Featuredஇலக்கியம்கட்டுரைகள்பத்திகள்

வாழ்ந்து பார்க்கலாமே 45

க. பாலசுப்பிரமணியன்

கொஞ்ச நேரம்.. உங்கள் மனதோடு..

அந்த மாலை நேரத்தில் கோவிலைச் சுற்றி வந்துகொண்டிருந்தேன். அங்கே அந்த மண்டபத்தின் அருகில் எனக்குப் பழக்கமான ஒரு நண்பர் தூணில் சாய்ந்தபடி அமர்ந்திருப்பதைக் கண்டு வியந்தேன். பொதுவாக அவரை அந்தக் கோவில் பக்கம் நான் பார்த்ததில்லை. மிகவும் அவசரமான முற்போக்கான வாழ்க்கை முறையைப் பின்பற்றுபவர் அவர். அவர் எதற்கு அன்று அங்கே வந்துள்ளார் என்பதை அறிய ஆர்வம் தூண்டியது. மெதுவாக அவர் அருகில் சென்று “அய்யா வணக்கம்” என்றேன். “வாங்க தம்பி.. நல்லா இருக்கீங்களா..” என்று ஒரு சோர்ந்த புன்னகையை அள்ளி வீசியவாறு என்னைப் பார்த்தார்.

“நான் நலம்தான் அய்யா.. நீங்க எங்கே இந்தப் பக்கம்?” என மெதுவான குரலில் கேட்டேன்.

சிரித்துக்கொண்டே அவர் சொன்னார் “ஒண்ணுமில்ல தம்பி. கொஞ்சம் மனசு சரியில்லாமல் இருந்தது. அதனால் மக்கள் நடமாட்டமில்லாத பகுதியாக கோவிலிலே இந்த மண்டபத்திலே ஒரு ஓரமாக அமர்ந்து என்னோடவே நான் பேசிக்கொண்டிருந்தேன்.”

அவர் சொன்னது எனக்குப் புதுமையாக இல்லை. “என்னோடவே நான் பேசிக்கொண்டிருந்தேன்” அவருடைய தனிமையை பாதிக்க விரும்பாமல் நான் “அப்படியா… அப்போ நான் உங்களைத் தொந்தரவு செய்யக்கூடாது.. உங்கள் தனிமையை நீங்கள் பாராட்ட வேண்டும்..” என்று விடைகூறி மேலே நகர்ந்தேன்.

அவருடைய அந்த வார்த்தைகள் என்னை சற்றே உலுக்கிவிட்டன. “மனசு சரியாக இல்லை…” நம்மில் எத்தனை பேர் இந்த மாதிரியான சூழ்நிலைகளை அடிக்கடி சந்திக்கின்றோம். ஏதாவது ஒரு காரணத்திருக்காக இந்த மனசு சரியில்லாமல் போய்விடுகின்றது. என் மனதிடமே நான் கேட்டேன்: “ஏன் அடிக்கடி நீ பேய் பிடித்தாற்போல் முருங்கை மரத்தில் ஏறிக்கொண்டு துன்புறுத்துகின்றாய்?”

அதைக் கேட்ட என் மனம் சிரித்தது..

அது சொன்னது:

1, நான் கேட்டது கிடைக்கவில்லையென்றால் நான் தளர்வடைகின்றேன்.
2. நான் நினைத்தது நடக்கவில்லையென்றால் நான் துடித்துப் போகின்றேன்
3.என்னை மற்றவர்கள் பாராட்டவில்லையென்றால் தன்மானம் பாதிக்கப்பட்டுச் சோர்வடைகின்றேன்.
4. நான் சொன்னதை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லையென்றால் என் இயலாமையைக் கண்டு வருந்தி களைத்து விடுகின்றேன்றேன்.
5. என் மனதின் வேகத்திற்கு உடலோ சூழ்நிலைகளோ அல்லது சார்ந்தவர்களோ ஈடு கொடுக்கவில்லையென்றால் வெறுத்துப் பொய் மூலையில் அமர்ந்து விடுகின்றேன்.
6. நான் செய்த பல நற்செயல்களை சுற்றமும் சூழலும் மறந்து அவைகளை ஏணிப்படிகளாக்கிக் கொண்டு என்னை ஒதுக்கிவிடும்போது புண்பட்டு நோயாளியாகி விடுகின்றேன்.

என்ன செய்வது.? அடிக்கடி இப்படி பல பிரச்சனைகள் வந்தவண்ணம் இருக்கின்றேதே! உனக்குத் தெரியாதா என்ன? உன் மனதிலும் நான் இவ்வாறுதானே வேலை செய்கின்றேன்.”

உண்மைதான்! நம் அனைவருடைய மனமும் பலவித காரணங்களுக்காக புண்பட்டு நோய்வாய்ப்பட்டு அதற்கான சரியான மருந்தைத் தேடிக்கொண்டிருக்கின்றது. அதற்கு என்ன மருந்து போடலாம்? எந்த வைத்தியரிடம் நம் மனத்தைக் காட்டி மருந்து கேட்கலாம் ?

அந்தக் காலத்தில் வீடுகளில் “பாட்டி வைத்தியம்” என்று இருந்தது. இருமலுக்கும், உடம்பு வலிக்கும், மற்றும் சிறிய உபாதைகளுக்கு பாட்டி ஒரு கசாயத்தையோ அல்லது ஒரு லேகியத்தையோ நமக்கு கொடுப்பார்கள். முதலுதவி போல பல நேரங்களில் இவையே நம்முடைய உடல் நோயைக் கட்டுப்படுத்திவிடும். அதுபோல நம்முடைய மன உளைச்சல்களுக்கும் மன அழுத்தங்களுக்கும் முதல் வைத்தியம் நமது மனதேதான். அதனிடம் நாம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் “உனது நோயை நீ எவ்வாறு தீர்த்துக் கொள்ளப்போகின்றாய்? உன் புண்களுக்கு நான் என்ன மருந்து போடுவது?” இதற்கு நாம் நமது மனதோடு பேசக் கற்றுக்கொள்ள வேண்டும்.

உலகத்தில் உள்ள பல மனிதர்களோடு நாம் நித்தம் எத்தேனையோ மணிக்கணக்காகப் பேசிக்கொண்டிருக்கின்றோம், எப்போதாவது நாம் நம்முடைய மனதோடு பேசியது உண்டா? எப்பொழுதாவது அதை ஒரு பொருட்டாக மதித்ததுண்டா? சற்றே யோசித்துப் பாருங்கள்.

நம் மனதோடு நாம் பேசுவது என்பது நமது வாழ்க்கையின் ஒரு முக்கியமான நிகழ்வு. அது நமக்கு நம்மையே அடையாளம் காட்ட உதவுகின்றது. நம்முடைய உள்ள நலத்தையும் நம்முடைய சிந்தனைகளின் வளத்தையும் நம்முடைய திறன்களையும் வல்லமைகளையும் மற்றும் இயலாமைகளையும் நமக்கு படம் போட்டுக் காண்பிக்கின்றது. நம்முடைய உறவு முறைகளில் உள்ள சிறப்புக்களையும் அதில் நாம் கையாளும் முறைகளில் உள்ள தவறுகளையும் நமக்கு உணர்த்துகின்றது. “யாரிடமாவது நம்முடைய குறைகளைச் சொல்லி அழமாட்டோமா’ என்று நாம் நினைக்கும்பொழுது நமது மனம் அருகில் அமர்ந்து “நான் இருக்கின்றேன் உன் துன்பங்களைக் கேட்பதற்கு” என்று சொல்லி தோழமையுடன் கேட்க அமர்கின்றது. நமக்கு எது சரியென்று தெரியவில்லையென்றால் அது ஒரு நீதிமானாக அமர்ந்து சரியான வழியைக் காட்டுகின்றது. ஒரு நிகழ்வு இப்படி நடந்துவிட்டதே என்று நாம் வருந்தும் பொழுது “அட போப்பா, இதெல்லாம் வாழ்க்கையில் நடக்கறதுதானப்பா. எழுந்து அடுத்த வேலையைப் பாரு” என்று ஊக்கம் அளிக்கின்றது.!

“நான் எழுதிய இந்த அருமையான கவிதையைக் கேட்பதற்கு யாருமில்லையே.. என்ன உலகமடா இது” என்று நான் நொந்துபோகும்பொழுது “நண்பா. நானிருக்கின்றேன். உன் கவிதையை நீ எத்தனை முறை வேண்டுமானாலும் படி. திரும்பாத திரும்பப் படித்து ஆனந்தப்படு. நான் உன்னருகில் அமர்ந்து கேட்கின்றேன்” என்று சொல்லி உள்ளே என்னுடைய கவியரங்கத்திற்கான மேடையைத் தயார் செய்து கொடுக்கின்றது !
இப்படி பல உதவிகளை செய்து ஒரு நண்பனாக, ஒரு ஊழியனாக, ஒரு உறவாக, ஒரு மருத்துவனாக நமக்கு உழைக்கும் மனதுக்கு மரியாதை கொடுத்து தினம் ஒரு சில மணித்துளிகள் அதோடு பேசிக்கொண்டிருந்தால் குறைந்தா போகும்? நாம் ஏன் செய்வதில்லை?

“தினசரி உங்கள் மனதோடு கொஞ்ச நேரம் பேசுங்கள். அதை போன்ற ஒரு மருத்துவம் உலகில் இல்லை” என்று ஒரு மனநல மருத்துவர் மிக அழகாக எடுத்துரைத்தார்.

“அய்யா. அதெல்லாம் சரிதான், என் மனதோடு தனியாக உட்கார்ந்து பேசுவதற்கு எங்கு நேரம் இருக்கின்றது?” என்று ஒருவர் குமுறினார். மற்ற அனைத்திற்கும் நேரத்தைத் தேடித்தடி வீணடிக்கின்ற நாம் இதற்கும் சில மணித்துளிகளைத் தேடி அதை ஒரு தினசரி பழக்கமாகக் கொண்டாலென்ன?சற்றே யோசியுங்கள். உங்கள் மனம் உங்களோடு பேசக் காத்துக்கொண்டிருக்கின்றது. என்ன பேசவேண்டும்? எப்படிப் பேசவேண்டும்? அதனால் நமக்கு உடனடிப் பலன்கள் என்ன கிடைக்கும்? – தொடர்ந்து பார்க்கலாமே!

உங்கள் வாழ்க்கை – உங்கள் கைகளில் .. வாழ்ந்து பார்க்கலாமே !
(தொடரும்)

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க