எத்தனை, எத்தனை எதிர்பார்ப்புகள்!
நிர்மலா ராகவன்
நலம் நலமறிய ஆவல் (166)
எத்தனை, எத்தனை எதிர்பார்ப்புகள்!
“பரீட்சையில் நான் எதிர்பார்த்த கேள்விகள் எதுவும் வரவில்லை!”
பெண் பார்த்துவிட்டுப் போனவர்: “உங்கள் பெண் நான் எதிர்பார்த்த அளவுக்கு அழகாயில்லை. ஸாரி!”
“எனக்கு ஒரு மனைவி வந்தால், என் எல்லாத் தேவைகளையும் கவனித்துக்கொள்வாள் என்று நினைத்திருந்தேன்!”
மேற்கண்ட மாணவன், இளைஞன், கணவர் எல்லாருக்கும் ஏன் இப்படியொரு ஏமாற்றம்?
அவர்கள் எதிர்பார்த்ததுபோல் எதுவும் அமையவில்லையாம்.
பிறரிடம் நாம் எதிர்பார்ப்பது அனேகமாக ஏமாற்றத்தில்தான் கொண்டுவிடும்.
காதலரோ, காதலியோ தன்னைப்பற்றியே நினைத்து உருகவேண்டும், அடிக்கடி `ஐ லவ் யு’ சொல்லவேண்டும், பரிசுப்பொருட்களால் தன்னைத் திணற அடிக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்புகள் பூசல்களைத்தான் விளைவிக்கின்றன. ஒருவருக்கு ஏமாற்றம், இன்னொருவருக்கு எரிச்சல். உறவுகளில் விரிசல் ஏற்பட இது போதுமே!
புதுமணத் தம்பதிகளின் பிரச்னை
கதை
பெற்றோருக்கு ஒத்துப்போகாததால், இந்திரனுடைய வீட்டில் எப்போதும் மௌனம்தான் என்ற நிலை.
தன் மணவாழ்க்கையும் அப்படி ஆகிவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தான். உடன் படித்த பத்மினியின் கலகலப்பும் சிரிப்பும் அவன் இதுவரை அனுபவிக்காதது. சாதுவாக இருந்தவன், பிடிவாதமாக பத்மினியை மணந்தான்.
`தான் இவனுக்கு எவ்வளவு தேவைப்பட்டால் இப்படிப் பெற்றோரையே எதிர்க்கத் துணிவான்!’ என்றெண்ணினாள் பத்மினி. அவள் கை உயர்ந்தது. பல பேர் முன்னிலையில் அவனை அவமானப்படுத்த ஆரம்பித்தாள்.
பத்மினி எதிர்பார்த்தபடி, இந்திரனை மணந்ததால் அவளுடைய செல்வ நிலை உயர்ந்தது. பெரிய வீடு, அவளுடைய சொந்த உபயோகத்திற்கென கார் எல்லாவற்றையும் கொடுத்திருந்த இந்திரன், அவளது ஏச்சுப்பேச்சை சகிக்கமுடியாது, வீட்டில் நேரத்தைக் கழிப்பதையே குறைத்துக்கொண்டான்.
பிறரால் நமக்கு மகிழ்ச்சி கிட்டும் என்ற எதிர்பார்ப்பு ஏமாற்றத்தில்தான் கொண்டுவிடும்.
பிறர் மெச்ச எல்லாம் இருந்தாலும், `கணவன் தன்னை நாடவில்லையே!’ என்று எப்போதும் தனிமையில் நொந்த பத்மினிக்கு வெறுமைதான் ஏற்பட்டது. அவளுடைய பழைய கலகலப்பு மறைந்துபோய், பேசுவதையே குறைத்துக்கொண்டாள். நாளடைவில், மன இறுக்கம் உண்டாயிற்று.
`உனக்கு என்ன ஆயிற்று?’ என்று யாராவது கரிசனத்துடன் கேட்டால், அவளால் அழத்தான் முடிந்தது.
முன்பு படித்த துணுக்கு நினைவில் எழுகிறது.
“என் இல்லற வாழ்க்கை சகிக்கவில்லை”.
“அடடா! உன் காதலி என்ன ஆனாள்?”
“அதை ஏன் கேட்கிறாய்! அவள்தான் இப்போது என் மனைவி!”
இந்திரன்-பத்மினி இருவருடையேயும் இருந்த உறவும் இப்படித்தான் பலவீனமாகப் போயிற்று. காதல் போன இடம் தெரியவில்லை.
மனைவியைப்பற்றிய எதிர்பார்ப்பு
`உங்கள் வருங்கால மனைவி எப்படி இருக்கவேண்டும்? என்று சிலரைக் கேட்டபோது, ஒருவர் மட்டும், “எனக்கு எந்த எதிர்பார்ப்பும் இருக்கவில்லை,” என்றார். எப்படியும், அம்மா காட்டுகிற பெண்தான் தனக்கு மனைவியாக அமைவாள் என்ற விட்டேற்றியான போக்கு அவரிடம் காணப்பட்டது. தாய் சொல்லைத் தட்டி அறியாத மகன்!
ஒரு சிலர், `நான் மணக்கப்போகிறவள் என்னைவிட அதிகம் படித்தவளாக இருக்கவேண்டும். அவளால் என் நிலை உயரவேண்டும்!’ என்று யோசித்து, அதன்படி நடப்பார்கள்.
அவளுடைய எதிர்பார்ப்போ வேறுமாதிரியாக இருக்கும்.
கதை
சதீஷ் ஆசைப்பட்டபடியே அவனைவிடப் பெரிய படிப்புப் படித்த லோசனி அவனுக்கு மனைவியாக வாய்த்தாள். சில மாதங்கள் உத்தியோகத்திற்குப் போனதும், கருவுற்றதில் ஆரோக்கியக்குறைவு ஏற்பட்டது. வேலையை விட்டாள். அடுத்தடுத்து இரண்டு குழந்தைகள்.
“இப்போதாவது வேலைக்குப் போயேன்!” என்ற கணவன் கெஞ்ச, “குழந்தைகளை நானே பார்த்துக்கொண்டால்தான் புத்திசாலிகளாக வளர்வார்கள்,” என்று மறுத்துவிட்டாள். அவன் கெஞ்சி, கொஞ்சி, மிரட்டிப்பார்த்தும் அவள் அசைந்து கொடுக்கவில்லை.
“உன் மனைவி உண்மையாகவே படித்தவள்தானா?” என்று சில நண்பர்கள் தூபம் போட, அவன் ஆத்திரம் அதிகரித்தது.
கூடுதல் வருமானம் கிடைக்கும் என்று நம்பி மணந்தவனுக்கு பெரும் ஏமாற்றம். அவனுடைய சம்பளத்தில் இப்போது நான்குபேர்!
சில மாதங்களுக்குப்பின்னர் லோசனி மீண்டும் வேலைக்குப் போனாள். ஆனால், நண்பர்களிடம் படாடோபமாகக் காட்டிக்கொள்ளலாம் என்று நினைத்தவனுக்கு ஏமாற்றம். `என் பணம்,’ என்று அதைச் சேமித்தாள்.
தன் தகுதிக்கு மீறி ஆசைப்பட்டது சதீஷ் செய்த பிழை. தான் அப்படி ஒரு பெண்ணிற்கு ஏற்றவன்தானா என்று முதலில் யோசித்திருக்கவேண்டும்.
எதிர்பார்ப்பே கூடாதா?
நாம் அடைய வேண்டியதில் மட்டும்தான் எதிர்பார்ப்புகள் அவசியம். நமது முயற்சியைக்கொண்டு வெற்றியடைவது நம் கையில்தான் இருக்கிறது.
`என்னால் இதைவிட அதிகமாகச் சாதிக்கமுடியும்!’ என்று உறுதிபூண்டால் போதும். பிறரால்தான் அது முடியும் என்ற எதிர்பார்ப்போ ஏமாற்றத்தில்தான் கொண்டுவிடும்.
இப்படி இருந்தால்…
சிலருக்கு ஏன் எதிலுமே பூரண திருப்தி கிடைப்பதில்லை?
`இப்படி இருந்தால்..!’ என்று எல்லா நிலையிலும் அதிருப்தி அடைகிறவர்கள் இவர்கள்.
வெளியூர்களுக்குப் போகும்போது, `ரயிலில் நேற்றோ, முந்தாநாளோ பண்ணின இட்லியைக் கொடுத்துவிட்டான்! வயிற்றைக் கலக்குகிறது!’ என்று புகார் கூறுபவர் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நாம் விரைவாகப் போகும் வழி இது என்று எண்ணிப்பார்க்கத் தவறிவிடுகிறார்.
பெரிய எதிர்பார்ப்புடன், புதிய ஊரைச் சுற்றிப்பார்க்கலாம் என்று உறவினர்கள் வீட்டுக்குப் போனால், சிலர், `ஏன் வந்தீர்கள்?’ என்பதுபோல் அவர்கள் நடந்துகொள்கிறார்கள். அவர்களுக்கு என்ன அசந்தர்ப்பமோ!
`சுற்றுலா போக மிகச் சிறந்த இடம்!’ என்று யாராவது வந்துகொண்டே இருந்தால், அவர்கள்தாம் என்ன செய்வார்கள், பாவம்!
நாம் பரிசுப்பொருட்கள் வாங்கிப்போனால், அது அன்பால் மட்டுமல்ல. பிரதியுபகாரத்தை எதிர்பார்த்துச் செய்யும் வியாபாரம். ஒரு சிறு குழந்தைக்கு சாக்லேட் கொடுத்து, `முத்தம் கொடு!’ என்று கேட்பதுபோல்தான்.
`இப்படித்தான் நடக்கவேண்டும்!’ என்ற வரையறை வகுத்து, அதன்மூலம் பிறரைக் கட்டுப்படுத்தும் முயற்சி அது.
நாம் எதிர்பார்த்ததுபோல் நடப்பார், நடக்கவேண்டும், என்று நம்பி பிறருக்கு உபகாரம் செய்வது வீண். நம் விருப்பப்படியே எல்லாரும் நடக்க வேண்டுமென்றால் ஆகிற காரியமா!
வெற்றி நிலைக்காது ஏமாற்றம்
ஒரு காரியத்தில் சில முறை வெற்றி கிட்டலாம். ஆனால், அந்த வெற்றி தொடரும் என்று எதிர்பார்க்க முடியுமா?
முன்னணி நடிகர்கள் சில தோல்வியடைந்த படங்களையும் கொடுத்திருக்கிறார்கள்.
போட்டிகளில் சேர்பவர்களுக்கு, Hope for the best. Prepare for the worst என்ற மனப்பான்மை அவசியம்.
போட்டியில் வெற்றி அடைந்தபோது, பிறரை மதிக்காது அலட்டுபவர்கள் தோல்வி கிட்டும்போது துவண்டுவிடுவது அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பால்தான்.
எதிர்பார்க்கலாம், ஆனால் அது நிறைவேறாதபோது தாங்கும் மனப்பான்மையை வளர்த்துக்கொண்டால், ஏமாற்றம் எழாது.
கதை
பாலித்தீவில் உள்ள பலருக்கு ஒரே ஆசை: வாழ்வில் ஒருமுறையாவது டெல்லியும், ரிஷிகேசமும் போய் பார்த்துவிட வேண்டும்.
அப்படிப் போய்வந்த வாயான் (Wayan) என்பவர், “இந்தியா நான் எதிர்பார்த்தபடி இல்லை. ஆனால், மக்கள் தொகை பெருகிவிட்ட நிலையில் அனைவரும் நிதானமாக, அமைதியைக் கைவிடாது நடக்கவேண்டும் என்றால் சாத்தியமா?” என்கிறார்.
நம் எதிர்பார்ப்பு பொய்யாகும்போது, வாயானைப்போல், `ஏன் இப்படி?’ என்று கேட்டுக்கொண்டால் ஆத்திரம் எழாது. தெளிவு பிறக்க, பிறரை அலட்சியமாகக் கருதவும் மாட்டோம்.