-மீனாட்சி பாலகணேஷ்

குழவி மருங்கினும் கிழவதாகும்- 10.2
(ஊசற்பருவம்) 

    

‘ஊசல்’ என்பது தொண்ணூற்றாறு வகைப் பிரபந்தங்களுள் ஒன்றான ஒரு சிற்றிலக்கியமாக விளங்குவது. எடுத்துக்காட்டுகளாக, பிள்ளைப்பெருமாள் ஐயங்கார் பாடிவைத்துள்ள சீரங்க நாயகர் ஊசலையும், அன்னாரின் பெயரரான கோனேரியப்பன் ஐயங்கார் பாடியுள்ள சீரங்க நாயகியார் ஊசலையும் காணலாம். பாடல்கள் ஆசிரிய விருத்தம் அல்லது கலித்தாழிசையால் அமைந்து ‘ஆடிரூசல்’, ‘ஆடாமோ ஊசல்’, ‘ஆடுக ஊசல்’ என ஒன்றால் முடிவுறும்.

இறைவனை அல்லது இறைவியை அலங்கரித்த ஊசலில் அமர்த்தி, ஆட்டி, பாடித் துதிப்பது நமது ஊசலாடும் உலக வாழ்க்கையிலிருந்து விடுபடவே எனும் கருத்திலமைந்த அழகான பாடல்களை இவ்விலக்கியங்களில் காணலாம்.

‘உலகமெனும் பந்தலில் பாசம் என்பதே விட்டத்தைத் தாங்கும் நான்கு கால்களாகவும், அறிவே ஊசற் சங்கிலியை மாட்டுவதற்கான உத்தரமாகவும், இந்திரியங்களே சங்கிலிகளாகவும், எடுத்தபிறவி ஊசற்பலகை ஆகவும், இருவினைகளே ஊசலை ஆட்டுபவராகவும், நரகம், சுவர்க்கம், பூமி ஆகிய இடங்களில் இறங்கி, ஏறி, நிலைபெறுதல் எனச்செய்து தடுமாறி அலைந்து துன்பம் அனுபவிக்கும் இவ்வாழ்வெனும் ஊசலாட்டம் நீங்கும்படி தொண்டர்களுக்கு, அவர்கள் உய்யுமாறு அழகிய மணவாளதாசரும் அவர் பெயரரான கோனேரியப்பன் ஐயங்காரும் சேர்ந்து இந்த திருவரங்கத்து ஊசல் எனும் பிரபந்தத்தினைத் தொகுத்திட்டார்கள்,’ என ஒரு தனியன் உரைக்கின்றது.

அண்டப் பந்தரில் பற்றுக் கால்களாக
அறிவு விட்டம் கரணம் சங்கிலிகளாகக்
கொண்ட பிறப்பே பலகை வினையசைப்போர்
……………………………………..
தொண்டர்க்கா மணவாளர் பேரர்கூடித்
தொகுத்திட்டார் திருவரங்கத்து ஊசலானே 1.

திருவரங்கத்து நாயகியார் ஊசலில் இருந்து ஒரு இனிய பாடல், தாயாரின் திருக்கோலம் கண்ட திருவரங்க மணவாளரின் நிலைமையை உரைக்கின்றது.

‘கருமுகில் வண்ணனான திருவரங்க மணவாளனுக்கு, கண்கள் களிக்குமாறும், அறிவு சோர்ந்து போகவும், புன்னகை விரியவும், புயங்கள் பூரிக்கவும், முகம் மலர்ந்து காதலினால் உடல் குழைந்து மோகம் மிகவும், சீரங்க நாயகியே, நீ ஊசலாடுக!’ எனப்பாடல் அமைந்துள்ளது நயக்கத்தக்கதாம்.

காரனைய திருவரங்க மணவாளர்க்குக்
கண்களிப்ப மனமுருக அறிவுசோர
மூரலெழப்புள கமுறப்புயம் பூரிப்ப
முகமலர மெய்குழைய மோகமேற
……………………………………………..
சீரங்கநாயகி யாராடி ரூசல் 2.

மேலும் ஊசலாடும்போது என்னவெல்லாம் அணிகள் அசைந்தாடினவென்றும், குடக்கூத்தாடி, கோளராவின் படத்தின்மீதாடி விளையாடும் அப்பரமனைப் பற்றியும், அவனாட்டத்தைப் பற்றியும் அழகுறச் சித்தரிக்கும் பாடல்களும் இதன்கண் உள.

இத்தகைய சுவையும் இனிமையும் இணைந்தவொரு சிற்றிலக்கியம் பிள்ளைத்தமிழ் எனும் சிற்றிலக்கியத்தின் ஒரு பகுதியாகவும் அமைந்துள்ளது அருமையானவொரு செய்தியாகும். தாலாட்டு, அம்மானை ஆகிய பிரபந்த வகைகளும் பிள்ளைத்தமிழின் ஒரு பருவமாக அமைந்துள்ளமை பற்றி அவ்வப் பிள்ளைப்பருவம் பற்றிய செய்திகளில் கண்டோம்.

ஆக, ஊசலாடுவதென்பது, மகளிரின் பொழுதுபோக்காகவும், வளரும் பெண்மக்களின் விளையாட்டாகவும், இறைவன் இறைவியரைப் போற்றுமொரு வழிபாட்டுக் கூறாகவும் அமைந்து தமிழ்மக்களின் வாழ்வில் இன்றியமையாததொரு இடத்தினைப் பெற்றுள்ளதனை இதன்மூலம் அறியலாம். 

பிள்ளைத்தமிழ் பாடல்கள் தெரிவிக்கும் செய்திகளைக் காண்போம்.

ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்று உலகதிலுள்ள பலவிதமான மக்களும் வாழுமாறு வடிவம்மையைப் பொன்னூசலாட வேண்டுவது மிகுந்த பொருட்சுவையுடனும் உட்பொதிந்த கருத்துக்களுடனும் விளங்குகின்றது. 

‘சொற்களால் கூறப்படும் அறநெறிகள் நிலைத்து வாழவும், அந்தணர்கள் தமது ஆறு தொழில்களை (ஓதல், ஓடுவித்தல், வேட்டல், வேட்பித்தல், ஈதல், ஏற்றல் ஆகியன) வழுவாமல் செய்யுமாறும், தோல்வியடையாத தொண்டர்களும் வணிகர்களும் வாழுமாறும், உழவர்கள் தமது தொழிலை நன்குசெய்து வாழவும், 

‘ஏனைய பற்பல குலத்தோரும் வாழ, அறுசமயங்கள் செழித்தோங்க,  மற்ற சமயத்தோர்களும் பக்தி மார்க்கத்தே பதிந்து இனிது வாழவும், 

‘உன்னைப்பற்றிய உயர்ந்த எண்ணங்களில் நில்லாது மாறுபடும் அறிவிலிகள் கூட்டமும், கணங்களும் பகைமையும் பொறாமையும் நீங்கி ஒருவரோடொருவர் அன்புகொண்டு வாழவும் (பல மாறுபட்ட மதக்கருத்துக்களை உடைய மக்கள், தமக்குள் சச்சரவின்றி வாழ அன்னையை வேண்டுகிறார் புலவனார்), உனது திருவிழா நாட்களில் பணிவிடைகள் பொலிவாக என்றும் (வாழ) நடக்குமாறும், 

‘வடிவுடையம்மையே, பூலோக கயிலாயநாதரான சிவபெருமானுடன் ஒன்றாகக் கலந்த பெண்மணியே, பொன்னூசலாடியருளுக!’

சொற்பயிலு மறநெறிகள் வாழவந் தணராறு
தொழிலினொடு வாழவெற்றித்
தோலாத வரையர்வணி கர்கள்வாழ வுழவுமிகு
சூத்திரர்கள் வாழவேனை
………………………………………….
காதலொடு வாழநின் றிருவிழாப் பணிவிடை
கவின்கொண்டு நாளும் வாழ..
………………………பூலோக கயிலாயர் பாலேக
மானபெண் பொன்னூச லாடியருளே3.

அம்மையின் ஊசலாடலில் அனைத்துலகின் வாழ்வும் இனிதாக அசைந்தாடுகின்றது எனும் அரிய கற்பனை இது!

அளகாபுரி உமையாம்பிகை பிள்ளைத்தமிழ்ப் பாடலொன்று, இன்னொருவிதமான கற்பனையை விரிக்கின்றது. பிறப்பு, இறப்பு எனும் ஊசலில் ஆடியாடி அலைவுற்று, நடுக்கமுற்றுத் தவிக்கும் மானிடர் அந்த நடுக்கம் தவிர்த்து களித்து ஆடித்திளைக்கும்படி உனது கடைக்கணில் பிறக்கும் அருள்வெள்ளப்பெருக்கெனும் அலைகளில் உணவு வகைகளைக் குறையாது அளிக்கும் உமையாம்பிகையே, அரமாதர் வரிசையாக நின்று கரங்களில் வளையொலிக்கக் கவரிவீசவும், தேன்கொண்ட மலர்களால் நாத்தழும்பேற நின்று வாழ்த்தவும், நீ பொன்னூசலாடியருளுக,’ என வேண்டிடும் பாடல்.

…………….செந்நாத்தழும்ப வாழ்த்திச்
சிந்திக்கு மன்பர்கள் பிறப்பிறப்பெனு மூசல்
சேர்ந்தாடி யலைவுற்றதா
லானகம்பந் தவிர்ந்த் தாடித் திளைக்க….
……………………………..
போனகங்குறையா தளிக்குமளகைச் செல்வி
பொன்னூசலாடி யருளே 4.

அளகை என்பது அளகாபுரி ஆகிய தஞ்சாவூர் ஆகும். தஞ்சை நெல்வளம் கொழிக்கும் பூமியாதலின் ‘போனகம் குறையாது அளிக்கும் அளகைச்செல்வி’ என அன்னை போற்றப்படுகிறாள்.

திருவருணை உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்ப் பாடலில் வேறொரு நயமான கருத்தினைக் காணலாம். அம்மையப்பனின் மாதொருகூறாய வடிவினைப் போற்றுகிறார் புலவர். ஊசலில் ஆடுகின்ற அன்னையின் தோற்றம், குளிர்ந்த இளம்பிறையினைச் சூடி, மும்மலத்தை அழிக்கும் சூலத்தைக் கையிலேந்தி, படங்கொண்ட நச்சரவம் பூண்டு, செல்வங்களனைத்தையும் தரும் திருநீறு அணிந்து, பண்களால் இசைக்கப்பெறும் பழம்பாடல்கள் எனப்படும் வேதங்கள் புகழ்கின்ற கழலணிந்த திருவடிகள், சிவந்த பவளமேனி,  ஆகியவற்றை ஒருபுறம் கொண்டு சிவபெருமானுடைய வடிவிலும், மலர்களணிந்த நறுங்குழல், உற்பலம் எனப்படும் நீலோற்பலமலரை ஏந்திய கை, செம்பொன்னாலான அணிகலன்கள், மணங்கமழும் சாந்து, இனிய ஒலியெழுப்பும் காற்சிலம்பு, பச்சைவண்ணத் திருமேனி ஆகியவை மற்றொருபுறம் என (அம்மையை அர்த்தநாரீசுவர வடிவாகக் கண்டு) அடியார்கள் தொழுதிடும்வண்ணம் அரன் எனப்படும் சிவபிரானிடத்தே தெய்வத்தன்மை வாய்ந்து மலர்ந்து கொடிபோன்று விளங்கும் அன்னையே! உனது இத்தகைய வடிவம் எத்துணை அருமையான காட்சி தாயே!  நீ பொன்னூசலாடுக!’ என வேண்டுகிறார்.

‘தண்ணிய விளம்பிறை யணிந்தசடை யொருபுறந்
தகுமலர்க் குழலொருபுறஞ்
சாற்றறிய மும்மலந் தெறுசூல மொருபுறஞ்
சந்தவுற் பலமொருபுறம்
……………………………………………………..
பவளமொருபுறம் பச்சைநிற மொருபுறம்
பார்த்தன்பர் தொழ5……..,’ என்பன பாடல் வரிகள். 

அம்மையையும் அத்தனையும் ஒன்றாகக் கண்டு புலவர்கள் மகிழ்ந்தனரெனில், சிவபிரானை மட்டும் வழுத்திப் பிள்ளைத்தமிழ் பாடவியலாத குறையை (பிறப்பிலிப் பெருமானான சிவபிரான்மீது பிள்ளைத்தமிழ் பாடப்படாதென்பது இலக்கண மரபு) அவனுடைய பல செயல்களையும் அன்னைமீதேற்றிக் கூறியோ, அல்லது அவனுடைய நடனத்தை விவரித்து அதற்கொப்பக் குழந்தையான அம்மையோ முருகனோ சப்பாணி கொட்டுவதனையும் பல பிள்ளைத்தமிழ் நூல்கள் சித்தரிக்கின்றன.

கடையம் கலியாணியம்மை பிள்ளைத்தமிழில் இத்தகையதொரு நயத்தைக் காணலாம். 

கரிய மிடற்றில் ஆலகால விடம் துளும்புமாறும், திரிசூலமும் கபாலமும் கரத்தில் அசையவும், கழுத்தில் கிடக்கும் பாம்பானது ஆட்டத்தின் வேகத்தில் நெட்டுயிர்க்குமாறும், சடையில் தங்கியுள்ள கங்கைநதியானது பொங்கிவழிந்திடவும், காலில் சிறிய கிண்கிணிக் கல் எனக்கிடக்கும் அருமறை வேதங்கள் ஒலியெழுப்பவும், பிரபஞ்சத்துள்ள அத்துணை கடவுளர்களும் முடிவுற்றாலும் தான் மட்டும் ஒரு முடிவே இல்லாது ஆனந்த நடமிடுபவன் சிவபிரான். அவனுடைய சிலம்பணிந்த  தாமரைத் திருவடிகளில் அடியார்கள் பணிந்துதொழ, அவர்களுக்கருளும் அச்சிவபிரான் மணமாலை சூட்டும் கற்பகமே! பூங்காமவல்லியே! கல்யாணசுந்தரவல்லியே! பொன்னூசலாடியருளுக!’ எனும் பாடல் சிவபிரானின் நடனத் தோற்றத்தை நயம்பட எடுத்துரைக்கின்றதனைக் காணலாம்.

‘கருமிடற்று ஆலந் துளும்பதிரி சூலம்
கபாலம் கரத்தில் அசைய
காகோதரபட்ட நெட்டுயிர்ப்பச் சடைக்
கங்கைநதி பொங்கிவழிய
………………………………………………
அளவற்ற கடவுளர் தம்முடிவினும் ஓர்முடிவின்றி
ஆனந்த நடம் இயற்றும்6..’ என்பன பாடல் வரிகள்.

குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்ப்பாடலொன்று உமையன்னையை மக்களின் இருவினைகளைக் களைந்து இன்பமளிப்பவளாக விளக்குகிறது:

‘சுத்தம் அசுத்தம் எனப்படும் இரு கொடிய மாயைகளைத் தூண்களாகக்கொண்டு, இருள்போன்ற ஆணவ அகந்தையை விட்டமென அமைத்திட்டு, நாம் செய்த கருமங்களே ஊசற்பலகையைத் தாங்கும் வடங்களாகவும், மாயையே அப்பலகையாகவும், வான்வெளியே ஊசலாடும் இடமாகவும் கொண்டு ஆருயிர்களை பிறப்பு, இறப்பு, நோய் என்னும் மணிகள் இழைத்த அவ்வூசலில் வைத்தாட்டி, தலைவாயிலில் முடங்கிக் கிடக்காது எடுத்து, அணைத்து, பேரறிவினை அளித்து, பின் பரமுத்தியளித்து, ஆனந்தமெனும் அமிழ்தத்தினை அருந்துவித்து உண்மையான தாய்போன்று வளர்க்கும் அன்னைநீ பொன்னூசலாடுக!’ என வேண்டுவதாக அமைந்த பாடலிதுவே.

சுத்தமு மசுத்தமு மெனப்படுங் கொடுமாயை
தூணாக விருளாணவந்
தொடுத்தநெடு விட்டமாக் கருமப் பெரும்பகுதி
தூக்கிய வடங்களாக
………………………………………….
…………………….பரமுத்தி வீடுய்த்து
மூவாத வானந்தமாம்
புத்தமிழ் தருத்திமெய்த் தாயாய் வளர்ப்பவள்
பொன்னூச லாடியருளே 7…..

சைவசமயக் கருத்துக்கள், தத்துவ, வேதாந்த விளக்கங்கள் அனைத்தும் இப்பாடல்களில் இழைந்தோடுவதனைக் காண்கிறோம். 

பிள்ளைத்தமிழ் நூல்கள் விவரிக்கும் பருவங்கள் பத்துப்பத்துப் பாடல்களாக அமைக்கப்படுகின்றன. இவை ஒரு அருமையான இலக்கிய அமைப்பின் பாற்பட்டவையாகும். எடுத்துக்காட்டாக ஊசற்பருவத்தினையே எடுத்துக் கொண்டால், இரண்டு அல்லது மூன்று பாடல்கள் ஊசலின் அமைப்பு, அழகு பற்றியும், அதிலமர்ந்து ஆடும் அன்னையின் சிறப்பு, வடிவு பற்றியும் இருக்கும். அடுத்த சில பாடல்கள் அம்மையின் செயல்கள் பற்றிய தொன்மங்களைக் கூறி மகிழும். பின்வரும் மூன்று முதல் நான்கு பாடல்கள் சந்தநயம் பொருந்தி இருக்கும்; அல்லது குழந்தையாக உருவகிக்கப்படும் அன்னையின் தெய்வத்தன்மையை, அவளுடைய காக்கும் திறத்தை, அருளும் தகைமையை அழகுற விவரிக்கும். அவளைப் போற்றி மகிழும்.

இவை பேரழகு வாய்ந்து கருத்தைக் கவரும் இலக்கியச்சித்திரம் என ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்! இதுபோன்ற பாடல்களை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் பரவலாகக் கண்டு இரசிக்கலாம். குமரகுருபரரின் கவிதைப் புலமையைக் கண்டு மகிழலாம்.

பல பிள்ளைத்தமிழ் நூல்கள்; பல அழகிய பாடல்கள்; பல நயங்கள்; இன்னும் ஒன்றினைக் கண்டுபின் இக்கட்டுரையை நிறைவு செய்யலாம்.

சீர்காழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழின் ஊசற்பருவத்து ஈற்றயல் பாடலில் புலவர் அன்னையின் அனைத்து அடியார்களையும் போற்றி அமைத்துள்ள பாடல் மிகுந்த நயமும் சுவையும் வாய்ந்ததாகும்.

‘கரிய இருள் படர்ந்தது எம் பிறவி; அது பிறவிக் கடலைக் கடந்து கரையேற யான் இறுகப் பிடித்த புணை உன் திருவடிகள்; இனிய ஒலியெழுப்பும் கிண்கிணி, சிலம்பு ஆகியவற்றை அணிந்துள்ள அத்திருவடிகளைப் போற்றி, சம்பந்த மாமுனிவன், நீர் நிறைந்த  அலைகடலில் கல்லையே தோணியாகக் கொண்ட நாவுக்கரசர், திருநாவலூரன் ஆகிய சுந்தரர், ஐயன்மீது கொண்ட அன்பினால் இன்பம் எய்திய மாணிக்கவாசகர் முதலாக அருள்மொழி கூறிய பல அறிஞர்கள் ஆகியோர் உரைத்த செம்மைவாய்ந்த தமிழ் மறைகள், ராகமிட்டுப் பாடப்படும் சிவபத்தர்களின் இசை, தெய்வமறை எனப்படும் லலிதா ஆயிரநாமம், அரியாகிய சிம்மத்தின்மீது ஏறிப் பகைவர்களை அழித்த தேவியின் வரலாறான தேவி மாகாத்மியம் முதலானவையும், ‘பொம்பொம்’ என முழங்கும் மங்கலச் சங்கின் ஒலி எங்கும் முழங்கிடவும் நீ பொன்னூசல் ஆடுக!’ என அன்னையை வேண்டுவதாக அமைந்து அன்னையின் அடியார்களைப் போற்றிம்வண்ணம் அமைந்துள்ளது.

எம்பம் பிருட்பிறவி யலையாழி யேறயான்
இறுகப் பிடித்த புணையாம்
இன்குரற் கிண்கிணி சிலம்பலம் பும்பதத்
திணையில் சம்பந்த முனிவன்
…………………………………………………
செம்பம்பு தென்றமிழ்த் திருமுறைகள் பண்ணோடு
சிவபத்த ரோது மிசையும்
தெய்வமறை லலிதையா ய்ரநாமம் அரியேறு
தேவிமான் மியமுதலவும்
………………………………………………….
பூம்புகலி யோம்பிவளர் திருநிலைச்செல்வியே
பொன்னூச லாடியருளே 9!

இது போன்ற இன்னும் பல நயமான பாடல்களைப் பல பிள்ளைத்தமிழ் நூல்களில் காணலாம். படித்தும் மகிழலாம்.

******************

பார்வை நூல்கள்:

  1. திருவரங்கத்து ஊசல்- அழகிய மணவாளதாசர். 
  2. திருவரங்கத்து நாயகியார் ஊசல்- கோனேரியப்பன் ஐயங்கார்.
  3. ஆதிபுரி வடிவுடையம்மை பிள்ளைத்தமிழ்- வித்துவான் கனகசபைத் தம்பிரான்.
  4. அளகாபுரி உமையாம்பிகை பிள்ளைத்தமிழ்- சி. தியாகராச செட்டியார்
  5. உண்ணாமுலையம்மை பிள்ளைத்தமிழ்- சோணாசல பாரதியார்.
  6. கடையம் கலியாணியம்மை பிள்ளைத்தமிழ்- அழகிய திருச்சிற்றம்பல தேசிகர்.
  7. குளத்தூர் அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ்- சிவஞான சுவாமிகள்
  8. சீகாழி திருநிலைநாயகி பிள்ளைத்தமிழ்- கு. நடேச கவுண்டர்.

_

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.