படக்கவிதைப் போட்டி – 222
அன்பிற்கினிய நண்பர்களே!
கவனத்தை ஈர்க்கும் காட்சி ஒன்றைக் கண்டவுடன் உங்கள் உள்ளத்தில் கவிதை ஊற்றெடுக்கும் ஆற்றல் கொண்டவரா நீங்கள்?
நித்தி ஆனந்த் எடுத்த இந்தப் படத்தை, வல்லமை ஃப்ளிக்கர் குழுமத்திலிருந்து சாந்தி மாரியப்பன் தேர்ந்தெடுத்து வழங்கியுள்ளார். இந்தப் படத்திற்கு ஒரு கவிதை எழுதுங்கள்.
இந்த ஒளிப்படத்திற்கு ஏற்ற கவிதையை, 24 வரிகளுக்குள் பின்னூட்டமாக இடலாம். ஒருவரே எத்தனை கவிதைகள் வேண்டுமானாலும் எழுதலாம். வரும் திங்கட்கிழமை (02.09.2019) வரை, உங்கள் கவிதைகளை உள்ளிடலாம். அவற்றில் சிறந்த கவிதையை நம் வல்லமை இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரும் தமிழிலக்கிய ஆராய்ச்சியாளருமான மேகலா இராமமூர்த்தி தேர்வு செய்வார். ஒவ்வொரு வாரமும் சிறந்த கவிஞர் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை பங்கு பெறலாம். இவ்வாய்ப்பு, ஏற்கனவே சிறந்த கவிஞராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றவர்களுக்கும் உண்டு.
ஒளிப்படத்திலிருந்து தாக்கமும் தூண்டுதலும் பெற்று எழும் அசல் படைப்புகளை ஊக்குவிப்பதே இதன் நோக்கம். கவிஞர்களையும் கலைஞர்களையும் கண்டறிந்து ஊக்குவிப்பதற்கான அடையாளப் போட்டி இது; வெற்றி பெறுபவர்களுக்குப் பரிசளிப்பு இருக்காது; பாராட்டு மட்டுமே உண்டு. ஆர்வமுள்ளவர்களைப் பங்குபெற அழைக்கிறோம்.
போட்டியின் நடுவரான திருமதி மேகலா இராமமூர்த்தி புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் பிறந்தவர். கணிப்பொறி (MCA) மற்றும் தமிழில் (MA) முதுகலைப் பட்டம் பெற்ற இவர், அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின் (FeTNA) 2008, 2009, 2014, 2016ஆம் ஆண்டுகளின் (ஆர்லாண்டோ, அட்லாண்டா & மிசௌரி) கவியரங்கம், இலக்கிய வினாடிவினா நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பாராட்டுகளும் பரிசுகளும் பெற்றுள்ளவர். சங்கப் பாடல்களில் அதிக ஆர்வமும், இலக்கியக் கூட்டங்களிலும், பட்டிமன்றங்களிலும் சுவைபடப் பேசுவதில் வல்லமையும் பெற்றவர். இவருடைய வலைப்பூ – மணிமிடை பவளம்
பிள்ளை விளையாட்டு…
வெள்ளை உள்ளம் கொண்டதாலே
வேறு பாடுகள் பார்ப்பதில்லை,
பிள்ளை யாக இருக்கும்வரை
பேதம் எதுவும் வருவதில்லை,
கள்ளம் மனதில் இல்லாததால்
கவலை வீணே கொள்வதில்லை,
தள்ளி நிற்பீர் பெரியோரே
தடுக்க வேண்டாம் விளையாட்டையே…!
செண்பக ஜெகதீசன்…
வருங்கால தூண்கள்
வீடு நிறைய இடம் இருந்தும்
ஓடி ஆடி விளையாட மறந்த
புதிய தலைமுறை
உலகை வெல்லும்
அத்தனை திறமை இருந்தும்
உள்ளங்கையில் ஒளிந்திருக்கும் கைபேசியின் கைதியாய் இவர்கள்
சற்றே இடைவெளி விட்டு
அகலும் விழிகள் தொலைக்காட்சி பெட்டிக்கு அடிமை ஆகும்
நீண்ட நேரம் மின்சாரம் இன்றி
செயல் இழந்த கைபேசி
இவர்களை வீதிக்கு அழைத்து வந்ததோ விளையாட
செய்வது அறியா ஆழ்ந்த சிந்தனையில்
அடுத்த உட்புற விளையாட்டை
தேடும் புதிய தலைமுறை
இவர்கள் வருங்கால தூண்கள்