Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • வாழ்ந்து பார்க்கலாமே 46

    மனதோடு மனம்விட்டுப் பேசலாமே !

    உங்களோட கொஞ்சம் பேசலாமா? என்று நான் எனது மனதின் அருகில் சற்றே அமர்ந்தேன்., :”‘தாராளமா. உங்களோடு பேசத்தான் பல நாட்களாகக் காத்துக்கொண்டிருந்தேன். நான் உங்கள் கூடவே இருந்தாலும் நீங்கள் என்னைக் கவனிப்பதில்லை. நீங்கள் அவ்வளவு பிஸி… ” என்று எனது மனம் நக்கலாக என்னைப் பார்த்துச் சிரித்தது. ‘என்ன செய்வது?பார்த்துப் பேச எத்தனை பேர் இருக்கின்றார்கள்.. எல்லோருக்கும் நேரம் கொடுக்கவே முடியவில்லை…”

    “அது சரி.. ஆனால் நான் உங்களோடு இருப்பவனாயிற்றே.. எனக்குக் கூடவா .நேரமில்லை. சரி. வந்த விஷயத்தைச் சொல்லுங்கள்.. ‘ என்று எனது மனம் சொன்னது..

    “எப்படி ஆரம்பிப்பது என்றே தெரியவில்லை..கொஞ்சம் தயக்கமாக உள்ளது…”

    “இதுதான் உங்கள் பிரச்சனையே… எதை எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. யாருக்கு எவ்வளவு நேரம் கொடுப்பது என்று தெரியவில்லை. எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என்று தெரியவில்லை.. எங்கே எப்படி பேசுவது என்று தெரியவில்லை. யாரை நம்புவது எதை நம்புவது என்று தெரியவில்லை.. எடுத்ததை எப்படி முடிப்பது என்று தெரியவில்லை…”

    ‘சார். கொஞ்சம் நிறுத்துங்க.. ஒரேடியாக என்னை மட்டம் தட்டாதீங்க.. ”

    “நான்.உங்களைக் குறை கூறவில்லையே. உங்களை மட்டம் செய்ய வில்லையே.. உள்ளதை உள்ளபடி சொன்னேன். உங்கள் பிரச்சனையே உள்ளதை உள்ளபடி பார்க்கவும் மாட்டீர்கள்.. உள்ளதை உள்ளபடி ஏற்றுக்கொள்ளவும் மாட்டர்கள்…”

    “நான் உங்களடா பேசவா அல்லது எழுந்து போய்விடவா… ” என்று எனது மனதை கொஞ்சம் அதட்டிக் கேட்டேன்.

    “கோபப்படாதீர்கள். முதலில் கொஞ்சம் அமைதி காக்க முயலுங்கள்.. அவசரமும் கோபமும் படுவதால் நீங்கள் எதையும் சாதிக்கப் போவதில்லை… சொல்லுங்கள் உங்களுக்கு என்ன பிரச்சனை?” எனது மனம் என்னிடம் கேட்டது..

    உங்களுக்குத்  தெரியாதா என்ன? எல்லோரும் சொல்லுகின்றார்கள்.. நீங்கள் என்னோடு சரியான தொடர்பு கொள்வதில்லை என்று.. உங்கள் மனம் ஒரு நிலையிலில்லை.. உங்கள் மனம் அழுத்தத்தில் இருக்கின்றது.. அதனால் தான் நீங்கள் ஒரு மன நோயாளிபோல் இருக்கின்றீர்கள் என்று.  ஆகவே எனக்குப் பிரச்சனையே நீங்கள்தான். ”

    இதைக்கேட்ட என் மனம் வாய்விட்டுச் சிரித்தது..

    ” நானா? பிரச்சனையா..? எனக்கென்று ஒரு போக்கு கிடையாதே…. நீங்கள் என்ன செய்யச் சொல்லுகின்றீர்களையோ அதை நான் செய்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கச் சொல்லுகின்றீர்களோ அதைதத்தானே நான் நினைக்கின்றேன். எனக்கென்று ஒரு தனி வாழ்வேது? ” மனம் அலுத்துக்கொண்டது

    “அப்படியென்றால் “மனம் போல் வாழ்வு” என்றும் “மனம் போன போக்கில் போகின்றார்கள்”  என்றும் ஏன் சொல்லுகின்றார்கள்?” அது மட்டுமல்ல.. “உங்களை இன்னும் கேவலமாக மனம் ஒரு குரங்கு. கொஞ்சம் இடம் கொடுத்தால் இங்கிருந்து அங்கு தாவும்’ என்றல்லவா சொல்லுகின்றார்கள்..

    எனது மனம் சிரித்தது.

    “சார். நீங்களாக ஒரு பழமொழி எழுதிக்கொள்வது. அதற்கு ஒரு அர்த்தம் சொல்லிக்கொள்வது.. அதன்பின் பழியை மற்றவர்களிடம் போடுவது… இது வேடிக்கையாக இருக்கின்றதே..  என்னை நீங்கள் ஒரு குதிரை என்று சொல்லியிருந்தால் நான் ஏற்றுக்கொண்டிருப்பேன்… என் கடிவாளம் உங்கள் கையில் இருக்கின்றது. என்னை எந்தப்பக்கம் போக வேண்டும். எந்த வேகத்தில் போக வேண்டும்.. எங்கே நிற்க வேண்டும்.. என்றெல்லாம் என்னுடைய கடிவாளத்தைப்  பிடித்துக்கொண்டு சாதிக்க முடியும்.  அதை விட்டுவிட்டு உங்களுக்கு ஏதோ சம்பந்தமே இல்லாதது போலப் பேசுகின்றீர்களே.”

    என்னால் ஏன் மனத்திற்குப் பதில் சொல்ல முடியவில்லை. யோசிக்க ஆரம்பித்தேன். என் மனம் என் கையிலா இருக்கின்றது?.. அதை என்னால் கையாள  முடியுமா?”  யோசிக்க ஆரம்பித்தேன்.

    நமது மனம் நமது எண்ணங்களின் தாக்கத்தில் நமது ஆசைகளின் எதிர்பார்ப்புகளில் நமது உணர்வுகளின் கைப்பொம்மையாகச் செயல்படுகின்றது. எனவே நமது எண்ணங்கள், நமது ஆசைகள் மற்றும் நமது எதிர்பார்ப்புகளை நாம் நன்றாக அலசி ஆராய்ந்து அவைகளின் தேவைகள் அவைகளின் பாதிப்புக்கள் மற்றும் அவைகளின் வளர்ச்சிக்கான உள்ளீடுகள் ஆகியவற்றை நன்றாக அறிந்து புரிந்து வாழவேண்டும். தேவையற்ற ஆசைகள், நிறைவேற முடியாத ஆசைகள், நமது வாழ்வு முறைகளுக்கு அப்பாற்பட்ட ஆசைகள் ஆகியவற்றை தவிர்த்தல் மிக்க அவசியம். இல்லாவிட்டால் இவை அனைத்தும் நமது மனதிற்குள் தேங்கி அவைகள் நிறைவேறும் வரை அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கும். அவைகள் நிறைவேறும் வரை மனதில் பல வித போராட்டங்களை ஏற்படுத்தி நம்மைத் துன்புறுத்தும். அதன் விளைவாக பொறாமை, போட்டிகள், இயலாமை, வெறுப்பு, வெறி போன்ற பல உணர்வுகள் ஏற்பட்டு நமது மனத்தையும் உடலையும் தொடர்ந்து பாதித்துக் கொண்டே இருக்கும்.

    நமது மனதிற்குக்  கடிவாளம் எப்படிப் போடுவது? மிகவும் கடினமான செயல்தான். அதற்க்கு நல்ல பயிற்சி எடுக்க வேண்டும். நல்ல முயற்சிகள் செய்ய வேண்டும். நமது ஆக்கசக்திகளை உணர்ந்து, நமது முன்னேற்றப் பாதையில் உள்ள நன்மை தீமைகளையும் அறிந்து சரியான வழிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நமது ஆசைகளும் தேவைகளும் கொடுக்கும் வேக உணர்வுகளை சற்றே கட்டுப்படுத்தி இடம், பொருள் ஏவல் ஆகிய மூன்ருடனும் கைகோர்த்து முன்னே செல்ல முயற்சிக்க வேண்டும்.

    “ஒவ்வொரு மனிதனும் அவனுடைய எண்ணங்களின் உருவகம்” என்று அண்ணல் காந்தி அடிகள்மிக அழகாகக் கூறியுள்ளார். அழகான எண்ணங்கள், நேர்மையான எண்ணங்கள், தூய்மையான எண்ணங்கள், ஆக்கபூர்வமான எண்ணங்கள் ஆகியவை நமது வெற்றிக்கு முதல் படிகள். நமது மனநலத்திற்கும் வாழ்க்கையில் வெளிச்சத்திற்கும் வழிகாட்டிகள். இதை உணர்ந்து செயல் பட வேண்டும். நேர்மறையில்லாத எதிர்மறையான எண்ணங்கள் நமது மனதின் அமைதியை அழித்துவிடுகின்றன.

    மனதோடு தொடர்ந்து பேசிக்கொண்டிருப்போமே !!

    தொடரும்..

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 137

    தொழில் நுட்பமா, உறவினரா?

    பொது இடங்களுக்கு மூன்று வயதுக்குட்பட்ட சிறுவர்களை அழைத்துப்போனாலே திண்டாட்டம்தான்.

    அவர்களை எப்படிச் சமாளிப்பது என்றே புரியாது, அவர்களை கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுக்கும் மிகச்சிலரைவிட, அடியையும், திட்டையும் நம்புகிறவரே அதிகம்.

    பெரியவர்களும் குழந்தைகளுடன் எங்காவது காத்திருக்கையில் இனிமையாகப் பொழுதைக் கழிக்க எத்தனை முறைகள் இல்லை!

    சிறுவனின் விரல்களைப் பிடித்து, `ஒன்று, இரண்டு..,’ என்று எண்களைச் சொல்லிக்கொடுக்கலாம். இல்லாவிட்டால், ஒரு துண்டு காகிதத்தை மடித்து, `படகு’ என்று  அவனிடம் கொடுத்தால், அந்தப் புதிய விளையாட்டுச் சாமான் சிறிது நேரம் ஆர்வமூட்டி அவனை அமைதிப்படுத்தும்.

    கைப்பையில் தயாராக வைத்திருக்கும் துண்டுக் காகிதத்தை எடுத்து, அதில் அவனுக்குப் பிடித்த எதையாவது வரைந்தால், பூரிப்புடன் அமர்வான். அடுத்த முறை, அவனிடமே காகிதத்தையும் பேனாவையும் கொடுத்தால், உருண்டையாக எதையாவது போட்டுவிட்டு, பெருமையுடன் தாயிடம் காட்டுவான். பக்கத்திலிருப்பவர் `என்ன இது?’ என்று கேட்டால், `புலி!’ என்று ஆணித்தரமாக பதில் வரும். அடுத்த முறை, அதுவே கோழியாக மாறினாலும் மாறும்!

    சிறுவர் புத்தகத்திலிருந்து மிருகங்களின் பெயர்களை வாசித்துக் காட்டுவது நல்ல பொழுதுபோக்கு. பல முறை காட்டினாலும் குழந்தைகளுக்கு அலுக்காது. (சற்றுப் பெரியவர்களானதும், அவர்களே படிக்கும் புத்தகங்களை செல்லும் இடத்திற்கெல்லாம் எடுத்துவந்தால் படிப்பில் ஆர்வம் பெருகும். நேரத்தையும் வீணாகக் கழிக்கமாட்டார்கள்).

    இந்த எல்லா வழிகளிலும் தாயின் ஈடுபாடும் இருப்பதால் அவளுக்குக் குழந்தையுடன் அதிக நெருக்கம் ஏற்படும்.

    இந்த முறைகளெல்லாம் பழமையாகிவிட்டன. அதனாலேயே பலருக்கு அலுப்பைத் தருகிறது.

    `ஏனடா விடுமுறை வருகிறது என்றிருக்கிறது! என் மூன்று வயது மகன் ஓயாது கேள்விகள் கேட்கிறான்!’ என்று என் சக ஆசிரியைகள் அலுத்துக்கொள்வார்கள்.

    `அதுதான் மிக சுவாரசியமான பருவம்! அவர்கள் கேட்பது நமக்குச் சிரிப்பை வரவழைக்கும்!’ என்று நான் கூறியபோது, அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். (உதாரணம்: `நான் ஒன் வயத்திலேருந்து வந்தேனா! ஏம்மா என்னை முழுங்கினே?’)

    கதை

    வங்கி ஒன்றில், கனகா மகன் ராஜனையும் உடன் அழைத்து வந்திருந்தாள். அவன் ஓரிடத்தில் அமராது, குறுக்கேயும் நெடுக்கேயும் ஓடிக்கொண்டிருந்தான்.

    தத்தம் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றவர்கள் முகம் சுளித்தார்கள். அவமானம் தாங்காது, தாய் சிறுவன் முதுகில் இரண்டு அறைவிட்டாள். நிலைமை மோசமாகியது. அலறிக்கொண்டே ஓட ஆரம்பித்தான் அவன்.

    வேறு வழி புலப்படாது, தன் கைப்பையைத் திறந்து, ஒரு பொருளைக் காட்டினாள் தாய். ராஜன் ஓடோடி வந்தான்.

    அப்பொருள்: கைத்தொலைபேசி.

    அடுத்த பல நிமிடங்களுக்கு அவன் நகரவேயில்லை. தானே அச்சாதனத்தை இயக்கி, ஏதேதோ விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தான். கண்ணுக்கு மிக அருகில் வைத்துக்கொண்டான், உற்சாகம் அதிகமாக, அதிகமாக.

    தாயும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அவனை அமைதிப்படுத்த வீட்டில் அவள் கையாண்ட வழி அது. முதலிலேயே தோன்றாது போய்விட்டதே என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள்.

    தற்காலத்தில், குழந்தைகளுக்கு விதவிதமான விளையாட்டுச் சாமான்கள்– தொழில் நுட்பத்துடன் கூடியவை – கிடைக்கின்றன. எல்லாவற்றையும் ஒலியுடன் திரையில் பார்க்க முடிவதால் எதையும் விளக்க வேண்டியதில்லை. பெற்றோரின் குரலைக் கேட்கவேண்டிய நேரத்தில் ஒரே தொனியில் ஒலிக்கும் அந்த இயந்திரக்குரல். (பிறந்த குழந்தைக்குக்கூடத் தாயின் குரல் புரியும். இந்த இயங்திரக் குரலைக் கேட்டே வளரும் குழந்தைகளோ குரலில் ஏற்ற இறக்கமில்லாமல் அதுபோலவே பேச முற்படுகிறார்கள்).

    இன்றைய குடும்பங்களில், அப்பா கணினியின் எதிரே காலத்தைக் கழிப்பார். அம்மா – தொலைகாட்சி அல்லது தொலைபேசி. மகனோ..!

    உறவினர் வீட்டுக்குப் போனால், தன் கணினி விளையாட்டு முடியும்வரை பையன் நாம் வந்திருப்பதைக் கண்டுகொள்ள மாட்டான். ஒரே ஊரிலிருக்கும் நெருங்கிய உறவினர்களைவிட கண்காணாத நாட்டில் வசிக்கும் நண்பர்களுடன் அரட்டை (chat) அடிப்பதில்தான் அவனுக்கு ஆர்வம். பரீட்சைக்குப் படிக்கும்போதும் தன் கையிலேயே  தொலைபேசியை வைத்துக்கொண்டிருப்பான், அவனுடைய ஓர் அங்கம்போல. அடிக்கடி அதில் கவனம் போவதில் படிப்பது மனதில் நிலைக்காது.

    உருப்போடுவதும், உருப்படாத பொழுதுபோக்குகளும்

    விஞ்ஞானம் போன்ற சில பாடங்களில் மனனம் செய்வது மாணவர்களுக்கு இயலாத ஒன்றாகிவிடுகிறது என்பதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். (இரண்டு மூன்று முறை உரக்கப் படித்துவிட்டு, அதையே எழுதிப் பார்ப்பது சரியான முறை. என்றும் மனதைவிட்டு அகலாது).

    கதை

    முன்காலத்தில், `மனக்கணக்கு’ என்று பள்ளிகளில் குழந்தைகளைத் தயார் செய்வார்கள். ஒன்று, இரண்டு என்று வரிசையாகச் சொல்வது, அல்லது கூட்டல், கழித்தல் போன்றவை. எழுதுகோல் உதவியின்றி, மூளை ஒன்றே கருவியாக, இந்தக் கணக்குகளைப் போடவேண்டும்.

    நான் உயர்நிலைப்பள்ளியில் படிக்கையில், எங்கள் ஆசிரியை அல்ஜீப்ராவை நின்ற நிலையில் பதினைந்து, இருபது படிகளை வரிசையாகச் சொல்லிக்கொண்டே போவார். நிறையப் படிக்கும் பழக்கமுள்ள ஓரிரு மாணவிகளுக்கு மட்டும்தான் புரியும்.

    வேறு மாநில ஆரம்பப் பள்ளியில் மனக்கணக்கு போதிக்கப்பட்டிருந்ததால் ஆசிரியை கையாண்ட முறையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. மற்றவர்கள் `புரியவில்லை!’ என்று ஓரிரு முறை சொல்லிவிட்டு, திட்டு வாங்கியபின் வாயே திறக்க மாட்டார்கள்.

    வகுப்பு முடிந்து ஆசிரியை வெளியே போனதும், `Take over, Nirmala!’ என்று கத்துவார்கள். நான் கரும்பலகையில் எழுதி விளக்குவேன். அப்போது எனக்குப் பன்னிரண்டு வயது. (அண்மையில், `எந்த வயதில் நீ ஆசிரியையாக ஆனாய்?’ என்று யாரோ கேட்டபோதுதான் இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது).

    ஏன் மனக்கணக்கு?

    மூளையை விரைவாகச் செயல்பட வைக்கும். அடிக்கடி இம்முறையைப் பின்பற்றினால், மூளையிலுள்ள தசைகள் வலுவடைகின்றன.

    அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுகிறது. உதாரணமாக, 30% தள்ளுபடி என்று ஏதாவது கடைவாசலில் அறிவித்திருந்தால், நாம் எவ்வளவு மிச்சப்படுத்த முடியும் என்பதற்கு கால்குலேட்டரையோ, பேனா, காகிதத்தையோ தேடவேண்டியதில்லை. உடனடியாக விடையைக் கண்டுபிடித்துவிட முடியும்.

    இப்போதெல்லாம் கரும்பலகையில் இரண்டு ஆப்பிள் + இரண்டு ஆப்பிள் என்று வரைந்தால்தான் குழந்தைகளுக்குப் புரிகிறது. Abstract thinking குறைந்துவிட்டது – மூளை பாதிக்கப்படுவதால்.

    ஒரு பாலர் பள்ளியில், குழந்தைகளுக்கு மனக்கணக்கு என்பது இயலாத  காரியமாக இருந்தது. பள்ளியிலிருந்து பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்: `உங்கள் குழந்தையை ஒரு நாளைக்கு இருபது நிமிடங்களுக்குமேல் தொலைகாட்சியைப் பார்க்க விடாதீர்கள்!”

    சில மாதங்களிலேயே குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் நல்ல மாற்றம் தெரிந்தது.

    புத்தகங்கள் படிப்பதும் கணினியும்

    படிக்கும்போது மூளைக்கு வேலை கொடுக்கிறோம். அதனால் எத்தனை வயதானாலும் அது நன்கு இயங்குகிறது.

    கதைப்புத்தகங்களைப் படிக்கையில், கதை மாந்தர்களின் பெயர்கள் மட்டுமின்றி, அவர்களிடையே உள்ள தொடர்பு, அவர்களுடைய பின்னணி என்று பல சமாசாரங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமே! அதனால் நினைவாற்றல் பெருகுகிறது. `நீங்க யாரு? எங்கேயோ பாத்தமாதிரி இருக்கே!’ என்று நம் நெருங்கிய உறவினர்களைக் கேட்க வேண்டிய நிலை ஏற்படாது.

    கணினியை இயக்கியபடியே தொலைபேசி, பக்கத்தில் இருப்பவருடன் அரட்டை என்று பொழுதைப் போக்கும்போது கவனம் சிதறிப்போகிறது. ஆனால், ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தால், முழுமையான கவனம் அதிலேயே செலுத்தப்படுவதால் மனம் அமைதி காண்கிறது.

    திரையை வெறிப்பதைவிட நல்ல புத்தகங்களைப் படித்தால் மூளையாவது வளருமே!

     தொடருவோம்

    Share
  • காலந்தோறும் மாறிவரும் பெண்கள் நிலை – 1

    -மேகலா இராமமூர்த்தி

    மாந்தர்கள் வேட்டைச் சமூகமாய் அலைந்து திரிந்த காலத்தில் சமூகத் தலைமை பெண்ணிடமே இருந்தது. அவளே வேட்டைத் தலைமையும் வீட்டுத் தலைமையும் கொண்டவளாய்த் திகழ்ந்தாள். சுருங்கச் சொல்வதாயின் அன்றைய சமூகம் தாய்வழிச் சமூகமாகவே (Matriarchal society) இருந்தது.

    இந்திப் பயண இலக்கியத்தின் தந்தையும் (Father of Hindi Travelogue), பன்மொழி அறிஞரும், மார்க்ஸியச் சிந்தனையாளருமான இராகுல் சங்கிருத்தியாயனின் (Rahul Sankrityayan) வால்கா முதல் கங்கை வரை(A journey from the Volga to the Ganges) எனும் மாந்த வாழ்வியலை மையமாகக் கொண்ட வரலாற்றுப் புனைகதைகள் கிமு 6000 தொடங்கி கிபி 1942 வரையிலான காலகட்டங்களில் நிகழ்ந்த மானுடச் சமூக மாற்றங்களை மிக அழகாக விவரிக்கின்றன. அதில் தொல்குடிச் சமூகத்தில் தலைமைப் பொறுப்பிலிருந்த பெண்டிர் காலப்போக்கில் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆண்கள் தலைமையின்கீழ் ஆட்பட்ட வரலாறு மிக  நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருக்கக் காணலாம்.

    நம் சங்க இலக்கியங்களை ஆய்ந்தால்கூட அதில் வேட்டைக்குடியினரின் தெய்வமாய் வணங்கப்படுபவள் கொற்றவையே ஆவாள். இவ்வழிபாடு தாய்வழிச் சமூகமரபின் எச்சமே எனலாம்.

    நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தின் ’வேட்டுவ வரி’ப் பாடல்கள் கொற்றவையின் பெற்றியை நற்றமிழில் நவிலும் அழகைக் காண்மின்!

    ….துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி
    கரியின் உரிவை போர்த்தணங் காகிய
    அரியின் உரிவை மேகலை யாட்டி
    சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி
    வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை
    இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்
    தலைமிசை நின்ற தையல் பலர்தொழும்
    அமரி குமரி கவுரி சமரி
    சூலி நீலி மாலவற் கிளங்கிளை
    ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப்
    பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை
    ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை…”
    (சிலம்பு – வேட்டுவ வரி)

    இவ்வரிகளில் தம்குல முதல்வியும் வெற்றிச்செல்வியுமாகிய கொற்றவையின் தோற்றத்தையும் திறலையும் பாடிப் பரவுகின்றனர் வேட்டுவக் குடியினர்.

    அற்றைய கல்விநிலையைக் கண்ணுற்றாலும், ஆண்களுக்கு நிகராய்ப் பெண்களும் கல்வியிற் சிறந்திருந்தமைக்குப் பல சங்கப் பெண்புலவர்கள் சான்றாய்த் திகழ்கின்றனர். ஏறக்குறைய 40 பெண்பாற் புலவர்களின் சங்கப் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இவை நமக்குக் கிட்டியுள்ள பாடல்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலான கணக்கே. இவையேயன்றிப் பனையோலைகளில் கறையானுக்கு இரையானவை, ஆடிப்பெருக்கன்று ஆற்றில் எறியப்பட்டவை, ஆகுதி வேள்வியில் போகுதி என்று விட்டவை இவையும் கிடைத்திருந்தால் நம் இலக்கிய வளம் இன்னும் செறிவாகவும் செம்மையாகவும் இருந்திருக்கும். இன்னும்பல பெண்புலவோரின் பாடல்களும் நமக்குக் கிட்டியிருக்கக் கூடும். நம் போகூழ் வலிதாயிருத்தலின் அவை நமக்குக் கிடைத்தில.

    இந்நல்லிசைப் புலமை மெல்லியலார் வரிசையில் விறலியான ஔவை, ஆடுகள மகளான ஆதிமந்தி, அரசமாதேவியான பெருங்கோப்பெண்டு, அரண்மனைக் காவற்பெண்டு என்று அனைவர்க்கும் இடமுண்டு. அம்மட்டோ? குறத்தியரும் (குறமகள் இளவெயினி/குறியெயினி) குயத்தியரும்கூட (வெண்ணிக் குயத்தியார்) அருமையாய்ப் பாப்புனைந்திருக்கக் காண்கின்றோம். இதன்வாயிலாய் நாமறிவது, அற்றைக் கல்வியானது சாதி, இன, நில, திணை வேறுபாடின்றி அனைவர்க்கும் பொதுவாய்க் கிடைத்திருக்கின்றது என்பதே!

    பாட்டரசி ஔவை மட்டுமே அகமும் புறமுமாக அறுபது பாடல்கள் பாடியிருக்கின்றார். நானிலத்தையும் தன் பாட்டில் வைத்துத் தக்கதோர் உலகியல் உண்மையை அப்புலவர் பெருந்தகை உணர்த்தியிருக்கின்றார். அப்பாடல்…

    நாடா கொன்றோ காடா கொன்றோ
    அவலா கொன்றோ மிசையா கொன்றோ
    எவ்வழி நல்லவர் ஆடவர்
    அவ்வழி நல்லை வாழிய நிலனே!
    (புறம் – 187)
     

    ”நிலமே! நீ ஓரிடத்தில் நாடாகவும் (மருதம்), வேறிடத்தில் காடாகவும் (முல்லை), மற்றோரிடத்தில் பள்ளமாகவும் (நெய்தல்), பிறிதோரிடத்தில் மலையாகவும் (குறிஞ்சி) திகழ்கின்றாய். ஆனால் நின் நலமும் சிறப்பும் நில அமைப்பினால் வருவதன்று! எந்நிலத்து ஆடவர் நல்லவரோ அந்நிலத்திலே நீ சிறக்கின்றாய் என்கிறார் நச்சென்று!” அன்றும் இன்றும் ஏன்…என்றும் பொருந்தக்கூடிய உண்மைதானே இது?

    தஞ்சைக்கு அருகிலுள்ள வெண்ணி எனும் பகுதியைச் சேர்ந்தவர் குயத்தியார் எனும் பெண்புலவர். அவரின் துணிச்சலுக்கும் அஞ்சாநெஞ்சுக்கும் சாட்சியாய் ஒருபாடல் புறநானூற்றிலே காட்சியளிக்கின்றது.

    வெண்ணிக்குப் புறத்தேயிருந்த வெண்ணிப் பறந்தலையில் கரிகாலனுக்கும் அவனை எதிர்த்து ’மெகா கூட்டணி’ அமைத்திருந்த சேரமன்னன் பெருஞ்சேரலாதன், பாண்டியன், மற்றும் பதினொரு வேளிர்க்கும் இடையே பெரும்போர் நடந்தது. அப்போது கரிகாலனின் வேலானது சேரலாதனின் மார்பைத் துளைத்து முதுகுவழியே வெளியே வந்துவிட்டது. இதனால் முதுகிலும் புண்பட்டுப் புறப்புண் பட்டது போன்றொரு தோற்றத்தைச் சேரனுக்கு ஏற்படுத்திவிட, வேதனையுற்றான் அவன். இனியும் உயிர்வாழ்தல் வீரனுக்கு அழகன்று என்றெண்ணிய அவன் வடக்கிருந்து உயிர்துறந்தான். கரிகாலன் அப்போரில் பெருவெற்றி பெற்றான்.

    இச்சம்பவங்களையெல்லாம் அப்பகுதிவாசியான குயத்தியார் நன்கு அறிந்திருந்தார். எனவே போருக்குப் பின் ஒருநாள் கரிகாலனைக் காணச்சென்றவர், தம் மன்னனின் வென்றியைப் போற்றினார்; அத்தோடு நின்றாரில்லை. அவனினும் நல்ல(வ)ன் தன் வீரர்களோடு வாள் வடக்கிருந்து உயிர்நீத்து மிகப்புகழ் உலகமெய்திய சேரலாதன் என்று துணிந்துரைத்தார் அப்பெருமாட்டி.

    நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
    வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
    களியியல் யானைக் கரிகால் வளவ
    சென்றமர்க் கடந்தநின் னாற்றல் தோன்ற
    வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
    கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
    மிகப்புகழ் உலகம் எய்திப்
    புறப்புண் நாணி வடக்கிருந் தோனே.
       (புறம் – 66)

    அன்று பெண்டிர்க்கிருந்த பேச்சுரிமைக்கும் கருத்துச் சுதந்தரத்துக்கும் இப்பாடல் சிறந்த சான்றாகும்.

    காக்கைபாடினியார் நச்செள்ளையார் எனும் புலவர் பெருமாட்டி, பதிற்றுப்பத்தின் ஆறாம் பத்தில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் புகழ்ந்து பாடி, ஒன்பது துலாம் பொன்னும், நூறாயிரங் காணமும் பரிசிலாய்ப் பெற்று அவன் பக்கத்தில் வீற்றிருக்கும் சிறப்பும் பெற்றார் என்றறிகின்றோம்.

    இவையெல்லாம் அன்றைய பெண்டிரின் கல்விப் புலமையை, கவிபாடுந் திறமையைப் பெருமிதத்தோடு நமக்குப் பறைசாற்றி நிற்கின்றன.

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. புறநானூறு மூலமும், ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை உரையும் –  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.

    2. https://en.wikipedia.org/wiki/Rahul_Sankrityayan

    3. சிலப்பதிகாரம் மூலமும், ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரையும் – சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

     

    Share
  • சிலப்பதிகாரத்தில் விகுதிவழிச் சொல்லாக்கம்

    -முனைவர் தி.அ. இரமேஷ்

    ஒரு மொழியில் சொற்களின் வளர்ச்சி பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக நிகழ்ந்து வருகின்றது. அச்சொற்களை ஆக்கிப் பயன்படுத்தும் முறை சங்ககாலம் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து ஆக்கத்தன்மையுடன் வழக்கில் உள்ளது. தற்காலத்தில் சொற்களை ஆக்கிப் பயன்படுத்துதல் என்பது தனித்ததொரு துறையாகச் ‘சொல்லாக்கம்’ எனும் பெயரில் வளர்ச்சி பெற்றுள்ளது.

    சொல்லாக்கம் பல்வேறு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு ஆராய்ந்து வகைப் படுத்தப்பட்டாலும், சங்க காலத்தில் திரிபு, ஆக்கப்பாடு (மொழியியல், சொல்லியல், பெயரியல், பக். 22-23) ஆகிய இரு பிரிவுகளில் சொல்லாக்கம் நிகழ்ந்துள்ளதை அறிய முடிகின்றது. இதில் திரிபு என்பது இலக்கண அடிப்படையில் உருவாவது. ஆக்கப்பாடு பொருள் மாற்ற அடிப்படையில் நிகழ்வது. சங்க இலக்கியத்தில் கூட்டுச்சொற்கள், பிறமொழிச் சொற்கள், விகுதிவழிச் சொற்கள் என்னும் மூன்று நிலைகளைக் காணமுடிகிறது. இவை மூன்றும் ஆக்கப்பாடு என்ற வகையில் அடங்கும். விகுதிவழிச் சொற்கள் என்ற வகையில் சிலப்பதிகாரத்தில் நிகழ்ந்துள்ள சொல்லாக்கச் சொற்களைத் தொகுத்துநோக்கி, அவை சிலப்பதிகார காலச் சொற்பெருக்கத்திற்கான சான்றாகவும் தற்காலத்தில் வளர்ச்சிபெற்றுள்ள விகுதிவழிச் சொல்லாக்கத்திற்கு (பின்னொட்டாக்கம்) முன்னோடியாக அமைந்துள்ளன என்பதையும் இக்கட்டுரை ஆராய்கின்றது.

    ஆக்க விகுதிகள்

    பெயர், பெயரடி, வினை, வினையடிகளுடன் விகுதிகள் சேர்ந்து சொற்கள் உருவாக்கம் பெறுகின்றன. அவற்றின் அடிப்படையில் சொல்லாக்கச் சிந்தனையில் ஈடுபட்ட ச. அகத்தியலிங்கம் அவர்கள் ஆக்க விகுதிகளாக அருவத்தை, ஐ, அகம், அம், அல், அவு, இ, உள், கை, க்கை, சி, ச்சில், ச்சி, தி, பு, ப்பு, ம், மை, வை, வல், வி, வு, அர், அரை, ஆர், காடு, ட்டம், ட்டு, டு, டை, ப்பை, வாய் எனும் 33 விகுதிகளைச் சங்க இலக்கியங்களில் ஆக்க ஒட்டுக்களாக இடம்பெற்றுள்ளதாகச் சுட்டுகிறார் (மொழியியல், சொல்லியல், பெயரியல், பக்.145-148). இவ்விகுதிகள்வழிச் சங்க இலக்கியத்தில் சொல்லாக்கம் பரவலாக நடைபெற்றுள்ளது. அவற்றைப் பின்தொடர்ந்து எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் நிகழ்ந்துள்ள விகுதிவழிச் சொற்களைக் காணலாம்.

    மேற்காணும் விகுதிகளைக் கொண்டு சிலப்பதிகாரத்தில் நிகழ்ந்துள்ள விகுதிவழிச் சொற்களை நோக்கும்பொழுது இருபதுக்கும் மேற்பட்ட  விகுதிகள் சொல்லாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. இவ்விகுதிகளை இரு பிரிவுகளில் பகுத்துக்காண முடிகிறது. அவை பெயர்ச்சொற்களுடன் சேரும் விகுதிகள், வினையடியுடன் சேரும் விகுதிகள் என்பன.

    பெயர்ச்சொற்களுடன் சேரும் விகுதிகள்

    அகம், அம், அர், அல், அன், ஆள், ஆளர், இ, இர், இயல், கு, ச்சி, ஞர், ஞை, தி, த்தி, ப்பு, மார், மை, வி, வு, வை ஆகிய இருபத்திரண்டு விகுதிகள் பெயருடன் சேர்ந்து சொற்கள் ஆக்கம் பெருவதற்குத் துணைநிற்கின்றன.

    அகம் விகுதி

    அகம் என்பதற்கு வீடு, மனம், ஞானம், உள் எனப் பல பொருள்கள் உள்ளன. ஆனால் இச்சொல் ஒரு சொல்லின் முன் அல்லது பின் என்னும் இருநிலைகளில் சொல்லாக்கத்தில் இணைந்து செயல்படுகிறது. முன்னொட்டாக விளைவாக்கம் இல்லை. ஆனால் பின்னொட்டாக அதிக விளைவாக்கம் பெற்றுள்ளது. இடம் என்ற பொதுப்பொருளில் அதிகப் பயன்பாடு உடையது குறிப்பிடத்தக்கது. அகம் ஒரு முழு சொல்லாக இருப்பினும் மீண்டும் மீண்டும் விகுதிபோல் செயல்பட்டு புதிய சொற்களை உருவாக்கப் பயன்படுகிறது என்று இ. மறைமலை குறிப்பிடுகின்றார்.

    சிலப்பதிகாரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட சொற்கள் அகம் விகுதி பெற்று ஆக்கம் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.

    சிறை+ அகம் > சிறையகம் (அடைத்து வைக்கும் இடம்)

    பிருட்டு+அகம் > பிருட்டகம் (அங்கக் கிரியை 16இல் ஒன்று)

    அரி+அகம் > அரியகம் (காற்சிலம்பு)

    கன்+அகம் > கன்னகம் (அகழ் கருவி)

    பேடு+அகம்> பேடகம் (துகில்)

    என்பது போன்று சொற்கள் ஆக்கம் பெற்று சிலப்பதிகாரத்தில் அகம் ஆக்கப் பெயர் விகுதியாகச் செயல்பட்டுள்ளதைக் காணமுடிகிறது

    அம் விகுதி

    ‘அம்’ என்னும் விகுதி குறித்துத் தொல்காப்பியரும் (தொல்.சொல்.204) நன்னூலாரும் (நன்.140) குறிப்பிட்டுள்ளனர். ‘அம்’ விகுதி பெற்று ஆக்கம் பெற்ற சொற்களை இரண்டு வகையான இயல்பு கொண்டவையாகப் பார்க்கலாம். அவை வினை, பெயரடிகளுடன் சேர்ந்து புதிய சொற்களை உருவாக்குதல், பொருள் மாற்றம் இல்லாமல் ‘அம்’ விகுதி பெற்று வருவன (பகுதிப் பொருள் ஏற்பவை) என்பன.

    சிலப்பதிகாரத்தில் உள்ள சொற்களைத் தொகுத்து ஆராயும் பொழுது பகுதிப்பொருள் ஏற்கும் ஆக்கமே ‘அம்’ விகுதி சேர்க்கையால் நிகழ்ந்துள்ளதைக் காணமுடிகின்றது.

    அகல்+அம் >அகலம்(மார்பு)

    குன்று+அம் > குன்றம்(மலை)

    அவை+அம் >அவையம்(சபை)

    முரசு + அம் > முரசம் (முரசு)

    நறவு + அம் >  நறவம் (தேன்)

    ஆகிய சொற்களும் பொருள்மாற்றம் இன்றிப் பகுதியின் பொருளையே உணர்த்தி நிற்கின்றன. செய்யுளின் யாப்பமைதி குன்றாவண்ணம் அவ்வகை ஆக்கம் நிகழலாம் என ஒருவாறு ஊகிக்க இடமளிக்கின்றது. சிலப்பதிகாரத்தில் அதிக விளைவாக்கம் கொண்ட விகுதி அம் என்பது குறிப்பிடத்தக்கது. சமகாலத்தில் நிதி+அம்> நிதியம் (வருவாய்), மதி+அம்> மதியம் (நண்பகல்) போன்ற சொற்களில் பொருள்மாற்றம் பெற்று சொல்லாக்கத்தில் ‘அம்’ விகுதி பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அர் விகுதி

    தொல்காப்பியரும் (தொல்.சொல்.208) நன்னூலாரும் (நன்.140) ‘அர்’ என்பதைப் படர்க்கைப் பன்மை வினைமுற்று ஈறு என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், சொல்லாக்க விகுதியாகச் சிலப்பதிகாரத்தில்,

    அரசு + அர் > அரசர் (தலைவன்)

    இடைச்சி + அர் > இடைச்சியர் (ஆடு மேய்க்கும் பெண்கள்)

    உழவு+அர் > உழவர் (உழவுத்தொழில் செய்யும் மக்கள்)

    ஆகிய சொற்கள் ‘அர்’ விகுதி சேர்ந்து ஆக்கம் பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது. இதேபோல் கடவுளர், நுளைச்சியர் போன்ற சொற்களும் ஆக்கம் பெற்றுள்ளன.

    அல் விகுதி

    தொழிற்பெயர் விகுதிகளில் ஒன்றாக நன்னூலார் ‘அல்’ விகுதியைக் குறிப்பிடுகின்றார். சொல்லாக்க விகுதியாகப் பத்துப்பாட்டில் 22 இடங்களில் பயின்று வந்துள்ளது என்று தி.அ. இரமேஷ் குறிப்பிடுகின்றார் (சங்க இலக்கியச் சொல்லாக்க நெறிமுறைகள் (பத்துப்பாட்டு) ப.114). அதன் அடிப்படையில் சிலப்பதிகாரத்தை நோக்கும்பொழுது பத்துச்சொற்கள் மட்டும் ஆக்கம் பெற்றுள்ளன.

    அதிர் +அல்> அதிரல் (காட்டு மல்லிகை)

    பிணை + அல் > பிணையல் (இரட்டைக் கை)

    விரி + அல் > விரியல் (மலர்ச்சி)

    புதை + அல் > புதையல் (புதைபொருள்)

    தொடை + அல் > தொடையல் (மாலை)

    அதிர் என்னும் வினையடியுடன் அல் சேர்ந்து காட்டு மல்லிகை என்னும் பொருளில் ஆக்கம் பெற்றுள்ளது. இதேபோல்தான் கீழ் உள்ள சொற்களும் ஆக்கம் பெற்றுள்ளன. தொடையல் என்பது மட்டும் பெயருடன் அல் சேர்ந்து பொருள் மாற்றம் இன்றி மாலை என்னும் பொருளையே தந்து நிற்கின்றது.

    அன் விகுதி

    இலக்கண நூல்களில் விகுதியாக இடம்பெறும் ‘அன்’ விகுதிக்கும் சொல்லாக்கத்தில் இடம்பெறும் ‘அன்’ விகுதிக்கும் வேறுபாடு உள்ளது. இலக்கண நூல்களில் வருவது திரிபு நிலையில் சொற்களை ஆக்கிப் பொருள் மாற்றம் இன்றி இலக்கண அமைப்பில் மாற்றம் செய்வதாகும். ஆனால் சொல்லாக்கத்தில் பயன்படும் ‘அன்’ விகுதி பொருள் மாற்றத்துடன் சொற்களை ஆக்கும் பெயராக்க விகுதி எனலாம். இதன் அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் உள்ள சொற்களைத் தொகுத்து நோக்கும்

    பொழுது,

    காதல் +அன்> காதலன்  (தலைமகன்)

    இருள் + அன் > இருளன் (ஒரு சாதிப் பிரிவினர்)

    என்பது போன்று சில சொற்கள் மட்டும் ஆக்கம் பெற்றுள்ளது.

    ஆளர் / ஆள் விகுதி

    இலக்கண நூல்கள் ஆள், ஆளன், ஆளர் ஆகியவற்றை விகுதிகளாகக் குறிப்பிடவில்லை. ஆனால், சொல்லாக்கச் சிந்தனையாளர்களில் இ. மறைமலை, ச. இராசேந்திரன், சு.சக்திவேல் ஆகியோர் மட்டும் குறிப்பிட்டுள்ளனர். நன்னூலார் விகுதிகள் பற்றிக் கூறுமிடத்து ‘பிறவும்’ என்று குறிப்பிட்டுச் சென்றுள்ளதன் மூலம் இவ்விகுதிகளைக் காலமாற்றத்திற்கு ஏற்ப வளர்ச்சி பெற்ற விகுதிகளாகக் கருதலாம். இவ்விகுதிகளைக் கருத்தா விகுதி என்று வே.சீதாலட்சுமி குறிப்பிடுகின்றார். அதன் அடிப்படையில் சிலப்பதிகாரத்தை நோக்கும் பொழுது,

          இருபிறப்பு +ஆளர் >இருபிறப்பாளர் (அந்தணர்கள்)

    ஏவல் + ஆளர் > ஏவலாளர் (பணி செய்வர்)

    கண்ணுள் + ஆளர் > கண்ணுளாளர் (மதங்கர்)

    கண்ணெழுத்து + ஆளர் > கண்ணெழுத்தாளர் (திருமுகம் எழுதுவோர்)

    போன்ற சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன.மேலும் காற்றூதாளர், காவலாளர், வேளாளர் ஆகிய சொற்களும் ஆக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆனால், சமகாலத்தில் அதிக விளைவாக்கம் கொண்ட விகுதியாகச் சொல்லாக்கத்தில் ஆளன் விகுதி இடம்பெறுகின்றது.சான்றாக, காவலாளன், நிதியாளர், பதிவாளர், காசாளர் போன்ற சொற்களை எடுத்துக்காட்டலாம்.

    ஆள் என்னும் விகுதி பெற்று இரண்டு சொற்கள் மட்டும் ஆக்கம் பெற்றுள்ளன. அவை ஆட்டுவாள், மாற்றாள் என்னும் சொற்கள் ஆகும். இவை முறையே தாய், வேறொருத்தி என்னும் பொருளைத்தந்து நிற்கின்றன.

    ஆளர் பலர்பால் அடிப்படையில் வந்துள்ளது. ஆண்பாலுக்கு ஆளன் பெண்பாலுக்கு ஆட்டி என்பது விகுதியாக இடம்பெறுவது வழக்கம். அந்த அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் குலப்பிறப்பாட்டி என்ற சொல் மட்டும் ஆக்கம்பெற்றுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.

    இ விகுதி

    ‘இ’ என்பதை விகுதியாகத் தொல்காப்பியரும் (தொல்.சொல்.225) நன்னூலாரும் (நன்.140) குறிப்பிடுகின்றனர். தொல்காப்பியர் முன்னிலை ஒருமை வினைமுற்று ஈறாகவும் நன்னூலார் பெயரினும் சில என்று கூறுமிடத்தும் ‘இ’ விகுதியாக வழங்கப்பட்டுள்ளது.

    இ. மறைமலை அவர்கள் “பொற்கோ குறிப்பிடும் மூடி, கொள்ளி, நொண்டி ஆகிய சொற்களைப் போல வினையடியும் இகர விகுதியும் சேர்ந்து உருவாகிய சொற்கள் ஆட்சித்துறைச் சொல்லாக்கத்தில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளன (இ.மறைமலை, சொல்லாக்கம்,ப.60)’’ என்பார் என்று சுட்டுகின்றார். இதன் அடிப்படையில் நோக்கும் பொழுது சிலப்பதிகாரத்தில் இதுபோன்ற சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன.

    காதல், சமர், நகர், மாதர் ஆகிய சொற்களுடன் இ விகுதி சேர்ந்து முறையே காதலி, சமரி, நகரி, மாதரி சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளதைச் சிலம்பில் காணமுடிகிறது.

    இயல் விகுதி

    நன்னூலார் இவ்விகுதியைத் தெரிநிலை வினையெச்ச விகுதி என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிற்கால விகுதி வளர்ச்சியில் இது ஆக்க விகுதியாக இடம்பெற்றுள்ளது.  இதன் அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் பார்க்கும் பொழுது,

    அணி +இயல்> அணியியல்

    அரசு + இயல் > அரசியல்

    உலகு + இயல் > உலகியல்

    பொது + இயல் > பொதுவியல்

    வேந்து + இயல் > வேத்தியல்

    போன்ற சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது. இவ்விகுதி இக்காலத்தில் அதிக விளைவாக்கம் உள்ள ஒரு விகுதி எனலாம் .சான்றாக, உளவியல், களவியல், வணிகவியல், தொழில்நுட்பவியல் போன்ற சொற்களை எடுத்துக்காட்டலாம்.

    ஞர் விகுதி

    இவ்விகுதி சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை பயன்பாட்டில் உள்ள ஒரு விகுதியாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பத்துப்பாட்டில் இவ்விகுதி பயன்பாடு குறித்து சங்க இலக்கிய சொல்லாக்க நெறிமுறைகள் (பத்துப்பாட்டு) என்னும் ஆய்வு குறிப்பிட்டுள்ளது. மேலும் சொல்லாக்க அறிஞர்கள் இவ்விகுதிகுறித்து சிறப்பாகக் கூறியுள்ளனர்.அதன் அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் கிளைஞர், இளைஞர், வினைஞர் ஆகிய மூன்று சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன.

    மார் விகுதி

    இவ்விகுதி சங்க காலத்தில் பயன்பாட்டில் இல்லாத ஒன்று. ஆனால் சிலப்பதிகாரத்தில் மார் விகுதி இணைவால் சில சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன. அவை ஐயன்மார், காண்மார், தாய்மார், பாட்டிமார் ஆகிய சொற்கள் ஆகும். இதில் காண்மார் என்பது சங்க இலக்கியத்தில் காண்மர் என வந்துள்ளது. இதில் மார் என்பதன் குறுகல் விகாரமாக மர் என வந்துள்ளது. ஆனால் சிலப்பதிகாரத்தில் காண்மார் என்றே வந்துள்ளது. இக்காலத்தில் தோழிமார், அத்தைமார், மாமன்மார் என்பது போன்று சொற்கள் ஆக்கம்பெற்று வழக்கில் உள்ளதைக் காணமுடிகிறது.

    மை விகுதி

    பண்புப்பெயர் விகுதிகளில் ஒன்றாக இலக்கண நிலையில் பயின்றுவரும் ‘மை’ விகுதி சொல்லாக்க நிலையில் பெயராக்க விகுதியாகவும் செயல்பட்டு வருவதை அறிந்துகொள்ள முடிகின்றது. இவ்விகுதி பற்றி இ. மறைமலை, ச. அகத்தியலிங்கம், சூ.இன்னாசி, பொற்கோ போன்றோர் குறிப்பிடுகின்றனர்.

    இத்தன்மையின் அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் உள்ள சொற்களைத் தொகுத்து நோக்கும்பொழுது ஒரு சில சொற்கள் மட்டும் ஆக்கம் பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது.

    நெடு + மை>நெடுமை (உயர்வு)

    படி + மை > படிமை (தெய்வ வடிவு)

    நேர் + மை > நேர்மை (நல்வழி)

    நெடு, படி, நேர் ஆகியபெயரடிகளுடன் மை விகுதி சேர்ந்து பண்பு என்ற பொருளை உணர்த்தும் நெடுமை, படிமை, நேர்மை எனும் சொற்களாக உருவாக்கம் பெற்றுள்ளன.

    தி / த்தி விகுதி

    தொழிற்பெயர் விகுதிகளில் ஒன்றாக நன்னூலார் குறிப்பிடுவதாக ஆறுமுக நாவலர் தம் உரையில் சுட்டியுள்ளார். இவ்விகுதியை ஆக்கப்பெயர் விகுதியாகச் சொல்லாக்க அறிஞர்கள் கூறுகின்றனர். இதற்குச் சான்றாக  ‘மறதி’ என்பது போன்ற சொற்களை எடுத்துக்காட்டியுள்ளனர். இவ்விகுதி பரிபாடலில் ஓரிடத்தில் மட்டும் பெயராக்க விகுதியாகச் செயல்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது.

    ஊர்+தி > ஊர்தி (வாகனம்)

    பெயருடன் ‘தி’ விகுதி சேர்தல் என்னும் வாய்ப்பாடு அடிப்படையில் இச்சொல் ஆக்கம்பெற்றுள்ளது. இதேபோல் அமைதி என்னும் சொல்லும் ஆக்கம் பெற்றுள்ளது. மேலும் சிலப்பதிகாரத்தில் ‘த்தி’ என்னும் விகுதிபெற்று உழத்தி, காட்டாளத்தி, தனித்தி, திறவாளத்தி, பொய்த்தி போன்ற சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன.

    வினையடியுடன் சேரும் விகுதிகள்

    நர் விகுதி

    இலக்கண நூல்களில் ‘நர்’ விகுதி வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் விகுதி வகைகளைப் பட்டியலிட்டுக் காட்டும் நன்னூலார் குறிப்பிட்ட விகுதிகளை வகைப்படுத்திக் கூறிவிட்டு, காலமாற்றத்திற்கு ஏற்ப விகுதிகளின் வளர்ச்சி மாறும் என்பதால் பிறவும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், ‘நர்’ விகுதி சங்க இலக்கியங்களிலேயே பரவலாக்கம் பெற்ற ஒன்றாக இருக்கையில் ஏன் பவணந்தியார்; உள்ளிட்ட இலக்கணிகள் அதை விகுதியாகப் பதிவு செய்யவில்லை என்ற கேள்வி மேலோங்குகிறது.

    ‘நர்’ விகுதி பற்றி இ.மறைமலை ச.இராசேந்திரன், பொற்கோ போன்றோர் குறிப்பிட்டுள்ளனர். இவ்விகுதி வினையடிகளுடன் மட்டும் சேர்ந்து பெயர்ச்சொற்களை உருவாக்குகின்றது. இக்கருத்துக்களின் அடிப்படையில் சிலப்பதிகாரத்தை நோக்கும்பொழுது, இயங்கு, ஆடு, பகரு, ஓசு, வாழ், பொரு, செய்கு, வதி, கொழு, தேரூர் முதலிய வினையடிகளுடன் ‘நர்’ விகுதி சேர்ந்து சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது.

    இயங்குநர்(செயல்படுபவர்)

    ஆடுநர்(ஆடுவோர்)

    பொருநர்(போர்க்களம் பாடுவோர்)

    வாழ்நர்(உயிர் வாழ்வோர்)

    வதியுநர்(வாழ்வோர்)

    முதலிய சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன. இக்காலத்தில் ஓட்டுநர், நடத்துநர், இயக்குநர் போன்ற சொற்கள் ‘நர்’ விகுதி சேர்ந்து ஆக்கம்பெற்று மக்கள் வழக்கில் இடம்பெற்றுள்ளதை இங்கு நினைவில்கொள்ள வேண்டும்.

    ப்பு விகுதி

    தொழிற்பெயர் விகுதியாகவும் தெரிநிலை வினையெச்ச விகுதியாகவும் ‘ப்பு’ பயின்று வரும் என்பது நன்னூலார் கருத்து. ஆனால், ஆக்கப் பெயர் விகுதியாக ச. அகத்தியலிங்கம், ச. இராசேந்திரன், ஆ. வேலுப்பிள்ளை, எச்.சித்திரபுத்திரன் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

    இவர்களின் விகுதிப் பகுப்பு அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் உள்ள சொற்களை அணுகும்பொழுது சில சொற்கள் இவ்விகுதியின் துணையுடன் ஆக்கம் பெற்றுள்ளன. அவை அதிர்ப்பு, ஆர்ப்பு, இடிப்பு, தொடுப்பு, பிணிப்பு, முரிப்பு, வாசிப்பு ஆகியவை வினை நிகழ்வினை வெளிப்படுத்தும் சொற்களாக ஆக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    வை/வி/வு விகுதிகள்

    ’வை’ என்பதைத் தொழிற்பெயர் விகுதிகளில் ஒன்றாக நன்னூலார் குறிப்பிடுகின்றார். சொல்லாக்க முறையில் இவ்விகுதி ஆக்க விகுதியாகப் பயன்பாட்டில் உள்ளதைப் பல அறிஞர்கள் சுட்டியுள்ளனர். அவர்கள் கருத்துப்படி சிலப்பதிகாரத்தில் உள்ள சொற்களை அணுகும்பொழுது தேய்வை, நடுவை, புடைவை, போர்வை, மடவை போன்ற சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன.

    அதேபோல் வி விகுதி பெற்று இறைவி, ஆற்றுவி, கேள்வி போன்ற சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன. வு விகுதி பெற்றும் சில சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன. அவை வரைவு, வியர்வு மகவு போன்றவை ஆகும். இதில் மகவு என்பது மட்டும் பெயரடியுடன் வு விகுதி இணைந்து ஆக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

    பெயர் மற்றும் வினையுடன் சேர்ந்து வரும் விகுதிகள்

    ச்சி விகுதி

    இலக்கண நூலாசிரியர்கள் ச்சி என்பதை விகுதியாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும் நன்னூலார் பிறவும் என்று விகுதிகள் பற்றிக் கூறுமிடத்து குறிப்பிட்டுச் சென்றுள்ளதால் ச்சி என்பதை ஆக்கப்பெயர் விகுதியா சொல்லாக்கச் சிந்தனையாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். அவர்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு சிலப்பதிகாரத்தில் உள்ள சொற்களை ஆராயும் பொழுது பத்துக்கும் மேற்பட்ட சொற்கள் ச்சி விகுதி இணைவால் ஆக்கம் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.

    அடை, இகழ், இடை, புணர், நுளை, நெல்லி, இறை, பொய், வாரி, விழை போன்ற சொற்களுடன் ச்சி விகுதி இணைந்து அடைச்சி, இகழ்ச்சி, இடைச்சி, புணர்ச்சி, நுளைச்சி, நெல்லிச்சி, இறைச்சி, பொய்ச்சி, வாரிச்சி, விழைச்சி ஆகிய சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன.

    மதிப்புரை

    சமகாலத்தில் விகுதிகளின் துணைகொண்டு துறைகள்தோறும் பல்வேறு சொற்கள் ஆக்கப்பெறுகின்றன. அவற்றிற்கு காப்பியங்களில் முதலாவதாக வைத்துப் போற்றப்படும் சிலப்பதிகாரத்தில் உள்ள சொல்லாக்க விகுதிகள் முன்னோடியாக இடம்பெற்றுள்ளன என்பதை இச்சிறு ஆய்வின்மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. மேலும் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஆக்க விகுதிகளைப் பெயருடன் சேர்ந்துவரும் விகுதிகள் வினையடியுடன் சேர்ந்து வரும் விகுதிகள் பெயர் மற்றும் வினையுடன் இணைந்து வரும் விகுதிகள் என்னும் மூன்றுநிலைகளில் காணமுடிகின்றது.அதேபோல சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலச்சூழலில் சொற்களின் பயன்பாடு எவ்வாறு இருந்துள்ளதை என்பதையும் சொற்களின் வளர்ச்சி பற்றிய தெளிவையும் காணமுடிகிறது.

    பார்வை நூல்கள்

    • அகத்தியலிங்கம்,ச., மொழியியல், சொல்லியல், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1971.
    • அன்பழகன், க., சங்க இலக்கிய ஒருபொருட் பல சொல்லாக்கத்தில் விகுதிகள், தொல்காப்பியம் சங்கத் தமிழ் ஒரு புதிய பார்வை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 2006.
    • இரமேஷ், தி.அ.,சங்க இலக்கியச் சொல்லாக்க நெறிமுறைகள்(பத்துப்பாட்டு), சென்னைப் பல்கலைக்கழகம், 2013.
    • தொல்காப்பியர், தொல்காப்பியம், சொல்லதிகாரம், இளம்பூரணம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2003.
    • பொற்கோ, இலக்கண உலகில் புதிய பார்வை, தமிழ் நிலையம், சென்னை, 1985.
    • பவணந்தி முனிவர், நன்னூல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004
    • சிலப்பதிகாரம் மூலமும் அரும்பத மற்றும் அடியார்க்கு நல்லார் உரையும், உ.வே.சா. நூல்நிலையம், சென்னை, 2008.

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
    தமிழ்த்துறை, தூய நெஞ்சக்  கல்லூரி (தன்னாட்சி)
    திருப்பத்தூர்.

    Share
  • வெண்ணிலை: பாலியல் சிக்கலும் பெண்களின் நிலையும்

    -பேரா.ம. பரிமளா தேவி

    முன்னுரை

    பெண்ணின் ஆளுமை இதுவரை பெண்கள் பற்றிச் சொல்லப்பட்டு வந்த நியாயங்கள், உருவாக்கப்பட்டு வந்த மதிப்புகள், கற்பிக்கப்பட்ட அல்லது விதிக்கப்பட்ட புனிதங்கள், என்பனவற்றை அடையாளம் கண்டு விளக்குவது, பெண்ணின் சுயமான விருப்பங்கள், உணா்வுகள், ஆசைகள், எதிர்பார்ப்புகள் இவற்றின் முறிவுகள் முதலியவை புனைவுகளில் எவ்வாறு வெளிப்படுத்தப்பட்டுள்ளன என்பதை ஆராய்வது. புனைகதை கால சிருஷ்டியே எனினும் சமுதாய மாற்றத்தை மாறும் சமுதாயத்தின் நிலையைக் காட்டும் வரலாற்றுச் சான்றாகவும் விளங்குகிறது. சிறப்பான கதைக்களங்கள் சமகாலச் சான்றாக வரலாற்றாசிரியராலும் சமூகவியலாளர்களாலும் போற்றப்படுகின்றது என்கிறார் கா.சிவத்தம்பி (நாவலும் வாழ்க்கையும், கா.சிவத்தம்பி. ப.20)

    வெண்ணிலை சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் பெண்களை மையப்படுத்தி எழுதியுள்ள தீராக்குறை, கிடந்த கோலம், தாய்மை, பாரம் சுமக்கிறவள், உள்ளிருந்து உடற்றும் பசி, வயிற்றுப்புருசன், வெண்ணிலை, பேரிளம் பெண், பேதை, கொடிகொம்பு, தொப்புள்கொடி முதலிய கதைகளில் பாலியல் சிக்கலும் பெண்களின் நிலையும் எவ்வாறு இடம்பெற்றுள்ளது  என்பதை பெண்ணிய நோக்கில் ஆய்வுக்கு உட்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    பெண்ணடிமை

    தற்போதைய சூழலில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குப் போகும்போது குடும்பத்தைப் பொருளாதார ரீதியில் மேம்படுத்திக்  கொண்டு செல்ல வழியுண்டு. படித்த பெண்களை வீட்டிற்குள்ளே பூட்டிவைக்க தேவையில்லை என்கிற கருத்து நிலவி வருகின்றது. அவர்களின் உழைப்பிற்கு மதிப்பூதியம் அளிக்கப்படாமல் சம்பளம் இல்லாத வேலைக்காரியாகப் பெண்கள் இருந்தது அந்தக்காலத்தில். ஆனால் தற்போது பெண்களும் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்கு வேலைக்குச் செல்கின்றனா். ஆணும் பெண்ணும் வேலைக்குச் செல்கின்ற குடும்பத்தில் இருவரும் வேலைகளைப் பகிர்ந்து செய்ய வேண்டும். அப்படி இல்லாமல் வேலையிலிருந்து வீட்டிற்கு வந்ததும் கணவன் மனைவியிடம் அதிகாரம் செலுத்துபவனாகவே இருக்கின்றான். ஆண் வீட்டு வேலைகளைச் செய்வது கேவலமானது, மற்றவர்களால் நகைப்பிற்குரியச் செயலாகப் பார்க்கப்படும் என்கிற எண்ணமானது அவனுடைய பொதுபுத்தியில் ஆழமாக பதிந்துள்ளது. மேலும் ஆண்களின் கண்ணோட்டத்தில் வீட்டில் வெளியில் வேலைகளைச் செய்வதற்கும் குழந்தைகளைப் பராமரிப்பது அவர்களுடைய வேலை என்றும் அவர்களின் அனுமதி இல்லாமலும் பாலுறவு வைத்து கொள்ளலாம் என்கிற எண்ணமும் தன்னை எதிர்த்து பேசக்கூடாதவளாக இருக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்ற நிதர்சன உலகத்தை அப்படியே கிடந்த கோலம் கதையில் காட்சிகளாக்கியுள்ளார்.

    “கிடந்த கோலம்” என்கிற கதையில் பெருமாள், வனிதா இருவரும் பள்ளியில் வேலை பார்க்கும் ஆசிரியர்கள்.  இருவருக்கும் வார விடுமுறை நாள் எவ்வாறு இருக்கின்றது என்பதை இக்கதையானது சித்திரிக்கின்றது.   திருமால் பாற்கடலில் பள்ளிக்கொண்டிருப்பதுபோல் படுத்துக்கொண்டு ஆனந்த விகடனைப் புரட்டிக் கொண்டிருக்கின்றான் பெருமாள். சிலிண்டா் தெருவில் இருக்கு, தூக்கி கொண்டு வந்து உள்ள வைய்யி என்கிறாள்.  எப்பப் பார்த்தாலும் நய்யி நய்யின்னு சொல்லிக்கொண்டிருப்பியா, தூக்கி உள்ள வைச்சா வைய்யி இல்லைன்னா பேசாம கெட என்கிறான்.  அரைமுடி தேங்காயாவது வாங்கிக்கொண்டு வந்துகொடு என்கிறாள். சமைக்கும்போது குழாயில் தண்ணீா் வந்துவிடுகின்றது. குடத்தைக் கொண்டு போய் வரிசையில் வை என்கிறாள். தண்ணீா் பிடிக்கிறது, துணி துவைக்கிறது, கடைக்குப் போவது, பாத்திரம் துலக்குவது, சமைப்பது, குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது, அடுத்த நாள் வகுப்பிற்கான பாடத்திட்டத்தை எழுதுவது என ஓயாமல் வேலை செய்து கொண்டிருக்கின்றாள் வனிதா.

    தமிழ்ச் சமூகத்தில் குடும்ப அமைப்பானது பெண்கள் இல்லற பந்தத்திலிருந்து எளிதாக வெளிவர முடியாத குடும்பச்சிறையாக உள்ளது.  எந்தவொரு முடிவையும் பெண்ணால் எடுக்க இயலாத சூழலே உள்ளது. ஓர் ஆண் தன்னை எளிதில் இல்லற வாழ்விலிருந்து விடுவித்துக்கொள்ள அத்தனை நியாங்களையும் அவனுக்கான இடத்தையும் சுதந்தரத்தையும் வழங்கியுள்ளது. பெண் கட்டுப்பாடுகளுடன் வளா்க்கப்பட்டவள். அவளுடைய சிந்தனையும் குடும்பம், குழந்தை, சமூகம் என அனைவரின் எதிர்பார்ப்புகளையும் ஈடுசெய்பவளாகவே இருக்கின்றாள் என்பதையும் பின்வருமாறு பதிவுசெய்துள்ளார்.

    “கல்யாணம் செய்யாமலே இருந்து இருக்கலாம். ஏதோ சம்பாதிக்கிறோம் பிழைக்கிறோம் என்று வாழ்க்கையை ஓட்டியிருக்கலாம். யார் அழுதார்கள் இப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்தே தீர வேண்டுமென்று புலம்புகின்றாள்”. (பக்க எண் 75  ) குழந்தைகளை நினைத்தும் அப்பா அம்மாவை நினைத்தும் உடன் பணியாற்றுபவர்கள் தன்னைத் தவறாக நினைத்து விடக்கூடாது என்றும் அவள் துன்பங்களை அடிமனதில் போட்டு அமுக்கிவிடுகின்றாள்.

    எதிர்ப்பு:

    தன்னுடைய எல்லாம் துயரங்களையும் அடக்கிக்கொண்டு அவனோடு வாழ்ந்து வரும்போது இருக்கிற தலைவலியில இன்னும் தலைவலி எதுக்குன்னு அவனுடைய  கட்டாயப் பாலியல் உறவுக்குத் தயாராகின்றாள். குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்யாத காரணத்தினால் காண்டம் வாங்குவதிலும் கணவன் ஆர்வம் காட்டுவதில்லை.  இவள் கடைக்குச் சென்று காண்டம் வாங்கிவருகின்றாள் மிகவும் வருத்தத்துடன். சில சமயம் உருப்படியாகப் பல சமயம் சொதப்பலாக உறவுகொள்கின்றதைப் பார்த்து அடக்க மாட்டாமல் சிரிக்கின்றாள். இறுதியாக “இதுக்கு மட்டும் தான் நீயா ” (பக்க எண் 77 ) என்று அவனைப் பார்த்துக் கேட்பதாக முடிகின்றது. பெண்ணை உடல் உறவினால் மட்டும் மகிழ்ச்சியா வாழ வைக்கமுடியும் என்கிற பிம்பத்தை உடைகின்றார். பெண்கள் பாலியல் உறவில் மட்டும் மகிழ்ச்சியை அடைவதில்லை. அவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்பதைத் புரிந்துக்கொண்டு வாழ்க்கையை நடத்தினால் மட்டும் இல்லறம் மகிழ்ச்சியாக இருக்கும் என்கிற கருத்தை உணர்த்துகின்றார்.

    ஒருதலைக் காதல்

    சங்கீதா ஒன்பதாவது படிக்கும் போதே செபாஸ்டின் அவளைப் பின்தொடா்ந்து போயிட்டு இருந்தான்.  அவள் காதலைச் சொல்லவில்லை.   நீ இல்லன்னா நான் செத்துருவேன். சங்கீதாவைக் காதலிக்கிறன்னு சொன்ன இன்னொரு பையனை அடித்து உதைக்கிறான்.  அவள் நினைவாவே ஊா்ல சுற்றிக்கொண்டு இருக்கின்றான். ஒரு முறை இரத்தத்தில் காதல் கடிதம் எழுதிக்கொடுக்கின்றான்.  நாலு வருசமா அவள் பின்னாடியே சுற்றிக்கொண்டு இருந்தவன். அவளுக்கு என்னைய பிடிக்கலைன்னாலும் பரவால்ல. நான் அவளக் காதலிக்கிறேன்னு பிடிவாதமாக இருந்தவன். ஒருநாள் வேன் ஓட்டிட்டு போகும்போது மரத்தில் மோதி அடிபட்டு இறந்து போக   அவனுடைய நண்பர்கள் “ஆணவக்காரியால் உன் உயிர் உதிர்ந்தது.  நண்பர்களிடம் உன் நினைவுகள் என்றும் மலர்ந்தபடி இருக்கும்” என்னும் வால்போஸ்டர் அடிக்கின்றனா்.  அதைப்பார்த்து கண்ணீர் விடுகின்றாள்.

    ஒருதலையாகக் காதலித்து கையைப் பிளேடால அறுத்து, இரத்தத்தில் கடிதம் எழுதியது, நீ இல்லையின்னா செத்துருவேன் என்று பயமுறுத்தியது, அடிதடி, சண்டை இது தான் சங்கீதா வாழ்க்கையையில நடந்தது.  பள்ளிக்கூடத்தில் ஒன்பதாவது படிக்கின்ற பெண்ணைத் துரத்தித் துரத்தி காதலிப்பது என்பது பொருத்தமில்லாத ஒன்று.  பெண்ணின் மனம் காதலிக்கும் பக்குவத்தை அடையும் வயது என்பது வேறு.  மேலும் தான் காதலைச் சொல்லாத காரணத்தினால் தன் நினைவினால் தான் வண்டியை ஓட்டி இறந்துவிட்டான் என்று நம்புவது. ஆண் எது சொன்னாலும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற மனநிலை.  செபாஸ்டின் நண்பர்கள் அடித்த வால்போஸ்டா் பெண்ணை அடிமையாய் பார்க்கும் ஆண்களின் பொதுப்புத்தியைக் காட்டுகிறது. சமூக அமைப்பானது தான் செய்யாத தவறுக்கும் குற்றவுணா்ச்சிக்கும் எவ்வாறு ஆளாக்குகிறது என்பதனை அறியமுடிகின்றது.

    உள்ளிருந்து உடற்றும் பசி

    இக்கதையானது வாசகர்களை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்திய ஒன்று.  அண்ணன் தங்கைகளுடன் பாலியல் உறவு வைத்துள்ளான் என்று கதையில் வருகின்றது.  அண்ணன் தங்கை பாலியல் உறவு வைத்துக்கொள்வது என்பது இக்காலக்கட்டத்தில் பொருந்தாக் காமமாகப் பார்க்கப்படுகின்றது. இக்கதையில் ஆசிரியர் அண்ணனின் பாலியல் உறவு குறித்து எந்த இடத்திலும் கண்டிக்கவில்லை. ஆதரித்தும் பேசவில்லை. மிக இயல்பான ஒன்றாக எழுதிச்செல்கின்றார். எப்படி மழையானது பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாமல் உலகில் உள்ள உயிர்களை வருத்துமோ அதுபோல இவ்வுலகத்தில் உள்ளவா்களுக்கு உடல்பசி வருத்தும் என்பதைத் தெரிவித்து இருக்கின்றார். ஆறுமுகம் இரண்டு தங்கைகளைத் திருமணம் செய்துகொடுத்துவிட்டுத் தன் இளமைக்காலம் கழிந்த பின்பு மூன்றாவது தங்கையுடன் நள்ளிரவில் அவள் தொடை மீது படுத்து இயங்க ஆரம்பிக்கின்றான். இருட்டில் அவன் தங்கை பயத்துடன் மிகுந்த பேரதிர்ச்சிக்கு உள்ளாகின்றாள்.   அவன் மிகுந்த முனகலோடு அக்கா அவுங்க ஓங்கிட்ட வேற ஒன்னும் சொல்லலையா என்கிறான்.

    ஆறுமுகத்தின் தந்தை நான்கு குழந்தைகள் பிறந்த பின்பு மற்றொருவன் பொண்டாட்டியை அழைத்துக்கொண்டு வீட்டைவிட்டு ஓடிவிடுகின்றான்.  அந்த துயரத்திலே அவன் அம்மா இறந்து விடுகின்றாள்.  சிறு வயதில் இருந்து கஷ்டப்பட்டு கூலி வேலை செய்து இரு தங்கைகளைத் திருமணம் செய்து வைக்கின்றான்.  அதற்குள் அவனுக்கு திருமண வயது தாண்டிவிட்டதன் காரணத்தினால் யாரும் பெண்கொடுக்கவில்லை.  மலர் தனக்குத்  திருமணம் வேண்டாம் என்றும் தன் அண்ணாவை தன்னை விட்டால் யார் பார்த்துக்கொள்வார்கள் என்று நினைக்கும் பெண்.  தன் அண்ணனினால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்படுகின்ற தங்கைகள் என்பதாக முடிகின்றது.

    மேலும் பெண்களுக்கு எப்பவும் உழைப்பு இருந்துக்கொண்டேதான் இருக்கும்.   “கோடிஸ்வரன் வீட்டுக்குப் போனாலும் பொம்பளைக உழைச்சாதேன் கௌரி கஞ்சி”(பக்க எண் 129) என்கிறாள் மலா்.  பெண் உழைப்பைச் சுரண்டுதல், பாலியல் அடிமையாகப் பயன்படுத்தும் அவலத்தைக் இக்கதையில் காணமுடிகின்றது.

    வெண்ணிலை

    இந்த உலகினில் கைவிடப்பட்ட பெண்களின் சான்றாக வெண்ணிலையின் நாயகி இருக்கின்றாள். வேலைக்கு வரும் பெண்களிடம் பாலியல் சீண்டல் வல்லுறவில் ஈடுபடுதல் என்பது மிகச் சாதாரணமான ஒன்றாக இருக்கின்றது என்பதைப் பார்க்க முடிகின்றது.   பெண் எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாத நிலையில் உள்ளாள்.  அவள் பேச்சை இந்தச் சமூகம் காதுகொடுத்து கேட்பதே இல்லை.  முள் மீது சேலை விழுந்தாலும் சேலைமீது முள் விழுந்தாலும் சேலைக்குத் தான் நஷ்டம் என்னும் தொடா் நினைவுக்கு வருகின்றது. பெண்ணும் அப்படிப்பட்டவள் தான்.  வெண்ணிலை என்றால் தமிழ் அகராதி அளிக்கும் பொருள் ஈடுகாட்டாது வாங்கும் கடன் என்கிறது. ஆனால் ஆசிரியர் கையறு நிலையில் வெண்ணிலையைப் பயன்படுத்துகின்றார். பதினைந்து வயது பெண் ஜெராக்ஸ் கடையில் வேலைபார்க்கின்றாள். தன் அண்ணன் கைவிட்ட நிலையில் ஊா்விட்டு ஊா் வந்து தன் தாய் தந்தையைக் காப்பாற்ற நினைத்து வேலைக்குச் செல்கின்றாள்.  கடையில் தன் தந்தையின் வயதையொத்த முதலாளி கையைப் பிடித்து இழுத்ததும் அந்த வேலையை விட்டுவிடுகின்றாள். ஆஸ்துமாவினால் இறந்த தந்தையை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்குக் கொண்டு போக பணம் இல்லாமல் நடு ரோட்டில் உதவிக்காக காத்திருக்கின்ற அவலம்.

    பேரிளம் பெண்

    நாற்பது வயதைக் கடந்த ஆண் தன்னை இளமையாகக் காட்டிக்கொள்ளும் ஏற்றுக்கொள்ளும் சமூகம் பெண் தன்னை மாற்றிக்கொள்ள நினைத்தால் அது தவறாகப் பார்க்கப்படும். மேலும் வயது ஏற ஏற தன் இளமை போய்கொண்டிருப்பதை எந்த பெண்ணும் இயல்பாகக் கடந்துவிடுவாள் என்ற பொதுபுத்தி உள்ளது.   ஆனால் ஈஸ்வரி தன்னை அலங்காரம் செய்து கொள்வது குறித்து ஆசிரியருக்கு எந்தப் புகாரும் இல்லை. ஆனால் தன்னை அலங்காரம் செய்து கொள்வதினால் தன்னிடம் உள்ள நல்ல குணங்களும் மாறிப்போனதாகக் காட்டுகின்றார். பேறு காலத்திற்கு வந்திருக்கும் மூத்த மகளை திட்டுவதாக எழுதியிருப்பது, தன்னை அலங்காரம் செய்து கொள்வதினால் பெண்ணின் இரக்ககுணமும் மாறிவிடுமா என்கிற கேள்வியை உண்டாகுகின்றது.  தன் மூத்த மகளின் பேறுகாலம் நெருங்கிக் கொண்டிருக்கின்ற நேரத்தில் ஈஸ்வரி பக்கத்து வீட்டில் நடக்கின்ற நலங்கு நிகழ்ச்சிக்குச் செல்கின்றாள். அப்படிச் செல்லும்போது தன்னை எப்படி அலங்காரம் செய்து கொள்கின்றாள். நலங்கு வீட்டில் எதையெல்லாம் தனக்கு வேண்டும் என்று ஆசை கொள்வதாக கதையானது நகர்கின்றது. நாலு விரல் அளவு கை வைத்த சட்டை தன்கிட்ட இல்லயே.  தைக்க கொடுக்கணும்.  நெஞ்சுத் தெரிய இடுப்பு ஒடுக்கித் தைத்த சுடிதார் இல்லையே. சின்ன மகளின் சுடிதாரை எடுத்து ஒரு நாளேனும் போட வேண்டும் என்று ஆசைப்படுகின்றாள். மேலும் பின் முதுகு தாழ்ந்து தெரியும் படி வைத்த சட்டை, கருப்பு பாடி நலங்குக்கு எடுத்து வைக்கின்றாள். கண்ணாடி முன் நின்று சரிந்த மார்பகங்களை இரு உள்ளங்கைகளால் தூக்கிப் பார்த்து வருத்தப்படுகின்றாள்.  மகளுடைய புதிய ஜட்டியை எடுத்து போட்டு கொள்ள ஆசை.  வெளியில் போகும்போது மட்டும் அணியும் உயர்குதிச்செருப்பு எடுத்து வைக்கின்றாள். ஆனால் தன்னால் நிகழ்ச்சிக்குப் போக முடியாது என்று தெரிந்தவுடன் தன் மகளைத் திட்டுவதாக முடிகின்றது.  தன் இளமைகாலம் தீர்ந்து போய்க்கொண்டிருக்கும் போது தன் இளமையை மீட்டெடுக்கத் துடிக்கும் பெண்ணாகப் பேரிளம்பெண் இருகின்றாள்.

    கொடிகொம்பு

    கணவன் தன் குறையை மறைப்பதற்காகத் தினமும் குடித்துவிட்டு வருகிறான். மனைவியை மலடி என்று திட்டித்தீர்க்கின்றான். வாணி தன் குடிகாரக் கணவனால் தன் வாழ்க்கையே சீரழிந்தும் அவனோடு வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றாள். விஜயனிடம் பல முறை சொல்லியிருக்கின்றாள். எல்லோர் முன்னாடியும் என்ன திட்டாதன்னு. ஆனால் அவன் கேட்பதாக இல்லை. அவளுக்குத் தான் மலடி இல்லை என்பதை நீருபிக்கத் தோன்றும். ஆனால் தாய் தந்தைக்காக தன்னுடைய கோபத்தை அடக்கிக்கொள்கின்றாள். பிரியத்தோடு தொட்டால் தூக்கம் வருது, நாளைக்கு என்பான், பயந்தாங்கொள்ளி… நாலாவது நாள் தாண்டினால் சாக்கு சொல்வான் வயிறு வலிப்பதாக… இல்லையென்றால் வீட்டிற்குள் நுழையும் போதே சண்டையிழுப்பான் குடிப்போதையில். எழமாட்டாத பயன்.  பம்முவதற்குத்தானோ இந்தக் குடி என்று நினைக்கின்றாள்.

    தன்னுடைய இயலாமை வெளிக்காட்டாமல் மனைவியை மலடி என்று குற்றம் சுமத்தும் கணவன். கெட்ட வார்த்தையில் திட்டுவது அவமானப்படுத்துவது எனத் தொடர்ந்து செய்கின்றான். இறுதியில் தன் மாமனார் குளித்துக்கொண்டிருக்கும் போது தெரியாமல் குளியலறையின்  உள்ளே நுழைந்து விடுகின்றாள். அப்போது அவள் உடனே வெளியேறாமல் அவர் மீது தண்ணீர் அடித்து விளையாடுகின்றாள் என்று கதையானது முடிகின்றது. தன்னை நீருபிக்க அவள் எடுக்கும் முயற்சியாகவே தோன்றுகிறது.

    தொப்புள்கொடி

    மனநலம் பாதிக்கப்பட்ட கார்த்திகா ஊரில் சுற்றிக்கொண்டிருக்கின்றாள்.  ஒரு நாள் குழந்தையை பெற்றெடுக்கின்றாள்.  ஊரில் உள்ளவர்கள் அனைவரும் வருத்தம் அடைகின்றனா்.  இந்த பயித்தியத்தக் கூட விட்டு வைக்கவில்லையே என்று.கார்த்திக்காவுக்குக் குழந்தைக்குப் பால்கொடுக்க தெரியவில்லை. குழந்தை இறந்துவிடுகின்றது. கார்த்திகா இறந்த குழந்தையை  கையில் வைத்துக்கொண்டு ஊரெல்லாம் சுற்றி வருகின்றாள். ஊரில் உள்ளவர்கள் எல்லாம் இழிவாகப் பேசுகின்றனா்.  இறுதியில் கார்த்திகாவின் பெற்றோரே அவளை விஷம் வைத்து கொல்கின்றனா். கார்த்திகா பிறக்கும்போது தரணி ஆளப்பிறந்தவள் என்று தாய் மகிழ்ச்சியடைகின்றாள். இறுதியல் மகளை விஷம் வைத்து கொள்கின்றனா்.

    முடிவுரை

    வெண்ணிலைத் சிறுகதைத்தொகுப்பில் இடம்பெற்றுள்ள கதைகளில் பெண்கள் அனைவரும் கைவிடப்பட்டவர்களாகத் துயரம் நிறைந்தவர்களாகப் பிறரிடம் உதவியை எதிப்பார்க்கின்றவர்களாகவும் அடிமைப்படுத்தப்பட்டும் கிடக்கின்றனா். பெண்கள் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சிக்கல் பாலியல் சார்ந்ததாகவே இருக்கின்றது. கிடந்த கோலம் கதையில் அவள் எவ்வளவு துன்பம் அடைந்தாலும் அவன் இரவு படுக்கும்போது திரும்பிக்கொள்ளக்கூடாது என்று நினைக்கின்றாள். அதற்காகவே காண்டம் வாங்கிவருகின்றாள். கடமைக்கு பாலியல் இச்சைக்கு உறவுக்கொள்ளும் அவனைப் பார்த்து சிரிப்பதன் மூலம் பாலியல் உறவின் மூலம் என்றும் அடிமைப்படுத்திவிட முடியாது என்பதையும் அறியமுடிகின்றது. உள்ளிருந்து உடற்றும் பசி மிக முக்கியமான சிக்கல் அண்ணனுக்கும் தங்கைகளுக்குமான பாலியல் உறவு. வெண்ணிலை கதையிலும் தன் மகளை ஒத்த வயதுடைய பெண்ணிடம் முதலாளி பாலியல் சீண்டலில் ஈடுபடுவது. பேரிளம் பெண் கதையில் தன்னை அலங்காரப்படுத்திக் கொண்டு செல்லும் ஈஸ்வரி மற்ற ஆடவர்களை நினைக்கின்றாள். மேலும் தன் கணவனையே மயக்க வேண்டும் என்று நினைக்கின்றாள். அதன் மூலம் தான் ஆசைப்பட்டதையெல்லாம் அடைய முடியும் என்று நம்புகின்றாள். கொடிகொம்பு கதையில் தன் கணவனிடம் குறையை வெறுத்து தன் மாமனாரின் மேல் ஆசைப்படுவதாக கதையை முடிகின்றார். தொப்புள்கொடியில் பெண் பயித்தியமாக இருந்தாலும் போகப் பொருளாக பார்க்கப்படுகின்றாள் என்பதைக் குறிப்பிடுகின்றார். மேற்குறிப்பிட்ட கதைகளில் பெண் உடல் சார்ந்து எவ்வாறு அடிமைப் படுத்தப்பட்டிருக்கின்றாள் என்பதை அறிய முடிகின்றது.

    *****

    கட்டுரையாளர் – உதவிப்பேராசிரியா்,
    தமிழ்த்துறை, தூயநெஞ்சக் கல்லூரி,
    திருப்பத்தூர், வேலூர் மாவட்டம்.

     

     

    Share
  • சேக்கிழார் பா நயம் – 14 

    =======================

    திருச்சி புலவர் இராமமூர்த்தி

    ————————————————–

     

    திருவாரூரில் மனுநீதிச் சோழன் மைந்தன் ஏறிச்  சென்ற தேர்க்காலில் அடிபட்டு மரணமடைந்த கன்றுக்காக அரசன் மனம் கலங்குகிறான். அப்போது மறையோர் இதற்குப் பிராயச்சித்தம் என்ற கழுவாயை மறைநூலில் சொன்னபடியம், மனுநீதி முறைப்படியும் செய்தால் அரசன் மைந்தன் செய்த தவறுக்குக்  கழுவாய்  தேடலாம் என்கிறார்கள். மறைநூலையும் மனுநீதியையும் நன்கறிந்த மன்னன், அமைச்சர்களும் வேதியர்களும் கூறியதை ‘ வழக்கு’என்றே ஒத்துக்கொள்ள வில்லை! அதனைச் சழக்கு என்று இகழ்கிறான். ‘’நான் மைந்தனை இழக்கிறேனே என்ற வருத்தத்தால் , எனக்கு நீங்கள் கூறும்  வழக்கம், தான் இப்போதுதான் ஈன்ற, மிகவும்  இளமையான கன்றினைப் பறிகொடுத்து அதனால் அந்தத்  தாய்ப்பசு அடையும் மிகுந்த வருத்தத்தைத் தீர்க்கும் மருந்தாகி , அந்நோயைத்  தீர்க்குமா?’’ என்று கேட்கிறான். அதனை அடுத்து எக்காலத்துக்கும், எந்நாட்டிற்கும், எப்போதும் பொருந்தும் ஓர் அரச நீதியை வகுத்துக் கூறுகிறான்.

    ‘’ஒருநாட்டைக் காக்கும் அரசன் அக்காவல் கடமையைச் செய்யும்போது, நாட்டுக்கு, அதாவது நாட்டு மக்களுக்கு வாழ்க்கையில் இடையூறாகி, விளைவிக்கும் மிகப்பெரிய ஐவகை அச்சங்களையும்  தீர்த்து அரசாளவேண்டும்’’ என்கிறான். அவை: தன்னால் , தன்பரிசனத்தால், பகைத்திறனால் , கள்வரால், மற்ற கொடிய உயிர்களால் நிகழும் அச்சசங்களாகும்.  மற்ற நால்வகைகளாலும் வரும் இடையூறுகளை அரசன்தானே தீர்க்க வேண்டும்? ஆனால் அரசன் தன்னால் வரும் இடையூற்றினைத் தானே தீர்க்கும் கடப்பாடு உடையவன் ஆவான். அவனாலேயே வரும் இடையூற்றை யார் தீர்க்க வல்லார்?

    ஒருமுறை இராமன் நீராடக் செல்லும் போது , குளக்கரையில் தம் வில்லை நேராகத் தரையில் ஊன்றி நிறுத்தி விட்டு, நீர்நிலையில் நீராடித் திரும்பினான். அப்போது தாம் ஊன்றிய வில்லின் கீழே கொஞ்சம் குருதியைக் கண்டான்! உடனே வில்லை எடுத்துக் கீழே பார்த்தான். அவனது ஊன்றிய வில்லின் கீழே ஒரு தவளை நசுங்கிக் காயத்துடன் இருந்தத்தகு. இராமன் பதறிப்போய் அந்தத் தவளையைக் கையில் ஏந்தித் தடவிக் கொடுத்து காயத்துக்கு மருந்திட்டான். அவன் கரம் பட்டவுடன் தவளையின் அச்சமும் நோயும் நீக்கியது. அவன் தவளையிடம் ‘’ தவளையை நீ குளத்தில் இருந்து கத்தும் ஓசை மிகவும் பெரிதாகவே இருக்குமே? நான் வில்லை ஊன்றிய நேரத்தில் உன்மேல் என் வில்லின் நுனி பட்டு அழுத்திய போது, நீ வலிதாங்காமல் கத்தியிருந்தால், இப்படிக்கு காயம் அடைந்திடிருக்க மாட்டாயே?’’ என்றார். உடனே தவளை வேறெவராலும் எனக்குத் தீங்கு நேர்ந்தால், நான் இராமா, காப்பாற்று! என்று உன்னை வேண்டுவேன்.  ஆனால் உன்னாலேயே எனக்குத் தீங்கு வந்தால் உன்னைவிடப் பெரிய கடவுளாக  யாரையும் நான் அறியேனே!’’ என்றதாம். ஆம்! அரசன் தன்னால் மக்களுக்கு வரும் இடையூற்றைத் தீர்க்க , அந்நாட்டின் அரசனைவிடப் பெரியவர் இல்லாததால் தானே அந்த அச்சத்தை நீக்க வேண்டும். அதனை இந்த வரிசையில் ‘’தன்னால்’’ என்ற சொல்லால் தன்னை முதலில் கூறினான். அரசனால் மக்களுக்கு வரும் இடையூறுகள், அதிக வரியை வசூலித்தல்,அதனையும் வன்முறையால் கவர்தல், மிகுந்த ஏழைக்கு  வரிவிலக்கு அளிக்காமல் , அவரிடமும் உள்ளதைப் பிடுங்குதல், மக்களை வருத்தும் தீங்குகளை நீக்காதிருத்தல், மக்கள் காண்பதற்கு  அரிய நிலையில்காவலர் நடுவில்  இருத்தல், கடுமையான சொற்களைக் கூறுதல், தன்னை இடித்துக் கூறும் நல்லவர் சொல்லை மதித்து ஏற்றுக்கொள்ளாமல் இருத்தல், அறநிலையங்களின் சொத்துக்களை அபகரித்தல் ஆகியவை.  இவை என்றைக்கும், எந்நாட்டுக்கும், இன்றைக்கும்பொருந்துவன அல்லவா?

    அடுத்துத்  தன்  பரிசனத்தால் என்ற தொடர். அரசனின் பரிசனம் என்பன, அவரால் நியமிக்கப் பெற்றும், அவரது உறவு, நட்பு முதலான சலுகையைப் பெற்றும் , இறுமாப்புடன் அதிகாரம் செலுத்துவோர். இவர்களை புறநானூறு, வயலில் தாமே புகுந்து அழிவுகளை செய்யும் யானைகளை போன்றோர் என்று கூறுகிறது. அவர்களது தகுதி மீறிய அடக்குமுறையையும் சேக்கிழார் குறிக்கிறார். அதிகாரிகளுக்கு சட்டத்தைக்  கடைப்பிடிக்கத்  தெரியுமே தவிர  நியாயத்தை வழங்கத் தெரியாது. சட்டப்படி வெள்ள  நிவாரணமோ, பஞ்ச நிவாரணமோ வழங்க இடப்பட்ட ஆணையைச் செயல் படுத்துவார்கள். அது சரியான நிவாரணத்தை அளித்து , நியாயமான  முழு உதவியையும் செய்யுமா என்பதை உறுதி செய்ய முடியாது. முழு வீட்டையும் வெள்ளத்தில் இழந்தவர் அரசின் எளிய நிவாரணத்தைக் கொண்டு என்ன செய்ய முடியும்?

    அடுத்து ஊனமிகு பகைத்திறத்தால் என்ற தொடர். நாட்டை அழித்து வென்று மக்களை துன்புறுத்தும் வேற்று நாட்டுப் பகைவர், உள்நாட்டிலேயே அழிவுச் செயல்கள் செய்து மக்களைத் துன்புறுத்துவோர், அவர்கள் மக்கள் மேய்க்கும் பசுக்களைக் கவர்வர். கொள்ளையிட்டு மக்களின் பொருள்களைக் கவர்வோர். பெண்களைக் கற்பழித்துத் துன்புறுத்திக் கொல்வோர் ஆகியோராவர். இவர்களைத் தலையெடுக்க விடாமல் அடக்கி வைக்கவும், அழிக்கவும் வேண்டும்.

    அடுத்து கள்வர். இவர்கள் உள்நாட்டில்  வழிப்பறி செய்வோர்.இவர்களை தண்டிக்க   வேண்டும்.இழந்தவற்றை மீட்டெடுத்து வழங்க வவேண்டும். அடுத்து உயிர்கள். அவை மக்களைத் துன்புறுத்தி,அடித்து உண்ணும் கொடிய விலங்குகள். இவற்றை வேட்டையாடுவது மன்னன் செயல்.

    ‘’பயந் தீர்த்துக் காத்தலே காவலன் கடமை என்பதை “இத்தனை காலமு நினது சிலைக்கீழ்த் தங்கி இனிதுண்டு தீங்கின்றி இருந்தோம்’’ என்று கண்ணப்பர்புராணத்தில் மக்கள் கூறும் பாதுகாவல்  நிலை.இந்நாள் நவீனர் அரசாட்சியிலே நமது நாட்டுக் குற்றத்தீர்வு நீதிச்சட்டமும், குடிகளின் உயிருடம்புகளையும், உடைமைகளையும், காவல்புரிதலையே குறிக்கோளாகக் கொண்டு, உடம்பைப் பொறுத்த குற்றங்கள் – உடைமையைப் பொறுத்த குற்றங்கள் என்று (Offences against perosn & offences against property) இரு பெரும் பிரிவுகளாக வகுத்ததும், அக்குற்றம் செய்தார்க்குத் தண்டம் விதித்ததும், குற்றங்கள் நிகழாமல் குடிகாவல் விதித்ததும், இங்கு வைத்து ஒப்பு நோக்கிக் காணத்தக்கன’’. என்று சம்பந்த சரணாலயர் கூறுகிறார். இனி சேக்கிழார் எழுதிய முழுப்பாடலையும் படிப்போம்.

    “மாநிலங் காவலன் ஆவான் மன்னுயிர் காக்குங் காலைத்
     தான்  அதனுக்கு இடையூறு தன்னால், தன் பரிசனத்தால்,
     ஊன மிகு பகைத் திறத்தால், கள்வரால், உயிர்கள்  தம்மால்
     ஆன பயம் ஐந்தும் தீர்த்து அறம் காப்பான் அல்லனோ?”

    இந்தப்பாடல் இக்கால மக்களின் அச்சம் போக்கும் அரசின் கடமைகளைப் பொதுவாகக் கூறுகிறது.அக்காலச் சோழரின் முதலமைச்சரான சேக்கிழாரின் தீர்க்க தரிசனம் இதில் தெரிகிறது.

    Share
  • மருதூர் அந்தாதியில் இடம்பெற்றுள்ள புராணக்கூறுகள்

    -திருமதி. ப. மாக்கில்மா

    இலக்கிய உலகில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் தொடங்கிய சிற்றிலக்கியங்கள் பொருள் அமைப்பிலும் வடிவ அமைப்பிலும் சங்க இலக்கியங்கள் தொண்ணூற்றாறு வகைகளாகப் பாட்டியல் நூலார் பாகுபடுத்தியுள்ளனர். அவற்றுள் “அந்தாதி”என்பது சிற்றிலக்கிய வகையினுள் ஒன்றாகும். அந்தாதி இலக்கியங்களுள் தலைமலை கண்ட தேவர் இயற்றிய மருதூர் அந்தாதி என்னும் நூலில் அமைந்துள்ள புராணக் கூறுகளான மார்க்கண்டேய வரலாறு, அடிமுடி தேடுதல், மாலுக்கு சக்கரம் அளித்தல் முப்புரம் எரித்தது, பிரமன் சிரம் கொய்தது, பாம்பை அணியாகக் கொண்டது, அருச்சனனுக்கு அருளியது முதலியன பற்றி ஆய்வு செய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    புராணம்  விளக்கம்

    புராணம் என்பது பழங்கதை. மாக்கதை எனப் பெயர் பெறுகிறது.காலம் செல்லச் செல்ல இவையே சமயத்தின் ஊடாடுகிறது. சமயம் புராணத்திற்குக் கருவியாக அமைகிறது. சைவ சமயத்திலும், புராண வரலாறுகள் சமய பக்திக்கும் நல்லொழுக்கத்திற்கும் நடைமுறையில், உயர்ந்த ஞானத்தையும் சாமானியப் புராணக் கதையையும் தழுவி எழுந்தவையே கோயில்கள். கோயில்களில் ஸ்தூலமான பொருள் புராணக் கதைகளேயாகும்.

    புராணக்கூறு என்பது இறைவன் செய்துள்ள அற்புதச் செயல்கள்,இறைவன் கொண்ட இல்பலி போன்ற இறைவனின் செயல்கள் பற்றி மருதூர் அந்தாதி மூலம் கீழ்க்கண்டவாறு காணலாம்.

    மார்க்கண்டேய வரலாறு

      மார்க்கண்டேயரது பெற்றோரின் தவத்தை மெச்சிய இறைவன் அவர்களிடத்து “அறிவும் திறமும் உடைய பதினாறு ஆண்டுகள் ஆயுளையுடைய மகனா? அன்றி அறிவற்ற நீண்ட ஆயுளையுடைய மகனா? யார் வேண்டும்? எனக் கேட்க அவர்கள் அறிவுடைய பதினாறு வயது ஆயுளையுடைய மகனையே வேண்டிப் பெற்றார்” அதன்படி மார்க்கண்டேயனுக்கு பதினாறு வயதில் இறப்பு என்று குறிக்கப்பட்டது. பதினாறாவது வயது முடியும் தருவாயில் அவரது உயிரைக் கொல்லுதற்காக இயமன் வர அந்நிலையில் மார்க்கண்டேயர் இறைவனை விடாது வழிபாடு செய்தார். குறிப்பிட்ட காலம் வந்ததும் இயமன் எங்கு தேடியும் மார்க்கண்டேயர் மீது பாசக்கயிறை வீசி அக்கயிறு சிவலிங்கத்தின் மீதுப்படடது. சினங்கொண்ட சிவபெருமான் இயமனைக் காலால் உதைத்து மார்க்கண்டேயருக்கு என்றும் பதினாறாக வயது இருக்குமாறு அருளுகிறார். இப்புராணக் கருத்தை,

         “முனியாய மானுடர்க் காவந்
                  துகனை முனிந்தவனே”1  என்று மருதூரந்தாதி பாடல் வரிகள் விளக்குகின்றன.

    அடிமுடி தேடுதல்

     படைத்தற் பிரமனும், காத்தற் திருமாலும் தமக்குள் யார் பெரியவர் என்று போட்டி மேற்கொண்டு தம் கருத்தைச் சிவபெருமானிடம் முறையிட்டனர்.”உங்கள் இருவரில் ஒருவர் எனது திருவடியையும் ஒருவர் திருமுடியையும் காணுதல் வேண்டும். கண்டு யார் முதலில் வருகிறார்களோ அவர்ளே பெரியவர்கள்”என்று சிவபெருமான் கூறுகிறார். திருமால் பன்றியாக உருவெடுத்து அடியையும், பிரமன் அன்னமாக உருவெடுத்து முடியையும் தேடிச் சென்றனர். சிவபிரான் அவர்கள் காணமுடியாத வண்ணம் சோதி வடிவமாகத் தோற்றமளித்தார். இப்புராணக் கருத்தை,

          “யாலை யனங்கம் வருந்தியுந்
                    தேடற் கரியவன்கை”2  என்ற பாடல் வரிகள் காட்டுகின்றன.

    மாலுக்குச் சக்கரம் அளித்தது

    சிவபெருமான் உள்ள சக்கராயுதம் “சலந்தாசுரன்”என்ற அசுரனைக் கொன்ற சிறப்புடையது. அவ்வரிய சக்கராயுதத்தைப் பெறுதற்காகத் திருமால் ஆயிரம் மலர்கள் கொண்டு சிவனை நாள்தோறும் வழிபட்டார். ஒரு நாள் வழிபாட்டின் போது ஆயிரம் மலர்களில் ஒரு மலர் குறைவது கண்டு, அதற்காக வருந்தாது அம்மலருக்குப் பதில் தான் தன் கண்ணையே மலராக இட்டு வழிபட்டார். மாலின் இவ்வன்பிற்கு இரங்கிச் சிவன் சக்கராயுதத்தை மாலுக்கு வழங்கினார். இப்புராணக் கருத்தினை,

                         “ ரஞ்சக் கருத்தை யரிக்களித்
                           தார்மரு தூர ரங்கி”3

    என்ற மருதூரந்தாதி பாடல் வரிகள் விளக்குகின்றன.

    முப்புரம் எரித்தது

    தாருகாட்சன், கமலாடசன், வித்துயுன்மாலி மூவரும் பொன், வெள்ளி, இரும்பு கோட்டைகளாக மாறுவதற்குரிய வரத்தினைப் பிரம்மாவிடம் பெற்றனர். அவ்வசுரர்கள் அக்கோட்டைகளோடு பறந்து சென்று தாம் விரும்பிய ஊர்களை அழித்து விட்டு மீண்டும் தம்மிடம் வந்துவிடுவர் இவனது துன்பம் தாங்காது தேவர்கள் சிவபெருமானிடம் முறையிட்டனர். சிவபெருமான் அவ்வசுரர்களை அழிப்பதற்காகப் பூமியைத் தேராக்கி, சூரிய சந்திரர்களைச் சக்கரங்களாக்கி, நாள் வேதங்களைக் குதிரையாக்கி, பிரம்மனை தேர்ப்பாகனாக்கி, மேருவை வில்லாக வளைத்தார். வாசுகியை நாணாக்கினார். திருமாலை அம்பாகவும் கொண்டார். இவர்கள் தத்தம் உதவியால் சிவன் முப்புரங்களை அழிக்கப் போகிறார் என எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது சிவபெருமான் இதனைக் கேட்டு சிரிக்க அச்சிரிப்பே முப்புரங்களை எரத்தது. இப்புராணக் கருத்தை,

                    “ பகைத்த பருப் பதங்கடந் தான்”4    என்ற மருதூரந்தாதிப் பாடல் வரி குறிப்பிடுகிறது.

    பிரமன் சிரம் கொய்தது

    பிரமனது ஐந்து தலைகளில் ஒன்றைச் சிவபிரான் கிள்ளி எரிந்ததாகப் பல கதைகள் கூறப்படுகின்றன. அவற்றுள் ஒன்று அந்தாதியில் இடம்பெற்றுள்ளது. பிரமன் சிவபெருமானினும் தான் உயர்ந்தவராக எண்ணிப் பிதற்றியமையால் பெருமான் அவ்வாறு பிதற்றிய தலையைக் கொய்து எறிந்தார்.என்றும் சிவபெருமான் தனக்கு மகனாகப் பிறக்க வேண்டும் என்றும் பிரமன் வரம் கேட்டபோது, அப்பெருமான் இட்ட சாபத்தால் ஐந்தாவது தலை வெடித்து உதிர்ந்தது என்றும் புராணக்கதைகள் பலவாகக் காணப்பெறுகின்றன இதனை,

                                “கையாலை யனங்கங்கொண் டோன்மரு
                                 தூர னடி வணங்கே”5 ஏன்ற பாடல் வரி குறிப்பிடுகிறது.

    பாம்பை அணியாகக் கொண்டது

    கருடனும் பாம்பும் ஒரு தந்தையின் இரு மனைவியரின் மக்கள். இவர்களுக்குள் பல காரணங்களால் பகைமை ஏற்பட்டு கருடன், பாம்புகள்,  கருடனுக்கு அஞ்சி சிவபெருமானிடம் அடைக்கலம் புகுந்தன. சிவபெருமான் அவற்றைத் தமது அணிகளாக அணிந்து கொண்டார்.இப்புராணக் கருத்தை,

                  “………………………………உய்ய
                  வரியர விந்தம் புனைவோன்
                  சிலம்பி லதர்மனித”6 என்ற பாடல் வரிகளில் குறிப்பிடுகின்றன.

    அருச்சனனுக்கு அருளியது

    பாண்டவர்களின் இளையவர் அருச்சுனன் தன் பங்கு நாட்டைப் பெறவேண்டும் எனப் பாண்டவர்கள் கவலை கொண்டிருந்தனர். அச்சமயம் இந்திரன் ஒரு முதிய அந்தணன் வடிவில் தோன்றி அருச்சுனனை ஒத்த வீரர் உலகில் இல்லை என்றும் சிவபெருமானை நேரில் கண்டு படைக்கலங்களைப் பெற்று எதிரிகளை வெல்லலாம் என்றும் அறிவுரை வழங்கினார்.அவ் ஆலோசனைப்படி அருச்சுனன் காட்டில் கடுந்தவம் இருந்தார். அப்பொழுது ஒரு பன்றி அவரைக் கொல்ல வருவது போல் நெருங்கி வந்தது. வீரம் மிகுந்துள்ள அருச்சுனன் பூசையை மறந்து வில்லை வளைத்து பன்றியை நோக்கி எய்தார். பன்றி அம்பு பட்டு விழுந்தது. அக்கணையை எய்தவன் ஒரு வேடுவன். இவர்கள் இருவரின் முதலில் எய்தவர் யார் என்ற விவாதம் ஏற்பட்டு அதன் வழி அவர்கட்குள் விற்போரும் நடந்தது. விற்போரில் வெல்ல எண்ணி வேடனின் தாளை அருச்சுனன் பிடித்தார். அங்கு வேடுவனைக் காணவில்லை. அவ்வேடுவன் மிகப்பொலிவு பெற்ற சிவபெருமானாகி உமையுடன் காட்சி அளித்தார். அருச்சுனன் வணங்க அவர் படைக்கலங்களையும் வரங்களையும் அருளினார். இறைவனின் இத்தகைய அற்புதச் செயல்களைப்

             “பார்த்ததற்கு வாய்த்த வெற்றி
             முலரம்பை யாரஞ் சடையார்”7 என்ற பாடல் வரிகள் விளக்குகின்றன.

    இவ்லாறு ஆசிரியர் மருதூர் அந்தாதி நூலுள் உள்ள புராணக் கூறுகளான மார்க்கண்டேய வரலாறு, அடிமுடி தேடியது, முப்புரம் எரித்தது, பிரமன் சிரம் கொய்தது. பாம்பை அணியாகக் கொண்டது, அருச்சுனனுக்கு அருளியது போன்ற புராணக்கூறுகள் ஆகியவற்றை இம் மருதூரந்தாதி நூலின் மூலம் தெற்றென விளக்கியுள்ளார்.

    ஆய்வு முடிவுகள்

    புராணம் பற்றிய கருத்துக்கள் விளக்கிக் கூறப்பட்டுள்ளன. இறைவனின் அற்புதச் செயல்களான அருச்சுனனுக்கு அருளியது, பாம்பை அணியாகக் கொண்டது, முப்புரம் எரித்தது போன்ற அற்புத நிகழ்வுகள் எழுந்த சூழல் விளக்கப்பட்டுள்ளது. இறைவனின் திருவடியையும் திருமுடியையும் தேடும் பொருட்டாகத் திருமாலும் பிரமனும் தேவியும் காணமுடியாத இறைவன் சோதி வடிவாக எழுந்த சூழல் விளக்கப்பட்டுள்ளது. இறைவன் திருமாலுக்குச் சக்கராயுதம் அளித்த நிகழ்வு விளக்கப்பட்டுள்ளது. இறைவன் பிரமனது சிரம் கொய்த நிகழ்வு பற்றி விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

    அடிக்குறிப்புகள்

    1. மருதூரந்தாதி பாடல் எண் – 79
    2. மருதூரந்தாதி பாடல் எண் – 10
    3. மருதூரந்தாதி பாடல் எண் – 29
    4. மருதூரந்தாதி பாடல் எண் – 67
    5. மருதூரந்தாதி பாடல் எண் – 10
    6. மருதூரந்தாதி பாடல் எண் – 8
    7. மருதூரந்தாதி பாடல் எண் – 16

    *****

    கட்டுரையாளர் – தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,
    விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்),
    வீராச்சிப்பாளையம், சங்ககிரி.

     

    Share
  • கொளஞ்சியின்  கவிதைகளில் பெண்களின் நிலை

    -ர. பரமேஸ்வரி

    முன்னுரை:

    கொளஞ்சியின் கவிதைகளில் பல்வேறு செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. பெண்கள் சமுதாயத்தில் தன்னுரிமை பெற்றவர்களாகவும் அனைவருக்கும் நிகரான முறையிலும் இடம்பெறுதல் அவசியம். சமுதாயத்தில் பெண்களின் நிலைகளைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

    சமுதாயத்தில் பெண்களின் நிலைகளாவன:

    பெண்களின் நிலைகளை பல்வேறு கவிதைகளில் எடுத்துகூறியுள்ளார். எந்நிலையிலும் பெண்களுக்கு இத்தகைய நிகழ்வுகள் நடைபெறக் கூடாது என்று வலியுறுத்தப்படுகின்றது.

    1. விதவை நிலை
    2. கைம்பெண் மறுமணம்
    3. வரதட்சணை
    4. பாலியல் வன்கொடுமை
    5. பெண்சிசுக் கொலை

    விதவை நிலை:

    ஒரு பெண்ணுடைய வாழ்விற்குத் தாலி வேலியைப் போன்றது. ஒரு பெண் திருமணம் ஆனபிறகு கணவன் இறந்துவிட்டால்; அவளை விதவை என்று அழைக்கின்றனர். திருமணம் ஆகாதவரை கன்னி என்று சமுதாயம் கூறுகின்றது. கணவன்  இறந்துவிட்டால் உடனே அந்தப் பெண்ணின் தாலியைக் கழற்றிவிட்டு பூவும், பொட்டும் இல்லாமல் விதவைக் கோலத்தினை அடைகின்றாள்.

    உதாரணமாக, ஊட்டியில் மலர்க்கண்காட்சி நடக்கின்றது. அவள் மட்டும் மலரை சூடிக்கொள்ளமுடியாமல் அழுகிறாள் என்பதை,

          “ஊட்டியில் மலர்க்கண்காட்சி, எல்லா மலரும்
          கண்சிமிட்டி சிரித்தன, அவள் மட்டும்
          மலரைச் சூடிக்கொள்ள முடியாமல்
          தனியே அழுகிறாள்.” என்ற கவிதை வரிகள் மூலம் பெண்ணின் நெஞ்சுக் குமுறலை எடுத்துக்காட்டுகின்றார். மேலும் கைம்பெண்ணின் அவலநிலையை,

            “சிறகு அறுந்து போன வண்ணத்துப் பூச்சு”

    என்ற வரிகள் பெண்ணின் மனதை மிகுந்த துன்பத்திற்கு ஆளாக்குகின்றன என்பதை நுணுக்கமாக வெளிப்படுத்துகின்றார். விதவை இல்லாத, பெண்கள் சமுதாயமாக மாறவேண்டும் என்றும், விதவைப் பெண்ணின் நிலையைப் பற்றியும் பாவேந்தர் எடுத்துக்காட்டுவதாவது,

          “பேடகன்ற அன்றிலைப் போல் மனைவி செத்தால்
          பெருங்கிழவன் காதல் செயப்பெண் கேட்கின்றான்
          வாடாத பூப்போன்ற மங்கை நல்லாள்
          மணவாளன் இறந்தால் பின் மணத்தல் தீதோ”

    பூவும் பொட்டும் அணியும், மணியும் தானே போயிற்று. உயிர் உடலின் உணர்ச்சி என்னிடம்தான் இருக்கின்றது என்ற பெண்ணாக இருந்து பேசுகின்றார் பாவேந்தர்.

    கைம்பெண் மறுமணம்:

    கணவனை இழந்த பெண்கள் வேறு ஒரு திருமணம் செய்துகொண்டால் இந்தச் சமுதாயம்  நிம்மதியாக வாழவிடுவதில்லை. கணவனை இழந்தவள் கைம்பெண் அல்ல என்ற கருத்தினை உலகிற்கு உணர்த்துதல் வேண்டும். அவளுக்கும் உயிர் உணர்ச்சி மறுமணம், வாழ்வு இவை அனைத்தும் உண்டு என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதனை,

          “கணவனை இழந்தவள் கைம்பெண் அல்ல
          கருத்தை விலக்குங்கள் அவளுக்கும் உயிருண்டு
          அவளுக்கும் உணர்ச்சியுண்டு, அவளுக்கும் மறுமணம் உண்டு
          அவளுக்கும் வாழ்வு உண்டு உணர்ந்து பாருங்கள்” என்ற வரி கைம்பெண்ணின் உடைய மறுமணம் பற்றி விவரிக்கிறது. கைம்பெண்ணின் மறுமணம் பற்றி விவரிக்கப்படுகிறது.

    மேலும் கைம்பெண்ணை வாழவிடாமல் துன்பத்திற்கு ஆளாக்குகின்ற நிலையினை,

          “மாலையிட்ட மணவாளன்  இறந்துவிட்டால்
          மங்கை நல்லாள் என்ன செய்வாள் அவளை நீங்கள்
          ஆலையிட்ட கரும்பாக்கி உலக இன்பம்
          அணுவளவும் அடையாமல் சாகச் செய்வீர்” என்ற வரிகளின் வாயிலாகப் பெண்களை வாழவிடாமல் துன்பப்படுத்தும் நிலையினை பாரதிதாசன் எடுத்தியம்பியுள்ளார்.

    வரதட்சிணை:

    நாட்டின் முதிர்கன்னிகள் பெருகுவதற்கு அடிப்படையான காரணம் என்னவென்பதை ஆராய்ந்து பார்த்தால் வரதட்சணைக் கொடுமையே ஆகும். ஆரம்பத்தில் மணமகனுக்கு என்று சில பரிசுப்பொருட்களை பெண் வீட்டாரே விரும்பிக்கொடுத்தனர். நாளடைவில் அப்பரிசுப்பொருளை கேட்டுப்பெறும் நிலையானது  ஏற்பட்டு விட்டது.

    ஒரு வீட்டில் விடிந்தால் திருமணம் நடக்கஇருக்கின்றது. பெண் வீட்டில் நகைகளை எப்படி போடுவது என்ற கவலை. மாப்பிள்ளை வீட்டில் எப்படி வாங்குவது என்ற கவலை. இதனை கொளஞ்சிக் கவிஞர் அவர்கள்,

         “வாழ்க்கை ஒப்பந்தம் விடிந்தால் திருமணம்
          பெண் வீட்டிற்குத் திருமணக் கவலை
          பாவம் மாப்பிள்ளைக்கோ  நகைகள் பற்றிய கவலை
          எப்பொழுது ஒழியும் வரதட்சணைக் கொடுமை”

    என்ற கவிதை வரிகள் பெண்களின் மனக்குமுறலைப் படம்பிடித்துக் காட்டுகிறது. மேலும் வரதட்சிணைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது

    “திருமணங்கள் நிச்சயிக்கப்படுவது சொர்க்கத்தில் அல்ல.
             ரொக்கத்தில் தங்கத்தில்….”

    என்ற கவிதை வரிகளில் அமைந்த கருத்தினை மாற்றியமைத்திடல் வேண்டும். இதைப்போன்ற நிகழ்வுகள் பெண் இனத்திற்கு நடக்கக்கூடாது என்பது வலியுறுத்திக் கூறப்படுகிறது.

    பாலியல் வன்கொடுமை:

    இன்று பாலியல் வன்கொடுமையானது அதிக அளவில் நிகழ்கின்றது. இன்றைய காலகட்டத்தில் பெற்றோர்கள் குழந்தைகளை  வெளியில் அனுப்புவதற்கு அச்சப்படுகின்றனர். தொலைக்காட்சிகளிலும் செய்தித்தாள்களிலும் இதுபற்றிய செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இன்றைய சமுதாயத்தில் பெண்கள் வயிற்றுப் பசிக்காக விலைமகளாக மாறும் நிலையினைக் காணமுடிகிறது. இதனை,

           “எனக்கு வயிற்றுப்பசி உனக்கு உடற்பசி
            பாய்விரித்தாள் பந்திக்குத் தயாரானாள்
            இருள் அப்பிக்கொண்டது”

    என்ற வரிகளின் வாயிலாக பெண்களின் சமுதாயமானது துன்ப நிலையினை எய்துகின்றது என்பதை விளக்கியுள்ளார்.

    முடிவுரை

    விதவையின் நிலை, கைம்பெண் நிலை, வரதட்சணைக் கொடுமை, பாலியல் வன்கொடுமை, இன்றைய பெண்கள் படும் அவல நிலையினையும் பெண்கள் பாதிப்பிற்குள்ளாகும் இடங்களை எல்லாம் கொளஞ்சி தமது கவிதையின் வாயிலாக உலகிற்கு உணர்த்தியுள்ளார் என்பது அறியமுடிகிறது.

    அடிக்குறிப்பு:

    1.கொளஞ்சிக் கவிதைகளின் தொகுப்பு
    2. பாரதிதாசன் கவிதைத்தொகுப்பு பக்க எண் : 40
    3. இலக்கிய வரலாறு, மு. வரதராசன், பக்க எண் 28
    4. தலித்தியம், சங்க இலக்கியம், பக்க எண் 38.

    *****

    கட்டுரையாளர் – தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர்,
    விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி (மகளிர்),
    சங்ககிரி, சேலம் மாவட்டம்.

     

    Share
  • நூல் மதிப்புரை – இரட்டைக் காப்பியங்களில் துணைநிலை மாந்தர்

    மதிப்புரையாளர் – சோம. கிருஷ்ணமூர்த்தி (முனைவர் பட்ட ஆய்வாளர்)

    நூலாசிரியர் – முனைவர் த. ஆதித்தன்

    வெளியீடு – முக்கடல் பதிப்பகம்

    11, முப்பத்து மூன்றாம் தெரு,

    பாலாஜி நகர் விரிவு 3

    புழுதிவாக்கம்

    சென்னை – 600 091

    கைப்பேசி : 9444365642

    ISBN 978-81-907781-7-7

    முதல் பதிப்பு : ஏப்ரல் 2017

    பக்கம் : 152 விலை : ரூ. 120

       தமிழ் மொழியில் எண்ணற்ற இலக்கிய, இலக்கண வகைகள் பல்கிப் பெருகியுள்ளன. அதிலும் குறிப்பாக, காப்பியங்கள் மிகப் பெருமை வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. இவை ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறுங் காப்பியங்கள் என வகைப்படுத்தப் பட்டுள்ளன.

         சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி ஆகியன முறையே ஐம்பெருங் காப்பியங்களாகவும் நீலகேசி, சூளாமணி, நாககுமார காவியம், உதயண குமார காவியம், யசோதர காவியம் ஆகியன முறையே ஐம்பெருங் காப்பியங்களாகவும் பட்டியலிட்டுள்ளனர்.

         ஐம்பெருங் காப்பியங்களுள் சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக்காப்பியங்கள் என வழங்கப்படுகின்றன. ஏனெனில் கதைத் தொடர்பாலும் காலத் தொடர்பாலும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதால் அவ்வாறு வழங்கப்பெறுகின்றது.

          மறுபிறப்புக் கொள்கைகளைப் பல்வேறு சமயங்களும் எடுத்துக் கூறுவது போல் இரட்டைக் காப்பியங்களான சிலப்பதிகாரமும் மணிமேகலையும் மறுபிறப்பு பற்றியும் முற்பிறவி மாந்தர்களைப் பற்றியும் அவர்களது வரலாறு மற்றும் காப்பியப் போக்கிற்கு எவ்வாறு துணைபுரிகின்றனர் என்பதைப் பற்றியும் நூலாசிரியர் முதல் இயலில் தௌpவுபடுத்தியுள்ளார்.

         சிலப்பதிகாரக் காப்பியத்தில் உள்ள கோவலன், கண்ணகி, மாதவி  ஆகியோர் சமணத் தொடர்புடையவர்களாகவும் அவர்களது மகள் மணிமேகலை பௌத்தத் தொடர்புடையவளாகவும் இருப்பதையும், இந்தத் திடீர் மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதனையும் நூலாசிரியர் விளக்கியுள்ள திறம் சிறப்பிற்குரியது.

         மணிமேகலையின் சிறப்பிற்கு அமுதசுரபியும் ஒரு காரணமாகும். மணிமேகலைக் காப்பியத்தில் வரும் புண்ணியராசன்தான் முற்பிறவியில் ஆபுத்திரனாகவும் அவனிடம்தான் அமுதசுரபி இருந்ததையும் அது எவ்வாறு மணிபல்லவத்தீவில் உள்ள கோமுகி என்னும் பொய்கைக்கு வந்தது என்பதையும் பின்னர் மணிமேகலைக்குக் கிடைத்த விதத்தையும் நூலாசிரியர் மிகவும் நிரலாகக் கூறியுள்ளார்.

        இல்லறமே நல்லறம் என்பதற்கேற்ப குடும்பவாழ்க்கை என்பது மிகச் சீரிய அமைப்பாகும். தனிமனிதன் குடும்பமாவதும் குடும்பம் சமுதாயமாவதும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது. சமுதாயம் நலம் பெற குடும்பச் சூழ்நிலையே அடிப்படை ஆதாரமாகும்.

        சிலப்பதிகாரத் துணைநிலை மாந்தர்களில் இல்லற மாந்தர்களாகப் பலர் இடம்பெற்றுள்ளனர். அவர்களுள் மாசாத்துவான் – அவனது மனைவி, மாநாய்கன் – அவனது மனைவி, கார்த்திகை – வார்த்திகன், பாண்டியன் நெடுஞ்செழியன் – கோப்பெருந்தேவி, சேரன் செங்குட்டுவன் – வேண்மாள், மாதரி, ஐயை போன்றோர் இடம் பெற்றிருப்பதனை நூலாசிரியர் மிகத் தௌpவாக இரண்டாம் இயலில் எடுத்தாண்டுள்ளார்.

        மணிமேகலைக் காப்பியத்தில் துணைநிலை மாந்தர்களில் இல்லற மாந்தர்களாகச் சுதமதி, கோதமை, ஆதிரை – சாதுவன், பீலிவளை – நெடுமுடிக்கிள்ளி, வயந்தமாலை ஆகியோர் இடம்பெற்றிருப்பதனையும் நூலாசிரியர் அழகாக விளக்கியுள்ளார்.

         துறவறம் என்பது குடும்ப வாழ்க்கையை விட்டு விலகுவது அல்ல. மாறாக, உலகப் பொருள்களின் மேலுள்ள பற்றுக்களை விடுதலே துறவறமாகும்.

        இரட்டைக் காப்பியங்களில் துணைநிலை மாந்தர்களில் துறவற மாந்தர்கள் பற்றி இவ்வியல் விளக்குவதாக அமைந்துள்ளது. சிலப்பதிகாரத்தில் மாடலன் மறையோன், மாங்காட்டு மறையோன், கவுந்தி அடிகள் ஆகியோர் துறவற மாந்தர்களாகக் காட்டப்பட்டுள்ளனர். அவர்களுள் மாடலன் மறையோன் சைவத் துறவியாகவும் மாங்காட்டு மறையோன் வைணவத் துறவியாகவும் கவுந்தி அடிகள் சமணத் துறவியாகவும் காட்டப்பட்டுள்ளனர்.

        மணிமேகலையில் அறவண அடிகள், விருச்சிக முனிவர் துணைநிலை மாந்தர்களுள் துறவற மாந்தர்களாக இடம்பெற்றுள்ளனர்.

    “அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்”

    “உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர்”

    “ஊழ்வினை உருத்துவந்து ஊட்டும்”

    என்ற கோட்பாட்டை உடைய சிலப்பதிகாரமும்,

    “மனித நேயத்தை” உணர்த்துவதற்காகவே படைக்கப்பட்ட மணிமேகலையும் சிறந்த இரட்டைக் காப்பியங்களாகவும் அந்தக் காப்பிய வளர்ச்சிக்குப் பெருந்துணையாகவும் துணைமை மாந்தர்கள் முதன்மைத் தன்மையுடன் விளங்குவதை நூலாசிரியர் ஆய்வு நோக்கில் கையாண்டுள்ள திறம் மிகவும் போற்றுதலுக்குரியது. இந்நூலானது ஆய்வு மாணவர்களுக்குச் சிறந்த வழிகாட்டி நூலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.

    மதிப்புரையாளர் – சோம. கிருஷ்ணமூர்த்தி (முனைவர் பட்ட ஆய்வாளர்)

    தமிழ்த்துறைத் தலைவர்,

    பிர்லா பொதுப் பள்ளி,

    தோகா, கத்தார்.

      —————————————————————————————————————————

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 136

    போதுமென்ற மனமே..

    இளம் வயதினர் எதை எதையோ எட்டிப் பிடிக்க விரும்புவர். அந்த முயற்சியில் என்னென்ன அபாயங்கள் காத்திருக்குமோ என்ற அச்சத்தால் மூத்தவர்கள் அவர்களுக்கு அறிவுரை கூறுவார்கள்: `போதுமென்ற மனமே பொன்செய்யும் மருந்து!’

    இந்த அறிவுரையை ஏற்று நடந்தால், இறுதியில் இளைஞர்களுக்கு ஏமாற்றம்தான் ஏற்படும்.

    விரும்பியதை அடைவது என்றால் பிறருக்குச் சேரவேண்டியதை தட்டிப் பறிப்பதல்ல. இருப்பினும், இன்றைய உலகில் பலரும் பணம், பதவி என்று பேராசையை வளர்த்துகொண்டே போக, எந்தப் பதவியில், ஏதாவது செய்து, அமர்ந்தால் குறுகிய காலத்தில் பெரும் பொருள் திரட்டலாம் என்று மட்டுமே அவர்கள் சிந்தனை போகிறது.

    பணம், புகழ், அல்லது சமூக அந்தஸ்து என்று நாடுபவருக்கு அதெல்லாம் கிடைத்தாலும் நிறைவு கிட்டுமா என்பது சந்தேகம்தான்.

    அளவுக்கு அதிகமான சொத்தால் நிறைவா?

    அரசியல் என்பது மக்களுக்காக என்று யார் கூறினார்கள்? இத்துறையைத் தேர்ந்தெடுப்பவர்களில் பெரும்பான்மையோர் தம் வாழ்நாட்களில் உபயோகப்படுத்த முடியாத அளவுக்கு சொத்து சேர்க்கின்றனர். கோடி கோடியாகப் பணம், நகை, கார், பங்களா என்று எவ்வளவு சேர்த்தாலும் மனநிறைவு கிட்டுவதில்லை.

    திருப்தி கிடைக்காதபோதுதான் ஆசைகள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. ஒரு பெண்ணுக்கு ஆயிரக்கணக்கான காலணிகள் எதற்கு? நூறு காரட் எடைகொண்ட வைர அட்டிகையை அணியத்தான் முடியுமா? இதையெல்லாம் அவர்கள் யோசிப்பதே கிடையாது.

    “தன் சுகத்தையே பெரிதாக எண்ணி வாழ்பவனுக்கு இறுதியில் ஏமாற்றம்தான்!” (ஐன்ஸ்டீன்).

    அதிகமாகச் சேர்க்கச் சேர்க்க, வெறுமைதான் ஏற்படுகிறது. அந்த வெறுமையைப் போக்க, மேலும் கொள்ளையடித்தாக வேண்டும். சட்டத்தின் பிடிகளில் அகப்பட்டுக்கொண்டால், `என்மேல் எந்தத் தவறும் இல்லை, எல்லாம் எதிரிகளின் சதி!’ என்று சாதிப்பார்கள்!

    பாராட்டால் நிறைவா?

    `நாம் மிகுந்த செல்வந்தராக ஆனால் எல்லாரும் மதிப்பார்கள். நம் பேச்சுக்கு மதிப்பு கிடைக்கும்,’ என்று கணக்குப்போட்டு, திறமை, உழைப்பு, அதிர்ஷ்டம் எல்லாம் சேர, ஒருவர் பணக்காரராக ஆகலாம். ஆனால், பிறர் பாராட்ட வேண்டும் என்ற இலக்கைக் குறி வைத்தால், அதை அடையும்போது நமக்கும் மகிழ்ச்சி கிட்டும் என்பது என்ன நிச்சயம்?

    `பிறர் பாராட்டினால்தான் நம் மனம் குளிரும்’ என்றிருப்பவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள் என்றே தோன்றுகிறது. எதிர்பார்த்த பாராட்டு கிடைக்காதபோது மனம் வெம்பிப்போவார்கள். நம் மகிழ்ச்சிக்கு எப்போதும் பிறரை எதிர்பார்த்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும்.

    பிடித்ததைச் செய்

    சிறந்த தேர்ச்சி பெற்றவர்கள் உயர்நிலைப்பள்ளியில் மேலும் படிக்க கணக்கு, விஞ்ஞானம் என்று பாடங்களை பள்ளியே தேர்ந்தெடுத்துவிடும். குறிப்பிட்ட மாணவருக்கோ மொழி, கலை என்று வேறு எதிலாவதுதான் மனம் லயிக்கும்.

    `இதெல்லாமா நாளைக்கு உனக்கு சோறு போடப்போகிறது?’ என்று பெற்றோரும் அவநம்பிக்கை அளிப்பார்கள்.

    ஒரு சிலர் ஓய்வு நேரத்தில் தம் மனம் விரும்பும் பொழுதுபோக்கில் ஈடுபடுவார்கள். அதில் ஈடுபடும்போதே இவ்வளவு மகிழ்வாக இருக்கிறதே என்று எண்ணுபவர்களுக்குத்தான் நிறைவு கிட்டுகிறது. இருப்பினும், தம் மனம் நாடுவதை நோக்கித் துணிச்சலுடன் பயணம் செய்பவர் மிகக் குறைவு.

    தம் இலக்கில் குறியாக இருப்பவர்களுக்குத் தானே சரியான பாதை புலப்படும். அவ்வழியில் ஏற்படக்கூடிய தவறுகள், தோல்விகள் ஆகியவற்றைப் பெரிதாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்று அவர்கள் அறிவார்கள்.

    எவ்வளவுதான் திறமையும் ஆர்வமும் இருந்தாலும், வெற்றியும், அதனால் கிடைக்கும் நிறைவும் நீடிக்க வழியில் எழக்கூடும் உயர்வு மனப்பான்மையைத் தவிர்க்கக் கற்க வேண்டும்.

    ஆனாலும், பிறருடைய குறைகளில் கவனம் செலுத்தி `நான் அப்படி இல்லை!’ என்ற அற்பதிருப்தி கொள்ளும் மனப்பான்மையை எத்தனை பேரால் தவிர்க்க முடிகிறது!

    கதை

    நடராஜன் வாத்தியக் கலையில் வல்லுனர். வசதிகுறைந்த பல மாணவர்களுக்கு இலவசமாகவே பயிற்சி அளித்தார். அவர்கள் அவரைக் கடவுளாகவே பாவித்ததில் அதிசயமில்லை.

    நடராஜனின் செருக்கு மிகுந்தது. `என்னைவிட சிறப்பாக யாரால் வாசிக்க முடியும்!’ என்று நினைக்க ஆரம்பித்தார். அதன் விளைவாக, தன்னையொத்த, தன்னைவிட பிரபலமான வாத்தியக்காரர்களைப்பற்றி அவதூறாகப் பேச ஆரம்பித்தார். சிஷ்யர்களும் அக்கதைகளைக் கேட்டுச் சிரிப்பார்கள். குருபக்தியைப் பின் எப்படித்தான் வெளிக்காட்டுவது!

    நடராஜன் கூறியதெல்லாம் உண்மையாகவே இருந்தாலும், பிறர் என்ன தவறு செய்கிறார்கள் என்பதிலேயே கவனம் போயிற்று. கச்சேரியை ஆரம்பிக்குமுன், திமிருடன் சக கலைஞர்களை சண்டைக்கு இழுப்பார்.

    நாளடைவில், எவரும் நடராஜனுடன் இணைந்து வாசிக்க முன்வரவில்லை. `எல்லாருடனும் எப்போதும் சண்டை போடுவார்!’ என்று புகார்கள் எழ, அவருக்கு வாய்ப்புகள் குறைந்தன.

    ஒருவர் எப்போது நிறைவடைகிறார்?

    பள்ளிச் சிறுவர்களைக் கேட்டால், `பரீட்சை முடிந்து, அதில் திருப்திகரமாக எழுதிவிட்டால்!’ என்பார்கள். மாதக்கணக்கில் உழைத்துப் படித்த களைப்பு அப்போது நினைவில் நிற்காது.

    உடல் நோக பல காலம் பயிற்சி செய்துவிட்டு, பார்வையாளர்கள் பாராட்ட தம் திறமையைக் காட்டும்போது விளையாட்டு வீரர்கள் பெருமகிழ்ச்சி அடைகிறார்கள். ஆரம்பத்தில், அவர்களுடைய நோக்கம் பிறர் பாராட்ட வேண்டும் என்பதாக இருந்திருக்காது. தமக்குப் பிடித்த விளையாட்டில் முழுமூச்சுடன் ஈடுபட்டிருப்பார்கள். அவ்வளவுதான். அதில் வெற்றியும் கிடைத்தால் கூடுதல் மகிழ்ச்சி.

    சில பிரபலமானவர்கள் இசைக்கச்சேரி செய்யும்போது, அடிக்கடி கைதட்டல் கேட்கும். பாவம் அதிகமிருக்காது. `இவர்கள் ஆத்மார்த்தமாகப் பாடுகிறார்களா, இல்லை, எப்படிப் பாடினால் ரசிகர்களைக் கவரலாம் என்று கணக்குப்போட்டுப் பாடுகிறார்களா?’ என்று இசைஞானம் உள்ளவர்களின் சிந்தனை போகும்.

    ஒருவர் தான் பாடுவதில் மனமும் ஒன்றினால்தான் ரசிக்க முடியும். `என் குரலின் இனிமையை வைத்துக்கொண்டே பிறரைக் கவர்ந்துவிடுவேன்!’ என்ற மனப்பான்மை எழுந்தால், அவர் தன் திறமையை முழுமையாகப் பயன்படுத்த முயற்சிக்க மாட்டார். இதனால் அவருக்கும் நீடித்த நிறைவு கிட்டப்போவதில்லை.

    ஆக்ககரமாக எதைச் செய்ய வேண்டுமானாலும் நம் முழுமையான கவனத்தை அதில் செலுத்தவேண்டும் என்று புரிந்தவர்கள்தாம் நிறைவடைகிறார்கள். எதைத் தேடுகிறோம் என்று புரியாது அலைவது வீண் முயற்சிதான்.

    `வெற்றிமேல் வெற்றி அடைபவர்கள் பரிதாபத்துக்கு உரியவர்கள். ஏனென்றால், அடுத்து எதில் வெற்றி பெறலாம் என்றே அவர்கள் யோசனை போகும்,’ என்று ஒருவர் கேலியாக எழுதியிருந்தார். வெற்றி என்பது ஒரு முடிவு இல்லை, மனநிறைவு தரும் இன்னொரு முயற்சியின் தொடக்கம் என்று அவருக்குப் புரியவில்லை.

    கல்வியால் நிறைவு

    நம் திறமையை முழுமையாக வெளிக்கொணர கல்வி ஒரு சாதனம். திறமையை வெளிப்படுத்த முடியாதபோது மனம் குழம்பிவிடுகிறது.

    கதை

    ரேணுகா அழகிய பெண். அழகிலேயே கவனம் செலுத்தியதில் படிப்பு ஏறவில்லை. அவளுடைய அழகில் மயங்கிய ஒருவனுக்குக் கல்யாணம் செய்துவைத்து விட்டார்கள் — பதின்ம வயதிலேயே.

    தன்னையொத்த பெண்கள் சுதந்திரமாக, வேலைக்குப் போவதைப் பார்த்து தான் எதையோ இழந்துவிட்டதுபோல் நினைக்க ஆரம்பித்தாள். தன் வாழ்க்கை இப்படியேதான் கழிந்துவிடும், பெரிதாக எதிர்பார்க்க எதுவுமில்லை என்று எழுந்த எண்ணம் எல்லார்மேலும் கோபமாக மாறியது.

    “இவளை எப்படிப் பொறுத்துப்போகிறீர்கள்?” என்று ஓர் உறவினர் கேட்டதற்கு, கணவர் பொறுமையாகப் பதிலளித்தார்: “இவளுக்கு வாழ்க்கையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லை. புதிதாக எதையும் கற்கும் ஆர்வமும் கிடையாது. எல்லா நாட்களும் ஒரே மாதிரி இருப்பதால்தான் அலுப்பு!”

    ஓயாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி, தன்னுடன் பிறரையும் வருத்துவானேன்! கிடைத்ததைக்கொண்டு திருப்தி அடைந்தாலே போதுமே! ஆக்கபூர்வமாக எதையாவது செய்தால் மனம் அமைதி பெறும், நிறைவாகவும் இருக்கும்.

    நன்றியைக்கூட எதிர்பாராது பிறருக்கு உதவுவதே உண்மையான நிறைவை அடையும் வழி.

    தொடருவோம்

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே 45

    க. பாலசுப்பிரமணியன்

    கொஞ்ச நேரம்.. உங்கள் மனதோடு..

    அந்த மாலை நேரத்தில் கோவிலைச் சுற்றி வந்துகொண்டிருந்தேன். அங்கே அந்த மண்டபத்தின் அருகில் எனக்குப் பழக்கமான ஒரு நண்பர் தூணில் சாய்ந்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டு வியந்தேன். பொதுவாக அவரை அந்தக் கோவில் பக்கம் நான் பார்த்ததில்லை. மிகவும் அவசரமான முற்போக்கான வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவர் அவர். அவர் எதற்கு அன்று அங்கே வந்துள்ளார் என்பதை அறிய ஆர்வம் தூண்டியது. மெதுவாக அவர் அருகில் சென்று “அய்யா வணக்கம்” என்றேன். “வாங்க தம்பி.. நல்லா இருக்கீங்களா..” என்று ஒரு சோர்ந்த புன்னகையை அள்ளி வீசியவாறு என்னைப் பார்த்தார்.

    “நான் நலம்தான் அய்யா.. நீங்க எங்கே இந்தப் பக்கம்?” என மெதுவான குரலில் கேட்டேன்.

    சிரித்துக்கொண்டே அவர் சொன்னார் “ஒண்ணுமில்ல தம்பி. கொஞ்சம் மனசு சரியில்லாமல் இருந்தது. அதனால் மக்கள் நடமாட்டமில்லாத பகுதியாக கோவிலிலே இந்த மண்டபத்திலே ஒரு ஓரமாக அமர்ந்து என்னோடவே நான் பேசிக்கொண்டிருந்தேன்.”

    அவர் சொன்னது எனக்குப் புதுமையாக இல்லை. “என்னோடவே நான் பேசிக்கொண்டிருந்தேன்” அவருடைய தனிமையை பாதிக்க விரும்பாமல் நான் “அப்படியா… அப்போ நான் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடாது.. உங்கள் தனிமையை நீங்கள் பாராட்ட வேண்டும்..” என்று விடைகூறி மேலே நகர்ந்தேன்.

    அவருடைய அந்த வார்த்தைகள் என்னை சற்றே உலுக்கிவிட்டன. “மனசு சரியாக இல்லை…” நம்மில் எத்தனை பேர் இந்த மாதிரியான சூழ்நிலைகளை அடிக்கடி சந்திக்கின்றோம். ஏதாவது ஒரு காரணத்திருக்காக இந்த மனசு சரியில்லாமல் போய்விடுகின்றது. என் மனதிடமே நான் கேட்டேன்: “ஏன் அடிக்கடி நீ பேய் பிடித்தாற்போல் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு துன்புறுத்துகின்றாய்?”

    அதைக் கேட்ட என் மனம் சிரித்தது..

    அது சொன்னது:

    1, நான் கேட்டது கிடைக்கவில்லையென்றால் நான் தளர்வடைகின்றேன்.
    2. நான் நினைத்தது நடக்கவில்லையென்றால் நான் துடித்துப் போகின்றேன்
    3.என்னை மற்றவர்கள் பாராட்டவில்லையென்றால் தன்மானம் பாதிக்கப்பட்டுச் சோர்வடைகின்றேன்.
    4. நான் சொன்னதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் என் இயலாமையைக் கண்டு வருந்தி களைத்து விடுகின்றேன்றேன்.
    5. என் மனதின் வேகத்திற்கு உடலோ சூழ்நிலைகளோ அல்லது சார்ந்தவர்களோ ஈடு கொடுக்கவில்லையென்றால் வெறுத்துப் பொய் மூலையில் அமர்ந்து விடுகின்றேன்.
    6. நான் செய்த பல நற்செயல்களை சுற்றமும் சூழலும் மறந்து அவைகளை ஏணிப்படிகளாக்கிக் கொண்டு என்னை ஒதுக்கிவிடும்போது புண்பட்டு நோயாளியாகி விடுகின்றேன்.

    என்ன செய்வது.? அடிக்கடி இப்படி பல பிரச்சனைகள் வந்தவண்ணம் இருக்கின்றேதே! உனக்குத் தெரியாதா என்ன? உன் மனதிலும் நான் இவ்வாறுதானே வேலை செய்கின்றேன்.”

    உண்மைதான்! நம் அனைவருடைய மனமும் பலவித காரணங்களுக்காக புண்பட்டு நோய்வாய்ப்பட்டு அதற்கான சரியான மருந்தைத் தேடிக்கொண்டிருக்கின்றது. அதற்கு என்ன மருந்து போடலாம்? எந்த வைத்தியரிடம் நம் மனத்தைக் காட்டி மருந்து கேட்கலாம் ?

    அந்தக் காலத்தில் வீடுகளில் “பாட்டி வைத்தியம்” என்று இருந்தது. இருமலுக்கும், உடம்பு வலிக்கும், மற்றும் சிறிய உபாதைகளுக்கு பாட்டி ஒரு கசாயத்தையோ அல்லது ஒரு லேகியத்தையோ நமக்கு கொடுப்பார்கள். முதலுதவி போல பல நேரங்களில் இவையே நம்முடைய உடல் நோயைக் கட்டுப்படுத்திவிடும். அதுபோல நம்முடைய மன உளைச்சல்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் முதல் வைத்தியம் நமது மனதேதான். அதனிடம் நாம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் “உனது நோயை நீ எவ்வாறு தீர்த்துக் கொள்ளப்போகின்றாய்? உன் புண்களுக்கு நான் என்ன மருந்து போடுவது?” இதற்கு நாம் நமது மனதோடு பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.

    உலகத்தில் உள்ள பல மனிதர்களோடு நாம் நித்தம் எத்தேனையோ மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருக்கின்றோம், எப்போதாவது நாம் நம்முடைய மனதோடு பேசியது உண்டா? எப்பொழுதாவது அதை ஒரு பொருட்டாக மதித்ததுண்டா? சற்றே யோசித்துப் பாருங்கள்.

    நம் மனதோடு நாம் பேசுவது என்பது நமது வாழ்க்கையின் ஒரு முக்கியமான நிகழ்வு. அது நமக்கு நம்மையே அடையாளம் காட்ட உதவுகின்றது. நம்முடைய உள்ள நலத்தையும் நம்முடைய சிந்தனைகளின் வளத்தையும் நம்முடைய திறன்களையும் வல்லமைகளையும் மற்றும் இயலாமைகளையும் நமக்கு படம் போட்டுக் காண்பிக்கின்றது. நம்முடைய உறவு முறைகளில் உள்ள சிறப்புக்களையும் அதில் நாம் கையாளும் முறைகளில் உள்ள தவறுகளையும் நமக்கு உணர்த்துகின்றது. “யாரிடமாவது நம்முடைய குறைகளைச் சொல்லி அழமாட்டோமா’ என்று நாம் நினைக்கும்பொழுது நமது மனம் அருகில் அமர்ந்து “நான் இருக்கின்றேன் உன் துன்பங்களைக் கேட்பதற்கு” என்று சொல்லி தோழமையுடன் கேட்க அமர்கின்றது. நமக்கு எது சரியென்று தெரியவில்லையென்றால் அது ஒரு நீதிமானாக அமர்ந்து சரியான வழியைக் காட்டுகின்றது. ஒரு நிகழ்வு இப்படி நடந்துவிட்டதே என்று நாம் வருந்தும் பொழுது “அட போப்பா, இதெல்லாம் வாழ்க்கையில் நடக்கறதுதானப்பா. எழுந்து அடுத்த வேலையைப் பாரு” என்று ஊக்கம் அளிக்கின்றது.!

    “நான் எழுதிய இந்த அருமையான கவிதையைக் கேட்பதற்கு யாருமில்லையே.. என்ன உலகமடா இது” என்று நான் நொந்துபோகும்பொழுது “நண்பா. நானிருக்கின்றேன். உன் கவிதையை நீ எத்தனை முறை வேண்டுமானாலும் படி. திரும்பாத திரும்பப் படித்து ஆனந்தப்படு. நான் உன்னருகில் அமர்ந்து கேட்கின்றேன்” என்று சொல்லி உள்ளே என்னுடைய கவியரங்கத்திற்கான மேடையைத் தயார் செய்து கொடுக்கின்றது !
    இப்படி பல உதவிகளை செய்து ஒரு நண்பனாக, ஒரு ஊழியனாக, ஒரு உறவாக, ஒரு மருத்துவனாக நமக்கு உழைக்கும் மனதுக்கு மரியாதை கொடுத்து தினம் ஒரு சில மணித்துளிகள் அதோடு பேசிக்கொண்டிருந்தால் குறைந்தா போகும்? நாம் ஏன் செய்வதில்லை?

    “தினசரி உங்கள் மனதோடு கொஞ்ச நேரம் பேசுங்கள். அதை போன்ற ஒரு மருத்துவம் உலகில் இல்லை” என்று ஒரு மனநல மருத்துவர் மிக அழகாக எடுத்துரைத்தார்.

    “அய்யா. அதெல்லாம் சரிதான், என் மனதோடு தனியாக உட்கார்ந்து பேசுவதற்கு எங்கு நேரம் இருக்கின்றது?” என்று ஒருவர் குமுறினார். மற்ற அனைத்திற்கும் நேரத்தைத் தேடித்தடி வீணடிக்கின்ற நாம் இதற்கும் சில மணித்துளிகளைத் தேடி அதை ஒரு தினசரி பழக்கமாகக் கொண்டாலென்ன?சற்றே யோசியுங்கள். உங்கள் மனம் உங்களோடு பேசக் காத்துக்கொண்டிருக்கின்றது. என்ன பேசவேண்டும்? எப்படிப் பேசவேண்டும்? அதனால் நமக்கு உடனடிப் பலன்கள் என்ன கிடைக்கும்? – தொடர்ந்து பார்க்கலாமே!

    உங்கள் வாழ்க்கை – உங்கள் கைகளில் .. வாழ்ந்து பார்க்கலாமே !
    (தொடரும்)

    Share
  • மலையாளப் பனுவலில் சங்ககால வாழ்க்கை

    முனைவர் இரா.வெங்கடேசன்

    “நாம் படிக்கும் புத்தகம், முஷ்டியால் மண்டையோட்டை இடித்து நம்மை விழிக்கச் செய்யாதபட்சத்தில் நாம் ஏன் அதை வாசிக்க வேண்டும். அது நம்மை மகிழ்விக்கிறது என்பதாலா? அட கடவுளே, நாம் புத்தகங்களே இல்லாமல்கூட சந்தோசமாக இருக்க முடியும். நம்மை மகிழ்விக்கும் அப்படியான புத்தகங்களை, தேவைப்பட்டால், நாமே கூட எழுதிக்கொள்ளலாம். ஆனால் ஒரு துரதிர்ஷ்டத்தைப்போல நம்மை வந்தடைகிற, நம்மைவிடவும் நாம் அதிகம் நேசிக்கிற ஒருவரின் மரணத்தைப் போலவோ, தற்கொலையைப் போலவோ ஆழ்ந்த துயரம் விளைவிக்கக்கூடிய புத்தகங்களே நமக்குத் தேவை. நமக்குள் படிந்திருக்கும் உறைபனிப் பாறையைப் பனிக் கோடாரியால் பிளப்பதாக ஒரு புத்தகம் இருக்க வேண்டும்.” – ஃபிரன்ஸ் காஃப்கா 

    சங்கப் பிரதியை மையமிட்டு விமர்சனங்கள், ஆய்வுகள் தமிழிலும் பிற மொழியிலும் ஏராளமாக எழுதப்பட்டுள்ளன. ஆனால் புனைவு வெளிக்குள் பதிவு பெற்றவை மிகக் குறைவுதான். தமிழ் நாவல்களில் தமிழுக்குத் தொடர்பில்லாத மகாபாரதத்தை மையமிட்டு ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பிரபஞ்சன், தேவகாந்தன், அருணன், பூமணி போன்ற பலரும் எழுதியுள்ளனர். இவர்கள் ஏன் சங்க வாழ்க்கையைப் பதிவு செய்ய முன்வரவில்லை என்ற கேள்வி எழுவது நியாயமானதே. இவர்களிடம் கேட்டால் மகாபாரதம் வசீகரமானது. அதனை எழுதுதல் எழுத்தாளனுக்கு மன நிம்மதி அளிக்கும் எனச் சொல்லக்கூடும். மேலும் இவர்கள் இந்திய அளவில் அங்கீகாரம் கிடைக்கும் என நம்புகின்றனர். சங்ககால வாழ்க்கையைப் புனைவுகளின் வழிக் கடத்தத் தெரியாதவர்கள் வேறு எந்த இலக்கிய வடிவத்தையும் தமிழில் தந்தாலும் அதன்வழி எதையும் கட்டமைத்துவிட முடியாது. தமிழர்கள் புனைவாக எழுதாமல் போய்விட்ட சங்க வாழ்க்கையைக் குறிப்பாகப் பாணர்களின் அலைகுடித்தன வாழ்க்கையை மலையாளத்தில் மனோஜ் குரூர் நிலம் பூத்து மலர்ந்த நாள் என்ற நாவலில் புனைவு ஆக்கியுள்ளார். பிறப்பினால் மலையாளியாக இருக்கும் மனோஜ் குரூர் தமிழ்ச் சூழலையும் சங்கச் சூழலையும் முழுமையாக உள்வாங்கிக் கொண்டு எழுதியுள்ளது முக்கியமானதாகும். பாணர்களின் வாழ்க்கையை மையமிட்ட இந்நாவல் தமிழில் எழுதப்பட்ட நாவல் போன்று வார்த்திருப்பது கவனத்திற்குரியதாகக் கொள்ளலாம்.

    ஐந்து திணைகள் கொண்ட தமிழ் நிலப்பரப்பைத் தத்தம் இயல் மாறாத நிலம் யாதாயினும் அதில் நிகழும் ஒழுக்கம் பற்றித் திணை வகுப்பது பழைய மரபு. ஒழுக்க இயல் கருதாது நில வகையால் திணை அமைப்பது பிழைபட்ட பிற்கால வழக்கு. இது தொல்காப்பியருக்கு உடன்பாடன்று என்பது இச்சூத்திரத்தால் தெற்றென விளங்கும். (சாம்பசிவனார், 1997:34). ஐந்து திணைகளின் பிரிப்புப் பின்னணியில் உணவும் உணவு சார்ந்த பண்பாடும் மிக முக்கியமாய் அமைகின்றது. மருத நிலம் உணவில் தன்னிறைவு பெற்ற திணையாக உள்ளது. ஏனைய நான்கு நிலங்களிலும் உணவு காலச் சூழலுக்கு ஏற்ப அதிகமாகவோ குறைவாகவோ கிடைத்துள்ளன. ஐந்து நிலங்களிலும் வாழ்ந்த மன்னர்களும் வள்ளல்களும் தம்மால் இயன்ற அளவு உணவைக் கொடையாக அளித்துள்ளனர். இவர்கள் தவிர இவர்கள் ஆளும் நாட்டில் வாழ்ந்த பல்வேறு நிலங்களைச் சேர்ந்த குடிகள் உணவுகளை அளித்துள்ளனர். சிறுபாணாற்றுப்படையில் வேலூரின் புன்புலப்பகுதிகளில் எயின வேடர் குலப் பெண்கள் புளிச்சோறும் ஆமானின் சுட்ட கறியும் (சிறுபாண்., பக்.175-177) உணவாகத் தந்தார்கள். ஆமூர் என்ற மென்புலப்பகுதியைச் சேர்ந்த உழவர் குடியினர் உலக்கையால் தீட்டிய அரிசியால் வெண்சோறும் நண்டுக் குழம்பும் உண்ணத் தந்தார்கள். (சிறுபாண்., பக்.) பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கினார்கள். பெரும்பாணாற்றுப்படை எயிற்றியர், எயினர், பாலைக்கானவர் குடி, மறக்குடி, கோவலர்குடி, வலைஞர், பார்ப்பனர், உழவர்குடி ஆகியோர் வழங்கிய உணவுகளைப் பற்றி விவரித்துள்ளது. (ராஜ்கௌதமன், 2006:211).

    விளைவித்த, வேட்டையாடிச் சேகரித்த உணவுகளைப் பெறப்பட்ட போதிலும் இந்த உணவுகளை விருந்தோம்பலுக்குப் பயன்படுத்தியுள்ளனர். ஒருபக்கம் விருந்து நிகழ்த்திய கூட்டம் இருந்ததென்றால் அதனைப் பெறுவதற்கான கூட்டமொன்று இருந்துள்ளது. அக்கூட்டத்தில் பாணர், விறலியர் உள்ளிட்டோர் அடங்குவர். இவர்கள் ஓரிடத்தில் நிலையாக வாழாமல் அலைகுடி வாழ்க்கையை மேற்கொள்வோராக வாழ்ந்துள்ளனர். இவர்களுக்கு உணவை யார் தருகிறோர்களோ அவர்களிடம் சென்று பாடி இசை மீட்டி அதற்கு ஈடாக உணவையோ பரிசையோ பெறுகின்றனர். சங்க காலம் என்பது பாணர்களின் வீழ்ச்சியடைந்த காலக்கட்டத்தின் தொகுதியாகும். பாணர்களின் அலைகுடி வாழ்க்கைத் துயரங்களின் முழுமையைச் சுமந்துகொண்டு திரிந்த வாழ்க்கை. பாணர்களைப் பற்றிய ஆய்வுகள் அதிகமாகச் செய்யப்பட்டபோதிலும் நாவல்வழி அதனைச் சொல்லும்பொழுது அலைகுடி வாழ்க்கையின் அவலத்தைச் சொற்களின் வழியே கடத்த முடிகின்றது. ‘நிலம் பூத்துமலர்ந்த நாள்’ நாவல் பாணர்களின் துன்பியல் நாவலாக மலர்ந்திருக்கின்றது.

    பாணர் வாழ்க்கை என்பதே அலைகுடி வாழ்க்கையாக அமையும்போது அவர்கள் ஓரிடத்திலும் நெடுநாள் தங்கமுடியாத சூழல் ஏற்படுகின்றது. பசி, வறுமை அவர்களை வெவ்வேறு இடங்களுக்கு நகர்த்துகின்றது. பாணர்களின் வாழ்க்கை என்பது நிரந்தரமில்லாத3 வாழ்வாகவே அமைகின்றது. வறுமைதான் அவர்களை ஒவ்வொரு இடத்திலும் நிலையாகத் தங்கவிடாமல் செய்கிறது. நாவலில் நாம் எப்போதும் இந்த வறுமையாலயே உழல வேண்டுமா முதலில் நாம் இங்கிருந்து கிளம்ப வேண்டும். இல்லாவிட்டால் ஒவ்வொருவராகச் சாவதை நாம் பார்க்க நேரிடும். கடந்த நாட்களில் நம்மிடையே இறந்து போனவர்களைப் பற்றிச் சிந்தியுங்கள். பட்டினியால்தான் அவர்கள் அனைவரும் இறந்தனர் என்பதை அவர்களின் உற்றார் உறவினர் யாரும் சொல்லவில்லையெனினும் நமக்கே அது தெரியுமில்லையா? (மனோஜ்குரூர் 2016:31) என்ற சிறுபாணனின் கேள்வி உண்மையின் அசலாகும்.

    பசி, வறுமை இரண்டும் உந்தித்தள்ளும்போது அதனை நீக்கப் பாணர் கூட்டம் அலைகின்றது. ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குப் பயணப்படும்போது அந்தப் பயணத்தின் துயரம் சொல்லால் அடங்காதவை. குறிப்பாகப் பசியோடு குழந்தைகள் அலைதலை இந்நாவல் பிரதானப்படுத்துகின்றது. பயணம் ஒவ்வொரு நாளும் ஓய்வில்லாமல் தொடர்வதால் குழந்தைகள்4 சோர்வுறுகின்றனர். மீண்டும் மலையேறத் தொடங்கினோம். நீண்டதூரப் பயணத்தில் அனைவரும் சோர்ந்திருந்தோம். தட்டுத் தடுமாறியாவது முன்னேறிச் செல்லாதிருக்க முடியாதென்ற எண்ணமே குழந்தைகளையும் இளைப்பாற விடவில்லை.” (மனோஜ்குரூர் 2016:98) என்று சொல்லும் பாணர்குடி சிறு குழந்தைகளின் அலைதலின் வழி கொடூரமானதாக மாறுகின்றது. பரிசு கொடுப்போரைத் தேடி ஒவ்வொரு மலையாக ஏறி இறங்குவதால் அவர்களால் தொடர்ந்து நடக்கமுடியாத நிலை ஏற்படுகின்றது. எப்படியென்றாலும் இனி நடக்க முடியாது. கால்கள் வீங்கியிருக்கின்றன. உடல் அதன்வழித் திரும்பிவிடுமென்று அறிந்தபோது நான் தரையில் அமர்ந்துவிட்டேன். அத்துடன் சில குழந்தைகளும் பெரியவர்களும் வழியோரங்களில் உள்ள பாறைகள்மீதும் தேற்றாமரங்களின் நிழல்களிலுமாக அமர்ந்துவிட்டனர். (மனோஜ்குரூர் 2016:127)

    பெரியவர்களின் பசியைவிடக் குழந்தைகளின் பசி கொடூரமானது5 அதனை மிக நுட்பமாகவே மனோஜ்குரூர் பதிவு செய்கின்றார். பசியோடு அலைந்து திரியக்கூடிய பாணர்களுக்குக் குறவர்கள் உணவு தருகின்றனர். பாணர்களைத் தங்கள் வீடுகளுக்கு அழைக்கும் குறவர்கள் உணவு தருகிறோம் என்று அழைக்கின்றனர். எங்கள் குடில்களுக்கு வந்துவிட்டுச் செல்லுங்கள். மானிறைச்சியும் உடும்பிறைச்சியும் வீட்டில் இருக்கும். வேகவைத்த மூங்கிலரிசியோடு சேர்த்துக் கொதிக்க வைத்த பாலும் இருக்கும். குழந்தைகள் உண்ணட்டும். (மனோஜ்குரூர் 2016:40) எனக் கூறுவதிலிருந்து பாணர்களுக்கு மன்னர்களும் வள்ளல்களும் மட்டுமே உணவு தரவில்லை. இடைக்குடிகள் பலர் உணவு தந்துள்ளனர்.

    பாட்டுப்பாடி அலைகுடி வாழ்க்கையை வாழ்வதைவிட வேட்டையாடி நம் வறுமையைப் போக்கலாம்6 என்பது பாணர்குடியில் ஒருசிலரது யோசனையாக நாவலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏனென்றால் அலைகுடி வாழ்க்கை என்பது மோசமானதாகவும் சிக்கலானதாகவும் மாறிய சூழலைத்தான் இந்நாவல் பேசியுள்ளது. ஆனாலும் இந்த யோசனையை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அதுதான் பாணர்குடியைச் சிறப்பானதாக ஆக்குகிறது. பாணர்களின் வறுமை மட்டுமே நாவல் பேசவில்லை. உமணர்களின் வறுமையை மிக அழுத்தமாக முன்வைக்கிறது. உப்பு விற்பனைக்காக அடுத்த பட்டணத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்த உமணர்கள் அவர்களின் மனைவியர் ஒரு கையில் குழந்தையையும் மறு கையில் சாட்டையுமாகக் காளைகளை ஓட்டித் தளர்ந்து போயிருந்தனர். அவர்கள் வண்டிகளை வழியோரம் நிறுத்திக் குழந்தைகளை மார்போடு அணைத்துச் சாய்ந்து மயங்கி இருந்தனர். (மனோஜ்குரூர் 2016:41) பாரபட்சமில்லாத இந்த வறுமை அலைகுடி வாழ்க்கையை ஒரு வகையாக ஏற்றுக்கொண்ட உப்பு வணிகர்களையும் விட்டுவைக்கவில்லை. உப்பு வணிகர்களின் அலைகுடி வாழ்க்கையை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டிய தேவையை இந்நாவல் எழுப்புகிறது.

    நாவல் மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. முதல் பகுதி தந்தையின் (பாணன்) பார்வையில் கதை சொல்லப்படுகின்றது. உறவுகளோடு அலைந்து திரியக்கூடிய பாணன் வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் தன் மகளின் (குழந்தை) பசியைப் பேசுகிறான். மேலும் அவனின் காணாமல்போன மகனைப் பற்றிய துன்பம் பேசப்படுகிறது. இரண்டாம் பகுதி சித்திரை (மகள்) பார்வையில் கதை நடக்கும்போது இறந்துபோன அப்பாவைப் பற்றியும் விதவையான அம்மாவைப் பற்றியும் காதல், ஏமாற்றம், பிரிவு, துயரம், அடைக்கலம் என விரிகிறது. மூன்றாவதாக மகன் (மயிலன்) பார்வையில் கதை விரியும்போது துரோகம், துயரம் விவரிக்கப்படுகிறது. இந்த நாவல் வறுமையையும் ஏமாற்றத்தையும் துயரத்தையும் முதன்மைப்படுத்தி விளிக்கிறது. துன்பவியலை மிகுதியாகப் பேசுகிறது. சங்கக் கதையாடல் என்றாலும் சிறுபாணாற்றுப்படை, கலித்தொகைச் செய்திகள் மிகுதியாகப் பேசப்பட்டுள்ளன. நாவலைப் படிக்கும்போது போரின்போது திணை வயல்களைத் தீயிட்டு அழிக்கின்றனர். பசியால் வாடிக்கொண்டிருக்கும் பாணர்கள் அதனைப் பார்க்கின்றனர். உணவு கிடைக்காத சூழலில் வயல்கள் எரிபடுவது பாணர்களைத் துன்பத்திற்கு உள்ளாக்குகிறது. இந்தத் துயரத்தை வார்த்தைகளால் சொல்ல முடியவில்லை. சங்க காலம் பொற்காலம் என்பதற்கு மாற்றாகச் சங்ககாலம் வறுமைகள் நிறைந்த துயரம் நிறைந்த காலம் என்பதை இந்நாவல் தெளிவாக எடுத்துரைக்கிறது. மலையாள மொழியில் இந்நாவல் எழுதப்பட்டாலும் தமிழ் நிலத்தின் துயரம் நிறைந்த வாழ்க்கையை எதார்த்தமாகப் பதிவு செய்கின்றது. பாணர்கள் என்போர் வறுமையில் உழன்றனர் என்பது எவ்வாறு உண்மையோ அதனைப் போலவே உமணர்கள், வேட்டைச் சமூகங்கள் வறுமையில் வாடினர். அதுகுறித்து விரிவாகப் பேசப்பட வேண்டும். அவையெல்லாம் நாவல் வழியாகப் பதிவு பெறவேண்டும். நுணுக்கமான, அணுக்கமான மொழிபெயர்ப்பு இது. சங்ககால வறுமையின் நிறத்தைப் பதிவு செய்த இந்நாவலைப் போல் சமகால நாவலை எதுவும் சுட்டிக் காட்டமுடியவில்லை என்பதிலிருந்து இந்நாவலின் பெருமையை உணரமுடிகிறது. தமிழில் இதைப் போன்ற முயற்சிகள் மேற்கொண்டால் பழைய வரலாறுகள் இன்றைய தலைமுறையினருக்குப் புதினக் கதையாடல்கள் மூலம் எளிமையாகக் கடத்த முடியும்.

    உசாத்துணை நூல்கள்

    1. ச.சாம்பசிவனார் (பதி.1997 நாவலர் சோமசுந்தர பாரதியாரின் நூல் தொகுதி, தொல்காப்பியர் பொருட்படலப் புத்துரை, வசுமதி பதிப்பகம், சென்னை.
    2. ராஜ்கௌதமன் 2006, பாட்டும் தொகையும் தொல்காப்பியமும் தமிழ்ச் சமூக உருவாக்கமும், தமிழினி, சென்னை.
    3. ஆற்றோரத்திலிருந்து வயல்களுக்கு ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்குப் புறப்பட்ட இடமும் சென்று சேரும் இடமும் நமக்குச் சொந்தமென்று ஆவதில்லையே. பறவைகளுக்கும் சொந்த நாடு இல்லைதானே அப்பா (மனோஜ்குரூர் 2016:73)
    4. மாலை மயங்குவதற்குள் நாங்கள் பறம்புமலையை அடைய வேண்டும். முதல் நாளின் தூக்கமின்மையைப் பொருட்படுத்தாமல் குழந்தைகள் முன்னால் நடக்கின்றனர். எனக்கு எல்லோரிடமும் இரக்கம் தோன்றியது (மனோஜ்குரூர் 2016:96)
    5. குரங்குகளின் கையிலிருந்து தவறி விழுந்து கொண்டிருந்த பலாச்சுளைகளின் தேன் மணம் மூக்கைத் துளைத்து ஏறியது. விருப்பம் மீதூறி நடக்க மறுத்துக் குழந்தைகள் நின்றபோது பெரியவர்கள் அவர்களை இழுத்துக்கொண்டு விரைந்து அகன்றனர்.
    6. இந்தக் காட்டிலேயே வேட்டையாடிக்கிட்டு நாம இருந்திடலாமே பாட்டு பாடுறதவிட அதுதான் நல்லதுன்னு தோணுது (மனோஜ்குரூர் 2016:34)
    7. கே.வி.ஜெயஸ்ரீ 2016 (தமிழில்) மனோஜ்குரூர், நிலம் பூத்து மலர்ந்த நாள், வம்சி புக்ஸ், திருவண்ணாமலை.

    *****

    கட்டுரையாளர் – இணைப்பேராசிரியர்,
    இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கியப் பள்ளி,
    தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்

    Share
  • திரு ஏ.ஆர். முருகதாஸ் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    நான் இப்போதெல்லாம் சினிமாவுக்குப் போவதே இல்லை.  இதற்கு வயது ஒரு காரணம்.  இப்போதைய விருப்பங்கள், ஆசைகள் வேறு விதமாக இருக்கின்றன.  நடிக, நடிகைகள் அடிக்கும் கூத்துக்களைப் பார்த்துப் பரவசப்பட்டது ஒரு காலம்.  இப்போது அவை எல்லாம் அறியாமையில் செய்த காரியங்கள் என்று புரிகிறது.  மேலும் வருஷத்தில் ஒன்பது மாதங்களை அமெரிக்காவில் கழிக்க ஆரம்பித்த பிறகு ரசிப்பதற்கு வேறு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்பது புரிகிறது.

    இருந்தாலும் தமிழக அரசியலில் இன்னும் ஆர்வம் இருப்பதால் ‘சர்கார்’ திரைப்படம் அமெரிக்காவில் திரையிடப்பட்டதும் அதைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் விரும்பினேன்.  பல தசாப்தங்களுக்குப் பிறகு ஒரு சினிமாவுக்குப் போக வேண்டும் என்ற ஆசை என்னுள் முளைவிட்டது. அமெரிக்காவில் அந்தப் படம் திரையிடப்பட்ட இடங்களில் நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து மிக அருகில் இருந்தது, சுமார் முப்பது மைல் தொலைவில்.  ஒரு படம் பார்க்க முப்பது மைல் போவதா என்ற எண்ணம் எழுந்தாலும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலீட்டால் போவதென்று முடிவுசெய்தோம்.

    படம் ஆரம்பித்தவுடனேயே தன்னுடைய ஓட்டுரிமையை நிறைவேற்றுவதற்காக ஒரு பெரிய கம்பெனியின் தலைமை அதிகாரி அமெரிக்காவிலிருந்து தன் ‘படைகளோடு’ தமிழ்நாட்டிற்கு வருகிறார் என்பதைப் பார்த்தபோது கொஞ்சம் நெருடியது.  சரி இருக்கட்டும், போகப் போக உருப்படியாக ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன்.  ஆனாலும் பின்னால் வந்த காட்சிகள் இந்த அபத்தமான ஆரம்பத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.  கதாநாயகன் விஜய் ஒற்றை ஆளாக எந்தவித ஆயுதமும் இல்லாமல் கோடாரி போன்ற பயங்கர ஆயுதங்களோடு வரும்  இருபது பேரோடு சண்டை போட்டு ஜெயிக்கிறார்.  இப்படி அவர் செய்வது ஒரு முறையல்ல; மூன்று முறை.  கணினி கம்பெனியின் தலைமை அதிகாரிக்கு மூளை பலத்தோடு உடல்பலமும் இருக்கும் என்றே வைத்துக்கொண்டாலும் இத்தனை முறை, இத்தனை குண்டர்களோடு சண்டையிட்டு எந்தவித உடல் சேதாரமுமின்றி வர முடியும் என்று தமிழ் ரசிகர்கள் எப்படி நம்புகிறார்கள் என்று நம்ப முடியவில்லை.

    சாக்கடையாகி இருக்கும் தமிழக அரசியலைச் சுத்தப்படுத்த, தன் ஓட்டைப் பதிவுசெய்ய வந்த இடத்தில் ஒரு பெரிய கம்பெனியின் தலைமை அதிகாரி முயல்கிறார் என்று விமர்சனங்களின் மூலம் தெரிந்துவைத்திருந்த நான்  இப்படி ஒரு ஏமாற்றம் காத்திருக்கும் என்று நினைக்கவில்லை.  கடந்த ஐம்பது வருடங்களாகத் திராவிடக் கட்சிகள் மக்களைச் சிந்திக்கவிடாமல் செய்ததை நினைத்து மனம் குமுறிக்கொண்டிருந்த எனக்கு யாராவது, ஏதாவது சொரு வகையில் கடந்த ஐம்பது வருட தமிழக அரசியலைப் பற்றிக் கொஞ்சம் விமர்சித்தாலே கொஞ்சம் நன்றாக இருக்கும்.  இது பற்றி ஒரு சினிமாப் படமே வந்திருக்கிறது என்று நினைத்து மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த எனக்கு மிகுந்த ஏமாற்றமாகிவிட்டது. இது ஒரு அரசியல் அங்கதம் (Political satire) என்று எண்ணி மிகுந்த ஆசையுடன் வந்த எனக்கு இது வெறும் மசாலாப் படம் என்று தெரிந்ததும் மிகுந்த வேதனையாகிவிட்டது.

    ‘ஓம், ஒபாமா’ என்று ஒரு படத்தை மூன்று வருடங்களுக்கு முன்னால் சிகாகோ பல்கலைக்கழக வளாகத்திலேயே (எங்கள் வீட்டிலிருந்து அரை மைல் தொலைவில்) காட்டினார்கள்.  இறந்த அம்மையாரின் அமைச்சர்களையும் அ.தி.மு.க. தொண்டர்களையும் அவ்வளவு அழகாகக் கிண்டல் செய்திருந்தார்கள்.  தமிழ்நாட்டில் அது தடைசெய்யப்படலாம் என்பதற்காகவே அது அங்கு திரையிடப்படவில்லை என்று நினைக்கிறேன்.  இது பற்றிய விமர்சனத்தை அடுத்து வரும் URL-இல் பார்க்கலாம். http://sambarchutney.blogspot.com/2011/07/blog-post_2253.html

    விஜய்யை வைத்து எத்தனை மசாலாப் படங்கள் வேண்டுமானாலும் எடுங்கள்.  அது பெரிய வெற்றிப் படமாக அமைந்து உங்களுக்குப் பெரும் லாபத்தைக் கொடுக்கலாம்.  ஆனால் தமிழக அரசியலை நல்ல திசையில் திருப்புவதாகக் கூறிக்கொண்டு இம்மாதிரிப் படங்களை எடுத்தால் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதில் உங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடலாம்.  அவர்கள் ஒரு மாதிரி அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள்; நீங்கள் இன்னொரு மாதிரி ஏமாற்றுகிறீர்கள்.  அவர்களும் உங்களுக்குப் பணத்தைக் கொட்டுகிறார்கள்.

    ஏமாற்றத்துடன்,

    நாகேஸ்வரி

    Share
  • அருங்காட்சியகம் ஓர் அறிவுக் கருவூலம் – 114

    தேயிலைத் தோட்டத் தொழிலாளர் அருங்காட்சியகம், இலங்கை

     

    முனைவர். க.சுபாஷிணி

     

    தென்னிந்தியாவில் இருந்து காப்பி, கொக்கோ மற்றும் தேயிலைத் தோட்டங்களில் பணி புரிவதற்காக வந்த தென்னிந்திய, அதிலும் குறிப்பாகத் தமிழக மக்களின் வாழ்வின் வரலாற்றுச் செய்திகளை ஆவணப்படுத்தி காட்சிப்படுத்தியிருக்கும் அருங்காட்சியகம் இது. இந்த அருங்காட்சியகம் இருப்பது ராமன்துறை தோட்டமாகும். இது நுவரலியாவிலிருந்து நியூ பீக்கோக் எஸ்டேட் செல்லும் பகுதியில் சோகம் தோட்டத்திற்கு அருகாமையில் உள்ளது. இந்த அருங்காட்சியகம் மத்திய மாகாண கண்டி பகுதியில் அமைந்துள்ளது.

    அருங்காட்சியகத்தின் வாசலில் சிறிய பூந்தோட்டம் ஒன்றுஅமைக்கப்பட்டுள்ளது. வரவேற்பு பகுதியில் தமிழிலும், சிங்கள மொழியிலும், ஆங்கிலத்திலும் அருங்காட்சியகத்தின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது, உள்ளே நுழையும் பொழுது முதலில் நமக்கு தென்படுவது ஒரு சிறிய குடில். இந்தக் குடில் இன்றைக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் இருந்து இலங்கையின் மலையக பகுதிக்குத் தோட்டத் தொழிலாளர்களாக வந்த தமிழ் மக்களின் வாழ்விட கட்டுமாணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

    ஒரு குடில்; அதில் ஒரு அறை மட்டுமே. அறை என்ற பிரிவு இல்லாமல் முழு பகுதியும் வெவ்வேறு மூலைகளில் அதன் பொருட்கள் வைக்கப்பட்டு காட்சி அளிக்கின்றன. சிறிய சமையல் பகுதியில் விறகை வைத்துக் கொள்ளும் பகுதி, பானைகளை அடுக்கி வைக்கும் பகுதி, சமையல் பாத்திரங்களை, அம்மி குழவி போன்றவற்றை வைக்கும் பகுதி, என சிறு பகுதியும், படுத்து உறங்கும் பகுதியாக ஒரு பகுதியும் காட்சியளிக்கின்றன. மற்றொரு பகுதியில் துணிகளை உலர்த்தும் மூலை தென்படுகின்றது. சுவற்றில் இந்திய சுதந்திரப் போராட்டத்தலைவர்கள் புகைப்படங்கள் உள்ளன. பண்டித ஜவகர்லால் நேரு, மகாத்மா காந்தி, சுபாஷ் சந்திர போஸ் போன்றோரின் புகைப்படங்கள் சுவற்றில் தென்படுகின்றன. இவை இம்மக்கள் இந்தியாவின் சமகால நிலையை இலங்கையிலும் பிரதிபலித்தமையை வெளிப்படுத்துவதாக அமைகிறது. இந்த குடிசைவீட்டின் உள்ளே அருங்காட்சியக நிர்வாகம் காட்சிப்படுத்தியிருக்கும் பொருள்கள் 1820-களில் தமிழ் மக்கள் பயன்படுத்திய சமையலறைப் பொருட்கள் ஆகும்.

    காப்பித் தோட்டத்தில் பணிபுரிய 1820 வாக்கில் தொடங்கி தமிழகத்திலிருந்து இலங்கையின் மலையக பகுதிக்கு வந்தவர்கள் தற்காலிகமாக தங்கி கொள்வதற்காக கூரைவேய்ந்த இத்தகைய குடிசைகளை அமைத்து அவற்றில் தங்கியிருந்தனர். ஆறு மாதங்கள் காபித் தோட்டங்களில் அவர்கள் பணிபுரிவார்கள். பின்னர் காபி செடிகள் வளரும் பருவத்தில் அவர்கள் தங்களுக்குக் கிடைத்த கூலியைப் பெற்றுக்கொண்டு இந்தியாவிற்கு அதாவது தமிழகத்திற்கு திரும்பிவிடுவார்கள். இக்காலகட்டத்தில் தமிழகத்திலிருந்து மலையகப்பகுதிக்கு வந்தவர்களில் ஆண்களே அதிகமாக இருந்தனர்.தோட்டத்தில் 1880 வாக்கில் காப்பி பயிர்களுக்கு ஏற்பட்ட நோயின் காரணமாக காப்பி விளைச்சல் நிறுத்தப்படவே தேயிலைத் தோட்டங்கள் உருவாகத் தொடங்கின. தேயிலைத் தோட்டப்பணி வருடம் முழுவதும் வேலை பார்க்கக் கூடிய ஒரு தொழில் ஆகையால் 1860 தொடங்கி அடுத்தடுத்த காலகட்டங்களில் இருந்து தமிழகத்திலிருந்து இலங்கையின் மலையக பகுதிக்கு ஆண்களும் பெண்களுமாக குடும்பம் குடும்பமாக பயணித்து வந்து தோட்டங்களில் தொழிலாளர்களாக தம்மை ஈடுபடுத்திக் கொண்டனர்.

    மலையகப் பகுதியில் காபி தோட்டங்களில் கொக்கோ மற்றும் தேயிலை தோட்டங்களில் பணிபுரிய வந்த மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளானார்கள். முறையான சம்பளம் அவர்களுக்கு வழங்கப்படவில்லை இரண்டு ரூபாய் சம்பளம் கிடைக்கும் என்று சொல்லி ஏமாற்றி அழைத்து வந்து ஆனால் ஒரு ரூபாய் சம்பளம் கிடைப்பது கூட சிரமமாக அமைந்த நிகழ்வுகளும் உண்டு தினக்கூலி என்பது இல்லாமல் வருடத்திற்கு மூன்று முறை மாத்திரம் சம்பளம் என்ற வகையிலும் சிலவேளைகளில் சம்பளம் கிடைக்காத சூழலும் கூட ஏற்பட்டு மலையக மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளானார்கள் ஆரம்ப காலகட்டங்களில் ஆங்கிலேயர்கள் மலையகத்தில் பணிபுரிய வந்த தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைகள் செய்தமையும் குறிப்பிடத்தக்க செய்திகளாகும் அதன் பின்னர் படிப்படியாக ஆங்கிலேயர்கள் குடும்பம் குடும்பமாக வந்து தங்கிய பின்னர் இந்த பிரச்சினைகள் குறைந்தாலும் தமிழ் மலையக கங்காணிகள் தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது பெருவாரியாகத் ஆகவே தொடர்ந்தது.

    இலங்கையின் தோட்டங்களில் பணி புரிவதற்காக கி.பி.1800களின் ஆரம்பங்களில் இருந்து தமிழக மக்கள் தூத்துக்குடியிலிருந்து கடற்கரை பகுதிக்கு வந்து அங்கிருந்து கொழும்புவிற்கும் தமிழகத்தின் வடக்கு பகுதியின் பல்வேறு நகர்களில் இருந்து ராமேஸ்வரம் வந்து பின்னர் அங்கிருந்து தனுஷ்கோடி வந்து பின்னர் அங்கிருந்து மன்னார் தலைமன்னார் போன்ற பகுதிகளுக்கு வந்து கால்நடையாகவே ஏறக்குறைய 140 மைல் தூரம் நடந்து பயணித்து இலங்கையின் மத்திய பகுதியான மலையகப் பகுதிகளுக்கு வந்து சேர்ந்தனர். தோட்டங்களில் பணிபுரிய வருகின்றோம் என்று ஆவலுடன் வந்த மக்கள் இங்கு முதலில் காடுகளையே காணக் கூடிய நிலை இருந்தது. மிக அடர்ந்த காடுகள் அவை. அந்தக் காடுகளில் பயணிக்கும் போது பல்வேறு விலங்குகளாலும் பூச்சிகளினாலும் பாம்பு போன்ற விஷப்பூச்சிகளினாலும் தாக்கப்பட்டு உயிர் இழந்தோர் மிகப் பலர். பயணிக்கும் போதே கொசுக்கடி ஏற்பட்டு தொடர்ந்து பெய்து வரும் அடை மழையில் நனைந்து மலேரியா நோய்வாய்ப்பட்டு இறந்தவர்களும் அதிகம். இப்படி பல துன்பங்களைக் கடந்து வந்த மக்கள் கடுமையான உழைப்பைச் செலுத்தி காடுகளை தூய்மைப்படுத்தி காப்பி தோட்டங்களையும் கொக்கோ பயிர்களையும் தேயிலை தோட்டங்களையும் உருவாக்கினார்கள்.

    மலையக மக்கள் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்வதற்குத் தொழிற்சங்கங்கள் ஆற்றிய பணி மிக முக்கியமானது. மலையக சமூக நல ஆர்வலர்கள் உழைப்பால் சில தொழிற்சங்கங்கள் தொடங்கப்பட்டன. மலையகத்தில் மாத்தளை, ஹட்டன், நுவரெலியா, கண்டி, பேராதனை போன்ற பகுதிகளிலும் மற்றும் ஏனைய மலையக பகுதிகளிலும் தொழிற்சங்கங்களின் சமூக நலன் நடவடிக்கைகள் தொடங்கின. அதில் குறிப்பிடத்தக்கவர்களாக பத்திரிகையாளரும் தொழிற்சங்கவாதியுமாகிய கோ.நடேசய்யர் மற்றும் அவரது துணைவியார் மீனாட்சியம்மா போன்றோரைக் குறிப்பிடலாம். ஆங்கிலேயர்கள் அறிய விரும்பாத பல பிரச்சினைகளை மக்கள் மத்தியில் நேரில் சென்று அப்பிரச்சினைகளைக் கேட்டு அவற்றிற்கு வேண்டிய உதவிகளைச் செய்யும் வகையில் தொழிற்சங்க நடவடிக்கைகளை இத்தகையோர் செயல்படுத்தினர். பத்திரிகைகள் வாயிலாகவும், பிரச்சாரங்கள் வழியாகவும் மக்களுக்குத் தங்கள் உரிமைகளை அவர்கள் பெற உதவும் வகையிலான நடவடிக்கைகளை தொழிற்சங்க தலைவர்கள் அக்காலகட்டத்தில் செயல்படுத்தினர். பிரச்சாரங்கள் மட்டுமன்றி பாடல்கள், நாடகங்கள், கூத்துகள் வழியாகவும் எளிய மலையக தமிழ் மக்களுக்குத் தங்கள் உரிமைகளை அவர்கள் உணர்ந்துகொள்ள தொழிற்சங்க தலைவர்களும் செயல்பாட்டாளர்களும் முன்னெடுத்தனர். அத்தகைய தொழிற்சங்க தலைவர்களின் புகைப்படங்களும் குறிப்பிடத்தக்க ஆவணங்களும் இந்த அருங்காட்சியத்தில் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

    1948ஆம் ஆண்டு இலங்கைக்குச் சுதந்திரம் கிட்டியது. சுதந்திரத்திற்குப் பிறகு இலங்கையில் சிங்கள மக்களில் குறிப்பிடத்தக்க சில தலைவர்களின் தொடர் முன்னெடுப்புக்களினால் இலங்கைக்குப் பணியாற்ற வந்த தமிழக மக்கள் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அமல்படுத்தப்பட்ட சட்ட வரையறைகளின்படி, மலையக பெருந்தோட்ட மக்கள் குறிப்பிடத்தக்க பெரிய எண்ணிக்கையில் நாடற்றவர்களாக ஆகும் நிலை உருவானது. அதன்பின்னர் தொடர்ச்சியான பல முயற்சிகள், அதிகாரப்பூர்வ சந்திப்புகள் என்பன இந்தியாவிற்கும் இலங்கைக்கும் நிகழ்ந்தாலும், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் தமிழ் மக்களுக்கு சரியான, முறையான குடியுரிமை மற்றும் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டே வந்தது. 1924ஆம் ஆண்டு சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி ஏறக்குறைய ஐந்தரை லட்சம் தமிழ் மக்கள் இந்தியாவிற்குத் திருப்பி அனுப்ப வேண்டும் என்றும், ஏறக்குறைய மூன்றரை இலட்சம் தமிழ் மக்கள் இலங்கை குடியுரிமை பெறுவார்கள் என்றும், ஏறக்குறைய ஒன்றரை இலட்சம் தமிழ் மக்கள் நாடற்றவர்கள் என்றும் வகைப் படுத்தப் பட்டார்கள். இப்படி வகைப்படுத்தப்பட்ட பின்னரும்கூட அனைத்து மக்களுமே பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கினர்.

    இலங்கையில் வாழ்ந்த தமிழ் பெருந்தோட்ட தொழிலாளர்கள் 2003ஆம் ஆண்டு வரை தங்கள் குடியுரிமை பிரச்சினைகளில் பல்வேறு வகையான சிரமங்களை எதிர்கொண்டனர். இந்தியாவிற்குத் திருப்பி அனுப்பப்பட்ட தமிழ் மக்களும் தமிழகத்திற்குத் திரும்பியபின் தாங்கள் விட்டுச் சென்ற காணிகளை இழந்து, சொத்துக்களை இழந்து, பொருளாதார பிரச்சினைகளைப் பெருவாரியாகச் சந்தித்து தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடங்கவேண்டிய நிலைக்கு ஆளானார்கள்.. இவ்வரலாற்றுச் செய்திகளை வெளிப்படுத்தும் பல்வேறு கையெழுத்து ஆவணங்கள் இந்த மலையக தோட்டத் தொழிலாளர் அருங்காட்சியகத்தில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

    இலங்கைக்கு கடந்த 200 ஆண்டுகளாக மிகுந்த பொருள் வளத்தை தரும் ஒரு துறையாக இருப்பது தேயிலைத் தோட்டங்கள். இலங்கைக்கு பெரும் வளத்தை உருவாக்கித் தந்ததோடு, உலக அளவில் இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எல்லா உயர்தர தங்கும் விடுதிகளிலும் மேற்கத்திய நாடுகளிலும் மிக முக்கிய பானமாக கருதி பயன்பாட்டில் இருக்கின்றது இலங்கையில் உற்பத்தியாகும் தேயிலை. இலங்கையின் மலையகப் பகுதிக்கு இன்று நாம் செல்லும்போது நாம் காணும் காட்சி இயற்கை அழகின் எல்லை இல்லா பேரழகு. இது சுவர்க்கலோகம் என்று இங்கு வருகின்ற ஒவ்வொருவரும் எண்ணும் வகையில் மலையகத்தில் அமைந்துள்ள தேயிலைத் தோட்டங்கள் காட்சியளிக்கின்றன. இதனை உருவாக்கிய மலையக தமிழ் மக்களின் வாழ்க்கை நிலையோ இன்றளவும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கும் வகையிலேயே தொடர்கின்றது.

    முறையான சுகாதார நலன் இன்றி இம்மக்களின் அன்றாட வாழ்க்கைத் தொடர்கின்றது. கல்வி மேம்பாடு தொடர்பான விஷயங்களிலும் இம்மக்களுக்கு மேம்பாடு தேவைப்படுகின்றது. குடியிருக்க சொந்த வீடுகள் இன்றியும், தேயிலைத் தோட்டங்களிலேயே அவர்களது பிறப்பு முதல் இறப்பு வரை நிரந்தரமற்ற ஒரு வாழ்க்கையாகவே முடிந்து விடும் அவலமும் தொடர்கிறது. இத்தகைய செய்திகள் அனைத்தையும் ஆவணப்படுத்தும் முயற்சியின்வெளிப்பாடாக நியூ பீக்கோக் எஸ்டேட் அருகாமையிலிருக்கும் ராமன்துறை தோட்ட ”மலையக மக்கள் அருங்காட்சியகம்” இன்று நமக்குக் காட்சி அளிக்கின்றது. இந்த அருங்காட்சியகத்தில் பணிபுரிகின்ற அருங்காட்சியக அதிகாரி திரு.சந்தனம் சத்தியநாதன் மற்றும் ஏனைய அதிகாரிகளுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளை உலகத் தமிழ் மக்களின் சார்பில் நன்றியினையும் பாராட்டுக்களையும் பதிகின்றோம்.

    Share
  • முளைப்பாரி: சக்தியின் மூலப்படிமக் குறியீடு

    -முனைவா். ரா.மூர்த்தி

    தாய்த்தெய்வ வழிபாடு மனிதன் அச்சமுறும் காலத்திலிருந்து அச்சத்ததைப் போக்கிக் கொள்வதற்காகக் தாங்களே ஏற்படுத்திக் கொண்ட தற்காப்புச் செயல்பாடு ஆகும். இது தமிழ்ச்சமூகத்தில் கண்ணகி வழிபாட்டின் தொடர் விரிவு எனவும் தற்கால நிலைப்பாட்டில் மாரியம்மன் வழிபாடாக மாறியதையும் நாட்டுப்புற ஆய்வாளர்களால் இனங்காண முடிகின்றது.

    தாய்த்தெய்வ வழிபாடு ஆக்ரோசத்தோடு ஆவேச நிலையில் தெய்வமாக்கப்பட்டதை “காளி அசுரனைக் கொன்றமை, கண்ணகி அரசனின் கொடூர முடிவுக்குட்பட்டமை” கற்பின் சந்தேகத்தினால் கொடூர மாற்றம் நிகழ்ந்து பின் வழிபாட்டுக்கு உள்ளாக்கப்படுகிறது. வெறிச்சூழலை ‘சந்து செய்வித்தலால்’ கொடூரத் தோற்றம் ஒரு நிலைப்படுத்தப்பட்டு சாற்றுவிக்கப்படுகிறது. இந்நிகழ்வு பெரும்பாலும் தாய்த்தெய்வமான சக்திக்கே அதிகம் நிகழ்த்தப்படுகிறது.

    தாய்த்தெய்வ வழிபாட்டோடு பண்பாட்டில் வெளிப்படும் தெய்வங்களின் ஆக்ரோசத் தன்மையைக் குறைக்க அமைப்பாக்கத்தில் ஒரு பெண் மூலம் மற்றொரு பெண்ணுக்குத் தேவையான சடங்குகளை சாமி ஆடுபவர்கள், மருளாடிகளுக்கு நிறைவேற்றப்படுகிறது. இத்தன்மை ஒரே தளத்திலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருப்பதில்லை. அதன் தளங்கள் இடத்திற்கு இடம் மாறுபடும். மாறுபடும் சூழலில் மூலப்படிமத்தின் பெயரும் மாற்றமுறுவதோடு, பொருளின் தன்மை மக்களின் வழக்காற்று வார்த்தைகள், செய்விக்கப்படும் படையல்கள், பொருட்களின் தன்மையும் மாறுபடக் கூடும். இவ்விரண்டு சாய்மையினால் இடம், பொருள் மாறுபட்டாலும் மூலப்படிமத்தின் குறியீடு ஒரே நிலையிலேயே சொற்பொருண்மை கொண்டு செயலாக்கம் பெறுகிறது.

    இந்நிலைப்பாடு தமிழர்களின் வாழ்வில் காலங்காலமாகச் சக்தி தெய்வத்திற்கு மங்களம், வளமை, பசுமை, மறுபிறப்பு, செழிப்பு எனக் குறியீட்டு வடிவத்தை  நிறைத்துச் சமய வழிபாட்டை நகர்த்திச் செல்வதில் அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது. அதில் தொல்தமிழர்களின் முளைப்பாரியும் அடங்கும். பிற இனத்தவர்கள் தெய்வத்தினை அணுக முற்படாத நிலையில் அத்தெய்வத்திற்கு படைக்கப்படும் பொருட்களைக் கொண்டும் வழிபடும் மக்களைக் கொண்டும் இன்ன தெய்வங்கள் என்று அறிந்துகொள்ள நேர்கிறது. சிலர் இது சக்தியின் வெளிப்பாடு உருவாக்கம் என்று எளிதில் இனங்காணமுடிகிறது.

    முளைப்பாரி தமிழ்ச்சமூகத்தில் வழிபாட்டின் போது எந்நிலையில் பயன்படுத்தப்படுகிறது. அதற்கான காரணம், தோற்றத்தொன்மம், சமூக அடையாளமாக மாறக் காரணம்? தற்காலச் சூழலில் அவற்றின் போக்கு எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது அதனையும் இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

    முளைப்பாரி விளக்கம்

    முளைப்பாலிகை என்பதை பேச்சு வழக்கில் முளைப்பாரியாக மாரியது. முளைப்பாலிகை என்பதற்கு “நவ தானியங்கள் முளைக்கும் முளைத்தாழி” என்று கூறுகின்றனர். தாழி என்பது மண் சட்டியைக் குறிக்கும். “விரித்த பாலிகை முளைக்குட நிரையினர்” என்று சிலப்பதிகாரம் சுட்டுகிறது. கோவலன் கண்ணகி திருமணத்தின்போது தானியங்கள் முளைக்கும் பானைகளை ஏந்திக்கொண்டு சென்றதைச் சிலப்பதிகாரத்தில் காணமுடிகிறது.

    முளைப்பாரி என்பது வித்தினின்று வெளிவருவது. முளைப்பது; பாரி என்பதற்கு ‘கள்’ என்று தமிழகராதி பொருளிடுகிறது. முளைப்பாரி என்பதை உருவாக்குதல் என்று பொருளிட்டால் ‘விதை’ மண்ணில் முளைப்பது என்றால் ஒரு நிலையில் இயல்பாக பறவைகளின் ஊடாக நிகழக்கூடும். மற்றொன்று இறந்தவர்களின் நினைவாக வேண்டுதல் பொருட்டும், விருப்பத்தின் பேரில் நடவு செய்யப்பட்டு அதன் வழி நிகழக்கூடும். பெண்கள் உழவுத்தொழில், பயிர்த்தொழில் இனங்கண்ட நாள் முதல் முளைத்தல், வெளிவருதல் இவை அனைத்தும் பெண்மையின் வளர்சிதை பெருக்கத்தை வெளிப்படுத்துகிறது. ‘கள்’ என்ற நிலையில் பார்த்தால் தமிழர்களின் தொல்நிலையிலிருந்தே ஒன்றிணைந்து வருகிறது. இதுவும் இறந்தவர்களுக்கே நடுகல், கல்லறை இவற்றின் அருகில் ஒரு சடங்காக நிகழ்த்தப்பட்டு வருகிறதைக் காணலாம். இழப்பின்மூலம் மீண்டும் புதுமையை எய்த முடிவதோடு இறப்பிற்குச் சரிகட்டலாம் என்ற எண்ணப்போக்கு தமிழ்ப் பண்பாட்டில் தொன்றுதொட்டு காலங்காலமாக நிகழ்ந்து வருகிறது.

    முளைபாரி உருவாக்கும் விதம்

    முளைப்பாரியை உருவாக்குவதில் புழங்கு பொருட்களில் கலப்பு நிகழ்வது போல தானியங்களிலும் கலப்பு மாற்றம் இருக்கும் ‘தென்மாவட்டங்களில் பறையர்கள் முளைப்பாரிக்கு கம்பு, சோளம்,  கேப்பை இதனையே அதிகம் பயன்படுத்துகின்றனர். மாறாக பள்ளர்கள் பயறுகளைப் பயன்படுத்துகின்றனர். முளைப்பாரியை உருவாக்கும் போது பாடக் கூடிய பாடல்

    “நல்ல தண்ணீர் எடுத்து வந்து
    நாங்கள் முளை போட்டோம்
    சிவபாலரெல்லாம் போட்டோம்
    போட்ட முளை பழுதில்லாமல்
    போங்கி நல்லா வளர”
    என்று பாட்டுப் பாடி தொடங்குகின்றனர்.

    ஊர்க்கு ஒதுக்குப்புறத்திலும், அல்லது ஊர்ச்சாவடி, கோயில் ஆகிய இடங்களில் அகலமான உயரமான குத்துச்சட்டி, மண்பானையைக் கொண்டு பயன்படுத்துகின்றனர். பறையர்களைத் தவிர மற்ற இனத்தவர்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் காப்புக் கட்டிக்கொண்டு அவர்களது இல்லத்திலே முளைப்பாரியை உருவாக்கிக் கொள்கிறார்கள். இதில் பறையர்களுக்கு நாடார் இனத்தைச் சேர்ந்தவர்கள் முளைப்பாரி போட்டு திருவிழா அன்று வழங்குகிறார்கள் (இடம்: வத்திராயிருப்பு). முளைப்பாரிக்குத் தேவையாக வைக்கோல், சோளத்தட்டை இரண்டையும் மூன்று அடி உயரம் நறுக்கி அதில் வைக்கோலைக் கொண்டு சுற்றி கால்படாத களிமண்ணைக்கொண்டு நல்ல தண்ணீர் ஊற்றி அதனைக் குழப்பிக் குத்துசட்டியின் நடுவில் சோளத்தட்டையை வைத்து அதில் மணல் பரப்பி களிமண் கொண்டு மெழுகி அதன் மீது கம்பு, சோளம், போன்ற தானியங்களை ஊறவைத்து தடவி விடுவது வழக்கம் ஏழு நாட்கள் அல்லது ஒன்பது நாட்களுக்கு காற்று புகாமல் மறைவாக மறைத்து வைத்து பிறகு திருவிழா அன்று அதனை வெளிக்கொண்டுவருவார். இவ்வாரு செய்வது பறையர்களின் தொல்கால நிலையாகும்.

    முளைப்பாரிக்குத் தேவையான பொருட்களைக் கையில் எடுத்துக்கொண்டு வழிபடும் போது

    “சோளத்தட்ட ரெண்டெடுத்து
    சோக சோகயாக உருச்சுவச்சு
    கம்மந்தட்ட ரெண்டெடுத்து
    கணுகணுவா ஒடுச்சி வச்சு
    பருத்தி குச்சி ரெண்டெடுத்து
    பளபளன்னு பாவி வச்சு”
      என்று பாடி ஆரம்பிக்கின்றனர்.

    பானை, சட்டி, சோளத்தட்டை இவற்றின் மூலத்தை நோக்கும்போது இரு கருத்தமைவுகளை வெளிக்காட்டுகிறது. பானை –  பெண்மையின் குறியீடு என்றும், சோளத்தட்டை – ஆண்மையின் குறியீடு என்றும் எடுத்துக்கொண்டு  பண்பாட்டோடு அணுகும் போது பானை(பெண்) – சோளத்தட்டை(ஆண்) இரண்டையும் உருவாக்குபவள் பெண்மையே. ஓர் உயிரியின் உருவாக்குதல் – அழித்தல் இரண்டும் பெண்ணே முன்னின்று செயல்படுகிறாள். பயிர்த்தொழில், தானியங்களின் உற்பத்தியைப் பெருக்குதல், அறுவடை போன்ற செயல்பாடு பெண்மையின் வெளிப்பாடே. இதனைச் சிறுதெய்வ வழிபாடுகளில் நம்மால் இனங்காணமுடியும். பெண்தெய்வங்கள் முக்கோண வடிவில், தாமரை வடிவில், நாற்சதுர வடிவில் தோன்றும். அதன் நடுப்புறத்தில் அல்லது அதன் மேல்தளத்தில் ஆண் உருவங்கள் காணப்படும். சிவனின் லிங்கத்தோற்றத்தில் கூட மேல்நோக்கி நின்ற நிலையில் லிங்கமும், அதனைத் தாங்கிக் கொண்டு யோனி போன்று வடிவம் காணப்படும். இக்கட்டுமான அமைப்பினைக் கொண்டு முளைப்பாரியின் தோற்ற வடிவத்தினை அணுகினால் நம்மால் ஓர் அனுமானத்தை இனங்காண முடியும்.

    முளைப்பாரிக்கான தானியங்கள், புழங்கு பொருட்கள் சமூகத்திற்குச் சமூகம் மாறுபட்டாலும் நிறத்தின் சாயல் பசுமை – பச்சைத் தன்மையிலே வளமையாகக் காணப்படுகிறது. அதற்கு மாறாகச் சிவப்பு கோபத்தின் வெளிப்பாடாகவும் பலியிடுதலின் நிலையாகவும் இருந்து வருகின்றது.

    தமிழ்ச்சமூகமும் முளைப்பாரியும்

    தமிழ்சமூகத்தோடு முளைப்பாரியை இனங்காணும் தன்மையில் மருதநிலம் தோற்றமுற்றதே உழவு, விவசாயத்தை மையமிட்டு, ஏனென்றால் இயற்கைச் சூழல், தட்பவெப்ப நிலை, பருவகால மாற்றம் இதனைக் கருத்தில் கொண்டு தமிழர்கள் வாழ்வை நிகழ்த்தி வந்தனர். “தென்னிந்தியச் சடங்கு வரிசையில் பொங்கலிடுதல் உழத்தொழிலின் ஒரு மூலப்படிவக் குறியீடு  என்பதோடு மங்களத்தின் வெளிப்பாடு என்று பிரந்தா பெக் (1969:556) கூறுவதாக பக்தவத்சல பாரதி கூறுகிறார். பொங்கல் வளமை என்று எண்ணத் தோன்றும் போது முளைப்பாரி அதற்கு வித்தாகப் பசுமையின் குறியீடாகக் கொள்ள நேர்கிறது.

    தமிழகத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் காளியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன் போன்ற தெய்வங்களுக்கு  திருவிழா(கொடை)வின் போது தமிழர்களால் நிகழ்த்தப்படக்கூடிய மூலப்படிவ சடங்காகும். இச்சடங்கு செய்வதால் அம்மனுக்குக் குளிர்ச்சி ஏற்பட்டு குழந்தைப்பேறின்மை, திருமணம் ஆகாத் தன்மை, குடும்பச் செழிப்பின்மை, நோய், நீத்தல் போன்ற தன்மைகள் மாறி செழிப்பு ஏற்படும் என்ற எண்ணப் போக்கு தமிழர்கள் மத்தியில் நிகழ்ந்து வருகிறது. சிறுதெய்வ வழிபாடுகள் அனைத்தும் தாய்த்தெய்வத்தின் வெளிப்புறத்தோற்றமாக இருப்பதால் அதனது வேண்டுதலை நிவர்த்தி செய்வதற்காக ஆண்டுதோறும் கோவில் வழிபாட்டின் போது பெண்களால் இச்சடங்குகள் செய்விக்கப்படுகிறது.

    முளைப்பாரி இடுவது தமிழ்ச்சமூகத்தில் அனைத்து ஊர்களிலும் தெருக்களிலும் நிகழ்ந்தாலும் அதனை உருவாக்குவதற்குத் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களே தேவையாக இருப்பதைக் காணலாம். பெரும்பான்மையான சிறுதெய்வங்களின் தோற்றத் தொன்மத்தினை ஆராய்ந்து நோக்கியோர் உயிர் இழப்பு ஏற்பட்ட சூழலில் தாழ்த்தப்பட்ட மக்களே அத்தெய்வங்களை உடல் ரீதியாகவும், உணவு ரீதியாகவும் ஆதரித்தனர் என்று தொன்மக்கதைகள் கூறுகிறது. “ விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் ஆண்டுதோறும் முத்தாலம்மன் தேர்த்திருவிழா நடைபெறும். திருவிழாவில் பதினெட்டுப்பட்டி கிராமங்களைச் சார்ந்த பல இனமக்கள் கலந்து கொள்வதோடு அனைவரும் வணங்கும் பொதுத்தெய்வமாகவும் முத்தாலம்மன் இருந்து வருகிறது. இருந்தாலும் திருவிழாவில் பறைகொட்டுதல், முளைப்பாரி எடுத்தல் நிலையினைப் பறையர் இனமக்களே செய்கின்றனர். “அன்றே பிறந்து அன்றே அழியக்கூடிய தெய்வமாக” முத்தாலம்மன் தெய்வம் இருந்து வருகிறது.  முளைப்பாரி உருவாக்குதல், அழித்தல் தெய்வம் முதலாகப் பறையர்களே செய்கின்றனர். இது அனைத்து சிறு பெண்தெய்வங்களுக்கும் பொருந்தும். தெய்வங்கள் அழியக்கூடிய நாட்களில் தெய்வங்களுக்குப் படைக்கப்படும் பொருட்களும் அழிக்கப்படுகிறது.

    இத்தெய்வங்களின் மூலவடிவம் தோற்றமுற்ற நிலம் அதே இடத்திலே குடிகொள்ளும் அதன் நினைவாக ஆண்டுதோறும் உருவாக்கப்படும் எடுப்பு தெய்வங்கள், படையல்கள் அதன் குறித்த காலங்களில் அழிக்கப்படுகிறது. இதில் தொடர்தலைமுறை வணக்கம் மரபு ஒரு வகையிலும் அதனைச் சந்து செய்விப்பதற்காகப் படைக்கப்படும் செயல்பாடுகளும் வெளிப்படுகிறது.

    முடிவுகள்

    தமிழ்ச்சமூகத்தில் விவசாயத்தோடு இரண்டறக் கலந்த முளைப்பாரி தமிழர்களின் அடையாளத்தை தொடர்ச்சியாகத் தாங்கிக் கொண்டு வருகிறது. தெய்வத்திற்கு மட்டும் பயன்பட்டுவந்த முளைப்பாரிகள் இன்று பல்வேறு நிகழ்வுகளுக்குப் பயன்பட்டு வருகிறது. தலைவர், தலைவிகளின் மாநாடுகள், பொதுக்கூட்ட வருகை, நினைவஞ்சலி செலுத்தும் இடங்கள், பொதுநிகழ்வுகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக முளைப்பாரி பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை மாற்றத்தினால் தொல்படிவ மூலம் மாற்றமுறாமல் இருந்தாலும் அதன் வெளிப்பாடு தெய்வ நிலையிலிருந்து சற்று மாற்றமுற்று காணப்படுவதை இனங்காண முடிகிறது.

    துணை நின்ற நூல்கள்

    1.பக்தவத்சல பாரதி – பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன்

    பதிப்பகம், 53,புதுத்தெரு, சிதம்பரம் -001
    2.பக்தவத்சல பாரதி – தமிழர் மானிடவியல், அடையாளம் வெளியீடு,  புத்தாநத்தம், திருச்சி -10, முதல் பதிப்பு-2002.

    1. பக்தவத்சலபாரதி – மானிடவியல் கோட்பாடுகள், அடையாளம் வெளியீடு,

      புத்தாநத்தம், திருச்சி -10, முதல் பதிப்பு-2005.

    *****

     கட்டுரையாளர் –  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
    ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி
    பெரியநாயக்கன் பாளையம்
    கோயம்புத்தூர்- 20

    Share