-மீனாட்சி பாலகணேஷ்

குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.1

  (ஊசற்பருவம்) 

பெண்பால் பிள்ளைத்தமிழில் அடுத்த பருவமாக நாம் காண்பது ஊசல் பருவம். வேகமும் விறுவிறுப்பும் நிறைந்த விளையாட்டுகள், ஓடியாடும் சிறுவர் சிறுமியர்களுக்கு மிகவும் விருப்பமானவை. ஊசலில் உட்கார்ந்து கொண்டு, தோழியர் உந்தி விட, காலால் தரையை எம்பி உதைத்து , உயரே உயரே எழுந்து வீசியாடுவது ஊசற் பருவம். இப்பருவம் ஐந்தாண்டிலிருந்து ஒன்பது ஆண்டுகள் வரை நிகழ்வதாகக் கூறப்படும். ஊசலாடி மகிழ்வது பெண்பிள்ளைகளுக்கே உரித்தான ஒரு விளையாட்டு அனுபவம். வளரும் பெண்மக்களுக்கு இது ஆரோக்கியமான உடற்பயிற்சியுமாகும்.

மயில்கள் தோகைவிரித்து நடனமாடும், குயில்கள் கீதமிசைக்கும் அழகானதொரு மலர்ச்சோலையில் மயில்போன்ற பெண்கள் சிலரும் தமது குயில் குரலில் பாடியவாறு ஊஞ்சல்கட்டி இன்பமாக ஆடுகின்றார்கள். புங்கமரம் ஒன்றின் தாழ்வான கிளையில் வலுவான கொடிகளைக் கொண்டு கட்டிய அழகான ஊ(ஞ்)சல். அதில் அன்றலர்ந்த தாமரை போல அமர்ந்து கால்களால் உதைத்து எழும்பி வீசியாடுகிறாள் ஒரு சிறுபெண். கொடி போன்ற உடலும், நீண்ட கூந்தலும் ஆடைகளும் அணிகலன்களும் உடன்வீசி இயைந்து ஆடுகின்றன. 

இந்த  இளம்பெண்கள் தமது அரசனைப்பற்றி பெருமையாகப் பாடுகிறார்கள். இவர்கள் பாடுவது ஊசல்வரி; இது சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் தீட்டும் காட்சி: 

ஐந்துபேர் பஞ்ச பாண்டவர்கள்; நூற்றுவரான கௌரவர்கள்; இவர்கள் தமக்குள் பகைகொண்டு பெரும்போர்செய்தபோது, அந்தப்போரில் இருவருடைய படைகளுக்கும் அள்ள அள்ளக்குறையாது உண்பதற்குச் சோற்றினைக் கொடுத்தவன் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் எனும் சேரமன்னனாவான். அவனுக்கு ‘பொறையன்’, ‘மலையன்’ எனும் பெயர்களும் உண்டு. “அவனுடைய பெயர்களைக் கூறி, அவன் புகழினைப்பாடி நாம் ஊசலாடலாமா?” என்று ஒருத்தி தோழிகளைக் கேட்கிறாள். “நமது கருமுகில் போன்ற குழல் காற்றில் அலைந்தாட, அந்தக் கடம்ப நாட்டினை வெற்றிகொண்ட அவனுடைய புகழைப்பாடி ஊசல் ஆடலாமே,” என அடுத்தவள் மறுமொழி கூறுகிறாள். 

ஓரைவ ரீரைம் பதின்மர் உடன்றெழுந்த

போரிற் பெருஞ்சோறு போற்றாது தானளித்த

சேரன் பொறையன் மலையன் றிறம்பாடிக்

கார்செய் குழலாட ஆடாமோ வூசல்

கடம்பெறிந்த வாபாடி ஆடாமோ வூசல்1

இவ்வாறு தங்கள் அரசனான சேரனையும் அவன் பரம்பரையையும் போற்றிப்பாடி மகிழ்ச்சியாகப் பெண்கள் ஊசலாடுகின்றனர். சேரன் செங்குட்டுவன் கண்ணகிக்குக் கோவிலெடுத்த திருவிழாவில் இவர்கள் இவ்வாறு பாடி ஆடுகிறார்கள்! 

மனம்மகிழ்ந்து உவகை ஊற்றெடுக்கும்போது, எண்ணங்கள் சிறகடித்து வானில் பறக்கும்போது, ஊசலில் அமர்ந்தாடினால் அது உயரே ஆகாயத்தின் அருகே கொண்டுபோவது போல ஒரு ஆனந்தமான அனுபவம் உண்டாகும். விண்ணை எட்டிவிட்டது போன்றதொரு மயக்கத் தோற்றம்.

ஊசலைப்போலாடும் தொட்டிலிலோ தூளியிலோ உறங்கவைத்தால் குழந்தை ஆனந்தமாக, அமைதியாக உறங்குகிறது. சிறார்களுக்கு ஊசலாடி விளையாடுவது இன்பகரமான ஒரு அனுபவம். இளம்பெண்களுக்கும் ஊசலாடும்போழ்தில் தங்கள் கனவுகளும், காதல், மணவாழ்வு பற்றிய இனிமையான எண்ணங்களும் உருப்பெற்று, வலுப்பெற்று, நனவாகும் 

சங்ககால மகளிர் ஆலமரம், வேங்கைமரம், புங்கமரக்கிளைகளில் ஊசல்கட்டி ஆடினார்கள். தினைப்புனம் காக்கும் பெண்கள் தாம் இருக்கும் பரண்மீதே ஊசல்கட்டி விளையாடினார்கள். அவர்கள் காதலர்களும் ஊசலை ஆட்டிவிடுவதற்கென அருகில்வந்து நின்றார்கள். 

பெண்கள் மரங்கள் இல்லாதபோது இரு வேல்களை நாட்டி, அவற்றிடையே ஒரு கயிற்றைக்கட்டியும் ஊசலாடினார்கள்!

இவ்வாறு காதல் விளையாட்டுகளிலும், மற்ற திருவிழாக் கொண்டாட்டங்களிலும் பெரும்பங்கு வகித்த ஊஞ்சல் விளையாட்டுகளில் பெண்கள் இறைவன் புகழைப் பாடி மகிழவும் வகைசெய்தவர் மாணிக்கவாசகர். 

“நாராயணனும் கண்டறியாத இறைவனின் திருப்பாதங்களை எமக்கு அந்த ஈசன் மிக எளிதாகக் காட்டியருளினான். வேல்போன்ற கண்களையுடைய பெண்களே! அந்த உத்தரகோசமங்கை இறைவனின் புகழைப்பாடி பொன்னூசலில் அமர்ந்தாடுவீர்களாக,” என அன்போடும் ஆவலோடும் வேண்டுகிறார். 

அவருடைய விருப்பப்படியே அவர்களும், “தோழிகளே! ஈசனின் புகழினைப் பாடுகிறோமல்லவா? அப்போது நாம் ஆடும் ஊசலும் அழகு மிகுந்ததாகவும், சிறப்புடையதாகவும் இருக்க வேண்டும். ஆகவே, பவளத்தூண்களைக் கால்களாக நடுவோம்; பருத்த முத்துக்களை இணைத்துக் கோர்த்துக் கயிறாக்கிப் பயன்படுத்துவோம்,” எனத் தோழிகளிடம் கூறுகிறார்கள். ஒருபெண் பொற்பலகை ஒன்றினை அதில் இணைக்க, ஒவ்வொருவராக அதில் ஏறியமர்ந்து பலவிதமாக ஈசன் புகழைப்பாடியாடி மெய்சிலிர்க்கிறார்கள். 

இந்தத் தத்துவம் மிக எளிதாகப் புரிவது. கோவிலில் தெய்வத்தை வணங்கச் செல்லும்போதும், அரசனைக் காணச்செல்லும்போதும் நல்ல அணிமணிகள், பட்டாடைகளை அணிந்துகொண்டு செல்வதுண்டல்லவா? அதேபோல, இறைவன் பெருமைகளைப் பாடுவோரும் அழகாக உடையணிந்து, அழகான ஊசலில் அமர்ந்து அவனைப் பாடவேண்டும் எனும் ஆவல் இதிலும் விளங்குகிறது. பாடகர்கள் கச்சேரிகளில் அழகாக அலங்கரிக்கப்பட்ட மேடைகளில் கண்கவரும் ஆடைகள் அணிந்து அமர்ந்து பாடுகிறார்களல்லவா? அலங்கரிக்கப்பட்ட திருப்பொன்னூசலில் அமர்ந்து இறைவன் புகழைப் பாடுவதும் அப்படிப்பட்டதே!

சீரார் பவளக்கால் முத்தம் கயிறாக

ஏராரும் பொன்பலகை ஏறி இனிதமர்ந்து

நாராயணன் அறியா நாள்மலர்த்தாள் நாய் அடியேற்கு

ஊராகத் தந்தருளும் உத்தரகோச மங்கை

ஆராவமுதின் அருள்தாள் இணைபாடி 

போரார்வேல் கண்மடவீர் பொன்னூசல் ஆடாமோ2.

திருப்பேரூரில் எழுந்தருளியுள்ள பட்டீசுவரப் பெருமானைக் கண்டு போற்றித் துதித்துவிட்டு வரும் பெண்கள் வழியிலுள்ள ஒரு மலர்ச்சோலையில் விளையாட நுழைகின்றார்கள். வழக்கமாக அவர்கள் ஆடும் ஊசல்கள் அங்கே மரக்கிளைகளிலிருந்து தொங்குகின்றன. சிலர் அவற்றிலேறி வீசியாட முற்படுகிறார்கள். ஆடும் வேகத்தில் அள்ளிமுடித்த நறுங்குழல் அவிழ்ந்து அலைந்தாடுகின்றது; கழுத்திலணிந்த முத்துமாலைகளும் பொன்னணிகளும் ஆடுகின்றன; மலர்ச்சோலையல்லவா? இவர்கள் ஊசலாடும் வேகத்தில் மலர்களில் தேனுண்ணும் வண்டுகளும் எழுந்தும் தாழ்ந்தும் ஆடுவனபோல் காட்சியளிக்கின்றன! விசையாக ஆடுவதால், பிறைபோன்ற நெற்றியில் வியர்வை அரும்பிப் படர்கிறது; தொங்கும் துளைச்செவியானதும் ஆடுகின்றது (அக்காலத்து மகளிர் காதில் பாம்படம் போன்ற பெரிய  அணிகளை அணிவதற்காக, காதுத்துளைகளை நீளமாகத் தக்கை முதலியனவற்றால் வளர்த்துக்கொண்டு அழகு செய்துகொள்வார்கள்; இதனை ‘வடிகாது’ என்பார்கள்). அக்காதிலணிந்த குழைகளும் கூடவே ஆடுகின்றன. கொடியிடையும், கைவளைகளும் ஆடிட, கோலமயில் போலும் பெண்களே நீங்கள் ஊசலாடுவீர்களாக! முத்தைப்பழிக்கும் புன்னகை கொண்டவர்களே! பால்போலும் இனிய சொல் பேசுபவர்களே! பட்டீசர் புகழைப் பாடி ஆடுவீராக!” எனப்பாடிய வண்ணம் ஒருவரை ஒருவர் ஊசலில் ஊக்கியபடி இவர்கள் ஊசலாடும் அழகு நமது கண்முன் காட்சியாகத்தோன்றி மகிழ்விக்கிறது. இறைவனின் அல்லது அரசனின் புகழைப்பாடும் ஒருவகைச் சிற்றிலக்கியம், பலவிதமான பாடல்வகைகளைக்கொண்டு, கலம்பகம் எனப்பெயர் பெற்றது. நடேசகவுண்டர் இயற்றியுள்ள திருப்பேரூர்க் கலம்பகத்தில் உள்ளதுதான் இந்த அழகான ஊசற்பாடல்:

ஏலநறுங் குழலாட மாலை யாட

இமிர்ந்தினவண் டாடமதி நுதல்வே ராடச்

சாலவடி காதாடக் குழைக ளாடத்

தளர்ந்துகொடி யிடையாட வளைக ளாடக்

கோலமட மயிலனையீ ராடீ ரூசல்

குளிர்முத்த மணிநகையீ ராடீ ரூசல்

பாலனைய மொழிமடவீ ராடீ ரூசல்

பட்டீசர் பேர்பாடி யாடீ ரூசல்3.

இதில் ஊசலாடும்போது உண்டாகும் இன்பமும்,  இன்னும் என்னவெல்லாம் பெண்களுடன் ஊசலாடும், எனவும் அழகுற விளக்கப்பட்டுள்ளன.  அழகான இளம்பெண்கள் ஊசலில் ஆடுவதைக் கண்ட கவிஞர்கள் அன்னை தெய்வத்தின் மீதான பிள்ளைத்தமிழ்ச் சிற்றிலக்கியங்களில் ஊசல்பருவத்தை இணைத்துப்பாடி மகிழ்ந்தனர். மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழிலிருந்து இலக்கியச்சுவையும், பக்திரசமும் ததும்ப, அன்னை ஊசலில் ஆடுவதனாலேயே உலகங்கள் இயங்குகின்றன எனும் பிரபஞ்ச இயக்கத் தத்துவத்தினைக் குமரகுருபரனார் ஊஞ்சல் விளையாட்டுடன் இணைத்துக்கூறும் நயம் மிக அருமையானது:

‘மீனாட்சியாகிய இளமங்கை சுவைமிகுந்த பாடல்களை அமுதம் ஒழுகப் பாடியபடி பொன்னூசலில் ஆடுகின்றாள். அதனைக் கேட்ட சிவபிரான் மகிழ்ந்து தனது திருமுடியை அசைக்கின்றார்; அவருடைய முடிமீது பாம்புகளுக்கெல்லாம் அரசனான ஆதிசேடன் உள்ளான்; உலகங்களையெல்லாம் தாங்கும் அவனுடைய தலையும்  இதனால் அசைகின்றது. தலையசைந்தால் தலைமீதுள்ள உலகங்களும் அசைய வேண்டியதுதானே! அகில சராசரங்களும் அசைந்தாடுகின்றன; சொக்கநாதரின் திருவழகிற்கு இணையான கொடிபோன்ற இவள் ஊசலில் அசைந்தாடுவதனால் அண்டமும் அண்டபகிரண்டமும் ஆடுவதைப் போலத் தோன்றுகிறது,’ எனும் பாடல் நம்மை நெகிழ வைக்கிறது. 

‘சேர்க்குஞ் சுவைப்பாடல் அமுதொழுக ஒழுகுபொன் 

            திருவூசல் பாடியாடச் 

சிவபிரான் திருமுடிஅசைப்ப 

      ……………………. தம்மனையசைந் 

 தாடலால் அண்டமும் அகண்டபகி ரண்டமும் 

  அசைந்தாடு கின்றதேய்ப்ப4

தாம் எப்போதும் அகக் கண்ணில் கண்டு மகிழும் அன்னை மீனாட்சியின் திருவூசல் காட்சியில்  குமரகுருபரருக்கு இந்த அண்ட சராசரமே அசைந்து ஆடுவது போலத் தோன்றுகிறது; அருள் பெற்ற தமது தெய்வவாக்கினால் இதனை அழகுற விவரிக்கின்றார்: 

அரசியின் ஊஞ்சலல்லவா? அதன் கால்கள் சிறந்த ஒளியுடைய பவளத்தால் செய்தவையாம்; பொங்கிப் பெருகி ஒழுகும் ஒளியையுடைய வைரங்களால் விட்டம் அமைந்துள்ளதாம்;  குளிர்ச்சி பொருந்திய செழித்த நிலவொளி பெருகி விழுந்தது போன்ற ஒளி பொருந்திய முத்து வடங்களைக் கட்டியுள்ளனர். ‘தண்’ணென்ற பௌர்ணமி இரவில் சந்திரனின் கிரணங்கள் ஊடுருவி அழகு செய்வது போல அவை தோன்றுகின்றன. மாணிக்கப் பலகையால் செய்த இருக்கையும் ஒளி வீசுகின்றது; எத்தனை அள்ளினாலும் திரும்பவும் பெருகி  நிறைந்து வழிந்து ஒளி பொங்குகின்ற அருண ரத்தினப் பலகையாம் அது!

‘ஒள்ளொளிய பவளக் கொழுங்கால் மிசைப்பொங்கும்

ஒழுகொளிய வயிர விட்டத்து

ஊற்றும் செழுந்தண் நிலாக்கால் விழுந்தனைய

ஒண்தரள வடம் வீக்கியே5‘ என்கிறார்.

‘இத்தகைய அற்புதமான ஊஞ்சலில் அமர்ந்து ஆடுகின்ற உன் தோற்றம் தாயே, அந்தச் சூரிய மண்டலத்தில் வளர்கின்ற அரிய பெரிய சுடர் ஆகிய ஒளியை ஒத்திருக்கிறதே!’ என நெகிழ வைக்கிறார் புலவர்.

‘தன்’னை வென்று பரம்பொருளில் ஆழ்ந்து விட்ட பெரியோருக்கு அனைத்தும் இறை மயமாகத்தான் தெரியும்! ஆதி சங்கரரும் ‘உத்யத்பானு ஸஹஸ்ரகோடி ஸத்ருசாம்6,’ என்று மீனாட்சியின் ஒளிமயமான தோற்றத்தைப் போற்றியுள்ளார். உதிக்கின்ற ஆயிரம் கோடி சூரியர்களின் காந்தி பொருந்தியவளாம் அண்ட சராசரங்களுக்கும் முதல்வியான நம் அம்மை! இவள் குடியிருக்குமிடம் எதுவென்று தாம் உணர்ந்ததை எளியவர்களாகிய நமக்கும் விளக்குகிறார் குமர குருபரர். 

உள்ளத்தில் திருவருள் நிரம்பியதால் அடியார்கள் ஆனந்தச் செருக்கு நிறைந்து விளங்குகின்றனராம்! தெய்வப் பேரருளை உணர்ந்தமையால், அதனால் விளைந்த பரமானந்த அலைகள் பொங்கும் கடலில் அவர்கள் மூழ்கித் திளைக்கின்றனர். ‘தெள்ளு சுவையமுதம் கனிந்த ஆனந்தத் திரைக்கடல் மடுத்து உழக்கும் செல்வச் செருக்கர்கள்7,’ என இத்தகைய அடியார்களைப் பெருமைப் படுத்துகின்றார். திருவருள் செல்வத்தினால் மெய்யடியார்களுக்கும் செருக்குண்டாகுமாம்! 

‘இறுமாந்திருப்பன் கொலோ, ஈசன் பல்கணத்து எண்ணப்பட்டுச் 

சிறு மான் ஏந்தி (சிவபிரான்) தன் சேவடிக் கீழ்ச் சென்று அங்கு 

இறுமாந்திருப்பன் கொலோ8,’ என திருநாவுக்கரசரும் இறைவனடியில் பணிந்து பெற்ற பேரருள் செல்வத்தால் தாம் இறுமாப்பு அடைந்ததைப் பாடியுள்ளார்.

இத்தகைய அடியார்களின் மனத்தாமரையில் நெகிழ்ந்த  பூம்பஞ்சணையில் குடியிருக்கிறாள் மீனாட்சியன்னை. இங்ஙனம் இவள் இங்கு குடியிருப்பதனை உலகத்தினருக்கு அறிவிப்பது போல, அவர்கள் ஓதுகின்ற வேதம் எனப்படும் பறவைகள் ஒலியெழுப்புகின்றன. அன்னையும் அத்தனும் வேதத்தின் உட்பொருள்; ஆகவே, ஆகமப் பொருளாகி நிற்பவள் இவள் என்கிறார் குமரகுருபர அடிகளார்.

இதனை முற்றுணர்ந்தவர்களாக, ‘பழ வேதமாய் அதன் முன்னுள்ள நாதமாய் விளங்குமிந்த வீரசக்தி வெள்ளம்9,’ என்று மகாகவி பாரதியார் கூறுகிறார்.

‘நானாயோகி முனீந்த்ர ஹ்ருந்நிவஸதீம்10 (யோகிகளும் முனிவர்களும் ஆகியோரின் நெஞ்சத் தாமரையில் உறைபவள்)’ என ஆதி சங்கரரும் கூறியுள்ளார்.

‘இவ்வாறு அடியார்களின் மனமாகிய தாமரையில் உறைபவளே, சுந்தரவல்லியே, பொன்னூசலில் ஆடியருளுக! 

‘…………………….பழையபாடல்

புள்ளொலியெழக் குடிபுகுந்த சுந்தரவல்லி

பொன்னூசல் ஆடியருளே

புழுகுநெய்ச் சொக்கர் திரு அழகினுக்கு ஒத்தகொடி

பொன்னூசல் ஆடியருளே11.!’ என்பது பாடல்.

பொன்னூஞ்சலில் அமர்ந்துள்ள தடாதகையின் திருக்கோலத்தை மனக்கண்ணில் கண்டு மேலும் பாடுகிறார் புலவர்: “தேரிலேறிய போர்க் கோலத்தில் உன்னைக் கண்ட சிவபிரானின் உள்ளத்தில் முதலில் சினம் பொங்கியெழுந்தது! ஆனால் உனது அழகுத் திருக்கோலத்தைக் கண்டு சினத்தீ தணிந்து உள்ளத்தில் பற்றி எரியும் காமக்கனல் வளர்ந்து எழுந்தது! அந்தத் தீயின் கொழுந்து போன்றது அவரது சிவந்த சடை. உன்மேல் கொண்ட காதலால் அவர் உள்ளம் உருகியது போலவே, அவர் கையிலிருந்த வில்லான பொன்மேருவும் உருகியோடியது! (வில் அவர் கையை விட்டு நீங்கியது). அவர் முடியிலிருக்கும் சந்திரனும், அவர் ஏறும் காளைவாகனத்தின் மணி ஓசையும் அவர் கொண்ட காதல் நோயால் அவருக்கு மிகுந்த துன்பத்தைத் தந்தன!” என்கிறார்.

இன்னும் கூறுகிறார்: “அழகான மேகத்தின் நீலமும் கருநிறமும் பொருந்திய கழுத்தை உடைய அப்பெருமான், உன்னைப்  போரில் எதிர்த்து வருந்தினார் அம்மையே! நீ அவர் மேல் கண்களாகிய அம்புகளைக் கரிய புருவங்களாகிய வில்லிலிருந்து செலுத்தினாய்; ஒரு கையில் போருக்கு வில்லையும் வளைத்து ஏந்தி நின்ற உந்தன் அழகுக் கோலத்தில் ஐயன் மயங்கினார்; அந்தப் போர்க்கோலமே உனக்கு திருமணக் கோலமான பெண்ணே, பொன்னூசலாடியருளுக,” என்கிறார்.

‘கண்கணை துரக்கும் கரும்புருவ வில்லொடொரு

கைவில் குனித்து நின்ற

போர்க்கோலமே திருமணக் கோலமான பெண் 

பொன்னூசல் ஆடியருளே,’ என்பன பாடல் வரிகளாகும்.

அன்னை ஊசலாடும்போது சுற்றும் புடை சூழ நிற்கும் இனிய தோழியரில் சிலர் பாடல்களை இசைக்கின்றனர்; இன்னும் சிலர் பரிகாசச் சொற்களைப் பேசி கேலி செய்கின்றனர். உயிர்த் தோழியான திருமகள், தரையைக் காலால் உந்தி உயர்ந்தெழும் ஊஞ்சலில் அமர்ந்துள்ள மீனாட்சியின் தாமரைத் திருவடிகளைப் பார்க்கிறாள்; வளைந்த பிறைத் தழும்பு அதில் தெரிகிறது. “வாணி, இதைப் பாரடி! என்ன இது இவள் மலரடியில், வலம்புரிச் சங்க ரேகையோ?” என்று கூவிப் பரிகசித்து முத்துப்பல் தோன்றச் சிரிக்கின்றாள்; ஊடல் காலத்தில் சிவபெருமானின் திருமுடியிலுள்ள பிறைநிலா அழுந்தியதால் வந்த தழும்பல்லவா அது? தோழியர் முகங்களில் குறும்புப் புன்னகை விகசிக்கின்றது! மீனாட்சிக்கு நாணம் மிகுகிறது. வணங்காத அவள் முடிக்கு அப்போது அந்த நாணம் ஒரு வணக்கத்தை வழங்குகின்றதாம்.

 ‘……………………மலர்மகள் அம்மை 

உள்ளடிக் கூன்பிறை தழீஇ 

மல்கும் சுவட்டினை வலம்புரிக் கீற்றிது கொல் 

வாணி என்று அசதியாடி 

மணிமுறுவல் கோட்ட12 என்பன பாடல் வரிகள். அசதியாடல் என்றால் பரிகசித்தல் எனப் பொருள். 

குமரகுருபர அடிகளாரின் கவிநயமும் பொருள் நயமும் மிகுந்த பாடல், மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற செந்தமிழ்ச் சொல்லோவியத்தின் நிறைவுப் பாடலாக அமைந்துள்ள பாடல், ஊசற் பருவத்தின் பத்தாவது பாடல், அன்னையின் பாதாதி கேச வர்ணனைப் பாடலாக அமைந்துள்ளது. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ் என்ற தெய்வச் சிற்றிலக்கியத்திற்குத் திலகம் போன்று இப்பாடல் திகழ்கிறது.

இரு திருவடிகளிலும் அணிந்துள்ள மென்மையான ஒலி எழுப்புகின்ற கிண்கிணியான சதங்கையும், முறையீடு செய்வது போன்று ஒலிக்கின்ற பரல்களையுடைய சிலம்புகளும் அணிந்த அம்மையின் மென்மையான மலர் போலும் திருவடிகளில் தேவரும் மூவரும் பணிந்து கிடக்கின்றனர். இவர்களுடைய முடிகளிலுள்ள கிரீடங்கள் அவர்கள் பணியும் போது அன்னையின் மெல்லிய திருவடிகளை அழுத்தி வருத்துகின்றன. இதனால் தான் திருவடிகளின் சார்பாகச் சிலம்புகள் வருத்தத்தை வெளியிட்டு முறையீடு செய்கின்றனவோ?

‘இருபதமும் மென்குரல் கிண்கிணியும் முறையிட்டு

இரைத்திடும் சுரிச்சிலம்பும்13′

காப்பிட்டு, செங்கீரையாடி, தாலாட்டி, சப்பாணி கொட்டி, முத்தம் தந்து, குறுநடை நடந்து, அம்புலியோடு ஆடி, அம்மானை விளையாடி, வைகை நீரிலாடி மகிழ்ந்து, அழகு பொங்க வளர்ந்து இன்று பொன்னூஞ்சலில் ஆடி நிற்கும் அன்னையின் திருவழகைக்கண்டு உள்ளம் பூரிக்கின்றது.

‘தடாதகையின் மென்மையான கொடி போன்ற இடையானது இற்றுப் போகுமே என்று அவ்விடையில் அணியப்பட்டுள்ள மேகலை இரங்கிப் புலம்புகின்றது. பொற்சரிகையால் சித்தரிக்கப்பட்ட பட்டாடை இவளுடைய சிறந்த மெல்லிடையை அலங்கரிக்கின்றது. மேலாடையும் ஒட்டியாணமும் அணிந்து சிவந்த கையில் பசுங்கிளியை ஏந்தி இருக்கிறாள்! இவளது அழகிய மார்பகங்களை முத்தாலாகிய மேலாடை அலங்கரிக்கின்றது. ஈசன் அணிவித்த மங்கலத் திருநாண் அதன் மீது திகழ்கின்றது. அழகு பொங்க நின்று அருளைப் பொழியும் நிலவு போன்ற திருமுகம்; முகமாகிய மதியினின்று  நிலவின் நீண்ட கிரணங்கள் போல அரும்பி வரும் புன்சிரிப்பும் கொண்டவள் இப்பெண்மணி,’ எனப் படிக்கும்பொழுதில் நமது கண்களில் ஆனந்த வெள்ளம் பெருகுகின்றது.

இன்னும் மேலே போய் ‘சொல்லும் பொருளும் என நடமாடும் இறைவருடன் புல்லும் பூங்கொடி’யான அம்மை மீனாட்சியை வர்ணிக்கிறார் குமரகுருபர அடிகளார். ‘ஞானமாகிய ஆனந்தம் என்னும் கடலில் மூழ்கியவள் இவள்,’ என்கிறார் . அதாவது ஞானமே வடிவாகிய சிவபிரானுடன் இரண்டறக் கலந்தவள் என்பது பொருள். காளிதாசர் ‘ரகுவம்ச’த்தில், ‘வாகர்த்தா இவ சம்ப்ரக்தௌ14 எனச் சொல்லையும் பொருளையும் போலப் பார்வதியும் பரமேஸ்வரனும் இணைபிரியாதவர்கள் என்பார்.

  ‘இத்தகைய பெருமை பொருந்திய தாயே! காதிலணிந்துள்ள மகரக் குழைகளுடன் கயல்மீன்களாகிய கண்கள் போர்செய்கின்ற ஒப்பற்ற அழகு பூத்த சுந்தரவல்லியே! பொன்னூசல் ஆடியருளுக; புனுகு எனப்படும் நறுமண நெய் பூசியிருக்கும் சொக்கநாதரின் திருவடிவிற்குப் பொருத்தமான கொடி போன்ற பெண்ணே! பொன்னூசல் ஆடியருளுகவே,’ எனப் பாடி வாழ்த்தி நூலை நிறைவு செய்கின்றார்.

‘……………………ஞான

ஆனந்த மாக்கடல் குடைந்துகுழை மகரத்தொடு

அமராடும் ஓடரிக்கண்

பொருகயலும் வடிவழகு பூத்தசுந் தரவல்லி

பொன்னூசல் ஆடியருளே

புழுகுநெய்ச் சொக்கர்திரு அழகினுக் கொத்தகொடி

பொன்னூசல் ஆடியருளே16.

அடுத்த பகுதியில் மற்ற பிள்ளைத்தமிழ் நூல்கள் காட்டும் நயங்களைக் கண்டு மகிழலாம்.

***************

பார்வை நூல்கள்

  1. சிலப்பதிகாரம்- ஊசல்வரி- இளங்கோவடிகள்
  2. திருவாசகம்- திருப்பொன்னூசல்- மாணிக்கவாசகர்
  3. திருப்பேரூர்க் கலம்பகம்- கு. நடேச கவுண்டர்
  4. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
  5. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
  6. மீனாட்சி பஞ்சரத்தினம்- ஆதிசங்கரர்
  7. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
  8. தேவாரம்- திருநாவுக்கரசர்.
  9. பாரதியார் பாடல்கள்- சுப்ரமணிய பாரதியார்
  10. மீனாட்சி பஞ்சரத்தினம்- ஆதிசங்கரர்
  11. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
  12. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
  13. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்
  14. ரகுவம்சம்- காளிதாசன்
  15. மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்- குமரகுருபரர்

 

 

 

_

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *