குறளின் கதிர்களாய்…(263)
செண்பக ஜெகதீசன்…
மிகச்செய்து தம்மெள்ளு வாரை நகச்செய்து
நட்பினுட் சாப்புல்லற் பாற்று.
-திருக்குறள் -829(கூடா நட்பு)
புதுக் கவிதையில்…
மிகுந்த நட்புபோல்
புறத்தே நடித்து,
அகத்தே
பகைமையுடன் இகழ்வாரிடம்,
நாமும்
புறத்தே அவர் மகிழுமாறு
நட்புக் காட்டி,
அகத்தே
அத்தகு நட்பு
அழியுமாறு செய்திடவேண்டும்…!
குறும்பாவில்…
நட்புபோல் வெளியே நடித்து
அகத்தே பகையுடன் இகழ்வோர் நட்பை
அவர்போல் நடித்தே அழித்திடு…!
மரபுக் கவிதையில்…
புறத்தே மிகுந்த நட்பதுபோல்
பாவனை செய்தே உள்ளமதில்
வெறுப்பு கொண்டே வஞ்சமுடன்
வேறு விதமாய் இகழ்ந்துபேசும்
பொறுப்பே யில்லா மாந்தரிடம்,
போயவர் வழியில் புன்னகைத்தே
அறுத்திட வேண்டும் அவர்நட்பை
அறிந்தது கூடா நட்பெனவே…!
லிமரைக்கூ..
உள்ளத்தில் நிறைந்த பகையில்,
நட்பாய் நடிப்பவர் தொடர்பை அறுத்திடு
நடித்தேயவர் நம்பிடும் வகையில்…!
கிராமிய பாணியில்…
வேண்டாம் வேண்டாம்
நட்பு வேண்டாம்,
நல்லகொணம் இல்லாத
கெட்டவுங்க நட்பு வேண்டாம்..
நண்பன்போல வெளியே நடிச்சி
மனசுல பகயோட பேசுறவன்
நட்பு வேண்டாம்,
அவனப்போல
வெளிய சிரிச்சிப் பேசி
மனசால அழிச்சிடணும்
அவங்கூடவுள்ள நட்ப..
அதால
வேண்டாம் வேண்டாம்
நட்பு வேண்டாம்,
நல்லகொணம் இல்லாத
கெட்டவுங்க நட்பு வேண்டாம்…!