திரு ஏ.ஆர். முருகதாஸ் அவர்களுக்கு ஒரு திறந்த மடல்

நாகேஸ்வரி அண்ணாமலை

நான் இப்போதெல்லாம் சினிமாவுக்குப் போவதே இல்லை.  இதற்கு வயது ஒரு காரணம்.  இப்போதைய விருப்பங்கள், ஆசைகள் வேறு விதமாக இருக்கின்றன.  நடிக, நடிகைகள் அடிக்கும் கூத்துக்களைப் பார்த்துப் பரவசப்பட்டது ஒரு காலம்.  இப்போது அவை எல்லாம் அறியாமையில் செய்த காரியங்கள் என்று புரிகிறது.  மேலும் வருஷத்தில் ஒன்பது மாதங்களை அமெரிக்காவில் கழிக்க ஆரம்பித்த பிறகு ரசிப்பதற்கு வேறு எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன என்பது புரிகிறது.

இருந்தாலும் தமிழக அரசியலில் இன்னும் ஆர்வம் இருப்பதால் ‘சர்கார்’ திரைப்படம் அமெரிக்காவில் திரையிடப்பட்டதும் அதைப் பார்க்க வேண்டும் என்று மிகவும் விரும்பினேன்.  பல தசாப்தங்களுக்குப் பிறகு ஒரு சினிமாவுக்குப் போக வேண்டும் என்ற ஆசை என்னுள் முளைவிட்டது. அமெரிக்காவில் அந்தப் படம் திரையிடப்பட்ட இடங்களில் நாங்கள் வசிக்கும் இடத்திலிருந்து மிக அருகில் இருந்தது, சுமார் முப்பது மைல் தொலைவில்.  ஒரு படம் பார்க்க முப்பது மைல் போவதா என்ற எண்ணம் எழுந்தாலும் இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மேலீட்டால் போவதென்று முடிவுசெய்தோம்.

படம் ஆரம்பித்தவுடனேயே தன்னுடைய ஓட்டுரிமையை நிறைவேற்றுவதற்காக ஒரு பெரிய கம்பெனியின் தலைமை அதிகாரி அமெரிக்காவிலிருந்து தன் ‘படைகளோடு’ தமிழ்நாட்டிற்கு வருகிறார் என்பதைப் பார்த்தபோது கொஞ்சம் நெருடியது.  சரி இருக்கட்டும், போகப் போக உருப்படியாக ஏதாவது இருக்கும் என்று நினைத்தேன்.  ஆனாலும் பின்னால் வந்த காட்சிகள் இந்த அபத்தமான ஆரம்பத்தைப் பின்னுக்குத் தள்ளிவிட்டன.  கதாநாயகன் விஜய் ஒற்றை ஆளாக எந்தவித ஆயுதமும் இல்லாமல் கோடாரி போன்ற பயங்கர ஆயுதங்களோடு வரும்  இருபது பேரோடு சண்டை போட்டு ஜெயிக்கிறார்.  இப்படி அவர் செய்வது ஒரு முறையல்ல; மூன்று முறை.  கணினி கம்பெனியின் தலைமை அதிகாரிக்கு மூளை பலத்தோடு உடல்பலமும் இருக்கும் என்றே வைத்துக்கொண்டாலும் இத்தனை முறை, இத்தனை குண்டர்களோடு சண்டையிட்டு எந்தவித உடல் சேதாரமுமின்றி வர முடியும் என்று தமிழ் ரசிகர்கள் எப்படி நம்புகிறார்கள் என்று நம்ப முடியவில்லை.

சாக்கடையாகி இருக்கும் தமிழக அரசியலைச் சுத்தப்படுத்த, தன் ஓட்டைப் பதிவுசெய்ய வந்த இடத்தில் ஒரு பெரிய கம்பெனியின் தலைமை அதிகாரி முயல்கிறார் என்று விமர்சனங்களின் மூலம் தெரிந்துவைத்திருந்த நான்  இப்படி ஒரு ஏமாற்றம் காத்திருக்கும் என்று நினைக்கவில்லை.  கடந்த ஐம்பது வருடங்களாகத் திராவிடக் கட்சிகள் மக்களைச் சிந்திக்கவிடாமல் செய்ததை நினைத்து மனம் குமுறிக்கொண்டிருந்த எனக்கு யாராவது, ஏதாவது சொரு வகையில் கடந்த ஐம்பது வருட தமிழக அரசியலைப் பற்றிக் கொஞ்சம் விமர்சித்தாலே கொஞ்சம் நன்றாக இருக்கும்.  இது பற்றி ஒரு சினிமாப் படமே வந்திருக்கிறது என்று நினைத்து மிகுந்த எதிர்பார்ப்புடன் வந்த எனக்கு மிகுந்த ஏமாற்றமாகிவிட்டது. இது ஒரு அரசியல் அங்கதம் (Political satire) என்று எண்ணி மிகுந்த ஆசையுடன் வந்த எனக்கு இது வெறும் மசாலாப் படம் என்று தெரிந்ததும் மிகுந்த வேதனையாகிவிட்டது.

‘ஓம், ஒபாமா’ என்று ஒரு படத்தை மூன்று வருடங்களுக்கு முன்னால் சிகாகோ பல்கலைக்கழக வளாகத்திலேயே (எங்கள் வீட்டிலிருந்து அரை மைல் தொலைவில்) காட்டினார்கள்.  இறந்த அம்மையாரின் அமைச்சர்களையும் அ.தி.மு.க. தொண்டர்களையும் அவ்வளவு அழகாகக் கிண்டல் செய்திருந்தார்கள்.  தமிழ்நாட்டில் அது தடைசெய்யப்படலாம் என்பதற்காகவே அது அங்கு திரையிடப்படவில்லை என்று நினைக்கிறேன்.  இது பற்றிய விமர்சனத்தை அடுத்து வரும் URL-இல் பார்க்கலாம். http://sambarchutney.blogspot.com/2011/07/blog-post_2253.html

விஜய்யை வைத்து எத்தனை மசாலாப் படங்கள் வேண்டுமானாலும் எடுங்கள்.  அது பெரிய வெற்றிப் படமாக அமைந்து உங்களுக்குப் பெரும் லாபத்தைக் கொடுக்கலாம்.  ஆனால் தமிழக அரசியலை நல்ல திசையில் திருப்புவதாகக் கூறிக்கொண்டு இம்மாதிரிப் படங்களை எடுத்தால் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதில் உங்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடலாம்.  அவர்கள் ஒரு மாதிரி அப்பாவி மக்களை ஏமாற்றுகிறார்கள்; நீங்கள் இன்னொரு மாதிரி ஏமாற்றுகிறீர்கள்.  அவர்களும் உங்களுக்குப் பணத்தைக் கொட்டுகிறார்கள்.

ஏமாற்றத்துடன்,

நாகேஸ்வரி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *