-கவிஞர் வெ.விஜய்

பட்டம் பறந்திடும் வானத்திலே – எனைப்
பார்த்துச் சிரிக்குது வட்டநிலா
கட்டி யிழுத்திடத் தோனுதடா – இந்தக்
காலம் மழைவரும் காலமடா

கொட்டும் மழைவரும் நேரத்திலே – அட
கோடி இசைவரும் வானத்திலே
சட்டச் சடசட சத்தத்திலே – மனச்
சாவி கிடைத்திடும் மொத்தத்திலே! (பட்டம்)

மண்ணின் மனம்வரும் காற்றினிலே – கரு
வானம் கிடந்திடும் ஊற்றினிலே
பெண்ணின் சலங்கையைப் போலவொலி – உடன்
பேசிச் சிரிப்பதாய்க் கொட்டும்மழை! (பட்டம்)

மின்னல் விழுந்திடும் வானத்திலே – அதை
மேகம் தழுவிடும் காதலிலே
சன்னல் கதவுகள் வெட்கத்திலே – தனைச்
சாத்தி இணைந்திடும் சொர்க்கத்திலே! (பட்டம்)

கொட்டும் இடியெனும் மேளமடா – உடன்
கோடி மழைத்துளித் தாளமடா
கட்டி யணைத்திடும் தென்றலுடன் – மரம்
காதல் புரிந்திடும் காலமடா! (பட்டம்)

மோன நிலையினில் வானமடா – அதை
மோதிக் கிழிப்பது மேகமடா
தான தருமமும் போதுமடா – மழைத்
தண்ணீர்க் கிணையெது வாகுமடா! (பட்டம்)

மாரி பொழிந்திடும் நேரமெலாம் – உடல்
மையல் புரிந்திடத் தோனுமடா
யாரும் இதையறி யாமலில்லை – இந்த
அண்டம் அதற்குளே ஓடுதடா! (பட்டம்)

29-08-2019

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *