குறளின் கதிர்களாய்…(235)
உளவரைத் தூக்காத வொப்புர வாண்மை
வளவரை வல்லைக் கெடும்.
-திருக்குறள் -480(வலியறிதல்)
புதுக் கவிதையில்…
அடுத்தவர்க்கு
உதவிடல் எனிலும்,
தன் பொருளிருப்பின்
அளவை ஆய்ந்திடாது
மேற்கொண்டால்,
அவன் செல்வ வளம்
அழியும் விரைவில்…!
குறும்பாவில்…
தன் கைப்பொருளிருப்பை ஆய்ந்திடாது
அடுத்தவர்க்குதவிடும் அருஞ்செயல் மேற்கொண்டாலும்,
அழிந்திடும் அவன்செல்வம் விரைவில்…!
மரபுக் கவிதையில்…
அடுத்தவர்க் குதவி செய்கின்ற
அரிய செயலை மேற்கொளினும்,
எடுத்துப் பொருளைக் கொடுக்குமுன்னே
எண்ணிக் கைப்பொருள் இருப்பினையே
எடுத்திட வேண்டும் ஆய்ந்தறிந்தே,
எண்ணிச் செய்யா ஒருவனுக்குக்
கிடைத்த செல்வம் எல்லாமே
கூடிய விரைவில் அழிந்திடுமே…!
லிமரைக்கூ..
எடுத்துக்கொடுத்து உதவிட அடுத்தவர்க்கு
கைப்பொருளிருப்பின் அளவறியாமலே எடுத்தால்,
அழிந்துபோகும் செல்வமெலாம் கொடுத்தவர்க்கு…!
கிராமிய பாணியில்…
செயல்படணும் செயல்படணும்
வலிமயறிஞ்சி செயல்படணும்,
தன்னோட
வலிமயறிஞ்சி செயல்படணும்..
அடுத்தவங்களுக்கு ஒதவுற
நல்ல செயலச் செய்யணுண்ணாலும்,
கைப்பொருள் இருப்பக் கணக்குப்பாத்துத்தான்
காரியத்தில எறங்கணும்..
அப்படியில்லாமப் போறவன்
செல்வமெல்லாம் அழிஞ்சிபோவுமே..
அதால
செயல்படணும் செயல்படணும்
வலிமயறிஞ்சி செயல்படணும்,
தன்னோட
வலிமயறிஞ்சி செயல்படணும்…!
செண்பக ஜெகதீசன்…