்கம்: கல்வெட்டு மூன்றாம் குலோத்துங்க சோழனின் பதினாறாவது ஆட்சிஆண்டில் (பொ.ஊ. 1194ல்)  வெட்டப்பட்டது. இன்னம்பர் நாட்டில் இறைவனை கும்பிட்டு இருந்த அடியார்கள் இரண்டாம் இராசாதிராசனின் 7-ம் ஆட்சி ஆண்டில் (பொ.ஊ.1173 ல்) பழையனூர் பல்லவராயரிடம் வேந்தரின் தேவதானமாக 140 மரங்கள் கொண்ட பாக்குத் தோப்பை இறைவனுக்கு எழுதித்தர வேண்டும் என்று விண்ணப்பம் செய்தார்கள். பல்வரையரும் இறைவனுக்கு பிரசாதம் செய்தருளும்படி பாக்குத் தோப்பை தேவதானமாக எழுதிக் கொடுத்தார். கோவில் மடைபள்ளி நிர்வாகி பாக்குத்தோப்பிற்கே சென்று விலை கொடுத்து பாக்கை வெட்டிவருகின்றான். இப்படி வரும் பாக்கை தன்வீட்டிற்கும் கொண்டு வந்து, பிறருக்கு காசிற்கு வெட்டி விற்றும், தன் சம்பந்திக்கு கொடுத்தும் அப்படியாக பச்சைப் பாக்கை  3200 காசிற்கும், 3200000 பாக்கை 42,600 காசிற்கும் விற்றதனல் கோவிலுக்கு முன்புவந்துகொண்டிருந்த நில வருவாய், பாக்கு வரி இழப்பு ஏற்பட்டது. பல்வரையரும், கோவில் பொறுப்பாளரும், இறைவனைத் தொழும் அடியார்களும் கொடுத்த காசை 30,400 இவன் கோவில் கருவூலத்தில் சேர்க்காமல் தானே கையாடல் செய்துகொண்டான். இதனால் சிவநாமத்து நில வருவாயும், பாக்கு வரியும் வராமல் போனது. ஆடிமாதத்தில் காப்புகட்டிய அடியார்கள் இந்த மடைபள்ளி நிர்வாகியை கணக்குதரும்படி கேட்டனர். அவன் தன் விட்டின் புழக்கடைவழியே ஊரைவிட்டு ஓடிப்போனான்.அவன் வீட்டை வந்து சோதித்தபோது 40 கல நெல்லும் கோயில் திருப்பரிகலமும் கண்டு எடுத்தனர். இன்னும் பல சிவதுரோகம் செய்திருந்ததினால் இவன் வீட்டை இடித்து பிள்ளையார் கோவில் கட்டினர். இவன் பாக்கு விற்ற காசில் ஊரில் பல்வேறு இடங்களில் வாங்கிப் போட்டிருந்த நிலங்கள் அத்தனையும் பறிமுதல் செய்து அவற்றை இறைவன் பெயருக்கு உரிமை ஆக்கினர். மடைபள்ளி நிர்வாகி பழுவூர் ஆண்டான் ஒரு பிராமணர் ஏனென்றால் மடைபள்ளியில் பிராமணரே பணியாற்றுவர்.

    பார்வை நூல்: தமிழ்க் கல்வெட்டுகள் வெளிச்சமிடுகின்ற அரிய உண்மைகள், பக் 292-293, முனைவர் வஞ்சியூர் க. பன்னீர்செல்வம். 0-9886769865

    Share
  • எத்தனை, எத்தனை எதிர்பார்ப்புகள்!

    நிர்மலா ராகவன்

    நலம் நலமறிய ஆவல் (166)

    எத்தனை, எத்தனை எதிர்பார்ப்புகள்!

    “பரீட்சையில் நான் எதிர்பார்த்த கேள்விகள் எதுவும் வரவில்லை!”

    பெண் பார்த்துவிட்டுப் போனவர்: “உங்கள் பெண் நான் எதிர்பார்த்த அளவுக்கு அழகாயில்லை. ஸாரி!”

    “எனக்கு ஒரு மனைவி வந்தால், என் எல்லாத் தேவைகளையும் கவனித்துக்கொள்வாள் என்று நினைத்திருந்தேன்!”

    மேற்கண்ட மாணவன், இளைஞன், கணவர் எல்லாருக்கும் ஏன் இப்படியொரு ஏமாற்றம்?

    அவர்கள் எதிர்பார்த்ததுபோல் எதுவும் அமையவில்லையாம்.

    பிறரிடம் நாம் எதிர்பார்ப்பது அனேகமாக ஏமாற்றத்தில்தான் கொண்டுவிடும்.

    காதலரோ, காதலியோ தன்னைப்பற்றியே நினைத்து உருகவேண்டும், அடிக்கடி `ஐ லவ் யு’ சொல்லவேண்டும், பரிசுப்பொருட்களால் தன்னைத் திணற அடிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் பூசல்களைத்தான் விளைவிக்கின்றன. ஒருவருக்கு ஏமாற்றம், இன்னொருவருக்கு எரிச்சல். உறவுகளில் விரிசல் ஏற்பட இது போதுமே!

    புதுமணத் தம்பதிகளின் பிரச்னை

    கதை

    பெற்றோருக்கு ஒத்துப்போகாததால், இந்திரனுடைய வீட்டில் எப்போதும் மௌனம்தான் என்ற நிலை.

    தன் மணவாழ்க்கையும் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். உடன் படித்த பத்மினியின் கலகலப்பும் சிரிப்பும் அவன் இதுவரை அனுபவிக்காதது. சாதுவாக இருந்தவன், பிடிவாதமாக பத்மினியை மணந்தான்.

    `தான் இவனுக்கு எவ்வளவு தேவைப்பட்டால் இப்படிப் பெற்றோரையே எதிர்க்கத் துணிவான்!’ என்றெண்ணினாள் பத்மினி. அவள் கை உயர்ந்தது. பல பேர் முன்னிலையில் அவனை அவமானப்படுத்த ஆரம்பித்தாள்.

    பத்மினி எதிர்பார்த்தபடி, இந்திரனை மணந்ததால் அவளுடைய செல்வ நிலை உயர்ந்தது. பெரிய வீடு, அவளுடைய சொந்த உபயோகத்திற்கென கார் எல்லாவற்றையும் கொடுத்திருந்த இந்திரன், அவளது ஏச்சுப்பேச்சை சகிக்கமுடியாது, வீட்டில் நேரத்தைக் கழிப்பதையே குறைத்துக்கொண்டான்.

    பிறரால் நமக்கு மகிழ்ச்சி கிட்டும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில்தான் கொண்டுவிடும்.

    பிறர் மெச்ச எல்லாம் இருந்தாலும், `கணவன் தன்னை நாடவில்லையே!’ என்று எப்போதும் தனிமையில் நொந்த பத்மினிக்கு வெறுமைதான் ஏற்பட்டது. அவளுடைய பழைய கலகலப்பு மறைந்துபோய், பேசுவதையே குறைத்துக்கொண்டாள். நாளடைவில், மன இறுக்கம் உண்டாயிற்று.

    `உனக்கு என்ன ஆயிற்று?’ என்று யாராவது கரிசனத்துடன் கேட்டால், அவளால் அழத்தான் முடிந்தது.

    முன்பு படித்த துணுக்கு நினைவில் எழுகிறது.

    “என் இல்லற வாழ்க்கை சகிக்கவில்லை”.

    “அடடா! உன் காதலி என்ன ஆனாள்?”

    “அதை ஏன் கேட்கிறாய்! அவள்தான் இப்போது என் மனைவி!”

    இந்திரன்-பத்மினி இருவருடையேயும் இருந்த உறவும் இப்படித்தான் பலவீனமாகப் போயிற்று. காதல் போன இடம் தெரியவில்லை.

    மனைவியைப்பற்றிய எதிர்பார்ப்பு

    `உங்கள் வருங்கால மனைவி எப்படி இருக்கவேண்டும்? என்று சிலரைக் கேட்டபோது, ஒருவர் மட்டும், “எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை,” என்றார். எப்படியும், அம்மா காட்டுகிற பெண்தான் தனக்கு மனைவியாக அமைவாள் என்ற விட்டேற்றியான போக்கு அவரிடம் காணப்பட்டது. தாய் சொல்லைத் தட்டி அறியாத மகன்!

    ஒரு சிலர், `நான் மணக்கப்போகிறவள் என்னைவிட அதிகம் படித்தவளாக இருக்கவேண்டும். அவளால் என் நிலை உயரவேண்டும்!’ என்று யோசித்து, அதன்படி நடப்பார்கள்.

    அவளுடைய எதிர்பார்ப்போ வேறுமாதிரியாக இருக்கும்.

    கதை

    சதீஷ் ஆசைப்பட்டபடியே அவனைவிடப் பெரிய படிப்புப் படித்த லோசனி அவனுக்கு மனைவியாக வாய்த்தாள். சில மாதங்கள் உத்தியோகத்திற்குப் போனதும், கருவுற்றதில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டது. வேலையை விட்டாள். அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள்.

    “இப்போதாவது வேலைக்குப் போயேன்!” என்ற கணவன் கெஞ்ச, “குழந்தைகளை நானே பார்த்துக்கொண்டால்தான் புத்திசாலிகளாக வளர்வார்கள்,” என்று மறுத்துவிட்டாள். அவன் கெஞ்சி, கொஞ்சி, மிரட்டிப்பார்த்தும் அவள் அசைந்து கொடுக்கவில்லை.

    “உன் மனைவி உண்மையாகவே படித்தவள்தானா?” என்று சில நண்பர்கள் தூபம் போட, அவன் ஆத்திரம் அதிகரித்தது.

    கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று நம்பி மணந்தவனுக்கு பெரும் ஏமாற்றம். அவனுடைய சம்பளத்தில் இப்போது நான்குபேர்!

    சில மாதங்களுக்குப்பின்னர் லோசனி மீண்டும் வேலைக்குப் போனாள். ஆனால், நண்பர்களிடம் படாடோபமாகக் காட்டிக்கொள்ளலாம் என்று நினைத்தவனுக்கு ஏமாற்றம். `என் பணம்,’ என்று அதைச் சேமித்தாள்.

    தன் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டது சதீஷ் செய்த பிழை. தான் அப்படி ஒரு பெண்ணிற்கு ஏற்றவன்தானா என்று முதலில் யோசித்திருக்கவேண்டும்.

    எதிர்பார்ப்பே கூடாதா?

    நாம் அடைய வேண்டியதில் மட்டும்தான் எதிர்பார்ப்புகள் அவசியம். நமது முயற்சியைக்கொண்டு வெற்றியடைவது நம் கையில்தான் இருக்கிறது.

    `என்னால் இதைவிட அதிகமாகச் சாதிக்கமுடியும்!’ என்று உறுதிபூண்டால் போதும். பிறரால்தான் அது முடியும் என்ற எதிர்பார்ப்போ ஏமாற்றத்தில்தான் கொண்டுவிடும்.

    இப்படி இருந்தால்…

    சிலருக்கு ஏன் எதிலுமே பூரண திருப்தி கிடைப்பதில்லை?

    `இப்படி இருந்தால்..!’ என்று எல்லா நிலையிலும் அதிருப்தி அடைகிறவர்கள் இவர்கள்.

    வெளியூர்களுக்குப் போகும்போது, `ரயிலில் நேற்றோ, முந்தாநாளோ பண்ணின இட்லியைக் கொடுத்துவிட்டான்! வயிற்றைக் கலக்குகிறது!’ என்று புகார் கூறுபவர் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நாம் விரைவாகப் போகும் வழி இது என்று எண்ணிப்பார்க்கத் தவறிவிடுகிறார்.

    பெரிய எதிர்பார்ப்புடன், புதிய ஊரைச் சுற்றிப்பார்க்கலாம் என்று உறவினர்கள் வீட்டுக்குப் போனால், சிலர், `ஏன் வந்தீர்கள்?’ என்பதுபோல் அவர்கள் நடந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு என்ன அசந்தர்ப்பமோ!

    `சுற்றுலா போக மிகச் சிறந்த இடம்!’ என்று யாராவது வந்துகொண்டே இருந்தால், அவர்கள்தாம் என்ன செய்வார்கள், பாவம்!

    நாம் பரிசுப்பொருட்கள் வாங்கிப்போனால், அது அன்பால் மட்டுமல்ல. பிரதியுபகாரத்தை எதிர்பார்த்துச் செய்யும் வியாபாரம். ஒரு சிறு குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து, `முத்தம் கொடு!’ என்று கேட்பதுபோல்தான்.

    `இப்படித்தான் நடக்கவேண்டும்!’ என்ற வரையறை வகுத்து, அதன்மூலம் பிறரைக் கட்டுப்படுத்தும் முயற்சி அது.

    நாம் எதிர்பார்த்ததுபோல் நடப்பார், நடக்கவேண்டும், என்று நம்பி பிறருக்கு உபகாரம் செய்வது வீண். நம் விருப்பப்படியே எல்லாரும் நடக்க வேண்டுமென்றால் ஆகிற காரியமா!

    வெற்றி நிலைக்காது ஏமாற்றம்

    ஒரு காரியத்தில் சில முறை வெற்றி கிட்டலாம். ஆனால், அந்த வெற்றி தொடரும் என்று எதிர்பார்க்க முடியுமா?

    முன்னணி நடிகர்கள் சில தோல்வியடைந்த படங்களையும் கொடுத்திருக்கிறார்கள்.

    போட்டிகளில் சேர்பவர்களுக்கு, Hope for the best. Prepare for the worst என்ற மனப்பான்மை அவசியம்.

    போட்டியில் வெற்றி அடைந்தபோது, பிறரை மதிக்காது அலட்டுபவர்கள் தோல்வி கிட்டும்போது துவண்டுவிடுவது அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பால்தான்.

    எதிர்பார்க்கலாம், ஆனால் அது நிறைவேறாதபோது தாங்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால், ஏமாற்றம் எழாது.

    கதை

    பாலித்தீவில் உள்ள பலருக்கு ஒரே ஆசை: வாழ்வில் ஒருமுறையாவது டெல்லியும், ரிஷிகேசமும் போய் பார்த்துவிட வேண்டும்.

    அப்படிப் போய்வந்த வாயான் (Wayan) என்பவர், “இந்தியா நான் எதிர்பார்த்தபடி இல்லை. ஆனால், மக்கள் தொகை பெருகிவிட்ட நிலையில் அனைவரும் நிதானமாக, அமைதியைக் கைவிடாது நடக்கவேண்டும் என்றால் சாத்தியமா?” என்கிறார்.

    நம் எதிர்பார்ப்பு பொய்யாகும்போது, வாயானைப்போல், `ஏன் இப்படி?’ என்று கேட்டுக்கொண்டால் ஆத்திரம் எழாது. தெளிவு பிறக்க, பிறரை அலட்சியமாகக் கருதவும் மாட்டோம்.

    Share
  • ஈழத்துச் சிறுவர் இலக்கிய உலகில் மு.க.சுப்பிரமணியம்

    கௌசி, ஜெர்மனி

    இன்றைய சிறுவர்கள் நாளைய பெரியவர்கள். இன்றைய சிறுவர்களைச் சிறப்பான முறையில்
    வளர்த்து எடுக்கும் போதே நாளைய உலகம் சிறப்பான உலகமாகத் திகழும். இந்த நோக்கத்துடனேயே கதைகளுக்கூடாகவும் பாடல்கள் மூலமும் அறிவுரை புகுத்தும் இலக்கியங்கள் தோன்றின.

    சிறுவர்களுக்காக எழுதப்பட்ட இந்த இலக்கியத்தின் கதாநாயகர்களாக, பிள்ளைகள் விரும்புகின்ற பிராணிகளும் விலங்குகளும் அதிகமாக வந்து போவார்கள். குழந்தைகள் கற்பனாசக்தி மிக்கவர்கள். எனவே இக்கதைகளில் மிருகங்கள் பேசும், பறவைகள் பாடும். வண்ண வண்ண நிறங்களிலும் அழகான கண்ணைக் கவரும் படங்களுடனும் கவர்ச்சியாக சிறுவர்களைக் கவரும் வகையில் இந்த இலக்கியத்தைப் படைப்பார்கள்.

    நிலா நிலா ஓடி வா
    நில்லாமல் ஓடி வா
    மலைமேலே ஏறி வா
    மல்லிகைப்பூ கொண்டு வா

    என்று நிலாவைக் காட்டிச் சோறு ஊட்டிய தாயின் வாய்மொழி இலக்கியமாகத் தொடங்கியதே சிறுவர் இலக்கியம். பாட்டி வடை சுட்ட கதை போன்று குழந்தைகளை உறங்க வைக்கத் தாய் கூறிய
    கதையிலிருந்து சிறுவர் கதைகள் ஆரம்பமாகின. தாயின் ஆராரோ ஆரிவரோ என்ற தாலாட்டுப்
    பாடலுடன் சிறுவர் பாடல்கள் தொடங்கின.

    சிறுவர்களுக்கான கதைகள் பாடல்கள், கவிதைகள், கட்டுரைகள், நாடகங்கள், அறிவியல் கட்டுரைகள், சித்திரக் கதைகள், நீதிக் கதைகள், துணுக்குகள் எனச் சிறுவர் இலக்கியத்துள் அடங்குகின்றன. ஈழத்திலும் மிகச் சிறப்பான சிறுவர் இலக்கியத்தின் கர்த்தாவாக அநு.வை. நாகராஜன் (1933 – 2012) அவர்களைக் குறிக்கலாம். இவர் சிறுவர்களுக்காக,

    • தேடலும் பதிதலும் என்னும் சிறுவர் அறிவியல் நூல் – 1992
    • அவன் பெரியவன் என்றும் சிறுவர் குறும் நவீனம்
    • சிறுவர் சிந்தனைக் கதைகள் – 2002
    • சிறுவர் கவிதையில் புதிய சிந்தனைகள் 2005
    • சிறுவரும் அவர்கள் அறிவுசார் சாதனங்களும் – 2005
    • சிறுவர் பழமொழிக் கதைகள்

    போன்ற நூல்களை எழுதியுள்ளார்.

    இவ்வாறு சிறுவர்களுக்கான நூல்களை எழுதிய அநு.வை. நாகராஜன் போன்றே குழந்தைகளுக்கான முதல் முதல் வெளிவந்த சிறுவர் மாத இதழாக வெற்றிமணியை வெளியீடு செய்து அதன் மூலம் சிறுவர் இலக்கியங்களுக்குப் பங்களித்த ஆ.மு.ளு என்று அழைக்கப்படும் அமரர் மு.க.சுப்பிரமணியம் அவர்களும் பெருமைக்கு உரியவர்.

    தொலைநோக்குச் சிந்தனை உள்ள ஒருவரால் மாத்திரமே இவ்வாறாக மாதம் ஒரு சஞ்சிகை அதுவும்
    முழுக்க முழுக்கச் சிறுவர்களுக்காக மட்டுமே வெளியிட முடியும். இதற்கு ஆசிரியப் பணியை அவர்
    மேற்கொண்டது மட்டுமல்லாமல் மாணவர்களுடன் உள்ளன்புடன் பழகியமையும் காரணமாகும்.

    அத்துடன் மு.க.சுப்பிரமணியம் அவர்கள் 1980இல் மறைந்துவிட்டாலும், இன்றும் பேசப்படும்
    மனிதராக இருப்பதற்கும் ஆசிரியத் தொழிலில் மட்டுமே நின்றுவிடாது மாணவர்கள் நலன் கருதி அவர் ஆற்றிய சேவைகளே முதன்மைக் காரணங்கள்.

    இவர் மே மாதம் 14ஆம் திகதி, 1919ஆம் ஆண்டு குரும்பசிட்டியில் ஒரு விவசாயக் குடும்பத்தில் திரு.-திருமதி கந்தவனம் தம்பதியனருக்கு எட்டுப் பிள்ளைகளில் ஏழாவதாகப் பிறந்தார். கல்வியிலும்
    சமூகத் தொண்டிலும் நேரத்தை அர்ப்பணித்தார். காங்கேசந்துறை வட்டாரக் கல்வி, விளையாட்டு, இவற்றின் அமைப்பாளராகவும் பரீட்சைக் காரியதரிசியாகவும் இருந்து அளப்பரும் தொண்டுகள்
    ஆற்றி கல்விப் பணிப்பாளர், உதவி அரசாங்க அதிபர் போன்றோரின் பாராட்டுதலைப் பெற்றார். அகில இலங்கை ஆசிரியர் கலாசாலையின் தமிழாசிரியர் சங்க உப தலைவராகவும் நுவரெலியா, முல்லைத்தீவு கிளைகளின் தலைவராகவும் காரியதரிசியாகவும் இருந்து பெரும் தொண்டாற்றினார். காங்கேகன் துறை ஆசிரியர் சங்கக் கிளையை ஆரம்பித்தவர்களில், இவர் முக்கியமானவர்.

    இவர் 1964ஆம் ஆண்டு ஒட்டுசுட்டான் காதலியார் சம்மளம் குளத்தில் அரசினர் தமிழ்ப் பாடசாலை
    தலைமை ஆசிரியராக இருந்தார். அப்போது அங்குப் பயின்ற மாணவர்களை அவர்களின் பெற்றோர், படிப்பை இடையில் நிறுத்தி, விவசாயத்திற்கு அழைத்துச் சென்றனர். அறுவடைக் காலத்தில் பெற்றோருக்கு பிள்ளைகளின் உதவி தேவை என்பதனை அறிந்து அந்த நாட்களில் அரச அனுமதியுடன் விடுமுறை கொடுத்து, பெற்றோருக்கும் மாணவர்களுக்கும் உதவினார். இதனால் மாணவர்களின் படிப்பை இடைநிறுத்தாது பாதுகாத்த பெருமை அமரர் சுப்பிரமணியம் அவர்களையே சாரும்.

    ஆர்வம் மிகுந்த மாணவர்கள் பலரை யாழ்ப்பாணம் அழைத்து வந்து மேற்படிப்பிற்கு வழிசமைத்துக் கொடுத்தார். இவ்வாறு மாணவர்களுக்கான கற்றல் வளர்ச்சிக்கு தன் எண்ணம் முழுவதையும் ஈடுபடுத்தி வந்தார். அவ்வேளையில் மாணவர்கள் முன்னேற்றம் கருதி, யாரும் அக்காலத்தில் நினைத்திருக்காத மாதாந்த சஞ்சிகை ஒன்று வெளியிட வேண்டும் என்ற தன் கனவை நனவாக்கினார்.

    மாணவர்களைப் பரீட்சைக்குத் தயார்படுத்தல், அவர்கள் அறிவைத் தூண்டும் விதமான அறிவியல் கல்வியை மேம்படுத்தக் கூடிய கட்டுரைகளை கற்றோரிடம் இருந்து பெற்றுச் சஞ்சிகையில் பிரசுரித்தல் போன்ற நோக்கங்களைக் கொண்டு நாவலப்பிட்டியில் ஆசிரியராக இருந்த வேளை, தினகரன், சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளில் வந்த குறுக்கெழுத்துப் போட்டிகளின் சிறந்த விடை விமர்சனி என்னும் வெற்றி மணியை 1950ஆம் ஆண்டு வெளியிட்டார். போட்டிகளில் வெற்றி என்பதனைக் குறிக்க, வெற்றி என்பதனையும் சுப்பிரமணியம் என்பதில் உள்ள மணியினையும் இணைத்து வெற்றிமணி எனப் பெயர் இட்டார்.

    08 பக்கங்களில் ஆரம்பித்துப் பின் 16, 32, 59 எனப் பக்கங்கள் தேவைக்கேற்ப அதிகரித்த வண்ணம்
    இருந்தன. அதன்பின் 1954ஆம் ஆண்டு முழுக்க முழுக்க மாணவர் பத்திரிகையாக வெற்றிமணி உருவெடுத்தது. மலையக மக்களின் கல்வி திட்டமிட்டு நசுக்கப்பட்ட வேளையில், அவர்களது கல்விக்கும் ஆற்றலுக்கும் முதற்களம் அமைத்துக் கொடுத்தது. தான் ஆசிரியராக கடமை புரிந்த பாடசாலைகளில் எழுத்தாற்றல் மிக்க ஆசிரியர்களையும் மாணவர்களையும் வெற்றிமணியில் எழுத வைத்தார்.

    வெற்றிமணியில் ஒரு சிறு மாணவன் மாடு பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தான். அக்கட்டுரைக்கு
    முக்கியத்துவம் கொடுத்து வெற்றிமணி வெளியிட்டு இருந்தது. மாடு பற்றி எழுதிய சிறுவனிடம் ஏன்
    மாடு வண்டி இழுக்கும் என்று எழுதவில்லை? எனக் கேட்டபோது, அவன் சொன்ன பதிலே ஆசிரியரை
    கவர்ந்தது. அவன் சொன் பதில், மாடு பாவம், வண்டி இழுக்கும் என்று சொல்ல தனக்குக் கவலையாக
    இருக்கும் என்றானாம். ஜீவகாருண்யம் அச்சிறுவனின் உள்ளத்தில் தெய்வீக ஒளிபாய்ச்சியது. உடனே
    இக்கட்டுரையை சஞ்சிகையில் வெளியீடு செய்திருந்தார்.

    மாடு
    மாட்டிற்கு 2 கொம்பு உண்டு.
    மாட்டிற்கு ஒரு வாலுண்டு.
    மாட்டிற்கு நான்கு கால்கள் உண்டு.

    இக்கட்டுரையைப் பார்த்த வாசகர்கள், “ஏன் இப்படி தரமில்லாத கட்டுரையை பிரசுரித்தீர்கள்? என்று
    ஆசிரியரைக் கேட்டபோது “இந்தக் கட்டுரை வந்தபின்பே வெற்றிமணியில் பல சிறப்பான கட்டுரைகள்
    வரத் தொடங்கின. வாசகர்கள் படைப்பாளிகள் எல்லோருக்கும் அட, இதனைவிட எம்மால் நன்றாக எழுத முடியும் என்று எண்ணத் தோன்றியது. எனவே எப்போதும் சிறப்பான ஆக்கங்கள்தான்
    வெளியிட வேண்டும் என்பதில்லை. எழுத்தாளரைக் கிளர்ந்து எழச்செய்யும்வண்ணம் இப்படி சிலவற்றையும் செய்யத்தான் வேண்டும் என்றார். இதன் மூலம் இவருடைய ஆழ்ந்த தொலைநோக்குச் சிந்தனை புலப்படுகின்றது. ஊக்கமுள்ள ஒருவருக்கு இடம் கொடுத்தால், எதிர்காலத்தில் அவர் உச்சத்தைத் தொடுவார் என்னும் உயரிய நோக்கம் அவரிடம் இருந்ததனால், அந்த மாடு என்னும் கட்டுரை எழுதிய சிறுவன் பிற்காலத்தில் சிறந்த எழுத்தாளனாகவும் உருவெடுத்தார் என்பது யாம் அறிந்த செய்தியாகும்.

    இதுமட்டுமன்றி வெற்றிமணியில் எழுதும் சிறுவர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் முகமாக
    சிலசமயம் அவர்கள் கற்கும் பாடசாலைகளுக்கு நேரில் சென்று புத்தகங்களை வழங்கி அவர்களை
    மகிழ்ச்சியடையவும் வைத்துள்ளார். சிறுவர்களுக்காக இலக்கியம் படைப்பதிலும் சிறுவர்களே தமக்கான இலக்கியத்தைப் படைப்பது பாராட்டத்தக்கதே. மாணவர்களின் உயர்வே ஒரு நாட்டின் உயர்வு எனக் கருதி இத்தன்மையை ஊக்குவித்த அமரர் மு.க.சுப்பிரமணியம், எல்லோராலும்
    போற்றப்படக் கூடியவர்.

    இவருடைய இந்த நூற்றாண்டுக் காலப் பகுதியில் படைப்புலகம் இவரை நினைத்துப் பார்ப்பதுடன்
    பாராட்ட வேண்டியதும் அவசியமாகின்றது.

    சாதனையாளர்கள் என்றும் சாவதில்லை
    சாதனைகள் என்றும் மறைவதில்லை – மனிதன்
    வாழும்வரை மறக்கப்படுவதில்லை.

    Share
  • பணம் என்பது காகிதத்தாள் தான்!

    பணம் என்பது காகிதத்தாள் தான்!

    நியாண்டர் செல்வன்

    கேரளாவில், முத்தூட் பைனான்ஸ் எனும் தனியார் நிதி நிறுவனத்துக்கு ஒரு ரிப்பேர் வேலை பார்க்க ஒரு எஞ்சினியர் செல்கிறார்.

    அந்தச் சமயம் அந்த வங்கியில் ஐந்து கொள்ளையர், துப்பாக்கியுடன் நுழைந்து கொள்ளையடிக்க முயல்கிறார்கள்.

    இவர் அவர்களை எதிர்த்துப் போராட-> டிஷ்யூம்….வீர மரணம்.

    “அவர் ஒரு வீரர்” எனப் போலிஸ் கமிசனர் பாராட்டுகிறார்..

    இதில் வீரம் எங்கிருந்து வந்தது எனத் தெரியவில்லை.

    வீரம் என்பது வள்ளுவர் சொன்னதுபோல் “வினை வலியும், தன் வலியும், மாற்றான் வலியும், துணை வலியும்” எண்ணிச் செய்ய வேண்டிய செயல்.

    நாம் என்ன காரியம் செய்யவிருக்கிறோம்? அதைச் செய்து முடிக்கவேண்டிய வலிமை என்ன? எதிரியின் வலிமை என்ன? நமக்குத் துணையாக வருபவர் வலிமை என்ன?-> இதைக் கணக்கிட்டுச் செயல்பட வேண்டும்.

    துப்பாக்கியுடன் ஐந்து பேர். எதிரே ஒருவர்… வந்தவர் நோக்கம் பணத்தைக் கொள்ளை அடிப்பது… ஆட்களை கொல்வது இல்லை.

    அதிலும் அது இவர் பணமும் இல்லை, நிதி நிறுவனப் பணம். பணம் போனால் சம்பாதித்துக்கொள்ளலாம். உயிர் போனால் என்ன செய்ய முடியும்?

    புகழ்மாலைகளைச் சூட்டிவிட்டு போலிஸ் கலைந்துவிடும், நிதி நிறுவனம், இன்சூரன்சு சில லட்சங்களைக் கொடுக்கலாம். அதன்பின் இவரது குடும்பம், தாய், மனைவி, பிள்ளைகள்… வாழ்நாள் முழுக்க இவரை இழந்து வருந்துவார்கள். எத்தனை பணமும், புகழும் அதை ஈடு கட்டாது.

    ஒரு பத்து நிமிடம் ஹேன்ட்ஸாப் பொசிசனில் இருந்திருந்தால், இன்று இவர் உயிருடன் இருந்திருப்பார்.

    உயிரைப் பொருட்படுத்தாமல் போரிட வேண்டிய சமயங்கள் உண்டு. இன்னொரு உயிரைக் காப்பாற்ற அப்படிப் போரிடலாம்.

    நிதி நிறுவனத்தின் பணத்தைக் காப்பாற்ற தன் உயிரை இழக்கவேண்டிய அவசியம் ஏதும் இல்லை.

    உங்கள் போர்க்களங்களை நீங்கள் கவனமாகத் தேர்ந்தெடுங்கள். நினைத்தபோது விட, உயிர் மலிவான பொருள் இல்லை.

    பணம் என்பது காகிதத்தாள் தான்……

    Share
  • முடியாட்சியில் மக்கள் சுதந்திரம் இல்லை

    முடியாட்சியில் மக்கள் சுதந்திரம் இல்லை

    சேசாத்திரி ஸ்ரீதரன்

    Liberty: The state of being free within society from oppressive, restrictions, imposed by authority on one’s way of life, behaviour, or political views, the power or scope to act as one pleases.

    மேற்கண்ட ஆங்கில விளக்கம் சுதந்திரம், தன்னுரிமை என்பதற்கு ஒருவர் வாழும் சமூகத்தில் ஒருவரது வாழ்வில், நடக்கையில், அரசியல் பார்வையில் அரசதிகாரத்தால் ஒடுக்குதல், கட்டுப்பாடுகள் ஆகியன திணிக்கப்படாத நிலை என்கின்றது. இன்னொரு விளக்கம் தான் விரும்பியவாறு செயற்படுதல் என்கின்றது.

    நமது தமிழ்நாட்டு வரலாற்றில் இத்தகு விளக்கத்தின் படியான தன்னுரிமைகள் எளிய பொதுமக்களுக்கு இருந்ததில்லை என்பதையே தமிழ்க் கல்வெட்டுகளின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. மேற்கண்ட உரிமைகள் யாவும் வேந்தர், மன்னர், அரையர், கிழார், பெருஞ்செல்வ வணிகர் ஆகியோருக்கு மட்டுமே இருந்திருக்கும் போல் தெரிகின்றது. ஏனெனில், இப்படி இருந்ததால் தான் பின்னாளிலே அதை எளிய மக்களும் அனுபவிக்க உரிமை தரப்பட்டுள்ளது.  ஏன் இப்படி உரிமை பின்னாளிலே தரப்பட்டது என்றால் அது முன்னாளிலே வழக்கத்தில் இருந்திருக்கவில்லை, இதாவது சங்க காலத்திலே இருந்திருக்கவில்லை அதனால் அதன் தொடர்ச்சியாகவே இந்த உரிமைகள் அடுத்து வந்த இடைக்காலத்தில் மக்களுக்கு தரப்பட்டிருக்கவில்லை என்பதே உண்மை நிலை.  ஆனால் பலரும் சங்க காலத்தை பற்றி ஆஹா! ஒஹோ என்று கூறி புலகாங்கிதம் அடைகின்றனர். இதை நாமே கல்வெட்டில் நேரில் படித்து அறிந்து கொண்டால் தான் இலக்கியங்களை விளக்கியோர் சொன்ன பொய்மைகள் உலகுக்கு தெளியத் தெரிய வரும். உண்மையில் கல்வெட்டுகள் இத்தகையோர் கற்பனை எழுத்திற்கும், பேச்சிற்கும் வாய்ப்பூட்டாகவும் கைப்பூட்டாகவும் அமைகின்றன. இந்தப் பதிவு கம்மாளர் பற்றியது என்பதால் அது தொடர்பாக மூன்று கல்வெட்டுகள் இடம்பெற்றுள்ளன மற்ற இரண்டு கல்வெட்டுகள் துணைச் சான்றுகள்.

    கோயம்புத்தூர் மாவட்டம், பேரூர் பட்டீசுவரர் கோயில் தென் சுவர் 12 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ த்ரிபுவனச் சக்ரவத்தி கோனேரின்மேல்
    2. கொண்டான்  தெந்கொங்கில் கண்மாளர்க்கு தங்க
    3. ளுக்கு பதினைஞ்சாவது ஆடிமாதம் முதல் னன்மைத் திந்மைக்
    4. கு இரட்டைச் சங்கும் ஊதிப் பேரிகை யுள்ளிட்டன கொட்டி
    5. வித்துக் கொள்ளவும் தாங்கள் புறப்படவேண்[டும்] இடங்க
    6. [ளு]க்கு  பாதரக்ஷை கோத்துக் [கொ]ள்ளவும் தங்கள்  வீ
    7. [டுக]ளுக்கு சாந்திட்டுக் கொள்ளவும் சொன்னோம் [இ]ப்[ப]
    8. [டி]க்கு நம்மோலை பிடிபாடாக் கொண்டு ச[ந்த்ரா]தித்யவ
    9. ரை செல்வதாகத் [த]ங்களுக்கு வேண்டும் இடங்களி[லே]
    10. [க]ல்லிலும் செம்பிலும் வெட்[டிக் கொள்]க. இவை விழு
    11. ப்பாதராயந் எழுத்து. யாண்டு 15 ள் 129 . இவை(க்) கலி[ங்]
    12. கராயந் எழுத்து.

    நன்மை தின்மை – நல்லது கெட்டது ஆகிய நிகழ்விற்கு; பேரிகை – முரசு; சாந்து – சுண்ணாம்பு அடித்தல்; பிடிபாடு – வழிகாட்டுநெறி, guidelines.

    விளக்கம்: விழுப்பாதராயனும் கலிங்கராயனும் கொங்கு சோழ வேந்தன் கோனேரின்மை கொண்டான் வீரராஜேந்திரனின் 15 –ம் ஆட்சிஆண்டு(1222), 129 -ம் நாளில் வேந்தன் சார்பாக அரசாணை ஓலை ஒன்றை வழங்குகின்றனர். அதில் தென்கொங்கில் வாழும் கம்மாளரான பதினெண் விஷயத்தார் ஆடிமாதம் 15-ம் நாள் முதல் தமது இல்லத்து எல்லா நல்லது கெட்டதுக்கும், இதாவது நிகழ்வுகளுக்கும் இரட்டை சங்கு ஊதவும் முரசு கொட்டிக் கொள்ளவும் ஆட்களை அமர்த்திக் கொள்ளலாம். அதோடு தாம் புறப்பட்டு செல்ல வேண்டிய இடங்களுக்கு காலில் செருப்பு அணிந்து செல்லலாம். தமது வீடுகளுக்கு சுண்ணாம்பு அடித்துக் கொள்ளலாம் என்று இசைவு தந்ததாக சொல்கின்றார் வேந்தர். இந்த ஓலை ஆணையை வழிகாட்டுநெறியாகக் கொண்டு ஞாயிறும் நிலவும் நிலைக்கும் நாள் வரை நடத்திச் செல்லவேண்டும். இதைத் தாம் விரும்பும் இடங்களில் பாறையிலும் செப்பேட்டிலும் பொறித்துக் கொள்ள உரிமை தருகின்றான் வேந்தன். சுதந்திரம் என்பதன் மேற்கண்ட ஆங்கில விளக்கத்திற்கு தக்கபடி 13 ஆம் நூற்றாண்டிற்கு முன் பதினெண் விஷயத்தாரான கம்மாளருக்கு தன்னுரிமை இருந்ததில்லை என்று தெரிகின்றது.   ஏன் இப்படி? இராசராசன் இராசேந்திரன் ஆகியோரது சோழப் பேரரசு காலத்தில் அதற்கு அடங்கிய கொங்கு மண்டலத்தில் இந்த உரிமைகள் இல்லாதது சோழநாட்டிலும் கம்மாளருக்கு அத்தகைய உரிமைகள் இல்லாததால் அன்றோ? அதற்கு முந்தைய பல்லவப் பேரரசு காலத்திலும் இந்த கம்மாளருக்கு சுதந்திரம் இருந்ததில்லை என்று தெரிகின்றது. தொண்டை நாட்டு கம்மாளருக்கு அத்தகு சுதந்திரம் இருந்திருந்தால் கொங்கு நாட்டிலும் கம்மாளருக்கு முன்னமே இத்தகு சுதந்திரம் வந்திருக்கும். அப்படியானால் சங்க காலத்தில் அப்படி ஒரு சுதந்திரம் இருந்திருக்கவே முடியாது என்பதன்றோ முடிவு. இத்தனைக்கும் கம்மாளர்கள் நாகரிக சமுதாயத்தில் முதுகெலும்பாகத் திகழ்ந்தவர்கள். அவர்களுக்கே இந்தநிலை என்றால் மற்றவர் நிலையும் இதே போன்றது தான் என்பது இரங்கத் தக்கதாக உள்ளது. தமிழ்நாட்டை ஆண்ட வேளிரான பல்லவர், வாணர், நுளம்பர், அதியமான்கள் போன்றோர் வடக்கே இருந்து வந்தவர். வடக்கில் இத்தகு உரிமைகள் மக்களுக்கு இருந்திருந்தால் இங்கே தமிழ்நாட்டிலும் அத்தகு உரிமை முன்னரே வந்திருக்கும். அப்படி வடநாட்டில் உரிமைகள் மக்களுக்கு இருந்தது இல்லை என்பதை இது தெளிவாக்குகிறது. பிராமணர் நிலையும் இப்படித் தான் இருந்துள்ளது என்பதை அடுத்த கல்வெட்டு உணர்த்துகின்றது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 5, பக். 87, (A.R.No 562  of 1893)

     

    கோயம்புத்தூர் மாவட்டம், திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோயில் முகமண்டப மேற்குச் சுவர் – வாயிலுக்குத் தெற்கு. 9 வரிக் கல்வெட்டு.

    1. வீரசோழனேன் எமக்குச் செல்லா நின்ற யாண்டு _ _ _ _ வடபரி
    2. சார நாட்டில் திருமுருகன்பூண்டி மகாதேவ
    3. சிவபிராமணன்  காசியபன் வெண்காடன், சிவ(ன்)
    4. கோயில் திருமடைவிளாகத்தில் இருக்
    5. கும் சிரி நிமந்தகாற்கும் குடுத்த  உரிமைகளாவன
    6. முற்றம் குதிரையும் பேரிகையும் செகண்டியும் கொட்டவும்
    7. இரண்டு நிலையும் இரட்டைத் தலைக் கடையும்
    8. கொள்ளப்  பெறுவார்களாகவும். இப்படி இவ்வரிசைகள்
    9. செம்பிலும் சிலையிலும் செய்யிது கொள்ளவும்
    10. குடுத்தோம்.

    திருமடைவிளாகம் – கோவிலைச் சூழ்ந்த தெரு; நிமந்தக்காரர் – செப்புத் திருமேனியை எழுந்தருளச் செய்ய சப்பரத்தில், வாகனத்தில் தண்டு கட்டுபவர், சாமி தூக்கும் பாதந் தாங்கியர்க்கு தலைவர்; செகண்டி –  ஒலி எழுப்புத்வெண்கலத் தட்டு; இரட்டை நிலை – இரண்டு நிலைவாயிற்படி; தலைக்கடை – இரட்டை பின்வாசல்

    விளக்கம்: கொங்கு வீரசோழனின் ஆட்சியில் (ஆண்டு சிதைந்துள்ளது943-1074 வரை மூன்று வீரசோழர் ஆண்டுள்ளனர்)  வடபரிசார நாட்டில் அமைந்த திருமுருகன்பூண்டி மகாதேவர் கோயில் சிவபிராமணன் காசியபன் வெண்காடன் மற்றும் அக்கோயிலை சூழ்ந்த இடத்தில் வாழும் சாமி தூக்கும் நிமந்தக்காரர் ஆகியோர் வீட்டிற்கு முற்றம் அமைத்துக் கட்டவும், குதிரை ஏறி ஊர்வலம் வரவும், நல்லது கெட்டதற்கு பேரிகையும் செகண்டியும் கொட்டவும், வீட்டிற்கு இரண்டு நிலை வாசலும், இரண்டு பின் வாசலும் வைத்துக் கட்ட வேந்தர் உரிமை தருகின்றார்.

    இதன் மூலம் இருவருக்கு மட்டும் இந்தச் சலுகை வழங்கப்படுகின்றது மற்ற பிராமணர்க்கு   இவ்வாறான உரிமை இல்லை என்பது தானே பொருள்.

    பார்வை நூல்: கொங்கு நாட்டுக் கல்வெட்டுகள்; கோயம்பத்தூர் மாவட்டம், பக். 75, ஆசிரியர்:  மா. கணேசன் & இரா. ஜெகதீசன்.

    தென்ஆர்க்காடு மாவட்டம், விருத்தாசலம் வட்டம், திட்டக்குடி வைத்தியநாதர் கோவில் கருவறை முன் உள்ள மண்டபத்தின் வடக்கு சுவரில் பொறிக்கப்பட்டுள்ள 6 வரிக் கல்வெட்டு.

    1. சு[ப]கிறி[து] ஆண்டு ஆடிமாதம் 20 – கு ஸ்ரீமது நாகம நாயக்கரய்யன் காரியத்துக்கு கடவர் வசியப்ப முத
    2. லியார் திட்டைகுடி தாநத்தாரும், இளமங்கலம் ஊரவர் வெள்ளாழரும் தந்[தி]ரிமாரும் ந
    3. த்தக்கேடு அடிக்கேட்டுக்காக சண்டையாய் யிரண்டு திறவரும் குடிப்போய் ஊரும்
    4. நாலாறு வருஷ(ம்)மாகப் பாழாயிருக்கையில் யிப்பொழுது வெள்ளாழர் தந்[தி]ரிமார் கா
    5. ணியாழ்ச்சி. பறையர் உள்பட நத்தக்கேடு அடிக்கேடு யிறுக்கடவராகவும் [யி]ந்த படிக்கு
    6. எழுதின கோயில் கணக்கு _ _ _ _  திரு[த்தாந்தோன்றி] பிரிய[னெ]ழுத்து.

    தானத்தார் – ஸ்தானத்தார், பொறுப்பாளர்; தந்திரிமார் – படைவீரரை கொண்ட சாதி ; நத்தக்கேடு – விளையாத தரிசுநில மாசு; அடிக்கேடு – தரிசுக்கு நிலத்திற்கு அண்மைநில மாசு; குடிப்போய் – ஊரைவிட்டுப் போய்; பாழ் – வெறிச்சோடிப்போய் இரு; காணியாழ்ச்சி – பரம்பரை நில உரிமை; இறுக்கக் கடவர் – தண்டம் அல்லது இழப்பீடு கட்டு.

    விளக்கம்: சுபகிறிது ஆண்டு (1542 / 1602 இல் ஏற்படுகின்றது) ஆடிமாதம்  20-ம் நாள் நாகமநாயக்கரின் செயல்களை ஆற்றும் வசியப்ப முதிலியார் இசைவுப்படி திட்டக்குடி வைத்தியநாதர் கோயில் பொறுப்பாளர்களும் இளமங்கலம் ஊராரும் வெள்ளாளரும் தந்திரிமாரும் இங்கத்து விளையாத தரிசு நிலமான நத்தம் கேடு அடைந்ததால் கோயில் பொறுப்பாளர்களுக்கும் இளமங்கல ஊராருக்கும் சண்டை ஏற்பட்டு ஊர் வெள்ளாளரும் தந்திரமாரான படைச் சாதியாரும் காலிசெய்து கொண்டு போனதால் 4-6 ஆண்டுகளாக ஊரே வெறிச்சோடிப் போனது. இப்பொழுது இளமங்கலத்தில் வெள்ளாளரும் படைச்சாதிமாரும் பரம்பரை நில உரிமையை காரணம் காட்டி குடிசை போட்டும், பறவை விலங்குகளின் புலாலுக்காக அவற்றின் இறகுகளை, தோலை உறித்து போட்டும் நத்தத்தில் மாசு ஏற்படுத்துபவர்கள், நத்தத்தை அண்மித்த நிலத்தில் மாசு ஏறபட்டுத்துபவர்களான பறையர் உள்ளிட்டோர் இனி அதற்கு இழப்பீடு கட்ட வேண்டும். இப்படிக்கு எழுதினேன் கோயில் கணக்கனான திருத்தான்தோன்றிப் பிரியன்.

    புதிதாக ஒரு உரிமையை ஆட்சியாளர் தரலாம் ஆனால் இருக்கின்ற உரிமையை அனுபவிக்க விடாமல் ஒரு குழு இன்னொரு குழுவைத் தடுத்தால் அதுவும் சுதந்திரத்தில் குறுக்கிடுவதாகும். இங்கே நத்தக்கேடு அடிநிலக்கேடு என்று காரணம் காட்டி வெள்ளாளரும் படைச்சாதியாரும் பறையர் உள்ளிட்டாரின் உரிமையை தடுத்தனாரா? அல்லது பறையர் உள்ளிட்டோர் வெள்ளாளர் தந்திரிமாரின் உரிமையை தடுத்தனரா? யார் மீது குற்றம் என்ற தடுமாற்றம் ஏற்படும். ஆனால் காணியாட்சி பெற்றவருக்கே நத்தம், அடிநிலப் பயன்பாட்டு உரிமை என்று நிலைநாட்டுகின்றனர். அதற்காக பறையர் உள்ளிட்டாருக்கு தண்டம் அல்லது இழப்பீடு விதிக்கப்படுகின்றது. இதனால் ஏழைகளான அவர்கள் அந்த இடத்தை காலி செய்துவிட்டுப் போய்விடுவரன்றோ?

    மூன்று ஆண்டுகள் முன் மடலாடற் குழு ஒன்றில் முடியாட்சியில் விளைநிலங்கள் மட்டுமல்லாது ஆறு, ஏரி, குளம், காடு, நத்தம் ஆகியன கூட தனியாருக்குச் சொந்தமாக இருந்தன. அதனால் குடிசை போட வேண்டும் என்றாலும் உரியவரிடம் அனுமதி பெற்றால்தான் குடிசைகூட போட முடியும் என்றேன். இதை அறிஞர் திரு. கௌதம் சன்னா மறுத்து நத்தம் புறம்போக்கில் குடிசை போடலாம் என்றார். அப்பொழுது என்னால் இந்தக் கல்வெட்டை அவருக்கு சான்றாகக் காட்ட முடியவில்லை. இப்பொழுது இயன்றது. முடியாட்சி என்பது ஒருவரது செயல்களை வரையறை செய்வதாகவே அந்நாளிலே இருந்துள்ளது.

    பார்வை நூல்: தென்னிந்தியக் கல்வெட்டுகள், தொகுதி 8, பக். 150, (A.R.No 6  of 1903)

    மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், பொய்கைக்கரைப்பட்டி ஊருக்குக் கிழக்கே உள்ள தோட்டத்தில் தனிக் கல்லில் பொறித்த 51 வரிக் கல்வெட்டு.

    ஸ தது ஸகல நிர்மாண / கரணாம் விஸ்வகர்மணாம் / ஸாஸநரேத காராணா / ம் ஸேஷபுவ நாந்திதம் / மப ஜீவநகர்த்யணாம் ஸ / மஸ்தபுரவாஸிநாம் அ / க்ஷ ஜாத ஜநாநாந்து  ஸ / த்யமேவாதி தைவதம் / விஸ்வகர்ம்மா ஜகந்மாதா / விஸ்வகர்மா ஜகது புரு வி / ஸ்வே ச விஸ்வகர்ம்மாணம் / விஸ்வகம்மணுர வாஸதே / இப்படி யுபஸியா நின்ற / ஸ்ரீ பாண்டி மண்டலத்து  / மாடக்குளக் கீழ் மாடமது / ரை மங்கலவாசல் சேரியில் மூன் / று வினைப் பள்ளி அறுவகைத் / தொழில் நால்வகை இர[த]கா / ரோமும் உலகுடைய நாயனார்  / உடன் கூட்டத்து மூன்றுவினைப் / பள்ளி யறுவகைத் தொ / ழில் நால்வகை யிரதகார  ரோமும் சமைய சங்கேதி / களோமும் கீழையிரணிய / முட்ட நாட்டுத் திருமாலிருஞ்சோலை / நின்றருளிய பரமஸ்வாமிகள் திரு / ப்பதி ஸ்ரீயான பவித்ர மாணிக்க பு / ரத்து மூன்று வினைப் பள்ளி அறு / வகைத் தொழில் நால்வகை / யிரதகாரோம் குறைவறக் கூ / டி நிறைந்து செய்த சமையகா / ரியமாவது இத்திருப்பதியில் தா / த நம்பிமாரில் திருவாய்கு / ல முடையான் திருமலை ஆழ்வா  / ர் சாதிக்குப் பல  நன்மைகள் / செய்கையாலிவற்கு பெரு / மாள் குலஸேகர தேவற்கு மு / ப்பத்தொன்பதாவது நாள் / லிலே எங்கள் சமைய வரி / சையுங் குடுத்து முழுதும் / தலத்தார் இடை எங்கள் பேரும் / குடுத்து நாங்களிவர்க்கு பண் / ணி குடுத்த சமைய சாதன / படியுள்ளவை அனைத்  / தும் பெற்று மேலும் எங்கள் / சாதிக்கு வேண்டும் நன்மை / செய்து போதுவதாக இ / வர் வாசலிலே வரி[ச] / ட்டம் [பூமி] தோரணமு _ _ _ / ம் ஆக குடுத்தோம் பதிணென் / விக்ஷையத்து _ _ _ _

    வினைப்பள்ளி – school of art, பாணி; இரதகாரர் – தேர் செதுக்குவோர்; சமைய சங்கேதிகளோம் – மத தொடர்பான கூட்டம் கூட்டி செய்தியைப் பரப்புவோர்;

    விளக்கம்: பிற்காலப் பாண்டியரில் குலசேகரனின் 39 ஆம் ஆட்சிஆண்டில் (பொ.ஊ. 1307) வெட்டப்பட்ட கம்மாளப் பிரிவில் அடங்கும் ரதகாரரான தேர் செதுக்குவோர் பற்றிய கல்வெட்டு இது. முதல் பன்னிரெண்டு வரிகள் சமஸ்கிருத மொழியில் அமைந்த ரதகாரர்களின் மெய்கீர்த்தி ஆகும். தமிழில் சமஸ்கிருதம் கலந்தோரில் பிராமணரல்லாத பிரிவைச் சேர்ந்தவர்களில் இவர்கள் குறிப்பிடத்த்தக்கவர் என்பதை உணரமுடிகின்றது. இந்த தேர் செதுக்கும் ரதகாரரில் மூன்று பாணியில் ஆறுவகைத் தொழிலாற்றும் நாலு வகையான தேர் செதுக்குவோர் என்பது முற்றிலும் அரிய செய்தி ஆகும்.

    பாண்டி மண்டலத்தில் கிழக்குமாட மதுரை மங்கலவாசல் சேரியில் வாழும் மூன்று பள்ளிகளைச் சேர்ந்த ஆறு தொழில் புரியும்  நால்வகை  தேர் செய்வோர்  உலகுடை நாயனார் உடன் வந்த  மூன்று பள்ளிகளைச் சேர்ந்த ஆறு தொழில் புரியும்  நால்வகை  தேர் செய்வோரும் மதத் தொடர்பான கூட்டம் கூட்டி செய்தியைப் பரப்புவோரும்  இணைந்து கிழக்கு இரணிய முட்ட நாடான திருமாலிருஞ்சோலையில் தங்கி தெய்வீகப் பணிகள் ஆற்றி வரும் பரமசுவாமிகளும் பவித்ர மாணிக்கபுரத்து மூன்று பள்ளிகளைச் சேர்ந்த ஆறு தொழில் புரியும்  நால்வகை  தேர் செய்வோருடன்  கூடிச்செய்த சமயப்பணி

    யாதெனில் திருமாலிருஞ்சோலை தாத பிராமணரில் திருவாய்க்குலமுடையான் என்பான் திருமலை ஆழ்வார் சாதிக்கு நன்மைகள் பல செய்ததால் இவருக்கு ரதகாரரின் மத மதிப்பை அளித்து சிறப்பு செய்தனர்.

    இக்கல்வெட்டின் மூலம் ஆறு தொழில் செய்கின்ற  நால் வகை தேர் செதுக்கும் தேரோரை அறிந்து கொள்ள முடிகின்றது. இக்கல்வெட்டு தீவிர சிந்தனைக்கு இட்டுச் செல்வதாக உள்ளது. அது யாதெனில் பொது மக்கள் யாரும் தேரைப் பயன்படுத்தப் போவதில்லை என்ற நிலையில் இவர்கள் செய்த தேர் கோவிலுக்கும்  நாற்படைகளில் ஒன்றான தேர்ப் படைக்கும் தான் என்று புரிந்து கொள்ள முடிகின்றது. இப்படியாகப் போர்க் கருவிகளை உருவாக்குதற்கு இவர்கள் பணி முழுக்க முழுக்க அரசாள்பவருக்குத் தான் பயன்பட்டுள்ளது. இவ்வாறு கைத்திற மிக்க ( artisans and craftsman) பல ஆயிரம் பேரை அரசாள்பவர் தமக்காக ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இந்த கம்மாளர் ஒரு பொருளை உற்பத்தி செய்வதால் நால்வருணத்தில் வைசியர் என்ற பிரிவில் அடங்குகின்றனர். அதேபோல கோட்டை, கொத்தளம் போன்ற  கட்டுமானப் பணிகளுக்காக நான்காம் நிலை உழைப்பாளிகளை அரசாள்பவர் ஈடுபடுத்திக் கொள்கின்றனர். இரண்டாம் நிலையில் சேர்க்கப்பட்டுள்ள போர்க்குணமிக்கோரை  படைப்பிரிவில் ஊர்க்காவல் பிரிவில் சேர்த்து விட்டனர். முதல்நிலையில் உள்ள அறிவுத்திற மக்களை  ராஜ்ய பரிபாலனம் என்ற நாடாட்சியிலும் தர்மபரிபாலனம் என்ற அற வளர்ச்சியிலும் ஈடுபடுத்தினர். மக்களைத் தன்  பணிக்கு அமர்த்திக் கொள்ளும் ஆட்சியாளனுக்கு தான் வருணாசிரமம் தேவை. ஏனென்றால் மக்களின் மனஈடுபாடு எப்படியோ அதன்படி அவர்களைத்  தன்  பணியில் ஈடுபடுத்திக்கொண்டான் அரசாள்பவன். மக்களைப் பெருந்திரளாக வேறு யாருமே இப்படி தம் பணிக்கு ஈடுபடுத்திக்கொண்டது இல்லை.  15% மக்கள் வாழ்க்கை அரசாள்பவனின் செலவை நம்பித் தான் நடந்தது. அந்த வகையில் பிராமணர், வைசியரை விட இந்த வருணாசிரமம் அரசாள்பவருக்குத் தான் அதிகம் தேவைப்பட்டது, பயன்பட்டது. ஆதலால் வருணாசிரமத்தை ஆட்சியாளர்கள் தாம் உருவாகிக் கொண்டார்கள். இது காலப்போக்கில் வெவ்வேறு வடிவு கொண்டது என்பதே உண்மை. இதை புரிந்து கொள்ளாத மக்கள்தாம் கடந்த 130 ஆண்டுகளாக மனுதர்மம், வருணாசிரமம் என்று  சர்ச்சையை கிளப்புகிறார்கள்.   மதத்தையும் பிராமணரையும் பொருத்தமின்றி சாடுகிறார்கள். முதற் கல்வெட்டுப்படி 13 –ம் நூற்றாண்டில் தான் தென்கொங்கில் செருப்பு அணிய கம்மாளருக்கே உரிமை தரப்பட்டது. அதே நேரம் பிராமணர் தோல் செருப்பு அணியாமல் கட்டைசெருப்பை அணிந்தனர் என்றால் செருப்பு தைக்கும் சக்கிலியர் சாதி யாருக்காக? யாரால்? உருவாக்கப்பட்டது என்ற கேள்விக்கு அரசாள்பவர் உற்றார், உறவு குடும்பங்களுக்கு தான் என்ற விடை தானே மேலெழுகின்றது. ஆக சாதி உருவாக்கத்திற்கும் வருணாசிரம உருவாக்கத்திற்கும்  அரசாள்பவர் தான் காரணம் என்று படுகின்றது.

    பார்வை நூல்: மதுரை மாவட்டக் கல்வெட்டுகள் தொகுதி I, பக். 206 – 208. தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை வெளியீடு.

     

    பெரியகுளம் வட்டம் சின்னமனூர் இராசிம்மேஸ்வரர் கோவில் கருவறை வடக்கு சுவர் 6 வரிக் கல்வெட்டு.

    1. ஸ்வஸ்திஸ்ரீ தி[ருவாய்க்கேழ்]விக்கு மேல் ஸ்ரீ கோமாறபன்மரான திரிபுவனச் சக்கரவத்திக
    2. ள் யெம்மண்டலமு[ங்]  கொண்டருளிய ஸ்ரீ குலஜேகர தேவற்கு யாண்டு 41 வது ஆனி மாத 14 தியதி பூர்வபக்ஷத்து ப்ரதமையும் புணர்
    3. பூசமும் பெற்ற திங்கள் கிழமை நாள் அளநாட்டு அரிகேசரி நல்லூர் உடையார் திருப்பூலாந்துறை (உறை) உடையாரான ராஜஸிம்ஹசோள ஈஸுரமுடையா
    4. ற்கு நாலுநகரம் பதினெண் வி[ஷய]த்தோமும் பதினெட்டிராச்சியத்திற் பதினெண் விஷயத்தோமும் தரகரோ[மு]ம் நாட்டுச் செட்டிகளோமும் தளச்செட்டிகளோமும்
    5. உடையார் விக்ரமபாண்டீஸ்வரமுடைய நாயனார் திரும_ _ _தில் நிறைவற நிறைந்து _ _ _ _ நிச்சயித்த காரியமாவதுஉடையார் திருப்பூலாந்து
    6. றையுடைய நாயனார் _ _ _ _ _ _  த்த பட்டின பகிதியாவது

    விளக்கம்: பிற்காலப் பாண்டியரில் குலசேகரனின் 41 வது ஆட்சி ஆண்டில் (1309) ஆனி 14 ம் தாள் புணர்பூச நட்சத்திரம் கூடிய திங்கள் கிழமையான வளர்பிறையில் அளநாட்டு அரிகேசரி நல்லூர் திருப்பூலாந்தறை இராசசிம்ம சோளீசுரருக்கு நாலுநகரத்தை சேர்ந்த பதினெண் விஷயத்தாரும், தரகரும், நாட்டுச் செட்டிகளும், தளச் செட்டிகளும் விக்ரமபாண்டிசுரமுடைய இறைவர் கோவிலில் நிறைந்து கூடி திருப்பூலாந்துறை இறைவனுக்கு செய்ய வேண்டியது பற்றி பேசினர். கல்வெட்டு அரைகுறையாக இத்தோடு நிறுத்தப்பட்டு விட்டது.

    பார்வை நூல்: தென்னிந்திய கல்வெட்டுகள், தொகுதி 23, பக். 328 (A.R. No 431 of 1907)

    Share