நீர்க்குமிழி போல்அழகு காட்டும் பாங்கு நிரந்தரமாய் ஜொலிக்குமென நம்பிக் கொண்டு யார்க்கும்தான் அடங்காது பாயும் வேகம் நட்டாற்றில் மூழ்குமொரு படகின் சோகம்!

போர்க்களமாம் வாழ்க்கைதனில் போரா டித்தான் பெரும்வெற்றி தனைநாமும் குவிக்க வேண்டும் பேருக்கு வீரரென நடித்துக் கொண்டு போய்வேடம் போட்டுவரின் தவிக்க நேரும்!

எல்லாமும் எல்லார்க்கும் வாய்க்கும் என்னும் எதிர்பார்ப்பு சோகத்தில் முடிவில் தள்ளும் வல்லாராய்ப் பொய்வேடம் புனைந்து கொண்டு வாழ்ந்திடுவார் வருந்திடுவார் தோல்வி கண்டு!

நல்லோராய் வாழுவதில் தவறு இல்லை நிச்சயமாய் அதுதொல்லை தாரா துண்மை வல்லூறு போல்பிறரை பறிக்கும் வாழ்வு வீழ்ந்துவிடின் துடிக்கத்தான் விரட்டும் தாழ்வு்!

நெஞ்சத்தில் உயர்நினைவை நிரப்ப வேண்டும் நாளெல்லாம் நல்லுரையைப் பரப்ப வேண்டும் பஞ்சத்தில் வீழ்ந்திடினும் சோர்வு தன்னில் பணிந்துபிறர் பொருளேற்றல் தவிர்த்தல் வேண்டும்!

மஞ்சத்தில் புரளுமுயர் வாழ்வு வாய்ப்பின் மனம்தன்னை பஞ்சாக்கிப் பணிந்து பிறர் அஞ்சத்தான் வாழும்வகை கோணா மல்தான் அன்புமழை மிதமாகப் பொழிதல் வேண்டும்!

வானைப்போல் மனம்தன்னை விசாலம் ஆக்கி மானுடத்தை காக்கும்பணி ஆற்றல் வேண்டும் மானைப்போல் உயிராக மானம் தன்னை மனிதமெலாம் உயர்வாகப் போற்றல் வேண்டும்!

தேனைப்போல் இனிக்கும்மொழி பேசல் வேண்டும் தென்றலென மென்காற்றை வீசல் வேண்டும் வீணையென இசைமழையைப் பொழிதல் வேண்டும் விண்நிகர்த்த புகழ்நிலையில் வழிய வேண்டும்!

கவிஞர் இடக்கரத்தான்

30.11.2018

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க