-மேகலா இராமமூர்த்தி

மாந்தர்கள் வேட்டைச் சமூகமாய் அலைந்து திரிந்த காலத்தில் சமூகத் தலைமை பெண்ணிடமே இருந்தது. அவளே வேட்டைத் தலைமையும் வீட்டுத் தலைமையும் கொண்டவளாய்த் திகழ்ந்தாள். சுருங்கச் சொல்வதாயின் அன்றைய சமூகம் தாய்வழிச் சமூகமாகவே (Matriarchal society) இருந்தது.

இந்திப் பயண இலக்கியத்தின் தந்தையும் (Father of Hindi Travelogue), பன்மொழி அறிஞரும், மார்க்ஸியச் சிந்தனையாளருமான இராகுல் சங்கிருத்தியாயனின் (Rahul Sankrityayanவால்கா முதல் கங்கை வரை(A journey from the Volga to the Ganges) எனும் மாந்த வாழ்வியலை மையமாகக் கொண்ட வரலாற்றுப் புனைகதைகள் கிமு 6000 தொடங்கி கிபி 1942 வரையிலான காலகட்டங்களில் நிகழ்ந்த மானுடச் சமூக மாற்றங்களை மிக அழகாக விவரிக்கின்றன. அதில் தொல்குடிச் சமூகத்தில் தலைமைப் பொறுப்பிலிருந்த பெண்டிர் காலப்போக்கில் பின்னுக்குத் தள்ளப்பட்டு ஆண்கள் தலைமையின்கீழ் ஆட்பட்ட வரலாறு மிக  நேர்த்தியாக விவரிக்கப்பட்டிருக்கக் காணலாம்.

நம் சங்க இலக்கியங்களை ஆய்ந்தால்கூட அதில் வேட்டைக்குடியினரின் தெய்வமாய் வணங்கப்படுபவள் கொற்றவையே ஆவாள். இவ்வழிபாடு தாய்வழிச் சமூகமரபின் எச்சமே எனலாம்.

நெஞ்சையள்ளும் சிலப்பதிகாரத்தின் ’வேட்டுவ வரி’ப் பாடல்கள் கொற்றவையின் பெற்றியை நற்றமிழில் நவிலும் அழகைக் காண்மின்!

….துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி
கரியின் உரிவை போர்த்தணங் காகிய
அரியின் உரிவை மேகலை யாட்டி
சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி
வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை
இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன்
தலைமிசை நின்ற தையல் பலர்தொழும்
அமரி குமரி கவுரி சமரி
சூலி நீலி மாலவற் கிளங்கிளை
ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப்
பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை
ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை…”
(சிலம்பு – வேட்டுவ வரி)

இவ்வரிகளில் தம்குல முதல்வியும் வெற்றிச்செல்வியுமாகிய கொற்றவையின் தோற்றத்தையும் திறலையும் பாடிப் பரவுகின்றனர் வேட்டுவக் குடியினர்.

அற்றைய கல்விநிலையைக் கண்ணுற்றாலும், ஆண்களுக்கு நிகராய்ப் பெண்களும் கல்வியிற் சிறந்திருந்தமைக்குப் பல சங்கப் பெண்புலவர்கள் சான்றாய்த் திகழ்கின்றனர். ஏறக்குறைய 40 பெண்பாற் புலவர்களின் சங்கப் பாடல்கள் நமக்குக் கிடைத்துள்ளன. இவை நமக்குக் கிட்டியுள்ள பாடல்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலான கணக்கே. இவையேயன்றிப் பனையோலைகளில் கறையானுக்கு இரையானவை, ஆடிப்பெருக்கன்று ஆற்றில் எறியப்பட்டவை, ஆகுதி வேள்வியில் போகுதி என்று விட்டவை இவையும் கிடைத்திருந்தால் நம் இலக்கிய வளம் இன்னும் செறிவாகவும் செம்மையாகவும் இருந்திருக்கும். இன்னும்பல பெண்புலவோரின் பாடல்களும் நமக்குக் கிட்டியிருக்கக் கூடும். நம் போகூழ் வலிதாயிருத்தலின் அவை நமக்குக் கிடைத்தில.

இந்நல்லிசைப் புலமை மெல்லியலார் வரிசையில் விறலியான ஔவை, ஆடுகள மகளான ஆதிமந்தி, அரசமாதேவியான பெருங்கோப்பெண்டு, அரண்மனைக் காவற்பெண்டு என்று அனைவர்க்கும் இடமுண்டு. அம்மட்டோ? குறத்தியரும் (குறமகள் இளவெயினி/குறியெயினி) குயத்தியரும்கூட (வெண்ணிக் குயத்தியார்) அருமையாய்ப் பாப்புனைந்திருக்கக் காண்கின்றோம். இதன்வாயிலாய் நாமறிவது, அற்றைக் கல்வியானது சாதி, இன, நில, திணை வேறுபாடின்றி அனைவர்க்கும் பொதுவாய்க் கிடைத்திருக்கின்றது என்பதே!

பாட்டரசி ஔவை மட்டுமே அகமும் புறமுமாக அறுபது பாடல்கள் பாடியிருக்கின்றார். நானிலத்தையும் தன் பாட்டில் வைத்துத் தக்கதோர் உலகியல் உண்மையை அப்புலவர் பெருந்தகை உணர்த்தியிருக்கின்றார். அப்பாடல்…

நாடா கொன்றோ காடா கொன்றோ
அவலா கொன்றோ மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவர் ஆடவர்
அவ்வழி நல்லை வாழிய நிலனே!
(புறம் – 187)
 

”நிலமே! நீ ஓரிடத்தில் நாடாகவும் (மருதம்), வேறிடத்தில் காடாகவும் (முல்லை), மற்றோரிடத்தில் பள்ளமாகவும் (நெய்தல்), பிறிதோரிடத்தில் மலையாகவும் (குறிஞ்சி) திகழ்கின்றாய். ஆனால் நின் நலமும் சிறப்பும் நில அமைப்பினால் வருவதன்று! எந்நிலத்து ஆடவர் நல்லவரோ அந்நிலத்திலே நீ சிறக்கின்றாய் என்கிறார் நச்சென்று!” அன்றும் இன்றும் ஏன்…என்றும் பொருந்தக்கூடிய உண்மைதானே இது?

தஞ்சைக்கு அருகிலுள்ள வெண்ணி எனும் பகுதியைச் சேர்ந்தவர் குயத்தியார் எனும் பெண்புலவர். அவரின் துணிச்சலுக்கும் அஞ்சாநெஞ்சுக்கும் சாட்சியாய் ஒருபாடல் புறநானூற்றிலே காட்சியளிக்கின்றது.

வெண்ணிக்குப் புறத்தேயிருந்த வெண்ணிப் பறந்தலையில் கரிகாலனுக்கும் அவனை எதிர்த்து ’மெகா கூட்டணி’ அமைத்திருந்த சேரமன்னன் பெருஞ்சேரலாதன், பாண்டியன், மற்றும் பதினொரு வேளிர்க்கும் இடையே பெரும்போர் நடந்தது. அப்போது கரிகாலனின் வேலானது சேரலாதனின் மார்பைத் துளைத்து முதுகுவழியே வெளியே வந்துவிட்டது. இதனால் முதுகிலும் புண்பட்டுப் புறப்புண் பட்டது போன்றொரு தோற்றத்தைச் சேரனுக்கு ஏற்படுத்திவிட, வேதனையுற்றான் அவன். இனியும் உயிர்வாழ்தல் வீரனுக்கு அழகன்று என்றெண்ணிய அவன் வடக்கிருந்து உயிர்துறந்தான். கரிகாலன் அப்போரில் பெருவெற்றி பெற்றான்.

இச்சம்பவங்களையெல்லாம் அப்பகுதிவாசியான குயத்தியார் நன்கு அறிந்திருந்தார். எனவே போருக்குப் பின் ஒருநாள் கரிகாலனைக் காணச்சென்றவர், தம் மன்னனின் வென்றியைப் போற்றினார்; அத்தோடு நின்றாரில்லை. அவனினும் நல்ல(வ)ன் தன் வீரர்களோடு வாள் வடக்கிருந்து உயிர்நீத்து மிகப்புகழ் உலகமெய்திய சேரலாதன் என்று துணிந்துரைத்தார் அப்பெருமாட்டி.

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ
சென்றமர்க் கடந்தநின் னாற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புகழ் உலகம் எய்திப்
புறப்புண் நாணி வடக்கிருந் தோனே.
   (புறம் – 66)

அன்று பெண்டிர்க்கிருந்த பேச்சுரிமைக்கும் கருத்துச் சுதந்தரத்துக்கும் இப்பாடல் சிறந்த சான்றாகும்.

காக்கைபாடினியார் நச்செள்ளையார் எனும் புலவர் பெருமாட்டி, பதிற்றுப்பத்தின் ஆறாம் பத்தில் ஆடுகோட்பாட்டுச் சேரலாதனைப் புகழ்ந்து பாடி, ஒன்பது துலாம் பொன்னும், நூறாயிரங் காணமும் பரிசிலாய்ப் பெற்று அவன் பக்கத்தில் வீற்றிருக்கும் சிறப்பும் பெற்றார் என்றறிகின்றோம்.

இவையெல்லாம் அன்றைய பெண்டிரின் கல்விப் புலமையை, கவிபாடுந் திறமையைப் பெருமிதத்தோடு நமக்குப் பறைசாற்றி நிற்கின்றன.

[தொடரும்]

*****

துணைநூல்கள்:

1. புறநானூறு மூலமும், ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை உரையும் –  சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், திருநெல்வேலி.

2. https://en.wikipedia.org/wiki/Rahul_Sankrityayan

3. சிலப்பதிகாரம் மூலமும், ந.மு. வேங்கடசாமி நாட்டார் உரையும் – சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம்.

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published.