மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகளில் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகள்

1

-முனைவர் அரங்க.மணிமாறன்

முன்னுரை:    

சிறுகதை இலக்கியங்கள் தமிழ்மக்களின் ஓய்வுநேரங்களைச் சுகப்படுத்தவும் நன்னெறி ஊட்டவும் கற்பனைகளைக் கொட்டித்தீர்க்கவும் தொன்ம-புராணங்களை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்சொல்லவும் பயன்பட்டன.

இன்றைய காலக்கட்டத்தில் சித்தாந்த வேதாந்த கருத்துக்களின் வெளிப்பாட்டுக் கருவியாகப் பயன்பட்டு வருவதை உணரமுடிகிறது. காலத் தேவைக்கேற்ப விடுதலைச் சிந்தனைகளையும் பெண்ணியச் சிந்தனைகளையும் சமுதாயத்தில் நிலவும் சாதியப் பொருளாதாரச் சிக்கல்களையும் இசங்களின் கருத்துவெளிப்பாடுகளையும் பொருண்மைகளாகக் கொண்டு விளங்குகின்றன.

அத்தகைய சிறுகதை வரலாற்றில் மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகளில் வெளிப்படும் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகளை வெளிக்காட்டுவதாய் இக்கட்டுரை அமைகிறது.

மேலாண்மை பொன்னுச்சாமி:

மேலாண்மை பொன்னுச்சாமி விருதுநகர் மாவட்டம் மேலாண்மறை நாட்டில் பிறந்தவர். ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்தவர். இளம் வயதிலேயே தந்தையை இழந்ததால் வாழ்வின் துன்பங்கள் கற்றுத்தந்த பாடங்களை நிறையவே படித்தவர். ஊரில் மளிகைக்கடை நடத்தியவர். பள்ளிப்படிப்பை நிறுத்தினாலும் சுயவிருப்பமாக இலக்கியங்களைக் கற்றுத்தேர்ந்தவர். கதை படைப்பிலக்கத்தில் ஆர்வமும் ஈடுபாடும் கொண்டு முப்பத்தாறு நூல்களைப் படைத்தளித்துள்ளார்.

அன்னபாக்கியன் அன்னபாக்கியச்செல்வன் முதலிய புனைப்பெயர்களில் எழுதியவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பொதுச்செயலாளராக விளங்கியவர். இடதுசாரியச் சிந்தனையாளர்.

இருபத்திரண்டு சிறுகதைநூல்கள், ஆறு நாவல்கள், ஆறு குறுநாவல்கள், ஒரு கட்டுரை நூல் என எழுத்துலகில் தடம்பதித்தவர். மனப்பூ சிறுகதைக்காகத் ‘தமிழக அரசின் விருது’ வடஅமெரிக்கத் தமிழ்ச்சங்கத்தின் ‘மாட்சிமை விருதும் கேடயமும்’ பெற்றவர். உயிர்காற்று சிறுகதைக்காக ‘பாரத ஸ்டேட் வங்கி விருதும்’ ‘கல்கி சிறுகதைப் போட்டி விருது’ ‘ஆனந்தவிகடன் பவளவிழா முத்திரைப்பரிசு’ பெற்றவர்.

இவரது சிறுகதைகள் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைக்கப்பட்டது. பாட்டையா சிறுகதை 12ஆம் வகுப்புப் பாடமாக அமைந்தது. இவரது சிறுகதைகளை ஆய்வுசெய்து பத்து இளநிலை ஆய்வும் நான்குபேர் முனைவர் பட்ட ஆய்வும் மேற்கொண்டு சிறப்பு அடைந்தனர். எல்லாவற்றிற்கும் மேலாக 2007ஆம் ஆண்டு ’மின்சாரப்பூ’ சிறுகதை நூல் சாகித்திய அகடெமி விருதுபெற்றது.

‘சமரசமற்ற போர்க்குணம் மிக்க படைப்புகள்தாம் என் லட்சியம்’1 என்ற கொள்கையோடு எழுதிய மேலாண்மை பொன்னுச்சாமி 2017 அக்டோபர் 30 இல் மறைந்தார். ஆனால் அவருடைய சிந்தனைகளும் சித்தாந்தங்களும் என்றுமே அழியாமல் நிலைக்கும் என்பதில் ஐயமில்லை.

சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகள்:

இலக்கியங்கள் மனித சமுதாயத்தைப் பிரதிபலிக்கும் காலக்கண்ணாடியாக விளங்குகின்றன. மனிதன் ஒரு சமூகவிலங்கு. ஒரு மனிதன் பிறமனிதரோடு தொடர்புகொள்ளும்போது ஏற்படும் சிக்கல்கள் சமுதாயச் சிக்கல்களாகின்றன. ஒவ்வொரு காலத்திலும் ஒரு குறிப்பிட்ட நாகரிக அமைப்போடு இயைந்து மாற்றமடைந்து வந்திருக்கிறது சமுதாயம். சமுதாயம் (SOCIAL) எனும்சொல் குமுகாயம் எனும் சொல்லிலிருந்து, மனிதர்களின் கூட்டுவாழ்க்கையிலிருந்து உருவானதாகும்.

“SOCIAL என்னும் சமுதாயத்தைக் குறிக்கும் SOCIETY என்னும் ஆங்கிலச்சொல் சமூகம் என்பதை குறிக்கும்.  SOCIAL என்னும் சொல்லோடு நெருங்கிய தொடர்புடையதாகும். எனவே மனிதனை விலங்கிலிருந்து பிரிப்பதே இந்தச் சமூகம் அல்லது சமுதாயம் என்ற சொல்தான்”2  என்கிறார் அ.மு.பரமுசிவானந்தம்.

மனிதனை மனிதனோடு இணைத்து ஒரு சமூக அமைப்பை உருவாக்குவது சமுதாயம். இது “ஓர் ஒழுங்கின் அடிப்படையில் இணைக்கப்பட்டு தனிமனிதர்களுக்கும் அவர்களை பிணைக்கும் உறவுமுறைகளுக்கும் இடைவிடாத மாற்றம் நிகழ்கின்றது; இத்தகு சிக்கல்கள் மாறிக்கொண்டே இருக்கும் அமைப்பையே சமுதாயம் என்பர்”3 என்கிறார் பி.குப்புசாமி.

ஓர் எழுத்தாளன் தன்னைச் சுற்றிய சமுதாய நிகழ்வுகளை இலக்கியத்தில் படைத்துக் காட்டுகிறான். மனிதச்சிந்தனைகள், வழக்காறுகள், நம்பிக்கைகள், குடும்பம், பொருளாதாரம்,அரசியல், பண்பாடு போன்றவற்றைப் பிரதிபலிக்கும் இலக்கிய வகைகளில் சிறுகதையும் ஒன்று. சமுதாயத்தில் நிலவும் அன்றாடப் பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு அவற்றைக் களையும் நல்ல நோக்கத்தோடு எழுதப்படுபவை இச்சமூகப் படைப்புகள். அவற்றுள் சில சமுதாயப் பிரச்சினைகளைப் படம்பிடித்துக் காட்டுகின்றன் சில தீர்வுகளையும் கூறுகின்றன.

“தனிமனித எண்ணங்கள், சமுதாயத்தின் பொதுவான நினைவோட்டம் என்னும் இரண்டு வகையான சிந்தனைகளின் அடிப்படையில்தான் காலங்காலமாக சமுதாயம் இயங்கிவருகிறது’4  என்கிறார் அரு.சின்னசாமி. தனிமனிதனின் போராட்டம், மானிடக் குழுவோடு இணையும்போது உருவாகும் போராட்டம் சமுதாயம் எனும் ஓர் அமைப்பை ஏற்படுத்துகிறது.

ஒரு குறிப்பிட்ட காலத்துச் சமூக நிலைமையின் பிரத்தியேகமான பண்புகளமைந்த பாத்திரங்களைக் கண்டறிந்து படைப்பவனே சமூக நாவல் ஆக்குகிறான்”5  என்கிறார் கைலாசபதி. சமுதாயத்தின் மீதும் அதன் வளர்ச்சிமீதும் மிக்க அக்கறை உடையவரான மேலாண்மை பொன்னுச்சாமி தமது கதைகளில் சமுதாயம் சார்ந்த பல்வேறு சிக்கல்களை முன்வைத்து சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகளை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அமைதி தேசம் மலர வேண்டும்:

தனிமனிதக் கோபங்களும் பேராசைகளும் உலகயுத்தத்தையே உருவாக்குகின்றன. அடுத்தவர் வளர்ச்சிமீதும் வளத்தின் மீதும் பொறாமையும் அவற்றைக் கைப்பற்றி விடவேண்டும் எனும் ஆசையும் கொண்டு உலகப்போர்களை உருவாக்கி பேரழிவுகளுக்கு வழிவகுத்தனர்.

ஆனால் பழந்தமிழர் அறத்தோடு கூடிய போர்முறைகளையே கையாண்டனர். பழந்தமிழரின் ஈரம் செறிந்த வீரம் மறம் எனப்பட்டது. தனக்கு நிகரான போர்த்திறனும் படைக்கலப் பயிற்சியும் பெற்றவர்களோடு மட்டுமே போரிடுவர். ஆவும், பார்ப்பனரும், பெண்களும், பிணியுடையவரும் ஈமக்கடனிருக்கப் புதல்வர் பெறாதவரும் யாம் போரிட இருக்கிறோம். நீங்கள் பாதுகாப்பான பொதுமன்றங்களுக்குச் செல்லுங்கள் என்று முரசறைந்து தெரிவித்த பின்னரே ஒத்த வலிமையுடையரோடு போரிடுவர்.6 (புறநானூற்றுப் பாடல் 9-நெட்டிமையார்). போரில் படைவிட்டவர் புறமுதுகிட்டவர் தனிநின்றவர் ஆகியோரைத் தாக்குதலில்லை.

ஆனால் இன்றைய காலங்களில் போர் முதலியவை ஏற்படும்போதும் வன்முறைகளின் போதும் சாதியக் கலவரங்களின் போதும் அப்பாவிப் பொதுமக்களைக் கொன்று குவிக்கின்றனர். அவர்களது சொத்துக்களைச் சூறையாடுகின்றனர் அப்பாவிப் பெண்களின் கற்பைச் சூறையாடுகின்றனர். சாதியக் கலவரங்களும் அரசியல் தேர்தல் கலவரங்களும் அப்பாவி மக்களையே குறிவைத்து நடக்கின்றன.

பூர்ணம் அப்பாவி இளைஞன். இளம்வயதில் ஏற்பட்ட காய்ச்சலுக்கு சரியான வைத்தியம் செய்யாததால் போலியோ நோய்க்கு ஆட்பட்டு கால்கள் சூம்பிப் போனவன். சதைப்பிண்டமாக சக்கரப்பலகையில் சுற்றிவருபவன். மற்றவர்களின் ஏளனப்பார்வைக்கும் பேச்சுக்கும் ஆளானவன். குடிகாரத் தந்தையால் தன் தாய் மிதித்துக் கொல்லப்பட்டதையும் அடுத்து நடந்த சாதிய வன்முறையில் தந்தை அநியாயமாகக் கொல்லப்பட்டதையும் கண்ணெதிரே கண்டவன். தன் உடற்குறைபாட்டை மற்ற மனிதர்கள் கேலி செய்யும் வன்முறையையும் வெறுப்பவன்.

அவனது குறைபாடு நிறைந்த வாழ்க்கையிலும் மனதுக்கு நிறைவு தரக்கூடிய ஓவியத் திறமையை இறைவன் அவனுக்கு அளித்திருந்தான்.
‘பெறமுடியாத அன்பைத் தருவதில் ஒரு சுகம். ஓர் இதம். பூமி முழுவதையும் அன்புக்காற்றால் நிரப்பிவிட வேண்டும் என்ற ஆசை அவனுக்கு. போலியோவினால் தாக்க முடியாத அன்புப் பிரதேசமாக அவனது ஆகாயமனம்’.7

அவனுக்கு பிளாட்பாரத்தில் ஒரு வெற்றிடம் வேண்டும். மனதில் தோன்றும் எண்ணங்களை ஓவியமாக தீட்டுவான். இன்று என்ன வரையலாம் எனச் சிந்தித்தவனுக்கு இராமர் வரையலாம் என்ற முடிவு எட்டியது. நீலவண்ண இராமர்தான் அன்பின் பேருரு என்று முடிவெடுத்தான். இராமரை வரைந்த பின் வில் அம்புக்குப் பதிலாக அம்பு இருக்க வேண்டியகையில் சமாதானப் புறாவை வரைந்தான்.

‘இன்றைய உலகின் நோயே… வன்முறை தீதான். மருந்து? அன்புநீர்தான். சமாதானத் தென்றல்தான். சமகால வன்முறை நோய்க்கெதிரான இவனது ஓவியப்போர் இது. வில்லேந்திய ராமர் வலது கையில் வெண்புறா.’ அப்போது திடீரென அந்த தெருவில் தேர்தல் கலவரம் மூள்கிறது. ‘முன்னேறித் தாக்குகிற ஆயுதக் கும்பலின் வெறித்தனம் மூர்க்கம்… ராட்சஸமும் ரத்தப்பெருக்கும் மரண ஓலமுமாக… தெருவே ரணகளம்.’8

உயிர் தப்பிக்க ஓடிவந்த ஒருவனை தாக்கவந்த கும்பலில் பூர்ணம் சிக்கிக்கொள்கிறான். கலவரம் முடிந்ததும் வீதியில் வெறுமை. பூர்ணத்தின் பிரேதம் மட்டும் வீதியில் கிடக்கிறது.

அரசியல் சாதிய வன்முறைகள் நீங்கிச் சமாதானம் நாடெங்கும் நிலவவேண்டும் என்று அமைதியை விரும்பியவன் வன்முறையாலே கொள்ளப்படுகிறான். அந்த வழியே வந்த நாய் அவனது வாயில் வழிந்த ரத்தத்தில் அன்பின் வாசமே வீச நாய் நக்காமல் விலகியது!9

இந்த தேசம் மத இன அரசியல் கலவரங்களின்றி அமைதி தேசமாக மலரவேண்டும். வன்முறைக்குப் பலியான கடைசி மனிதன் பூர்ணமாகத்தான் இருக்கவேண்டும் என்ற சிந்தனை இக்கதையின் மூலம் வெளிப்படுகிறது.

பெற்றோர்களைக் காப்போம்:

‘அவன் இருப்பதோ அன்னை இல்லம். அன்னை இருப்பதோ அனாதை இல்லம்’ என்ற கவிதை பெற்றோர்களைப் பாதுகாக்காத இன்றைய சமுதாய நிலையை வெளிப்படுத்துகிறது. இன்றைய அவசர உலகில் தாய் தந்தை முதலிய சொந்தங்களும் சுற்றங்களும் காலாவதியான நாகரிகமாகிவிட்டது. நகர நெருக்கடி வாழ்வில் வாடகைக் குடித்தனத்தில் வயது மூப்பு அடைந்த பெற்றோர்களைத் தன்னுடன் வைத்துக் கொண்டு வாழ முடியாத நெருக்கடிநிலை இன்று நிலவுகிறது. முதுமைப்பருவம் இரண்டாவது குழந்தைப் பருவமாகும். இயலாத முதுமைப் பருவத்தில் பெற்றோர்களைப் பராமரிக்காமல் அனாதை இல்லங்களில் விட்டுவிடும் நிலை பெருகியுள்ளது.

நம்மை பெற்று வளர்த்து நம் வளர்ச்சியில் தங்கள் மகிழ்ச்சியை கண்ட பெற்றோர்களை காக்கவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமையாகும். சண்முகத்தின் அம்மாவுக்கு வயதாகிவிட்டது. பழுத்தபழம். சுயதேவைகளையே பூர்த்திசெய்து கொள்ள முடியாத கிழம். அவனால் அம்மாவைச் சரியாகக் கவனித்துக்கொள்ள முடியவில்லை. மனைவிக்கும் அம்மாவுக்கும் எதற்குப் பார்த்தாலும் சண்டை, வாதம். படுத்த படுக்கை என்றாலும் சுயகௌரவத்தை விட்டுக்கொடுப்பதில்லை.

படுக்கையிலேயே இருப்பதால் ஈக்கள் மொய்க்கும் அளவுக்குச் சென்றுவிட்டது. மனைவிக்கு தன் பிள்ளைகளுக்கு ஏதேனும் தொற்று ஏற்பட்டு நோய்தாக்கிவிடுமோ என்ற அச்சம். ‘பாவம்..நம்ம அம்மா. கவனிப்பார் இல்லாம காய்ஞ்சு நாறிப்போய்க் கிடக்குறா. சாவுதான் அவளுக்கு விமோசனம்.’10 என்று வருந்துகிறான். சம்முகம் சம்முகம் என்று அழைத்துக்கொண்டிருப்பதாலும் தின்பண்டங்கள் வேண்டும் என்று நச்சரிப்பதாலும் எரிச்சலடைகிறான்; செத்துத்தொலையேன் என்கிறான்.

நான் எதுக்குடா சாகணும்? நான் உன்மனைவி சம்பாத்தியத்திலயா சாப்பிடுறேன்? எனக் கேட்க மனைவிக்கும் அம்மாவுக்கும் பற்றிக்கொள்கிறது சண்டை. நடுவில் மாட்டிக்கொண்டு செய்வதறியாது திகைக்கிறான். இந்த நிலையை மாற்றுவதற்குத் தன் தங்கை சுப்புத்தாய் வீட்டில் அம்மாவை விடுவது என்ற முடிவுக்கு வருகிறான்.

தானும் தன் கணவனும் கஷ்டப்பட்டு உழைத்து பிள்ளைகளைப் பெற்றுவளர்த்த வீடு. இதை விட்டுப்போகமாட்டேன் என வீம்பு பிடிக்கிறாள். வேறு வழியில்லாமல் வலுக்கட்டாயமாகத் தங்கை வீட்டிற்கு அனுப்புகிறான். ஆனாலும் அம்மாவைக் கடைசி காலத்தில் தன்னுடனே வைத்துக் கொள்ள முடியாத ஆதங்கம் வாட்டி வதைக்கிறது. இரண்டு மாதங்களுக்குப் பின் அவள் இறந்துவிட்டாள் என்ற செய்திகேட்டு செல்கிறான். எல்லாம் முடிந்து விட்டபின் தங்கையிடம் கேட்கிறான் அம்மா கடைசி ஆசையாக என்ன சொன்னாள் என்று அதற்கு தங்கை, “சாகுறப்ப ஒம் முகம் பாத்துகிட்டு சாகணும்’னு அவளுக்கொரு நெனைப்பு. ஒங்கையாலே கடைசிப் பாலைக் குடிச்சுட்டுச் சாகணும்’னு அம்மாவுக்கு ஒரு ஆசை.”

அதைக் கேட்டவுடன் தாயைக் காக்க முடியாத தன் இயலாமையை எண்ணி ‘ஐயையோ..அம்மா…ஹ் ,ஒன்னைத் தவிக்கவிட்ட பாவியாயிட்டேனே.”11 என்று வெடித்து அழுகிறான். நாம் குழந்தைகளாக இருந்தபோது நாமும் பல துன்பங்களைத் தந்திருப்போம். அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டுதானே பரிவோடு நம்மைக் காத்தனர். அத்தகு பெற்றோர்களை முதுமையில் நாமும் நம் குழந்தைகளாகக் கருதிக் காக்க வேண்டியது நம் கடமை என்பதை இக்கதைவழிச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர்.

எல்லோரும் ஒரு குலம்:

மனிதர்களில் ஒரு சிலரின் சுயநலத்தினாலேயே சாதி சமய மதப் பூசல்கள் உருவாகின்றன. மனிதர்கள் அனைவரும் சமம். நம் நாட்டில் அனைத்து மதத்தவர்களும் நண்பர்களாக அண்ணன் தம்பிகளாக மாமன் மைத்துனர்களாக வாழ்ந்து வருகின்றனர். இந்துக்களின் வடைபாயசமும் கிறித்தவர்களின் கேக்கும் முஸ்ஸிம்களின் பிரியாணியும் பகிர்ந்துக் கொள்ளப்படுவதில் எந்த பேதமும் இல்லை. சமயங்களின் நீதிகளும் மத ஆசாரங்களும் மனுதர்மங்களும் அடுத்த மனிதனைக் கொன்றழிக்கக் கற்றுக்கொடுக்கவில்லை. உருவாக்கப்படவும் இல்லை.

மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ?
12 என்றார் பாரதி.

வேற்றுமையில் ஒற்றுமைக் காணும் இப்பூமியில் சாதி மத பேதங்கள் நீங்கி அனைவரும் இங்கு சரி சமமென வாழ வேண்டும்.

போர்களும் கொலைகளும் பூசல்களும் நீங்கிய சமுதாயம் மலர வேண்டும்.

இப்புராகிம் ராவுத்தர் துணி வியாபாரி. சைக்கிள் மிதித்து வியாபாரம் செய்பவர். இந்து பெரியவர் வீட்டிற்கு வியாபாரத்தின்போது எப்போதும் வருவர். உரிமையாக திண்ணையில் ஆற அமர அமர்ந்து கொண்டு பேசிவிட்டுத்தான் போவார். கைலி வாங்கிக்கிறீங்களா? மேல்துண்டு வாங்கிக்கிறீங்களா? என எதையாவது தருவார். பெரியவரின் பேரக்குழந்தைகளைக் கொஞ்சுவார். அவர்களுக்கு ஐந்து ரூபாய்த் தருவார். ஏன் எங்களுக்கு காசு தர்றீங்க?

எங்க வீட்டில காசு வாங்கிக்கிறதுக்கு குழந்தைங்க இல்லையே அதான் என்பார்.

அப்போது பெரியவர் ஊரில் நடக்கும் சில கலவரங்களில் முஸ்லீம்களின் பெயர்கள் அடிபடுவதை, “உங்க ஆளுங்க பொதுவா மொரட்டு சுபாவம்னு நெனைக்கேன்’ என்று கூறிவிட ராவுத்தர் அடுத்த சில நாட்களாக வருவதில்லை. அவசரப்பட்டுத் தான் கூறிவிட்ட கருத்தால் ராவுத்தர் மனம் புண்பட்டதை  எண்ணி வருந்துகிறார்.

இத்தனைக்கும் ராவுத்தர் இவற்றையெல்லாம் கடிந்து பேசுபவர்.

‘கலவரம் எந்தச் சைத்தான் பண்ணினாலும்… பொண்ணுங்களும் புள்ளைங்களும்தான் ரொம்ப நாசமாகுதுகள். பூ மொட்டுக கருகுற பரிதாபம்தான்… பெருங்கொடுமை”என்றவர். பெரியவருக்கு உடம்பு சரியில்லாமல் போனதை அறிந்து வந்து பார்க்கிறார்.

என்னை நீரு மனுசனா நெனைக்கலே.   முஸ்லிமா மட்டும் நெனைக்கீரு. அதானே காரணம்” கடவுள நம்புறவனுக்கு ஒரே கடவுளும் அவரு படைச்ச ஒரே மனுசங்களும்தான் உண்மை. மனுசங்க படைச்சுகிட்ட சாதிக மதங்க எல்லாம் உண்மையானதுல்லே…”13 (ப.42 பூமனசுகள்)  என்கிறார்.

அன்பு மட்டுமே நிஜம் சாதி மத பேதங்கள் மனிதர்களே படைத்துக் கொண்ட மாயைகள் என்பதை இக்கதையில் கூறி பேதங்களற்ற சமுதாயம் மலரவேண்டும் என்கிறார் ஆசிரியர்.

கல்வியே செல்வம்:

கல்வியறிவு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் அவசியமான ஒன்றாகத் திகழ்கிறது. ஒரே மனித குலத்தில் ஒருவன் ஆண்டானாவதும் ஒருவன் அடிமையாவதும் கல்வியறிவு இன்மையினாலேயாகும். ஒருவன் கற்கும் கல்வி அவனை எதனையும் ஏன்? எதற்கு? என்று கேள்வி கேட்கும் பகுத்தறிவை உண்டாக்குகிறது. உழைப்பிற்கேற்ற பலனை உரியமுறையிலும் உரிமையாகவும் பெறக் கற்றுத்தருகிறது. சிந்தனை, செயல்திறன் வளர உதவுகிறது. எந்தச்செயலையும் செம்மையாகச் செய்ய உதவுகிறது.

‘கல்வி எனும் அகத்தே பொருளிருக்க
புறத்தே பொருள் தேடி உழல்கின்றீரே’
என்கிறது விவேகசிந்தாமணி.

கல்வி ஒருவனை வாழ்வில் உயர்த்துகிறது. வறுமையைப் போக்குகிறது. சாதி மத பேதங்களை நீக்குகிறது. தங்கச்சாமியின் மகன் காமராசு கல்லூரியில் படிக்கின்றான். வறுமையான குடும்பம் வேளாண்மையில் தண்ணீர்ப் பற்றாக்குறையினால் விளைச்சலும் இல்லை. காமராசு கல்லூரியில் சேர்வதற்குமுன் குடும்ப வறுமை காரணமாக மளிகைக் கடைக்கு பொட்டலம் போட போகட்டுமா எனும்போது, “மரம் வைச்சவன் தண்ணி ஊத்துவான்டா கால் எடுத்து வைச்சா… பாதை தானாக வரும்டா படிக்காத பரம்பரை. பனையேறி சிரமப்பட்ட பரம்பரை. தராசு புடிச்சு ஊரு ஊரா சுத்தித் திரிஞ்ச வம்சம். நீயாச்சும் மேல்படிப்பு படிச்சு உசரத்துக்குப் போகணும்.”14 என்கிறார்.

மகனின் படிப்புக்காக தங்கச்சாமி என்ற பெயருக்கேற்ப மாட்டுத்தரகில் நாணயமான அவர், 3300க்கு மாட்டை வாங்கி 7600க்கு விற்கிறார். பொய் சொல்கிறார். மனசாட்சி உறுத்துகிறது. மகனின் படிப்புக்காகவே இவற்றையெல்லாம் செய்கிறார்.

அருஞ்சுனை நாடார் கீரை விற்பவர். சாதி வேறுபாட்டால் பாதிக்கப்பட்டவர். தன் பேரன் அருஞ்சுனை பன்னிரண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்தும் பணம் இல்லாததால் கடிக்க முடியாதபோது தான் கஷ்டப்பட்டு சம்பாதித்த சொத்தை விற்றுப்படிக்க வைக்கிறார். படிப்பு முடித்த அவன் அரசாங்கப் பதவிக்கு வந்துவிட்டான். ‘பேரனை நினைச்சா பெருமையாயிருக்கு. கவர்மெண்டு உத்தியோகம். பேரன் தலைமுறை கரையேறிட்டா அதுக்குப் பின்னாடி வர்ற தலைமுறைகளை அவன் மலைமேலே ஏத்திருவான். கீரை வித்து வவுத்தை நனைச்ச அருஞ்சுனை நாடான் பேரன்… கோட்டுசூட்டும் பூட்டுமா வரப்போறான்.

தொங்கிப்போயிருந்த நரைத்த மீசையை இடது கையால் நீவினார்”15. தொழிற்சங்கத்தலைவர் பாலசுந்தரம் பிராமணர். தன்னை வீட்டுக்கு வரச்சொல்லி உபசரித்ததை பேரன் தாத்தாவுக்கு கூறுகிறான். இதைக்கேட்டதும் தான் முப்பதடி தூரத் தீண்டாமையால் பாதிக்கப்பட்டதையும் உழக்கில் தண்ணீர் இதெல்லாம் கல்வி தந்த மாற்றமென உணர்ந்து புளங்காகிதம் அடைகிறார்.

முடிவுரை:

ஒரு சமுதாயம் மேம்பட்டு விளங்கச் சாதி மத பேதமற்ற சூழல் உருவாக வேண்டும். பெற்றோர்கள் முதிய வயதில் குழந்தைகள். அவர்களைப் பாதுகாக்கவேண்டும். அரசியலிலும் மக்கள்செய்யும் செயல்களிலும் தூய்மையும் அன்பும் நிலைக்க வேண்டும். வன்முறை சாதிய கலவரங்கள் நீங்கி அன்பும் வளர்ச்சியும் மேம்படவேண்டும். கல்வியே சமத்துவ சமுதாயம் மலர வழிவகுக்கும் என்ற சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகளைத் தமது சிறுகதைகளின் வழி மேலாண்மை பொன்னுச்சாமி வெளிப்படுத்தியுள்ளார்.

முதன்மைஆதாரம்: அன்பூ வாசம்- சிறுகதை நூல் மேலாண்மை.  பொன்னுச்சாமி, கங்கை புத்தக நிலையம் 13 தீனதயாளு தெரு தியாகராய நகர் சென்னை-600 017. முதற்பதிப்பு :- திசம்பர்  2002

*****

அடிக்குறிப்புகள்:

1.தமிழ் விக்கி பீடியா-மேலாண்மை பொன்னுச்சாமி நாள்:08.10.2018 4.10      பி.ப

2.சமுதாயமும் பண்பாடும் ப.14- அ.மு. பரமுசிவானந்தம்- தமிழினி பதிப்பகம் சென்னை டிசம்பர்  2007

3. AN INTRODUCTION OF SOCIAL PSYCHOLOGY P.469- 1982.

4.தமிழர் சமுதாய வரலாறு ப.44 அரு.சின்னசாமி, வானதி பதிப்பகம் சென்னை  1979.

5.தமிழ் நாவல் இலக்கியம் ப.224 –  க. கைலாசபதி குமரன் பப்ளிஷர்ஸ் சென்னை  1981.

6.புறநானூறு நெட்டிமையார் பாடல்-9  ப.15  உமா பதிப்பகம் சென்னை- 2010

7.அன்பூ வாசம் சிறுகதை ப.2  அன்பூ வாசம் சிறுகதை நூல், மேலாண்மை பொன்னுச்சாமி –  கங்கை புத்தக நிலையம் சென்னை 17.  முதற்பதிப்பு- டிசம்பர்  2002.

8.மேலது ப.11

9.மேலது ப.13

10.மேற்குறித்த நூல் கடைசிப்பால் சிறுகதை ப.16

11.மேலது ப.30

12.பாரதியார் – பாரதியார் கவிதைகள்- தென்றல் நிலையம் சிதம்பரம்-  2000.

13.பூமனசுகள் சிறுகதை ப.42-அன்பூ வாசம் சிறுகதை நூல் மேலாண்மை பொன்னுச்சாமி, கங்கை புத்தக நிலையம் சென்னை 17.  முதற்பதிப்பு- டிசம்பர்  2002.

14.மேலது நூல்- பொய்ம்மையும் சிறுகதை ப.45

15.மேலது நூல் சித்தாந்தம் சிறுகதை ப.61.

*****

கட்டுரையாளர் – முதுகலைத் தமிழாசிரியர்
அரசு ஆண்கள் மேனிலைப் பள்ளி
செங்கம். 606701
பேசி:  99430-67963.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on "மேலாண்மை பொன்னுச்சாமி சிறுகதைகளில் சமுதாய மேம்பாட்டுச் சிந்தனைகள்"

  1. எமது கட்டுரையை வெளியிட்டமைக்கு நன்றி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.