-கவிஞர் விப்ரநாராயணன் திருமலை 

அரைகுறை அறிவு அழிவைத் தருமே
ஆழ்ந்த புலமை நிறைகுட மாமே
நிறைந்த மனமே நிம்மதி தருமே
நேர்மை நாணயம் உறவின் உயிரே
திருமறை கற்றல் தெளிவு தருமே
தருமம் வாழ்வில் உயர்வைத் தருமே
பிறருக் குதவுதல் பிறப்பின் பயனே
பரமன் நாமமே வழித்துணை யாமே

அலைகள் அரவம் கடலின் அழகு
ஆனந்த மனமே பிறப்பின் அழகு
கலைகள் யாவும் இயற்கை யழகு
கவிதை நயமே காப்பிய அழகு
உலையில் அரிசி துடிப்ப தழகு
உதய சூரியன் விசும்பி னழகு
மலைகள் நதிகள் யாவும் அழகு
மலையும் நதியும் வழித்துணை யாமே

பகையை மறத்தல் மனிதனின் பண்பு
பணிவே கல்வி கற்றலின் பயனே
மிகைபடப் பேசுதல் நன்மை தாரா
வரம்பு மீறல் தீமை பயக்கும்
நகைச்சுவைப் பண்பு உடல்நலம் காக்கும்
நல்வழி நடத்தல் நம்மை உயர்த்தும்
தொகையில் ஊறி மகிழ்தல் ஊறே
தகைசால் நட்பே வழித்துணை யாமே.

புலன்வழி செல்லல் தீமை தருமே
பொய்யும் புரட்டும் பூசலைத் தருமே
நிலவளம் நீர்வளம் நன்மை நல்குமே
நாடு செழிக்க இவையும் தேவையே
குளங்கள் ஏரிகள் நிரம்ப வேண்டுமே
கழனிகள் யாவும் பயிர்க்க வேண்டுமே
கொலைகள் கொள்ளைகள் ஒழிய வேண்டுமே
கண்ணன் பாதையே வழித்துணை யாமே

கதைகள் மூலம் கற்பனை வளருமே
கவிதைகள் மூலம் ரசனை வளருமே
மதங்கள் மூலம் நல்வழி தெரியுமே
மனித மாண்புகள் என்றும் மிளிருமே
எதையும் எதிர்க்க உறுதி வேண்டுமே
எங்கும் எதிலும் பணிவு வேண்டுமே
குதலை மொழியில் மகிழ வேண்டுமே
குழந்தை மனமே வழித்துணை யாமே

நாட்டு நலனே நம்மிலக் காகும்
நன்மைகள் செய்வதே நம்மூச் சாகும்
ஆடல் பாடல் ஆனந்தம் தருமே
அவற்றை வளர்த்தல் நம்பணி யாகும்
ஆட்டு மந்தைபோ லணிசே ராது
அகத்தில் தெளிவு பெறுதல் வேண்டும்
நாட்டுப்பற் றின் பொருளை உணர்ந்தால்
நம்பண் பாடு வழித்துணை யாமே

ஆன்ம நேய வொருமை வேண்டும்
அனைவரும் ஒன்றென் றெண்ண வேண்டும்
மான்விழி மாதரை மதிக்க வேண்டும்
மனதை யாளக் கற்றல் வேண்டும்
தேன்சுவை போல்நாம் பேச வேண்டும்
தேச நலனி லக்கரை வேண்டும்
நானெனு மகந்தை அழிய வேண்டும்
நாதன் நாமமே வழித்துணை யாமே

கல்வியும் கேள்வியும் சிறப்பைத் தருமே
காத லுணர்வும் கல்வி யாகுமே
நல்லதை நாடிச் செல்லல் வேண்டும்
நல்லோ ருறவு நாளும் வேண்டும்
சொல்லில் பொருளும் தெளிவும் வேண்டும்
சொல்லால் சுடுவதைத் தவிர்க்க வேண்டும்
பன்மதம் பல்லின மெல்லாம் ஒன்றே
பண்பட் டமனமே வழித்துணை யாமே

கண்ணனும் ஏசுவும் அல்லா வுமொன்றே
கீதை கூறும் கருத்து மிதுவே
எண்ணம் சொல்செயல் மூன்றும் ஒன்றாய்
இணைந்தி யங்கிட முயல வேண்டும்
வண்ண வண்ண ஆடைக ளணியலாம்
மனிதப் பண்பதில் மிளிர வேண்டும்
திண்ணமாய் தன்னல மறவே வேண்டாம்
தன்னல மின்மையே வழித்துணை யாமே

கவிதை ரசனை மனநல மளிக்கும்
காப்பிய போதனை அகவிருள் நீக்கும்
புவியைப் படைத்த பரம்பொருள் தானே
பலவுயி ரையும்நம் மையும்படைத் தானே
நவவித ரசனையை யளித்து நம்மை
நல்மனி தனாக வாழச் செய்தான்
எவ்விதக் கவலையு மின்றி வாழ
எம்பிரான் திருவருள் வழித்துணை யாமே1

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க