பழமொழிகளும் அதன் விளக்கங்களும்

0

முனைவர்  க. மங்கையர்க்கரசி
உதவிப் பேராசிரியர்
A M ஜெயின் கல்லூரி
மீனம்பாக்கம்
சென்னை – 600 114

முன்னுரை

நமது நாட்டில் பேச்சு வழக்கில் பல்வேறு பழமொழிகள் இடம்பெற்று வருகின்றன. சில பழமொழிகளை நேரம், இடம், சூழ்நிலை ஆகியவற்றிற்கேற்ப நாம் பேசி வருகின்றோம். சில பழமொழிகளுக்குரிய சரியான விளக்கங்களையே நாம் பேசுகின்றோமா எனில் இல்லை என்றே கூறலாம். சில பழமொழிகளின் உண்மையான விளக்கங்களை நாம் தெரிந்து பயன்படுத்துவோம்.

  1. சிவ பூஜையில் கரடி

வீட்டிற்குள் தேவையற்ற நேரத்தில் ஒரு நபர் வந்து விட்டால் அவர்களை குறிக்கவே இந்தப் பழமொழி என்பது பொருள் அல்ல.

“சிவபூஜையில் கரடிகை” என்பதே சரியானதாகும்.

சிவபூஜையின் போது முக்கியமாக பயன்படுத்தப்பட்ட ஓர் இசைக் கருவிதான் கரடிகை. பழங்காலத்தில் தெய்வவழிபாட்டின் போது, பல்வேறு இசைக் கருவிகள் இசைக்கப்பட்டன. அவற்றில் கரடிகை ஒன்று. கரடி கத்துவது போல ஓசை எழுப்பக்கூடிய கருவி என்பதால் இந்தப் பெயர் ஏற்பட்டது. மிருதங்கத்தைப் போல மரம், தோலால் செய்யப்பட்ட கருவி இது. தாள இசைக் கருவியாகப் பயன்பட்டது. கம்பராமாயணத்தில் (8445) என்ற பாடலிலும் அருணகிரிநாதர் பிள்ளைத்தமிழிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

சிவபூஜையில் கரடிகை என்பதே சரியான பொருளாகும்.

  1. விதையொன்று இட்டால் சுரையொன்றா முளைக்கும்

ஒரு பயிரினுடைய விதையைப் போட்டால் வேறொரு பயிர் முளைக்காது. அதே பயிர்தான் முளைக்கும் என்பது ஏதோ ஒரு செடி வளர்க்கும் முறை பற்றியது என்பது பொருள் அல்ல.

இது மனிதனின் விந்தணுக்களில் உள்ள கூறுபாடுகளைக் குறிக்கும். ஒருவன் உடலில் உள்ள ஜீன்களின் எண்ணிக்கை, குணாதிசயங்கள் ஏழு மூதாதையர்களின் அந்தந்தக் கூறுபாடுகளின் எண்ணிக்கைபடி அமைந்திருக்கும் என்பதே சரியான பொருளாகும்.

  1. குமரியை வெல்ல குமரியை உண்க

ஒரு குமரியை வெல்ல வேண்டுமானாலும் அந்தக் குமரியை உண்ண வேண்டும் என்பது பொருள் அல்ல.

இதில் இரண்டாவது வரும் குமரி என்பது சோற்றுக்கற்றாழை. உடலுக்கு இளமையும், வனப்பும், நிம்மதியான தூக்கத்தையும் கொடுக்க வல்லது ஆகும். இதைத் தினமும் உட்கொண்டால் குமரிப்பெண்களை வெல்லும் ஆற்றல் கிடைக்குமாம் என்பதே சரியான பொருளாகும்.

  1. யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்.

யானை உடல் வலிமை மிக்கது. அதற்கு ஒரு காலம் வந்தால், உடல் வலிமை குறைந்த பூனைக்கும் ஒரு காலம் வரும் என்பது பொருள் அல்ல.

“ஆ நெய்க்கு ஒரு காலம் வந்தால் பூ நெய்க்கு ஒரு காலம் வரும்”

‘ஆ’ நெய் என்பது பசுவின் (ஆ – பசு) நெய், அதை இளமைக் காலங்களில் உண்டு வர உடலுக்கு நன்மை தரும். உடனடியாக உடலுக்கு அழகும், ஆரோக்கியமும் கிடைக்கும். ‘பூ’ நெய் என்றால் தேன் (பூவிலிருந்து கிடைப்பதால், அதை முதுமைக் காலங்களில் உட்கொண்டால் உடலுக்கு எந்தவிதத் தீங்குகளும் ஏற்படாமல் பாதுகாக்கும் என்பதே சரியான பொருளாகும்.

  1. பொன்னுக்கு வெள்ளி கால் மாத்து

தங்கத்தின் மதிப்பிற்கு ஈடாக, இணையாக, வெள்ளியை அளிக்க வேண்டும் என்பது பொருள் அல்ல.

தில்லை சிதம்பரத்திற்கு ‘பொன்னம்பலம்’ என்று பெயர். மதுரைக்கு ‘வெள்ளியம்பலம்’ என்று பெயர். பொன்னம்பலத்தில் தனது இடக்காலைத் தூக்கி ஆடுகின்ற சிவபெருமான், வெள்ளியம்பலத்தில் வலக்காலைத் தூக்கி ஆனந்த நடனம் ( காலைமாற்றி) ஆடுகின்றார் என்ற கருத்தைத் தெரிவிக்க எழுந்ததே என்பதே சரியான பொருளாகும்.

  1. பத்துக்கு மேல் பத்தினி இல்லை

இரவு பத்து மணிக்கு மேல் யாரும் பத்தினி இல்லை என்பது பொருள் அல்ல. நமது புராணத்தில் சொல்லப்படுகின்ற அருந்ததி, அநசூயை, அகலிகை, சீதை, சாவித்திரி, சந்திரமதி, தமயந்தி, நளாயினி, கண்ணகி, மண்டோதரி போன்ற பத்துப் பேரைத் தவிரப் பத்தினித் தெய்வங்கள் வேறு இல்லை என்பதே பத்துக்கு மேல் பத்தினி இல்லை என்பதாகும். இதுவே சரியான பொருளாகும்.

  1. நொறுங்கல் தின்றால் நூறு வயசு

நொறுங்கல் என்பது ஸ்நேக்ஸ் என்றோ, கண்டதை எல்லாம் தின்றால் நூறு வயது வரை வாழலாம் என்பதோ பொருள் அல்ல.

நாம் சாப்பிடும் உணவை வாயில் போட்டவுடன் விழுங்கி விடாமல், நிதானமாகப் பற்களுக்கு இடையில் நன்குமென்று, அரைத்துக் கூழாக்கி மென்று தின்றால், நூறு வயது வரை நோயின்றி வாழலாம் என்பதே சரியான பொருளாகும்.

  1. சேலை கட்டிய மாதரை நம்பாதே

சேலை கட்டிய பெண்ணை நம்பாதே; அப்படியானால் சுடிதார் மாட்டிய மாதரை நம்பு என்பது பொருள் அல்ல.

‘சேல்’ என்றால் ‘கண்’ தன் கணவனுடன் இருக்கும் போது, கண்களை அகட்டி, வேறு ஓர் ஆடவனைப் பார்க்கும் பெண்களை நம்பாதே, கண்களின் நோக்கம் (பார்வையில் தவறான எண்ணத்தில் ஆடவனை பார்க்கும் தவறான பெண்களை (விலைமாதரை) நம்பாதே. அவர்கள் பின்சென்றால் சொல்ல முடியாத துன்பமும், துயரமும், நோயும் வரும் என்பதே சரியான பொருளாகும்.

  1. மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே

மண்ணால் செய்யப்பட்ட குதிரை தண்ணீரில் கரைந்துவிடும். அதை நம்பிக் கரையைக் கடக்க இயலாது என்பது பொருள் அல்ல. ஏமாற்றம் அடையாதே என்பது அல்ல. நம்பக்கூடாததை நம்பி, நம்ப முடியாததை நம்பாதே என்பது பொருள் அல்ல.

ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால் உள்ளே பதியும், நாம் கீழே விழுந்து விடவோ, உள்ளேயே புகுந்துவிடவோ ஏதுவாகும். எனவே இந்த மண் (குதிர் ஐ) குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பதே சரியான பொருளாகும்.

  1. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே

நல்லது எதுவும் நடந்தாலும் அது பெண்ணால் தான் வரும் என்றும், அழிவு வந்தாலும் அது பெண்ணால் தான் வரும் என்பது பொருள் அல்ல.

நல்லவை ஆவதும் பெண்ணாலே, தீயவை அனைத்தும் அழிவதும் பெண்ணாலே என்று பொருள்

அரக்கர்கள் பெரும்பாலும் இறைவனை வேண்டி தவமிருந்து வரம் பல பெற்றபோது, தமக்கு இறப்பே வரக்கூடாது என்றும் இப்படியெல்லாம் இருக்கக்கூடாது என்றும் வேண்டுவர். உதாரணமாகக் காஞ்சிபுர காமாட்சி அவதாரம்.

  1. ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும்

ஆடி மாதம் காற்று பலமாக வீசும். கடினமான பொருளான அம்மியும் பறந்து விடும் என்பது பொருள் அல்ல.

சித்திரை மாதம், வைகாசி மாதம் வெயில் காலம். அக்னி நட்சத்திரம். வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும். அதனால் பலருக்கும் அம்மை நோய் ஏற்படும். அது ஒரு நோய்த்தொற்று. எனவே வீட்டில் ஒருவருக்கு வந்தால் கூட, பலருக்கும் வரும் அபாயம் உண்டு. ஆனி, ஆடி மாதத்தில் தட்பவெப்பநிலை மாறிவிடும். அம்மை நோயும் ஏற்படாது. தொற்றும் இருக்காது என்பதால் ஆடிக் காற்றில் அம்மையும் பறந்து போய்விடும். நோயின் தன்மையும் குறைந்து, இல்லாமல் போய்விடும் என்பதே சரியான பொருளாகும்.

  1. பந்திக்கு முந்து படைக்குப் பிந்து

திருமணம் முதலிய சுபநிகழ்ச்சிகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். எனவே முதல் பந்தியில் அமர்ந்து சாப்பிட்டால், அனைத்து உணவு வகைகளும் கிடைக்கும். தாமதமாகச் சென்றால், சில உணவு வகைகள் காலியாகிவிடும், எனவே பந்திக்கு முதலில் செல். படை, போர் என்று வந்தால் தாமதமாகச் செல் முதலில் போர் செய்து பலர் இறந்துவிடுவர். போரும் முடிவுக்கு வந்துவிடும். இறுதியில் சென்றால் உயிர்க்குப் பிரச்சனை ஏற்படாது என்பது பொருள் அல்ல.

பந்திக்கு முந்து என்றால் நாம் சாப்பிடப்போகும் போது வலக்கை முன்னோக்கிச் செல்கிறது. முற்காலத்தில் போர் என்றால் வில்லே முதன்மையான போர்க்கருவியாகும். எவ்வளவு தூரம் வலக்கை வில்லின் நாணைப் பிடித்து பின்னால் இழுக்கிறதோ,அந்த அளவுக்கு அம்பு வேகமாகப் பாய்ந்து இலக்கைத் தீர்க்கும் என்பதே சரியான பொருளாகும்.

  1. ஆத்தில் போட்டாலும் அளந்து தான் போடணும்

எந்தப் பொருளை ஆற்றில் கொண்டு போய் போட்டாலும் அளந்து பின்பே போடணும் என்பது பொருள் அல்ல.

அகத்தில் அதாவது வயிற்றில் சாப்பிடும் சாப்பாட்டை நேரம், காலம், அளவு என்று அறிந்து தான் போட வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

ஏதாவது ஒரு பிரச்சனைக் குறித்து மனத்தில் (அகத்தில் போட்டாலும், தேவையான சிந்தனையை மட்டுமே போட வேண்டும். அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியம் பெறும் என்பதே சரியான பொருளாகும்.

  1. விருந்தும் மருந்தும் மூணு நாள்

விருந்துக்கென ஒரு வீட்டிற்குச் சென்றாலும் 3 நாள் மட்டுமே. மருந்து சாப்பிட்டாலும் 3 நாள் மட்டுமே என்பது பொருள் அல்ல.

ஒரு வாரத்தில் ஞாயிறு, திங்கள், புதன் ஆகிய குளிர் நாட்களில் நன்றாக உணவு உட்கொள்ள வேண்டும். செவ்வாய், வியாழன், வெள்ளி ஆகிய நாட்களில் உணவைக் குறைவாய் உட்கொண்டு மருந்துபோல் உண்ண வேண்டும் என்பதே சரியான பொருளாகும்.

  1. அரசனை நம்பிப் புருசனைக் கைவிட்டது போல

நாடாளும் அரசனை நம்பி, தாலி கட்டிய புருசனைக் கைவிட்டது போல என்பது பொருள் அல்ல.

அரசனை என்பது அரச மரத்தைக் குறிக்கும். திருமணமான பெண்கள் பிள்ளைப்பேறு பெற அரச மரத்தைச் சுற்றுவார்கள். கட்டிய கணவனைக் கவனிக்காமல், வெறும் அரச மரத்தைச் சுற்றுவது பயன் தராது என்பது சரியான பொருளாகும்.

  1. கண்டதைக் கற்றால் பண்டிதன் ஆகலாம்

ஒருவன் கண்டதை எல்லாம் படித்தால், பண்டிதன் ஆகலாம் என்பது பொருள் அல்ல.

எதை கற்க வேண்டும் என்று கண்டு, அதைக் தெளிவாகக் கற்றால் பண்டிதன் ஆகலாம் என்பதே சரியான பொருளாகும்.

  1. பெண் புத்தி பின் புத்தி

பெண்ணின் புத்தி எதையும் யோசிக்காமல் செய்துவிட்டு, பின் அதைப் பற்றி யோசிக்கும் என்பது பொருள் அல்ல.

பெண்ணின் புத்திசாலித்தனம், பின்னால் வருவனவற்றை முன் கூட்டியே அறிந்து, அதைச் சரிசெய்துவிடும் அளவிற்கு கூர்மையானது  (பின் – pin) போன்றது என்பது சரியான பொருளாகும்.

  1. ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி

ஒருவன் ஐந்து பெண் பிள்ளைகளைப் பெற்றால், அரசன் போல் வசதி வாய்ப்புகள் இருந்தாலும், ஆண்டியாகி வறுமைநிலையை அடைவான் என்பது பொருள் அல்ல.

ஆடம்பரமாய் வாழும் தாய், பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன், ஒழுக்கம் தவறும் மனைவி, துரோகம் செய்யும் உடன்பிறப்பு, பிடிவாதம் பிடிக்கும் பிள்ளைகள் இந்த ஐந்தும் கொண்ட எந்தக்குடும்பமும் முன்னேறாது என்பது சரியான பொருளாகும்.

  1. பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழ்க

பதினாறு குழந்தைகளைப் பெற்று பெரிய குடும்பமாக வாழ்க, என்பது பொருள் அல்ல.

அபிராமிபட்டர், அபிராமி அந்தாதியில், ஒரு மனிதன் வாழ்வில் நிம்மதியாக, மகிழ்ச்சியுடன் வாழத் தேவையானது என்று, பதினாறு கிடைத்தற்கரிய பேறுகளைக் குறிப்பிட்டு இறைவனிடம் தர வேண்டும் என்று மன்றாடி வேண்டுவார். அவர் வேண்டிய பதினாறு வகையான பேறுகளாக உடலில் நோயின்மை, நல்ல கல்வி, தீதற்ற செல்வம், நிறைந்த தானியம், ஒப்பற்ற அழகு, அழியாப்புகழ், சிறந்த பெருமை, சீரான இளமை, நுண்ணிய அறிவு, குழந்தைச் செல்வம், நல்ல வலிமை, மனத்தில் துணிவு, நீண்ட வாழ்நாள், எடுத்த காரியத்தில் வெற்றி, நல்ல ஊழ் (விதி) மற்றும் இன்ப நுகர்ச்சி பெற்று வாழ்வதே வாழ்வு என்கிறார். இதுவே சரியான பொருளாகும்.

  1. சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்

சட்டியில் சாப்பாடு இருந்தால், அகப்பையில் வரும். என்பது பொருள் அல்ல.

குழந்தை இல்லாத பெண்கள், கந்தசஷ்டி விழா ஆறு நாட்களும் விரதம் இருந்து, முருகனை வழிபட்டால், அவர்களுடைய அகப்பையாகிய கருப்பப்பையில் குழந்தைப்பேறு கிடைக்கும். என்பதே சரியான பொருளாகும்.

  1. ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன்

ஒரு மருத்துவர் தன்னுடைய தொழிலில் ஆயிரம் பேரைக்கொன்றால் தான்/ அவர் அரை வைத்தியன் (பாதி) என்பது பொருள் அல்ல.

நமது நாட்டில் சித்த வைத்தியமே ஒரு காலத்தில் சிறப்பாக இருந்து வந்துள்ளது. மருத்துவர்கள் பல்வேறு மூலிகைகளை, அதன் வேர்களைக் கொன்று, அதாவது அரைத்து அவற்றின் பயன்களை நன்கு தெரிந்து, மக்களின் நோய்களைக் குணப்படுத்தி வந்தனர். அப்படிக் குறைந்தது ஆயிரம் மூலிகைகளின் வேர்களை, அவற்றின் பயன்களைத் தெரிந்து, வைத்தியம் செய்பவரையே அரை வைத்தியர் என்று நம் முன்னோர் கூறினர் என்பதே சரியான பொருளாகும்.

  1. போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை – வாக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை

வேலையே கிடைக்காதவனுக்கு போலீஸ் வேலை, வக்கற்றவன் வறுமை நிலையில் உள்ளவனுக்கு வாத்தியார் வேலை என்பது பொருள் அல்ல.

போக்குக் கற்றவனுக்குப் போலீஸ் வேலை, வாக்குக் கற்றவனுக்கு வாத்தியார் வேலை. போலீஸ் வேலையில் சேர்பவனுக்கு வலுவான உடலமைப்பு, மிடுக்கான நடை, அதாவது லெப்ட், ரைட் என்று காலைத் தூக்கி வைத்து, போவதும் வருவதும் ஆகிய நடைப்போக்கினைக் கற்றவன். திருடனை அவனுடைய போக்கிலேயே விட்டு, பின் தொடர்ந்து சென்று, மொத்தக் கூட்டத்தையே பிடிப்பது. ஆசிரியராக இருப்போர் தாம் கற்றுத் தேர்ந்து பேசுகின்ற வாக்குச் சாமர்த்தியத்தில், மாணவர்களை ஈர்க்கும் திறம் உடையவராய் இருத்தல் வேண்டும். இவைகளை உணர்ந்தே போக்கு கற்றவனுக்குப் போலீஸ் வேலை, வாக்கு கற்றவனுக்கு வாத்தியார் வேலை என்பதே சரியான பொருளாகும்.

  1. களவும் கற்று மற

திருட்டுத்தொழிலையும் கற்று மறந்து விடு என்பது பொருள் அல்ல.

திருவள்ளுவர் தம் குறளில் இன்பத்துப்பாலை களவியல், கற்பியல் என்று இரண்டாகக் கூறி கற்பியல் மட்டுமே தெரிந்து வாழ்க்கை நடத்தினால் போதாது, களவியலையும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிவுறுத்த வந்ததே இப்பழமொழி. இதுவே சரியான பொருளாகும்.

  1. கல்லைக் கண்டால் நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம்

நாயைக் கண்டால் கல்லைக் காணோம். தெருவில் கல் கிடக்கிறது. அதை எடுத்து நாயை அடிக்கலாம் என்று பார்த்தால், நாயைக் காணவில்லை. நாயைப் பார்க்கும் போது, அதை அடிக்க வேண்டும் என்று எண்ணினால் கல்லைக் காணவில்லை என்பது பொருள் அல்ல.

கல்லில் செய்த ஒரு நாயின் உருவம் சிற்பக்கலை, கட்டடக்கலை நிபுணர்கள் காணும்போது /அந்த நாய் கருங்கல்லில் ஆனதா, பளிங்குக்கல்லா, சலவைக்கல்லா என்று அந்த எண்ணத்தில் காண்பர். அவர்கள் கண்களில் அந்த நாய் உருவம் தோன்றுவதில்லை. கல் சிற்பமாகவே தோன்றுகிறது. கல் என்று காணும் போது நாய் என்பது புலப்படவில்லை. அது சாதாரணக் கண்களால் பார்க்கும்போது நாய் என்று புலப்படுகிறது. (நாயின் வாலை நிமிர்த்தி நிற்கும் அதன் எடுப்பானத் தோற்றம்)

    கல்லைக் கண்டால் நாயகனைக் காணோம்
நாயகனைக் கண்டால் கல்லைக் காணோம்

ஒரு கல்லில் (சிற்பத்தில் அழகிய, எடுப்பான கம்பீரமான நாயகனைக் காணும் போது, அது எவ்வகையானக் கல் என்று தோன்றாது எவ்வகை கல் என்று காணும் போது, நாயகன் நம் கண்களுக்குப் புலப்படாது. இதுவே சரியான பொருளாகும்.

  1. ஆறிலும் சாவு, நூறிலும் சாவு

இவ்வுலகில் பிறந்தவர்கள் அனைவரும் இறந்தே தீர வேண்டும். ஆறு வயதானால் என்ன, நூறு வயதானால் என்ன என்பது பொருள் அல்ல.

மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி, பாண்டவர்களுடன் கர்ணனைச் சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்த்து ஆறாவதாக வந்தாலும், கௌரவர்களுடன்  சேர்த்து நூறாவதாக வந்தாலும், (துரியோதனனுக்கு உடன் பிறந்தோர்கள் 99 ஆண், 1 பெண் ) தனக்குச் சாவுதான் என்பதே சரியான பொருளாகும்.

  1. உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு

குறைவாகச் சாப்பிட்டு, உடலை அழகாக, ஆரோக்கியமாக வைத்திருத்தல் பெண்டிற்கு அழகு என்பது பொருள் அல்ல.

உண்டி என்பது சாப்பாடு. அதைச் செய்வதற்கான நேரம் அதிகமாகும் போது, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்ற விசயங்களில், பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலைக் குறுகிய நேரத்திற்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு என்பதே சரியான பொருளாகும்.

  1. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால், தன் பிள்ளை தானே வளரும்

அடுத்த வீட்டுக்குழந்தையை ஊட்டி வளர்த்தால் தன்னுடைய பிள்ளை தானே வளரும் என்பது பொருள் அல்ல.

ஒருவனுடைய மனைவி கர்ப்பமாக இருக்கும்போது (என்ன தான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னோருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாகக் கவனித்துக் கொண்டால், அவளுடைய வயிற்றில் வளரும் தன் பிள்ளை தானாகவே வளரும், என்பதே சரியான பொருளாகும்.

  1. ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தலாம்

ஒரு திருமணம் நடக்க வேண்டுமென்றால், ஆயிரம் பொய்கூடச் சொல்லலாம் என்பது பொருள் அல்ல.

ஆயிரம் பேருக்குப் போய்ச் சொல்லி (அழைப்பிதழ்) தந்து திருமணத்தை நடத்தலாம். மாப்பிள்ளை பெண் எப்படி என்ற விபரமும் தெரியவரும். ஆயிரம் பேரின் ஆசிர்வாதமும் கிடைக்கும்.

ஆயிரம் தடவை போய் சொல்லி (அந்த காலத்தில் தொலைத்தொடர்பு, வாகனங்கள் ஏதும் இல்லாத நிலையில்) ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் உரிய நேரம் எது, என்பதை ஒவ்வொன்றாகப் போய்ச்சொல்லியே திருமணத்தை நடத்தலாம் என்பதே சரியான பொருளாகும்.

  1. சோழியன் குடுமி சும்மா ஆடுமா

சோழியன் குடுமி சும்மா ஆடாது, காசு கொடுத்தால் தான் ஆடும் என்பது பொருள் அல்ல.

தலையில் ஒரு பொருளை வைத்துத் தூக்கிச் செல்ல, துணியை வட்டமாகச் சுற்றி சும்மாடு செய்வர். அதன்மேல் பொருளை வைத்து, தலைச் சுமையாகச் சுமந்து செல்வர். ’சோழியன் தலையில் உள்ள வட்டமான குடுமி சும்மாடு ஆகுமா?’ ஆகாது என்பதே சரியான பொருளாகும்.

  1. கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

கழுதைக்கு முன்னால் கற்பூரத்தைக் காட்டினாலும் அதனுடைய நல்ல வாசனை கழுதைக்குத் தெரியாது என்பது பொருள் அல்ல.

கழு என்பது ஒரு வகை புல், அதைப்பயன்படுத்தி, படுக்கும் பாய் செய்வர். அதிலிருந்து கற்பூர வாசனை தெரியும். ‘கழு’ என்ற புல்லைப் பறித்த போதும், பாயாகச் செய்து தைத்தபோதும், படுக்கும்போதும் அவர்களுக்கே தெரியுமாம். கற்பூர வாசனை என்பதே சரியான பொருளாகும்.

  1. காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

விவசாயம் செய்பவர்கள் அறுவடை முடிந்தபின் நல்ல நெல்லுடன் சாவி நெல்லும் கலந்திருக்கும். நல்ல நெல்லைப் பிரித்தெடுக்க, நெல்லை முறத்தில் இட்டு, காற்று அடிக்கும் திசையின் எதிர்த்திசையில் நின்று தூற்றுவர். அப்போது, நல்ல நெல் கீழே விழும்; சாவி நெல் காற்றில் பறந்து போகும். அப்படிச் செய்ய காற்று தேவைப்படும். எனவே காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்பது பொருள் அல்ல.

நாம் உயிருடன் இருக்கும் (காற்றுடன்) இருக்கும் போதே நல்ல விசயங்களைச் செய்துகொள்ள வேண்டும். இனி ஒரு பிறவி வராத அளவுக்கு நல்லதையே செய்ய வேண்டும் என்பதே இதன் சரியான பொருளாகும்.

  1. ஐயம் இட்டார் கெட்டார்

ஐயம் என்றால் பிச்சை. ஔவையாரும் ‘ஐயம் இட்டு உண்’ என்கிறார். தர்மம் செய்தால் கெட்டுப்போவான் என்பது பொருள் அல்ல.

தர்மம் செய்தால் யாரும் கெட்டுவிடமாட்டார்கள். மாறாக புகழோடு நன்றாக வாழ்வார்கள் என்று வலியுறுத்தும் வகையில் ஐயம் இட்டு யார் கெட்டார்; கெடமாட்டார்கள் என்பதே சரியான பொருளாகும்.

  1. காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் காக்கா பிடி

நாம் விரும்பிய காரியத்தைச் சாதிக்க வேண்டுமானால் காக்கா பிடி என்பது பொருள் அல்ல.

நாம் விரும்பிய காரியத்தைச் சாதிக்க வேண்டுமெனில் கால், கையைப் பிடித்தாவது கெஞ்சி வேண்டியபடி நடந்து கொள்ள வேண்டும் என்பதே சரியான பொருளாகும்.

  1. தண்ணியைச் சாப்பிடு, சாப்பாட்டைக் குடி

தண்ணீர் குடிப்பதைக் கூட சாப்பாட்டு அளவுக்கு சாப்பிடு, சாப்பாட்டை கூழ் பதத்தில் குடி என்பது பொருள் அல்ல.

தண்ணீரைக் கடகடவென வேகமாகக் குடிக்காமல் (வேகமாகக் குடித்தால் சில நேரங்களில் புரை ஏறிவிடும்) திடப்பொருளைப் போல் மெதுவாக, மென்று விழுங்க வேண்டும் என்றும், திட உணவைப் பற்களிலேயே நன்றாக அரைத்துக் கூழாக்கிக் குடிக்க வேண்டும் என்பதே சரியான பொருளாகும்.

ஏனென்றால் உமிழ்நீரில் தான் உணவைச் சீரணமாக்கும் தன்மை உள்ளது. பாதி வேலை பற்களில் முடிந்து விடுவதால் இரைப்பைக்கு, குறைவான வேலையே கொடுக்கப்படுகிறது. இது நீடித்த உடல் இயக்கத்திற்கும், நீண்டநாள் வாழ்விற்கும் வழிசெய்கிறது.

முடிவுரை

பழமொழிகளின் சரியான விளக்கங்களைத் தெரிந்து, பொருத்தமான பழமொழிகளைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தி வாழ்வில் மேன்மை அடைவோம்.

*****

துணைநூற் பட்டியல்

  1. சிவபாரதி, ஆன்றோர்கள் கண்ட அறிவியல், ப்ரீமியர் பதிப்பகம்
    தஞ்சாவூர்.
  2. மெய்யப்பன், தமிழ்ப் பழமொழிகளில் அறிவியல், வானதி         பதிப்பகம், சென்னை.

 

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *