-மேகலா இராமமூர்த்தி

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையாய்த் திகழ்பவை உழவு, கைவினைத் தொழில்கள் மற்றும் வாணிகம் முதலியவை. பண்டைத் தமிழர், உழவுத் தொழிலிலும், கைவினைத் தொழிலிலும் சிறந்து விளங்கியது போலவே வாணிகத்திலும் சிறந்திருந்தனர். திணைநிலங்களில் வாழ்ந்த மக்கள் தாம்கொணர்ந்த பொருளுக்கு மாற்றாக வேறொரு பொருளைப் பெற்றுக்கொண்டதைச் சங்கஇலக்கிய நூல்கள் நமக்கு அறியத்தருகின்றன. இதனைப் பண்டமாற்று வாணிகம் எனலாம்.

முல்லை நிலத்தைச் சேர்ந்த இடையன், பாலைக் கொடுத்து அதற்கு ஈடாகத் தானியத்தை மாற்றிக் கொண்டதை உறையூர் முதுகொற்றன் என்ற புலவரின் குறுந்தொகைப் பாடல் தெரிவிக்கின்றது.

பாலோடு வந்து கூழொடு பெயரும்
யாடுடை யிடைமகன்’
(குறு. 221.3-4). கூழ் என்பது அரிசி, கேழ்வரகு, வரகு, தினை முதலிய தானியங்களாகும்.

குறிஞ்சிநில வேட்டுவனொருவன் தான் வேட்டையாடிக் கொண்டுவந்த மான் இறைச்சியை மருதநில உழவனிடத்தில் கொடுத்து, அதற்கு ஈடாக நெல்லைக் கொண்டதையும், ஈதொப்ப, இடைச்சியரும் உழவனுக்குத் தயிரைக் கொடுத்து நெல்லை மாற்றாகப் பெற்றுக்கொண்டதையும் கோவூர்கிழார் எனும் சங்கப்புலவர் புறநானூற்றில் பதிவுசெய்திருக்கக் காண்கின்றோம்.

‘கானுறை வாழ்க்கைக் கதநாய் வேட்டுவன்
மான்தசை சொரிந்த வட்டியும், ஆய்மகள்
தயிர்கொடு வந்த தசும்பும் நிறைய
ஏரின் வாழ்நர் பேரில் அரிவையர்
குளக்கீழ் விளைந்த களக்கோள் வெண்ணெல்
முகந்தனர் கொடுப்ப உகந்தனர் பெயரும்
தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்’
  (புறம் 33:1-8 – கோவூர்கிழார்)

நகரங்களில் வாழ்ந்த மக்கள் தம் வாணிகத்தை நிலத்தின் வழியாகவும் நீரின் வழியாகவும் நடாத்தியிருக்கின்றனர். சோழர்களின் புகழ்பெற்ற துறைமுக நகராகியக் காவிரிப்பூம்பட்டினத்திற்குப் பல்வேறு நாடுகளிலிருந்து நீரின் வழியாகவும் நிலத்தின் வழியாகவும் வந்திறங்கிய பொருள்களின் பட்டியல் இது:

”நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலின் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்
குடமலைப் பிறந்த மணியும் பொன்னும்
தென்கடல் முத்தும் குணகடல் துகிரும்
கங்கை வாரியும் காவிரிப் பயனும்
ஈழத் துணவும் காழகத் தாக்கமும்
அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்
” (பட்டினப்பாலை: 185 – 193)

சிலப்பதிகாரத் தலைவனான கோவலனுடைய தந்தை நில வாணிகத்தில் சிறந்திருந்தமையால் ’மாசாத்துவன்’ என்றழைக்கப்பட்டான். நிலவாணிகம் செய்த வணிகக் குழுக்களைச் ’சாத்துகள்’ என்றழைத்தனர் நம் முன்னோர். எனவே ’மாசாத்துவன்’ என்ற பெயர் ’பெரும் நிலவாணிகன்’ என்றபொருள் தருகின்றது. அதுபோன்றே கண்ணகியின் தந்தை, கடல் வாணிகத்தில் சிறந்திருந்ததன் அடிப்படையிலேயே ’மாநாய்கன்’ என்று பெயர்பெற்றான். (நாவாய் வாணிகனுக்கு நாவிகன் என்று பெயர்; அது திரிந்து நாய்கன் ஆயிற்று.)

நில வாணிகர்கள் தம் வணிகப் பொருள்களைக் குதிரைகளிலும், கழுதைகளிலும், மாட்டுவண்டிகளிலும் ஏற்றிக்கொண்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சென்று வாணிகம் செய்ததோடல்லாமல், தமிழகத்தைக் கடந்து வடபுலத்துக்கும் சென்று வாணிகம் செய்திருக்கின்றனர்.

முசிறி என்னும் சேரநாட்டுத் துறைமுகப் பட்டினத்தில், யவனர்களின் மரக்கலங்கள் பொன்னைக் கொண்டுவந்து கொட்டிவிட்டு, அதற்கு ஈடாக மிளகு மூட்டைகளை ஏற்றிச்சென்றதாக எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான அகநானூறு அறிவிக்கின்றது.

”யவனர் தந்த வினைமாண் நன்கலம் 
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
” (அகம். 149: 9 – 10)

”உலகமே கிளர்ந்து எழுந்தாற்போன்ற அச்சந் தரக்கூடிய பெரிய நாவாயானது (மரக்கலம்), புலால் நாறும் அலைகளையுடைய பெரிய கடலின் நீர்ப்பரப்பைக் கிழித்துக் கொண்டு சென்றது” என்ற அகநானூற்றின் அடிகள் முற்காலத்திலேயே மிகப்பெரிய மரக்கலங்களை உருவாக்கிக் கடல் வாணிகம் செய்வதில் தமிழர்கள் சிறந்திருந்தனர் என்பதை விளக்கி நிற்கின்றது.

“உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம் 
 புலவுத்திரைப் பெருங்கடல் நீரிடைப் போழ” (அகம். 255:1-2)

அம்மட்டோ? கடலில் இயங்கும் காற்றைக் கலஞ்செலுத்துதற்குப் பணிகொள்ளும் விரகினை முதன்முதலிற் கண்டவர் பண்டைத் தமிழரே; யவனரல்லர் என்பதை வெண்ணிக்குயத்தியார் எனும் புலவர்பெருமாட்டியின் புறப்பாட்டு நமக்குப் புலப்படுத்துகின்றது.

”நளியிரு முந்நீர் நாவா யோட்டி
வளிதொழி லாண்ட வுரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ…”
(புறம் – 66: வெண்ணிக்குயத்தியார்)

பண்டைத் தமிழர் மேற்கே கிரேக்கம், உரோமாபுரி, எகிப்து வரையில் திரைகடலோடியிருக்கின்றனர். இவையல்லாது பாலத்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா போன்ற நாடுகளுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்திருக்கின்றனர். தமிழகத்துப் பண்டங்களான ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு ஆகியவை இந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கின்றன.

பழைய எத்தியோப்பிய நாடான ஷீபாவின் (Sheba) அரசி மகீடா (Makeda), இஸ்ரேல் நாட்டின் மன்னன் சாலமனை (Solomon) காணச்சென்றபோது, அவனுக்குப் பரிசுப்பொருள்களாக ஏலம், இலவங்கம் போன்றவற்றைக் கொண்டுபோனதாகப் பழைய ஏற்பாட்டில் (Old Testament) ஒரு குறிப்புக் காணப்படுகின்றது. சாலமன் ஆண்ட காலம் கி.மு.1000 என்பர். சேரநாட்டுத் துறைமுகத்திலிருந்து மயில்தோகை, அகில், யானைத்தந்தம், குரங்குகள், வெள்ளி போன்ற பொருள்களும் சாலமனுக்குக் கப்பல்மூலம் கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. ஹீப்ரு மொழியிலுள்ள பைபிளில் வழங்கப்படும் ’துகி’ என்ற சொல்லானது தமிழ்ச்சொல்லான ’தோகை’ என்பதன் திரிபே என்கிறார் மொழியியல் அறிஞர் இராபர்ட் கால்டுவெல்.

புதுச்சேரிக்கு அருகிலுள்ள அரிக்கமேடு என்னும் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் உரோமாபுரி நாணயங்கள் கிடைக்கப்பெற்றன. இதன்மூலம் பண்டைத் தமிழருக்கும் உரோமாபுரிக்கும் கடல்வாணிகத் தொடர்பிருந்தமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

தமிழகம், மேலைநாடுகளுடன் மட்டுமின்றிக் கீழைத்தேயங்களான சீனம், மலேசியா, ஜாவா முதலியவற்றுடனும் பன்னெடுங்காலமாகவே கடல்வாணிகத் தொடர்பு கொண்டிருந்தது. தமிழகத்துப் பண்டங்கள் கி.மு.7ஆம் நூற்றாண்டிலேயே சீனத்தில் இறக்குமதியாயின என்று அந்நாட்டு வரலாறுகள் தெரிவிக்கின்றன. சீனத்துப் பட்டாடைகளையும், சருக்கரையையும் தமிழகம் விரும்பி ஏற்றுக்கொண்டது. அதனால்தான் இன்றளவும் பட்டுக்குச் ’சீனம் என்றும், சருக்கரைக்குச் ’சீனிஎன்றும் தமிழில் பெயர் வழங்கி வருகின்றது.

தமிழகத்தின் மூவேந்தர்களான சேர சோழ பாண்டியர்கள் வாணிகத்தில் பெருஞ்செல்வத்தை ஈட்டிய மாசாத்துவர்களுக்கும், மாநாய்கர்களுக்கும் எட்டிப்பட்டமும் எட்டிப்பூவும் அளித்துச் சிறப்புச் செய்தார்கள். (எட்டிப்பூ என்பது பொன்னால் செய்யப்பட்ட தங்கப்பதக்கம் போன்ற அணியாகும் என்கிறார் மயிலை சீனி. வேங்கடசாமி அவர்கள்.)

இவ்வாறு பண்டைக் காலந்தொட்டே நிலவாணிகம், கடல்வாணிகம் என இருதிறத்து வாணிகங்களிலும் தமிழர்கள் சிறப்புற்று விளங்கித் தமிழகத்தின் பெருமையினை இந்தியாவில் மட்டுமன்றி அயல்நாடுகளிலும் நிலைநாட்டி இருக்கின்றனர் என்பதை அறியும்போது வியப்பும் விம்மிதமும் ஏற்படுகின்றது.

*****

கட்டுரைக்குத் துணைசெய்தவை: 

  1. பண்டைத் தமிழக வணிகம் – நகரங்கள் மற்றும் பண்பாடு – மயிலை சீனி. வேங்கடசாமி.
  2. பண்டைத் தமிழ நாகரிகமும் பண்பாடும் – மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்.

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *