விஜயதசமி வெண்பாக்கள்…..!
—————————— காப்பு
——-
எருதேறி ஈசன் ,எலியேறி வேழன்
முருகேறி காக்க மயிலில் -உருகாது
அன்பால் அழைக்கும் அடியேனின்
வெண்பாவில் அம்பாளே வா….(1)….28-07-2011
——————————
கத்தி , உடுக்கை,கபாலம், திரிசூலம்
சக்தி கரமுற்ற ஆயுதங்கள் -பக்தி
இலாதோர் இதயச் சிலாவைப் பிளந்து
பலாவின் சுளையைப் புதைக்கும்….(2)….03-04-
அழுதாலும் பிள்ளைக்(கு) அவள்தான் பொறுப்பு
பழுதான பின்பும் பரிவை -விழுதாய்ப்
பொழிவாள் எமது பராசக்தி, நெஞ்சே
தொழுவாய் அவளைத் தொடர்ந்து….(3)….16-10-2008
திருவானைக்கா அகிலாண்டேஸ்வரி
——————————
வானைக்கா வையம்கா தூணை துரும்பைக்கா
மோனை எதுகைக்கா மோஹனைக்கா -ஆனைக்கா
ஆத்தா அகிலாண்ட அம்மைபோல் வேறேகாப்
பாத்த எவரோ பகர்….(4)….9-2-2009
சுனையாக வாழும் சிவனிட பாகத்தில்
அணையாத சக்தீயே, அம்மே -வினையான
மண்வாழ்வின் மாருதமாம் ஆனைக்கா அம்பிகை
விண்ணாகா சத்தின் விளைவு….(5)….9-2-2009
யானைக்(கு) ஒருகாலம் பூனைக்(கு) ஒருகாலம்
ஆனைக்கா அன்னை அடியார்க்கோ -வானம்தீ
மண்காற்று நீர்காலம் மற்றுள்ள பூதமிவன்
முன்தோற்று மண்டியிடு மாம்….(6)….9-2-2009
தேனுக்காய் வண்டேபோல் தாவி அடைக்கலமாய்
ஆனைக்கா அன்னை அடிபணிய -பானைத்தோல்
பிண்டத்தால் பட்டகடன் பாரம் குருவித்தலை (OR)உறுமாறி
சுண்டைக்காய் ஆகும் சிறுத்து….(7)….10-2-2009
பானைத்தோல் பாரத்தால் பட்டகடன் போக்கிட
ஆனைக்கா அம்மை அடிக்கமலம் -தேனைப்போய்
வண்டுண்ணும் வேகத்தில் வந்துநீ மொய்த்திட
சுண்டைக்காய் ஆகும் சிறுத்து….(8)….10-2-2009
கூன்பிறையும் மான்மழுவும் தேனொழுகும் பூவிதழும்
பூணிறையின் ஊனுறையும் ஆணுமையை -நான்மறையும்
வானவரும் மாலயனும் காணஅரி தானவளைக்
காணத் திருவானைக் கா….(9)….11-2-2009
தானே தனக்குவமை ஆன உமையாளை
வீணே வர்ணிப்பதேன் வெண்பாவில் -ஆனை
தனையன்று காத்த அகிலாண்ட வல்லி
துணையென்(று) அவளைத் துரத்து….(10)….12-2-2009
அம்புயக் கண்ணாளை அன்புய்யக் காண்பாளை
அம்புவியைக் காப்பாளை அம்பாளை -அம்பலத்தார்
மேனியிடப் பெண்பாலை ஞான முலைப்பாலை
மானுடசேய்க்(கு) ஈன்றாளை மொய்….(11)….11-2-2009
முகிலாண்ட வெற்பாளும் முக்கண்ணன் கற்பாளும்
அகிலாண்ட ஆனைக்கா அம்மே -நகிலுண்ட
சம்பந்தன் போலெண்ணி செந்தமிழ்ப் பாலூட்டு
இம்மந்தன் வாக்கில் இசைந்து….(12)….11-2-2009
முகிலாண்ட பர்வத முக்கண்ணன் கர்வமே
அகிலாண்ட ஆனைக்கா அம்மே -நகிலாண்ட
கண்டத்தால் மேனியே காணாது போயினும்
உண்டெனெக்குன் பாதம் உதவு….(13)….11-2-2009
கன்னலுன் இன்மொழி மின்னலுன் கண்ணொளி
பின்னலோ பாம்புக்(கு) அடைமொழி -உன்னிலே
தன்னை மறந்து தவம்செய்யும் பக்தர்க்கு
எண்ண உருவம் எதற்கு….(14)….12-2-2009
கல்லில் கலைநயம் சொல்லில் பொருள்மயம்
துள்ளும் அபிநயம் தோற்றம் -உள்ளும்
புறமும் உலவிப் பெருகும் பலவாம்
இறைவன் அறிவே இவள்….(15)….12-2-2009
இதம்தரும் வாழும் விதம்தரும் நாளும்
புதன்தரும் காத்துப் பரிவை -நிதம்தரும்
இங்கே இகபர பேரற் புதம்தரும்
சங்கரி பதம்தரும்கொள் சார்ந்து….(16)….14-2-2009
மலைப்புற வில்லாய் மலைப்புறம் ஏந்தி
மலைப்புரம் மூன்றை முடித்தோன் -களைப்புறா
வண்ணம் அவனை வலப்புரம் ஏந்திடும்
அன்னை இடமே அரண்….(17)….16-2-2009
இதம்தரும் வாழ்வை நிதம்தரும் பொல்லா
மதம்தரும் ஆணவத்தை மாய்க்கும் -அதன்பின்
சுதந்திரப் பேரற் புதம்தரும் அம்பாள்
பதம்தரும் போற்றப் பணிந்து….(18)….16-2-2009
மூளயோகம் வாயில்தாம் பூலம் உமிழ்ந்ததால்
காளமேகம் ஆன கலிவரதன் -போலஆக
வந்தென்நா வெற்றிலையில் வெண்பாக்கள் பூத்திட
தந்தஆனைக் காகாரி(த்) துப்பு….(19)….13-2-2009
அச்சுறுத்தும் பூதமா? அன்றிமாத்ரு பூதமா?
எச்சரிக்கை யோடுன்னை உச்சரிப்பதா? -நச்சரவம்
மாண்டோர் கபாலங்கள் பூண்டோன் இடபாகி
வேண்டாமே வேஷ விருப்பு….(20)….13-2-2009
கற்றதவள் நாமம் கசடறக் கைவரப்
பெற்றதவள் பாதாம் புயம்பணிதல் -மற்றேதும்
எண்ணா(து) இருப்போர்தம் வாழ்வை இனிப்பாக்கும்
உண்ணா முலையாள் உறவு….(21)
நானார் அறிதல் நமக்கெதற்கு அன்னையே
நீயார் உணர்தலே நற்கதி -தாயார்
மகனைத் தொலைப்பாளா மாதா தவிக்கின்றேன்
அகலா(து) இருப்பாய் அணத்து….(22)
மூகாம் பிகைஈசன் பாகாம் பிகைபக்தர்
மோகாம் பிகையாள் மலர்த்தாளில் -பாகாய்
உருகிக் கிடக்க உதவா மனமே
கருகிக் கரையும் கபடு….(23)….20-2-2009
இமயபுர ஈசன் இடபாக வாசி
தமையன் திருமாலின் தங்கை -சமயபுர
மாரியம்மா ஆத்தாவை காரியமாய்ப் பார்த்தோரை
வீரியமாய்க் காப்பாள் விரைந்து….(24)….20-2-2009
பரமஹம்சர் பார்த்துப் பரவசத்தில் ஆழ்ந்த
அரனசைவே ஆதி உணர்வே -பரமசிவா
னந்த லஹரி நவநீத சோதரி
அந்தரி வந்(து)ஆ தரி….(25)….20-2-2009
விலையைக் கொடுத்து வலிய வினையில்
தலையைக் கொடுக்கும் மனதை -மலையத்
துவசன் மகளே தெளிவுற வைப்பாய்
கவசம் துணையுன் கழல்….(26)
ஷ்யாம கிருஷ்ண சகோதரி தக்ஷிண
ராம கிருஷ்ண உபாஸினி -நாம
சஹஸ்ர சொரூபிணி சாஸ்வத சாக்ஷி
ரஹஸ்ய சினேகிதி ரக்ஷி….(27)
புள்ளி மயிலாக புன்னை வனநாதர்
உள்ளம் உறையும் உமையோளே -வெள்ளி
விடையேறி ஈசர் இடபாகம் ஈஷீ
மடையோனென் நாவில் மலர்….(28)
உன்னவரே ஞானத்தை உண்ணவரார் ஓடேந்தி
கண்ணசைவில் ஞானம் கொடுத்திடும் -அன்னபூர்ணி
என்நிலையைப் பாரம்மா ஏனிந்த பேதங்கள்
இன்னலற வைராக்யம் இடு….
தேகி பரமனிடம் தேஹி பவதிபிட்சாம்
யோகிதிட சித்தம் எனக்கு….(29)
கல்லூறும் தேரைக்கும் கர்பத்(து) உயிர்கட்கும்
உள்ளூறச் சென்றுணவு ஊட்டிடும் -கொல்லூரின்
மூகாம் பிகையே முனியாக வந்தெனது
தேகான்ம பாவத்தைத் தீர்….(30)
கன்னலுன் இன்மொழி மின்னலுன் கண்ணொளி
பின்னலோ பாம்புக்(கு) அடைமொழி -உன்னிலே
அர்கிய மாகிடும் அன்பர்க்(கு) அருளும்பொன்
துர்கேயிப் பித்தளையைத் தேற்று….(31)….12-2-2009
நின்றிட பூமா நகர்ந்திட ஸ்ரீதேவி
ஒன்றிக் கலந்திட நீளாவாம் -மன்றில்
நடமாட காளி நலம்பாட வாணி
அடநமக்கு ஆயிரம்மா யி….(32)….6-7-2008
குடைபோல் விரிந்த புடவைக் கொசுவம்
இடையில் சொருகி இளையப் -பிடியாய்
கபாலீசன் கோவிலில் கற்பகத்தைக் கண்டு
உபாசித் தடைவீர் உயர்வு….(33)….29-11-2008
உமையாளை, ஈசன் சுமையாளை, கண்கள்
இமையாளாய் அன்பர் இதயம் -அமைவாளை
கற்பக வல்லியை கற்பனைக்(கு) எட்டாத
அற்புதம் தன்னை அணுகு….(34)….29-11-2008
கோமள வல்லியை சாமள வண்ணியை
ஆமளவு ஏத்தும் அடியார்க்கு -மாமலை
வெள்ளிக்கு வாசினியால் வாக்கு விலாசத்தில்
பள்ளித் தலமாகும் பார்….(35)….12-2-2009
ஆவதும் போவதும் தேவதையுன் திட்டமென்றால்
நாவெதற்கு பாவெதற்கு நீயெதற்கு -தீர்விதற்கு
சொல்லடி மாயா சிவசக்தி, ஏனெதற்கு
முள்ளடியில் ரோஜா மலர்….(36)….13-2-2009
கற்றதவள் நாமம் கசடறக் கைவரப்
பெற்றதவள் பாதாம் புயம்பணிதல் -மற்றெதும்
எண்ணா(து) இருப்போர்க்கு என்நாளும் பொன்னாளாம்
உண்ணா முலையாள் உறவு….(37)….19-2-2009
”த்யான த்யாத்ரு த்யேய ரூபி”
——————————
எண்ணும் தொழிலவள், எண்ணிலா எண்ணமவள்
எண்ணுவோர்க்(கு) ஏற்ற எழுச்சியவள் -எண்ணிடத்
தின்னும் பசியவள் தீராத தாகமவள்
உண்ணா முலையவளை உண்….(38)….16-3-2009
திருவொற்றியூர் கோயிலுக்குப் போன போது
——————————
கடுவிட கண்டக் கடவுளின் பொன்னார்
உடலிடம் கொண்ட உமையே -வடிவுடை
அம்மா உனைக்காண ஆர்வத் துடன்வருவேன்
பெம்மான் சமேதராய்ப் பார்….(39)….25-3-2009
கல்விக் கொடியுடையாள் செல்வத் திருவுடையாள்
வெல்லும் வடிவுடையாள் ஒற்றியூர் -வல்லியைக்
கண்டேனே பாதாதி கேச தரிசனம்
உண்டேனே அன்னையருள் ஊற்று….(40)….25-9-2009
ஓலை ஜபமணி மாலை அபயமொடு
காலை மடித்து கொலுவிருக்கும் -பாலை
திரிபுர சுந்தரியைத் தேடி நெமிலி
வருபவர் வாழ்வில் வளம்….(41)….14-10-2010
மீனாளை முத்தமிழ்த் தேனாளை அன்பர்க்காய்
கோணாளை கூடலுக்கு கோனாளை -மானாளை
மஞ்சத்தில் நாணாளை மாசக்தி ஆனாளை
நெஞ்சத்தில் ஊற்றி நிரப்பு….(42)….08-05-2009
நீரான, தீயான, நீள்விசும்பு காற்றான
பாரான வாராஹியைப் பார்த்து -வாராய்
சமய புரத்தாள்தாள் சேவிக்க நெஞ்ச
சுமைகளைத் தீர்ப்பாள் சுமந்து….(43)….20-11-2009
புரத்தாள் சமய புரத்தாள் இமய
புரத்தான் இடது புரத்தாள் -திருத்தாள்
கருத்தால் வணங்க வரத்தால் அபய
கரத்தால் அணைப்பாள் குளிர்ந்து….(44)….20-11-
மாரி சமயபுரக் காரி சதுர்வேத
தாரி பிரியா அரனர்த்த -நாரி
லலிதஅதி காரி கலிதீர சேரீர்
பலிதஉப காரி பதம்….(45)….21-11-2009
தேனைக்கால் ஏந்தி திரிகின்ற வண்டேபோல்
ஊனைக்கால் தாங்க உலகுற்று -நானைப்போய்
பானைத்தோல் மேனியாய் பாவிக்கா பேறரிவை
ஆனைக்கா அம்மா அருள்….(46)….21-11-2009
ஆயிரம் கண்ணுனக்கு ஆனாலும் கேட்கின்றேன்
தாயினும் சாலத் தெரிந்துபார் -மாயிநீ
அல்லா(து) எனக்கிங்(கு) அருளார் செய்வாய்இச்
செல்லாத காசை செலவு….(47)….21-11-2009
நையப் புடைத்துநம் மையல் விரட்டிட
கையில் மணிப்பிரம்பு கொண்டவள் -உய்ய
மனோண்மணி பாதங்கள் மகாகவி ஆக்கி
சிரோன்மணி சேர்க்கும் சிறப்பு….(48)….21-08-2009
மயிலை கபாலீஸ்வரர் ரிஷப வாகனத்தன்று எழுதியது….
——————————
புள்ளி மயிலாக புன்னை வனநாதர்
பள்ளியறை வாழ்பரம பத்தினியே -வெள்ளி
விடையேறி ஈசர் இடபாகம் ஈஷீ
மடையோனென் நாவில் மலர்….(49)….25-03-2010
ஓலை ஜபமணி மாலை அபயமொடு
காலை மடித்து கொலுவிருக்கும் -பாலை
திரிபுர சுந்தரியைத் தேடி நெமிலி
வருபவர் வாழ்வில் வளம்….(50)….14-10-2010
மூகாம் பிகைஈசன் பாகாம் பிகைபக்தர்
மோகாம் பிகையாள் மலர்த்தாளில் -பாகாய்
உருகிக் கிடக்க உதவா மனமே
கருகிக் கரையும் கபடு….(51)….20-02-2009
மாதவன் சோதரி ஆதிரைப் பத்தினி
பூதலம் காக்கும் பராசக்தி -ஆதரி
மைலாப்பூர் கற்பகமே மாற்றிந்த மூடன்நான்
கையிலாப்பை கொண்ட குரங்கு….(52)….25-07-2011
பூரணி வைகுண்ட நாரணி கைலாச
நீறணி நாதனின் நாயகி -கூறுநீ
கோத்திரப் புத்திரனாய் கொள்வேன் எனையென்று
பூத்தர செவ்வாய் புலர்ந்து….(53)….25-07-
சகுனங்கள் சாரா சழுக்குகள் சாரா
ககனநவ கோள்கள் கொடுக்கும் -சகலவித
தோஷங்கள் சாரா திருக்குவினை சாராமெய்
பூசுங்கண் சக்த்தியைப் போற்று….(54)….25-07-2011
மகிடா சுரனின் மகுடம் தெறித்து
பகடைபோல் பாயப் பறித்து -சகடனை
செற்ற முகுந்தனின் உற்ற சகோதரி
வெற்றி வழிக்கு வரம்….(55)….25-07-2011
வேத வயலது வித்தைப் பயிரது
கோதுகளை நீக்கும் கரமது -சாதகன்
நோயுறா வண்ணம் நல்லான் மனாய்மாற்றும்
ஆயிரங் காலத்து ஆய்(தாய்)….(56)….25-07-
இவ்வுலகில் நின்னருள் இல்லா(து) உடையுமோ
வெவ்வினைகள் பூட்டி வளைவிலங்கு -அவ்வண்ணம்
ஆகாது தேவி அடியவன் இப்பாவி
தேகான்ம பாவத்தைத் தீர்….(57)….26-07-2011
வார்த்தைகள் அற்ற வெளிகண்டு விண்டாதோர்
போர்த்தும்மெய் ஞானப் புடவையே -தீர்த்தங்கள்
முங்கியென் சேத்திரங்கள் தங்கியென் சம்புயிட
பங்கியுனைக் காணாத போது….(58)….26-07-2011
வம்பாளாய் வாழ்ந்து வசைபாடி பொய்யுரைத்து
தெம்பாளும் யவ்வனம் தேய்ந்தபின் -அம்பாளை
மூப்பில் முனகலாய் கூப்பிட கேட்பாளே
யாப்பிலா குப்பையெதற்க்(கு) என்று….(59)….26-07-2011
வெண்பா தருவதென் வேட்கை தணிக்கவா !
அம்பாளுன் அச்சார ஆதரவா !-என்பதை
வேழனும் வேலனும் சூழநின் சம்புவொடு
ஏழையென் கண்முன் இயம்பு….(60)….26-07-2011
அட்டாங்க நிட்டையில் மொட்டாய் மலர்ந்திங்கு
கிட்டாத இன்பம் கொடுப்பவளே -தட்டாது
அப்பேறு நானடைய அன்னையே கந்தனின்
அப்பா ருடனெனை ஆள்….(61)….26-07-2011
சுத்தம் அசுத்தமென சோதித்(து) அயர்ந்திடும்
புத்தியின் பேதத்தைப் போக்கிடு -பித்தரின்
வாமத்தில் நின்றிடும் ஜாமத்து நீலமே
காமத்தைக் காளி களை….(62)….26-07-2011
எழுதாத நாளே பழுதான நாளாம்
பொழுதென்றும் வெண்பா புனைந்து -தொழுதிட
செய்வாய் சிபாரிசு செவ்வேள் முருகனிடம்
”பெய்வாய் தமிழ்மோஹன் பால்”….(OR)
பெய்வாய் தமிழென்று பேசு….(63)….26-07-2011
பெண்மூலம் நிர்மூலம் பேசிடும் பேதைகாள்
கண்மூலம் காத்திடும் கற்பகக் -பெண்மூலம்
ஜாதகம் சொல்லும் சனிசெவ்வாய் தோஷங்கள்
பாதகம்போய் ஆகும் பலன்….(64)….27-07-2011
மஞ்சள் நிறப்பட்டில் மாணிக்க யாழ்மடியில்,
கொஞ்சும் கிளியேந்தி கற்பனையை -விஞ்சிடும்
வண்ணம் கொலுவிருக்கும் அன்னையை எண்ணுவோர்
முன்னம் தமிழ்வண்டு மொய்ப்பு….(65)….27-07-2011
சிங்கா சனமேறி சூலம் கரமேந்தி
எங்கேனும் தீங்கு எழுந்தக்கால் -அங்கே
குதித்திடும் தேவி பதித்திடும் பாதம்
துதிப்பவர் நெஞ்சில் தெருள்….(66)….27-07-2011
அபாயம் எனக்கூவி அஞ்சிடும் நெஞ்சே
உபாயம் உனக்குரைப்பேன் ஒன்று -கபாலம்
கலைமான் கரத்தோன், கலைநீர் சிரத்தோன்
சிலைமா துமையை சரண்….(67)….27-07-2011
பாலை வனக்கானல் சோலை புவிவாழ்வு
நாளைக் கடத்தாதே நன்நெஞ்சே -தோலைத்
தளர்த்தி வயோதிகம் தீண்டிடும் முன்னம்
உளத்தில் உமையாளை உன்னு….(68)….27-07-2011
மூப்பு முருங்கையில் தீர்ப்பூ மரணமுண்ண
தோற்பிளமை வேதாளம் தொத்திடும் -காப்பில்
மனம்தளரா விக்கிர மாதித்த தேவி
மனம்குளிர என்றுமிள மை….(69)….27-07-2011
சகவாச தோஷம் புகமோசம் போகா
சகவாசம் சத்தில் சிலிர்க்க -சகவாச
ஈசருடல் கொண்ட இடபாகி இங்கெனக்கு
நீசருடன் வேண்டாம்சேர் நட்பு….(70)….27-07-2011
நட்பெனக்(கு) இங்குன் நினைவே போதுமே
கட்புலன்கள் கூட்டும் கிளர்ச்சியை -நுட்பமாய்
காற்றில் புனலில் கனல்நீரா காசத்தில்
விற்றிருக்கும் வாசி விலக்கு….(71)….27-07-2011
விலக்கவொணா வாழ்வின் நிலைக்கதவு ஆசை
அலைக்கழித்து ஐம்புலனை ஆட்டும் -முலைகனக்க
சம்பந்த சேய்க்கு சுரந்தாய் அதுபோல
நம்பந்தம் ஆக நினை….(72)….27-07-2011
நினைவை மடக்கி மனதை முடக்கி
அணைவை புலனை அடக்கி -கணைவிற்
புருவத்தாள் ஞான உருவத்தாள் பாதம்
மருவத்தூள் தூளாகும் மாசு….(73)….27-07-2011
மாசுணப் புற்றில் மகிழ்ந்துகை விட்டாற்போல்
ஆசுணம் ஐம்புல ஆசைகள் -வீசுநற்
காற்றால் கமகமக்கும் குன்றிமைய பார்வதிமுன்
தோற்று அடங்கும் திருக்கு….(74)….27-07-2011
திருக்கை உபயம் திருக்கால் அபயம்
சறுக்கி விழாத சபையும் -இருக்கையும்
போட்டுக் கொடுக்கும் பராசக்தி பக்தரைக்
கேட்டுத் தெரிந்துகொள் கூட்டு….(75)….28-07-2011
கூட்டும் ரசமும் குழம்பும் பொறியலும்
போட்டுப் பிசைந்து பருகிடும் -நாட்டம்
விடுத்தவள் நாமம் விடாதோதும் பக்தர்
படுத்தயிடத் தில்பால் பழம்….(76)….28-07-2011
பழம்நழுவிப் பாலில் விழவைக்கும், மூப்புக்
கிழம்குழவி போலே குதிக்கும் -அழும்
படிவாழ்வில் துன்பம் படர்கின்ற நேரம்
மடிதாங்கித் தேற்றுவாள் மா….(77)….28-07-2011
மாகாளி சங்கரி மாதங்கி பார்வதி
ஆகாலி மேய்ப்போன் அருந்தங்கை -மாகாளை
வாகன ஈசனார் பாகத்(து) அமைவோளின்
மோகன சக்தியில் மூழ்கு….(78)….28-07-2011
முழ்கிக் குளித்தெழுந்து முப்புரி நூலிழந்து
கூழ்கலம் காவி கமண்டலம் -சூழ்ந்திட
சந்யாசம் கொண்டாலும் சத்தியத்தை சந்திக்க
பெண்வேஷ சக்த்தியைப் பேணு….(79)….28-07-2011
பேனும் பொடுகும் புகுந்தபெண் கூந்தலை
வானத்து மேகமென்று வர்ணித்து -மானம்
தொலைத்துப் புணர்ந்து திளைத்தது போதும்
நிலைத்த பகவதியை நாடு….(80)….28-07-2011
நாடியதும் தேடியதும் ஆடியதும் கூடியதும்
ஓடி ஓளிந்திடும் ஓய்ந்ததும் -ஆடிவரும்
வெள்ளிக்கு அம்பாளின் வெண்பொங்கல் வேகவைக்கும்
சுள்ளிக்கும் சொர்கச் சிறப்பு….(81)….28-07-2011
சிறப்பவள் சக்தி சினமவள் யுக்தி
சுரப்பவள் பக்தி ஜகத்தில் -பிறப்பு
இறப்பவள் ஆட்சி இருப்பவள் மாட்சி
திறப்பவள் மோட்சத் திரை….(82)….28-07-2011
திரைவிழுந்து கண்ணில் நரைபடர்ந்து இல்லச்
சிறைகிடந்து வாழ்வாய் ஜடமாய் -தரைபடர்ந்து
பின்புசவம் ஆகாது பேரின்பம் பெற்றிட
அன்புசிவம் பாதி அணுகு….(83)….28-07-2011
அணுகிட அன்னை, துணிகரத் தோழி
முனகிட தாதி, மறலி -முனைய
மனுகொடு நீயும் சினமொடு தாயுன்
வினைகெட பாயும் வெகுண்டு….(84)….28-07-2011
வெகுண்டெழும் சிங்கம் விரலசைத்து பக்தர்
புகன்றிடப் பூனையாய் போகும் -திகழ்ந்திடும்
பட்டர்க்(கு) அருள பவுர்ணமி சந்திரன்
முட்டுமம்மா வாசை முடித்து….(85)….28-07-2011
முடிந்தனை நாத்தனார் மூன்றம் முடிச்சை
தடந்தோள் தமிழைத் தழுவ -இடம்தனை
ஆதலால் வாரண ஆயிரத்தில் பெற்றனை
கோதையாள் உள்ளம் குளிர்ந்து….(86)….28-07-
நாவில் கலைமங்கை, மாவில் மலைமங்கை
காவில் அலைமங்கை, கள்ளூறும் -பாவிலோ
கோதையவள், ஆவிலே காமதேனு, மாவில்லில்
சீதையவள் மொத்தத்தில் சித்….(87)….27-07-2011
சித்தா னவள்வேத வித்தா னவள்ஜீவன்
முத்தியில் சேர்ந்திடும் மூலமவள் -பத்தியில்
பித்தா னவளிமய தத்தா னவளீசர்
சொத்தா னவள்பதம் சேர்….(88)….27-07-2011
சேறில் மலருமோ செந்தா மரைமுழுச்
சோறில் மறையுமோ பூசணி -கூறம்மே
பாவியென் நெஞ்சையெப் பாடுபட் டேனும்நீ
கோயிலாய் செய்துவை கால்….(89)….27-07-2011
காலை நனைத்திடும் நீலத் திரைகடல்
ஓலம் ஒலித்திட ஓங்காரம் -ஜாலமாய்
பூக்கொத்து போல்நிற்கும் பூவைக் குமரியின்
மூக்குத்தி ஜோதியை மொய்….(90)….28-07-2011
மொய்யெழுத வேண்டாம் மகமாயி உண்டியில்
மெய்யுருக வேம்பை மடிசுமந்து -கையழுந்தக்
கூப்பி அவள் கோயில் கோபுரத்தைக் கும்பிட
காப்பவள் தண்டைக் கழல்….(91)….28-07-2011
கழலவளை கொண்டுவந்துன் கண்முன் நிறுத்தும்
கழலுதைக்கு அஞ்சுவான் காலன் -கழலுதிர்க்கும்
தூளியுன் நெற்றி துலங்கவெண் நீறாக
காளியுன் ஆயுளுக்கும் காப்பு….(92)….29-07-2011
காப்பாள் கருமாரி, கைகொடுப்பாள் கற்பகம்
கோர்ப்பாள் இருவரையும் காளிகாம்பா -வார்ப்பாள்
இகம்மீ னாட்சி அகம்விசா லாட்சி
சுகம்காஞ்சி காமாட்சி சேர்ந்து….(93)….29-07-2011
சேர்ந்து களித்தது சோர்ந்து தனித்தது
நேர்ந்திடாத வாழ்வு நிலைத்திட -சார்ந்திரு
முண்டகக் கண்ணியின் மூலக் கருவறையில்
தொண்டர் குழாமுடன் தோய்ந்து….(94)….29-07-2011
தோய்ந்த தயிரை திருடி சகாக்களுடன்
மேய்ந்த மலையடியில் மல்லாந்து -சாய்ந்துண்போன்
செல்ல சகோதரியை கொல்லூர்மூ காம்பிகையை
உள்ளப் பசியாற உண்….(95)….29-07-2011
உன்னை நினைக்கையில் உள்ளம் உருகணும்
என்னை மறந்துநான் ஏகாந்தம் -தன்னையே
கொள்ளவும் அன்னையே கூட்டாய் அரனுடன்
முள்ளெனுமென் நெஞ்சில் மலர்….(96)….29-07-2011
மலரோ கனியோ இலையேல் இலையோ
புலரும் அதிகாலைப் போதில் -குளிரக்
குளித்தவள் பாதத்தில் கும்பிட்டு சேர்க்க
களித்தவள் காப்பாள் குலம்….(97)….29-07-2011
குலம்தழைக்கும் வாழ்வில் வளம்கொழிக்கும் வாக்கில்
நலம்சிழிக்கும் மேலோர்தம் நட்பு -பலம்தழைக்கும்
காமக் களமொழிக்கும், கூற லலிதா
நாம சஹஸ்ரம் நமக்கு….(98)….29-07-2011
நமக்குத் தொழில் நதிகங்கை இந்து
சுமக்கும் சிவனிடம் சேர்ந்த -கமக்கும்
குழல்தாங்கும் சக்தி கமல பதத்தை
தொழல்கூலி சும்மா இருப்பு….(99)….30-07-2011
இருப்பாள் இருந்தும் இராதாள் இவளை
குறிப்பால் அறிதல் கடினம் -நெருப்பால்
ஜலத்தால் வளியால் நிலத்தால் வெளியால்
புலத்தால் உணரா பரம்….(100)….30-07-2011
பரசிவ வெள்ளம் பருகிட உள்ளம்
பரமஹம்ஸ பேரின்பம் புல்லும் -வரசவம்
கங்கையில் மந்திரம் கர்ணத்தை ஓதிட
தங்குபவ தாரிணித் தாய்….(101)….30-07-2011
தாயவள் தாலாட்டு தூங்கும் விழிப்புணர்வை
போயெழுப்பிப் பால்ஞானம் போட்டிடும் -நோயவளை
கொண்டோர்க்கு சாவில்லை கூற்றுவன் மூப்பதை
அண்டா(து) அளித்திடுவான் அம்….(102)….30-07-2011
அம்மென்(று) அளிப்பவள் உம்மென்(று) உழைப்பவள்
இம்மென்(று) இறைப்பவள், ஈசனார் -கம்மென்று
பார்த்திருக்க ஆன்மனாய், பற்பல ஜீவனாய்
பூத்திருப்பாள் சக்தி பரந்து….(103)….30-07-2011
பறப்பாள் அடியார் பெருந்துயர் தீர்க்க
பொருப்பாள் மருவும் பொழுதும் -சுரப்பாள்
அவர்மேல் அருட்பாலை அன்னை, சகத்தில்
இவர்போலிங்(கு) உண்டோ இறை….(104)….30-07-2011
இறையவள், நான்கு மறையவள், நாதர்க்(கு)
அரையவள், தீவளிவான் அப்பு -தரையவள்
பக்தித் துறையவள் முக்தி அறையவள்
சக்தியுறை பாதம் சரண்….(105)….30-07-2011
——————————
வெண்பூ வெண்பா
————————
(சரஸ்வதி வெண்பாக்கள்)
——————————
சு.ரவி ரவிவர்மா ஓவியம் பார்த்து
——————————
எண்ணையின் வண்ணத்தில் எண்ணென் கலையாளை
பண்ணிசைக்கும் கோலம் படுஜோர் -உன்நுதல்
குங்குமம் கொட்டி கலைமகள் நாசியில்
தங்கிய மூக்குத்தி தூள்….(1)….09-05-2008
நாணல் இடையாளாம் ,நாவன்மை உடையாளாம்
பூணல் அயன்மணந்த புண்ணியளாம்-வீணில்
அலையாதெ நெஞ்சே அறுபத்தி நான்கு
கலையாளை சேரக் கவி….(2)….01-04-2008
நாக்கில் நரம்பின்றி நாளும் வசைபாடி
தீக்குள் குளிர்காயா தேநெஞ்சே -வாக்கில்
கலைவாணி வந்து குடியேறும் வண்ணம்
அலைபாய்ந் திடா(து) அடங்கு….(3)….21-11-2008
ரவியுடன் சுற்றி ரகசியங்கள் கற்ற
கவிஅனுமன் கானம் குளிரப் -புவிமிசை
பாயப் பொழிவாள் படிக நிறத்தாள்
ஆய கலையாள் அருள்….(4)….2-12-2008
வந்தனம் செய்ய வரமளிக்கும் வாணியால்
மந்தனும் ஆவானே மாகவி -சிந்தையும்
வாக்கும் செயலுமவள் போக்கே துதித்திட
தேக்கும் வடிக்குமே தேன்….(5)….25-12-2010
பலகலைக்கு ஞானி பயில்வோர்க்கு தோணி
தளைதப்பா தீந்தமிழின் தேனி -நிலைகுலைந்து
நான்நீ எனப்பேசும் நாநீ நுழையாயே
வாணி வரமருள்வாய் நீ….(6)….27-09-2009
தேஜ சொரூபிணீ தேவி சரஸ்வதி
ராஜ ஷியாமளா ரக்ஷிநீ -பூஜை
புனஸ்காரம் எந்தன் நமஸ்காரம் தாயே
மனக்கிலேச யாழினை மீட்டு….(7)….13-12-2009
வேதங்கள் நான்குமவள் காதணியும் குண்டலம்
நாதப் பரப்பிரமம் நாசிக்காற்று -ஓதும்
புராணங்கள் மேகலை பாதச் சிலம்பு
சராசரங்கள் சேரும் சபை….(8)….02-01-2010
கட்டளை போடு கலித்துறைக்கு பாரதி
கட்டளை கோர்ப்பெனக்கு கைவர -வெட்டவெளி
வெண்பா களித்துறையில் வாழவைத்த வாணியே
என்பால் கலித்துறைக்கேன் ஏய்ப்பு….(9)….12-08-2011
சகலகலா வல்லி அகலாதென் வாக்கில்
பகலிரவாய்க் கொள்வாய்நீ பள்ளி -புகலவரும்
வெண்பாவாம் வாரிசத்தில் வந்தமர்ந்து நின்புகழை
பெண்பாவாய் பாடிப் பற….(10)….12-08-2011
நவையூறும் நாவில் சுவையூறச் செய்து
அவையேறும் வாழ்வை அளிப்பாய் -இவையாவும்
பெற்றிட வெண்பாக்கள் குற்றம் குறையின்றி
சொற்றுளியால் சீராய் செதுக்கு….(11)….12-08-2011
மட்டொழுகும் வெண்கமலம் மீதில் தனிவெண்மைப்
பட்டிழைய சிற்றிடையில் போயமர்ந்து -மொட்டிதழால்
ஆய கலைகளை ஆன்றோர்(கு) அறிவிக்கும்
தாயே எனக்குமதைத் தா….(12)….12-08-2011
சவ்வாது சந்தனம் சத்தியம் அவள்வாக்குக்(கு)
ஒவ்வாத வாச உபமானம் -இவ்வாத
உண்மை உணர்ந்தகம்பன் ஓதினன் அந்தாதி
அம்மை சரஸ்வதிமேல் அன்று….(13)….12-08-2011
வேதம் உபநிடதம் வித்தைகள் எண்ணென்னும்
பாதம் விளையாடும் பிள்ளைகள் -மாதம்மும்
மாரியும் பெய்தலாய் மாண்புமிகு கல்வியதி
காரியின்கண் பார்க்கக் கவி….(14)….12-08-2011
காமுறுவாள் கற்போர்மேல் கைகொடுக்கக் கற்பகமாய்
நாமருவி நூற்சேலை நெய்திடுவாள் -பூமருவும்
வாவிவளர் கூத்தனூர் தேவி சரஸ்வதி
தாவி அளிப்பாள் தமிழ்….(15)….12-08-2011
துமியென்ற கம்பன் தவறில்லை என்று
சமயத்தில் செய்தாள் சகாயம் -தமிழென்று
ஆய்ச்சியாய் வந்தன்று பேச்சு வழக்காக்க
கூச்சலிட்ட கூத்தன் களைப்பு….(16)….12-08-2011
காளிதாச கம்ப குமர குருபரர்கள்
தோளிலங்க வஸ்த்திரமாய்த் துள்ளிடுவோய் -தாளிரெண்டில்
கைக்கட்டிக் கேட்கின்றேன் பொய்க்கெட்டா புத்தியை
கைக்குட்டை யாய்கையில் கட்டு….(OR)
கைக்குட்டை யாய்கை கொடு….(17)….12-08-2011
படிகமணி மாலை படிப்புணர்த்தும் ஓலை
மடிதவழும் வீணை, மருங்கின் -பிடிபடாமை
கோலத்தை நெஞ்சிருத்தி கும்பிடுவோர் முன்வாழ்த்தாம்
வேலொத்து பாய்ச்சும் வசவு….(18)….12-08-2011
வர்மன் வரைந்தாற்போல் வாரிசத்தில் வீற்றிருந்து
தர்மம் தவம்தானம் தேர்ந்திட -கர்மமாய்
மோனத்தில் மூழ்கி முனையும் மஹாசக்தி
ஞானத்தை நானுற நல்கு….(19)….12-08-2011
அற்பனே ஆனாலும் ஆசான் அவளிரெண்டு
பொற்பதம் போற்ற புழலறிவின் -கற்பனை
ஊற்றில் குளித்து உவப்பால் துடைத்தணிவர்
மாற்றுத் துணியாய் மனது….(20)….12-08-2011
கல்வி கலவிடும் செல்வம் சிணுங்கிடும்
வல்லமை வீரம் வணங்கிடும் -செல்வி
கலைவாணி யாலுன் கவுரவம் கூடும்
தலைவானில் நிற்கும் திமிர்ந்து….(21)….13-08-
வேறெதையும் எண்ணாது வேண்டி வணங்கிடுவாய்
சாரதையை நம்பி சிருங்கேரி -ஊரதனில்
பாரதன்பின் வாழ்வு பரிசுத்தம் ஆகிடும்
பாரதன்பின் பார்க்கப் பளிங்கு….(22)….13-08-2011
துங்கா நதிக்கரைசத் சங்காய் சிருங்கேரி
சிங்கா சனத்திருக்கும் சாரதே -சங்காய்
கிடக்கின்றேன் சும்மா எடுத்தூதி அம்மா
நடத்தெனது நாடகத்தை நன்கு….(23)….13-08-2011
சங்கரன் முன்செல்ல சாரதை பின்செல்ல
துங்கையின் தீரத்தில் தேவியின்ச -தங்கையின்
சத்தம் குறைந்திட சத்குரு பார்த்திட
வித்தை சிருங்கேரி வாய்த்து….(24)….13-08-2011
கர்ப நுணல்மேல் குடையாய் படம்பிடிக்கும்
சர்ப சகாய சிருங்கேரி -கர்ப
கிரகத்து சாரதையை கும்பிடுவோர் முன்பு
கிரகங்கள் கூப்பும் கரம்….(25)….13-08-2011
வித்தை, வினயம், விசாரம், விவேகமிவை
மொத்தமுமென் நெஞ்சில் முளைத்திட -ஸ்ரத்தை
அளித்திடு சாரதா அம்பிகே, என்னுள்
முளைத்திடு முண்டக மா….(26)….14-08-2011
உளம்கொடுக்கும் உன்ன, உரம்கொடுக்கும் நண்ண
களம்கொடுத்து ஞானக் கொழுந்தாய் -புலன்மடக்கி
ஆசை அறுத்தான்ம பூசைக்கு சாரதை
ஓசை சதங்கையொலி ஓம்….(27)….14-08-2011
நையப் புடைப்பாள் நமதகந்தை போக்கிட
ஐயம் அகன்றதும் ஆதரவாய் -கையைப்
பிடித்திழுத்துச் செல்வாள் பரமசுகம் கூட்ட
படித்ததெலாம் பெண்ணிவள்முன் பாழ்….(28)….14-08-2011
கோனார் கணக்கினில், கம்பன் கவிதையில்
நானார் விளக்கநூல் நாற்பதில் -மூணாறில்
எண்ணும் எழுத்துமாய் எங்கும் இருப்பவளை
எண்ணல் அயன்கை எழுத்து….(29)….14-08-2011
பேசக் கொடுத்ததில்லை பாரதியின் தாய்மொழி
கோஷமிட்டு கூற்றன் குதிக்கஆ -வேசமுற்று
நாரணா, நான்முகா, நாதா நமச்சிவாயா
கூறநா கிட்டிடும் காப்பு….(30)….14-08-2011
எண்ணமவள் நேற்று எழுத்தவல் இன்றுநாம்
பண்ணும் செயலவள் பின்நாளை -பெண்ணவள்
ஆன்றோர்க்கு ஞானம் அறிவிலார்க்கு ஆணவம்
தேன்தோன்றும் தாய்சொல் தமிழ்….(31)….14-08-2011
கீரன் திருமுரு காற்றுப் படையவள்
மாறன் திருவாய் மொழியவள் -சூரன்
மகாகவி பாரதியின் மாங்குயில் பாட்டு
தகாதோர் செவிக்கவள் திட்டு….(32)….14-08-2011
வண்டுவந்து மொய்க்கா வரைந்த மலர்சோலை
கொண்டவர்மன் ஓவியத்தில் கால்மடித்து -முண்டகத்தின்,
மெல்லிதழில், தோகை மயிலன்ன தடாகத்தில்
நல்கிடுவாள் யாழில் நலம்….(33)….14-08-2011
என்பிழைகள் ஏராளம் என்றாலும் அன்னையே
புன்மொழியான் என்னைப் பொறுத்தருள்வாய் -உன்விழியால்
கூட்டு தமிழை கவிபாடும் ஆற்றலை
ஏட்டுச் சுரைக்காய் எனக்கு….(34)….15-08-2011
பாக்கு பழமிலை பூக்கள் பணிவெதிர்
பார்ப்பாள் பராசக்தி பாரதி -வாக்கில்
வினயமுடன் வித்தை விரும்புவோர் தம்மை
தனயனென ஏற்பாள்அத் தாய்….(35)….17-08-2011
வேசிவரக் காத்தவடை தோசை வரதனை
ஆசுகவி ஆக்கிய ஆனைக்கா -ஆசிகையே
காளமேகம் வாய்க்கெட்டி கைக்கெட் டியவாணி
மூளயோகம் என்வாய்க்கும் மூட்டு….(36)….18-08-2011
பாத்தநூறு தெய்வத்தில் பாரதியை போலிங்கு
காத்திருக்க வைக்கா கடவுளெது -கூத்தனூர்
தேவி மனம்வைத்தால் தேளின் கொடுக்கிலும்
காவியம் கொட்டும் களிப்பு….(37)….19-08-2011
சாத்திரங்கள் வேதங்கள் கூத்தனூர் தேவியின்
நேத்திரத்து தீர நுணலிமைகள் -பாத்திரம்
கண்டவள் பார்வை கருவண்டு போடுமே
பண்டிதப் பிச்சை பிறப்பு….(38)….19-08-2011
பண்டித வன்புலிக்கு பாமரத் தோல்போர்த்தும்
மண்டை கனத்தில் மிதக்குங்கால் -எண்டிசைக்கும்
மூளியைக் காவிய மன்னனாய் மாற்றிடும்
காளியின் தாஸன் கதை….(39)….19-08-2011
வேதவ்யாசன் சொன்னது வேழம் தொகுத்தது
கீதையைக் கண்ணன் கொடுத்தது -ஏதுமே
வெற்றிக்குப் பின்னிருந்து வாணி விதைத்ததே
முற்றும் துறக்கவும்அம் மாது….(40)….19-08-2011
கூனியின் சூழ்ச்சியும் கைகேயி வீழ்ச்சியும்
மானி இராமன் முதிர்ச்சியும் -தோணி
குகனின் நெகிழ்ச்சியும் குன்றனைய வாயு
மகனனுமன் வாக்குமவள் மாண்பு….(41)….19-08-2011
பால்முகமும் வேல்விழியும் மால்மருவா நூல்மருங்கும்
ஆல்சிவன்பெண் பால்வடிவாய், நால்மறையும் -தாள்தழுவ
சீதமலர் போதமர்ந்து போதிக்கும் ஏதமில்
லாதவள்யாழ் கீதம் லயிப்பு….(42)….19-08-2011
கூனியின் சூழ்ச்சியில் கைகேயி வீழ்ச்சியில்
மானி இராமன் முதிர்ச்சியில் -தோணி
குகனின் நெகிழ்ச்சியில் குன்றனைய வாயு
மகனின்சொல் வாக்கிலவள் மாண்பு….(43)….19-08-2011
காடுவரை சென்றங்கு கொள்ளியில் வெந்துஎமன்
ஏடுரைத்த வண்ணம் எரிவாயில் -போடும்முன்
முட்டா ளையும்காக்கும் மந்திரமாம் வாணியைநா
கட்டாலப் போறவனே கொள்….(44)….19-08-2011
தாத்தனூர் சேர்த்த திரவியங்கள் செல்லாது
கோர்த்தநூறு சுற்றமும் கூடவரா -கூத்தூர்
பேடையை நம்பிநீ பாடை படுத்திருக்க
காடென் கடைசிவரை காப்பு….(45)….19-08-2011
கல்லறைக் காட்டினில் செல்லரித் தாலுமுடல்
சொல்லரித்துப் போகாது சோர்வடையாய் -புல்லரித்து
போற்றி உனைத்தூக்கி பூர்புவஸ் லோகத்திற்(கு)
ஏற்றி விடுவான் எமன்….(46)….19-08-2011
தெக்குவாய் கூறிடும் தோத்திரங்கள் சுத்தமாய்
மக்குபோய் ஆளும் மகாசபை -சுக்கலான
ஓலைச் சுவடி உவேசா அவர்களால்
நாளைக் கடந்துநிற்கும் நூல்….(47)….19-08-2011
கற்றதனால் ஆயபயன் நற்றமிழாள் நல்லுறவைப்
பெற்றதே போதுமென்று போதியமர் -மற்றதெலாம்
செந்திருவால் செல்வமும் சங்கரியால் வீரமும்
வந்திரும்பார் வாணி வகுத்து….(48)….19-08-2011
போகத்தில் விந்து புகுமுன் புகுந்தங்கு
மோகச் சினைமுட்டை மூளையை -வேகவைத்து
பாமரனா, பண்டிதனா, மாமர மண்டையா
தாமரையாள் தந்திடுவாள் தீர்ப்பு….(49)….20-08-2011
உச்சிக் குடிமியை ஊடாடும் பூணலை
மெச்சிடும் ஆசார மேன்மையை -த்ச்சமாய்
எண்ணும் கலைவாணி ஏற்பாள் வினயத்தை
கண்ணின் மணியாய்க் குறித்து….(OR)
மின்னும் அணியாய் மகிழ்ந்து….(50)….29-08-
வீணை படிகமணி வேதக் கரத்தளை
பானை பிடிக்குமயன் பத்தினியை -சேனை
கலைகள்எண் ணென்சூழ செந்தா மரையில்
விளையும்வெண் பூவை வணங்கு….(51)….21-08-2011
பத்தரைப் பொன்னில் பதினாறாம் யவ்வனத்தில்
முத்திறைக்கும் சேயின் முறுவலில் -சித்திரையில்,
புத்தரின் மோனத்தில், புண்ணிய தீர்த்தத்தில்
இத்தரைதர் மத்தில் இவள்….(52)….21-08-2011
காசியில் கங்கையில், ஆசியில், ஆண்மையில்
வாசி அடக்கும் விளையாட்டில் -பூசிடும்
மாசிவை வெண்ணீற்றில், ஹாசிய நாடகத்தில்
ஆ!சிரி அப்பா அவள்….(53)….21-08-2011
தண்டடியில் தூங்கி தவமகுடி கேட்டெழுந்து
மண்டயிடித் தாங்கே மலமறுக்கும் -குண்டலினிப்
பாம்புக்(கு) அடங்காது, பாரதியின் கண்ணிநுண்
தாம்புக்(கு) அடங்கத் தெருள்….(54)….21-08-2011
ஈரெட்டு ஆறெட்டை ஈன்றவள், நான்மறையை
சீராட்ட வந்த செவிலித்தாய் -பாரேட்டுப்
பாக்கள் பதிகங்கள் பாசுரங்கள் யாவையும்
ஆக்கி சமைத்திடும் ஆய்….(55)….22-08-2011
அஞ்சிலே சம்பந்தர்(கு) ஆரா அமுதளித்து
பிஞ்சில் பழுக்கவைத்த பார்வதி -கஞ்சியை
கல்வி ‘நகரேஷு காஞ்சி’யாய் ஆக்கினள்
செல்விகா மாட்சியில் சேர்ந்து….(56)….22-08-2011
பொற்றா மரைக்குளமே, போட்ட பதிகங்களை
சற்றும் முழுகாது சேர்த்தவளே -கொற்றவள்
மீனாட்சி பிள்ளைத்த மிழ்சொல் குருபரர்
நாணாச்சு வில்லம்பு நீ….(57)….22-08-2011
எண்ணென் கலைகளை ஏழு சுரங்களில்
பண்ணென யாழில் பயின்றிடும் -அன்னத்து
வாகனன் பத்தினி வெண்தா மரைவாணி
மோகனென் வாக்கினில் முந்து….(58)….17-07-2007
வேதயிதி ஹாசபு ராண உபநிடதம்
யாதுமுன் மூச்சில் இழையும்சங் -கீதமாகும்
கோத்த படிகமாலை யோடுகூத்த னூர்வாழும்
ஆத்தாளே ஆசுகவி ஆக்கு….(59)….17-07-2007
வித்தை சிறக்க விளைவுகள் மேன்மையுற
சித்தம் சிதறாது சீர்பெற -புத்தியில்
வாநீ அமர்ந்திட வாக்கு பெருகிட
வாணியின் தாளை வணங்கு….(60)….17-07-2007
தன்னேரில் லாதவள் தானே தனக்குவமையாள்
பொன்னேர் முகமும் புலமையால் -மின்னேர்
வசீகர வாணி வழங்குவாள், ஞானப்
பசீகரம் ஏந்திப் பிழை….(61)….23-08-2011
வெற்றிட மாய்விளங்கும் சிற்றிடையை, செந்தமிழ்ப்பால்
முற்றியத் தாய்மை முலையிரெண்டை -நெற்றியிடைக்
குங்குமப் பொட்டை, கமலத் தயன்பெட்டை
செங்கமல மொட்டை சரண்….(62)….23-08-2011
வந்தனம் பாரதி வாணி சரஸ்வதி
மந்தனென் மூளை முடுக்கினில் -வந்துநுண்
ஆன்ம தரிசன ஆர்வம் பெருக்கிடு
நான்மகன் அன்றோ நினக்கு….(63)….23-08-2011
வாணி மஹாலதன் வாசலில் வீற்றிருக்கும்
ராணியே நாடக ஏணியே -நானினி
எப்போதும் நிந்தன் எழிலுருவை மாந்திட
இப்போதே நெஞ்சம் இரங்கு….(64)….23-08-2011
கோபம் அகங்காரம் கர்வம் புறங்கூறல்
தாபம் தணியாதோர் தீவீரம் -பாபம்
வரிந்திடச் செய்திடும் வீணர்தம் தீங்கில்
இருந்திட மாட்டாள் இவள்….(65)….23-08-2011
கம்பனின் இல்லத்து கட்டு தறிபாட
நம்புமென் வாயுண்ணும் நோன்பிற்கா -அம்பையே
உண்ணதான் வாயென்றால் ஊமையாய் ஆக்கிடு
பண்ணது பின்னேபெப் பே….(66)….23-08-2011
தோப்பில் துரவில் தளும்பும் அடவியில்
மோப்பம் பிடிக்கும் மலர்வண்டில் -மேய்ப்புல்லின்
வண்ண மரகதத்தில் வெற்படி வாரத்து
மண்ணில் மழையின் மணம்….(67)….23-08-2011
வாதாடல் வம்பிழுத்தல் வஞ்சித்தல் வைத்துமனை
சூதாடல் மாற்றான் மனைசுகித்தல் -தோதாக
வந்தவரை ஏய்த்து வழிப்பறி செய்தலிவை
அந்தவா ணிக்கு அவம்….(68)….23-08-2011
சத்துவத்தில் சாந்தமாய், சாகசத்தில் ராஜசமாய்
சுத்தமன தாமசத்தில் சும்மாவாய் -அத்தனையும்
தாண்டி அனுபூதி தந்திடும் தாயிவளை
வேண்டிட வையத்தில் வான்….(69)….23-08-2011
வலுவிவள் சேர்க்கை, வளமிவள் நூற்கை
புலியிவள் மான்தோல் போர்த்தி -எளிமையாய்
கோலம் கொடுத்தாலும், கூறக் கலம்பகம்
காலன் உயிருக்கே காவு….(70)….24-07-2011
கற்பனை தந்து கவிதை களைத்தந்து
தற்பெருமை தந்துனைத் தாழ்த்திடுவாள் -அற்பனாய்
செய்வள் சரஸ்வதி, சிந்தைக்கப் பால்செல்ல
பெய்வள் திருஞானப் பால்….(71)….24-08-2011
தனியானை வரும்முன் மணியோசை யாம்போல்
கனிவான சொல்முன் குரலில் -தணிவும்
உடையவர்கள் நாவில் சடையப்ப வள்ளல்
கொடையளிப்பாள் கம்பன் கவிக்கு….(72)….24-08-2011
கோல மயிற்சாயல் கூவும் குயில்வாயள்
நூலை நிகர்த்துநெளி நுண்ணிடையாள் -பாலை
வனச்சோலை பாக்கள் விழையும் கவிக்கு
மனச்சோர்வை நீக்கும் மருந்து….(73)….25-08-2011
எழுதா கிழவி, எழுதிப் பழக
பொழுதும் அணைத்துப் புணரும் -அழகி
துடியிடையில் பிள்ளைத் தமிழேந்தி, வேண்ட
பொடிநடை யாய்வருவாள் பார்….(74)….26-08-2011
வெண்தா மரைமேனி, செந்தா மரைப்பாதம்
விண்தா மரைபூத்தோன் வல்லியே -கண்தா
மரைபாராய் பண்தா மறைவாணி என்தாய்
முறையன்றோ நீயிம் மகர்க்கு….(75)….26-08-2011
பாழெனத் தள்ளாதிப் பாவியை உந்தன்கை
யாழெனக் கொண்டுமடி ஏந்திடு -ஊழெனை
வாட்டாத வண்ணம் வகைசெய்வாய் வாணி
பாட்டெழுதப் போகுமே பாடு….(76)….27-08-2011
தேவாரம் வேண்டாம் திருவாய் மொழிவேண்டாம்
நாவோரம் நின்றென்னை நானறியும் -தீவீரத்
தேடலில் ஈடுபட்டு வீடான் மனிலென்றும்
நீடூழி வாழவைவா ணி….(77)….28-08-2011
கூத்தன் சபாபதி கூடப் பிறந்ததால்
கூத்தனூர் கொண்டாயோ கோயிலாய் -வாத்தியார்
அம்மா எனக்களிப்பாய் ஆடா(து) அசங்காது
சும்மா இருக்கும் சுகம்….(78)….29-08-2011
காளமேகம் வெண்பாவில், கம்பன் விருத்தத்தில்
காளிதாசன் கற்பனை கங்கையில் -ஏளுகின்ற
பார தியெனதுவெண் பாக்களில் சீராக
ஊர திசியக்க உய்….(79)….29-08-2011
சங்கத் தமிழும், சதுர்மறையும், சாத்திரமும்
செங்கண்மால் நாம சகஸ்ரமும் -சங்கரியின்
ஆயிரம் பேரும் அதிகாரம் பெற்றது
தாயிவள் வாய்வந்த தால்….(80)….29-08-2011
நாடகம், சங்கீதம், நாட்டியம், முத்தமிழ்
பாடும் பதிகங்கள் பாசுரங்கள் -நாடிடும்
தன்முத் திரைபதிக்க தேவி சரஸ்வதியின்
சின்முத் திரைக்கை சிறப்பு….(81)….29-08-2011
சொல்லக்கேள் நெஞ்சே சகத்தில் பிறந்திறக்கும்
அல்லல்தீர் மாமருந்து ஆகுமிங்கு -வெள்ளத்தை
ஒத்து விரைந்துனக்கு ஓதுவிக்கும் ஓங்கார
வித்தைக்(கு) அதிபதியின் வாக்கு….(82)….29-08-2011
மாதவம் செய்தும் மகாயக்ஞம் செய்துமுன்
தீதவம் தீராது, தாமரைப் -போதமர்
வாணியை, ஞான விசார உயர்வளிக்கும்
ஏணியை எந்நாளும் ஏத்து….(83)….29-08-2011
நால்செல்ல நாள்செல்ல நாம்செல்ல வேண்டுமே
ஆள்கொல்லி கூற்றன் அழைப்பானே -கேள்நல்ல
வார்த்தைக்(கு) அதிபதி வாணியைப் போற்றிடப்
பூர்த்தியா கும்பார் பிறப்பு….(84)….30-08-2011
நாடுவாய் நெஞ்சே நளினம் அமர்வோளை
சூடுவாய் நெஞ்சே சரோருகத்தாள் -பாடுவாய்
நெஞ்சே பதுமத்தில் நல்லதோர் வீணையைக்
கொஞ்சும் கலையாள் கழல்….(85)….30-08-2011
அறிவு அலுத்திடும், ஆன்மீக ஞானச்
செறிவு நிலைத்திடும் சான்றோர் -உறவாய்
நெறியை உணர்த்திடும் நான்முகன் பத்தினி
வெறிநான் அகந்தை விலக்கு….(86)….30-08-2011
நாக்கில் நரம்பின்றி நாணாது பேசுவோர்
வாக்கில் வராள்கலை வாணியவள் -தூக்கில்
இடப்படும் போதும் இனியன கூற
தடைப்படுமே தண்டனை தீர்ப்பு….(87)….30-08-2011
கண்ணன் குழலில் கணபதி மோதகத்தில்
வண்ண மயிலூர்வோன் வேல்முனையில் -மின்னிம்
திருவில், மஹேசன் தவத்தில் திகழ்வாள்
உருவிலிவள் பாயும் ஒளி….(88)….03-09-2011
“தும்பைவெண் பட்டுடுத்தி தாமரை வீற்றவளை,
நம்பிஊ டாடும்நன் நூலிழையும், -கம்பனில்லக்
கட்டுத் தறியில் கவியாகி நெய்துவெண்
பட்டளிக்கும் பாரதிக்கே பார்”….(89)
“கதிர்முகத்தாள் செந்நெல் கதிர்நகத்தால் யாழில்
உதிர்சுரத்தால் எண்எண் உரைப்பாள் -சதுர்முகத்தோன்
பத்தினி என்வாக்கில் பூத்திட நீயென்னைப்
பத்திநீ எண்ணு பரிந்து”….(OR )
பத்தினி, கம்பனை பாரதியைப் போலென்னைப்
பத்திநீ எண்ணு பரிந்து”….(90)
“தொழுகைக்கும் , காலில் விழுகைக்கும் , கண்ணீர்
அழுகைக்கும் வாணி அசையாள் – கழுகைத்தன்
வாகனமாய்க் கொண்டோன் வயிறுதித்தோன் பத்தினி
நாகனமற் றோர்பால் நிலைப்பு”….(91)
“நாபிக் கமலத்தில் நன்கமர்ந்து நானிலம்
சோபிக்க ஓதும் சதுர்முகனை -தாபிக்க
வைத்தவளைப் போற்றிட , வையத்(து ) தளவுகல்வி
கைத்தல நெல்லிக் கனி”….(92)
”அண்டாது வெவ்வினைகள், ஆய கலைகளை
விண்டோதும் வீணை விரலாலைக் -கண்டோடும்;
கொண்டாடும் அன்பர் குடும்பத்து வாரிசாக
வெண்டா மரையாள் விருப்பு”….(93)
“விருந்தா வனக்கண்ணன் வேய்ங்குழல் வாக்கு,
கருந்தா மரைக்கண்கள், கூறைக்குள் -பொருந்தாத
இல்லா இடையை , இருத்துவோர் புத்தியில்
சொல்லாள் பதத்தின் சுவடு”….(94)
“சோதித்த பின்வாழ்க்கை சொல்லித் தரும்பாடம்;
வேதத் தயன்மணந்த வாணியோ -போதித்து
கூட்டுவாள் சத்சங்கம் ,காட்டுவாள் நன்னெறி
தீட்டுவாள் வைரமாகத் தேய்த்து”….(95)
“தலைஎழுத்தை மாற்றும் திருப்பட்டூர் அய்யன்
முலையழுத்த மோகிக்கும் மாதே -கலைஎழுத்தென்
மேடை வசனத்தின் மேன்மைக்கு ,வெண்ணிற
ஆடை அணிந்தோய் அரண்”….(96)
”ஆரா முதனாகம் ஆள்பவளும், வெள்ளிமலை
ஊரான் இடபாகம் உற்றவளும் -கூறார்
பதிலுனக்கு ஞானம் பொருத்து; ,சரசு
வதியே வினாவிடை வீடு”….(97)
“மகர யாழை மடியேந்தி மீட்டி
அகர முதல அளிப்பாள் -நுகர்வோர்
கவியிளங்கோ ,கம்பன், குமர குருபரராய்
புவிவிளங்க வாக்கன் பளிப்பு”….(98)
“சம்போ மகாதேவன் சோதரி, செவ்விதழ்
அம்போ ருகமமர்ந்தோய் ஆதரி -அம்பே
சகலகலா வல்லி, சரஸ்வதி வாணி
புகலெனக்குன் பாதாம் புயம்”….(99)
”பாத நமஸ்காரம், பூசை புனஸ்காரம்
ஏதும் புரிந்திலேன் என்றாலும் -ஆதுரம்
உற்றெனது வாக்கிலே உட்கார்ந்து வெண்பாக்கள்
பெற்றிட வைத்தாய்வெண் பூ”….(100)
“புத்தகம் , முத்துமணி பக்கயிரு கைபற்ற
மத்தயிரு கையால் மடியேந்தும் -சித்திர
யாழினை மீட்டிடும் ஏழிசைச் செல்வியே
வாழிய வாழிய வே”….(101)
——————————
இடைபுகுந்து காக்கும் இவளும் -சடைப்பின்னல்
ஆக இணைந்து அலகிலா ஆட்டத்தை
பாகப் பிரிவினையில் பார்ப்பு”….
“பத்தவ தாரப் பணிக்குதவ பூதேவி,
நித்திரை யோகமோ நீளாவால், -பத்தர்க்கு
சேர அருள்சகாயம் ஸ்ரீதேவி , ஆகமால்
தாரங் களின்தயவால் தான்”….
” காப்பு”
——–
“அகழ்வாரைத் தாங்குகின்ற அக்காள்முன் வந்த ,
முகிழ்வா ரிசமமர்ந்த மாமி -புகழ்பாட
பாழியன்தோள் மாமன்தோப் புக்கரணம் போட்டபின்பு
ஆழியைத்தந் தோன்தாள் அரண்”….
சமர்ப்பணம்
—————-
“அன்னை இருந்த அசோகவனம் சேர்ந்தன்று
அண்ணல் கணையாழி தந்தவள் -முன்னுச்சி
சூடா மணிகொணர்ந்து ,தேடும் இராகவன்
பாடொழித்தோன் பாதசமர்ப் பிப்பு”….
“கஷ்டம் கலைந்திடும் , இஷ்டம் இணங்கிடும்
அஷ்ட இலக்குமிகள் ஆசியால் -இஷ்டமாய்
சுக்குமி ளக்குதி திப்பிலி என்பதின்றி ,
லக்குமி தாராய் லயம் “….(1)
“கள்ளம் கபடின்றி, கையேந்திய சங்கரர்க்கு
உள்ளங்கை நெல்லி உவந்தளித்த -உள்ளத்தின்
வீரதர் மத்தால் வியந்தவர் வேண்டிட
கூரையைப் பிய்த்தவளைக் கொஞ்சு”….(2)
“சுதாமன் அவலுக்கு சொர்ணங்கள் தந்தாய்
கதாமகன் கீர்த்தியை கண்ணனுக்(கு) -இதோவென்று
பொன்னோடு பேரை புறக்கணித்த பூவையே
நின்னோடு சேர்ந்தகண்ணன் நார்”….(3)
“பொன்வைக் குமிடத்தில் பூவைப்போர் மீதிவள்
கண்வைக்க கஞ்சனும் கர்ணனே -முன்வைத்தக்
காலைப்பின் வைக்கா கடுமுயற்சி யாளர்க்கு
வேலை திருவினையாள் வாகு”….(4)
“தான மவள்லீலை தர்ம மவள்வேலை
மானம் புகுந்து மகாபலி -தானமிட்ட
கர்வத்தை மூவடியைக் கொண்டு அடக்கிய
தர்மத்தின் தாரம் திரு”….(5)
“தானம் கொடுத்தமாட்டின் தாடை பிடிப்பது
ஈனம் எனநூல் இயம்பினாலும் -மானம்
பெரிதென்று எண்ணாமல் பிச்சை எடுப்போரை
சிறிதென்(று) ஒதுக்குவாள் சீர்”….(6)
’’பண்டிதர் பின்தொடர பிச்சைக்குப் போயன்று
கொண்டவூசிக் கஞ்சியை உண்டபின் -மண்டையில்
கையோ(டு) அகந்தை கழவு ரமணரை
மெய்யோடு சேர்த்தாள்பொன் மாது’….(7)
“அக்காள்மூ தேவி அயர்ந்துறங்கும் இல்லத்தில்
நிக்காள்ஸ்ரீ தேவிஎன்பர் நூலோர்கள் -முக்காலம்
தூங்கும் பெருமாளின் தூய திருவடிகளை
தாங்குவதால் தூங்காமல் தூங்கு”….(8)
“பூணுமய பக்திக்கே பூரித் தளித்திடும்
ஏனைய செல்விகள் ஏற்றத்தை -நாணய
நாயகி ஏற்பது நாற்புற சுத்தத்தை
போயகி லத்தை பெருக்கு”….(9)
அலையில் பிறந்து அலையில் புகுந்த
அலைதாண்டா பத்தினியை, அப்பொன் -சிலையை
விழியில் பதித்து விரலால் ஜபிக்க
கிழியும்பார் அவ்வறுமைக் கீத்து….(10)
வித்தைக்கு வேண்டும் வினயம், அதிதீர
சித்தத்தில் வேண்டும் சரிசமம் -சுத்தத்தை
வேண்டுவாள் செந்திரு, வாசல் தெளிப்போர்க்கு
யாண்டும் வறுமை இல….(11)
பட்ட கடனால் பயந்தோடி பாலாஜி
எட்டா மலையுச்சி ஏறிட -வட்டி
அசலோடு சேர்த்தளித்தும் அந்தோ புகழில்
முசலானாள் ஆமைக்கு முன்….(12)
வானுகந்து வந்தீரே வகுண்ட வாசலில்
நானகன்று சூரியாய் நிற்பதற்கு -தானமொன்று
செய்ய வருவாளே ஸ்ரீமன்நா ராயணரின்
கையைப் பிடித்து கனகு….(13)
பாங்கியின் யோகத்தால் பார்த்தனுக்கு பாரதத்தில்
சாங்கிய யோகத்தைச் செப்பியவன் -நீங்கிய
போதுன்னை ராமன் புலம்பினான் பார்த்தனாய்
யாதுமான லக்குமி யே….(14)
“தரமும் தரத்தில் நிரந்தரமும், செய்யும்
கருமத்தால் ஏழைக் குதவும் -கரமும்
இருப்பவர் வீட்டை இமையாது காப்பாள் ,
திருப்பள்ளி கொள்ளாள் திரு”….(15)
“பயில்வான் இறந்தாலும் , பண்டிதனாய் வாழ்ந்த
பயில்வோன் இறந்தாலும் பைசா -துயில்வோன்மேல்;
வீடு வரையுறவு வீதி வரைமனைவி
காடு வரைநெற்றிக் காசு”….(16)
“அவலை சுசீலை அளிக்கக் குசேலன்
கவலை களைந்தான் கிருஷ்ணன்; -அவளை
மணந்ததால் அன்றோமால் மாங்கல்ய பிச்சை
பணம்தந்து பெற்றான் புகழ்”….(OR ) -அவளை
வரித்ததால் தானேமால் வாரிக் கொடுத்து
தரித்திரம் தீர்க்கத் துணிபு”….(17)
“நாத்தனார் வீரத்தை , கூத்தனூர் கல்வியை
ஏத்திட ஏற்றம்தான் , என்றாலும் -பூத்தமலர்
செவ்விதழின் மீதேளும் செல்வியருள் இல்லையேல்
இவ்வுலகில் இல்லை இருப்பு “….(18)
“மஞ்சள் அரிசியில் மங்கல வாத்யத்தில்
வஞ்சியர் கல்யாண வைபவத்தில் -நெஞ்சணைந்த
தாலியில் தங்கமாய்த் தங்கியவள் தாம்பத்ய
வேலியைக் காக்கும்செல் வி”….(19)
“சித்திரம் கைப்பழக்கம் , செந்தமிழ் நாப்பழக்கம்
பத்தரை மாத்துப்பொன் பெண்பழக்கம் -உத்தம
பக்தி வயலில் புளகநீர் பாய்ச்சிட
முக்திநெல்லாய் விட்டெழும்உன் முன்”….(20)
“தங்கநிற வண்டுகள் தாதுக்காய் மொய்த்திட
பொங்கும் புளகமலர் போல்மாலின்-அங்கம்
புளகத்தால் கூச்செறிய, பார்வையால் உண்ணும்
அலகொத்தக் கண்ணாள் அவள்”….(21)
நீல மலர்நாடும் நந்தவன வண்டேபோல்
நீள விழியிரெண்டும் நாரணன் -கோலத்தைக்
கொண்டதோர் நாணத்தால் ,காணும் விருப்பத்தால்
அண்டமாய்ச் சுற்றும் அலைந்து….(22)
ஏழை சிரிப்பில், எடுப்பார்கைப் பிள்ளையின்
பேழைவாய் பொக்கையின் புன்னகையில், -வாழையடி
வாழையாய் வந்த விகல்பமில்லா வேட்டதிர்வில்,
தாழை எனமணக்கும் தாய்….(23)
“உச்சிவான் தோன்றி உறுமும் இடிமின்னல்
பச்சை மலையில் பளிச்சிடலாய் – அச்சுதன்
மாலின் மரகத மார்பில் மகாலட்சுமி
பாலின் நிறத்தில் பொலிவு”….(24)
மடைதிறந்த வெள்ளமாய் மங்கலப் பார்வை
கடைதிறந்து காணமயிர் கால்கள் -புடைத்தெழ
எல்லையில் லாயின்பம் எம்பிரா னுக்களிப்போய்
அல்லலில்லா வாழ்வை அளி….(25)
“கவுத்துவம் பூண்டவன் , கொன்று மதுவைக்
குவித்தவன் யோகத்தைக் கண்ணால் -கவுத்தவளே,
நீலமணி பட்டதால் நீலமுற்ற பார்வையை
பாலனென் மீது பதி”….(26)
’’கைடபனைக் கொன்றவன், கார்முகிலாய் சேடன்மேல்
மெய்படரச் சாய்ந்தவன்மேல் மின்னலாய் -மையடர்ந்த
பங்கயக் கண்களால் பார்த்தது போதுமென்மேல்
திங்கள் விழியைத் திருப்பு’’….(27)
“நாணுமுன் கண்களை நாணாக்கி மன்மதன்
வேணுவின் மீதெய்து வெற்றியைப் -பூணுவான்;
பாற்கடல் தோன்றிய பாவையே பார்வையை
ஓர்கணம் என்மீ (து ) உரசு”….(28)
பயிரான பூர்வஜென்ம பாவங்கள் போக்கும்
அயிரா வதத்தில் அமர்த்தும் -உயிராக
எண்ணினாள் தங்குவாள், ஏத்தினால் தாங்குவாள்
கண்ணினால் காவல் கொடுத்து….(29)
“அத்தகைய பார்வை அடியேன் மீதுபட்டால்
எத்தகைய செல்வம் எனைச்சேரும் -குத்தகையாய்
பத்தினி யேநீ, படியில்லை பாற்கடலில்,
இத்தரைக்குத் தாண்டிட ஏகு”….(30)
நூறிடர் தீர்த்திட பாரதம் செய்தவனின்
மாரிடம் கொண்ட மகாலக்ஷ்மி -சோறிடும்
சுத்தம் எதிர்பார்ப்பாள் செல்வம் அளித்திட
அத்திருக்(கு)ஆ சாரம் அணி….(31)
“குப்பையில் மாணிக்கக் கல்லாய் மிளிர்ந்திடுவாள்
அப்பழுக்கு சேறிலவள் அல்லியாவாள் -குப்பனின்
வீட்டுச் சுவரில் வரைந்தாலும் வந்தருள்
கூட்டும் வரலக்ஷ்மி காப்பு”….(32)
“சொர்ண நிறவதனம், செம்மா துளையதரம்
வர்ணனைக்(கு) எட்டா வடிவழகு – கர்ணனை
மிஞ்சும் உதார மனத்திற்க்(கு) உரியவளால்
பஞ்சும் பசும்பொன்னாம் பார்….(OR )
பஞ்சுமா கும்மாணிப் பொன்”….(33)
“அத்தன் அரிமால் அவதா ரமாய்யெடுத்த
பத்தையும் செய்த பணமிவளே -சத்த
நரசிம்மன் சாந்த நிலையுற்றார் ,செல்வி
வரசிம்மன் ஆனான் வரம்”….(34)
“பெண்ணொருத்தி நின்றிடுவாள், பின்னிருந்து ஆடவனை
முன்னிறுத்தி ஈவாள் முழுவெற்றி -கண்ணுறுத்தும்
கானகத்து அல்லிலன்று காகுத்தன் ,பின்தொடர்ந்த
ஜானகியால் கண்டான் ஜெயம்”….(35)
நீல மலர்நாடும் நந்தவன வண்டேபோல்
நீள விழியிரெண்டும் நாரணன் -கோலத்தைக்
கொண்டதோர் நாணத்தால் ,காணும் விருப்பத்தால்
அண்டமாய்ச் சுற்றும் அலைந்து….(36)
ஏழை சிரிப்பில், எடுப்பார்கைப் பிள்ளையின்
பேழைவாய் பொக்கையின் புன்னகையில், -வாழையடி
வாழையாய் வந்த விகல்பமில்லா வேட்டதிர்வில்,
தாழை எனமணக்கும் தாய்….(37)
உத்தம பத்தினியின் உச்சந் தலைவகிட்டில்
பத்தும் செய்யா பணமுடிப்பில் -சுத்தமாய்
சாணத் தெளிப்பில்ஸ்ரீ சூர்ண நுதற்பிறையில்
காணலாம் பொன்மகளின் கால்….(38)
கன்றை விளிக்கும் கறவையின் கத்தலில்
நன்றுரைக்கும் நல்லோர் நயவாக்கில் -வென்று
முழங்கிடும் வீரத்தில், வேதாந்த மூச்சில்
புழங்கிடும் பொமகள் பேச்சு….(39)
யாப்பலங் காரத்தில் ,காப்புக் கவிதையில்
மூப்புணர்ந்தோர் போக்கின் முதிர்ச்சியில் -நாப்பிளக்கப்
பொய்பேசா நாவில், புறங்கூறா புத்தியில்
தைபூசத் தான்மாமி தேசு….(40)
ஏரோட்டி வேர்வையை, ஏமாந்த காதலால்
நீரோட் டமான நினைவுகளை -போராட்ட
ஊழியன் கூலி உயர்விழந்த துக்கத்தை
தோழியாய் பொற்கை துடைப்பு….(41)
பலியின் தலைவைத்துப் பாதாளம் பாய்ந்து
கலிதீர்த்தக் காலிலிவள் காசாய் -ஒளிந்திருந்தாள்.
பாதாளம் பாயும் பணமென்று சொன்னதன்
ஆ!தாரம் அன்றோ அவள்….(or)
ஆ!தாரம் அன்னை அருள்….(42)
பரம்பொரு ளாதாரப் பொன்மகள் பார்வை
தரம்தரும்சே தாரம் தவிர்த்து -வரம்தரும்
செய்கூலி பக்திக்கு. செய்யவளால் உன்பணப்
பைகாலி ஆகாது பார்….(43)
“பணப்பை அரவம் படுத்த பொருளை
கணத்தும் பிரியாத கஞ்ச -மனத்தாளே,
ஓரக்கண்ணால் என்னை ஒருமுறை பார்த்தெனக்கு
சேரச்செய் செல்வச் செழிப்பு”….(44)
வாளாழி வெண்சங்கு வில்லும் கதாயுதமும்
தோளாலும் தர்மத் தலைவனை -பாலாழி
தோன்றிய பொன்மகள் தேர்ந்தெடுத்தக் காரணத்தால்
மூன்றிலவன் ஆனான் முதல்….(45)
“பாக்கள் புனைந்திடுதல் பாரதியே ஆனாலும்
வாக்கில் பொருளாக வந்தமர்ந்து -ஆக்குவள்
ஆசுகவி தம்மை அகிலத்தில் செல்வந்த
காசுகவி யாய்பார் கவி”….(46)
“கருவளர் பிள்ளையை காத்தவன் மார்பில்
மருவத் ஸமாக மிளிரும் -திருவளர்
கண்தானம் கொண்டதோர் காளைக்கும் வாய்த்திடும்
சந்தான செல்வச் சிறப்பு”….(47)
“கற்காத பேருக்கும் கோழைக் குமருளை
துர்க்கா சரஸ்வதியர் தாரார்கள் -தர்காதி
தர்கத்தை விட்டுநீ தாமசமாய் நின்றாலும்
நற்காவல் பொன்மகள் நட்பு”….(48)
“சீதையாய் ராமன்பின் சென்றளித் தாள்ஜெயத்தை
கோதையாய் கோவிந்தன் கைப்பிடித்தாள்-ராதை
யாகி ரசித்தாள் யதுகுலக் கண்ணனை
பாகிமாம் பாதாம் புஜம்”….(49)
“பிருகு குலத்தில் பிறந்த திருவே
உருகும் அடியார்க் (கு ) உதவ -பெருகும்
அறம்பொருள் இன்பம் அளிப்போய் , எனக்கு
வரம்தரவா வீட்டுக்குள் வீடு”….(50)
“சிங்கம் அரியா சனத்து மடியமர்ந்து
பொங்கும் அவன்வெகுளி போக்கினோய் -தங்க
வதனத்து தாயே வரவேண்டும் மாலற்
புதனோடு பொன் சேர்ந்தாற் போல்….(51)
“வைகுண்ட வாசல் விளக்கேற்றும் பொன்ஒளியே ,
பைகொண்ட பாற்கடல் பாம்பணைதோன் -மெய்கொண்ட ,
ஐவர்க்காய் அன்று அலைந்த களைப்பகல
கைவைத்துத் தீர்ப்போளே காப்பு”….(52)
வீரென்று காற்று வீசப் பொழிந்திடும்
நீருண்ட மேகம் நிகர்த்தது; -சோறுண்டு
நாளான சோகத்தை நீக்கிடும் நாரணனை
தாலாட்டும் தாய்விழிகள் தான்….(53)
“புத்தி பலம்வீரம் பொன்புகழ் பேருனை
சுத்தி வலம்வரும் செல்விபதம் -ஒத்தி
விழிநீர் அபிஷேகம் வார்த்திட பக்தி
வழிகூறும் முக்தி வரை”….(54)
பொன்மகள் வந்தாள் (OR ) திரு விளையாடல்….
“வேதம் படித்தென்ன , வேதாந்தம் கற்றென்ன
சீதரன் பாதம் சொடுக்கெடுப்போள் -பாதம்
பணிந்திடு மானுடா, பாரதன்பின் உன்னுள்
கனிந்திடும் காண்முத்திக் காய்”….(55)
“கற்பை நெருப்பிலிட்ட காகுத்தன் சோதனையில்
பொற்பூ புகுந்தெழுந்தாள் பூரணமாய் -அற்ப
இராவணன் தீவெரிய இட்டனள் தீயை;
இராகவன் தூதன் எரிப்பு”….(56)
“ஆடி வெள்ளியில் தேடிவரும் தங்கமுனை
மூடி உறங்காதே முன்கதவை -ஏடி !
எழுந்தேலோ ரெம்பாவாய் ,எம்பிரான் பள்ளி
விழுந்தாளை வாழ்த்தி வணங்கு”….(57)
“நற்கா ரியப்பயன் , நான்மறை நுண்பொருள்
பொற்கம லம்வீற்ற பேரெழில் -நற்குணங்கள்
பூண்ட நிறைவு , பராசக் தியினம்சம்
வேண்டும் அடியார் வரம்”….(58)
“குமுத வதனம் ,கடல்கடைந்து வந்த
அமுத வளர்மதி அக்காள் -துமிதம்
தெறித்திடும் பாற்கடலில் தூங்கும் பெருமாள்
வரித்திடும் செல்வியை வாழ்த்து”….(59)
“சாரங்கன் வில்லுக்கு சக்தி அளித்திடும்
கூரம்புக் கண்களைக் கொண்டவளே , -ஓரங்கை
பங்கஜம் ஏந்தமறு பொற்கரத்தால் பாலிக்கும்
அங்குசம்நீ ஆனைநான் ஆள்”….(60)
“முனிபிருகு வாரிசே மூவா முகுந்தன்
பணிகாத்தல் பக்க பலமே -அணிபொற்
சரமே அவன்மார் சரோஜமே தாமோ
தரனுகக்கும் தாயே துதிப்பு “….(61)
“கண்பறிக்கும் காந்தி , கமல முகம்கண்கள் ,
விண்பரப்பில் எண்திசையாய் வீற்றிருந்து -மண்பிறப்பை
நோக்கி இயக்குவாள், நந்த குமாரனை
ஏக்கமுற வைக்கும் எழில்”….(62)
’’பொறிகளுக்கு எட்டாத போகமே, ஞான
வரிகளுக்(கு) உட்பட்ட வாக்கே -தறிகளுக்கு
ஈடான வேகத்தில் இற்றிடாத நூலாகத்
தேடும் ரமணஎளி தே’’….(63)
“வாள்எதிர்த்தால் நந்தகி , வில்எதிர்த்தால் சாரங்கி
ஆள்எதிர்த்தால் வெண்சங்கு ஆழிவட்டம் -கோள்எதிர்த்தால்
கால்எதிர்த்த கூற்றனின் மேலுதைத்த வீரதுர்க்கா
நூல்எதிர்த்தால் வாணிஅவள் நா”….(64)
“பேராசை பின்சென்று போனால் பெருநஷ்டம்
பாரீசன் போனானே பத்தினியால்- மாரீச
மானென் (று) அறிந்தும் மயர்வுற்ற ராமனைத்
தானன்று சோதனைசெய் தாள்”….(65)
“சாரங்கன் வில்லுக்கு சக்தி அளித்திடும்
கூரம்புக் கண்களைக் கொண்டவளே , -ஓரங்கை
பங்கஜம் ஏந்தமறு பொற்கரத்தால் பாலிக்கும்
அங்குசம்நீ ஆனைநான் ஆள்”….(66)
“சிலையை வளைக்கவந்த ஸ்ரீராமன் ,செம்பொன்
சிலையான சீதையால் சொக்கி -சிலையாகி ,
மற்றவர் வாய்ப்பை மறந்திட , கைவில்லை
இற்றிட வைத்தாள் இவள்”….(67)
“தரித்திரமாய் வந்தாடும் தாண்டவக் கோனை
உருத்தெரியா வண்ணம் ஒசித்து -சரித்திரமாய்
செய்தெதிர் காலத்தை சீரும் சிறப்புமாய்
பெய்தா தரித்தளிப்பாள் பொன்”….(68)
“கோதையாய் ,கோகுலக் கூட்டத்து தாதியாய்,
ராதையாய் வந்தவனை ரட்சித்தோள் -கீதையாய்
வாக்கில் புகுந்துவந்த பாக்கிய லஷ்மியே
காக்கும் கடவுளுக்கு காப்பு….(OR )
காக்கும் திருமஞ்சக் காப்பு”….(70)
’’ ஏறுக்கு மாறான நூறுக்கு தோல்விதர
பாருக்கு வந்தபளு போக்கிட, -போருக்குக்
காரண பாஞ்சாலி கூந்தல் விரிப்பிருந்து
நாரணர்க்கு செய்தாள் நலம்’’….(OR)
நாரணர்க்கு தோள்கொடுத்த நட்பு’’….(71)
“பொன்னாத்தா, தாமரைப் பூவாத்தா, தாங்கிடும்
மண்ணாத்தா, பின்வந்த சின்னாத்தா, -பண்ணாத்தான்,
நன்னாத்தான் பாடிய, நாச்சியார் காதலுக்கு
கண்ணாத்தா வாயிருந்து காப்பு”….(72)
“ஊடலில் பாற்கடலை உக்கிரமாய் பொங்கவைத்து
தேடலில்மால் வாட, திருவிளை -ஆடலாய்,
ஆடிவரும் தங்கமிவள் அக்காள் நிலத்தடியில்
ஓடிக் கரியாய் ஒளிவு”….(73)
“பாலுக்(கு) அழும்சேய்க்கு பார்வதியால் ஞானம்
கோலக் கவிக்கு கலைவாணி -சேலைத்
தலைப்பிட்டு செல்வத்தை தாமரையாள் தந்து
இலைமேல்நீர் பற்றை இடும்”….(74)
“ஆர்த்த கடலில் அரிமால் அவதாரப்
பூர்த்தி வரையில் பொறுமையாய் -காத்துக்
கிடக்கும் திருமகளே காக்கும் கடவுள்
எடக்கு மடக்கல்ல ஈது”….(75)
“அகலாது கல்லில் அடைந்து கிடந்த
அகலிகை மீண்டாள், அதனை -உகந்தது,
ஏகபதி நோன்பிருந்து ஏத்திய தாலன்றோ
ராகவன் பாத ரசம்”….(76)
“வண்ணான் சொல்ல வரித்த மனையிவளை
சொன்னான் வனத்திற்கு செல்லென்று -பின்னாளில்
தந்தை கதைசொல்ல தந்தாள் இருபிள்ளை
விந்தை இவள்செய் விதி”….(77)
அண்ணலும் நோக்கினான், அன்னையும் நோக்கினாள்
அண்ணலவன் நோக்கம் அவதாரம் -அன்னையவள்
நோக்கமோ அக்காள் நிலமடந்தை மாந்தரை
காக்கும் கருணை குணம்….(78)
“குத்திய காகத்தைக் குத்திய காகுத்தன்
பத்தினி தெய்வத்தைப் போற்றிடுவோம் -இத்தரையில்
இன்னல் வருங்கால் இவளைத் துதித்திட
அண்ணல் அபயம் அளிப்பு”….(79)
’’தீதண்டும் வேளை, திருக்கரம் ஏந்திடும்
கோதண்ட ராமன் கரம்பிடித்த -மாதண்டி(மாதை அண்டி)
வாழப் பழகிடு , ஆழ்நிலை யோகத்தில்
ஏழைக் குசேலா எழு’’….(80)
“ஏழுமலைக்(கு ) ஏதிந்த ஏற்றம் எனப்பார்த்தால்
கீழ்அமர்ந்த வல்லியிரு கைகளால் -ஊழ்அழுந்த
வந்தவரை கேள்வனின் வட்டிக் கடன்தீர்க்க
உந்துகிறாள் உண்டியலுக் குள்”….(81)
’’வள்ளென்று பேசாதே, தள்ளென்று கூறாதே
உள்ளொன்று வைத்து உரைக்காதே -கொல்லென்று
பூத்த கமலத்தாள் , பொல்லாத வர்களுக்கு
ஏத்த வளல்ல எதிர்’’….(82)
“எட்டுவகை செல்வங்கள் ,எட்டு வகைசுகங்கள்
கிட்டும் அவள்கடைக் கண்ணொன்று -பட்டால்;
முராரி சகியால் முகாரி இசைக்கும்
பராரிக்கும் வாழ்வில் பொருள்”….(83)
“வாழ்வில் பொருளிருந்தும் வாழ்வின் பொருளறியா
தாழ்வில் புகமறுப்பாள் தங்கமகள் -ஊழ்வினை
தந்த பொருளைத் திரும்ப எடுத்தழிப்பாள்
சிந்தையின் செல்வச் செறுக்கு”….(84)
குறுக்குவழி சென்று குவித்த பணத்தால்
செறுக்கு மரச்சரிவில் செல்லும், -கிறுக்குத்
தனம்பித்தம், செல்வி திருத்தாள் துதிக்கும்
மனம்தான்பொன் செய்யும் மருந்து….(85)
“வெண்பட் டுடுத்திப்பூ வெண்மல்லித் தார்சூடி
மென்பட்டுத் தாமரை மீதிருந்து -கண்கொட்டா
ஞானியர் காட்சியே , நாணமுறக் கண்ணளிப்பாய்
ஆணில் உயர்ந்த அரிக்கு”….(86)
“எட்டுதிக்கு யானைகள் ஏந்திவரும் கங்கையால்
அட்டமா லஷ்மிக் (கு ) அபிஷேகம் -கட்டுக்(கு)
அடங்கா கடலரசன் ஆருயிர் பெண்ணே
தடந்தோள் மாலனமு தே”….(87)
“வீரத் துணிச்சலை (தைரியம் ), வெற்றிக் கனிச்சுவையை ( விஜயம் )
ஈரப் பசைநெஞ்சுக்(கு) ஈகையை (தனம் )-சேரும்
மனைமக்கள்(சந்தானம்) வித்தை(வித்யா) முளைக்கதிர்(தான்யம்), எட்டு
முனையானை(அஷ்ட திக் கஜங்கள்) ஆதி முடிப்பு”….(88)
“வாரிசம் ஓர்கையில், வெண்குடை ஓர்கையில்
ஆறுதல் கூட்டும் அபயத்தை-வேறிரு
அங்கைகள் தாங்கிடும் ஆதி இலக்குமி
பங்கயத் தாளைப் பணி”….(89)
“அம்புஜஅங் கைகள் அபயவரம் முத்திரையில்
அம்புஜம் ஏந்தும் அடுத்தயிரு-அம்புஜங்கள்,
வெண்பட் டுடுத்துமைஸ் வர்ய இலக்குமியை
பொன்கொட்ட வேண்டிப் பணி”….(90)
“ஆறில் அபயம் அளித்திடப்பொன் , ஐந்தில்விண்
சோறமுதம், வில்லம்பு , சங்காழி -வாரிசத்தை
தாங்கும்செம் பட்டு தனலஷ்மி தேவியை
பாங்குற ஏத்திப் பணி”….(91)
“கன்னல் ,இரண்டு கமலம் ,கதைகதலி
செந்நெல் ,அபயவரம் சாதிப்பாள்-தன்எண்கை
தாங்கிபச் சையணிந்த தான்ய இலக்குமியை
பாங்கிஎன எண்ணிப் பணி”….(92)
“கஜங்கள் குளிர்விக்க ,கையம் புஜங்கள்
நிஜம்கொள் அபயவரம், நீள்அம்-புஜங்கள்
தரிக்கப்பச் சையணிந்த தாய்கஜ லஷ்மி
பரத்தினும் மேலாம் பணி”…(93)
“இடையில் குழந்தை இரண்டிளநீர் கும்பம்
படைவாளும் கேடயமும் பற்றி -அடையாள
சேய்அபயம் காண்பிக்கும் சந்தான லஷ்மியை
போய்அபலை ஆகப் பணி….(OR )
போய்சுபம் காணப் பணி”….(94)
’’வரிசங்கு, வீச்சாழி, வில்லம்பு, சூலம்
வரஅபயம், புத்தகம், வீற்றெண் -கரத்தாள்,
வறுமை சிவப்பணிந்த வீர இலக்குமியை
பெருமையாய் சென்று பணி’’….(95)
“பாசம்,வெண் சங்கு, படைதிகிரி, கேடயம்
வீசும்வாள், வாஞ்சை வரஅபயம்-பூசும்
திலகநிறக் கூறையாள் திக்விஜய லஷ்மியை
புளகநீ ராட்டிப் பணி”….(96)
“பூனைக்குப் போய்மணி பூட்டிய கர்வத்தில்
ஆனைக்கு லாடம் அடித்தேனே ! -மோனை
எதுகை வரக்கண்(டு) எழுதப் புகுந்தேன்
பதுமையே கொள்ளென் பழுது”….(97)
“திருமஞ் ஜனக்காப்பே, தீயிட்ட போதும்
கருமை யுறாதங்கக் காப்பே, -திருமகளே,
பாதுகை இல்லாத போதும்மால் பாதகாப்பே,
கோதுகைவெண் பாபாது காப்பு”….(98)
“மாவீரன் பாரதியின் மேதமை இல்லாது
தீவிரலைத் தீண்டினால் தீய்ந்திடுமே! -பூவீற்ற,
தொட்டால் தகதகக்கும் தங்கமுந்தன் கண்பார்வை
பட்டால் துலங்குமென் பா”….(99)
(OR)
“மாவீரன் பாரதியின் மேதமை இல்லாது
தீவிரலைத் தீண்டினால் தீய்ந்திடுமே! -பூவீற்ற,
பட்டால் தகதகக்கும் பொன்மக ளுன்பார்வை
தொட்டால் துலங்கும் தமிழ்”….(99)
“ஈர துணியால் இறுக முடிந்துபசி
ஆற முடிக்கும் அரும்பணியில் -வீரத்
திருமகள் சேர்ந்தெட்டு தோள்கொடுத்து, வானக்
கருமுகிலாய் தீர்ப்பாள் கலி”….(100)
“வாடும் பயிர்கண்டு வாடிய வள்ளலார்
தேடும் அருட்ஜோதி தெய்வத்தை -நாடி
அழைத்த வருக்குமுன்பு ஆதிலஷ்மி சேர்த்து,
செழித்திடப் பெய்வாள் செடிக்கு”….(101)
“தாத்தாக்கை கோர்த்து தெருத்தெருவாய் சென்றன்று
சேர்த்தாள் தமிழின் சுவடிகளை -ஆத்தாவால்
ஐம்பெருங் காப்பியத்தை ஐஸ்வர்ய மாய்பெற்றோம்,
பைம்பொழில்வாழ் பங்கஜத்தைப் போற்று”….(102)
“கொள்ளை அடிக்கவந்த கும்பினிக் காரனைக்
‘வெள்ளையனே போவெளியே’ விண்டுரைத்த -பிள்ளை
மகான் சுதந்திரத்தை மீட்டபோது, இட்ட
லகான்விஜய லஷ்மியின்லீ லை”….(103)
’’மூப்பினை ஏற்றதிய மானளித்த நெல்லியை
சாப்பிடாது சென்றாள் சாவெதிர்த்து -தோப்பில்
தனிமரமாம் அவ்வையை, தைரிய லஷ்மி
பனிமலைஈ சன்பால்வைப் பு’’….(104)
’’ஏழை இருபத்தி ஏழை பிரசவித்து
பாழும் வறுமையால் பாடுற -தோழனுக்கு
கண்ணன்சம் பத்தைக் கொடுத்திட வைத்தது
அன்னைசந் தானலஷ்மி அன்பு’’….(105)
“அச்சம் தவிர்த்திடும் , ஆண்மை பெருக்கிடும்
உச்சப் புகழில் உலவவிடும் -பச்சைமால்
இச்சைக் (கு) உரிய இகபர தேவதையே
பிச்சையிடு ஞானப் பிடிப்பு”….(106)
“அம்பிகை பொன்மகளை ஆரா தனைசெய்து
நம்பினோர் கெட்டதில்லை நானிலத்தில் -சொம்பிலே
தேங்காய் மாவிலை தண்ணிள நீர்வைத்து
பாங்காய் இவளைப் பணி”….(107)
’’வேதம் வளையல், விளக்கும் உபநிடதம்
பாதச் சதங்கை, புராணங்கள் -காதணி,
கோதை திருப்பாவை கொண்டாள் புடவையாய்,
பேதையென் பாபாதப் பூ’’….(108)
வாயார வாழ்த்து வடவேங் கடன்நெஞ்சத்
தாயாரை, பூவாழ் திருமகளை -ஓயாமல்
அன்னை கடைக்கண் அனுக்கிரகம் கொண்டோர்முன்
முன்னை வினைகள் முடம்…(109)