அத்தி வரதரை எளிதில் தரிசிக்க…!

(அண்ணாகண்ணன் யோசனைகள் 34)

காஞ்சி அத்தி வரதரைத் தரிசிக்க நாள்தோறும் இலட்சத்திற்கும் மேற்பட்டோர் சென்று, பல மணி நேரங்கள் வரிசையில் நின்று, வழிபடுகின்றனர். அண்மையில் பக்தர்கள் நால்வர் இறந்தனர் என்ற செய்தி, பெரிதும் வருத்தியது. 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டும் வெளியே வருவதால், எப்படியாவது அவரைச் சந்தித்துவிட வேண்டும் எனப் பலரும் விரும்புவது இயல்பே. ஆனால், இப்போது உள்ள ஏற்பாட்டில் இது மேலும் மேலும் சிக்கலாகி வருகிறது. இதற்கு எனக்குத் தோன்றும் ஒரு தீர்வை இங்கே முன்வைக்கிறேன்.

அத்தி வரதரைத் திருக்குளத்திலிருந்து எழுந்தருளச் செய்து, ஏன் வரதராஜப் பெருமாள் கோவிலுக்குள் உள்ள மண்டபத்தில் வீற்றிருக்கச் செய்ய வேண்டும்? முந்தைய காலங்களில் இவ்வாறு வைத்ததால், இதுவே மரபு எனக் கருதலாம். ஆனால், இன்றைய மக்கள் தொகை, வரக்கூடிய பக்தகோடிகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, வரதரை விசாலமான இடத்தில் நிலைகொள்ள வைப்பதே இதற்குத் தக்க தீர்வு.

அத்தி வரதரைப் பெரிய மைதானம் அல்லது திறந்த வெளியின் மையத்தில் வைத்து, சிறிய கோவில் போன்ற அமைப்பைத் தற்காலிகமாக உருவாக்கலாம். அவரைச் சென்றடைய ஒரு வழி என வைக்காது, சுற்றிலும் 8 வழிகளை உருவாக்க வேண்டும். இவற்றுள் 4 வழிகளின் வழியாகப் பக்தர்கள் உள்வருமாறும் எஞ்சிய 4 வழிகளின் வாயிலாக அவர்கள் வெளியேறவும் பாதை அமைக்கலாம். இதைச் செய்தாலே ஒரே நேரத்தில் இப்போது உள்ளது போல், 4 மடங்கு அதிகமான பக்தர்கள் வரதரைத் தரிசிக்கலாம்.

இதையே முன்னதாகத் திட்டமிட்டு, இரண்டு அடுக்குகளில் செய்திருந்தால், வரதரை நோக்கி மொத்தம் 16 பாதைகள் அமைந்திருக்கும். கீழே நான்கு வரிசை, மேலே நான்கு வரிசை என எட்டு வரிசைகளில் மக்கள் உள்வந்து தரிசிக்கலாம். எஞ்சிய எட்டு வழிகளின் ஊடே அவர்கள் வெளியேறலாம்.

இப்போதும் தாமதம் ஆகிவிடவில்லை. தரைவழியே மட்டும் இந்த ஏற்பாட்டை மாவட்ட நிர்வாகம் செய்தால், 4 + 4 என 8 வழிகளைக் கொண்டே கூட்டத்தைச் சிறப்பாக நிர்வகிக்கலாம். இவற்றில் பெண்களுக்கு ஒரு வழியையும் முதியோர் மற்றும் குழந்தைகளுக்காக ஒரு வழியையும் ஒதுக்கினால், சிக்கல்கள் பலவற்றைத் தீர்த்துவிடலாம்.

ஒரு வரிசையில் ஒரே நேரத்தில் 5 ஆயிரம் பேர் நிற்பதாகக் கொண்டால், ஒவ்வோர் ஆயிரம் பேருக்கும் நடுவில் குடிநீர், மோர், இயற்கை அழைப்புகளுக்காக ஓர் ஏற்பாட்டைச் செய்யலாம். இது, பக்தர்களின் சிரமத்தைத் தணிக்கும். இன்னும் ஒரு படி மேலே சென்று, முழுக்க நாற்காலிகளை அமைத்து, அந்த நாற்காலிகளையும் கன்வேயர் பெல்டில் இணைத்துவிடலாம். இப்போது பக்தர்கள் உட்கார்ந்தபடியே வந்து, பெருமாளைச் சேவித்து, மீண்டும் உட்கார்ந்தபடியே திரும்பச் சென்றுவிடலாம். 40 நாள்கள் முடிந்த பிறகு, அத்தி வரதரை வழக்கம்போல், குளத்திற்கே கொண்டு செல்லலாம்.

கட்சி மாநாடுகளுக்காக ஊரையே வளைத்து, ஏக்கர் கணக்கில் பந்தல் அமைக்க முடிகிறபோது, அத்தி வரதருக்காக இவ்வாறு செய்வது இயலாத காரியம் இல்லை. வரதரை வைக்கும் இடத்திற்கு அத்தி வரதர் பீடம் என்றே பெயர் வைத்து, எப்போதும் பாதுகாத்து வைத்தால், எதிர்காலத்திலும் இந்த இடத்தைப் பயன்படுத்தலாம். சிக்கல்கள் இல்லாமல் பக்தர்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.