சிக்கெனப் பிடிப்போம் வாரீர்

-மகாதேவ ஐயர் ஜெயராமசர்மா …. மெல்பேண் … அவுஸ்திரேலியா

கந்தனை நினைத்தால் நெஞ்சில்
கவலைகள் பறந்தே போகும்
வந்திடும் வினைகள் யாவும்
வழியிலே மறைந்தே போகும்
அந்தமில் இன்பம் வந்து
ஆனந்தம் தந்தே நிற்கும்
கந்தவேள் பாதம் தன்னை
கட்டியே அணைத்து நிற்போம் !

சூரர்கள் போல எம்மை
சூழ்ந்திடும் பகைமை எல்லாம்
வேலவன் பெயரைக் கேட்டால்
விரைவிலே ஒழிந்து போகும்
வாழ்விலே வசந்தம் வீச
வள்ளி மணாளன் தன்னை
நாளெலாம் தொழுது நிற்போம்
நம்வாழ்வு உய்யும் அன்றோ!

சேவலாய் மயிலும் ஆக்கி
சிந்தையை திருத்த வைத்த
வேலவன் முகத்தைக் கண்டால்
விரைவிலே திருத்தம் காண்போம்
காலனும் நாட மாட்டான்
கடுநோயும் அணுக மாட்டா
சீலமாம் கந்தன் பாதம்
சிக்கெனப் பிடிப்போம் வாரீர்!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *