-முனைவர் தி.அ. இரமேஷ்

ஒரு மொழியில் சொற்களின் வளர்ச்சி பல்வேறு சூழ்நிலைகள் காரணமாக நிகழ்ந்து வருகின்றது. அச்சொற்களை ஆக்கிப் பயன்படுத்தும் முறை சங்ககாலம் தொடங்கி இன்றுவரை தொடர்ந்து ஆக்கத்தன்மையுடன் வழக்கில் உள்ளது. தற்காலத்தில் சொற்களை ஆக்கிப் பயன்படுத்துதல் என்பது தனித்ததொரு துறையாகச் ‘சொல்லாக்கம்’ எனும் பெயரில் வளர்ச்சி பெற்றுள்ளது.

சொல்லாக்கம் பல்வேறு பிரிவுகளாகப் பகுக்கப்பட்டு ஆராய்ந்து வகைப் படுத்தப்பட்டாலும், சங்க காலத்தில் திரிபு, ஆக்கப்பாடு (மொழியியல், சொல்லியல், பெயரியல், பக். 22-23) ஆகிய இரு பிரிவுகளில் சொல்லாக்கம் நிகழ்ந்துள்ளதை அறிய முடிகின்றது. இதில் திரிபு என்பது இலக்கண அடிப்படையில் உருவாவது. ஆக்கப்பாடு பொருள் மாற்ற அடிப்படையில் நிகழ்வது. சங்க இலக்கியத்தில் கூட்டுச்சொற்கள், பிறமொழிச் சொற்கள், விகுதிவழிச் சொற்கள் என்னும் மூன்று நிலைகளைக் காணமுடிகிறது. இவை மூன்றும் ஆக்கப்பாடு என்ற வகையில் அடங்கும். விகுதிவழிச் சொற்கள் என்ற வகையில் சிலப்பதிகாரத்தில் நிகழ்ந்துள்ள சொல்லாக்கச் சொற்களைத் தொகுத்துநோக்கி, அவை சிலப்பதிகார காலச் சொற்பெருக்கத்திற்கான சான்றாகவும் தற்காலத்தில் வளர்ச்சிபெற்றுள்ள விகுதிவழிச் சொல்லாக்கத்திற்கு (பின்னொட்டாக்கம்) முன்னோடியாக அமைந்துள்ளன என்பதையும் இக்கட்டுரை ஆராய்கின்றது.

ஆக்க விகுதிகள்

பெயர், பெயரடி, வினை, வினையடிகளுடன் விகுதிகள் சேர்ந்து சொற்கள் உருவாக்கம் பெறுகின்றன. அவற்றின் அடிப்படையில் சொல்லாக்கச் சிந்தனையில் ஈடுபட்ட ச. அகத்தியலிங்கம் அவர்கள் ஆக்க விகுதிகளாக அருவத்தை, ஐ, அகம், அம், அல், அவு, இ, உள், கை, க்கை, சி, ச்சில், ச்சி, தி, பு, ப்பு, ம், மை, வை, வல், வி, வு, அர், அரை, ஆர், காடு, ட்டம், ட்டு, டு, டை, ப்பை, வாய் எனும் 33 விகுதிகளைச் சங்க இலக்கியங்களில் ஆக்க ஒட்டுக்களாக இடம்பெற்றுள்ளதாகச் சுட்டுகிறார் (மொழியியல், சொல்லியல், பெயரியல், பக்.145-148). இவ்விகுதிகள்வழிச் சங்க இலக்கியத்தில் சொல்லாக்கம் பரவலாக நடைபெற்றுள்ளது. அவற்றைப் பின்தொடர்ந்து எழுதப்பட்ட சிலப்பதிகாரத்தில் நிகழ்ந்துள்ள விகுதிவழிச் சொற்களைக் காணலாம்.

மேற்காணும் விகுதிகளைக் கொண்டு சிலப்பதிகாரத்தில் நிகழ்ந்துள்ள விகுதிவழிச் சொற்களை நோக்கும்பொழுது இருபதுக்கும் மேற்பட்ட  விகுதிகள் சொல்லாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்துள்ளதைக் காணமுடிகிறது. இவ்விகுதிகளை இரு பிரிவுகளில் பகுத்துக்காண முடிகிறது. அவை பெயர்ச்சொற்களுடன் சேரும் விகுதிகள், வினையடியுடன் சேரும் விகுதிகள் என்பன.

பெயர்ச்சொற்களுடன் சேரும் விகுதிகள்

அகம், அம், அர், அல், அன், ஆள், ஆளர், இ, இர், இயல், கு, ச்சி, ஞர், ஞை, தி, த்தி, ப்பு, மார், மை, வி, வு, வை ஆகிய இருபத்திரண்டு விகுதிகள் பெயருடன் சேர்ந்து சொற்கள் ஆக்கம் பெருவதற்குத் துணைநிற்கின்றன.

அகம் விகுதி

அகம் என்பதற்கு வீடு, மனம், ஞானம், உள் எனப் பல பொருள்கள் உள்ளன. ஆனால் இச்சொல் ஒரு சொல்லின் முன் அல்லது பின் என்னும் இருநிலைகளில் சொல்லாக்கத்தில் இணைந்து செயல்படுகிறது. முன்னொட்டாக விளைவாக்கம் இல்லை. ஆனால் பின்னொட்டாக அதிக விளைவாக்கம் பெற்றுள்ளது. இடம் என்ற பொதுப்பொருளில் அதிகப் பயன்பாடு உடையது குறிப்பிடத்தக்கது. அகம் ஒரு முழு சொல்லாக இருப்பினும் மீண்டும் மீண்டும் விகுதிபோல் செயல்பட்டு புதிய சொற்களை உருவாக்கப் பயன்படுகிறது என்று இ. மறைமலை குறிப்பிடுகின்றார்.

சிலப்பதிகாரத்தில் இருபதுக்கும் மேற்பட்ட சொற்கள் அகம் விகுதி பெற்று ஆக்கம் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.

சிறை+ அகம் > சிறையகம் (அடைத்து வைக்கும் இடம்)

பிருட்டு+அகம் > பிருட்டகம் (அங்கக் கிரியை 16இல் ஒன்று)

அரி+அகம் > அரியகம் (காற்சிலம்பு)

கன்+அகம் > கன்னகம் (அகழ் கருவி)

பேடு+அகம்> பேடகம் (துகில்)

என்பது போன்று சொற்கள் ஆக்கம் பெற்று சிலப்பதிகாரத்தில் அகம் ஆக்கப் பெயர் விகுதியாகச் செயல்பட்டுள்ளதைக் காணமுடிகிறது

அம் விகுதி

‘அம்’ என்னும் விகுதி குறித்துத் தொல்காப்பியரும் (தொல்.சொல்.204) நன்னூலாரும் (நன்.140) குறிப்பிட்டுள்ளனர். ‘அம்’ விகுதி பெற்று ஆக்கம் பெற்ற சொற்களை இரண்டு வகையான இயல்பு கொண்டவையாகப் பார்க்கலாம். அவை வினை, பெயரடிகளுடன் சேர்ந்து புதிய சொற்களை உருவாக்குதல், பொருள் மாற்றம் இல்லாமல் ‘அம்’ விகுதி பெற்று வருவன (பகுதிப் பொருள் ஏற்பவை) என்பன.

சிலப்பதிகாரத்தில் உள்ள சொற்களைத் தொகுத்து ஆராயும் பொழுது பகுதிப்பொருள் ஏற்கும் ஆக்கமே ‘அம்’ விகுதி சேர்க்கையால் நிகழ்ந்துள்ளதைக் காணமுடிகின்றது.

அகல்+அம் >அகலம்(மார்பு)

குன்று+அம் > குன்றம்(மலை)

அவை+அம் >அவையம்(சபை)

முரசு + அம் > முரசம் (முரசு)

நறவு + அம் >  நறவம் (தேன்)

ஆகிய சொற்களும் பொருள்மாற்றம் இன்றிப் பகுதியின் பொருளையே உணர்த்தி நிற்கின்றன. செய்யுளின் யாப்பமைதி குன்றாவண்ணம் அவ்வகை ஆக்கம் நிகழலாம் என ஒருவாறு ஊகிக்க இடமளிக்கின்றது. சிலப்பதிகாரத்தில் அதிக விளைவாக்கம் கொண்ட விகுதி அம் என்பது குறிப்பிடத்தக்கது. சமகாலத்தில் நிதி+அம்> நிதியம் (வருவாய்), மதி+அம்> மதியம் (நண்பகல்) போன்ற சொற்களில் பொருள்மாற்றம் பெற்று சொல்லாக்கத்தில் ‘அம்’ விகுதி பயன்பாட்டில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

அர் விகுதி

தொல்காப்பியரும் (தொல்.சொல்.208) நன்னூலாரும் (நன்.140) ‘அர்’ என்பதைப் படர்க்கைப் பன்மை வினைமுற்று ஈறு என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், சொல்லாக்க விகுதியாகச் சிலப்பதிகாரத்தில்,

அரசு + அர் > அரசர் (தலைவன்)

இடைச்சி + அர் > இடைச்சியர் (ஆடு மேய்க்கும் பெண்கள்)

உழவு+அர் > உழவர் (உழவுத்தொழில் செய்யும் மக்கள்)

ஆகிய சொற்கள் ‘அர்’ விகுதி சேர்ந்து ஆக்கம் பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது. இதேபோல் கடவுளர், நுளைச்சியர் போன்ற சொற்களும் ஆக்கம் பெற்றுள்ளன.

அல் விகுதி

தொழிற்பெயர் விகுதிகளில் ஒன்றாக நன்னூலார் ‘அல்’ விகுதியைக் குறிப்பிடுகின்றார். சொல்லாக்க விகுதியாகப் பத்துப்பாட்டில் 22 இடங்களில் பயின்று வந்துள்ளது என்று தி.அ. இரமேஷ் குறிப்பிடுகின்றார் (சங்க இலக்கியச் சொல்லாக்க நெறிமுறைகள் (பத்துப்பாட்டு) ப.114). அதன் அடிப்படையில் சிலப்பதிகாரத்தை நோக்கும்பொழுது பத்துச்சொற்கள் மட்டும் ஆக்கம் பெற்றுள்ளன.

அதிர் +அல்> அதிரல் (காட்டு மல்லிகை)

பிணை + அல் > பிணையல் (இரட்டைக் கை)

விரி + அல் > விரியல் (மலர்ச்சி)

புதை + அல் > புதையல் (புதைபொருள்)

தொடை + அல் > தொடையல் (மாலை)

அதிர் என்னும் வினையடியுடன் அல் சேர்ந்து காட்டு மல்லிகை என்னும் பொருளில் ஆக்கம் பெற்றுள்ளது. இதேபோல்தான் கீழ் உள்ள சொற்களும் ஆக்கம் பெற்றுள்ளன. தொடையல் என்பது மட்டும் பெயருடன் அல் சேர்ந்து பொருள் மாற்றம் இன்றி மாலை என்னும் பொருளையே தந்து நிற்கின்றது.

அன் விகுதி

இலக்கண நூல்களில் விகுதியாக இடம்பெறும் ‘அன்’ விகுதிக்கும் சொல்லாக்கத்தில் இடம்பெறும் ‘அன்’ விகுதிக்கும் வேறுபாடு உள்ளது. இலக்கண நூல்களில் வருவது திரிபு நிலையில் சொற்களை ஆக்கிப் பொருள் மாற்றம் இன்றி இலக்கண அமைப்பில் மாற்றம் செய்வதாகும். ஆனால் சொல்லாக்கத்தில் பயன்படும் ‘அன்’ விகுதி பொருள் மாற்றத்துடன் சொற்களை ஆக்கும் பெயராக்க விகுதி எனலாம். இதன் அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் உள்ள சொற்களைத் தொகுத்து நோக்கும்

பொழுது,

காதல் +அன்> காதலன்  (தலைமகன்)

இருள் + அன் > இருளன் (ஒரு சாதிப் பிரிவினர்)

என்பது போன்று சில சொற்கள் மட்டும் ஆக்கம் பெற்றுள்ளது.

ஆளர் / ஆள் விகுதி

இலக்கண நூல்கள் ஆள், ஆளன், ஆளர் ஆகியவற்றை விகுதிகளாகக் குறிப்பிடவில்லை. ஆனால், சொல்லாக்கச் சிந்தனையாளர்களில் இ. மறைமலை, ச. இராசேந்திரன், சு.சக்திவேல் ஆகியோர் மட்டும் குறிப்பிட்டுள்ளனர். நன்னூலார் விகுதிகள் பற்றிக் கூறுமிடத்து ‘பிறவும்’ என்று குறிப்பிட்டுச் சென்றுள்ளதன் மூலம் இவ்விகுதிகளைக் காலமாற்றத்திற்கு ஏற்ப வளர்ச்சி பெற்ற விகுதிகளாகக் கருதலாம். இவ்விகுதிகளைக் கருத்தா விகுதி என்று வே.சீதாலட்சுமி குறிப்பிடுகின்றார். அதன் அடிப்படையில் சிலப்பதிகாரத்தை நோக்கும் பொழுது,

      இருபிறப்பு +ஆளர் >இருபிறப்பாளர் (அந்தணர்கள்)

ஏவல் + ஆளர் > ஏவலாளர் (பணி செய்வர்)

கண்ணுள் + ஆளர் > கண்ணுளாளர் (மதங்கர்)

கண்ணெழுத்து + ஆளர் > கண்ணெழுத்தாளர் (திருமுகம் எழுதுவோர்)

போன்ற சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன.மேலும் காற்றூதாளர், காவலாளர், வேளாளர் ஆகிய சொற்களும் ஆக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.ஆனால், சமகாலத்தில் அதிக விளைவாக்கம் கொண்ட விகுதியாகச் சொல்லாக்கத்தில் ஆளன் விகுதி இடம்பெறுகின்றது.சான்றாக, காவலாளன், நிதியாளர், பதிவாளர், காசாளர் போன்ற சொற்களை எடுத்துக்காட்டலாம்.

ஆள் என்னும் விகுதி பெற்று இரண்டு சொற்கள் மட்டும் ஆக்கம் பெற்றுள்ளன. அவை ஆட்டுவாள், மாற்றாள் என்னும் சொற்கள் ஆகும். இவை முறையே தாய், வேறொருத்தி என்னும் பொருளைத்தந்து நிற்கின்றன.

ஆளர் பலர்பால் அடிப்படையில் வந்துள்ளது. ஆண்பாலுக்கு ஆளன் பெண்பாலுக்கு ஆட்டி என்பது விகுதியாக இடம்பெறுவது வழக்கம். அந்த அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் குலப்பிறப்பாட்டி என்ற சொல் மட்டும் ஆக்கம்பெற்றுள்ளது நினைவில் கொள்ளத்தக்கது.

இ விகுதி

‘இ’ என்பதை விகுதியாகத் தொல்காப்பியரும் (தொல்.சொல்.225) நன்னூலாரும் (நன்.140) குறிப்பிடுகின்றனர். தொல்காப்பியர் முன்னிலை ஒருமை வினைமுற்று ஈறாகவும் நன்னூலார் பெயரினும் சில என்று கூறுமிடத்தும் ‘இ’ விகுதியாக வழங்கப்பட்டுள்ளது.

இ. மறைமலை அவர்கள் “பொற்கோ குறிப்பிடும் மூடி, கொள்ளி, நொண்டி ஆகிய சொற்களைப் போல வினையடியும் இகர விகுதியும் சேர்ந்து உருவாகிய சொற்கள் ஆட்சித்துறைச் சொல்லாக்கத்தில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளன (இ.மறைமலை, சொல்லாக்கம்,ப.60)’’ என்பார் என்று சுட்டுகின்றார். இதன் அடிப்படையில் நோக்கும் பொழுது சிலப்பதிகாரத்தில் இதுபோன்ற சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன.

காதல், சமர், நகர், மாதர் ஆகிய சொற்களுடன் இ விகுதி சேர்ந்து முறையே காதலி, சமரி, நகரி, மாதரி சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளதைச் சிலம்பில் காணமுடிகிறது.

இயல் விகுதி

நன்னூலார் இவ்விகுதியைத் தெரிநிலை வினையெச்ச விகுதி என்று குறிப்பிட்டுள்ளார். ஆனால் பிற்கால விகுதி வளர்ச்சியில் இது ஆக்க விகுதியாக இடம்பெற்றுள்ளது.  இதன் அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் பார்க்கும் பொழுது,

அணி +இயல்> அணியியல்

அரசு + இயல் > அரசியல்

உலகு + இயல் > உலகியல்

பொது + இயல் > பொதுவியல்

வேந்து + இயல் > வேத்தியல்

போன்ற சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது. இவ்விகுதி இக்காலத்தில் அதிக விளைவாக்கம் உள்ள ஒரு விகுதி எனலாம் .சான்றாக, உளவியல், களவியல், வணிகவியல், தொழில்நுட்பவியல் போன்ற சொற்களை எடுத்துக்காட்டலாம்.

ஞர் விகுதி

இவ்விகுதி சங்க காலம் தொடங்கி இக்காலம் வரை பயன்பாட்டில் உள்ள ஒரு விகுதியாக இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. பத்துப்பாட்டில் இவ்விகுதி பயன்பாடு குறித்து சங்க இலக்கிய சொல்லாக்க நெறிமுறைகள் (பத்துப்பாட்டு) என்னும் ஆய்வு குறிப்பிட்டுள்ளது. மேலும் சொல்லாக்க அறிஞர்கள் இவ்விகுதிகுறித்து சிறப்பாகக் கூறியுள்ளனர்.அதன் அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் கிளைஞர், இளைஞர், வினைஞர் ஆகிய மூன்று சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன.

மார் விகுதி

இவ்விகுதி சங்க காலத்தில் பயன்பாட்டில் இல்லாத ஒன்று. ஆனால் சிலப்பதிகாரத்தில் மார் விகுதி இணைவால் சில சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன. அவை ஐயன்மார், காண்மார், தாய்மார், பாட்டிமார் ஆகிய சொற்கள் ஆகும். இதில் காண்மார் என்பது சங்க இலக்கியத்தில் காண்மர் என வந்துள்ளது. இதில் மார் என்பதன் குறுகல் விகாரமாக மர் என வந்துள்ளது. ஆனால் சிலப்பதிகாரத்தில் காண்மார் என்றே வந்துள்ளது. இக்காலத்தில் தோழிமார், அத்தைமார், மாமன்மார் என்பது போன்று சொற்கள் ஆக்கம்பெற்று வழக்கில் உள்ளதைக் காணமுடிகிறது.

மை விகுதி

பண்புப்பெயர் விகுதிகளில் ஒன்றாக இலக்கண நிலையில் பயின்றுவரும் ‘மை’ விகுதி சொல்லாக்க நிலையில் பெயராக்க விகுதியாகவும் செயல்பட்டு வருவதை அறிந்துகொள்ள முடிகின்றது. இவ்விகுதி பற்றி இ. மறைமலை, ச. அகத்தியலிங்கம், சூ.இன்னாசி, பொற்கோ போன்றோர் குறிப்பிடுகின்றனர்.

இத்தன்மையின் அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் உள்ள சொற்களைத் தொகுத்து நோக்கும்பொழுது ஒரு சில சொற்கள் மட்டும் ஆக்கம் பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது.

நெடு + மை>நெடுமை (உயர்வு)

படி + மை > படிமை (தெய்வ வடிவு)

நேர் + மை > நேர்மை (நல்வழி)

நெடு, படி, நேர் ஆகியபெயரடிகளுடன் மை விகுதி சேர்ந்து பண்பு என்ற பொருளை உணர்த்தும் நெடுமை, படிமை, நேர்மை எனும் சொற்களாக உருவாக்கம் பெற்றுள்ளன.

தி / த்தி விகுதி

தொழிற்பெயர் விகுதிகளில் ஒன்றாக நன்னூலார் குறிப்பிடுவதாக ஆறுமுக நாவலர் தம் உரையில் சுட்டியுள்ளார். இவ்விகுதியை ஆக்கப்பெயர் விகுதியாகச் சொல்லாக்க அறிஞர்கள் கூறுகின்றனர். இதற்குச் சான்றாக  ‘மறதி’ என்பது போன்ற சொற்களை எடுத்துக்காட்டியுள்ளனர். இவ்விகுதி பரிபாடலில் ஓரிடத்தில் மட்டும் பெயராக்க விகுதியாகச் செயல்பட்டுள்ளதைக் காணமுடிகின்றது.

ஊர்+தி > ஊர்தி (வாகனம்)

பெயருடன் ‘தி’ விகுதி சேர்தல் என்னும் வாய்ப்பாடு அடிப்படையில் இச்சொல் ஆக்கம்பெற்றுள்ளது. இதேபோல் அமைதி என்னும் சொல்லும் ஆக்கம் பெற்றுள்ளது. மேலும் சிலப்பதிகாரத்தில் ‘த்தி’ என்னும் விகுதிபெற்று உழத்தி, காட்டாளத்தி, தனித்தி, திறவாளத்தி, பொய்த்தி போன்ற சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன.

வினையடியுடன் சேரும் விகுதிகள்

நர் விகுதி

இலக்கண நூல்களில் ‘நர்’ விகுதி வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை. இருப்பினும் விகுதி வகைகளைப் பட்டியலிட்டுக் காட்டும் நன்னூலார் குறிப்பிட்ட விகுதிகளை வகைப்படுத்திக் கூறிவிட்டு, காலமாற்றத்திற்கு ஏற்ப விகுதிகளின் வளர்ச்சி மாறும் என்பதால் பிறவும் என்று குறிப்பிட்டுள்ளார். ஆனாலும், ‘நர்’ விகுதி சங்க இலக்கியங்களிலேயே பரவலாக்கம் பெற்ற ஒன்றாக இருக்கையில் ஏன் பவணந்தியார்; உள்ளிட்ட இலக்கணிகள் அதை விகுதியாகப் பதிவு செய்யவில்லை என்ற கேள்வி மேலோங்குகிறது.

‘நர்’ விகுதி பற்றி இ.மறைமலை ச.இராசேந்திரன், பொற்கோ போன்றோர் குறிப்பிட்டுள்ளனர். இவ்விகுதி வினையடிகளுடன் மட்டும் சேர்ந்து பெயர்ச்சொற்களை உருவாக்குகின்றது. இக்கருத்துக்களின் அடிப்படையில் சிலப்பதிகாரத்தை நோக்கும்பொழுது, இயங்கு, ஆடு, பகரு, ஓசு, வாழ், பொரு, செய்கு, வதி, கொழு, தேரூர் முதலிய வினையடிகளுடன் ‘நர்’ விகுதி சேர்ந்து சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளதைக் காணமுடிகின்றது.

இயங்குநர்(செயல்படுபவர்)

ஆடுநர்(ஆடுவோர்)

பொருநர்(போர்க்களம் பாடுவோர்)

வாழ்நர்(உயிர் வாழ்வோர்)

வதியுநர்(வாழ்வோர்)

முதலிய சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன. இக்காலத்தில் ஓட்டுநர், நடத்துநர், இயக்குநர் போன்ற சொற்கள் ‘நர்’ விகுதி சேர்ந்து ஆக்கம்பெற்று மக்கள் வழக்கில் இடம்பெற்றுள்ளதை இங்கு நினைவில்கொள்ள வேண்டும்.

ப்பு விகுதி

தொழிற்பெயர் விகுதியாகவும் தெரிநிலை வினையெச்ச விகுதியாகவும் ‘ப்பு’ பயின்று வரும் என்பது நன்னூலார் கருத்து. ஆனால், ஆக்கப் பெயர் விகுதியாக ச. அகத்தியலிங்கம், ச. இராசேந்திரன், ஆ. வேலுப்பிள்ளை, எச்.சித்திரபுத்திரன் ஆகியோர் குறிப்பிடுகின்றனர்.

இவர்களின் விகுதிப் பகுப்பு அடிப்படையில் சிலப்பதிகாரத்தில் உள்ள சொற்களை அணுகும்பொழுது சில சொற்கள் இவ்விகுதியின் துணையுடன் ஆக்கம் பெற்றுள்ளன. அவை அதிர்ப்பு, ஆர்ப்பு, இடிப்பு, தொடுப்பு, பிணிப்பு, முரிப்பு, வாசிப்பு ஆகியவை வினை நிகழ்வினை வெளிப்படுத்தும் சொற்களாக ஆக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

வை/வி/வு விகுதிகள்

’வை’ என்பதைத் தொழிற்பெயர் விகுதிகளில் ஒன்றாக நன்னூலார் குறிப்பிடுகின்றார். சொல்லாக்க முறையில் இவ்விகுதி ஆக்க விகுதியாகப் பயன்பாட்டில் உள்ளதைப் பல அறிஞர்கள் சுட்டியுள்ளனர். அவர்கள் கருத்துப்படி சிலப்பதிகாரத்தில் உள்ள சொற்களை அணுகும்பொழுது தேய்வை, நடுவை, புடைவை, போர்வை, மடவை போன்ற சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன.

அதேபோல் வி விகுதி பெற்று இறைவி, ஆற்றுவி, கேள்வி போன்ற சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன. வு விகுதி பெற்றும் சில சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன. அவை வரைவு, வியர்வு மகவு போன்றவை ஆகும். இதில் மகவு என்பது மட்டும் பெயரடியுடன் வு விகுதி இணைந்து ஆக்கம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெயர் மற்றும் வினையுடன் சேர்ந்து வரும் விகுதிகள்

ச்சி விகுதி

இலக்கண நூலாசிரியர்கள் ச்சி என்பதை விகுதியாகக் குறிப்பிடவில்லை. இருப்பினும் நன்னூலார் பிறவும் என்று விகுதிகள் பற்றிக் கூறுமிடத்து குறிப்பிட்டுச் சென்றுள்ளதால் ச்சி என்பதை ஆக்கப்பெயர் விகுதியா சொல்லாக்கச் சிந்தனையாளர்கள் வகைப்படுத்தியுள்ளனர். அவர்களின் கருத்தை அடிப்படையாகக் கொண்டு சிலப்பதிகாரத்தில் உள்ள சொற்களை ஆராயும் பொழுது பத்துக்கும் மேற்பட்ட சொற்கள் ச்சி விகுதி இணைவால் ஆக்கம் பெற்றுள்ளதைக் காணமுடிகிறது.

அடை, இகழ், இடை, புணர், நுளை, நெல்லி, இறை, பொய், வாரி, விழை போன்ற சொற்களுடன் ச்சி விகுதி இணைந்து அடைச்சி, இகழ்ச்சி, இடைச்சி, புணர்ச்சி, நுளைச்சி, நெல்லிச்சி, இறைச்சி, பொய்ச்சி, வாரிச்சி, விழைச்சி ஆகிய சொற்கள் ஆக்கம் பெற்றுள்ளன.

மதிப்புரை

சமகாலத்தில் விகுதிகளின் துணைகொண்டு துறைகள்தோறும் பல்வேறு சொற்கள் ஆக்கப்பெறுகின்றன. அவற்றிற்கு காப்பியங்களில் முதலாவதாக வைத்துப் போற்றப்படும் சிலப்பதிகாரத்தில் உள்ள சொல்லாக்க விகுதிகள் முன்னோடியாக இடம்பெற்றுள்ளன என்பதை இச்சிறு ஆய்வின்மூலம் அறிந்துகொள்ள முடிந்தது. மேலும் சிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள ஆக்க விகுதிகளைப் பெயருடன் சேர்ந்துவரும் விகுதிகள் வினையடியுடன் சேர்ந்து வரும் விகுதிகள் பெயர் மற்றும் வினையுடன் இணைந்து வரும் விகுதிகள் என்னும் மூன்றுநிலைகளில் காணமுடிகின்றது.அதேபோல சிலப்பதிகாரம் எழுதப்பட்ட காலச்சூழலில் சொற்களின் பயன்பாடு எவ்வாறு இருந்துள்ளதை என்பதையும் சொற்களின் வளர்ச்சி பற்றிய தெளிவையும் காணமுடிகிறது.

பார்வை நூல்கள்

  • அகத்தியலிங்கம்,ச., மொழியியல், சொல்லியல், அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 1971.
  • அன்பழகன், க., சங்க இலக்கிய ஒருபொருட் பல சொல்லாக்கத்தில் விகுதிகள், தொல்காப்பியம் சங்கத் தமிழ் ஒரு புதிய பார்வை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம், அண்ணாமலை நகர், 2006.
  • இரமேஷ், தி.அ.,சங்க இலக்கியச் சொல்லாக்க நெறிமுறைகள்(பத்துப்பாட்டு), சென்னைப் பல்கலைக்கழகம், 2013.
  • தொல்காப்பியர், தொல்காப்பியம், சொல்லதிகாரம், இளம்பூரணம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை, 2003.
  • பொற்கோ, இலக்கண உலகில் புதிய பார்வை, தமிழ் நிலையம், சென்னை, 1985.
  • பவணந்தி முனிவர், நன்னூல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2004
  • சிலப்பதிகாரம் மூலமும் அரும்பத மற்றும் அடியார்க்கு நல்லார் உரையும், உ.வே.சா. நூல்நிலையம், சென்னை, 2008.

*****

கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்
தமிழ்த்துறை, தூய நெஞ்சக்  கல்லூரி (தன்னாட்சி)
திருப்பத்தூர்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.