சேக்கிழார் பா நயம் – 44

-திருச்சி புலவர் இராமமூர்த்தி
——————————————-
திருவாரூரில் இறைவனின் திருமுன் அட்டாங்க பஞ்சாங்கமாக வணங்கியபின், சுந்தரர் இறைவனைப் போற்றி ஒரு பதிகம் பாடினார். அப்பொழுதே அவர் கேட்க, திருவாரூர்ப் புற்றிடங்கொண்ட பெருமான் வாக்காக ஒரு வானொலி எழுந்தது! அவ்வொலி, ‘’சுந்தரனே! யாம் நம்மை உனக்கு நெருக்கமான தோழனாகத் தந்தோம்.‘’ என்ற நற்செய்தியைக் கூறியது! அத்துடன் ‘’முன்பு திருவெண்ணெய் நல்லூரில் திருமணத்தில் உன்னைத் தடுத்து ஆட்கொண்டோம்! , அப்போது நீ கொண்ட திருமணக் கோலத்துடன் இனி எப்போதும் விளங்குக! இந்தக் கோலத்துடன் உன் விருப்பங்களை அடைந்து விளையாடுக! ‘’ என்று இறைவன் கூறினார்!
இப்பாடல் ‘வாழிய’ என்றசொல்லால் தொடங்குகிறது! இதற்கு உயிர்கள் வாழும் பொருட்டு என்று பொருள் கொள்ள வேண்டும்! ‘’மாமறைப் புற்று இடம் கொள்’’ என்ற தொடர் ‘’பெருமை மிக்க வேதமாகிய புற்றினைத் தம் உறைவிடமாகக் கொண்ட‘’ என்று பொருள்படும். இங்கே மறைப்புற்று என்பது, ‘இறைவன் திருமேனியை மறைத்து எழுந்த புற்று’ என்றும் பொருள் கொண்டு புற்றிடங் கொண்டார் என்ற பொருளில் விளங்கும் வன்மீக நாதர் என்ற திருப் பெயரை விளக்குகின்றது. அவர் வேதத்துள் மறைந்துள்ளவர் என்றும், புற்றில் மறைந்துள்ளவர் என்றும் இதற்கு இருவகைப் பொருள் கூறலாம்! ‘’வாழிய மாமறை’’ என்ற தொடரில் உலகம் உய்தி பெரும்பொருட்டு , வேதத்துள் மறைந்து தோன்றுபவர் என்றும் பொருள் கொள்ளலாம்!
இறைவனின் சிறப்பினை உணர்த்தும் அளவைகளாகிய பிரமாணங்கள் ஆட்சி, ஆவணம், காட்சி ஆகியவை என்பர். ‘’இந்தப் பிரமாணங்களின் தேவையின்றி தாமே பிரமாணமாக உள்ளார்‘’ என்பதைக்காட்டும் .தமக்குமேற் பிரமாணமில்லாமல்
தமக்குத்தாமே பிரமாணமாயுள்ளது. வேதங்களாகிய புற்று. என்பர் பெரியோர்! உள்ளிருக்கும் பொருளை மறைத்துப் பொதிந்து மேல் மூடியிருப்பது புற்றினது இயல்பு. அவற்றை இறைவனது இருப்பிடமாக உணராதார்க்கு அவை உண்மைப்பொருளை உணர்த்தாமையின் மறைப்புற்று என்றார்.
“வேதம் ஓதிலென்? சாத்திரங் கேட்கில்என்?
நீதி நூல்பல நித்தல் பயிற்றில் என்?
ஓதி அங்கம்ஓர் ஆறும் உணர்த்தின்என்?
ஈசனை யுள்கு வார்க்கன்றி இல்லையே!’’
என்ற அப்பர் தேவாரம் இங்கே சிந்திக்கத் தக்கது. இறைவனாகிய மன்னவனார் இதனை அருளினார்! சுந்தரர் தமக்கு இறைவனின் தோழமையைப் பெற்றதை அவர்தம் தேவாரங்களில் பல இடங்களில் கூறுகிறார்! அவர்,
‘’ஏழிசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய தோழனுமாய்’’ என்றும், ‘’என்றனையாள் தோழனை’’ என்றும், ‘’தோழமை அருளித் தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும் நாதனை’’ என்றும் சுந்தரர் பாடியுள்ளார்! இக்காரணத்தாலேயே சுந்தரர் ’’தம்பிரான் தோழர்’’ என்று போற்றப் பெற்றார். சைவ நெறிகளாகிய அடிமைநெறி, மகன்மைநெறி, தோழமைநெறி, ஞானநெறி ஆகியவற்றுள் சுந்தரரைத் தோழமை நெறியை விளக்க வந்தவர் என்பர்!
இங்கே ‘’நம்மைத் தந்தனம்!’’என்ற தொடருக்கு ‘அவனருளாலே அவன்றாள் வணங்கி’ என்றும், ‘தந்ததுன் றன்னை’ என்றும் அருளியபடி அவரே தாராவிடில் உயிர்கள் பெறுமாறில்லை; ஆதலின் நம்மைத் தந்தனம் என்றார்.’’ என்றுவிளக்கம்கூறுவர்!
எவ்வுயிர்க்கும் ஈசன் தோழனாய் உடனிருப்பார்; ஆயினும், “தாவியவனுடனிருந்தும் காணாத தற்பரன்“ என்றபடி உயிர்கள் அவனை அறிவதில்லை. அவ்வாறன்றி இவர் அறியும்படி தந்தது இவர் பெருமையை உலகறிந்து உய்வதற்கு என்க. இறைவன் தம்மையே ஆரூரருக்குத் தோழமையாகத் தந்துவிட்டாராதலின் பின்னர்ப் பரவையார் திருமணம், சங்கிலியார் திருமணம், பரவையார் ஊடல் தீர்த்தல் முதலியவற்றில் பாங்கற் கூட்டம் முதலிய அகப்பொருட்டுறைகளிலே சரித நிகழ்ச்சிகளின் அமைவு காணப்பெறும். பின்னும் இதனாலே நம்பிகள் செயல் தோழர் செயலேயாதலுமாம். இனி, இப்பாடலை முழுமையாகப் படித்துப் பயில்வோம்!
‘’வாழிய மாமறைப் புற்றிடங்கொள்
மன்னவனார் அருளால் ஓர் வாக்கு
‘’தோழமையாக உனக்கு நம்மைத்
தந்தனம் . நாம்முன்பு தொண்டுகொண்ட
வேள்வியில் அன்றுநீ கொண்ட கோலம்
என்றும் புனைந்துநின் வேட்கைதீர
வாழிமண் மேல்விளை யாடுவாய்’’என்று
ஆரூரர் கேட்க எழுந்த தன்றே ‘’
என்ற இப்பாடலில், முன்பு சுந்தரரைத் தடுத்தாட்கொண்ட திருமண வேள்வியில், அக்காலத்தில் அவ்வூரில் ‘’மன்னவர் திருவும் தங்கள் வைதிகத் திருவும் பொங்க“க் கொண்ட திருமணக் கோலம். என்பதை ‘’அன்றுநீ கொண்டகோலம்’’ என்றார்.
அதனை இனி வருங்காலத்தில்‘’என்றும் புனைந்து நின் வேட்கை தீர வாழி ‘’ என்று இறைவன் அருளினார் ! அதனால் பிற்காலத்தில் என்றும் சுந்தரர் திருக்கோலம், ‘மணமகன் திருக்கோலம்’ பெற்றே விளங்குகிறது! பின்னர் இறைவன் ‘’என்மேல் கொண்ட பக்தியாகிய ‘’வேட்கை தீர, மண்மேல் விளையாடுவாய்’’ என்றார். இதனால் கைலையில் கொண்ட வேட்கைதீர, சுந்தரர் பரவையார், சங்கிலியாரை மணந்து கொண்டு இறைவனுடன் தோழமை விளையாடல் புரிந்ததையும் குறிப்பிட்டார்! ‘’விளையாடு ‘’ என்ற சொல், பயனைக் கருதாத பக்தியைக் குறித்து சேக்கிழாரின் பாடல் நயத்தை விளக்குகின்றது!