Category: கட்டுரைகள்

கட்டுரைகள்

  • நவீனத்துவ தொடக்கமும் ஆதவனின் பிரதியாக்கமும்

    -செ.ர. கார்த்திக் குமரன்

    இலக்கியம் தொன்றுதொட்டு பலவிதப் பரிணாமங்களை எய்தியுள்ளது. அதைப்பொறுத்து அதனுடைய வடிவமுறைகளும் மாற்றம்பெற்றே வந்துள்ளது. இம்மாற்றங்களை ஏற்படுத்திய இலக்கியவாதிகள் ஒரு சிலரைக் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு வெளித்தெரியாமல் செய்துவிடுகின்ற நிலையும் தற்காலச் சூழலில் ஏற்படுகின்றது. அந்தவகையில், நவீன இலக்கியத்தில் தனக்கான தனித்த எழுத்தினைப் பதிவுசெய்த ஆதவன் என்ற படைப்பாளர் தற்காலத்தில் அதிகம் பேசப்படுவது கிடையாது. இதேபோல் கோபிகிருஷ்ணன், எம்.வி. வெங்கட்ராம், க.நா.சு, கிருஷ்ணன் நம்பி, நகுலன், ஜி.நாகராஜன், சம்பத், கரிச்சான் குஞ்சு என இதன் பட்டியல் நீள்கிறது. இவ்வெழுத்தாளர்களைப் பற்றி அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சில கட்டுரைகள் தற்போதுள்ள இதழ்களில் வெளிவருவது வரவேற்கத்தக்கது. மேலும், இதனை வாசிக்கும்போது நிகழ்ந்த ஆர்வமே, ஆதவன் குறித்த இக்கட்டுரை எழுதத்தூண்டியது.

    ஐரோப்பியர்களின் வருகையினாலும் நவீனக் கல்விமுறையில் அவர்கள் ஏற்படுத்திய மாற்றத்தினாலும் இலக்கியம் பல்வகை அர்த்தக்கட்டுமானங்களை உள்ளடக்கங்களாகக் கொண்டு பிரதிகள் வெளிவந்துள்ளன. இத்துடன், நவீனக் கோட்பாடுகளின் தாக்கங்களும், படைப்பாக்கத்தினால் பல புதிய புரிதல்களை இலக்கிய உலகிற்கு அளித்ததோடு, வாசகர்களின் ஆய்வாளர்களின் கல்வியாளர்களின் மனங்களில் சிந்தனை ரீதியாக மாற்றங்களுக்கும் வித்திட்டன. இதனால், எழுத்தாளர்கள் பலதரப்பட்ட விஷயங்களையும் கருத்துக்களையும் வெளிப்படையாகவே வெளிப்படுத்தி உள்ளனர். இதில் ஆதவன் தன் எழுத்தினூடாக நவீன இலக்கியத்திற்கு அளித்த பங்கினைக் காண்பதாகவே இக்கட்டுரை அமைவுபெறுகிறது.

    கே.எஸ்.சுந்தரம் என்ற இயற்பெயரைக் கொண்ட ஆதவன், 1942இல் கல்லிடைக்குறிச்சியில் பிறந்தவர். 1960களில் எழுதத்தொடங்கிய இவர், தமிழ்ப் படைப்புலகில் பலவாறான நவீனச் சிந்தனைகளை எடுத்துரைக்கும் வகையில் படைப்புகளைப் படைத்தவர். மத்தியதர வர்க்கத்தின் நிலைகளையும் நவீன சமூகத்தில் ஆண் – பெண்ணுக்கு ஏற்படும் காதல் மனஉணர்வுகளையும் அதனால் ஏற்படும் நெருக்கடிகளையும் அவர்கள் அணியும் முகமூடிகளையும் போடும் வேஷங்களையும் தோலுரித்துக் காட்டுவதாக இவருடைய கதைகள் அமைந்துள்ளன. “என் பெயர் ராமசேஷன்”, “காகித மலர்கள்” ஆகிய இரு புதினங்களும் அறுபது சிறுகதைகளும் எழுதியுள்ளார். இவர் படைத்த இப்புனைகதைகளின் வாயிலாகத் தற்காலச் சூழலின் இயங்குநிலையையும் அறியமுடிகின்றது. இவர் எழுதிய காலகட்டத்தில் நவீனத்துவ கோட்பாடானது பரவலாகப் பேசப்பட்டது. மேலும், இவருடைய எழுத்துக்களானது அக்கோட்பாட்டைச் சார்ந்ததாகவே உள்ளதோடு, இவருடைய எழுத்துக்களைத் தவிர்த்து நவீனத்துவத்தை புரிந்துகொள்ள முடியாத சூழலும் உள்ளது எனலாம்.

    நவீனம் (Modern) – நவீனமயமாதல் (Modernity)- நவீனத்துவம் (Modernism)

    நவீனம் என்பதை ஒரு கண்ணோட்டம், அணுகுமுறை மற்றும் வாழ்க்கைமுறை என்றே கூறலாம். இது, கி.பி.18ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஐரோப்பாவில் நிலவி வந்த அறிவொளிக் காலத்தில் எழுந்தது. “நவீன என்கிற அடைமொழி காலத்தைக் குறிக்கிறது. காலத்தினால் நமது இன்றைய வாழ்க்கைக்கு மிகவும் நெருங்கிய சம்பந்தமுடையது என்பதையும், அதனுடன் இந்தக் காலத்தில் சிறப்பாக எழுதப்பட்டதையும் குறிக்கிற வார்த்தை அது.”1   1127ஆம் ஆண்டு பாரிஸிலிருந்த ஒரு தேவாலயம் சீரமைக்கப்பட்டபோது சுசர் என்பவர், அது ‘நவீனப்’படுத்தப்பட்டதாகக் கூறியபோது தான் இச்சொல் புழக்கத்தில் வந்தது எனலாம். கட்டடக்கலையில் தோன்றிய இச்சொல்லானது, பிறகு ஓவியம், கலை இலக்கியங்களில் பயன்படுத்தப்பட்டது. பொதுவாக, நவீனம் என்ற சொல்லுக்கு அகராதியில் பழையதிலிருந்து மாறுபட்டு, புதிய மாற்றங்களுக்கும் தேவைகளுக்கும் ஏற்ற முறைகளையும் தன்மையையும் கொண்டு அமைவது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. “பதினைந்தாம் நூற்றாண்டுக்குப் பிந்திய 20ஆம் நூற்றாண்டுக்காலம் வரைப்பட்ட சிந்தனைகளை உள்ளடக்கிய தத்துவக் காலகட்டத்தை நவீன காலம் என்பர்.”2 இக்காலகட்டத்தில் தான் அறிவியல் வளர்ச்சியின் மூலம் சமூக அமைப்பே மாறியது. ஐரோப்பியர்கள் காலனிய நாடுகளில் ஏற்படுத்திய வணிகத்தின் காரணமாக பிரபுத்துவச் சமூகம் இல்லாமலாகி முதலாளித்துவச் சமூகம் தோற்றம் பெற்றதுடன், புதிய புதிய போக்குகளுக்கும் சிந்தனைகளுக்கும் வழிவகை செய்தது.

    இதனை அடியொற்றி தோன்றிய நவீனமயமாதல் என்ற பெயர்ச்சொல், புதுமை, தற்காலம், புத்தியல் ஆகிய பொருண்மையைத் தருகிறது. இத்துடன் புதிய சாதனங்கள், தொழில்நுட்பங்கள் ஆகியவற்றின் வாயிலாக தற்காலத் தேவைக்கேற்ப பலனை அதிகப்படுத்துவதின் நோக்கில் மாற்றியமைத்தலையும் இச்சொல் குறிக்கிறது. இதனால், உற்பத்திப் பொருட்களில் புதுமைகளைப் புகுத்தி, அதன் தரத்தை கூட்டுவதற்கும் அதிகளவு பொருட்களைத் தயாரித்து, உலக சந்தையை கவர்வதற்கும் இது பயன்பட்டது. மேலுமிதைப் பல துறைகளிலும் கொண்டு சென்று, தங்களின் சுயத்தை நிலைநாட்டி, நிர்வாகம் சார்ந்த அமைப்பிலும் தன் முத்திரையைப் பதியச் செய்தனர்.

    “15ஆம் நூற்றாண்டுக்குப் பிந்தைய, இருபதாம் நூற்றாண்டின் இடைப்பகுதி உள்ளிட்ட காலகட்டத் தத்துவமாக ‘நவீனத்துவம்’ அடையாளங்காணப்படுகிறது.” இத்துடன் ‘நவீனத்துவம்’ என்றால் என்ன? இதன் பண்புகள் எவையென அறிய முற்படுமிடத்து,    எம்.ஜி.சுரேஷ் எடுத்தாளும் ஹ்கோவான் ஹாஃப்மன்ஸ்தால்  தரும் விளக்கம் பொருத்தமாக இருக்கும். “இன்று இரண்டு விதமான விஷயங்கள் நவீனமானவையாக இருக்கின்றன. வாழ்க்கையை ஆய்வு செய்தல், வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்லுதல். மனித மனத்தின் உள்ளார்ந்த வாழ்கையை அல்லது கனவுகளைப் பகுப்பாய்வு செய்வதையும், நம்ப முடியாத மாயத்தோற்றங்கள், கண்ணாடியில் தோன்றுவது போன்ற மாயப்பிம்பங்கள், கனவுத் தோற்றங்கள் போன்றவை மீது கவனம் செலுத்துவதையும் இதோடு சேர்த்துக் கொள்ளலாம். பழைய மேசை  நாற்காலிகளைப் போலவே புதிய கண்டுபிடிப்பான நியுரானும் நவீனமானதே. அறிவொளிக் காலத்தின் ‘நெருக்கடி’க்குள்ளான அறிவும் ரொமாண்டிச யுகத்தின் புத்தாய்வை நாடும் ஆர்வமும் சேர்ந்ததே நவீனத்துவத்தின் பண்பாகும் என்பனவே நவீனத்துவங்குறித்த விளக்கமாக இவரால் முன்வைக்கப்படுகின்றன. இவர் மேலும், 1890 முதல் 1930 வரையிலான காலகட்டத்தை நவீனத்துவத்தின் உச்சக்கட்டமாக மால்கம் பிராட்பரி, ஜேம்ஸ்மக் ஃபர்லேன் போன்ற கலை இலக்கிய ஆய்வாளர்கள் வரையறுத்துள்ளனர் எனவும் கூறுவர்.”3 நவீனத்துவத்தின் வாயிலாக கல்வி வளர்ச்சி, போக்குவரத்து வளர்ச்சி, கனரக இயந்திரங்கள் மூலம் அபரிமிதமான உற்பத்தி, தொழில் துறையில் முன்னேற்றம், மக்களாட்சிக் கோட்பாடுகளின் வருகை போன்றவைகள் இக்காலத்தில்தான் ஏற்பட்டது. இதன் இயல்புகளாக, எதையும் அப்படியே ஏற்காமல் தர்க்கபூர்வமான முறையில் ஆராய்ந்து, வர்ணனைகள், விவரணைகள் கொடுத்து வளர்க்காமல், சுருக்கமான முறையில் வெளிப்படுத்தி, தனிமனித மனஉணர்வுகளைப் புலப்படுத்தும் வகையில் அமையும். “பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தீவிரங்கொண்ட நவீனத்துவம் நகர்மயமாதல், வெகுசனமயமாதல், ஒருமுகமாதல் என மனித இயக்கங்களில் அரசியல், பண்பாடு, கலை, இலக்கியம், தொழில் என அனைத்துத் துறைகளையும் புதிய தாக்குதலுக்கு உள்ளாக்கியுள்ளது.”4 இந்நவீனத்துவத்தின் சாரம்சமாக, நிலவுடைமைச் சமூகத்தின் வீழ்ச்சியையும் முதலாளித்துவத்தின் ஊடாக அறிவியல், தொழில்நுட்ப வளர்ச்சியையும் ஏகாதிபத்தியத்தின் தோற்றத்தையும் குறிப்பிடலாம்.

    என் பெயர் ராமசேஷன்

    சமகால நவீனத்துவப் போக்கினை நாவல்களில் சிறந்த முறையில் உருவாக்கியவர் ஆதவன். மத்தியதர வர்க்கத்தின் சிந்தனைகளை, உணர்வுகளை, செயல்களை அப்பட்டமாக சித்திரித்தவர். நவீன வாழ்நிலையில் இளைஞன், தன் சுயநிரூபணத்திற்கான பரிதவிப்பையும் அடையாளத் தேடலையும் வெளிப்படுத்துவதாக இந்நாவல் படைத்துள்ளார். ராமசேஷன் என்ற இளைஞனை மையப்படுத்திய இக்கதை, விடுதியில் தங்கி, பொறியியல் கல்லூரியில் படிக்கும்போது அவனுக்கு ஏற்படும் அனுவங்களை, கிண்டல்களை, உணர்வுகளைச் சொல்வதாக உள்ளது. மேல்தட்டு வர்க்கத்தின் இயல்புகளையும் குணங்களையும் சகநண்பனின் குரோதத்தையும் கீழ் மத்தியதரப் பின்னணி கொண்ட ராமசேஷன் உணர்கிறான்.  இதிலிருந்து தான் விடுபடவும் சுயநிரூபனம் அடையவும் முயல்கிறான். எனினும் தன் (மத்தியதர வர்க்க)  உணர்வுகள் அவனை நிலைகுலைய வைக்கின்றன. இதனால், தனக்கு நேரும் விளைவுகளை ராமசேஷன் பிரதியின் வாயிலாக எள்ளலாக எடுத்துரைக்கிறான்.

    “முதல் நாள் என்னைப் பார்த்தவுடனேயே நான் எப்படிப்பட்டவனென்று தனக்குத் தெரிந்துவிட்டதாக மாமி சொன்னாள். என் கண்களைப் பார்த்தவுடனேயே தெரிந்துவிட்டது (முழுக்க முழுக்க விஷமத்தனம்). அவள் முட்டாளில்லை. என் போன்றவர்களை உள்ளும் புறமும் அவள் அறிவாள். … உன் நண்பனுடைய தாயையும் தங்கையையும் உன் தாயையும் தங்கையையும் போல நினைப்பது சிரமமானது. இந்தச் சிரமத்தை உங்கள் தலைமுறையினர் படத் தயாராயில்லை. இவை அனாவசியக் கட்டுப்பாடுகளாக, ஹிப்போக்ரிஸியாக உங்களுக்குத் தோன்றுகின்றன. உங்களைச் சொல்லியும் குற்றமில்லை. நீங்கள் வளரும் சூழ்நிலை அப்படியிருக்கிறது. … உன் மனதில் ஓடுவது ஒவ்வொன்றும் அணுஅணுவாகத் தெரியும். கீழ் மத்தியதர வகுப்புக்கே உரிய வஞ்சிக்கப்பட்டுவிட்ட களை உன் முகத்தில் எழுதி ஒட்டியிருக்கிறது. … நீ எங்களுக்கு புழுவுக்கு சமானம். எங்கள் மட்டத்துக்கு ஏற்ற சமூக நாகரிகத்தை ஒட்டி நாங்கள் காட்டும் நேச பாவத்தையும் இனிமையையும் உன் அசட்டு மனம் எப்படியெல்லாம் தப்பர்த்தம் செய்துகொண்டிருக்கிறதோ, என்னவோ … நீ இனி இந்த வீட்டுப்பக்கம் வராதேயென்று நான் சொல்லப்போவதில்லை. தாராளமாக வா. ஆனால் ஒரு ஜென்டில்மேனாக லட்சணமாக இரு. Don’t try your dirty tricks here…”5 மத்தியதர வர்க்கத்தின் போக்கினையும் அவர்களுடைய சிந்தனையையும் வெளிப்படையாகவும் அழுத்தமாகவும் காட்டியுள்ளார். நவீனகாலப் போக்கினால் இளைஞர்களுக்கு ஏற்படும் மாற்றத்தினை, மேல்தட்டு வர்க்கம் புரிந்துகொண்டதையும் மேலுமவர்கள் எச்சரிக்கைச் செய்வதையும் ஆதவன் தெளிவுபடுத்தியுள்ளார். தனிமனித, கல்லூரி மாணவனின் யதார்த்தப் போக்கினையும் மரபுகளிலிருந்து விடுபட்டு வாழ நினைப்பதையும் நவீனகாலத்திய இயங்குதளத்தில் ஏற்படும் நெருக்கடிகளையும் இப்பிரதியின் வழி ஆதவன் சித்திரித்துள்ளார். நவீனத்துவ இலக்கியப் போக்கினை முன்னெடுத்தவர்களில் மிகவும் முக்கியமானவராகவும் இவர் கருதப்படுபவர்.

    அப்பர் பெர்த்

    தில்லியிருந்து சென்னைக்கு இரயிலில் மூன்றாம் வகுப்பு அப்பர் பெர்த்தில் பயணம் செய்யும் சிதம்பரம் என்ற நடுத்தரவர்க்கத்தைச் சார்ந்த இளைஞனின் சுயதேடல் மற்றும் நவீன உலகில் தன் இருத்தல் குறித்த சிந்தனைகளை வெளிக்கொணரும் விதமாக இச்சிறுகதை அமைந்துள்ளது. மேலும், இவ்விளைஞன் தில்லி சமூகவாழ்க்கையில் திளைத்ததினால் ஏற்பட்ட உளவியல் (பாலின்ப) சார்ந்த உணர்வுகளையும் செயல்களையும் சொல்வதுடன், இந்திய – தமிழ்ப்பெண்களின் பாரம்பரிய பண்பாட்டு உணர்வுகளையும் மிக நேர்த்தியாக தன் எழுத்தினூடே சித்திரித்துள்ளார். “அவளை ஆதரவுடன் அணைத்துக்கொண்டு, ‘உன் மனசு எனக்குத் தெரியும், அபர்ணா!’ என்று மெல்லிய குரலில் அவளிடமும், ‘இவள்தான் என் உண்மைக்காதலி, தெரிந்துகொள்ளுங்கள்!’ , என்று மற்றவர்களிடமும் உரக்கச் சொல்லிவிட்டு, ரயிலைத் தவறவிட்டு அவளுடனேயே இருந்துவிடலாமா என்று தோன்றியது. … அபர்ணாவை மணந்துகொண்டால் வாழ்க்கையில் என்றைக்குமே அமைதியும் அழகும் மிளிரும். ஆனால், அவனுடைய ஆசைகள்? கனவுகள்? என்றும் சாதாரணமானவனாகவோ இருந்துவிட அவன் விரும்பவில்லை. என்றாவது ஒரு நாள் சமூகத்தில் பெரிய புள்ளியாக வர வேண்டும். ஒரு புத்திசாலித்தனமான கல்யாணத்தின் மூலம்இதற்கு அவன் அடிகோலலாம். காதலா, வாழ்வின் மேன்மையா என்று யோசித்தபொழுது, பிந்தையதைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது.”6  நவீன சமூகத்தில் செய்யும் காதலுக்கும் கல்யாணத்திற்கும் இடையே வாழ்வின் மேன்மையை அடைவதுதான் புத்திசாலித்தனம் என்ற சுயநலப்போக்கினைச் சொல்வதோடு, சாதாரணமாகவே தான் ஒருபோதும் இருந்துவிடக்கூடாது என்பதையும் சமூகத்தில் தனக்கான இடம்பெற, இளைஞர்கள் செய்யவேண்டியவற்றையும் எடுத்துரைக்கிறது.

    “எதிரே தூங்கிக்கொண்டிருந்த பெண்மணியின் தோற்றம் அவன் உள்ளத்தில் ஏதேதோ கற்பனைகளைக் கிளர்ந்தெழச் செய்தது!…

    காப்பிக்குப் பிறகு, பேச்சு. சிதம்பரம் நம் சினிமாக்களைக் கேலி செய்து ஏதேதோ பேசினான். அவள் சிரித்தாள். பிறகு அவளும் ஏதோ பேசினாள். இருவரும் பேசினார்கள். நிறையப் பேசினார்கள். அலுக்காமல் பேசினார்கள்.

    சிதம்பரத்துக்கு மெல்ல நம்பிக்கை பிறந்தது. தான் பாயக்கூடிய தொலைவுக்குள் வந்துவிட்ட இரையைப் பார்த்த புலிபோல, அவன் தயாரானான். …

    அடுத்த குகைக்குள் ரயில் நுழைந்ததும் அவன் யோசிக்கவே இல்லை. சட்டென்று அவளைக் கட்டியணைத்துக் கொண்டான். அவனுடைய கைப்பிடியில் அவளுடைய சதை அழுந்தியது. திடுக்கிட்டுத்தான் போய்விட்டான் அவன். எதிர்பாராத அதிர்ச்சியில் செயலற்றுப் போனாள். ஆனால் ஒரு கணம்தான். மறுகணமே பளாரென்று அவன் கன்னத்தில் ஓர் அறை விழுந்தது. நெருப்பைத் தீண்டினவன் போல அவன் சரேலென்று கைகளை எடுத்துக்கொண்டான்.”7 தில்லியின் சமூகச்சூழல்களில் வாழ்ந்த சிதம்பரம், அங்கு பழகிய பெண்களின் இயல்பு ஆகியவற்றைக் கொண்டு, அடுத்தவனின் மனைவியாகிய இப்பெண்ணினுடைய கணவனின் இயலாமையை அறிந்து, தன்போக்கில் நடந்துகொண்டான். வேண்டிய பொருட்கள் எல்லாம் தன் கையில் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் தான் செய்த செயலானது, அவனுக்கு அவநம்பிக்கையையும் வெட்கத்தையும் கொடுத்தது. ஃபிராய்ட் பிரித்த (இன்பமனம் – id, நீதிமனம் – ego, ஆழ்மனம் – super ego) மனிதமனங்களில் முதலாவதாக இருக்கும் இன்பமனத்தை நாடிய நவீன இளைஞன், மரபான பண்பாட்டு உணர்வுகொண்ட இந்தியச் சூழலில் அதனைத் தவிர்க்கும் நிலை உள்ளதை ஆதவன் தத்ரூபமாக வெளிப்படுத்தியுள்ளார். மேலும், அவன் இத்தகைய கேவலங்களை எல்லாம் ஒரு பொருட்டாகக் கருதாமல், வாழ்க்கையில் தான் அப்பர் பெர்த்தாகவே இருக்க, செய்யவேண்டிய செயல்களைப் பற்றிச் சிந்திப்பதாக கதை முடிவடைகிறது.

    இதைப்போலவே இவருடைய நிழல்கள் என்ற சிறுகதையும் ஆணின் காதல் குறித்த பார்வையும் நவீனச்சூழலில் பெண்ணின் உடல்சார்ந்த தற்காப்பு நிலையும் ஆண் x பெண், காதல் (உடல்) x கற்பு ஆகிய இரட்டை எதிர்நிலைகளுடன் (Binary Opposition) எழுத்துருவாக்கியுள்ளார். சமகாலத்திய காதல் பற்றிய கருத்தாக்கங்களை இருநிலைகளில் அதாவது ஆண், பெண் என்ற இருமனங்களின் உணர்வுகளினூடாக பதிவுசெய்துள்ளார்.

    “இந்தத் திரைகள் அவசியந்தானென்று நீ நினைக்கிறாயா?

     ‘இது கற்காலமல்ல.’

     ‘இதோ பார் – உன்னிடமிருந்து நான் வேண்டுவது அதுவல்ல – ஏதோ ஒன்றை நான் கவர முயற்சிப்பதாகவும் நீ காப்பாற்றுவதாகவும் நினைக்கிறாயே, அதுவல்ல; எனக்கு வேண்டியது நீ – பூரணமான திரைகளற்ற நீ; முழுமையான நீ – புரிகிறதா உனக்கு? எனக்கு வேண்டியது அதுமட்டுந்தான் என்றால், எங்கேயாவது ஒரு நாற்றமடிக்கும் சந்தில் யாரையாவது ….’

    ‘வெளிச்சம் வரும்போது, கூடவே நிழல்களும் வந்துவிடுகின்றன’ என்று அவன் நினைத்தான்.”8 கற்பு குறித்து மாற்றுக்கருத்துக்கள்கொண்ட (அக்னிப்பிரவேசம், பொன்னரகம்) போன்ற சிறுகதைகளினூடே, இக்கதை கற்பினைத் தாண்டிய பூரண மனஉணர்வை வெளிப்படுத்துகிறது. இன்றைய காலங்களில் பெண்களைப் பாலின வன்கொடுமைகளுக்கு ஆளாக்கும் பட்சத்தில் இக்கதையானது, பெண்ணுடலை மீறிய தத்துவார்த்தச் சித்தாந்தத்தை ஆணின் பார்வையில் எடுத்தியம்புகிறது. சமூகக் கட்டுமானங்களைத் தனிமனிதர்கள் மாற்றுத் திசையில் கொண்டு செல்ல முடியும் என்பதை ஆதவன் இதன்வழி தெரியப்படுத்தியுள்ளார்.

    இதற்கடுத்ததாக இவருடைய ‘இண்டர்வியூ’ மற்றும் ‘கனவுக்குமிழிகள்’ போன்ற கதைகள் தனிமனிதப் பிரச்சினைகளை, சுதந்திரத்தைக் கோருகின்றன. பொருளாதார நிலையில் ஒருவன் உயர்மட்டத்தை அடையவேண்டுமெனில் தன் சுயவிருப்பங்களுடன் செயல்படவேண்டுமென்றும் பிற உறவுகளைத் தவிர்க்கவேண்டுமென்றும் இதில் கூறப்படுகின்றது. பணம்தான் எல்லாம் என்ற தற்காலச் சமூகச்சூழலில்  ஆழ்ந்த அறிவுபெற்றிருந்தாலும் பணமில்லையென்றால் ஏற்படும் அவலநிலையையும் இது சித்திரிக்கிறது. மேலும், இந்தியாவின் படித்த இளைஞர்களின் மனத்தை, வாழ்க்கையை துல்லியமாகவும் தத்ரூபமாகவும் தம் படைப்புகளில் படைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து, இவருடைய ‘சிவப்பாக உயரமாக மீசை வச்சுக்காமல்…’, ‘புதுமைப்பித்தனின் துரோகம்’, ‘முதலில் இரவு வரும்’, ‘புகைச்சல்கள்’ போன்ற கதைகளும் முறையே ‘ஆண் – பெண்ணுக்கு இடையே நிலவும் egoக்கள்’ ‘எழுத்தாளனுடைய வாழ்க்கையைப் பற்றிய புரிதல்கள்’, ‘முந்தைய தலைமுறைச் சார்ந்த பெற்றோர் மனங்களில் விளையும் சிக்கல்கள்’, ‘திருமணம் முடிந்து, பாலின்ப வேட்கை தணிந்த பிறகு எழும் நிறை – குறைகள்’ எனத் தற்கால புதுயுக மாற்றத்தினால் நிகழும் பிரச்சினைகளைத் தன்னளவில் பிரத்யேகமான முறையில் எழுத்துருவாக்கியுள்ளார்.

    சமகாலப் படைப்பிலக்கியச் சூழலில் ஆதவனின் பிரதியாக்க முறையானது இன்றும் தனித்துவம் மிக்கதாகத் திகழ்வதுடன், காலத்திற்கேற்றவாறு மனிதமனங்களின் பிரக்ஞைகள் மாற்றம்பெறுவதை நுணுக்கமாகவும் அழகியல் தன்மையுடனும் நவீன இலக்கியத்திற்கு அளித்துள்ளதை இவரை வாசிக்கும் யாராலும் மறுக்க இயலாது.

    மேற்கோள் விளக்கக் குறிப்புகள்

    1. காவ்யா சண்முகசுந்தரம் (தொ.ஆ.), க.நா.சு. (க.ஆ.), இலக்கிய விமர்சனங்கள், க.நா.சு. கட்டுரைகள் – II, ‘நவீன இலக்கியம்’, ப.857.
    2. ஆ. பூமிச்செல்வம், பின்னை நவீனத்துவம், ப.40.
    3. மேலது., பக். 45-46.
    4. மேலது., ப.47.
    5. ஆதவன், என் பெயர் ராமசேஷன், பக்.41-42.
    6. ஆதவன் சிறுகதைகள், ‘அப்பர் பெர்த்’, ப.22.
    7. மேலது., பக். 36-37.
    8. ஆதவன் சிறுகதைகள், ‘நிழல்கள்’, ப.221.

    துணைநூற்பட்டியல்

    1. இலக்கிய விமர்சனங்கள், க.நா.சு. கட்டுரைகள் – II, காவ்யா பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு : 2005.
    2. ஆதவன், என் பெயர் ராமசேஷன், உயிர்மை பதிப்பகம், சென்னை, நான்காம் பதிப்பு: நவம்பர் 2014.
    3. ஆதவன் சிறுகதைகள், கிழக்கு பதிப்பகம், சென்னை, முதல் பதிப்பு: டிசம்பர் 2005.
    4. ஆ. பூமிச்செல்வம், பின்னை நவீனத்துவம், அகரம் பதிப்பகம், தஞ்சாவூர், முதல் பதிப்பு: 2014.

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர், தமிழ்த்துறை,                  தியாகராசர் கல்லூரி, மதுரை.                                                                  செல் : 99443 77853, 70924 44193.

    Share
  • அமெரிக்காவில் ஓரின ஈர்ப்பாளர்களின் நீண்ட பயணம்

    நாகேஸ்வரி அண்ணாமலை

    அமெரிக்காவில் ஓரின ஈர்ப்பாளர்களின் உரிமைகளுக்கான நீண்ட பயணம் இன்னும் முற்றுப்பெறவில்லை என்றாலும் இப்போது எவ்வளவோ முன்னேறியிருக்கிறது.  இருபது வருஷங்களுக்கு முன்புகூட இவர்கள் பலரால் நிந்திக்கப்பட்டார்கள்.  (இன்னும் சில சமூகங்களில் இவர்களுக்கு மரண தண்டனைகூடக் கொடுக்கப்படுகிறது என்பது வேதனைக்குரிய விஷயம்.)

    1998-இல் வயோமிங் என்னும் மாநிலத்தைச் சேர்ந்த லாரமீ என்னும் ஊரில் ஒரு ஓரின ஈர்ப்பாளனை இரண்டு திருடர்கள் கடத்திக்கொண்டுபோய் துன்புறுத்திப் பின் ஒரு வேலியில் தொங்கவிட்டுவிட்டுப் போய்விட்டார்கள்.  அந்தப் பக்கமாக சைக்கிளில் போய்க்கொண்டிருந்த ஒருவன் – முதலில் வயல்களில் வைக்கப்படும் சோளக்கொல்லை பொம்மை என்று நினைத்துப் போகவிருந்தவன் – பின் நிலைமையை உணர்ந்து மருத்துவமனையில் அவனைச் சேர்த்தும் அவன் – மேத்யூ ஷெப்பர்ட் – இறந்துவிட்டான்.  வயோமிங்கில் நடந்த அவனுடைய ஈமச்சடங்குகளுக்கு நிறையப் பேர் வந்திருந்தாலும் சிலர் அது அங்கு நடைபெறுவதைக் கண்டித்து சுலோகங்கள் தாங்கிய அட்டைகளைச் சுமந்துவந்தனர்.  இதனால் அங்கு மகனுடைய அடக்கம் நடைபெற்றால் பின்னால் அவனுடைய கல்லறை அப்படி எதிர்த்தவர்களால் அசிங்கப்படுத்தப்படலாம் என்று பயந்து அவனுடைய பெற்றோர்கள் இருபது வருஷங்களாக மகனுடைய அஸ்தியை புதைக்காமல் வைத்திருந்தார்கள்.  இப்போது மகனுக்கு ஒரு பாதுகாப்பான இடம் கிடைத்திருக்கிறது.  கடைசியாக மகனுக்கு அவனுக்குப் பிரியமான இடத்தில் அவனுடைய கடைசி இருப்பிடம் அமைந்திருக்கிறது என்று அவனுடைய தந்தையும் தாயும் நிம்மதியாக, சந்தோஷமாக இருக்கிறார்கள்.  முதலில் மகனுடைய அஸ்தியை வயோமிங்கின் மலைகளின் மீதும் சம வெளிகளிலும் தூவிவிட முடிவுசெய்தனர்.  இருந்தாலும் மகனிடம் தொடர்ந்து பேசுவதற்கு ஏதுவாக ஒரு பாதுகாப்பான இடம் தேடினர்.  இப்போது கடைசியாக வாஷிங்டன் நேஷனல் கதீட்ரலில் அஸ்தியைப் புதைக்க இடம் கிடைத்திருக்கிறது.  வரும் அக்டோபர் 26-ஆம் தேதி மேத்யூவின் அஸ்தி அங்கு புதைக்கப்படும்.  இது ஜெபக் கூட்டங்களும் ஞாபகார்த்தக் கூட்டங்களும் தினமும் நடைபெறும் கதீட் ரல்.  இங்கு பெரிய அரசியல்வாதிகள், மதத்தலைவர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.   பெரிய புள்ளிகளான அமெரிக்க ஜனாதிபதி உட்ரோ வில்ஸன், அமெரிக்கக் கப்பற்படையில் பெரிய அதிகாரியாக விளங்கிய ஜார்ஜ் டூயீ, ஹெலென் கெல்லர், அவருடைய ஆசிரியை ஆனா சல்லிவன் ஆகியோர்கள் புதைக்கப்பட்டிருக்கிறார்கள்.  “இவர்களோடு மேத்யூவும் புதைக்கப்பட்டிருப்பது சிறந்த காரியம்தான்” என்று பிஷப் புத்தே கூறியிருக்கிறார். சமீபத்தில் அமெரிக்க செனட்டராக இருந்த, அமெரிக்காவின் கடற்படையில் பணிபுரிந்த, வியட்நாம் சிறையில் ஐந்தரை வருடங்கள் போர்க் கைதியாகக் கழித்த செனட்டர் மெக்கெயினைக் கவுரவித்து இறைவழிபாடு நடத்தினார்கள்.

    அக்டோபர் 26-ஆம் தேதியன்று பொதுமக்களுக்கான ஜெபக்கூட்டம் முடிவடைந்ததும் மேத்யூவின் குடும்ப அங்கத்தினர்களுக்காகத் தனிப்பட்ட முறையில் நடக்கப்போகும் நிகழ்ச்சியில் மேத்யூவின் அஸ்தி அங்கு புதைக்கப்படும்.  அந்த நிகழ்ச்சிக்கு பிஷப் புத்தேயும் ராபின்ஸனும் (இவர் 2003-இல் முதல் ஓரின ஈர்ப்பாள பிஷப்பாக எபிஸ்கோப்பல் தேவாலயத்தில் சேர்ந்தவர்) தலைமை தாங்குவார்கள்.  மேத்யூவின் பெற்றோர்கள் ஓரின ஈர்ப்பாளர்கள், மூன்றாம் பாலினர் என்று பலவிதமான பால் பாகு

    பாடுகளுடையவர்களின் ((LGBTQ) உரிமைகளுக்காகப் பாடுபட்டு வருகிறார்கள்.  இவர்களோடு சேர்ந்து ராபின்ஸனும் பாடுபட்டு வருகிறார்.  மேத்யூவின் அம்மா கேட்டுக்கொண்டதற்கிணங்க இந்தக் கதீட்ரலில் மேத்யூவின் அஸ்தியைப் புதைக்க ராபின்ஸன் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார்.

    மேத்யூவின் நண்பன் ஜேஸன் மார்ட்ஸன் நண்பனின் பெயரில் ஒரு பவுண்டேஷனை ஆரம்பித்து மேத்யூவுக்குப் பிரியமான உலக அரசியல், மனித உரிமைகள் பற்றி அவன் பெயர் விளங்குமாறு செய்யப் போகிறார்.  அக்டோபர் 26-ஆம் தேதி ஜேஸனும் மேத்யூவின் அஸ்தி புதைக்கப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார்.  பிஷப் ராபின்ஸன் கூறியதுபோல் இம்மாதிரி பால் பாகுபாடு உடையவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் அமெரிக்கா இப்போது – மேத்யூ கொல்லப்பட்டபோது இருந்ததைவிட – எவ்வளவோ முன்னேறியிருக்கிறது.  மத்திய அரசாலும்  சில மாநில அரசுகளாலும் ஓரின ஈர்ப்புத் திருமணங்கள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றன.

    2009-இல் அமெரிக்கப் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட ஒரு மசோதாவில் மேத்யூவின் பெயர் இடம் பெற்றிருக்கிறது.  அந்த மசோதா சட்டமாக்கப்பட்டபோது ஒருவரை வெறுப்பதால் இழைக்கப்படும் கொலைகளில் (Hate Crimes- அமெரிக்காவில் இவ்வகைக் குற்றங்களுக்குக் கடுமையான தண்டனை உண்டு) பால் பாகுபாட்டினால் ஒருவரை வெறுத்து இழைக்கப்படும் கொலைகளும் சேர்க்கப்பட்டிருக்கின்றன.  2013-லேயே ‘மேத்யூ, என் நண்பன்’ என்னும் ஆவணப் படமும் கதீட் ரலால் வெளியிடப்பட்டது.

    “மேத்யூ கொலைசெய்யப்பட்டதிலிருந்து இந்த இருபது வருடங்களில்  எவ்வளவோ மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன.  ஆயினும் இன்னும் எவ்வளவோ மாற வேண்டியிருக்கிறது.  பால் பாகுபாடு உடையவர்களும் இறைவனால் படைக்கப்பட்டவர்கள்.  அவர்களும் கடவுளின் குழந்தைகள்.  அதனால் அவர்களுடைய பால் பாகு பாட்டினால் அவர்களை வெறுப்பதை விட்டுவிட்டு அவர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும்” என்றார் பிஷப் புத்தே.

    இப்போதைய போப் பிரான்சிஸும் ஓரின ஈர்ப்பாளர்கள் பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது, “அவர்களைப் பற்றிக் கணிப்பதற்கு நான் யார்?  அவர்களும் கடவுளின் குழந்தைகள்” என்றார்.

    “இந்தக் கத்தீட்ரலில்  புதைக்கப்பட்டிருக்கும் மற்றப் பெரிய மனிதர்களோடு எங்கள் மகன் மேத்யூவுக்கும் இடம் கிடைத்திருப்பது நாங்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான மகிழ்ச்சியான விஷயம்” என்று மேத்யூவின் தந்தை கூறியிருக்கிறார்.

    அமெரிக்கா பல வழிகளில் உலகிற்கு முன்னோடியாகத் திகழ்கிறது.  பால் பாகுபாடுடையவர்களுக்கு சமூகத்தில் உரிய இடத்தை வழங்கியிருப்பதிலும் முதன்மை வகிக்கிறது.

    இருந்தாலும் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் அவருடைய ஆதரவாளர்களும் இதுவரை அவர்களுக்குக் கிடைத்திருக்கும் உரிமைகளை மறுத்துச் சட்டம் இயற்றிவிடுவார்களோ என்ற பயமும் வருகிறது.

    Share
  • சேக்கிழார் பா நயம் – 7

    ======================

    திருச்சி புலவர் இராமமூர்த்தி.

    —————————————————

     

    இதற்கு  முன் எழுதிய கட்டுரையில்  சேய்மையிலிருந்து அண்மைநோக்கி வரும்

    காட்சியின்  அழகு கூறப்பெற்றது. இனி, இக்கட்டுரையில்  அண்மையிலிருந்து  சேய்மையை  நோக்கும் காட்சி கூறப்பெறுகிறது.  திருக்குறளிலும் , இத்தகைய காட்சி உண்டு. ஒரு குளத்தில் மீன்கள் அங்குமிங்கும் நீந்துகின்றன. அந்தக் குளத்தருகே இரவுநேரத்தில் பெண்ணொருத்தி வருகிறாள். அக்காலத்து நீரினுள்  எட்டிப் பார்க்கிறாள். அந்தப் பெண்ணின் முகம் நீரில் தெரிகிறது. அருகில் வானத்து நிலவின் பிம்பமும் தெரிகிறது. அந்த நீரில் மீன்கள் அங்குமிங்கும் அலைகின்றன!  அதைக் கண்ட வள்ளுவர், மீன்கள் கலங்கித்திரிவதற்குக்  காரணம் கற்பிக்கிறார். அவை எதையோ பார்த்துக் கலங்கி விலகி, விலகி ஓடுவது போல் தெரிகிறது. இயல்பாகத் தம் அருகில் வரும் பெண்ணின் முகத்தைக் கண்டு அஞ்சி விலகாத மீன்கள் வானத்து நிலசுவின் வெண்திரை ஒளியைக் கண்டு வேறுபாடாக உணர்ந்து விலகுகின்றன!  அதாவது வழக்கமாக நாள்தோறும் இரவில் வரும் பெண்களைப்  போலில்லாமல், வெண்மை  ஒளிவீசி விளங்கும் நிலவைக் கண்டு மீன்கள் விலகி நீந்துவதாகத் தன்  குறிப்பை  ஏற்றிக் கூறுகிறார். அதே மீன்கள், வானத்தில் உள்ள விண்மீன்களும் நிலவின் பிம்பத்துடன் தெரியும் பெண்ணின் முகநிழலும் தோன்றுவதால், அவையும் கலங்கித்  திரிகின்றன, என்று கருத்து கின்றன, என்று வள்ளுவர் தன்குறிப்பை  ஏற்றிக் கூறுகிறார் ! அருகிலுள்ள நீரில் தெரியும் பிம்பங்களிலிருந்து குளத்து மீன்களையும், அதற்கும் மேலே தெரியும் வானத்து மீன்களையும் காண்பது, அண்மையிலிருந்து சேய்மையைக் காணும் காட்சியைக்  குறிக்கிறது! இதனை,

    ‘’மதியும்  மடந்தை முகனும்  அறியா 

      பதியிற்  கலங்கின  மீன்!’’

    என்ற திருக்குறள் புலப்படுத்துகிறது. பெரிய புராணத்திலும்  கரும்புகலின் அருகில் நின்ற கடைசியர், அக்கரும்புகள், மூங்கில்போல்பருத்து  அடர்ந்து வளர்ந்திருப்பது  காடுபோல் இருப்பதாகக் கருதுகின்றனர். அதனைக்

    ‘’காடெலாம்  கழைக் கரும்பு ‘’

    என்ற தொடறால் சேக்கிழார் விளக்குகிறார்! இன்னும் சற்றே எட்டிப் பார்த்தால்  அங்குள்ள சோலைகளின் செடி ,கொடிகளில் உள்ள சிறுகிளைகளாகிய குழைகளில்  இலைகள் தளிர்த்து அரும்புவது தோன்றுகின்றது! இதனைக்

    ‘’  காவெல்லாம் குழைக்கு  அரும்பு’’

    என்று சேக்கிழார் பாடுகிறார். அதன்பின்னர் சற்றுத் தொலைவில் தெரியும் , வயல் நீரில்  கருமையான குவளைப்பூக்கள் மலர்கின்றன. அதனை அடுத்துள்ள நீரில், சங்குகள் நெருங்கி யுள்ளன! இதனைச் சேக்கிழார்,

    ‘’மாடெல்லாம்  கருங்குவளை, வயலெல்லாம் நெருங்கும் வளை ‘’

    எனப்படுகிறார்! அவற்றை அடுத்து வெளியில் தெரியும் மரக்கிளைகளில்  மென்மையான அன்னங்கள் அமர்ந்திருக்கின்றன! அவற்றை அடுத்துப் புறத்தே தெரியும் குளங்களில்    எங்கெங்கும்  கடலன்னங்கள் எனப்படும் நாரைகள்  விளங்குகின்றன! இதனை,

    ‘’கோடெல்லாம் மடவன்னம்,  குளமெல்லாம்  கடலன்னம் ‘’

    என்று புலவர் பாடுகின்றார். அதனையும் அடுத்து பக்கத்து நாடுகளை அப்பெண்கள் பார்க்கின்றனர்! அந்த நாடுகளை  நீர்வளம் பெருகிய சோழநாடு என்று கருதுகின்றனர்;  அதற்கும் அப்புறத்தே உள்ள நாடுகள் இச்சோழ நாட்டுக்கு இணையானவை அல்ல! என்றும் கருதுகின்றனர்! இதனைச் சேக்கிழார் ,

    ‘’நாடெல்லாம் நீர்நாடு  தனையொவ்வா  நலமெங்கும் ‘’

    என்கிறார். இனி முழுப் பாடலையும் காண்போம் ,

    ‘’காடெல்லாம்  கழைக்கரும்பு  காவெல்லாம்  குழைக்கரும்பு

     மாடெல்லாம்  கருங்குவளை  வயலெல்லாம்  நெருங்குவளை

     கோடெல்லாம் மடவண்ணம்  குளமெல்லாம்  கடலன்னம்

     நாடெல்லாம்  நீர்நாடு  தனையொவ்வா  நலமெல்லாம்!’’

    இப்பாடல் அருகிலிருந்து தொலைவில் பார்க்கும் நிலையைத் தெளிவாக்கு கின்றது.முதலில் கரும்பு வயல்,பின்னர் சோலைகளில் அரும்பும் குழைகள்,அடுத்து வயல்கள், அடுத்து வரப்புகள் , அடுத்து குளங்கள்,அடுத்து சோழ நாடு , அடுத்து உலகநாடுகள்  புலனாகின்றன.

    இதில் சிந்தாந்தம் குறிக்கும் தியான நிலையை உய்த்துணரலாம். தியானம் செய்யும் போது அனைத்தும் உள்ளே ஒடுங்கி இறைமையை யோக நிலையில் அருகில் உணரலாம். அந்த ஒடுக்கத்தினுள், வெளிப்பிரபஞ்சம் யாவும் அடங்கி நிற்கும்! அதில் வெளியில் உள்ள பிரபஞ்ச தரிசனம் கிட்டும். உள்ளிருந்தே புறமெங்கும் கண்டறியும் சித்தி, தியான யோகத்தினர்க்கு  வாய்க்கும் என்ற தத்துவ உண்மையை, தெய்வச் சேக்கிழார் ஸ்வாமிகள் இப்பாடல் மூலம்  விளக்கியருளுகின்றார்.

    ========================================================================

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 21

    -மேகலா இராமமூர்த்தி

    திருக்குறள், அறம் பொருள் இன்பம் எனும் முப்பொருளும் பேசுவதுபோலவே நாலடியும் இவை மூன்றையும் பேசுகின்றது. இங்கே காமம் என்பதே இன்பம் எனும் பெயரால் சுட்டப்படுவது என்பதறிக. வள்ளுவத்தில் காமம் 25 அதிகாரங்களில் விரிவாகப் பேசப்படுகின்றது. ஆனால் நாலடி பல்தரப்பட்ட காமஞ்சார் செய்திகளையும் ஒரே அதிகாரத்தில் சுருக்கமாய்ப் பேசிவிடுகின்றது.

    அவற்றில் சில நம் கவனத்துக்கு…

    முயங்காக்காற் பாயும் பசலைமற் றூடி
    உயங்காக்கால் உப்பின்றாம் காமம் – வயங்கோதம்
    நில்லாத் திரையலைக்கும் நீள்கழித் தண்சேர்ப்ப!
    புல்லாப் புலப்பதோர் ஆறு.
    (நாலடி – 391)

    தலைவியைத் தழுவாவிடின் அவளுடம்பில் பசலை நிறம் பரவும்; ஆனால் இடையிடையே அவள் ஊடல் கொள்ளாவிடில் காமச் சுவை குன்றும். ஆகலின், அலைகள் நில்லாது அலைத்துக்கொண்டிருக்கும் நீண்ட கழியினை உடைய குளிர்ந்த துறைவனே! ஊடுதலும் பின் கூடுதலுமே காமத்துக்கு இனிய நெறியாகும் என்று வாயில் நேர்ந்த தோழி, தலைமகளின் ஊடல் தவிர்த்துக் கூடிய தலைமகற்குக்  கூறியது இது எனும் குறிப்பு இப்பாடலில் காணப்படுகின்றது.

    புலவி என்று சொல்லப்படும் ஊடல் காமத்துக்குச் சுவையூட்டும் உப்பாகும்; அதுவே அளவுகடந்து சென்றால் சுவைகெட்டுத் தப்பாகும். இதனையே வள்ளுவர்,

    உப்பமைந் தற்றால் புலவி அதுசிறிது
    மிக்கற்றால் நீள விடல்.
    (1302) என்றுணர்த்தினார்.

    அதுபோன்றே,

    ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம்
    கூடி முயங்கப் பெறின். (1330) என்று காமம் துய்க்கும் கலையைக் கருத்தாய்ச் சொன்னவரும் அவரே.

    மாலைக்காலம், தலைவனோடு கூடியிருக்கும் தலைவியர்க்கு இன்பத்தையும் அவனைப் பிரிந்திருக்கும் தலைவியர்க்கு அளவற்ற துன்பத்தையும் அளிக்கக்கூடியது.

    தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவியர்க்கு மாலைக்காலம் எத்தகு வருத்தத்தைத் தரும் என்பதைப் ‘பொழுதுகண்டு இரங்கல்’ எனுல் அதிகாரத்தில் வள்ளுவர் விளங்கவுரைப்பார். அதில், தலைவனை முதன்முறையாய்ப் பிரியும் தலைவி ஒருத்தி, தலைவனோடு தான் கூடியிருந்த காலத்தில் இம்மாலைக்காலம் இத்தகைய துன்பத்தைத் தரவல்லது என்று அறிந்திலேனே என்று வருந்துவதை, பெண்களின் உளவியலை நன்குணர்ந்தவராய், வள்ளுவர் வெளிப்படுத்தியிருக்கும் திறம் எண்ணி இன்புறத்தக்கது.

    மாலைநோய் செய்தல் மணந்தார் அகலாத
    காலை அறிந்த திலேன்
    . (1226)

    தலைவன்  தன்னைப் பிரிந்து பொருள்தேட விழைகின்றான் என்பதை அறிந்தாள் ஒரு தலைவி. அதன்பின்னர் அவள் செயற்பாடுகளில் தெரிந்த மாற்றத்தைக் கவனித்த தோழி, ”கம்மத்தொழில் செய்கின்ற மக்கள் தம் தொழிலை நிறுத்திக் கருவிகளை ஏறக்கட்டிச் சென்ற  மயங்கஞ் செய்யும் இம் மாலைப்பொழுதில், மலர்களை ஆராய்ந்து மாலை தொடுத்துக்கொண்டிருந்த  தலைவி, நின் பிரிவு கேட்டுத் தனது கையிலிருந்த மாலையை நழுவவிட்டுத் தலைவராகிய துணையைப் பிரிந்த மகளிர்க்கு இந்த மலர்மாலை என்ன பயன் தரும்?” என்று சொல்லி வருந்தி அழுவாளாயினள்” என்று தலைவனிடம் தலைவியின் உளநிலையை உணர்த்துகின்றாள். ஈண்டு அவள் நோக்கம் தலைவன் தன் செலவினைத் தவிர்க்க வேண்டும் என்பதே.

    கம்மஞ்செய் மாக்கள் கருவி ஒடுக்கிய
    மம்மர்கொள் மாலை மலராய்ந்து பூத்தொடுப்பாள்
    கைம்மாலை இட்டுக் கலுழ்ந்தாள் துணையில்லார்க்கு
    இம்மாலை என்செய்வ தென்று. 
    (நாலடி – 393) 

    அகநூல்களில் தலைமகன் தலைவியின் நலம் பாராட்டும் பாடல்களில் புலவர்களின் கற்பனைத் திறன் கொடிகட்டிப் பறப்பதைக் காணலாம். அவ்வரிசையில் நாலடியின் ஆசிரியர்களும் எம் கற்பனைத் திறன் யார்க்கும் குறைந்ததன்று என்று பொற்போடு நிறுவியிருக்கும் பாடலை அடுத்துக் காண்போம்.

    கண்கயல் என்னுங் கருத்தினால் காதலி
    பின்சென்றது அம்ம சிறுசிரல் – பின்சென்றும்
    ஊக்கி யெழுந்தும் எறிகல்லா ஒண்புருவங்
    கோட்டிய வில்வாக் கறிந்து. 
    (நாலடி – 395)
     

    ”கண்களைக் கயல்மீன் என்று கருதிய கருத்தினால் அதனைக் குத்தித் தின்னும் பொருட்டு, நம் காதலியின் பின்னே சென்றது சிச்சிலி என்னுஞ் சிறிய மீன்குத்திப் பறவை. ஆனால் அவ்வாறு பின்சென்றும் அவளின் ஒள்ளிய புருவத்தைக் கண்டு இது வில்லின் வளைவென்று எண்ணிக் குத்தாமல் விட்டுவிட்டது” என்று  தன் கற்பனையை வி(வ)ரிக்கின்றான் தலைவன்.

    வள்ளுவத்திலும் தலைவன் தலைவியின் நலம் புனைந்துரைக்கும் பாடல்கள் நினைந்தின்புறத் தக்கவை.

    குறட் காதலனின் கற்பனை இது!

    வானத்தில் ஒளிவிடும் விண்மீன்கள் வெண்ணிலவைப் பார்த்தன; அப்படியே சற்றுக் குனிந்து புவியிலுள்ள பெண்ணிலவின் முகத்தையும் பார்த்தன.  அவ்வளவுதான்…உண்மையான மதி எது என்பதில் அவற்றிற்கே குழப்பம் வந்து மதிகலங்கிப் போயினவாம்!

    மதியும் மடந்தை முகனும் அறியாப்
    பதியிற் கலங்கிய மீன். (1116)

    நலம் பாராட்டும் அன்பினால் காமம் மாட்சிமைப்படும் என்பது நம்மனோரின் எண்ணம்.

    தலைவி ஒருத்தி தன் காதற் தலைவனோடு உடன்போக்கு மேற்கொண்டாள். அதனை அறிந்த செவிலித்தாய், தலைவியின் மென் தன்மையையும் அவள் கடந்துசென்ற பாதையின் வன்மையையும் நினைந்து கலங்கும் பாடலிது!

    அரக்காம்பல் நாறும்வாய் அம்மருங்கிற் கன்னோ
    பரற்கானம் ஆற்றின கொல்லோ – அரக்கார்ந்த
    பஞ்சிகொண் டூட்டினும் பையெனப் பையெனவென்று
    அஞ்சிப்பின் வாங்கும் அடி.  (நாலடி – 396)

    செந்நிறம் பொருந்திய ஆம்பல் மலரைப்போல நறுமணத்தோடு விளங்கும் வாயையும் அழகிய இடையையுமுடைய நம் புதல்விக்கு, அழகுக்காகச் செந்நிற மிக்க செம்பஞ்சிக் குழம்பைத் தடவினாலும் ‘மெதுவாக, மெதுவாக’ வென்று அஞ்சிக் கூறிப் பின் இழுத்துக்கொள்ளும் அத்துணை மெல்லிய பாதங்கள் தலைவனோடு உடன்போக்கிற் பிரிந்த இப்போது பரற்கற்களையுடைய கானத்திற் செல்லப் பொறுத்தனவோ? என்றெண்ணிக் கலங்குகின்றது அத் தாயுள்ளம்.

    தலைவியுடைய திருவாயின் நறுமணத்துக்கு ஆம்பல் மலரின் மணத்தைப் புலவோர் பலரும் ஒத்த மனத்தினராய்ச் சான்று காட்டியுள்ளனர். அவற்றில் சில…

    ஆம்ப னாறுந் தேம்பொதி துவர்வாய்  (குறுந்தொகை – 300)

    ஆம்பனா றமுதச் செவ்வாய் (சீவக. 561)

    ஆம்ப னாறுந் தேம்பொதி நறுவிரைத் தாமரைச் செவ்வாய் (சிலப். 4: 73-4)

    தலைவனோடு உடன்போக்கு மேற்கொள்ளத் தலைப்பட்டாள் மற்றொரு தலைவி. அதனை அறிந்த அவள் தோழி, மெல்லியளான இவள் இந்தக் கடுமையான காட்டுவழியில் எவ்வாறு நடந்துசெல்வாள் என்று ஐயுற்றுத் தலைவியிடமே அதுபற்றி வினவ, அதற்குத் தலைவி தந்த மறுமொழியே இப்பாடல்!

    கடக்கருங் கானத்துக் காளைபின் நாளை
    நடக்கவும் வல்லையோ என்றி – சுடர்த்தொடீஇ!
    பெற்றானொருவன் பெருங்குதிரை அந்நிலையே
    கற்றான் அஃதூரும் ஆறு. (நாலடி – 398)

    ”வன்மையுடையதும் யாருங் கடந்து செல்லுதற்குக் கடுமையானதுமான காட்டுவழியில் காளையாகிய தலைவன் பின்னே நாளை நீ உடன்போக்கில் நடந்து போகவும் வல்லமையுடையையோ என்று கேட்கின்ற சுடர்த் தொடியே! பெருமையிற் சிறந்த குதிரையொன்றினைப் பெற்றவனொருவன் அப்பொழுதே அதில் ஏறி ஊர்ந்துசெல்லும் நெறியைக் கற்றவனாகின்றான்” என்றாள் தலைவி.

    இங்கே அவள் உணர்த்துவது, உழுவலன்பினால் ஒன்றுபட்ட உள்ளம் அளப்பரும் ஆற்றலைப் பெறுகின்றது; அஃது எத்துணைக் கடுமையையும் தாங்கவல்லது என்பதே.

    நம் அன்றாட வாழ்வில்கூட, வலிமை குறைந்த கோழியானது தன் குஞ்சுகளை வலிய பருந்து கவர்ந்துசெல்ல முனையும்போது அதனைப் பறந்து தாக்குவதைப் பார்க்கமுடியும். அவசியமும் தேவையுமே வலியற்ற மனிதர்களையும் மகத்தான ஆற்றலாளர்களாக மாற்றுகின்றது என்பது மறுக்கவியலா உண்மை.

    [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்  பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

     

    Share
  • மீன்குளத்தி அம்மன் கோயில் வழிபாடு

    -முனைவர் ரா.திவ்யா

    திருக்கோயில் அமைப்பில் தமிழகக்கோயில்கள் சிறந்து விளங்குகின்றன.  அதுபோலவே, கேரள மாநிலத்தில் அமைந்துள்ள கோயில்களும் தனித்தன்மையுடன் சிறப்புப்பெற்று விளங்குகின்றன.  தமிழகக் கோயில் அமைப்புக்கும் கேரளக் கோயில் அமைப்புக்கும் வேறுபாடு உள்ளமை யாவரும் அறிந்த ஒன்றாகும்.  கேரளாவில் பத்மநாபன் கோயில், குருவாயூர் கோயில், சபரிமலைக் கோயில், கொடுங்கலூர் பகவதி அம்மன் கோயில் ஆகியவை பெரும்புகழ் பெற்று விளங்குகின்றன.

    வரலாறு

    ஏறத்தாழ பல ஆண்டுகளுக்கு முன்னர் பிற இடங்களுக்குப் பிழைப்பைத் தேடி முதியவர் ஒருவர் கேரளாவிற்கு நடைப்பயணமாகி வந்து சேர்ந்தார்.  அவர்கள் வீரசைவ வேளாள மன்னாடியார் வகுப்பைச் சேர்ந்த மூன்று தாய் வழிக் குடும்பத்தார் ஆவார்கள்.  அம்முதியவர் தொழிலுக்காக எங்கு சென்றாலும் அந்நாட்களில் எல்லாம் தங்களது தெய்வமான மீனாட்சி அம்மனைத் தரிசித்து விட்டே செல்வார்.  பின்னைய நாளிலெல்லாம் தனக்கு வயதானதால் அடிக்கடிப் போக முடிவதில்லை.  ஒரு சமயம் அம்மனைத் தரிசித்து உன்னை வணங்க இனி வரமுடியாது என்று வருந்திக் கொண்டு சிறு மூட்டையும், குடையும் எடுத்தவாறு நடந்து வந்தார்.  சிறிது தூரமாக நடந்த பின் அவருக்குத் தண்ணீர்த் தாகம் ஏற்பட்டது. அங்கிருந்த குளத்தின் அருகிலே மூட்டையையும், குடையையும் வைத்துவிட்டு, தண்ணீர்க் குடிக்கச் சென்றார்.  சிறிது நேரம் கழித்து அம்மனை நினைத்துக் கொண்டு மூட்டையைத் தோளிலே போட்டு, குடையைத் தூக்க, அது நகராததை எண்ணினார்.  அங்கு விளையாடுகின்ற சிறுவர்களை அழைத்துப் பார்க்கச் சொல்லி அங்கு வாழுகின்ற மக்களை அழைத்தார்.  அங்கு குடியிருப்பது அம்மன் மீனாட்சியே எனக் கூறினார்கள்.  அங்குள்ள இடங்களுக்கெல்லாம் இச்செய்தியானது பரவியது.  அம்மன் குடியிருந்த காரணத்தால் அவ்விடமானது குடமந்து எனப் பெயர்பெற்றது. என்று தகவலாளி அம்மன் வந்த வரலாற்றினைக் கூறுகிறார்.  இந்நாளில் குடமந்து என்ற பெயரானது மருவி கொடுமந்து எனப் பெயர் பெற்றது. இக்கொடுமந்து என்ற இடத்தில் தான் அம்மன் எண்ணூறு ஆண்டுகளாக எழுந்தருளியுள்ளதாகக் கூறுகின்றனர்.

    கோயில் பெயர்க்காரணம்

    இக்கோயிலில் மீன்கள் மிகுந்து காணப்படுகின்றன.  இங்குள்ள மீன்களுக்கு “மீனூட்டு” நிகழ்ச்சி நடைபெறும்.  “மீன்கள் குளத்தில் அதிகமாக இருப்பதால் மீன்குளத்தி அம்மன் என்று பெயர் வந்தது” எனக் குறிப்பிடுகிறார்.

    “குளத்தில் மீன் இருப்பது, அம்மன் மதுரையில் இருந்து வந்தாள்.  அம்மதுரையை பாண்டியன் ஆண்டு கொண்டிருந்தான்.  அவனுடைய கொடி மீன் கொடி என்பதாலே இக்குளத்தில் மீன்கள் வளர்கிறது” என்ற (தக.நடராஜ்) கருத்தினைக் குறிப்பிடுகிறார்.

    தகவலாளிப் பெயர்ப்பட்டியல்

    1. தக.நடராஜ் – பல்லசேனா
    2. வசந்தி – கோயமுத்தூர்
    3. தாமஸ் – பொள்ளாச்சி

    *****

    கட்டுரையாளர் – உதவிப் பேராசிரியர்,
    ஸ்ரீ சரஸ்வதி தியாகராஜா கல்லூரி,
    பொள்ளாச்சி.

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் – 129

    நிர்மலா ராகவன்

    நிறைவுகளைப் பட்டியலிடுங்கள்

    எப்போதும் மகிழ்ச்சியின்றியே காணப்படுகிறவர்கள் யார்மேலாவது குற்றம் கண்டுபிடித்துக்கொண்டே இருப்பார்கள். அப்படி ஒருவரும் அன்று அகப்படவில்லையா? `எனக்கு அதிர்ஷ்டமே கிடையாது!’ என்று தம்மையே குறை கூறிக்கொண்டு இருப்பார்கள்.

    எவரிடமாவது தம் குறைகளைச் சொல்லிக்கொண்டால் வேதனை குறைகிறது என்று நினைத்தவர்களாகப் பலரும் தம் பாரத்தைப் பிறர் தலையில் ஏற்றிவைப்பார்கள். சொல்பவருக்கு மனம் எளிதாக ஆகிறதோ, என்னவோ, கேட்க நேர்ந்தவருக்கும் தாமே அனுபவித்ததுபோன்ற உணர்வு ஏற்பட, அவரது மகிழ்ச்சியும் குன்றிவிடும்.

    கதை

    சிறு வயதிலேயே தாயை இழந்த பத்மாசனி தந்தையின் செல்ல மகளாக வளர்ந்தவள். புக்ககத்திற்குப் போனபோது, அவள் உலகமே மாறிவிட்டது போலிருந்தது. படுத்த நிலையிலேயே ஓயாது அதிகாரம் செய்த மாமியாரை எப்படிச் சமாளிப்பது என்று புரியவில்லை.

    அடிக்கடி தன் சகோதரனின் பிறந்தகத்திற்கு வந்து, மாமியாரைப்பற்றியே பேசிக்கொண்டிருப்பாள். பிறரது முகத்திலும் வருத்தம் தென்படுவது ஆறுதலாக இருக்கும்.

    அருமையாக வளர்ந்த பெண்ணை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று யாருக்கும் புரியவில்லை. அவளுடைய சோகம் வீட்டிலிருந்தவர்களையும் ஓரளவு பற்றிக்கொண்டது.

    `இவர்களாவது நம்மைப் புரிந்துகொண்டு, நம்மீது அன்பு செலுத்துகிறார்களே!’ என்று நினத்தவள்போல், அதையே வழக்கமாகக் கொண்டாள் பத்மாசனி. வரும்போதெல்லாம் மாமியாரைப்பற்றிய புகார்தான்.

    இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த நான், “தன் வீட்டில் நிம்மதியே இல்லை என்றுதான் இங்கு வருகிறாள். ஆனால், மாமியாரைப்பற்றியே புகார் செய்துகொண்டிருந்தால், நிம்மதி எப்படிக் கிடைக்கும்? பேச்சை மாற்றிவிடுங்கள்!” என்று உபாயம் கூறினேன்.

    இம்முறையால் சம்பந்தப்பட்ட எல்லாருக்கும் சற்று நிம்மதி கிடைக்கும்.

    மாமியார் மட்டுமின்றி, பெற்ற குழந்தைகளைப்பற்றிகூட புகார் செய்யும் தாய்மார்கள் உண்டு.

    கதை: போட்டா போட்டி

    பாலம்மா தன் ஒரே மகளின் வீட்டுக்குப் போயிருந்தாள். அங்கு பெண்ணின் மாமியாரும் தங்கியிருக்க, குழந்தை வளர்ப்பிலிருந்து சமையல்வரை இரு தாய்மார்களுக்கும் மறைமுகமான போட்டி.

    `ஏனடா போனோம்!’ என்றாகிவிட்டது பெண்ணைப் பெற்றவளுக்கு. முகத்தைச் சுளித்துக்கொண்டு, “ஐயே! யாராவது பெண்வீட்டில் போய் தங்குவார்களா!” என்று அடிக்கடி சொல்ல ஆரம்பித்தாள்.

    தனக்கு ஒரு பெண் இருப்பதால்தானே இப்படி அவதிப்பட நேர்ந்தது என்று நினைக்க ஆரம்பித்தவள்போல், அவளைப்பற்றியும் ஓயாது குறை கூற ஆரம்பித்தாள்.

    அவளது புலம்பலைச் சகிக்க முடியவில்லை உறவினருக்கு.

    “நீ ஏன் சும்மா அதையே சொல்றே? எல்லாக் குழந்தைகளும் அப்படித்தான்!” என்று ஒருத்தி கூறி, அவள் வாயை அடைத்தாள்.

    நானும் அப்படித்தான்!

    கவுன்செலிங் செய்யும்போது, `எங்கள் குடும்பத்திலும் இப்படித்தான் நடக்கிறது!’ என்று கூறுவது உடனே பலனளிக்கும். `நான் மட்டும் தனியாக கஷ்டப்படவில்லை,’ என்ற நிம்மதி எழ, புகார் செய்பவர் சற்று அடங்குவார்.

    எல்லாருக்கும் நிகழ்காலத்தில் பெரிதாக எந்த பிரச்னையும் இருப்பதில்லை. இருந்தாலும், எதைப்பற்றியாவது யோசித்து, குறை கூறி, அனுதாபம் தேடுவது சிலரது குணம். அவர்களைப் பொறுத்தவரை, அனுதாபமும் அன்பும் ஒன்று.

    `அலுவலக நண்பர்கள் படுத்தும் பாடு..!’

    அவர்களைவிட்டு விலக வேண்டியதுதானே! நம் நிம்மதியைக் கெடுக்க நினைப்பவர்கள் நண்பர்களே இல்லை.

    “இந்த அரசியல்வாதிகள் செய்யும் அக்கிரமம்..!’

    பிறரைப்பற்றி அவர்பின்னால் பேசினால் அவர் மாறுவாரா, என்ன! நம் நிம்மதிதான் கெடும்.

    `நான் சிறுவயதில் பட்ட துயரம் இருக்கிறதே..! சிரிப்பே கிடையாது!’

    இன்று அதைப்பற்றிப் பேசினாற்போல், என்றோ நடந்தது மாறிவிடப்போகிறதா?

    சிறு வயதில் சிரிப்புதான் முக்கியம்

    பிற்கால வாழ்க்கையில் எந்த இடர் வந்தாலும், அதைத் தாங்கும் சக்தி அளிக்கவல்லது சிறுவயதில் ஒருவர் அனுபவிக்கும் மகிழ்ச்சி. இது புரியாது, படிப்பு, பணம், பதவி என்ற நோக்கத்துடன் குழந்தைகளை விரட்டிக்கொண்டே இருந்தால், அவர்கள் வாழ்க்கையில் எவ்வளவு முன்னேறினாலும், என்ன அடைந்தாலும், சிரிப்பு மட்டும் அண்டாது.

    கதை

    பெற்றோர் அண்ணன்மார்களை மட்டும் படிக்க வைத்துவிட்டார்களே, தான் பட்டதாரி இல்லையே என்ற பெருங்குறை ரதிமலருக்கு. பிற பட்டதாரி ஆசிரியைகளுடன் காரணமின்றி சண்டை பிடித்துக்கொண்டிருப்பாள். தன் மகள் அனுசூயாவாவது படிப்பில் எல்லாரையும் மிஞ்சவேண்டும் என்ற வெறியே வந்துவிட்டது அவளுக்கு.

    நிறைய மதிப்பெண்கள் வாங்காவிட்டால், அறையில் பூட்டிவைப்பது, பட்டினி போடுவது என்று பலவாறாக மகளுக்குத் தண்டனை அளித்திருக்கிறாள் ரதிமலர்.

    என் மகளுடன் ஒன்றாகப் படித்துவந்தவள் மகள் அனுசூயா. தினமும் தன் தாய் செய்யும் கொடுமைகளைச் சொல்லி வருந்துவாளாம்.

    பதினாறு வயதான என் மகளுக்கோ, தோழிக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை. என்னிடம் ஆலோசனை கேட்டாள்.

    “எங்கம்மாவும் அப்படித்தான்! என்று சொல்லி வை,” என்றேன்.

    உடனே, “நீ அப்படி இல்லை என்று அவளுக்குத் தெரியும்!” என்றாள்.

    (பள்ளிப் பருவத்தில் வற்புறுத்தி எந்நேரமும் படிக்கவைத்தால், பிற்காலத்தில் புத்தகம் என்றாலே ஒரு வித பயம், அருவருப்பு ஏற்பட்டுவிடும் என்பதை என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்).

    எட்டாம் வகுப்பின் அரசாங்கப் பரீட்சையில் நிறைய மதிப்பெண்கள் வாங்கி தாயை மகிழ்வித்த அனுசூயா அடுத்த ஆண்டில் அதற்கு எதிர்மாறாக எல்லாவற்றிலும் தோல்வியுற, தலைமை ஆசிரியை விழித்துக்கொண்டாள். அப்பெண்ணை அழைத்து விசாரிக்க, அவள் கதறியபடி தன் தாயின் போக்கை விவரித்தாளாம்.

    இன்று அனுசூயா நிறையப் படித்து, நல்ல உத்தியோகத்தில் இருக்கிறாள்.

    மகிழ்ச்சி?

    சிறு வயதில் இழந்தது மீண்டும் கிடைக்குமா?

    கற்பித்தலும் சுதந்திரமும்

    சிறு வயதில் தம் குழந்தைகள் பக்கத்திலேயே உட்கார்ந்து ஒவ்வொரு பாடத்தையும் சொல்லிக்கொடுக்கும் தாய்மார்கள் அவர்களுக்குச் சுதந்திர உணர்வு அவசியம் என்பதைப் புரிந்துகொள்வதில்லை.

    சிலருக்கு இடைநிலைப்பள்ளியில் படிக்கும் குழந்தைக்குக் கற்பிக்கத் தெரியாமல் போகலாம். அப்போது தானே எதையும் சமாளிக்கத் தெரியாது அல்லல் படுவார்கள் சிறுவர்கள்.

    கதை

    “என் காலத்தில் கல்வி வித்தியாசம். இல்லையா?” என்றாள் என்னைப் பார்க்க வந்த ஒரு தாய்.

    நான் சும்மா தலையாட்டி வைத்தேன். மகன் அமீர் படிப்பில் சுமார் என்ற வருத்தம் அவளுக்கு என்பது புரிந்தது.

    “எனக்கு அவனுக்குச் சொல்லிக்கொடுக்கத் தெரியவில்லை,” என்றாள் பரிதாபகரமாக. நான் அவளைக் குற்றம் சொல்லிவிடுவேனோ என்ற அச்சம் அவளுக்கு.

    “சும்மா பக்கத்தில் உட்கார்ந்துகொள்ளுங்கள். அது போதும். அவன் ஏதாவது விவரித்தால் கேட்டுக்கொள்ளுங்கள்,” என்றேன்.

    `அம்மாவுக்கு நம் நலனில் ஆர்வம் இருக்கிறது!’ என்று ஏற்படும் உற்சாகமே ஒரு சிறுவனை முன்னுக்குக் கொண்டுவந்துவிடும். தீய நட்பை நாடாத குணம் வரும்.

    ஓரிரு மாதங்களிலேயே அமீரிடம் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. படிப்பில் ஆர்வம் மிகுந்து, கலகலப்பாக ஆனான்.

    கவலையே இல்லாதவர்களோ?

    உம்மணாமூஞ்சிகளாக இருப்பவர்கள், சிரித்த முகத்துடன் காணப்படுகிறவர்களைப் பார்த்து `இவர்கள் வாழ்க்கையில் வருந்தத்தக்கதாக எதுவுமே நடந்திருக்காதா!’ என்று ஆச்சரியப்படுவார்கள்.

    உண்மையில், துன்பத்தையும் துயரத்தையும் அனுபவிக்காதவர்களே கிடையாது. அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதில்தான் சூட்சுமம் அடங்கியிருக்கிறது.

    மன இறுக்கமா?

    ஒருவருக்குத் தன்னையே பிடித்துப்போனால், பிறரது வித்தியாசத்தைப் பெரிதுபடுத்தி, நொந்துபோக மாட்டார். தங்களிடமும் சிறிது கருணையும், அன்பும் காட்டலாமே!

    காற்றாட வெளியில் போவது, நல்ல புத்தகங்களைப் படிப்பது, இனிய இசையைக் கேட்பது, நண்பர்களுடன் உறவாடுவது, நறுமணமுள்ள மலர்களை முகர்வது – இப்படி எத்தனை வழிகள் இல்லை, நிம்மதி அளிக்க!

    மாமியாரைக் குறைகூறியபடி இருந்த பத்மாசனிக்கு ஆதரவான கணவர், அன்பும் அறிவுமாக இருந்த பிள்ளைகள், பணத்தட்டுப்பாடு இல்லாத வாழ்க்கை எல்லாமே கிட்டியிருந்தன. இவைகளை எண்ணி திருப்தி அடைந்திருக்கலாமே! கிடைக்காத ஒன்றுக்காக அநாவசியமாக நோவானேன்!

    உங்களிடம் இருக்கும் நிறைவுகளைப் பட்டியலிடுங்கள். குறைகளை அல்ல.

    தொடருவோம்

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே  38

    க.பாலசுப்பிரமணியன்

    தோல்விகள் நமக்கு என்ன சொல்லித் தருகின்றன?

     தோல்விகளும் தவறுகளும் கற்றலுக்கு அடிப்படை எனக் கருதப்படுகிறது. தோல்விகளைக்கண்டு துவளாமல் தவறுகளைக்கண்டு கலங்காமல் அவற்றிற்கான அடிப்படைக் காரணங்களை அறிந்து அந்தத் தவறுகளைத் திருத்திக்கொண்டு முன்னேற்றப் பாதையில் அடுத்த அடியை வைப்பதே வாழ்க்கையின் வெற்றிக்கு உத்திரவாதம் தரும். மாறாக, நமது கல்வித் திட்டங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் தவறுகளை சுட்டிக்காட்டி ஒருவரை அவமானப் படுத்துவதும் தரக்குறைவாக நினைப்பதும் வழக்கமாக ஆகிவிட்டது..  தவறுகள் ஏற்படக் காரணம்  என்ன, அதற்கு அலட்சியம் காரணமா, அறிதல் புரிதலில் குறைபாடுகளா , ஒருவரின் சிந்தனையில் ஏற்பட்ட குறைபாடுகளா அல்லது ஒருவரின் அணுகுமுறையில் இருக்கின்ற குறைபாடுகளா என அலசி ஆராய்ந்து அவற்றை திருத்த முயற்சிக்க வேண்டும்

    உலகின் மிகச் சிறந்த அறிவியல் மேதை ஐசாக் நியூட்டன் பல முறைகள் தவறு செய்து வெற்றிகண்ட பின் தன்னுடைய வெற்றியை பாராட்டியவகளிடம் ” இப்பொழுது  999 முறைகளில் எவ்வாறு இதைச் செய்யக்கூடாது என்பதை நான் அறிந்து கொண்டேன்” என்று தனது தவறுகளே வெற்றிக்கு வழிகாட்டியது என்பதைத் தெள்ளத்தெளிவாக விளக்கிக் கூறினார் .இதே கருத்தின் பிரதிபலிப்பை நாம் ஐன்ஸ்டீன் போன்ற பல மேதைகளின் வாழ்க்கை வரலாறுகள் மூலம் அறிந்துகொள்கின்றோம். எனவே தவறுகள் ஒரு மனிதனின் வாழ்க்கையில் பல நேரங்களில் ஏற்பட வாய்ப்புக்கள் உண்டு. ஆனால் தன் தவறுகளைத் திருத்திக் கொள்ளாத மனிதன் ஒரு மூடனாக கருதப்படுகின்றான்.

    நாமெல்லாம் உலகம் போற்றும் நோபல் பரிசுகளை பற்றி கேள்விப்பட்டிருக்கின்றோம்.  இந்தப் பரிசினைப் பெற்றவர்களை உலகம் போற்றும் அறிவாளிகளாகக் கருதுகின்றோம். இந்தப் பரிசை நிறுவிய ஆல்பிரேட் நோபல் அவர்களின் பின்னணி என்ன?

    ஆல்பிரேட் நோபல் ஒரு மிகச் சிறந்த அறிவியல் மேதை. அவர் இரண்டாம் உலகப் போரின் பொழுது ட்ரை நைட்ரோ கிலிசரின் (Tri-Nitroglycerine) என்ற ஒரு வேதியல் பொருளால் தயாரிக்கப்பட்ட (dynamite) டைனமைட் என்ற பொருளைக் கண்டுபிடித்தார் அது  ஒரு வெடிமருந்தாக உபயோகப் படுத்தப் பட்டது. இதன் காரணமாக பல வீரர்கள் போர்க்களத்தில் உயிரிழந்தனர். அதனால் இவருடைய வேதியல் பொருளின் தேவை அதிகமானது. இவரால் நினைத்துப் பார்க்கமுடியாத அளவுக்கு பொருள் சேர்க்க முடிந்தது. ஒரு நாள் காலை அவர் வாழ்ந்த நகரத்தில் உள்ள காலைப் பத்திரிகையில் “மரணத்தின் தூதர் ” என்ற தலைப்பில் ஒரு இரங்கல் செய்தியும் அத்துடன் இவரது படமும் வெளியிடப்பட்டிருந்தது. அதைக் கண்ட நோபல் தன்னுடைய கண்டுபிடிப்பு எவ்வளவு தவறானது, அதனால் எப்படிப்பட்ட துன்பங்கள் மனிதர்களுக்கு ஏற்பட்டுள்ளன என்று சற்றே சிந்தித்தார். மனம் மாறி தன்னுடைய சொத்து முழுவதையும் உலக நன்மைக்குப் பயன்படும் பல்வேறு ஆராய்ச்சிகளுக்கு உதவும் வகையிலும் அதைச்செய்தவர்களை பாராட்டிப் போற்றும் வகையிலும் ஒரு நிறுவனத்தைத் தொடங்கி அதற்க்குக் கொடுத்துவிட்டார். சில நேரங்களில் தங்கள் தவறுகளை உணர்ந்தவர்கள் ஏற்படுத்திய மாற்றங்களையும் விந்தைகளை சொல்லவும் முடியுமோ ?

    கலிங்கத்துப் போரில் வெற்றிகொண்ட மாமன்னன் அசோகன் மனம் மாறி அமைதியையும் ஆக்க பூர்வமான அரசாட்சியையும் மேற்கொண்டது யாவரும் அறிந்ததே ! பல நேரங்களில் தவறுகள் குறுகிய சிந்தனைகளாலும்  தான் என்ற மமதையினாலும், ஆணவப் போக்கினாலும், அளவற்ற ஆசைகளாலும் ஏற்படுகின்றன. இது ஒரு சராசரி மனிதனின் வாழ்க்கையில் நித்தம் நடக்கும் செயல்களில் வெளிப்படுகின்றன. இவைகளைக் கட்டுப்படுத்தி நாம் பொதுநலச் சிந்தனையோடு எவ்வாறு வாழ முடியும் என்று சிந்திக்க வேண்டும். அதுவே ஒரு சிறந்த வாழ்க்கைக்கு அறிகுறி.

    இந்த மாற்றங்களை வாழ்க்கையில் கொண்டு வருவது  ஒரு முடியாத செயலல்ல. ஆனால் இதற்கு மனத்தளவில் மாற்றமும் முயற்சியும் தேவை. இந்த மாற்றங்கள் மனித உணர்வுகளோடு சம்பந்தப்பட்டவை. எனவே உணர்வுகளின் தாக்கங்களை அறிந்து மாற்றங்களை செயல் படுத்துதல் மிக அவசியம். உலக அளவில் புகழ்பெற்ற ஜென் துறவி லா- ட்சு என்பவர் கூறுகின்றார்  ” மற்றவர்களை வெல்வதற்குப் படை வேண்டும். நம்மை நாமே வெல்வதற்கு வலிமை வேண்டும்.”

    தோல்விகளிலிருந்து நம்மை விடுவித்துக்கொண்டு வெற்றிப்பாதையில் நடைபோட வலிமை வேண்டும். இந்த வலிமையை நாம் எப்படிப் பெற முடியும்? தன்னம்பிக்கை, தன்னடக்கம், துணிவு, முயற்சி பொறுமை, நிதானம், செயல் திறன்கள் ஆகிய பல நம்முடைய வெற்றிக்கு முன்னோடியாக அமைகின்றன.

    சும்மாவா சொன்னாங்க “வெற்றி வேண்டுமா போட்டுப் பாரடா எதிர்நீச்சல்”

    நாமும் எதிர் நீச்சல் போட்டு வாழ்ந்து பார்க்கலாமே. …

    (தொடரும்)

    Share
  • இமோஜி வாழ்வு!

    சதீஷ் குமார் டோக்ரா

    நம் முன்னோர்கள் அகம்-புறம் என்று நம் மனதிற்குள் செயல்படும் உள்ளுணர்வுகளையும் வெளியில் செயல்படும் புற உலகையும் வகுத்தனர். அகத்தின் பாதிப்பினால் புறமும், புறத்தின் பாதிப்பினால் அகமும் மாறுபடுகின்றது. அப்படித்தான் கடந்த 20-30 ஆண்டுகளில் வெளியுலகத்தில் நிகழ்ந்த மாற்றங்கள் நமது உள் உணர்வுகளையும் மாற்றியமைத்துவிட்டன. இந்த மாற்றங்களில் மிக முக்கியமானதாக இருப்பது நம் சுயபிம்பத்தைப் பற்றி நாம் அளவுக்கு அதிகமாக கவலைப்படுவது. நான் குழந்தையாக இருந்தகாலத்தில் யாரும் தனது உண்மையான இயல்பை மறைத்துவிட்டு, தனக்கு சாதகமான ஒரு பிம்பத்தை வெளிக்காட்ட முயலமாட்டார்கள். தாம் எப்படி இருக்கிறோமோ அப்படியே மற்றவர்கள் தம்மைப் பார்க்கட்டும் என்கிற எளிமையோடு இருந்தார்கள். இதன் விளைவாக, ஒரு குறிப்பிட்ட குணாதிசயம் சிலரிடம் ஓங்கி நிற்கும். அதை வைத்துக்கொண்டே அந்த நபருக்கு நண்பர்கள் வட்டமோ அல்லது அறிமுகமானவர்கள் வட்டமோ ஒரு புனைப்பெயர் சூட்டிவிடுவார்கள். அந்த வகையில் அதிகமாகப் பேசுபவர் “லூசு” என்றும் எளிதாக ஏமாற்றப்படுபவர் “கோமாளி” என்றும் பெயர் பெறுவார்கள்.

    நான் பிறந்த மாநிலமான பஞ்சாப் மாநிலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தசராவுக்கு முன் ராமலீலா நடைபெறும். ராமபகவானின் முழு கதையையும் நாடகமாக மேடைகளில் நடித்துக் காட்டுவார்கள். இடையிடையே கொடை வழங்குபவர்களுக்கான விளம்பரங்கள் வரும். இதேபோல ஒரு விளம்பரத்தின்போது ஒருவர் பியாரா என்பவரின் கடையைக் குறிப்பிட்டு அங்கேதான் பொருள்கள் வாங்க வேண்டும். அங்கே தரமுள்ள பொருள்கள் கிடைக்கும் என்று விளம்பரம் செய்ய, அடுத்தவர், “எந்த பியாரா? அந்த லூசா?” என்று சொல்லிவிட, உடனே நாடகத்தின் இயக்குநர் அவசர அவசரமாக மேடைக்கு வந்து மன்னிப்பு கேட்டார்.

    ஆனால், வேடிக்கையான உண்மை என்னவென்றால் ஊரில் பியாரா என்ற பெயருடன் சுற்றிக்கொண்டிருந்த பதினைந்து நபர்களில் “லூசு” என்று சொன்னால்தான் இவருடைய அடையாளம் தெளிவாகும். ஏனென்றால் யாரும் அவரைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டதே இல்லை.

    சில வாரங்களுக்கு முன் என் 95-வயது சித்தி பஞ்சாபிலிருந்து வந்தார். சற்றே உணர்வுப்பூர்வமான விஷயமாக இருந்தால் கண்ணீர் விட்டு அழத்தொடங்குவார். மனதிற்குள் என்ன இருக்கிறதோ அதனை அப்படியே வெளிப்படுத்தும் எளிமையான சுபாவம் கொண்டவர். தன் இயல்பை மீறி போலி பிம்பத்தை வெளிப்படுத்தும் எந்த முயற்சியும் அவரிடம் இல்லை.

    கடந்த முப்பது ஆண்டுகளின் தலைமுறையினர் சுயபிம்பத்தைப் பற்றிய கவலைகளை அதிகம் கொண்டிருக்கிறார்கள். அதாவது எப்போது சிரிக்க வேண்டும், எப்போது அழ வேண்டும், எப்போது கோபப்பட வேண்டும், எவ்வளவு தூரத்திற்கு இந்த உணர்வுகளை வெளியில் காட்ட வேண்டுமென அந்தந்த சூழ்நிலைக்கேற்ப கணக்குப் போட்டுச் செய்கிறது இன்றைய தலைமுறை.

    என் குழந்தைப்பருவத்தில் ஆங்கில திரைப்படங்களில் ஒரு மரணம் நடந்து உடலடக்கம் நடைபெறும்போது பளபளப்பான துணிகளில் இரங்கல் தெரிவிக்க வந்திருப்பவர்களையும், இறந்தவரின் மனைவியையும் அநாதையாகியுள்ள மகனையும் சோகமாக ஆனால் அமைதியாக நின்றிருப்பதை நம் நாட்டில் இறப்பின்போது வீட்டு உறுப்பினர்கள் உருண்டு உருண்டு அழுவதுடன் ஒப்பிட்டு “நம் நாட்டினர் உணர்வுகளுக்கு அடிமையானவர்கள்” என்று மன்னிப்புத் தொனியில் கூறுவோம்.

    மேலை நாடுகளில் அன்றிலிருந்தது தொடரும் உணர்வுகளின் கட்டுப்பாடுகளுடன் வெளிப்படும் தேற்றத்தைக் காட்டும் வழக்கம் நம் நாட்டில் இன்னும் பரவவில்லை. உணர்வுகள் மனதிலும் உடலிலும் பரவி தண்ணீர் வடிந்து போவது போல் நீங்கிவிடும். இவ்வாறு உணர்வுகள் பரவி வடிந்து போவதை கிரேக்கர்கள் கதார்ஸிஸ் என்ற வருணிப்பார்கள். இப்பொழுது சுயபிம்பத்தைக் கெடுக்க விரும்பாத இளைஞர்கள் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் மனதிற்குள்ளேயே பொத்தி வைப்பதால் மனஉளைச்சல் ஏற்படுகின்றது.

    மகிழ்ச்சி எல்லையைத் தாண்டிப் போகும்போது பைத்தியமாக நடந்துகொள்ள மனம் துடிக்கிறது. சோகம் வரும்போது வெடித்து அழத் தோன்றுகிறது. ஆனால், நம் சுயபிம்பம் “அழாதே!” என்று கட்டளையிடுகிறது. முன்காலத்தில் அக்கம் பக்கத்து வீட்டிலுள்ள பெண்கள் ஒன்று கூடுவார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அனைவரின் மகிழ்விலும், சோகத்திலும் பங்குதாரர்களாக இருப்பார்கள்.

    இன்றைய உலகத்தில் மகிழ்ச்சியும் சோகமும் நம் தனிப்பட்ட சுமையாகிவிட்டது. அதைத் தனியாகவே சுமந்துகொண்டு போக வேண்டியுள்ளது.

    மற்றவர்கள் உங்கள் சுமையைப் பகிரும் வகையில் அதற்கு வசதியாக சமூக ஊடகங்கள் பலவிதமான இமோஜிகள் கொடுத்துள்ளன. முன்பு சோகம் விசாரிக்க நண்பர்கள் கூட்டம் வரும். இப்பொழுது இமோஜிகள் கூட்டம் வருகின்றன. சோகமான இமோஜியின் சோகமுகமும் மாறாது. அதன் கண்ணுக்கு சற்று கீழே வழியும் கண்ணீரும் வழிந்து கொண்டுதான் இருக்கும். என்றைக்கும் தன் சோகத்தைச் சிரிப்பாக மாற்றாத, வழியும் கண்ணீரைத் துடைக்காத உங்கள் நண்பரால் அனுப்பப்பட்ட அந்த இமோஜி உங்கள் கணினியின் தரையிலோ, கைபேசியின் திரையிலோ அமர்ந்து உங்கள் சோகத்தை நினைவுபடுத்திக்கொண்டே இருக்கும்.
    ============================================
    Read my websites:
    English: csprep.in
    http://kambaramayanam.in/index.html
    Tamil: dogratamil.com

    My contact number:
    +91 98400 93148

    Share
  • வல்லமை அன்பர்கள் சந்திப்பு 2018

    பவள சங்கரி

     

    வல்லமை அன்பர்கள் சந்திப்பு, 14.10.2018 ஞாயிறு அன்று பிற்பகல் 3 மணி முதல் 5 மணிவரை சென்னை அண்ணாநகரில், கீழ்க்கண்ட முகவரியில் நடைபெற உள்ளது.

    White Room for Scientific Tamil Development
    Manavai Mustafa Scientific Tamil Foundation Trust
    AE 103, 6th Street, 10th Main Road
    Anna nagar West, Chennai – 600040
    https://goo.gl/maps/8qNo5AEvEgN2

    பொது அறிமுகத்திற்குப் பிறகு, செய்த, செய்ய வேண்டிய பணிகளைப் பற்றி ஆலோசிப்போம். வல்லமையில் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட விரும்புவோர், அது குறித்து இந்தச் சந்திப்பில் நேரில் கேட்டறியலாம்.

    இந்த நிகழ்வில் பங்கேற்போர், தங்கள் வருகையை vallamaieditor@gmail.com என்ற முகவரியில் உறுதி செய்யுங்கள். வாருங்கள்! சந்திப்போம்! உரையாடுவோம்! ஆக்கபூர்வமாகச் செயல்படுவோம்!

    Share
  • சேக்கிழார்  பா நயம் – 6

    திருச்சி  புலவர் இரா.இராமமூர்த்தி

    ————————————————————

     

    திருக்குறளில் காமத்துப் பாலில் , பாடல் ஒன்றுண்டு! அக்குறட்பாவில் தலைவன் தலைவியை சற்றுத் தொலைவிலிருந்து பார்க்கிறான்! அங்கிருந்த உருவத்தை,  தெய்வத் தன்மை வாய்ந்த அணங்கோ? அழகிய மயிலோ? என்று காட்சி யளவில் கருதுகிறான். இதுவரை தான் கண்டறியாத கவர்ச்சியும், உருவும் கொண்டு தன்னை மயக்கும் உருவம் அணங்கோ?  என்று தொலைவிலிருந்து கண்ட அவன் எண்ணுகிறான்; பின்னர் இன்னும் நெருங்குகிறான்.  செடி கொடிகள் இடையே நிற்கும் அவள் உருவம் ஒயிலாக வளைந்து காணப்பெறுவதால் அழகிய மயிலோ? என்று எண்ணுகின்றான்; இன்னும் அருகே நெருங்கிய போது, அவள் முகமும் அவள்  செவியில் அசையும் குழைகளும்  புலப்படுகின்றன! ஓ! அவள் மானிடப் பெண்தான்! என்று எண்ணியவன் அவள் யாரோ? என்று ஆவலுடன் நோக்குகிறான்! இவ்வாறு தொலைவிலிருந்து அருகே வர வர அவனுக்குத் தோன்றும் ஐயங்கள் நம்மையும் ஆவல் கொள்ள வைக்கின்றன. இவ்வாறே பெரியபுராணத்திலும்  ஓர் அரிய பாடல் நம்மைக் கவர்கின்றது.

    திருவாரூரின்  இயற்க்கை வளத்தை விளக்கும் போது சேக்கிழார் தம் புலமை நலத்தால் நம்மை மகிழவும் நெகிழவும் வைக்கிறார்! அங்கே நெல்வயலைச் சூழ்ந்த சோலைகள்  மிகுந்த நிழலுடன் சற்றே இருண்டு  காட்சி யளிக்கின்றன. தொலைவிலிருந்து வரும் உழத்தியரின்  கண்களில் அச்சோலைகள் கரும்பு வயல் போலக்  காட்சி தருகின்றன! ஆனால் நெருங்கிக்  காணும்போது, வளமாகப் பெருத்து வளர்ந்த நெற்பயிர்களே, கரும்பு  போலத் தோன்றின என்கிறார்! அதனால் அங்கு வந்த அப்பெண்கள் ,’’கரும்பல்ல , நெல்! ‘’  என்று கூறி விடுகிறார்களாம். அங்கே  அடுத்து,  மிகுந்த வளத்தினால் பருத்துத் தோன்றிய கரும்புகள், பாக்கு மரங்களோ  என்று ஐயுற வைத்தனவாம்.உயர்ந்து வளர்ந்திருந்த கரும்புகள் , காண்பார் கண்முன் கமுக மரங்கள் போலக் கட்சி தந்தன! ஆனால் நெருங்கிக்  காணும்போதுதான் உழத்தியர், ’’கமுகல்ல; கரும்பு!’’ என்று கூறினார்களாம்.

    இவ்வாறு மக்கள் பிறழவுணர்ந்ததற்குப் பகலிருளே காரணம். அந்த  இருளின்  இடையில் நீலப்பூக்களின் அகவிதழ்களில் புகுந்து வண்டுகள் குடைவதால் எழுந்த மகரந்தப் பூந்துகளே பார்ப்போரை ஏமாற்றுகின்றன! இவ்வாறு கூறும் உழத்தியர் பூக்களைத் தொடுத்து அணிந்துள்ளனர் . அவர்களின் கூம்பிய கரங்கள் தாமரை போல் காட்சி யளிக்கின்றன. இதற்குமேலும் சேக்கிழாரின்  கற்பனை, அந்த உழத்தியரின் குரல் அமுதம் போல் உள்ளதாம்! இனி முழுப்பாடலையும் காண்போம்

    ‘’கரும்பல்ல   நெல்லென்னக்  கமுகல்ல  கரும்பென்ன

     சுரும்பல்லி   குடைநீலத்  துகளல்ல  பகலெல்லாம்

     அரும்பல்ல  முலையென்ன  அமுதல்ல   மொழியென்ன

     வரும்பல்லா  யிரங்கடைசி மடந்தையர்கள்  வயலெல்லாம் ‘’

    இப்பாடலில் கடைசியர் எனப்படும் உழத்தியர்கள் பல்லாயிரவர்  கூடி வயலெங்கும் நிறைந்து, நெல்லைக் கரும்பெனவும், கரும்பைக் கமுகு எனவும் பிறழ உணர்த்து கூவுகின்றனர். காரணம் , நீலப்பூக்களின் மகரந்தப் பூந்துகளே ஆகும்! அம்மகளிரின் கரங்கள் தாமரை போல் உள்ளன; அவர்தம்  குரல் அமுதம்போல் உள்ளதாம்!  இந்தக் கற்பனையின் மூலம் ‘’அளவை இயல்’’   (பிரமாணவியல்)  உண்மை ஒன்றினைச் சேக்கிழார் புலப்படுத்துகிறார்.

    தூரத்தே ஒரு பொருளைக் கண்டறிந்த  ஒருவன், மேலும் அணுகிக் கண்டபோது அப்பொருளின் தன்மைகள் மாறுபட்டிருப்பதால்    வேறொன்றாக உணர்கிறான்!

    இதில்   பிரத்தியட்சம் , அனுமானம், உவமானம், ஆகமம் என்ற நால்வகைப் பிரமாணங்கள் அமைந்துள்ளன! கரும்பு என்றும் , கமுகு என்றும் அனுமானம் செய்த பொருள்கள் பிரத்யட்சத்தில் நெல்லாகவும் கரும்பாகவும் இருக்கின்றன. உழத்தியர் குரல் அமுதம் போல் இருப்பதும் , கரங்கள் தாமரைபோல் இருப்பதும் உவமானம்! மயக்க உணர்வு வேறு, உண்மைநிலை வேறு என்ற ஆகம அளவையை  இப்பாடல் காட்டுகிறது!

    ========================================================================

    Share
  • மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகளில் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகள்

    -முனைவர் அரங்க.மணிமாறன்

    முன்னுரை:    

    சிறுகதை இலக்கியங்கள் தமிழ்மக்களின் ஓய்வுநேரங்களைச் சுகப்படுத்தவும் நன்னெறி ஊட்டவும் கற்பனைகளைக் கொட்டித்தீர்க்கவும் தொன்ம-புராணங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சொல்லவும் பயன்பட்டன.

    இன்றைய காலக்கட்டத்தில் சித்தாந்த வேதாந்த கருத்துக்களின் வெளிப்பாட்டுக் கருவியாகப் பயன்பட்டு வருவதை உணரமுடிகிறது. காலத் தேவைக்கேற்ப விடுதலைச் சிந்தனைகளையும் பெண்ணியச் சிந்தனைகளையும் சமுதாயத்தில் நிலவும் சாதியப் பொருளாதாரச் சிக்கல்களையும் இசங்களின் கருத்துவெளிப்பாடுகளையும் பொருண்மைகளாகக் கொண்டு விளங்குகின்றன.

    அத்தகைய சிறுகதை வரலாற்றில் மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகளில் வெளிப்படும் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகளை வெளிக்காட்டுவதாய் இக்கட்டுரை அமைகிறது.

    மேலாண்மை பொன்னுச்சாமி:

    மேலாண்மை பொன்னுச்சாமி விருதுநகர் மாவட்டம் மேலாண்மறை நாட்டில் பிறந்தவர். ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால் வாழ்வின் துன்பங்கள் கற்றுத்தந்த பாடங்களை நிறையவே படித்தவர். ஊரில் மளிகைக்கடை நடத்தியவர். பள்ளிப்படிப்பை நிறுத்தினாலும் சுயவிருப்பமாக இலக்கியங்களைக் கற்றுத்தேர்ந்தவர். கதை படைப்பிலக்கத்தில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு முப்பத்தாறு நூல்களைப் படைத்தளித்துள்ளார்.

    அன்னபாக்கியன் அன்னபாக்கியச்செல்வன் முதலிய புனைப்பெயர்களில் எழுதியவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளராக விளங்கியவர். இடதுசாரியச் சிந்தனையாளர்.

    இருபத்திரண்டு சிறுகதைநூல்கள், ஆறு நாவல்கள், ஆறு குறுநாவல்கள், ஒரு கட்டுரை நூல் என எழுத்துலகில் தடம்பதித்தவர். மனப்பூ சிறுகதைக்காகத் ‘தமிழக அரசின் விருது’ வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தின் ‘மாட்சிமை விருதும் கேடயமும்’ பெற்றவர். உயிர்காற்று சிறுகதைக்காக ‘பாரத ஸ்டேட் வங்கி விருதும்’ ‘கல்கி சிறுகதைப் போட்டி விருது’ ‘ஆனந்தவிகடன் பவளவிழா முத்திரைப்பரிசு’ பெற்றவர்.

    இவரது சிறுகதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டது. பாட்டையா சிறுகதை 12ஆம் வகுப்புப் பாடமாக அமைந்தது. இவரது சிறுகதைகளை ஆய்வுசெய்து பத்து இளநிலை ஆய்வும் நான்குபேர் முனைவர் பட்ட ஆய்வும் மேற்கொண்டு சிறப்பு அடைந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக 2007ஆம் ஆண்டு ’மின்சாரப்பூ’ சிறுகதை நூல் சாகித்திய அகடெமி விருதுபெற்றது.

    ‘சமரசமற்ற போர்க்குணம் மிக்க படைப்புகள்தாம் என் லட்சியம்’1 என்ற கொள்கையோடு எழுதிய மேலாண்மை பொன்னுச்சாமி 2017 அக்டோபர் 30 இல் மறைந்தார். ஆனால் அவருடைய சிந்தனைகளும் சித்தாந்தங்களும் என்றுமே அழியாமல் நிலைக்கும் என்பதில் ஐயமில்லை.

    சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகள்:

    இலக்கியங்கள் மனித சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக விளங்குகின்றன. மனிதன் ஒரு சமூகவிலங்கு. ஒரு மனிதன் பிறமனிதரோடு தொடர்புகொள்ளும்போது ஏற்படும் சிக்கல்கள் சமுதாயச் சிக்கல்களாகின்றன. ஒவ்வொரு காலத்திலும் ஒரு குறிப்பிட்ட நாகரிக அமைப்போடு இயைந்து மாற்றமடைந்து வந்திருக்கிறது சமுதாயம். சமுதாயம் (SOCIAL) எனும்சொல் குமுகாயம் எனும் சொல்லிலிருந்து, மனிதர்களின் கூட்டுவாழ்க்கையிலிருந்து உருவானதாகும்.

    “SOCIAL என்னும் சமுதாயத்தைக் குறிக்கும் SOCIETY என்னும் ஆங்கிலச்சொல் சமூகம் என்பதை குறிக்கும்.  SOCIAL என்னும் சொல்லோடு நெருங்கிய தொடர்புடையதாகும். எனவே மனிதனை விலங்கிலிருந்து பிரிப்பதே இந்தச் சமூகம் அல்லது சமுதாயம் என்ற சொல்தான்”2  என்கிறார் அ.மு.பரமுசிவானந்தம்.

    மனிதனை மனிதனோடு இணைத்து ஒரு சமூக அமைப்பை உருவாக்குவது சமுதாயம். இது “ஓர் ஒழுங்கின் அடிப்படையில் இணைக்கப்பட்டு தனிமனிதர்களுக்கும் அவர்களை பிணைக்கும் உறவுமுறைகளுக்கும் இடைவிடாத மாற்றம் நிகழ்கின்றது; இத்தகு சிக்கல்கள் மாறிக்கொண்டே இருக்கும் அமைப்பையே சமுதாயம் என்பர்”3 என்கிறார் பி.குப்புசாமி.

    ஓர் எழுத்தாளன் தன்னைச் சுற்றிய சமுதாய நிகழ்வுகளை இலக்கியத்தில் படைத்துக் காட்டுகிறான். மனிதச்சிந்தனைகள், வழக்காறுகள், நம்பிக்கைகள், குடும்பம், பொருளாதாரம்,அரசியல், பண்பாடு போன்றவற்றைப் பிரதிபலிக்கும் இலக்கிய வகைகளில் சிறுகதையும் ஒன்று. சமுதாயத்தில் நிலவும் அன்றாடப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றைக் களையும் நல்ல நோக்கத்தோடு எழுதப்படுபவை இச்சமூகப் படைப்புகள். அவற்றுள் சில சமுதாயப் பிரச்சினைகளைப் படம்பிடித்துக் காட்டுகின்றன் சில தீர்வுகளையும் கூறுகின்றன.

    “தனிமனித எண்ணங்கள், சமுதாயத்தின் பொதுவான நினைவோட்டம் என்னும் இரண்டு வகையான சிந்தனைகளின் அடிப்படையில்தான் காலங்காலமாக சமுதாயம் இயங்கிவருகிறது’4  என்கிறார் அரு.சின்னசாமி. தனிமனிதனின் போராட்டம், மானிடக் குழுவோடு இணையும்போது உருவாகும் போராட்டம் சமுதாயம் எனும் ஓர் அமைப்பை ஏற்படுத்துகிறது.

    ஒரு குறிப்பிட்ட காலத்துச் சமூக நிலைமையின் பிரத்தியேகமான பண்புகளமைந்த பாத்திரங்களைக் கண்டறிந்து படைப்பவனே சமூக நாவல் ஆக்குகிறான்”5  என்கிறார் கைலாசபதி. சமுதாயத்தின் மீதும் அதன் வளர்ச்சிமீதும் மிக்க அக்கறை உடையவரான மேலாண்மை பொன்னுச்சாமி தமது கதைகளில் சமுதாயம் சார்ந்த பல்வேறு சிக்கல்களை முன்வைத்து சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.

    அமைதி தேசம் மலர வேண்டும்:

    தனிமனிதக் கோபங்களும் பேராசைகளும் உலகயுத்தத்தையே உருவாக்குகின்றன. அடுத்தவர் வளர்ச்சிமீதும் வளத்தின் மீதும் பொறாமையும் அவற்றைக் கைப்பற்றி விடவேண்டும் எனும் ஆசையும் கொண்டு உலகப்போர்களை உருவாக்கி பேரழிவுகளுக்கு வழிவகுத்தனர்.

    ஆனால் பழந்தமிழர் அறத்தோடு கூடிய போர்முறைகளையே கையாண்டனர். பழந்தமிழரின் ஈரம் செறிந்த வீரம் மறம் எனப்பட்டது. தனக்கு நிகரான போர்த்திறனும் படைக்கலப் பயிற்சியும் பெற்றவர்களோடு மட்டுமே போரிடுவர். ஆவும், பார்ப்பனரும், பெண்களும், பிணியுடையவரும் ஈமக்கடனிருக்கப் புதல்வர் பெறாதவரும் யாம் போரிட இருக்கிறோம். நீங்கள் பாதுகாப்பான பொதுமன்றங்களுக்குச் செல்லுங்கள் என்று முரசறைந்து தெரிவித்த பின்னரே ஒத்த வலிமையுடையரோடு போரிடுவர்.6 (புறநானூற்றுப் பாடல் 9-நெட்டிமையார்). போரில் படைவிட்டவர் புறமுதுகிட்டவர் தனிநின்றவர் ஆகியோரைத் தாக்குதலில்லை.

    ஆனால் இன்றைய காலங்களில் போர் முதலியவை ஏற்படும்போதும் வன்முறைகளின் போதும் சாதியக் கலவரங்களின் போதும் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவிக்கின்றனர். அவர்களது சொத்துக்களைச் சூறையாடுகின்றனர் அப்பாவிப் பெண்களின் கற்பைச் சூறையாடுகின்றனர். சாதியக் கலவரங்களும் அரசியல் தேர்தல் கலவரங்களும் அப்பாவி மக்களையே குறிவைத்து நடக்கின்றன.

    பூர்ணம் அப்பாவி இளைஞன். இளம்வயதில் ஏற்பட்ட காய்ச்சலுக்கு சரியான வைத்தியம் செய்யாததால் போலியோ நோய்க்கு ஆட்பட்டு கால்கள் சூம்பிப் போனவன். சதைப்பிண்டமாக சக்கரப்பலகையில் சுற்றிவருபவன். மற்றவர்களின் ஏளனப்பார்வைக்கும் பேச்சுக்கும் ஆளானவன். குடிகாரத் தந்தையால் தன் தாய் மிதித்துக் கொல்லப்பட்டதையும் அடுத்து நடந்த சாதிய வன்முறையில் தந்தை அநியாயமாகக் கொல்லப்பட்டதையும் கண்ணெதிரே கண்டவன். தன் உடற்குறைபாட்டை மற்ற மனிதர்கள் கேலி செய்யும் வன்முறையையும் வெறுப்பவன்.

    அவனது குறைபாடு நிறைந்த வாழ்க்கையிலும் மனதுக்கு நிறைவு தரக்கூடிய ஓவியத் திறமையை இறைவன் அவனுக்கு அளித்திருந்தான்.
    ‘பெறமுடியாத அன்பைத் தருவதில் ஒரு சுகம். ஓர் இதம். பூமி முழுவதையும் அன்புக்காற்றால் நிரப்பிவிட வேண்டும் என்ற ஆசை அவனுக்கு. போலியோவினால் தாக்க முடியாத அன்புப் பிரதேசமாக அவனது ஆகாயமனம்’.7

    அவனுக்கு பிளாட்பாரத்தில் ஒரு வெற்றிடம் வேண்டும். மனதில் தோன்றும் எண்ணங்களை ஓவியமாக தீட்டுவான். இன்று என்ன வரையலாம் எனச் சிந்தித்தவனுக்கு இராமர் வரையலாம் என்ற முடிவு எட்டியது. நீலவண்ண இராமர்தான் அன்பின் பேருரு என்று முடிவெடுத்தான். இராமரை வரைந்த பின் வில் அம்புக்குப் பதிலாக அம்பு இருக்க வேண்டியகையில் சமாதானப் புறாவை வரைந்தான்.

    ‘இன்றைய உலகின் நோயே… வன்முறை தீதான். மருந்து? அன்புநீர்தான். சமாதானத் தென்றல்தான். சமகால வன்முறை நோய்க்கெதிரான இவனது ஓவியப்போர் இது. வில்லேந்திய ராமர் வலது கையில் வெண்புறா.’ அப்போது திடீரென அந்த தெருவில் தேர்தல் கலவரம் மூள்கிறது. ‘முன்னேறித் தாக்குகிற ஆயுதக் கும்பலின் வெறித்தனம் மூர்க்கம்… ராட்சஸமும் ரத்தப்பெருக்கும் மரண ஓலமுமாக… தெருவே ரணகளம்.’8

    உயிர் தப்பிக்க ஓடிவந்த ஒருவனை தாக்கவந்த கும்பலில் பூர்ணம் சிக்கிக்கொள்கிறான். கலவரம் முடிந்ததும் வீதியில் வெறுமை. பூர்ணத்தின் பிரேதம் மட்டும் வீதியில் கிடக்கிறது.

    அரசியல் சாதிய வன்முறைகள் நீங்கிச் சமாதானம் நாடெங்கும் நிலவவேண்டும் என்று அமைதியை விரும்பியவன் வன்முறையாலே கொள்ளப்படுகிறான். அந்த வழியே வந்த நாய் அவனது வாயில் வழிந்த ரத்தத்தில் அன்பின் வாசமே வீச நாய் நக்காமல் விலகியது!9

    இந்த தேசம் மத இன அரசியல் கலவரங்களின்றி அமைதி தேசமாக மலரவேண்டும். வன்முறைக்குப் பலியான கடைசி மனிதன் பூர்ணமாகத்தான் இருக்கவேண்டும் என்ற சிந்தனை இக்கதையின் மூலம் வெளிப்படுகிறது.

    பெற்றோர்களைக் காப்போம்:

    ‘அவன் இருப்பதோ அன்னை இல்லம். அன்னை இருப்பதோ அனாதை இல்லம்’ என்ற கவிதை பெற்றோர்களைப் பாதுகாக்காத இன்றைய சமுதாய நிலையை வெளிப்படுத்துகிறது. இன்றைய அவசர உலகில் தாய் தந்தை முதலிய சொந்தங்களும் சுற்றங்களும் காலாவதியான நாகரிகமாகிவிட்டது. நகர நெருக்கடி வாழ்வில் வாடகைக் குடித்தனத்தில் வயது மூப்பு அடைந்த பெற்றோர்களைத் தன்னுடன் வைத்துக் கொண்டு வாழ முடியாத நெருக்கடிநிலை இன்று நிலவுகிறது. முதுமைப்பருவம் இரண்டாவது குழந்தைப் பருவமாகும். இயலாத முதுமைப் பருவத்தில் பெற்றோர்களைப் பராமரிக்காமல் அனாதை இல்லங்களில் விட்டுவிடும் நிலை பெருகியுள்ளது.

    நம்மை பெற்று வளர்த்து நம் வளர்ச்சியில் தங்கள் மகிழ்ச்சியை கண்ட பெற்றோர்களை காக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். சண்முகத்தின் அம்மாவுக்கு வயதாகிவிட்டது. பழுத்தபழம். சுயதேவைகளையே பூர்த்திசெய்து கொள்ள முடியாத கிழம். அவனால் அம்மாவைச் சரியாகக் கவனித்துக்கொள்ள முடியவில்லை. மனைவிக்கும் அம்மாவுக்கும் எதற்குப் பார்த்தாலும் சண்டை, வாதம். படுத்த படுக்கை என்றாலும் சுயகௌரவத்தை விட்டுக்கொடுப்பதில்லை.

    படுக்கையிலேயே இருப்பதால் ஈக்கள் மொய்க்கும் அளவுக்குச் சென்றுவிட்டது. மனைவிக்கு தன் பிள்ளைகளுக்கு ஏதேனும் தொற்று ஏற்பட்டு நோய்தாக்கிவிடுமோ என்ற அச்சம். ‘பாவம்..நம்ம அம்மா. கவனிப்பார் இல்லாம காய்ஞ்சு நாறிப்போய்க் கிடக்குறா. சாவுதான் அவளுக்கு விமோசனம்.’10 என்று வருந்துகிறான். சம்முகம் சம்முகம் என்று அழைத்துக்கொண்டிருப்பதாலும் தின்பண்டங்கள் வேண்டும் என்று நச்சரிப்பதாலும் எரிச்சலடைகிறான்; செத்துத்தொலையேன் என்கிறான்.

    நான் எதுக்குடா சாகணும்? நான் உன்மனைவி சம்பாத்தியத்திலயா சாப்பிடுறேன்? எனக் கேட்க மனைவிக்கும் அம்மாவுக்கும் பற்றிக்கொள்கிறது சண்டை. நடுவில் மாட்டிக்கொண்டு செய்வதறியாது திகைக்கிறான். இந்த நிலையை மாற்றுவதற்குத் தன் தங்கை சுப்புத்தாய் வீட்டில் அம்மாவை விடுவது என்ற முடிவுக்கு வருகிறான்.

    தானும் தன் கணவனும் கஷ்டப்பட்டு உழைத்து பிள்ளைகளைப் பெற்றுவளர்த்த வீடு. இதை விட்டுப்போகமாட்டேன் என வீம்பு பிடிக்கிறாள். வேறு வழியில்லாமல் வலுக்கட்டாயமாகத் தங்கை வீட்டிற்கு அனுப்புகிறான். ஆனாலும் அம்மாவைக் கடைசி காலத்தில் தன்னுடனே வைத்துக் கொள்ள முடியாத ஆதங்கம் வாட்டி வதைக்கிறது. இரண்டு மாதங்களுக்குப் பின் அவள் இறந்துவிட்டாள் என்ற செய்திகேட்டு செல்கிறான். எல்லாம் முடிந்து விட்டபின் தங்கையிடம் கேட்கிறான் அம்மா கடைசி ஆசையாக என்ன சொன்னாள் என்று அதற்கு தங்கை, “சாகுறப்ப ஒம் முகம் பாத்துகிட்டு சாகணும்’னு அவளுக்கொரு நெனைப்பு. ஒங்கையாலே கடைசிப் பாலைக் குடிச்சுட்டுச் சாகணும்’னு அம்மாவுக்கு ஒரு ஆசை.”

    அதைக் கேட்டவுடன் தாயைக் காக்க முடியாத தன் இயலாமையை எண்ணி ‘ஐயையோ..அம்மா…ஹ் ,ஒன்னைத் தவிக்கவிட்ட பாவியாயிட்டேனே.”11 என்று வெடித்து அழுகிறான். நாம் குழந்தைகளாக இருந்தபோது நாமும் பல துன்பங்களைத் தந்திருப்போம். அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டுதானே பரிவோடு நம்மைக் காத்தனர். அத்தகு பெற்றோர்களை முதுமையில் நாமும் நம் குழந்தைகளாகக் கருதிக் காக்க வேண்டியது நம் கடமை என்பதை இக்கதைவழிச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

    எல்லோரும் ஒரு குலம்:

    மனிதர்களில் ஒரு சிலரின் சுயநலத்தினாலேயே சாதி சமய மதப் பூசல்கள் உருவாகின்றன. மனிதர்கள் அனைவரும் சமம். நம் நாட்டில் அனைத்து மதத்தவர்களும் நண்பர்களாக அண்ணன் தம்பிகளாக மாமன் மைத்துனர்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்துக்களின் வடைபாயசமும் கிறித்தவர்களின் கேக்கும் முஸ்ஸிம்களின் பிரியாணியும் பகிர்ந்துக் கொள்ளப்படுவதில் எந்த பேதமும் இல்லை. சமயங்களின் நீதிகளும் மத ஆசாரங்களும் மனுதர்மங்களும் அடுத்த மனிதனைக் கொன்றழிக்கக் கற்றுக்கொடுக்கவில்லை. உருவாக்கப்படவும் இல்லை.

    மனிதர் நோக மனிதர் பார்க்கும்
    வாழ்க்கை இனியுண்டோ?
    12 என்றார் பாரதி.

    வேற்றுமையில் ஒற்றுமைக் காணும் இப்பூமியில் சாதி மத பேதங்கள் நீங்கி அனைவரும் இங்கு சரி சமமென வாழ வேண்டும்.

    போர்களும் கொலைகளும் பூசல்களும் நீங்கிய சமுதாயம் மலர வேண்டும்.

    இப்புராகிம் ராவுத்தர் துணி வியாபாரி. சைக்கிள் மிதித்து வியாபாரம் செய்பவர். இந்து பெரியவர் வீட்டிற்கு வியாபாரத்தின்போது எப்போதும் வருவர். உரிமையாக திண்ணையில் ஆற அமர அமர்ந்து கொண்டு பேசிவிட்டுத்தான் போவார். கைலி வாங்கிக்கிறீங்களா? மேல்துண்டு வாங்கிக்கிறீங்களா? என எதையாவது தருவார். பெரியவரின் பேரக்குழந்தைகளைக் கொஞ்சுவார். அவர்களுக்கு ஐந்து ரூபாய்த் தருவார். ஏன் எங்களுக்கு காசு தர்றீங்க?

    எங்க வீட்டில காசு வாங்கிக்கிறதுக்கு குழந்தைங்க இல்லையே அதான் என்பார்.

    அப்போது பெரியவர் ஊரில் நடக்கும் சில கலவரங்களில் முஸ்லீம்களின் பெயர்கள் அடிபடுவதை, “உங்க ஆளுங்க பொதுவா மொரட்டு சுபாவம்னு நெனைக்கேன்’ என்று கூறிவிட ராவுத்தர் அடுத்த சில நாட்களாக வருவதில்லை. அவசரப்பட்டுத் தான் கூறிவிட்ட கருத்தால் ராவுத்தர் மனம் புண்பட்டதை  எண்ணி வருந்துகிறார்.

    இத்தனைக்கும் ராவுத்தர் இவற்றையெல்லாம் கடிந்து பேசுபவர்.

    ‘கலவரம் எந்தச் சைத்தான் பண்ணினாலும்… பொண்ணுங்களும் புள்ளைங்களும்தான் ரொம்ப நாசமாகுதுகள். பூ மொட்டுக கருகுற பரிதாபம்தான்… பெருங்கொடுமை”என்றவர். பெரியவருக்கு உடம்பு சரியில்லாமல் போனதை அறிந்து வந்து பார்க்கிறார்.

    என்னை நீரு மனுசனா நெனைக்கலே.   முஸ்லிமா மட்டும் நெனைக்கீரு. அதானே காரணம்” கடவுள நம்புறவனுக்கு ஒரே கடவுளும் அவரு படைச்ச ஒரே மனுசங்களும்தான் உண்மை. மனுசங்க படைச்சுகிட்ட சாதிக மதங்க எல்லாம் உண்மையானதுல்லே…”13 (ப.42 பூமனசுகள்)  என்கிறார்.

    அன்பு மட்டுமே நிஜம் சாதி மத பேதங்கள் மனிதர்களே படைத்துக் கொண்ட மாயைகள் என்பதை இக்கதையில் கூறி பேதங்களற்ற சமுதாயம் மலரவேண்டும் என்கிறார் ஆசிரியர்.

    கல்வியே செல்வம்:

    கல்வியறிவு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகத் திகழ்கிறது. ஒரே மனித குலத்தில் ஒருவன் ஆண்டானாவதும் ஒருவன் அடிமையாவதும் கல்வியறிவு இன்மையினாலேயாகும். ஒருவன் கற்கும் கல்வி அவனை எதனையும் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்கும் பகுத்தறிவை உண்டாக்குகிறது. உழைப்பிற்கேற்ற பலனை உரியமுறையிலும் உரிமையாகவும் பெறக் கற்றுத்தருகிறது. சிந்தனை, செயல்திறன் வளர உதவுகிறது. எந்தச்செயலையும் செம்மையாகச் செய்ய உதவுகிறது.

    ‘கல்வி எனும் அகத்தே பொருளிருக்க
    புறத்தே பொருள் தேடி உழல்கின்றீரே’
    என்கிறது விவேகசிந்தாமணி.

    கல்வி ஒருவனை வாழ்வில் உயர்த்துகிறது. வறுமையைப் போக்குகிறது. சாதி மத பேதங்களை நீக்குகிறது. தங்கச்சாமியின் மகன் காமராசு கல்லூரியில் படிக்கின்றான். வறுமையான குடும்பம் வேளாண்மையில் தண்ணீர்ப் பற்றாக்குறையினால் விளைச்சலும் இல்லை. காமராசு கல்லூரியில் சேர்வதற்குமுன் குடும்ப வறுமை காரணமாக மளிகைக் கடைக்கு பொட்டலம் போட போகட்டுமா எனும்போது, “மரம் வைச்சவன் தண்ணி ஊத்துவான்டா கால் எடுத்து வைச்சா… பாதை தானாக வரும்டா படிக்காத பரம்பரை. பனையேறி சிரமப்பட்ட பரம்பரை. தராசு புடிச்சு ஊரு ஊரா சுத்தித் திரிஞ்ச வம்சம். நீயாச்சும் மேல்படிப்பு படிச்சு உசரத்துக்குப் போகணும்.”14 என்கிறார்.

    மகனின் படிப்புக்காக தங்கச்சாமி என்ற பெயருக்கேற்ப மாட்டுத்தரகில் நாணயமான அவர், 3300க்கு மாட்டை வாங்கி 7600க்கு விற்கிறார். பொய் சொல்கிறார். மனசாட்சி உறுத்துகிறது. மகனின் படிப்புக்காகவே இவற்றையெல்லாம் செய்கிறார்.

    அருஞ்சுனை நாடார் கீரை விற்பவர். சாதி வேறுபாட்டால் பாதிக்கப்பட்டவர். தன் பேரன் அருஞ்சுனை பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தும் பணம் இல்லாததால் கடிக்க முடியாதபோது தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தை விற்றுப்படிக்க வைக்கிறார். படிப்பு முடித்த அவன் அரசாங்கப் பதவிக்கு வந்துவிட்டான். ‘பேரனை நினைச்சா பெருமையாயிருக்கு. கவர்மெண்டு உத்தியோகம். பேரன் தலைமுறை கரையேறிட்டா அதுக்குப் பின்னாடி வர்ற தலைமுறைகளை அவன் மலைமேலே ஏத்திருவான். கீரை வித்து வவுத்தை நனைச்ச அருஞ்சுனை நாடான் பேரன்… கோட்டுசூட்டும் பூட்டுமா வரப்போறான்.

    தொங்கிப்போயிருந்த நரைத்த மீசையை இடது கையால் நீவினார்”15. தொழிற்சங்கத்தலைவர் பாலசுந்தரம் பிராமணர். தன்னை வீட்டுக்கு வரச்சொல்லி உபசரித்ததை பேரன் தாத்தாவுக்கு கூறுகிறான். இதைக்கேட்டதும் தான் முப்பதடி தூரத் தீண்டாமையால் பாதிக்கப்பட்டதையும் உழக்கில் தண்ணீர் இதெல்லாம் கல்வி தந்த மாற்றமென உணர்ந்து புளங்காகிதம் அடைகிறார்.

    முடிவுரை:

    ஒரு சமுதாயம் மேம்பட்டு விளங்கச் சாதி மத பேதமற்ற சூழல் உருவாக வேண்டும். பெற்றோர்கள் முதிய வயதில் குழந்தைகள். அவர்களைப் பாதுகாக்கவேண்டும். அரசியலிலும் மக்கள்செய்யும் செயல்களிலும் தூய்மையும் அன்பும் நிலைக்க வேண்டும். வன்முறை சாதிய கலவரங்கள் நீங்கி அன்பும் வளர்ச்சியும் மேம்படவேண்டும். கல்வியே சமத்துவ சமுதாயம் மலர வழிவகுக்கும் என்ற சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகளைத் தமது சிறுகதைகளின் வழி மேலாண்மை பொன்னுச்சாமி வெளிப்படுத்தியுள்ளார்.

    முதன்மைஆதாரம்: அன்பூ வாசம்- சிறுகதை நூல் மேலாண்மை.  பொன்னுச்சாமி, கங்கை புத்தக நிலையம் 13 தீனதயாளு தெரு தியாகராய நகர் சென்னை-600 017. முதற்பதிப்பு :- திசம்பர்  2002

    *****

    அடிக்குறிப்புகள்:

    1.தமிழ் விக்கி பீடியா-மேலாண்மை பொன்னுச்சாமி நாள்:08.10.2018 4.10      பி.ப

    2.சமுதாயமும் பண்பாடும் ப.14- அ.மு. பரமுசிவானந்தம்- தமிழினி பதிப்பகம் சென்னை டிசம்பர்  2007

    3. AN INTRODUCTION OF SOCIAL PSYCHOLOGY P.469- 1982.

    4.தமிழர் சமுதாய வரலாறு ப.44 அரு.சின்னசாமி, வானதி பதிப்பகம் சென்னை  1979.

    5.தமிழ் நாவல் இலக்கியம் ப.224 –  க. கைலாசபதி குமரன் பப்ளிஷர்ஸ் சென்னை  1981.

    6.புறநானூறு நெட்டிமையார் பாடல்-9  ப.15  உமா பதிப்பகம் சென்னை- 2010

    7.அன்பூ வாசம் சிறுகதை ப.2  அன்பூ வாசம் சிறுகதை நூல், மேலாண்மை பொன்னுச்சாமி –  கங்கை புத்தக நிலையம் சென்னை 17.  முதற்பதிப்பு- டிசம்பர்  2002.

    8.மேலது ப.11

    9.மேலது ப.13

    10.மேற்குறித்த நூல் கடைசிப்பால் சிறுகதை ப.16

    11.மேலது ப.30

    12.பாரதியார் – பாரதியார் கவிதைகள்- தென்றல் நிலையம் சிதம்பரம்-  2000.

    13.பூமனசுகள் சிறுகதை ப.42-அன்பூ வாசம் சிறுகதை நூல் மேலாண்மை பொன்னுச்சாமி, கங்கை புத்தக நிலையம் சென்னை 17.  முதற்பதிப்பு- டிசம்பர்  2002.

    14.மேலது நூல்- பொய்ம்மையும் சிறுகதை ப.45

    15.மேலது நூல் சித்தாந்தம் சிறுகதை ப.61.

    *****

    கட்டுரையாளர் – முதுகலைத் தமிழாசிரியர்
    அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி
    செங்கம். 606701
    பேசி:  99430-67963.

    Share
  • கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா? – ADHD (Attention deficit hyperactivity disorder)

    பவள சங்கரி

    கலாச்சார மாற்றங்களின் பாதிப்பா? – ADHD (Attention deficit hyperactivity disorder)

    21ஆம் நூற்றாண்டின் நவீன உலகின் இயந்திரத்தனமான வாழ்க்கை உலகளவில், தனி மனித வசதி வாய்ப்புகளையும், பொருளாதார முன்னேற்றத்தையும் வாரி வழங்கியிருப்பதை யாரும் மறுக்கவியலாது. உலகமே ஒரு கிராமமாகச் சுருங்கிவிட்ட நிலையில் கலாச்சாரப் பரிமாற்றங்களும் வெகு இயல்பாகிவிட்டதைக் காண முடிகின்றது. இதனால் நன்மைகள் எந்த அளவிற்கு உள்ளதோ அதே அளவிற்கு சில பிரச்சனைகளையும் எதிர்கொள்ளத்தான் வேண்டியுள்ளது. குறிப்பாக குழந்தைகளின் மீது திணிக்கப்படும் சுமைகள் சற்று அதிகம் என்றே தோன்றுகிறது. விடுமுறைகளைக்கூட முழுமையாக அனுபவிக்க முடியாத வகையில் அவர்களின் ஓட்டம் அந்த குழந்தைத் தன்மையையே பறித்து விடுவதையும் காணமுடிகின்றது. தன் குழந்தைதான் எல்லாவற்றிலும் முதன்மையாக இருக்கவேண்டும் என்ற பேராவல் பல பெற்றோர்களுக்கு ஒரு போட்டி மனப்பான்மையை உருவாக்கிவிடுகின்றது. இதன் விளைவாக தாயின் வயிற்றில் கரு உருவாக ஆரம்பித்த உடனே குழந்தையின் மூளை வளர்ச்சிக்காகவும் சேர்த்து மருந்துகளை எடுத்துக்கொள்ள ஆரம்பிக்கும் பழக்கம் இன்று பரவலாகிக் கொண்டிருக்கிறது. இயற்கைக்கு மாறான இது போன்ற செயல்பாடுகளால் தற்போது வருகிற நோய்களும் நவீன மருத்துவத்திற்கு சவாலாகவே இருக்கின்றன.
    குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் ADHD (Attention deficit hyperactivity disorder) என்ற கவனப் பற்றாக்குறை அறிகுறிகள் குறித்த ஆயிரக்கணக்கான அதி நவீன ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும் இன்று வரை இது குறித்து பொது மக்களுக்கு ஒரு தெளிவான விழிப்புணர்வு இல்லை என்பதே வருத்தத்திற்குரிய செய்தி. இத்தகைய நீண்ட ஆராய்ச்சி வரலாறு இருந்த போதினும், ADHD குறித்து பல முரண்பாடுகள் மற்றும் தவறான வழிகாட்டுதல்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது. ADHD ஒரு பொதுவான குழந்தை பருவ உளவியல் மன நோய் அறிகுறியாகவும், வலுவான மரபணு, நரம்பியல்-உயிரியல், மற்றும் நரம்பியல் அடிப்படையிலான குறைபாடாகவும் உள்ளது . இது கவனக்குறைவு மற்றும் உயர் செயல்திறன் ஆகியவற்றின் அறிகுறிகளால் வகைப்படுத்தப்படுகிறது. உலக சுகாதார அமைப்பு (WHO) hyperkinetic நோய் (HD) என்ற பெயரில், இந்த நோய்க்கான ஒத்த செயல்பாடு அளவுகோல்களை பட்டியலிடுகின்றது.

    ADHD என்ற குறைபாடு பற்றி எப்படி கண்டறியப்பட்டது என்றும் இது குறித்து பலதரப்பட்ட கருத்துகள் உலவுவதன் காரணம் குறித்தும் அறியும் முன்பு இதன் வரலாற்று பின்புலம் குறித்து சற்றேனும் அறிதல் அவசியம். வெகு சமீப காலமான 1987 களில் தான் இந்த குறைபாடு அதிகமாகக் கவனம் கொள்ளப்பட்டுள்ளது. முதலில் 3% அமெரிக்கக் குழந்தைகள் இந்த கவனச் சிதறல், அதீத செயல்பாட்டுக் குறைபாடுகளால் பாதிக்கப்பட்டிருந்தனர். 2000த்தில் இந்த எண்ணிக்கை 7% ஆக எகிறியது. இதுவே 2014 களில் 11% ஆக எச்சரிக்கை மணி ஒலித்தது. இந்த குறைபாடுகளின் அறிகுறிகளுடன் போராடுவதற்காக, பாதிக்கப்பட்ட 3/2 குழந்தைகளுக்கு மிக சக்தி வாய்ந்த மருந்துகளான Ritalin மற்றும் Adderall போன்ற மருந்துகள் மிகக் குறைந்த பருவமான மூன்று வயதிற்குள்ளாகவே கொடுக்கப்பட்டுள்ளன. இதே காலகட்டங்களில் பிரான்சு, பின்லாந்து, இங்கிலாந்து, சப்பான் போன்ற நாடுகளில் 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே குழந்தைகள் பாதிக்கப்பட்டிருந்தது ஆச்சரியமேற்படுத்தியது. மற்ற மேலை நாடுகளைக் காட்டிலும் அமெரிக்கக் குழந்தைகளை மட்டும் அதிகமாகப் பீடித்திருக்கும் காரணங்களையும் மற்றும் மூளையில் இயற்கையாகவே பிறவியிலேயே ஏற்படும் பிரச்சனையா என்று கண்டுபிடிப்பதற்கும் ஆய்வுகள் நடத்தப்பட்டன. குழந்தைகளின் இந்த குறைபாடு மரபு வழியில் வருவதா அல்லது குழந்தைகளிடம் இயற்கையாகத் தோன்றும் பழக்க வழக்கங்களா அல்லது அதிக மன அழுத்தம் ஏற்படுத்தும் எதிர்வினையா போன்ற வினாக்கள் பெரும் சவாலாக இருந்துள்ளன. இதைவிட முக்கியமான சவாலாக இருந்தது, அதிக சக்தி வாய்ந்த மருந்துகளிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்றி, குறைபாடுகளையும் சரி செய்வதற்கு மாற்று உபாயங்கள் ஏதும் உள்ளனவா என்பதைக் கண்டறிவதுதான். இந்த வினாக்களுக்கான விடையாக, மெரிலைன் வெட்ஜ் என்ற ஆய்வாளர், ‘இன்றைய உளவியல்’ என்ற சஞ்சிகையில் வெளியிட்ட, “பிரான்சு நாட்டு குழந்தைகள் மட்டும் ஏன் ADHD யால் பாதிக்கப்படவில்லை” என்ற தனது ஆய்வுக் கட்டுரையில், சிகிச்சை முறைமைகள், வளர்ப்பு முறை, உணவுப்பழக்கம், கல்வி முறை போன்ற ஆக்கபூர்வமானவற்றை விவாதித்துள்ளார். இந்த ஆய்வுகள் பிரான்சு நாட்டிற்கு மட்டுமன்றி இந்தியா போன்ற நாடுகளிலும் இது போன்று பாதிக்கப்பட்ட குழந்தைகள் மிக மிக அரிதாக இருந்த காலகட்டம் அது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போதய காலகட்டங்களில் இது போன்ற குறைபாடுகள் இந்தியக் குழந்தைகளுக்கும் மிக அதிகமாகப் பரவி வருவது அதிர்ச்சியேற்படுத்துவதாகவே உள்ளது. எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைப்பாடு மட்டுமே இன்றும் உள்ளதையும் மறுக்க இயலவில்லை.

    ADHD குறைபாடு என்பதன் அறிகுறிகள் என்ன?

    கவனமின்மை

    1. பெரும்பாலும் கூர்ந்து கவனம் செலுத்தத் தவறுதல் அல்லது பள்ளிப் பாடங்களில் கவனமின்மையால் தவறு செய்வது அல்லது அன்றாட கடமைகள், மற்ற செயல்பாடுகளில் கவனம் செலுத்தாமல் இருப்பது.
    2. பெரும்பாலும் பணிகள் செய்யும் நேரங்களில் கவனத்தைத் தக்க வைத்துக்கொள்வதிலோ அல்லது விளையாட்டு செயல்பாடுகளிலோ சிரமம் மேற்கொள்வது.
    3. பெரும்பாலான நேரங்களில் நேரடியாகப் பேசும்போது கவனம் செலுத்தாதது போன்ற தோற்றம்.
    4. பெரும்பாலும் பள்ளிப் பாடங்களில் கவனம் செலுத்தாமலும், வீட்டுப் பாடங்களை முடிக்காமலோ அல்லது பணி செய்யும் இடத்தில் கவனமில்லாமல் கடமை தவறுவது (எதிர்ப்பு நடவடிக்கையாக இல்லையென்றாலும், அறிவுறுத்தல்களையோ, ஆணைகளையோ சரிவரப் புரிந்து கொள்ள இயலாமையால்)
    5. பெரும்பாலும் பணிகள் அல்லது செயல்பாடுகளை நிறுவுதலில் சிரமம் ஏற்படுவது.
    6. பெரும்பாலும் மூளைக்கு வேலை கொடுக்கும் செயல்பாடுகளைத் தவிர்ப்பது, விருப்பமில்லாமல் இருப்பது அல்லது பள்ளிப்பாடங்கள், வீட்டுப் பாடங்களில் கவனம் செலுத்தாமல் செய்ய மறுப்பது.
    7. பெரும்பாலும் விளையாட்டு சாமான்கள் அல்லது பென்சில், பேனா, புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் போன்றவற்றை தொலைத்து விடுவது.
    8. சுற்று வட்டாரத் தடைகளால் எளிதில் கவனச் சிதறல் உண்டாவது.
    9. அன்றாட பழக்கங்களையும் மறந்து விடுவது.

     

    Hyperactivity – ஹைபர்ஆக்டிவிட்டி – அதீத செயல் திறன்

    1. பெரும்பாலும் படபடப்பாக கை, கால்களைச் சொடுக்குவது அல்லது இருக்கையில் நெளிந்து கொண்டிருப்பது.
    2. வகுப்பறையில் இருக்கையை விட்டு எழுந்து செல்வது.
    3. பெரும்பாலும் தேவையில்லாமல் வேகமாக ஓடுவது அல்லது மேலே ஏறுவது.
    4. பெரும்பாலும் அமைதியாக விளையாடத் தயக்கம்.
    5. பெரும்பாலும் யாரோ விரட்டுவது போன்ற ஒரு அவசரகதியிலேயே செயல்படுவது.
    6. பெரும்பாலும் அளவிற்கு அதிகமாகப் பேசுவது.

     

    Impulsivity – உணர்ச்சிவசப்படுதல்

    7. பெரும்பாலும் வினாக்கள் முடிக்கும் முன்னரே ஏதோ ஒரு விடையை உளறுவது.
    8. பெரும்பாலும் தனது முறை வரும்வரை பொறுமை காக்க இயலாமை.
    9. பெரும்பாலும் அடுத்தவருக்கு தடை ஏற்படுத்துவது அல்லது தேவையில்லாமல் உள்நுழைவது.
    ஏழு வயதிற்குள் மேற்கண்ட அறிகுறிகளில் பெரும்பாலானவை தொடர்ந்து 6 மாதமாக இருந்தால் மட்டுமே இது ADHD குறைப்பாடு எனலாம்.

    போட்டிகள் வெகு விரைவாக வளர்ந்துவரும் இந்த காலகட்டத்தில் குழந்தைகள் தங்கள் உயர் கல்விக்காக இளமைப் பருவத்திலிருந்தே அதிகமாக உழைக்க வேண்டியுள்ளது. இது போன்ற தருணங்களில் இந்த விதமான மருந்து மாத்திரைகள் பயன்பட்டால் அதனைத் தொடர்வதில் பெரும்பாலான பெற்றோர்களுக்கு தயக்கம் இருப்பதில்லை. நல்ல கல்லூரியில் தங்கள் பிள்ளைகள் படிக்க வழி செய்யும் வகையில் இதனைத் தங்கள் கடமையாகக் கருதும் பெற்றோரே அதிகம் உள்ளனர் என்கிறார் இவர். விளையாட்டு மைதானமாக இருக்க வேண்டிய பள்ளிப் பருவம் இந்தக் குழந்தைகளுக்கு பெரிய பந்தய மைதானமாகக் காட்சியளித்துவிடுகின்றது. தங்கள் குழந்தைகள் எதிர்காலத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்று எண்ணித் திட்டமிடும் பெற்றோரை தவறு சொல்ல முடியாது என்றாலும், மருந்துகளால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்த தகுந்த விழிப்புணர்வு இல்லாமல் செயல்படுவதும் நல்லதல்ல… குழந்தைகளின் எதிர்கால மகிழ்ச்சியும், வெற்றியும் எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் அவர்களின் உடல் நலமும் என்பதையும் கருத்தில் கொள்வது அவசியம். 21ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய சவால் என்றே இதைப் பார்க்க முடிகின்றது. முழுவதும் மருந்துகளையே நம்பி இருப்பதைக்காட்டிலும் உளவியல் சிகிச்சை முறையை அதிகமாகத் தொடருவதே சாலச்சிறந்தது என்பதே ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. அதிகமான மருந்துகளை உட்கொண்ட குழந்தைகள் மிகவும் மந்த நிலையை வெகு விரைவில் அடைவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். இதனால் அவர்களின் கல்வி பிற்காலங்களில் கேள்விக் குறியாகவும் வாய்ப்புள்ளதை பெற்றோர் உணர்ந்து செயல்பட வேண்டியது அவசியம்.

    மன அழுத்தம், மனச்சோர்வு, அதிக எதிர்பார்ப்பினால் ஏற்படும் மன உளைச்சல், தற்கொலை எண்ணம் போன்ற குழந்தைகள் மற்றும் சிறார்களுக்கு ஏற்படும் உணர்வுரீதியான பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் மருந்துகளைவிட குடும்ப உளவியல் சிகிச்சை முறையே (family therapy techniques) பாதுகாப்பானது என்பதே இந்த ஆய்வுகளின் முடிவான கருத்தாக உள்ளது. இதற்கான பல குழந்தைகளின் எடுத்துக்காட்டுகளும் இந்த ஆய்வுக் கட்டுரையில் சுட்டப்பட்டுள்ளன. இதில் முக்கியமாகக் கவனிக்க வேண்டியது, ADHD பாதிப்பினால் அல்லலுற்ற ஒரு கலிபோர்னிய குழந்தையின் தாய் அக்குழந்தையை பள்ளியிலிருந்து நிறுத்திவிட்டு வீட்டில் கல்வி கற்க ஏற்பாடு செய்தபோது இந்தப் பிரச்சனை பெருமளவில் கட்டுப்பட்டது என்கிறார். செருமனியைச் சேர்ந்த ஒரு தாய், தம் குழந்தை ADHD பாதிப்பினால் மருத்துவமனைக்குச் சென்றபோது மருந்துகள் கொடுத்தபோது, “நாங்கள் அந்த மருந்திற்குப் பதிலாக அவளுக்கு ஒரு பியானோ வாங்கிக் கொடுத்தோம் – ஆச்சரியமான வகையில் நல்ல முடிவுகளைக் காண முடிந்தது” என்றார்.

    ஆக, மருந்துகளைவிட குழந்தைகளின் உணவு முறையில் சிறு மாற்றங்கள், அவர்களுடைய சக்தியை வெளிக்கொணர ஒரு உபாயமும், படைப்பாற்றலில் கவனம் செலுத்துவதும் இந்த குறைபாட்டிற்கான சிறந்த மாற்று மருத்துவம் என்பது தெளிவாக விளங்குகிறது. இந்த ஆய்வின் முடிவின்படி ADHD என்ற குறைபாடு குழந்தைகளின் இயற்கைக்கு மாறான ஒரு நிலைப்பாடோ அல்லது மருந்தினால் குணப்படுத்தக்கூடிய ஒரு நோயோ அல்ல என்பதுதான். பல நேரங்களில் குழந்தைகள் மீது அபரிமிதமான அன்பும், பாசமும், நம்பிக்கையும் கொண்ட பெற்றோர் இயல்பான குணநலனுடன் இருக்கும் குழந்தைகளுக்கும் தேவையில்லாமல் மருத்துவ உதவியை நாடுவதும், அவர்கள் ADHD குறைபாடு என்ற ஐயத்தால் சக்தி வாய்ந்த மருந்துகளைக் கொடுப்பதும் நிகழ்ந்துவிடுவதுண்டு. பெரும்பாலும் ADHD குறைபாடு என்று பட்டயம் கட்டி மருந்துக்கு பரிந்துரை செய்வது அழுத்தம் நிறைந்த சூழ்நிலைகளில் குழந்தைகளின் இயல்பான நடவடிக்கைகள்தான் என்பதே நிதர்சனம். கடுமையான சூழல்களால் பாதிக்கப்பட்டு எதிர்வினையாற்றும் சில குழந்தைகளை பொறுப்பாக, பொறுமையாகக் கையாளத் தெரிந்த பெற்றோரே சிறப்பான பெற்றோரின் வளர்ப்பு முறையாகக் கருத முடியும்.

    இந்த ADHD குறைபாடு பரவுவதற்கான காரணம் அமெரிக்கக் கலாச்சாரம் என்பது குறைத்து மதிப்பிடக்கூடிய விசயம் அல்ல என்றாலும் உலகின் பெரும் பகுதிகளின் நவீன கலாச்சாரத்தில் வீழ்ந்து கிடக்கும் பெரும்பாலான நவீனவாதிகளின் செயல்பாடுகளாகவும் அமைந்துவிடுவது என்றும் இந்த ஆய்வாளர் தெரிவிக்கிறார்.
    இயல்பாகவோ அல்லது இயல்புக்கு மாறான குழந்தைகளின் நடத்தையோ என எதுவாக இருப்பினும் அது நாம் வாழும் சமூகத்தின் பழக்க வழக்கங்களின் அடிப்படையிலேயே அமைகிறது என்பதே சத்தியம். இதை உணராத பெற்றோரே பெருங்குழப்பத்திற்கு ஆளாகி, குழந்தை வளர்ப்பை பெரும் சுமையாகக் கருதி நிம்மதி இழக்கின்றனர். ஆம், ADHD என்ற குறைபாடு பற்றி பேசும்போது நாம் முதலில் கூர்ந்து கவனம் கொள்ள வேண்டியது மருந்தில் மட்டுமல்லாமல், நாம் வாழும் சமூகம் மற்றும் அதன் கலாச்சாரம் போன்றவைகள் குறித்தும் கலந்தாலோசிக்க வேண்டும் என்பதே முக்கியம். மருந்துகளையும் தவிர்த்து சூழ்நிலை மாற்றங்கள், படைப்பாற்றலை பெருக்குவது, உளவியல் சிகிச்சை முறை போன்ற பலவகை பரந்த வெளிகள் குறித்த கருத்துகளையும் அறிந்துகொள்ளும் உரிமைகள் பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு நிச்சயம் உண்டு. இதில் குழந்தைகளின் உணவு முறையில் மாற்றம், குழந்தைகளுக்குத் தோதான பாடசாலைச் சூழல், ஊடகங்களினால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்பு, பெற்றோரின் பயிற்சி மற்றும் குடும்ப சிகிச்சை போன்றவற்றில் தீவிர கவனம் செலுத்த வேண்டியதும் அடங்கும்.

    இந்த பிரச்சனை வெகு விரைவாக வளர ஆரம்பித்தன. 1990 களில் 3 மில்லியன் அமெரிக்கக் குழந்தைகளுக்கு மட்டும் பரிந்துரைக்கப்பட்ட சக்தி வாய்ந்த மருந்துகள் 2010 காலகட்டங்களில் 10 மில்லியன் குழந்தைகளாக உயர்ந்துவிட்டன. அவர்களை பள்ளியில் படிக்க வைப்பதே பெரும் போராட்டமாக இருந்ததால் உளவியல் சிகிச்சை முறையை தேர்ந்தெடுக்க வேண்டியதாகி இருக்கிறது. மேற்கண்ட அந்த மருந்துகள் மருத்துவ உலகிற்கு புதிதும் அல்ல. 1930 களில் மூக்கடைப்பு, அதிக பருமன் மற்றும் மனச்சோர்வு போன்றவற்றிற்காக பயன்படுத்தப்பட்டவைதான் என்கிறார். அமெரிக்கக் குழந்தை வளர்ப்பு கலாச்சாரத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்கிய காரணியாக இந்த மருந்துகள் செயல்பட்டிருக்கின்றன.

    பின் அதனைத் தொடர்ந்து பல்வேறு பெயர்களில், கருத்துகளில் இந்த குறைபாடு பற்றிய விளக்கங்கள் பல விதமாகப் பரவி வரலாயிற்று. 1968 இல் DSM II என்ற உளவியல் கையேடு வெளியிட்டபோது அமெரிக்க உளவியல் கூட்டமைப்பு, குழந்தைகளிடம் காணப்பட்ட அதீத இயக்க எதிர்வினை குறித்த கண்டறிதல் மூலமாகப் பாதிக்கப்பட்ட குழந்தைகளின், கவனமின்மை, அமைதியின்மை, கவனச்சிதறல், அதீத செயல்பாடு போன்ற குறைபாடுகள் பற்றி குறிப்பிட்டிருந்தன. ஆனாலும் இதில் குழந்தைகளுக்கு பருவ வயது வரும்போது இந்த முதிர்ச்சியின்மை மறைந்துவிடக் கூடும் என்றனர்.

    பின் அடுத்த கட்டத்தில் இந்த குறைபாடுகளை, மூளையில் ஏற்படும் மெல்லிய ஒழுங்கின்மை அல்லது கரிம மூளை நோய்க்குறி என்றும் குறிப்பிட்டனர். மூளையழற்சி அல்லது மூளையில் ஏற்படும் வீக்கம் காரணமாகலாம் எனப்பட்டது. இதுபோன்று பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கே இந்த அறிகுறிகள் இருந்திருக்கும் என்று எண்ணினார்கள்.

    பாதிக்கப்பட்ட குழந்தை பின் விளைவுகள் இன்றி மீண்டு வர திட்டமிடுவது எப்படி?

    ADHD குறைபாடு என்று கண்டறியப்பட்ட ஒரு குழந்தை வேறு ஏதும் பின் விளைவுகள் இல்லாத சிகிச்சை முறையாக எப்படி திட்டமிடலாம் என்று அக்குழந்தையின் தாயும், மருத்துவ ஆய்வாளரும் இணைந்து செயல்படும் முறையைக் காணலாம் ..

    பொதுவாக ஒரு குழந்தையின் நடத்தையில் வித்தியாசம் தென்பட்டால், அதாவது சம வயது உள்ள மற்ற குழந்தைகளுடன் வித்தியாசப்பட்டால் அந்த பெற்றோர் அந்தக் குழந்தை ஏதோ மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாகவும், குழந்தையை வேதனைப்படுத்தும் அந்த ஏதோ ஒன்றை கண்டறிய வேண்டும் என்ற எண்ணத்தில் மருத்துவரை அணுகுகிறார்கள். கோபம், மரியாதையின்மை, கவனமின்மை, அதீத செயல்பாடு போன்ற குணநலன்கள் ஒரு குழந்தையின் வாழ்வில் ஏதோ தவறு நேர்ந்திருப்பதைக் குறிக்கிறது. குழந்தைகளின் மன வளர்ச்சி முழுமையடையாத சூழலில், வறுமை, வன்கொடுமை போன்ற பல்வேறு காரணங்களால் குடும்பத்தில் ஏற்படும் மாறுபட்ட சூழல் குழந்தையின் மனநிலையை பாதிப்படையச் செய்து அது அதன் நடத்தையில் வெளிப்படுவது இயற்கை. அதாவது குழந்தைகள் கடுமையானச் சூழலில் தங்களுடைய எதிர்ப்புகளை முழுமையாக வெளிப்படுத்தும் சக்தி இல்லாதபோது இது போன்ற மாறுபட்ட நடத்தைகள் இயல்பாகிவிடுவதுமுண்டு. இதனாலேயே மருத்துவர்கள் சிகிச்சை முறையை குழந்தையின் ஆணி வேரான குடும்பத்திலிருந்து ஆரம்பிக்கிறார்கள். பள்ளியில் ஆசிரியர்கள் குழந்தைகள் மத்தியில் வித்தியாசமான நடவடிக்கை உள்ள இது போன்ற குழந்தைகளை எளிதாகக் கண்டறிய முடிவதால் பெரும்பாலும் பள்ளி ஆசிரியர்கள் மூலமாகவே பெற்றோருக்கு இது தெரிய வருகிறது. பெற்றோர் இது போன்ற சூழலை அமைதியாகக் கையாள்வதன் மூலம் குழந்தைகளின் பிரச்சனைகளை எளிதாக அணுகுவதோடு அதற்கான சரியான தீர்வையும் காண முடிகின்றது. சில காலங்கள் முன்பு குழந்தைகளின் இது போன்ற நடத்தைகளை அவர்களின் இயல்பாக எடுத்துக்கொண்ட சூழல் இன்றைய நவீன காலகட்டத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதும் உண்மை. அபரிமிதமான எதிர்பார்ப்புகளோடு வளர்க்கப்படும் குழந்தைகளின் இயல்பு நிலை பெரும்பாலான பெற்றோர்களால் ஏற்றுக்கொள்ள இயலாமல் போவதும் அந்த குழந்தைகளின் மன உளைச்சலுக்கு முக்கிய காரணமாகிவிடுகின்றது.


    பொதுவாக அமெரிக்கக் குழந்தை வளர்ப்பு கலாச்சாரத்தில் மருந்துவம் பெரும் பங்கு வகிப்பதைக் காணமுடிகின்றது. கடுமையான போட்டிகள் நிறைந்த இந்த உலகில் குழந்தைகள் அதிக உழைப்பைப் போடாமல் பகல் கனவு கண்டுகொண்டு எதையும் சாதிக்க இயலாது என்று உறுதியாக எண்ணுகிறார்கள். இந்த கலாச்சாரம் பெரும்பாலும் உலகின் அனைத்து நாடுகளிலும் இன்று தீயென பரவிக் கொண்டிருப்பதும் வேதனையான விசயம். மாணவர்கள் மத்தியிலேயே கல்வி என்ற அடிப்படையில் நன்றாக படிக்கும் மாணவர்களுக்கும், சுமாராக படிக்கும் மாணவர்கள் மத்தியிலும் பெரும் இடைவெளிகள் உருவாகி வருவதையும் காணமுடிகின்றது. ஒரு குழந்தை தன் மூன்று அல்லது நான்கு வயதில் பள்ளிக்குச் செல்ல ஆரம்பிக்கும்போதே ஒவ்வொரு நாளும் அதன் வாழ்வில் மெல்ல மெல்ல மாற்றங்களுக்கு அடிகோலிவிடுகின்றது என்பதே நிதர்சனம். மேல் படிப்பிற்காக குழந்தைகள் ஆரம்பக் கட்டத்திலிருந்தே கடுமையாக உழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்த வகையில் பெரும்பாலான பெற்றோர் அந்த போட்டிகளை எதிர்கொள்ளத் தோதாக மருத்துவ உதவியையும் நாடுவது தங்கள் கடமை என்ற எண்ணத்தையும் ஏற்படுத்திக்கொள்கிறார்கள். 21ஆம் நூற்றாண்டின் நவீனத்துவம் இந்த வகையில் குழந்தைகள் வளர்ப்பில் பல எதிர்மறையான கலாச்சாரங்களையும் ஊக்குவித்துக்கொண்டு வருவதை உணர முடிகின்றது. இதில் முக்கியமாகக் காண வேண்டியது இதைப்பற்றிய முழுமையான தெளிவு இல்லாத பெற்றோர் கூட பல தவறான முன் உதாரணங்கள் மூலமாக தவறான முடிவை எடுக்கவும் துணிகிறார்கள் என்பதுதான். இதனால் மேலும் பாதிப்புக்கு உள்ளாவது தங்கள் குழந்தைகள்தான் என்ற எண்ணமே இல்லாமல் செயல்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். ஆம் விளையாட்டு மைதானமாக குதூகலிக்க வேண்டிய குழந்தைப்பருவம் பந்தய மைதானமாக விரட்டப்படுவது துரதிருட்டவசமானது. போட்டிகள் நிறைந்த இந்த உலகில் வேலை வாய்ப்பு பெறுவதில் எத்துணை சிரமத்தை தம் குழந்தை மேற்கொள்ளப் போகிறதோ என்ற கவலை ஒவ்வொரு பெற்றோருக்கும் ஏற்படுவது இன்றைய காலகட்டத்தில் இயல்பாகிக் கொண்டுவருவதும் முக்கிய காரணமாகிவிடுகின்றது. கல்வி மட்டுமே எதிர்கால வாழ்க்கையின் ஆதாரமாக இருக்க முடியும் என்ற தீவிர எண்ணம் பெரும்பாலான பெற்றோரின் மனதில் ஆணித்தரமாகப் பதிந்து கொண்டிருக்கிற காலகட்டம் இது. இந்த மனநிலையில் வரும் பெற்றோர்களுக்கு மருத்துவர்களும் தங்கள் பங்கிற்கு பல புதிய புதிய மருந்துகளை அறிமுகப்படுத்தவும் தயங்குவதில்லை. ஆனால் பல நேரங்களில் அதன் பின் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டிருக்கிறார்களா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

    டேவிட் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பெற்றோரின் ஒரே செல்ல மகன். தங்கள் குழந்தைக்கு ADHD குறைபாடு உள்ளது என்று அறிய வந்தபோது ஏனைய மற்ற பெற்றோரைப் போலவே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானது உண்மைதான். என்றாலும் சில நாட்களில் அதிலிருந்து மீண்டு வந்தவர்கள் இந்த குறைபாடு பற்றி ஆதியோடு அந்தமாக தகவல் திரட்ட ஆரம்பித்தவர்கள் இதற்கான தீர்வைக் கண்டறிய முற்பட்டார்கள். பல்வேறு மருத்துவர்களை அணுகி இது பற்றி பல தகவல்களை சேகரித்துக்கொண்டார்கள். இந்த குறைபாட்டிற்காக கொடுக்கப்படும் மருந்தின் வீரியம் மிக அதிகம் என்பதால் குழந்தை பல பின் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருப்பதையும் அறிந்து கொள்கிறார்கள். பிற்காலத்தில் குழந்தை மேலும் மந்த நிலையை அடையக்கூடிய வாய்ப்பும் அதிகரிக்கலாம் என்பதையும் உணருகிறார்கள். இந்த நிலையில் இந்த ஆய்வுக் கட்டுரையின் ஆசிரியரான மருத்துவர் மெரிலைன் வெட்ஜிடம் வருகிறார்கள். இந்த குறைபாட்டிற்காக பெரும்பாலும் கொடுக்கப்படும் மருந்தின் பெயரைச் சொல்லி அதைக் கொடுப்பதால் தங்கள் குழந்தைக்கு தீர்வு கிடைக்குமா என்று கேட்கிறார்கள்.

    அந்த மருத்துவரின் பதிலும் பெரும்பாலும் ஆம் என்பதுதான். பெரும்பாலான குழந்தைகளை இது போன்ற மருந்துகள் அமைதியாக்கி, அவர்களின் கவனத்தை மீட்டுக்கொடுக்கின்றது. பல குழந்தைகளுக்கு மருந்து கொடுக்க ஆரம்பிக்கும் முதல் நாளிலிருந்தே பலன் தெரிய ஆரம்பிக்கின்றது. ஆனாலும் இந்தப் பெற்றோர் மருந்து, மாத்திரைகள் இல்லாமல் இந்தக் குழந்தையை வழிநடத்த தாமும் உறுதுணையாக இருக்கமுடியும் என்று விருப்பம் தெரிவித்தபோது அவர்களும் யோசிக்க ஆரம்பித்தனர். இதற்காகக் கொடுக்கப்படும் மருந்துகளின் தன்மைகள் மற்றும் அதனால் எதிர்பார்க்கப்படும் பின் விளைவுகள் குறித்து தெளிவான விளக்கமளித்துள்ளார். உளவியல் மருத்துவர்களைப் பொறுத்தவரை இந்த மருந்துகளை பயன்படுத்துவது அவரவர் சொந்த விருப்பத்தின் பேரில், அதாவது தேவையென்றால் பயன்படுத்தலாம் என்பதுதான். இந்த மருந்துகள் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு முறையில் செயல்படுவதும் கண்கூடு. சிலருக்கு உடனே பலன் தெரியும் இதே மருந்து பலருக்கு நாள்பட எடுத்துக்கொண்டும் பலனளிப்பதில் மந்தமாக செயல்படலாம். அவரவர் உடல்வாகின் அடிப்படையிலேயே மருந்துகள் செயல்படுவதும் இயற்கை. பல நேரங்களில் முன் காலத்தில் குறும்புக்கார குழந்தை என்று வகைப்படுத்தப்பட்டு அதை இயல்பாக எடுத்துக்கொண்டு பெற்றோரும், ஆசிரியருமே அக்குழந்தையை இயல்பு நிலைக்கு கொண்டுவந்தது போக இன்று நவீனக் கலாச்சாரம் என்ற போர்வையில் அதே குறும்புக்கார குழந்தைகள் கூட குறைபாடுள்ள குழந்தைகளாக மருத்துவ ஆலோசனைக்கு உட்படுத்தப்படுவது வேதனையான செய்தியாகத்தான் பார்க்க முடிகின்றது.


    குழந்தைகள் உளவியல் மருத்துவம் சார்ந்து 25 வருட அனுபவம் கொண்ட மருத்துவரும், ஆய்வாளருமான மெரிலின் ஒரு சாதாரணமான குழந்தைத்தனம் என்ற இயல்பியலை நம் சமுதாயம் முற்றிலும் மாறுபட்ட வேறு எல்லைக்கு கொண்டு சென்றுவிட்டனர் என்ற ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருப்பது இன்றைய பெற்றோர் சமூகம் கூர்ந்து கவனம் கொள்ளத்தக்கது என்பதில் ஐயமில்லை.

    ஒரு திரைப்பட தயாரிப்பாளரான டேவிட்டின் தந்தை படைப்பாற்றல் உள்ள ஒரு குழந்தை இது போன்ற சூழல்களை எளிதில் கடந்துவிட வாய்ப்புகள் அதிகம் என்பதை உணர்ந்திருந்தார். இளம் வயதில் தனக்கும் இது போன்ற சில பிரச்சனைகள் இருந்தாலும் அது தன் பெற்றோரால் பெரிதுபடுத்தப்படாமல் இயல்பாக கையாளப்பட்டதால் தான் இன்று ஒரு சாதாரண மனிதனாக வலம் வரமுடிகிறது என்பதையும் எண்ணிப்பார்த்ததோடு, தாமஸ் ஆல்வா எடிசன், ஆல்பர்ட் ஐன்ஸ்டின் போன்ற விஞ்ஞானிகளும் ஆரம்பத்தில் இதே குறைபாடுகளுடன் பள்ளி ஆசிரியரால் வீட்டிற்கு அனுப்பப்பட்டவர்கள்தான் என்பதையும் அறிந்துகொண்டார்கள். மெக்கார்ட்னே போன்ற இசைக்கலைஞர் பகல் கனவு கண்டவாறு பள்ளிப்படிப்பில் கோட்டை விட்டவர், ஒரு கட்டத்தில் தீவிரமாக கிட்டார் இசையைக் கற்க ஆரம்பித்தார். வீட்டுப்பாடங்களைக்கூட கிட்டார் வாசித்துக்கொண்டே ஒழுங்காகச் செய்து முடிக்கும் வழமையும் கொண்டுவிட்டார் என்பது போன்ற பல தகவல்களை வாசித்து அறிந்தவர் தம் மகனுக்கும் மருந்து இல்லாமலே இயல்பு நிலைக்குக் கொண்டுவர வழிவகை செய்ய முடியும் என்பதையும் நம்பியதோடு அதற்கான சிறந்த திட்டமும் தீட்ட ஆரம்பித்தபோதுதான் இந்த மருத்துவர் குறித்த தகவல் அறிந்து அவரோடு சேர்ந்து தாமும் திட்டமிட, பெற்றோரின் ஒத்துழைப்புடன் டேவிட்க்கு மருந்து இல்லாமலே மருத்துவம் பார்க்க முடிவு செய்தார்.

    முதலில் அதிக அளவிலான உடற்பயிற்சியுடன் கூடியத் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. உள்ளூர் விளையாட்டுக் குழுவில் சேர்த்து பயிற்சி கொடுக்க ஆரம்பித்தார்கள். இது போன்று ஆக்கபூர்வமான செயல்பாடுகளால் குழந்தை மெல்ல மெல்ல தேறிக்கொண்டு வந்ததைக் கண்ட பெற்றோர் முழுமையாக இதே முறையை கையாளத் தொடங்கி, வெற்றியும் கண்டதாகக் கூறுகிறார் மருத்துவர்.

    ADHD (Attention deficit hyperactivity disorder) என்ற மனநலக் குறைபாடு பாதிக்கப்பட்ட குழந்தைகளை மட்டுமல்லாமல் அவர்தம் பெற்றோர்களின் வாழ்க்கையையும் சேர்த்தே புரட்டிப்போடும் இது இன்று பெரும்பாலும் அனைத்து நாடுகளின் மருத்துவத்திற்கும் பெரும் சவாலாகவே இருந்து வருகின்றது. மருத்துவமும், தொழில்நுட்பமும் பெருமளவில் முன்னேற்றமடைந்துள்ளபோதும், இந்த குறைபாடு உலக அளவில் எதிர்காலத்தில் பெரும் பிரச்சனையாக உருவெடுக்கப்போகும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதே உண்மை. இத்தகைய குறைபாடுகளுக்கு அனைத்து நாட்டு வல்லுநர்களும் இணைந்து, நம்முடைய அனைத்து பழம்பெரும் வைத்திய முறைகளையும் ஆய்வு செய்து தீர்வு காண வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை உணரவேண்டிய காலகட்டம் இது.. 🙁

    பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகளே அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள் என்கிறார் அமெரிக்க ஆய்வாளர் டாக்டர் மெரிலைன் வெட்ஜ். அமெரிக்கக் குழந்தைகள் மிக அதிகமாக பாதிக்கப்படுவது குறித்து அதிர்ச்சி தெரிவித்திருக்கிறார். 13.2 % ஆண் குழந்தைகளும், 5.6 % பெண் குழந்தைகளும் அமெரிக்காவில் இந்த குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கிறார் ….

    கவனமின்மை குறைபாடு (ADHD) ஒரு குழந்தையின் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் பாதிக்கக்கூடியதாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட குழந்தைக்கு மட்டுமா வேதனை … உண்மையில், அது பெற்றோர்களுக்கும் உறவினர்களுக்கும், குடும்பத்திற்கும் அன்றாட வாழ்வியல் செயல்பாட்டிற்கும் இடையூறு ஏற்படுத்துகிறது. குழந்தைகளுக்கும் அவர்களது குடும்பத்தாருக்கும் ADHD இன் பாதிப்புகள் பால பருவத்திலிருந்து ஆரம்பித்து இளமைப் பருவத்திற்கும் தொடருகின்றன, கூடுதலாக, பாதிக்கப்பட்டவருக்கும் அவர்தம் குடும்ப உறுப்பினர்களுக்கும் அதிகரித்த செலவினங்களுடன் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

    தனிப்பட்ட வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் தாக்கத்தை ஏற்படுத்தும் இந்தக் குறைபாட்டில் கல்வியியல் சிக்கல்கள், சமூக திறன்கள் சிக்கல்கள், பலவீனமான பெற்றோர் -குழந்தை உறவுகள் போன்றவை அடங்கும். சமீபத்திய ஆய்வுகள் மூலம் 30 – 60%, பாதிக்கப்பட்டவர்கள் முதுகெலும்புக்குள் சீர்குலைவுக்கான குறிப்பிடத்தக்க அறிகுறிகள் உள்ளவர்களாக இருப்பதைச் சுட்டுகின்றன. இந்த குழந்தைகள் நீண்ட கால எதிர்மறை விளைவுகளுக்கு ஆட்படும் நிலையில் உள்ளனர். அதாவது கல்வி கற்க இயலாமையால் வேலைவாய்ப்பு பாதிப்பு ஏற்படுவது வாழ்வாதாரத்தையே கேள்விக்குறியாக்குகிறது. ADHD இன் சிறந்த சிகிச்சை முறை என்றால் அது பள்ளி நேரங்களில் ஏற்படும் அறிகுறிகளை மட்டும் கவனம் கொள்ளாமல், குழந்தைகளோ அல்லது இளைஞர்களோ யாராக இருந்தாலும் அவர்களது குடும்பங்களின் தினசரி வாழ்க்கையை இயல்பாக வாழ முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தும் காரணிகளைக் கண்டு அதற்கான தீர்வை ஏற்படுத்துவதேயாகும். ஆம், இந்த நோய்க்கான முழுமையான தீர்வுக்கான ஆய்வு என்றால் அது மொத்த குடும்பத்தின் செயல்பாடு மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டதாக இருக்க வேண்டியது அவசியம்.

    ADHD உடைய குழந்தைகளுக்கு வயது ஏறிக்கொண்டிருக்கும்போது அவர்களின் குறைபாடுகளும், அவர்களது குடும்பங்களில் ஏற்படும் மாற்றங்கள், செயல்திறன் செயல்பாட்டில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள், அவர்களின் வாழ்க்கைச் சூழலில் ஏற்படும் தனிப்பட்ட வாழ்வியல் முறைகளைப்பொருத்து இடர்பாடுகள் விளைகின்றன. குடும்பம், பள்ளி வளங்கள், வயது, அறிவாற்றல், குழந்தை அல்லது இளம் நபரின் நுண்ணறிவின் அடிப்படையில் வேறுபடும். இவர்களின் தேவைகளை பூர்த்தி செய்யக்கூடிய உணர்திறன் கொண்ட சுற்றுச்சூழல் மற்றும் நோய் தாக்கத்தின் அறிகுறிகளை அறிந்து கொள்ளும் திறனும் அவசியம். உகந்த மருத்துவ உதவியும், நடத்தை மேலாண்மையும் ADHD யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆறுதல் அளித்து சமுதாயத்தின் மீதான எதிர்மறையான விளைவுகளைக் குறைப்பதோடு அவர்களது முழு திறனையும் அடைவதற்கும் வழிவகை செய்கிறது.
    செறிவற்ற தன்மை, அதீத செயல்பாடு, மன இறுக்கம் போன்றவைகள் வழக்கமாக இக்குழந்தைகளின் பொதுவான பண்புகள் ஆகும். வளர வளர நாடகத்தன்மையுடனான செயற்பாடுகளும், அமைதியற்ற தன்மையும் வளர்ந்துவிடுகிறது.

    இதுமட்டுமல்லாமல் இந்தக் குறைபாடுகளின் தொடர்புடைய மற்ற பெரும் பிரச்சனைகளும் அதிகம். இதில் பெற்றோர், உறவினர், சமூகம் சார்ந்த பிரச்சனைகள் குறிப்பிடத்தக்கன. பெற்றோருக்கு ஆலோசனை மற்றும் ஆதரவை வழங்குவது முக்கியம். ஒரு சாதாரண பெற்றோரின் கோரிக்கைகள் மற்றும் நடத்தை தொடர்பான ஆலோசனையுடன் பதிலளிக்காதபோது ஆரம்ப கட்டத்தில் அந்த பெற்றோர் மன அழுத்தத்திற்கு ஆளாகநேரலாம். பெற்றோர் குழந்தைகளுடன் மற்றும் அவர்களது கவனிப்பாளர்களோடு குழந்தை தொடர்புடைய செயல்பாடுகளில் கவனம் கொள்வதோ அல்லது உதவி புரிவதோ மேற்கொண்டால் அவை பெற்றோரின் மன அழுத்தத்தை குறைப்பதில் பயனுள்ளவையாக உள்ளதாகவும் ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

    ஆரம்பப் பள்ளி ஆண்டுகள்

    இயல்பான வகுப்புத் தோழர்கள் பள்ளியில் வெற்றிகரமாக கற்றுக் கொள்ளும் திறன் மற்றும் முதிர்ச்சியை வளர்த்துக் கொள்ளத் துவங்குவதால் ADHD குறைபாடுகளுடன் உள்ள குழந்தை வித்தியாசமாக காட்சியளிக்கிறது. பெரும்பாலும் குழந்தைக்கு கல்வியில் பின்தங்கும் நிலை, அனுபவங்களை நிராகரிப்பது, குறைந்த சுயமதிப்பீடு, குறிப்பிட்ட கற்றல் சிரமங்கள் போன்ற பிரச்சினைகள், குழந்தையின் மன நிலையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஒரு கல்வி உளவியலாளரின் மதிப்பீடு, அந்தக் குழந்தைக்கான கற்றல் திறன் மற்றும் சிரமங்களை வெளிப்படுத்த உதவும் என்பதால் அவர்கள் வகுப்பறையில் தேவையான ஆதரவையும் ஆலோசனையையும் வழங்கச் செய்யலாம். பாதிக்கப்பட்ட குழந்தைகளை மற்ற குழந்தைகள் ஒதுக்கி வைப்பதையும் தகுந்த அறிவுரைகள், ஆலோசனைகளுடன் மாற்ற முயற்சி எடுக்கவேண்டும்.

    பல குழந்தைகள் மிகவும் குறைவாகத் தூங்கும் வழக்கங்களைக் கொண்டுள்ளனர். இதனால் தூக்கம் மோசமாகப் பாதிக்கப்படும்போது இவர்களின் பகல் நேர நடத்தைகளும் கூட மோசமாகிவிடுகின்றன. இதன் விளைவாக, பெற்றோர்கள்களுக்கு சிறிதளவேனும் ஓய்வற்ற சூழல் உருவாகிவிடுகிறது; குழந்தையின் மீது முழுநேர கவனம் செலுத்தவேண்டியதாகிறது. இதனால் பல நேரங்களில் குடும்ப உறவுகள் கடுமையாக பாதிக்கப்படுவதோடு சில சந்தர்ப்பங்களில் கூடுதல் சமூக மற்றும் நிதி சிக்கல்களையும் கொண்டு வருவதில் ஆச்சரியம் இல்லை. இதையெல்லாம் தாங்கினாலும் குழந்தைகளின் சோகமான உணர்வையோ அல்லது கோபமான நடத்தையையோ தாங்கிக்கொள்ள முடியாமல் வேதனைப்படுகிறார்கள்.

    ADHD பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மதிப்பிடுவது எளிதன்று. இது போன்ற குழந்தைகளின் நடத்தை மதிப்பீடுகள் வழக்கமாக பெற்றோர்கள், ஆசிரியர்கள் அல்லது சுகாதார வல்லுநர்களால் செய்யப்படுகின்றன. பொதுவாக ஒரு ஆரோக்கியமான குழந்தை எப்படிப்பட்ட மன நிலையில் இருக்கும் என்பதை ஊகிக்க முடிவது போன்று ADHD குறைபாடு உடைய குழந்தைகளின் மன நிலையை ஊகிப்பது இயலாத காரியமாகலாம். காரணம் அவர்களின் சுய மதிப்பீடு கட்டுப்பாட்டிற்குள் இருப்பதில்லை. இது போன்ற நடவடிக்கைகளால் குடும்பத்தின் அமைதிக்கு ஏற்பட்ட சீர்குலைவு காரணமாக, பாதிக்கப்பட்ட குழந்தைகளின் உடன்பிறந்தவர்களுக்கும் அந்த கவலையும் சோகமும் தொற்றிக்கொள்கின்றன.

    ADHD சகோதரர்களிடமிருந்து கடுமையான உடல்நலம் வன்முறை, வாய்மொழி ஆக்கிரமிப்பு மற்றும் கையாளுதல் மற்றும் கட்டுப்பாடு ஆகியவற்றின் மூலம் ஆக்கிரமிப்பு செயல்களால் பாதிக்கப்பட்டதாகக் கருதும் உடன்படிக்கைகள் தெரிவிக்கின்றன. அதோடு, ADHD உடன் தொடர்புடைய சமூக மற்றும் உணர்ச்சியற்ற தன்மை காரணமாக அவர்களின் ADHD சகோதரர்களைப் பராமரிக்கவும் பாதுகாக்கவும் பெற்றோர்கள் எதிர்பார்க்கிறார்கள் என்று உடன்பிறப்புகள் தெரிவித்தன. மேலும், ADHD அறிகுறிகளின் விளைவாக மற்றும் அதன் விளைவாக ஏற்பட்ட சீர்குலைவு காரணமாக, பல உடன்பிறந்தவர்கள் கவலை, கவலை மற்றும் சோகமாக உணர்கின்றனர்.

    எவ்வாறாயினும், சமூகம் மற்றும் குடும்ப செயல்பாட்டில் வெளிப்படையான முன்னேற்றம், குழந்தை மற்றும் அவர்தம் குடும்பத்தின் தொடர்ச்சியான வாழ்க்கைத் தரத்தை மதிப்பீடு செய்வதற்கான மேலும் பல ஆராய்ச்சிகள் தற்போதய அவசரத் தேவையாகிறது. இதற்கான முழுமையான ஆய்வுகளை அனைத்துத் தளங்களிலும் மேற்கொண்டு இந்த குறைபாடுகளினால் ஏற்படும் பிரச்சனைக்களுக்குத் தீர்வு காண்பது சவாலான காரியமாகவே உள்ளது என்பதில் ஐயமில்லை. அரசு மற்றும் பொது நல சேவை அமைப்புகளும் இணைந்து இப்பணியை மேற்கொண்டு விரைவில் செயல்படுவது அவசியமாகிறது.

     

    Share
  • நலம் .. நலமறிய ஆவல் 128

    நிர்மலா ராகவன்

     

    இந்த ஆண்களை..!

    `இந்தப் பெண்களை புரிந்துகொள்ளவே முடியாது!’ திருமணமான பல ஆண்களின் கூற்று இது.

    இந்தக் குழப்பத்தைச் சமாளிக்க ஏதாவது முயற்சி எடுத்துவிட்ட பிறகு, `இது வேண்டாத வேலை!’ என்று வேறு முயற்சிகளில் ஈடுபட்டுவிடுவார்கள்.

    ஆண்களோ, பெண்களோ, இப்போதெல்லாம் முப்பது வயதிலும் திருமணம் செய்துகொள்ளத் தயங்குகிறார்கள். சிறிதுகாலம் பழகியபின்னரும், `சரியான துணைதானா?’ என்ற குழப்பம் ஏற்படுவதைத் தடுக்க முடிவதில்லை. தமது சுதந்திரம் பறிபோய்விடும் என்ற அச்சமும், `புதிய குழப்பங்களுக்கு ஆளாக வேண்டுமா!’ என்ற தயக்கமும் ஒரு காரணம்.

    திருமணம் ஆனபின்பு, ஆண்களில் சிலர் தம்மைப்போலவே குழம்பிப்போயிருக்கும் நண்பர்களை நாடுவார்கள். வேறு சிலர் விளையாட்டுகளில் ஈடுபட்டு, உடலுக்கு அளிக்கும் கடும்வேலையால் தம்மை மறக்க முயற்சி செய்வார்கள்.

    இன்னும் சிலர், `நம் மனைவிதான் அப்படியோ?’ என்ற சந்தேகம் எழ, அதை நிவர்த்தி செய்துகொள்ளும் சாக்கில் பிற பெண்களுடன் உறவு பூண்டு, இறுதியில், `எல்லாப் பெண்களும் ஒரே லட்சணம்தான்!’ என்ற கசப்பான முடிவுக்கு வருகிறார்கள்.

    கதை

    `மனைவி என்றால், அவள் என் எண்ணங்களுக்கு ஒத்துப்போக வேண்டும். நான் சொல்கிறபடியெல்லாம் நடக்கவேண்டும்!’ என்ற சராசரி ஆணின் எதிர்பார்ப்புடன் விமலாவை மணந்தான் மனோகரன்.

    அவளோ சுதந்திரமாக வளர்க்கப்பட்டிருந்தவள். முதலில் கணவன் சொற்படியெல்லாம் கேட்டவளுக்குச் சில மாதங்களிலேயே மனநிம்மதி பறிபோக, கணவனின் ஆதிக்கத்தை எதிர்ப்பதுதான் வழி என்று தோன்றிப்போயிற்று. அடிக்கடி சண்டை வந்தது.

    இத்தனை நாட்களும் அடங்கி இருந்தவளுக்கு இப்போது என்ன வந்தது என்று குழம்பினான் மனோகரன்.

    நாள் முழுவதும் அன்று காலையில் நடந்த சம்பவமே விமலாவின் மனதில் திரைப்படமாக ஓட, அவளுடைய ஆத்திரம் அதிகரித்துக்கொண்டே போய்விடும்.

    வேலை முடிந்து மனோகரன் வீடு திரும்பும்போது முகத்தைத் திருப்பிக்கொண்டு அப்பால் போய்விடுவாள். அலுத்துக் களைத்து வீடு வரும் ஒருவனுக்கு இப்போது எப்படி இருக்கும்?

    அவனும் எரிந்து விழுவான். அவளும் பதிலுக்குக் கத்துவாள்.

    பெண்களும் கணினியும் ஒன்று!

    கணினி எப்படி தன்னிடத்தில் உள்ள ஒரு செய்தியை மறவாது அப்படியே வைத்திருக்கிறதோ, அதேபோல்தான் பெண்களும். ஆனால் ஒரு வித்தியாசம். நல்லனவற்றை எளிதில் மறந்துவிடுவார்கள், அல்லது அலட்சியப்படுத்திவிடுவார்கள். எதிர்மறையான சம்பவங்கள், அவைகளுக்குக் காரணமாக இருந்த உணர்ச்சிகள் – மன இறுக்கம், வருத்தம், கோபம் போன்றவை — அவர்கள் மனதில் நிலைத்திருக்கும்.

    ஆண்களோ, இதற்கு நேர் எதிர். நிம்மதியைக் குலைக்கும் நினைவுகளை உடனுக்குடன் மறந்துவிடுவார்கள். அவர்களைப் பொறுத்தவரை, காலையில் நடந்த வாக்குவாதம் அத்துடன் முடிந்துபோய்விட்டது.

    இப்போது மனைவி முகத்தைத் திருப்பிக்கொண்டு போனது மனோகரனுக்கு எரிச்சலைத்தான் தராமல் என்ன செய்யும்?

    “என்ன கோபம்?” புரியாமல் கேட்டான்.

    “அப்படிச் சொன்னீர்களே..!” என்று விமலா விளக்கியபோது, “அதை இன்னுமா நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறாய்? அலுவலகத்தில் ஏதோ பிரச்னை,” என்றான், அலட்சியமாக.

    தற்காலத்தில் வெளிவேலைகளில் பெண்களும் ஈடுபடுவதால், ஆண், பெண் இருவருக்குமே மன இறுக்கம் வர நிறைய காரணங்கள் இருக்கின்றன. இத்தருணங்களில் ஆண் விலகி இருக்கிறான். இதனால் அவனுக்கு மனைவியைப் பிடிக்கவில்லை என்று அர்த்தமாகாது. அவளைப்போல் அவனுக்குத் தன் உணர்ச்சிகள் புரிவதில்லை.

    ஆண்களுக்குப் பெண்களின் உடல்மொழி, குரலின் தளர்ச்சி இதெல்லாம் புரிவதில்லை. பெண்களும் வெளிப்படையாகச் சொல்லமாட்டார்கள். பிரச்னை எழாமல் என்ன ஆகும்?

    வெளிப்படையாகச் சொன்னால்தானே தெரியும்?

    அவள் (மனக்குறையுடன்): கல்யாணமான புதிதில் நீங்கள் என் விரல்களையெல்லாம் காதலுடன் கடிப்பீர்கள். இப்போது உங்களுக்கு என்மேல் உள்ள ஆசை போய்விட்டது.

    அவர்: அவ்வளவுதானே! செய்தால் போயிற்று. என் பல் செட்டை எடுத்துக்கொண்டு வா!!

    `இந்த ஆண்களைப் புரிந்துகொள்ளவே முடியாது!’

    பள்ளிக்கூடத்திலும், கல்லூரியிலும் ஆண்களுடன் சேர்ந்து படித்த பெண்களால்கூட ஆண்களைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

    ஒரு பெண் தன் தந்தைக்கு மிக நெருங்கியவளாக இருந்தால்தான் பிற ஆண்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், பருவ வயதிலும் அவர்களுடைய உறவின் இறுக்கம் தளர்ந்துவிடாமல் இருக்கவேண்டும்.

    இரு பாலருக்குமே ஏன் இவ்வளவு குழப்பம் என்றால், ஆண்களின் மனப்போக்கும், பெண்களுடையதும் ஒரே மாதிரி இருப்பதில்லை.

    கணவர் அனுதினமும் `ஐ லவ் யூ!’ சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கும் பெண்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். ஏனெனில், ஆண்கள் பெண்களைப்போல் அவ்வளவு எளிதாக உணர்ச்சிகளை வெளிக்காட்ட மாட்டார்கள். மாறாக, செயலில் காட்டுவர். வீட்டையோ, தோட்டத்தையோ சுத்தப்படுத்துவார்கள். சமையலறையில் உடைந்த சாமான்களை பழுதுபார்ப்பார்கள். இது புரிந்து, கணவனும் மனைவியும் ஒரே காரியத்தில் – அது விளையாட்டோ அல்லது உடலுறவோ –ஈடுபட்டால் உறவு பலப்படும்.

    சொந்தக்கதை

    முப்பது வருடங்களுக்குமுன், தெரியாத்தனமாக நான் நிறைய ஆர்கிட் செடிகள் வாங்கினேன். நோஜாச்செடி ஐந்து வெள்ளியென்றால், ஆர்கிட் செடியின் விலை அதைப்போன்று மூன்று மடங்கு. பூத்தால் வாரக்கணக்கில் அப்படியே இருக்குமே! ஆனால், அவைகளைப் பூக்கவைக்க பட்ட பாடு!

    ஒவ்வொரு வார இறுதியிலும் ஒரு பெரிய பேசினில் தண்ணீர் நிரப்பி, அதில் எருவைப்போட்டுக் கலக்கி, ஒவ்வொரு செடியாக பதினைந்து நிமிடங்கள் ஊற வைக்கவேண்டும்.

    என்னுடன் ஒத்துழைத்த கணவருக்கு உற்சாகமாக இருந்தது. Felt romantic. ஒரே வேலையில் இணைந்து செய்கிறோமே!

    எனக்கோ செடிகளைப் பராமரிப்பதே தலையாய வேலையாகிப் போயிற்று. விடுமுறை நாளில் எங்கும் உல்லாசமாகச் செல்ல முடியவில்லை.

    ஒரு வருடம் நன்றாகப் பூத்தபின், `இந்தக் கஷ்டத்திற்கு கணவருடன் சண்டை போடுவதே மேல்!’ என்று தோன்றிப்போக, செடிகளைப் பிறருக்குக் கொடுத்துவிட்டேன்.

    பிரத்தியேகமான பொழுதுபோக்கு

    ஒரே காரியத்தைச் செய்தாலும், நெடுநேரம் ஒன்றாக இணைந்திருந்தால் அலுப்புத் தட்டாதா! கணவன் மனைவி இருவருக்குமே தனித்தனி பொழுதுபோக்கும், தனியாகக் கழிக்க அவகாசமும் அவசியம். (தேனிலவு இதில் சேர்த்தியில்லை). வெவ்வேறு பொழுதுபோக்காக இருந்தாலும், அவைகளைப்பற்றி கலந்து உரையாடினாலே நண்பர்களைப்போல நெருக்கம் ஏற்படும்.

    கவனக்குறைவல்ல

    `என் கணவர் நான் பேசும்போது கவனிப்பதே கிடையாது. அவருக்கு என்னைவிட தினசரியைப் படிப்பதும், தொலைகாட்சியும்தான் முக்கியம்!’ என்று அலுத்துக்கொள்ளும் பெண்களுக்கு ஒன்று புரிவதில்லை. மனைவி பேசும்போது, `உம்,’ `சரி’ என்று முனகியபடி, வேறு எதிலோ கவனம் செலுத்துவதுபோல் காணப்பட்டாலும், அவர்களுக்குக் காது கேட்கும். கவனமும் உண்டு.

    புகழுங்கள்

    ஆண்கள் தம் மனைவியைப்பற்றிப் பிற ஆண்களிடம் பெருமையாகப் பேசிக்கொள்வார்கள்.

    `இதையெல்லாம் மனைவியின் எதிரே கூறினால், அவள் கை ஓங்கிவிடுமோ?’ என்ற பயம் எழ, அவளிடம் வீறாப்பு காட்டுவார்கள்.

    இரு தரப்பினருக்கும் பாராட்டு வேண்டியிருக்கிறது. வெளியில் அலைந்துவிட்டு வரும் மனைவி, `நல்லவேளை, பாலைக் காய்ச்சி வைத்துவிட்டீர்கள்!’ என்று கணவனிடம் நன்றி தெரிவிக்கிறாள்.

    பதிலுக்கு, `இன்று பயற்றங்காய் பொரியல் முறுமுறுவென்று, நன்றாக இருந்தது!’ என்று மனைவியைப் பாராட்டுகிறான்.

    அவள் உற்சாகமாக, `எண்ணை அதிகமாகாது இருக்க, கடைசியில் ஓட்ஸைப்போட்டு, சற்று வதக்கினேன்,’ என்பாள். அடுத்தமுறை, இன்னும் கவனமாகச் சமைப்பாள்.

    இப்படி ஒருவர் செய்யும் நற்காரியத்தை உடனுக்குடன் புகழலாமே! சண்டை போடுவதைவிட இம்முறை எளிதானது. நல்ல பலனையும் அளிக்கும்.

    தொடருவோம்

    Share
  • நல்வாழ்வுக்கு வழிகாட்டும் நாலடி – 20

    -மேகலா இராமமூர்த்தி 

    அகத்திலே அன்பின்றி வேற்று ஆடவரின் பொருளைக் கைப்பற்றுவதை நோக்கமாய்க் கொண்டுப் புறத்தே போலி அன்பைக் காட்டுபவர்கள் வரைவின் மகளிராகிய பொதுமகளிர். அத்தகு நாணும் நற்பண்புமில்லா மகளிரின் தொடர்பைத் தவறென்று முதன்முதலில் கண்டித்தவர் வாழ்வியல் அறிஞரான வள்ளுவப் பேராசான். வள்ளுவத்தை அடியொற்றி நாலடியும் நடைபயின்று, பொதுமகளிரின் இயல்பையும் இழிகுணத்தையும் பொருத்தமான உவமைகள் வாயிலாய் விளக்கி அவர்தம் தொடர்பை விலக்க வேண்டும் என்று அறிவுறுத்துகின்றது.

    எழிலும் பரந்த இடமும் கொண்ட விண்ணுலகின்கண் வாழும் தேவர்களால் தொழப்படும் செந்தாமரைக்கண்ணனாகிய திருமாலை ஒப்பவனாயிருந்தாலும், கொடுப்பதற்குரிய கைப்பொருள் இல்லாதவனாயின், (அவன் பொருளிலேயே நாட்டமுடைய) தளிர் மேனியுடைய பொதுமகளிர் தம் கைகளால் வணங்கி அவனுக்கு விடைகொடுத்துவிடுவர். 

    அங்கண் விசும்பின் அமரர் தொழப்படுஞ்
    செங்கண்மா லாயினும் ஆகமன் – தங்கைக்
    கொடுப்பதொன் றில்லாரைக் கொய்தளி ரன்னார்
    விடுப்பர்தங் கையாற் றொழுது. 
    (நாலடி – 373)
     

    ”நீ செங்கண்மாலே ஆயினும் ஆகுக, எங்கள் அன்பைப்பெறுதற்குரிய ஒண்பொருள் உன்னிடமின்மையின் இங்குமக்கு வேலையில்லை, சென்று வருக!” என்று கும்பிடுபோட்டு அனுப்பிவிடும் பொதுமகளிரின் நீர்மையை நேர்மையாய்ப் பேசியிருக்கின்றது மேற்கண்ட நாலடி.

    இன்சுவை மிகுந்த தெளிந்த நீருடைப் பொய்கையில் பாம்புக்குத் தன்னுடலின் ஒரு புறமாகிய தலையைக் காட்டி, மற்றொரு புறத்தே அமைந்துள்ள வாலை  மீனுக்குக் காட்டி அந்தந்த இனத்திற்கு ஏற்றவகையில் ஒழுகி, உயிர்பிழைத்து வாழும் விலாங்கு மீன் போன்ற கள்ளச்செய்கைகளுடைய விலைமகளிரின் தோள்சேரும் காமுகர், விலங்கைப் போன்ற பகுத்தறிவற்ற அறியாமையுடையோர் ஆவர்.

    பாம்பிற் கொருதலை காட்டி ஒருதலை
    தேம்படு தெண்கயத்து மீன்காட்டும் – ஆங்கு
    மலங்கன்ன செய்கை மகளிர்தோள் சேர்வார்
    விலங்கன்ன வெள்ளறிவி னார். 
    (நாலடி –  375)

    விலாங்கு மீனின் தலைப்புறம் பாம்பு போலவும், வால்புறம் மீன் போலவும் இருக்குமாகையால், மீனென்று கருதி பாம்பு இரைபிடிக்க வரும்போது அதற்குத் தலைப்புறங்காட்டி அதன் இனம்போல உலவி உயிர்தப்பியும், தனக்கு உணவாகிய சிறுமீன்கள் பாம்பென்று கருதி அஞ்சி விலகுமாயின் அவற்றிற்கு வால்புறங்காட்டி இரையுண்டு உயிர்பிழைத்தும் அம்மீன் வஞ்சித்து வாழ்தலின், பொருளற்றாரையும் பொருளுற்றாரையும் பகையாதும் நேசித்தும் அவரவர்க்கேற்பக் கள்ளத்தனமாய் ஒழுகிப் பொருள் பறித்து வஞ்சித்து உயிர்வாழும் விலைமகளிர்க்கு அதனை உவமையாய்க் காட்டியிருக்கின்றது நாலடியார். 

     ”தமது பேரழகே தூண்டிலாகவும், அச்சமும் நாணமும் ஊராண் ஒழுக்கமும் ஒப்பனையும் அத்தூண்டிலில் கட்டும் இரையாகவும், உலகத்தில் இளைஞர் திரட்டிய அருங்கலன்களும் பொன்னும் மீனாகவும், அம்மீன்களைப் பிடிக்கும் தமது தொழிலிடத்தே தப்பாத மகளிர்”  என்று பொதுமகளிரின் இயல்பை விவரிக்கின்றது பெருங்கதை எனும் அருந்தமிழ்நூல்.

    …காரிகை கடுநுனைத் தூண்டிலாக
    உட்கும் நாணும் ஊராண் ஒழுக்கும்
    கட்கின் கோலமுங் கட்டிரையாக
    இருங்கண் ஞாலத் திளையோர் ஈட்டிய
    அருங்கல வெறுக்கை யவைமீனாக
    வாங்குபு கொள்ளும் வழக்கியல் வழாஅப்
    பூங்குழை மகளிர்…
    (பெருங்கதை – இலாவாண காண்டம்)

    எனவே கள்ளமனமும் பொருள்நோக்கமும் கொண்ட வரைவின் மகளிரைவிட்டு விலகியிருப்பதே போற்றத்தக்க நல்லாண்மை எனலாம்.

    இனி, கற்புடைய மகளிரின் இயல்புகளை நாலடியார் வழிநின்று ஆராய்வோம்.

    குடநீரட் டுண்ணும் இடுக்கட் பொழுதுங்
    கடனீ ரறவுண்ணுங் கேளிர் வரினும்
    கடனீர்மை கையாறாக் கொள்ளு மடமொழி
    மாதர் மனைமாட்சி யாள். 
    (நாலடி – 382)

    குடத்திலுள்ள நீரையே காய்ச்சிப் பருகிப் பசியாறும் வறுமை வந்துற்ற இன்னாக் காலத்தும், கடல்நீர் முழுமையும் உண்டு பசியாறுதற்குரிய அத்தனை உறவினரும் ஒருங்கு விருந்தாக வந்தாலும், தன் கடமையாகிய விரும்தோம்பும் இயல்பை விடாது மேற்கொள்ளுகின்ற மென்மையான சொற்களையுடைய பெண்ணே, இல்லற வாழ்க்கைக்குரிய மாட்சிமையுடையவள் ஆவாள் என்பது நாலடி நவிலும் நற்கருத்து.

    அக் காலத்தில் விருந்தோம்பும் பண்பே இல்லறத்தினரின் தலையாயக் கடனாய்க் கருதப்பட்டது. அதனால்தான் வள்ளுவமும்,

    ”இருந்தோம்பி இல்வாழ்வ தெல்லாம் விருந்தோம்பி
    வேளாண்மை செய்தற் பொருட்டு.” (81) என்று விருந்தோம்பலை வலியுறுத்துகின்றது.

    ”வறுமை வந்துற்ற காலை விருந்தினரைக் கண்டால் ஒளிந்துவாழ நேரும்; உடம்பின் ஐம்புலன்களும் குறைவின்றி இருந்தாலும் வறுமையானது அறிவைக் கெடுக்கும் இயல்புடைத்து” என்று தன் இன்மையையும், அதுதரும் அவல வாழ்வையும் சோழன் உருவப்பல்தேர் இளஞ்சேட்சென்னியிடம் வேதனையோடு விளம்புகின்றார் பெருங்குன்றூர் கிழார் எனும் புலவர்பெருந்தகை. 

    …உள்ளிய
    விருந்துகண்டு ஒளிக்கும் திருந்தா வாழ்க்கைப்
    பொறிப்புணர் உடம்பில் தோன்றிஎன்
    அறிவுகெட நின்ற நல்கூர் மையே. (புறம் – 266)

    குலமகள் ஒருத்தியின் நல்லியல்பாம் நாணத்தை அருங்குணங்கள் பிறவற்றோடு ஒப்பிட்டு விதந்தோதுகின்றது நாலடியார்ப் பாடலொன்று!

    உள்ளத் துணர்வுடையான் ஓதிய நூலற்றால்
    வள்ளன்மை பூண்டான்கண் ஒண்பொருள் – தெள்ளிய
    ஆண்மகன் கையில் அயில்வாள் அனைத்தரோ
    நாணுடையாள் பெற்ற நலம். (நாலடி –  386)

    உள்ளத்தில் இயற்கை நுண்ணுணர்வுடையானொருவன் கற்ற கல்வியை ஒத்ததாயும், கொடைக்குணம் உடையானொருவனிடத்து மாட்சிமைப்படுகின்ற ஒளிபொருந்திய செல்வத்தை ஒத்ததாயும், வாட்பயிற்சியில் தெளிவடைந்த வீரமிக்க ஆடவனொருவன் கையில் விளங்கும் கூரிய வாட்படையை ஒத்ததாயும் இருக்கின்றது, நாண் முதலிய பெண்ணீர்மைகள் பெற்ற கற்புடைப் பெண்ணொருத்தியின் அழகு முதலிய குணநலங்கள்.

    ”அச்சமும் நாணும் மடனும் முந்துறுதல்
    நிச்சமும் பெண்பாற் குரிய என்ப”
    எனும் தொல்காப்பியக் கோட்பாட்டை அடியொற்றி எழுந்த சிந்தனைகள் இவை எனலாம்.

    ”நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டும்” எனும் (பாரதியின்) பிற்காலச் சிந்தனையை இதனோடு பொருத்திப் பார்த்துக் குழப்பிக்கொள்வது தேவையற்றது. அந்தந்த காலகட்டத்தில் வாழும் மக்களின் வாழ்வியலையும் அவர்தம் சிந்தனையோட்டத்தையும் கண்ணாடிபோன்று பிரதிபலிப்பவையே இலக்கியங்கள் எனும் புரிதல் நமக்குத் தேவை.

    கற்புடைய மகளிரின் இயல்புகளைப் பரக்கப் பேசுகின்ற நாலடியார் பரத்தையரோடு திரிதரும் ஒழுக்கமற்ற ஆடவரின் இயல்புகண்டு வருந்தும் இல்லக்கிழத்தியரின் மனவுணர்வுகளையும் நமக்குப் படம்பிடித்துக் காட்டத் தவறவில்லை.

    கருஞ்கொள்ளுஞ் செங்கொள்ளுந் தூணிப் பதக்கென்று
    ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரன் – ஒருங்கொவ்வா
    நன்னுதலார்த் தோய்ந்த வரைமார்பன் நீராடாது
    என்னையுந் தோய வரும்.
    (நாலடி –  387)

    ”மருதநிலத்து ஊரில் இருந்துகொண்டே அவ்வூரானொருவன் தரங்குறைந்த கருங்கொள்ளையும், உயர்ந்த செங்கொள்ளையும் ஒரே விலைக்கு, தூணிப்பதக்கு என்று ஒரே அளவாக, ஒன்றாய் வாங்கினானாம்; அதுபோலப் பெண்மையியல்பில் என்னோடு ஒருங்கு ஒவ்வாத நன்னுதல் பரத்தையரை மருவிய மலைபோலும் பெரிய மார்பினையுடைய என் கணவன் நீராடி உடல்தூய்மையும் செய்யாது என்னையும் தழுவ வருகின்றான்” என்று அவன் இழிகுணத்தை எண்ணி வருந்தி ஊடுகின்றாள் இல்லக்கிழத்தி.

    தூணி என்பது நான்கு மரக்காலும், பதக்கு என்பது இரண்டு மரக்காலுமாகத் தூணிப் பதக்கென்பது ஆறு மரக்காலளவைக் குறிப்பதாகும்.

    பரத்தையரிடம் சென்ற தன்னிடம் ஊடியிருந்த தலைவியைச் சமாதானம் செய்யப் பாணன் ஒருவனை அனுப்புகின்றான் தலைவன். அவனிடம் தலைவி கூறும் மொழிகள் இவை:

    அரும்பவிழ் தாரினான் எம்அருளும் என்று
    பெரும்பொய் உரையாதி பாண – கரும்பின்
    கடைக்கண் அனையம்நாம் ஊரற் கதனால்
    இடைக்கண் அனையார்க் குரை.  
    (நாலடி – 390)

    அரும்புகள் போதாகி மலரும் மாலையை அணிந்த எம் தலைவன் எமக்குத் தலையளி செய்ய வருகின்றான் என்று பெரியதொரு பொய்ம்மொழியை எம்மிடம் மொழியாதே பாண! ஊரனாகிய எம் தலைவனுக்கு யாம் கரும்பின் நுனிக் கணுக்கள் போலச் சுவையில்லாமல் இருக்கின்றோம். ஆதலால், அதன் நடுக் கணுக்களை ஒப்ப அவனுக்குச் சுவைமிக்கவரான பரத்தையரிடம் இதனைச் சொல் என்று சினந்து கூறுகின்றாள்.

    அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும். அஃதொப்ப ஆராக்காமம் இல்வாழ்வுக்குத் தீராத்துன்பத்தை தந்துவிடக் கூடியது என்பதை மருதத்திணையில் காட்டப்படும் தலைவர்களின் பரத்தமை ஒழுக்கமும் அதனால் வெளிப்படும் தலைவியரின் மனவேதனையும் தெற்றெனப் புலப்படுத்துகின்றது.

     [தொடரும்]

    *****

    துணைநூல்கள்:

    1. நாலடியார் மூலமும் உரையும் – திரு. தி. சு. பாலசுந்தரம்       பிள்ளை
    2. திருக்குறள் தெளிவுரை – மு. வரதராசனார்

     

     

    Share
  • வாழ்ந்து பார்க்கலாமே – 37

    க. பாலசுப்பிரமணி

     

    தோல்விகளுக்கு பொதுவான காரணங்கள் என்ன?

    வெற்றியும் தோல்வியும் ஒரு நிகழ்வின் இரண்டு எதிர்மறையான பரிமாணங்கள். வெற்றிவாகை சூடி மதம் பிடித்த உள்ளங்களோடு உலவுவதும் தோல்வியைக் கண்டு துவண்டு ஒதுங்குவதும் நலமான முதிர்ச்சியும் வளர்ச்சியும் அடைந்த உள்ளங்களின் வெளிப்பாடுகள் அல்ல. நிகழ்வுகள் பயணங்கள் ஆவதில்லை. பல நேரங்களில் தோல்விகள் எழுப்பும் வினாக்களிலே வெற்றிக்கான வித்துக்கள் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அவைகளை நாம் ஏன் கண்டுகொள்வதில்லை என்று நம்மைப் பார்த்து ஏளனம் செய்து கொண்டிருக்கும். எனவே தோல்விகளின் இடைப்பாடுகளில் நடுவே அமர்ந்து அலசி ஆராய்ந்து நம் தவறுகளைத் திருத்திக் கொள்வதே உண்மையான கற்றலாகும். இந்த அலசலைச்  செய்யவோ அல்லது அவைகளின் உண்மைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது புரிந்துகொள்ளவோ  நாம் தயங்கக்கூடாது அல்லது வெட்கப்படக்கூடாது. வெற்றி தோல்விகளின் காலப் பரிமாணங்கள் மிகவும் குறைவானவை. அவற்றைக் கடந்து வாழ்வின் இலக்கையும் வளத்தையும் மேன்மையையும் உணர்ந்து முன்னே செல்லக் கற்றுக்கொள்ளவேண்டும்.

    தோல்விக்குத் துணை போகும்பொழுது நம்பிக்கையின் ஆணிவேர்கள் அசைக்கப் படுகின்றன. அதற்கு இடம் கொடுக்கும் பொழுது அது நம்மைப் பார்த்து சிரிப்பது மட்டுமின்றி நம்மை நாமே தரக்குறைவாக எடைபோடக் காரணமாகின்றது.” நம்முடைய வீழ்ச்சிக்கு வேறு யாரும் பொறுப்பேற்க முடியாது. அதன் முழுப்பொறுப்பும் நமதே.” என்றும் “நம்முடைய சம்மதமின்றி யாரும் நம்மை வீழ்த்த முடியாது ” என்றும் மனநல வல்லுநர்கள் உறுதியாகக்  கூறுகின்றனர்.

    iதோல்வியை நாம் ஏன் ஏற்றுக்கொள்கின்றோம்? நமது தோல்விகளுக்கான பொதுவான காரணங்கள்தான் என்ன? சிலவற்றைக் காண்போமே !

    1. நமது இலக்குகளில் தெளிவு இல்லாமல் இருக்கலாம்.
    2. இலக்கை நோக்கிச் செல்லும் பாதைகள் தவறாக இருக்கலாம்.
    3. நமக்கே அந்த இலக்குகள் மீது போதுமான நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம்.
    4. நம்து முயற்சிகள் போதுமானதாக இல்லாமல் இருக்கலாம்
    5. நமது முயற்சியின் வேகமும் தாக்கமும் வலுவானதாக இல்லாமல் இருக்கலாம்.
    6. நமது திறன்கள் வெற்றியை அளிப்பதற்கு உகந்ததாக இல்லாமல் இருக்கலாம்.

    7, நாம் பல நேரங்களில் நமது பார்வைகளை மற்றவரிடம் செலுத்தி அவர்களோடு ஒப்பிட்டு நமது திறன்களுக்கும்  முயற்சிகளுக்கும் சவால் விட்டுக்கொண்டிருக்கலாம்.

    1. நமது கற்றல், திறன்கள், ஆக்க சக்திகள் ஆகியவற்றை விலக்கி நாம் மற்றவர்களுடைய திறன்கள் ஆக்க சக்திகள் ஆகியவற்றை நமது பாதைகளில் இறக்குமதி செய்து முன்னேற்றத்திற்கு நாமே தடைக்கல்களை உருவாக்கிக் கொண்டிருக்கலாம்.
    2. நமது செயல் கருவிகள் துருப்பிடித்தாக இருக்கலாம்.

    10.முயற்சிப் பாதைகளில் நாம் புதிய கற்றல்களைத் தவிர்த்து பின்னடைந்து கொண்டிருக்கலாம்.

    மேடைகளில் ஏறி பலமுறை முயன்றும் சரியாகப் பேச முடியாமல் திணறிய வின்ஸ்டன் சர்ச்சில் உலகின் ஒரு மிகச் சிறந்த பேச்சாளராக மாறியது சரித்திரம் கண்ட உண்மை. தன்னுடைய படைப்புக்கள் பல முறை திரும்பி வந்ததால் மனம் நொந்து போன ஜார்ஜ் பெர்னார்ட் ஷா உலகின் மிகப் பெரிய படைப்பாளியாக உருவானது உலகம் அறிந்ததே! தான் கண்டுபிடித்த கார்கள் விற்க முடியாமல் கடனில் அவதிப்பட்ட போர்ட் உலகின் ஒரு சிறந்த தொழிலதிபராக முன்னேறியது யாவரும் அறிந்ததே!

    படிக்கும் காலத்தில் நேரத்தை வீணடித்து நம்முடைய திறன்களை சீரழித்து மற்றவர்களுடைய மகிழ்ச்சியை நமது மகிழ்ச்சியாக நினைத்து தோல்விகளை முடிவுகளாகக் கருது எத்தனை இளைஞர்கள் மனநோய்களுக்கு இரையாகி இருக்கின்றார்கள்! இது வேதனையான விசயம். அது மட்டுமல்ல நாம் மற்றவர்கள் போல் வாழ முடியவில்லையே என நினைத்து வாழ்க்கையை முடித்துக் கொள்ள முயற்சிக்கின்றார்கள்” அவர்கள் தோல்விகளின் காரணங்ளைப் புரிந்து கொள்ளவேண்டும்.

    சில நேரங்களில் நாம் எத்தனை முயற்சிகள்  செய்தாலும் பலன் கிடைப்பதில்லை..  காற்று எதிர்நோக்கி வீசுகின்றது. நம்மால் அடுத்த அடி எடுத்து வைக்க முடியவில்லை. “எதிர்நோக்காகக் காற்று வீசும் பொழுது திறமையான மாலுமிகள் தங்கள் பாய்மரங்களின் திசைகளை மாற்றி சரி செய்து கொள்ளுகின்றார்கள்” என்பது ஒரு வழக்கு மொழி. இதன் உட்கருத்தைப் புரிந்து செயல்படுபவர்கள் பாதிப்புக்களுக்கு ஆளாவதில்லை.

      பல நேரங்களில் நம்முடைய தோல்விகளுக்கு முன்னேற்றத் தடைகளுக்கும் காரணமாக இருப்பது நம்முடைய “இயலாமை மனப்போக்கு’  என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். காலப்போக்கில் இந்த மனப்போக்கு ஒரு உள்ளடங்கிய கற்றலாக மாறி எந்தப் புதிய முயற்சியிலும் திறனாக்கத்திலும் தடைக்கல்லாக அமைகின்றது. இதன் காரணமாக நாம் அடிக்கடி ” இது எனக்கு வராது. இதை என்னால் கற்றுக்கொள்ள முடியாது. இதற்கும் எனக்கும் ரொம்ப தூரம். இந்தக் கற்றலின பாக்கியத்தை இறைவன் எனக்கு அளிக்கவில்லை. ஒரு வயதுக்கு மேல் நாம் இந்தப் புதிய கற்றலலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். இந்த வயதில் மூளை வேலை செய்யாது ” என்ற பலப்பல காரணங்களைக் கண்டுபிடுத்து  நம்மைச் சிறைப் படுத்திக்கொள்கின்றோம். இவை அத்தனையும் இயலாமை மனப்பான்மையின் அறிகுறிகள்.

     தற்போதைய அறிவியல் ஆராய்ச்சிகள் நமது மூளையின் திறன்களையும் ஆக்க சக்தியையும்  வெளிச்சம் போட்டுக்காட்டி நமது தொடர் கற்றலின் ஆற்றல்களை விளக்குகின்றன.

    தோல்விகளைக் கண்டு துவழாமலும் வெற்றிகளின் போதையில் மயங்காமலும் சீராக வாழ்ந்துபார்க்க முயற்சிக்கலாமே !

    தொடரும்..

    Share