-முனைவா். ரா.மூர்த்தி

தாய்த்தெய்வ வழிபாடு மனிதன் அச்சமுறும் காலத்திலிருந்து அச்சத்ததைப் போக்கிக் கொள்வதற்காகக் தாங்களே ஏற்படுத்திக் கொண்ட தற்காப்புச் செயல்பாடு ஆகும். இது தமிழ்ச்சமூகத்தில் கண்ணகி வழிபாட்டின் தொடர் விரிவு எனவும் தற்கால நிலைப்பாட்டில் மாரியம்மன் வழிபாடாக மாறியதையும் நாட்டுப்புற ஆய்வாளர்களால் இனங்காண முடிகின்றது.

தாய்த்தெய்வ வழிபாடு ஆக்ரோசத்தோடு ஆவேச நிலையில் தெய்வமாக்கப்பட்டதை “காளி அசுரனைக் கொன்றமை, கண்ணகி அரசனின் கொடூர முடிவுக்குட்பட்டமை” கற்பின் சந்தேகத்தினால் கொடூர மாற்றம் நிகழ்ந்து பின் வழிபாட்டுக்கு உள்ளாக்கப்படுகிறது. வெறிச்சூழலை ‘சந்து செய்வித்தலால்’ கொடூரத் தோற்றம் ஒரு நிலைப்படுத்தப்பட்டு சாற்றுவிக்கப்படுகிறது. இந்நிகழ்வு பெரும்பாலும் தாய்த்தெய்வமான சக்திக்கே அதிகம் நிகழ்த்தப்படுகிறது.

தாய்த்தெய்வ வழிபாட்டோடு பண்பாட்டில் வெளிப்படும் தெய்வங்களின் ஆக்ரோசத் தன்மையைக் குறைக்க அமைப்பாக்கத்தில் ஒரு பெண் மூலம் மற்றொரு பெண்ணுக்குத் தேவையான சடங்குகளை சாமி ஆடுபவர்கள், மருளாடிகளுக்கு நிறைவேற்றப்படுகிறது. இத்தன்மை ஒரே தளத்திலிருந்து வெளிப்பட்டுக் கொண்டிருப்பதில்லை. அதன் தளங்கள் இடத்திற்கு இடம் மாறுபடும். மாறுபடும் சூழலில் மூலப்படிமத்தின் பெயரும் மாற்றமுறுவதோடு, பொருளின் தன்மை மக்களின் வழக்காற்று வார்த்தைகள், செய்விக்கப்படும் படையல்கள், பொருட்களின் தன்மையும் மாறுபடக் கூடும். இவ்விரண்டு சாய்மையினால் இடம், பொருள் மாறுபட்டாலும் மூலப்படிமத்தின் குறியீடு ஒரே நிலையிலேயே சொற்பொருண்மை கொண்டு செயலாக்கம் பெறுகிறது.

இந்நிலைப்பாடு தமிழர்களின் வாழ்வில் காலங்காலமாகச் சக்தி தெய்வத்திற்கு மங்களம், வளமை, பசுமை, மறுபிறப்பு, செழிப்பு எனக் குறியீட்டு வடிவத்தை  நிறைத்துச் சமய வழிபாட்டை நகர்த்திச் செல்வதில் அடையாளமாகத் திகழ்ந்து வருகிறது. அதில் தொல்தமிழர்களின் முளைப்பாரியும் அடங்கும். பிற இனத்தவர்கள் தெய்வத்தினை அணுக முற்படாத நிலையில் அத்தெய்வத்திற்கு படைக்கப்படும் பொருட்களைக் கொண்டும் வழிபடும் மக்களைக் கொண்டும் இன்ன தெய்வங்கள் என்று அறிந்துகொள்ள நேர்கிறது. சிலர் இது சக்தியின் வெளிப்பாடு உருவாக்கம் என்று எளிதில் இனங்காணமுடிகிறது.

முளைப்பாரி தமிழ்ச்சமூகத்தில் வழிபாட்டின் போது எந்நிலையில் பயன்படுத்தப்படுகிறது. அதற்கான காரணம், தோற்றத்தொன்மம், சமூக அடையாளமாக மாறக் காரணம்? தற்காலச் சூழலில் அவற்றின் போக்கு எவ்வாறு மாற்றம் பெற்றுள்ளது அதனையும் இக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

முளைப்பாரி விளக்கம்

முளைப்பாலிகை என்பதை பேச்சு வழக்கில் முளைப்பாரியாக மாரியது. முளைப்பாலிகை என்பதற்கு “நவ தானியங்கள் முளைக்கும் முளைத்தாழி” என்று கூறுகின்றனர். தாழி என்பது மண் சட்டியைக் குறிக்கும். “விரித்த பாலிகை முளைக்குட நிரையினர்” என்று சிலப்பதிகாரம் சுட்டுகிறது. கோவலன் கண்ணகி திருமணத்தின்போது தானியங்கள் முளைக்கும் பானைகளை ஏந்திக்கொண்டு சென்றதைச் சிலப்பதிகாரத்தில் காணமுடிகிறது.

முளைப்பாரி என்பது வித்தினின்று வெளிவருவது. முளைப்பது; பாரி என்பதற்கு ‘கள்’ என்று தமிழகராதி பொருளிடுகிறது. முளைப்பாரி என்பதை உருவாக்குதல் என்று பொருளிட்டால் ‘விதை’ மண்ணில் முளைப்பது என்றால் ஒரு நிலையில் இயல்பாக பறவைகளின் ஊடாக நிகழக்கூடும். மற்றொன்று இறந்தவர்களின் நினைவாக வேண்டுதல் பொருட்டும், விருப்பத்தின் பேரில் நடவு செய்யப்பட்டு அதன் வழி நிகழக்கூடும். பெண்கள் உழவுத்தொழில், பயிர்த்தொழில் இனங்கண்ட நாள் முதல் முளைத்தல், வெளிவருதல் இவை அனைத்தும் பெண்மையின் வளர்சிதை பெருக்கத்தை வெளிப்படுத்துகிறது. ‘கள்’ என்ற நிலையில் பார்த்தால் தமிழர்களின் தொல்நிலையிலிருந்தே ஒன்றிணைந்து வருகிறது. இதுவும் இறந்தவர்களுக்கே நடுகல், கல்லறை இவற்றின் அருகில் ஒரு சடங்காக நிகழ்த்தப்பட்டு வருகிறதைக் காணலாம். இழப்பின்மூலம் மீண்டும் புதுமையை எய்த முடிவதோடு இறப்பிற்குச் சரிகட்டலாம் என்ற எண்ணப்போக்கு தமிழ்ப் பண்பாட்டில் தொன்றுதொட்டு காலங்காலமாக நிகழ்ந்து வருகிறது.

முளைபாரி உருவாக்கும் விதம்

முளைப்பாரியை உருவாக்குவதில் புழங்கு பொருட்களில் கலப்பு நிகழ்வது போல தானியங்களிலும் கலப்பு மாற்றம் இருக்கும் ‘தென்மாவட்டங்களில் பறையர்கள் முளைப்பாரிக்கு கம்பு, சோளம்,  கேப்பை இதனையே அதிகம் பயன்படுத்துகின்றனர். மாறாக பள்ளர்கள் பயறுகளைப் பயன்படுத்துகின்றனர். முளைப்பாரியை உருவாக்கும் போது பாடக் கூடிய பாடல்

“நல்ல தண்ணீர் எடுத்து வந்து
நாங்கள் முளை போட்டோம்
சிவபாலரெல்லாம் போட்டோம்
போட்ட முளை பழுதில்லாமல்
போங்கி நல்லா வளர”
என்று பாட்டுப் பாடி தொடங்குகின்றனர்.

ஊர்க்கு ஒதுக்குப்புறத்திலும், அல்லது ஊர்ச்சாவடி, கோயில் ஆகிய இடங்களில் அகலமான உயரமான குத்துச்சட்டி, மண்பானையைக் கொண்டு பயன்படுத்துகின்றனர். பறையர்களைத் தவிர மற்ற இனத்தவர்கள் அவரவர் விருப்பத்தின் பேரில் காப்புக் கட்டிக்கொண்டு அவர்களது இல்லத்திலே முளைப்பாரியை உருவாக்கிக் கொள்கிறார்கள். இதில் பறையர்களுக்கு நாடார் இனத்தைச் சேர்ந்தவர்கள் முளைப்பாரி போட்டு திருவிழா அன்று வழங்குகிறார்கள் (இடம்: வத்திராயிருப்பு). முளைப்பாரிக்குத் தேவையாக வைக்கோல், சோளத்தட்டை இரண்டையும் மூன்று அடி உயரம் நறுக்கி அதில் வைக்கோலைக் கொண்டு சுற்றி கால்படாத களிமண்ணைக்கொண்டு நல்ல தண்ணீர் ஊற்றி அதனைக் குழப்பிக் குத்துசட்டியின் நடுவில் சோளத்தட்டையை வைத்து அதில் மணல் பரப்பி களிமண் கொண்டு மெழுகி அதன் மீது கம்பு, சோளம், போன்ற தானியங்களை ஊறவைத்து தடவி விடுவது வழக்கம் ஏழு நாட்கள் அல்லது ஒன்பது நாட்களுக்கு காற்று புகாமல் மறைவாக மறைத்து வைத்து பிறகு திருவிழா அன்று அதனை வெளிக்கொண்டுவருவார். இவ்வாரு செய்வது பறையர்களின் தொல்கால நிலையாகும்.

முளைப்பாரிக்குத் தேவையான பொருட்களைக் கையில் எடுத்துக்கொண்டு வழிபடும் போது

“சோளத்தட்ட ரெண்டெடுத்து
சோக சோகயாக உருச்சுவச்சு
கம்மந்தட்ட ரெண்டெடுத்து
கணுகணுவா ஒடுச்சி வச்சு
பருத்தி குச்சி ரெண்டெடுத்து
பளபளன்னு பாவி வச்சு”
  என்று பாடி ஆரம்பிக்கின்றனர்.

பானை, சட்டி, சோளத்தட்டை இவற்றின் மூலத்தை நோக்கும்போது இரு கருத்தமைவுகளை வெளிக்காட்டுகிறது. பானை –  பெண்மையின் குறியீடு என்றும், சோளத்தட்டை – ஆண்மையின் குறியீடு என்றும் எடுத்துக்கொண்டு  பண்பாட்டோடு அணுகும் போது பானை(பெண்) – சோளத்தட்டை(ஆண்) இரண்டையும் உருவாக்குபவள் பெண்மையே. ஓர் உயிரியின் உருவாக்குதல் – அழித்தல் இரண்டும் பெண்ணே முன்னின்று செயல்படுகிறாள். பயிர்த்தொழில், தானியங்களின் உற்பத்தியைப் பெருக்குதல், அறுவடை போன்ற செயல்பாடு பெண்மையின் வெளிப்பாடே. இதனைச் சிறுதெய்வ வழிபாடுகளில் நம்மால் இனங்காணமுடியும். பெண்தெய்வங்கள் முக்கோண வடிவில், தாமரை வடிவில், நாற்சதுர வடிவில் தோன்றும். அதன் நடுப்புறத்தில் அல்லது அதன் மேல்தளத்தில் ஆண் உருவங்கள் காணப்படும். சிவனின் லிங்கத்தோற்றத்தில் கூட மேல்நோக்கி நின்ற நிலையில் லிங்கமும், அதனைத் தாங்கிக் கொண்டு யோனி போன்று வடிவம் காணப்படும். இக்கட்டுமான அமைப்பினைக் கொண்டு முளைப்பாரியின் தோற்ற வடிவத்தினை அணுகினால் நம்மால் ஓர் அனுமானத்தை இனங்காண முடியும்.

முளைப்பாரிக்கான தானியங்கள், புழங்கு பொருட்கள் சமூகத்திற்குச் சமூகம் மாறுபட்டாலும் நிறத்தின் சாயல் பசுமை – பச்சைத் தன்மையிலே வளமையாகக் காணப்படுகிறது. அதற்கு மாறாகச் சிவப்பு கோபத்தின் வெளிப்பாடாகவும் பலியிடுதலின் நிலையாகவும் இருந்து வருகின்றது.

தமிழ்ச்சமூகமும் முளைப்பாரியும்

தமிழ்சமூகத்தோடு முளைப்பாரியை இனங்காணும் தன்மையில் மருதநிலம் தோற்றமுற்றதே உழவு, விவசாயத்தை மையமிட்டு, ஏனென்றால் இயற்கைச் சூழல், தட்பவெப்ப நிலை, பருவகால மாற்றம் இதனைக் கருத்தில் கொண்டு தமிழர்கள் வாழ்வை நிகழ்த்தி வந்தனர். “தென்னிந்தியச் சடங்கு வரிசையில் பொங்கலிடுதல் உழத்தொழிலின் ஒரு மூலப்படிவக் குறியீடு  என்பதோடு மங்களத்தின் வெளிப்பாடு என்று பிரந்தா பெக் (1969:556) கூறுவதாக பக்தவத்சல பாரதி கூறுகிறார். பொங்கல் வளமை என்று எண்ணத் தோன்றும் போது முளைப்பாரி அதற்கு வித்தாகப் பசுமையின் குறியீடாகக் கொள்ள நேர்கிறது.

தமிழகத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி, ஆடி, புரட்டாசி ஆகிய மாதங்களில் காளியம்மன், மாரியம்மன், முத்தாலம்மன் போன்ற தெய்வங்களுக்கு  திருவிழா(கொடை)வின் போது தமிழர்களால் நிகழ்த்தப்படக்கூடிய மூலப்படிவ சடங்காகும். இச்சடங்கு செய்வதால் அம்மனுக்குக் குளிர்ச்சி ஏற்பட்டு குழந்தைப்பேறின்மை, திருமணம் ஆகாத் தன்மை, குடும்பச் செழிப்பின்மை, நோய், நீத்தல் போன்ற தன்மைகள் மாறி செழிப்பு ஏற்படும் என்ற எண்ணப் போக்கு தமிழர்கள் மத்தியில் நிகழ்ந்து வருகிறது. சிறுதெய்வ வழிபாடுகள் அனைத்தும் தாய்த்தெய்வத்தின் வெளிப்புறத்தோற்றமாக இருப்பதால் அதனது வேண்டுதலை நிவர்த்தி செய்வதற்காக ஆண்டுதோறும் கோவில் வழிபாட்டின் போது பெண்களால் இச்சடங்குகள் செய்விக்கப்படுகிறது.

முளைப்பாரி இடுவது தமிழ்ச்சமூகத்தில் அனைத்து ஊர்களிலும் தெருக்களிலும் நிகழ்ந்தாலும் அதனை உருவாக்குவதற்குத் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களே தேவையாக இருப்பதைக் காணலாம். பெரும்பான்மையான சிறுதெய்வங்களின் தோற்றத் தொன்மத்தினை ஆராய்ந்து நோக்கியோர் உயிர் இழப்பு ஏற்பட்ட சூழலில் தாழ்த்தப்பட்ட மக்களே அத்தெய்வங்களை உடல் ரீதியாகவும், உணவு ரீதியாகவும் ஆதரித்தனர் என்று தொன்மக்கதைகள் கூறுகிறது. “ விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் ஆண்டுதோறும் முத்தாலம்மன் தேர்த்திருவிழா நடைபெறும். திருவிழாவில் பதினெட்டுப்பட்டி கிராமங்களைச் சார்ந்த பல இனமக்கள் கலந்து கொள்வதோடு அனைவரும் வணங்கும் பொதுத்தெய்வமாகவும் முத்தாலம்மன் இருந்து வருகிறது. இருந்தாலும் திருவிழாவில் பறைகொட்டுதல், முளைப்பாரி எடுத்தல் நிலையினைப் பறையர் இனமக்களே செய்கின்றனர். “அன்றே பிறந்து அன்றே அழியக்கூடிய தெய்வமாக” முத்தாலம்மன் தெய்வம் இருந்து வருகிறது.  முளைப்பாரி உருவாக்குதல், அழித்தல் தெய்வம் முதலாகப் பறையர்களே செய்கின்றனர். இது அனைத்து சிறு பெண்தெய்வங்களுக்கும் பொருந்தும். தெய்வங்கள் அழியக்கூடிய நாட்களில் தெய்வங்களுக்குப் படைக்கப்படும் பொருட்களும் அழிக்கப்படுகிறது.

இத்தெய்வங்களின் மூலவடிவம் தோற்றமுற்ற நிலம் அதே இடத்திலே குடிகொள்ளும் அதன் நினைவாக ஆண்டுதோறும் உருவாக்கப்படும் எடுப்பு தெய்வங்கள், படையல்கள் அதன் குறித்த காலங்களில் அழிக்கப்படுகிறது. இதில் தொடர்தலைமுறை வணக்கம் மரபு ஒரு வகையிலும் அதனைச் சந்து செய்விப்பதற்காகப் படைக்கப்படும் செயல்பாடுகளும் வெளிப்படுகிறது.

முடிவுகள்

தமிழ்ச்சமூகத்தில் விவசாயத்தோடு இரண்டறக் கலந்த முளைப்பாரி தமிழர்களின் அடையாளத்தை தொடர்ச்சியாகத் தாங்கிக் கொண்டு வருகிறது. தெய்வத்திற்கு மட்டும் பயன்பட்டுவந்த முளைப்பாரிகள் இன்று பல்வேறு நிகழ்வுகளுக்குப் பயன்பட்டு வருகிறது. தலைவர், தலைவிகளின் மாநாடுகள், பொதுக்கூட்ட வருகை, நினைவஞ்சலி செலுத்தும் இடங்கள், பொதுநிகழ்வுகள் போன்ற பல்வேறு காரணங்களுக்காக முளைப்பாரி பயன்படுத்தப்படுகிறது. இவ்வகை மாற்றத்தினால் தொல்படிவ மூலம் மாற்றமுறாமல் இருந்தாலும் அதன் வெளிப்பாடு தெய்வ நிலையிலிருந்து சற்று மாற்றமுற்று காணப்படுவதை இனங்காண முடிகிறது.

துணை நின்ற நூல்கள்

1.பக்தவத்சல பாரதி – பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன்

பதிப்பகம், 53,புதுத்தெரு, சிதம்பரம் -001
2.பக்தவத்சல பாரதி – தமிழர் மானிடவியல், அடையாளம் வெளியீடு,  புத்தாநத்தம், திருச்சி -10, முதல் பதிப்பு-2002.

  1. பக்தவத்சலபாரதி – மானிடவியல் கோட்பாடுகள், அடையாளம் வெளியீடு,

  புத்தாநத்தம், திருச்சி -10, முதல் பதிப்பு-2005.

*****

 கட்டுரையாளர் –  உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
ராமகிருஷ்ண மிஷன் வித்யாலயா கலை அறிவியல் கல்லூரி
பெரியநாயக்கன் பாளையம்
கோயம்புத்தூர்- 20

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.