-திருச்சி புலவர் இராமமூர்த்தி
—————————————————

முன்பொரு காலத்தில் கைலாய மலையில் கமலினி, அனிந்திதை ஆகிய இருவரும் பார்வதியன்னை பூசைக்கு மலர் கொய்து தொடுத்தளிக்கும் பணி புரிந்தனர். அவர்களைக் கண்டு தன்னிலை மறந்த சுந்தரரை இறைவன் ‘’மாதர் மேல் மனம் வைத்தனை, ஆதலால் தென்திசையில் பிறந்து, அம்மங்கையருடன் வாழ்ந்து, பின்னர் சிவலோகம் அடைவாய்’’ என்று அனுப்பினார். அவ்வகையில் அப்பெண்களும் தென்னாட்டில் அவதரித்தனர். அவர்களுள் கமலினி என்ற மங்கை, திருவாரூரில் தோன்றிய சிறப்பை இப்பாடல் கூறுகிறது!

கமலினியார் திருக்கயிலாய மலையில் இறைவிக்கே அணுக்கத் தொண்டு புரியும் பெருமை பெற்றவர். அவர் இம்மாநிலத்தில் பிறந்த நிகழ்ச்சியை அவதரித்ததாகக் கூறும் சிறப்பை உற்று நோக்க வேண்டும். இறைவனைத் தவிர வேறெவரையும் தமக்குப் பதியாகக் கருதாத உயர்குலமாகிய ”பதியிலார் ‘’ குலத்தில் அவர் தோன்றினார்!

அப்பதியிலார்குலம் என்பது சிவனடியார்களின் வேண்டுகோளால் , பெருந்தவத்தால் கிட்டுவதாகும். இதனை

“உன்னைப் பிரானாகப் பெற்றஉன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே யெம் கணவ ராவார் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்“
…………………………………………………………………………….
“எம் கொங்கை நின்அன்பர் அல்லார்தோள் சேரற்க
எம்கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க“

என வரும் திருவெம்பாவைத் திருவாசகங்களிற் காண்க.
அவர்கள் குலத்தை உருத்திர கணிகையர் குலம் என்பர்.அக்குலத்தவர் அரன் சார்பும், அடியார் சார்பும் உடையவர்கள் ஆதலால் அவர்கள் உயர்ந்த மணிகளுக்கு இணையானவர்! அக்குலத்தார் செய்த நீண்ட தவத்தால் கமலினியார் பிறந்தார். அவருக்கு சாதகர்மம் நாமகரணம் என்ற சாதகம், பெயர் ஆகியன சூட்டும் சடங்குகளை முறையாகச் செய்தார்கள். ஆதலால் கமலினியாருக்குப் பரவையார் என்ற திருப்பெயரைச் சூட்டினர். ‘’முருக வாங்கி கடைய முன் நிற்கும் ‘’ என்ற திருமுறை வாசகத்தின்படி, அவர் பிறந்த நிகழ்வை,

‘’கதிர்மணி பிறந்ததென்ன உருத்திர கணிகை மாராம்
பதியிலார் குலத்தில் தோன்றி ‘’

என்று சேக்கிழார் பாடுகிறார். உருத்திர கணிகையர் மரபு வேறு, சேரிப்பரத்தையர் மரபு வேறு! இவர்கள் செய்த திருக்கோயிற் பணிகளைப் பின்னாளில் பரத்தையர் கைக்கொண்டனர் என்பது வரலாறு. இதன் விரிவை , காமிகாகமம், ஆசாரிய லட்சணப்படலத்தின் சுலோகங்களில் காணலாம்.

இச்சை ஞானம் கிரியை என்ற சிவசத்திகள் மூவரின் நூபுரச் சத்தத்திலிருந்து முறையே உருத்திரகணிகை, உருத்திரகன்னிகை, உருத்திரதாசி என்ற மூவகையார் உண்டானார்கள் என்று காமிகாகமம் பேசும். இவர்களது இலக்கணங்களையும் ஒழுக்கங்களையும், இவர்கள் ஆலயங்களில் முறையே செய்யவேண்டிய திருப்பணிகளையும், ஆங்கு விரிவாய்க் காணலாம். உருத்திரகணிகை, மகாமண்டபம் முதல் கருப்பாவரணப்பிராகாரம் வரை திருவலகு திருமெழுக்கு இட்டுப் பஞ்சசூர்ணங்களினால் அலங்கரித்துச், சுத்தமாயிருந்து, பூசை நேரங்களில் தீபங்களை ஏந்தியும், கானம் செய்தும், நிர்த்தனம் செய்தும், உபசரிக்கத்தக்கவள். சுத்தம், மிசிரம், கேவலம் என்ற மூவகை நிர்த்தனங்களிலே சுத்தநிர்த்தனமே உருத்திரகணிகைக்கு விதிக்கப்பெற்றது. ஆசாரியனால் பொட்டு அணியப் பெற்று அவனை நாயகனாகக்கொள்வதும் இவளுக்கு உரியதாம். இன்னும் இவ்வாறே தூர்க்கை இலக்குமி சரச்சுவதி என்ற இவர்களுடைய பாதச் சிலம்பொலியினின்றும் முறையே இராசகணிகை, கிராமகன்னிகை, தாசி என்பவர்கள் உண்டானார்கள் எனவும் இவர்கள் இலக்கணம், கடமை, வாழ்க்கைத் திறம், மரபுவளர்ச்சி முதலியவை இன்ன எனவும் ஆங்கே விரிவாய்க் கூறப்பெற்றுள்ளன.

இவைபற்றிப் பற்பலவாறு ஆராய்ச்சிகள் எழுந்து பெருமயக்கிற் கிடந்தந்தன. இவ்விருசாராரையு மின்றிப் பெண்கள் தம்மை இறைவன் பணிக்கே ஒப்புவித்துத்துறவுபூண்டுஒழுகியவர்களுமுண்டு. அன்னார் எக்குலத்தாராயினும் ஆகலாம். அவர் மேற்கூறிய இருமரபினருடன் மயங்கியறிதற்பாலரல்லர். முதலிற் பெண்டிர் துறவிகளாயிருந்து, பின்னர் மரபு வளர்ச்சிக்குரிய உருத்திரகணிகையராகி ,அதன்பின் அவர்களே நாளடைவில் பரத்தையர் குலத்தவராயினர் என்று கூறுவாருமுண்டு. இவையெல்லாம் ஒரு கருத்தை வைத்துக் கொண்டு அதற்கேற்பச் செய்திகளைப் பொருத்தி முடிபு செய்யும் தவறான ஆராய்ச்சிமுறையாம். பரத்தையர் சேரியும், பரத்தையிற் பிரிவும் தொல்காப்பியம் முதலிய மிக்க பழந்தமிழ் நூல்களிற் பல்லாயிர ஆண்டுகளின் முன்னரே பேசப்பெற்றன.

“ஏமப்பேரூர்ச் சேரியுஞ் சுரத்துந்,
தாமேசெல்லுந் தாயரு முளரே“,
“பரத்தையி னகற்சியிற் பரிந்தோட் குறுகி,
யிரத்தலுந் தெளித்தலு மெனவிரு வகையோ,
டுரைத்திற நாட்டங் கிழவோன் மேன“

என்பன முதலிய தொல்காப்பிய அகத்திணையியற் சூத்திரங்களையும், அவற்றின்கீழ் ஆசிரியர் நச்சினார்க்கினியர் உரையையுங் காண்க. இவற்றிற் கிலக்கியங்களாகிய திருச்சிற்றம்பலக் கோவையார் முதலியவற்றிற் காணும் பரத்தையிற்பிரிவு முதலிய துறைகளையுங் காண்க.

‘உண்மை இவ்வாறாகவும், பண்டைநாளில் இவர்களுக்கு மரபு வளர்ச்சி கிடையாது என்றும், உலக வாழ்விற்குத் தகுதியற்ற பெண்கள் இறைவனையே பதியாகக் கொண்டொழுகினர் என்றும், பின் மற்றும் சிலர் அவர்களோடு கலத்தலாகி உலக இன்பம் துய்த்துக்கொண்டு இறைபணி செய்ய எண்ணினர் என்றும், பின்னாளிற் கோயிற்றலைவர்களின் அடக்குமுறையால் கொடுமைக்கு ஆளாகி நாளடைவில் வேசையராயினர் என்றும் இவ்வாறு எழுந்த ஆராய்ச்சிகள் உண்மை நிலைக்கு மாறானவை என்று காணலாம்.
இப்பெருமை மிக்க குலத்தில் தோன்றிய பரவையார் உருத்திர கணிகையர் ஆதலால், உருத்திரனுக்கு உரிய திருவாதிரை நன்னாளில் ,சாதம் எழுதுதல், திருப்பெயர் சூட்டுதல் ஆகியவற்றை மேன்மை மிக்க சான்றோர் இயற்றினர். இதனைச் சேக்கிழார்

‘’விதியுளி விளக்கத்தாலே மேதகு சான்றோர் ஆன்ற
மதியணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி.
,
என்று பாடியுள்ளார். இனி முழுப்பாடலையும் பயில்வோம் .

கதிர்மணி பிறந்த தென்ன உருத்திர கணிகை மாராம்
பதியிலார் குலத்துள் தோன்றி, பரவையார் என்னும் நாமம்
விதியுளி விளக்கத் தாலே மேதகு சான்றோர் ஆன்ற
மதியணி புனிதன் நன்னாள் மங்கல அணியால் சாற்றி ‘

இப்பாட்டில் மதியணி புனிதன் நன்னாள் என்று சிவபெருமானுக்கு உரிய நன்னாளாகிய திருவாதிரை நாளைக் குறித்துள்ளார்.

“மன்னிய நாண்மீன் மதிகனலி என்றிவற்றை
முன்னம் படைத்த முதல்வனைப்-பின்னரும்
ஆதிரையான் ஆதிரையான் என்றென் றயருமால்
ஊர்திரைநீர் வேலி உலகு !’’

என்று இதனை முத்தொள்ளாயிரப் பாடல் கூறுகிறது. சிவபெருமானுக்குத் தோற்றமும் மறைவும் இல்லை. அவரே நாளையும், நட்சத்திரத்தையும் நிலவையும் கதிரவனையும் படைத்தவர்! ஆதலால் சிவபெருமானைத் திருவாதிரை நாளில் தோன்றியவர் என்று ஏதோ ஒருகாரணம் கருதி உலகியல் வழக்கில் உரைப்பர். சிவபிரான் நிலவைச் சடையில் சூடிக்கொண்ட நாள் திருவாதிரை நாளாகஇருக்கலாம்! இதனையே பரவை நாச்சியார் தோன்றிய நாளாகக் கருதியது அவர்தம் காலத்தை வென்ற சிறப்பைக் குறிக்கிறது!!

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க