படக்கவிதைப் போட்டி 220-இன் முடிவுகள்
-மேகலா இராமமூர்த்தி
காயத்ரி அகல்யாவின் (Gaya3 Akallya) எண்ணத்தில் உருவான இந்த வண்ணப் புகைப்படத்தை வல்லமை பிளிக்கர் குழுமத்திலிருந்து தெரிவுசெய்து படக்கவிதைப் போட்டி 220க்கு அளித்திருப்பவர் சாந்தி மாரியப்பன். காயத்ரிக்கும் சாந்திக்கும் என் நன்றிகள்!
வானவில்லின் வண்ணங்காட்டும் குடைக்குள் முகம் மலர நிற்கும் இந்தக் குழந்தைகளைக் கண்டால் கல்லும் கவிபாடும்; நம் கவிஞர்களைக் கேட்பானேன்? வரிசைகட்டி நிற்கும் வல்லமைக் கவிஞர்களைக் கவி விருந்து படைக்க அழைக்கிறேன் அன்போடு!
*****
”மண்செழிக்கச் செய்யும் வான்மழை வாராது போயினும், மனம்செழிக்கச் செய்யும் பாசமழை என்றும் பெய்யும்” என்று உறுதியளிக்கின்றார் திரு. செண்பக ஜெகதீசன்.
மழையில் நனைந்து…
வான்மழை வராது போனாலும்
வைய வாழ்வில் வருவதுண்டு,
கோன்முதல் குடிசையில் வாழ்ந்திருக்கும்
காசினி மாந்தர் வாழ்வினிலே
தோன்றி வளந்தரும் பாசமழை
தொடர்ந்து வந்திடும் நின்றிடாதே,
ஊன்றிடும் உறவிது தழைத்தோங்கும்
உடன்பிறந் தோர்தம் பாசமதே…!
******
”மூடர்களின் வண்ணங்களும் எண்ணங்களும் கானலாய்க் கரையப் புன்னகை சிந்தும் மழலையரைக் காண்மின்” என்கிறார் திரு. சுந்தர்.
கருமேகம் கொட்டிய
மழைத்துளியில்
தீட்டிய வண்ணங்களைக்
குடையினில்
ஏந்திய மழலைகள்
சிந்திய புன்னகையில்
சில மூடரின் வர்ணங்களின்
எண்ணங்களும் கானல்
நீராய்க் கரைகிறதே….
*****
குடைக்குள் நிற்கும் அழகுக் கவிதைகளாம் மழலையர் பற்றி இனிய கவிதைகள் தீட்டிய கவிஞர்களுக்கு என் பாராட்டுக்கள்!
அடுத்துவருவது இவ்வாரத்தின் சிறந்த கவிதையாகத் தேர்வாகியிருப்பது…
மழலைகளின் சாரல் மழை
வானவில்லையே வளைத்துக்
குடையாய்ப் பிடித்திடச்
சிந்தும் புன்னகை
மின்னலாய்க்
குடைக்குள் மழையாய்
இந்த மழலைகள்!
வள்ளுவன் வாக்கு போல்
வறட்சி எனும் இடுக்கண் நீங்கிட
மழை வரும் என்று எண்ணிச்
சந்தோஷமாய்ச் சிறிது மகிழ்ந்திட
நம்பிக்கையின் உச்சமாய்
மழைவந்து நனையாமல் இருக்க
வண்ணக் குடை கொண்டு வந்ததோ
இந்த மழலைகள்?
சுட்டெரிக்கும் சூரியன்
உருண்டோடும் நீள(ல)வானில்
சட்டென மாறிய வானிலை
சில்லென்று வீசிய காற்றில்
வந்து நின்ற மணல் வாசம்
கோடை மழை வந்து எட்டிப் பார்க்க
வானவில்லை வண்ணத் தோரணங்களாய்க் கட்டித்
தங்கள் நிலையை மாற்ற
வரும் மழையை
வரவேற்று நின்றனரோ
இந்த மழலைகள்?
”மழைவரும் எனும் நம்பிக்கையின் உச்சமாய் வானவில்லையே குடையெனும் வண்ணத்தோரணமாய்க் கட்டி மழையை வரவேற்க விழிபூத்துக் காத்துநிற்கும் மழலையரோ இவர்கள்?” என்று வியந்து வினவும் இக்கவிதையின் ஆசிரியர் திரு. ராஜ்மோகன் கிருஷ்ணராஜை இவ்வாரத்தின் சிறந்த கவிஞரென்று அறிவித்துப் பாராட்டுகின்றேன்.