படக்கவிதைப் போட்டி 221-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
சாந்தி மாரியப்பன் எடுத்திருக்கும் இப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தேர்ந்தெடுத்து வழங்கியிருக்கின்றது வல்லமை இதழ்.
வீதிக்கு வந்துவிட்ட நைந்த பஞ்சணையும் அதில் முகம்புதைத்துத் தூங்கும் ஞமலியும் நமக்கு நவிலும் செய்தி என்ன என்று கண்டுபிடித்துச்சொல்லும் பொறுப்பை நம் வித்தகக் கவிஞர்களிடம் விட்டுவிடுவோம்.
*****
”வாழ்க்கையே சகடம்போன்று சுழல்வதுதான்; அதில் உச்சத்தில் இருந்தவனும் ஒருநாள் ஆய்விடுவான் துச்சமாய்; ஆகவே நிதானமாய் வாழ்ந்திடு!” என்றுரைக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
நிதானமாய்…
வாழ்க்கை யென்பது சக்கரம்தான்
வந்து போகும் மேல்கீழாய்,
வாழ்ந்து வந்தவன் உச்சத்தில்
வந்து விடுகிறான் துச்சமாய்,
பாழ்படும் பகட்டு வாழ்வதுவும்
பஞ்சு மெத்தையும் பன்றிநாய்க்கே,
வாழ்ந்திடு கொஞ்சம் நிதானமாயே
வராது பெரிதாய் அடியதுவே…!
இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது அடுத்து…
அடடே! வயது முதிர்வு கொண்டதனால் வீதி…
இளமையில் நீ தந்த அன்பும் அடைக்கலமும் முதுமையில் நீ பெறுவாய் என நினைத்தாயோ…?
வீதிவரை வந்தும் இன்னமும் பிடிபடவில்லையா? மடையனே!
சுயநலமே சூழ்ந்து வாழும் நிலையில் பெற்றவராயினும் அந்நியரே…
முதுமை உணர்த்தும் உனக்கு ரூபாயின் மதிப்பை ஊட்டி வளர்த்ததால் வந்த வினை என்று…
நீயும் இந்தப் பஞ்சுமெத்தை போலத்தான்…
உழைப்பைச் சுரண்டிவிட்டு..
உதவாத போது வீதி வரத்தான் வேண்டும்…!
பொருள் புதிதாய் இருக்கும் வரையில் பயன்படுத்தும் மக்கள், அது சற்றே பாழ்பட்டாலும் கழித்துக்கட்டி விடுவர். அதுபோல், இளமையும் வளமையும் இருக்கும்வரை மனிதனைக் கொண்டாடும் சுற்றமும் நட்பும், அவனுக்கு முதுமையும் வறுமையும் வந்துவிட்டால் அவனைத் தெருவில் திண்டாட வைத்துவிடும் என்ற எதார்த்த உண்மையைத் தன் கவிதையில் பேசியிருக்கும் திரு. செல்வபாரதியை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.