-கவிமாமணி இலந்தை சு. இராமசாமி 

நகரப்படலம்

கடல்கோளுக்கு முன்னிருந்த தென்மதுரை

காய், காய், காய், காய் மா, தேமா- அறுசீர் விருத்தம்

அம்மைதிரு மீனாக்ஷி அரசாண்ட தென்மதுரை அகில மீதில்
செம்மைநகர் எனப்புகழைச் சேர்த்தநகர் சிறந்தநகர், தினமு மங்கே
பொம்மெனவே புதுப்புதிதாய் மக்கள்வந்து பொலியுந கர், புனித மாகச்
செம்மொழியாம் செந்தமிழின் முதலரங்கம் அந்நகரில் திகழ்ந்த வன்றே! 33

தமிழ்வளர்க்கும் பஃறுளியும் தழைத்தோங்கப் புதுவெள்ளம் தாவிப் பாயும்
அமிழ்தமெனும் அதன்நீரைப் பருகுவதால் உடல்நலத்தில் அந்நாள் மக்கள்
நிமிர்ந்திருந்தார், இளங்காலை புலர்கையிலே மக்களெலாம் நேரே சென்று
குமிழியிடும் அந்நதியில் குளித்திடுவார் மீனாட்சி கோவில் செல்வார் 34

தொழிலறிந்தே உழைத்தவர்கள் இருந்ததனால் சோம்பேறிக் கூட்ட மில்லை
உழவர்களின் ஏர்முனையின் கீறல்களால் ஊர்ப்புறத்தே நஞ்சை புஞ்சை
செழுமைபெறும், பயிர்செழிக்கும், உணவிற்குச் சிறிதேனும் பஞ்ச மில்லை
விழவெடுக்கும் திருநகரில் எந்நாளும் விழாக்கோலம் விளங்கு மன்றே! 35

சோறடுவோர் தெருவினிலே விட்டகஞ்சி சூழ்ந்தெங்கும் கூடி வந்தே
ஆறெனவே ஓடிவரும் அதில்நடக்கும் யானைகளின் அடிவ ழுக்கும்
வீறுடைய மல்லர்களின் போட்டிகளும் விறல்களத்தில் மிகவும் உண்டு
கூறுபுகழ் அறிஞர்களின் விவாதங்கொள் கொலுமேடை நிறைய உண்டே 36

நாட்டியங்கள் பயில்வோர்கள் இதமாக நடமாட நடன மேடை
பாட்டியற்றும் புலவர்கட்கும் பாட்டெழுத உதவுகிற பயிற்சி மேடை
தீட்டுகிற ஓவியங்கள் கற்போர்க்குச் சித்திரங்கள் தீட்டும் மேடை
நாட்டமுடன் இசைக்கலையைப் பயில்வோர்க்கு நல்லபல நாத மேடை 37

நல்லபடி விலைகூறி நியாயமுடன் விற்கின்ற நாளங் காடி
அல்லினிலும் பசியாற்றும் உணவகங்கள் நிறைந்திருக்கும் அல்லங் காடி
சொல்வலர்கள் நூல்களினை அரங்கேற்றம் செய்கின்ற சூழ ரங்கம்
வில்முதலாம் போர்க்கலையில் பயிற்சி பெற அங்கங்கே வீர மேடை 38

மாலைகளைக் கட்டுபவர் கிள்ளியங்கே போட்டமலர் மலையாய்ச் சேரும்
காலையிலே கோவிலுக்குப் போகிறவர் திருக்கூட்டம் கருத்தை ஈர்க்கும்
மாலையிலே சோலைகளில் மலர்வாசம் நுகர்ந்திருக்கும் மக்கள் கூட்டம்
ஓலையிலே எழுதுபவர் இலக்கியங்கள் படியெடுப்பர் ஒதுக்க மாக! 39

மழைபொழியும் நீர்வீணாய்ப் போகாமல் வழித்தடாகம் வந்து சேரும்
வழிகிறநீர் வாய்க்காலில் ஓடியங்கே பஃறுளியில் வந்து கூடும்
பொழில்நிறைந்த ஊருக்குள் பூவாசம் மூக்குகளில் புளகம் ஏற்றும்
விழிதிறந்து காதலர்கள் பேசிடுவர் களவுநெறி விதிக்குள் செல்லும் 40

பசியென்ப தங்கில்லை, பட்டினியாய் இருப்பவர்கள் இன்மை யானே
நசித்தவர்கள் அங்கில்லை நகரெங்கும் வறுமையென்ப தின்மை யானே!
வசித்தவர்கள் அங்கில்லை வீடின்றி வாழ்ந்தவர்கள் இன்மையானே
நிசிப்பயமே அங்கில்லை நெஞ்சத்தில் பயமறிந்தார் இன்மை யானே! 41

கற்றவர்கள் அங்கில்லை, கல்லாதார் இல்லாத கார ணத்தால்
அற்றவர்கள் அங்கில்லை ஆனவர்கள் ஆயிருந்த கார ணத்தால்
உற்றவர்கள் அங்கில்லை எவருமங்கே உறவான கார ணத்தால்
இற்றவர்கள் அங்கில்லை எல்லோர்க்கும் எல்லாமாம் கார ணத்தால். 42

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க