நலம் .. நலமறிய ஆவல் – 137
தொழில் நுட்பமா, உறவினரா?
பொது இடங்களுக்கு மூன்று வயதுக்குட்பட்ட சிறுவர்களை அழைத்துப்போனாலே திண்டாட்டம்தான்.
அவர்களை எப்படிச் சமாளிப்பது என்றே புரியாது, அவர்களை கேட்டதையெல்லாம் வாங்கிக்கொடுக்கும் மிகச்சிலரைவிட, அடியையும், திட்டையும் நம்புகிறவரே அதிகம்.
பெரியவர்களும் குழந்தைகளுடன் எங்காவது காத்திருக்கையில் இனிமையாகப் பொழுதைக் கழிக்க எத்தனை முறைகள் இல்லை!
சிறுவனின் விரல்களைப் பிடித்து, `ஒன்று, இரண்டு..,’ என்று எண்களைச் சொல்லிக்கொடுக்கலாம். இல்லாவிட்டால், ஒரு துண்டு காகிதத்தை மடித்து, `படகு’ என்று அவனிடம் கொடுத்தால், அந்தப் புதிய விளையாட்டுச் சாமான் சிறிது நேரம் ஆர்வமூட்டி அவனை அமைதிப்படுத்தும்.
கைப்பையில் தயாராக வைத்திருக்கும் துண்டுக் காகிதத்தை எடுத்து, அதில் அவனுக்குப் பிடித்த எதையாவது வரைந்தால், பூரிப்புடன் அமர்வான். அடுத்த முறை, அவனிடமே காகிதத்தையும் பேனாவையும் கொடுத்தால், உருண்டையாக எதையாவது போட்டுவிட்டு, பெருமையுடன் தாயிடம் காட்டுவான். பக்கத்திலிருப்பவர் `என்ன இது?’ என்று கேட்டால், `புலி!’ என்று ஆணித்தரமாக பதில் வரும். அடுத்த முறை, அதுவே கோழியாக மாறினாலும் மாறும்!
சிறுவர் புத்தகத்திலிருந்து மிருகங்களின் பெயர்களை வாசித்துக் காட்டுவது நல்ல பொழுதுபோக்கு. பல முறை காட்டினாலும் குழந்தைகளுக்கு அலுக்காது. (சற்றுப் பெரியவர்களானதும், அவர்களே படிக்கும் புத்தகங்களை செல்லும் இடத்திற்கெல்லாம் எடுத்துவந்தால் படிப்பில் ஆர்வம் பெருகும். நேரத்தையும் வீணாகக் கழிக்கமாட்டார்கள்).
இந்த எல்லா வழிகளிலும் தாயின் ஈடுபாடும் இருப்பதால் அவளுக்குக் குழந்தையுடன் அதிக நெருக்கம் ஏற்படும்.
இந்த முறைகளெல்லாம் பழமையாகிவிட்டன. அதனாலேயே பலருக்கு அலுப்பைத் தருகிறது.
`ஏனடா விடுமுறை வருகிறது என்றிருக்கிறது! என் மூன்று வயது மகன் ஓயாது கேள்விகள் கேட்கிறான்!’ என்று என் சக ஆசிரியைகள் அலுத்துக்கொள்வார்கள்.
`அதுதான் மிக சுவாரசியமான பருவம்! அவர்கள் கேட்பது நமக்குச் சிரிப்பை வரவழைக்கும்!’ என்று நான் கூறியபோது, அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். (உதாரணம்: `நான் ஒன் வயத்திலேருந்து வந்தேனா! ஏம்மா என்னை முழுங்கினே?’)
கதை
வங்கி ஒன்றில், கனகா மகன் ராஜனையும் உடன் அழைத்து வந்திருந்தாள். அவன் ஓரிடத்தில் அமராது, குறுக்கேயும் நெடுக்கேயும் ஓடிக்கொண்டிருந்தான்.
தத்தம் இருக்கையில் அமர்ந்திருந்த மற்றவர்கள் முகம் சுளித்தார்கள். அவமானம் தாங்காது, தாய் சிறுவன் முதுகில் இரண்டு அறைவிட்டாள். நிலைமை மோசமாகியது. அலறிக்கொண்டே ஓட ஆரம்பித்தான் அவன்.
வேறு வழி புலப்படாது, தன் கைப்பையைத் திறந்து, ஒரு பொருளைக் காட்டினாள் தாய். ராஜன் ஓடோடி வந்தான்.
அப்பொருள்: கைத்தொலைபேசி.
அடுத்த பல நிமிடங்களுக்கு அவன் நகரவேயில்லை. தானே அச்சாதனத்தை இயக்கி, ஏதேதோ விளையாட்டுகளில் ஈடுபட்டிருந்தான். கண்ணுக்கு மிக அருகில் வைத்துக்கொண்டான், உற்சாகம் அதிகமாக, அதிகமாக.
தாயும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள். அவனை அமைதிப்படுத்த வீட்டில் அவள் கையாண்ட வழி அது. முதலிலேயே தோன்றாது போய்விட்டதே என்று தன்னைத்தானே நொந்துகொண்டாள்.
தற்காலத்தில், குழந்தைகளுக்கு விதவிதமான விளையாட்டுச் சாமான்கள்– தொழில் நுட்பத்துடன் கூடியவை – கிடைக்கின்றன. எல்லாவற்றையும் ஒலியுடன் திரையில் பார்க்க முடிவதால் எதையும் விளக்க வேண்டியதில்லை. பெற்றோரின் குரலைக் கேட்கவேண்டிய நேரத்தில் ஒரே தொனியில் ஒலிக்கும் அந்த இயந்திரக்குரல். (பிறந்த குழந்தைக்குக்கூடத் தாயின் குரல் புரியும். இந்த இயங்திரக் குரலைக் கேட்டே வளரும் குழந்தைகளோ குரலில் ஏற்ற இறக்கமில்லாமல் அதுபோலவே பேச முற்படுகிறார்கள்).
இன்றைய குடும்பங்களில், அப்பா கணினியின் எதிரே காலத்தைக் கழிப்பார். அம்மா – தொலைகாட்சி அல்லது தொலைபேசி. மகனோ..!
உறவினர் வீட்டுக்குப் போனால், தன் கணினி விளையாட்டு முடியும்வரை பையன் நாம் வந்திருப்பதைக் கண்டுகொள்ள மாட்டான். ஒரே ஊரிலிருக்கும் நெருங்கிய உறவினர்களைவிட கண்காணாத நாட்டில் வசிக்கும் நண்பர்களுடன் அரட்டை (chat) அடிப்பதில்தான் அவனுக்கு ஆர்வம். பரீட்சைக்குப் படிக்கும்போதும் தன் கையிலேயே தொலைபேசியை வைத்துக்கொண்டிருப்பான், அவனுடைய ஓர் அங்கம்போல. அடிக்கடி அதில் கவனம் போவதில் படிப்பது மனதில் நிலைக்காது.
உருப்போடுவதும், உருப்படாத பொழுதுபோக்குகளும்
விஞ்ஞானம் போன்ற சில பாடங்களில் மனனம் செய்வது மாணவர்களுக்கு இயலாத ஒன்றாகிவிடுகிறது என்பதை நான் அனுபவத்தில் கண்டிருக்கிறேன். (இரண்டு மூன்று முறை உரக்கப் படித்துவிட்டு, அதையே எழுதிப் பார்ப்பது சரியான முறை. என்றும் மனதைவிட்டு அகலாது).
கதை
முன்காலத்தில், `மனக்கணக்கு’ என்று பள்ளிகளில் குழந்தைகளைத் தயார் செய்வார்கள். ஒன்று, இரண்டு என்று வரிசையாகச் சொல்வது, அல்லது கூட்டல், கழித்தல் போன்றவை. எழுதுகோல் உதவியின்றி, மூளை ஒன்றே கருவியாக, இந்தக் கணக்குகளைப் போடவேண்டும்.
நான் உயர்நிலைப்பள்ளியில் படிக்கையில், எங்கள் ஆசிரியை அல்ஜீப்ராவை நின்ற நிலையில் பதினைந்து, இருபது படிகளை வரிசையாகச் சொல்லிக்கொண்டே போவார். நிறையப் படிக்கும் பழக்கமுள்ள ஓரிரு மாணவிகளுக்கு மட்டும்தான் புரியும்.
வேறு மாநில ஆரம்பப் பள்ளியில் மனக்கணக்கு போதிக்கப்பட்டிருந்ததால் ஆசிரியை கையாண்ட முறையை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. மற்றவர்கள் `புரியவில்லை!’ என்று ஓரிரு முறை சொல்லிவிட்டு, திட்டு வாங்கியபின் வாயே திறக்க மாட்டார்கள்.
வகுப்பு முடிந்து ஆசிரியை வெளியே போனதும், `Take over, Nirmala!’ என்று கத்துவார்கள். நான் கரும்பலகையில் எழுதி விளக்குவேன். அப்போது எனக்குப் பன்னிரண்டு வயது. (அண்மையில், `எந்த வயதில் நீ ஆசிரியையாக ஆனாய்?’ என்று யாரோ கேட்டபோதுதான் இந்தச் சம்பவம் நினைவுக்கு வந்தது).
ஏன் மனக்கணக்கு?
மூளையை விரைவாகச் செயல்பட வைக்கும். அடிக்கடி இம்முறையைப் பின்பற்றினால், மூளையிலுள்ள தசைகள் வலுவடைகின்றன.
அன்றாட வாழ்க்கையிலும் பயன்படுகிறது. உதாரணமாக, 30% தள்ளுபடி என்று ஏதாவது கடைவாசலில் அறிவித்திருந்தால், நாம் எவ்வளவு மிச்சப்படுத்த முடியும் என்பதற்கு கால்குலேட்டரையோ, பேனா, காகிதத்தையோ தேடவேண்டியதில்லை. உடனடியாக விடையைக் கண்டுபிடித்துவிட முடியும்.
இப்போதெல்லாம் கரும்பலகையில் இரண்டு ஆப்பிள் + இரண்டு ஆப்பிள் என்று வரைந்தால்தான் குழந்தைகளுக்குப் புரிகிறது. Abstract thinking குறைந்துவிட்டது – மூளை பாதிக்கப்படுவதால்.
ஒரு பாலர் பள்ளியில், குழந்தைகளுக்கு மனக்கணக்கு என்பது இயலாத காரியமாக இருந்தது. பள்ளியிலிருந்து பெற்றோருக்கு ஒரு வேண்டுகோள் விடுத்திருந்தார்கள்: `உங்கள் குழந்தையை ஒரு நாளைக்கு இருபது நிமிடங்களுக்குமேல் தொலைகாட்சியைப் பார்க்க விடாதீர்கள்!”
சில மாதங்களிலேயே குழந்தைகளின் மூளை வளர்ச்சியில் நல்ல மாற்றம் தெரிந்தது.
புத்தகங்கள் படிப்பதும் கணினியும்
படிக்கும்போது மூளைக்கு வேலை கொடுக்கிறோம். அதனால் எத்தனை வயதானாலும் அது நன்கு இயங்குகிறது.
கதைப்புத்தகங்களைப் படிக்கையில், கதை மாந்தர்களின் பெயர்கள் மட்டுமின்றி, அவர்களிடையே உள்ள தொடர்பு, அவர்களுடைய பின்னணி என்று பல சமாசாரங்களை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டுமே! அதனால் நினைவாற்றல் பெருகுகிறது. `நீங்க யாரு? எங்கேயோ பாத்தமாதிரி இருக்கே!’ என்று நம் நெருங்கிய உறவினர்களைக் கேட்க வேண்டிய நிலை ஏற்படாது.
கணினியை இயக்கியபடியே தொலைபேசி, பக்கத்தில் இருப்பவருடன் அரட்டை என்று பொழுதைப் போக்கும்போது கவனம் சிதறிப்போகிறது. ஆனால், ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தால், முழுமையான கவனம் அதிலேயே செலுத்தப்படுவதால் மனம் அமைதி காண்கிறது.
திரையை வெறிப்பதைவிட நல்ல புத்தகங்களைப் படித்தால் மூளையாவது வளருமே!
தொடருவோம்